Tuesday, July 15, 2014

எங்கே இரண்டு மூன்று பேர்!

(07.09.2014 பொதுக்காலம் 23ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்திப் பகுதி: மத்தேயு 18:15-20)

வாகன ஓட்டுநர் உரிமை பெறும்போது நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு வார்த்தை 'பிளைன்ட் ஸ்பாட்'. அதாவது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது அந்த வாகனத்திற்கு முன் என்ன இருக்கிறது என்பது முந்த நினைக்கும் வாகன ஓட்டிக்குத் தெரியாது. நம் கண்ணாடிக்குள் தெரிவது மட்டும்தான் எல்லாம் என்று நினைத்து விடக் கூடாது. கண்ணாடியில் பிடிபடாததும் இருக்கிறது என்பதே எதார்த்தம். இந்த 'பிளைன்ட் ஸ்பாட்டை' நாம் கண்டுகொள்ளவில்லையென்றால் சாலையில் விபத்துதான் நேரும்.

நம் வாழ்க்கை என்ற பயணத்தில் நம் அனைவருக்கமே 'பிளைன்ட் ஸ்பாட்' உண்டு. நமக்குத் தெரிகின்ற ஒன்று மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. மற்றவர்களுக்குத் தெரிகின்ற ஒன்று நமக்குத் தெரிவதில்லை. உளவியல் நிபுணர்கள் ஜோ-ஹரி அவர்களின் 'ஜன்னல்' முறை உளவியலின் உள்ளடக்கமும் இதுவே. ஒருவர் தவறு செய்யும் போது, அந்தத் தவறு அவர் பார்வைக்கு தவறு என்று தெரியாத போது அருகிலிருக்கும் அவரின் சகோதரரும், நண்பரும் தான் அவருக்கு அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இன்றைய உலகின் மனிதர்களுக்கு சுட்டிக் காட்டுதல் பிடிப்பதில்லை. 'உன் வழி உனக்கு! என் வழி எனக்கு! இதில் நல்ல வழி என்றும் கெட்ட வழி என்றும் எதுவுமில்லை' என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, 'யாரும் என்னை எதுவும் கேட்கக் கூடாது!' என்றும் 'எனக்கு எல்லாம் தெரியும்! எனவும் நினைப்பவர்களுக்கு இயேசுவின் இன்றைய போதனை முகம் சுளிக்க வைக்கும்.

இன்றைய நற்செய்தியின் பின்புலத்தையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் அவர்மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்றாக வாழத் தொடங்குகின்றனர். அப்படி அவர்கள் ஒரே சமூகமாக இருக்கும் போது அவர்கள் நடுவில் கருத்தியல் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் சின்னச் சின்ன சண்டைகளும், மனவருத்தங்களும் வருகின்றன. இப்படி சண்டைகள் வளர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? இந்தச் சண்டைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது? என நினைக்கின்ற மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவே இதற்குத் தீர்வு கொடுப்பதாக எழுதுகின்றார். இயேசுவின் தீர்வு எப்படி இருக்கிறது?

சகோதரர் தவறு செய்தால்...அ) தனியே அறிவுறுத்த வேண்டும், ஆ) உடன் இரண்டு பேரை வைத்து அறிவுறுத்த வேண்டும், இ) திருச்சபையிடம் சொல்ல வேண்டும். திருச்சபையிடம் சொல்லியும் அவர் திருந்தவில்லையெனில் அவர் 'புறவினத்தார்' போல இருப்பார்!

தொடர்ந்து இயேசு மூன்று வாக்குறுதிகளும் கொடுக்கின்றார்: அ) நீங்கள் இங்கே கட்டுவது அங்கே உங்களுக்குக் கட்டப்படும், ஆ) நீங்கள் மனம் ஒத்திருந்து கடவுளிடம் கேட்டால் அது உங்களுக்குக் கிடைக்கும், இ) இரண்டு, மூன்று பேர் கூடிவரும் இடத்தில் நான் இருப்பேன்.

முதல் பகுதியில் இயேசு தவறு செய்யும் சகோதரரை எப்படித் திருத்துவது என்றும், இரண்டாம் பகுதியில் தவறுகள் திருத்தப்படுவதாலும், மனவருத்தங்கள் அகல்வதாலும் வரும் நன்மைகளையும் சொல்கின்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் 'திருச்சபை' என்ற ஒன்று இல்லை. அவரின் உயிர்ப்பிற்குப் பின்தான் 'திருச்சபை'(கள்) உருவாகின்றன. ஆகவே, இயேசு இந்த அறிவுரையைச் சொல்லியிருக்கும் வாய்ப்பில்லை. இயேசு சபையையோ, சமயத்தையோ உருவாக்க வந்தவர் அல்ல. பின் வந்த சீடர்கள், அரசர்கள், நிலாக்கிழார்களின் உருவாக்கமே சமயம் மற்றும் சபை. மேலும், இயேசு தரும் மூன்றாம் வாக்குறுதி நாம் அடிக்கடி கேட்டிருக்கும் ஒன்று: 'எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரால்...' கிபி 70ஆம் நூற்றாண்டில் எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்ட பின் யூதர்களும், கிறித்தவர்களாக மாறிய யூதர்களும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இதுதான்: 'கோயில் இடிந்து விட்டதே! இப்போது கடவுள் எங்கே போனார்?' அதற்கு விடையாக நற்செய்தியாளர் கண்டுபிடிக்கும் சொல்லாடல் தான் இது: 'கடவுள் உங்கள் நடுவில் இருக்கின்றார்!'

