Monday, June 30, 2014

வெற்றியின் நாள் இதுவே!

சாலமோனின் அரசர் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கென எருசலேமில் ஆலயம் கட்டத் தொடங்குகின்றனர். அந்தக் கட்டடம் கட்டுவதற்காக எண்ணற்ற கற்கள் சுற்று வட்டாரத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றன. அப்படிக் கொண்டு வரப்பட்ட கற்களில் ஒரு கல் 'ட' வடிவத்தில் இருந்ததாம். அதனால் என்ன பயன் என நினைத்தவர்கள் அதை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டனராம். கட்டடத்தின் அடித்தளம் கட்டத் தொடங்கியபோது இரண்டு பக்கங்களையும் சரிகட்டவும், வரப்போகும் கட்டட மேல் எடையைத் தாங்கவும் பெரிய கல் தேவைப்பட்டதாம். எங்கு தேடியும் கிடைக்காமல் கடைசியில் தாங்கள் ஒதுக்கித் தள்ளிய கல்லை எதேச்சையாக எடுத்துப் பொருத்திப் பார்க்கின்றனர். அது மிகவும் இசைவாகப் பொருந்தியதாம். அன்று உருவானதே அவர்களின் சொல்லாடல்:

'கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று'
(திபா 118:22)

திபா 118 நாம் அடிக்கடிக் கேட்கும் பல விவிலிய வசனங்களின் ஊற்றாக இருக்கின்றது. அவைகளைப் பொறுமையாக வாசித்தாலே அவை கண்ணாடி போல நம் உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன:

'ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.' (118:1)

'ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்?' (118:6)

'மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!' (118:8)

இந்த வசனத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? விவிலியத்தில் உள்ள மொத்த வசனங்கள் 31,103. இதை இரண்டாகப் பிரித்து இதன் மையமாக உள்ள வசனம் எது என்ன என்று பார்த்தால் அது 118:8.

'ஆண்டவரே என் ஆற்றல். என் பாடல். என் மீட்பும் அவரே.' (118:14)

'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (118:23)

'ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிப்போம். அகமகிழ்வோம்.' (118:24)

'வெற்றியின் நாள் இதுவே!'


நான் என்னை கைம்மாறு செய்வேன்?

திபா 116 'சாவினின்று தப்பியவரின் பாடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. எபிரேயப் பாடத்தில் இதற்குப் பெயர் கொடுக்கப்படவில்லை. யார் எழுதியது என்றும் கொடுக்கப்படவில்லை. கிரேக்க மொழிபெயர்ப்பாளர்கள் தாம் இதற்கு இந்தப் பெயர் கொடுத்திருக்கின்றனர்.

எத்தகைய சாவிலிருந்து தப்பித்திருப்பார் என்று ஊகிக்க முடியவில்லை. கடவுள் அவரை இறப்பிலிருந்து தப்பிக்கச் செய்திருக்கிறார். நெடுநாள் குணமாகாத நோய், வலி, பகைவர்களின் எதிர்ப்பு, கவலை போன்ற ஏதாவதிலிருந்து தப்பித்திருக்கலாம். அல்லது போர்க்கைதியாக எங்காவது இருந்து அதிலிருந்து விடுபட்டிருக்கலாம்.

பழைய மொழிபெயர்ப்புகள் 1-9 வசனங்களை ஒரு பாடலாகவும், 10-18 வசனங்களை அடுத்த பாடலாகவும் என இரண்டு பாடல்களாகக் கொண்டுள்ளன.

இந்தத் திருப்பாடல் தான் பெரிய வியாழன் அன்று திருப்பலியில் பதிலுரைப் பாடலாகப் பாடப்படுகின்றது. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு மரண தண்டனை விதி;க்கப்படும் இரவில் இயேசுவின் மனநிலையும் தான் காப்பாற்றப்படுவோமா என்று தான் இருந்திருக்க வேண்டும்.

திபா 116ன் பாடகரின் மன ஓட்டமே இந்தத் திருப்பாடல்.

'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்னை கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரின் பெயரைத் தொழுவேன்'

'மீட்பின் கிண்ணம்' என்பது இஸ்ரயேல் மக்களின் பாஸ்கா விழாவைக் குறிக்கும் ஒரு அடையாளம்.

சாவின் பிடியிலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வே பாஸ்கா.

கடவுளின் இரக்கமும் அன்பும் அளப்பரியது. அவர் கொடுத்ததை நாம் அவருக்குத் திரும்பக் கொடுத்துக் கைம்மாறு செய்ய முடியாது.

அன்புக் கட்டளை கொடுக்கின்ற இயேசு கூட, 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல, நீங்கள் என்னை அன்பு செய்யுங்கள்' என்று சொல்லவில்லை. மாறாக, 'ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்றே சொல்கிறார். இறைவனின் அன்பிற்கு நாம் பதில் அன்பு செய்ய இயலாது.

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட மனிதர்கள், காலத்திற்கும், இடத்திற்கும் உட்படாத கடவுளை எப்படி அன்பு செய்ய முடியும்? நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்: கடவுளிடமிருந்து பெறுவதை ஒருவர் மற்றவதற்குப் பகிர்ந்து கொடுப்பதே அது!


Sunday, June 29, 2014

அவர்களுடைய கடவுள் எங்கே?

'அவற்றுக்கு வாய்கள் உண்டு. ஆனால் அவை பேசுவதில்லை.
செவிகள் உண்டு. ஆனால் அவை கேட்பதில்லை.
மூக்குகள் உண்டு. ஆனால் அவை முகர்வதில்லை.
கைகள் உண்டு. ஆனால் அவை நடப்பதில்லை.
தொண்டைகள் உண்டு. ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.'

(திருப்பாடல் 115:5-7)

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் என்பவை மனிதர்களின் ஐம்புலன்கள்.

இந்த ஐம்புலன்களில் கேட்டலும், நுகர்தலும் மட்டும் தான் எபிரேய சிந்தனைக்குத் தெரிந்திருந்தது. பார்த்தல், சுவைத்தல், தொடுதல் போன்றவை இல்லை. அதற்குப் பதிலாக பேசுதலும், நடப்பதும், குரல் எழுப்புவதும் இருந்தன. ஆனால் இந்த மூன்றும் வெளியிலிருந்து தகவல் வருவதற்கல்ல, மாறாக, தகவல்கள் உள்ளிருந்து வெளி வருவதற்குப் பயன்படுகின்றன.

வெளியிலிருந்து தகவல்கள் மனித மூளைக்கு கேட்டல் வழியாகவும், நுகர்தல் வழியாகவுமே இருப்பதாக நம்பினர் எபிரேயர்.

ஆகையால் தான் இன்றும் இஸ்ரயேல், பாலஸ்தீனாவுக்குச் சென்றால் நூலகங்களில் அனைவரும் சப்தமாகத் தான் படித்துக் கொண்டிருப்பர். காதுகள் வழி செல்லும் தகவல் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பது அவர்களின் கருத்து.

ஆகையால் தான் இணைச்சட்ட நூல் கூட 'இஸ்ரயேலே கேள்!' என்று சொல்கின்றது. 'பார்' என்று சொல்லவில்லை. இதன் தொடர்ச்சியாக இயேசுவின் திருமுழுக்கின் போது வெளிப்படும் வானகத் தந்தையின் வார்த்தைகள் கூட 'இவருக்குச் செவி கொடுங்கள்' என்றே இருக்கிறது.

மேலே சொன்ன ஐந்து குணங்களும் தங்கள் இறைவனுக்கு இருப்பதாகவும், மற்ற சிலைகளுக்கு இல்லை எனவும் நம்பினர் இஸ்ரயேல் மக்கள்.

மேலே சொன்ன குணங்கள் சொல்வது என்ன?

எந்த உறுப்பு எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த உறுப்பு அந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்படி இல்லாத எல்லாமே வெறும் கல்தான்.

நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ அதற்கான வேலையைச் செய்வதும் அவசியம் தானே!

'அவர்களுடைய கடவுள் எங்கே?'


Friday, June 27, 2014

வேற்று மொழி பேசிய மக்களை விட்டு...

திபா 93லிருந்து புகழ்ச்சிப் பாடல்கள் தொடங்குகின்றன. இந்தப் புகழ்ச்சிப் பாடல்களின் முதல் பகுதியை நிறைவு செய்வது திபா 114. தாங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளி வந்த நிகழ்வை நினைவு கூறும் பாஸ்காப் பாடலே இது.

எகிப்தைப் பற்றிச் சொல்லும் போது இங்கே ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. அதைப்பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

'வேற்றுமொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபோது...'

இந்த வரியை திரும்ப ஒரு முறை படியுங்களேன். அதில் ஒரு சோகம் தெரியும்.

'என் மொழி பேசாத ஒரு நாட்டை விட்டு' என்றும் இதை மொழிபெயர்க்கலாம்.

மொழி - கடவுளின் படைப்பா அல்லது மனிதர்களின் படைப்பா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.

செய்கைகள் செய்தும், படங்கள் வரைந்தும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறத் தொடங்கியவுடன் மொழி பிறந்தது. இந்தச் செய்கைகளாலும், படங்களால் வெளி உலகத்தைத்தான் அடையாளப்படுத்த முடியுமே தவிர, மனிதர்களின் உள்ளத்தின் எண்ணங்களை அவைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. பின் ஒலி, பின் ஓசை, பின் முறைப்படுத்தப்பட்ட ஓசை என்று கொஞ்சம் கொஞ்சமாக மொழி வளர்கின்றது.

ஒலியும், மௌனமும் கலந்ததே பேசும் மொழி!

இருமையும், இல்லாமையும் கலந்ததே எழுத்து மொழி!

மொழி ஒரு அடையாளம். மொழி ஒரு வாய்க்கால்.

பேசுவது மட்டும் மொழியல்ல. மௌனமும் மொழிதான்.

நம் இந்திய நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1110 மொழிகள் இருந்தன. இன்று அவைகளில் 880 மட்டுமே மிஞ்சி நிற்கின்றன. அதிலும் இவற்றின் 360 மொழிகளைப் பேசுவோர் வெறும் 100 பேர் மட்டுமே.

அந்நிய மொழி மோகம், அவற்றின் அளப்பரிய தாக்கம், சொந்த மொழியை தாழ்வாக நினைத்தல், புலம் பெயர்தல் - இவைகள் தாம் மொழிகள் அழியக் காரணம் என மொழியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தியில் தமிழை லத்தீன் எழுத்துருவில் எழுதத் தொடங்கிவிட்டோம்.

ஆங்கிலம் கலந்து பேசுவதை நாகரீகம் எனவும் கருதத் தொடங்கி விட்டோம்.

இப்படியே சென்றால்...

நாம் சொந்த நாட்டிலேயே வேறு மொழி பேசுவோராக மாறி விடுவோமோ என்று பயமாக இருக்கிறது!

நம் அன்புக்குரியவர்களின் பேச்சும், அவர்களின் மௌனமும் சில நேரங்களில் நமக்கு வேற்று மொழியாகிவிடுகிறது. அதில் மனத்தாங்கலும் எழுகிறது.

இன்று நாம் என்ன பேசுகிறோம் என்று பார்ப்பதைப் போல...எப்படிப் பேசுகிறோம்...என்றும் பார்க்கலாமே!

'வேற்று மொழி பேசிய மக்களை விட்டு...'

காலையில் பேரன்பு! மாலையில் வாக்குப் பிறழாமை!

திபா 92ஐ ஓய்வு நாள் பாடல் என அழைக்கிறது எபிரேயப் பாடம்.

ஓய்வு நாள் என்றால் என்ன?

ஓய்வு எடுக்கிற நாள் ஓய்வு நாள் என்கிறீர்களா?

எபிரேய மரபில் ஓய்வு நாளுக்கு இரண்டு காரணங்கள் கொடுக்கப்பட்டன:

அ. ஆண்டவராகிய கடவுள் உலகை ஆறு நாட்களில் படைத்து விட்டு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று தொடக்கநூலின் அடிப்படையில் முன் வைக்கும் காரணம் முதற்காரணம். கடவுள் தன் வேலையிலிருந்து ஓய்ந்தார் எனில் மனிதர்களாகிய நாமும், கடவுளின் உடன்-படைப்பாளிகளாகிய நாமும், நம் வேலையிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும்.

ஆ. விடுதலைப் பயண நூல் மற்றொரு காரணத்தை முன்வைக்கின்றது. அதாவது இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது யாவே இறைவன் அவர்களுக்காகப் பாரவோன் மன்னனிடம் சண்டையிட்டு விடுதலை பெற்றுத் தருகின்றார். அவர்களைப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கடந்து செல்கின்றார். ஆகையால் வாரத்தில் ஒரு நாள் தங்கள் வீடுகளில் இருக்கும் அடிமைகளுக்கும் ஓய்வு கொடுத்து தாங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை நினைவுகூற அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

'சாபத்' என்றால் நிறுத்தம் என்பது பொருள். தான் ஆறு நாட்கள் செய்யும் வேலையிலிருந்து நிறுத்தம் செய்வதே ஓய்வு நாள். யூதர்களுக்கு ஓய்வு நாள் என்பது சனிக்கிழமை.

இயேசுவின் காலத்தில் ஓய்வு நாள் குறித்த சட்டங்கள் நிறைய இருந்தன. இயேசு அந்தச் சட்டங்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இரண்டாம் ஏற்பாட்டு மக்களாகிய கிறித்தவர்களுக்கு ஓய்வு நாள் என்பது ஞாயிற்றுக் கிழமை. ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்ததால் அன்றைய தினத்தை நாம் ஓய்வு நாளாகக் கொண்டாடுகிறோம்.

முதன் முதலில் கிறித்தவ மதம் உரோமை நகருக்குப் பரவத் தொடங்கிய போது கிறித்தவர்கள் ஞாயிறை ஓய்வு நாளாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். ஆனால் தாங்கள் ஏற்கனவே கொண்டிருந்த சனிக்கிழமை ஓய்வுநாளையும் விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. ஆகையால் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை ஓய்வு நாளாகக் கொள்ளத் தொடங்கினர். அதுவே காலப்போக்கில் மேற்கத்திய நாகரீகத்தில் ஐந்து நாள் உழைப்பு, இரண்டு நாள் ஓய்வு என மாறிப்போனது.

இன்று ஓய்வு நாள் கடவுளுக்கான நாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அன்றைக்கு ஒருநாள் தான் விட்டுப்போன உறவுகளைச் சந்திக்கவும், வார முழுவதும் வந்த தொலை பேசி அழைப்புக்களை ரிக்கார்டரில் கேட்கவும், வாக்கிங் போகவும், வீடு கழுவவும், துணி துவைக்கவும் என்று ஓய்வு நாளின் நோக்கம் மாறிவிட்டது.

ஓய்வு நாளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை திபா 92 அழகாகச் சொல்லுகிறது:

'காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று!' (92:2)

வாரம் முழுவதும் நாம் அனுபவித்த இறைவனின் பேரன்பைக் காலையிலும், வருகின்ற வாரம் முழுவதும் அவரின் உடனிருப்பு என்னும் நம்பிக்கையை நமக்குத் தரும் அவரின் வாக்குப் பிறழாமையை மாலையிலும் நாம் சிந்தித்தால், எடுத்துரைத்தால் ஒவ்வொரு நாளும் ஓய்வு நாளே!


Wednesday, June 25, 2014

நீரே என் புகலிடம், என் அரண்!

திபா 91ஐ இன்று நாம் சிந்திப்போம்.

'எண்ணமே உனக்கு!' என்பது முதுமொழி. அதாவது நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படியே நமக்கு நடக்கிறது.

நாம் வாழும் இவ்வுலகம் கண்ணாடி உலகம்.

நாம் அன்றாடம் பணப்பரிமாற்றம் செய்கிறோம். பல நேரங்களில் பணத்தை நாம் மற்றவர்களிடம் பரிமாறும் போது வெறும் பொருளாக மட்டுமே பரிமாறுகின்றோம். நாம் பணத்தை மற்றவர்களிடம் கொடுக்கும் போது அதை ஆசிர்வதித்து, அதைப் பெறுபவரை ஆசிர்வதித்துக் கொடுத்தால் அது நம்மிடமே திரும்ப வருமாம். ஏனெனில் பணம் ஒருவரின் உழைப்பைக் குறிக்கின்றது.

