Saturday, November 29, 2014

அப்படி வந்தால் தான் அவரு கடவுள்!

நாளை நாம் திருவருகைக்காலத்தைத் தொடங்குகிறோம். திருவருகைக்காலம் என்பது கத்தோலிக்கத் திருஅவையின் வழிபாட்டு ஆண்டின் நான்கு பெரும்பகுதிகளில் ஒன்று. மற்றவை பொதுக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம். நாளை வழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு. திருப்பலி புத்தகம் முதல் பக்கத்திலிருந்தும், வாசகப்புத்தகம் தன் முதல் பக்கத்திலிருந்தும் பயணத்தைத் தொடங்கும்.

எதற்காக திருவருகைக்காலத்தைக் கொண்டாடுகிறோம்? திருவருகையின் அர்த்தம் என்ன?

இதன் ஆங்கிலப் பதம் 'அத்வெந்து'. நாம் சாலையில் செல்லும் போது வழியில் எங்காவது ஒரு ப்ராடஸ்டன்ட் சர்ச் 'நியு அத்வெந்து சர்ச்' என்றோ அல்லது 'செவன்த்டே அன்வென்டிஸ்ட் சர்ச்' என்றோ பார்த்திருப்போம். ஆண்டவரின் வருகைக்காக மக்களை தயாரிக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் என இவர்கள் தங்களையே அழைத்துக் கொள்வது வழக்கம்.

நாம் நெருக்கமாக அன்பு செய்யும் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து நீண்டதொரு பயணம் மேற்கொண்டாலோ, அல்லது படிப்பு, வேலை, குடும்பம் என மற்றொரு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு விட்டாலோ அவரின் வருகை திரும்ப வராதா என எதிர்பார்ப்பது இயல்பு.

இந்த எதிர்பார்ப்பில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன:

அ. அந்த நபர் நம்மோடு இருந்தபோது நாம் கொண்டிருந்த மகிழ்ச்சி. எல்லாருடைய வருகையையும் நாம் எதிர்பார்க்கிறோமா? இல்லை! இப்பதான் காய்ச்சல் வந்துவிட்டுப் போக, நம் பிரட், கஞ்சி என்று சாப்பிட்டு துரும்பாய் இளைத்துப்போக, அந்தக் காய்ச்சல் திரும்ப எப்போ வரும் என்று நாம் எதிர்பார்க்கிறோமா? இல்லை. நம்மைக் கடித்த கொசு திரும்ப வரும் என்று எதிர்பார்க்கிறோமா? இல்லை. நமக்கு நிறைவும், மகிழ்ச்சியும் தந்த ஒன்றைதான் நாம் திரும்ப எதிர்பார்க்கிறோம்.

ஆ. எதிர்பார்ப்பில் ஒரு காத்திருத்தல் இருக்கும். எதிர்பார்ப்பதும், காத்திருத்தலும் இணைந்தே செல்லக் கூடியவை. நாம் எதிர்பார்க்காத ஒன்றிற்காக காத்திருப்பதுமில்லை. நாம் காத்திராத ஒன்றை எதிர்பார்ப்பதும் இல்லை.

ஆக, வருகை என்பது இடமும், நேரமும் சார்ந்தது.

திருவருகைக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக காத்திருக்கின்றனர். மற்ற மதத்தினரோ அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களோ இயேசுவுக்காக காத்திருப்பதில்லை.

ஏற்கனேவே இயேசு வந்ததை நினைவுகூறி கொண்டாடுவதாகவும், திரும்பவும் அவர் வருவதற்கான தயாரிப்பாகவும் திருவருகைக்காலம் அமைகின்றது.

நாம் யாரையாவது எதிர்பார்க்கிறோம் என்றால் அவர் வரும்போது அவருக்கு விருப்பமான ஆடை அணியவும், உணவைத் தயார்செய்யவும் முனைப்பாய் இருப்போம். திருவருகைக்காலத்தில் இயேசுவை எதிர்பார்க்கிறோம் என்றால் அதற்கேற்ற தயாரிப்பு இருக்க வேண்டும்.

ஆனா நம்ம எல்லார் மனசுக்குள்ளும் கடவுள் அப்படி சீக்கிரம் வந்துட மாட்டார் என்றே தோன்றுகிறது. சீக்கிரம் வரக்கூடாது என்றும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு, இருட்டுல ஒரு உருவம் தெரிவது மாதிரி இருந்தால் அதை நாம் பேய் என்று தான் சொல்கிறோமே தவிர, ஒருபோதும் அது கடவுளாய் இருக்குமோ என்று சொல்வதே கிடையாது. ஏன்னா நமக்கு நிச்சியமாகத் தெரியும் கடவுள் வரமாட்டார் என்று!

'இதோ அவர் சீக்கிரமாய் வருகிறார்!' என்று ஒரு கூட்டம் இயேசுவின் வருகையை வியாபாரமாக்கவும் தொடங்கி விட்டது.

இன்னைக்கு உங்க வீட்டுக்கு வெளியில அப்படி யாராவது சத்தம் போட்டுக்கொண்டு போனாலோ, அல்லது மைக் வைத்துக் கொண்டு அலறினாலோ என்ன செய்யணும்?

ரொம்ப சிம்பிள்!