இந்த நற்செய்திப் பகுதியைச் சுற்றியிருக்கும் இந்தச் சின்னச் சின்ன பின்புலச் சிக்கல்களை நீக்கிவிட்டுப் பார்ப்போம். இன்று இயேசு நமக்கு என்னதான் சொல்கிறார்?

அ. தவறுகளைத் திருத்த முனைந்ததாலே பல உறவுகளை நம் வாழ்வில் நாம் இழந்திருக்கலாம். 'நீ என்ன யோக்கியமா?' எனவும், 'உன் வியாபாரத்தை மட்டும் பார்!' என்று கடின வார்த்தைகளை நாம் கேட்டிருக்கலாம். திருத்த நினைப்பது நல்லது தான். ஆனால் அதற்கான வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும். இயேசு இங்கே ஒரு சிறந்த உளவியல் நிபுணராக அறிவுரை கூறுகின்றார். முதலில் தவறு செய்தவரை தனிமையில் அணுக வேண்டும். இது திருத்த நினைப்பவரையும் சுயஆய்வுக்கு அழைக்கும் ஒரு தருணம். தவறுகள் தனிமையிலும், நன்மைகள் பொதுவிலும் பேசப்பட வேண்டும் என்பது மனித மூளை எதிர்பார்க்கும் ஒன்று. பின், இரண்டு அல்லது மூன்று பேர்.  அங்கும் அவர் சரியாகவில்லை எனில் பொதுவான சமூகத்திற்கு தவறு கொண்டுசெல்லப்பட வேண்டும். 'தப்பறையான போதனை' என்னும் தவறே இங்கு பேசப்படுகிறது. நம் தவறுகள் சிலவற்றுக்கு இயேசுவின் இந்தப் போதனை பொருந்தாமலும் போகலாம். சில நேரங்களில் 'சமூகம்' ஒருவரின் திருந்தாத நிலைக்குக் காரணமாகவும் மாறிவிடுகின்றது.

ஆ. நாம் இங்கு எப்படி இருக்கிறோமோ, அங்கும் அப்படித்தான் இருக்கும். 'எண்ணம் உனக்கு!' என்பது கண்ணதாசன் மொழி. நாம் மன்னிப்பை, இறங்கிவருதலை, பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தால் அதையே நாம் திரும்பவும் பெறுகிறோம். விண்ணகம் என்பது இதுதான். ரொம்ப நாள் சண்டை போட்டு, திடீரென்று சமாதானம் ஆகும் போது நம்மையறியாமல் ஒரு சுதந்திர உணர்வு நம்மைப் பற்றிக் கொள்கிறது. அதுதானே விண்ணகம்.

இ. நம் நடுவில் கடவுள். ஒருவர் மற்றவர் காட்டும் அன்பிலும், கரிசணையிலும், மனிதாபிமானத்திலும் தான் கடவுள் இருக்கின்றார். இந்த இடத்தில் அருமையான ஒரு வாழ்வியல் சிந்தனையும் ஒளிந்திருக்கிறது. அதாவது நாம் ஒருவர் மற்றவரைத் தண்டிக்க நமக்கு உரிமை இல்லை. சுட்டிக் காட்டுத்தான் முடியும். சின்னச் சின்ன உறவுச் சண்டைகளில் நாம் சுட்டிக் காட்டுவதற்குப் பதில் உடனடியாக தண்டனை தான் கொடுக்க நினைக்கிறோம். 'இனி உன் கூட பேச மாட்டேன்!' என்று ஒதுக்கி வைப்பதால் மனவருத்தம் போய்விடுமா? அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு எதிர்மறை உணர்வு நம் கன்னத்தில் அறையாதா? கடவுளை நாம் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை. அருகில் பார்த்தாலே போதும்.


1 comment:

  1. "கடவுளை நாம் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை; அருகில் பார்த்தாலே போதும்" அழகான வார்த்தைகள்.தவறுகளைத்திருத்த முனைந்ததால் பல உறவுகளை இழக்க நேர்ந்திருக்கலாம்...உண்மைதான்.ஆனால் அதற்காக நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நம் குழந்தைகளை,நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களை நெறிப்படுத்துவது நம்மேல் திணிக்கப்பட்ட கடமையல்லவா? அதிலிருந்து நாம் ஒதுங்குவது முறையா? என்னதான் அன்பொழுக எடுத்துச்சொன்னாலும் நம்மை எதிரியாகத்தானே பார்க்கிறார்கள்? இவர்களை சரிக்கட்டுவது எப்படி? தங்கள் பதில்...??

    ReplyDelete