Thursday, December 18, 2014

உனக்கு இங்கு இடம் இல்லை!

இன்று மாலை ஊருக்குப் போகிறேன். இன்னும் 21 நாட்களுக்கு வலைப்பதிவில் எழுத முடியுமா என்று தெரியவில்லை.

எழுதலாம். ஆனாலும் இந்த கம்ப்யூட்டர், இண்டெர்நெட் என 21 நாட்கள் இருந்து பார்க்க ஆசை.

கிறிஸ்து பிறப்பு விழா மிக அருகில் வந்துவிட்ட வேளையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு என்ன மறையுரை வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

சத்திரக்காரனின் கிறிஸ்துமஸ் என்ற மையக்கருத்தில் மறையுரை வைக்கலாம் என நினைத்தேன்.

இயேசுவின் பிறப்பு மாடடைக் குடிலில் நடக்க ஒரு காரணம் சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லை.

'உனக்கு இங்கு இடம் இல்லை!' - இதுதான் மனித வரலாறு நம் கடவுளுக்குச் சொன்ன வார்த்தைகள். மிகவும் சோகமான வார்த்தைகள்.

பாலூட்டி, சீராட்டி நாம் உறங்க வேண்டும் என்பதற்காக விழித்திருந்து, கடைசிப் பருக்கையை உண்டு வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு தூங்கப் போகும் நம் வீட்டு அம்மாக்களை நாம் எளிதாக ஒரு கட்டத்தில் 'நீ எனக்கு வேண்டாம்!' என்று சொல்வது எவ்வளவு வேதனை தருமோ அந்த அளவு வேதனையை கடவுள் கண்டிப்பாக அனுபவித்திருக்க வேண்டும்.

'சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லை!'

இடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்ம வீட்டை நமக்குப் பிடிச்சுருக்கு? நம்ம ரூமை நமக்குப் பிடிச்சுருக்கு? ஏன்? இடம் தான் நம்மை அடையாளப்படுத்துகிறது. நம்ம வீட்டுல தான் நாம நாமலா இருக்க முடிகிறது. ஏன். நம்ம கையில வச்சிருக்கிற மொபைல் கூட நம்ம ரூம் மாதிரி தான். அந்த ரூமுக்குள் நாம் எல்லாருக்கும் அனுமதி கொடுப்பதில்லை.

உனக்கு இங்கே இடமில்லை.

இந்த வார்த்தைகளை இன்னும் இரண்டு கோணங்களில் பார்ப்போம்.

உனக்கு இங்கே இடமில்லை.
எனக்கு இங்கே இடமில்லை.
அவருக்கு இங்கே இடமில்லை.

எனக்கு இங்கே இடமில்லை - இந்த வார்த்தைகளை நாம் நம் வாழ்வின் இக்கட்டான சூழலில் சொல்லத்தான் செய்கின்றோம். என்னிடம் ஒன்றுமில்லை. எனக்கு அழகில்லை. எனக்கு படிப்பில்லை. எனக்கு உறவு இல்லை. இப்படியெல்லாம் நாம் சொல்லும் போது நமக்கு நாமே உரிய இடத்தை நாம் கொடுக்க தவறிவிடுவதில்லையா?

உனக்கு இங்கே இடமில்லை - இதுதான் நம்மைச் சுற்றியிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சந்தை செய்வது. நீ இதைக் குடித்தால் மட்டும் தான் இங்கு இருக்கலாம். இப்படித் தான் சாப்பிட வேண்டும். இதைத் தான் நீ டிவியில் பார்க்க வேண்டும். எங்களோடு ஒத்திராதவர்களுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லிக் கொள்வது.

அவருக்கு இங்கே இடமில்லை - கடவுளுக்கு இங்கே இடமில்லை என்று நாம் சொல்வது. நாம் உருவாக்கிக் கொண்ட மதிப்பீடுகள். நாம் வைத்துக் கொண்டிருக்கும் குட்டிக் கடவுள்கள் கடவுளின் இடத்தை எடுத்துவிடுகின்றன.

நம் உறவுகளில் 'உனக்கு இங்கே இடமில்லை' என்று உதாசீனப்படுத்தும் போதும் வலிக்கிறது.

எங்க ஊருல கண்ணான்னு ஒரு அண்ணன் இருந்தாங்க. ரொம்ப வாட்டசாட்டமா இருப்பாங்க. நாயுடு குடும்பம். மிலிட்டரில சேரப்போறதா சொல்வாங்க. ஒரு நாள் அவங்களுக்கு அவங்க அப்பாவுக்கும் ஒரு சின்ன சண்டை. இந்த அண்ணன் சிகரெட் பிடிச்சதை அவர் கண்டிச்சார். ரொம்ப ஈசியா கண்டிச்சுருக்கலாம். ஆனா, அவரு பெரிய திருவிழா நேரத்துல மைக் பிடிச்சி ரொம்ப அசிங்கப்படுத்திட்டார். அந்த அண்ணன் அன்னைக்கு ஊரை விட்டுப் போனவங்கதான். இன்னும் அவங்க எங்க இருக்காங்கனு தெரியல. அவங்க அப்பா இப்போ படுத்த படுக்கையாய் ஆயி;ட்டார். எனக்கு எங்கும் இடமில்லை என்று அன்றாடம் காணாமற் போய்க்கொண்டே இருக்கின்றனர் பலர்.

இரண்டு நாட்களுக்கு பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் கருத்தியலும் இதுதான்: 'உங்களுக்கு இங்கு இடமில்லை!' என்று தீவிரவாதிகள் மற்றவர்களைச் சொல்வது.
யாருக்கு எங்கே இடமிருக்கிறது என்பதை யார் உறுதி செய்வது.

கடவுளுக்கே இடமில்லை என்று சொல்லப்பட்ட இந்த உலகில் அன்றாடம் ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சொல்லிக் கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமில்லையே.

இனிய கிறிஸ்து பிறப்பு திருவிழா நல்வாழ்த்துக்கள்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

அடுத்த ஆண்டில் சந்திப்போம்.




கொஞ்சம் கொஞ்சமாய்

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான நவநாளை நேற்று நாங்கள் தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் பாடல், வாசகம் என தயாரிப்புகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

கடவுள் தன் ஒரே மகனை இந்த உலகத்திற்குக் கொடுத்த நிகழ்வே கிறிஸ்து பிறப்பு.
இன்று மாலை ஒரு வீட்டிற்குப் போனேன். மாதம் ஒருமுறை சந்தித்து நற்கருணை கொடுக்கும் இல்லம். ஒரு அம்மா. இரண்டு மகள்கள். அம்மாவுக்கு வயது 64. பிள்ளைகளுக்கு வயது 42, 36. இரண்டுமே பெண் குழந்தைகள். இரண்டு பேருக்குமே திருமணம் நடக்கவில்லை. அண்ணன் ஒருவரும் உண்டு. வயது 45. அவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். இளைய பொண்ணுக்கு கொஞ்சம் மனவளர்ச்சி குறைவு. ஆனாலும் எல்லாருடைய முகத்திலும் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.

இன்று நற்கருணை கொடுத்து முடித்தவுடன் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து சொன்னேன். கையில் ஒரு கேக்கும், ஒயின் பாட்டிலும் கொண்டு சென்றேன். கொடுத்தவுடன் அந்தத் தாய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி. எங்க வீட்டுக்கு யாருமே வரமாட்டாங்க! ஆனா நீங்க வந்தது மகிழ்ச்சி என்றார். வீட்டுல எல்லாரையும் கேட்டதாகச் சொல் என்றார். அவர் ஒரு கணிதப் பேராசிரியை. இந்தியர்கள் பூஜ்யத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் உலகத்தில் எந்தக் கணிதமும் இன்று சாத்தியமில்லை. எந்தக் கம்ப்யூட்டரும் கண்டுபிடித்திருக்க முடியாது என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.
எனக்கு இன்று மிஞ்சிய கொஞ்ச நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி.

இன்னைக்கு நம் கிட்ட இருக்கும் பெரிய பிரச்சினையே இதுதான். நம்ம மத்தவங்களுக்கா நம்மைக் கொடுப்பது கிடையாது. அதுக்கு சப்போர்ட்டா நாம சில சித்தாந்தங்களையும் வேறு உருவாக்கிக் கொள்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுக்கத் துவங்குதலே கிறிஸ்துபிறப்பு. இல்லையா?



Wednesday, December 17, 2014

நீ ஒரு சிங்கக்குட்டி

யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி. என் மகனே இரை கவர்ந்து வந்துள்ளாய். ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான். அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?
(காண்க தொடக்கநூல் 49:1-2, 8-10)

இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலமுதல்வர்களில் ஒருவர் யூதா. அந்த யூதாவின் வழி வந்தவர் தான் தாவீது அரசர். தாவீது அரசரின் வழி வந்தவர் தான் இயேசு.

அண்மையில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று ஆய்வுகள் மோசே மற்றும் தாவீது என்னும் நபர்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கவே இல்லை என்றும், அவர்கள் வெறும் கதாபாத்திரங்கள் எனவும் சொல்கின்றனர். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என யாரும் வாழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.

அது என்னமோங்க...ஒவ்வொரு நாளும் படிக்கப் படிக்க எதுவும் வரலாற்று நிகழ்வு இல்லை என்றே சொல்லித் தர்றாங்க.

யூதாவைப் பற்றிய உருவகம் சிங்கம்.

இரையும் கிடைக்கும். துயிலும் கிடைக்கும். யாரின் தொந்தரவும் இருக்காது.

இந்த மூன்றும் தான் நமக்கான அடிப்படை தேவையும் கூட.



Tuesday, December 16, 2014

எந்தக் கடவுள்னு தெரியலையே!

கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
(காண்க செப்பனியா 31:1-2, 9-13)

நேற்று காலை எங்கள் பங்கில் உள்ள ஒரு பெண் (வயது 40 இருக்கும்) தான் பேசும் பொய் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். குவால்கே வோல்த்தா தீகோ லெ புஜ்ஜியே பியான்கே! என்றார். அதாவது, ஒரு சில நேரங்களில் நான் வெள்ளைப் பொய்கள் சொல்வதுண்டு. புஜ்ஜியா என்றால் பொய், பியான்கா என்றால் வெள்ளை. எனக்கு சுருக்கென்றது. அதன் அர்த்தம் எனக்குத் தெரிந்தாலும் அந்தப் பெண்மணியிடம் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டேன். 'மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காத பொய்கள் தான் வெள்ளைப் பொய்கள்!' எனக்கு சுருக்கென்று இருந்ததற்குக் காரணம் புரிகிறதா. ஆக, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கவில்லையென்றால் அது வெள்ளை. தீங்கிழைத்தால் அது கறுப்பு.

இது மட்டுமல்ல, தெம்ப்போ நேரோ என்றால் கறுப்பு நேரம். இதன் பொருள். இக்கட்டான நேரம். நல்ல நேரம் என்றால் தெம்ப்போ பியான்கோ. கெட்ட நேரம் என்றால் நேரோ.

நாம் பிரிண்ட் எடுக்கும் போது பயன்படுத்தும் வார்த்தை 'பிளாக் அண்ட் ஒயிட்' அல்லது 'கறுப்பு வெள்ளை'. ஆனால் இத்தாலியனில் மட்டும் தான் 'பியான்கோ நேரோ' அவர்கள். நேரோ பியான்கோ என்று அழைப்பதில்லை.

இன்று எல்லா இடத்திலும் பேசப்படும் ஒரு வார்த்தை ரேஸிஸம். இது இல்லையென்று போப்பாண்டவர் அடிக்கடி சொன்னாலும், அவர் சொல்லிக்கொண்டிருக்கும் வத்திக்கானிலேயே நிறைய இருக்கிறது என்பதுதான் கன்னத்தில் அறையும் உண்மை.

நாம் பேசும் வார்த்தைகள் நம்மை ரேஸிஸ்;ட் எனவே காட்டுகின்றன.

இரண்டு வாரங்களாக நம் நாட்டில் ஒரு செய்தி. அதாவது அலிகார் மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்பு திருவிழா அன்று 4000 கிறிஸ்தவர்கள் தங்களின் தாய் மதமான இந்து மதத்திற்குத் திரும்புகின்றார்களாம். மேலும் ஒரு செய்தி இன்று மாநிலங்களவையில் எழும்பிய ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் இப்போதுள்ள மத்திய அரசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு விடுதலை மறுப்பது. இனத்தில் மட்டும் வெறி இருப்பது இல்லை. மதங்களிலும் வெறி இருக்கின்றது. அந்த 4000 பேரும் கிறிஸ்தவ மதத்தை விட்டுவிட்டு எந்த மதமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கு நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுவேன். ஆனால் ஒரு வெறியிலிருந்து மற்றொரு வெறிக்கு மாறுவதால் எந்தப் பயனும் இல்லையே.

இன்று மாலை எங்கள் கல்லூரியில் கவுன்சில் மீட்டிங் நடந்தது. அதில் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டு வரும்போது மேற்கத்திய வெள்ளைக் குருக்களின் பகிர்வு எல்லாம் என்னவாக இருந்தது என்றால் அவர்கள் படித்து முடித்தவுடன் உலகெங்கும் சென்று, குறிப்பாக வளரும் நாடுகளுக்குச் சென்று பணியாற்ற விரும்புவதாகச் சொன்னார்கள். நம்ம வாய் சும்மா இருக்குமா? 'ஏன் தம்பி! உங்க ஊருப் பிரச்சினையே டிப்பர் லாரி வச்சி அள்ளுற மாதிரி இருக்குல. அதைப் பார்க்காம நீங்க ஏன் மத்தவங்களுக்குப் பஞ்சாயத்து பண்ணனும் னு நினைக்கிறீங்க! இந்த வெள்ளைத் தோல்களுக்கு எப்பவும் ஒரு காம்ப்ளக்ஸ். நாங்கதான் மெசியா. நாங்கதான் உலகைக் காப்பாத்துவோம். எங்களுக்கு தான் எல்லாம் தெரியும். இது மாற வேண்டுமென்றால் நாம் சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்.

இன்றைய முதல்வாசகப் பகுதியில் மற்றவர்களை ஒடுக்கும் நகருக்குக் கேடு என்கிறார் செப்பனியா இறைவாக்கினர்.

நாமும் இன்று எவ்வளவோ வகையில் மற்றவர்களை ஒடுக்குகிறோம்.

இவங்க இப்படித் தான் இருக்கணும். அவங்க அப்படித்தான் இருக்கணும் அப்படின்னு ஒரு இலக்கணம் எழுதிடுறோம். அந்த இலக்கணத்துப் படி அவங்க நடக்கணும். அப்படி நடக்கலனா நாம அவங்களுக்கு முத்திரை குத்துவோம்.

இன்று ஆண்டவர் இந்த முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு தரும் வாக்குறுதி இதுதான்: நீங்கள் என் மேய்ச்சலைக் காண்பீர்கள்.

பங்குத் தளத்தில் சில நேரங்களில் மக்கள் அருட்பணியாளர்களுக்கு வெகு எளிதாக முத்திரையைக் குத்தி விடுவார்கள். எனக்கு அடிக்கடி ஒரு யோசனை வரும். நமக்குன்னு ஒரு வீடோ, பிள்ளையோ, உறவோ இல்லாததால் தான் போற வாரவங்க எல்லாம் ஒரு குத்து குத்திட்டுப் போறாங்கண்ணு. இந்த மாதிரி நேரத்துல எங்க அம்மா நினைவு தான் எனக்கு வரும். அம்மாவுக்கு மட்டும் தான் தன் மகன் ஃபாதரா இருந்தாலும், தன் மகள் சிஸ்டரா இருந்தாலும் தனக்கு மகன் மற்றும் மகள். மற்ற எல்லாருக்கும் 'எடுப்பார் கைப்பிள்ளை தான்!' 'நீ இப்படி இருக்கணும்!' 'நீ அப்படி இருக்கணும்!'

அருட்பணி நிலையின் அர்த்தம் புரியும் முன் வாழ்க்கை முடிந்துவிடும் போலவே தோன்றுகிறது.

எங்கோ தொடங்கி எங்கோ சென்றுவிட்டேன்.

சிம்பிள் மெசேஜ் தான் இன்றைய இறைவார்த்தை.

யாரையும் நாம கஷ்டப்படுத்தக் கூடாது. அப்படியே கஷ்டப்பட்டாலும் நமக்குக் கடவுள் இருக்கார்.

கடவுள் இருக்கார்னா...எந்தக் கடவுள்னு தெரியலையே!


Monday, December 15, 2014

எப்பொழுதும் மகிழ்ச்சியாக

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
(1 தெச 5:16-24)

இன்றைய திருப்பலியின் போது வாசிக்கப்பட்ட இந்த வாசகம் நாம் அடிக்கடி கேட்ட ஒன்று.
எப்பொழுது, இடைவிடாது, எல்லாச் சூழ்நிலை - இந்த மூன்று வார்த்தைகளும் குறிப்பது ஒன்றைத்தான்.

ஆனால் மகிழ்ச்சி, செபம், நன்றி என நாம் செய்ய வேண்டிய மூன்று செயல்கள் மட்டும் மாறுபடுகின்றன.

