Saturday, November 30, 2013

எனது பெயரை ஏன் கேட்கின்றாய்?

மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், 'உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும்போது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம்' என்றார். ஆண்டவரின் தூதர் அவரிடம், 'எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது' என்றார். மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். (நீதித் தலைவர்கள் 13:17-18)

இன்று சிம்சோன் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடங்குகிறோம். ஆண்டவரின் தூதர் சிம்சோனின் தாய்க்குக் காட்சி தருகின்றார். பெண்ணின் பெயர் இங்கு தரப்படவில்லை. மனோவாகு என்ற சிம்சோனின் தந்தையின் பெயரையே ஆசிரியர் பதிவு செய்கிறார். ஆண்டவரின் தூதரை நோக்கி மனோவாகு கேட்கும் கேள்வி இதுதான்: 'உம் பெயர் என்ன?' 

யூத மரபில் இறைவனின் பிரசன்னம் பெயர் என்றே சொல்லப்பட்டது. எருசேலேம் ஆலயத்தில் கூட இறைவனின் 'பெயர்' மட்டுமே குடியிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். பெயரும் ஆளும் ஒன்று என்பது அவர்களின் சிந்தனை. வியப்புக்குரியது அது என முன்வைக்கின்றார் தூதர்.

நம் அனைவருக்குமே பெயர்கள் உண்டு. நம் பெயர்கள் நம்மை அடையாளப்படுத்துகின்றன. நம் பெயர்களும் வியப்புக்கு உரியவைதாம். ஏனெனில் நாம் அனைவருமே வியப்புக்குரியவர்கள்தாம். ஒவ்வொருவரின் பெயர் மட்டுமே ஒருவரோடு முழுமையாக பயணம் செய்கிறது. வியப்புக்குரிய நம் பெயருக்கேற்ற வாழ்க்கை வாழலாமே!

'எனது பெயரை ஏன் கேட்கின்றாய்?'

Friday, November 29, 2013

எனது கன்னிமை குறித்து

அவள் அவரிடம் (இப்தாவிடம்), 'அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்' என்றாள். அவள் தந்தையிடம், 'என் விருப்பப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்' என்றாள். அவர், 'சென்று வா!' என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். (நீதித் தலைவர்கள் 11:36-38)

கிதியோனுக்கு அடுத்த பெரிய நீதித் தலைவர் இப்தா. அம்மோனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கின்றார் இப்தா. 'தான் போரில் வெற்றி பெற்றால் தன் வீட்டிலிருந்து முதலில் வெளியே வருவதை (ஆடோ, மாடோ, ஆளோ!) ஆண்டவருக்குப் எரிபலியாகக் கொடுக்கிறேன்' என ஆணையிட்டு வாக்களிக்கின்றார். போரிலும் வெற்றி பெற்று விடுகின்றார். வெற்றி பெற்று திரும்பும்போது அவரின் வாக்குறுதி பற்றி தெரிந்திராத அவரின் கன்னி மகள் ஆடிப் பாடிக்கொண்டு வருகின்றார். அவரைக் கண்டவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்கிறார் (துக்கத்தின் அடையாளம்!) அவரின் தந்தை இப்தா. தான் ஆணையிட்டதை அவரிடம் கூற, அவரும் இரண்டு மாதங்களுக்குப் பின் தன்னைப் பலியிடலாம் என ஒத்துக் கொள்கின்றார்.

நீதித் தலைவர்களின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் சமுதாயம் அறநெறியிலும், இறைபக்தியிலும் கீழே இறங்கிச் சென்றது என ஏற்கனவே கூறியிருந்தோம். தன் மகளையே பலி கொடுக்கத் துணிந்த இந்த நிகழ்வும், பெண் 'ஏன்? எதற்காக இப்படி வாக்கு கொடுத்தீர்கள்?' என்று கேட்க முடியாத நிலையும் இஸ்ரயேல் மக்களின் இறக்கத்தையே காட்டுகின்றன.

'கடவுளுக்கு நாம் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என வாக்களிக்க வேண்டுமா?' 'என்னைக் காப்பாற்றுங்கள்! இந்த உலகைக் காப்பாற்றுங்கள்!' என தினமும் அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமா? 'இந்த உலகைப் படைத்த அவருக்கு அதைக் காப்பாற்றத் தெரியாதா?' என்று நிறைய கேள்விகளை இந்தப் பகுதிகளை எழுப்புகின்றது.

இன்று ஒன்றை மட்டும் சிந்திப்போம்: 'எனது கன்னிமை குறித்து துக்கம் கொண்டாடுவேன்!' என தன் தந்தையிடம் இரண்டு மாதங்கள் அனுமதி கேட்கின்றார் இப்தாவின் மகள். தொடர்ந்து விவிலியம் சொல்கிறது: 'அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்!' இதை நினைவுகூறும் பொருட்டு ஆண்டுதோறும் இஸ்ரயேல் மக்கள் நான்கு நாட்கள் துக்கம் கொண்டாடினர் எனவும் விவிலியம் பதிவு செய்கிறது.

'கன்னிமை'. யூத சமயத்திலிருந்து ஊற்றெடுத்த கிறிஸ்தவ சமயத்தில் 'கன்னிமை' குறித்த சிந்தனை முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது. இப்தாவின் மகளுக்கு, 'தான் இறக்கப் போகிறோம்!' என்ற கவலையைவிட 'தான் கன்னியாக இறக்கப் போகிறோமே!' என்ற கவலைதான் அதிகமாக இருந்தது. 'கன்னிமை' யூத மதத்தில் பெரிய மதிப்பீடாகக் கருதப்படவில்லை. ஆகையால் தான் 'கற்பு' என்ற அர்ப்பண நிலையும் அதில் இல்லை. யூத மதக்குருக்கள் 'கன்னிமை' காப்பதில்லை. திருமணம் செய்து கொள்ளலாம். ஏனெனில் கன்னியாக இருப்பது பாவம். 

கிறிஸ்தவ மரபில் 'கற்பு', அதிலும் 'கன்னிமை' பெரிய மதிப்பீடாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்யும் அருள்நிலை இனியவர்கள் 'கன்னிமை' காக்க வேண்டும் என்பது திருச்சபையின் பரிந்துரை. இந்தக் கன்னிமையை வாக்குறுதியாகவும் எடுக்கின்றனர். இந்த வாக்குறுதியை இன்னும் திருச்சட்ட அடிப்படையில் ஆய்ந்து பார்த்தால் துறவு நிலையில் இருப்பவர்கள்தாம் இதை வாக்குறுதி என எடுக்கின்றனர். மறைமாவட்ட குருக்கள் என அழைக்கப்படும் பங்குப் பணியில் இருக்கும் குருக்கள் இதை வாக்குறுதியாக (vow, the other two vows being poverty and obedience) எடுப்பதில்லை. துறவியருக்கு இது கட்டாயம். மற்ற அருட்பணியாளர்களுக்கு 'இது நல்லது' என பரிந்துரை (recommendation) செய்யப்படுகின்றது. அதற்காக மீறலாம் என்று எடுத்துக்கொள்ள முடியாது!

அருள்நிலையில் இருப்பவர்கள் தங்கள் இறுதி அர்ப்பணத்திற்கு முன் இரண்டு மாதங்கள் அல்லது ஒரு மாதம் தியானம் செய்வார்கள். இந்தத் தியானம் தொடங்கியதற்கு ஊற்று இப்தாவின் மகள்தான். இந்த இரண்டு மாதங்கள் இவர்களும் 'தங்கள் கன்னிமை குறித்து துக்கம் கொண்டாடுகிறார்கள்'. பின் தங்களையே கடவுளுக்குகந்த பலிப்பொருட்களாகப் படைக்கின்றனர்.

கற்பு என்றால் என்ன? கற்பு உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? 'பிளவுபடாத அன்பே' கற்பு என்கிறது திருச்சபையின் சட்ட நூல். அன்பு பிளவுபட்டு விட்டால் அர்ப்பணம் பிளவுபட்டுவிட்டால் கற்பு நிலை தவறுகிறோம் என்கிறது.

ஆண் பெண்ணை அறியாமல் இருப்பதும், பெண் ஆணை அறியாமல் இருப்பதும் கற்பு என்பது இன்னும் நம் சிந்தனையில் இருக்கத்தான் செய்கிறது. இது யூத சிந்தனையிலும் இருக்கிறது. ஆகையால் தான் தலைமைக்குரு பலி செலுத்துவதற்கு முந்திய நாள் தூய்மையாக இருக்க வேண்டும் என அவர்களின் சட்ட நூல் சொல்லுகிறது. முந்திய நாள் இரவு அவர் தன் மனைவியோடு உறவு கொள்ளக் கூடாது எனவும், முந்திய நாள் இரவு அவர் விழித்தேயிருக்க வேண்டும் (ஏனெனில் இரவில் கனவில் கூட விந்து வெளியேறி அவர் தீட்டாகி விடலாம்) எனவும் சொல்கிறது. 'உடல் அளவில் நெருக்கம் இல்லாத நிலையே' தூய்மை, கன்னிமை அல்லது கற்பு என்பது இதன் வழியாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் உயிரின் அணுக்கள் எப்படி தீட்டாக மாற முடியும்? உயிரின் சக்தியான பெண் எப்படி தீட்டு எனச் சொல்ல முடியும்? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஒன்று மட்டும் நிச்சயம்: 'தூய்மையின் வழிதான் இறைவனைக் காணமுடியும்' என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. 'உடல் சார்ந்த தூய்மையை' அதிகமாக முன்வைக்கும் மதங்கள் கற்பையும், கன்னிமையையும் மதிப்பீடுகளாகக் கொண்டாடுகின்றன. மற்ற மதங்களுக்கு 'உள்ளம் சார்ந்த தூய்மை' இருந்தால் போதும்.

எது எப்படி இருந்தாலும், இப்தாவின் மகள் இன்றும் கன்னிமைக்கான ஒரு உருவகமாகவே வைக்கப்படுகின்றார்.

Thursday, November 28, 2013

ஆண்டவரைக் கைவிட்டனர்

ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும். அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும், சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸ்தியரின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை. (நீதித் தலைவர்கள் 10:6)

நீதித் தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் மக்களின் பாடும் மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது. 12 முறை இந்த நூலில் 'ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் செய்தனர்' என்று வாசிக்கின்றோம். 'இறைவன் ஒருவரே' என்ற நிலை மாறி மற்ற தெய்வங்களைத் தழுவிக் கொள்கின்றனர். அதிகமாக அவர்கள் வழிபட்டது 'பாகால்' மற்றும் அவரது துணைவியார் 'அஸ்தரோத்து'. பாகால் என்பது இஸ்ரயேலை ஒட்டிய நாடுகளில் வழிபடப்பட்டு வந்த வளமையின் கடவுள் (fertility god). மழை, பனி, விளைச்சல் போன்றவற்றின் கடவுளாக இருந்தவர் இவர். இவர் பூமியோடு உறவு கொள்ளும்போது மழை பெய்யும் எனவும், மழை பெய்ய வேண்டுமென்றால் கோவில்களில் உள்ள பெண்களோடு உறவு கொள்ள வேண்டும் எனவும், அந்த உறவினால் மகிழ்கின்ற பாகால் மழை பொழிவார் என்பதும் அவர்கள் நம்பிக்கை. சிவனின் சக்தி பார்வதி போல, பாகாலின் சக்தி அசரோத்து. வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் இந்த இரண்டும் சேர்ந்துமே இருக்கும். 

யாவே இறைவனை வழிபட்டு வந்த இஸ்ரயேல் மக்கள் மற்றவர்களின் தெய்வங்களையும் வழிபடத் தொடங்குகின்றனர். 'ஒரே இறைவன்' என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்னே வந்தது. 

எதற்காக மற்ற தெய்வங்களை வழிபடக் கூடாது? வழிபாடு என்பது பிரமாணிக்கம். வழிபாடு மற்ற தெய்வங்கள் பக்கம் திரும்பும்போது பிரமாணிக்கமும் பிளவுபடுகிறது. பிளவுபடுகின்ற பிரமாணிக்கம் இறைவனுக்கு ஏற்புடையதன்று.

'இதுவா! அதுவா!' என்பதுதான் இறைவன் விரும்புவது. 'இதுவும், அதுவும்' என்பது இறைவனுக்கு ஏற்புடையதன்று.

ஆண்டவரைக் கைவிட்டனர்!

Wednesday, November 27, 2013

கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?

செபாகிடமும் சல்முன்னாவிடமும், 'நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?' என்று கேட்டார். அவர்கள், 'உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளிக்கின்றனர்' என்றனர். அவர், 'அவர்கள் என் சகோதரர்கள். என் தாயின் மக்கள். நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்ல மாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை!' (நீதித் தலைவர்கள் 8:18-19)

கிதியான் செபாகையும், சல்முன்னாவையும் பிடித்து விடுகிறார். அவர்களிடம் எதற்காகக் கொன்றீர்கள் எனக் கேட்கிறார். தன் இனத்தின் மேல் உள்ள பற்று இஸ்ரயேலருக்கு மிக அதிகம். இதற்குக் காரணம், கடவுள் தானாகத் தனக்கெனத் தேர்ந்தெடுக்குக் கொண்ட இனம் என்பதால் தான். ஒருவர் மற்றவர்மேல் உரிமை கொண்டாடினார்கள் அவர்கள். ஒருவர் மற்றவர்மேல் கொள்ளும் உரிமையே உறவின் முக்கிய அம்சம்.

