Thursday, April 27, 2017

கடவுளைச் சார்ந்தவை என்றால்

திருத்தூதர் பணிகள் நூலில் வரும் பல கதைமாந்தர்களில் என் மனம் தொட்ட சிலரில் ஒருவர் கமாலியேல். கமாலியேல் என்றால் 'கடவுள் வலிமையானவர்' என்பது பொருள்.

திருத்தூதர்கள் தலைமைச்சங்க காவலர்களால் பிடித்துவரப்படுகின்றனர். அவர்கள் மேல் தீர்ப்பு சொல்ல வேண்டும். நம் கமாலியேலும் நடுவர்களில் ஒருவர். ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

'இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்!'

மூன்று வருடங்களுக்கு முன்னால் நானும் என் நண்பர் அருள்திரு ஜூலியும் இணைந்து ஒரு புத்தகம் எழுதலாம் என நினைத்தோம். ஆனால் இன்றும் அது நினைவிலேயே இருக்கிறது.

'இந்த புத்தகம் வருமா? வராதா?' என நான் கேள்வி எழுப்பியபோது, ஜூலி சொன்ன வார்த்தைகள் கமாலியேலின் வார்த்தைகளே.

கமாலியேல் மிகவும் புத்திசாலி. வாழ்வின் தத்துவத்தை மிக எதார்த்தமாக அறிந்து வைத்திருந்த ஞானி.

தன் சமகாலத்தில் சுற்றித்திரிந்த யூதா என்பவன் கிளர்ச்சி செய்யும்படி மக்களை தூண்டுகிறான். ஆனால் அவனுடையது மனித தொடக்கம் என்பதால் அப்படியே முடங்கிவிடுகிறது.

நாளைய நற்செய்தியிலும் இதே உண்மையைத்தான் பார்க்கின்றோம்.

மக்கள் பசியால் வாடுகின்றனர். பாலை நிலம். ரொட்டி இல்லை.

இரண்டு தீர்வுகள் வருகின்றன பிரச்சினைக்கு: முதல் தீர்வு சீடர்களிடமிருந்து - இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்குவது. இரண்டாம் தீர்வு இயேசுவிடமிருந்து - தன் தந்தையின் பராமரிப்பில் நம்பிக்கை கொள்வது. சீடர்களின் தீர்வு அப்படியே முடங்கிப் போகிறது. இயேசுவின் தீர்வு பசி போக்குகிறது. பசி போக்கியது மட்டுமல்லாமல் பன்னிரண்டு கூடைகளில் சேகரிக்கும் அளவிற்கு நிரம்பி வழிகிறது.

நம் வாழ்வில் நாம் எதைத் தொடங்கினாலும்,

அதன் 'அ'கரமாய் இறைவன் இருக்கட்டும்.

'அ'கரத்தை 'ன'கரம் காணச்செய்பவர் அவரே!

Monday, April 24, 2017

மாற்கு

நாளை நற்செய்தியாளர் தூய மாற்குவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவரைக் குறித்தே பேதுரு, 'என் அன்பு மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்' என தன் திருமடலில் எழுதுகிறார்.

தொடக்ககால திருச்சபையில் தந்தை-மகன் உறவு திருத்தூதர்கள் மத்தியில் நிலவியிருப்பதை இது காட்டுகிறது.

அதாவது, முன்பின் தெரியாதவரைக் கூட நற்செய்தியும், இறையரசுப் பணியும் இரத்த உறவைப்போல இணைத்துவிடுகிறது.

சீடர்களின் மனப்போராட்டத்தை மிக அழகாக பதிவு செய்தவர் மாற்கு.

தானே போராடியதால்தான் என்னவோ மற்றவர்களின் போராட்டத்தை மிக எளிதாக இனங்கண்டுகொள்கிறார் மாற்கு.

Sunday, April 23, 2017

மறுபடியும் பிறந்தாலன்றி

நாளைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:1-8) நிக்கதேம் - இயேசு உரையாடலை வாசிக்கின்றோம். இயேசுவைச் சந்திக்க இரவில் வருகின்றார் நிக்கதேம். தான் இயேசுவிடம் செல்வது வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்ததால் இரவில் வருகிறார். யாரும் பார்க்கக்கூடாது என்றும் நினைக்கிறார். அதே வேளையில், இயேசுவை சந்தித்துவிடவும் துணிகின்றார்.

நம் வாழ்விலும் இந்த இருதலைக்கொள்ளி எறும்பு நிலை சில நேரங்களில் வந்திருக்கும்.

இது சரியா தவறா என்பது கேள்வியல்ல. பல நேரங்களில் இப்படி இருப்பதுதான் நல்லது என நினைக்கிறேன்.

இரவில் வந்த நிக்கதேமுடன் இயேசு ரொம்ப சீரியஸான இறையியல் உரையாற்றுகிறார்.

தூய ஆவியால் பிறப்பது - இதுதான் டாபிக்.

ஒருவர் தாயின் வயிற்றில் கருவுற்று பிறப்பது முதல் பிறப்பு.

தூய ஆவியால் பிறப்பது இரண்டாவது பிறப்ப.

இந்த இரண்டாவது பிறப்பு எப்படி இருக்கும் என நிக்கதேம் ஆர்வம் கொள்கின்றார். மறுபடியும் தாயின் வயிற்றில் நுழைந்து எப்படி பிறக்க முடியும்? என்றும் கேட்கின்றார்.

உடல் பிறப்பு என்பது முதல் பிறப்பு.

உள்ளம் அல்லது இயல்பு பிறப்பு என்பது இரண்டாவது பிறப்பு.

அகுஸ்தினாரின் வாழ்வை எடுத்துக்கொள்வோமே. தன் 35 வயதில் அவர் இயல்பு மாற்றம் பெறுகின்றார்.

35 வயது வரை அவர் கொண்டிருந்தது உடல் பிறப்பு.

35 வயதுக்குப் பின் நிகழ்ந்தது மறுபிறப்பு.

விபத்தில் தப்பித்தவர்கள், குடிபோதையில் இருந்து விடுபட்டவர்கள், நோய் நீங்கப்பெற்றவர்கள் தாங்கள் மறுபிறப்பு அடைந்ததாக சொல்லக் கேட்டிருக்கிறோம்.

முதல் பிறப்பு மறுபிறப்பிற்கு வழி வகுக்கிறது.

மறுபிறப்பு முதல் பிறப்பிற்கு அர்த்தம் கொடுக்கிறது.

Saturday, April 22, 2017

தோமா அவர்களோடு இல்லை!