குளிச்சுகிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து குளிங்க!
துணிதுவச்சிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து துவைங்க!
சாப்பிட்டுட்டு இருக்கீங்களா...தொடர்ந்து சாப்பிடுங்க!
குழந்தைக்கு தலைசீவி விடுறீங்களா...தொடர்ந்து செய்யுங்க!
அடுப்புல உலை கொதிக்குதா...அரிசியைப் போடுங்க!
தெய்வம் தந்த வீடு பார்க்குறீங்களா....தொடர்ந்து பாருங்க!
படிச்சுகிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து படிங்க!
கஸ்டமர் கேர்ல பேசிட்டு இருக்கீங்களா....தொடர்ந்து பாருங்க!
ஃபேஸ்புக் ஸ்டேஸ் போடுறீங்களா...தொடர்ந்து போடுங்க!
ஏன்னா...இந்த எல்லா நிகழ்வுகளிலும் அவர் இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்.
இதுல எப்படிங்க வருவாரு...அவர் வானத்துல தான் வருவாருன்னு
வெளியே ஓடி வராதீங்க...
அவர் எதுலயும் வர முடியும்...அப்படி வந்தால் தான் அவரு கடவுள்...




Friday, November 28, 2014

இரக்கம் அப்படின்னா என்ன?

இரக்கம் அப்படின்னா என்னன்னு நினைக்கிறீங்க?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை கட்டளைச் செபத்தில் திபா 51 முதலாவது திருப்பாடலாக இருக்கிறது. தாவீது அரசர் ஆண்டவரின் இரக்கத்தை வேண்டுவதே இந்தப் பாடல்.

கடவுள் தான் மனிதர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதல்ல, மனிதர்களும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டலாம். வயதிலோ, ஆற்றலிலோ பெரியவர் தான் சிறியவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதல்ல. சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு இரக்கம் காட்டலாம்.

'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்!' என்று இயேசு தன் எதிராளிகளைப் பார்த்து அடிக்கடிச் சொல்வார் (காண். மத் 9:13). இது ஆக்சுவலா ஒசேயா இறைவாக்கினரோட வார்த்தைகள் (காண். ஒசே 6:6). இதன் அர்த்தம் என்ன?
ஓய்வுநாளில் சூம்பிய கையுடைய ஒருவரை இயேசு குணமாக்கும் போது அவரோட எதிரிகள் முணுமுணுக்கிறார்கள். அதெப்படி ஓய்வு நாளில் இவர் செய்யலாம்? ஓய்வு நாளில் யூதர்கள் எருசலேம் ஆலயம் சென்று பலி செலுத்துவது வழக்கம். பலி செலுத்தச் செல்ல வேண்டுமென்றால் தூய்மையாக இருக்க வேண்டும். இயேசு செய்யும் இந்தச் செயலால் அவரின் தூய்மை குறைகிறது. ஆக, அவர் பலி செலுத்துவதற்கான தகுதியை இழந்து விடுகிறார். ஆனாலும் துணிச்சலாக, போங்கடா நீங்களும் உங்க பலிகளும்! அவற்றைவிட இரக்கம் தான் பெரிது என்கிறார்.

இரக்கத்தைப் பற்றி மகாபாரதம் (பகவத் கீதை) அழகாகச் சொல்கிறது. மகாபாரதத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் உரையே கீதை. சரிதானே! ஆம்.

சமநிலையில் இருக்கும் ஒருவரால் தான் இரக்கம் காட்ட முடியும் என்று சொல்கிறது கீதை. சமநிலை என்றால் என்ன? கலக்கம் இல்லாத நிலை. ரெஸ்ட்லெஸ்ஸா இல்லாமல் அமைதியாக இருக்கும் ஒரு நிலை. இந்த நிலை எங்கே இருக்கணும்?

இதயம், மனம், மூளை, உடல் மற்றும் ஆன்மா என இந்த ஐந்தும் சமநிலையில் இருக்க வேண்டும்.

அ. இதயம் அன்பு இல்லாதபோது கலக்கம் அடைகிறது.
ஆ. மனம் மன்னிக்காத போது கலக்கம் அடைகிறது.
இ. மூளை ஞானத்தை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.
ஈ. உடல் அர்ப்பணத்தை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.
உ. ஆன்மா நீதியை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.

இதயம் அன்பையும், மனம் மன்னிப்பையும், மூளை ஞானத்தையும், உடல் அர்ப்பணத்தையும், ஆன்மா நீதியையும் பெற்றிருப்பதே சமநிலை.

இந்தச் சமநிலை இருந்தால் நாமும் ஒருவர் மற்றவருக்கு இரக்கம் காட்ட முடியும். ஆனால் பல நேரங்களில் நம் இதயத்தில், மனத்தில், மூளையில், உடலில், ஆன்மாவில் ஏதோ கலக்கம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

இந்தச் சமநிலையை அடைவதே சமாதிநிலை என்றும் சொல்லலாம். இந்த நிலையில் நாம் முழுமையாக நிர்வாணமாகிவிடுகிறோம். அந்த நிர்வாணாவில் நமக்கு அடுத்திருப்பவர் நம்மில் ஒரு பகுதியாகவே தெரிகிறார். அங்கே இரக்கம் தானாய் நிரம்பி வழிகிறது!

என்ன ரொம்ப சீரியஸாயிட்டேனா...?


