Thursday, August 31, 2023

விழிப்பாய் இருங்கள்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 1 செப்டம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் வாரம்

1 தெச 4:1-8. மத் 25:1-13

விழிப்பாய் இருங்கள்!

இன்று புதிய மாதத்தின் முதல் நாள். மாதத்தின் முதல் வெள்ளியும்கூட. 

1. 'நீங்கள் தூயோர் ஆவதே கடவுளின் திருவுளம்' என்று தெசலோனிக்க நகர்த் திருஅவைக்கு எழுதுகிற புனித பவுல், அவர்கள் பெற்றுக்கொண்ட அழைப்பின் காரணமாக அவர்கள் மேன்மையான வாழ்க்கையை வாழக் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். நம் தெரிவுகளைப் பொறுத்தே நம் வாழ்வின் நிலை உயர்கிறது. நம் தெரிவுகளுக்கு ஏற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்வதும் அவசியம். தெசலோனிக்க நகரம் ஒரு குடியேற்ற நகரம். அந்நகரில் பாலியல் பிறழ்வுகள் மிகுந்திருந்தன. கிறிஸ்தவ நெறியைத் தழுவிக்கொண்டவர்கள் ஒரு மாற்று வாழ்வை வாழ வேண்டும் என்பது பவுலின் அறிவுறுத்தல். பழையதைத் தள்ளிவிடாமல் புதியதைத் தழுவிக்கொள்ள இயலாது என்பது பவுல் வழங்கும் பாடம்.

2. இன்றைய நற்செய்திப் பகுதி, மத்தேயு நற்செய்தியின் இறுதிகாலப் பொழிவுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் சீடர்கள் விழிப்போடும் தயார்நிலையிலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிற இயேசு, தொடர்ச்சியாக பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டை மொழிகிறார். இலக்கியக்கூற்றின் அடிப்படையில் தெரிவை மையப்படுத்திய எடுத்துக்காட்டு இது. அதாவது, வாசகர்முன் இரு நிலைகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்துவது. இரு குழுவினர் நம் கண்முன் நிறுத்தப்படுகிறார்கள்: 'அறிவிலிகள்,' 'முன்மதியுடையோர்.' இவர்களில் நான் யார் என்பதை நானே தெரிவு செய்ய வேண்டும். நிகழ்வில் வருகிற முன்மதியற்ற ஐந்து பேர், தகுந்த தயார்நிலையில் இல்லை. மேலும், மணமகன் தாமதத்தைப் பயன்படுத்தவும் அறியவில்லை. விளைவாக, கதவு அவர்களுக்கு அடைக்கப்படுகிறது.

3. நான் மேற்கொள்ளும் தெரிவுக்கு ஏற்ப என் வாழ்க்கையை நான் தகவமைத்துக்கொள்கிறேனா? என் வாழ்வைத் தகவமைத்துக்கொள்வதற்காக நான் தள்ளிவிட வேண்டியவை எவை? தழுவிக்கொள்ள வேண்டியவை எவை? எந்தவொரு நிகழ்விலும் அதன் இறுதிவரை முன்கூட்டியே யோசித்துத் திட்டமிடுவதற்கு நான் பழகியுள்ளேனா? அல்லது ஒவ்வொரு நிகழ்வையும் அந்தந்த நொடியில் எதிர்கொள்ள முயன்று பதற்றத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறேனா? விழிப்பு நிலை என்பது தூங்காமல் விழித்திருப்பது அல்ல. முன்மதியுடன் செயல்பட்டு, இனிதாகத் தூங்கச் செல்வது.



Tuesday, August 29, 2023

வேலையும் நற்செய்திப் பணியும்

இன்றைய இறைமொழி

புதன், 30 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் வாரம்

1 தெச 2:9-13. மத் 23:27-32.

வேலையும் நற்செய்திப் பணியும்

1. தெசலோனிக்கத் திருஅவைக்குத் தான் அறிவித்த நற்செய்தியைப் பற்றிப் பெருமை பாராட்டுகின்ற பவுல், அந்நற்செய்தி அறிவிக்கப்பட்ட விதம் பற்றியும் பெருமை பாராட்டுகிறார். நற்செய்திப் பணியின் பலன்களைத் தான் அனுபவிப்பதற்கான உரிமை இருந்தாலும், அதை அனுபவிப்பதற்குப் பதிலாக, தன் சொந்த உழைப்பால் தன் தேவைகளை நிவர்த்தி செய்துகொண்டதாக எழுதுகிறார். மேலும், ஒரு தந்தை தன் பிள்ளைகளை வழிநடத்துவதுபோல, அவர்களை வழிநடத்தி, அறிவுரை வழங்கி, ஊக்குவித்து, வற்புறுத்தியதாகவும் சொல்கிறார். ஆக, உரிமைகளை மையப்படுத்தாமல் தன் கடமைகளை மட்டுமே மையப்படுத்தி, கடமைகளுடன் கனிவையும் இணைத்து நற்செய்திப் பணி ஆற்றுகிறார் பவுல்.

2. நற்செய்தி வாசகத்தில், இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைச் சாடுகிறார். அவர்களின் வெளிவேடம், போலித்தனம், நெறிகேடு ஆகியவை இயேசுவுக்கு ஏற்புடையனவாக இல்லை.

3. திருமுழுக்கு பெற்ற அனைவருமே நற்செய்தியை அறிவிக்கும் கடமை பெற்றுள்ளதாகச் சொல்கிறது நம் திருஅவையின் மறைக்கல்வி. நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நமக்கு உள்ள கடமையை நினைவுகூர்ந்து வாழ்தல் நலம்.


Thursday, August 24, 2023

இதற்கு இணையான கட்டளை

இன்றைய இறைமொழி

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

ரூத்து 1:1,3-6,14-16, 22. மத் 22:34-40.

இதற்கு இணையான கட்டளை

1. மோசே வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கினார். காலப்போக்கில், விதிமுறைகள் வழிமுறைகள் என மற்ற சட்டங்கள் வழக்கத்திற்கு வந்தன. இயேசுவின் சம காலத்தில் பரிசேயர்கள் 613 சட்டங்களை நீட்சிகளாக உருவாக்கி வைத்திருந்தனர். இந்தப் பின்புலத்தில், 'முதன்மையான கட்டளை எது?' என்னும் கேள்வி இயேசுவிடம் கேட்கப்படுகிறது. இயேசு என்னும் ரபி அல்லது போதகரின் திருச்சட்ட அறிவைச் சோதித்துப் பார்ப்பதற்காக இக்கேள்வி கேட்கப்படுகிறது. இச 6:4-இல் வழங்கப்பட்டுள்ள முதன்மையான கட்டளையை இயேசு மேற்கோள் காட்டுவதுடன், லேவி 19:18-இல் நாம் காணும் பிறரன்புக் கட்டளையையும் எடுத்துரைத்து, முந்தைய கட்டளைக்கு இணையாக நிற்கிறது பிந்தைய கட்டளை என்று மொழிகிறார்.

2. நீதித்தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நடுவில் தீமை மலிகிறது. இதன் விளைவாக நிலம் தன் விளைச்சலைக் கொடுக்க மறுக்கிறது. 'அப்பத்தின் வீடு' என்று அழைக்கப்பட்ட எருசலேமிலும் பஞ்சம் ஏற்படுகிறது. இந்தப் பின்புலத்தில் ஊரை விட்டு முன்பு வெளியேறிய நகோமி மற்றும் ரூத்து பெத்லகேம் வருகிறார்கள். ரூத்து ஒரு புறவினத்துப் பெண்ணாக இருந்தாலும், நகோமியையும் அவருடைய கடவுளையும் ஏற்றுக்கொள்கிறார். 

3. இறையன்பு, பிறரன்பு என்னும் இரு கட்டளைகளும் முதன்மையாக இருக்கின்றன என்கிறார் இயேசு. சில நேரங்களில், 'பிறரன்பு வழி இறையன்பு' என நாம் குறுகிய பார்வையில் புரிந்துகொள்கிறோம். பிறரன்பைப் பயன்படுத்தி நாம் இறைவனை அடைய வேண்டியதில்லை. பிறரன்பு பிறரை மையமாக மட்டுமே இருத்தல் நலம். ஆண்டவராகிய கடவுள்தாமே வரலாற்றை நகர்த்துகிறார் என்னும் செய்தி நகோமி-ரூத்து வருகை நமக்குத் தெரிவிக்கிறது. ரூத்து காட்டிய உடனிருப்பு அவருடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுகிறது.



Wednesday, August 23, 2023

ஐயம் மறைந்து நம்பிக்கை!

இன்றைய இறைமொழி

வியாழன்,24 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

திவெ 21:9-14. யோவா 1:45-51.

ஐயம் மறைந்து நம்பிக்கை!

இன்று நாம் திருத்தூதரான புனித பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவரை நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியாளர் அழைக்கிறார். இதுதான் இவருடைய இயற்பெயராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'பர்த்தலமேயு' என்றால் அரமேயத்தில் 'தலமேயுவின் மகன்' என்றுதான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. 'நத்தனியேல்' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள்.

இயேசுவைக் கண்ட பிலிப்பு தன் நண்பரான நத்தனியேலிடம் போய், 'அவரை நாங்கள் கண்டுகொண்டோம்' என்று சொல்ல, அவரோ, 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று தயக்கம் காட்டுகிறார். ஆனால், 'வந்து பாரும்' என்று பிலிப்பு அழைத்தவுடன் இயேசுவைச் சென்று பார்க்கிறார். 

ஐயத்திலிருந்து நம்பிக்கைக்கு கடந்து செல்கிறார் நத்தனியேல்:

1. நத்தனியேலின் ஐயம் (1:45-46)

இயேசுவின் தான்மை பற்றிய ஐயநிலையில் இருக்கிறார் நத்தனியேல். 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக் கூடுமோ?' என்னும் அவருடைய கேள்வியில் அவர் கொண்டிருந்த முற்சார்பு எண்ணம் வெளிப்படுகிறது.

2. இறைஅறிவு: இயேசுவின் வெளிப்பாடு (1:47-49)

இயேசு நம் ஐயங்களைத் தாண்டி நம்மை அறிந்தவராக இருக்கிறார். நத்தனியேல் யார் – கபடற்றவர் - இயேசு வெளிப்படுத்துகிறார்.

3. திருப்புமுனை: நத்தனியேலின் அறிக்கை (1:49)

'நீரே இறைமகன், இஸ்ரயேல் மக்களின் அரசர்' என அறிக்கையிடுகிறார் நத்தனியேல். இயேசுவைச் சந்திக்கும் அந்த நொடியில் நம் வாழ்க்கை மாற்றம் அடைகிறது.

4. 'இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்' (1:50-51)

யாக்கோபு கண்ட கனவை நினைவூட்டுவதன் வழியாக, இயேசு விண்ணகத்துக்கும் மண்ணகத்துக்குமான ஏணியாக மாறுகிறார் என இங்கே முன்னுரைக்கப்படுகிறது. 

இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்துறக்கிறார் நத்தனியேல் என்னும் பர்த்தலமேயு. இயேசுவைச் சந்திக்கும் அனைவரும் முழுமையான வாழ்வியல் மாற்றத்தைப் பெறுகிறார்கள் என்பது இப்புனிதர்தரும் செய்தியாக இருக்கிறது. இயேசுவோடு இவர் இருந்த நொடிகள் சில என்றாலும் இவர் அடைந்த மாற்றம் பெரியதாக இருக்கிறது.

இயேசுவைப் பற்றிய ஐயம் நம் உள்ளத்தில் எழும்போதெல்லாம், 'வந்து பாரும்' என்னும் குரல் நம்மை அழைத்துக்கொண்டே இருக்கிறது.


Tuesday, August 22, 2023

கடைசியானோர் முதன்மையாவர்!

இன்றைய இறைமொழி

புதன், 23 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

நீத 9:6-15. மத் 20:1-16.

கடைசியானோர் முதன்மையாவர்!