உயிர்ப்புக் காலத்தில் நாம் வாசிக்கும் நற்செய்தி பகுதிகளில் வரும் கதைமாந்தர்களில் என் இதயம் தொட்டவர்கள் இரண்டு பேர்: ஒன்று, மகதலா மரியா. இரண்டு, தோமா. உயிர்த்த ஆண்டவரை இறுகப் பற்றி கட்டி அணைத்துக் கொண்டவர் மகதலா மரியா. உயிர்த்த இயேசுவின் உடலைத் தன் கையால் ஊடுருவியவர் தோமா. உயிர்த்த ஆண்டவர் வெறும் ஆவி அல்லர் என்பதற்கும், அவருக்கென உடல் இருந்தது என நிரூபிப்பதற்குமாக என இவர்களின் செயல்களால் நம் நம்பிக்கை இன்னும் வலுப்பெறுகிறது.
தோமா என்ற கதைமாந்தரை நன் இன்றைய சிந்தனைப் பொருளாக எடுத்துக்கொள்வோம்.
ஆங்கிலத்தில், 'டவுட்டிங் தாமஸ்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதாவது, எதையும் எளிதாக நம்பாமல் ஐயம் கொண்டிருக்கும் மனநிலை தான் 'டவுட்டிங் தாமஸ்.' நாம் எல்லாரும் தோமையாரை 'டவுட்டிங் தாமஸ்' என சொல்லிவிடுகிறோம். ஆனால், நம் ஒவ்வொருவருள்ளும் நிறைய டவுட்டிங் தாமஸ் இருக்கிறார்கள்: 'அலார்ம் கரெக்ட்டான நேரத்திற்கு அடிக்குமா?' 'நாம் அன்பு செய்பவர் நம்மோடு என்றும் இருப்பாரா?' 'கடவுள் என் செபத்தை கேட்பாரா?' 'இன்றைக்கு கடன் வாங்கினால் நாளைக்கு திரும்ப அடைச்சுடலாமா?' 'மாத்திரை எடுத்தால் காய்ச்சல் சரியாகுமா?' 'இது நடக்குமா?' 'அது நடக்காதா?' என நிறைய ஐயங்கள் நம் ஒவ்வொருவரிடமும் வரும்போதெல்லாம் நம்மில் ஒரு தாமஸ் தோன்றி மறைகிறார்.
ஆனால், தோமையாருக்கு மறுமுகம் ஒன்று உண்டு என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.
திருத்தூதர் தோமா பேசிய வார்த்தைகளைப் பதிவு செய்தவர் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே. மற்ற நற்செய்தியாளர்கள் 'தோமா' என்ற பெயரை மட்டுமே பதிவு செய்கின்றனர். ஆனால், யோவான் அவரை உரையாடுபவராகப் பதிவு செய்கிறார். மேலும், 'தோமா' என்று வரும் இடத்தில் எல்லாம், 'திதிமு என்னும் தோமா' என்று பதிவு செய்கின்றார். 'திதிமு' என்றால் 'இரட்டை' என்று பொருள்.
'இரட்டை' என்னும் இந்த அடைமொழி தோமாவுக்கு பொருந்துவதுபோல நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் யோவான்.
யோவான் நற்செய்தியில் தோமா நான்கு முறை பேசுகிறார்.
திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' என்றார். (11:16)
தோமா இயேசுவிடம், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' என்றார். (14:5)
தோமா மற்ற சீடர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார். (14:25)
தோமா இயேசுவைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார். (14:28)
இந்த நான்கு முறைகளில், தோமாவின் பேச்சு இரண்டு முறை சீடர்களை நோக்கியும், இரண்டு முறை இயேசுவை நோக்கியும் இருக்கிறது. 
இந்த நான்கு முறைகளில், தோமா இயேசுவை இரண்டு முறை 'அவர்' எனவும், இரண்டு முறை 'ஆண்டவரே' எனவும் விளிக்கின்றார்.
இந்த நான்கு முறைகளில், முதல் இரண்டு முறை தோமா தன்னை மற்ற சீடர்களோடு இணைத்துக்கொண்டு, 'நாம்' என்கிறார். மற்ற இரண்டு முறைகளில், தன்னையே அவர்களிடமிருந்து தள்ளி வைத்துக்கொண்டு, 'நான்,' 'என்' எனச் சொல்கின்றார்.
இந்த நான்கு முறைகளில், தோமா தன் உடன் சீடர்களிடம் பேசும் பேச்சுக்கு அவர்கள் எதுவும் மறுமொழி சொல்லவில்லை. ஆனால், தோமா இயேசுவிடம் பேசும்போதெல்லாம் இயேசுவும் பதில் பேசுகின்றார்.
மொத்தத்தில், அவர்களோடு (சீடர்களோடு) இருப்பவராகவும், அவரோடு (இயேசுவோடு) இருப்பவராகவும், அவர்களோடு இல்லாதவராகவும், அவரோடு இல்லாதவராகவும் முன்நிறுத்தப்படுகிறார் தோமா.
இதுதான் இவரது இரட்டைத்தன்மை.
ஆகையால்தான், இவரது பெயர் 'திதிம்' (இரட்டை).
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். யோவா 20:19-31) 'இரட்டை' என்ற நிலை தனித்துக் காணப்படுகிறது. எப்படி?
இயேசு இரண்டு முறை தன் சீடர்களைச் சந்திக்கின்றார். தோமா இல்லாமல் ஒருமுறை. தோமாவோடு மறுமுறை.
இரண்டுமுறை, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று சொல்கின்றார்.
இரண்டுமுறை தன் கைகளையும், விலாவையும் காட்டுகின்றார்.
'நான் உங்களை அனுப்புகிறேன்,' 'நான் உங்களுக்கு பாவம் மன்னிக்க அதிகாரம் அளிக்கிறேன்' என்று இரண்டு உடனிருப்பு செய்திகளைத் தருகின்றார்.
தோமா இரண்டு வார்த்தைகளால் தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்: 'ஆண்டவரே,' 'கடவுளே.'
சீடர்களின் உள்ளத்து உணர்வு இரண்டாக இருக்கின்றது: 'நம்பிக்கை,' 'மகிழ்ச்சி.'
இந்நூலில் பல எழுதப்பட்டிருக்கின்றன. சில எழுதப்படாமல் இருக்கின்றன.
இந்நூலை வாசிப்பவர்கள் இயேசுவைப் பற்றி, 'இறைமகன்,' 'மெசியா' என இரட்டை அறிக்கை செய்ய வேண்டும்.
இந்நூலை எழுத இரட்டை நோக்கம் இருக்கிறது: 'நீங்கள் நம்பவும்,' 'நீங்கள் வாழ்வு பெறவும்.'
மேலும், யோவான் பதிவு செய்யும் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுக்கும் (காண். யோவா 20:1-18) இன்றைய நற்செய்திப் பகுதிக்கும் சில 'இரட்டை' வேறுபாடுகள் உள்ளன:
அது 'முதல் நாள் காலை'. இது 'முதல் நாள் மாலை.'
அங்கு 'கல்லறை காலியாக இருக்கிறது.' இங்கு 'வீடு நிறைந்திருக்கிறது.'
அங்கே 'கல் திறந்திருக்கிறது.' இங்கே 'கதவு மூடியிருக்கின்றது.'
அங்கே 'மரியா அச்சமின்றி இருக்கின்றார்.' இங்கே சீடர்கள் 'அச்சத்தோடு இருக்கின்றனர்.'
அங்கே 'என் ஆண்டவரைக் கண்டேன்' என மரியா உரிமை கொண்டாடுகின்றார். இங்கே 'ஆண்டவரைக் கண்டோம்' என பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர் சீடர்கள்.
இந்த இரண்டு மேடைகளுக்கு நடுவே மூன்றாவது மேடையில் தோமா இருக்கின்றார்.
'தோமா அவர்களோடு இல்லை' என பதிவு செய்கிறார் யோவான்.
ஆக, தோமாவின் இருப்பை, 'அவர்களோடு தோமா,' 'அவரோடு தோமா' என இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.
அ. அவர்களோடு தோமா
'தோமா அவர்களோடு இல்லை.' ஒருவேளை தோமா அவர்களோடு இருந்தால் அன்று என்ன நடந்திருக்கும்? இயேசுவைக் கண்டவுடன் நம்பியிருப்பாரா? அல்லது மற்ற சீடர்களைப் போல அச்சத்தால் உறைந்து போயிருப்பாரா? அச்சம் ஒரு கொடுமையான உணர்வு. அது தன்னைக் கொண்டிருப்பவரை மட்டுமல்ல. மற்றவர்களையும் அழித்துவிடுகிறது. ஆகையால்தான் அச்சம் கொண்டிருப்பவர் போர்க்களம் செல்லத் தகுதியற்றவனர் என்கிறது பண்டைய போர் மரபு (காண். நீத 6-7).
தோமா இயல்பாகவே அச்சம் இல்லாதவர். ஆகையால்தான் இயேசுவின் பெத்தானியா பயணம் கேட்டு மற்ற சீடர்கள் அவரிடம், 'ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்கு போகிறீரா?' என்று கேட்டபோது, தோமா, 'நாமும் அவரோடு செல்வோம். அவரோடு இறப்போம்' என்கிறார்.
தோமா அன்று தன் உடன்சீடர்களோடு இல்லை என்றால், வேறு எங்குதான் அவர் இருந்தார்?
யூதர்களோடா? எருசலேமின் தெருக்களிலா? பிலாத்துவின் அரண்மனை முற்றத்திலா? கல்வாரி மலையிலா? கல்லறைத் தோட்டத்திலா?
அவர் எங்கு இருந்தார்? என்ற கேள்விக்கு நற்செய்தியில் பதில் இல்லை. வாசகர்களாகிய நாம் தான் இதற்கு விடை காண வேண்டும்.
ஆ. அவரோடு தோமா
முதல் பகுதியில் அவர்களோடு இல்லாத தோமா, இரண்டாவது பகுதியில் அவரோடு இருக்கிறார். யாரோடு? இயேசுவோடு. எந்த அளவிற்கு? இயேசுவின் விரல்களைத் தன் விரல்களாலும், இயேசுவின் விலாவைத் தன் கையாலும் ஊடுருவும் அளவிற்கு நெருக்கம் அடைகின்றார். 
மற்ற சீடர்கள் இயேசுவைக் காண்கிறார்கள். அவ்வளவுதான்!
ஆனால் தோமா இயேசுவை ஊடுருவுகின்றார். இந்த நெருக்கம்தான், 'என் ஆண்டவரே, என் கடவுளே,' என இயேசுவிடம் சரணாகதி அடைய அவரைத் தூண்டுகிறது.
ஒருவேளை தோமா அவர்களோடு மட்டுமே இருந்திருந்தால் இந்த அனுபவத்தை அவர் பெற இயலாமல் போயிருக்கலாம்.
ஆக, அவர்களோடு இல்லாமல் அவரோடு இருப்பது என்பது நம் வாழ்வின் இரட்டிப்புத் தன்மைகளைத் களைந்துவிட்டு, இறைவனோடு ஒன்றிப்பு அடைவது.
இந்த நிலை சாத்தியமா?
சாத்தியம்தான் எனச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:42-47):
'நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்.'
அவர்களிடத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை: ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், இருப்பவர்-இல்லாதவர், ஏழை-பணக்காரார், தேவைகள் இல்லாதவர்-தேவைகள் உடையவர், பெற்றவர்-பெறாதவர், நிறைந்தவர்-வெற்றானவர் என பிளவுகள் இல்லை. அனைவரும் ஒன்றாயிருந்தனர்.
இவர்களை இந்த 'ஒன்று' நிலையில் கட்டி வைத்திருந்தது 'உயிர்த்த ஆண்டவரின் அனுபவம்.'
இயேசுவின் உயிர்ப்பை அவர்கள் வெறும் 'நிகழ்வாக' (இவென்ட்) பார்க்கவில்லை. மாறாக, அதை ஓர் அனுபவமாக (எக்ஸ்பிரியன்ஸ்) பார்க்கிறார்கள். ஆகையால்தான் அவர்கள் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. இயேசுவின் உயிர்ப்புக்கு இதைவிட பெரிய சான்று இருக்கமுடியாது.
இன்று இயேசுவின் உயிர்ப்பு எனக்கு என்ன?
அது ஒரு நிகழ்வா?
அல்லது நான் விசுவாசப் பிரமாணத்தில் அறிக்கையிடும் ஒரு வரியா?
அல்லது அது என் வாழ்க்கை அனுபவமா?
மேலும், உயிர்ப்பு அனுபவம் அவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டும் இல்லாமல், அது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால்தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்களால் உறுதியாய் நிலைத்திருக்கவும்,' 'எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெறவும் முடிந்தது.'
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 பேதுரு 1:3-9) மற்றொரு இரட்டை நிலையைப் பார்க்கின்றோம். 
பேதுருவின் திருச்சபையில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவினர் இயேசு மற்றும் பேதுருவின் சமகாலத்தவர்கள். இவர்கள் இயேசுவை நேரடியாக பார்த்தவர்கள். அவரின் அருஞ்செயல்களைக் கண்டவர்கள். மற்ற பிரிவினர் இயேசு மற்றும் பேதுருவின் இரண்டாம் தலைமுறையினர். இவர்கள் இயேசுவை நேரடியாக பார்க்கவில்லை. அவரின் அருஞ்செயல்களைக் காணவில்லை. இவர்கள் முதல் தலைமுறையினரின் பிள்ளைகள். இப்போது இந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு: 'யாருடைய நம்பிக்கை பெரிது?' இயேசுவைக் கண்டவர்களின் நம்பிக்கையா? அல்லது அவரைக் காணாதவர்களின் நம்பிக்கையா? இரண்டாம் நம்பிக்கையைவிட முதல் நம்பிக்கை பெரியதா? அல்லது சிறியதா?
இப்படிப்பட்ட இறையியல் சிக்கலில் சிக்கித் தவித்த மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கின்றது பேதுருவின் கடிதம்: 'இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகை சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளில் பேருவகை கொள்வீர்கள் ... ... அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள் ... ... நீங்கள் அவரைப் பார்த்ததில்லை. எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கை கொண்டு, ஒப்பற்ற மகிழ்ச்சி அடைந்து பேருவகை கொள்கிறீர்கள்.'
இதே இரட்டை தலைமுறை நிலை யோவானின் திருச்சபையிலும் இருக்க, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என இயேசுவே சொல்வதாகச் சொல்லி, 'பின்னவர்களை' 'முன்னவர்களை' விட மேலானவர்கள் என முன்வைத்து எளிதாக பிரச்சினையை சரிசெய்துவிடுகின்றார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் வாழ்வியல் கேள்விகள் மூன்று:
1. நாம் யாரோடு? - அவர்களோடு? அல்லது அவரோடு?
'அவர்களோடு' இருப்பது என்பது கூட்டத்தில் ஒருவராக இருப்பது. அப்படி இருக்கும் நமக்கு தனியான அடையாளம் இல்லை. கூட்டத்தின் அடையாளமே நம் அடையாளம். அங்கே யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எல்லோரும் அங்கே முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். ஒருவர் சொல்வதை இங்கே எல்லாரும் பின்பற்றுவர். ஆனால், 'அவரோடு' இருப்பது என்பது தனியாக இருப்பது. அப்படி நாம் இருப்பதற்கு நமக்குத் தனியான அடையாளம் தேவை. இங்கே முகமூடி கிழிக்கப்படும். உண்மையை நேருக்கு நேர் நாம் சந்திக்க வேண்டிய கட்டாயம் இங்கே இருக்கும். ஆகையால்தான், தோமா 'அவர்களோடு' இல்லாமல், 'அவரோடு' இருக்கின்றார். சில நேரங்களில் நம்மிடம் இந்த இரட்டைத்தன்மை ஒரே நேரத்தில் இருக்கலாம். 'அவர்களோடு' நிலையில் இருந்து, 'அவரோடு' நிலைக்கு என்னால் கடந்து செல்ல முடிகிறதா?
2. என் உள்ளுணர்வு என்ன?
உயிர்த்த ஆண்டவரின் அனுபவம் பெறுபவர்கள் மூன்றுவகை உணர்வுகளைப் பெறுகின்றனர்: (அ) சீடர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர், (ஆ) தோமா பேறுபெறுகின்றார், (இ) இந்நூலை வாசிக்கும் அனைவரும் வாழ்வு பெறுகின்றனர். 'மகிழ்ச்சி அடைதல்,' 'பேறுபெற்றவர் ஆகுதல்,' 'வாழ்வு பெறுதல்' என்பது இறையனுபவத்தின் படிக்கட்டுகள். மகிழ்ச்சியை அடைய ஒருவர் தன்னிறைவு பெற வேண்டும். தன்னிறைவு பெற்ற ஒருவர்தான் தன் அடையாளத்தை அழிக்கவும், தன் உடைமைகளையும், நேரத்தையும், ஆற்றலையும் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் முடியும். 'வாழ்வு' என்பது இதுவே. தன்மையமான எல்லாவற்றையும், இறைமையமாகவும், பிறர்மையமாகவும் மாற்றுவதுதான் வாழ்வு. ஆகையால்தான், 'நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்' (யோவா 10:10) என்று இயேசு சொல்லுமிடத்தில், தன்மையத்திலிருந்து பிறர்மையத்தை நோக்கிய நகர்வு இருக்கின்றது.
3. அச்சம்-ஆனந்தம், ஐயம்-நம்பிக்கை, கண்டு-காணாமல்
சீடர்களின் அச்சம் நீங்கி ஆனந்தம் தருகின்றார் இயேசு. அவர்களுக்கு தன் அமைதியை உரித்தாக்குவதோடல்லாமல் அவர்களை 'அனுப்புகின்றார்.' சீடத்துவம் இரட்டைத்தன்மை கொண்டது. இங்கே 'அழைத்தலும்,' 'அனுப்புதலும்' இணைந்தே செல்கிறது. அச்சம் கொண்டிருப்பவர்கள் அனுப்பப்பட முடியாது. ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் உள்ளத்திலும் அச்சத்தை விதைத்துவிடுவர். அதுவே, ஆனந்தமாக மாறினால் அவர்களின் அனுப்பப்படுதல் எளிதாகும். ஐயம் நீங்கி நம்பிக்கை கொள்கின்றார் தோமா. இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்வதில் தோமாiவிட சீடர்கள் பெரியவர்கள் அல்லர். அவர்களும் இயேசுவைக் கண்டதால்தான் நம்புகின்றனர். நேரத்தாலும், இடத்தாலும் இயேசுவைவிட்டு மிக தூரமாக இருக்கும் நாம்தான் நம்பிக்கையில் பெரியவர்கள். ஏனெனில் நாம் காணாமலேயே நம்புகின்றோம்.
இறுதியாக,
'அவர்களோடு' இல்லாத தோமா தன்னையே 'அவரோடு' அறைந்துகொண்டார். அவரின் விரல்களில் தன் விரலையும், அவரின் விலாவில் தன் கைகளையும் பதித்துக்கொண்டார்.
இன்று 'அவர்களோடு' மற்றும் 'அவைகளோடு' இருக்கும் நம் இருப்பிலிருந்து 'அவரோடு' இருக்கும் இருப்பிற்குக் கடந்து செல்வோம்.ஏனெனில், 'அவர்களோடு' மற்றும் 'அவைகளோடு' என்பவை காண்பவை. காண்பவை நிலையவற்றவை. காணாதவவை நிலையானவை.
காணாத அவரே நிலையான அமைதியையும், ஆனந்தத்தையும் அருள வல்லவர். அவரோடு என்றும் நாம்!