இந்த மூன்றும் தான் கடவுள் நாம் செய்ய வேண்டும் என நினைப்பது என்கிறார் தூய பவுல்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு பெரிய பேராசை எனவே தோன்றுகிறது.
இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாமே!

Sunday, December 14, 2014

மலிவு விலை மகிழ்ச்சி

ஒவ்வொரு நாள் திருப்பலியிலும் இங்கு மறையுரைக்குப் பின் விசுவாசிகளின் மன்றாட்டு உண்டு. நம்ம ஊருல ஞாயிறு மட்டும்தான் மன்றாட்டு சொல்வோம்.

இன்று மன்றாட்டு புத்தகத்தில் ஒரு மன்றாட்டு எனக்கு ரொம்ப பிடித்தது.

பெலிசித்தா தி பாஸ்ஸோ ப்ரெட்ஸோ - மலிவு விலை மகிழ்ச்சியை நாங்கள் வாங்காதபடி எங்களைக் காத்தருளும்.

வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்பார்கள். மகிழ்ச்சிக்கும் விலை இருக்கிறது. ஆனால் மலிவு விலை மகிழ்ச்சியும் இருக்கிறது. உயர்ந்த விலை மகிழ்ச்சியும் இருக்கிறது.

கொஞ்ச காலமாக நம்ம நாட்டுல நடக்கிற பெரிய பெரிய மோசடிகள் எல்லாம் வெளியே வருகின்றன. கூட்டுறவு வங்கியின் செயலாளர் அடித்த கொள்ளை, சாரதா நிதி நிறுவன மோசடி, ஆவின் பால், கிரானைட், தாது மணல், கிராஃபைட், கிரிக்கெட் என எங்கு பார்த்தாலும் மோசடி. இந்த மோசடிகளுக்குப் பின் இருப்பதும் ஒரு விலை தான். ஒரு மகிழ்ச்சி தான். இந்த மோசடிகள் தான் மலிவு விலை மகிழ்ச்சியோ?

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை மகிழ்ச்சி ஞாயிறு என அழைக்கிறது திருஅவை.

இன்று நம்மைச் சுற்றி மகிழ்ச்சியை கடைவிரித்திருக்கிறார்கள். நம்மைச் சுற்றி மகிழ்ச்சிக்கான வியாபாரம் நடந்து கொண்டேயிருக்கின்றது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என நமக்குத் தெரியாமல் பல நேரங்களில் நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று எங்கள் கல்லூரியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்து ஒரு அருட்சகோதரியை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பணி கொடுக்கப்பட்டது. லீடர்னா எல்லா வேலையும் தான செய்யணும். அவர்களின் இல்லம் எங்கிருக்கிறது எனத் தெரியாததால் அவர்களோடு நடந்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அவர்களின் இடம் வந்தது. வந்தபின் தான் தெரிந்தது அந்த இடத்திற்கு வெறும் 7 நிமிடங்களில் வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் எடுத்துக் கொண்டது 37 நிமிடங்கள். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி போவதற்கு ஏ.ஏ. ரோட்டில் போவதற்குப் பதில் கோரிப்பாளையம் போய், ஏவிஎம் பாலம், சிம்மக்கல், மதுரா கோட்ஸ் என சுற்றி வந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது.

கொஞ்சம் கோபத்தோடு இந்த இடம் தான் உங்கள் இல்லம் என்றால் 'வி குட் ஹேவ் டேகன் அனதர் வே!' என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே சீக்கிரம் வந்திருந்தால் நாம் இவ்வளவு புதிய இடங்களையும், நட்சத்திரங்களையும், டெக்கரேஷன்களையும் பார்த்திருக்க முடியாதே என்றார்.

என் பஸ்ஸில் ஏறி வந்தபோது எனக்குள் நான் பேசியது ஓடிக்கொண்டே இருந்தது.

நம் மகிழ்ச்சிக்கு பெரிய தடை இதுதான்: 'வி குட் ஹேவ்!' 'சே...அப்படி இருந்திருக்கலாமே. இப்படி இருந்திருக்கலாமே!' என்று நடந்து முடிந்ததை மாற்ற நினைப்பது மகிழ்வை நம்மிடமிருந்து திருடி விடுகிறது.

இன்று நாம் மகிழ்ச்சிக்குக் கொடுக்கும் விலை மலிவு என்றால் அந்த விலையை நாம் கொடுப்பதை கொஞ்சம் நிறுத்தலாமே!



Saturday, December 13, 2014

நெய்ல் பாலிஷ் நீங்க போடுவீங்களா?

நாளைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் எலியா இறைவாக்கினரைப் பற்றி இருக்கின்றது. எலியா இறைவாக்கினர் பற்றி எழுதினால் அது ரொம்ப இறையியலாகப் போய்விடும். அதனால இன்னைக்கு ஒரு சின்ன பிரேக்.

நெய்ல் பாலிஷ் நீங்க போடுவீங்களா?

இன்னைக்கு நெய்ல் பாலிஷ் கடைக்கு என் நண்பன் ஒருவனோடு சென்றிருந்தேன். உணவு இடைவேளை கொஞ்சம் கூடுதலாக இருந்தது. 'சும்மா ஒரு வாக் போவோம்!' என்றான் அவன். 'கடைக்குப் போவோம்!' என்றேன் நான். 'சரி!' என்றான்.

போகும் வழியில் ஒரே கூட்டம். என்னவென்று பார்த்தால் இன்று இத்தாலியில் ஸ்டிரைக். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இது நடக்கிற ஒன்று என்பதனால் அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை. மக்களும் கண்டுகொள்வதில்லை. என்ன பஸ், மெட்ரோ சரியா ஓடாது. மத்தபடி வாழ்க்கை ரொம்ப சகஜமாக இருக்கும்.

கடைவீதியில் ஒரே கூட்டம். மதுரை டவுண்ஹால் ரோட்;டில் தீபாவளிக்கு முன்தினம் இருக்கும் கூட்டம் போல இருந்தது. எங்கும் விழாக்கோலம். கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்ஸ். பொருட்களையும், இடத்தையும் வடிவமைப்பதில் இத்தாலியர்களை அடித்துக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு கடையாய் ஆ...வென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம்.

'என்ன வாங்க வேண்டும்?' என்றான் அவன்.

'நெய்ல் பாலிஷ்!' என்றேன்.

'யாருக்கு?' என்றான்.

'எனக்கு' என்றேன்.

'நீ நெய்ல் பாலிஷ் போடுவியா?' என்றான்.

'இல்லை. அதன் ஸ்மெல் எனக்குப் பிடிக்கும்!' என்று முறைத்துப் பார்த்தேன்.

கேள்விகளை நிறுத்திக் கொண்டான்.

ஒரு தெருவின் முனை வரை சென்றுவிட்டு ஒரு கடையும் இல்லை எனத் திரும்பிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்தக் கடை.

'லா கார்டினியா' என்பது கடையின் பெயர். இந்தக் கடையின் கேரி பேக்கை நிறையப் பேர் மெட்ரோவில் கொண்டு சென்று பார்த்திருக்கிறேன். இந்தக் கடையை அடிக்கடி எஃப் டிவியிலும் காட்டுவார்கள்.

சின்ன வயசுல எங்க ஊருல யாராவது சரவணா ஸ்டோர்ஸ் பை கொண்டு போனாலே...டே இந்தக் கடைக்குத் தான் டா நம்ம ஸ்நேகா அக்கா 'ஜொலிக்குதே! ஜொலிக்குதே!'னு ஆடுது!' என்று சொல்லிக் கொள்வோம்.

இந்தக் கடையில் வாங்குவது ரொம்பப் பெருமையாக இருந்தது.

கறுப்பு கலர் டாப்ஸ், கறுப்பு கலர் ஸ்கர்ட், கறுப்பு கலர் எல்லாம் என அணிந்தவளாய் ஒரு இளவல் வந்தது எங்கள் முன்னால். நாங்க குளிர் தாங்க முடியாம மூணு ஸ்வெட்டர் போட்டுட்டுப் போக பாதி உடம்போடு நின்றிருந்த அவளைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. 'பொண்ணுங்களுக்கெல்லாம் குளிராதா?' என்றேன் நண்பனிடம்.

'வாங்க! என்ன வேணும்!' என்று கேட்டாள்.

கேட்டது அவ்வளவுதான். எனக்கு என்னவோ, 'உங்க வீட்டுல சொத்து எல்லாம் வித்தாச்சா!' னு கேக்குற மாதிரி இருந்துச்சு.

சுற்றி ஒட்டப்பட்டிருந்த விலை டேக் அதை உறுதி செய்தது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 'உங்கி ஜெல்' என்றேன். இத்தாலியனில் 'நெய்ல் பாலிஷ்'.

'வெனித்தே!' என்று சிரித்துக் கொண்டே அழைத்துச் சென்றாள்.

'பம்பினா! ரகாட்ஸா! ஓ தோன்னா!' என்றாள். குழந்தைக்கா! இளம்பெண்ணுக்கா! பெரியவங்களுக்கா!

இதற்குப் பதில் சொன்னால் நான் கூட வந்தவனிடம் மாட்டிக் கொள்வேனே. பொத்தாம் பொதுவாக 'எல்லாருக்கும்!' என்றேன்.

எதை விற்றால் அவளுக்கு லாபம் கிடைக்குமோ அதைத் தேடி தேடி எனக்குக் காட்டினாள்.

எதை வாங்கினால் எனக்கு லாபமோ அதைத் தேடி தேடி நானும் பார்த்தேன்.

நெய்ல் பாலிஷ் வாங்கிய இடத்தில் இன்னொரு சர்ப்ரைஸூம் வாங்க முடிந்தது.

நெய்ல் பாலிஷ் வாசனை எனக்கு ரொம்பவே பிடிக்கும். முதன் முதலாக நெய்ல் பாலிஷ் ஸ்மெல் நுகர்ந்தது ரோட்டில் கிடந்த ஒரு காலி பாட்டிலில் இருந்துதான்.

ஐந்தாம் வகுப்பு வரை ஆண் ஆசிரியர்தான். பவுடர் வாசனை தவிர வேறு வாசனை அறியாதவர்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்து அறிவியில் வகுப்பு எடுத்த எஸ்தர் கமலா டீச்சரைப் பார்த்தபின் தான் நெய்ல் பாலிஷின் அர்த்தம் புரிந்தது. தினமும் ஒரு கலரில் இருக்கும் அவரின் நகம். அவர் வரைந்த  டயாகிரம் நினைவிருக்கிறதோ இல்லையோ நீண்ட விரலில் அவர் இட்டு வரும் நெய்ல் பாலிஷ் நினைவிருக்கிறது.

நம்ம ஊர்ல மருதாணி விரலுக்குதான் என்றாலும், அது நகத்துக்கு என யாரும் சொல்வதில்லை.

நெய்ல் பாலிஷ் போட்ட முதல் பெண் யாராக இருக்கும்?

நான் எல்லீஸ் நகரில் பணியாற்றிய போது அன்பியக் கூட்டத்திற்கு சென்ற இடத்தில் ஒரு குழந்தை 'நான் ஃபாதருக்கும் நெய்ல் பாலிஷ் போடுவேன்' என்று அடம்பிடித்து என் வலது கை பெருவிரலில் போட்டும் விட்டது. கொஞ்ச நாளா அந்த நெய்ல் பாலிஷ்க்கே பதில் சொல்ல முடியவில்லை.

சின்ன வயசுல ஏதோ ஒரு டிராமாவுக்காக நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் போட்ட ஞாபகம் இருக்கிறது.

ஆனா ஒரு நல்ல ஃப்ளாஷ்பேக் இருக்கு.

ரெக்கார்ட் டான்ஸ் கேள்விப்பட்றீக்கிங்களா? 'ராஜ்டிவி புகழ்' அல்லது 'ஏதோ ஒரு டிவி புகழ்' என்று சொல்லிக் கொண்டு கிராமத்திற்கு வந்து முழு இரவும் ஆடல் பாடல் என இருக்கும். நாங்கள் சர்வே எடுக்க ஒரு ஊருக்குச் சென்றோம். போன நேரம் அங்கே ஒரு இந்துக் கோவில் திருவிழா. ஸ்பெஷல் ஆடலும் பாடலும். இரவு 10 மணிக்கு என்று சொல்லி தொடங்க 12 ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக ஆட்டத்தின் சூடு கூடும். இரண்டு மூன்று மணிக்கு திடீரென ஆண்கள் கூட்டம் அதிகமாகியது. எல்லாரிடமும் காசு வாங்கிக் கொண்டிருந்தார்கள். என்னடா காசு கேட்குறாங்கனு நினைச்சிகிட்டே நானும் என் நண்பர்கள் இருவரும் நகன்றோம். ஆனால் மடக்கி விட்டார்கள். நில்லுங்க தம்பி! என்று சொல்லி எங்களிடம் ஒரு தீக்குச்சி கொடுத்தார்கள். ஒரு தீக்குச்சிக்கு பத்து ரூபாய். ஆளுக்கு ஒன்று என மூன்று வாங்கினோம். 'இது எதுக்குண்ணே!' என்றேன். அந்த மேடைக்குப் பின்னால ஒரு ரூம் இருக்குல. அங்க இப்ப ஆடுண பொண்ணு இருக்கும். லைட் இருக்காது. இந்த தீக்குச்சி வெளிச்சத்துல உன் லக்குக்கு என்ன தெரியுதோ அதைப் பார்க்கலாம். போய் வரிசையில் நின்னு! என்றார். கைகால் எல்லாம் நடுங்கியது. 'நம்ம என்ன கொலையா பண்ணப் போறோம்! வாடா வரிசையில் நிப்போம்!' னான் என் நண்பன்.

தீக்குச்சி எரியுமா? எரியாதா? உரசும் போது ஒடிந்திடுமா! னு நடுங்கிக் கொண்டே வரிசையில் போனேன்.

என் தீக்குச்சி நேரம் வந்தது. உரசினேன். எரிந்தது.

வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன்.

அவள் நெய்ல் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள்.

Thursday, December 11, 2014

உன் வெற்றி கடல் அலை போல

உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலவும்,
உன் வெற்றி கடல் அலை போலவும்
பாய்ந்து வந்திருக்கும்.
உன் வழிமரபினர்கள் மணல் அளவாயும்,
உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போலும் இருப்பர்.
(காண்க. எசாயா 48:17-19)

ஆறு, கடல் அலை, மணல் மற்றும் கதிர்மணி என்னும் நான்கு உருவகங்கள் வழியாக இஸ்ராயேல் மக்கள் பெறும் புதுவாழ்வை முன்னுரைக்கின்றார் எசாயா இறைவாக்கினர்.

நம்ம ஊர்ல இன்னைக்கு ஆறு என்றாலே கேரளா அழுது கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறும், கர்நாடகம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காவிரியும் தான் நினைவிற்கு வருகிறது.

கடல் அலை என்றால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் என்றும், மணல் என்றால் தாதுமணல் கொள்ளையும், கதிர்மணிகள் என்றால் காய்ந்து கிடக்கும் நெல்வயல்களுமே நினைவிற்கு வருகின்றன.

இயற்கைத் தாய் தன் வளங்களை அள்ளிக் கொடுக்கத் தயாரானாலும் மனிதர்கள் நாம் என்னவோ நம் சுயநலத்தாலும், கௌரவத்தாலும் மற்றவர்களின் நலனை மறுத்து நம் நலனையே முன்னிலைப்படுத்துகிறோம்.

மெசியாவின் வருகை நிறைவைக் கொண்டு வந்தாலும், அந்த நிறைவை அனைவரும் அனுபவிக்க நாம் செயல்பட வேண்டியதும் அவசியம்.


சும்மா மரம் மாதிரி நிக்காத!

பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன். சித்திம் மரம், மிருதச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன். பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். (காண்க. எசாயா 41:13-20)

இரண்டு நாட்களுக்கு முன்பாக சமுத்திரக்கனி மற்றும் நட்சத்திரங்கள் நடித்த 'காடு' திரைப்படம் பார்த்தேன். மரங்கள் வெட்டப்படுதலையும், அதைக் காப்பாற்றுவதற்கான தேவையையும் முன் வைத்து படம் எடுக்கப்பட்டிருந்தாலும், ஊர் ஒற்றுமை, சிறையில் நடைக்கும் கொலைகள், லஞ்சம், போட்டித் தேர்வு என அனைத்தையும் பற்றிப் பேசுகின்றது 'காடு'. சமுத்திரக்கனியின் புரட்சிகரமான வசனங்கள் நம்மைத் தூண்டி எழுப்புவதாக உள்ளன.

இன்றைக்கு எல்லாரும் காடு வளர்க்கிறத பற்றிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் வத்தலக்குண்டுல இருந்து கொடைக்கானல் போகும் போது மரங்களின் அடர்த்தியும், வளர்த்தியும் ஆச்சர்யத்தைத் தரும். இன்று அடர்த்தியான காடெல்லாம் வெறும் கட்டாந்தரையாகவும், செங்குத்துப் பாறையாகவும் மட்டுமே காட்சி தருகின்றது. சாலைகள் அகலப்படுத்துதல் என்று இருந்து கொஞ்ச மரங்களும் வெட்டப்படுகின்றன.

நம் இலக்கியங்களில் மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

அகநானூற்றில் ஒரு பாடல் உண்டு.