ஜில் ஜில் ஜிகர்தண்டா

நேற்று இரவு 'ஜிகர்தண்டா' திரைப்படம் பார்த்தேன். 'சூது கவ்வும்' முகங்களே இதிலும் அதிகம் தெரிந்தன. ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸ் நம்ம மதுரை தான். 'சுகர்' என்பதன் வடமொழியாக்கமே 'ஜிகர்'. 'தண்டா' என்றால் குளிர். ஆக, குளிர்ந்த சர்க்கரை தான் ஜிகர்தண்டா. மதுரையில் ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸான கடை விளக்கத்தூணிற்கு அருகில் உள்ளது. திரைப்படமும் மதுரையையும், மதுரையின் மண்வாசனையையும், மல்லிகை வாசனையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அடி தடி என இருந்த அசால்ட் சேது அழுகுனி குமாராக மாறுவது தான் கதைச் சுருக்கம்.

இந்தத் திரைப்படத்தில் இரண்டு வரிகள் என்னைக் கவர்ந்தன:

அ. மத்தவங்களுக்கு நம்ம மேல பயம் இருந்துகிட்டே இருக்கணும். அந்தப் பயம் தான் நம் பலம்.

இது என்னவோ உண்மை தாங்க. நம்ம வாழ்க்கையவே பாருங்க. நாம யாரைப் பார்த்தாவது பயப்படுவோம். அல்லது நாம யாரையாவது பயமுறுத்திகிட்டே இருப்போம்.

எங்க பிரிட்டோ ஸ்கூல்ல ஒரு பி.இ.டி வாத்தியார் இருந்தார். ஒரு நாள் நான் தண்ணி குடிச்சிகிட்டு இருந்தப்போ பின்னால முதுகுல ஒரு குச்சியால அடிச்சார். அதோட மட்டுமல்லாமல் தொடர்ந்து தலையைப் பிடித்து அடிச்சுகிட்டே நடு கிரவுண்டுக்குக் கூட்டிப்போனார். எல்லா ஜன்னல்களிலிருந்தும் ஸ்டூடண்ஸ் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தாங்க. 'குடிப்பியா! குடிப்பியா!' என்று ஏதோ டாஸ்மாக்ல பியர் வாங்கிக் குடிச்சது போல அடிச்சார். அந்த அடியை நான் தான் வாங்கினேன். ஆனால் அதன் பின் யாரும் அந்தக் குழாயில் தண்ணீர் குடிக்கவேயில்லை. பயம் காட்டுவதில் இது ஒரு ரகம். தூக்குத் தண்டனை இருப்பதன் அர்த்தமும் இதுதான். தூக்குல தொங்குறவனைப் பார்த்து பயந்து மத்தவங்க திருந்தணும் என்பதற்காகத் தான்.

நம்மையறியாமலே நாம் எதற்கோ, யாருக்கோ பயந்துகிட்டே இருக்கிறோம். நாம யாருக்கு பயப்படுறோமோ அவங்களுக்கு அடிமை ஆயிடுறோம். நம்மள பார்த்து யாரும் பயப்படலனாலும், தெருவுல போற நாயைப் பார்த்து கல்லெடுத்து ஓங்கியவுடன் அது ஓடுவதைப் பார்த்து ஒரு மெல்லிய புன்முறுவலையும் பூக்க வைக்கும் போது நமக்குள்ளே ஒரு பெருமித உணர்வு வரத்தான செய்யுது.

ஆ. உனக்கு வெளியில இருக்கிறவன் 'நீ ஜெயிச்சுட்டியா, தோத்துட்டியானு' சொல்லக் கூடாது. உனக்கு உள்ளிருப்பவன் தான் சொல்ல வேண்டும்.

நம்மகிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட குணம் அப்ரூவல். யாராவது நம்மைப் பார்த்து, 'டே! நீ நல்லா இருக்க! நீ நல்லவன்! இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு!' என்று சொல்லிக் கொண்டே இருக்கணும். தப்பா யாராவது சொல்லிட்டா உடனடியா நம்ம மூஞ்சு தொங்கிப் போகுது. அப்ரூவல் தேடுவது நம்மை பிச்சைக்காரராக்கி விடுகிறது. அடுத்தவர்கள் போடும் சில்லறை ரிமார்க்குகளில் நம் வாழ்க்கை நகர ஆரம்பிக்கிறது. காலப்பபோக்கில் நம் பிறப்பு முதல் நம் கூடவே வரும் நம் உள்மனிதனை மறந்து விடுகிறோம்.

எனக்கு ஒரு பாலிஸி உண்டுங்க. நம்ம பிரண்ட்ஸ், ரெலடிவ்ஸ், லவ்வர்ஸ் இவங்கல்லாம் நம்ம கூடவே இருப்பது போல இருந்தாலும், அவங்க நம்ம கூட இருப்பதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நமக்கு இருக்கும் நண்பர் நாம் மட்டும் தான். நம்மை நாமே அன்பு செய்ய, ஏற்றுக் கொள்ள பழகிக்கிட்டோம்னு வையுங்க வாழ்க்கையில ஜெயிச்ச மாதிரி தான்.


Wednesday, November 26, 2014

சிலேட் நினைவு!

என் நண்பர் ஒருவருக்கு ஐபேட் வாங்குவதற்காக அவரோடு கடைக்குச் சென்றிருந்தேன். ஐபேட் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மட்டுமே. மற்றவைகள் எல்லாம் டேப்ளட் எனவே அழைக்கப்படுகின்றன. எச்பி நிறுவனம் தன் தயாரிப்புகளுக்கு ஸ்லேட் எனப் பெயர் வைத்திருக்கின்றது. நம் கலைஞர் கருணாநிதி இதற்கு 'வரைவுப்பட்டிகை' என்று தமிழ்ப்படுத்தியுள்ளார். வரைவுப் பதாகை என்றும் கொள்ளலாம்.