Friday, April 21, 2017

துணிச்சல்

மற்ற நற்செய்தியாளர்களை விட எனக்கு மாற்கு நற்செய்தியை ஒரு காரணத்திற்காக அதிகம் பிடிக்கும்:

அதாவது, இயேசுவையும் அவருடைய சீடர்களையும் அவர்களுக்கு இடையே இருந்த உறவையும் ரொம்ப goodie goodie-யாக எழுதாமல், அவர்களின் நம்பிக்கையின்மை, நம்பிக்கையை நோக்கிய அவர்களது போராட்டம், பிளவு, ஏற்றத்தாழ்வு, கோபம், பொறாமை, ஒப்பீடு, தாழ்வு மனப்பான்மை ஆகிய அனைத்தையும் மிக அழகாக பதிவு செய்பவர் மாற்கு.

அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 16:9-15) நாம் வாசிக்கவிருக்கின்றோம்.

'வெற்றுக்கல்லறைக்குள் சென்றார். கண்டார். நம்பினார்' என கண்டவுடன் நம்புதலை பதிவு செய்கிறார் யோவான்.

ஆனால், மாற்கு நற்செய்தியாளரின் சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் மிகவும் போராடுகின்றனர்:
'அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை'

'வயல்வெளிக்கு நடந்து சென்ற இருவர் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.'

இயேசு வந்து அவர்களின் கடின உள்ளத்தைக் கடிந்தவுடன் அப்படியே உருகிப்போய்விடுகின்றனர் சீடர்கள்.

அந்த உருக்கம் துணிச்சலாக வெளிப்படுவதை நாளைய முதல் வாசகத்தில் (காண். திப 4:13-21) வாசிக்கின்றோம்: 'அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதை தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்.'

இவர்களின் கருத்துப்படி ஒருவருக்கு துணிச்சல் எப்போது வரும்?

அவருடைய கல்வி அறிவினால்.

ஒரு மாணவனுக்கு எப்போது துணிச்சல் வரும்? தன் பாடங்களை கற்றுத் தெரிந்திருந்தால்.

ஒரு ஆசிரியருக்கு? தன் பாடங்களில் தெளிவு இருந்தால்.

ஒரு நட்பில்? நம்பகத்தன்மை இருந்தால்.

இயேசுவின் சீடர்களுக்கு வரும் துணிச்சலின் ஊற்றுக்கண் இயேசுவே.

அதாவது, 'என் ஆண்டவர் உடனிருக்கிறார். அவர் இறக்கவில்லை' என நம்புகின்றனர். துணிச்சல் பெறுகின்றனர்.

நாம் எதைக் கண்டு பயப்படுகிறோமோ அதுதான் நம் பேய்.

நாம் எதைக் கண்டு நம்புகிறோமோ அதுதான் நம் கடவுள்.

பயம் துணிச்சலை நிலைகுலையச் செய்கிறது.

நம்பிக்கை துணிச்சலுக்கு boost கொடுக்கிறது.


Thursday, April 13, 2017

விரக்தி மேலாண்மை

திருப்பாடுகளின் வெள்ளி

I. எசாயா 52:13-53:12
II. எபிரேயர் 4:14-16, 5:7-9
III. யோவான் 18:1-19:42

விரக்தி மேலாண்மை

எருசலேமுக்குள் இயேசு நுழைந்தபோது இருந்த மக்கள் கூட்டம் எங்கே?

அவர்களின் ஓசான்னா ஆரவாரம் எங்கே?

அவர்களின் தாவீதின் மகன் எங்கே?

அவர்களின் புகழ்பாடல் எங்கே?

அவர்கள் சாலைகளில் விரித்த ஆடைகள் எங்கே?

அவரோடு உடன்வந்த சீடர்கள் எங்கே?

அன்று அவர்களோடு இருந்த நம்பிக்கை எங்கே?

வாடகைக் கழுதையில் ஏறி வந்த அவர்களின் இறுதி நம்பிக்கை இங்கே கல்வாரியில் சிலுவையில் தொங்குகிறது.

ஆரவாரம் அடங்கி எங்கும் மௌனமாக இருக்கிறது.

மோகன ராகம் எல்லாம் முகாரி ராகம் ஆகிவிட்டது.

ஆர்ப்பரிப்புகள் அடங்கி ஒப்பாரி தொடங்கிவிட்டது.

ஆடைகள் கிழிக்கப்பட்டு, உடல் குத்தப்பட்டு, உயிர் பிரிந்து தொங்குகிறது ஒரு உடல்.

அவர்களின் நம்பிக்கை விரக்தி ஆகிவிட்டது.
'நான் உம்மை மெசியா என்று நம்பினேன். ஆனால் நீயோ இங்கே சிலுவையில் ஒரு தோல்வியாய் மரித்துப் போனாய்.

நீ 'இவ்வுலக அரசன் அல்ல. மறுவுலக அரசன்' என்றாய். எனக்கு இவ்வுலகையும், மறுவுலகையும் பிரித்துப்பார்க்க முடியவில்லையே?

நான் இன்று அனுபவிக்கும் உரோமை அடிமைத்தனம் தொடர வேண்டுமா?

நீ வாக்களித்த இறையரசு எங்கே?

இப்படித்தான் எழுந்தது சாமானியனின் குரல் சிலுவையை நோக்கி.

நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் எல்லாம் விரக்திக்கு தள்ளப்படுகின்றனர். காட்டிக்கொடுத்த விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார். மறுதலித்த ஒருவர் கண்ணீர்விட்டு அதைக் கரைக்கின்றார். மற்ற பத்து பேர் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து கொள்கின்றனர். மக்கள் தங்கள் இயலாமையை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர்.

இவர்கள் அனுபவித்த விரக்தியை விட இயேசு நிறைய விரக்திகளை அனுபவித்தார்.

அவரின் விரக்தி மேலாண்மை பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

ஒரு காலத்தில் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்ட 'மேலாண்மை' என்ற வார்த்தை இன்று சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளுக்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது: 'வாழ்க்கை மேலாண்மை,' 'நேர மேலாண்மை,' 'நிதி மேலாண்மை,' 'குடும்ப மேலாண்மை,' 'சோர்வு மேலாண்மை.' இந்த வரிசையில் வருவதுதான் 'விரக்தி மேலாண்மை.'

அடிப்படையில், 'மேலாண்மை' என்பது 'நமக்கு நடக்கும் ஒரு நிகழ்விற்கு எதிர்நிகழ்வு நடத்தாமல் அதற்கேற்ற பதில் கொடுப்பது.' ஆக, மேலாண்மை செய்ய வேண்டுமென்றால் அந்த நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்விற்கான எதிர்வினையை அறிய வேண்டும். அந்த எதிர்வினையை தவிர்த்து நேர்முகமாக செயலாற்ற வேண்டும்.

விரக்தி என்றால் என்ன?

விரக்தி என்பது அடிப்படையில் நம்பிக்கை இழந்த நிலை. ஒருவர் மேல் அல்லது ஒன்றின் மேல் உள்ள நம்பிக்கை தகர்ந்துவிடும்போது ஏற்படும் வெற்றிடத்தில் தொற்றிக்கொள்ளும் உணர்வுதான் விரக்தி.

இந்த விரக்தியின் ஊற்று எதிர்பார்ப்பு.

ஆக, விரக்தியை 'எதிர்பார்ப்பிற்கும்,' 'எதார்த்தற்கும்' இடையே ஏற்படும் இடைவெளி என்று சொல்லலாம்.

என் நண்பன் இறுதிவரை என்னோடு இருப்பான் என்று நினைப்பது என் எதிர்பார்ப்பு.

ஆனால் ஏதோ ஒரு நாள் ஏற்பட்ட மனக்கசப்பில் அவன் என்னிடமிருந்து பிரிந்து விடுவது எதார்த்தம்.

என் எதிர்பார்ப்புக்கு முரணாக எதார்த்தம் நிகழ்வதால் என்னைத் தொற்றிக்கொள்வது விரக்தி.

நான் 12ஆம் வகுப்பு தேர்வை நன்றாக எழுதியிருக்கிறேன். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவேன் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆனால் ஒரு பாடத்தில் நான் ஃபெயில் என வருகிறது ரிசல்ட். இது எதார்த்தம்.

என் எதிர்பார்ப்பும் எதார்த்தமும் இணைந்து கொள்ளாததால் எனக்கு வருவது விரக்தி.

இன்று நாம் வாசிக்கக் கேட்ட யோவான் எழுதிய பாடுகளின் வரலாற்றில், இயேசு ஆறு விரக்திகளை அனுபவிக்கின்றார்:

1. நிராகரிக்கப்படுதல் (ரிஜெக்ஷன்)
2. கைவிடப்படுதல் (அபேன்டன்மன்ட்)
3. காட்டிக்கொடுக்கப்படுதல் (பிட்ரேயல்)
4. மறுதலிக்கப்படுதல் (டினையல்)
5. அவமானப்படுத்தப்படுதல் (ஹ்யுமிலியேஷன்)
6. சிலுவையில் அறையப்படுதல் (க்ருஸிஃபிக்ஷன்)

1. நிராகரிக்கப்படுதல்

'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (யோவா 1:11). இயேசுவின் வாழ்வில் அவரைச் சந்தித்தவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவிடம் எந்த உதவியும் பெறாதவர்கள். ஆனால் இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் - அவரின் அம்மா, திருத்தூதர்கள், பெத்தனி நண்பர்கள். (ஆ) இயேசுவிடம் உதவி பெற்றவர்கள். ஆக, உடன் இருப்பவர்கள் - பேய் நீங்கியவர், நலம் பெற்றவர், பார்வை பெற்றவர். (இ) இயேசுவின் எதிரிகள் - பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக்குருக்கள். முதல் இரண்டு குழுக்களும் சாதாரணமானவர்கள். அவர்களின் இருப்பினால் இயேசு உடனிருப்பை உணர்ந்தாலும் அவர்கள் சென்றுவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், மூன்றாவது குழுவினர் அவரின் பணிவாழ்வின் தொடக்கமுதல் அவரை நிராகரித்துக்கொண்டே இருந்தனர். இயேசுவால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை, பயனும் இல்லை. ஆகையால் அவரை நிராகரிக்கின்றனர்.