1. கிதியோன் என்னும் நீதித்தலைவர் மிதியானியருக்கு எதிராகப் போரிட்டு அவர்கள்மேல் வெற்றிகொள்கிறார். ஆனால், வெற்றியின் இறுதியில் அவரே மக்களை சிலைவழிபாட்டுக்குள் இழுக்கிறார். அவருடைய மகன் அபிமெலேக்கு (எபிரேயத்தில், 'என் தந்தை ஓர் அரசன்') தன்னையே அரசன் என அறிவித்துக்கொள்வதுடன் கிதியோனின் மற்ற எழுபது மகன்களை ஒரு கல்லில் வைத்துக் கொலை செய்கிறார். ஆனால், யோத்தாம் என்னும் இறுதி மகன் தப்பி விடுகிறார். இவ்வாறு தப்பிச் செல்கிற யோத்தாம் அனைத்து இஸ்ரயேல் மக்களையும் பார்த்து ஆற்றும் உரையே முதல் வாசகம். மரங்கள் உவமை ஒன்றை எடுத்தாளுகிற யோத்தாம், தற்போது இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆட்சி செய்வதற்கென முட்செடியைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறுகிறார். முட்செடிகள் நிலத்தை அடைத்துக்கொள்கின்றன. அவற்றால் பயன் ஒன்றும் இல்லை. அவை மற்ற செடிகளுக்குரிய சத்துகளை எடுத்துக்கொள்வதுடன், மற்ற செடிகள் வளரவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஏறக்குறைய அபிமெலேக்கும் இப்படித்தான் செயல்படுகிறார்.

2. திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டு வழியாக விண்ணரசின் உண்மையை எடுத்துரைக்கிறார் இயேசு. 'கடைசியானோர் முதன்மையாவர்' என்பதே இயேசு தரும் செய்தி. முதன்மையானோர் முதன்மையாவர் என்பது இயற்பியல் விதி. ஆனால், இது இறையாட்சி விதி அல்ல. ஒரே நேரத்தில் ஆண்டவராகிய கடவுள் தம் நீதியையும் இரக்கத்தையும் காட்டுகிறார். முழு நாள் வேலை பார்த்தவர்கள் முழு நாளுக்குரிய தெனாரியம் பெறுகிறார்கள். இது கடவுளின் நீதி. ஒரு மணிநேரம் வேலை பார்த்தவர்கள் முழு நாளுக்குரிய தெனாரியம் பெறுகிறார்கள். இதுவே கடவுளின் இரக்கம். இரண்டும் வேறு தளங்களில் இயங்கினாலும் இயக்குபவர் இறைவனே. நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுப்பவர்கள் இரண்டு தளங்களையும் ஒன்றாக்கிப் பார்க்கிறார்கள். 

3. முதல் வாசகத்தில், கிதியோனின் வீட்டில் கடைசியாக இருந்த யோத்தாம் முதன்மையானவராக மாறுகிறார். இஸ்ரயேல் மக்களின் பிறழ்வுபட்ட நிலையை எடுத்துரைக்கிறார். நற்செய்தி வாசகத்தில், கடைசியாக வந்தவர்கள் முழு கூலி பெற்றுக்கொள்கிறார்கள். 'கடைசியானோர் முதன்மையாவர்' என்னும் இறையாட்சிச் செய்தியை நமக்குப் பொருத்திப் பார்ப்பதில் மகிழும் நாம், அதையே மற்றவர்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது இடறல்படுகிறோம். மற்றவர்களுக்கு நீதி, நமக்கு இரக்கம் என்பதே நம் எண்ணமாக இருக்கிறது. இதைச் சற்றே மாற்றிப் போடுவதற்கு நாமும் நிலக்கிழாருடன் தோட்டத்திற்குள் நுழைவது நலம்.


Monday, August 21, 2023

இறைவனின் திருவுளத்தோடு இணைந்து

இன்றைய இறைமொழி

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

நீத 6:11-24. மத் 19:23-30.

இறைவனின் திருவுளத்தோடு இணைந்து

கிதியோன் என்னும் நீதித்தலைவரின் அழைப்பைப் பதிவு செய்கிறது இன்றைய முதல் வாசகம். கிதியோன் மனாசே குலத்தைச் சார்ந்தவர். மிதியானியர்களிடமிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றுகிறார் இவர். ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே, ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்' என்று சொன்னபோது, கிதியோன் உடனடியாக, 'ஆண்டவர் எங்களோடு இருக்கிறார் என்றால், எங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நாங்கள் ஏன் அடிமைகளாக இருக்கிறோம்?' எனக் கேட்கிறார். ஆண்டவராகிய கடவுள் தங்களோடு இருந்தால் மட்டுமே தங்களுக்கு வெற்றி என்பதை உணர்ந்தவராக இருக்கிறார். 

சீடத்துவத்துக்கான தடையாக செல்வம் இருக்கிறது என எச்சரிக்கிறது நற்செய்தி வாசகம். செல்வத்தின் ஆபத்து, கடவுளிடம் சராணகதி, நிலைவாழ்வு என்னும் பரிசு என்று மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது இந்த வாசகம். செல்வம் நமக்குத் தன்நிறைவைக் கொடுப்பதன் வழியாக ஒரு வகையான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மை அந்நியமாக்குகிறது. 'என் கையே இதைச் செய்தது' என்னும் உணர்வைத் தருகிறது.

இறைவனின் திருவுளத்தோடு இணைந்து செயல்படுதலே நீடித்த வெற்றியைத் தருகிறது.


Sunday, August 20, 2023

இறைவனைத் தெரிந்துகொள்தல்

இன்றைய இறைமொழி

திங்கள், 21 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

நீத 2:11-19. மத் 19:16-22.

இறைவனைத் தெரிந்துகொள்தல்

1. யோசுவா இறந்த பின்னர் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதற்கான ஒருங்கிணைந்த தலைமை இல்லை. ஒவ்வொரு குலத்திலும் வேறு வேறு தலைவர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் நீதித்தலைவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த நூலில் பாவம்-அருள் சுழல் ஆறு முறை சுற்றுகிறது. இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபட்டு ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள். அவர்களைத் திருத்துவதற்காக அல்லது கண்டிப்பதற்காக ஆண்டவர் எதிரிகளை எழுப்புகிறார். அவர்களின் அடக்குமுறை தாங்கமுடியாமல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை நோக்கிக் குரல் எழுப்புகிறார்கள். ஆண்டவர் நீதித்தலைவர் ஒருவரை அழைக்கிறார். அவர் எதிரிகளை வெல்கிறார். நிலம் அமைதி கொள்கிறது. இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கொடுத்த உடன்படிக்கை வாக்குறுதியை மறந்துவிட்டதால்தான் அவர்கள் இத்தகைய பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இருந்தாலும் ஆண்டவருடைய அருள்கரம் மேலோங்கி நின்று அவர்களை வழிநடத்துகிறது.

2. நிலைவாழ்வு பெறும் விருப்பத்துடன் இளவல் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். கட்டளைகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறார் இயேசு. கட்டளைகளை தாம் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதாக மொழிகிறார் இளவல். அடுத்த நிலைக்கு அவரை எடுத்துச் செல்கிறார் இயேசு. நிறைவுபெறுவதற்கான வழியை முன்மொழிகிறார். இயேசுவின் அளவுகோல் எப்போதும் முரண்பட்டதாக இருக்கிறது. விண்ணரசில் பெரியவராக மாறுவதற்கு ஒருவர் சிறியவராக மாற வேண்டும். அதுபோல நிறைவு பெறுவதற்கான வழி இழப்பது. இது கணிதவிதிகளுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. ஆகையால்தான், இளவல் வருத்தத்துடன் இல்லம் செல்கிறார். இளவல் பாதி வழியுடன் திரும்பிச் செல்லக் காரணம் 'லாஸ் அவெர்ஷன்' என்பதாகும். அதாவது, எதிர்வருகிற வரவை விட இழப்பு அதிகமானதாக இருக்குமோ என்று எண்ணுகிற உள்ளம், இழப்பையே பெரிதுபடுத்திப் பார்ப்பதால் முடிவெடுக்க மறுத்து, இப்போது இருப்பதே போதும் என எண்ணும். அதாவது, என் கையில் 10 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். என்னிடம் வருகிற ஒருவர், 'உன் 10 ரூபாயை என்னிடம் கொடு! நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன்' என்கிறார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவரைப் பார்த்தாலும் அவரிடம் 100 ரூபாய் இருப்பது போலத் தெரியவில்லை. ஆக, அவரை நம்பி 100 ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக, 'இல்லை பரவாயில்லை! எனக்கு வேண்டாம்' என நான் சொல்லி அனுப்புகிறேன். ஏனெனில், 100 ரூபாய் தரும் மகிழ்ச்சியை விட 10 ரூபாயை இழந்தால் நான் அடையும் துன்பம் எனக்குப் பெரிதாகத் தெரிகிறது.

3. இறைவனைத் தெரிந்துகொள்தல் ஒருநாள் செயல்பாடு அல்ல. மாறாக, அன்றாடம் அது புதுப்பிக்கப்பட வேண்டும். இஸ்ரயேல் மக்கள் தங்கள் உடன்படிக்கை பிரமாணிக்கத்தைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகையால்தான் சிலைவழிபாடு பக்கம் திரும்புகிறார்கள். நிறைவுள்ளவராக விரும்புவர் இறைவனைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அதற்கு இடையூறாக இருக்கிற செல்வத்தை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.


Friday, August 18, 2023

ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்

இன்றைய இறைமொழி

சனி, 19 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

யோசு 24:14-29. மத் 19:13-15.

ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்

1. யோசுவா நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய முதல் வாசகம். தாம் இறப்பதற்கு முன்னர் அனைவரையும் செக்கேமில் ஒன்றுகூட்டுகிறார் யோசுவா. இந்தக் கூடுகைக்கு மூன்று காரணங்கள் உள்ளன: (அ) ஆண்டவராகிய கடவுள் இதுவரை இஸ்ரயேல் மக்களுக்குச் செய்த நன்மைகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களிலும் அவர் அவர்களைத் தாங்கிக்கொள்வார் என்று உற்சாகம் தருவதற்கு. (ஆ) ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்குமான உடன்படிக்கையை (சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது) புதுப்பித்துக்கொள்வதற்கு. (இ) தாம் இறப்பதற்கு முன்னர் அவர்களுக்குத் தம் பிரியாவிடை உரை வழங்குவது. ஏகப்பட்ட கடவுளர் நம்பிக்கையிலிருந்து ஏகக்கடவுள் நம்பிக்கை நோக்கிய இஸ்ரயேல் மக்களின் பயணம் எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப அவர்கள் மற்றக் கடவுளர்களை நோக்கித் திரும்பவே செய்தனர். நதிக்கு அப்பால் அவர்கள் வழிபட்ட கடவுளர்களை அவர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்குகிற யோசுவா, தாமே அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்பொருட்டு, 'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என அறிக்கையிடுகிறார்.

2. சிறு குழந்தைளுக்கு இயேசு ஆசி வழங்கும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். சிறு குழந்தைகள் என்பவர்கள் இஸ்ரயேலைப் பொறுத்தவரையில் எண்ணிக்கைக்குள் வராதவர்கள். அதாவது, பன்னிரு வயதை அடைவதற்கு முன் அவர்கள் 'அது' என்றே வழங்கப்பட்டனர். குறிப்பாக, பொதுவிடங்களில் ரபிக்கள் அருகில் அவர்கள் வருவது தடைசெய்யப்பட்டதாக இருந்தது. இந்தப் பின்புலத்தில்தான் சீடர்கள் குழந்தைகளை அதட்டுகிறார்கள். ஆனால், இயேசுவோ அவர்களைத் தம்மிடம் வரவழைத்ததோடல்லாமல் அவர்களுக்கே விண்ணரசு எனச் சொல்லி, விண்ணரசின் முதல் உரிமையாளர்கள் ஆக்குகிறார்.