பணத்தை மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஆசிர்வதித்துப் பகிர்ந்தளித்தால் அதுவும் ஆசீராகத் திரும்புமே!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் அம்மாவிற்கு இன்றைய திருப்பாடலும், இன்றையு வலைப்பதிவும் அர்ப்பணம்:

'ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
அவர் தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர்.
அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.

இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் அம்புக்கும்
நீர் அஞ்சமாட்டீர்.
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்
நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.

தீங்கு உமக்கு நேரிடாது.
வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

நீர் செல்லும் இடமெல்லாம்
உம்மைக் காக்கும்படி,
தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.

நீடிய ஆயுளால் அவர் உங்களுக்கு நிறைவளிப்பார்...'

(திபா 91)


Tuesday, June 24, 2014

இவர் இங்கேதான் பிறந்தார்

திபா 87 எருசலேம் நகரின் பெருமை பற்றிக் குறிப்பிடுகின்றது. சீயோன் என்ற மலைமேல் கட்டப்பட்ட நகரமே எருசலேம். 'மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது' என்று இயேசு குறிப்பிடும் போது இந்த நகரமே அவர் எண்ணத்தில் இருந்தது. எல்லார் கண்ணிலும் பட்ட ஊர் இது. வாழ்ந்தால் எருசலேமில் வாழ வேண்டும் என்று அனைவரும் எண்ணத் தொடங்கினர். இந்த ஊரின் சிறப்பு என்னவென்றால் கடவுள் தாம் வசிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஊர் இது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசனை உண்டு. மதுரை என்றால் மல்லிகை. திருநெல்வேலி என்றால் அல்வா. திண்டுக்கல் என்றால் பிரியாணி. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பு உண்டு.

நம் அனைவருக்குமே சொந்த ஊர் உண்டு. அந்த சொந்த மண்ணின் வாசனை நம் ஒவ்வொருவர் மேலும் இருக்கிறது.

இதையே ஒருவரின் 'givenness' என்கிறது மெய்யியல். நம் ஊர், நம் குடும்பம், நம் பெற்றோர், நம் உறவினர்கள், நம் தாய்மொழி - இவையெல்லாம் நாம் தேர்ந்தெடுத்தவை அல்ல. நம்மேல் சுமத்தப்பட்டவை. நேர்மறையாகச் சொன்னால், அவைகள் தாம் நம் வேர்கள்.

பல நேரங்களில் நம்மால் நம் givennessஐ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 'நான் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே?' 'நான் வேற ஊரில் பிறந்திருக்கலாமே?' 'நான் வேற மொழி பேசியிருக்கலாமே?' என்றெல்லாம் ஒரு சில நேரங்களில் நம்மையே நாம் நொந்து கொள்கிறோம்.

நம் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அவைகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வேர்களை ஏற்றுக்கொள்ளாமல் வெறும் விழுதுகளை மட்டும் பரப்பி விட நினைத்தால் நாம் அந்தரத்தில் தான் நிற்க வேண்டி வரும்.

என்னதான் படையெடுப்புகள் நடந்தாலும், என்னதான் எதிரிகள் அழித்தாலும் எருசலேம் நகர மக்கள் தங்கள் நகரைக் குறித்து என்றும் பெருமைப்பட்டனர்.

நாம்?

'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார்.


Monday, June 23, 2014

உலகம் சிரிக்கிறது

திருப்பாடல்கள் ஏறக்குறைய 75 சதவிகிதம் முடித்தாயிற்று. இன்றைக்கு ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொள்வோம்.

நேற்று இரவு 'உலகம் சிரிக்கிறது' என்ற திரைப்படம் பார்த்தேன். எம். ஆர். ராதா, முத்துராமன், பிரேம் நாசிர், சௌகார் ஜானகி, வி.கே. ராமசாமி இவர்கள் நடித்து 1977 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்திற்குப் பின் வந்தது.

'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தைப் பற்றிய குறிப்புகள் இந்தத் திரைப்படத்தில் உள்ளன. மேலும், ரத்தக் கண்ணீரின் முடிவு போலவே இந்தத் திரைப்படத்தின் முடிவும் இருக்கின்றது.

ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

திரைப்படத்தில் கேமரா யார் பின்னால் போகும்? அல்லது கதாநாயகன் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும்?

கேமரா யார் பின்னால் போகிறதோ அவர் தான் ஒரு திரைப்படத்தின் அல்லது நாவலின் கதாநாயகன்.

உதாரணத்திற்கு, ஊதாரி மகன் எடுத்துக்காட்டைப் பாருங்களேன். எழுதுகின்ற கதாசிரியரின் கண்கள் ஊதாரி மகன் பின்னாலே போகும். அவன் வீட்டில் இருக்கும் போது, தொலை நாட்டில் இருக்கும்போது, பன்றிகளின் நெற்றுக்களை உண்ணும் போது, வீடு திரும்பும் போது, வீடு திரும்பிய பின். ஆகையால் இந்த உவமையின் கதாநாயகன் இவர் தான் என்று நாம் கண்டு கொள்ள முடியும். எந்த நாவலைப் படிக்கும் போதும், எந்த விவிலியக் கதையைப் படிக்கும் போதும் நம் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

'உலகம் சிரிக்கிறது' - ஜெகதீஸ், சங்கர், குமார் - இந்த மூவரைச் சுற்றியே கேமரா வருகிறது. இந்த மூவரும் உலகின் மூன்று பேரை உருவகம் செய்கிறார்கள். நல்லதை உருவம் செய்யும் சங்கர். கெட்டவரை உருவகம் செய்யும் குமார். நல்லவரா, கெட்டவரா என்ற இடைப்பட்ட நிலையை உருவகம் செய்யும் ஜெகதீஸ்.

50 ஆண்டுகளுக்கு முன் நம் நாடு, நம் மண், நம் மொழி, நம் கலாச்சாரம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டுமானால் இதைப் பாருங்கள். நம் நாட்டில் ஆங்கிலம் ஆட்சி செய்தது என்பதற்கான சுவடுகள் நம் மண்ணில் ஒட்டியிருந்ததை நன்றாகப் பார்க்க முடிகிறது - குதிரைப் பந்தயம், கோட்-சூட், போலிசின் யூனிஃபார்ம், கோர்ட் நடைமுறைகள், பெயர்ப்பலகைகள் அனைத்திலும் ஆங்கிலத்தின் எச்சம் இருக்கின்றது.

ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, நம் சொந்த மொழி, கலாச்சாரத்;திற்குத் திரும்ப நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் உணர முடிகிறது.

பெண்களைக் காயப்படுத்தக் கூடாது, சூதாடக் கூடாது, மதத்தைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது, திருமணத்தின் மேன்மை, பதிவிரதை, வியாபார நுணுக்கம், சமூகத்தின் படிநிலை, ஆண்டான்-அடிமை ஏற்றத்தாழ்வு என எண்ணற்ற கருத்தோட்டங்களைக் கோர்த்து நிற்கிறது உலகம் சிரிக்கிறது.

என் மனதைத் தொட்டவைகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்:

அ. கதாநாயகியின் பெயர் செல்லா. எனக்கு ரொம்ப பிடித்த பெயர் இது. அதாவது இது ஒரு காரணப்பெயராகவே இருக்கிறது. 'செல்லா' என்னும் பெயர் 'என்னை என்றும் நீ செல்லமாக நினைக்க வேண்டும்' என்று தன் கணவனுக்குச் சொல்லாமல் சொல்கிறது. இவர் தான் முதல் சீனில் வருவார். அதாவது கதாநாயகியின் இருப்பை இல்லாமல் காட்டுகிறார் டைரக்டர். கதாநாயகியைப் பற்றிப் பேசுவது போல திரைப்படம் தொடங்கும். அந்த நேரத்தில் கதாநாயகி எங்கோ ஒரு சாலையில் கார் ஓட்டிக் கொண்டிருப்பார். அவரைக் காட்டாமலேயே அவரின் குணநலனைக் காட்டுகிறார் டைரக்டர். என்ன ஒரு யுக்தி. இல்லாமை வழியாக இருப்பைக் காட்டும் பின்நவீனத்துவ சிந்தனைக்கு அன்றே நம் முன்னோர்கள் வித்திட்டிருக்கிறார்கள்.

ஆ. கதாநாயகி கார் ஓட்டுபவர். பெண்களால் தன்னிச்சையாகச் செயல்பட முடியும் என்று அவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கிறது இந்த சீன். பெண்களை பெண்களாக, முழுமனிதர்களாக மதிக்க வேண்டும். அவர்கள் ஆண்களைச் சார்ந்தவர்கள் அல்லர் என்பது ஒரு நல்ல கருத்து. அதே நேரத்தில் பெண்களின் சுதந்;திரம் அவர்களின் உள்ளம் சார்ந்தது என்பதையும் அவர்கள் உணர வேண்டும். ஆண்களைப் போல உடையணிவதிலும், பீர் குடிப்பதிலும், சிகரெட் பிடிப்பதிலும் தான் சமத்துவம் இருக்கின்றது என நினைக்கின்றனர் பெண்கள். இதுவல்ல சுதந்திரம். வெளியில் சிகரெட் குடித்து விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் இந்த ஜீன்ஸ் பெண்கள் இன்னும் அடிமைகளாகத் தானே இருக்கின்றார்கள். அதற்குப் பதிலாக இந்தக் கதாநாயகி போன்று உள்ளச் சுதந்திரம் கொண்டிருப்பதே உண்மையான சமத்துவம்.

இ. புழு - தவளை - பாம்பு - மனிதன். ஒவ்வொன்றும் தன் இருப்பிற்கும், அழிவிற்கும் மற்றதையே சார்ந்திருக்கிறது என்ற இயற்கை விதியை புரிய வைக்க முயல்கிறார் ஜெகதீஸ். ஒன்றின் அழிவு மற்றதன் கையில். ஒன்றின் இருப்பும் மற்றதன் கையில். நாம் ஒருவர் மற்றவரோடும் சார்ந்திருக்கிறோம் என்ற சார்பு விதியை உணர்த்துகிறது இப்படம்.

ஈ. மனிதர்கள் சாமர்த்தியசாலிகள். இந்த சாமர்த்தியத்தை அடுத்தவர்களை அழிக்க பயன்படுத்துவதை விட ஆக்கப் பயன்படுத்த வேண்டும்.

உ. 'சாமியார்'. நம்ம ஊரில் அருட்பணியாளர்களையும், இந்துத் துறவியர்களையும் இதே பெயர் சொல்லி அழைக்கிறோம். அதாவது 'சாமி' யார் என்பதைக் காட்டுபவரே சாமியார். இந்தப் படத்தில் வரும் சிங்காரம் ஒரு நாடகக் கம்பெனி சாமியார். சாமி யார்? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நிற்கிறார். இன்றும் நானே பதில் தெரியாமல் நின்று கொண்டு மற்றவர்களுக்கு இதுதான் சாமி! அதுதான் சாமி! என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றேனோ என்று என்னையே கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது இந்த சீன்.

ஊ. பணக்காரன் பின்னாலும், பைத்தியக்காரன் பின்னாலும் நம்ம நாட்டில் எப்பவும் கூட்டம் இருக்கும். இது உண்மைதானே!

எ. பணக்காரர்களைப் பற்றி நாம் அதிகமாக விமர்சனம் செய்வோம். அதாவது, அவர்கள் ஏமாற்றுகிறார்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கிறார்கள் என. இந்தச் சிந்தனையைச் சாடுகின்றார் ஜெகதீஸ். பணக்காரர்களைப் பின்பற்றி நாமும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதை விடுத்து அவர்களும் தங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று பின் நோக்கி இழுக்கும் மனநிலை நண்டு மனநிலை. உலக நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரும் பணக்காரராக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னும் ஏழ்மை உயர்த்திப் பேசப்பட்டு, பணம் தாழ்வாக மதிப்பிடப்படுவது நம்ம ஊரின் பிற்போக்கு மனநிலையே.

ஏ. நீதி வெல்லும். தர்மம் வெல்லும். நாம் செய்யும் செயல்கள் நமக்கே வந்து சேரும். இந்த இயற்கை நிதியை மதிக்காதவர்களைப் பார்த்துத்தான் இன்றும் 'உலகம் சிரிக்கிறது!'

இப்படி ஒவ்வொன்றையும் சீன், சீன் என்று எழுதுவதால் 'இவர் ஒரு சீன் கோழி'ன்னு சொல்லிடாதீங்க! ஓகே!


உமது பீடங்களில் குருவிக்கு வீடு!

திபா 74 முதல் 83 வரை உள்ள பாடல்கள் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதையும், பின் அவர்கள் பாபிலோனியாவிற்கு அடிமைப்படுத்தப்பட்டதையும், அவர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதையும் நினைவுகூறுகின்றன.

திபா 84ஐ இன்று சிந்திப்போம்.

திருக்கோவிலுக்காக ஏங்குதல் என்று பெயரிடப்பட்ட இத்திருப்பாடலின் எபிரேய பாடத்தில் 'பாடகர் தலைவர்க்கு, காத்து நகர்ப்பண், கோராகியரின் புகழ்ப்பா எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடகர் யார்? திபா 42 மற்றும் 43ஐ எழுதியவரே இதையும் எழுதியிருக்கலாம். இந்தத் திருப்பாடல் திருப்பயணத்தின் போது பாடப்படும் பாடல். கோராகியர் என்பவர்கள் திருக்கோயிலில் பயன்படுத்தப்படும் பாடல்களை எழுதி இசையமைக்கும் புலவர்கள்.

இப்பாடலின் வரிகள் சொல்வது என்ன?

அ. (1-4) அனைவரும் திருக்கோயிலுக்காக ஏங்குகின்றனர்.
ஆ. (5-7) சீயோனுக்கு வரும் திருப்பயணிகள்.
இ. (9-10) அரசருக்காக மன்றாடல்.
ஈ. (10-12) கடவுளின் மேன்மை.

இந்தப் பாடலின் மையம் ஒரு சோகம்.

அந்தச் சோகத்தை அழகாகச் சித்தரிக்கின்றார் பாடகர்.

'உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது. தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்காகச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது!'

இந்த ஒரே வரியில் தான் இறைவனின் இல்லத்திலிருந்து இருக்கும் தூரத்தை எழுதிவடுகிறார் பாடகர். சின்னஞ்சிறு பறவைகள் கூட குடியிருக்க என்னால் முடியவில்லையே என்று ஏங்குகின்றார்.

குருவிகளைப் பற்றி நினைக்கும் போது என்னையறியாமலேயே சோகம் கவ்விக் கொள்கிறது. செல்ஃபோன் வரவால் நாம் நஷ்டப்பட்டது குருவி இனம்தான். பாவம். அலைக்கற்றைகளின் தாக்கத்தால் அன்றாடம் அழிந்து கொண்டே இருக்கின்றன.

இந்தப் பாடல் கடவுளை 'படைகளின் ஆண்டவரே!' என்று புதிய பெயரிட்டும் அழைக்கின்றது.

இந்தப் பாடல் வைக்கும் பாடம் இதுதான்:

'பாக்கா' நிலம் 'நீரோடையாக' மாறும்!
'பாக்கா' என்றால் எபிரேயத்தில் வெடிப்பு என்பது பொருள். நீரின்றி வறண்டு, பாளம் பாளமாக வெடித்திருக்கும் நிலத்தைத் திருப்பயணிகள் கடந்து செல்லும் போது அங்கே நீரூற்றுக்கள் புறப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார் பாடகர்.

நம் வாழ்வில் பாக்கா நிலங்களில் நாம் நடப்பது போல இருந்தால் கவலைப்பட வேண்டாமே. படைகளின் ஆண்டவரால் நீரூற்றுக்கள் புறப்படச் செய்ய முடியும்.

'வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாட்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானாது!'


Sunday, June 22, 2014

மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?

திபா 73 திருப்பாடல்கள் தொகுப்பின் மூன்றாம் பகுதியைத் தொடங்கி வைக்கின்றது.

இதன் தலைப்பு ஆசாபின் திருப்பாடல்.