நம் உறவுகள் நம்மேல் கொள்ளும் உரிமைகளுக்கு நன்றி கூறுவோம். அவர்கள் மேல் உரிமை கொண்டாடுவோம்.

Monday, November 25, 2013

நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும்?

கிதியோன் சுக்கோத்து மக்களிடம், 'என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு, சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்' என்றார். 'செபாகையும் சல்முன்னாவையும் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும்?' என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர். (நீதித் தலைவர்கள் 8:5-6)

கிதியோன் மிதியானியர்களைப் போரில் அழித்து விடுகிறார். மிதியானியர்களின் அரசர்கள் என்று சொல்லப்படும் அவர்களின் தலைவர்கள் மட்டும் தப்பி ஓடுகின்றனர். அவர்களை கிதியோன் விரட்டிச் செல்கின்றார். அவரோடு செல்லும் படைவீரர்கள் பசி, தாகத்தால் வருந்துகின்றனர். அந்நேரத்தில் அவர்கள் எதிர்கொண்டு அவர்களைச் சார்ந்த சுக்கோத்து என்ற நகர மக்களிடம் உணவும், தண்ணீரும் கேட்கின்றார். அவர்கள் அவரை ஏளனமாகப் பார்க்கின்றனர்.

'இறைவாக்கினர் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்பது போல வெற்றியாளர்களும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிச்சயம். நம்மூரைச் சார்ந்த ஒருவர் வெளியூரில் சென்று படிப்பிலோ, வியாபாரத்திலோ, வாழ்விலோ சாதித்து விட்டால், 'அவனா? அவளா?' என்று தான் நாம் கேட்போம். எடுத்துக்காட்டாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சலைக் கடைப்பிடித்தவர் சிவா அய்யாதுரை என்ற இந்தியர், தமிழர். கடித சேவையைப் போல இன்றியமையாததாக மாறிவிட்ட மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால், வெளிநாட்டில் வேலையில்லாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் 'time-filler' எனக் கண்டுபிடிக்கப்பட்ட முகநூலை உருவாக்கிய மார்க் சுக்கெர்பர்க் நமக்கு அறிவாளியாகத் தெரிகிறார். சொந்த ஊர்க்காரர் என்றால் நாம் கண்டுகொள்வதில்லை. நம்மூர்க்காரர் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடித்த மேலாண்மையியல் கருத்துக்களை இன்று களவெடுத்து மேலைநாடுகளில் புத்தகங்களாக எழுதுகிறார்கள். அவைகளை மிக அருமை என வியக்கின்ற நாம் திருக்குறளை பள்ளிப்படிப்பு சார்ந்தது எனவும், பேருந்தில் எழுதி வைப்பது எனவும் மட்டும் நிறுத்திக்கொண்டதற்கும் காரணம் திருவள்ளுவர் நம்மூரார் என்பதுதான்.

தன்னை ஏளனமாகப் பேசிய தன் ஊர்க்காரர்களிடம் தான் யார் என்பதை விரைவில் நிருபிக்கிறார் கிதியோன். இந்த மனநிலை தான் அடுத்தவர்கள் நம்மை குறைத்து எடைபோடும்போது நமக்குத் தேவையானதுதான். 

மற்றொரு பக்கம், நாம் சுக்கோத்து மக்களைப் போல இருக்கக் கூடாது. 'உணவில்லை. தண்ணீரில்லை' என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. 'உனக்கு ஏன்டா கொடுக்க வேண்டும்?' என்று கேட்பது எவ்வளவு பெரிய அவமானம். 'நாம் கொடுத்தால் அவர்கள் அதை என்ன செய்வார்கள்?' என்று கேட்பதை விட, 'நாம் கொடுக்கா விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று கேட்பது மேலானது. அதுவே பிறர்மேல் நாம் கொண்ட கரிசணை. 

'நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும்?'

ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?

தெபோரா பாராக்கிடம், 'எழுந்திரும். இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?' என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறைவாக்கினர். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். (நீதித் தலைவர்கள் 4:14)

இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதாகச் சொல்லப்படும் முதல் நீதித் தலைவர் ஒரு பெண். ஆம். தெபோரா. தெபோராவும் பாராக்கும் இணைந்து சீசராவை எதிர்கொள்கின்றனர். சீசரா என்பவனின் பலம் அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அந்தக் காலத்தில் இரும்புத் தேர்கள் என்பவை இந்தக் காலத்து அணு ஆயுதங்கள் போன்றவை. இஸ்ரயேல் மக்களிடம் எந்த ஆயுதமும் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்கிறது தொல்பொருள் ஆராய்ச்சி. ஏனெனில் சவுலின் காலத்திலேயே ஒட்டுமொத்த இஸ்ரயேல் நாட்டில் வெறும் இரண்டு வாள்கள் மட்டும் தான் இருந்தன என்கிறது விவிலியம்: ஒரு வாள் சவுலிடமும் மற்றொரு வாள் அவரது மகன் யோனத்தானிடமும்.

நீதித் தலைவர்கள் காலத்தில் வெறும் வேற்கம்புகளை நம்பித்தான் இஸ்ரயேல் மக்கள் போருக்குச் சென்றிருந்திருக்க வேண்டும். வேற்கம்புகளுக்கு முன்னால் இரும்புத் தேர்களா? 

அணுஆயுதங்களுக்கு முன் வெறும் விளக்கமாறுகள் என்ன செய்ய முடியும்? இறைவன் துணையிருந்தால் எல்லாம் சாத்தியம் என்கிறது இன்றைய தெபோராவின் வார்த்தைகள். 

ஆபத்துக்கள் நம்மைச் சூழும்போது அரண்டு போய்விட வேண்டாம்.

'ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?'

Sunday, November 24, 2013

ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்?

ஆண்டவரின் தூதர் கிதியோனுக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்' என்றார். கிதியோன் அவரிடம், 'என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியத்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்?' என்றார். (நீதித் தலைவர்கள் 6:12-13)

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் மௌனத்தை அனுபவித்ததும் நீதித் தலைவர்கள் காலத்தில்தான். கடவுளின் மௌனம் கிதியோனுக்குப் பல கேள்விகளை எழுப்புகின்றது. கடவுளின் வார்த்தைகளை மட்டும் விவிலியம் பதிவு செய்யவில்லை. கடவுளின் மௌனத்தையும் அது பதிவு செய்திருக்கின்றது. வார்த்தை எந்த அளவிற்கு ஆற்றல் மிக்கதோ, அந்த அளவிற்கு மௌனமும் ஆற்றல் மிக்கது. ஆகையால் தான் நம் அன்பிற்குரியவர்களின் மௌனத்தை நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. 

கிதியோனின் வழியாக ஆண்டவர் தன் மௌனத்தைக் களைத்து விட்டுச் செயலாற்றத் தொடங்குகின்றார். நம் வாழ்விலும் கடவுள் மௌனமாக இருக்கிறாரே என்று கலங்கும் போதெல்லாம் கிதியோனை நினைத்துக் கொள்வோம். 'ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' என்ற வாழ்த்து நம் காதுகளையும் சீக்கிரம் எட்டும்.

Saturday, November 23, 2013

உனக்கு என்ன வேண்டும்?

அக்சா வந்தபோது, அவருடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவள் அவரைத் தூண்டினாள். எனவே அவள் கழுதையை விட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், 'உனக்கு என்ன வேண்டும்?' என்று அவளைக் கேட்டார். அவள் அவரிடம், 'எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீருற்றுக்களையும் தாரும்' என்றாள். எனவே காலேபு அவளுக்கு மேல் ஊற்றுக்களையும் கீழ் ஊற்றுக்களையும் கொடுத்தார். (நீதித் தலைவர்கள் 1:14-15)

ஒரு சமுதாயம் எந்த அளவிற்கு முதிர்ச்சியானது என்பதை அது பெண்களை மதிப்பிடும் நிலையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இஸ்ரயேல் சமுதாயம் நீதித் தலைவர்கள் காலத்தில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய்' ஆகிவிடுகிறது. தொடக்கத்தில் ஆண்களும், பெண்களும் சம உரிமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு இந்தப் பகுதி ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு பெண் தன் சொத்தில் உரிமை கேட்பவராகவும், தான் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லும் தைரியம் பெற்றவராகவும், 'நேர்படப் பேசு' என்பது போல சித்தரிக்கப்படுகின்றார். இப்போது குரல் கொடுக்கும் பெண் இந்நூலின் இறுதியில் மௌனமாகிவிடுகிறாள் என்பது வேதனைக்குரிய ஒன்று.

'எனக்கு இது வேண்டும்!' என்று சொல்வதற்குப் பதில், 'பரவாயில்லை. உனக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்!' என்ற சொல்லி தங்கள் தேவைகளையும், ஆசைகளையும் குறைத்துக்கொண்டு தன் அருகிருப்பவரின் தேவையை நிவர்த்தி செய்து அதில் மகிழ்ச்சி காணும் எம் குலப் பெண்டிர் இன்னும் ஒரு படி மேலே நிற்கின்றனர்.

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!

Friday, November 22, 2013

யார் முதலில் போரிடுவர்?

யோசுவா இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்?' என்று கேட்டனர். ஆண்டவர், 'யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்' என்றார். (நீதித் தலைவர்கள் 1:1-2)

யோசுவா இறந்து விட்டார். இப்போது அடுத்து யார் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள்? இறைவனின் திருவுளத்தை இனி தங்களுக்கு யார் சொல்வார்?

யோசுவாவிற்குப் பின் இறைவன் இஸ்ரயேல் மக்களை நீதித் தலைவர்களின் தலைமையில் வழிநடத்துகின்றார். நீதித் தலைவர்களுக்கும் யோசுவாவிற்கும் இடையேயுள்ள கால இடைவெளியைத் தான் இன்று நாம் வாசிக்கின்றோம்.

இறைவன் பாலும் தேனும் பொழியும் நாட்டை இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த போது அந்த நாடு வெறும் வெற்று இடமாக இல்லை. மாறாக மற்றவர்கள் அங்கே ஏற்கனவே குடியிருக்கின்றனர். குடியிருப்புக்களை அகற்றி இஸ்ரயேல் மக்கள்தாம் அதை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி: போர். போரிடத் தயாராகின்றனர். போருக்கு யார் தலைமை தாங்குவார்கள்?

அதைக் கண்டறிய இறைவன் முன்னிலையில் சீட்டுப் போடுகிறார்கள். சீட்டுப் போடுதல், குறி கேட்டல், பூ போட்டுப் பார்த்தல் இன்னும் பாமர மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் யூரிம், தும்மிம் என்ற இரண்டு கட்டைகளை வைத்து அறிகுறிகளைக் கணித்தனர். இந்த யூரிம், தும்மிம் என்னும் இரண்டு கட்டைகளைத்தான் இஸ்ரயேலின் தலைமைக்குரு எப்போதும் தான் மார்பில் அணிந்திருக்கும் 'எஃபோடு' என்ற ஆடையில் வைத்திருப்பார்.

இன்றும் பல நேரங்களில் நாம் முடிவெடுக்கும் போது 'நாணயம் போட்டுப் பார்ப்போம்!', 'சீட்டுக்களில் எழுதிப் பார்ப்போம்'. ஆனால் இறைவன் தான் என்ன நினைக்கிறார் என்பதை நம் மனதிற்குள்ளேயே ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திவிடுகின்றார். நமக்குத் தேவையானதெல்லாம் தெளிவான உள்ளமும், சோர்ந்து போகாத மனமும்தான்.

ஏதாவது முடிவெடுக்கும்போது 'நாணயம் குலுக்கிப் போடவா?' என்று அடிக்கடிக் கேட்கும் என்னைப் பார்த்து என் நண்பர் ஒருவர் சொன்னார்: 'நாணயத்தை நம்பும் அளவிற்கு உன்னை நம்ப மாட்டாயா?'

இஸ்ரயேல் மக்களின் சீட்டு அவர்களுக்குப் போரில் வெற்றி தரவில்லை. அவர்களுக்கு வெற்றி தந்தது 'இறைவனின் உடனிருப்பே'.

Thursday, November 21, 2013

நானும் என் வீட்டாரும் ...

இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று. உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே ... ... நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். (யோசுவா 24:13,15)

செக்கேமில் யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனோடு உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றனர். 'யாவே இறைவன்' மட்டுமே தங்கள் இறைவன் என்ற நிலை மாறி படிப்படியாக மற்ற தெய்வங்கள் அவர்களின் சமயத்திற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் நுழைகின்றனர். 