3. யோசுவாவின் இறப்புக்குப் பின்னர் நீதிபதிகளின் காலம் தொடங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் சரியான தலைமைத்துவம் இன்றித் துன்பம் அனுபவிப்பார்கள். ஆகையால், தன்ஒழுக்கத்திற்கு அவர்களைப் பழக்குகிறார் யோசுவா. தனிநபர் உடன்படிக்கைப் பிரமாணிக்கமின்மையே தன்ஒழுக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் என எண்ணுகிறார். ஆண்டவராகிய கடவுளை மட்டுமே தெரிந்துகொள்கிறார். நம் தன்ஒழுக்கம் மற்றும் இறைத்தெரிவு எப்படிப்பட்டதாக இருக்கிறது? குழந்தைகளை அல்லது வலுவற்றவர்களைப் பற்றிய நம் பார்வை எப்படிப்பட்டதாக இருக்கிறது? அவர்களைக் கண்டு நாம் இடறல்படுகிறோமா? அல்லது அவர்களை ஏற்றுக்கொள்கிறோமா?


Thursday, August 17, 2023

உங்களுக்குக் கொடுத்தவையே

இன்றைய இறைமொழி

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

யோசுவா 24:1-13. மத்தேயு 19:3-12.

உங்களுக்குக் கொடுத்தவையே

1. யோர்தான் நதியைக் கடக்கிற இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களைச் செக்கேமில் ஒன்றுகூட்டுகிற யோசுவா, ஆண்டவர் இதுவரை அவர்களுக்குச் செய்த அரும்பெரும் செயல்களை எடுத்துரைக்கிறார். 'இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று, அம்புகளாலும் அன்று' என்று சொல்வதுடன், அவர்கள் குடியேறுவதற்கு முன்னரே ஆண்டவராகிய கடவுள் அனைத்தையும் அவர்களுக்குத் தயாராக வைத்திருந்தார் எனவும் எடுத்துச் சொல்கிறார். ஆண்டவரின் பராமரிப்புச் செயலை யோசுவா எடுத்துரைக்கக் காரணம் அவர்கள் யாவே இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருந்து, அவருடைய கட்டளைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதுதான். ஆனால், அவர்கள் தொடர்ந்து சிலைவழிபாட்டுக்குள் விழுவார்கள். உடன்படிக்கையை மறப்பார்கள். 

2. நற்செய்தி வாசகத்தில் மணஉறவு, மணமுறிவு, மற்றும் மணத்துறவு என்னும் மூன்று கருத்துருகள் காணப்படுகின்றன. படைப்பின் தொடக்கத்திலேயே ஆண்டவராகிய கடவுள் ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதை விரும்புவதால் மணமுறிவு ஏற்புடையது அல்ல. அதே வேளையில், இறையாட்சியின் பொருட்டு மணத்துறவு ஏற்பதும் சிறப்பே. 

3. இவ்விரு வாசகங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, கடவுள் நிர்ணயித்துள்ளபடியே அனைத்தும் நடந்தேறுகிறது எனவும், கடவுளின் விருப்பத்திற்கு முரணாக நடப்பது தவறு எனவும் புலப்படுகிறது. மேலும், ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலை நம் அன்றாட வாழ்வில் உணர்ந்து அதன்படி வாழ்தல் சிறப்பு.


Wednesday, August 16, 2023

வறண்ட தரை வழியாக

இன்றைய இறைமொழி

வியாழன், 17 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

யோசுவா 3:7-10, 11, 13-17. மத்தேயு 18:21-19:1.

வறண்ட தரை வழியாக 

1. மோசேயின் மறைவுக்குப் பின்னர் யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார்கள். கால் நனையாமல் செங்கடலைக் கடந்ததுபோலவே யோர்தான் ஆற்றையும் கடக்கிறார்கள். மோசே மற்றும் யோசுவா ஆகியோரின் செயல்பாடுகள் இரு நிகழ்வுகளிலும் மாறுபட்டு இருக்கின்றன. அங்கே மோசே செங்கடலைத் தன் கோலால் அடித்துப் பிரிக்கிறார். இங்கே ஆண்டவரின் குருக்கள் உடன்படிக்கைப் பேழையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்குகிறார்கள். 

2. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் குழுமப் போதனை தொடர்கிறது. மன்னிப்பு குழும வாழ்வின் முக்கியமான பண்பாக முன்வைக்கப்படுகிறது. நாம் இறைவனிடமிருந்து மன்னிப்பு பெற்றிருப்பதால் ஒருவர் மற்றவரை மன்னிக்கும் கடமை உண்டு என்னும் செய்தி தரப்படுகிறது.

3. ஆண்டவருடைய உடனிருப்பில் தண்ணீர் என்னும் தடை மறைந்து வறண்ட தரை பிறக்கிறது. நாம் ஒருவர் மற்றவரை நம் குழுமத்தில் மன்னிக்கும்போது புதிய வழி பிறக்கிறது.


Tuesday, August 15, 2023

ஆண்டவர் நேருக்குநேர்

இன்றைய இறைமொழி

புதன், 16 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

இச 34:1-12. மத் 18:15-20.

ஆண்டவர் நேருக்குநேர்

1. இன்றைய முதல் வாசகத்தில் இணைச்சட்ட நூலின் இறுதிப்பகுதியை வாசிக்கிறோம். வாக்களிக்கப்பட்ட நாட்டைத் தன் கண்களால் மட்டுமே பார்க்கிற மோசே, நெபோ மலையில் இறக்க, ஆண்டவராகிய கடவுள் அவரை அடக்கம் செய்கிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் மோசே தாபோர் மலைமேல் இறங்கி வருகிறார். ஆக, கிறிஸ்தவ வாசிப்பில் மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார். மோசேயின் இறப்பு, மோசேயின் மேன்மை, மோசேயின் பணித்தொடர்ச்சி என மூன்று பகுதிகளாக உள்ளது முதல் வாசகம். மோசேயின் இறப்பு நம்மால் தாங்க இயலாத ஒன்றாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்குக் காண்கின்ற கடவுள் போல, தந்தையாக, தாயாக வழிநடத்தியவர், அவர்களின் முணுமுணுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்தவர் இன்று அவர்கள் கண்களிலிருந்து மறைகிறார். மோசேயின் மேன்மை பற்றி எழுதுகிற ஆசிரியர் அவரின் கண்களின் பார்வை மற்றும் வலிமை எந்த வகையிலும் குறையவில்லை என்கிறார். ஏனெனில், மோசே கடவுளின் கண்கள் கொண்டே அனைத்தையும் கண்டார், கடவுளின் வலிமையாலே மக்களைத் தூக்கிச் சுமந்தார். கடவுளை நேருக்கு நேர் காணும் பேறு பெறுகிறார் மோசே. மோசேயின் பணியைத் தொடர்கிறார் இளவல் யோசுவா. இதுவரை இறைவாக்கினரான மோசே வழிநடத்தினார். இனி வரும் தலைமைத்துவம் நிர்வாகம் அல்லது இராணுவம் சார்ந்ததாக இருக்கும். இறைவாக்கினர் (மோசே), அருள்பணியாளர் (ஆரோன்), அரசர் (யோசுவா) என்று மூன்று தலைமைத்துவ முறைகள் இப்படியாக வளர்ச்சி பெற்று இஸ்ரயேலில் நிலைபெறுகின்றன. இம்மூன்று பணிகளையே நாம் கிறிஸ்துவின் பணிகள் என்றும் கூறுகிறோம்.

2. மத்தேயு நற்செய்தி நூலின் குழுமவாழ்வு உரை என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது நற்செய்தி வாசகம். இந்த இடத்தில் மட்டுமே நற்செய்தி நூல்கள் 'திருச்சபை' ('எக்ளேசியா') என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றன. குழுமம் யாரையும் இழந்துவிடக்கூடாது என அக்கறை காட்டுகிறது நற்செய்திப் பகுதி. குழும வாழ்வில் பிரச்சினைகள், கருத்து மாற்றங்கள், பகைமை உணர்வுகள் தவிர்க்க முடியாதவை என ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளை குழுமத்திலேயே காண அறிவுறுத்துகிறது. உறவுகள் மனம் ஒத்து இருக்கும்போது அங்கே இறைவனின் திருமுன்னிலை இருக்கிறது.

3. எவ்வளவு பெரிய தலைவராக ஒருவர் இருந்தாலும், வளர்ந்தாலும், உருவெடுத்தாலும் அவர் அந்த இடத்திலிருந்து மறைய வேண்டும் என்பதே வாழ்வியல் எதார்த்தம். மோசே இதை அறிந்தவராக இருக்கிறார். ஆகையால்தான், தமக்கென தலைமை வாரிசாக யோசுவாவை ஏற்படுத்தி உருவாக்குகிறார். எந்தவொரு தடையும் இல்லாமல் அவர்களின் பயணம் தொடரும். தலைமைத்துவத்துக்கான நல்ல பாடம் இது. 'உங்களுள் யாராவது உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் இருவரும் தனித்திருக்கையில் அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்' என்கிறார் இயேசு. நாம் இதை உறவு மேலாண்மைப்பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஒருவருடைய குற்றத்தை நாம் மற்றவர்களிடம் எடுத்துச்சொல்வதில் காட்டும் அக்கறையை, அத்தோடு தொடர்புடைய நபருக்கு எடுத்துச்சொல்வதில் காட்டுவதில்லை. ஆன்மிகத் தலைமைத்துவம், குழும வாழ்வு, உறவு மேலாண்மை என வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கின்றன இன்றைய வாசகங்கள்.


Monday, August 14, 2023

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது

இன்றைய இறைமொழி

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023

அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பு

திவெ 11:9, 12:1-6, 10. 1 கொரிந்தியர் 15:20-26. லூக்கா 1:39-56

(இந்த மறையுரையானது 'லெக்ஷியோ திவினா' (டுநஉவழை னுiஎiயெ என்ற ஆன்மிக-இறைவழிபாட்டு முறையில் எழுதப்பட்டுள்ளது)

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது  

1. இறைவேண்டல்

'அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்.

ஓபிரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்து கேள்!

உன் இனத்தாரை மறந்துவிடு. பிறந்தகம் மறந்துவிடு.

உனது எழிலில் நாட்டங் கொள்வர் மன்னர்.

உன் தலைவர் அவரே. அவரைப் பணிந்திடு!

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள்

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்!'

(திபா 45:9,10-11,15)

2. இறைவார்த்தை கேட்டல்

முதல் வாசகம் (திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10)

பத்மு தீவில் காட்சி காண்கின்ற யோவான் வரவிருக்கின்ற ஏழு அடையாளங்கள் பற்றி எழுதுகின்றார். அவற்றில் முதல் அடையாளமே இன்றைய வாசகப் பகுதி. இதை பெரிய அடையாளம் என அவர் அழைக்கின்றார். கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண் இஸ்ரயேலைக் குறிக்கின்றது. ஏனெனில், விவிலியத்தில் சமய அடையாளங்கள் பெண் உருவகமாகவே கொடுக்கப்பட்டுள்ளன: ஈசபெல் - பாகால் வழிபாடு (திவெ 2:20), விலைமகள் - போலி சமயம் (திவெ 17:2), மணமகள் - கிறிஸ்துவின் திருச்சபை (19:7-8).  'கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண்' கத்தோலிக்க மரபில் அன்னை கன்னி மரியாள் என பல ஓவியங்களில் நாம் பார்க்கின்றோம். அன்னை கன்னி மரியாளின் பல திருவுருவங்கள் அவர் நிலவின்மேல் நிற்பவராகவும், கதிரவனின் ஒளியை ஆடையாக அணிந்திருப்பவராகவும், அவருடைய தலையைச் சுற்றி 12 விண்மீன்கள் இருப்பதாகவும் சித்தரிக்கின்றன. ஆனால், இது இஸ்ரயேலையே குறிக்கிறது. யோசேப்பு காண்கின்ற கனவில் (தொநூ 37:9-11) யாக்கோபு கதிரவனாகவும், ராகேல் நிலவாகவும், அவர்களுடைய பிள்ளைகள் பன்னிரு விண்மீன்களாகவும் உள்ளனர். மற்ற இடங்களிலும் சீயோன் அல்லது எருசலேம் அல்லது இஸ்ரயேல் பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது (காண். எசா 54:1-6, எரே 3:20, எசே 16:8-14, ஓசே 2:19-20).