2. கைவிடப்படுதல்

இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடனிருந்து, அவரின் இறையரசு என்ன, கொள்கை என்ன, மெசியா நிலை என்ன, அதை அடையும் வழி என்ன, அந்த வழிதரும் வலி என்ன என எல்லாம் அறிந்திருந்தாலும் அவரைக் கைவிடுகின்றனர். இறுதி இராவுணவில் ஒன்றாகச் சாப்பிட்ட, இவரும் அவர்களின் பாதங்களை எல்லாம் கழுவிவிட்ட அவர்கள், அரை மணி நேரத்தில் ஆளுக்கொரு திசை நோக்கி ஓடுகின்றனர். 'இவன் நம்மோடு இருக்க மாட்டான்' என்று தெரிந்தே இயேசு அவர்களோடு உணவு அருந்தும்போது அவருக்கு எத்துணை வலி இருந்திருக்கும்? 'இவன் நம்மை விட்டு போய்விடுவான்' என்ற மனநிலையில் எல்லாப் பொழுதுகளையும் வாழக் கற்றிருந்தார் இயேசு.

3. காட்டிக்கொடுக்கப்படுதல்

'நண்பா, மானிட மகனை முத்தமிட்டா காட்டிக்கொடுத்தாய்?' என யூதாசைக் கேட்கிறார் இயேசு. தன் திராட்சைக் கிண்ணத்தில் முத்தமிட்டு இரசம் பருகிய யூதாசு இயேசுவின் கன்னத்தில் முத்தம் பதிக்கின்றார். அவரிடம் பணப்பை இருந்தது என எழுதுகிறார் யோவான். அப்படி இருக்க, 'எனக்கு என்ன தருவீர்கள்?' என தலைமைக்குரு முன் சென்று நிற்கின்றார். தன் தலைவர் இயேசுவின் மேல் உள்ள பிரமாணிக்கத்தை தலைமைக்குருக்கு விற்கின்றார். ஆக, பணத்தை வாங்கியவுடனேயே யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துவிட்டார். கெத்சேமனித் தோட்டத்தில் முத்தமிட்டது ஓர் அடையாளம் மட்டுமே.

4. மறுதலிக்கப்படுதல்

இயேசுவின் சீடர்களை பல வட்டங்களாகப் பிரித்து நிறுத்தினால், அவரைச் சுற்றி இருக்கும் முதல் வட்டத்தில் இருந்த மூன்று பேரில் ஒருவர் பேதுரு. இயேசுவின் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், சிறுமி உயிர்பெறுதல் மற்றும் கெத்சேமனி தோட்டம் ஆகியவற்றில் உடனிருந்த பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். அதாவது, இயேசுவோடு தான் அடையாளப்படுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை. அப்படி அடையாளப்படுத்தப்படுவது தன் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் என்று நினைத்ததால் என்னவோ அப்படிச் செய்கின்றார். 'நீ இப்படிச் செய்வாய்?' என்று இயேசு சொன்னபோது மறுத்த பேதுரு, இயேசுவையே மறுக்கின்றார். இந்த வகையில் யூதாசு பொய் சொல்லவில்லை. 'நீ காட்டிக்கொடுப்பாய்' என்று சொன்னவுடன், அதை ஏற்றுக்கொண்டவராக அந்த இடத்தை விட்டு நகர்கின்றார்.

5. அவமானப்படுத்தப்படுதல்

'ஹ்யுமிலியேஷன்' என்று ஆங்கிலத்தில் நாம் சொல்வதை 'அவமானப்படுத்துதல்' என்று மொழிபெயர்ப்பது முழுப்பொருளையும் தருவதில்லை. 'ஹ்யுமுஸ்' என்றால் இலத்தீன் மொழியில் 'மண்' அல்லது 'தூசி.' ஆக, ஒருவரை மண்ணோடு மண்ணாக்குவது அல்லது தூசியாக்குவது அல்லது கலங்கப்படுத்துவதுதான் ஹ்யுமிலியேஷன். இயேசு இரண்டு வகையில் அவமானப்படுத்தப்படுகின்றார்: (அ) போலியான குற்றச்சாட்டும் அநீதியான தண்டனையும் மற்றும் (ஆ) நிர்வாணம். 'இவன் தன்னையே இறைமகனாக்கிக்கொண்டான்' என்பது அவர்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதுவே போலியாகத் தயாரிக்கப்பட்டதுதான். இந்தக் குற்றத்திற்கு தண்டனை கல்லால் எறிந்து கொள்வதுதான். ஆனால் இயேசுவுக்கு சிலுவைமரணம் தண்டனையாக தரப்படுகிறது. இரண்டாவது, நிர்வாணம். மக்கள்முன் அரசன்போல நன்மைகள் செய்துகொண்டு வலம் வந்தவரை நிர்வாணமாக்குகிறார்கள்.

6. சிலுவையில் அறையப்படுதல்

உரோமை அரசு தன் இனம் சாராத மக்களைத் தண்டிக்க கண்டுபிடித்த உச்சகட்ட தண்டனைதான் இது. சிலுவையில் மனிதர்களை அறைவது பற்றி நிறைய வரலாற்று பதிவுகள் இருக்கின்றன. சில இடங்களில் ஆணிகளைப் பயன்படுத்தி மனிதர்களை சிலுவையோடு பிணைக்கிறார்கள். மற்ற இடங்களில் கயிறுகள் கட்டி பிணைக்கிறார்கள். ஆணிகள் அடிப்பதிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் உள்ளங்கைகளிலும், சில இடங்களில் கை நாடிகளிலும் அடிக்கிறார்கள். சிலுவையில் மரணம் எப்படி நடக்கிறது? அறையப்பட்டவர் தன் கைகளையும், கால்களையும் பயன்படுத்த முடியாது. ஆக, காகம், கழுகு போன்ற பறவைகள் வந்து கண்களைக் கொத்தினால், கன்னத்தைக் கொத்தினால் விரட்டவும் முடியாது. வயிறு மற்றும் கால்களின் எடை கீழ்நோக்கி இழுப்பதல் மூச்சு விடுவது சிரமம் ஆகிவிடும். மேலும், கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் இரத்தக்கசிவினால் ஆற்றல் குறையும். இப்படியாக எல்லா உறுப்புக்களையும் சித்திரவதை செய்து ஏற்படுத்தும் மரணமே சிலுவை மரணம். 

இயேசுவின் இந்த ஆறு விரக்தி நிலை அனுபவங்கள் - நிராகரிக்கப்படுதல், கைவிடப்படுதல், காட்டிக்கொடுக்கப்படுதல், மறுதலிக்கப்படுதல், அவமானப்படுத்தப்படுதல், சிலுவையில் அறையப்படுதல் - அவரின் அனுபவங்கள் மட்டுமல்ல.

இவை நம் வாழ்க்கை அனுபவங்களும்தாம்.

நம் அப்பாவும், அம்மாவும், நம் சபையின் அருள்சகோதரியும், நம் மறைமாவட்டத்தின் அருள்பணியாளரும் பயன்படு நிலையை இழந்தவுடன் அவர்களை நாம் நிராகரிப்பு செய்கிறோம். ஒருவர் எனக்கு எந்த அளவுக்கு பயன்தருவார் என்பதை வைத்து நாம் அவரை மதிப்பிடுகிறோம். மதிப்பு தருகிறோம். சில நேரங்களில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் நாம் நிராகரிக்கப்படுகிறோம். நமது குடும்பத்தில் ஒருவர் மற்றவரின் நன்மைத் தனத்தை கண்டுகொள்ளாதபோது, நம் குழந்தைகளை பாராட்டாதபோது, தேவையில் இருப்பவர்களை கண்டுகொள்ளாதபோது நாம் நிராகரிக்கிறோம். நிராகரிக்கவும் படுகிறோம்.

கைவிடப்பட்ட அனுபவமும் நமக்கு நிறைய உண்டு. பாதியில் நின்றுபோன உறவுகள், தவறவிட்ட வேலைவாய்ப்புகள், நம் தவற்றால் மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிட்ட நிலைகள் நம் வாழ்விலும் நடக்கின்றன.

காட்டிக்கொடுக்கப்படுதல் - யூதாசு தொடங்கி எட்டப்பன் வரை மனிதர்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட கதைகள் ஏராளம். நாமே நம் பிரமாணிக்கத்தை இடம் மாற்றி இருக்கலாம். அல்லது நமக்கு காட்டவேண்டிய பிரமாணிக்கத்தை மற்றவர்கள் மாற்றியிருக்கலாம்.

மறுதலிக்கப்படுதல் - தன் பாதுகாப்புக்காக, தன் நலனுக்காக மற்றவரை தெரியாது என்று நாம் சொல்லியிருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மைச் சொல்லியிருக்கலாம்.

அவமானப்படுத்தப்படுதல் - இயேசு மட்டும் நிர்வாணப்படுத்தப்படவில்லை. இன்று டெல்லியில் நம் தமிழக விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள் நிர்வாணப்படுத்தப்படுகிறார்கள். நாம் மற்றவரிடம் சொன்ன இரகசியத்தை அவர் வெளியிட்டு நம்மை நிர்வாணப்படுத்தியிருக்கலாம். ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் நாம் மற்றவரைப் பற்றி அவதூறு பரப்பும்போதும் நாம் அடுத்தவரை அவமானப்படுத்துகிறோம்.

சிலுவையில் அறையப்படுதல் - இதை இன்று நாம் அனுபவிக்காவிட்டாலும், அநீதியான தண்டனைகளை நாம் அன்றாடம் அனுபவிக்கவே செய்கின்றோம்.

இயேசு தன் வாழ்வின் இந்த ஆறு விரக்திகளை எப்படி மேலாண்மை செய்தார்? அவரின் மேலாண்மை நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. நோ குறுக்குவழி

இயேசுவின் விரக்திக்கு நிறைய குறுக்குவழிகள் இருந்தன. பாலைவனத்தில் சாத்தான் தந்த மூன்று குறுக்கு வழிகளை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது 'சிலுவையில் இருந்து இறங்கி வா. நாங்கள் உம்மை நம்புகிறோம்' என்று ஏளனம் செய்தவர்கள் முன் விறுவிறு என சிலுவையிலிருந்து இறங்கி வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அற்புதம் செய்து தன்னையே காப்பாற்றி இருக்கலாம். இவற்றில் எந்த குறுக்குவழியையும் தேடவில்லை இயேசு. குறுக்குவழியை தெரிவு செய்வது முள்குத்திய இடத்தில் முள்ளை எடுக்காமல் காயத்திற்கு மருந்துபோடுவது போல. கொஞ்ச நேரம் வேண்டுமானால் மருந்து சுகமாயிருக்கும். ஆனால், மீண்டும் வலி எடுக்கும். முள்ளை எடுப்பது வலிதரும் என்றாலும் வலிதரும் அந்த நேரிய பாதையை தேர்ந்தெடுக்கிறார்.

இன்று நம் வாழ்வின் விரக்திகளுக்கு நாம் தேடும் குறுக்குவழிகள் எவை? இணையதளத்தில் நிறைய நேரம் செலவழித்தல், அளவுக்கதிகம் சாப்பிடுதல், நிறைய பொருள்களை வாங்கிக் குவித்தல், மது மற்றும் போதை மருந்துகளைத் தேடுதல், அதிகம் டிவி பார்த்தல், நிறைய புறணி பேசுதல் - இவை எல்லாமே விரக்தி நிவாரணிகள்தாம். ஆனால் இவை சில நிமிடங்கள் மட்டுமே நலம் தருபவை. இவைகளை நாம் தேர்வுசெய்யக்கூடாது.