அந்தக் கடையில் இருக்கும் போது சின்ன வயசுல ஸ்லேட் வச்சிருந்ததுதான் நினைவிற்கு வந்தது. என் பள்ளிப்பருவத்தில் மூன்று வகை ஸ்லேட்களை பயன்படுத்தியிருக்கிறேன். முதலில் கல்லில் உள்ள ஸ்லேட். என்ன வகை கல் என்று தெரியவில்லை. ஆனால் ஓங்கி அடித்தால் உடைந்து விடும். சுற்றிலும் மரத்தினால் செய்யப்பட்ட ரீப்பர் இருக்கும். விளிம்புகளில் தகரம் அடிக்கப்பட்டடிருக்கும். இந்தத் தகரம் பட்டுக் கிழிந்த பைகளும், சட்டைகளும் சில. அடுத்த வகை, பிளாஸ்டிக் மற்றும் தகரம். பிளாஸ்டிக்கினால் ஆன ஃப்ரேம். தகரத்தினால் ஆன எழுதும் பகுதி. இந்தப் பிளாஸ்டிக் தான் என் பசி போக்கும். எழுதும்போது இன்று நகத்தைக் கடிப்பது போல அன்று பிளாஸ்டிக் ஃப்ரேமை கடித்ததுண்டு. நானாவது பரவாயில்லை. என் வகுப்புத் தோழன் ஒருவன் பிளாஸ்டிக் ஃபிரேம் முழுவதையும் கடித்து எடுத்துவிட்டு அந்த தகரப் பகுதியைக் கொண்டு ஒரு சண்டையில் மற்றவன் கையை கிழித்தும் விட்டான். மூன்றாம் வகை ஏறக்குறைய இரண்டாம் வகை போல தான். ஆனால் எழுதும் பகுதி கறுப்பாக இருப்பதற்குப் பதிலாக ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும்.

சிலேட்டில் எழுதுவது ஒரு கலை. 12 வாய்ப்பாடுகளையும் அதற்குள் அடக்க சின்ன இன்ஜினியரிங் பண்ண வேண்டும். எழுதியது அழியாமல் பக்குவமாக புத்தகப் பைக்குள் வைக்க வேண்டும். பல நேரங்களில் எழுதிய சிலேட்டைக் கையில் தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். எழுதும்போது நம் கை அழுத்தி எழுதிய இடம் அழிந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிலேட்டில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்தியார் 'சரி' என்று ஒரு டிக் அடித்தால் எழுதப்பட்டது தன் நிறைவை அடைந்து விடுகிறது. திரும்ப அடுத்த நாள் எழுத வேண்டும். மறுநாள் திரும்பவும் வாய்ப்பாடு எழுதுவதற்கு பதில் வாத்தியாரின் டிக் மார்க்கை மட்டும் அழித்து விட்டுக் கொண்டு சென்ற நாட்களும் உண்டு.

எழுதும் குச்சியிலும் மூன்று வகை உண்டு: சாதா குச்சி, மாவு குச்சி மற்றும் கடல் குச்சி. சில குச்சிகளைக் கொண்டு எழுதினால் பல் கூசுவது போல கீச் கீச் என்று இருக்கும். குச்சி வழுக்கும்.

ஆறாம் வகுப்பு சென்ற போது கிடைத்த பெரிய மாற்றமே 'இனி சிலேடு தேவையில்லை!' என்பதுதான். ஆனாலும் கணக்கு படிப்பிற்கு மட்டும் 12ஆம் வகுப்பு வரை சிலேடு ஒன்று வைத்திருந்தேன்.

உடனடிக் குறிப்பு எழுத, ரஃப் ஒர்க் செய்ய, ஸ்டடி ஹாலில் அமைதியாக ஒருவர் மற்றவரோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய, 'இது என் இடம்' என இடம் பிடிக்க என சிலேடு பழக்கத்தில் இருந்து கொண்டே இருந்தது.

இன்று பெரும்பாலும் வெள்ளை சிலேட்டும், மார்க்கர் பேனாக்களும் தான் புழக்கத்தில் இருக்கின்றன.

ஒரு எழுத்தை ஒருமுறை எழுதுவதற்குப் பதிலாக இன்றைய டேப்ளட்களில் மூன்று முறை அழித்து எழுதுகிறார்கள் மக்கள் என சொல்கிறது ஒரு ஆய்வு. ஒவ்வொரு நாளும் மேம்பட்ட நிலைக்குத் தொழில்நுட்பம் கடந்து சென்றாலும் சின்ன வயசு ஸ்லேட்டின் இடத்தை எதுவும் எடுத்துவிட முடியாது.

இன்று சிலேடுகள் பெரும்பாலும் கடைகளில் விலைப்பட்டியில் எழுதித் தொங்கவிடுவதற்கு மட்டும்தான் பயன்படுகின்றன.

இப்போ நம் முன்னால் எக்கச்சக்கமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தொடுக்கு தான். ஆனால் நாம் எந்தத் தகவல்களை உட்கிரகித்துள்ளோம் என்பதைச் சரி பார்க்க ஒரு சிலெட் தேவை தான்.