'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணி செய்வோம்!' என்று முதல் மொழி கூறுகின்றார் யோசுவா. மக்களும் அதை வழிமொழிகின்றனர். 

இறைவனுக்குப் பணி செய்வது என்பது ஒரு தேர்வு. அதை நாம் தெரிவு செய்தால் மற்றவைகளைத் தெரிவு செய்ய முடியாது. 

ஒவ்வொரு பொழுதும் அதைப் புதுப்பித்துக் கொண்டேயிருத்தல் அவசியம். 

Tuesday, November 19, 2013

ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்?

இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவை பற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவரின் சினம் மூண்டது ... ... யோசுவா, 'ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்' என்றார். (யோசுவா 7:1,25)

இஸ்ரயேல் மக்கள் எரிகோவைக் கைப்பற்றும்போது அந்நகரில் உள்ள அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்றும் எதையும் அவர்கள் கவர்ந்து கொள்ளக் கூடாது என்பதும் யாவே இறைவன் அவர்களுக்கு அளித்த கட்டளை. 'இந்த மக்கள் தன் பராமரிப்பின் மேல் நம்பிக்கை கொள்கிறார்களா? அல்லது தங்கள் பாதுகாப்பிற்கென தாங்களே சம்பாதிக்க (திருடிக்கொள்ள) நினைக்கிறார்களா?' என்ற யாவேயின் திருவிளையாடலே இது. ஆக்கான் என்ற ஒருவன் மட்டும் ஓர் அழகான மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் தனக்கென எடுத்துக் கொள்கிறான். இது ஆண்டவருக்குக் கோபத்தை வருவிக்கின்றது. எமோரியருடன் நடக்கும் போரில் இஸ்ரயேல் மக்களைத் தோல்வியடையச் செய்கின்றார் இறைவன்.

ஒருவரின் புண்ணியம் அவரைச் சார்ந்தவருக்கும் புண்ணியம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே போல ஒருவரின் பாவமும் அவரைச் சார்ந்தவருக்கும் பாவமாக மாறுகிறது. ஒரு தனி மனிதனின் பாவம் அவனைச் சார்ந்த இஸ்ரயேல் இனத்திற்கே அழிவைக் கொண்டு வருகின்றது. மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு வலைப்பின்னலாய் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அப்படித்தான் பின்னப்பட்டுள்ளது. 'நீ உன் சுன்டு விரலை நகர்த்தும்போது எங்கோ தூரத்தில் உள்ள நட்சத்திரத்தையும் நகர்த்துகின்றாய்' என்கிறது டாவோ மதம். அந்த அளவிற்கு நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளோம். ஒரு மரத்தில் பட்டுப்போன ஒரு கிளை அதையொட்டிய மற்ற கிளைகளையும் பட்டுப்போகச் செய்கின்றது. ஆகையால் நல்லவராய் இருப்பது நமக்கு மட்டும் நல்லதன்று. நம்மைச் சார்ந்த அனைவருக்குமே நன்று.

இரண்டாவதாக, ஆக்கான் எதற்காகத் திருடியிருக்க வேண்டும்? ஆசை! என்ன ஆசை? மற்றவர்களைவிட தான் மேலானவனாய் இருக்க வேண்டும் என்ற ஆசை! 'திருட்டு' ஒரு நோயல்ல. அது ஆசை என்ற நோயின் அறிகுறி. தான் மற்றவரைவிட அதிகம் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கொண்டிருத்தலுக்காக என்னவும் செய்வேன் என்ற நோயே திருட்டு என்ற அறிகுறியாக வெளிப்படுகின்றது. 'நம்மைச் சாராத ஒன்றை நாம் எடுத்துக்கொள்ள நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம் திருடத்தான் செய்கின்றோம்!'. திருட்டு என்பது வெறும் பணத்தையோ, பொருளையோ திருடுவது மட்டுமல்ல. திருட்டிற்குப் பல முகங்கள் உண்டு. மற்றவர்களின் நேரத்தை நாம் திருடுகிறோம். மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதன் வழியாக அவர்களின் மகிழ்ச்சியைத் திருடுகிறோம். மற்றவர்கள் தங்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று அவர்களைக் கைப்பாவையாக நினைக்கும்போது அவர்களின் சொந்த ஆளுமையைத் திருடுகிறோம். 'அவரவர்க்குரியதை அவரவருக்கென விட்டுக்கொடுக்கும் பரந்த மனம்' வந்தால் திருட்டு மறைந்து விடும்.

மூன்றாவதாக, 'நீ தொல்லை வருவித்தாய்?' என்று ஆக்கானைச் சாடுகின்றார் யோசுவா. 'நீ ஒரு பெரிய தொல்லை!' என நாம் ஒரு சில நேரங்களில் மற்றவர்களையும், மற்றவைகளையும் கடிந்து கொள்வதுண்டு. 'நீ என் மகிழ்ச்சியாய் இருக்கிறாய்!' என்ற நிலைப்பாடு ஒரு சில நேரங்களில் 'நீ என் தொல்லையாக இருக்கிறாய்!' என்று மாறும்போது அங்கே அந்த மாற்றம் வர யார் காரணம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். இங்கு ஆக்கான் தான் காரணம். ஆனால் நம் உறவுகளில் பல நேரங்களில் இதைச் சொல்பவரே காரணமாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

'ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்?'

மதில் இடிந்து விழுந்தது!

ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், 'இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்' என்றார். ... ... மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். (யோசுவா 6:15-16,20)

'எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்...' என்ற பாடல் வரி தான் இன்று நம் நினைவிற்கு வருகிறது. யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எரிகோவில் குடிபுகத் தொடங்குகின்றனர். எரிகோ பூமிப்பந்திலேயே மிகவும் பழைமை வாய்ந்த மக்கள் வாழ்விடம் எனச் சொல்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள். ஏறக்குறைய 21 புதிய குடியேற்றங்கள் நடந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் பூமிப்பந்தின் மிகவும் தாழ்வான இடமும் இதுதான். இங்குதான் சாக்கடல் அமைந்துள்ளது. பூமித்தாயின் கன்னத்தில் விழுந்த குழி என்று இதைச் சொல்லலாம். நம் ஊரில் யாராவது சிரிக்கும் போது குழி விழுந்தால் 'பணக்குழி' என்பார்கள். எரிகோவிற்கு இது நன்றாகவே பொருந்தும். பண்டைக்கால இஸ்ரயேலின் பணக்குழி இதுதான். 

மற்றொரு பக்கம் எரிகோவிற்கு ஒரு கெட்ட பெயரும் இருந்தது. எரிகோ அந்தக்காலத்தில் தீமைகளின் உருவாக இருந்ததாம். மேலும் எருசலேமிலிருந்து இது மிகவும் தாழ்வாக அமைந்திருந்தது. ஆகையால் யாரையாவது 'கெட்ட வார்த்தையில்' பேச வேண்டுமென்றால் 'நீயெல்லாம் எரிகோவிற்குத்தான் போவாய்' எனச் சொல்வார்களாம்.

வாக்களிக்கப்பட்ட நாடு மிகவும் தாழ்வான பகுதியிலிருந்தே தொடங்குகிறது. இறைவன் தாழ்வானவர்களின் பக்கம் என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு.

நம் வாழ்வில் நாம் தாழ்வாக இருக்கும் தருணங்களில் நம் தளர வேண்டாம். நம்மிலிருந்துதான் வாக்களிக்கப்பட்ட நாடு தொடங்குகிறது!

Sunday, November 17, 2013

ஏன் இந்தக் கற்கள்?

யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு யோசுவா கில்காலில் நாட்டினார். அவர் இஸ்ரயேலரிடம், 'எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் 'ஏன் இந்தக் கற்கள்?' என்று வினவினால், அவர்களிடம் இவ்வாறு தெரிவியுங்கள்: 'உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்.' (யோசுவா 4:21-22)

இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தவுடன் கில்கால் என்ற இடத்தில் உடன்படிக்கையின் அடையாளமாக பன்னிரு கற்களை நிலைநிறுத்துகின்றார். 'பன்னிரண்டு' என்ற சொல்லாடல் இங்கேதான் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்ரயேலரின் குலங்கள் பன்னிரண்டு. புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சீடர்கள் பன்னிரண்டு. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையில் இது ஒன்று. யோசுவா வைத்த கற்கள் 12. இயேசுவின் திருச்சபையின் அடித்தளமாம் திருத்தூதர்களும் 12. 

கற்கள் இங்கே அடையாளமாய் நிற்கின்றன. அடையாளங்கள் தாங்கள் எவைகளைச் சுட்டிக்காட்டுகின்றனவோ அவற்றையும் தாண்டி அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. கிலாடியேட்டர் என்ற திரைப்படத்தில் அதன் கதாநாயகன் தன் மூதாதையரின் அடையாளமாக ஒரு சிறிய சிலையை வைத்திருப்பார். இது எதற்கு? என்று கேட்கப்படும்போது, அது தனக்கு வீரம் தருவதாகவும், தன் மூதாதையரோடு அது தன்னை இணைப்பதாகவும் அவர் கூறுவார். 

யோசுவாவின் 12 கற்களும் இஸ்ரயேல் மக்களை அவர்களின் மூதாதையரோடு இணைக்கின்றது. அவர்களுக்கு அடையாளத்தைத் தருகின்றது. அவர்களின் நம்பிக்கையை அதிகமாக்குகின்றது.

நாம் அன்பு செய்யும் அனைவரும், நம்மை அன்பு செய்யும் அனைவரும் நம்மோடு வாழும் அடையாளங்கள். அவர்கள் நமக்கு வீரம் தருகின்றனர். அவர்கள் நம் மூதாதையரோடு நம்மை இணைக்கின்றனர். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம். 'ஆண்டவரின் கை அவர்களின் கைகளில் உள்ளது!'

அவர்கள் நம்மைப் பெருவெள்ளம் சூழும்போதும் வறண்ட நிலத்தில் நம்மை அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் நம் இருக்கும் போது நம் கால்கள் நனைவதில்லை. தங்களின் கண்கள் கண்ணீரால் நனைந்தாலும் நம் கால்களை அவர்கள் நனைய விடுவதில்லை.

'ஏன் இந்தக் கற்கள்?'

Saturday, November 16, 2013

யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர்

யோசுவா மக்களிடம், 'உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்' என்றார் ... ... கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர். இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும் வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர். (யோசுவா 3:5,16-17)

இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறும்போது செங்கடலைப் பிளந்து அவர்களுக்குப் பாதை உண்டாக்கிய யாவே இறைவன், அவர்கள் கானான் நாட்டிற்குள் நுழையும்போது யோர்தான் ஆற்றைப் பிளந்து வழி உண்டாக்குகின்றார்.

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பணி யோர்தான் ஆற்றிலேயே தொடங்குவதாக நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். எதற்காக இயேசு யோர்தானுக்குச் செல்ல வேண்டும்? இது ஒரு உருவகம். எப்படி பழைய ஏற்பாட்டில் யோர்தானுக்குப் பின் இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கினார்களோ, அதுபோலவே, புதிய ஏற்பாட்டில் இயேசு மக்களை இறையரசு என்னும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்கின்றார். நம் அனைவருக்காகவும் அவர் ஒருவரே யோர்தானில் இறங்குகிறார்.

வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய இரண்டு தகுதிகளைக் குறிப்பிடுகிறது இன்றைய பகுதி:

1. தூய்மை. ஆண்டவரின் வியத்தகு செயல்கள் நடைபெற வேண்டுமென்றால் தூய்மை அதற்கு அவசியம். தூய்மையான இடத்தில் தான் இறைவன் இருக்கின்றார். தூய்மை என்பது வெறும் புறத்தூய்மை அல்ல. மாறாக, உள்ளத்தின் தூய்மையையே அது குறிக்கின்றது. 

2. பிறரின் துணை. லேவியர்கள், அதாவது இஸ்ரயேலின் குருக்கள், இஸ்ரயேல் மக்கள் கால் நனையாமல் கடந்து செல்வதற்காகக் கால்கடுக்க நின்று தங்களையே தியாகம் செய்கிறார்கள். 'தனியாய் எவரும் சாதிப்பதில்லை' என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நாம் தூய்மையாவோம். அந்தத் தூய்மை பிறர்நலனாய் வெளிப்படட்டும். அப்போது வாக்களிக்கப்பட்ட நாடு நமக்கும் சாத்தியமே!

அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள்!

ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர். எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்போது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டனர். அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள் ... நம்பத்தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள். (யோசுவா 2:9-12)

எரிகோ நகரை உளவு பார்க்க வந்த இரண்டு ஒற்றர்கள் இராகாபு என்ற விலைமகளின் வீட்டில் தங்குகின்றனர். அந்த வீட்டில் உளவாளிகள் இருப்பதைக் கேள்வியுற்ற எரிகோ அரசன் அவர்களைக் கைது செய்ய வீரர்களை அனுப்புகிறான். வீரர்கள் வந்த போது அவர்களின் பார்வையிலிருந்து ஒற்றர்களை ஒளிய வைத்து அவர்களைக் காப்பாற்றுகின்றார்.