2. வாழ்வின் இலக்கு நிர்ணயம்

நம் வாழ்வின் இலக்கு தெளிவாக இருந்தால் விரக்தியை எளிதாக சமாளித்துவிடலாம். இயேசுவின் வாழ்வின் இலக்கு 'உண்மையும், நீதியும்.' இந்த இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. 12ஆம் வகுப்பில் என் மதிப்பெண் 1150 என நான் இலக்கு வைத்தால், காலாண்டில் 450 மதிப்பெண்களே வாங்கும்போது நாம் விரக்தி அடையக்கூடாது. 'இது எனக்கு சரிப்படாது' என என் இலக்கோடு நான் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. மாறாக, இலக்கை நோக்கி தொடர்பயணம் செய்ய வேண்டும்.

3. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுதல்

நாம் பல நேரங்களில் நம் எதார்த்தங்களோடு சண்டை போடுகின்றோம். அப்போது நம் விரக்தி கூடிவிடுகிறது. எனக்கு முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுகின்றன, அல்லது என் தலையில் நரை தோன்றுகிறது. என் முகம் அழகாகவும், என் முடி கறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், எதார்த்தம் என்ன? வெண்புள்ளியும், நரையும். இவைகளை குணமாக்க முடியும் என்றால் குணமாக்கலாம். இல்லை என்றால் நான் அந்த எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த எதார்த்தத்தோடு நான் சண்டை இடுதல் அல்லது போராடுதல் கூடாது. காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று கொண்டு முகத்தின் ஒவ்வொரு இஞ்சாய் பிதுக்கிப் பார்த்துக்கொண்டிருந்தால், அல்லது ஒவ்வொரு முடியாய் தேடி நரையின் அளவு என்ன என பார்த்துக்கொண்டிருந்தால் நான் வெண்புள்ளியோடும், நரையோடும் சண்டை இடுகிறேன்.

இயேசு தன் விரக்திகளோடு சண்டை இடவில்லை. தன்னை நிராகரித்தவர்களை சபிக்கவில்லை. தன்னை கைவிட்டவர்களையும், காட்டிக்கொடுத்தவர்களையும், மறுதலித்தவர்களையும் கடிந்துகொள்ளவில்லை. அவமானப்படுத்தியவர்களையும், சிலுவையில் அறைந்தவர்களையும் தண்டிக்கவில்லை. அவர்களையும், அவர்கள் தந்த விரக்திகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.

4. நீ உன் வாழ்வின் மாஸ்டர், பலிகடா (விக்டிம்) அல்ல

இயேசுவின் இறப்பு பாஸ்கா ஆடு போன்ற பலிகடா என்றாலும், அவர் தன்னை ஒருபோதும் பலிகடா போல எண்ணவில்லை. நாம் நம்மையே பலி கடா போன்று எண்ணும்போது மற்றவர்கள் நம்மேல் ஆட்சி செலுத்த அவர்களை அனுமதித்துவிடுகிறோம். இயேசு தன் உணர்வுகளுக்குக்கூட தன்னைப் பலிகடா ஆக்கவில்லை. துணிந்து நிற்கின்றார். 'நானே என் வாழ்வின் தலைவன்' என்ற நிலையில் இருக்கும்போது எந்த விரக்தியையும் நாம் சமாளித்துவிடலாம்.

5. இன்னும் கொஞ்சம் நட

மற்றவர்களும், மற்றவைகளும் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதை செய்வதை விட கொஞ்சம் அதிகம் நடக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். ஒரு மைல் தூரம் என்றால் இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும். மேலாடை என்றால் அங்கியையும் தர வேண்டும். 

கணவருக்கும், மனைவிக்கும் உள்ள உறவில் விரிசல் வருகிறது என வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் எல்லாரும் செய்வது என்ன? மணமுறிவு அல்லது பிரிந்து வாழ்தல். மற்றவர்கள் செய்வது போல நாம் ஏன் செய்ய வேண்டும்? யூதாசு தற்கொலை செய்துகொண்டான் என்பதற்காக பேதுரு தற்கொலை செய்துகொண்டாரா? அழுதுவிட்டு அடுத்த வேலையை பார்க்கவில்லையா? 'எனக்கு உன்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என இயேசுவைப் பார்த்து அவர் சொல்லவில்லையா? மற்றவர்கள் செய்வதுபோல செய்யாமல், நாம் கொஞ்சம் முயற்சி எடுத்து இன்னும் கொஞ்சம் நேரம் மற்றும் ஆற்றல் எடுத்து எருப்போட்டால் எந்த மரமும், எந்த உறவும் கனிகொடுத்துவிடும்.

6. இறைவனின் உடனிருப்பு

மனிதர்கள்மேல் தான் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துப்போய் தனக்கு விரக்தி வந்தாலும், தன் நம்பிக்கையை தன் தந்தையின்மேல் நங்கூரமாய் பதிக்கின்றார். எந்நேரமும் என் தந்தை உடனிருக்கிறார் என்ற இயேசுவின் நம்பிக்கைதான் அவரின் மனக்கட்டின்மைக்கு காரணமாக இருந்தது. நீ என்னை உடைத்தாலும், அழித்தாலும் என் தந்தை என்னை எழுப்ப வல்லவர் என்று நம்பினார். 

இதுதான், விரக்தி நேரங்களில் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையாக இருக்க வேண்டும். மனிதர்களும், பொருள்களும் மாறக்கூடியவை, தற்காலிகமானவை. ஆனால், இறைவன் நிரந்தரமானவர். அந்த நிரந்தரத்தை நாம் பிடித்துக்கொள்ளும்போது தற்காலிகங்கள் தாமாகவே நகர்ந்துவிடும்.

'மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்.
நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்.
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.'

(எசாயா 53:4-5)

Wednesday, April 12, 2017

பாதங்கள் நனைந்து

13 ஏப்ரல் 2017: ஆண்டவரின் இறுதி இராவுணவுத் திருப்பலி

விப 12:1-8,11-14 1 கொரி 11:23-26 யோவா 13:1-15

பாதங்கள் நனைந்து

கடந்த ஆண்டு சென்னைக்கு வெள்ளம் வந்தபோது, சேதமுற்ற பகுதிகளைப் பார்வையிட நம் பாரத பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திருந்தார். நம் முதல்வர் அம்மா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவர் வெளியே வராததை கேலி செய்யும் விதமாக அப்போதைய ஆனந்த விகடன் சித்திரம் ஒன்று வெளியிட்டது: அதில் முதல்வர் அவர்கள் காரில் இருப்பது போலவும், அவருடன் உடனிருப்பவர்கள், 'அம்மா, இப்போது வெளியே போக வேண்டாம். போனால், கார் டயர் எல்லாம் நனைஞ்சிடும்' என்று சொல்வது போலவும் இருந்தது.

தங்களின் பாதம் நனையாமல் நமக்குப் பணிவிடை செய்ய நினைக்கின்றனர் நம் இக்கால தலைவர்கள்.

ஆனால், இன்று நம் தனிப்பெரும் தலைவர் இயேசு, 'பாதம் நனைந்தால்தான் பணி செய்ய முடியும்!' என்பதைத் தன் செயலால் சொல்கின்றார்.

பாதம் நனைதல்தான் குருத்துவம்.

பாதம் நனைதல்தான் நற்கருணை.

பாதம் நனைதல்தான் அன்பு.

கடைசியா உங்க பாதம் எப்போ நனைஞ்சது?

நம்ம ஊர்ல மழை பெய்து நிறைய நாள்கள் ஆகிவிட்டன. தெருக்களில் நடந்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தால் காலெல்லாம் தூசியாக இருக்கிறதே தவிர நனைந்திருப்பது இல்லை. நம் பாதம் நனையும் இடத்திற்கு நாம் போவதில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 12:1-8, 11-14) இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய முதல் பாஸ்கா நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். முதல் பாஸ்கா முடிந்து அவர்கள் பாதம் நனையாமல் எகிப்து நாட்டின் செங்கடலைக் கடக்கின்றனர். இது அவர்களின் முதல் கடத்தலாக இருந்தாலும், இதே போன்ற மற்றொரு கடத்தலை யோசுவா நூல் 3ஆம் பிரிவில் வாசிக்கின்றோம்:

'மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். உடன்படிக்கை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலைவில் நின்றது ... ... இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.'

குருக்களின் பாதங்கள் நனைகின்றன. மக்கள் பாதங்கள் நனையாமல் கடக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:1-15) தன் சீடர்களின் பாதங்களை நனைக்கும் இயேசு அவர்களை குருக்கள் ஆக்குகின்றார்:

'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் (அதாவது, உன் பாதங்களில் தண்ணீர் ஒட்டாவிட்டால்) என்னோடு உனக்குப் பங்கில்லை.'

'ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடைமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.'

குருவாக இருக்கும் இயேசு, தன் குருத்துவத்தில் தன் சீடர்களுக்குப் பங்குகொடுக்கும் அடையாளமாக அவர்களின் பாதங்களில் தண்ணீர் ஊற்றித் துடைக்கின்றார். யூத மரபில் பாதம் கழுவுதலுக்கு மூன்று அர்த்தங்கள் இருந்தன: 1) தனிநபர் தூய்மை, 2) விருந்தோம்பலின் அடையாளம், 3) எருசலேம் ஆலயச் சடங்கு முறை. இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவிய நிகழ்வு இந்த மூன்றையும் தாண்டுகின்றது. விருந்து பின்புலமாக இருந்தாலும் இயேசு இதன் வழியாக ஒரு புதிய சீடத்துவத்தை, புதிய குருத்துவத்தை தன் சீடர்களுக்குக் கற்பிக்கின்றார்.

ஆக, பணிக்குருத்துவத்தில் பங்கேற்கும் அருள்நிலை இனியவரின் முதல் பண்பே தம் பாதங்களை நனைத்துக் கொள்ளுதலே. இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தபோது லேவியர் குருக்கள் தங்கள் பாதங்களை நனைத்துக்கொண்டது எதற்காக? அடுத்தவர் பாதம் நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. ஏறக்குறைய மூன்று இலட்சம் மக்கள் பேழைக்கு அடியில் கடந்து செல்லும் நேரம் வரை கால்கடுக்க, தண்ணீருக்குள் நிற்கின்றனர் குருக்கள். அவர்கள் தங்கள் பாதங்களை நனைத்துக்கொள்ள துணிந்ததால் மற்றவர்கள் யோர்தானின் அக்கரைக்குக் கடந்து செல்கின்றனர்.

இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுதல் ஆறு நிலைகளாக நடக்கிறது:

1. பந்தியிலிருந்து எழுதல்
2. மேலாடையைக் கழற்றி வைத்தல்
3. இடுப்பில் துண்டைக் கட்டுதல்
4. குவளையில் தண்ணீர் எடுத்தல்
5. பாதங்களில் ஊற்றுதல்
6. துண்டால் துடைத்தல்

1. பந்தியிலிருந்து எழுதல்

அதாவது, தான் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலை நிறுத்திவிட்டு, இன்னொரு செயல் செய்யப் புறப்படுதல். நமக்கு இதுதான் கடினமான ஒன்று: ஸ்டார்ட்டிங் ட்ரபுள். நாம் எல்லாரும் நல்லவர்கள்தாம். நல்லவற்றைச் செய்ய நினைப்பவர்கள்தாம். ஆனால், நாமாக அப்படி இருக்க முன்வருவதில்லை. யாராவது நம்மை பிடித்து நிறுத்த வேண்டும். அல்லது யாராவது நமக்கு முன் செய்துகாட்ட வேண்டும். நாம் வண்டியில் செல்லும்போது வழியில் ஒருவர் உதவி கேட்டு மறிக்கின்றார் என்றால், அல்லது எதிரே நின்று பிச்சை கேட்டால் நாம் உடனே கோபப்படுகின்றோம். ஏன்? நாம் செய்யும் செயலுக்கு அவர் இடையூறாக இருப்பதால். நாம் செய்துகொண்டிருக்கின்ற ஒன்றை மற்றவர்களுக்காக நிறுத்த நம்மால் முடிவதில்லை.