இந்த ஆசாப் யார்? இவர் விவிலியத்தில் நான்கு இடங்களில் வருகின்றார்:

அ. பெரேக்கியா என்பவரின் தந்தை இவர் (1 குறிப்பேடு 6:39)
ஆ. இவர் ஒரு பாடகர் குழு தலைவர் (1 குறிப்பேடு 15:17)
இ. இவர் ஒரு 'குட்டி' இறைவாக்கினர் (2 குறிப்பேடு 29:30) - அதாவது 'காட்சி காண்பவர்'. நம்ம ஊரு 'குறி சொல்கிறவர்' மாதிரி.
ஈ. தாவீதின் சமகாலத்தவர் (நெகேமியா 12:46)

ஆசாபிற்கு ஒரு பிரச்சினை. என்ன பிரச்சினை? கெட்டவர்களிடம் நிறைய சொத்தும், நகையும் இருந்தது. நல்லவர்களிடம் ஒன்றும் இல்லை. கெட்டவராய் இருந்தால் தான் எல்லாம் கிடைக்குமா என்று நினைக்கத் தொடங்குகிறார். தான் மாசற்றவராய் இருப்பதால் யாருக்கு லாபம் எனப் புலம்புகிறார். இந்தப் புலம்பலுடன் ஆண்டவரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார்.

அங்கே அவருக்கு விடை கிடைக்கின்றது. அதாவது, கெட்டவர்கள் அனைத்தையும் பெற்றது போல இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் துணை இருக்காது. ஆனால் நல்லவர்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் துணை நிறைவாக இருக்கும்.

இது ஏதோ ரஜினி பட டயலாக் போல இருக்கிறது.

இதை எப்படிப் புரிந்து கொள்வது?

காரல் மார்க்ஸ் இதை வேறுமாதிரி புரிந்து கொள்ள அழைக்கின்றார். அதாவது, செல்வம் படைத்தவர்கள் செல்வம் படைத்திருக்கக் காரணம் சமூகத்தில் உள்ள அநீதியும், ஏற்றத்தாழ்வும் தான். இதை சரி செய்தால் அவர்களின் செல்வம் குறைந்து விடும். ஆகையால் இதை செய்வதற்குப் பதிலாக அவர்கள் ஒரு எளிய வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த வழிதான் 'கடவுள்'. அதாவது, செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் 'கடவுளால் அன்பு செய்யப்படுகிறார்கள்' என்று சொல்லிவிட்டால், ஏழைகள் பணத்திற்காக ஏங்க மாட்டார்கள். அதான் கடவுள் நம் பக்கம் இருக்கிறாரே, வேறு என்ன வேண்டும்? என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். செல்வர்களை எதிர்த்து கேள்வி கேட்கவும் மாட்டர்கள். நல்ல யுத்தி தானே?

எனக்கு அடிக்கடி ஒரு டவுட் வரும்.

நாம எல்லாருமே லைப் இன்சுரன்ஸ் வச்சிருப்போம். வச்சிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். ஒருவரை வாழ்க்கை முழுவதும் ஏழையாக வைத்திருந்து பணக்காரனாக இறக்க வைப்பதே லைப் இன்சூரன்ஸ். அதாவது, நம்ம சாப்பாட்டை, அன்றாட செலவுகளை மிச்சப்படுத்தி எல்.ஐ.சிலயோ அல்லது டாடாவிலேயோ, அல்லது பஜாஜ் அலயான்ஸ்லயோ இன்சூரன்ஸ் கட்றோம். ஆனா இறந்த பின் அதனால் நமக்கு என்ன பயன்? பின் எதற்கு மாங்கு மாங்கு என அதற்கு பணம் கட்ட வேண்டும்?

நம் வாழ்க்கையையும் அப்படித்தான் வாழ்கிறோமோ என எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றும். 'எளிமை, தவம், கட்டுப்பாடு, ஒறுத்தல், கோவில், திருப்பயணம், அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது' என தினமும் வருத்திக் கொள்கிறோம். எதற்காக? இப்படி எல்லாம் செய்தால் நாளைக்கு நமக்கு மோட்சம் கிடைக்கும்.

சரி...நாம் இறந்தபின் மோட்சம் இல்லை என வைத்துக் கொள்வோம்...அப்போது என்ன நினைப்போம்...ஐயயோ...நம்மள இவ்ளோ நாள் ஏமாத்திட்டாங்களே! ஒன்னுமே அனுபவிக்காம வந்துட்டுமே! நாம ரொம்பவும் ஏமாந்துட்டுமே என நினைப்போமா? இப்படிப் புலம்பி என்ன பயன்?

அந்த நேரத்தில் தான் ஆசாப்பின் வார்த்தைகள் நம் உள்ளத்திலும் ஓடும்:

'அப்படியானால் மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?

குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக் கொண்டதும் வீண்தானா?' (73:14).


Friday, June 20, 2014

கதிரவனும் நிலாவும் உள்ளவரை...

திபா 72 சாலமோனுக்கு உரியது. திபா 72ன் இறுதியில் ஒரு அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது. ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுக்கள் நிறைவுற்றன. இப்பாடல் திருப்பாடல்கள் நூலின் இரண்டாம் பகுதியை நிறைவு செய்கிறது.

சாலமோன் அரசர் திருப்பொழிவு செய்யப்பட்டபோது பாடப்பட்ட பாடலாக இது இருக்கலாம் என்பது பலரின் கருத்து. இந்தப் பாடலின் 18 மற்றும் 19ஆம் வசனங்கள் பிற்சேர்க்கை.

இந்தப் பாடலில் உருவகங்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

உருவகங்களும் அவை தரும் அர்த்தமும் என்ன?

முதலில் இப்பாடலில் வரும் உருவகங்கள் எவை?

அ. மலைகள் மக்களுக்குச் சமாதானம் கொடுக்கட்டும்.
ஆ. குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
இ. கதிரவனும், நிலாவும் உள்ளவரையில்.
ஈ. புல்வெளியில் பெய்யும் தூறலைப் போல.
உ. நிலத்தில் பொழியும் மழையைப் போல.
ஊ. நிலா உள்ள வரையில்.
எ. மலைகளின் உச்சியில் பயிர்கள்.
ஏ. வயல்வெளிப்புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக.
ஐ. கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக.

உருவகங்கள் நம் வாழ்வில் மிகப்பெரிய நிலையில் பங்கெடுக்கின்றன. நாம் பயன்படுத்தும் அன்றாட மொழியில் எண்ணற்ற உருவகங்கள் இருக்கின்றன.

உருவகத்திற்கு இரண்டு 'அர்த்த உலகங்கள்' உண்டு.

'காலைமுதல் மாலை வரை அவன் கட்டிலேயே இருந்தான்'.

இந்தச் சொற்றொடரை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?

'காலைமுதல் மாலை வரை அவன் தூங்கினான்'.

'கட்டில்' என்பது ஒரு 'அர்த்த உலகம்'. 'தூக்கம்' என்பது மற்றொரு 'அர்த்த உலகம்'. நம் மூளை இரண்டையும் உடனடியாக ஒருங்கிணைத்து அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறது.

மேலே காணும் திபா உருவகங்கள் சொல்வது என்ன? நிறைவு. நீதி. அமைதி. வளமை.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு உருவகம். நாம் காண்பது ஒருவர். அவருக்குப் பின் ஒரு உலகம். இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் தான் அந்த நபரை நாம் புரிந்து கொள்ள முடியும்.

'கடவுள்' என்பவரே ஒரு உருவகம் தானே!

'நீங்களும்' ஒரு உருவகம்!

'நானும்' ஒரு உருவகம்!

'கதிரவனும், நிலாவும் உள்ளவரையில்!'


Thursday, June 19, 2014

அஸ்தமனமும் அழகுதானே!

திபா 70ம் 69ன் கருத்தையே கொண்டிருப்பதால் அதை விடுத்து இன்று நாம் திபா 71ஐ சிந்திப்போம்.

இந்தத் திருப்பாடலுக்கு எபிரேய மொழிப்பாடத்தில் தலைப்பு இல்லை. தமிழ்ப்பாடத்தில் 'முதியோரின் மன்றாட்டு' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. தலைப்பு இல்லாத காரணத்தால் ஒரு சிலர் இதை திபா 70ன் நீட்சி எனவும் கருதுகின்றனர்.

தன் வாழ்நாளின் மாலைப்பொழுதில், அதாவது அஸ்தமனத்தில், நிற்கும் ஒருவர் - ஆணோ, பெண்ணோ - தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்து, தான் பயணித்த பாதையை நினைத்தவராய் இறைவனை நோக்கித் தன் கண்களை உயர்த்தும் பாடலே இத்திருப்பாடல்.

'Growing Old Gracefully' என்பது இன்று அதிகமாக எல்லா இடத்திலும் பேசப்படும் ஒரு கருத்தியல். பிறக்கின்ற ஒவ்வொன்றுமே வளர வேண்டும். வளர்தல் அல்லது முதிர்தல் என்பது இயற்கையின் நியதி. இந்த வளர்தலையும், முதிர்தலையும் உடல் ஒரு மாதிரி செய்கின்றது. மனம் மற்றொரு மாதிரி செய்கின்றது. சிலர் உடலால் முதிர்ந்திருப்பர். ஆனால் சிந்தனையால் இளமையாயிருப்பர். சிலர் உடல் இளமையாயிருக்க, சிந்தனை முதிர்ந்து (முதிர்ச்சி அல்ல!) போய் இருக்கும்.

மனமும், உடலும் ஒரே நேரத்தில், ஒரே போல வளர்வதில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

'வாழும் கலை' என்று சொல்லும் அமைப்பு சொல்வதும் இதுதான்: பல நேரங்களில் நாம் நம் உடலுக்கு வெளியே நடக்கும் செயல்களைத்தான் சிந்திக்கின்றோமே தவிர, உடலுக்குள் நடக்கும் தொழிற்சாலையின் அமைப்பை நாம் புரிந்து கொள்வதேயில்லை. அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கூட நாம் எடுத்ததில்லை. சளிப் பிடிக்கும் போது தான் நம் மூக்கு நினைவிற்கு வருகின்றது. ஆஸ்துமா வரும்போதுதான் நம் நுரையீரல் நினைவிற்கு வருகிறது.

மனித வளர்ச்சியை பலரும் பல்வேறு நிலைகளாகப் பிரிக்கின்றனர். ஷேக்ஸ்பியர் மனித வாழ்க்கையை ஏழு நிலைகளாகப் பிரித்து இந்த ஏழு நிலைகளிலும் ஏழு கதாபாத்திரங்களில் நாம் நடிக்கின்றோம் என்று குறிப்பிடுகின்றார். எரிக்சன் என்னும் உளவியல் அறிஞர் குறிப்பிடும் எட்டு நிலைகளே இன்றும் அதிகப் பேரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று:

அ. குழந்தைப் பருவம் (0 - 18 மாதங்கள்) - போராட்டம்: நம்பிக்கை - அவநம்பிக்கை.
ஆ. தொடக்க குழந்தைப் பருவம் (2 - 3 ஆண்டுகள்) - போராட்டம்: தன்னிச்சை - வெட்கம் மற்றும் குழப்பம்.
இ. பள்ளிக்கு முன் பருவம் (3 - 5 ஆண்டுகள்) - போரட்டம்: ஆர்வம் - குற்ற உணர்வு.
ஈ. பள்ளிப் பருவம் (6 - 11 ஆண்டுகள்) - போரட்டம்: கடின உழைப்பு - தாழ்வு மனப்பான்மை.
உ. விடலைப் பருவம் (12 - 18 ஆண்டுகள்) - போரட்டம்: தான்மை - அடையாளக் குழப்பம்.
ஊ. முன் இளமைப் பருவம் (19 - 40 ஆண்டுகள்) - போராட்டம்: நெருக்கம் - தனிமை.
எ. பின் இளமைப் பருவம் (40 - 65 ஆண்டுகள்) - போராட்டம்: வளர்ச்சி - தேக்கம்.
ஏ. முதிர் பருவம் (65 - 0 ஆண்டுகள்) - போரட்டம்: நிறைவு - விரக்தி.

இந்த எட்டுப் பருவங்களும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவுப் பழக்கம், கலாச்சாரம், வாழ்க்கை நிலை ஆகியவற்றின் பின்புலத்தில் எடுக்கப்பட்டவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வாழ்க்கை நிலை சராசரி வயது 65. அப்படியிருக்க இதை நாம் அப்படியே நமக்கு எடுத்துக்கொள்ள முடியாது. சரியா?

கவிப்பேரரசு வைரமுத்து மனித வாழ்கை நிலையை எட்டு எட்டு என 64 வயது வரை எட்டு எட்டுக்களாகப் பிரித்துள்ளார். இதைத் திரைப்படப்பாடலாக நாம் பாட்ஷா திரைப்படத்தில் கேட்டிருப்போம். வைரமுத்துவின் வகைப்பாடு நமக்குப் பொருந்துகின்ற ஒன்று.

சரி இதற்கும் திபா 71க்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

திபா 71 அல்லது எபிரேய சிந்தனையைப் பொறுத்த வரை மனித வாழ்கை நான்கு நிலைகள்:
அ. தாயின் வயிறு.
ஆ. பிறப்பு.
இ. இளமை.
ஈ. முதுமை.

அறிவியல், உளவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகள் இல்லாத போது பிரிக்கப்பட்ட இந்த வகைப்பாடு மிகவும் 'பொதுவானதாகத்' தோன்றினாலும், இன்றைய உளவியல் செய்யாத ஒன்றை எபிரேய சிந்தனை செய்திருக்கிறது. அதாவது தாயின் வயிற்றில் குழந்தை இருப்பதையும் குழந்தையின் வளர்ச்சி நிலையில் ஒன்றாகக் கருதியது. இது மிகவும் சிறப்பான ஒன்று. குழந்தையின் பிற்கால வளர்ச்சி அதன் தாயின் வயிற்றிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது. ஆகையால் தான் முதல் ஏற்பாட்டு நூல்கள் அதிகமாக 'தாயின் வயிற்றில் இருக்கும் போது' என்று பேசுகின்றன.

நம் பாடகர் இன்று தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது:

அ. வயது முதிர்ந்த
ஆ. நரைத்த
இ. ஆற்றல் குறைந்த என்று குறிப்பிடுகின்றார்.

'பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்!'

நாம் வயதானவராக இருக்கும் போது நாம் மற்றவர்களுக்குப் புதிராக இருக்கின்றோமோ இல்லையோ நமக்கே நாம் புதிராகத் தான் இருப்போம்.

நடக்க வேண்டும் என்று மனம் நினைக்கும். ஆனால் கால் நடக்க மறுக்கும். எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால் எதுவமே ஒவ்வாது. காலையில் ஷேவிங் செய்ய கையை முகத்துக்கு அருகில் கொண்டு சென்றால் அது வேறெங்கோ போகும். சாப்பிடும் போது சட்டையில் கொட்டும். நம்மை அறியாமல் எச்சில் கொட்டும். நீர் பிரியும். கை, கால்கள் தொடுவுணர்வை இழக்கும். எழுத்துக்கள் இரட்டிப்பாகத் தெரியும். நா குழறும். கை நடுங்கும்.

என்ன நேற்று வரை நல்லாதானே இருந்தேன்? இன்று என்ன ஆயிற்று? என்று நாம் நம்மையே கேட்போம்.

இந்த நிலையில் நமக்கு இருக்க வேண்டிய மனநிலை என்ன? திபா 71:8 மட்டும் தான்:

அ. என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே.
ஆ. நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

இந்த வயதில் தன்னை நோக்கி நாம் மனதைத் திருப்பினால் அங்கே விரக்தி தான் வரும். ஆகவே இறைவனை நோக்கி மனதைத் திருப்பி, கடந்து வந்த பாதைக்கு, உடன் நடந்து வந்தவர்களுக்கு 'நன்றி' எனச் சொல்லத் தொடங்கினாலே போதும்.

நம் ஒவ்வொரு வாழ்க்கை நிலையும் இறைவனும், இயற்கையும் அளித்த கொடை. நாளை முதுமை அடைவதை நினைத்து இன்றே கவலைப்படத் தொடங்குவதும், முதுமை அடைந்தபின் 'ஐயோ...அன்னைக்கு நல்லா இருந்துச்சே!' என்று எரிச்சல் படுவதும் சால்பன்று.