ஒரு தலைவன் தன் தலைவியைச் சந்திக்க எங்கு வர வேண்டும் என்று கேட்பான்? அதோ அங்கே தெரியும் புன்னை மரத்தடியில் சந்தித்து நாம் உரையாடுவோமா என்று கேட்பதற்கு தலைவி சொல்வாள். அந்த புன்னை மரத்தடியில் மட்டும் வேண்டாம். ஏனென்றால் என் சின்ன வயதில் ஒருமுறை நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது இந்த புன்னை சிறு செடியாக இருக்கக் கண்டேன். அதை என் அன்னையிடம் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து, 'இந்தப் புன்னை மரமே இனி உன் தங்கை. உன் தங்கையைப் போல இதைப் பேணி வளர்' என்றாள். அன்று முதல் நான் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் புன்னைச் செடிக்கும் நீர் ஊற்றி வந்தேன். இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. வளர்ந்து நிற்பது மரமல்ல. என் தங்கை. என் தங்கையின் முன்னே நாம் காதல்மொழி பேசுவது தகுமா? என்று வெட்கத்துடன் கேட்பாள் தலைவி.

'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொன்ன பாரதிவரை மரங்களும், அவைகளைச் சார்ந்து வாழும் பறவை, விலங்குகளும் மனிதர்களிடமிருந்து ஒருபோதும் பிரித்துப்பார்க்கப்படவே இல்லை.

இன்று எல்லா மரங்களையும் அழித்துவிட்டு பால்கனியில் ரோஜாச் செடிக்குத் தண்ணீர் ஊற்றி மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் மரங்களை வழிபட்டனர். ஒவ்வொரு மரத்திலும் இறந்த நம் முன்னோர்களின் ஆன்மா குடியிருக்கிறது என்பதும் நம் நம்பிக்கை. மரங்களும் பேசும். மரங்களும் பாடும். மரங்களுக்கும் உயிர் உண்டு.

விவிலியத்தில் படைப்பின் தொடக்கத்திலிருந்து மீட்பு வரலாறு வரை மரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மரத்தால் வந்த பாவத்தை சிலுவை மரத்தால் துடைத்தெடுக்கின்றார் இயேசு.

எசாயாவின் இறைவாக்கு இன்று நமக்கு இயற்கையையும், காடுகளையும், மரங்களையும் பேணிக்காக்க அழைப்பு விடுக்கிறது.

சின்ன வயசுல எங்க ஊர்ல லீவு விட்டா நாங்க விளையாடுறது மரத்தடி நிழலில் தான். வேப்பமர முத்து எடுத்தல், விறகுக்குச் செல்லல், ஆடுகளை அவற்றில் கட்டிப் போடுதல் என கலர்புல்லாக இருந்தது இளம்பருவம். இன்று எங்கள் ஊரில் கருப்பசாமி கோயில் மரம் மட்டும் தான் எஞ்சியிருக்கின்றது. வேகமாக வாழ்க்கை நிலையை மாற்றிக்கொண்டு விட்டோம்.
பசுமையான மரங்களெல்லாம் அழிந்து இன்று கான்ங்ரீட் மரங்களாகிவிட்டன.

'இந்தப் பூமிப் பந்தின் கடைசி மரமும் வெட்டப்பட்டு,
கடைசி மீனும் பிடிக்கப்பட்டபின் தான் நமக்குத் தெரியும்
வெறும் பணத்தைத் திண்ண முடியாதென்று...'
என சொல்வார் ஒரு எழுத்தாளர்.

இன்று மரங்களை நாம் வளர்க்கவில்லையென்றாலும் நமக்கு அருகில் இருக்கும் ஒரு மரத்தை நின்று வேடிக்கை பார்க்கலாம். முடிந்தால் தொட்டுப் பார்க்கலாம்.

'சும்மா மரம் மாதிரி நிக்காத! போய் வேலையைப் பாரு!' என்று யாரோ எங்கேயோ திட்டுவது என் காதில் விழுகின்றது.


Tuesday, December 9, 2014

கழுகுகள் போல்

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார். (காண்க எசாயா 40:25-31)

இன்றைக்கு நம்ம திருப்பதி கோயிலுக்கு திரு. ராஜபக்சே அவர்கள் வந்து சென்றிருப்பதற்குப் பல தமிழக இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. நம்ம பாட்டுக்கு அமைதியா இருந்தா அவர் பாட்டுக்கு வந்துட்டுப் போயிருப்பாரு. இப்போ சும்மா சும்மா கத்துனதுனால யாருக்கு நஷ்டம்? அவருக்கா? நமக்குத்தான் நஷ்டம். நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர். நல்லா பாருங்களேன். எப்பல்லாம் இலங்கை கிரிக்கெட் டீக் இந்தியாவிடம் தோற்கிறதோ அப்பெல்லாம் நம்ம மீனவர்கள் பிடிபடுவாங்க. ஆக, அந்த நாட்டுக்காரர்களின் கோபத்துக்குப் பலியாவது நாம் தான். நம்ம வைகே, ராமதாஸ் குருப் எல்லாம் சும்மா ஏஸி அறையில உட்கார்ந்துகிட்டு அறிக்கை விடுறாங்க, ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரானவர் என்று. ஆனா இவங்க மட்டும் தமிழர்களுக்கு ஆதரவானவர்களா? எல்லாம் சும்மா வெட்டிப் பந்தா! எல்லாம் நம்மள வச்சி பொழப்பு நடத்துறாங்க அவ்வளவுதான். நாளைக்கே இலங்கையில் இருக்கிற தமிழர்கள் ஒன்னு சேர்ந்து நீ யாருடா என்று இவர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டால் அப்புறம் நம்ம சீமான், வைகோ, கலைஞர், ராமதாஸ், அம்மா எல்லாம் வேற ஏதாவது வேலை பார்க்க வேண்டியதுதான்.

தமிழ் பேசறதுதான் நம்ம அடையாளமா? இதுதான் என்னோட கேள்வி. ஆஸ்திரியாவிலும் ஜெர்மன் தான் பேசுறாங்க. ஜெர்மனியிலும் ஜெர்மன் தான் பேசுறாங்க. ஸ்விட்சர்லாந்திலும் ஜெர்மன் தான் பேசுறாங்க. அதுக்காக நாங்க மூணு பேருமே ஜெர்மன்காரங்க என்று சொல்வதில்லையே. ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் ஆங்கிலம் பேசுறாங்க என்பதற்காக எல்லாரும் ஆங்கிலேயர்கள் என்று சொல்லிட முடியுமா?

என்னதான் ஈழத்தமிழர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் இலங்கைக்காரர்கள் தாம். வேறு ஒரு நாட்டின் பிரச்சினைக்குள் தலையிடுவது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குத்தான் சமம். முதலில் நாம் இந்தியர்கள். பின் தமிழர்கள். இதுதான் என் நிலைப்பாடு. ஆனா அதுலயும் சிக்கல் இருக்கு. தண்ணி தரமாட்றான் சுத்தி இருக்குறவன். சரி கடல் தண்ணியைக் குடிக்கலாம்னா அங்கேயும் அணுஉலையை வைக்கிறான். ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்க நம்ம கத்தி விஜய் வீராணம் குழாய்க்குள்ள இறங்குன மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்க்க நாம கொஞ்சம் அணுஉலையை முற்றுகையிட்டா சரியாப் போகும். நம்ம பலத்தை விட்டுவிட்டு நம்ம பலவீனத்தையே நினைத்து கெஞ்சிக்கிட்டு இருக்கிறோம். ஒரு வருடத்திற்கு நம்ம ஊர்ல யாரும் ஐயப்ப சாமி கோவிலுக்கு போகலைன்னு வையுங்க. அப்புறம் சபரிமலையை மூட வேண்டியதுதான். ஏன்யா! நம்ம முருகன் சாமிக்கு என்ன குறைச்சல்! அவருக்கு மாலை போடுங்களேன். நான் சின்ன வயசில பழனிக்கும், திருச்செந்தூருக்கும் மாலை போட்டிருக்கிறேன். அப்பவே 'சாமி' 'சாமி' னு கூப்பிடுவாங்க.

சரி. எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்விட்டோம்.

'ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்களை' பற்றி இன்றைய இறைவாக்குப் பகுதி பேசுகின்றது. இன்னைக்கு நமக்கு யார்மேல நம்பிக்கை வைக்கிறதுன்னு தெரியாம இருக்கோம். ஆவின் பால நம்புனா அதுல தண்ணி. காவிரி ஆற்றை நம்பினா அதன் குறுக்கே அணை. முதல்வரை நம்பினா அவர் 'நான் அவன் இல்லை' மாதிரி பதில் சொல்றார். சரி கடவுளையாவது நம்புவோம்னா. அதுலயும் பிரச்சினை.

பகவத் கீதையை நம்ம தேசிய நூலாக்கணுமாம். ஏன்னா ஒபாமாவுக்கு அதைத்தான் மோடி கொடுத்தாராம். நாளைக்கே ஒபாமா தங்கியிருக்கிற ஓட்டல்ல பேஸ்ட் இல்லனு சொல்லி, அந்தப் பக்கம் பல் துலக்கிகிட்டு போன மோடி, 'தம்பி! இந்தாங்க கோல்கேட்! சும்மா பயன்படுத்துங்க!' அப்படின்னு சொன்னார்னு வச்சிக்குவோம். அப்போ கோல்கேட் நம் தேசிய பற்பசை ஆகிவிடுமா? என்னம்மா சுஸ்மா மா இப்படி பண்றீங்களேமா?

எங்க அம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி வாக்குவாதம் வருவது செபம் செய்வதில். 'உனக்காக ப்ரேயர் பண்ணினேன்' என்று சொன்னதற்காக எங்க அம்மாவிடம் நான் நிறைய நாட்கள் சண்டை போட்டதுண்டு. உனக்கு ஏதாவதுனா சொல்லு நான் பிரேயர் பண்றேன் என்று ஒருநாள் அவர்கள் கேட்க, நானும் 'நிரந்தர உலக அமைதிக்காக' ப்ரேயர் பண்ணுங்க என்றேன். ஏன்னா அது நிச்சயம் கிடைக்காது என்று தெரியும்.

ஆனா, அவங்க கோவிலுக்குப் போய்ட்டு வரும் போது அவங்களைப் பார்க்கும் போது பொறாமையா இருக்கும்.

இப்படி ஆண்டவரை மட்டுமே நம்புறவங்களைப் பற்றித்தான் இன்றைய வாசகம். ஆண்டவரை நம்புபவர்கள் கழுகுபோல இருப்பார்களாம். பறவைகளில் எனக்கு மிகவும் பிடித்தது கழுகு. அது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சின்னத்தில் இருப்பதால் அல்ல. அதன் குணங்களுக்காகத்தான். கழுகு இறந்ததை ஒருபோதும் திண்ணாது. கொன்றுதான் திண்ணும். ஆனா இப்ப இருக்கிற கழுகுங்க எப்படின்னு தெரியல!

அது ஓடும். ஆனால் களைப்படையாது. நடக்கும். ஆனால் சோர்வடையாது.

இப்படித்தான் இருப்பார்கள் ஆண்டவரை நம்புபவர்களும்.

ஆண்டவரை நம்பலாம் தான். ஆனா எல்லாம் இருட்டா இருக்கே. அவர் இருக்கா இல்லையான்னே தெரிய மாட்டுக்குதே.

இன்று ஒரு நாள் மட்டுமாவது முழுமையாக நம்பிப் பார்க்கலாமே!


ஆண்டவரின் வார்த்தையோ

புல் உலர்ந்து போம். பூ வதங்கி விழும். நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். (காண்க எசாயா 40:1-11)

எங்கள் கல்லூரியின் விருதுவாக்கும் இதுதான்: 'ஆண்டவரின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்'.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் தலைவர்களின்  தேவையற்ற பேச்சுக்களால், ஒவ்வாத வார்த்தைகளாலும் சர்ச்சைகள் எழும்பிய வண்ணம் உள்ளன.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் தொடக்கத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். நம்ம கலிங்கப்பட்டி வைகோ அவர்கள் நம் பிரதமரை அவன்-இவன் என்று பேசிய பேச்சு எதிர்ப்புக்களை உருவாக்கி இன்று பாஜகவோடு கூட்டணியையும் முறித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். இலங்கை அதிபரோடு நம் பிரதமர் கைகுலுக்கியது தவறாம். என்ன பாஸ் இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சட்டமன்றக் கூட்டத்தில் 'பினாமி' முதல்வர், மக்கள் முதல்வரைப் பற்றி புகழாரம் சூட்டி மூன்று நாளை முத்தாய்ப்பாக முடித்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் நம்ம கேப்டன் இரண்டாம் நாள் கையெழுத்துப் போட்டதோட சரி. ஸ்டாலின் குருப் என்ன பேசினாலும் வெளிநடப்பு. இவங்க ஆக மொத்தம் எதுவும் பேசல இந்த மூணு நாளும்.

ஆக, சொல்லக் கூடாத வார்த்தைகளை சொல்வதாலும் பிரச்சினை. சொல்ல வேண்டிய வார்த்தைகளை சொல்லாததாலும் பிரச்சினை.

வார்த்தைகள் மனித உரையாடலிலும், உறவுகளிலும் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
'விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்' என்கிறார் சே குவேரா. இன்றைக்கு நம்ம ஒருவர் மற்றவரோடு உரையாடும் போதும் வார்த்தைகளில் கவனம் தேவை. 'தேவையில்லாம வார்த்தையை விடாத' என்பார்கள். மேலும், 'அதிக மகிழ்ச்சியின் போது வாக்குறுதி கொடுக்கவும், அதிக கோபமாய் இருக்கும் போது அடுத்தவரோடு பேசவும் கூடாது!' என்பார்கள். ஆக,
வார்த்தைகளால் நாம் மாட்டிக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. 'வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!' என்பார்கள். ஆனால் வாயால் கெட்ட பிள்ளைகளும் அதிகம்.

'மனித வார்த்தைகள் வெறும் சோப்பு நுரை போல. கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும்' என்று அடிக்கடி சொல்வார் என் பேராசிரியர் ஒருவர்.

இன்றைக்கு நாம பேசும் போது எப்படிப் பேசணும்? நாம் புல்லைப் போல் உலர்ந்தும், பூவைப் போல
வதங்கியும் போவோம் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் நம் வார்த்தைகள் இனிமையாக மாறிவிடும் எனவே நினைக்கிறேன். 'எனக்கு எல்லாம் தெரியும்! நான் தான் சகலகலா வல்லவன்!' என்ற தொனியில் பேசும்போது வார்த்தை கசந்தே வெளிவருகிறது.


Monday, December 8, 2014

எப்படி எப்படி நடக்கணுமோ

எப்படி எப்படி நடக்கணுமோ அப்படி அப்படித்தான் நடக்கும்!

இது என்ன பெரிய தத்துவமா என்று கேட்காதீங்க!

ஒரு கோயில்ல மணி அடிக்கிற வேலைக்கு ஒருத்தர் இருந்தாராம். அவர் சரியா வேலையை செய்யவில்லை என்பதற்காக அந்தக் கோவிலின் சாமியார் ஒருநாள் அவரை வேலையைவிட்டு நீக்கி விட்டார். 'இனி என்ன வேலை செய்யலாம்? நமக்கு வேறு ஒன்றும் தெரியாதே!' என்று புலம்பிக் கொண்டிருந்தவர் இளநீர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த இளநீரை வெளிநாட்டிற்கும் அனுப்பினால் என்ன என யோசித்தவர் அதற்கான தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து ஆஸ்திரேலியா வரை ஆர்டர் எடுக்கும் அளவிற்கு வளர்கிறார். ஒருநாள் ஒரு ஊரில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு களைப்பாகத் திரும்பும் சாமியார் ஒரு இளநீர் கடைக்குச் செல்கிறார். அங்கு அந்தப் பெரியவரைக் கண்டதும் மனதுக்குள் ஒரு நெருடல். 'ஐயா! உங்களை அன்னைக்கு ஏதோ கோபத்துல வெளியேத்திட்டேன்!' என்கிறார். 'பரவாயில்லை சாமி! அன்னைக்கு நீங்க என்னை வெளியேத்துனதுனால தான் இன்னைக்கு நான் இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறேன். இல்லைன்னா இன்னும் கோயில்ல மணி தான் அடிச்சிட்டு இருந்திருப்பேன்' என்றாராம்.

வாழ்வின் சில இக்கட்டடான நேரங்களில் நாம் துணிச்சலோடு எடுக்கும் முடிவுதான் வாழ்வையே மாற்றி விடுகிறது.

எனக்குத் தெரிந்த என் நண்பன் ஒருவனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தன் மகனுக்கு ஏற்ற துணையை தான் அவனுக்கு முடித்து வைக்கவில்லையே என்ற சோகத்தில் அவனின் தாயும் இறந்துவிட்டார். அடுத்தடுத்த வலிகளால் அடிக்கப்பட்ட நண்பன் ஒரு முடிவெடுக்கிறான். இனி எனக்காக மட்டும் வாழ்வேன்! தான் வாங்கும் நல்ல சம்பளத்தில் தனக்குப் போக அனைத்தையும் அநாதை இல்லத்திற்குக் கொடுத்துவிடுகிறான். 'ஏன்டா! இப்படி எல்லாத்தையும் கொடுத்துட்டால் உன் எதிர்காலம் என்ன ஆகும்?' எனக் கேட்டேன். சிரித்துக்கொண்டே சொன்னான்: 'எது எது எப்படி எப்படி நடக்கணுமோ! அப்படி அப்படி நடக்கும்!'