2. மேலாடையைக் கழற்றுதலும், 3. துண்டைக் கட்டுதலும்

இந்த இரண்டு செயல்களும் இணைந்து செல்கின்றன. யூதர்களில் உயர்குடியினர் இரண்டு வகை ஆடைகளை அணிவர். ஒன்று, நீண்ட அங்கி. இரண்டு அதன் மேல் மேலாடை. ஆக, மேலாடை உயர்குடிப்பிறப்பின் அல்லது செல்வத்தின் அல்லது மாட்சியின் அடையாளம். அதைக் களைந்துவிட்டு அடிமையின் ஆடையான துண்டை இடுப்பில் கட்டிக்கொள்கின்றார் இயேசு.

நாம் நமக்கென வைத்திருக்கும் வெளிப்புற ஆடம்பர அடையாளங்களைக் களைந்துவிட்டு, நம் இல்லாமையைக் கட்டிக்கொள்வது இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகள்.

4. குவளையில் தண்ணீர் எடுத்தல்

தண்ணீர் என்பது தூய்மையின் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, அது தூய்மையாக ஆக்கும் தகுதி கொண்டது. ஆக, இந்த நிகழ்வை வெறும் அடையாளமாக செய்யாமல், பயன்படு நிகழ்வாகவே செய்கின்றார்.

5. பாதங்களில் தண்ணீர் ஊற்றி

பாதங்களை நனைத்தல் அடிமைகளின் வேலை. மேலிருப்பவருக்கு கீழிருப்பவர் செய்யும் வேலை. இவ்வளவு நாள் இவர்களுக்கு ஆண்டவராகவும், போதகராகவும் மேலிருந்த இயேசு இன்று மேல்-கீழ் நிலையை கீழ்-மேல் நிலை என்று புரட்டிப் போடுகின்றார்.

6. துண்டால் துடைத்தல்

துடைத்தல் சீடர்களின் தயார்நிலையைக் குறிக்கின்றது.

இந்த நிகழ்வு குருத்துவம் பற்றி என்ன சொல்கிறது?

அ. அருள்பணியாளர் என்பவர் முதலில் தன் பாதங்களைக் கழுவுமாறு இயேசுவிடம் நீட்டுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். 'ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது' என தன் பாதங்களை உள் இழுக்கின்றார் பேதுரு. இயேசு தன்னை முதன்முதலாக அழைத்தபோது, மிகுதியான மீன்பாட்டைக் கண்டவுடன் பேதுரு, 'ஆண்டவரே, நான் பாவி. என்னை விட்டு நீங்கும்' என்கிறார். அதே, குற்றவுணர்வும், சுயபச்சாதாபமும்தான் பேதுரு இயேசுவிடம், 'வேண்டாம் ஆண்டவரே' என்று சொல்லக் காரணமாகிறது.

ஒவ்வொரு அருள்பணியாளருக்கும் இந்த டார்க் ஸ்பாட் உண்டு. 'ஆண்டவரே நான் பாவி' என்ற தயக்கம் உண்டு. 'என்னிடம் பொருள் இல்லை. சொத்து இல்லை. பதவி இல்லை. நான் ஒன்றும் இல்லாதவன்' என்று சொல்லும் குணம் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் தன் பாதங்களை; தனக்குள்ளே இழுத்துக்கொள்கின்றார் அருள்பணியாளர். ஒவ்வொரு பெரிய கூட்டத்தின் முன் நான் நிற்கும்போதும் எனக்கு இந்த உணர்வு வந்ததுண்டு. எனக்கு முன்னால் இருப்பவர்களின் படிப்பு, பதவி, பணம், அழகு ஆகியவற்றைக் கண்டு எனக்கு நானே குற்றவுணர்வு அடைந்தது உண்டு.

எனக்கு முன் இருப்பவர் மாதம் 2 அல்லது 3 லட்சம் சம்பளம் வாங்குகிறார். நானோ என் வாழ்வாதாரத்திற்கு அடுத்தவரை நம்பியிருக்கின்றேன். எனக்கென என்ன இருக்கிறது? - இப்படி எல்லாம் நான் என்னை நானே கேட்டதுண்டு. அந்த நேரங்களில் எல்லாம் நானும் என்னை எனக்குள்ளே இழுத்திருக்கிறேன்.

இந்த உணர்வு என்னுள்ளே தாழ்வு மனப்பான்மை, விரக்தி, தன்னலம் போன்றவற்றை உருவாக்கிவிடுகிறது.

ஒவ்வொரு அருள்பணியாளரும் தான் எதற்காக தன் பணியை செய்ய தயக்கம் கொள்கிறார் என்பதை கண்டுணர வேண்டும். நாம் கண்டுணர்ந்தாலே போதும். அங்கே இயேசு வந்துவிடுவார். 'நான் உன் பாதங்களைக் கழுவ நீ உன் கால்களை நீட்ட வேண்டும்' என கட்டளை இடுகிறார்.

பேருந்தில் அல்லது பொது இடங்களில் நிற்கும்போது நான் அடுத்தவரின் பாதங்களைக் கவனிப்பதுண்டு:

செருப்பு அணிந்த பாதங்கள்.
செருப்பு அணியாத பாதங்கள்.
அழுக்கான பாதங்கள்.
அழகான பாதங்கள்.
நெய்ல் பாலிஷ் போட்ட பாதம்.
சர்க்கரையில் ஒரு விரல் இழந்த பாதம்.
எதிரியின் பாதம்.
நண்பனின் பாதம்.
பிஞ்சுக் குழந்தையின் பாதம்.
முதியவரின் பாதம்.
அடிபட்டு கட்டுப்போட்ட பாதம்.
ஒரு பாதத்தில் மேல் இன்னொரு பாதம் பதித்திருக்கும் பாதம்.
ஒற்றை விரலில் உயர்ந்த நிற்கும் பாதம்.

பறவைகளைப் போலவே பாதங்களும் பலவிதம்.

'இதுதான் ஆண்டவரே நான்!' 'இதுதான் நான்!' என எந்த அருள்பணியாளர் ஆண்டவரிடம் விரித்துக் கொடுக்கிறாரோ, அந்த அருள்பணியாளரே சிறந்தவர்.

ஆ. அருள்பணியாளர் தன் பாதங்கள் கழுவப்பட்டவுடன் தனக்கு அருகிருப்பவரின் பாதங்களைக் கழுவ வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டுமென்றால், மேற்காணும் ஆறு நிலைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

1. பந்தியில் இருந்து எழுந்து - தன் அருள்பணி வாழ்வில் இருந்து, தன் பழைய வாழ்விலிருந்து எழுந்து
2. மேலாடையை கழற்றிவிட்டு - தன் ஆணவம், உயர்நிலை, ஆடம்பரம் ஆகியவற்றை களைந்துவிட்டு
3. துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு - அடுத்தவருக்கு பணி செய்யும் உருவை ஏற்று
4. குவளையில் தண்ணீரை எடுத்து - அடுத்தவரின் வாழ்வாதாரத்தை கண்டுணர்ந்து
5. பாதங்களில் ஊற்றி - எனக்கு முன் இருப்பவருக்கு பணி செய்து
6. துடைக்க வேண்டும் - அடுத்தவருக்கு நலம்தர வேண்டும்.

இந்த இரண்டு குணங்களும் இயேசு என்னும் தலைமைக்குருவிடம் விளங்கியதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் அழகாக பதிவு செய்கிறது:

'ஆதலின், கடவுள் பணியில் அவர் நம்பிக்கையும், இரக்கமும் உள்ள தலைமைக்குருவாயிருந்து.'

கடவுள் மேல் உள்ள நம்பிக்கை என்பது இயேசுவை நோக்கி என் பாதத்தை நீட்டுவது
இரக்கம் என்பது மற்றவரின் பாதங்களை நோக்கி என் கைகளை நீட்டிக் கழுவுவது.

இவை இரண்டையும் அருள்பணியாளரின் 'வேர் ஊன்றுதல்,' 'விழுது பரப்புதல்' என்று சொல்லலாம்.

இப்படியாக, வேர் ஊன்றி, விழுது பரப்பும் அருள்பணியாளர் நற்கருணையை பொருள் உணர்ந்து கொண்டாட முடியும். எப்படி?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரிந்தியர் 11:23-26) இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்து கொண்டாடும் தூய பவுல், அந்த நிகழ்வை மூன்று வினைச்சொற்களாகப் பதிவு செய்கின்றார்:

1. அப்பத்தை எடுத்து
2. கடவுளுக்கு நன்றி செலுத்தி
3. அதைப் பிட்டு

இங்கே அப்பம் என்பது இயேசுவின், அருள்பணியாளரின் உடல். அவர் அதை எடுத்து மற்றவர்களுக்காக பிட்க வேண்டும். அதாவது, பிட்கப்பட்ட அப்பத்தை நம்மால் ஒன்று சேர்க்க முடியாது. மேலும் அப்பத்தை பிட்டால்தான் உண்ண முடியும். ஆக, அருள்பணி நிலையில் தன்னை முழுவதுமாக அப்படியே வைத்துக்கொண்டு ஒருவர் பணி செய்ய முடியாது. தன்னைப் பிடுதலே முதல் பணி. இங்கே மையமாக இருப்பது, 'நன்றி செலுத்துதல்.' தான் இறக்கப்போவது திண்ணம், நெருக்கம் எனத் தெரிந்தாலும் இயேசுவால் எப்படி நன்றி சொல்ல முடிந்தது? நன்றி என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அல்ல. மாறாக, எனக்கு நடப்பவற்றை நான் எப்படி எடுத்து செயலாற்றுகிறேன் என்பதை பொறுத்தே இருக்கிறது.

இந்த மூன்று வினைச்சொற்களையும் வாழ்வாக்கும் அருள்பணியாளர் நற்கருணை கொண்டாட்டத்தின் வழியாக மற்றவர்களும் இதுபோல இருக்க ஊக்கம் தர முடியும்.

இறுதியாக, இயேசு தரும் அன்புக்கட்டளை.

'நான் உங்களுக்கு அன்பு செய்ததுபோல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்.'

அன்பு செய்வதற்கும்,

பாதம் கழுவுதலுக்கும்,

நற்கருணை ஏற்படுத்தியதற்கும்

தன்னை மட்டுமே முன்மாதிரியாக வைக்கின்றார் இயேசு.

'நான் உங்களை அன்பு செய்ததுபோல'

அதாவது, உங்கள் பாதங்கள் அழுக்காக இருந்தாலும் அன்பு செய்ததுபோல,
நீங்கள் என்னை விட்டு ஓடிவிடுவீர்கள், காட்டிக்கொடுப்பீர்கள், மறுதலிப்பீர்கள் என்று தெரிந்தாலும் அன்பு செய்தது போல,
என்னை இறுதிவரை புரிந்துகொள்ளமாட்டீர்கள் என்று தெரிந்தாலும் அன்பு செய்ததுபோல,

நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்கிறார் இயேசு.

ஆக, அன்பின் பரவலாக்கம் சமநிலையில் இருக்க வேண்டும்.

அருள்பணியாளர் தன் மக்களை இப்படித்தான் அன்பு செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை இப்படித்தான் அன்பு செய்ய வேண்டும்.

இவ்வாறாக, என் பாதம் நனையும்போதும், நான் எனக்கு அருகிருப்பவரின் பாதங்களை நனைக்கும்போதும் அன்பு செய்கிறேன். நற்கருணை கொண்டாடுகிறேன். அருள்பணியாளராக மாறுகிறேன்.

Tuesday, April 11, 2017

என் சீடர்களோடு

'என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாட போகிறேன்'

(காண். மத்தேயு 26:14-25)

இயேசு இறுதிவரை பிறரைச் சார்ந்தவராகவே வாழ்கின்றார்.

தான் எருசலேமிற்குள் நுழையத் தேவையான கழுதையையும், அதன் குட்டியையும் அவிழ்த்து வருமாறு பணிக்கிறார் தம் சீடர்களை.

இன்று தன் பாஸ்காவை கொண்டாட இன்னொரு வீட்டில் இடம் தேடுகிறார்.

அதாவது, தன் தந்தை தனக்காக எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பார் என்பதை இயேசு உறுதியாக நம்புகின்றார்.

நீங்களோ, நானோ இன்னொரு வீட்டில் போய் 'எனக்கு விருந்து ஏற்பாடு செய்ய இடம் கொடுங்கள்' என்று சொல்ல முடியுமா?