ஒவ்வொரு வாழ்க்கை நிலையையும், முழுமையாக வாழ்ந்தால்...

அஸ்தமனம் கூட அழகுதானே!


To watch the Video Song of Vairamuthu on Eight Stages of Life click here:

Eight Stages of Life



நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?

ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு: 'தெ விப்பிங் பாய்' (The Whipping Boy). இதன் பொருள் என்ன? இங்கிலாந்தில் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில், அரசர்களின் மகன்கள், அதாவது இளவரசர் பள்ளிக்குச் செல்லும் போது அந்த இளவரசன் கூடவே ஒரு சிறுவனையும் அனுப்புவார்கள். பள்ளியில் இளவரசன் ஏதாவது தவறு செய்தாலோ, அல்லது வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றாலும் ஆசிரியர்கள் இளவரசனோடு இருக்கும் சிறுவனை அடிப்பார்கள். இளவரசனை அடிக்க அவர்களுக்கு அனுமதியில்லை. இளவரசனின் வலியையெல்லாம் அந்த சிறுவன் தான் தாங்கிக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரசவையின் மேல் உள்ள கோபத்தை, அரசனின் மேல் உள்ள கோபத்தையும் ஆசிரியர்கள் அந்த அப்பாவிச் சிறுவன் மேல் காட்டுவார்களாம். தமிழில் இதை அப்படியே குறிக்க சொல் இல்லை. பலிகடா என்ற சொல் ஏறக்குறைய நெருக்கமான பொருளைத் தந்தாலும், சிறுவன் அனுபவிக்கும் உணர்வுகளை 'பலிகடா' (scape-goat) என்ற வார்த்தை முழுமையாகத் தருவதில்லை. ஆகையால் 'விப்பிங் பாய்' என்றே எடுத்துக்கொள்வோம்.

மற்றவர் செய்த தவறுக்காக, அல்லது தான் செய்யாத ஒரு தவறுக்காக துன்பத்தைத் தன்மேல் ஏற்பவரே 'விப்பிங் பாய்!'.

திபா 69ல் நாம் இப்படிப்பட்ட ஒரு விப்பிங் பாயைத் தான் பார்க்கின்றோம். இந்தப் பாடலை எரேமியாக இறைவாக்கினர் எழுதியிருப்பார் என்பது பலரின் கருத்து. 'தாவீதுக்கு உரியது' என்று தலைப்பு இருந்தாலும் இந்தப் பாடல் சொல்லும் பல நிகழ்வுகளுக்குச் சான்றுகள் எரேமியா இறைவாக்கினர் நூலில் உள்ளன.

மிகப்பெரிய விப்பிங் பாய் 'இயேசு கிறிஸ்து' தான். தான் செய்யாத பாவத்திற்காக தண்டனை ஏற்றார். ஆனால் இயேசு தண்டனை ஏற்றதில் எனக்கு இன்னும் சில கேள்விகள் உள்ளன. உதாரணமாக,

அ. பாவத்தின் சம்பளம் மரணம். இயேசுவின் மரணத்தால் பாவம் அழிந்து விட்டது. அப்புறம் ஏன் இன்னும் இவ்வுலகில் மரணம் இருக்கிறது?

ஆ. இயேசு ஒரே முறை நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டார் எனில், ஏன் இன்னும் நாம் பாவசங்கீர்த்தனம் வழியாகவும், திருப்பலிகள் வழியாகவும், நவநாட்கள் வழியாகவும், செபங்கள் வழியாகவும் நம் பாவங்களுக்குப் பரிகாரம் தேடுகிறோம்?

இ. இயேசுவின் இறப்பிற்கு முன் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் இயேசுவின் மீட்புச் செயல் பலன் கொடுக்குமா?

ஈ. இயேசுவைப் பற்றியே அறியாதவர்களின் நிலை என்ன?

உ. இயேசுவுக்கு முன் இருந்த யாவே கடவுள் பயன் அற்றவரா?

ஊ. தன் ஒரு மகனின் இரத்தத்தைக் கேட்கும் ஒரு தந்தை எப்படி அன்பானவனராக இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு கொடூர மரணத்தால் தான் உலகை மீட்டிருக்க வேண்டுமா? அவர்தான் கடவுளாயிற்றே. இன்னும் வேறு நல்ல வழிகளை யோசித்திருக்கலாமே?

எ. ஆதாம் - ஏவாள், பாம்பு - பாவம், தோட்டம் எல்லாம் அக்காடிய, சுமேரிய புராணக் கதைகளை மையமாக வைத்து எழுதப்பட்டவை. அப்படி எந்த கேரக்டரும் உண்மையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க இயேசுவை புதிய ஆதாம் எனவும், மரியாவை புதிய ஏவா எனவும் சொல்வதற்கும் அடிப்படை இல்லை. ஜென்மப் பாவத்திற்கும் அடிப்படை இல்லை. இப்படியிருக்க எதை அடித்தளமாக வைத்து நம் இறையியில் நிற்கிறது.

பில்டிங் ஸ்டிராங்கு...ஆனால் பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்கிறதே!

இயேசுவின் இறப்பு ஒரு சாதாரண மரண தண்டனை. பிற்கால இறையியலார்கள் தாம் அதை ஒரு மீட்புச் செயலாகச் சொல்ல ஆரம்பித்து விட்டனர். இதுதான் இன்றைய வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

நிற்க!

தான் செய்யாத ஒரு செயலுக்காக தாவீதோ அல்லது ஒரு பாடகரோ துன்பம் அனுபவிக்கின்றனர். அந்தத் துன்பத்திலிருந்து இறைவன் தன்னை மீட்க வேண்டும் என்று பாடும் பாடலே திபா 69.

இந்தத் திருப்பாடலில் படிப்பதற்கு நிறைய உருவகங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில இவை:

அ. கழுத்தளவு வெள்ளம்.
ஆ. நிலைகொள்ளாத நீர்.
இ. வறண்ட தொண்டை.
ஈ. பூத்துப் போன கண்கள்.
உ. தலைமுடியைவிட மிகுதியான வெறுப்பு.
ஊ. சகோதருக்கே வேற்று மனிதனான நிலை.
எ. தாயின் பிள்ளைகளுக்கு அயலான்.
ஏ. சாக்குத் துணி.
ஐ. சேற்றில் மூழ்கினேன்.
ஒ. ஆழ்கடலில் விழுந்தேன்.
ஓ. பிளந்த இதயம்.
ஒள. உணவில் நஞ்சு.
க. தாகத்திற்குக் காடி.
ங. கண்ணியாகும் விருந்து.
ச. சினம் என்னும் தீ.
ஞ. வாழ்வின் அட்டவணை.
ட. காளையைவிட சிறந்த பலி.
ண. தள்ளாடும் இடைகள்.


இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு இனம் புரியாத சோகம், வெறுமை, கையாலாகத நிலை அப்பியிருப்பதைக் காண முடிகிறது.

இந்தப் பாடல் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். யோவான் 1:11. 2:27. திப 1:20. மத்தேயு 27:29, 34. உரோ 11:9-10. 15:3).

இன்றும் நம் சமுதாயத்தில் நம்மைச் சுற்றி விப்பிங் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் நிறையவே இருக்கிறார்கள்.

செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்.
நீதி கிடைக்காமல் பணத்தாலும், ஆள்பலத்தாலும் நீதியை இழந்த தவிப்பவர்கள்.
'நீ செய்திருப்பாய்!' என்று முத்திரை குத்தப்படும் நபர்கள்.

சில நேரங்களில் நாமும் மற்றவர்களை விப்பிங் பாய்ஸ் ஆக்கியிருக்கலாம். இது நம் உறவுகளில் சில நேரம் இருக்கிறது. எங்கோ உள்ள கோபத்திற்கு பல நேரங்களில் நம் அன்பிற்குரியவர்கள் பலியாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் 'கத்தோலிக்க திருஅவை என்னும் விப்பிங் பாய்!' என்ற கட்டுரை வாசித்தேன். இன்று உலகில் காணும் தவறுகளுக்கும், உலகத்தாரின் கோபத்திற்கும் வெகு சுலபமாக மற்றவர்களைக் குறிப்பாக திருச்சபையை, கடவுளை, அருட்பணியாளர்களைக் காரணம் காட்டும் போக்கும் இருக்கிறது.

உலகில் இருக்கும் பீடோஃபிலியா பிரச்சனைக்கும், ஓரினச் சேர்க்கைக்கும், பாலியில் பிறழ்வுகளுக்கும் காரணம் அருட்பணியாளர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு நம்மிடம் இந்த மனநிலை வளர்ந்து விட்டதும் வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான்.

அழகாகக் கேட்கிறார் பாடலாசிரியர்:
'நான் திருடியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடுவேன்...
நீ பிச்சை கேட்டால் நான் உழைத்துத் தந்து விடுவேன்...
ஆனால்...
நீ நான் திருடாததையல்லவா கேட்கிறாய்...!'

'நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?' (69:4)


Tuesday, June 17, 2014

தொழுவங்களின் நடுவில் படுத்துக் கொண்டீர்களோ?

திபா 68 ஒரு பவனிப் பாடல். இந்தப் பவனியின் பின்புலம் என்ன? பிலிஸ்தியர்கள் இஸ்ரயேல் மக்கள் மேல் படையெடுத்து அவர்களின் உடன்படிக்கைப் பேழையைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். உடன்படிக்கைப் பேழையில் இஸ்ரயேல் மக்கள் ஆரோனின் கோலையும், ஒரு செம்பு மன்னாவையும், சீனாய் மலையில் மோசே வழியாக இறைவன் கொடுத்த பத்துக் கட்டளைகளின் கற்பலகைகளையும் சுமந்து கொண்டு சென்றார்கள். இந்த மூன்றும் இறைவனின் உடனிருப்பை அவர்களுக்கு உணர்த்தியது. இந்த மூன்றின் வழியாகத்தான் இறைவனின் விடுதலைச் செயல் அவர்களின் வாழ்வில் நடந்தேறுகிறது. இப்படிப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிசம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டவுடன் அவர்கள் நிலைகுலைந்து போகின்றனர்.

ஆண்டவர் தங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மறந்து விட்டாரோ, தாங்கள் பாவம் செய்து உடன்படிக்கையை மீறி விட்டோமோ என்று புலம்பித் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் உடன்படிக்கைப் பேழையை அத்து மீறி எடுத்துச் சென்ற பிலிஸ்தியர் கொள்ளை நோயினால் தாக்கப்படுகின்றனர். கொள்ளை நோயிலிருந்து விடுதலை பெறுவதற்காக பேழையைத் திரும்ப இஸ்ரயேல் மக்களிடமே அனுப்புகின்றனர். இந்நிலையில் காத்து மற்றும் எருசலேம் என்ற நகரங்களுக்கு இடையே பேழை வைக்கப்டுகின்றது. காத்து என்பது பிலிஸ்தியரின் நகரம். எருசலேம் என்பது எபூசியர்களின் நகரம். தாவீது இந்நேரம் எருசலேமின் மீது படையெடுத்து எருசலேமைத் தன் வசப்படுத்துகின்றார். எருசலேமில் கோவில் இன்னும் கட்டப்படவில்லை. சிறிய பலிபீடம் ஒன்றைக் கட்டி அந்த இடத்திற்கு உடன்படிக்கைப் பேழையை தாவீதும் அவரின் மக்களும் பவனியாக எடுத்துச் செல்கின்றனர். இந்த வெற்றிப் பவனியில் தாவீதோ அல்லது அவரின் அரசவைப் பாடகரோ பாடும் பாடலே திருப்பாடல் 68.

இந்தத் திருப்பாடலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. கடவுளும் மக்களுக்கான அவரின் செயல்களும் (1-6)
ஆ. கடவுள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு மக்களை அழைத்துச் சென்றது (7-18)
இ. கடவுளும் அவரது வல்லமை மிகுந்தசெயல்களும் (19-31)
ஈ. கடவுள் செய்த அனைத்திற்கும் நன்றி கூறுங்கள் (32-35)

இந்தப் பிரிவுகளைச் சாத்தியமாக்கும் வார்த்தை 'சேலா!' (அதாவது, நிறுத்தம்). ஒரு பிரிவிலிருந்து அடுத்த பிரிவிற்கு பாடகரை நிறுத்தி அழைத்துச் செல்லும் விதமாக இப்பாடல் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாடலைப் புரியவேண்டுமென்றால் நீதித்தலைவர்கள் நூல் பிரிவு 5ஐ வாசிப்பது சால்பு.

இந்தப் பாடலின் மையமாக இருப்பது வசனம் 19: 'நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்'. ஆனால் எபிரேய மொழியின் பாடம் 'நாளும் நாம் சுமப்பதில் அவர் உதவி செய்கின்றார்' என்று இருக்கின்றது.

நாம் சுமக்கும் சுமைகள் நமக்கு வெளியே இல்லை. நமக்கு உள்ளே தான் இருக்கின்றன. சில நேரங்களில் நம் உள்மனதில் இருக்கும் சோகம் அல்லது 'என்ன செய்வது என்று தெரியாத திக்கற்ற நிலை'. இவைகளும் சுமைகள் தாம். இந்த நேரங்களில் 'நாம் சுமப்பதில் அவர் நமக்கு உடன் இருந்து உதவி செய்கின்றார்' என்ற வார்த்தைகள் ஆறுதலாகவே இருக்கின்றன. இந்த ஒத்த செய்தியையும் ஆறுதலையும் எசாயா 46:1-4 மற்றும் 63:9 வசனங்களும் நமக்குத் தருகின்றன.

'தொழுவங்களின் நடுவில் படுத்துக் கொண்டீர்களோ?'


Monday, June 16, 2014

பெயரில் என்ன இருக்கிறது...?


திபா 66 ஆண்டவரின் பெயருக்கு பாடகர் தலைவர் நன்றிப் புகழ்ப்பா பாடுவதாக அமைந்துள்ளது.

'உம் பெயர் வாழ்த்தப் பெறுக!' என்று எப்போதெல்லாம் திபா சொல்கிறதோ அப்போதெல்லாம் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது எருசலேம் ஆலயத்தைத் தான். எருசலேம் ஆலயத்தில் யாவே இறைவனின் ஆண்டவர் என்னும் பெயர் குடிகொள்வதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர்.

'ஆண்டவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு நெருக்கமானவர்' என்பது அவர்களின் நம்பிக்கையின் உச்சம்.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் என்பது மட்டும் பெயரல்ல. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு பெயர்களில் கடவுளை அழைத்தனர். அந்தப் பெயர்கள் யாவை என்றும் அவை சொல்லும் அர்த்தம் என்ன என்றும் இன்று பார்ப்போம்.

அ. எல்-சதாய் (எல்லாம் வல்ல இறைவன்)

இந்தப் பெயர் முதல் ஏற்பாட்டில் 7 முறை வருகின்றது. முதலில் இது பயன்படுத்தப்பட்டது ஆபிரகாமால் தான் (தொநூ 17:1). 'எல்' என்றால் 'கடவுள்'. 'சதாய்' என்றால் 'மலை'. பழங்காலத்தில் மலை என்பது வல்லமை என்று கருதப்பட்டது. மலைக்குக் கீழ் ஓர் ஊர் இருப்பதாகவும் மலையின் வல்லமையால் அது மறைந்து போனது. ஆகையால் மலை நினைத்தால் யாரையும் அழிக்க முடியும் என்பது அவர்களின் கருத்து. 'சதாய்' என்பதற்கு 'பெண்ணின் மார்பகம்' என்றும் பொருள். அக்கடிய நாட்டுப் பெண் தெய்வத்தின் பெயர் சதாத். அந்தப் பெயரை ஆபிரகாம் ஆண் கடவுளுக்குப் பயன்படுத்தினார் என்பதும் சிலரின் கருத்து.

ஆ. எல்-எல்யோன் (உன்னத கடவுள்)

'எல்யோன்' என்றால் 'உயர்ந்த' அல்லது 'உன்னதமான' என்பது பொருள். முதல் ஏற்பாட்டில் 28 முறையும், இதில் திருப்பாடல்களில் 19 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். தொநூ 14:18).