இஸ்ரயேலிடமிருந்து பிறக்கும் குழந்தை இயேசுவைக் குறிக்கிறது. இந்தக் குழந்தை இயேசுவைக் குறிப்பதால் இந்தப் பெண் அன்னை கன்னி மரியா என்றும் கூறலாம். நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக உள்ளது. தானியேல் 7:7-8இன் பின்புலத்தில், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் உள்ள இந்தப் பாம்பு உரோமை அரசைக் குறித்தது. இந்தக் குழந்தையை விழுங்க உரோமை அரசு துடிக்கிறது. பெண் பாலைவனத்துக்குத் தப்பி ஓடுகிறார். பாலைவனம் என்பது இங்கே இறைவன் தருகின்ற பாதுகாப்பைக் குறிக்கிறது. 1260 நாள்கள் (மூன்றரை வருடங்கள்), தானியேல் 9இன் பின்புலத்தில் இறைவாக்கு நிறைவேறும் ஆண்டைக் குறிக்கிறது. 'கடவுள் இடம் ஏற்பாடு செய்தல்' என்பது கடவுளின் பராமரிப்புச் செயலைக் காட்டுகிறது.

அரக்கப்பாம்பு தோல்வியுறுகிறது. விண்ணகத்தில் பெரியதொரு புகழ்ச்சி அல்லது வாழ்த்துப் பாடல் ஒலிக்கிறது.

இரண்டாம் வாசகம் (1 கொரிந்தியர் 15:20-26)

கொரிந்து ஒரு பணக்கார குடியேற்ற நகரம். பவுல் தன்னுடைய இரண்டாம் தூதுரைப் பயணத்தில் ஏறக்குறைய 18 மாதங்கள் இங்கே பணியாற்றினார் (காண். திப 18). கொரிந்து நகர்த் திருஅவையில் உள்ள பிரச்சினைகள் பற்றி அறிகின்ற பவுல், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க கடிதம் ஒன்றை எழுதுகின்றார். பவுலின் அதிகாரம், திருஅவையில் பிரிவுகள், பாலியல் பிறழ்வு, பரத்தைமை, சிலை வழிபாடு, அப்பம் பிட்குதல், கொடைகள் மற்றும் தனிவரங்கள் என்னும் பிரச்சினைகளின் வரிசையில், இறந்தோர் உயிர்த்தெழுதல் என்ற பிரச்சினையும் உள்ளது. முந்தையவை அனைத்தும் அறநெறி சார்ந்த பிரச்சினைகளாக இருக்க, 'இறந்தோர் உயிர்த்தெழுதல்' என்பது இறையியல் அல்லது கொள்கைசார் பிரச்சினையாக இருக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மற்றும் இறப்பு பற்றித் தொடக்கத்தில் (அதி. 2) பேசுகின்ற பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றி இறுதியில் (அதி. 15) பேசுகின்றார்.

இறந்தோர் உயிர்ப்பு பற்றிய புரிதலுக்கு இரு தடைகள் இருந்தன: ஒன்று, யூத சமயத்தில் இறந்தோர் உயிர்ப்பு பற்றிய தெளிவான கருத்து இல்லை. 'ஷெயோல்' அல்லது 'பாதாளம்' என்பது இறந்தோர் வாழும் இடம் என்று கருதப்பட்டது. 'எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணினின்றே தோன்றின. எல்லாம் மண்ணுக்கே மீளும்' (காண். சஉ 3:20). ஆண்டவர் உயிர் தருவார் (காண். இச 32:39) என்ற புரிதல் பிந்தைய காலத்தில்தான் வருகின்றது. இரண்டு, கொரிந்து நகர மக்கள் பிளேட்டோவின் மெய்யியல் அறிந்தவர்களாக இருந்தனர். பிளேட்டோவின் புரிதல்படி 'உடல்-ஆன்மா' என்று இருநிலைகள் உள்ளன. இவற்றில், உடல் அழியக் கூடியது. ஆன்மா எப்போதும் உயிரோடு இருக்கக் கூடியது. அப்படி என்றால், அழியக் கூடிய உடல் எப்படி அழியாமல் உயிர்த்தெழ இயலும்? என்று அவர்கள் கேட்டனர்.

இந்தப் பின்புலத்தில் இரண்டாம் வாசகத்தைக் காண வேண்டும். ஆதாம் வழியாக இறப்பு வந்தது போல, கிறிஸ்து வழியாக இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர் என்கின்ற பவுல், சாவு அழிக்கப்பட்டவுடன் அனைத்தும் கடவுளுக்கு அடிபணியும் என்கிறார். அதாவது, இறந்தோர் உயிர்த்தல் என்பது எப்படி என்று சொல்லாமல், இறந்தோர் உயிர்த்தெழுதல் 'ஏன்' என்ற நிலையில் பதிலிறுக்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகம் (லூக்கா 1:39-56)

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் எலிசபெத்து கன்னி மரியாவை வாழ்த்துகிறார். இரண்டாம் பகுதியில் மரியா கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றார். வானதூதர் கபிரியேலிடமிருந்து இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு கேட்டவுடன் விரைவாக யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் மரியா. மரியாவின் வாழ்த்து கேட்டவுடன் எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றார். எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தி தன் நோக்கி வர, மரியா, தன் வாழ்த்துச் செய்தியை இறைநோக்கித் திருப்புகின்றார். மரியாவின் புகழ்ச்சிப்பாடல் முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலோடு (காண். 1 சாமு 1-2) நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இங்கே மரியாவின் பாடல் மூன்று நிலைகளில் கடவுளை வாழ்த்துகின்றது: ஒன்று, தனக்குக் கிடைத்த பேற்றுக்காக. இரண்டு, அவர் செய்யும் புரட்சிக்காக (புரட்டிப் போடுதலுக்காக). மூன்று, அவர் நிறைவேற்றும் வாக்குறுதிக்காக.

3. இறைவார்த்தை தியானித்தல்

இன்று நாம் அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 'கடவுளாக மாறுவீர்கள்' என்ற பாம்பின் பொய் கேட்டு, விலக்கப்பட்ட கனி உண்ட ஏவாள் மனுக்குலத்தின் தாயாக மாறுகின்றார். 'இதோ ஆண்டவரின் அடிமை!' என்று வானதூதருக்குச் சொல்லி, மீட்பின் கனியைத் தன் வயிற்றில் தாங்கிய மரியா இறைவனின் தாயாக மாறுகின்றார்.

'நான் கடவுளைப் போல ஆவேன்!' என்று தன்னை உயர்த்தியதால் ஏவாள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

'நான் ஆண்டவரின் அடிமை!' என்று தன்னைத் தாழ்த்தியதால் மரியா தோட்டத்திலிருந்து விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

முதல் வாசகத்தில், பெண் அரக்கப் பாம்பிடமிருந்து பாதுகாக்கப்பட்டது போல, மரியா தீமையிடமிருந்து வியத்தகு முறையில் பாதுகாக்கப்படுகின்றார். இரண்டாம் வாசகத்தில், சாவு என்னும் பகைவன் கிறிஸ்துவால் அழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்த சாவைத் தழுவாமல் மரியா விண்ணேற்பு அடைகின்றார். நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பது போல, எப்போதும் தன் கண்களை விண்ணகத்தின்மேலேயே பதித்திருந்த மரியா, அந்த விண்ணகத்திற்கே எடுத்துக்கொள்ளப்படுகின்றார்.

4. இறைவார்த்தை வாழ்தல்

(அ) தீமையிடமிருந்து விலகி நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் விண்ணேற்பு அடைகின்றோம். ஆக, தீமையிலிருந்து விலகி நிற்க எண்ணுதல், மற்றும் முயற்சி செய்தல் நலம்.

(ஆ) இறப்பு என்பது நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம். உயிர்ப்பு என்ற ஒன்றுதான் இறப்புக்கு பொருள் தருகின்றது. அந்த உயிர்ப்பை எதிர்நோக்கி வாழ்தல்.

(இ) மரியா தன் உறவினர் நோக்கி உடலிலும், தன் இறைவன் நோக்கி உள்ளத்திலும் நகர்கின்றார். நம் வாழ்விலும் இவ்விரு வகை நகர்வுகளை நமக்குப் பொருள் தருகின்றன.

5. செயல்பாடு

தன்னாய்வு: இறப்பின் காரணிகளால் நான் அலைக்கழிக்கப்படுவது ஏன்? இன்று நான் விண்ணகத்தை நோக்கிக் காண இயலாதவாறு என் பார்வையைத் தடுப்பது எது? காண்பவற்றை மட்டுமே பற்றிக்கொள்ளும் நான் அவற்றை விடுவதற்கு என்ன முயற்சிகள் செய்கின்றேன்?

இறைநோக்கிய பதிலிறுப்பு: இறைவன் தரும் பராமரிப்பையும் பாதுகாவலையும் உணர்தல்.

உலகுநோக்கிய பதிலிறுப்பு: இந்த உலகமும் உடலும் என் இயக்கத்திற்குத் தேவை. இவற்றின் துணைகொண்டே நான் விண்ணேற முடியும்.

6. இறுதிமொழி

துன்பங்கள் தாங்கும் திறன் கற்றுத்தந்தார் ஏவாள். துன்பங்கள் தாண்டும் திறன் கற்றுத்தந்தார் மரியா. தாங்கிய முன்னவர் தங்கிவிட்டார். தாண்டிய பின்னவர் விண்ணேறினார்.


Saturday, August 12, 2023

நொறுங்குண்ட மூவர்!

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

1 அர 19:9, 11-13. உரோ 9:1-5. மத் 14:22-33.

நொறுங்குண்ட மூவர்!

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் மூன்று நொறுங்குண்ட மனிதர்களைச் சந்திக்கின்றோம்:

(அ) 'என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' - எலியா

பாகாலின் நானூறு பொய் இறைவாக்கினர்களைக் கொன்றழித்த எலியா, சீனாய் அல்லது ஒரேபு மலையில் ஆண்டவரைச் சந்திக்கின்றார். தன்னுடைய வெற்றியின் இறுதியில் விரக்தி அடைகின்றார் எலியா. 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' எனக் கண்ணீர் விடுகிறார். ஒரு நாளைக்கு முன் பெரிய ஹீரோவாக இருந்தவர், இப்போது ஜீரோ போல ஆண்டவர் முன் படுத்துக் கிடக்கின்றார்.

(ஆ) 'என் உள்ளத்தில் பெருந்துயரம் உண்டு!' - பவுல்

புறவினத்தாரின் திருத்தூதர் என்று புகழ்பெற்ற பவுல், தன் சொந்த மக்களைத் தன்னால் மீட்க முடியவில்லையே என்றும், நற்செய்தியின் பக்கம் அவர்களைத் திருப்ப முடியவில்லையே என்றும் வருந்துகின்றார். 'என் உள்ளத்தில் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு' என அதைக் குறித்து ஆண்டவர் முன் புலம்புகின்றார். புறவினத்தார்முன் ஹீரோ போல விளங்கியவர், தன் சொந்த இனத்தாராகிய இஸ்ரயேல் மக்கள்முன் ஜீரோ போல ஆகின்றார்.

(இ) 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' - பேதுரு

ஆண்டவர்தாம் கடல்மீது நடந்து வருகிறார் என அறிகிற பேதுரு, அவரை நோக்கித் தானும் கடல்மேல் நடந்துசெல்ல விழைகின்றார். 'வா!' என்ற இயேசுவின் கட்டளையை ஏற்று நடக்கத் தொடங்கியவர், பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என அலறித் துடிக்கின்றார். மீன்பிடித்தொழில் செய்யும் பேதுரு நீச்சல் மறந்து நிற்கிறார். மற்ற திருத்தூதர்கள்முன்னும் இயேசுவின் முன்னும் ஒரு ஹீரோ போலத் தன் பயணத்தைத் தொடங்கியவர், புயலின் முன் ஜீரோவாக மாறுகின்றார்.