'தாபுலா ராசா' என்பது இந்த நுட்பத்தின் பெயர். இதன் அர்த்தம் 'வெற்று சிலேடு' அல்லது 'வெள்ளைத் தாள்'. உங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் பற்றி நீங்க எவ்வளவு தெரிஞ்சு வைத்திருக்கீங்க என்றால் ரொம்பத் தெரியும் என்று சொல்வோம். ஒரு சிலேடைக் கொடுத்து அவரைப் பற்றி என்ன எழுதுவீர்கள் என்றால் நாம் என்ன எழுதுவோம். நாம் வெற்றுத் தாளில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவுதான் அவரை நமக்குத் தெரியும்.

சின்ன வயசின் சிலேட் நினைவு வந்து திரும்பும் நேரத்தில் என் நண்பரின் கைக்கு புதிய ஐபேடும், பில்லும் வந்து சேர்ந்தது.


இதெல்லாம் ரொம்ப சகஜம்!

இன்று வகுப்பில் என் நண்பன் ஒருவன் சோகமாக அமர்ந்திருந்தான். தனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை எனவும், தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனவும் புலம்பிக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென கலங்க ஆரம்பித்து விட்டன. என்னவென்று விசாரித்த போது, இன்று காலையில் அவனது பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஒரு பேருந்தில் ஏற முற்பட்ட போது இரண்டு பேர் சேர்ந்து அவனை வெளியே தள்ளியிருக்கிறார்கள். ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை. அவனிடம் இருப்பதும் டிக்கெட் தான். அவர்களிடம் இருப்பதும் டிக்கெட் தான்.

ரோம் நகரில் இதெல்லாம் ரொம்ப சகஜம். நாம் பேருந்தில் ஏறினாலும் நாம் சுமந்து கொண்டிருக்கும் பேக்பேக் தெரியாமல் மற்றவர் மேல் இடிக்க, அவர் நம்மைத் திரும்பிப் பார்த்து, நாம் இத்தாலியர் இல்லையென்றால் நம்மை அவர் ஒரு முறை இடிப்பார். இத்தாலியர் என்றால் புன்முறவல் பூப்பார்.

அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை.

'என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்!' என்ற உணர்வு நம்மை ஒரேயடியாகச் சாய்த்து விடுகிறது.

மற்றவர்களை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

முதல் காரணம் 'என்னிடம் எல்லாம் இருக்கிறது. ஆக, எனக்கு யாரும் தேவையில்லை' என்ற மனோபாவம். இரண்டாவதாக, பயம். மற்றவர்களைக் குறித்துப் பயம் இருந்தாலும் நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இங்குள்ள மக்களுக்கு தங்கள் நிறத்தைத் தவிர வேறு நிறத்தைக் கண்டாலோ, தங்கள் மொழியைத் தவிர வேறு மொழியைக் கேட்டாலோ பயம் தொற்றிக் கொள்கிறது. மொத்தமாகக் கூடி வந்து கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள்.

மனிதர்கள் மற்றவர்களிடம் ஒரு குறையைக் கண்டு அதை வைத்து தங்களை நிறைவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்பதே விந்தையாக இருக்கிறது.


Tuesday, November 25, 2014

விண்ணைத் தாண்டி வருவாயா!

நேற்று இரவு கழகஸ்தானின் (ரஷ்யா) பைக்கனூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட் சோயுஸ் டிஎம்ஏ-15எம் என்ற விண்கலத்தை சுமந்து சென்றது. இதில் பயணம் செய்யும் மூன்று பேரில் இத்தாலி நாட்டைச் சார்ந்த பெண்ணும் ஒருவர். இத்தாலி நாட்டின் முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெரும் இவரின் பெயர் சமந்தா. நேற்று இரவு இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்வைப் பார்ப்பதற்காக விழித்தே இருந்தேன். அந்த விழிப்பு நேரத்தில் இந்த ராக்கெட் குறித்தும், வானில் சுற்றிக் கொண்டிருக்கும் 'வான்வெளி ஆய்வுக்கூடம்' பற்றியும், அது செயல்படும் முறை பற்றியும், அங்கே போகவும், திரும்பவும் செய்யவேண்டிய செய்முறைகள் குறைத்தும் எடுக்கப்பட்ட சில காணொளிகளை யூடியிபில் பார்த்தேன். மெய்ம்மறந்து போனேன்.

'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்று பாடக் கேட்டிருக்கிறோம். அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கண்டு வியந்து போனேன்.

வான்வெளி ஆய்வுக்கூடம் (இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்) என்பது ஒரு மனிதர்கள் வசிக்கும், பயணம் செய்து, பூமியைச் சுற்றி வரும் ஒரு செயற்கைக்கோள். அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், பிரேசில், ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வுக்கூடம் 1998ஆம் ஆண்டு முதல் 93 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருகிறது. இதன் மணிக்கு 27000 கிமீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஆய்வுக்கூடத்தின் எடை 450,000 கிலோகிராம். இதனுள் ஆறு பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த ஆய்வுக்கூடத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ தான் நேற்று இரவு புறப்பட்ட சோயுஸ். புறப்படும் போது ஒரு கத்தோலிக்கக் குருவானவர் வந்து தீர்த்தம் தெளித்து ஆசீர் அளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. நாம டூர் போறதுக்கு முன்னால பஸ் டயர்ல எலுமிச்சம் பழம் வைக்கும் நிகழ்வு போல இருந்தாலும், மனித வளர்ச்சி என்னதான் இருந்தாலும் அதையும் மிஞ்சிய சக்தி ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு நினைவூட்டுவதாகத் தான் இருந்தது. 10க்கு 10 அடி கேபினில் இன்னும் ஆறு மாதத்திற்கு இந்த மூன்று பேரும், அங்கு ஏற்கனவே இருக்கும் மற்ற மூன்று பேரோடு சேர்ந்து உண்டு, உறங்கி, இளைப்பாறி, வேலை பார்க்க வேண்டும்.