இ. அதோனாய் (ஆண்டவர், தலைவர்)

'அதோன்' என்றால் 'தலைவர்' என்றும் 'ஆய்' என்றால் 'என்னுடைய' என்றும் பொருள் கொள்ளலாம். முதல் ஏற்பாட்டில் 434 முறை உள்ளது (காண். தொநூ 15:2) விவிலியத்தில் எங்கெல்லாம் 'யாவே' என்று எழுதப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இன்றும் நாம் 'அதோனாய்' என்றே வாசிக்கின்றோம். 'யாவே' என்ற பெயரை உச்சரித்தால் இறைவனின் மரியாதையைக் குறைப்பதாய் எண்ணி அந்த இடத்தில் அதோனாய் என உச்சரிப்பது இயல்பு. அக்காலத்தில் நம் வீடுகளில் மனைவியர் கணவரின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். அது மரியாதைக் குறைவு என எண்ணி 'என்னங்க!' என்றும் 'அவரு' என்றும் 'அவங்க அப்பா' என்றும் பிள்ளைகளின் உறவை மையப்படுத்திச் சொல்லும் வழக்கம் உண்டு. இன்று 'டேய்...' என்று சொல்லும் அளவிற்கு நெருக்கம் அதிகமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஈ. யாவே (ஆண்டவர், யெகோவா)

முதல் ஏற்பாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர் (6519 முறை). காண். தொநூ 2:4. இந்தப் பெயரைத் தான் தன் பெயராக கடவுள் மோசேக்கு வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அனைத்தையும் ஆள்பவரே' ஆண்டவர்.

உ. யெகோவா நிஸ்ஸி (ஆண்டவர் என் கொடி)

அமலேக்கியரோடு போரிட்டு வெற்றி பெற்ற மோசே பலி பீடம் ஒன்றைக் கட்டி ஆண்டவரின் பிரசன்னத்தைப் 'போர்க்கொடிக்கு' ஒப்பிட்டு வழங்கும் பெயர் இது (காண். விப 17:15). ஒரே முறைதான் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஊ. யெகோவா ரோயே (ஆண்டவர் என் ஆயர்)

நமக்குப் பரிச்சயமான திபா 23ம், 80ம், தொநூ 48:15 மற்றும் 49:24 இறைவனை 'ஆயர்' என அழைக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் நாடோடி இனத்தவராக இருந்தபோது உருவான பெயர் இது.

எ. யெகோவா ராஃபா (ஆண்டவர் என் சுகம்! அல்லது குணமளிக்கும் ஆண்டவர்)

'ரஃபோ' என்றால் 'குணப்படுத்துதல்' என்பது பொருள். இந்தச் சொல்லிலிருந்துதான் 'ரஃபேல்' என்னும் அதிதூதரின் பெயரும் வருகின்றது. ஏனெனில் அவர் தொபியாவின் நோயைக் குணமாக்குகிறார். அடிப்பவரும் அவரே, கட்டுப்போடுபவரும் அவரே என்று இறைவனை எல்லாமாகப் பார்க்கின்றன இறைவாக்குகள் (காண். எரே 30:17).

ஏ. யெகோவா ஷாம்மா (ஆண்டவர் அங்கே!)

'ஷாம்' என்றால் 'அங்கே' என்பது பொருள். எருசலேமைச் சுட்டிக்காட்டி மற்றவர்களுக்குச் சொல்லும் பெயர் இது (காண். எசே 48:15).

ஐ. எலோகிம் (கடவுள்)

கடவுளுக்கு வழங்கப்பட்ட முதல் பெயர் இது (தொநூ 1:1).

ஒ. யாவே யீரே (ஆண்டவர் பார்த்துக்கொள்வார்)

'பலிக்கான ஆடு எங்கே?' என்று ஈசாக்கு ஆபிரகாமைப் பார்த்துக் கேட்கும் போது, ஆபிரகாம் சொல்லும் வார்த்தைகளே இது - 'மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்!' (தொநூ 22). எனக்கு மிகவும் பிடித்த பெயரும் இதுவே.

இவை தவிர 'யெகோவா செதேக்கேனு' (ஆண்டவர் என் நீதி!), 'யெகோவா மெக்கோதிஸ்கேம்' (ஆண்டவர் என் தூய்மை), 'எல் ஓலாம்' (என்றும் இருப்பவர்), கண்ணா (பொறாமை அல்லது நெருப்பு), யெகோவா சலோம் (ஆண்டவர் என் அமைதி) மற்றும் யெகோவா சபவோத் (படைகளின் ஆண்டவர்) என்னும் பெயர்களும் உண்டு.

ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் ரோமியோ, ஜூலியட்டைப் பார்த்துக் கேட்பார்:

'பெயரில் என்ன இருக்கிறது?
ரோஜாவை வேறு பெயர் கொண்டு அழைத்தால்
அதன் மணம் குறைந்து விடுமா என்ன?'

பெயரில் என்ன இருக்கிறது...?

பெயரில் நிறையவே இருக்கிறது!


Sunday, June 15, 2014

நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல

நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ அந்த நிலையிலேயே கடவுளை நினைக்கத் தோன்றுகிறது என்பதற்கு திபா 63 சிறந்த எடுத்துக்காட்டு. யூதாவின் பாலைநிலத்தில் சுற்றி வருகின்ற தாவீது (காண் 1 சாமுவேல் 23:14) கடவுளை நோக்கி 'நீரின்றி வறண்ட தரிசு நிலம் தண்ணீருக்காகக் காத்திருப்பது போல' தானும் இறைவன் மேல் தாகம் கொண்டிருப்பதாக எழுதுகின்றார்.

இந்தத் திருப்பாடலில் இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை சிந்திக்கும் தாவீது ஐந்து உருவகங்களைக் கையாளுகின்றார்:

அ. வறண்ட நிலம் - தாகம்
ஆ. அறுசுவை விருந்தின் நிறைவு
இ. இறக்கையின் நிழல்
ஈ. வலது கை.
உ. பற்றிக்கொண்டேன் - பற்றிக் கொண்டீர்.

நம் இந்திய மரபில் ஆன்மீகம் பற்றிப் பேசும் போது மெய்யிலார்கள் இரண்டு வகை ஆன்மீகத்தைச் சொல்கின்றனர்:

அ. குரங்கு ஆன்மீகம்.
ஆ. பூனை ஆன்மீகம்.

அ. குரங்கு ஆன்மீகம் என்றால் என்ன?

ஒரு குட்டிக் குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் தன் தாயை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டால் போதும். அடுத்தடுத்த கிளைக்குத் தாய் தாவும் போது அத்தோடு சேர்ந்து இதுவும் தாவிவிடும். எக்காரணம் கொண்டும் தாயை விட்டுவிடவே கூடாது. எந்த அளவிற்குப் பற்றிக் கொள்கின்றதோ அந்த அளவிற்குப் பாதுகாப்பு.

தாய்க்குரங்கு என்பது கடவுள். குட்டிக் குரங்கு என்பது நாம். நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும், மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் செய்வது ஒன்று மட்டும் தான் கடவுளை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். எப்படி? நம் நற்செயல்கள் வழியாக.

இவ்வகை ஆன்மீகம் மனிதரின் நற்செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவை. மோட்சமோ, நரகமோ நம் கையில் தான் உள்ளது. கடவுள் கையில் அல்ல.

ஆ. பூனை ஆன்மீகம் என்றால் என்ன?

மேலே சொன்னதற்கு நேர் எதிர்மாறானது இது. தாய்ப் பூனையே தன் குட்டிப் பூனையைக் கடித்து எங்கெல்லாம் கொண்;டு போக வேண்டுமோ அங்கே கொண்டு போகும். குட்டிப்பூனைக்கென்று எந்த வேலையும் கிடையாது. எங்கெல்லாம் தாய்ப்பூனை தூக்கிக் கொண்டு போகிறது அங்கெல்லாம் போக வேண்டும். முழுக்க முழுக்கத் தன் பாதுகாப்பிற்கு தாய்ப்பூனையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

தாய்ப்பூனை என்பது கடவுள். குட்டிப் பூனை என்பது நாம். மோட்சம், நரகம் எல்லாம் நம் கையில் இல்லை. அது கடவுள் கையில். யாரை எங்கே தூக்கிக் கொண்டு போக நினைக்கிறாரோ அங்கே அவர் தூக்கிக் கொண்டு போவார். அவரை நாம் ஒன்றும் கேட்க முடியாது.

இவ்வகை ஆன்மீகம் கடவுளின் அன்பை மட்டும் முன் நிறுத்துவது. நம் நற்செயல்களால் நன்மையும் இல்லை. தீமையும் இல்லை. எல்லாம் கடவுள் கையில் தான் உள்ளது.

முதல் வகை ஆன்மீகம் நம்மை மூச்சுத்திணற வைக்கும். எந்நேரமும் நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டாம் வகை ஆன்மீகம் நம்மைச் சோம்பேறியாக்கி விடும்.

கிறித்தவ ஆன்மீகத்தை 'கோழிக்குஞ்சு' ஆன்மீகம் என அழைக்கலாம்:

கோழிக்குஞ்சு ஆன்மீகம் என்றால் என்ன?

தாய்க்கோழி தன் குஞ்சுகளோடு சேர்ந்து இரை தேடும். கழுகோ, பருந்தோ, காகமோ வந்தால் அது குரல் கொடுக்கும். அந்நேரம் எல்லாக் குஞ்சுகளும் தாய்க்கோழியின் இறக்கைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். ஒளிந்து கொள்பவை எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். ஒளிந்து கொள்ளாதவை கழுகிடம் மாட்டிக் கொள்ளும்.

தாய்க்கோழி என்பது கடவுள். கோழிக்குஞ்சுகள் நாம். சுற்றி வரும் கழுகு 'பேய்' என வைத்துக்கொள்வோம். தாய்க்கோழியின் குரல் தான் இயேசு அல்லது பைபிள் அல்லது திருச்சபை அல்லது மறைக்கல்வி அல்லது மனச்சான்று. இந்தக் குரலின் படி யாரெல்லாம் தாயிடம் அடைக்கலம் பெறுகிறார்களோ அவர்கள் காப்பாற்றப் படுவார்கள். மற்றவர்கள் 'பேயிடம்' மாட்டிக்கொள்வார்கள் - மாட்டிக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு அப்படி வைத்துக்கொள்வோம்.

ஏனெனில் நரகம் என்று ஒன்று இருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. அன்பே உருவான கடவுள் எப்படி நரகத்தை உருவாக்க முடியும்? அவரின் அன்பை விட நம் பாவம் பெரிதா? அவரின் அன்பு சிறிதென்றால் அவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? கேட்கக் கூடாத கேள்வி - ஆனால் தேவையான கேள்வி!

தாவீதின் திபா 63ல் இந்த மூன்று ஆன்மீகத்தின் நிழல்களும் தெரிகின்றன:

'நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்' (63:8அ) என்ற வார்த்தைகளில் 'குரங்கு ஆன்மீகமும்', 'உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது' (63:8ஆ) என்ற வார்த்தைகளில் 'பூனை ஆன்மீகமும்', 'உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்' (63:7) என்ற வார்த்தைகளில் 'கோழிக்குஞ்சு ஆன்மீகமும்' நிழலாடுகின்றது.

இன்றும் சிலர் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களை 'பூனைக்குட்டி' என்றும் 'குரங்குக்குட்டி' என்றும் 'கோழிக்குஞ்சு' என்றும் கொஞ்சிப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் ஆன்மீகமோ?


நான் அசைவுறேன்!

திருப்பாடல் 56 முதல் 61 வரை ஏறக்குறைய ஒரே வகையைச் சார்ந்தவை: கழுவாய்ப் பாடல். திருப்பாடல் 56ன் தலைப்பு என்னை அறியாமலே என் கண்களை வியர்க்க வைத்தது.

'தொலையில் வாழும் மௌன மாடப்புறா!' என்ற மெட்டில் திபா 56ஐ ஆசிரியர் பாடச்சொல்லுகின்றார்.

'தொலையில் வாழும் மௌன மாடப்புறா' என்ற பாடலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து இன்று எபிரேய இலக்கியங்களையெல்லாம் தூசி தட்டிப் பார்த்தேன். அந்தப் பாடல் முழுவதுமாகக் கிடைக்கவில்லையென்றாலும் அந்தப் பாடல் எழுதப்பட்ட பின்புலம் கிடைத்தது. அதைப்பற்றி ஒரு வரி சொல்லி விட்டு திபா 62க்குச் செல்வோம்.

தன் நாடு விட்டு வெளிநாட்டிற்குப் பணியின் நிமித்தம் சென்ற ஒரு இளைஞன் தான் சென்ற இடத்தில் அவர்கள் பேசும் மொழி தெரியாததால் 'என்ன செய்வதென்று தெரியாமால்' தான் வசித்த இல்லத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு தன் நாடு இருக்கும் திசை நோக்கித் திரும்பிப் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றான். ஒருமுறை வேறு நாடு போய்விட்டால் போனதுதான். திரும்ப வாய்ப்பேயில்லை அந்தக் காலத்தில். இந்தச் சூழலில் வந்த இடத்தில் வாழவும் முடியாமல், திரும்பவும் செல்ல முடியாமல் மாடப்புறா போல சிறகுகளை அடித்துக்கொண்டு ஒரு பாடகன் பாடும் பாடலே 'தொலையில் வாழும் மௌன மாடப்புறா'.

எங்கள் கிராமத்தில் எங்கள் பக்கத்து வீட்டு மாடியில் ஒரு புறா கூடு கட்டியிருந்தது. தினமும் மதியம் 12 முதல் 1 மணிக்கு அந்தக் கூட்டில் ஏதோ அது முணங்கிக் கொண்டே இருக்கும். நீங்களும் புறாவின் முணங்கல் சத்தத்ததைக் கேட்டிருப்பீர்கள். அவைகளுக்கு அது முணங்கல் என்றாலும் நமக்கு அவைகளின் தனிமையின் மொளனமொழி தானே!

நிற்க!

திருப்பாடல் 62 தான் இன்றைய நம் சிந்தனையின் மையம். 'நான் அசைவுறேன்' என்ற வார்த்தைகள் பதில்மொழி போல இரண்டு இடங்களில் (62:2, 6) வருகின்றது. முதல் 6 வசனங்கள் தான் இந்தப் பாடலின் உண்மையான வரிகள் போல இருக்கின்றன. மற்றவவை மற்ற திருப்பாடலை எழுதும் போது அதை உள் செருகியிருக்கலாம். ஏனெனில் 7 முதல் 12 வரை உள்ள வசனங்கள் பேசும் செய்திக்கும் பாடலின் தலைப்பிற்கும் தொடர்பில்லை.

நாம் எல்லா வசனங்களையும் சேர்த்துப் பார்ப்போம்:

அ. என் கற்பாறை அவரே.
ஆ. என் மீட்பு அவரே.
இ. என் கோட்டை அவரே.

ஆகவே, நான் அசைவுறேன்.

கடவுளைக் கற்பாறைக்கும், கோட்டைக்கும் ஒப்பிடும் தாவீது மனிதர்களை நீர்க்குமிழிக்கு ஒப்பிடுகின்றார்.

என்ன ஒரு பெரிய வித்தியாசம் பாருங்கள்!

அசையாமல், கலங்காமல், நிலை மாறாமல் இருப்பது கற்பாறை.

உறுதியில்லாமல், காற்றில் அடித்துச் செல்லப்படும் இயல்புடையது நீர்க்குமிழி.

மேலும், மனிதர்களை வெறும் மாயை என்று அழைக்கின்றது. இந்த மாயை என்ற மொழி நம் இந்திய மரபில் மெய்யிலாளர் சங்கரா அவர்களால் அதிகம் பேசப்பட்ட ஒன்று. 'எல்லாம் மாயை!' என்பது அவரின் வாதம். அவருக்கு எதிராக எழும்பிய ஒரு விமர்சனம்: 'எல்லாம் மாயை என்றால் அப்படி நீங்கள் சொல்வதே மாயைதானே!' அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

மனிதர்கள் ஒரு மாயை! இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நாம் சாலையில் காணும் கானல் நீர். சாலையில் தண்ணீர் இருப்பது போல இருக்கும். ஆனால் பக்கத்தில் போனால் ஒன்றும் இருக்காது.