Sunday, December 7, 2014

கடவுள் நம் உள்ளத்தில் வர!

பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.
பாழ்நிலத்தில் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.
பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்.
மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்.
கோணலானது நேராக்கப்படும்.
கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்.
மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்.
(காண்க எசாயா 40:1-5, 9-11)

மேற்காணும் இறைவாக்குப் பகுதியை நான் நிறைய முறை வாசித்திருக்கிறேன். அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நிறைய முறை மறையுரையும் வைத்திருக்கின்றேன்.

மெசியா வருவார் என்றால் எதற்காக இதையெல்லாம் செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட பாலைவனமும், பாழ்நிலமும், பள்ளத்தாக்கும், மலையும், குன்றும் மனிதர்கள் வாழத் தகுதியற்றவை. மனிதர்களே வாழ முடியாத இடத்தில் மெசியா ஏன் வர வேண்டும்?

இந்தக் கேள்விக்குப் பதிலாக இப்படிச் சொல்லலாம். அதாவது, மெசியாவின் வருகையின் போது இவையெல்லாம் மாற்றம் பெறும். மனிதர்கள் வாழத் தகுதி பெற்ற இடங்களாக மாறும்.

இந்த இறைவாக்கை உருவகங்களாகவும் எடுத்துப் பார்க்கலாம்.

கடவுள் நம் உள்ளத்தில் வர நாம் தகுதியற்றிருக்கக் காரணங்கள் ஏழு:
அ. வெறுமை என்னும் பாலை
ஆ. விரக்தி என்னும் பாழ்நிலம்
இ. இல்லாமை என்னும் பள்ளத்தாக்கு
ஈ. ஆணவம் என்னும் மலை
உ. தன்னலம் என்னும் குன்று
ஊ. அறநெறி தவறும் கோணல்
எ. சும்மா எப்படினாலும் இருக்கலாம் என்ற கரடு, முரடு

இந்த ஏழும் அழிந்தால் கடவுள் நம்மிடம் வர வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?


Saturday, December 6, 2014

நீங்கள் இனி அழமாட்டீர்கள்!

'...நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்.
அவர் உங்கள் மேல் திண்ணமாய் அன்புகூர்வார்.
உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.
நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்...'
(காண்க எசாயா 30:19-21,23-26)

இந்த இறைவாக்குப் பகுதியை வாசிக்கும் போது 'அன்று வந்ததும் அதே நிலா!' என்ற திரைப்படப் பாடல் தான் நினைவிற்கு வருகிறது. பழைய ஏற்பாட்டு நூலை வாசிக்கும் போது என்னுள் அடிக்கடித் தோன்றும் உணர்வு என்னவென்றால் நம் வேர்கள் பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் செல்லக் கூடியவை என்பதுதான். இந்த இறைவாக்குப் பகுதியை எழுதிய ஒருவர் கண்ட நிலவைத் தான் இன்று நாம் காண்கின்றோம். மனிதர்கள் வருவார்கள். போவார்கள். ஆனால் பூமி என்றென்றும் நிலைத்து நிற்கிறது. என்னவொரு ஆச்சர்யம்! இன்று நாம் காணும் நிலவை இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து மற்றொரு மனித இனம் காணும். லைஃப் இஸ் கிரேட்!
மேற்காணும் இறைவாக்குப் பகுதியை எழுதியவர் இரண்டாம் எசாயா. எசாயாவின் நூலை மூன்று பேர் எழுதியிருக்கலாம் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதல் எசாயா பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு முன்பும், இரண்டாம் எசாயா பாபிலோனிய அடிமைத்தனத்தின் போதும், மூன்றாம் எசாயா பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்னும் தங்கள் நூல்களை எழுதுகின்றனர்.

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ராயேல் மக்களுக்காக எழுதப்பட்ட பகுதியே இன்றைய இறைவாக்கு.

இந்த இறைவாக்கு மூன்று வாக்குறுதிகளை உள்ளடக்குகிறது:

அ. நீங்கள் இனி அழமாட்டீர்கள். அதிக மகிழ்ச்சி என்றாலும் சரி, அதிக துன்பம் என்றாலும் சரி நம் உடல் பேசும் மௌனமொழி கண்ணீர் - அழுகை. அழுகையில் பல வகை உண்டு. நான் கண்டவரை பெண்கள் சீக்கிரம் அழுதுவிடுகிறார்கள். ஆண்களுக்கு அழுகையே வருவதில்லை. அவர்களின் அழுகை மௌனமாக உள்ளே பதுங்கிக் கொள்கிறது. ஒரு ஆண் மௌனமாக இருக்கிறார் என்றால் அவர் அழுது கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அழுகை நிலை வரும்போதும் பெண் கண்ணீரால் தன் மனதைக் கழுவிக் கொள்கிறாள். ஒரு ஆண் தன் உள்குகைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு 'எனக்கு யாரும் வேண்டாம்!' என முடிவெடுத்து விடுகிறான். குழந்தை பிறந்தவுடன் அழும் அழுகை தான் அதன் உடலியக்கத்துக்கான தூண்டுகோலாக இருக்கின்றது. எசாயா குறிப்பிடும் அழுகை அந்நிய நாட்டில் சிறைக்கைதிகளாகக் கிடந்த மக்களின் அழுகை. இனிமேல் அவர்கள் அத்தகைய அழுகையை அழப்போவதில்லை.

ஆ. அவர் உங்களை அன்பு கூர்வார். யார்? கடவுள்?

இ. உங்கள் போதகரை நீங்கள் காண்பீர்கள். நாம ஒருசிலரைப் பார்த்து 'உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்!' என்று சொல்வோம். ஒருவரை நாம் பார்க்கிறோம் என்றால் அவரின் பிரசன்னத்தை நாம் உள்வாங்குகிறோம் என்றே அர்த்தம். தன் தாயைக் காணவில்லை என்றால் குழந்தை அழுவதற்குக் காரணமும் இதுவே. தன் தாயின் பிரசன்னம் தன்னைவிட்டு அகன்றுவிட்டதாக அது நினைக்கத் தொடங்கி விடுகிறது.

மெசியாவின் வருகை அழுகை நீக்கும் அருமருந்து என்பதே இன்றைய நாளின் மையக்கருத்து.


Thursday, December 4, 2014

டே! கோழி முட்டை!

'இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை. அவன் முகம் வெளிறிப் போவதில்லை.' (காண்க. எசாயா 29:17-24)

மனவியல் நிபுணர்கள் ஒரு மனிதர் நன்றாகக் கையாள வேண்டிய ஒரு மனநிலை எனச் சொல்வது எதுவென்றால் 'சென்ஸ் ஆஃப் ஷேம்'. நாம் ஆடை உடுத்தத் துவங்கும் அன்றே உடல் சார்ந்த மான உணர்வு தொற்றிக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதும் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த போது விடுதி மாணவர்கள் உடை மாற்றக் கொடுக்கப்பட்ட இடம் 'பாக்ஸ் ரூம்' எனப்படும் பெட்டிகள் வைக்கும் அறை. எனக்குத் தெரிந்து சில மாணவர்கள் இடுப்பில் துண்டணியாமல் வெகு இயல்பாக உடை மாற்றுவர். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியவேயில்லை. ஏன்! புனே குருமடத்தில் தனியறை இருந்த போதும் துண்டு உடுத்தி உடைமாற்றம் பழக்கமே தொடர்ந்தது. இப்போ எப்படின்னு கேட்காதீங்க! உடல் சார்ந்த மான உணர்வு ஒருவரின் இல்லத்திலேயே, சிறு வயதிலேயே புகுத்தப்படுகிறது. மேலும், யார் ஒருவர் தன் உடலை இருப்பது போல ஏற்றுக்கொள்ளத் துணிகிறாரோ அவர்தான் உடல் சார்ந்த மான உணர்வை நன்றாகக் கையாள முடியும்.

இரண்டாவதாக, மனம் சார்ந்த மான உணர்வு. அதாவது நம்ம ஊரில் பேசப்படும் மானமா, உயிரா பிரச்சினை. ஒரு சிலருக்கு உயிரை விட மானம் தான் பெரியது என நினைப்பார்கள். தன் வெற்றுடலை மூன்றாம் நபர் பார்த்ததற்காக தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு மானத்தைவிட உயிர்தான் பெரிது. ஏன் நம்ம உடலை டாக்டர் பார்க்க அனுமதிப்பதில்லையா? அதைப் போல எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே. தலைப்பிரசவத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும் புதியதொரு உடல் சார்ந்த உணர்வைப் பெறுகிறார் என்றும், அதற்குப் பின் அவருக்கு உடல் சார்ந்த மானம் பெரிதாகத் தெரிவதில்லை என்றும் சொல்வார்கள்.

மூன்றாவதாக, தன்மானம். இது மேற்சொன்ன இரண்டையும் தாண்டியது. தனி மனித உரிமை, மதிப்பு சார்ந்தது இது. அதாவது நம் சுய மதிப்பிற்கு பங்கம் விளைந்தால் நாம் தன்மானம் இழக்கிறோம். உதாரணத்திற்கு, தெருவில் போகும் போது நம் சாதி பெயரைச் சொல்லி ஒருவர் நம்மை அழைக்கிறார் என்றால் அங்கே நம் தன்மானம் போகிறது. அதாவது, நாம் பிறந்த சாதி ஒருபோதும் நாமாக இருக்க முடியாது. அல்லது ஒருவர் குறைவான மதிப்பெண் பெற்றதற்காக, 'டே! கோழி முட்டை!' என்று சொல்வது தன்மானத்திற்கு எதிரானது.

இந்த மூன்றாவது வகை மானத்தைப் பற்றியே இன்றைய இறைவாக்குப் பகுதி பேசுகின்றது.

யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை.

அந்நியர்களின் படையெடுப்பில் இஸ்ராயேல் மக்கள் அனுபவித்த பெரிய வேதனை என்னவென்றால் அவமானம். அதாவது, தங்களுக்காகப் போரிட ஒரு கடவுள் இருந்தும் தாங்கள் தோற்கிறோமே என்ற நினைப்பும், அந்நியர்களின் கேலிப்பேச்சும் தான். இதிலிருந்து விடுதலை தருவதாக இருக்கிறது மெசியாவின் வருகை.

தன்மானத்தை நாம் வெறும் உடல் மானத்தோடு சேர்த்துக்கொள்ளத் தேவையில்லை. நம் மேல் நாம் கொண்டிருக்கும் மதிப்பு, மரியாதை, அறிவைக் நம் தன்மானத்தின் அளவுகோல்.

'வெ மா சூ சொ' இருந்தால் வாழ முடியாது என்று சொல்வார்கள் சிலர். அதாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் வாழ முடியாதாம்.

இதைப்பற்றிய ஒவ்வொருவரின் கருத்து மாறுபடக்கூடியதே!




மனதில் உறுதி வேண்டும்!

'அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்.' (காண் எசாயா 26:1-6)

ஆண்களின் மனம் திடமான கல்லைப் போன்றது என்றும், பெண்களின் மனம் நெகிழும் களிமண் போன்றது என்றும், ஆகவே தான் திருமண உறவு வாழ்க்கை சாத்தியம் என்றும் ஒரு அருட்பணியாளர் மறையுரை வைத்ததைக் கேட்டேன். ஆண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணம் நடந்தால் அது கல்லும், கல்லும் மோதிக்கொள்வது போலவும், பெண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடந்தால் நெகிழ்ந்து போய்விடும் என்றும் தொடர்ந்து சொல்லியதோடு மட்டுமல்லாமல், இந்தக் காரணத்தால் ஓரின திருமண நிலையை அவர் எதிர்ப்பதாகவும் சொல்லி முடித்தார். ஒரு திருமண நிகழ்வுத் திருப்பலியில் இவ்வளவு சொல்லியிருக்கத் தேவையில்லை தான். இவர் சொல்வதை ரொம்ப 'ராவாக' எடுத்தால் அதில் ஒரு செக்ஸிஸ்ட் டோன் இருப்பதாகவும் தெரிகிறது.

சரி...இதெல்லாம் எதுக்கு இன்னைக்கு?

மன உறுதியைப் பற்றிப் பேசுவதற்காகத்தான்.

கே. பாலசந்தர் அவர்களின் 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் பார்த்தீர்களென்றால் அதில் சொல்லப்படுவது என்ன? அதிக துன்பங்களும், அதிக ஏமாற்றங்களும் வந்தால் நம் மனம் உறுதி பெறும். அல்லது உறுதியுள்ள மனதால் தான் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் தாங்க முடியும். துன்பத்தையும், ஏமாற்றத்தையும் மட்டுமல்ல, மகிழ்வையும், வெற்றியையும், அன்பையும், நட்பையும் தாங்குவதற்கும் மனதில் உறுதி வேண்டும்.

மனதில் உறுதி என்றால் என்ன என்று என் வகுப்புத் தோழரிடம் விசாரித்தேன். 'ஸ்டிராங்கான வில் பவர்' என்றார். ஒரு முடிவு எடுத்தால் அதை மாற்றக் கூடாது என்றார். ஆனால் மாறாமல் இருந்தால் என்னங்க வாழ்க்கை அது! கல்லுதான் மாறாம அப்படியே இருக்கும்! நம் இயல்பே மாறுவதுதானே. மாறாம இருந்தால் நாம இன்னும் குரங்காத்தான் இருந்திருப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படும் மனவுறுதி பயத்தையும், வலியையும் தாங்கக் கூடிய மனவுறுதி. மெசியாவின் வருகையில் எல்லாருக்கும் பயமும், வலியும் நீங்கி விடும்.


Wednesday, December 3, 2014

இந்தியாவில் இந்தியருக்காக!

நேற்று (திங்கள்) காலை இந்தியத் தலைநகர் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியில் புனித செபஸ்தியார் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மத்திய அமைச்சர் சாத்வி 'கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் ராமரின் பிள்ளைகள்' என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை தருகின்ற ஒரு நாட்டில் இந்த மாதிரி தீயிடும் சம்பவங்கள் நடப்பதும், ஆட்சியாளர்களே இப்படிப் பேசுவதும் ஏற்புடையது அல்ல.

'நாம் எல்லாரும் இயேசுவின் குழந்தைகள்' என்று சொல்வது எந்த அளவிற்குத் தவறோ, அந்த அளவிற்குத் தவறு 'எல்லாரும் ராமரின் பிள்ளைகள்' என்பது.

இன்று கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்டது எப்படி தவறோ, அதே போல காலனியவாதிகளாலும், கிறிஸ்தவ மறைபோதகப் பணியாளர்களாலும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதும் தவறே.

என்னைப் பொறுத்தவரையில் ஒருவரின் மத நம்பிக்கை என்பது நாம் குளியறையில் குளிப்பது போன்றது. நாம் எப்படிக் குளிக்கிறோம் என்பதை யாரிடமும் தம்பட்டம அடிப்பது கிடையாது. 'நீ இப்படிக் குளிப்பது சரியல்ல!' என்று சொல்வதும்,
'நீ இப்படித்தான் குளிக்க வேண்டும்!' என்றும் சொல்வது சால்பன்று. அவரவர் நம்பிக்கை அவரவரின் படுக்கையறைச் செய்தி போல ரகசியமாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியது. கடவுளின் பெயரால் நாம் இன்று ஒருவரை மற்றவர் அடித்துக் கொண்டிருக்கும் போது எந்தக் கடவுளரும் நம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை தானே. ஒருகாலத்தில் கடவுளர்கள் தான் மனிதர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இன்று நிலை மாறிப்போய், கடவுளர்களைக் காப்பாற்றுவதே பெரும்பாடாகிவிட்டது.

இந்தப் பின்புலத்தில் நாளை நம் தாய்த்திருநாட்டில் நாம் கொண்டாடும் ஒரு புனிதரைப் பற்றி இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

தூய பிரான்சிஸ் சேவியர். சேவியர் என்பது இவர் பிறந்த ஸ்பெயின் நாட்டு கோட்டையின் பெயர். பிரான்சிஸ் என்பதுதான் இவரது பெயர். 1506ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தபோது இவருக்கு வயது வெறும் 46 மட்டுமே. 18 ஆண்டுகள் அருட்பணியாளராக இருந்தவர். தன் 36ஆம் வயதில் கோவா கடற்கரையில் கால் பதித்தவர். தன் மறைபரப்புப் பணியில் சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கடுமையான காய்ச்சல் கண்டு இறக்கின்றார். தன் சமகாலத்துக் காலனியவாதிகளோடு இணைந்து இவர் மறைபரப்புப் பணி செய்த போது 'பேய்களின் கோவில்கள்' என்று பல கோயில்கள் தீயிலிடப்பட்டதற்கு இன்றும் வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அதையெல்லாம் இன்று நாம் மன்னித்துவிடுவோம். இவரைப் புனிதர் என்று பார்ப்பதை விட ஒரு மனிதர் என்றும், ஒரு அருட்பணியாளர் என்று மட்டும் இன்று பார்க்கலாமே.