வீரர்கள் ஏமாந்து சென்றவுடன் இஸ்ரயேலின் ஒற்றர்களிடம் இராகாபு பேசும் வார்த்தைகளே இவை. இஸ்ரயேலின் இறைவனைத் தானும் இறைவனாக ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிடுகின்றார். 

இராகாபின் வார்த்தைகளில் மேலும் மேலும் எழும் பொருள் பயம். நாங்கள் பயந்தோம். எல்லோரும் பயப்படுகின்றனர் என்று பயத்தை வெளிப்படுத்துகின்றார். பயம். பயப்படாதே! என்று யோசுவாவுக்கு வாக்குறுதி தந்த இறைவன் அனைத்துப் பகைவர்களின் பயமாக மாறுகின்றார். 

'தான் அழிந்து போகக்கூடாது' என நினைக்கின்ற இராகாபு அடையாளம் கேட்கின்றார். சிவப்புக் கயிற்றை அடையாளமாகத் தருகின்றனர் ஒற்றர்கள். கோட்டை வாயிலின் மேல்தளத்தில் இருந்து கயிற்றால் இறக்கி அவர்களைத் தப்புவிக்கின்றார் இராகாபு.

நாம் வாழும் இந்த உலகம் சங்கிலி உலகம். நாம் அனைவரும் ஒரே சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளோம். நன்மையை நாம் ஒருவரிடம் பெற்றால் அதை உடனே மற்றவர்களுக்கும் செய்துவிட வேண்டும். இந்தப் பாடத்தை இன்று நமக்குக் கற்பிக்கின்றனர் இராகாபிடம் வந்த ஒற்றர்கள். தாங்கள் பெற்ற நன்மைக்கு உடனே கைம்மாறு செய்து விடுகிறார்கள்.

வாழ்வின் நலன்களை பிறரிடமிருந்து பெறும் நாம் அவற்றை உடனே மற்றவர்களுக்குச் செய்யும்போது நலன்கள் பெருகிக்கொண்டே செல்லும்!

Friday, November 15, 2013

விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர்

நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், 'நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்' என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது. (யோசுவா 2:1-2)

யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இஸ்ரயேல் மக்களின் பயணம் தொடர்கிறது. வாக்களிக்கப்பட்ட நாடு என்று சொல்லப்படும் இடத்திலெல்லாம் 'பாலும் தேனும் பொழியும் நாடு' என்று சொல்லப்படுகிறதே அதன் பொருள் என்ன தெரியுமா? 'பாலும் தேனும் பொழியும்' என்றால் எங்கும் பாலும், தேனும் ஓடிக்கொண்டிருக்கும் என்பதல்ல. 'பாலும் தேனும்' என்பது 'அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்' என்பதன் உருவகம். நாடும், நாட்டின் மக்களும், கால்நடைகளும் அழிக்கப்படும். அழிவு ஏற்பட்டு தரைமட்டமான இடத்தில் புல்வெளி உண்டாகும். மலர்கள் பூக்கும். புல்வெளியில் பசுமாடுகள் மேயும். பூக்களில் தேனீக்கள் அமரும். அங்கே பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடும். இப்படியாக யாவே இறைவன் 'அனைத்தையும் புதியனவாக்குவார்' என்பதை 'பாலும் தேனும்' என்ற உருவகம் முன்வைக்கின்றது.

யோசுவாவின் முதல் இலட்சியம் 'எரிக்கோ' நகரம். இந்த எரிக்கோ நகருக்குள் உளவு பார்க்க இரண்ட ஒற்றர்களை அனுப்புகிறார் யோசுவா. ஒற்றர்கள் நேரே விலைமாதின் வீட்டிற்குள் செல்கின்றனர். வேவு பார்க்கச் செல்பவர்கள் ஏன் விலைமாதின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்? பழைய ஏற்பாட்டுக் காலத்தில் விலைமாதர்கள்தாம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்று கருதப்பட்டனர். 'அவர்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்?' ஏனெனில் அங்குதான் பல ஆண்கள், குறிப்பாக, ஆட்சிப்பீடத்தில் இருக்கின்ற ஆட்கள் வந்து போவார்கள். ஆகையால்தான் ஒற்றர்கள் விலைமாதின் வீட்டைத் தேடிச் செல்கின்றனர்.

வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் பயணம் முதலில் விலைமாதின் வீட்டில் தொடங்குகிறது என்று நினைக்கக் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றதா? விலைமாதர்கள் என்றால் யார்? 

நம் இந்திய மரபில் தேவதாசி என்ற அமைப்பு இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். இறைவனுக்காக, இறைவனின் ஆலயத்திற்காக என்று சில பெண்களை நேர்ந்து விடுவார்கள். அந்தப் பெண்களை ஆண்கள் தங்கள் உறவுக்குப் பயன்படுத்துவார்கள். இது எப்படியோ நிறுத்தப்பட்டு விட்டது. நல்லது! பெண்களை வெறும் உபயோகப் பொருளாகப் பார்த்த இந்த மரபு மாறியது நல்லதே!

சமூகம் மற்றும் அதன் அடிப்படை அலகு என்ன என ஆய்வு செய்கின்ற சமூகவியல் அறிஞர்கள் 'குடும்பம்' என்பதை அடிப்படை அலகாகக் காண்கின்றனர். ஒரு குடும்பம் ஒரு சமூகத்தில் எந்த அளவிற்குத் தொன்மையானதோ அதே அளவிற்கு விபச்சாரம் (prostitution) அல்லது 'செக்ஸ்-லேபர்' (sex labour) என்பதும் தொன்மையானது. குடும்பம் என்ற நிறுவனத்தைக் கட்டிக் காப்பதே 'விபச்சாரம்' தான். Please wait. Let me explain. ஆதம்ஸ் என்ற சமூகவியல் அறிஞரின் கூற்று இது. அவர் தரும் விளக்கம் இதுதான். 'Men are polygamous by nature'. 'தங்கள் இயல்பிலேயே ஆண்கள் (பொதுவாக!) பலதார மணம் செய்யும் தூண்டுதல் உள்ளவர்கள்'. விலங்குகளின் வாழ்க்கை முறையையும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இணைப்புக் கோடாக இருக்கும் ஒராங்கொட்டான் குரங்கு வகையை ஆய்வு செய்யும் அவர் இதே இயல்பு அவைகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு ஆண் குரங்கு பல பெண் குரங்குகளைத் தன்னிடம் ஈர்க்கும் திறன் கொண்டது என்றும் இதே திறன் மனிதர்களிடம் இருந்தாலும் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், சமயம் போன்று கட்டுப்பாடுகளால் தான் அவர்கள் ஒருதார மணம்  (monogamous) செய்யும் தூண்டுதல் கொண்டவர்களாகவும் மாறுகின்றனர் எனவும் முடிக்கின்றார். இவரின் கூற்றுப்படி பலதார மணம் கொள்ள முடியாத ஆண் 'செக்ஸ்-தொழில்' வழியாக அந்த ஆசையை நிறைவு செய்து கொண்டு, தன் குடும்பத்தை, தன் ஒருதாரத்தை பேணிக்காக்கின்றான் ஆகவே விலைமாதர்கள் குடும்பம் என்ற நிறுவனம் சீராக இயங்க, சமூகம் என்ற எந்திரம் சீராக இயங்க உதவி செய்கிறார்கள் - அன்றும், இன்றும்.

இந்தக் கூற்று ஒருபோதும் 'செக்ஸ்-தொழிலை' நியாயப்படுத்த முடியாது என்பதையும் நான் இங்கு பதிவு செய்கிறேன்.

இப்போது நம் எரிக்கோ நகர் ராகாபைப் பார்ப்போம். 'ராகாபு' என்றால் எபிரேயத்திலும், அராமேயத்திலும் 'அகன்றது' (wide) என்றும் 'தெரு' (street) என்றும் பொருள். 'அகன்றது' என்பது செக்ஸிஸ்ட் வார்த்தையாகவும், 'தெரு' என்பது காரணப்பெயராகவும் (யார் வேண்டுமானாலும் போகலாம்!) பயன்படுத்தப்படுகிறது. 'ராகாபு' என்ற வார்த்தை விலைமாதர்கள் மேல் பண்டைக்கால கிழக்கத்திய நாடு கொண்ட 'கிண்டலை'க் குறிக்கின்றது. ராகாபு என்பதுதான் விலைமாதரின் பெயரா அல்லது எல்லா விலைமாதர்களும் 'ராகாபு' என code word-ல் அழைக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. 

இன்றும் 'அயிட்டம், கேஸ், சிலுக்குமாக்கி' என்று விலைமகளிரை cord word-ல் திரைப்படங்கள் சொல்லக் கேட்கும்போது மனம் வலிக்கிறது. செக்ஸையும் ஒரு தொழிலாக அரசு அங்கீகரித்தாலும் இது ஒரு 'exploitation', 'social evil' என்றே நம் மனம் சொல்கிறது.

வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இஸ்ரயேல் மக்களின் பயணம் ஒரு பெண் வழியாகவே தொடங்குகிறது. பெண் இயல்பிலேயே வாழ்வு கொடுப்பவள். ஒரு பெண்ணை நல்லவள் என்று உலகம் புகழ்ந்தாலும், கெட்டவள் என்று வெறுத்து ஒதுக்கினாலும் அவளால் பிறருக்கு எப்போதுமே வாழ்வுதான். பெண் தானே விரும்பி யாருக்கும் தீமை நினைப்பதில்லை. மற்றவர்களின் செயலால்தான் அவள் அந்த நிலைக்கு ஒரு சில நேரங்களில் தள்ளப்படுகிறாள். இன்று கடவுள் படைப்பின் பலவீனம் எனச் சொல்லப்படும் பெண்ணை தன் பணிக்காகத் தெரிவு செய்கின்றார். பெண்ணின் வழியே இஸ்ரயேலரின் பயணம் தொடரப்போகின்றது. 

பெண் எத்தனையோ நிலைகளில் நம் முன் வந்து போகின்றாள்: தாயாக, தங்கையாக, அக்காவாக, மகளாக, தோழியாக, காதலியாக. அவள் தண்ணீர் போன்றவள். எந்த உருவில் தங்குகிறாளோ அந்த உருவாகவே மாறிவிடுகிறாள். தொட்டால் தண்ணீரைப் போலவே நெகிழக் கூடியவள். தீண்டினால் ஹெயான் போல அழிக்கக் கூடியவள்.

இறைவன் யாரையும் தன் திட்டத்திற்குப் பயன்படுத்தலாம். நாம் பலவீனர்கள் என்று நாம் நினைத்தாலும், நாம் கெட்டவர்கள் என மற்றவர்கள் நினைத்தாலும் ராகாபை நினைத்துக் கொள்வோம். நாமும் 'பாலும், தேனும்' பொழியும் நாட்டிற்கு மற்றவர்களை அழைத்துச் செல்ல முடியும்!


Thursday, November 14, 2013

உன்னைக் கைநெகிழ மாட்டேன்!

உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன். கைவிடவும் மாட்டேன். வீறுகொள். துணிந்துநில் ... ... இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுதுதான் நீ செல்லும் இடமெல்லாம் நலம் பெறுவாய். வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன். (யோசுவா 1:5-6, 8-9)

வாக்களிக்கப்பட்ட நாட்டுப் பயணம் என்னும் ஒலிம்பிக் ஓட்டத்தில் மோசேயின் கையிலிருந்து விளக்கு யோசுவாவின் கைக்கு மாறுகிறது. இனி எல்லாம் யோசுவாவின் கையில்தான். விளக்கை அணைக்காமல் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? வாசகர்கள் உள்ளத்தில் எழும் கேள்விக்கு ஆண்டவரின் பிரசன்னம் பதிலாகக் கொடுக்கப்படுகிறது. 

வாக்குறுதி – கட்டளை – வாக்குறுதி என்ற அடிப்படையில் உள்ளது இறைவனின் வார்த்தைகள்.

யாவே இறைவனின் வாக்குறுதிக்கு அடிப்படை யோசுவா திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்:

1. திருச்சட்டம் எப்போதும் முன்னால் இருக்க வேண்டும்.
2. இரவும் பகலும் தியானம் செய்ய வேண்டும்.

3. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

திருச்சட்டத்தை முன்னால் வைத்திருக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? 
திருச்சட்டத்தை முன்னால் வைத்திருந்தால் யோசுவா எப்படி சண்டையிட முடியும்? 
அல்லும் பகலும் தியானம் செய்து கொண்டிருந்தால் யார் போரிடுவார்கள்?

திருச்சட்டம் யோசுவாவை முழுமையாக ஆட்கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர், போர், தேடல் என யாதுமாய் திருச்சட்டம் மாறியதென்றால் இறைவன் உடனிருப்பார்.

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
என் பாதைக்கு ஒளியும் அதுவே!
(திருப்பாடல் 119:105)

***
வத்திக்கான் வானொலியில் என் குரல் 2


Wednesday, November 13, 2013

கண்கள் மங்கினதுமில்லை! வலிமை குறைந்ததுமில்லை!

எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை. அவரது வலிமை குறைந்ததுமில்லை. (இணைச்சட்டம் 34:5-7)

அக்டோபர் 2011ஆம் ஆண்டு புனித நாடுகளுக்குப் பயணம் சென்ற போது 10 நாட்கள் சுற்றுலாவின் இறுதி நாளில் யோர்தான் நாட்டிற்குச் சென்றோம். அங்கே தான் மோசேயின் கல்லறை இருக்கின்றது. மோசேயின் கல்லறை எனச் சொல்லி அழைத்துச் சென்று ஒரு மலையுச்சியில் எங்களை நிறுத்தினார்கள். 'இந்த உச்சியில் இருந்துதான் மோசே பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பார்த்தார். இங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார்' என்றார்கள். என்னவோ தெரியவில்லை. 10 நாட்கள் பார்த்த எல்லா இடங்களையும் விட இந்த இடமே என்னை ஏதோ செய்தது. மலையுச்சியில் நின்று கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

'மோசே கடைசியாக என்ன நினைத்திருப்பார்?'

'தான் நைல் நதியில் விடப்பட்டதையா?'

'பாரவோனின் அரண்மனையில் வளர்ந்ததையா?'

'எகிப்தியன் ஒருவனைக் கொலை செய்ததையா?'

'தன் இனத்தான் தன்னை எதிர்கேள்வி கேட்டதையா?'

'தான் மிதியானுக்கு ஓடிச்சென்றதையா?'

'தன் மனைவியைக் கிணற்றடியில் சந்தித்ததையா?'

'அவள் வழியாகப் பெற்று 'கெர்சோம்' எனப் பெயரிட்ட மகனையா?'

'எரியும் முட்புதரையா?'

'யாவே இறைவனின் பெயரையா?'

'பாரவோனின் முன்னிலையில் கைத்தடியைப் பாம்பாக மாற்றியதையா?'

'பத்துக் கொள்ளை நோய்களையா?'

'பாஸ்கா உணவையா?'

'பாரவோனின் தேர்களையா?'

'செங்கடலையா?'

'மக்களின் கோபத்தையா?'

'அவர்களின் முணுமுணுப்பையா?'

'மன்னாவையா?'

'காடைகளையா?'

'பத்துக் கட்டளைகளையா?'

'பொன்னாலான கன்றுக்குட்டியையா?'

'பாம்புகளையா?'

'சந்திப்புக் கூடாரத்தையா?'

'தான் தட்டி வரவழைத்த தண்ணீரையா?'

எதை நினைத்திருப்பார்? எந்த மனநிலையோடு இறப்பைச் சந்தித்திருப்பார்? வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்குமா?

மோசேயுடன் சேர்ந்து அவரது உலகமும் இறந்துதான் போகின்றது.

மோசேயோடு மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் இறக்கும்போதும் நம் கனவுகள், நம் உறவுகள், நம் கருத்தியல்கள், நம் கொள்கைகள் எல்லாம் இறந்துதான் போகின்றன. 

நான் அடிக்கடி நினைப்பேன்:

'நான் வாசிக்கும் கடைசிப் புத்தகம் எதுவாக இருக்கும்?'

'நான் கடைசியாகப் பார்க்கும் காட்சி என்னவாக இருக்கும்?'

'நான் ஃபோனில் பேசும் கடைசி நபர் யாராக இருக்கும்?'

'நான் கடைசியாக அனுப்பும் மின்னஞ்சல் யாருக்காக இருக்கும்?'

'அதில் என்ன எழுதியிருப்பேன்?'

'நான் கடைசியாகக் கூட இருப்பது யார் கூடாக இருக்கும்?'

'நான் இறப்பதை முதலில் யார் பார்ப்பார்?'

'என் கணிணி, என் அலமாரி என எல்லாவற்றையும் யார் திறப்பார்கள்?'

'திறப்பவர்கள் என் கனவு, என் ஏக்கம் அனைத்தையும் அதிலிருந்து புரிந்து கொள்வார்களா?'

நான் முதன்முதல் பார்த்த காட்சி எப்படி நினைவில் இல்லையோ 

அதுபோலத்தான் இறுதியாகப் பார்ப்பதும் இருக்கும் போல!

பாரதியார் சொல்வது போல 'எல்லாம் காட்சிப் பிழைதானோ!'

மோசே என்ற சகாப்தம் முடிகிறது. 

'ஆண்டவரே அவரை அடக்கம் செய்தார்' எனச் சொல்கிறது விவிலியம்.

'அவர் அடக்கம் செய்யப்பட்டது எங்கே என யாருக்கும் தெரியாது!'

அப்படியென்றால்,

மோசே தனியாக இறந்து கிடந்திருப்பார். 

யாருமே அவருடன் இல்லையா?

அவரைக் காணவில்லையென எப்போது தேடினார்கள்?

மோசேயின் பிறப்பைப் போலவே அவரின் இறப்பும் ஒரு அற்புதம்!

அவரோடு சேர்ந்தே அனைத்துக் கேள்விகளும் இறந்துவிட்டன.

இனி யார் இவர்களை அழைத்துப் போவார்? 

இனி யார் இவர்களுக்கு உணவு தருவார்? 

இனி யார் இவர்களின் தாகம் தீர்ப்பார்?

மோசே இறந்தாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கும். 

நாம் இறந்தாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கும்.

இறப்பு ஒரு பெரிய போதிமரம்!

பாவம் மனிதர்கள்! பிறந்த நாளிலிருந்து அவர்களின் பயணம் கல்லறை நோக்கியே இருக்கிறது! 

'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்'

(திருப்பாடல் 23:4)

Tuesday, November 12, 2013

தீதும் நன்றும்!

இதோ! இன்று உங்கள் முன்பாக ஆசியையும், சாபத்தையும் வைக்கின்றேன். நான் இன்று உங்களுக்கு விதித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தால் ஆசியும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், நான் இன்று உங்களுக்கு விதித்த வழிகளினின்று விலகி நடந்து, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும். (இணைச்சட்டம் 11:26-28)

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது நம் பழமொழி. 

நன்மையோ, தீமையோ அதற்குக் காரணம் நாம்தான்.

இயற்கைச் சீற்றங்கள், விபத்துக்களால் வரும் தீமைகள் இந்தப் பழமொழிக்குள் வருமா? என்பது என் கேள்வி. ஆகையால் இந்தப் பழமொழியை நம் வாழ்வை நேரடியாகப் பாதிக்கும் வாழ்வியல் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். 

கட்டளைகளைக் கடைப்பிடித்தால் ஆசி. விலகிச் சென்றால் சாபம். இதுதான் ஆண்டவரின் பார்வையில் ஆசியும், சாபமும்.

வாழ்வின் எதார்த்தங்களை ஆசியாகவும், சாபமாகவும் மாற்றுவது நாம்தான்.

என்றும் ஆசியையே நாடுவோம்!

Monday, November 11, 2013

ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு!

... நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டி வந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு. (இணைச்சட்டம் 6:10-12).

இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதுதான். தான் எருசலேமிற்குள் நுழைய வேண்டிய நேரம் வந்ததும் தன் சீடர்களை அனுப்பி 'கழுதையை' அவிழ்த்துக்கொண்டு வரச் சொல்கின்றார். எங்கோ கட்டியிருக்கின்ற ஒரு கழுதையின்மேல் இயேசு எப்படி உரிமை கொண்டாடினார்? என அடிக்கடி நினைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? தன் தந்தையின் பராமரிப்புச் செயல்மேல் இருந்த நம்பிக்கை தான். தான் எருசலேமிற்குள் நுழைய வேண்டுமென்றால் அவர் ஒரு கழுதையைத் தயாராக வைத்திருப்பார் என நம்புகின்றார். 

குருத்துவத்தின் இரண்டாம் மகிழ்ச்சி என்று நான் நினைப்பது இன்றைய இணைச்சட்டப் பகுதிதான். ஒவ்வொரு முறை நான் புதிய பங்கிற்கு மாற்றலாகிச் செல்லும்போதும் (எல்லாக் குருக்களுக்கும்!) எனக்கு நடப்பது இதுதான்: 'நான் கட்டியெழுப்பாத வீடு ஒன்றில் குடியேறுவேன். அந்த நகரமே பரந்து விரிந்து இருக்கும். நான் வாங்காத கட்டிலில் உறங்குவேன். நான் வாங்கி வைத்திராத shower-ல் குளிப்பேன். நான் முன்பின் சந்திக்காத ஒருவர் எனக்கு உணவு சமைத்துக் கொண்டிருப்பார். எப்போதுமே பார்த்திராத ஒருவர் காஃபி வாங்கி வருவார். எல்லாமே எனக்கெனச் செய்தது போல இருக்கும். 'அண்ணன், தம்பி, அக்கா, அம்மா' என உறவுகள் தொற்றிக் கொள்ளும். எங்கே சென்றாலும் புன்சிரிப்பு கண்டிப்பாகக் கிடைக்கும். நிறைய பேர் நம்மேல் உரிமை கொண்டாடுவார்கள். 

அடுத்த நாளிலிருந்து அந்த இடம் ஏதோ பல வருடங்கள் குடியிருந்த இடம் போலப் பரிச்சயமாகி விடும். 

இஸ்ரயேல் மக்களுக்காக நகர்களைக் கட்டி, கிணறுகளை வெட்டி, ஒலிவ மற்றும் திராட்சைத் தோட்டங்களை நட்டுக் காத்திருக்கின்றார் இறைவன்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொண்டு அங்கே குடியேறுவதுதான்!

மற்றொரு விஷயம்...

'ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு!'

Sunday, November 10, 2013

தம் மகனைத் தூக்கிச் செல்வது போல

ஆனால் நான் உங்களுக்குச் சொன்னேன்: 'நீங்கள் கலக்கமுற வேண்டாம். அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம். பாலைநிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தம் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே! (இணைச்சட்டம் 1:29,31)

இணைச்சட்ட நூலிற்கும், இதற்கு முந்தைய நான்கு நூல்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், இணைச்சட்ட நூல், 'இவை மோசேயின் வார்த்தைகள்' எனத் தொடங்குகிறது. யாவே இறைவனின் வழிநடத்துதல் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இனி முழுப்பொறுப்பும் மோசேயின் மேல்தான். 

பொறுப்பை ஏற்கின்ற மோசே கானான் நாட்டை உளவு பார்க்க ஒரு குழுவை அனுப்புகின்றார். சென்று திரும்புகின்ற குழுவினர் 'முடியவே முடியாது. நம்மால் கானான் நாட்டை உரிமையாக்க முடியாது. அங்கிருப்பவர்கள் அனைவரும் பலம் வாய்ந்தவர்கள்' எனப் பின்வாங்குகின்றனர். யோசுவா மட்டுமே 'முடியும்!' என்ற செய்தியைக் கொண்டுவருகின்றார். 

ஆண்டவரின் வார்த்தை அந்நேரம் மோசேக்கு அருளப்படுகின்றது. 'ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல' என்ற உருவகத்தின் வழியாக தன் வழிநடத்துதலை அவர்களுக்கு நினைவூட்டுகின்றார் இறைவன். நாம் பல இடங்களில் பார்த்திருக்கும் 'FOOTPRINTS' என்ற ஓவியத்தின், கவிதை வரிகளின் பின்புலம் இந்த உருவகம்தான்.

'இதுவரைக் காத்து வந்த இறைவன் இனியும் காப்பார்' என்ற நம்பிக்கை கொண்ட யோசுவாவின் மனநிலையை வாழ்த்துகின்றார் இறைவன். 

இதுவரை காத்த கிருபை இன்னும் வழிகாட்டும் என்ற நம்பிக்கை நம் வாழ்விலும் சில நேரங்களில் தளர்ந்துவிடத்தானே செய்கின்றது!

Saturday, November 9, 2013

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து!

எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடும்பத்திற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும். இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர். (எண்ணிக்கை நூல் 35:1-3)

யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைகின்றனர். மோசே 40 வருடங்கள் அவர்களை வழிநடத்தி வந்திருந்தாலும், வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பார்க்கும் பாக்கியம் மட்டுமே அவருக்குக் கிடைக்கின்றது. யோசுவாதான் அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இட்டுச் செல்கின்றார்.

அவர்கள் கானான் நாட்டிற்குள் நுழையுமுன் யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆற்றில் பெருவெள்ளம். எப்படிக் கடப்பது? கடவுள் சொல்கின்றார்: 'லேவியர்கள் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு ஆற்றில் இறங்கட்டும். அவர்கள் இறங்கியவுடன் வெள்ளம் தணிந்து விடும். உடன்படிக்கைப் பேழைக்குக் கீழே மக்கள் கால்; நனையாமல் கடந்து போகட்டும்'. ஏறக்குறைய 10 லட்சம் இஸ்ரயேல் மக்கள் கடக்கும் வரை லேவியர்கள் ஆற்றின் நடுவில் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு நிற்கின்றனர். 