அந்த அளவிற்கு நிலையற்றவர்கள் நாம்.

நிலையற்ற மனித நிலையை நிலையுள்ளதாக்க முடியுமா? முடியும். இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது உன் பெயர் சொல்ல ஒரு குழந்தை, ஒரு தோட்டம், ஒரு புத்தகம் - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை விட்;டுச் செல் என்பது பிளேட்டோவின் அறிவுரை. நாம் நிலையற்றவர்கள் என்றாலும் நாம் மற்றவர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தில், நாம் பிள்ளைகளை நமக்குப் பின் விட்டுச்செல்வதில் தொடர்ந்து வாழ்கின்றோம்.

ஒன்று மட்டும் நிச்சயம்! ஒரு முறை நாம் பயணம் செய்த இந்தப் பாதையில் திரும்பவும் நாம் பயணிக்கப் போவதில்லை. போகின்ற பயணத்தை இனிமையாக ரசிப்போம் சக பயணிகளுக்கும் பயணத்தை இனிதாக்குவோம்.

'நான் அசைவுறேன்!'


Friday, June 13, 2014

சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?

திருப்பாடல் 55 இன்று நட்பைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது.

இந்தப் பாடலின் பின்புலமாக இருப்பது 1 சாமுவேல் 23:19 மற்றும் 26:1. இந்த நிகழ்வு தான் என்ன?

சவுல் தாவீதின் வளர்ச்சி கண்டு அவர் மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்கத் தேடுகின்றார். சவுலிடமிருந்து தப்பியோடும் தாவீது சீபியர் என்ற இனத்தார் வாழும் பாலைநிலத்திற்குத் தப்பியோடி அங்கே இருந்த மக்கள் நடுவில் ஒரு 'தாதாவாக' இருக்கிறார். அங்கே இருக்கும் லோக்கல் பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்கவும், சுற்றி இருக்கின்ற தீங்குகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றார். இப்படி தாவீதிடமிருந்து நிறைய பலன்களைப் பெற்ற அவர்கள் திடீரென ஒருநாள் சவுல் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள். 'தாவீது எங்கள் நடுவில் தான் இருக்கிறார்' என சவுலிடம் தாவீதின் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றனர்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் காலத்தில் தன் நாட்டின் காட்டிற்குள் ஒளிந்திருந்த அவரை ஆங்கிலேய அரசிடம் காட்டிக் கொடுக்கின்றார் விஜயரகுநாதத் தொண்டைமான். ஏறக்குறைய இந்த நிகழ்வு போலத்தான் தாவீதுக்கும் இன்று நடக்கிறது.

தான் காட்டிக் கொடுத்த அந்த நபரை நினைத்து தாவீது பாடும் பாடலே இப்பாடல்.

இந்தப் பாடலின் மையமாக இருப்பது இரண்டு வசனங்கள்:

'ஆனால், அவன் வேறு யாருமல்ல. என் தோழனாகிய நீயே.
என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனமாகிய நீதான்.
நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்.
கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்' (55:13-14).

இந்த இரண்டு வசனங்களையும் பிரித்துப் பார்ப்போம்:

அ. தோழனாகிய நீ.
ஆ. நண்பனாகிய நீ.
இ. நெருங்கிப்பழகினவனாகிய நீ.

தமிழ் மொழிபெயர்ப்பு இந்த ஏறக்குறைய ஒரே அர்த்தம் கொடுப்பதாக இருக்கிறது. எபிரேய மொழியில் இந்த மூன்று வார்த்தைகளும் வேறு வேறு:

அ. என் புதையலாகிய நீ.
ஆ. என் தோலைவிட எனக்கு நெருக்கமான நீ.
இ. என் இதயத்தின் ஏக்கங்களை அறிந்த நீ.

வெறும் 'நண்பன்' என்ற வார்த்தை எபிரேய மொழி தரும் ஆழத்தை மறைப்பது போலவே இருக்கிறது.

நட்பு அல்லது நண்பர் அல்லது உறவு என்பது இந்த மூன்றைப் போலத்தான் இருக்க வேண்டும்.

இந்த நட்பை இன்னும் மூன்று வார்த்தைகளால் அழகுபடுத்துகிறார் தாவீது:

அ. ஒன்று சேர்ந்து உரையாடினோம்.
ஆ. மக்கள் நடுவே நடனமாடினோம்.
இ. கடவுளின் இல்லத்திற்குச் சென்றோம்.

உறவு என்பது இரண்டு மனிதர்களுக்கு இடையே இருப்பது என்றாலும் அங்கே சமூகமும், கடவுளும் சாட்சியாக நிற்கின்றனர் என்று சொல்கிறது இந்த வசனம். ஒரு நட்பிற்கு சாட்சிகள் மூன்று: நட்பில் இருக்கும் இருவர், மக்கள், கடவுள். எந்த ஒரு நட்பும் கடவுளால் வந்தது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 'நல்ல நட்பு, 'தீய நட்பு' என்று சொல்கிறோம். தீயதிலும் ஒரு நன்மை இருக்கத்தானே செய்கின்றது. நட்பில் கடவுள் தான் இணைப்புப் பாலம். நமக்குத் தீமை என நினைத்தால் கடவுள் ஏன் அந்த நட்பை அனுமதிக்க வேண்டும்? நம் வாழ்வில் வரும் அனைத்து நட்புக்கும் நாம் நன்றி கூறவும், அந்த நட்பின் சாட்சி கடவுள் என்று உணரவும் நம்மை அழைக்கிறது இத்திருப்பாடல்.

1 சாமுவேல் 23:16-18 ல் தாவீது-யோனத்தான் நட்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. தாவீதிடம் யோனத்தான் அழகாகக் கூறுகிறார்:

அ. கடவுள் உன்னைக் காப்பார்.
ஆ. அஞ்சாதே.
இ. நீ தான் இஸ்ரயேலின் அரசன்.

யோனத்தானின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. பிறப்புரிமைப்படி சவுலுக்குப் பின் ஆட்சி செய்ய வேண்டியது அவரின் மகன் யோனத்தான் தான். ஆனால் அதை மிக இலகுவாக தன் நண்பனுக்கு விட்டுக்கொடுக்கின்றார். எந்த வித பொறாமையோ, வெறுப்போ அவரிடம் இல்லை.

'இன்று இது உன்னுடையதா, அது நாளை வேறொருவனுடையது!' என்று கீதை தெரிந்தவர் யோனத்தான்!

இன்று நாம் அன்பு செய்யும் நபரைப் பார்த்து நாமும் இதைச் சொல்லலாமே:

அ. கடவுள் உன்னைக் காப்பார்.
ஆ. அஞ்சாதே.
இ. நீ தான் என் இளவரசன் - இளவரசி!

'புறாவுக்கு உள்ளது போன்று சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?'


Thursday, June 12, 2014

தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?

திருப்பாடல் 52 நாக்கைப் பற்றியது. 'கொஞ்சம் நாக்க நீட்டு!' என்ற வார்த்தையை நாம் எல்லாருமே கேட்டிருப்போம்: மருத்துவம் பார்க்க, உணவு ருசி பார்க்க, மாத்திரை விழுங்க, பிரெஞ்சு முத்தமிட என பல சூழல்களில் பயன்படும் இந்த நாக்கு மனித மொழியின் மிக அடிப்படை.

இறைவாக்கினர்கள், ஏன் மோசே அழைக்கப்படும் போது கூட, தங்களின் தடையாக அவர்கள் முன்வைப்பதும்: 'எனக்கு நாக்கு திக்கும்!' என்பது தான்.

திபா 52ன் பிண்ணனி இதுதான்: தாவீதின் பயணம் பற்றி தோவேகு சவுலிடம் போட்டுக் கொடுக்கின்றார் (1 சாமு 22:2-9). போட்டுக் கொடுப்பதுக்கும் இரண்டு அர்த்தங்கள் உள்ளன: ஒன்று, ஆட்டோக்காரர் நம்மிடம் கேட்பது, இரண்டு, நாம் யாரிடமாவது அடுத்தவரைப் பற்றி அல்லது அடுத்தவரைப் பற்றி நம்மிடம் யாராவது நமக்குத் தேவையற்ற அல்லது பயனற்ற தகவல்களைத் தருவது.

இரண்டு அர்த்தங்களும் சொல்வது என்ன? 'உள்ளதற்கு மேலாக!'

அதாவது தேவையானதற்கு மேல் பேசும் அனைத்துமே நாம் போட்டுக்கொடுப்பதுதான். நம் உரையாடல்களில் பல நேரங்களில் நாம் அடுத்தவரைப் பற்றிப் பேசவே விழைகிறோம். இது ஒரு defence mechanism. நம்மைப் பற்றிப் பேசினால் அங்கே கசப்புணர்வும், பகையும், சண்டையும் வர வாய்ப்பிருக்கிறது. ஆகையால் ரொம்ப பாதுகாப்பானது அடுத்தவரைப் பற்றிப் பேசுவதுதான்.

இத்தாலியின் செய்திச் சேனல்களைப் பார்க்கும் போது நான் இதை அதிகம் கவனித்திருக்கிறேன் 30 நிமிட செய்தி நேரத்தில் 3 நிமிடம் மட்டும்தான் இத்தாலியைப் பற்றி இருக்கும். மற்ற 27 நிமிடங்களும் இந்தியா, ஈராக், உக்ரைன், சிரியா, ஆப்பிரிக்கா என ஊர்க்கதைதான் பேசுவார்கள்.

எதற்காக நாம் அடுத்தவரைப் பற்றிப் பேசுகிறோம்?

1. டிஃபென்ஸ் மெக்கானிசம்.
2. அடுத்தவரைப் பேசும் போது நம்மையறியாமலே நம் மனம் அவரோடு நம்மை ஒப்பிட்டு நம்மை ஒருவித போலியான மேட்டிமை உணர்வு கொள்ளத் தூண்டுகிறது. இது ஒரு நொடிப்பொழுது போதை.
3. அடுத்தவரை நாம் பேசுபொருளாக எடுத்து அதன் வழியாக நாம் உரையாடுபவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விழைகிறோம். உதாரணத்திற்கு, எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் கருப்புச் சட்டை போடுவது பிடிக்காது என வைத்துக்கொள்வோம். நீங்களும் தினமும் என்னிடம் வந்து கருப்புச் சட்டை போடுபவர்களைப் பற்றித் தவறாகப் பேசினால் உங்கள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு வரத் தொடங்கும்.

தாவீதைப் பற்றி சவுலிடம் தொவேகு எதற்காகப் புறணி பேசினார் என்பது பற்றித் தெளிவான கருத்து இல்லை.

'நரம்பில்லாத நாக்கு!' என்ற தமிழ்மொழியின் சொல்லாடலை தாவீதும் இங்கே பயன்படுத்துகிறார் (52:4).

நாக்கைப் பயன்படுத்தும் முறைபற்றி யாக்கோபு விரிவாகத் தன் திருச்சபைக்கு எழுதுகின்றார் (யாக்கோபு 3:1-12).

நாவடக்கம் பற்றி சீராக்கின் ஞானநூலும், நீதிமொழிகள் நூலும் அதிக ஆலோசனைகளை முன்வைக்கின்றன.
திபா 52 இரண்டு பாடங்களைத் தருகிறது:

1. யாரையும் பற்றி யாரிடமும் போட்டுக் கொடுக்காதீர்கள். நீங்கள் செய்வது உங்களுக்கு திரும்பச் செய்யப்படும்.

2. யாராவது உங்களைப் பற்றி மற்றவரிடம் புறங்கூறினால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். 'நானோ! பச்சை ஒலிவக்கன்று போல இருக்கின்றேன்!' என மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள் (52:8)

'தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?'

Wednesday, June 11, 2014

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்!

இன்று நம் அனிச்சம் வலைப்பூவிற்கு முதல் பிறந்த நாள். 'இனி எல்லாம் சுகமே!' என்று தொடங்கிய பயணம் இனிதாக முதல் மைல்கல்லைத் தொட்டுள்ளது.

'பாதை மாறுவதே என் பயணமாகிப் போனது!' என்று அடிக்கடி சொல்வார் என் நண்பர் ஜூலி.

விவிலியத்தில் தொடங்கி, உளவியல், சமூகவியல், சினிமா, நாடகம், புத்தகம், வெளிநாடு, கடவுள், நாத்திகம், கம்மல், காதல், கொலுசு என எல்லாம் பேசியாயிற்று.

இந்த ஆண்டு முழுவதும் என்னோடு உடன் பயணித்த உங்களுக்கும், உங்கள் கண்களுக்கும் நன்றி!

திபா 65 அறுவடை காலத்துத் திருப்பாடல்.

தானியங்களை விளையச் செய்தீர்.
தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்.
கரையோர நிலங்களை மென்மையாக்கினீர்.
வளமைக்கு ஆசி வழங்கினீர்.
பாலை நிலத்தில் மேய்ச்சல்.
குன்றுகளில் அக்களிப்பு.
புல்வெளி போன்ற ஆடைகள்.

'ஆண்டு முழுவதும் நலன்களால் நிறைத்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி!'



Tuesday, June 10, 2014

உறுதிதரும் ஆவி வேண்டுமே!

நேற்றைய தினம் திபா 51ன் பின்புலத்தைப் பார்த்தோம். இன்று திபா 51ஐ அதன் வார்த்தை அமைப்புகளை வைத்து சிந்திப்போம்.

இதில் மொத்தம் 19 வசனங்கள். ஆனால் தாவீது எழுதியதாகச் சொல்லப்படுவது முதல் 17 வசனங்கள் மட்டுமே. 18 மற்றும் 19ஆம் வசனங்கள் எருசலேம் ஆலயம் இரண்டாம் முறை கட்டி முடிக்கப்பட்டவுன் சேர்க்கப்பட்டவை. 17ஆம் வசனத்தில் பலிகள் தேவையில்லை எனச் சொல்லும் பாடல் 18 மற்றும் 19ல் எருசலேமில் பலிகள் செலுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டை வைத்தே இவை பின்னால் சேர்க்கப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூய அகுஸ்தினார் ஜென்மப் பாவம் பற்றிய இறையியலை எழுதக் காரணமாய் இருந்தது இந்தத் திருப்பாடலில் வரும் ஒரு வரிதான்: 'இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்' (51:5).

இந்தப் பாடலின் மூன்று சாவிகள் இவை:

அ. கடவுளின் பேரன்பு (51:1)
ஆ. தூயதோர் உள்ளம், உறுதிதரும் ஆவி (51:10)
இ. நொறுங்கிய உள்ளமே சிறந்த பலி (51:17)

இந்த மூன்றிலும் மையமாக இருப்பது: 'தூய்மை' மற்றும் 'உறுதி'

இந்த இரண்டும் இருந்தால் நாம் பாவம் செய்ய வாய்ப்பேயில்லை. அப்படியே பாவம் செய்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நொறுங்கிய உள்ளத்தோடு நாம் கடவுளை நெருங்கினால் போதும். கடவுளின் பேரன்பு நம் பாவங்கள் அனைத்தையும் விட அதிகம் சக்தி வாய்ந்தது.

நாம் ஆலயத்தில் இருக்கும் போது நம் மனநிலையைக் கவனித்திருக்கிறீர்களா? அமைதியாக இருப்போம். நிறைய நல்லவை செய்ய வேண்டுமென்று முடிவெடுப்போம். தவறுகளையெல்லாம் திருத்திக் கொள்ள வேண்டும். கோபம் அறவே கூடாது என்றெல்லாம் முடிவெடுப்போம். கோவிலுக்கு வெளியே வந்து செருப்பை அணிந்து விட்டு வீடு நோக்கித் திரும்பும் போது நாம் கோவிலுக்குள் நமக்கு நாமே செய்து கொண்ட வாக்குறுதிகள் சீக்கிரம் கரைந்துவிடுவது போலவே இருக்கும். இது ஏன் தெரியுமா?

நம்மோடு கூடவே இருக்கும் 'குட்டிப் பிசாசு' கோவிலுக்குள் நாம் நுழைய செருப்பைக் கழற்றி வைக்கும் போது அங்கே அதுவும் உட்கார்ந்து கொள்ளுமாம். நாம் கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தவுடன் அதுவும் நம்மோடு சேர்ந்து கொள்ளும். இந்தக் குட்டிப் பிசாசை நம்மோடு சேர்த்துக்கொள்ளத் தடையாக இருப்பது நம்மோடு இருக்கும் 'உறுதியற்ற மனநிலை!'. தாவீதின் தவறுக்குக் காரணமும் உறுதியற்ற மனநிலையே.