நம்பிக்கை மற்றும் நற்செய்தி ஆர்வத்தின் பிதாமாகன்கள் என்றழைக்கப்படுகின்ற இம்மூவரும் நொறுங்குண்ட நிலையில் இருக்கின்றனர். அல்லது தங்களின் வாழ்வில் நொறுங்குநிலையை அனுபவித்துள்ளனர்.

என்ன வியப்பு என்றால், அவர்களின் நொறுங்குநிலையில்தான் கடவுள் செயலாற்றுகின்றார்: எலியாவுக்கு மெல்லிய ஒலியில் தோன்றுகிறார். பவுலுக்குத் தன் மாட்சியை வெளிப்படுத்துகின்றார். பேதுருவின் கரம் பிடித்துத் தூக்குகின்றார்.

ஆக, நம் வலுவின்மையில் இறைவனின் வல்லமை செயலாற்றுகிறது என்ற நற்பாடத்தைத் தருகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

நாம் செய்ய வேண்டியது என்ன?

(அ) என்னுடைய நொறுங்குநிலை மற்றும் வலுவின்மையைப் பட்டியலிடுவது. உடல்சார், உள்ளம்சார், உறவுசார் வலுவின்மைகளைக் கணக்கெடுக்க வேண்டும் முதலில்.

(ஆ) என் நொறுங்குநிலையிலிருந்து நான் வெளிவர வேண்டும் எனில், அதற்கு எதிர்ப்புறமாக என் முகத்தைத் திருப்ப வேண்டும். கார்மேல் மலையிலிருந்து எலியா சீனாய் பக்கம் திரும்ப வேண்டும். இஸ்ரயேலரிடமிருந்து பவுல் இயேசுவின் பக்கம் திரும்ப வேண்டும். புயலின் பக்கம் இருந்து பேதுரு தன் முகத்தை ஆண்டவரின் பக்கம் திருப்ப வேண்டும்.

(இ) கடவுள் தன் வல்லமையால் என் வலுவின்மையைக் களைந்தபின், நான் முந்தைய நிலையை உதறித் தள்ள வேண்டும். எலியா போல அவருடன் நடக்க வேண்டும். பவுல் போல அவர்மேல் ஆர்வம் கொள்ள வேண்டும். பேதுரு போல அவருடன் படகில் ஏற வேண்டும்.

இதையே,

மனித நொறுங்குநிலை இறைவனின் உறுதியையும்,

மனித வலுவின்மை இறைவனின் வல்லமைiயும் தழுவிக்கொள்வதை,

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 85) உருவகமாகப் பதிவு செய்கிறது:

'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.

நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

மண்ணினின்று உண்மை முளைத்தெழும்.

விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

நல்லதையே ஆண்டவர் அருள்வார்.

நல்வினையையே நம் நாடு நல்கும்.'

நொறுங்கிக் கிடக்கும் நம்மை நோக்கி அவர் வருகின்றார். மென்மையான தென்றல் ஒலியில் அவர் வருகின்றார். நம் படகிலிருந்து அவர் தூரமாகத் தெரிகிறார். ஆனால், அருகில் அவர் வரும்போது, 'துணிவோடிருங்கள்! அஞ்சாதீர்கள்!' என்கிறார் அவர்.


Friday, August 11, 2023

முதன்மையான கட்டளை நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி

சனி, 12 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

இச 6:4-13. மத் 17:14-20.

முதன்மையான கட்டளை நம்பிக்கையும்

1. ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக முதன்மையான கட்டளையை வழங்குகிறார். ஆண்டவராகிய கடவுளை முழு இதயத்தோடும் உள்ளத்தோடும் ஆற்றலோடும் அன்புகூர்வதே அக்கட்டளை. அதாவது, நம் எண்ணம், உணர்வு, செயல் என அனைத்திலும் இறைவன் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். சற்று நேரம் அமர்ந்து நாம் யோசித்துப் பார்த்தால், இறைவனைத் தவிர அனைத்தும் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் செயல்களையும் ஆக்கிரமித்து நிற்கின்றன. வாழ்வின் முதன்மைகளை நெறிப்படுத்த ஆண்டவராகிய கடவுள் கற்றுக்கொடுக்கிறார். தொடர்ந்து, ஆண்டவரை மறந்துவிடுவதற்கான வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றில் விழாதபடி எச்சரிக்கிறார். அதாவது, வசதிகளும் தன்னிறைவும் இறைவனை நம் எண்ணத்திலிருந்து தூரமாக்குகின்றன.

2. வலிப்பு நோயால் துயரப்படும் இளவல் ஒருவருக்கு நலம் தருகிற இயேசு, நம்பிக்கையின் வலிமை மற்றும் அவசியம் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். 'உங்களால் முடியாதது எதுவும் இராது' என்று இயேசு சொல்வது நமக்கு வியப்பாக இருக்கிறது. பல நேரங்களில், 'என்னால் இது முடியுமா?' என்னும் நம்பிக்கைக் குறைவே நம் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுவிடுகிறது. 

3. முதல் வாசகத்தில் மூன்று கட்டளை வினைச்சொற்களைக் காண்கிறோம்: 'செவிகொடு,' 'அன்பு செய்,' 'நினைவுகூர்'. நற்செய்தி வாசகத்தில் இயேசு கொடுக்கும் கட்டளை: 'நம்பு.' ஆண்டவராகிய கடவுளை நான் முழுமையாக நம்புகிறேன், அந்த நம்பிக்கையில் அவரை நான் முழுமையாக அன்பு செய்கிறேன், இந்த அன்பே எனக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது என நான் முயற்சி செய்யும்போது அனைத்தும் எனக்கு இயலும். 


Wednesday, August 9, 2023

புனித லாரான்ஸ்

இன்றைய இறைமொழி

வியாழன், 10 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

2 கொரி 9:6-10. யோவா 12:24-26.

புனித லாரான்ஸ்

இலத்தீன் மொழியில் 'லவுரென்சியுஸ்' என்றழைக்கப்படும் இப்புனிதர் (கிபி 225 – 258) உரோமை நகரத்தின் ஏழு திருத்தொண்டர்களில் ஒருவர். உரோமைப் பேரரசர் வலேரியன் கட்டவிழ்த்துவிட்ட கிறிஸ்துவ துன்புறுத்தலின்போது மறைசாட்சியாக உயிர் துறந்தார். தொடக்கத் திருஅவையில் திருத்தொண்டர்கள்தாம் ஆலயத்தின் சொத்துகளின் கண்காணிப்பாளர்களாகவும், தகுந்த பிறரன்புப் பணிகளுக்கு அவற்றைப் பகிர்ந்துகொடுப்பவர்களாகவும் இருந்தனர்.

வரலாற்றில் இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மூன்று நிகழ்வுகளை நாம் அறிவோம்:

(அ) 'இவர்களே திருச்சபையின் சொத்துகள்'. பேரரசர் வலேரியன் திருச்சபையின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய விரும்பி ஒரு கட்டளை இடுகின்றார். திருஅவையின் சொத்துகள் அனைத்தும் பேரரசருக்கே என்ற கட்டளை வந்தவுடன், சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடுத்துவிட்டு, எல்லா ஏழைகளையும் பேரரசரிடம் அழைத்துச் சென்று, 'இவர்களே திருச்சபையின் சொத்துகள்' என்று மொழிந்தார் லாரன்ஸ்.

(ஆ) திருத்தந்தை, ஆயர்கள், மற்றும் அருள்பணியாளர்கள் தலைவெட்டப்பட்டு இறந்தனர். இவரோ, சூடாக்கப்பட்ட இரும்புப் பலகையில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்டார். இவரைப் பற்றி எழுதுகின்ற வரலாற்று ஆசிரியர்கள், 'இவர் துன்புற்றார், இவர் வறுத்து எடுக்கப்பட்டார், இவர் மறைசாட்சியானார்' என எழுதுகின்றனர்.

(இ) அருள்திரு. சாங்த்துலுஸ் என்பவர் புனித லாரன்ஸின் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பியபோது, வேலைக்காரர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லி, புனித லாரன்ஸிடம் வேண்டிக்கொண்டே கையிலிருந்த ஒற்றை ரொட்டியை வைத்து ஏறக்குறைய 10 நாள்களுக்கு அனைவருக்கும் உணவு கொடுத்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்' என்கிறார் இயேசு. முதல் வாசகத்தில், கொடுத்தலின் மேன்மை பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்.

தான் இருக்கும் வரை இல்லாதவர்கள் அனைவருக்கும் தன்னிடம் இருந்ததைக் கொடுத்த புனித இலாரன்ஸ், இறுதியில் தன் உயிரையும் கொடுத்துவிட்டுக் கோதுமை மணியாக மடிகின்றார்.

ஏன் மனிதர்கள் கடவுளுக்காகவும், மறைக்காகவும் சாட்சிகளாக இறக்கின்றனர்? விவிலியத்தில் நாம் காணும் திருமுழுக்கு யோவான் தொடங்கி, நம் மண்ணில் உயிர்நீத்த புனித தோமா, புனித அருளானந்தர், புனித தேவசகாயம் பிள்ளை ஆகியோர் வரை நிறையப் பேர் மறைக்காக உயிர்துறந்துள்ளனர். இன்றும் பலர் உயிர்துறக்கின்றனர் – அருள்தந்தை ஸ்டேன் ஸ்வாமி போல.

'மறைசாட்சி' என்ற தமிழ்ச் சொல்லின் ஆங்கிலப் பதம், 'மார்ட்டர்.' இது கிரேக்கச் சொல்லான 'மார்ட்டிஸ்' என்பதன் நீட்சி. இது ஒரு சட்டரீதியான சொல். அதாவது, நீதிமன்றத்தில் ஒருவர் சார்பாக சான்று சொல்பவர், அல்லது தான் கண்டதை அப்படியே கூறுபவர் 'மார்ட்டிஸ்' என அழைக்கப்பட்டார். திருத்தூதர் பணிகள் 1:22இலும் நாம் இப்படிப்பட்ட பயன்பாட்டையே காண்கின்றோம். கிறிஸ்தவத்தில், இயேசுவுக்காகவும் இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் சான்று பகர்ந்து உயிர் துறந்தவர்களை நாம் மறைசாட்சியர் என அழைக்கின்றோம். இரம்பத்தால் அறுக்கப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, நெருப்பிலிடப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு என பல நிலைகளில் துன்பங்கள் பட்டு இவர்கள் இறக்கின்றனர். 1 மற்றும் 2 மக்கபேயர் நூல்களிலும் நாம் மறைசாட்சியம் பற்றி வாசிக்கின்றோம்.

தெர்த்தூலியன் என்ற திருஅவை தந்தை, 'வேதசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து' என்று மறைசாட்சியத்தை முதன்முதலாக இறையியலாக்கம் செய்கின்றார். அதாவது, மறைசாட்சியம் மற்றவர்களின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்ததே தவிர, மற்றவர்களை ஒருபோதும் அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்யவில்லை.

மறைசாட்சியர்கள் துணிவாகத் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்தபோது, மறையை மறுதலித்துப் பின்வாங்கிய நம்பிக்கையாளர்களும், பயத்தினால் நம்பிக்கையைத் துறந்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். இவர்களை மீண்டும் கிறிஸ்தவத்திற்குள் ஏற்பதா வேண்டாமா என்ற விவாதத்தில் திருஅவையில் பிளவும் ஏற்பட்டது.

ஏன் சாதாரண மனிதர்கள் கடவுளுக்காக அல்லது தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறக்கின்றனர்?

(அ) தங்கள் உயிரைவிடப் பெரியதொன்றை அவர்கள் நம்பிக்கைக் கண்களால் பார்க்கின்றனர்.