புவியின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லும் போது இவர்களின் உடலின் எடை திடீரென அதிகரித்துப் பின் படிப்படியாகக் குறைகின்றது. இந்த ஆய்வுக்கூடத்தில் இருக்கும் கிராவிட்டி ரொம்ப ரொம்ப மைக்ரோ. ஆகையால் இவர்கள் எப்போதும் மிதந்து கொண்டே தான் இருப்பார்கள். தக்காளி, கத்தி, பிரட், பட்டர் எல்லாம் மிதக்கும். வாரம் ஒரு முறை குளியல், நுரை வராத சாம்பு, கடித்துத் திண்ணும் டூத்பேஸ்ட், நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர், காதை அடைக்கும் 'கொய்ங்' சவுண்ட், கதிரியிக்கம், அடிக்கடி வந்து போதும் விண்கற்கள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இவர்கள் மனித உடலியல், கோளங்கள், விண்வெளி ஆய்வில் ஈடுபடுவர். இவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இவர்கள் எந்நேரமும் கீழுள்ள 12 ஆய்வுக்கூடங்களின் கட்டுப்பாட்டில் இருப்பர். ஒவ்வொரு நாளும் பத்து மணி நேரம் வேலை, இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி என இவர்களின் வாழ்க்கை இருக்கும்.

இந்த ஆய்வுக்கூடத்தின் ஒவ்வொரு ஸ்குருவுக்குப் பின்னாலும் ஒருவரின் மூளைத்திறன், உடல் திறன், உழைப்பு இருக்கிறது.

நாம் ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே வெற்றி கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தாலும், வானம் இன்னும் விரிந்து கொண்டே செல்கின்றது.

இந்த வான்வெளியோடு, பால்வெளியோடு, நம் பூமித்தாயின் அதிசயம், ஆச்சர்யம் இவற்றோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பெருமை கொள்ள எதுவும் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆச்சர்யம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு ஆச்சர்யம்.

நான் கண்டு ரசித்த காணொளிகளின் இணைப்பை இங்கே தருகின்றேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பாருங்கள். நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள்!

சமந்தா...விண்ணைத் தாண்டி சீக்கிரம் வா! எனக் காத்திருக்கிறது இத்தாலி!

Soyuz Launch Explained - Video 1 (11:30)

Soyuz Docking Explained - Video 2 (21:06)

Soyuz Undocking Explained - Video 3 (20:44)



Monday, November 24, 2014

உங்களுக்கு வந்தா ரத்தம்!

நேற்று காலை வத்திக்கான் நகருக்குள் இருக்கும் தூய மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய நம் திருத்தந்தை அவர்கள் 'இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தப்படுத்தும்' நற்செய்திப் பகுதியை முன்வைத்து மறையுரை ஆற்றினார். மறையுரையில் அருட்பணியாளர்களிடம் இன்று வணிக சிந்தனை மேலோங்கியுள்ளது என்று தொடங்கிய அவர், தான் முன்பு பணியாற்றிய இடத்தில் இருந்த ஒரு பங்குத்தந்தை திருமண அருட்சாதனத்திற்காக நேரத்தை கூறு போட்டு விற்றதாகவும், திருவருட்சாதனங்கள் ஒரு போதும் விற்கப்படக்கூடாது என்றும், பங்கு மக்களிடமிருந்து பங்குப் பணியாளர்கள் எந்தவொரு காணிக்கையும் பெறக்கூடாது என்றும் சொன்னார்.

ரொம்ப மகிழ்ச்சி!

திருத்தந்தை அவர்கள் 'மறைமாவட்ட அருட்பணியாளர்கள்' என்று பேசியிருப்பதுதான் இன்று உரோம் முழுக்க பரபரப்பான பேச்சு.

திருவருட்சாதனமும், கடவுளி;ன் அருளும் ஒருபோதும் விலைபேசப்படக் கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதற்கான குறிப்பு திருத்தூதர்பணிகள் நூலிலேயே உள்ளது (8:9-24). லூத்தர் அவர்கள் நம் திருச்சபையை விட்டுச் செல்வதற்கு இதுவும் ஒரு முதற்காரணமாக அமைந்தது.

சரி! நம்ம போப்பாண்டவர் சொன்னது மாதிரி மறைமாவட்ட அருட்பணியாளர்கள் இருக்க வேண்டும்! புரிஞ்சதா! அப்படின்னு இன்னைக்கு நாம சொல்லிட முடியுமா?

நான் மதுரையில உள்ள ஒரு பங்கின் அருட்பணியாளர் என வைத்துக்கொள்வோம். எனக்குக் கீழே 100 குடும்பங்கள் இருக்கின்றன (400 பேர்!). இந்த 400 பேரில் சராசரியாக வாரநாட்களில் ஆலயத்திற்கு வருபவர்கள் 15 பேர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டு திருப்பலிகளிலும் இவர்கள் வருகை 300. வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஓஸ்தி, ரசம், திருப்பலி உடை, தரை விரிப்பு, சேர் வாடகை, மின்சாரம், இசைக்கருவிகள், லைட், ஃபேன், தரை வாடகை என ஒரு மணி நேரத்திற்கு ஒரு அளவு என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கென்று ஒரு அளவு வரும். சரி. இப்ப இந்தச் செலவை யார் பார்ப்பார்? நான் பங்கு பராமரிப்பு நிதியும் வாங்கவில்லை. காணிக்கையும் எடுக்கவில்லை. 300 பேரும் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு பங்கில் என்ன நடக்கும்? பங்கு அருட்பணியாளர் எதை வைத்துச் சரி செய்வார்?