உறுதிதரும் மனம் வேண்டும் என்போம்! இன்றும்! என்றும்!

Monday, June 9, 2014

தூயதோர் உள்ளம் வேண்டுமே!

இந்த மூன்று வார்த்தைகள் தாம் தாவீது அரசர் செபிக்கும் திருப்பாடலின் (திபா 51) மையம். பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது இப்பாடல். இன்றும் கத்தோலிக்கத் திருஅவையில் ஒப்புரவு என்னும் அருட்சாதனம் நிறைவேற்றப்படும்போது இது பாடலாகவோ, அல்லது தனிப்பட்ட நபரின் செபமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பாடலின் பின்புலத்தை (2 சாமுவேல் 12:1-8) திரும்பவும் ஒருமுறை எண்ணிப் பார்த்து தாவீது செய்தது தவறா? தவறு என்றால் அது என்ன?

எருசலேம் நகரம். ஒரு மதிய வேளை. படைவீரர்களும் அமைச்சர்களும் மக்களும் போருக்குச் சென்றுவிட்டனர். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும் போர்க்களத்தில் இருக்கின்றது. தூக்கம் வரவில்லை. மாடியில் உலாவலாம் என்று மாடிக்குச் செல்கிறார் தாவீது. கொஞ்ச தூரத்திற்கு அப்பால் ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பது அவர் கண்ணில் படுகிறது. அந்த நேரத்தில அவங்க குளிச்சது தப்பா? அல்லது அந்த நேரத்தில் தாவீது வாக்கிங் போனது தப்பா?

'அது யார்?' எனக் கேட்கிறார். 'இத்தியனான உரியாவின் மனைவி பெத்சேபா!' என்கின்றனர். அவர் ஒரு பெண். அந்நிய இனத்தைச் சார்ந்த ஒரு பெண். தன் ஆட்சிக்கு உட்பட்ட பெண். அழைக்கின்றார். அவரும் வருகின்றார். 'அப்போதுதான் மாதவிலக்கிலிருந்து அவள் தூய்மையாக்கியிருந்தாள்!' எனச் சொல்கிறது விவிலியம். 'துணிந்து' அவரோடு உறவு கொள்கின்றார். 'நேச்சுரல் ஃபேமிலி பிளானிங்' முறைப்படி மாதவிலக்கு முடிந்த உடன் உறவு கொண்டால் கருத்தரிப்பு நடப்பதில்லை என்பது இயற்கை விதி. ஆனால் அந்த இயற்கை விதிக்கும் அப்பாற்பட்டு அவர் கருத்தரிக்கிறார். 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்!' - இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பெத்சேபா பேசும் முதல் வார்த்தைகள் இவைதாம். 'ஐபில், அபார்ட்டிஃபீசன்ட்' என்று நாகரீகம் வளராத காலம். ஆகையால் தாவீதின் மூளை வேகமாக முடிவெடுக்கிறது. உரியா வந்து அவளோடு இருந்தால் அந்தக் கர்ப்பத்திற்குக் காரணம் அவன் என்று சொல்லி விடலாமே! ஆனால் அன்று டிஎன்ஏ டெஸ்டிங் இருந்தால் இந்தச் சூழ்ச்சியும் செல்லுபடியாகாது. உரியாவும் அவசர அவசரமாக அழைத்து வரப்படுகிறார். 'உன் வீட்டிற்குப் போ!' என்கிறார் தாவீது. அவன் போவது போல போய் அரண்மனையிலேயே தூங்கி விடுகிறான். அடுத்த நாளும் அப்படியே நடக்கிறது. என்ன இவன் இப்படிப் பண்றானே! என எண்ணியவர் அவன் கையிலேயே அவனைப் போரின் உக்கிரம் அதிகம் உள்ள இடத்தில் நிறுத்திக் கொன்று விடுமாறு படைத்தலைவன் யோவாபுக்கு செய்தி அனுப்புகிறான். யோவாபும் அரச கட்டளையை நிறைவேற்றி விடுகிறான். தான் போர்க்களத்தில் செய்த மற்றொரு தவறை மறைப்பதற்காக தாவீதின் இந்த வலுவின்மையையும், இயலாமையையும் பயன்படுத்திக்கொள்கிறான். பின் பெத்சேபா அரண்மனையில் குடியிருக்கிறார். அரசவையில் ஒரு இடம் பெறுகின்றார்.

நாத்தான் வழியாக இறைவாக்குரைக்கும் யாவே இறைவன் அழகான ஒரு குட்டிக்கதை வழியாக தாவீதுக்கு அவர் தவற்றை உணர்த்துகின்றார். 'நீரே அம்மனிதன்!' என்ற வார்த்தைகள் தாவீதின் மனமாற்றத்தைத் தூண்டுகிறது. அந்த உறவின் வழியாக பிறந்த குழந்தை இறந்து விடுகிறது.

விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் சும்மா டைம்பாசுக்கு எழுதப்படவில்லை. ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு காரணம். இந்த நிகழ்விற்குப் பின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? தாவீது இஸ்ராயேல் மக்களின் மிகப்பெரும் அரசர். அவர் எருசலேம் நகரைக் கட்டியது போல எருசலேம் ஆலயத்தையும் கட்டுவார் என எல்லாரும் நினைத்தார்கள். 'கடவுளே அதைக் கட்ட அனுமதிக்கவில்லை!' என்று சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது? ஏதாவது ஒரு தவறுக்கு தண்டனையாக இது நடக்க வேண்டும் என்று எண்ணுகின்ற ஆசிரியர் இந்நிகழ்வை எழுதுகின்றார்.

தாவீது செய்த தவறு என்ன? தன் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்தும் அரசனுக்கு உரியது என்பது அக்காலத்தில் எழுதாத சட்டம். ஆகையால் பெத்சேபாவிடம் உறவு கொண்டது தவறு அல்ல. அந்தத் தவறை மறைக்க உரியாவைக் கொன்றதும் தவறு அல்ல. ஏனெனில் உரியா அரசனின் பேச்சைக் கேட்கவில்லை! அதற்குத் தண்டனைதான் அவனது மரணம்! 'நான் உன் மனைவியோடு உறவு கொண்டு விட்டேன். அது உனக்கு எதிரான குற்றம்!' என அவனிடம் சொல்லி தாவீது கொன்றிருந்தால் அது குற்றம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

பெத்சேபா வற்புறுத்தப்பட்டதாகவும் விவிலியம் சொல்லவில்லை. ஆகையால் இது வன்முறையும் அல்ல. இந்தப் பெத்சேபாவின் வழிதான் உலகம் போற்றும் சாலமோன் அரசர் பிறக்கின்றார். இந்தப் பெத்சேபாவின் பெயர் இயேசுவின் தலைமுறைப் பட்டியலிலும் இருக்கின்றது.

எது தவறு? என்பதற்கு விடை இங்கே இல்லை. வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தான் அதைத் தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்க வேண்டும். எனக்குச் சரி என்று படுவது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். 'எல்லாருக்கும் பொதுவான சரி! தவறு!' என்பது இல்லை.

உதாரணத்திற்கு, அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைவது சரியா? தவறா? ஐரோப்பியனைக் கேட்டால் 'சரி' என்பான். ஏனெனில் அவனுக்கு விசா தேவையில்லை. மற்றவர்கள் நுழைந்தால் அது 'தவறு'. அது எப்படி பாஸ்! எல்லாரும் மனிதர்கள்தானே! ஒரே மனித இனத்திற்கு ஏன் இரண்டு ஒழுங்குகள்?

இந்தப் பாடலை நான் வாசிக்கும் போதெல்லாம் எனக்கு தாவீதின் மேல் ஒரு பரிதாப உணர்வுதான் வரும். அதைவிட அந்தப் பெண்ணின் மேல். அதைவிட அந்த உரியாவின் மேல்.

ஒன்று மட்டும் புரிகிறது! பகலிலோ இரவிலோ தூக்கம் வரவில்லையென்றால் வாக்கிங் போகக் கூடாது!

'கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்!' (திபா 51:10)


Sunday, June 8, 2014

எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனா?

திருப்பாடல் 50 ஒரு இறைவாக்குப் பகுதி போல இருக்கின்றது. எருசலேம் ஆலயம் கட்டப்படுவதற்கு முன் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியாக குலசாமிகள் இருந்தனர். குலசாமிகள் என்று சொல்வதை விட பொதுவான சாமி, ஆனால் குலகோயில்கள் இருந்தது என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கோயிலையும் நிர்வகிக்க குருக்கள் இருந்தனர். எருசலேம் ஆலயம் உருவானதற்குப் பின் தான் இஸ்ராயேல் மக்கள் வரலாற்றில் முழுமையான நிலையில் குருத்துவம் உருவானது.

இந்தக் கோயிலில் இருந்தவர்கள் எல்லாம் நம் கிராமத்துச் சாமியாடிகள் போல இருந்தனர். இவர்கள் குறி சொல்வர். செய்வினை வைப்பர். செய்வினை எடுப்பர். ஜோசியம் சொல்வர். பலி செலுத்துவர்.

இப்படி இருந்த ஒரு குலக்கோயிலில் நிலவிய ஊழலை எதிர்த்து ஒருவர் பாடும் பாடலே திருப்பாடல் 50.

இறைவனே அந்தக் கோயிலின் பூசாரிகளைப் பார்த்துப் பேசுவது போல இப்பாடலை எழுதியிருக்கின்றார் பாடகர்.

உங்கள் வீட்டின் காளைகளையோ,
உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ,
உங்கள் இல்லத்தின் பறவைகளையோ நான் கேட்கவில்லை...
என்று தொடங்கும் கடவுள்
சரமாரியாக அவர்களைச் சாடுகின்றார்.
ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை.
திருடர்களை உங்களோடு சேர்த்துக்கொள்கிறீர்கள்.
கற்புநெறி தவறுகிறவர்களோடு தொடர்பு கொள்கிறீர்கள்.
பொய் பேசுகிறீர்கள்.
புறணி பேசுகிறீர்கள்.

இப்படிச் சொல்லும் இறைவன்; இறுதியாகச் சொல்வது இதுதான்:

'நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்!'

ரொம்பவும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள். கடவுளும் நம்மைப் போன்றவர் என நினைத்து அவரை 'சாதாரணமாக' நினைப்பதுதான் மிகக் கொடுமையான பாவம்.

'அவர் என்ன கண்டுக்கவா போறார்?'
'நம்ம செய்யறத யார் பார்க்கப் போறா?'

மேற்காணும் குற்றச்சாட்டுகள் சாமுவேல் இறைவாக்கினர் சிறுவனாக இருந்தபோது ஏலி குடும்பத்திற்கு எதிராக இறைவனால் முன்வைக்கப்படுகின்றது (1 சாமுவேல் 1-3). ஒருவேளை அந்த உரைநடைப் பகுதியின் செய்யுள் பகுதிதான் இந்தப் பாடலோ?

இறைவனின் பணி செய்ய முன்வருபவர்களுக்கும், இறைவனை ஆர்வமுடன் தேடும் அனைவருக்கும் முன் கடவுள் நின்று கொண்டு கேட்பதாக இருக்கின்றது.

ஆன்மீகம் என்பது காதல் போல. இரண்டு பேருக்குள் நடப்பது இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். இது சரி. இது தவறு என்று மூன்றாம் நபர் சொல்ல முடியாது. இதயமும், இதயமும் இணைந்து விட்டால் அது ஒரு புது உறவு. சில நேரங்களில் அந்த உறவிற்கு பெயர் இட முடியவில்லையென்றாலும் அந்த உறவு நிஜமானதுதான். அந்த உறவில் ஒருவர் மற்றவருக்குத் தேவையானது எது என்பதை உணர்ந்து நடத்தலே சால்பு.

ஆன்மீகம் இறைவனுக்கும் நமக்கும் உள்ள காதல்!

'நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்களா?'


Saturday, June 7, 2014

எழுதுகோலென என் நாவும் ஆகிடுமோ?

திருப்பாடல் 45 அரசரின் திருமணப்பாடல். சாலமோன் அரசரின் திருமணத்தின் போது பாடப்பட்டிருக்கலாம் என்பது பரவலான கருத்து. பாடகர் தலைவர்க்கு இது அர்ப்பணம். இதன் மெட்டு 'லீலி மலர்கள்'. 'லீலி மலர்கள்' என்றாலே கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கு நினைவிற்கு வருவது அன்னை மரியாளின் துணைவர் தூய யோசேப்பு. இப்பாடலை யோசேப்பு, மரியாள் திருமணம் அன்று பாடியிருக்கலாம் என்பதும் கருத்து.

சாலமோன் அரசரின் திருமணத்தைத் தொடர்ந்து நம்ம ஊர் 'மாங்கல்யம் தந்துனானே' மாதிரி எல்லாத் திருமணங்களிலும் இது பாடப்பட்டிருக்கலாம்.

இதை ஒரு காதல் பாடல் என்றே எபிரேய மூலப்பிரதி அழைக்கின்றது.

தொடக்கத் திருச்சபையில் இறையியல் முன்னோடிகளாக இருந்த தூய அகுஸ்தினார் மற்றும் ஒரிஜன் போன்றவர்கள் திருவெளிப்பாட்டு நூலை இத்திருப்பாடலுடன் இணைத்து இங்கே குறிப்பிடப்படும் மணமகன் இயேசு என்றும், குறிப்பிடப்படும் மணமகள் திருச்சபை என்றும் எழுதுகின்றனர். இன்னும் சிலர் இங்கே குறிப்பிடப்படும் மணமகளை அன்னை மரியாளுக்கு ஒப்பிடுகின்றனர்.

இந்தப் பாடல் நமக்கு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

மணமகனைப் பாட 8 வரிகள், மணமகளைப் பாட 8 வரிகள், இறுதியில் பாடியவரின் ஆட்டோகிராப் 1 வரி என மொத்தம் 17 வரிகள் (வசனங்கள்) உள்ளன.

மணமகன் எப்படிப்பட்டவர்?
அ. பேரழகுப் பெருமகன்.
ஆ. அருள் கொண்டவர்.
இ. வீரமிகு மன்னர்.
ஈ. உண்மையைக் காத்திடுவார்.
உ. கூரிய கண்கள் உடையவர்.
ஊ. மகிழ்ச்சியின் நெய்யால் திருப்பொழிவு செய்யப்படுபவர்.
எ. நறுமணம் கமழ்பவர்.

மணமகள் எப்படிப்பட்டவர்?
அ. ஓபிரின் பொன் அணிந்தவள்.
ஆ. எழில் மிக்கவர்.
இ. அருள் தருபவர்.
ஈ. பலவண்ணப் பட்டுடுத்தியவர்.
உ. இளவரசர்களைப் பெற்றெடுப்பவர்.
ஊ. அரசரின் சக்தியாக இருப்பவர்.
எ. மாண்புமிக்கவள்.

ஒரு மணமகனும், மணமகளும் பெற்று வாழக் கூடிய அனைத்து பாக்கியங்களையும் இந்தத் திருப்பாடலின் ஆசிரியர் மிக அழகாக எழுதுகின்றார்.

இன்று நாம் யாருடைய திருமணத்திலாவது பங்கேற்று அவர்களை வாழ்த்த வேண்டுமென்றால் இது அதற்குரிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கிறது.

'யோவானின் மகன் சீமோனே! நீ இவர்களை விட என்னை அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் கேட்ட வார்த்தைகளை வைத்து மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இப்படிக் குறிப்பிட்டார்:

ஒவ்வொரு மணமக்களை நாம் பார்க்கும் போதும் அவர்களிடம், 'உங்கள் இருவரிடமும் முதல் நாள் இருந்த அன்பு அதே போல இருக்கின்;றதா? அல்லது குறைந்துவிட்டதா?' எனக் கேட்கின்றோம்.