(ஆ) தங்கள் நம்பிக்கை மற்றும் மதிப்பீடுகளோடு அவர்கள் சமரசம் செய்துகொள்ள மறுக்கின்றனர்.

(இ) மற்றவர்களின் அச்சுறுத்தலையும் மிஞ்சி நிற்கிறது அவர்களுடைய துணிச்சல்.

நாம் இன்றும் சின்ன சின்ன நிலைகளில் மறைசாட்சியர்களாக இருக்கின்றோம். தூக்கம் வந்தாலும் பொருட்படுத்தாமல் விவிலியம் வாசித்துவிட்டு, அல்லது செபமாலை செபித்துவிட்டு தூங்கச் செல்லும்போதும், நம்மிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொடுக்கும்போதும், நோன்பு இருக்கும்போதும், பக்தி முயற்சிகளில் பங்கேற்கும்போதும், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யத் துடிக்கும் நம் எண்ணத்திற்குக் கடிவாளம் இடும்போதும், மற்றவர்களை மனதார மன்னிக்கும்போதும், யாரையும் தீர்ப்பிடாமல் இருக்கும்போதும், நம் வேலைகளைச் செய்யும்போதும், அன்றாடம் வரும் உடல், உள்ள துன்பங்களை ஏற்கும்போதும், நோய், முதுமை, தனிமை போன்ற நிலைகளில் உணரும் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் மறைசாட்சியர்களாகவே வாழ்கின்றோம். மேலும், துன்பம் ஏற்கும் ஒவ்வொரு நொடியும் நாம் மறைசாட்சியாக இருக்கிறோம். நாம் ஏற்கும் துன்பமே நம் வாழ்க்கையில் நம்மை உயர்த்துகிறது.

அன்றாடம் நாம் கோதுமை மணி போல இறந்து பிறக்கின்றோம்.

வலியை விரும்பி ஏற்றல் அனைத்தும் மறைச்சாட்சியமே.


Tuesday, August 8, 2023

வெட்டுக்கிளிகள் போல உணர்ந்தோம்!

இன்றைய இறைமொழி

புதன், 9 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

எண் 13:1-2, 25-33, 14:1, 26-30, 34-35. மத் 15:21-28.

வெட்டுக்கிளிகள் போல உணர்ந்தோம்!

1. இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையிலிருந்து பயணம் செய்கிறார்கள். வாக்களிக்கப்பட்ட நாடு நெருங்கி வருகிறது. அந்நாட்டை உளவு பார்க்குமாறு ஆட்களை அனுப்பக் கட்டளையிடுகிறார் ஆண்டவர். மோசேயும் ஆட்களை அனுப்புகிறார்கள். குலத்திற்கு ஒருவர் என பன்னிருவர் அனுப்பப்படுகிறார்கள். சென்றவர்களில் பத்துபேர் எதிர்மறையான அறிக்கையையும், இரண்டு பேர் – காலேப் மற்றும் யோசுவா – நேர்முகமான அறிக்கையையும் தருகிறார்கள். பெரும்பான்மையினரின் கருத்தை மக்கள் ஏற்று, அழத் தொடங்குகிறார்கள். ஆண்டவராகிய கடவுளின் உடனிருப்பையும், அவர் இதுவரை ஆற்றிய வல்ல செயல்களையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். ஆண்டவர் அவர்களைத் தண்டிக்கிறார். நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் சுற்றித்திரியுமாறு – ஒரு தலைமுறை மறையும் வரை – விடுகிறார். 

2. நற்செய்தி வாசகத்தில், கானானியப் பெண் ஒருவர் பேய் பிடித்திருக்கும் தன் மகளைக் குணமாக்கும்படி இயேசுவிடம் வருகிறார். அப்பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டுகிறார் இயேசு. பிள்ளைகளுக்குரிய உணவு நாய்க்குட்டிகளுக்கு அல்ல என்றாலும், நாய்க்குட்டிகளும் ஏதோ வகையில் பிள்ளைகளுக்குரிய உணவை உண்கின்றன என்கிறார் அப்பெண்.

3. உளவு பார்க்கச் சென்று வந்தவர்களின் அறிக்கை கேட்டு இஸ்ரயேல் மக்கள் அழக் காரணம் என்ன? (அ) அவர்கள் பெரும்பான்மையினரின் கருத்தே சரி என நினைத்தார்கள். நாமும் பல நேரங்களில் பெரும்பான்மையினரின் சொல் மற்றும் தெரிவின் பின்னால்தான் செல்கிறோம். பெரும்பான்மை முடிவே சரி எனவும் நினைக்கிறோம். (ஆ) தங்கள் எதிர்காலப் பயத்தால் கடந்த காலத்தில் இறைவன் ஆற்றிய அரும்பெரும் செயல்களை மறந்துவிட்டார்கள். (இ) 'எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போல இருந்தோம். அவர்கள் பார்வையிலும் அவ்வாறே இருந்தோம்' என்கிறார்கள். அதாவது, எதிரிகளோடு தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிற மக்கள் தங்களை மிகக் குறைவாக மதிப்படுகிறார்கள். குறைவான தன்மதிப்பு மிகவும் ஆபத்தானது. நம் செயல்பாட்டை அது எளிதில் தடுத்துவிடும். தங்களோடு இறைவன் இருப்பதால் தாங்கள் பெரியவர்கள் என்றாவது அவர்கள் நினைத்திருக்கலாம். (ஈ) வாக்களிக்கப்பட்ட நாடு கைக்கருகில் இருந்ததை அவர்கள் அசட்டை செய்கிறார்கள். பல நேரங்களில் வெற்றி என்பது இன்னும் ஒரு படிதான் என இருக்க, நாம் பின்வாங்கி விடுகிறோம் - இஸ்ரயேல் மக்கள் போல! இவர்களுக்கு எதிர்மாறாக, இயேசுவிடம் வருகிற கானானியப் பெண் இயேசுவின் உடனிருப்பில் தன்னை ஒரு குழந்தைபோல உணர்கிறார். தனக்கு ரொட்டி கிடைக்கும் என்பது அப்பெண்ணின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.


Monday, August 7, 2023

மனிதரைத் தீட்டுப்படுத்தும்!

இன்றைய இறைமொழி

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

எண் 12:1-13. மத் 15:1-2, 10-14.

மனிதரைத் தீட்டுப்படுத்தும்!

1. இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'உம் சீடர்கள் மூதாதையரின் மரபை மீறுவது ஏன்?' என்னும் கேள்வியை பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் முன்வைத்தபோது, 'தூய்மை-தீட்டு' என்பது பொருள்கள் சார்ந்தது அல்ல, மாறாக, மனப்பாங்கு அல்லது நோக்கு சார்ந்தது என எடுத்துரைக்கிற இயேசு, மனிதருக்கு உள்ளே செல்வது அல்ல, மாறாக, அவர்களிடமிருந்து வெளியே வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும் என மொழிகிறார். வாயிலிருந்து வரும் சொற்கள் உள்ளத்தில் எண்ணங்களாக ஊற்றெடுக்கின்றன. ஆக, தூய்மை-தீட்டு என்பது உடல் சார்ந்தது அல்ல, மாறாக, உள்ளம் சார்ந்தது.

2. முதல் வாசகத்தில், மிரியாமும் ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசுகிறார்கள். மோசே மிதியான் நாட்டுப் பெண்ணை (எத்தியோப்பியப் பெண்) மணம் முடிக்கிறார். யூத இனம் சாராத இந்த வேற்றினத்துப் பெண்ணை முன்னிட்டு இடறல்படுகிறார்கள். அதாவது, ஏதோ ஒரு வகையில் மோசே தூய்மையற்றவர் எனச் சுட்டிக்காட்டி, அவரின் தூய்மையைவிட தங்கள் தூய்மை உயர்ந்தது எனச் சொல்கிறார்கள். மேலும், 'எங்கள் வழியாகவும் கடவுள் பேசவில்லையா?' எனக் கேட்டு, கடவுளின் வெளிப்பாடு தங்களுக்கும் நிகழ்ந்தது என்றும், இந்த வெளிப்பாடு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்றும் கூறுகிறார்கள். இவர்களின் முணுமுணுப்பைக் கேட்கின்ற ஆண்டவராகிய கடவுள் மோசே-மிரியாம்-ஆரோன் என்னும் மூவரையும் சந்திப்புக் கூடாரத்திற்கு அழைத்து, மிரியாம் மற்றும் ஆரோனைக் கடிந்துகொள்கிறார். மோசே பெற்றிருப்பது சிறப்பான வெளிப்பாடு என உரைக்கிறார். நிகழ்வின் இறுதியில் மிரியாம் தண்டிக்கப்படுகிறார். மோசே அவருக்காகப் பரிந்து பேசுகிறார்.

3. மிரியாம்-ஆரோன் உள்ளத்தில் பொறாமை, கோபம், எரிச்சல், ஆணவம் போன்ற எதிர்மறை உணர்வுகள் குடியிருக்கின்றன – மிரியாம் இறைவாக்கினராகவும், ஆரோன் தலைமைக்குருவாகவும் இருந்தாலும்! இவற்றின் காரணமாகவே அவர்கள் மோசேக்கு எதிராகப் பேசுகிறார்கள். மேலும், தங்களை உயர்ந்தவர்கள் அல்லது தூய்மையானவர்கள் என எண்ணுகிறார்கள். உள்ளத்து உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது ஞானநூல்களின் பாடமாகவும் இருக்கிறது: 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (நீமொ 4:23). நம் உள்ளத்தில் ஓடும் எண்ண ஓட்டங்கள், மற்றும் நாம் பேசும் சொற்களைப் பற்றிய தன்-விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா? நாம் மேற்கொள்ளும் அமைதியும் பொறுமையும் இத்தகைய தன்-விழிப்புணர்வுக்கு நம்மை இட்டுச் செல்லும்.


Sunday, August 6, 2023

மிகப்பெரும் பளு

இன்றைய இறைமொழி

திங்கள், 7 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

எண் 11:4-15. மத் 14:22-36.

மிகப்பெரும் பளு

1. இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைவதற்கு முன்னர் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் சுற்றித்திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறார் ஆண்டவராகிய கடவுள். அந்த ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகிறது இன்றைய முதல் வாசகம். தினமும் மன்னாவை மட்டுமே உண்டு வந்த இஸ்ரயேல் மக்களுக்கு அது சலித்துப்போகிறது. தாங்கள் எகிப்தில் உண்ட இறைச்சி உணவு நினைவுக்கு வருகிறது. மன்னாவை மட்டுமே உண்டதால் தங்கள் வலிமையும் குன்றிப்போனதாக உணர்கிறார்கள். தாங்கள் பெற்ற விடுதலையைவிட, அடிமைத்தன வீட்டில் தாங்கள் உண்ட இறைச்சியையே அவர்கள் பெரிதாகக் கருதுகிறார்கள். விடுதலை அவர்களுக்கு இலவசமாகக் கிடைத்ததால் அதன் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை. மக்களின் முணுமுணுத்தல் அழுகையாக மாறி மோசேயின் காதுகளில் விழுகிறது. மோசே கடவுளிடம் முறையிடுகிறார். சுமக்க இயலாத பளுவைக் கடவுள் தன் சுமத்தியதாக அவர் புலம்புகிறார். 'இறைச்சிக்கு நான் எங்கே போவேன்?' என்னும் மோசேயின் கேள்வியில் அவருடைய கையறுநிலையும் கோபமும் வெளிப்படுகிறது. தன் உயிரை எடுத்துவிடுமாறு கடவுளிடம் கேட்கிறார். இறைவாக்கினர்கள் தங்கள் பணி ஏற்றுக்கொள்ளப்படாதபோது, தாங்கள் கைவிடப்பட்டதாக உணரும்போது இப்படிப் புலம்புவதை எலியா மற்றும் யோனா நிகழ்வுகளிலும் வாசிக்கிறோம்.