1. 'ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்து விட்டால் அதனால் என்ன பயன்?' - இந்த இறைவாக்குப் பகுதி தான் பேராசிரியப் பணி செய்து கொண்டிருந்த பிரான்சிஸ் சேவியரின் மனதை மாற்றுகின்றது. வாழ்வில் நாம் எவ்வளவு உறவுகளை, பணத்தை, பொருளை சம்பாதித்தாலும், இவையனைத்தோடும் சேர்ந்து ஒரு வெற்றிடம் ஒட்டிக் கொண்டே வருகின்றது. இந்த வெற்றிடத்தின் வழியாக நம் ஆன்மா நம்மிடம் இருந்து ஓடிவிடுகின்றது. இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? கடவுள் தான் நிரப்ப முடியும் என்று கடவுள் பணி ஏற்கின்றார் சேவியர். மேற்கத்திய பின்புலத்தில் ஒருவர் தன் வாழ்வை ஏறக்குறைய தன் 21 வயதிலேயே நிர்ணயித்துவிடுகிறார். 'நான் இதைப் படிப்பேன். இந்த வேலை செய்வேன். இந்த ஊரில் வாழ்வேன். திருமணம் செய்து கொள்வேன் அல்லது இணைந்து வாழ்வேன்' என அனைத்தும் இந்த வயதிலேயே திட்டமிடப்பட்டுவிடுகின்றன. அதற்குப் பின் மாற்றம் என்பதே கிடையாது. அப்படி மாறியவர்கள் பலர் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றனர். ஆனால் சேவியர் துணிந்து மாறியிருக்கின்றார். அந்த மாற்றத்தை வெற்றியாகவும் ஆக்கியிருக்கின்றார்.

2. தன்னை முன் பின் தெரியாத ஒரு ஊருக்கு, தன் உணவுப்பழக்கம், உடைப்பழக்கம், மொழி தெரியாத ஒரு நாட்டுக்குப் பயணம் செய்கிறார். வருடத்தின் ஒன்பது மாதங்கள் 18 டிகிரி தட்பவெப்பநிலையில் வாழ்ந்துவிட்டு, வருடம் முழுவதும் 25-30 டிகிரி தட்பவெப்பநிலை நிலவும் நாட்டில் வாழ்வது பெரிய சவால். நம்மள திடீர்னு சைனீஸ் பேசச்சொன்னால் பேச முடியுமா? தன் மொழியின் உருவம் வேறு. நம் நாட்டின் மொழி உருவம் வேறு. மேலும், தென்னிந்தியா முழுவதும் அவர் பயணம் செய்த போது கொங்கனி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளைப் பேசியிருக்க வேண்டும். காடும், மேடும் நிறைந்த பகுதி. மின்சார வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி என எதுவும் இல்லாத இடத்தில் அவர் செய்த பணியை நினைத்துப் பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது. இன்று எல்லாம் இருந்தும் பணி செய்வது கடினமாகத்தான் இருக்கிறது.

3. தான் சென்ற இடத்தையும், தான் சந்தித்த மக்களையும் அன்பு செய்தார். 'நான் வெள்ளைக் காரன்! நீங்க வேற கலர் காரங்க!' என்ற ஒரு மனநிலை இருந்திருந்தால் அவர் இத்தனை உள்ளங்களை சம்பாதித்திருக்க முடியாது. இன்றும் தூத்துக்குடி, கோட்டாறு பகுதிகளில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார். வாழ்க்கை மிகப் பெரியது என்று நமக்குக் காட்டியவர்கள் இந்த வெளிநாட்டுக்காரர்கள் தாம். ஒருவேளை இந்த வெள்ளைத் தோல்களையே நாம் பார்த்திராவிடில் நாமும் கிணற்றுத் தவளைகளாகத் தான் இருந்திருப்போம்.

நான் திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்படுவதற்கு முன்னும், அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட பின்பும் கோவாவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு முறைகளும் இவரின் அழியா உடல் இருக்கும் ஆலயத்திற்குச் சென்றேன். என் அருட்பணி வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டேன்.

இவரின் திருநாளில் இன்று என் நினைவிற்கு வருவது தூய பவுலடியாரின் வார்த்தைகள் தாம்: 'நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்'.

ஒரு டாக்டர் மற்றவரிடம் டாக்டராகவே தொடர்பு கொள்கிறார். ஒரு வக்கீல் மற்றவரிடம் வக்கீலாகவே தொடர்பு கொள்கிறார். ஒரு ஆசிரியர் மற்றவரிடம் ஒரு ஆசிரியவராகவே தொடர்பு கொள்கிறார். ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றவரிடம் ஒரு சாப்ட்வேர் இன்ஜனியராகவே தொடர்பு கொள்வார். ஆனால், ஒரு அருட்பணியாளர் மட்டுமே எல்லாருக்கும் எல்லாமாக மாறுகின்றார். குழந்தைகளுக்குக் குழந்தையாக, இளையோருக்குத் தோழராக, வயது வந்தோருக்கு மகனாக, பங்குத் தளத்தில் தந்தையாக, ஆசிரியராக, ஆலோசகராக அவர் மட்டுமே மாற முடியும். இந்த அருட்பணி நிலை தான் தூய பிரான்சிஸ் சேவியரை நம் மண்ணைத் தேடி வர வைத்தது. நம்மோடு கரம் கோர்த்துக்கொள்ள வைத்தது.

அருட்பணி நிலையில் தனிமை, விரக்தி, வஞ்சகம், ஏமாற்றம் எல்லாம் இருக்கும் தான். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்து வரும் துணிவும் இருக்கும். இவர்களுக்கென்று எந்த இல்லமும் இருப்பதில்லை. ஆனால் இவர்களில் எவரும் 'இல்லம் இல்லை' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று சில நேரங்களில் தெரியாது தான். ஆனால் என்றும் இவர்கள் வயிறு பசியால் சுடப்படுவதில்லை. எல்லாருக்கும் எல்லாமாய் மாறி நிற்பதுதான் என் அருட்பணி நிலையின் உச்சகட்டம் என்று நினைக்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது.

இவரின் உயிர் இன்று பிரிந்தாலும், இந்த மண்ணுக்கு இவரின் உடலைப் பிரிய மனமில்லை போல். ஆகையால் தான் இன்றும் காலத்தால் அழியாப் புகழுடலோடு நம் மண்ணில் நிலைத்திருக்கின்றார்.

இவரின் துணிச்சல், தியாகம், பிறரன்பு என்னைப்போன்ற அருட்பணியாளர்களுக்கு ஒரு வாழ்வியல் பாடம்.

பிரான்சிஸ் சேவியர் - இந்தியாவில் இந்தியருக்காக!


Tuesday, December 2, 2014

ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு!

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும். சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். (காண். எசாயா 11:1-10)

இன்று மாலை கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். இரண்டு பேர் ஒரு மரத்தடியில் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தனர். எனக்கே எதிரே மற்றொருவர் தன் நாயோடு வந்து கொண்டிருந்தார். இரண்டு தரப்பினரிடம் இருந்ததும் நன்று பழக்கி வைக்கப்பட்ட, தினமும் பயிற்சி கொடுக்கப்படுகின்ற வீட்டு நாய்களே. ஆனால் இரண்டு நாய்களும் ஒன்றுக்கொன்று சந்தித்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று பாய ஆரம்பித்துவிட்டன. அவைகள் சண்டையிடும் உக்ரத்தைப் பார்த்து நாய் உரிமையாளர்களும் கைகளில் பிடித்திருந்த கயிறுகளை உதறிவிட்டனர். நாய்ச்சண்டை நமக்கெதுக்கு என்று நானும் இல்லம் திரும்பினேன்.

என்னதான் செல்லப்பிராணி என்று வீட்டில் வளர்த்தாலும் நாயின் இயல்பு மாறுவதில்லை. தன்னை வளர்த்த யானைப் பாகனையே யானை கொன்று போட்ட நிகழ்வுகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். மனிதர்களாகிய நாமும் என்னதான் ஆளுமை வளர்ச்சி, படிப்பு என்று இருந்தாலும் சமயம் கிடைக்கும் போது நம் இயல்பும் வெளிப்பட்டு விடுகிறது. நாம் அனைவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமையும், யாரையும் சுடலாம் என்று சட்டமும் இருந்தால் நாமும் இந்நேரம் நிறையப் பேரைச் சுட்டுத் தள்ளியிருப்போம். இல்லையா?

மேலே குறிப்பிட்டுள்ள எசாயா வாசகப்பகுதியில் ஒரு விநோதம் இருக்கின்றது. அதாவது, மெசியாவின் வருகையின் போது துன்பம் எதுவும் இருப்பதில்லை. பிறருக்குத் துன்பம் தருவதை தங்கள் இயல்பாகக் கொண்ட பாம்பு, சிங்கம், சிறுத்தையின் இயல்புகள் கூட மாறிவிடும் என்று முழங்குகின்றார் எசாயா.

சிங்கம் எப்போது மற்றொரு விலங்கை வேட்டையாட மறுக்கும்? தன் வயிற்றுக்கு உணவு கிடைக்கும் போது. தன் வயிறு நிறைந்து விட்டால் அது மற்ற உயிருக்கு தீங்கிழைக்காது.

மனிதர்கள் மற்றவர்களுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் - பசி. பசி வந்தவுடன் கொஞ்சம் எடுக்க, பின் அதுவே ஆசையாக மாற தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் நாம் அந்த இயல்பை விட்டுவிட நினைத்தாலும் அந்த இயல்பு நம்மை விட்டுவிடுவதில்லை.

இன்று நம்மிடம் நாம் விரும்பாத இயல்பு ஒன்று இருந்தால் அதன் காரணத்தை ஆராய்ந்து அதை விட்டுவிடும் மனப்பக்குவம் பெறலாமே!


Monday, December 1, 2014

சாரை சாரையாக...

திருவருகைக்காலத்தின் ஒவ்வொரு நாள் வாசகமும் மிகவும் அழகாக இருக்கும். ஆகையால் நேரம் இருந்தால் முதல் வாசகத்தையாவது தினமும் வாசிக்க நாம் முயற்சி செய்யலாம்.

என் வாழ்க்கைப் பேட்டரி டவுண் ஆகிப் போகும் போதெல்லாம் நான் சார்ஜ் செய்யும் இடம் திருவருகைக்கால வாசகம் தான். ஒவ்வொரு வாசகத்திலும் ஒரு நம்பிக்கைத் துளி இருக்கும்.

'மக்களினங்கள் உன்னை நோக்கி சாரை சாரையாய் வருவார்கள்!' (காண். எசாயா 20:1-5)

இந்த வரிதான் நாளைய முதல் வாசகத்தின் மையம். எருசலேம் நகரம் உயர்த்தப்படும் என்றும் அதை நோக்கி மக்கள் சாரை சாரையாக வருவார்கள் என்றும் இறைவாக்கு உரைக்கிறார் எசாயா.

உணர்வுகளில் மிகவும் கொடுமையான உணர்வு என்னவென்றால் நம்மைத் தேடுவதற்கு யாரும் இல்லை என்ற உணர்வும், நம்மிடம் யாரும் வரமறுக்கிறார்கள் என்ற உணர்வும் தான்.

நாம செய்யும் எல்லாக் காரியத்தையும் பாருங்களேன். நாம காலையில் குளிப்பதிலிருந்து, நல்ல ஆடை அணிவதிலிருந்து, பொட்டு வைத்து அலங்கரிப்பதிலிருந்து எல்லாவற்றையும் நாம் செய்வது நம்மை யாராவது பார்க்க வேண்டும், தேட வேண்டும், அணுகி வரவேண்டும் என்பதற்காகத் தான். இப்படி இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. கிரேக்கப் புராணம் ஒன்றின் படி நம்மைப் படைத்த இறைவன் நம்மை இரண்டு பகுதிகளாக வெட்டி இந்தப் பூமிக்கு நம்மை அனுப்புகிறாராம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் நமது மற்றொரு பகுதியைத் தேடிக்கொண்டே இருக்கின்றோம். ஆகையால் தான் நாம் ஒருவர் மற்றோடு உறவாட முடிகிறதோ. 'ஒருவேளை இவர் நம் பாதியாக இருப்பாரோ! அவர் நம் பாதியாக இருப்பாரோ!' என தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எங்கள் பங்கில் கடந்த வாரம் நடந்த ஒரு இறப்புச் சடங்கிற்கு இறந்தவரின் மனைவியும், அவர்களது ஒரு மகனும் மட்டும் வந்திருந்தார்கள். இறந்தவரைச் சேர்த்து ஆலயத்திற்கு வந்திருந்தவர்கள் மொத்தம் இந்த மூன்று பேர்தான். வாழ்க்கை முழுவதும் இவர் வேறு நண்பர்களையே தேடிக்கொள்ளவில்லையா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

உன்னைத் தேடி சாரை சாரையாய் மக்கள் வருவார்கள் என வாக்களிக்கின்றார் கடவுள்.

யாரைத் தேடி மக்கள் வருவார்கள்? நிறைவாக இருப்பவரைத் தேடியே வருவார்கள். தண்ணீர் ஊறும் கிணற்றுக்குத்தான் மக்கள் செல்வார்களே தவிர, காய்ந்து போன கிணற்றுக்கு அல்ல. பணம், பதவி, அதிகாரம், ஆற்றல் என நிறைந்திருக்கும் ஒருவரையே மக்கள் தேடுவார்கள். அணுகிச் செல்வார்கள்.

ஆக, இறைவன் இன்று தரும் வாக்குறுதி, 'நீ நிறைவுள்ளவராய் இருப்பாய்!'

நிறைவுள்ளவராக இருக்க நாம் என்ன செய்யணும்?

'என்னிடம் நிறைவு இருக்கு' என்று நாம் முதலில் நம்பணும். நம்மில் இல்லாதவற்றைப் பற்றி வருத்தப்படவே கூடாது. ஆங்கிலத்தில் இதை 'அபன்டன்ஸ் மென்ட்டாலிட்டி' என்று சொல்வார்கள். நம்மை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, நாம் முதலில் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை நம் ஆழ்மனம் வரை செல்ல வேண்டும். கனவிலும் இந்த நம்பிக்கை கலைந்துவிடக் கூடாது. அப்படி ஒரு நம்பிக்கை வந்துவிட்டால் நாம் நிறைவு பெற்றுவிடுவோம்.

நம்மை நோக்கி சாரை சாரையாக வருவார்கள்!


Saturday, November 29, 2014

அப்படி வந்தால் தான் அவரு கடவுள்!

நாளை நாம் திருவருகைக்காலத்தைத் தொடங்குகிறோம். திருவருகைக்காலம் என்பது கத்தோலிக்கத் திருஅவையின் வழிபாட்டு ஆண்டின் நான்கு பெரும்பகுதிகளில் ஒன்று. மற்றவை பொதுக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம். நாளை வழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு. திருப்பலி புத்தகம் முதல் பக்கத்திலிருந்தும், வாசகப்புத்தகம் தன் முதல் பக்கத்திலிருந்தும் பயணத்தைத் தொடங்கும்.

எதற்காக திருவருகைக்காலத்தைக் கொண்டாடுகிறோம்? திருவருகையின் அர்த்தம் என்ன?

இதன் ஆங்கிலப் பதம் 'அத்வெந்து'. நாம் சாலையில் செல்லும் போது வழியில் எங்காவது ஒரு ப்ராடஸ்டன்ட் சர்ச் 'நியு அத்வெந்து சர்ச்' என்றோ அல்லது 'செவன்த்டே அன்வென்டிஸ்ட் சர்ச்' என்றோ பார்த்திருப்போம். ஆண்டவரின் வருகைக்காக மக்களை தயாரிக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் என இவர்கள் தங்களையே அழைத்துக் கொள்வது வழக்கம்.

நாம் நெருக்கமாக அன்பு செய்யும் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து நீண்டதொரு பயணம் மேற்கொண்டாலோ, அல்லது படிப்பு, வேலை, குடும்பம் என மற்றொரு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு விட்டாலோ அவரின் வருகை திரும்ப வராதா என எதிர்பார்ப்பது இயல்பு.

இந்த எதிர்பார்ப்பில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன:

அ. அந்த நபர் நம்மோடு இருந்தபோது நாம் கொண்டிருந்த மகிழ்ச்சி. எல்லாருடைய வருகையையும் நாம் எதிர்பார்க்கிறோமா? இல்லை! இப்பதான் காய்ச்சல் வந்துவிட்டுப் போக, நம் பிரட், கஞ்சி என்று சாப்பிட்டு துரும்பாய் இளைத்துப்போக, அந்தக் காய்ச்சல் திரும்ப எப்போ வரும் என்று நாம் எதிர்பார்க்கிறோமா? இல்லை. நம்மைக் கடித்த கொசு திரும்ப வரும் என்று எதிர்பார்க்கிறோமா? இல்லை. நமக்கு நிறைவும், மகிழ்ச்சியும் தந்த ஒன்றைதான் நாம் திரும்ப எதிர்பார்க்கிறோம்.

ஆ. எதிர்பார்ப்பில் ஒரு காத்திருத்தல் இருக்கும். எதிர்பார்ப்பதும், காத்திருத்தலும் இணைந்தே செல்லக் கூடியவை. நாம் எதிர்பார்க்காத ஒன்றிற்காக காத்திருப்பதுமில்லை. நாம் காத்திராத ஒன்றை எதிர்பார்ப்பதும் இல்லை.