ஆனால் அருட்பணி நிலையில் இருக்கும் நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டியதும் இதுதான்: 'நீ இவர்களை விட என்னை அன்பு செய்கிறாயா?' என்று நம் உள்ளத்தின் மௌனத்தில் இயேசு நம்மையும் கேட்கின்றார்.

திருமணத் திருப்பாடல் காட்டும் மகிழ்ச்சி ஒவ்வொரு பொழுதும் திருமண மற்றும் அருட்பணி அர்ப்பணத்தை வாழ்ந்து காட்டுவதில் இருந்தால்...

'திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென நம் நாவும் ஆகிடுமே...!'


நீ நம்பிக்கை இழப்பது ஏன்?

திருப்பாடல் 42ம், 43ம் ஒரு சில எபிரேய கையெழுத்துப் பிரதிகளில் ஒரே தலைப்பின் கீழ் அமைந்துள்ளது. கிரேக்க மொழிபெயர்ப்பில் தான் இவைகள் தனித்தனியாக இருக்கின்றன.

இதன் தலைப்பு 'நாடு கடத்தப்பட்டோரின் புலம்பல்'.

இஸ்ராயேல் மக்கள் வரலாற்றில் கிமு 587 ஆம் ஆண்டு ஒரு கொடுமையான ஆண்டு. அந்த ஆண்டுதான் சாலமோன் அரசர் கட்டிய எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்டு, மக்கள் பாபிலோனியாவிற்கு நெபுகத்னேசர் அரசரால் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டனர். பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக இருந்தவர்களில் ஒருவர் தன் வாழ்க்கை நிலையைத் திரும்பிப் பார்த்துப் பாடும் பாடலே இது.

'Gone are the days!' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். 'அன்று நாங்கள் நன்றாக இருந்தோம்!' என்று ஒவ்வொருவரின் பிண்ணனியிலும் ஏதோ ஒரு பாடல் இருக்கும். 'அது ஒரு கனாக்காலம்! அது ஒரு நிலாக்காலம்!' என்று மகிழ்ந்திருந்த இறந்த காலத்தை நாம் இன்னும் பல நேரங்களில் அசைபோட்டுப் பார்க்கின்றோம் (nostalgia). மனிதர்கள் பெற்றுள்ள ஒரு பெரிய கொடை இது. நம்மால் மட்டும் பழையதை நினைவுபடுத்திப் பார்க்க முடியும். சில நேரங்களில் இந்தக் கொடை நமக்கு சாபமாகவும் மாறிவிடுகிறது.

'கலைமான் நீரோடையை...' என்று தொடங்கும் இப்பாடல் நமக்கு மிகவும் பரிச்சயமான பாடல். உயிர்ப்பு ஞாயிறன்று இரவு வழிபாட்டில் இது பாடப்படுகிறது. மேலும் ஒரு சில இறப்புத் திருப்பலிகளில், குறிப்பாக ஆங்கிலத் திருப்பலிகளில், 'Deep Calls to Deep' என்ற இரண்டு வசனங்களை மட்டும் பாடக் கேட்டிருப்போம் (உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது!)

திருப்பாடல்கள் 42 மற்றும் 43 ஐ மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. 42:1-5
ஆ. 42:6-11
இ. 43:1-5

இந்த மூன்று பிரிவையும் சாத்தியமாக்குவது பாடகர் எழுப்பும் இரண்டு கேள்விகள்:

'என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்?' (42:5, 42:11, 43:5)

பாடகரின் இழப்பிற்கும் கலக்கத்திற்கும் காரணம் அவரின் பகைவர்கள் அவரை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்கள் குத்திக் காட்டுவது எவை?

அ. உன் கடவுள் எங்கே?
ஆ. உன் கோயில் எங்கே?
இ. உன் மக்கள் எங்கே?

நாடுகடத்தப்பட்ட மக்களுக்கு இந்த மூன்றுமே இல்லைதாம். அந்நிய நாட்டில் இருந்து கொண்டு தங்கள் கடவுளையும், தாங்கள் பவனியாகச் சென்றதையும், மக்கள் கூட்டத்தோடு ஆர்ப்பரித்ததையும் நினைவுகூறுகின்றார் பாடல்.

இந்தப் பாடலை இறப்பின் போது பாடக் காரணமும் இதுதான். இறப்பின் போது, இறப்பு நம்மைப் பார்த்து இந்த மூன்று கேள்விகளைத் தான் கேட்கிறது:

அ. உன் கடவுள் எங்கே?
ஆ. உன் கோயில் எங்கே?
இ. உன் மக்கள் எங்கே?

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவும் இந்தப் பாடகரைப் போல எங்கேயோ அமர்ந்து கொண்டு தன் பழைய வாழ்வின் இனிமையான தருணங்களை அசைபோடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாம் இழந்து விட்டாலும் பாடகர்க்கு ஒரு நம்பிக்கை:

'ஆண்டவர் பேரன்பைப் பொழிவார்! இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்!'

இரவு ஒரு பொல்லாத நேரம். இரவில் தான் நினைவுகள் நமக்கு அதிகம் வரும். பகலில் ஓடியாடிவிட்டு, வேலை முடிந்து, படிப்பு முடிந்து தனியாக அறையில் அமர்ந்தோ, படுத்தோ விளக்கை அணைத்தால் ஒரு வித்தியாசமான உணர்வு நம் கன்னத்தில் அறையும். நம்மை அறியாமலேயே மனம் பல மைல்களும், பல வருடங்களும் பின்நோக்கிச் செல்லும். 'சே! அங்கேயே இருந்திருக்கலாம்!' என மனம் பேராசை கொள்ளும்.

மற்றவர்கள் தங்கள் தனிமையில் நம்மை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு நாம் நடந்தால் அதுவே போதும்.

'என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?'

Here are the links to four different video clips of Psalm 42:

Deep Calls to Deep

As the Deer

கலைமான் நீரோடையை

கலைமான்கள் நீரோடை தேடும்


Thursday, June 5, 2014

நாட்டிலேயே குடியிரு!'

திருப்பாடல் 37ல் கேள்வி எதுவும் இல்லையென்றாலும் இந்தத் திருப்பாடல் நமக்கு ஒரு புதிய அறநெறியைத் தருவதால் இதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

நான் தேனி பங்குத்தளத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது என் தனிப்பட்ட செபத்திற்கு நான் அதிகமாக எடுத்துக்கொண்ட பகுதி 37:3-6.

வெளிநாட்டிற்குப் போய்ப் படிக்க வேண்டும் என்று நான் செபித்த போது என் கண்ணில் பட்ட பாடல் இதுதான். 'நாட்டிலேயே குடியிரு!' என்ற இந்த இரண்டு வார்த்தைகளை நான் ஒருவேளை சீரியஸாக எடுத்திருந்தால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனோ? என இன்று எண்ணத் தோன்றுகிறது.

வெளிநாட்டு மோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, மோகம் கோபமாக மாறிக்கொண்டே வருகிறது.

கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் வத்திக்கான் நகர அருங்காட்சியகத்தையும், பேதுரு பசிலிக்காவையும் பார்வையிட்டேன். கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையும் சோப்பு நுரையாக விரைவில் காய்ந்து வருகிறது.

இந்தப் பின்புலத்தில் இந்தப் பாடலை நான் பார்க்க விழைகின்றேன்.

இந்தத் திருப்பாடலில் ஒன்பது மதிப்பீடுகளை இதன் பாடகர் எழுதுகின்றார்:

அ. ஆண்டவரை நம்பு.
ஆ. நலமானதைச் செய்.
இ. நாட்டில் குடியிருப்பாய்.

அ. நம்பத் தக்கவராய் வாழ்.
ஆ. ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்.
இ. உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.

அ. உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு.
ஆ. அவரையே நம்பியிரு.
இ. அவர் உன் சார்பில் செயலாற்றுவார்.

இந்த மூன்று குழுக்களிலும், மூன்று மூன்றாக மொத்தம் 9 வரிகள். இவற்றில் 'அ', 'ஆ' 'இதைச் செய்' என்று சொல்வதாகவும், 'இ' என்பது 'இதைச் செய்வதால் உண்டாகும் பலன்' என்று சொல்வதாகவும் மிகவும் நேர்த்தியாக வார்த்தை அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று குழுக்களுக்கும் பொதுவான ஒரு வார்த்தை 'நம்புதல்'. இதற்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன:

அ. ஆண்டவரை நம்ப வேண்டும்.
ஆ. நம்பத் தக்கவராய் வாழ வேண்டும்.

'நம்பிக்கை' என்பது கடவுளின் கொடை என்று சொல்வார்கள். இது எல்லாருக்கும் கிடைப்பதல்லை. ஆனால் நம்பத் தக்கவராய் வாழ்வது நாம் அனைவருமே செய்யக் கூடியது. என் நண்பர்கள் என்னைப் பார்த்து அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை இதுதான்: உன்னையெல்லாம் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. நீ மனதை மாற்றிக் கொண்டே இருப்பாய்.

ஆகவே, நம்பகத்தன்மை என்றால் 'நிலைப்புத்தன்மை'. இந்த நம்பகத்தன்மையை 'நாணயம்' என்று நாம் குறிப்பிடுகிறோம். நாணயம் என்ற சொல்லை பொருளியல் வார்த்தையாகப் பார்த்தால் அதன் அர்த்தமும் 'மாறாத இயல்பு' தான். எடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருப்பதே நம்பகத்தன்மை.

எனக்குள் இருக்கும் போராட்டம் இதுதான்:
ஒருபக்கம், உறுதியாக இருக்க வேண்டும் என்று விவிலியம் சொல்கிறது.
மற்றொhரு பக்கம், மாறிக்கொண்டே இருக்கும் உயிரினமே வாழ முடியும் என்று டார்வின் கொள்கை சொல்கிறது.
இதில் எதை எடுப்பது? எதை விடுப்பது?

இந்தத் திருப்பாடலை ஒட்டியே நம் கலித்தொகையும் ஒரு பாடலைக் கொண்டிருக்கிறது (பாடல் 133):

'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை
'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை
'முறை' எனப்படுவது கண்ணோடது உயிர் வெளவல்
'பொறை' எனப்படுவது போற்றாரை பொறுத்தல்

(இந்தப் பாடலிலும் ஒன்பது வரிகள்!)

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை திரு சி.கே. சுவாமிநாதன் அவர்கள் இப்படி அமைத்துள்ளார்:

Goodness is helping one in distress;
Support is not deserting one who is dependent;
Culture is to act in unison with the ways of the world;
Love is not surrendering ties with one’s kin;
Wisdom is to ignore the advice of the ignorant;
Honesty is not to go back on one’s words;
Integrity is to ignore others’ faults;
Justice is awarding punishment without partiality;
Patience is to suffer the ill-disposed.

'நலமானதைச் செய் ...  நாட்டிலேயே குடியிரு!'


Wednesday, June 4, 2014

வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?

திருப்பாடல் 34ன் தலைப்பு எபிரேய மொழியில் மிக நீளமாக உள்ளது: 'தாவீதுக்கு உரியது. அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவர் வெளியேறினார். அப்போது அவர் பாடியது'.

இந்தத் தலைப்பை நாம் உண்மையானது என எடுத்துக்கொண்டால் இது சுட்டிக்காட்டும் விவிலியப் பகுதி 1 சாமுவேல் 21:10-22:1. தாவீதை சவுல் அரசர் பொறாமை கொண்டு கொல்லத் தேடுகின்றார். அந்த நிலையில் காத்து நாட்டு அரசன் அகிஷிடம் தஞ்சம் புகுகின்றார் தாவீது. அகிஷிடம் தஞ்சம் புகுந்த நிலையில் தான் வீரன் என நினைத்தால் இந்த நாட்டிலிலும் தனக்கு அடைக்கலம் கிடைக்காது என நினைத்து மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கின்றார். அதைப் பார்த்த அகிஷ் அவரை உடனடியாக தன் நாட்டிலிருந்து வெளியே துரத்துகின்றார். துன்பமும், வெறுமையும் சூழ நாட்டை விட்டு வெளியேறும் தாவீது பாடும் பாடலே இது.

இவ்வளவு துன்பம் மனத்தில் இருந்தாலும் பாடலின் முதல் வரியே துள்ளலாக இருக்கின்றது:
'ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்'. (34:1)
நாம் அடிக்கடிக் கேட்கும் இரண்டு இறைவசனங்களைக் கொண்டிருக்கிறது திபா 34:

அ. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். (34:8)

ஆ. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோருக்கு நன்மை ஏதும் குறையாது. (34:10)

இந்த இரண்டு இறைவசனங்களுமே இறைவனிடம் அடைக்கலம் புகுவதையே மையப்படுத்துகின்றன.
அ. ஆண்டவரின் திருமுகத்தை நாடுங்கள் எனவும், அவரைச் சுவைத்துப் பாருங்கள் எனவும் தாவீது அழைக்கின்றார். திருமுகத்தை எங்கே தேடுவது. இறைவன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை theism என அழைப்பார்கள். எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கும் நம்பிக்கைக்குப் பெயர் pantheism. ஆனால் எல்லாவற்றையும் இறைவனில் பார்க்கும் நம்பிக்கைக்குப் பெயர் panentheism. தாவீது இப்பாடலில் குறிப்பிடும் நம்பிக்கையும் இந்தக் கடைசி வகை தான். எல்லாவற்றையும் இறைவனில், இறைத்திட்டத்தில் காண்பது. அப்படிக் காண்பவர்களுக்கு தாங்கள் அனுபவிக்கும் எல்லாமே இனிமையாகத் தோன்றும். இந்த நாட்களில் நான் இதையே தான் அனுபவிக்கப் பார்க்கிறேன். கடவுள் வேறு, குருத்துவம் வேறு, நண்பர்கள் வேறு, படிப்பு வேறு, பணி வேறு, பயணம் வேறு என்று train compartment போல வாழ்க்கையைப் பார்க்காமல் எல்லாம் இறைவனில் இயங்கும் இராட்டினம் போலப் பார்க்க விழைகிறேன்.

ஆ. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும். நல்ல மொழிபெயர்ப்பு 'இளஞ்சிங்கங்கள் பட்டினி கிடந்தாலும்' என்றே இருந்திருக்க வேண்டும். தனக்குத் தேவையான உணவை எந்த நிலையிலும் போராடிப் பெற்றுக்கொள்கின்ற ஒரு ஆற்றல்மிக்க விலங்கு சிங்கம். தங்கள் ஆற்றலின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பட்டினியாக இருக்க நேரிட்டாலும், இறைவனின் ஆற்றல் மேல் நம்பிக்கை கொள்பவர்கள் எந்தவொரு குறையுமின்றி இருப்பார்கள் என்பதே இதன் அர்த்தம். அதற்காக, கடவுளை மட்டும் நம்பிக்கொண்டு வீட்டிலேயே ஓய்ந்திருந்தால் நம் தட்டில் உணவு வந்து விடுமா? இல்லை. நாம் செய்யும் வேலையையும், நாம் முன்னேற்ற நினைக்கும் சமுதாயத்தையும் இறைவனின் ஒரு பகுதியாகப் பார்த்தால் அதன் மேலும் நமக்கு ஆசை வரும். நாம் நன்றாகப் படிப்போம். நன்றாக வேலை செய்வோம். பட்டினி இன்று இருப்போம்.

இந்த இரண்டு வசனங்களுமே நாம் கொண்டிருக்கும் ஆன்மீகத்திற்குப் புதிய கண்ணோட்டம் கொடுக்கின்றன. இந்தப் புதிய கண்ணோட்டம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் தானாய் வரும்.
தொடர்ந்து வாழ்வியல் மதிப்பீடுகளாக தாவீது ஆறு குணநலன்களையும் முன்வைக்கின்றார் (34:13-14):

அ. தீச்சொல் பேசாதே.
ஆ. வஞ்சகமொழி வேண்டாம்.
இ. தீமையைவிட்டு விலகு.
ஈ. நன்மையே செய்.
உ. நல்வாழ்வை நாடு.
ஊ. அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

முதல் பகுதியில் ஆன்மீகமும், இரண்டாம் பகுதியில் அறவியலும் என கோலோச்சுகிறது திருப்பாடல் 34.

'வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?'

'நெடுநாள் வாழ நாட்டமா?'

To listen to the song on Psalm 34 please click the link:

Taste and See the Lord is Good