இல்லை என்றே நினைக்கிறேன்.

தன்னோடு இருப்பவர் தன்னைக் காட்டிக் கொடுக்கின்றார்.

தனக்கு முன்பின் தெரியாதவர் விருந்துண்ண இடம் தருகிறார்.

இப்படி பிண்ணப்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்தவர் இயேசு.

Monday, April 10, 2017

அந்த மூன்று பேரில் நாம் யார்?

[இன்று விருந்தினர் பதிப்பு. வழங்குபவர் என் நண்பர் அருள்திரு. சாம்சன் ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் மறைமாவட்டம். இந்தப் பதிவு இன்றைய தினத்தந்தி (திண்டுக்கல் பதிப்பில்) வெளியாகிறது. நன்றி.]

இயேசு பந்தியில் அமர்ந்திருக்கிறார். அவரின் சீடர்கள் அவரோடு உடனிருக்கின்றனர். அவரின் இறுதி இரவு உணவு இது. அவரின் இறுதி உணவும்கூட இதுவே. உணவு மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. தாவரங்கள், விலங்குகள் உணவு உண்டாலும் அவைகளுக்கு உணவு வெறும் உடல் வளர்ச்சிக்காகவே. ஆனால், மனிதர்களாகிய நமக்கு உணவு, உணர்வு வளர்ச்சிக்காகவும், உறவு வளர்ச்சிக்காகவும் பயன்படுகிறது.

நம் வாழ்வில் நாம் காணும் மூன்று உறவுநிலைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:21-33, 36-38) மூன்று நபர்கள் வழியாகப் பார்க்கின்றோம்:

அ. காட்டிக் கொடுக்கும் அன்பு (யூதாசு)
ஆ. மார்பில் சாயும் அன்பு (யோவான்)
இ. மறுதலிக்கும் அன்பு (பேதுரு)

முதல்வகை உறவுநிலை யூதாசு மனநிலையைக் கொண்டிருக்கும். உணவறையில் உடன் அமர்ந்திருந்தாலும் காட்டிக்கொடுக்கத் துடிக்கும். 'எனக்கு என்ன தருவீர்கள்?' என்று விலைபேசத் துடிக்கும்.

இரண்டாம் வகை அன்பு யோவானின் அன்பு. மார்பில் சாய்ந்து இதயத்துடிப்பைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த அன்பு துணிச்சல் மிக்கது. 'யார்? என்ன? எது? ஏன்?' என எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் இது.

மூன்றாம் வகை அன்பு பேதுரு போல மறுதலிக்கும். கொஞ்சம் அன்பு செய்யும். கொஞ்சம் விலகிக்கொள்ளும். தான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன் எனச் சொல்லும். ஆனால் ஓடிப்போய்விடும்.

இந்த மூன்று வகை மனிதர்களின் அன்பையும் தாண்டி இயேசுவின் அன்பும் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதுதான் 'இறுதிவரை அன்பு செய்யும் அன்பு'.

இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் எல்லாருக்கும் இடமுண்டு. ஆகையால்தான் தன்னுடன் உண்பவர்கள் காட்டிக்கொடுத்தல், மார்பு சாய்தல், மறுதலித்தல் என மூன்றுநிலை உறவுநிலைகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சமநிலையோடு பார்க்கின்றார். மற்றவர்களின் அன்பால் அவர் மகிழ்ந்து குதிக்கவும் இல்லை. மற்றவர்களின் காட்டிக்கொடுத்தல் மற்றும் மறுதலிப்பால் அவர் சோர்ந்து கவலைப்படவும் இல்லை.

என் குடும்பம், நட்பு, சமூகம் என்று உறவுகொள்ளும் தளங்களில் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என் உறவுநிலை எப்படி இருக்கிறது?

காட்டிக்கொடுக்கிறேனா?

இதயத்துடிப்பை கேட்கிறேனா?

மறுதலிக்கிறேனா?

அல்லது இயேசுபோல சமநிலையில் எல்லாரையும் தழுவிக்கொள்கிறேனா?


Sunday, April 9, 2017

ஆறு பேர்

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு' - இப்படித்தான் தொடங்குகிறது இன்றைய நாளின் நற்செய்தி வாசகப் பகுதி (யோவான் 12:1-11). ஏறக்குறைய நாற்பது நாட்களாக, செபம், நோன்பு, பிறரன்புச் செயல்கள் என நம் உடலை ஒறுத்து, பக்குவப்படுத்தி, நம் மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு என்னும் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாரித்தோம். நாம் மேற்கொண்ட இந்தத் தயாரிப்பு இன்று நாம் தொடங்கி கொண்டாடும் ஏழாம் நாள் கொண்டாடும் திருநாளிற்காகத்தான்.

இன்னும் அந்த நாளுக்கு ஆறு நாட்கள் இருக்க, இன்றைய நற்செய்தி வாசகம் ஆறு பேரை நம் முன் வைக்கிறது. இந்த ஆறு பேர் யார்? இந்த ஆறு பேர் நமக்கு வைக்கும் சவால்கள் எவை? என்று பார்ப்போம்.

1. இலாசர். இவர் மார்த்தா மற்றும் மரியாளின் சகோதரர். இயேசுவின் நண்பர்களாக இருந்த இந்தக் குடும்பம் வசித்தது பெத்தானியாவில். நோயுற்றிருந்து இறந்துபோன இலாசரை இயேசு உயிரோடு மீண்டும் எழுப்புகின்றார். இந்த உயிர்ப்பு நிகழ்வால் இயேசுவின்மேல் பலர் நம்பிக்கை கொள்கின்றனர். இயேசுவின் எதிரிகளுக்கு இவரின் உயிர்ப்பு கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்துகிறது. இயேசுவோடு இணைந்து இவரையும் கொன்றுவிட நினைக்கின்றனர். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இலாசர். நம் வாழ்க்கையை நாம் ஒரேமுறைதான் வாழ்கிறோம். இந்த ஒற்றை வாழ்வை நாம் வாழும் விதம் எப்படி?

2. மார்த்தா. மூத்த சகோதரி. விருந்தோம்பலில் இவரை யாராலும் மிஞ்ச முடியாது. முன்னொரு நாள் இயேசு இவர்கள் வீட்டிற்கு வந்தபோது, இயேசுவைக்குப் பணிவிடை செய்வதில் இவர் மும்முரமாய் இருக்கிறார். 'மார்த்தா, நீ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்!' எனக் கடிந்து கொள்கின்றார். நம் வாழ்வில் நாம் எதை முதன்மைப்படுத்த வேண்டும்? என்பதை நாம் இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

3. மரியா. இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தமது கூந்தலால் துடைக்கின்றார். மிக உயர்ந்த நறுமணத் தைலம் அது. அந்த தைலத்தால் அந்த வீடே கமகமக்கிறது. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த ஒன்றை இயேசுவுக்காக இழக்கின்றார் மரியா. மதிப்பு மிக்க ஒன்றை நாம் கண்டுகொள்ளும்போது, அதனிலும் மதிப்பு குறைந்த ஒன்றை இழந்தால் தவறில்லையே என்பது இவரின் வாதம். இயேசுவே இவர் கண்ட புதிய புதையல்.

4. யூதாசு இஸ்காரியோத்து. இவர்தான் இயேசுவை எதிரிகளிடம் முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தவர். இவர் கணக்கில் புத்திசாலி. இவரிடம்தான் சீடர்குழுவின் பணப்பை இருந்தது. 'இது என்ன விலை?' 'அது என்ன விலை?' என்று இவரின் மூளை எல்லாவற்றிற்கும் விலை குறிக்கும். ஆகையால்தான் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலை பேசுகின்றார். இங்கே, 'நறுமணத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்' என்று போலி அக்கறை காட்டுகின்றார். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றிற்கும் விலைபேசிவிட முடியுமா?

5. யூதர்களும் அவர்களின் குருக்களும். இவர்கள் வந்திருந்தது இயேசுவைக் கொன்றுவிடும் திட்டத்தோடு. இயேசுவின்மேல் மக்கள் நம்பிக்கை கொண்டது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களின் மதம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான இயேசுவின் குரலும் இவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. நாமும் பல நேரங்களில் நம் மனச்சான்றின், நம் கடவுளின் குரலை அழித்துவிடத் துடிக்கிறோம். இல்லையா?

6. இயேசு. இவர்தான் இந்த நிகழ்வின் கதாநாயகன். நடக்கும் அனைத்தும் தன் இறுதிநாளை ஒட்டியே நடக்கிறது என்று எப்போதும் தன் இறப்பையும், அதன் வழியாக நடந்தேறவிருக்கும் மனிதகுல மீட்பையும் மனத்தில் நிறுத்தியவர். இவரைத் தான் வானகத் தந்தை, தான் பூரிப்படையும் மகன் (காண். முதல் வாசகம், எசாயா 42:1-7) என உச்சி முகர்கின்றார். இவரே மக்களின் புதிய உடன்படிக்கை. இவரே உலகின் ஒளி. இவரே ஆண்டவர். அதுவே இவரின் பெயர்.

7. நாம். இந்த ஆறு நபர்களுக்குப் பின் நிழலாடுவது நீங்களும், நானும். இந்த கதாபாத்திரங்களில் நம் எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றனர். மற்றெல்லாம் மறைந்து இயேசு மட்டும் வளர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளுமே நமக்கு உயிர்ப்பு நாளே.


Saturday, April 8, 2017

முரண்படு வாழ்வு

சென்னையின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 110 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக போராடுகின்றார்கள், போட்டியிடுகின்றார்கள். கட்சிகள் தங்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை இழந்தது, புதிய கட்சிகள், புதிய சின்னங்கள், புதிய முகங்கள், புதிய வாக்குறுதிகள், புதிய வாகனங்கள், புதிய அன்பளிப்புகள் என எங்கும் கூட்டமாக இருக்கின்றது. ஒவ்வொரு தலைவரும் இந்தப் பகுதிக்குள் நுழையும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பு ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. மக்கள் கூட்டம் சில இடங்களில் தானாக சேர்கின்றது. பல இடங்களில் சேர்க்கப்படுகின்றது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற நிலையில் ஆட்டமும், ஓட்டமுமாக இருக்கிறது ஆர்.கே. நகர்.

'என் பக்கம் இவ்வளவு மக்கள்' - என்று மற்றவருக்கு காட்டி வெற்றி பெறுவதுதான் ஜனநாயகத்தில் வெற்றி. ஆக, கூட்டம் கூடுவதன் நோக்கம் தன் பலம் என்ன என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, மாறாக, தன் பலத்தை மற்றவர்களுக்கு நிரூபித்து அவர்களை கலங்கச் செய்யவே. பயத்திலும், கலக்கத்திலும் மக்கள் கூட்டம் கூடி தங்கள் தலைவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்க, எதிர்நோக்கிலும், மகிழ்ச்சியிலும் ஒரு கூட்டம் எருசலேம் நகரில் ஒரு கழுதைக்குட்டியில் ஏறி வந்த தலைவர்மேல் ஓடிக்கொண்டிருந்ததை இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம்.

நம்மிடம் இன்று வரும் தலைவர்கள் வெற்றி பெற்றவுடன் தங்களிடம் வரமாட்டார்கள் எனவும், இவர்கள் விடும் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் வெறும் காகிதங்கள் எனவும், இவர்களின் பேச்சு வெறும் காற்று எனவும், இவர்கள் மனதில் இருப்பதல்லாம் பொய் எனவும் தெரிந்திருந்தாலும் ஏன் அவர்கள் பின் மக்கள்கூட்டம்? இம்முரண்களோடு வாழக் கற்றுக்கொண்டவர்கள் மக்கள். இந்த முரண்களுக்கு நடுவிலும் நம்பிக்கை என்ற ஒளியை அணையாமல் காத்துக்கொள்ளக்கூடியவர்கள்.