எல்லாம் அக்கரை சேர்ந்தவுடன் நடப்பது என்னவென்றால், ஒவ்வொரு குலத்திற்கும் இடம் பிரிக்கப்படுகின்றது. மொத்தம 12 குலங்கள். அதில் 11 குலங்களுக்கு இடம் பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. லேவியர் குலத்திற்கு மட்டும் இடம் கொடுக்கப்படவில்லை. கால்கடுக்கத் தண்ணீரில் நின்று மக்கள் கரையேற உதவிய குலத்திற்கு இடம் இல்லையா என்று வாசகர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது அங்கே கடவுளின் குரல் கேட்கின்றது: 'ஆண்டவர் தாமே அவர்கள் சொத்தாக இருப்பார்!' என்ன அழகான வார்த்தைகள். லேவியர் குலம் தான் குருக்கள் குலம். அந்தக் குலத்தின் உரிமைச்சொத்து ஆண்டவர் மட்டுமே.

இதுவே குருத்துவத்தின் மகிழ்ச்சி. 'எந்நேரமும் நான் பிறர் கையை நாடியே இருக்க வேண்டுமா?' என்று பல குருக்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில நேரங்களில் நானே இக்கேள்வியைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுதான் குருத்துவத்தின் மகிழ்ச்சி. 'உனக்கென்று எதுவும் இல்லை' என நினைக்காதே. 'அனைத்தையும் கொடுக்கும் ஆண்டவரே உன் சொத்து' எனச் சொல்கின்றார் கடவுள். 

கிருஷ்ணனின் படைகள் மட்டும் போதும் என்று சொல்கின்ற கொளரவர்கள் பாரதப் போரில் தோற்கின்றனர். 'கிருஷ்ணன் மட்டும் போதும்' என்று சொல்கின்ற பாண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

'ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது. 
அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்!'
(திருப்பாடல் 33:12)

Friday, November 8, 2013

நான் உம் கழுதையன்றோ?

உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது அவரிடம், 'நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?' என்றது. பிலயாம் கழுதையிடம், 'நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய். என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்' என்றார். கழுதை பிலயாமிடம், 'நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படி செய்து பழக்கமுண்டோ?' என்றது. அதற்கு அவர், 'இல்லை' என்றார். (எண்ணிக்கை 22:28-30)

விவிலியத்தில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கழுதைகள் கதாநாயகன்களுக்கு உதவியாக வருகின்றன. இன்று நாம் காணும் நிகழ்வில் கழுதை ஒன்று கதாநாயகனாக வருகிறது. பழைய ஏற்பாட்டின் கழுதைகள் பற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்பது என் ஆசைகளுள் ஒன்று. 

இன்றைய நிகழ்வின் பின்புலம் இதுதான்: இஸ்ராயேல் மக்கள் அதிக பலம் கொண்டவர்களாகவும், பணம் படைத்தவர்களாகவும் மாறுகின்றனர். இது பொறுக்காத மோவாபு நாட்டின் மன்னன் பாலாக்கு அவர்களைச் சபிப்பதற்காக பிலயாம் என்ற இறைவாக்கினரை அழைக்கின்றான். இஸ்ராயேல் மக்களைச் சபிக்க வேண்டாம் என பிலயாமின் கனவில் எச்சரிக்கிறார் யாவே இறைவன். ஆனால் அதைப் பொருட்படுத்தாத பிலயாம் தன் கழுதை மேல் ஏறி இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செல்கின்றார். அப்படிச் செல்லும் வழியில் ஆண்டவரின் தூதர் குறுக்கே நின்று கழுதைக்கு வழிவிட மறுக்கின்றார். கழுதை அடம்பிடிப்பதை நினைத்து அதை அடிக்கின்றார் பிலயாம். அப்பொழுது கழுதையின் வாய் திறக்கப்பட அது பேசுகின்றது.

முதலில் சபிப்பது என்றால் என்ன? ஆசி மொழி எந்த அளவிற்கு ஒருவரை முன்னேற்றுமோ, அந்த அளவிற்கு சபிப்பதும், சாபமும் ஒருவரை அவரின் வாழ்வில் பின்னடையச் செய்யும் என்பது இஸ்ரயேல் மற்றும் அதன் சுற்று நாடுகளின் மக்களின் நம்பிக்கை. சபித்தால் இஸ்ரயேல் மக்கள் அழிந்து போவார்கள் என நினைக்கின்றான் பாலாக்கு. ஊதினால் அணைந்து போவதற்கு இஸ்ரயேல் இனம் என்ன மெழுகுதிரியா? அது சூரியன். சுட்டெரித்துவிடும் என எச்சரிக்கின்றார் இறைவன். நாம் யாருக்கும் தெரியாமலும் கூட சாபம் விடக்கூடாது. இறைவன் நம்முடன் இருக்கின்றார் என்றால் நாம் எந்தச் சாபத்தையும் குறித்துப் பயப்படத் தேவையில்லை.

இரண்டாவதாக, கழுதைக்குத் தெரிந்தது இறைவாக்கினருக்குத் தெரியவில்லை. இறைவாக்கினரின் முக்கியப் பண்பு 'அவர் அனைத்தையும் அறிந்திருப்பதே!'. ஆனால் இங்கே இறைவாக்கினர் அறியாமையில் இருக்கின்றார். கழுதை அறிவோடு இருக்கின்றது. நம் வாழ்விலும் இந்தப் புரட்டிப்போடுதல் நடக்கின்றது. எல்லாம் தெரியும் என்று நாம் மட்டுமீறியிருக்கும்போது, நம் கண்களுக்குக் கீழே நடப்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. யாரும் யாரையும் மட்டம் தட்ட வழியில்லை.

மூன்றாவதாக, 'இந்நேரம் வாள் இருந்தால்...' என்ற வார்த்தைகள் பிலயாம் கழுதையின்மேல் கொண்ட கோபத்தின் உக்கிரத்தைக் காட்டுகின்றது. தான் எதிர்பார்ப்பது போலவே தன் கழுதை நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பை வளர்க்கின்றார் பிலயாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அதுவே அவரின் கோபமாக மாறுகின்றது. கோபத்தைத் தன்னைவிட சிறிய கழுதையிடம் காட்டுகிறார். இதுவே ஒரு யானையிடமோ, சிங்கத்திடமோ அவர் காட்டியிருக்க முடியுமா? நம்மைவிட சிறியவர்கள்மேல் தான் நம் கோபம் வேகமாகப் பாய்கிறது. 

நான்காவதாக, கழுதையின் சோகமும், இயலாமையும் கலந்த வார்த்தைகள்: 'எப்பவாவது நான் இப்படி பண்ணியிருக்கேனா?' 'என்னைப் புரிந்துகொண்டது இவ்வளவுதானா?' நம்மை அன்பு செய்பவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாதபோது, அல்லது தவறாகப் புரிந்துகொள்ளும்போது நம் மனமும் இந்தக் கழுதையின் சோகத்தையும், இயலாமையையுமே வெளிப்படுத்துகின்றது.

'நான் உம் கழுதையன்றோ?'

Thursday, November 7, 2013

மக்கள் பொறுமையிழந்தனர்

ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி, ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் 'செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர். அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். மக்கள் கடவுளுக்கும், மோசேக்கும் எதிராகப் பேசினர்: 'இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார். அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். (எண்ணிக்கை நூல் 21:4-6)

'பொறுமையிழந்த' இஸ்ரயேல் மக்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

வாழ்க்கையில் பொறுமை ரொம்ப அவசியம்! நான் அனுதினம் இதைக் கற்றுக்;கொள்கிறேன்!

'சல்லடையிலும் தண்ணீர் சுமக்கலாம். அது பனிக்கட்டியாகும் வரை காத்திருந்தால்...'

இந்த நாள்...இனிய நாள்...!

Wednesday, November 6, 2013

உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வர்களிடமும் சொல். நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:

'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள்பொழிவாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!'

(எண்ணிக்கை நூல் 6:22-26)

லேவியர் நூலுக்கு அடுத்ததாக இருக்கும் எண்ணிக்கை நூல் 'எண்ணிக்கை' என்ற பெயர் பெறுவதற்குக் காரணம் இந்த நூலில் இஸ்ரயேல் மக்கள் இருமுறை எண்ணப்படுகின்றனர். அதாவது கணக்கெடுக்கப்படுகின்றனர். 'எண்ணிக்கை' என்பதன் அர்த்தம்: 'நீங்கள் மதிப்பிற்குரியவர்கள்!'. நாம் எண்ணுகிறோம் என நினைத்தவுடன் நம் மனதிற்குள் வருவது நாம் மதிப்பாக வைத்திருக்கும் ஒரு பொருள்தான்: அது பணமாக இருக்கலாம். ஆடைகளாக இருக்கலாம். ஆபரணங்களாக இருக்கலாம். நாம் இவற்றையெல்லாம் அடிக்கடி எண்ணிப்பார்க்கிறோம். எண்ணிப்பார்ப்பதால் அவற்றின் மதிப்பு நமக்குத் தெரிகின்றது. அவற்றின் மதிப்பு தெரிவதால் நாம் எண்ணிப்பார்க்கின்றோம். கடவுள் இஸ்ரயேல் மக்களை எண்ணிப்பார்க்கின்றார். அவருக்கு அவர்களின் எண்ணிக்கை தெரியாது என்பது அல்ல. மாறாக, இஸ்ரயேல் மக்களின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அவர் அவ்வாறு செய்கின்றார். 

'உங்கள் தலைமுடி ஒவ்வொன்றும் எண்ணப்பட்டுள்ளது' என்று இயேசு சொல்வதும் இறைவன் நம்மேல் கொண்ட அக்கறையையும், அவரின் பார்வையில் நமக்குள்ள மதிப்பையுமே காட்டுகிறது. 

இஸ்ரயேலுக்கு ஆரோனும் அவரின் புதல்வர்களாகிய குருக்களும் எவ்வாறு ஆசி வழங்க வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த முவ்வகை ஆசியுரையே நாம் புத்தாண்டுத் திருப்பலியின் நிறைவில் பெறுகின்றோம்.

முதல் ஆசி: பாதுகாப்பு. 'காப்பாராக!' என்ற வினைச்சொல் இறைவன் தரும் பாதுகாப்பை உணர்த்துகின்றது. நம் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த நாள்முதல் நாம் உணரும் ஒரு உணர்வு 'பாதுகாப்பின்மை'. 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்வியே இந்தப் பாதுகாப்பின்மைக்குக் காரணம். நம் முன்னால் எப்போதும் ஒரு திரை இருந்து கொண்டே இருக்கின்றது. திரைக்குப் பின் என்ன இருக்கும் என்பதை நாம் அறியோம். 'திரைக்குப் பின் என்ன இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அந்தத் திரையைப் பிடித்திருப்பவன் நான். கவலைப்படாதே!' என்கிறார் இறைவன்.

இரண்டாம் ஆசி: அருள். டொரினோ விளம்பரத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் இவை: 'இறையருள் பெறுக!' என்னவொரு வித்தியாசமான சிந்தனை. வியாபார நோக்கத்தையெல்லாம் விடுத்து எல்லா மக்களையும் தொடுகின்ற வார்த்தைகள்தாம் இவை. அவரின் அருள் பெற்றவரே இவ்வுலக இருளில் வாழ முடியும். நம் வாழ்வின் எதார்த்தங்கள் இருளாய் இருக்கும்போதெல்லாம் ஒளி தருவது அவரின் அருளே.

மூன்றாம் ஆசி: அமைதி. நாம் செய்யும் வேலை, படிக்கும் படிப்பு, மேற்கொள்ளும் பயணம், நம் வாழ்வின் அனைத்துச் செயல்களின் நோக்கம் இந்த ஒற்றைச்சொல் தான்: அமைதி. உயிர்த்த ஆண்டவரும் தம் சீடர்களுக்குக் கொடையாக 'அமைதி'யையே வழங்குகின்றார். கடந்த காலக்காயங்களையும், எதிர்கால ஏக்கங்கங்களையும் விடுத்து இன்றில் நாம் வாழும்போதே அமைதி பெறுகிறோம்.

பாதுகாப்பு, அருள், அமைதி - இந்த மூன்றையும் இறைவன் நமக்கு ஆசியாக வழங்கி இருக்கின்றார்.  நாமும் அவற்றை ஆசியாகப் பிறருக்கு வழங்குவோம்.

ஒருவரையொருவர் வாயார வாழ்த்துவோம்! ஆசி கூறுவோம்!

Monday, November 4, 2013

நீங்கள் தூயவராயிருங்கள்

'நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர் ... ... உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!' (லேவியர் 11:44-45)

விடுதலைப்பயண நூலில் யாவே இறைவனின் வழிநடத்துதலைப் பார்த்தோம். இஸ்ராயேல் மக்களை வழிநடத்திய யாவே இறைவன் சந்திப்புக் கூடாரத்தில் அவர்களுக்காக, அவர்களோடு பிரசன்னமாகின்றார்.