ஆக, வருகை என்பது இடமும், நேரமும் சார்ந்தது.

திருவருகைக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக காத்திருக்கின்றனர். மற்ற மதத்தினரோ அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களோ இயேசுவுக்காக காத்திருப்பதில்லை.

ஏற்கனேவே இயேசு வந்ததை நினைவுகூறி கொண்டாடுவதாகவும், திரும்பவும் அவர் வருவதற்கான தயாரிப்பாகவும் திருவருகைக்காலம் அமைகின்றது.

நாம் யாரையாவது எதிர்பார்க்கிறோம் என்றால் அவர் வரும்போது அவருக்கு விருப்பமான ஆடை அணியவும், உணவைத் தயார்செய்யவும் முனைப்பாய் இருப்போம். திருவருகைக்காலத்தில் இயேசுவை எதிர்பார்க்கிறோம் என்றால் அதற்கேற்ற தயாரிப்பு இருக்க வேண்டும்.

ஆனா நம்ம எல்லார் மனசுக்குள்ளும் கடவுள் அப்படி சீக்கிரம் வந்துட மாட்டார் என்றே தோன்றுகிறது. சீக்கிரம் வரக்கூடாது என்றும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு, இருட்டுல ஒரு உருவம் தெரிவது மாதிரி இருந்தால் அதை நாம் பேய் என்று தான் சொல்கிறோமே தவிர, ஒருபோதும் அது கடவுளாய் இருக்குமோ என்று சொல்வதே கிடையாது. ஏன்னா நமக்கு நிச்சியமாகத் தெரியும் கடவுள் வரமாட்டார் என்று!

'இதோ அவர் சீக்கிரமாய் வருகிறார்!' என்று ஒரு கூட்டம் இயேசுவின் வருகையை வியாபாரமாக்கவும் தொடங்கி விட்டது.

இன்னைக்கு உங்க வீட்டுக்கு வெளியில அப்படி யாராவது சத்தம் போட்டுக்கொண்டு போனாலோ, அல்லது மைக் வைத்துக் கொண்டு அலறினாலோ என்ன செய்யணும்?

ரொம்ப சிம்பிள்!

குளிச்சுகிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து குளிங்க!
துணிதுவச்சிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து துவைங்க!
சாப்பிட்டுட்டு இருக்கீங்களா...தொடர்ந்து சாப்பிடுங்க!
குழந்தைக்கு தலைசீவி விடுறீங்களா...தொடர்ந்து செய்யுங்க!
அடுப்புல உலை கொதிக்குதா...அரிசியைப் போடுங்க!
தெய்வம் தந்த வீடு பார்க்குறீங்களா....தொடர்ந்து பாருங்க!
படிச்சுகிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து படிங்க!
கஸ்டமர் கேர்ல பேசிட்டு இருக்கீங்களா....தொடர்ந்து பாருங்க!
ஃபேஸ்புக் ஸ்டேஸ் போடுறீங்களா...தொடர்ந்து போடுங்க!
ஏன்னா...இந்த எல்லா நிகழ்வுகளிலும் அவர் இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்.
இதுல எப்படிங்க வருவாரு...அவர் வானத்துல தான் வருவாருன்னு
வெளியே ஓடி வராதீங்க...
அவர் எதுலயும் வர முடியும்...அப்படி வந்தால் தான் அவரு கடவுள்...




Friday, November 28, 2014

இரக்கம் அப்படின்னா என்ன?

இரக்கம் அப்படின்னா என்னன்னு நினைக்கிறீங்க?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை கட்டளைச் செபத்தில் திபா 51 முதலாவது திருப்பாடலாக இருக்கிறது. தாவீது அரசர் ஆண்டவரின் இரக்கத்தை வேண்டுவதே இந்தப் பாடல்.

கடவுள் தான் மனிதர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதல்ல, மனிதர்களும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டலாம். வயதிலோ, ஆற்றலிலோ பெரியவர் தான் சிறியவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதல்ல. சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு இரக்கம் காட்டலாம்.

'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்!' என்று இயேசு தன் எதிராளிகளைப் பார்த்து அடிக்கடிச் சொல்வார் (காண். மத் 9:13). இது ஆக்சுவலா ஒசேயா இறைவாக்கினரோட வார்த்தைகள் (காண். ஒசே 6:6). இதன் அர்த்தம் என்ன?
ஓய்வுநாளில் சூம்பிய கையுடைய ஒருவரை இயேசு குணமாக்கும் போது அவரோட எதிரிகள் முணுமுணுக்கிறார்கள். அதெப்படி ஓய்வு நாளில் இவர் செய்யலாம்? ஓய்வு நாளில் யூதர்கள் எருசலேம் ஆலயம் சென்று பலி செலுத்துவது வழக்கம். பலி செலுத்தச் செல்ல வேண்டுமென்றால் தூய்மையாக இருக்க வேண்டும். இயேசு செய்யும் இந்தச் செயலால் அவரின் தூய்மை குறைகிறது. ஆக, அவர் பலி செலுத்துவதற்கான தகுதியை இழந்து விடுகிறார். ஆனாலும் துணிச்சலாக, போங்கடா நீங்களும் உங்க பலிகளும்! அவற்றைவிட இரக்கம் தான் பெரிது என்கிறார்.

இரக்கத்தைப் பற்றி மகாபாரதம் (பகவத் கீதை) அழகாகச் சொல்கிறது. மகாபாரதத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் உரையே கீதை. சரிதானே! ஆம்.

சமநிலையில் இருக்கும் ஒருவரால் தான் இரக்கம் காட்ட முடியும் என்று சொல்கிறது கீதை. சமநிலை என்றால் என்ன? கலக்கம் இல்லாத நிலை. ரெஸ்ட்லெஸ்ஸா இல்லாமல் அமைதியாக இருக்கும் ஒரு நிலை. இந்த நிலை எங்கே இருக்கணும்?

இதயம், மனம், மூளை, உடல் மற்றும் ஆன்மா என இந்த ஐந்தும் சமநிலையில் இருக்க வேண்டும்.

அ. இதயம் அன்பு இல்லாதபோது கலக்கம் அடைகிறது.
ஆ. மனம் மன்னிக்காத போது கலக்கம் அடைகிறது.
இ. மூளை ஞானத்தை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.
ஈ. உடல் அர்ப்பணத்தை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.
உ. ஆன்மா நீதியை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.

இதயம் அன்பையும், மனம் மன்னிப்பையும், மூளை ஞானத்தையும், உடல் அர்ப்பணத்தையும், ஆன்மா நீதியையும் பெற்றிருப்பதே சமநிலை.

இந்தச் சமநிலை இருந்தால் நாமும் ஒருவர் மற்றவருக்கு இரக்கம் காட்ட முடியும். ஆனால் பல நேரங்களில் நம் இதயத்தில், மனத்தில், மூளையில், உடலில், ஆன்மாவில் ஏதோ கலக்கம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

இந்தச் சமநிலையை அடைவதே சமாதிநிலை என்றும் சொல்லலாம். இந்த நிலையில் நாம் முழுமையாக நிர்வாணமாகிவிடுகிறோம். அந்த நிர்வாணாவில் நமக்கு அடுத்திருப்பவர் நம்மில் ஒரு பகுதியாகவே தெரிகிறார். அங்கே இரக்கம் தானாய் நிரம்பி வழிகிறது!

என்ன ரொம்ப சீரியஸாயிட்டேனா...?


ஜில் ஜில் ஜிகர்தண்டா

நேற்று இரவு 'ஜிகர்தண்டா' திரைப்படம் பார்த்தேன். 'சூது கவ்வும்' முகங்களே இதிலும் அதிகம் தெரிந்தன. ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸ் நம்ம மதுரை தான். 'சுகர்' என்பதன் வடமொழியாக்கமே 'ஜிகர்'. 'தண்டா' என்றால் குளிர். ஆக, குளிர்ந்த சர்க்கரை தான் ஜிகர்தண்டா. மதுரையில் ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸான கடை விளக்கத்தூணிற்கு அருகில் உள்ளது. திரைப்படமும் மதுரையையும், மதுரையின் மண்வாசனையையும், மல்லிகை வாசனையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அடி தடி என இருந்த அசால்ட் சேது அழுகுனி குமாராக மாறுவது தான் கதைச் சுருக்கம்.

இந்தத் திரைப்படத்தில் இரண்டு வரிகள் என்னைக் கவர்ந்தன:

அ. மத்தவங்களுக்கு நம்ம மேல பயம் இருந்துகிட்டே இருக்கணும். அந்தப் பயம் தான் நம் பலம்.

இது என்னவோ உண்மை தாங்க. நம்ம வாழ்க்கையவே பாருங்க. நாம யாரைப் பார்த்தாவது பயப்படுவோம். அல்லது நாம யாரையாவது பயமுறுத்திகிட்டே இருப்போம்.

எங்க பிரிட்டோ ஸ்கூல்ல ஒரு பி.இ.டி வாத்தியார் இருந்தார். ஒரு நாள் நான் தண்ணி குடிச்சிகிட்டு இருந்தப்போ பின்னால முதுகுல ஒரு குச்சியால அடிச்சார். அதோட மட்டுமல்லாமல் தொடர்ந்து தலையைப் பிடித்து அடிச்சுகிட்டே நடு கிரவுண்டுக்குக் கூட்டிப்போனார். எல்லா ஜன்னல்களிலிருந்தும் ஸ்டூடண்ஸ் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தாங்க. 'குடிப்பியா! குடிப்பியா!' என்று ஏதோ டாஸ்மாக்ல பியர் வாங்கிக் குடிச்சது போல அடிச்சார். அந்த அடியை நான் தான் வாங்கினேன். ஆனால் அதன் பின் யாரும் அந்தக் குழாயில் தண்ணீர் குடிக்கவேயில்லை. பயம் காட்டுவதில் இது ஒரு ரகம். தூக்குத் தண்டனை இருப்பதன் அர்த்தமும் இதுதான். தூக்குல தொங்குறவனைப் பார்த்து பயந்து மத்தவங்க திருந்தணும் என்பதற்காகத் தான்.

நம்மையறியாமலே நாம் எதற்கோ, யாருக்கோ பயந்துகிட்டே இருக்கிறோம். நாம யாருக்கு பயப்படுறோமோ அவங்களுக்கு அடிமை ஆயிடுறோம். நம்மள பார்த்து யாரும் பயப்படலனாலும், தெருவுல போற நாயைப் பார்த்து கல்லெடுத்து ஓங்கியவுடன் அது ஓடுவதைப் பார்த்து ஒரு மெல்லிய புன்முறுவலையும் பூக்க வைக்கும் போது நமக்குள்ளே ஒரு பெருமித உணர்வு வரத்தான செய்யுது.

ஆ. உனக்கு வெளியில இருக்கிறவன் 'நீ ஜெயிச்சுட்டியா, தோத்துட்டியானு' சொல்லக் கூடாது. உனக்கு உள்ளிருப்பவன் தான் சொல்ல வேண்டும்.

நம்மகிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட குணம் அப்ரூவல். யாராவது நம்மைப் பார்த்து, 'டே! நீ நல்லா இருக்க! நீ நல்லவன்! இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு!' என்று சொல்லிக் கொண்டே இருக்கணும். தப்பா யாராவது சொல்லிட்டா உடனடியா நம்ம மூஞ்சு தொங்கிப் போகுது. அப்ரூவல் தேடுவது நம்மை பிச்சைக்காரராக்கி விடுகிறது. அடுத்தவர்கள் போடும் சில்லறை ரிமார்க்குகளில் நம் வாழ்க்கை நகர ஆரம்பிக்கிறது. காலப்பபோக்கில் நம் பிறப்பு முதல் நம் கூடவே வரும் நம் உள்மனிதனை மறந்து விடுகிறோம்.

எனக்கு ஒரு பாலிஸி உண்டுங்க. நம்ம பிரண்ட்ஸ், ரெலடிவ்ஸ், லவ்வர்ஸ் இவங்கல்லாம் நம்ம கூடவே இருப்பது போல இருந்தாலும், அவங்க நம்ம கூட இருப்பதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நமக்கு இருக்கும் நண்பர் நாம் மட்டும் தான். நம்மை நாமே அன்பு செய்ய, ஏற்றுக் கொள்ள பழகிக்கிட்டோம்னு வையுங்க வாழ்க்கையில ஜெயிச்ச மாதிரி தான்.


Wednesday, November 26, 2014

சிலேட் நினைவு!

என் நண்பர் ஒருவருக்கு ஐபேட் வாங்குவதற்காக அவரோடு கடைக்குச் சென்றிருந்தேன். ஐபேட் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மட்டுமே. மற்றவைகள் எல்லாம் டேப்ளட் எனவே அழைக்கப்படுகின்றன. எச்பி நிறுவனம் தன் தயாரிப்புகளுக்கு ஸ்லேட் எனப் பெயர் வைத்திருக்கின்றது. நம் கலைஞர் கருணாநிதி இதற்கு 'வரைவுப்பட்டிகை' என்று தமிழ்ப்படுத்தியுள்ளார். வரைவுப் பதாகை என்றும் கொள்ளலாம்.

அந்தக் கடையில் இருக்கும் போது சின்ன வயசுல ஸ்லேட் வச்சிருந்ததுதான் நினைவிற்கு வந்தது. என் பள்ளிப்பருவத்தில் மூன்று வகை ஸ்லேட்களை பயன்படுத்தியிருக்கிறேன். முதலில் கல்லில் உள்ள ஸ்லேட். என்ன வகை கல் என்று தெரியவில்லை. ஆனால் ஓங்கி அடித்தால் உடைந்து விடும். சுற்றிலும் மரத்தினால் செய்யப்பட்ட ரீப்பர் இருக்கும். விளிம்புகளில் தகரம் அடிக்கப்பட்டடிருக்கும். இந்தத் தகரம் பட்டுக் கிழிந்த பைகளும், சட்டைகளும் சில. அடுத்த வகை, பிளாஸ்டிக் மற்றும் தகரம். பிளாஸ்டிக்கினால் ஆன ஃப்ரேம். தகரத்தினால் ஆன எழுதும் பகுதி. இந்தப் பிளாஸ்டிக் தான் என் பசி போக்கும். எழுதும்போது இன்று நகத்தைக் கடிப்பது போல அன்று பிளாஸ்டிக் ஃப்ரேமை கடித்ததுண்டு. நானாவது பரவாயில்லை. என் வகுப்புத் தோழன் ஒருவன் பிளாஸ்டிக் ஃபிரேம் முழுவதையும் கடித்து எடுத்துவிட்டு அந்த தகரப் பகுதியைக் கொண்டு ஒரு சண்டையில் மற்றவன் கையை கிழித்தும் விட்டான். மூன்றாம் வகை ஏறக்குறைய இரண்டாம் வகை போல தான். ஆனால் எழுதும் பகுதி கறுப்பாக இருப்பதற்குப் பதிலாக ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும்.

சிலேட்டில் எழுதுவது ஒரு கலை. 12 வாய்ப்பாடுகளையும் அதற்குள் அடக்க சின்ன இன்ஜினியரிங் பண்ண வேண்டும். எழுதியது அழியாமல் பக்குவமாக புத்தகப் பைக்குள் வைக்க வேண்டும். பல நேரங்களில் எழுதிய சிலேட்டைக் கையில் தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். எழுதும்போது நம் கை அழுத்தி எழுதிய இடம் அழிந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிலேட்டில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்தியார் 'சரி' என்று ஒரு டிக் அடித்தால் எழுதப்பட்டது தன் நிறைவை அடைந்து விடுகிறது. திரும்ப அடுத்த நாள் எழுத வேண்டும். மறுநாள் திரும்பவும் வாய்ப்பாடு எழுதுவதற்கு பதில் வாத்தியாரின் டிக் மார்க்கை மட்டும் அழித்து விட்டுக் கொண்டு சென்ற நாட்களும் உண்டு.

எழுதும் குச்சியிலும் மூன்று வகை உண்டு: சாதா குச்சி, மாவு குச்சி மற்றும் கடல் குச்சி. சில குச்சிகளைக் கொண்டு எழுதினால் பல் கூசுவது போல கீச் கீச் என்று இருக்கும். குச்சி வழுக்கும்.

ஆறாம் வகுப்பு சென்ற போது கிடைத்த பெரிய மாற்றமே 'இனி சிலேடு தேவையில்லை!' என்பதுதான். ஆனாலும் கணக்கு படிப்பிற்கு மட்டும் 12ஆம் வகுப்பு வரை சிலேடு ஒன்று வைத்திருந்தேன்.

உடனடிக் குறிப்பு எழுத, ரஃப் ஒர்க் செய்ய, ஸ்டடி ஹாலில் அமைதியாக ஒருவர் மற்றவரோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய, 'இது என் இடம்' என இடம் பிடிக்க என சிலேடு பழக்கத்தில் இருந்து கொண்டே இருந்தது.

இன்று பெரும்பாலும் வெள்ளை சிலேட்டும், மார்க்கர் பேனாக்களும் தான் புழக்கத்தில் இருக்கின்றன.