உரோமையர்களை நம்பினோம், ஆளுநர்களை நம்பினோம், தலைமைக்குருக்களை நம்பினோம் - ஒன்றும் நடக்கவில்லை. எல்லாம் அப்படியே இருக்கிறது. வறுமை, பசி, வாட்டம், அடிமைத்தனம் தலைவிரித்தாடுகின்றது என்று புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை கழுதையில் ஏறி வருகின்றது.

வாடகைக் கழுதையில் ஏறி வந்த இறுதி நம்பிக்கை தான் இயேசு.

ஒத்தமைவு நற்செய்திகளின்படி இயேசு மூன்று முறை எருசலேமுக்குள் நுழைகின்றார்: (அ) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவரது பெற்றோர் எருசலேமிற்கு அழைத்துவருகின்றனர் (லூக்கா 2:22-38), (ஆ) பாஸ்கா விழா கொண்டாட அவருடைய பெற்றோர்களுடன் இயேசு எருசலேமிற்குள் வருகின்றார் (லூக்கா 2:41-52), மற்றும் (இ) வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நுழைகின்றார் (லூக்கா 19:28-44). 

இயேசுவின் முதல் இரண்டு வருகைகளுக்கும், அவரின் மூன்றாம் எருசலேம் வருகைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன):

1. அப்போது ஆர்ப்பரிப்பு இல்லை. இப்போது எங்கும் ஆர்ப்பரிப்பு.
2. அப்போது அவருக்கு எந்த ஒரு பட்டமும் இல்லை. இப்போது 'தாவீதின் மகன்' என்ற பட்டம்.
3. அப்போது அவருக்கு எந்த ஆதரவாளரும் இல்லை. இப்போது சீடர்களும், மக்களும் கூட்டமாக பின்தொடர்கின்றனர்.
4 அப்போது எந்த தயாரிப்பும் இல்லை. இப்போது கழுதை, குருத்து, போர்வை என எல்லாம் தயாரிக்கப்படுகின்றது.
5. அப்போது இயேசு மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இப்போது அவர் திரும்ப முடியாது.
6. அப்போது எந்த வழி வந்தார் என்று எந்த பதிவும் இல்லை. இப்போது பெத்பதே வழியாகவும், ஒலிவ மலை வழியாகவும் வருகின்றார் (காண். மாற்கு 11:1-10). ஏனெனில் மெசியா இந்த வழியாகத்தான் வருவார் என்றுதான் மக்கள் எதிர்நோக்கியிருந்தார்கள்.

இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்ததை நற்செய்தியாளர்களின் பதிவுகளின் பின்புலத்தில் கற்பனை செய்து பார்த்தால், 'மகிழ்ச்சி' என்ற ஒற்றை உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய காரியங்கள் செய்கிறார்கள்: சிறியவர் முதல் பெரியவர் வரை குருத்தோலைகள் வெட்டி வருகின்றனர், பாதைகளில் துணிகளை விரிக்கின்றனர், உரத்த குரலில் கடவுளை புகழ்கின்றனர்: 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக' (லூக் 19:38). இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது. 'யாராவது ஒருவர் வந்து என்னைக் காப்பாற்றிவிடமாட்டாரா? என் நாடும், நகரமும் நலம் பெறாதா?' என்ற கவலையும், ஏக்கமும் நிறைய இருந்தது. இந்த நேரத்தில் இயேசு கழுதையின்மேல் ஏறி வருதல் மெசியாவின் வருகையின் அடையாளமாகக் கருதப்பட்டது. 

1. மகிழ்ச்சி

இன்றைய நாள் நமக்கு வைக்கும் முதல் பாடம் 'மகிழ்ச்சி.' இயேசுவோடு உடன் வந்த மக்கள் மட்டுமல்ல, இயேசுவும் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார். ஆகையால்தான், 'போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்' என்று பரிசேயர் சொன்னபோது, 'இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என பதில் சொல்கிறார். இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியின் செய்தியாக அறிவிக்கப்பட்டதுபோலவே, அவருடைய எருசலேம் நுழைதலும் மகிழ்ச்சியின் செய்தியாக இருக்கிறது. ஆக, இன்று நாம் அழுகையின் அல்லது சோகத்தின் மக்களாக இருக்க வேண்டாம். விரக்திக்கும், சோர்வுக்கும் ஒருபோதும் இடம் கொடுத்துவிட வேண்டாம். நம் மகிழ்ச்சி அதிகம் பெற்றிருப்பதில் அல்ல. மாறாக, இயேசுவை நம் நடுவில் பெற்றிருப்பதில்தான் இருக்கின்றது. இவ்வளவு நாள்கள் இந்த மக்களிடம் குருத்தோலைகளும், கழுதைகளும், ஆடைகளும் இருந்தன. ஆனால், இன்று மட்டும் ஏன் அவர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும்? காரணம், இயேசு. இயேசு அவர்கள் நடுவே இருப்பதால் அவர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த நிகழ்விலிருந்து இயேசுவை நீக்கிவிட்டால் மகிழ்ச்சிக்கு இடம் இல்லை. அவரோடு இருக்கும்போது நாம் தனியாக இருப்பதில்லை. வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், நம் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளும், தடைகளும் தாண்ட முடியாதவைகளாகத் தெரியும்போதும் கவலை வேண்டாம். ஏனெனில், அவர் நம் நடுவில் இருக்கின்றார். நாம் அவரோடு நடப்போம், ஓடுவோம். அவர் நம்மோடு நடக்கிறார், நம்மையும் தன் கழுதைக்குட்டியில் ஏற்றிக்கொள்கிறார் என்று தளராமல் நம்புவோம். இதுதான் நாம் இந்த உலகிற்குத் தரும் மகிழ்ச்சி. இயேசுவின் பிரசன்னத்தில் எருசலேம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கையும் இருக்கட்டும்.

2. சிலுவை

ஏன், எப்படி இயேசு எருசலேமிற்குள் நுழைகின்றார்? மக்கள் கூட்டம் இயேசுவை 'அரசன்' என்கிறது. மற்ற இடங்களில் அந்த பட்டத்தை மறுத்த இயேசு இன்று அதை மறுக்கவில்லை. அவர்களை அமைதியாக இருக்குமாறு சொல்லவில்லை. எப்படிப்பட்ட அரசர் அவர்? அவர் ஏறிவருவது கழுதை. அவரைச் சுற்றி படைத்திரள் இல்லை. அவரிடம் அடக்குமுறை ஆயுதங்கள் இல்லை. அவரை வரவேற்க அமைச்சர்கள் இல்லை. அவர் வெறுங்கையராய் வருகின்றார். அவரை வரவேற்றவர்கள் சாதாரண மக்கள். ஆனால் அவர்களால் இயேசுவிடம் ஏதோ ஒன்றைக் காண முடியாதது. தாங்கள் தங்கள் கண்களால் பார்ப்பதைவிட ஏதோ ஒன்று அவரிடம் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் நம்பிக்கை, 'இவர்தான் மீட்பர்' என்று சொன்னது. அவர் மணிமகுடம் சூட்டிக்கொள்வதற்காக இங்கே நுழையவில்லை. இன்றைய முதல் வாசகம் சொல்வது போல (காண். எசாயா 50:6). 'அடிப்போருக்கு தன் முதுகை காட்டவும், தாடியை பிடுங்குவோருக்கு தாடியை ஒப்படைக்கவும், நிந்தனை செய்வோருக்கும் காரி உமிழ்வோருக்கும் தன் முகத்தைக் காட்டவும்' அவர் உள்ளே நுழைகின்றார். இயேசு எருசேலமிற்குள் நுழைவது சிலுவையில் அறையப்படுவதற்காக. முள்களை தன் மகுடமாகவும், சிலுவையைத் தன் அரியணையாகவும் ஆக்கிக்கொள்ள அவர் இங்கே வருகின்றார். எதற்காக அவர் சிலுவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சிலுவை தீமையின் அடையாளமாக நிற்கிறது. மனித வாழ்வின் சுயநலம், வெறுமை, வன்முறை ஆகிய அனைத்தையும் தன்மேல் ஏற்றிக்கொள்ளும் இயேசு தன் உயிர்ப்பால் அதை வெல்கின்றார். அன்பால் இயேசு தழுவிக்கொண்ட சிலுவை நம்மை மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது. ஏனெனில் இந்தச் சிலுவையால்தான் நமக்கு மீட்பு வந்தது.

3. முரண்படு வாழ்வு

கழுதையில் ஏறி வருவதும், காரில் ஏறி வருவதும் நடந்து வருவதை விட மேலானது. ஏன்? நடந்த வரும்போது நம்மால் பார்க்க முடியாதவைகள் எல்லாம் கழுதையில் ஏறி வரும்போதும், காரில் வரும்போதும் நன்றாகத் தெரிகிறது. பார்வை இன்னும் கொஞ்சம் முழுமை ஆகிறது.

ஆகையால்தான், (1) தன் பயணத்தில் குருத்தோலை ஏந்தியவர்கள் தன் காலை வாரி விடுவார்கள் என்றும்,

(2) தன்னைப் புகழ்ந்து 'ஓசான்னா' பாடியவர்கள் 'சிலுவையில் அறையும்' என கத்துவார்கள் என்றும்,

(3) தங்களது ஆடைகளை தன் முன் விரித்தவர்களே தன் ஆடைகளையே உரிப்பார்கள் என்றும்,

(4) 'போதகரே' என்று அழைத்தவர்கள் எல்லாம், 'ஒழிக' என ஆர்ப்பரிப்பார்கள் என்றும்,

(5) உடன் வந்த சீடர்கள் எல்லாம் ஓடிப்போவார்கள் என்றும், கட்டியணைத்தவர்கள் காட்டிக்கொடுப்பார்கள் என்றும், மறுதலிப்பார்கள் என்றும்

அவருக்குத் தெரிந்தது. தெரிந்திருந்தும் தான் அமைதியாய் இருக்கின்றார். இந்த அமைதி அவரிடம் குடிகொள்ளக்காரணம் அவரிடமிருந்து நம்பிக்கை. தன் தந்தை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை. 

ஏன் இயேசுவுக்கு இத்தனை முரண்பாடுகள்?

இயேசுவிடம் அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களே இந்த முரண்பாடுகளுக்குக் காரணம். இயேசு அரசனாகிவிட்டால் தங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை, உடல் நல பஞ்சம் இல்லை, திராட்சை ரச பஞ்சம் இல்லை என நினைத்தவர்கள், அவர் சிலுவையைத் தழுவிக்கொண்டதால் அவரிடம் நம்பிக்கை இழக்கின்றனர்.

தங்கள் கண்களுக்குத் தெரிபவற்றில் அவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கட்டுகிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் கண்களுக்குத் தெரியாதவற்றில் நம்பிக்கையைக் கட்டுகிறார்.

இறுதியாக,

நாம் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்வோம்.

மகிழ்ச்சி, சிலுவை என இந்த நாளின் சவால்கள் மேலோட்டமாக இருந்தாலும், இவைகளின் அடியில் தேங்கியிருப்பது முரண்பாடு. நம் வாழ்வு முரண் என்ற நூலால் பிண்ணப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி நாமும், நம் உணர்வுகளும், நம் உலகமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. 

இப்படி முரண்கள் வந்தாலும், கழுதையில் ஏறி கொண்டாடும் பொழுதுகளை அமைதியான மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கு என்று விருப்பு-வெறுப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் எருசலேமிற்குள் நுழைந்திருக்க மாட்டார். நம் வாழ்வின் விருப்பு-வெறுப்புகள்தாம் நம் வாழ்வின் முரண்பாடுகளோடு நாம் வாழக் கற்றுக்கொள்ள நமக்கு தடையாக இருக்கின்றன.

இன்று அவரோடு நாம் எருசலேமிற்குள்ளும், புனித வாரத்திற்குள்ளும் நுழைகின்றோம்.

நாம் வெளியே வரும்போது அவரோடு இணைந்து உயிர்ப்பவர்களாக வருவோம். 

ஏனெனில், எருசலேமும் கலிலேயாவும், பாடுகளும் ஆறுதலும், இறப்பும் உயிர்ப்பும் பிரிக்க முடியாதவை - நம் வாழ்வின் முரண்களைப் போல.