ஆண்டவரின் பிரசன்னத்தோடு நிறைவு பெறுகின்றது விடுதலைப்பயண நூல். தொடர்ந்து வருகின்ற லேவியர் நூல் நமக்குச் சொல்வது ஒரே வார்த்தைதான்: 'தூயவராயிருங்கள்!' கடவுளின் பிரசன்னம் மனிதர்கள் நடுவில் வந்திருக்கிறது என்றால் மனிதர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அல்லது மனிதர்கள் தூய்மையாக இருந்தால்தான் கடவுளின் பிரசன்னம் அவர்களோடு தங்கும்.

தூய்மை என்றால் என்ன?

இறைவாக்கினர்களுக்கு முந்திய காலம் வரை 'தூய்மை' என்பது ஆலயம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும், கடவுளின் பிரசன்னம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. எதெல்லாம் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறதோ அதெல்லாம் தூயது. எதெல்லாம் ஆலயத்தைவிட்டு விலகி நிற்கிறதோ அதெல்லாம் தீயது.

இறைவாக்கினர்களின் காலத்தில் சமூக நீதி தூய்மை எனக் கருதப்படுகிறது. யாரெல்லாம் ஒருவர் மற்றவரை மதிப்போடு நடத்துகிறார்களோ அவர்கள் தூயவர்கள் எனவும் மற்றவர்கள் தீயவர்கள் எனவும் கருதப்பட்டது.

ஆனால் இயேசுவின் வருகை அனைத்தையும் தூய்மையாக்கிவிட்டது. 'வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' என வந்த இயேசு விண்ணையும் மண்ணையும் இணைக்கின்றார். இறையன்பையும், பிறரன்பையும் தூய்மையின் அளவுகோலாக வைக்கின்றார்.

அன்பில் நாம் தூய்மையாகின்றோம். அன்பால் நாம் தூய்மையாகின்றோம்.

'நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!'

Sunday, November 3, 2013

சக்கேயு குள்ளமானவர்

இயேசுவை வழியனுப்பிவிட்டு தன் வீடு திரும்புகின்ற சக்கேயுவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் வீட்டை விட்டுப் புறப்பட தயாராய் அமர்ந்திருக்கின்றனர். தாய் உரோமை வழிப்பெண். சக்கேயு வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூச்சல் போடுகிறாள்: 'உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி செய்தீங்க? என்னை ஒரு வார்த்தை கேட்க வேணாமா? நீங்க சம்பாதிச்ச சொத்துக்கெல்லாம் காரணம் நானும் எங்க அப்பாவும்? எங்க அப்பாதான் உங்களுக்கு வரி வசூலிக்கும் வேலையை வாங்கிக் கொடுத்தார்? நீங்க வெறும் பொம்மைதான்? நாங்க சொல்றத நீங்க செய்யணும்? உங்க பிள்ளைங்களோட எதிர்காலத்த யோசீச்சிங்களா? நீங்க பாட்டுக்க அவரைப் பார்த்தவுடனே வள்ளலா மாறிட்டீங்க? அப்படி என்ன மனமாற்றம்? நாலு காசு இருந்தாதான் நாம வாழ முடியும். மனமாற்றத்த வச்சி ஒன்னும் செய்ய முடியாது'. சக்கேயுவின் பிள்ளைகளும் தன் தாயோடு இணைந்து கொண்டு தன் தந்தையிடம் முறையிடுகின்றனர். மூத்தவன் சொல்கிறான்: 'போகிற போக்கைப் பார்த்தா கடைசியில எங்களுக்கு ஒன்றும் மிஞ்சாது போல. நீங்க இன்னைக்கே எங்க சொத்த பிரிச்சுக் கொடுங்க'. அப்படியே அங்கிருந்த தூணில் சாய்கின்றார் சக்கேயு. 'இன்றே இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று!' என்ற இயேசுவின் குரல் எதிரொலித்து அடங்குகிறது. இது ஒரு கற்பனை நிகழ்வு என்றாலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இன்று நாம் சக்கேயுவாய் மாற நினைத்தாலும் நம் குடும்பம், நம் சமூகம், நம் உறவுகள் நம்மை மாற விடுவதில்லை. இதுதான் இயேசு கொணரும் வாள்: தந்தைக்கு எதிராக மகனும், மாமனாருக்கு எதிராக மருமகனும்...!

இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வம் சக்கேயுவுக்கு. ஓடிச் சென்று மரத்தில் ஏறுகின்றார். இங்கே 'சக்கேயு குள்ளமானவர்' என்று சொல்லப்பட்டுள்ளது நம் உதடுகளில் சிரிப்பை வர வைக்கின்றது. இயேசுவைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளும், செயல்பாடுகளும் அவசியம் என்பதை சக்கேயு நமக்கு உணர்த்துகின்றார். முதலில் உள்ளம் சார்ந்த தடையை அகற்றுகின்றார். 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்!' 'மரத்தில் ஏறினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?' 'சிரிப்பார்களே!' 'நான் பார்க்கின்ற வரிவசூலிக்கும் வேலை ஒரு கௌரவமான வேலை. என் அந்தஸ்து என்ன ஆகும்?' இது போன்ற உள்ளம் சார்ந்த தடைகளைக் களைகின்றார் சக்கேயு. 'என் இயேசுவின் முன் என் அந்தஸ்தோ, என் அவமானமோ, மற்றவர்களின் கேலிப்பேச்சோ, சிரிப்போ ஒரு பொருட்டல்ல!' என்று முடிவெடுத்தவராய் மரத்தில் ஏறுகின்றார். 'உடல் சார்ந்த தடையையும்' வெல்கின்றார். இன்று இயேசுவைப் பார்க்கும் ஆர்வம் நம்மிடம் இருக்கின்றதா? ஆர்வம் இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் முயற்சிகள் இருக்கின்றனவா? ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இயேசுவைச் சந்திப்பதற்கு நாமே எவ்வளவு தடைகளை ஏற்படுத்திக் கொள்கின்றோம். 'மழை வர்ற மாதிரி இருக்கு', 'இன்னைக்கு ஒரு கல்யாணம்', 'ரொம்ப டயர்டா இருக்கு' என எத்தனையோ தடைகளை நாமே உருவாக்கிக் கொள்கின்றோம்.

தன்னைத் தேடி வந்தவரை தான் தேடிச் செல்கின்றார் இயேசு. 'சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்!' இயேசுவின் அழைப்பில் எந்தவொரு தீர்ப்பிடும் வார்த்தைகளும் இல்லை. 'யார் உன்னைத் தீர்ப்பிட்டாலும், குள்ளம், பாவி. உரோமையின் கைக்கூலி என அழைத்தாலும் நான் உன்னைத் தீர்ப்பிட மாட்டேன்' என சக்கேயுவை பெயர் சொல்லி அழைக்கின்றார் இயேசு. வேகமாய் இறங்குகின்றார் சக்கேயு. இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்கின்றார். இப்போது கூட்டம் முணுமுணுக்கின்றது. நற்செய்தி நூல்களில் 'கூட்டம்' எப்போதும் ஒரு முரணாகவும், தடையாகவுமே இருக்கின்றது. ஆனால் சக்கேயு அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 

தன் வீட்டில் இயேசுவை வரவேற்கின்ற சக்கேயு எழுந்து நின்று, 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர்மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்!' என்கின்றார். இது சக்கேயுவின் மனமாற்றமா? அல்லது மனமாற்றத்தின் விளைவா? 'நீங்கள் மனமாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்!' (லூக்கா 3:8) என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்றார் சக்கேயு. ஆன்மீகம் என்பது ஒரு உதட்டுச் சிரிப்பல்ல. அது உள்ளார்ந்த செயல்பாடு. சக்கேயுவின் மனப்பாங்கு மாறுகிறது. மனப்பாங்கு மாறுவதே மனமாற்றம். 'உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக' (உரோ 12:2) என்று தூய பவுலடியாரும் எழுதுகின்றார். 

நாம் தியானம் செய்த பிறகும், ஏதாவது நற்செய்திப் பெருவிழாவிற்குச் சென்ற பிறகும், புத்தாண்டின் போதும் நமக்கென வாக்குறுதிகள் கொடுத்துக் கொள்கின்றோம்: 'இனி நான் நன்றாக இருப்பேன்!' ஆனால் மூன்றாவது நாளே நாம் பழையபடி ஆகிவிடுகின்றோம். இதற்குக் காரணம் நாம் உள்ளார்ந்த முறையில் மாறுவதில்லை (attitudinal change). ஆனால் சக்கேயுவின் மாற்றம் உள்ளார்ந்தது. தன் செல்வக்குறைவால் துன்பம் வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாகச் செயலாற்றுகின்றார். 'ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையுமன்றோ!' (உரோ 5:4)

இறந்தோருக்காகச் செபித்தல்: பிரச்சினைகளும், வாக்குறுதிகளும்

நவம்பர் 1ஆம் தேதி அனைத்துப் புனிதர்களின் திருநாளைக் கொண்டாடும் கத்தோலிக்கத் திருஅவை, நவம்பர் 2ஆம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினம் எனக் கொண்டாடுகிறது. அனைத்துப் புனிதர்களைத் தொடர்ந்து அனைத்து ஆன்மாக்களின் தினத்தைக் கொண்டாடுவதன் பொருள் என்ன? இவ்வுலகில் வாழ்ந்து இறந்து போனவர்கள் தாங்கள் தவறுகள் செய்திருந்தால் உத்தரிக்கிற நிலை என்ற இடத்தில் சிறிது காலம் துன்பங்கள் அனுபவித்துப் பின் 'அனைத்துப் புனிதர்களின் கூட்டத்தில்' சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது திருச்சபையின் மதிப்பீடு. இது எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. ஏனெனில், இது நம் நம்பிக்கை.

உத்தரிக்கிற நிலையில் இருக்கிறவர்களுக்கு பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நாம் (அதாவது இன்று வாழ்ந்து கொண்டிருப்போர்) தங்கள் செபத்தின் வழியாக பரிகாரங்கள் செய்யலாம் என்பதும் திருச்சபையின் பரிந்துரை. இன்றைய தினம் பலரும் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்களின் கல்லறைகளைச் சந்திப்பார்கள். இறந்தவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். செபமாலை செபிப்பார்கள். நோன்பு இருப்பார்கள். ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வார்கள். தானம், தர்மம் செய்வார்கள். இப்படியாக ஏதோ ஒரு வகையில் தங்கள் செபத்தையும், ஒன்றிப்பையும் காட்டுவார்கள்.

இறந்தவர்களுக்காகச் செபிப்பதில் இருக்கும் ஐந்து பிரச்சினைகள்:

1. இறந்தவர்கள் காலத்தையும், இடத்தையும் கடந்து விடுகிறார்கள். இனி அவர்கள் காலத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்கள் அல்லர். ஆனால் நாம் செய்யும் செபம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது. உதாரணத்திற்கு, இன்று நான் இறந்தவர்களுக்காக நிறைவேற்றும் திருப்பலி காலத்திற்கும் (மாலை 6:30 மணி), இடத்திற்கும் (தூய யூதா ததேயு ஆலயம்) உட்பட்டது. காலத்திற்கும், இடத்திற்கும் உட்படாத இறந்தவர்களுக்குக் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு நிறைவேற்றும் திருப்பலி எப்படி பலன் தர முடியும்?

2. இயேசுவின் பாடுகள், இறப்பு அனைத்துப் பாவங்களையும் அழித்து, அனைவருக்கும் மீட்பைக் கொண்டு வந்தது. தன் ஒரே பலியால் கல்வாரி மலையில், சிலுவையில் எக்காலத்திற்குமான பாவப்பரிகாரப் பலியை அவர் நிறைவேற்றிவிட்டார். அவர் வழியாக பாவிகள் அனைவரும் மற்றும் எல்லோரும் மீட்பு பெற்றுவிட்டனர். அப்படியிருக்க, எதற்காக உத்தரிக்கிற நிலையில் ஆன்மாக்கள் துன்புற வேண்டும்? இயேசுவின் பலி பரிகாரம் செய்ய முடியாத அளவிற்கு அவர்கள் பாவம் செய்துவிட்டார்களா? அல்லது இயேசுவின் பலி முழுமையான பலி இல்லையா? அல்லது நம் செபங்கள் இயேசுவின் பாடுகளையும், தியாகத்தையும், சிலுவைச்சாவையும் விட மேலானவையா?

3. உத்தரிக்கிற நிலை எப்படி இருக்கும்? ஒரு பெரிய அறை இருக்கும். அங்கே எந்நேரமும் நெருப்பு எரியும். பேய்கள் அல்லது வானதூதர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரே அழுகையும், அங்கலாய்ப்புமாய் இருக்கும் - என நாம் நம் மறைக்கல்வி வகுப்புகளில் படிக்கின்றோமே அந்த மாதிரி இருக்குமா? அது எப்படி இருக்கும் என யாரும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்து சொன்னது கிடையாது. பூமி என்ற கிரகத்தில் வாழும் திருச்சபை இருக்கிறது என்றால், வானக எருசலேமும், உத்திரிக்கிற நிலையும் வேறு கிரகங்களில் இருக்குமா? இறந்தவர்களின் உடல்களை நாம் அடக்கம் செய்து விடுகிறோம். வேற்று உலகில் அவர்கள் நெருப்பில் உழல்வார்கள் என்றால், உடம்பு இல்லாமல் வேறு எதைக்கொண்டு அவர்கள் துன்பத்தை உணர்வார்கள்?