2. பாலைநிலத்தில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த இயேசு உடனடியாகத் தம் சீடர்களைப் படகேறி அக்கரைக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டு, இறைவேண்டல் செய்வதற்குத் தனியே மலைமேல் ஏறுகிறார். இரவின் நான்காம் காவல் வேளையில் கடல்மேல் நடந்து வருகிறார். சீடர்கள் அவரைக் கண்டு அஞ்சுகிறார்கள். பேதுரு தானும் நடக்க விரும்புகிறார். ஆனால், பெருங்காற்று வீசியதைக் கண்டவுடன், 'என்னைக் காப்பாற்றும்' எனக் கத்துகிறார். இயேசுவும் அவருடைய கையைப் பிடித்துத் தூக்குகிறார். எதிர்மறையான நிகழ்வுகளை இயேசு கையாளும் போக்கு சற்றே வித்தியாசமாக இருக்கிறது. பரிவு என்னும் ஒற்றை உணர்வால் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடர்களையும் கையாளுகிறார்.

3. 'இப்போது இருப்பதை விட முந்தைய நாள்கள் நன்றாக இருந்ததே' என்று நாமும் புலம்புகிறோமா? இப்படி நாம் புலம்பும்போதெல்லாம் நாம் இறந்த காலத்தில் வாழ முயற்சி செய்கிறோம். இது நமக்கு மேலும் சோர்வை உண்டாக்குகிறது. வாழ்வின் சுமைகள் சுமக்க இயலாமல் இருக்கும்போது நம் பதிலிறுப்பு என்ன? மக்கள் போல முணுமுணுக்கிறோமா? அல்லது மோசே போலக் கடவுளிடம் முறையிடுகிறோமா? அல்லது இயேசு போல அவற்றை நாம் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிறோமா? பரிவு என்னும் ஒற்றைச் சொல்லுடன் நாம் எதிர்மறை நிகழ்வுகளையும் நம் உறவுகளையும் கையாளும்போது எதுவும் நமக்குப் பளுவாகத் தெரிவதில்லை.


Saturday, August 5, 2023

ஆண்டவரின் தோற்றமாற்றம்

6 ஆகஸ்ட் 2023 ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு

ஆண்டவரின் தோற்றமாற்றம்

தானி 7:9-10, 13-14. 2 பேது 1:16-19. மத் 17:1-9.

இன்று ஆண்டவரின் தோற்றமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தனக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லாரையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து அன்பு செய்தார். அந்த வகையில் இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தனர்.

மலையில் ஏறிச்சென்றவர் உருமாறினார் என மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல் அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது என்கிறார் மத்தேயு. முகம் மட்டுமல்ல. ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் மோசே மற்றும் எலியாவையும் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல், இயேசுவோடு உரையாடிக்கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்: 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? உமக்கு விருப்பமா?'

பேதுரு தன் கண் முன்னால் காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய விரும்புகிறார்.

அதாவது ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். ஃபோட்டோ எடுக்கும்போது என்ன நடக்கிறது? நாம் இருக்கும் இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகிறோம். ஆகையால்தான் ஒரு ஃபோட்டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை. ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்துவிடுகிறது.

பேதுரு இயேசுவையும், மோசேயையும், எலியாவையும் மூன்று கூடாரங்களுக்குள் வைத்து அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றார். பேதுருவின் கேள்விக்கு இயேசுவோ, மோசேயோ, எலியாவோ பதில் சொல்லவில்லை. ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்' பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது. அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள். புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் - விளைவு அச்சம்.

முகங்குப்புற விழுவதை சரணாகதியின் அடையாளம் என்றும், அல்லது பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி விழுந்துகிடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்!' என்கிறார். அத்தோடு, 'இங்க நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை யாரிடமும் சொல்லாதீர்கள்!' என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு தொடர்புடையது.

தோற்றமாற்ற நிகழ்வை இயேசு எப்படிப் பார்த்தார்? சீடர்கள் எப்படிப் பார்த்தனர்? 

முதல் கோணம்: இயேசு இந்த நிகழ்வை எப்படிப் பார்த்தார்?

இந்த நிகழ்வை இயேசுவே முன்னெடுக்கின்றார். இடத்தையும் நேரத்தையும் உடன் வர வேண்டிய நபர்களையும் இயேசுவே தேர்ந்தெடுக்கின்றார். அந்த நிகழ்வு பற்றி வெளி நபர்கள் தெரிந்துவிடக்கூடாது என்பது பற்றி எச்சரிக்கையாக இருக்கின்றார். நிகழ்வின் இறுதியிலும், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று கட்டளையிடுகின்றார்.

இயேசுவைப் பொருத்தவரையில் அவர் தன் வாழ்வில் ஏற வேண்டிய முதல் மலை. இந்த மலையில் அவர் மாட்சி பெறுகிறார். அவர் ஏற வேண்டிய இன்னொரு மலையில் அவர் இகழ்ச்சி அடைவார். இங்கே சீடர்கள் அருகே இருக்கின்றனர். அங்கே அவருடன் யாரும் இருப்பதில்லை. இங்கே மோசேயும் எலியாவும் தோன்றுகிறார்கள். அங்கே இரு கள்வர்கள் அருகில் இருப்பார்கள். இங்கே, 'இதோ என் அன்பார்ந்த மைந்தர்' என்று தந்தை குரல் கொடுக்கின்றார். அங்கே, 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?' என இயேசு அபயக் குரல் எழுப்புகின்றார். இங்கே அவருடைய ஆடை வெண்மையாக இருக்கிறது. அங்கே ஆடையின்றி நிர்வாணமாகத் தொங்குவார். இந்த மலையும் அந்த மலையும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க இயலாதவை என்பதை இயேசு அறிந்திருந்தார். இரண்டு மலையும் இயேசுவுக்கு ஒன்றாகவே தெரிகிறது. இந்த மலையின் மாட்சி கண்டு அவர் மகிழவில்லை. அந்த மலையின் இகழ்ச்சி கண்டு துவண்டுபோகவில்லை.

உருமாற்றம் என்பது இத்தகைய உளமாற்றம்தான். நமக்கு வெளியே நடக்கும் எதைக் கண்டும் அலட்டிக்கொள்ளாமல் இருக்காது. தோற்றமாற்ற நிகழ்வில் அனைத்தும் வெளிப்புறமே நிகழ்கின்றன. ஆனால், வெளியே நடக்கின்ற நிகழ்வுகளுக்கு அவர் உள்ளார்ந்த பதிலிறுப்பு தருகின்றார்.

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று இயேசு சொல்வதேன்? இந்த அனுபவம் மற்றவர்களுக்குச் சொன்னால் புரியாது. நம் வாழ்வில் நடக்கும் துன்பகரமான நிகழ்வுகளை நாம் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்துவிடுவது நல்லது. ஏனெனில், நாம் சொல்லியும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம் வலி இரட்டிப்பாகிவிடும்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் தோற்றமாற்றம் என்பது தான் யார் என்பதைத் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு. கல்வாரியின் அவலம் காண்பவர்கள் இயேசுவுக்கு மாட்சியும் இருந்தது என்று எண்ணிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

இரண்டாம் கோணம்: இந்த நிகழ்வை சீடர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

'உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றும்' என்று கூடாரங்கள் அடித்து, அந்தப் பொழுதை அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றனர். இன்னொரு பக்கம் அச்சம் அவர்களை மேற்கொள்கிறது.

'இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற கட்டளை தங்கள் காதுகளை வந்தடைந்தபோது, இயேசுவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. 'செவிசாய்த்தல்' அல்லது 'கேட்டல்' என்பது யூதர்களைப் பொருத்தவரையில் முதல் ஏற்பாட்டு, 'இஸ்ரயேலே! கேள்!' என்னும் சொல்லாடல்களைத்தான் அவர்களுக்கு நினைவூட்டியிருக்கும். இங்கே இயேசுவைக் கடவுளாக முதன்முதலாக சீடர்கள் அறியத் தொடங்குகின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டியிருக்க வேண்டும். ஆனால், புரட்டவில்லை. இதற்குப் பின்னரும் இயேசு அவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பேதுரு மிக அழகான உருவகம் ஒன்றைப் பயன்படுத்துகின்றார்: 'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.' அதாவது, நான் உள்ளொளி பெறும் வரை எனக்கு வெளியில் இருப்பதெல்லாம் வெறும் விளக்கின் வெளிச்சமே. உள்ளொளி பெற்றவுடன் என் வாழ்வே ஒளிரத் தொடங்குகிறது. அங்கே இருள் என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.

சீடர்கள் அச்சம் என்னும் இருளால் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னரே இந்நிகழ்வைப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவின் உருமாற்றம் சீடர்களின் உள்ளத்தை பின்னால்தான் மாற்றுகிறது.

இரண்டு பாடங்கள்: ஒன்று, வாழ்வின் எதார்த்தங்கள் நம்மைப் பாதிக்காதவண்ணம் வாழக் கற்றுக்கொள்வது. இரண்டு, உள்ளொளிப் பயணத்தை தொடங்குவது, தொடர்வது.

முதல் வாசகத்தில், தொன்மை வாய்ந்தர் அரியணையில் வீற்றிருப்பதைக் காட்சியில் காண்கிறார் தானியேல். திருவெளிப்பாட்டு நடையின் நோக்கம் இதுவே. அதாவது, துன்பம் எல்லாம் மறைந்து மாட்சி பிறக்கும். துன்பம் மாட்சிக்கு இட்டுச் செல்கிறது.

'உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவரின்' (காண். திபா 97) உருமாற்றம் நம் உள்ளத்தின் மாற்றத்தைத் தூண்டி எழுப்பட்டும். மாட்சியும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்கட்டும்!


Friday, August 4, 2023

புதியது ஆக்குகிறேன்

இன்றைய இறைமொழி

சனி, 5 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 17-ஆம் வாரம்

திவெ 21:1-5அ. லூக் 11:27-28.

புனித பனிமய அன்னை

புதியது ஆக்குகிறேன்

உரோமை நகரில் உள்ள புனித கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு விழாவை (விருப்ப நினைவு) இன்று கொண்டாடுகிறோம். பனிமய அன்னை திருநாள் என்றும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. எபேசு பொதுச்சங்கம் 431-இல் அன்னை கன்னி மரியா இறைவனின் தாய் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இறைவனின் அன்னையாம் கன்னி மரியாவுக்கு உரோமையில் ஓர் ஆலயத்தை எழுப்புகிறார் திருத்தந்தை 3ஆம் சிக்ஸ்துஸ். 

மரபுக் கதையாடல் ஒன்றின்படி, ஏறக்குறைய 352-இல் திருத்தந்தை லிபேரியுஸ் அவர்கள் ஆட்சிக்காலத்தில் உரோமை மேட்டுக்குடி தம்பதி யோவான் மற்றும் மனைவி குழந்தைப்பேறு வேண்டி அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்தனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் கன்னி மரியாவுக்கு ஆலயம் கட்டுவதாகப் பொருத்தனை செய்தனர். வேண்டுதல் நிறைவேறிவிடுகிறது. எங்கே ஆலயம் கட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, உரோமையின் வெயில் காலத்தில் ஓரிடத்தில் பனி பெய்யச் செய்து அடையாளம் காட்டுகிறார் மரியா. அந்த இடத்தில் ஆலயம் கட்டப்படுகிறது. 

இன்றைய முதல் வாசகத்தில், யோவான் புதிய எருசலேம் இறங்கி வருவதைக் காட்சியில் காண்கிறார். மானிடர் நடுவில் இறங்கி வருகிற விண்ணக எருசலேம் மாந்தர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவைப் பெற்றெடுத்த தாயின் பேறுபெற்ற நிலையை அறிக்கையிடுகிறார் ஒரு பெண். இறைவார்த்தை வழியாக நிகழும் ஆன்மிகப் பெற்றெடுத்தலே மேன்மையானது எனச் சொல்கிறார் இயேசு.