ஒரு எழுத்தை ஒருமுறை எழுதுவதற்குப் பதிலாக இன்றைய டேப்ளட்களில் மூன்று முறை அழித்து எழுதுகிறார்கள் மக்கள் என சொல்கிறது ஒரு ஆய்வு. ஒவ்வொரு நாளும் மேம்பட்ட நிலைக்குத் தொழில்நுட்பம் கடந்து சென்றாலும் சின்ன வயசு ஸ்லேட்டின் இடத்தை எதுவும் எடுத்துவிட முடியாது.

இன்று சிலேடுகள் பெரும்பாலும் கடைகளில் விலைப்பட்டியில் எழுதித் தொங்கவிடுவதற்கு மட்டும்தான் பயன்படுகின்றன.

இப்போ நம் முன்னால் எக்கச்சக்கமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தொடுக்கு தான். ஆனால் நாம் எந்தத் தகவல்களை உட்கிரகித்துள்ளோம் என்பதைச் சரி பார்க்க ஒரு சிலெட் தேவை தான்.

'தாபுலா ராசா' என்பது இந்த நுட்பத்தின் பெயர். இதன் அர்த்தம் 'வெற்று சிலேடு' அல்லது 'வெள்ளைத் தாள்'. உங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் பற்றி நீங்க எவ்வளவு தெரிஞ்சு வைத்திருக்கீங்க என்றால் ரொம்பத் தெரியும் என்று சொல்வோம். ஒரு சிலேடைக் கொடுத்து அவரைப் பற்றி என்ன எழுதுவீர்கள் என்றால் நாம் என்ன எழுதுவோம். நாம் வெற்றுத் தாளில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவுதான் அவரை நமக்குத் தெரியும்.

சின்ன வயசின் சிலேட் நினைவு வந்து திரும்பும் நேரத்தில் என் நண்பரின் கைக்கு புதிய ஐபேடும், பில்லும் வந்து சேர்ந்தது.


இதெல்லாம் ரொம்ப சகஜம்!

இன்று வகுப்பில் என் நண்பன் ஒருவன் சோகமாக அமர்ந்திருந்தான். தனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை எனவும், தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனவும் புலம்பிக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென கலங்க ஆரம்பித்து விட்டன. என்னவென்று விசாரித்த போது, இன்று காலையில் அவனது பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஒரு பேருந்தில் ஏற முற்பட்ட போது இரண்டு பேர் சேர்ந்து அவனை வெளியே தள்ளியிருக்கிறார்கள். ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை. அவனிடம் இருப்பதும் டிக்கெட் தான். அவர்களிடம் இருப்பதும் டிக்கெட் தான்.

ரோம் நகரில் இதெல்லாம் ரொம்ப சகஜம். நாம் பேருந்தில் ஏறினாலும் நாம் சுமந்து கொண்டிருக்கும் பேக்பேக் தெரியாமல் மற்றவர் மேல் இடிக்க, அவர் நம்மைத் திரும்பிப் பார்த்து, நாம் இத்தாலியர் இல்லையென்றால் நம்மை அவர் ஒரு முறை இடிப்பார். இத்தாலியர் என்றால் புன்முறவல் பூப்பார்.

அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை.

'என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்!' என்ற உணர்வு நம்மை ஒரேயடியாகச் சாய்த்து விடுகிறது.

மற்றவர்களை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

முதல் காரணம் 'என்னிடம் எல்லாம் இருக்கிறது. ஆக, எனக்கு யாரும் தேவையில்லை' என்ற மனோபாவம். இரண்டாவதாக, பயம். மற்றவர்களைக் குறித்துப் பயம் இருந்தாலும் நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இங்குள்ள மக்களுக்கு தங்கள் நிறத்தைத் தவிர வேறு நிறத்தைக் கண்டாலோ, தங்கள் மொழியைத் தவிர வேறு மொழியைக் கேட்டாலோ பயம் தொற்றிக் கொள்கிறது. மொத்தமாகக் கூடி வந்து கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள்.

மனிதர்கள் மற்றவர்களிடம் ஒரு குறையைக் கண்டு அதை வைத்து தங்களை நிறைவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்பதே விந்தையாக இருக்கிறது.


Tuesday, November 25, 2014

விண்ணைத் தாண்டி வருவாயா!

நேற்று இரவு கழகஸ்தானின் (ரஷ்யா) பைக்கனூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட் சோயுஸ் டிஎம்ஏ-15எம் என்ற விண்கலத்தை சுமந்து சென்றது. இதில் பயணம் செய்யும் மூன்று பேரில் இத்தாலி நாட்டைச் சார்ந்த பெண்ணும் ஒருவர். இத்தாலி நாட்டின் முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெரும் இவரின் பெயர் சமந்தா. நேற்று இரவு இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்வைப் பார்ப்பதற்காக விழித்தே இருந்தேன். அந்த விழிப்பு நேரத்தில் இந்த ராக்கெட் குறித்தும், வானில் சுற்றிக் கொண்டிருக்கும் 'வான்வெளி ஆய்வுக்கூடம்' பற்றியும், அது செயல்படும் முறை பற்றியும், அங்கே போகவும், திரும்பவும் செய்யவேண்டிய செய்முறைகள் குறைத்தும் எடுக்கப்பட்ட சில காணொளிகளை யூடியிபில் பார்த்தேன். மெய்ம்மறந்து போனேன்.

'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்று பாடக் கேட்டிருக்கிறோம். அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கண்டு வியந்து போனேன்.

வான்வெளி ஆய்வுக்கூடம் (இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்) என்பது ஒரு மனிதர்கள் வசிக்கும், பயணம் செய்து, பூமியைச் சுற்றி வரும் ஒரு செயற்கைக்கோள். அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், பிரேசில், ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வுக்கூடம் 1998ஆம் ஆண்டு முதல் 93 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருகிறது. இதன் மணிக்கு 27000 கிமீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஆய்வுக்கூடத்தின் எடை 450,000 கிலோகிராம். இதனுள் ஆறு பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த ஆய்வுக்கூடத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ தான் நேற்று இரவு புறப்பட்ட சோயுஸ். புறப்படும் போது ஒரு கத்தோலிக்கக் குருவானவர் வந்து தீர்த்தம் தெளித்து ஆசீர் அளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. நாம டூர் போறதுக்கு முன்னால பஸ் டயர்ல எலுமிச்சம் பழம் வைக்கும் நிகழ்வு போல இருந்தாலும், மனித வளர்ச்சி என்னதான் இருந்தாலும் அதையும் மிஞ்சிய சக்தி ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு நினைவூட்டுவதாகத் தான் இருந்தது. 10க்கு 10 அடி கேபினில் இன்னும் ஆறு மாதத்திற்கு இந்த மூன்று பேரும், அங்கு ஏற்கனவே இருக்கும் மற்ற மூன்று பேரோடு சேர்ந்து உண்டு, உறங்கி, இளைப்பாறி, வேலை பார்க்க வேண்டும்.

புவியின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லும் போது இவர்களின் உடலின் எடை திடீரென அதிகரித்துப் பின் படிப்படியாகக் குறைகின்றது. இந்த ஆய்வுக்கூடத்தில் இருக்கும் கிராவிட்டி ரொம்ப ரொம்ப மைக்ரோ. ஆகையால் இவர்கள் எப்போதும் மிதந்து கொண்டே தான் இருப்பார்கள். தக்காளி, கத்தி, பிரட், பட்டர் எல்லாம் மிதக்கும். வாரம் ஒரு முறை குளியல், நுரை வராத சாம்பு, கடித்துத் திண்ணும் டூத்பேஸ்ட், நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர், காதை அடைக்கும் 'கொய்ங்' சவுண்ட், கதிரியிக்கம், அடிக்கடி வந்து போதும் விண்கற்கள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இவர்கள் மனித உடலியல், கோளங்கள், விண்வெளி ஆய்வில் ஈடுபடுவர். இவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இவர்கள் எந்நேரமும் கீழுள்ள 12 ஆய்வுக்கூடங்களின் கட்டுப்பாட்டில் இருப்பர். ஒவ்வொரு நாளும் பத்து மணி நேரம் வேலை, இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி என இவர்களின் வாழ்க்கை இருக்கும்.

இந்த ஆய்வுக்கூடத்தின் ஒவ்வொரு ஸ்குருவுக்குப் பின்னாலும் ஒருவரின் மூளைத்திறன், உடல் திறன், உழைப்பு இருக்கிறது.

நாம் ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே வெற்றி கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தாலும், வானம் இன்னும் விரிந்து கொண்டே செல்கின்றது.

இந்த வான்வெளியோடு, பால்வெளியோடு, நம் பூமித்தாயின் அதிசயம், ஆச்சர்யம் இவற்றோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பெருமை கொள்ள எதுவும் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆச்சர்யம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு ஆச்சர்யம்.

நான் கண்டு ரசித்த காணொளிகளின் இணைப்பை இங்கே தருகின்றேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பாருங்கள். நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள்!

சமந்தா...விண்ணைத் தாண்டி சீக்கிரம் வா! எனக் காத்திருக்கிறது இத்தாலி!

Soyuz Launch Explained - Video 1 (11:30)

Soyuz Docking Explained - Video 2 (21:06)

Soyuz Undocking Explained - Video 3 (20:44)



Monday, November 24, 2014

உங்களுக்கு வந்தா ரத்தம்!

நேற்று காலை வத்திக்கான் நகருக்குள் இருக்கும் தூய மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய நம் திருத்தந்தை அவர்கள் 'இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தப்படுத்தும்' நற்செய்திப் பகுதியை முன்வைத்து மறையுரை ஆற்றினார். மறையுரையில் அருட்பணியாளர்களிடம் இன்று வணிக சிந்தனை மேலோங்கியுள்ளது என்று தொடங்கிய அவர், தான் முன்பு பணியாற்றிய இடத்தில் இருந்த ஒரு பங்குத்தந்தை திருமண அருட்சாதனத்திற்காக நேரத்தை கூறு போட்டு விற்றதாகவும், திருவருட்சாதனங்கள் ஒரு போதும் விற்கப்படக்கூடாது என்றும், பங்கு மக்களிடமிருந்து பங்குப் பணியாளர்கள் எந்தவொரு காணிக்கையும் பெறக்கூடாது என்றும் சொன்னார்.

ரொம்ப மகிழ்ச்சி!

திருத்தந்தை அவர்கள் 'மறைமாவட்ட அருட்பணியாளர்கள்' என்று பேசியிருப்பதுதான் இன்று உரோம் முழுக்க பரபரப்பான பேச்சு.

திருவருட்சாதனமும், கடவுளி;ன் அருளும் ஒருபோதும் விலைபேசப்படக் கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதற்கான குறிப்பு திருத்தூதர்பணிகள் நூலிலேயே உள்ளது (8:9-24). லூத்தர் அவர்கள் நம் திருச்சபையை விட்டுச் செல்வதற்கு இதுவும் ஒரு முதற்காரணமாக அமைந்தது.

சரி! நம்ம போப்பாண்டவர் சொன்னது மாதிரி மறைமாவட்ட அருட்பணியாளர்கள் இருக்க வேண்டும்! புரிஞ்சதா! அப்படின்னு இன்னைக்கு நாம சொல்லிட முடியுமா?

நான் மதுரையில உள்ள ஒரு பங்கின் அருட்பணியாளர் என வைத்துக்கொள்வோம். எனக்குக் கீழே 100 குடும்பங்கள் இருக்கின்றன (400 பேர்!). இந்த 400 பேரில் சராசரியாக வாரநாட்களில் ஆலயத்திற்கு வருபவர்கள் 15 பேர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டு திருப்பலிகளிலும் இவர்கள் வருகை 300. வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஓஸ்தி, ரசம், திருப்பலி உடை, தரை விரிப்பு, சேர் வாடகை, மின்சாரம், இசைக்கருவிகள், லைட், ஃபேன், தரை வாடகை என ஒரு மணி நேரத்திற்கு ஒரு அளவு என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கென்று ஒரு அளவு வரும். சரி. இப்ப இந்தச் செலவை யார் பார்ப்பார்? நான் பங்கு பராமரிப்பு நிதியும் வாங்கவில்லை. காணிக்கையும் எடுக்கவில்லை. 300 பேரும் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு பங்கில் என்ன நடக்கும்? பங்கு அருட்பணியாளர் எதை வைத்துச் சரி செய்வார்?

ஏன்...பங்குச் சாமியார் வேலைக்குப் போகலாமே! என்று சொல்வர் துறவியர் (ஏன்னா! நாங்க ஸ்கூல்ல வேலை பார்க்குறோம்! காலேஜ்ல வேல பார்க்கிறோம்! ஆனா நீங்க மட்டும் கோயிலே கதின்னு இருந்துகிட்டு காணிக்கைக் காசுல பிழைக்கிறீங்க!).

ஐயா! துறவியரே! நீங்க படிக்கும் போதே உங்க வேலைக்குத் தேவையான மாதிரி டிகிரி படிக்கிறீங்க. உங்க படிப்பை நீங்க இன்வஸ்ட் பண்ணி அதுல இருந்து சம்பாதிக்கிறீங்க. ஆனா எங்கள மட்டும் ஃபிலாசபியும், தியாலஜியும் மட்டும்தானே படிக்க விடுறீங்க. இந்த இரண்டையும் வச்சு ஒரு சலூன் கடையில கூட வேலை பார்க்க முடியாது! ஏன்னா சலூன் கடையில பேசப்படுற ஃபிலாசஃபி கூட நாங்க படிச்சதில்லை!

நாங்க மக்கள்ட்ட காணிக்கை வாங்குறோம்னு சொல்றீங்களே. ஏன்! நீங்க உங்க ஸ்கூல்ல பிள்ளைங்ககிட்ட ஃபீஸ் வாங்குறதில்லையா? கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தான் நாங்க விற்கிறோம்னா, நீங்க கண்ணுக்குத் தெரியற கடவுளையே விற்கிறீங்களே? போன மாதம் ஃபீஸ் கட்ட முடியாத ஒரு அருட்பணியாளரை வெளியே அனுப்பியது ஒரு 'பாப்பிறைப் பல்கழைக்கழகம்!'

உங்களுக்கு வந்தா ரத்தம்! ஆனா எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?

எனக்கு பெர்சனலா இந்த வரி வாங்குறது, காணிக்கை எடுக்குறது, வீடு வீடா நோட்டு கொண்டு போய் சந்தா வாங்குறது, பூசைக்கு காசு வாங்குறது, இத்யாதி, இத்யாதி என எதுவும் பிடிக்காதுதான். இப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ பிச்சையெடுப்பது போலவே எனக்குத் தோன்றும்.

33 வயசுல ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கக் கூடிய மனப்பக்குவம் உடைய எனக்கு எப்படி பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டும் என தோணும்?

இது கடவுள் காசு! நாம அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்றீங்களா?

என் பங்குல இருக்குற 100 குடும்பங்களும் நாளைக்கு ஒரு பிராடஸ்டன்ட் பாஸ்டர் பின்னால போயிட்டா நான் என் கோவிலுக்கு எப்படி கரண்ட் பில் கட்டுவேன்? எப்படி வெள்ளை அடிப்பேன்? நான் எப்படி சாப்பிடுவேன்?

வத்திக்கானின் அன்றாட நடைமுறையே மக்களின் காணிக்கையை நம்பிதான் இருக்கிறது என்பதை திருத்தந்தை மறந்துவிட்டாரோ? எதையும் விற்கக் கூடாதுன்னா, ஏன் பீட்டர்ஸ் பசிலிக்காவுல காணிக்கைப் பெட்டி இருக்கு? அங்க ஏன் பூசைக்கருத்து எழுதுறாங்க? பேபல் பிளஸ்ஸிங் ஏன் விற்குறீங்க?

'வெறும் செபமாலை சொல்லி மட்டும் திருச்சபையை நடத்த முடியாது' என்று வத்திக்கானுக்குத் தெரிந்ததால் தான் அது வங்கியை நடத்துகிறது.

நீங்க பேங்க் நடத்தலாம். ஆனா ஒரு பங்குச்சாமியார் திருமணப்பூசைக்கு இவ்வளவு கொடு என்றால் நீங்க ரூல் போடுவீங்க!

எங்க மறைமாவட்டத்திலேயே சில பேர் பண்ணை வைத்திருக்கிறார்கள் எனவும், தனிப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள் எனவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் தவறு இல்லை என்பதே என் கருத்து. தன்மானம் உள்ள அனைவரும் தனிப்பட்ட சொத்து வைத்திருப்பர். சொத்து வைத்திருக்க வேண்டும்.

ஏன்னா! ஒரு கோவிலில் மக்கள் காணிக்கை போடுவது என் படிப்பிற்கோ, என் மறையுரைக்கோ, என் ஆளுமைக்கோ, என் திறமைக்கோ அல்ல - மாறாக, நான் செய்யும் சின்ன மாயவித்தைக்கே!

ஒரு மறைமாவட்ட அருட்பணியாளர் அவரின் திறமைக்காக அல்ல, அவரின் சாமியார் வேலைக்கே மதிக்கப்படுகிறார்.