ஏன்...பங்குச் சாமியார் வேலைக்குப் போகலாமே! என்று சொல்வர் துறவியர் (ஏன்னா! நாங்க ஸ்கூல்ல வேலை பார்க்குறோம்! காலேஜ்ல வேல பார்க்கிறோம்! ஆனா நீங்க மட்டும் கோயிலே கதின்னு இருந்துகிட்டு காணிக்கைக் காசுல பிழைக்கிறீங்க!).

ஐயா! துறவியரே! நீங்க படிக்கும் போதே உங்க வேலைக்குத் தேவையான மாதிரி டிகிரி படிக்கிறீங்க. உங்க படிப்பை நீங்க இன்வஸ்ட் பண்ணி அதுல இருந்து சம்பாதிக்கிறீங்க. ஆனா எங்கள மட்டும் ஃபிலாசபியும், தியாலஜியும் மட்டும்தானே படிக்க விடுறீங்க. இந்த இரண்டையும் வச்சு ஒரு சலூன் கடையில கூட வேலை பார்க்க முடியாது! ஏன்னா சலூன் கடையில பேசப்படுற ஃபிலாசஃபி கூட நாங்க படிச்சதில்லை!

நாங்க மக்கள்ட்ட காணிக்கை வாங்குறோம்னு சொல்றீங்களே. ஏன்! நீங்க உங்க ஸ்கூல்ல பிள்ளைங்ககிட்ட ஃபீஸ் வாங்குறதில்லையா? கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தான் நாங்க விற்கிறோம்னா, நீங்க கண்ணுக்குத் தெரியற கடவுளையே விற்கிறீங்களே? போன மாதம் ஃபீஸ் கட்ட முடியாத ஒரு அருட்பணியாளரை வெளியே அனுப்பியது ஒரு 'பாப்பிறைப் பல்கழைக்கழகம்!'

உங்களுக்கு வந்தா ரத்தம்! ஆனா எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?

எனக்கு பெர்சனலா இந்த வரி வாங்குறது, காணிக்கை எடுக்குறது, வீடு வீடா நோட்டு கொண்டு போய் சந்தா வாங்குறது, பூசைக்கு காசு வாங்குறது, இத்யாதி, இத்யாதி என எதுவும் பிடிக்காதுதான். இப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ பிச்சையெடுப்பது போலவே எனக்குத் தோன்றும்.

33 வயசுல ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கக் கூடிய மனப்பக்குவம் உடைய எனக்கு எப்படி பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டும் என தோணும்?

இது கடவுள் காசு! நாம அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்றீங்களா?

என் பங்குல இருக்குற 100 குடும்பங்களும் நாளைக்கு ஒரு பிராடஸ்டன்ட் பாஸ்டர் பின்னால போயிட்டா நான் என் கோவிலுக்கு எப்படி கரண்ட் பில் கட்டுவேன்? எப்படி வெள்ளை அடிப்பேன்? நான் எப்படி சாப்பிடுவேன்?

வத்திக்கானின் அன்றாட நடைமுறையே மக்களின் காணிக்கையை நம்பிதான் இருக்கிறது என்பதை திருத்தந்தை மறந்துவிட்டாரோ? எதையும் விற்கக் கூடாதுன்னா, ஏன் பீட்டர்ஸ் பசிலிக்காவுல காணிக்கைப் பெட்டி இருக்கு? அங்க ஏன் பூசைக்கருத்து எழுதுறாங்க? பேபல் பிளஸ்ஸிங் ஏன் விற்குறீங்க?

'வெறும் செபமாலை சொல்லி மட்டும் திருச்சபையை நடத்த முடியாது' என்று வத்திக்கானுக்குத் தெரிந்ததால் தான் அது வங்கியை நடத்துகிறது.

நீங்க பேங்க் நடத்தலாம். ஆனா ஒரு பங்குச்சாமியார் திருமணப்பூசைக்கு இவ்வளவு கொடு என்றால் நீங்க ரூல் போடுவீங்க!

எங்க மறைமாவட்டத்திலேயே சில பேர் பண்ணை வைத்திருக்கிறார்கள் எனவும், தனிப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள் எனவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் தவறு இல்லை என்பதே என் கருத்து. தன்மானம் உள்ள அனைவரும் தனிப்பட்ட சொத்து வைத்திருப்பர். சொத்து வைத்திருக்க வேண்டும்.

ஏன்னா! ஒரு கோவிலில் மக்கள் காணிக்கை போடுவது என் படிப்பிற்கோ, என் மறையுரைக்கோ, என் ஆளுமைக்கோ, என் திறமைக்கோ அல்ல - மாறாக, நான் செய்யும் சின்ன மாயவித்தைக்கே!

ஒரு மறைமாவட்ட அருட்பணியாளர் அவரின் திறமைக்காக அல்ல, அவரின் சாமியார் வேலைக்கே மதிக்கப்படுகிறார்.