4. எல்லாவற்றையும் இழந்து விட்டு வெறுங்கையராய்த் திரும்பி வந்த ஊதாரி மைந்தனை ஏற்றுக்கொண்டு புத்தாடையும், காலுக்கு மிதியடியும், கைக்கு மோதிரமும் அணிவித்த தந்தையைப் போல வானகத் தந்தை இருக்கிறார் என்றால் தங்கள் வாழ்வில் தங்கள் பாவத்தால் அனைத்தையும் இழந்து விட்டு வெறுங்கையராய் நம் முன்னோர்கள் (பின் நாமும்!) செல்லும்போது இரக்கம் காட்டாமல் துன்புறத்தத் துணிவாரா? இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட நல்ல கள்வன் இயேசுவைப் பார்த்து, 'நீர் அரசுரிமையோடு வரும்போது என்னையும் நினைவுகூறும்!' என்று சொல்லும்போது, 'இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய்!' என்று வாக்குறுதி கொடுக்கும் இயேசு, நம் முன்னோர்கள் (அல்லது நாமோ) செல்லும்போது 'இன்று நீ உத்தரிக்கிற நிலைக்குப் போ. நாளை என் வான்வீட்டிற்கு வரலாம்!' எனச் சொல்வாரா?

5. இந்த உலகில் எண்ணற்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்: இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களிலேயே கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள், கால்வினிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள், பிராடஸ்டன்டுகள் (என இன்னும் பல), நாத்திகர்கள், கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா எனக் கவலைப்படாத நடுநிலையினர் எனப் பலர் இருக்கின்றார்கள். 'இறப்பிற்குப் பின் என்ன நடக்கும்?' என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எழுபிறப்புக் கோட்பாட்டையும், இந்த உலகிலேயே காசியிலோ, இராமேஸ்வரத்திலோ நீராடிப் பாவம் போக்கலாம் என்ற பாவமன்னிப்பையும் முன்வைக்கிறது இந்து மதம். புத்த மதத்தில் 'மகாயாணா' என்ற பிரிவினர் மறுபிறப்பையும், மோட்சத்தையும் நம்புகின்றனர். ஆனால் புத்த மதத்தின் 'தேரவாதா' என்ற பிரிவினர் வாழ்வையே மாயை எனக் கருதுவதால் இறப்பையும் மாயை எனவே கருதுகின்றனர். இறப்பிற்குப் பின் அனைவரும் 'சேயோலுக்குச்' செல்வர் என மட்டும் நிறுத்திக் கொள்கிறது யூதமதம். பரிசேயர் என்று குழு உயிர்ப்பையும், மறுவாழ்வையும் நம்புகிறது. சதுசேயர் என்ற குழு உயிர்ப்பையும், மறுவாழ்வையும் மறுக்கிறது. யூத மதத்திலிருந்த பிறந்த இசுலாமும், கிறித்தவ மதமும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது: இறப்பு, மோட்சம், நரகம். இறுதித்தீர்ப்பு ஒன்று உண்டு என இந்த இரண்டு மதங்களுமே நம்புகின்றன. ஆனால் மோட்சம், நரகம் பற்றியக் கோட்பாட்டிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் மதம் கிறித்தவ மதம். நாத்திகர்களுக்கும், கடவுளைக் கண்டுகொள்ளாதவர்களுக்கும் மோட்சம், நரகம் பற்றிய கவலை இல்லை - இருக்கிற ஒரு வாழ்க்கையை நன்றாக வாழ்வோம் என்பதே அவர்களின் மோட்சம். இப்படியிருக்க, கிறித்தவ மதம் என்ற ஒன்றில் இருப்பதால் மட்டும்தானே 'நரகம், உத்தரிக்கிற நிலை!' என்ற பயம் வருகிறது. கிறித்தவ மதத்தில் இல்லாத என் பக்கத்து வீட்டுக்காரருக்கு பயமில்லையே. அப்படியிருக்க, என் கடவுள் என்னைப் பயத்தோடு வாழ்வதற்காகவா படைத்தார். கிறித்தவனாக மாறியது ஒரு குற்றமா?

இறந்தவர்களுக்காகச் செபிப்பதின் ஐந்து வாக்குறுதிகள்:

1. இறந்தவர்களுக்காக செபிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'பிரபஞ்சம்' பற்றிய நம் சிந்தனையை மாற்ற வேண்டும். இருப்பவர்கள் இவ்வுலகத்திலும், இறப்பவர்கள் மற்றொரு உலகத்திலும் இருக்கிறார்கள் என்று நினைப்பதை விடுத்து அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி இணைத்துப் பார்க்க கிறித்தவ மதம் பயன்படுத்தும் வார்த்தை 'இறையரசு'. நாம் இருந்தாலும், இறந்தாலும் இறையரசின் மக்களே. ஆகையால் இந்த அரசின் எந்த இடத்தில் இருந்தாலும் நம் செபம் மற்றவர்களுக்குப் பயன்தரும்.

2. இறந்தவர்களுக்காக நாம் செபிக்கும்போது நம்மையறியாமலே நாம் அவர்களோடு இணைந்து விடுகிறோம். இறப்பு என்பது ஒரு மெல்லிய வேலி. நாம் நேற்று அன்பு செய்தவர்கள் இன்று வேலியின் அந்தப்புறம் இருக்கின்றனர். நாம் இன்று அன்பு செய்பவர்கள் வேலியின் இந்தப்புறம் இருக்கிறார்கள். இரண்டு பக்கத்தையும் பிரிக்கும் குறுக்குச் சுவர் அல்ல இறப்பு. இரண்டையும் இணைக்கும் பாலம். அன்பிலிருந்து அன்பிற்குக் கடந்து செல்கிறோம் இறப்பில். ஆகையால் இந்த அன்பு இறந்தவர்களுக்காக நாம் செய்யும் செபத்தை ஒன்றாக இணைக்கிறது.

3. இறப்பு ஒரு கொடிய எதார்த்தம். மோட்சத்திற்குப் போக விரும்புபவர்கள் கூட இறப்பை வேண்டாம் என்றே சொல்கின்றனர். இறப்பு எதற்காக நமக்குப் பயமாக இருக்கின்றது? நாம் தனியாய் இறக்கின்றோமே அதனால் தான் பயப்படுகின்றோம். 'நாம் இறந்து விடுவோம். ஆனால் மற்றவர்கள் எல்லாம் வாழ்வார்களே!' என்ற எண்ணம் நம் பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது. இறப்பு இந்த நிலையில் ஒரு தண்டனையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு விபத்தில் அல்லது இயற்கைச் சீரழிவில் நூற்றுக்கணக்காக மக்கள் இறந்தாலும், இறப்பு என்னவோ ஒவ்வொருவரையும் தனித்தனியாகவே எதிர்கொள்கிறது. வேறுமாதிரி சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தனித்தனியாகவே இறப்பைச் சந்திக்க வேண்டும். இந்தத் தனிமையில் நமக்கு உதவுவது தான் செபம். நாம் தனியாய் இறந்து போனாலும் நம்மவர்கள் நம்மை நினைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம் தனிமை உணர்வைக் குறைக்கின்றது. நாம் இறந்தவர்களுக்காகச் செபிக்கும்போது, 'நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உடனிருக்கிறோம்' என்ற நம் உடனிருப்பை அவர்களுக்கு உறுதி செய்கிறோம்.

4. இறந்தவர்களுக்காகச் செபிப்பது இருப்பவர்களுக்கும் உடனிருப்பைக் காட்டுகின்றது. இறப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பை உருவாக்குகிறது. ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல, ஒரு சமூகத்திலும் இறப்பு ஒரு வெற்றுக்கோட்டை விட்டுச்செல்கிறது. ஆகையால்தான் பிறப்பைப்போலவே இறப்பும் ஒரு சமூக நிகழ்வாகவே அணுகப்படுகின்றது. இறந்தவர்களுக்கு நாம் செய்யும் செபங்களைப் போல இருப்பவர்களுக்கும் நாம் ஆறுதலும், நம்பிக்கையும் தருகின்றோம். இறந்தோருக்காகச் செபிப்பது நம் குழும உணர்வை அதிகப்படுத்துகிறது. நான் தனிமரம் இல்லை. என்னை அன்பு செய்ய என் உறவுகளும், ஊராரும் இருக்கின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்தக் குழும உணர்வு வாழ்வின் கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் துணிச்சலையும், மனத்திடத்தையும் தருகின்றது.

5. இறந்தவர்களுக்காகச் செபிப்பது நம் வாழ்வை மறுஆய்வு செய்ய நம்மைத் தூண்டுகிறது. நாம் யாருக்காகச் செபிக்கின்றோமோ அவர் கண்ட கனவை நனவாக்க வேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் நமக்கு இருக்கின்றது. அதே வேளையில் இறப்பு என்ற அழையா விருந்தாளி எந்நேரமும் நம் நடுவீட்டிற்கும் வந்து போகலாம் என்பதால் நம் வாழ்வையும் நல்வாழ்வாக அமைத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. 'பிறந்தோம். பிறந்ததால் வாழ்வோம்' என்று வாழ்வை இழுத்துக்கொண்டிராமலும், 'நாளை என்பது நிஜமல்ல. இன்றை  எப்படியும் வாழ்வோம்' என்று ஏனோ-தானோவென இல்லாமலும், 'இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!' என்ற நிலையில் வாழ நம்மையறியாமலேயே நாம் இன்று வாக்குறுதி எடுக்கிறோம்.

'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது!' (திருவெளிப்பாடு 21:4) என நமக்கு வாக்குறுதி தந்தாலும், இன்று நம் கண்களில் கண்ணீரும், கண்ணெதிரே இறப்பும், அது தரும் இழப்பும், துன்பமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம்.

இன்று காலை கல்லூரியிலிருந்து மெட்ரோவில் திரும்பிக்கொண்டிருந்தேன். மெட்ரோவில் 5 வயது அல்பேனிய சிறுவன் ஸ்டீரிட்-ஆர்கன் வாசித்துக்கொண்டே பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். எனக்கருகில் ஒரு ஜெர்மானிய குடும்பம். உரோமைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார்கள் போலும். அப்பா, அம்மா, ஒரு மகன். அவனுக்கும் 5 வயதுதான் இருக்கும். அவன் கையில் ஐஃபோன். அதில் கார் ரேஸ் விளையாடிக்கொண்டிருந்தான். பிச்சை கேட்டுக்கொண்டே வந்த சிறுவன் 'ஐஃபோன் சிறுவன்' அருகில் வந்து நின்று மெதுவாக அவன் காலைத் தொட்டுப் பிச்சை கேட்டான். அவன் காலை எட்டி உதைத்தான். இரண்டு பேருமே ஒரே வயதுடைய சிறுவர்கள்தாம். ஒருவன் பிச்சையெடுக்கிறான். ஒருவன் சுற்றுலா செல்கிறான். ஒருவனுக்கு அடுத்த வேளை உணவென்பதே கிடையாது. மற்றவனுக்கு தன் ஊரில் உண்டது போர் அடித்ததால் இன்று ஊர் சுற்ற வந்திருக்கிறான். ஆர்கன் வாசிக்கும் சிறுவன் காலையில் என்ன சாப்பிட்டிருப்பான்? பள்ளிக்கூடம் என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியுமா? நம்மைப் பார்த்து அவன் என்ன நினைப்பான்? எங்கே தூங்குவான்? ஒருவேளை ஒருவன் கையில் 'ஐஃபோன்' இருப்பதால்தான் அவன் கையில் ஆர்கன் இருக்கிறதோ? ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? 'கடவுள் படைப்பில் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது!' என்றால் 'ஐஃபோன்' சிறுவனின் கையில் ஆர்கனும், ஆர்கன் சிறுவன் கையில் 'ஐஃபோனும்' இருந்திருக்கலாமே?

வாழ்வின் எதார்த்தங்களே நமக்குப் பல நேரங்களில் புதிராக இருக்கும்போது, இறப்பின் எதார்த்தங்கள் எப்படி இருக்கும்?

அக்காடியக் கதை ஒன்றில் அழியா வாழ்வைத் தேடி அலைந்த கில்கமேசுக்கு வயதான மூதாட்டி ஒருத்தி இப்படி அறிவுரை கூறுகின்றாள்:
'நன்றாகக் குளி!
நல்ல ஆடை அணி!
நீ அன்பு செய்பவர்களின் கண்ணில் கண்ணீர் வரவைக்காதே!
உன்னை அன்பு செய்பவளின் மார்பில் சாய்ந்துகொள்!
இதுவே அழியா வாழ்வு!'

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு!' 
(குறள் 339)