இன்னைக்கு நம்ம ஊர்களில் வாழ்கின்ற நபர்களுக்காகவும், இறந்த நபர்களுக்காகவும் திருப்பலிக் கருத்து கொடுக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழ்கின்ற நபர்களுக்கு யாரும் கருத்து கொடுப்பதில்லை. ஏன்? நாம் வாழ்வது நம்ம கையில் தான் இருக்கிறது. கடவுள் கையில் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் வத்திக்கான் 'உத்தரிக்கிற நிலை இல்லை' என்று சொல்லிவிட்டாலோ, 'இறப்பிற்குப் பின் வாழ்வு இல்லை' என்று சொல்லிவிட்டாலோ, இறந்தவர்களுக்காக செபிப்பதும் போய்விடும். (வத்திக்கான் அவ்வளவு சீக்கிரம் சொல்லாது!)

இப்படியெல்லாம் பேசி நீங்க செய்றத நியாயப்படுத்தாதீங்கனு சொல்றீங்களா?

நான் நியாயப்படுத்தலை. திருவருட்சாதனங்கள் விலைக்கு அல்ல என்று திருத்தந்தை சொன்னார் என்றால், 'குருக்களும் விலைக்கு அல்ல!' என்று அவர் சொல்ல வேண்டும்.  'உன் வயிற்றுக்கு நீ உழைக்க வேண்டும்!' என எங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படி உழைக்க திருச்சபைச் சட்டம் அனுமதிக்க வேண்டும். அல்லது எங்க ஊர் முருகன் கோவிலை மாதிரி எங்க மாதா கோவிலையும் எங்க அரசாங்கம் எடுத்துக்கணும். அரசாங்கமே குருக்களை நியமிக்கணும். சம்பளம் கொடுக்கணும்.

இன்று எங்கள் மறைமாவட்டத்தில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. திருயாத்தரை தளங்களில் கூடும் கூட்டத்தை மட்டும் வைத்து கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சியைச் சொல்லிவிட முடியாது. அந்தக் கூட்டம் எங்கும் கூடும். அந்தக் கூட்டத்தில் பலர் கத்தோலிக்கர்களே இல்லை.

பிரிவினை சகோதரர்களோடு சண்டை போட்டுக் கொண்டோ, அன்பியத்திற்கு வராத மக்களை 'நீ வா! நீ வா!' என்று சொல்லிக் கொண்டோ, அருட்சகோதரிகளைப் பார்த்து, 'பொட்டு வைக்க வா! பூ வைக்க வா! கோலம் போட வா!' என்று அழைத்துக் கொண்டோ, பார்க்குறவங்களையெல்லாம் 'பங்கு வரி கட்டிட்டியா?' என்று கேட்டுக் கொண்டோ (நாம ஏன் வரி கட்டணும்! நம்ம என்ன ஆங்கிலேய ஆட்சியிலயா இருக்குறோம்!), 'எங்க கடவுள் தான் உண்மையான கடவுள்'னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டோ ஒரு அருட்பணியாளர் இருக்கம் வரை அங்கே காணிக்கை இருக்கும்! வியாபாரம் இருக்கும்!


Sunday, November 23, 2014

அரசர்கள் பேரம் பேசுவதில்லை!

சென்னையில் ஒரு பெரிய வணிக வளாகத்திலுள்ள ஒரு கடையில் எழுதப்பட்ட ஒரு வாசகம்: 'kings don't bargain' (அரசர்கள் பேரம் பேசுவதில்லை). 'விலையில் பேரம் பேசக்கூடாது' என்ற வியாபார நோக்கம் இருந்தால்கூட இந்த வாசகம் இயேசுவை அரசராகப் பார்ப்பதில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றது.

பேரம் பேசுவது என்பது நம் விருப்பத்திற்கு ஏதுவாக மாற்றிக் கொள்வது, உதாரத்திற்கு ஒரு பொருளின் விலையை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றித்தர வற்புறுத்துவது. இது வியாபாரத்தில், கொடுக்கல்-வாங்கலில் தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் உறவுகளிலும், உணர்வுகளிலும், ஏன் நம் அறநெறியிலும்கூட நுழைந்து விடுகிறது. உதாரணத்திற்கு, இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பில், ஒரு நண்பன் தவறு செய்யும்போது, அதைச் சுட்டிக்காட்டினால் நட்பு முறிந்துவிடுமோ என்ற கவலையில், அந்த நண்பனின் செயலோடு பேரம் பேசுகிறோம். மனைவியை கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் அவசரமாக வந்த ஒரு பணியை மறுநாள் செய்வதாக பேரம் பேசுகிறோம். அலுவலகம், வேலை, பணம் தான் முக்கியம் என்று குடும்ப மகிழ்வை பேரம் பேசுகிறோம். 'இந்த ஒருமுறை மட்டும், இனிமேல் செய்ய மாட்டேன்' என்று தவறுகின்ற ஒவ்வொரு நேரமும் நம் மனச்சான்றோடு பேரம் பேசுகிறோம்.

இயேசு தன் வாழ்வில் எந்த நிலையிலும் தன் மதிப்பீடுகளோடும், மற்ற மனிதர்களோடும் பேரம் பேசவில்லை. தன்மேல் பொறாமைப்பட்ட தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்களோடு அவர் பேரம் பேசியிருந்தால் அவர் ஒரு பெரிய இரபியாக இன்றும் மதிக்கப்பட்டிருக்கலாம். தன்னை அரசராக்கப் விரும்பிய மக்களோடு போயிருந்தால் 'இஸ்ராயேல் மக்களுக்கு உணவு கொடுத்த அரசரே' என்று ப்ளக்ஸ் போர்ட் வைத்திருப்பார்கள். 'நீ பாவங்களை மன்னிக்கிறாய்? பேய்களை விரட்டுகிறார்? ஓய்வுநாளை மீறுகிறாய்? பாவிகளோடு உண்கிறாய்? இலாசரை உயிர்ப்பிக்கிறாய்? விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இரக்கம் காட்டுகிறாய்?' என்று குற்றம் சாட்டப்பட்டபோது, 'ஐயயோ, தெரியாம செஞ்சுட்டேன், இனிமே செய்யமாட்டேன். நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே இருக்கிறேன்' என்று தன் இறையரசுப்பணியை பேரம் பேசவில்லை. 'என் விருப்பம் அன்று, உம் விருப்பப்படியே ஆகட்டும்' என்று தன் தந்தையிடம் சரணடைகிறார். பேரம் பேசவில்லை.

ஏனென்றால், அவருக்குத் தெரியும் - 'அரசர்கள் பேரம் பேசுவதில்லை'. உண்மையை நேருக்கு நேராகத் தழுவுகின்றார். பொய்மையை, போலித்தனத்தை, முகமூடிகளைச் சாடுகின்றார்.

திருமுழுக்கில் நம் தலையில் பூசப்படும் 'கிறிஸ்மா' தைலத்தின் வழியாக நாமும் இயேசுவின் அரசுரிமையில் பங்கேற்கின்றோம். ஆனால், நாம் பேரம் பேசுவதில்லையா? நம் மதிப்பீடுகளில், உண்மைக்குச் சான்று பகர்வதில், உறவுகளில்?

இன்று நாம் காணும் ஊழல், வன்முறை, குற்றம், போர், இயற்கைச் சீர்கேடு, சுகாதாரமின்மை – அனைத்தும் உருவானது 'யாரோ ஒருவர் பேரம் பேசத் தொடங்கியபோதுதான்.' நாம் அரசர்கள். அரசர்கள் பேரம் பேசுவதில்லை!


Saturday, November 22, 2014

பண்ணையாரும் பத்மினியும்!

நேற்று இரவு 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற திரைப்படம் பார்த்தேன். எஸ்.யு. அருண்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் ஜெயப்பிரகாஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம். படம் முழுக்க கேமரா ஒரு பண்ணையாரையும், பிரிமியர் பத்மினி காரையும் சுற்றி வருகின்றது.

நாம் சின்ன வயதில் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்று கடைசி வரை கிடைக்காமல் போனால் வலி எப்படி இருக்கும் என்பதே திரைப்படத்தின் தொடக்கம் மற்றும் இறுதி காட்சிகளாக இருக்கின்றது. கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் காமெடி என படம் விறுவிறுப்பாக இருந்தது.

தனக்குள்ளதெல்லாம் தன் ஊருக்கு என்று பரந்த மனம் காட்டும் பண்ணையார், ஒரு பொருளாக இருந்தாலும் அதைத் தன் காதலி போல பார்த்துக்கொள்ளும் ஓட்டுநர், தனக்கு வலி வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என நினைக்கின்ற பண்ணையாரின் மனைவி என்று நிறைய கேரக்டர்கள் நிறைய மதிப்பீடுகளைக் குறித்துக் காட்டுகின்றனர்.

சிறுவர்கள் காருக்குப் பின்னால் ஓடும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நான் சின்ன வயதில் காருக்குப் பின்னாலேயே ஓடிப்போய் கீழே விழுந்த சில்லு மூக்கு உடைத்துக் கொண்டு வந்ததுதான் நினைவிற்கு வந்தது.

ஒரு கிராமத்தை செல்லுலாய்டடில் செதுக்கிய அழகிய திரைப்படம்.

ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் மையம்.

நாம் எல்லாரும் ஒரு கதையை வாழ்கிறோம். சில நேரங்களில் 'ஐயோ! அப்படி அந்தக் கதையை வாழாமல் போய்விட்டோமே!' என்று தவறிய வாய்ப்புகளைப் பற்றியும் வருந்துகிறோம். ஆலங்குளத்தில் பிறந்து விட்டு அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியவில்லையே என கவலைப்படுகிறோம்.

'நீங்க நடிக்க வரலைன்னா என்ன வேலைக்குப் போயிருப்பீங்க?' என்ற கேள்விக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதாநாயகி அழகாகச் சொல்வார்: 'ஒரு நல்ல ஆபிஸ் உத்தியோகத்துக்குப் போயிருக்கலாம். அப்படிப் போய் அங்கயும் ஏதாச்சும் ஒரு பிரச்சினையை இழுத்து வைத்துக் கொண்டு பேசாம நடிக்கப் போயிருக்கலாமோன்னு அழுதுகிட்டு இருந்துருப்பேன்'.

நாம் வாழ்க்கையில் ஒன்றைத் தேர்வு செய்யும் மற்றொன்றை கட்டாயம் இழக்க வேண்டிய ஒரு நிலை வந்துவிடுகிறது. அந்த இழப்பின் வடுக்கள் நம் சிறுவயது முதல் நம்மைத் துரத்திக் கொண்டே வருகின்றன.

ஒவ்வொருத்தருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.

இலங்கைச் சிறையிலிருந்து தூக்குத்தண்டனை ரத்தாகி வெளிவந்த ஐந்து பேர் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று திரும்பியுள்ளனர். அதில் இருவரின் குழந்தைகள் தங்களின் தந்தையின் முகத்தை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கின்றனர். என்ன ஒரு நெருடலான நேரம்? இந்தத் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கதை சொல்வார்கள்? எந்த இழப்பைச் சொல்லி அழுவார்கள்? இந்தக் குழந்தைகள் வளர்ந்தபிறகு தங்களின் குழந்தைகளுக்கும் தங்கள் தந்தையர் தப்பி வந்த கதையைச் சொல்வார்களா?

இன்று டுவிட்டர் தளத்தில் மேய்ந்த ஒரு பெண்ணின் இழப்பின் வரிகள் இவை:

'கணவனிடம் ஊடல் கொண்டாடி
தரையில் படுக்கும்போதெல்லாம்,
பாதி ராத்திரியில்
தரையில் இருந்து உருண்டு
கட்டிலில் விழுந்து விடுகிறேன்!'

நல்லாயிருக்குல? ரணகளத்திலயும் ஒரு கிலுகிலுப்பு!


Thursday, November 20, 2014

நாய் வளர்க்கலயோ நாய்?

இன்று மதியம் கல்லூரியிலிருந்து மெட்ரோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மொபைலில் ஆனந்த விகடன் படிப்பதில் மும்முரமாயிருந்தேன். நான் ஏறிய நிறுத்தத்திற்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பெண்மணி பெரிய நாயோடு ஏறினார். இத்தாலியில் நாய் ஒவ்வொன்றும் கன்னுக்குட்டி அளவிற்கு இருக்கும். நாயைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. வேகமாக எழுந்து வேறு இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டேன். அங்கிருந்து இந்த நாயைக் கவனித்தேன். நாயைப் பிடித்துக் கொண்டு வந்த பெண்மணி இப்போது நான் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். தன் கையில் பிடித்திருந்த நீண்ட குச்சியை வேகமாக மடித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் புரிந்தது அவர் பார்வையில்லாதவர் என்று. பார்வையில்லாதவர்களுக்கு வழிகாட்டும் நாய்கள் இருப்பதாக என்றோ வாசித்தது இன்று நினைவிற்கு வந்தது.

'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படத்தில் கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் குரோட்டன்ஸ் செடி வளர்ப்பதில் கருத்து வேறுபாடு உண்டாகும். அப்போது கதாநாயகன் கேட்பார்: 'பணக்காரர்கள் குரோட்டன்ஸ் செடி வளர்ப்பது என்பது பூனையும், நாயும் வளர்ப்பதுபோல. குரோட்டன்ஸ் செடிகளை ஆடு, மாடுகள் கூட மேய்வதில்லை. பூனையும், நாயும் அப்படித்தான். அவைகளுக்கு உணவளிப்பதிற்குப் பதில் தேவையில் இருக்கும் நான்கு குழந்தைகளுக்கு உணவளிக்கலாம்!' இதற்கு கதாநாயகி, 'எல்லாருமே கத்தரிக்காய், புடலங்காய் என சாப்பாட்டுக் காய்கறிகளே உருவாக்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி இருக்கும். இந்த குரோட்டன்ஸ் செடியால எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள்? இதை வளர்க்கும் நர்சரி உரிமையாளர். இதற்கு தொட்டி செய்பவர். தொட்டியை இடமாற்றுபவர். இதற்கு உரம் தயாரிப்பவர். ஆக, எல்லாவற்றிலும் ஒரு பயன்பாடு இருக்கவே செய்கின்றது!'

எனக்குத் தெரிஞ்சு நான் பிறந்தது முதல் எங்கள் வீட்டில் பூனைக்குட்டி இருந்திருக்கிறது. ஒன்று காணாமற்போக மற்றொன்று கொண்டுவரப்படும். அந்தப் பூனையோடு தான் உண்பது, உறங்குவது என சின்ன வயது கழிந்தது. மதுரை குருமாணவ பயிற்சிக்குச் சென்ற பின்பும் வீட்டிற்குக் கடிதம் எழுதும் போது அதில் 'பூனைக்குட்டி நலமா?' என்று நான் எழுதுவேன் என்று என் குருமட அதிபர் அண்மையில் சுட்டிக்காட்டினார்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்து உண்டு. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் திருமணமான முதல் நாள் அன்று 'குழந்தை பெற்றுக்கொள்வதா' அல்லது 'நாய்க்குட்டி வளர்ப்பதா' என்று கணவனும் மனைவியும் அமர்ந்து முடிவெடுத்துக் கொள்வார்களாம். இந்த மனநிலை கொஞ்சம் ஓவர்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

நான் கேள்விப்பட்ட வரையில் ஒரு பெண்மணி தன் பூனைக்குட்டியை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கொண்டு போக முயலும் போது, அந்த பூனைக்குட்டி தப்பியோட அதை அடையாளம் கண்டுபிடிக்க லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அதைக் கண்டும் பிடித்து விட்டாராம்.
'பாசம்கிறது ஒரு வகையான கிறுக்குதான!' என்ற நீர்ப்பறவைகள் டயலாக் தான் நினைவிற்கு வருகிறது.

பொம்மைகள், விளையாட்டுச் சாமான்களை விட செல்லப் பிராணிகள் கொஞ்சம் உயர்ந்தவை தாம். நம் உணர்வுகளை அவைகள் புரிந்து கொள்ளவில்லையென்றாலும் அவைகளிடம் நாம் வெளிப்படுத்தலாம். அவைகள் நம்மை எதிர்த்துப் பேசுவதில்லை. சண்டை போடுவதில்லை.

ஒவ்வொரு செல்லப் பிராணியும் தனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்கின்றது. எங்கு சென்றாலும் திரும்பி தன் இடத்திற்கே வந்துவிடுகிறது. இது மனித இனம் செய்த ஒரு சாதனைதான்.

மற்றொரு பக்கம் பிராணிகளின் மேல் வன்முறை.

ஆனா ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நம்மைவிட வலுக்குறைந்தவர்களிடமே நம் வன்முறையைக் காட்டுகிறோம். சிங்கத்தை அடிங்களேன் பார்க்கலாம்! புலியை வாலைப் பிடித்துத் திருகுங்களேன்!

என்னதான் சங்கிலி, பெல்ட் போட்டு நாயை இத்தாலியில் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனாலும், எந்தப் பிடியும் இல்லாமல் நம்ம ஊர் யானைப் பாகன்கள் அவ்வளவு பெரிய யானையை வாக்கிங் கூட்டிட்டுப் போவதைப் பார்க்கும் போது, 'தம்பி! நீ இன்னும் வளரனும்!' என்று தான் இத்தாலியைப் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

சரி! இந்த பதிவினால் என்ன பயன்?

நாய், பூனையை மாதிரி இதுவும் சும்மா இருக்கட்டுமே! எப்பவுமே பயன்பாட்டை மட்டுமே பார்க்க வேண்டுமா?