இத்திருவிழாவும் இன்றைய வாசகங்களும் நமக்குச் சொல்வது என்ன?

(அ) ஆலயம் இறைவனின் அடையாளமாக நம் நடுவில் திகழ்கிறது. இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை அது குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் ஆலயம் என்பது ஆள்சார்ந்த பிரசன்னத்தைக் குறிக்கிறது. ஆகையால்தான், நாம் எல்லாரும் ஆலயம் என்கிறார் பவுல். நாம் இன்று இறைவனின் பிரசன்னத்தின் அடையாளமாகத் திகழ்கிறோமா?

(ஆ) அன்னை கன்னி மரியா கடவுளின் அன்னையாகத் திகழ்கிறார். கடவுளின் அன்னை என்னும் நிலை, உடல் அளவில் நிகழ்ந்ததை விட, ஆன்மிக அளவில் - இறைவார்த்தைக்குச் செவிமடுத்ததால் - நிகழ்கிறது. இறைவார்த்தையை நாம் எப்படி ஏற்று வாழ்கிறோம்?

(இ) இறைவனின் உடனிருப்பு நம் வாழ்வு அனைத்தையும் புதியது ஆக்குகிறது என்னும் எதிர்நோக்கு நம் வாழ்வை முன்னால் உந்தித் தள்ளுகிறது.


Thursday, August 3, 2023

விந்தையான வியான்னி

இன்றைய இறைமொழி

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
எசே 3:16-21. மத் 9:35-10:1.
புனித ஜான் மரிய வியான்னி, திருவிழா

விந்தையான வியான்னி

இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஜான் மரிய வியான்னி

காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை.

காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.

அகுஸ்தினார், அக்வினாஸ் போல இறையியல் கருத்துருக்களை வழங்கவில்லை.

இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை.

சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை.

செபஸ்தியார், அருளானந்தர் போல மறைக்காக இரத்தம் சிந்தவில்லை.

இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான், இன்று ஆங்கில அகராதியில், 'Vianney Syndrome' என்ற சொல்லாட்சியே உருவாகிவிட்டது. அதாவது, சாதாரண மனிதர் போல இருந்தாலும், அறிவுக்கூர்மை குறைவாக உள்ளவர்களின் அறிவுநிலையை அகராதி இப்படி அழைக்கிறது.

தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார்.

'இவருடன் அருள்பணிநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். இவர் ஒருவர் மட்டும் புனிதராக மாறினார்' என்றும் இவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு.

'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.

நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (Dubuque) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார். 

தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி.

மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.

இவரிடம் நான் கற்கும் சில பாடங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

1. காதுகளை மூடிக்கொள்தல்

வண்டு கதை ஒன்று சொல்வார்கள். இயற்பியலில் காற்றியக்கவியல் (aerodynamics) கோட்பாடு ஒன்று உண்டு. இறக்கைகள் உந்தித் தள்ளும் காற்றின் நிறைக்குக் குறைவான நிறை கொண்ட எந்த உயிரினமும் பறக்க முடியாது. ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு வண்டு. ஏன் வண்டுகளால் பறக்க முடிகின்றன? அவற்றுக்கு இயற்பியல் தெரியாது அவ்வளவுதான். தன்னைப் பற்றிய எல்லா எதிர்மறையான செய்திகளுக்கும் காதுகளை மூடிக்கொண்டார். தன்னை அழைத்த இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவருக்குத் தன் இதயத்தைத் திறந்தார் வியான்னி. தன் செயல்களையும் தாண்டிய தன்மதிப்பை உணர்ந்தார்.

2. அருள்பணியாளர் அடையாளம் போதும்

'நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் - செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் - அதுவே போதும். தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.

3. சிறுநுகர் எண்ணம், சிறுநுகர் வாழ்வு (minimalist thinking, minimalist living)

இவருடைய தாழ்ச்சி இவருடைய சிறுநுகர் எண்ணத்தில் வெளிப்பட்டது. இவருடைய எளிமை அவருடைய சிறுநுகர் வாழ்வில் வெளிப்பட்டது. நான் எளிமையை இப்படித்தான் பார்க்கிறேன். அதாவது, என் நுகர்தலைக் குறைத்தலே எளிமை. நுகர்தலை அதிகரிக்க, அதிகரிக்க,பொருள்களை அதிகரிக்க, அதிகரிக்க, நான் எனக்கும் கடவுளுக்கும், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறேன். என்னைப் பற்றியே நிறைய எண்ணிப் பார்க்கும்போது இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறேன். குறைவான எண்ணங்கள், குறைவான எதிர்பார்ப்புகள், குறைவான பொருள்கள், நிறைவான வாழ்வு எனத் தன்னையே கட்டமைத்துக் கொண்டார் வியான்னி. 

4. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு (clear pastoral plan)

வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஆனால், இன்று நம் பங்குகளில் நிறைய மேய்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன: திருப்பலி நிறைவேற்றுதல், மறைக்கல்வி எடுத்தல், அருள்சாதனங்களை வழங்குதல், இல்லங்கள் சந்திப்பு, இயக்கங்கள், பக்தசபைகள், குழுக்கள், சந்திப்புக்கள், திருப்பயணங்கள், சிறப்பு தியானங்கள், பக்தி முயற்சிகள், பிறரன்புச் செயல்கள். இன்று நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால், தெளிவுகள் இல்லை. ஒவ்வோர் அருள்பணியாளரும் இலக்குத் தெளிவுடன் இருக்க வேண்டும் என நம்மை அழைக்கின்றார்.

5. நிலைப்புத்தன்மை (stability)

தன் அருள்பணி வாழ்வு முழுவதுமே வியான்னி ஒரே ஒரு பணித்தளத்தில் - ஆர்ஸ் நகரில் - மட்டுமே பணியாற்றினார். தன் ஆர்ஸ் நகரம் தன்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதன் தட்பவெட்பநிலை தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தன் சொந்த ஊரைவிட தான் தூரமாக இருந்தாலும், தன் மக்களுக்காக இறுதிவரை அதே இடத்தில் நிலைப்புத்தன்மை கொள்கிறார் வியான்னி.

6. மாற்றம் கண்முன்னே நடக்கும் (change happens in front of our eyes)

மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.

7. இலக்குத் தெளிவு

தான் ஆர்ஸ் நகரத்தில் காண விரும்பிய மாற்றத்தைக் கனவு கண்டார். அந்த ஒற்றைக் கனவை தன் எல்லாமாக மாற்றினார். தன் இறைவேண்டல், திருப்பலி, வழிபாடு, வீடு சந்திப்பு, நோயுற்றோர் சந்திப்பு, பயணம் என அனைத்திலும் தன் மக்களை மட்டுமே நினைவில் கொண்டிருந்தார்.

8. வலுவற்ற அவர் வலுவற்றவர்களின் உணர்வை அறிந்தார்

தானே இயலாமையில் இருந்ததால் மற்றவர்களின் இயலாமையை அறிந்தார். மற்றவர்கள் வார்த்தைகளைக் கேட்டு பொருள் உணர்ந்த வேளையில், இவரோ மற்றவர்களின் ஆன்மாக்களின் மௌனம் கேட்டுப் பொருள் உணர்ந்தார். ஆன்மாக்களை ஊடுருவிப் பார்த்தன அவருடைய கண்கள். 'எனக்காக ஒருவர் இருக்கிறார்' என்று தன் மக்கள் உரிமை கொண்டாடும் அளவுக்கு அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.

9. உடலில் தைத்த முள்

அவருடைய உடல்நலக் குறைவு உடலில் தைத்த முள்போல அவரை வாட்டியது. உணவுக்கும் ஊட்டத்துக்கும் உடல்நலத்துக்கும் உரிய நேரத்தை அவர் கொடுக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், அருகில் செல்லும் பயணத்திற்கும் அடுத்தவரின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், 'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவனின் உடனிருப்பை நிறையவே உணர்ந்தார்.

திருவிழாத் திருப்பலிக்குரிய இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேல் இறைவாக்கினரை இஸ்ரயேல் வீட்டுக்குக் காவலனாக நியமிக்கிறார். அவர்களுடைய மனச்சான்று போலச் செயல்பட்டு, நல்வழியில் அழைத்துச் செல்வது இறைவாக்கினரின் பணியாக இருந்தது. வியான்னி ஆர்ஸ் நகரத்தின் மனச்சான்று போலச் செயல்பட்டு அந்நகர மக்களை எச்சரித்து வழிநடத்தினார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவுள்ளம் வெளிப்படுகிறது. மேலும், அறுவடைக்குத் தேவையான வேலையாள்களின் பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. அறுவடை மிகுந்திருந்த தன் காலத்தில் நம்பிக்கைக்குரிய வேலையாளாகப் பணியாற்றினார் வியான்னி.

இம்மாபெரும் மனிதரை மறைமாவட்ட அருள்பணியாளர்களிய நாங்கள் பாதுகாவலராகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம். 

அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு சவால்.

இவருடைய பரிந்து பேசுதல் எங்களுக்கு நம்பிக்கை தருவதாக!

இவருடைய வாழ்வு எங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக!

Wednesday, August 2, 2023

புதியவற்றையும் பழையவற்றையும்

இன்றைய இறைமொழி

வியாழன், 3 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 17-ஆம் வாரம்

விப 40:16-21, 34-38. மத் 13:47-53.

புதியவற்றையும் பழையவற்றையும்

1. விடுதலைப் பயண நூலின் இறுதிப்பகுதியை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் கட்டளைக்கிணங்க மோசே சந்திப்புக் கூடாரத்தை உருவாக்குகிறார். ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தின்மேல் இறங்கி வந்து அங்கே குடிகொள்கிறது. 'ஆண்டவர் உங்களைச் சந்திக்க வருவார்' என்னும் யோசேப்பின் வாக்குறுதியோடு தொடக்கநூல் நிறைவுபெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சந்திக்க வந்த ஆண்டவர் அவர்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவத்து, அவர்களோடு தங்குகிறார். கடவுள் மானிடரின் அருகில் நெருங்கி வருகிறார். சந்திப்புக் கூடாரத்தில் இறங்கி வந்த கடவுளின் மாட்சியின் பின்புலத்தில்தான் யோவான் நற்செய்தியாளர் தன் முகவுரையில், 'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே கூடாரம் அடித்தார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்' (காண். யோவா 1:14) என எழுதுகிறார். 

2. கடலில் வீசப்படும் வலையை விண்ணரசுக்கு எடுத்துக்காட்டாக மொழிகிறார் இயேசு. தொடர்ந்து, தாம் பேசுகிற உவமைகள் அனைத்தையும் புரிந்துகொள்கிற எவரும் தம் கருவூலத்திலிருந்து பழையவற்றையும் புதியவற்றையும் வெளிக்கொணர்கிற வீட்டு உரிமையாளர் போன்றவர் என எழுதுகிறார். மேலும், விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டியது எனவும் இயேசு இங்கே குறிப்பிடுகிறார். 

3. ஆண்டவராகிய கடவுள் சந்திப்புக் கூடாரத்தில் இறங்கி வருகிறார் என்பது புதியது. ஆனால், அதே வேளையில் அவர் என்றும் மக்களோடு இருக்கிறார் என்பது பழையது. புதியவை மொழியப்பட்டாலும் பழையவை மதிப்பு கொண்டுள்ளன. புதியனவற்றையும் பழையனவற்றையும் பகுத்தாய்ந்து செயல்படுகிற வீட்டு உரிமையாளர்போல நாம் இருக்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் புதிய நாளுக்குள் நுழைந்தாலும் புதிய நபராகப் பிறந்தாலும், பழைய நாளின் பழைய நபரின் நிழல் நம்மைத் தொடரவே செய்கிறது. புதியனவற்றையும் பழையனவற்றையும் தேர்ந்து தெளிந்து இரண்டிலும் நல்லவற்றைத் தழுவிக்கொண்டு, அல்லவற்றை விட்டுவிடுதல் நலம்.