இன்னைக்கு நம்ம ஊர்களில் வாழ்கின்ற நபர்களுக்காகவும், இறந்த நபர்களுக்காகவும் திருப்பலிக் கருத்து கொடுக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழ்கின்ற நபர்களுக்கு யாரும் கருத்து கொடுப்பதில்லை. ஏன்? நாம் வாழ்வது நம்ம கையில் தான் இருக்கிறது. கடவுள் கையில் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் வத்திக்கான் 'உத்தரிக்கிற நிலை இல்லை' என்று சொல்லிவிட்டாலோ, 'இறப்பிற்குப் பின் வாழ்வு இல்லை' என்று சொல்லிவிட்டாலோ, இறந்தவர்களுக்காக செபிப்பதும் போய்விடும். (வத்திக்கான் அவ்வளவு சீக்கிரம் சொல்லாது!)

இப்படியெல்லாம் பேசி நீங்க செய்றத நியாயப்படுத்தாதீங்கனு சொல்றீங்களா?

நான் நியாயப்படுத்தலை. திருவருட்சாதனங்கள் விலைக்கு அல்ல என்று திருத்தந்தை சொன்னார் என்றால், 'குருக்களும் விலைக்கு அல்ல!' என்று அவர் சொல்ல வேண்டும்.  'உன் வயிற்றுக்கு நீ உழைக்க வேண்டும்!' என எங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படி உழைக்க திருச்சபைச் சட்டம் அனுமதிக்க வேண்டும். அல்லது எங்க ஊர் முருகன் கோவிலை மாதிரி எங்க மாதா கோவிலையும் எங்க அரசாங்கம் எடுத்துக்கணும். அரசாங்கமே குருக்களை நியமிக்கணும். சம்பளம் கொடுக்கணும்.

இன்று எங்கள் மறைமாவட்டத்தில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. திருயாத்தரை தளங்களில் கூடும் கூட்டத்தை மட்டும் வைத்து கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சியைச் சொல்லிவிட முடியாது. அந்தக் கூட்டம் எங்கும் கூடும். அந்தக் கூட்டத்தில் பலர் கத்தோலிக்கர்களே இல்லை.

பிரிவினை சகோதரர்களோடு சண்டை போட்டுக் கொண்டோ, அன்பியத்திற்கு வராத மக்களை 'நீ வா! நீ வா!' என்று சொல்லிக் கொண்டோ, அருட்சகோதரிகளைப் பார்த்து, 'பொட்டு வைக்க வா! பூ வைக்க வா! கோலம் போட வா!' என்று அழைத்துக் கொண்டோ, பார்க்குறவங்களையெல்லாம் 'பங்கு வரி கட்டிட்டியா?' என்று கேட்டுக் கொண்டோ (நாம ஏன் வரி கட்டணும்! நம்ம என்ன ஆங்கிலேய ஆட்சியிலயா இருக்குறோம்!), 'எங்க கடவுள் தான் உண்மையான கடவுள்'னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டோ ஒரு அருட்பணியாளர் இருக்கம் வரை அங்கே காணிக்கை இருக்கும்! வியாபாரம் இருக்கும்!


Sunday, November 23, 2014

அரசர்கள் பேரம் பேசுவதில்லை!

சென்னையில் ஒரு பெரிய வணிக வளாகத்திலுள்ள ஒரு கடையில் எழுதப்பட்ட ஒரு வாசகம்: 'kings don't bargain' (அரசர்கள் பேரம் பேசுவதில்லை). 'விலையில் பேரம் பேசக்கூடாது' என்ற வியாபார நோக்கம் இருந்தால்கூட இந்த வாசகம் இயேசுவை அரசராகப் பார்ப்பதில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றது.

பேரம் பேசுவது என்பது நம் விருப்பத்திற்கு ஏதுவாக மாற்றிக் கொள்வது, உதாரத்திற்கு ஒரு பொருளின் விலையை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றித்தர வற்புறுத்துவது. இது வியாபாரத்தில், கொடுக்கல்-வாங்கலில் தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் உறவுகளிலும், உணர்வுகளிலும், ஏன் நம் அறநெறியிலும்கூட நுழைந்து விடுகிறது. உதாரணத்திற்கு, இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பில், ஒரு நண்பன் தவறு செய்யும்போது, அதைச் சுட்டிக்காட்டினால் நட்பு முறிந்துவிடுமோ என்ற கவலையில், அந்த நண்பனின் செயலோடு பேரம் பேசுகிறோம். மனைவியை கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் அவசரமாக வந்த ஒரு பணியை மறுநாள் செய்வதாக பேரம் பேசுகிறோம். அலுவலகம், வேலை, பணம் தான் முக்கியம் என்று குடும்ப மகிழ்வை பேரம் பேசுகிறோம். 'இந்த ஒருமுறை மட்டும், இனிமேல் செய்ய மாட்டேன்' என்று தவறுகின்ற ஒவ்வொரு நேரமும் நம் மனச்சான்றோடு பேரம் பேசுகிறோம்.

இயேசு தன் வாழ்வில் எந்த நிலையிலும் தன் மதிப்பீடுகளோடும், மற்ற மனிதர்களோடும் பேரம் பேசவில்லை. தன்மேல் பொறாமைப்பட்ட தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்களோடு அவர் பேரம் பேசியிருந்தால் அவர் ஒரு பெரிய இரபியாக இன்றும் மதிக்கப்பட்டிருக்கலாம். தன்னை அரசராக்கப் விரும்பிய மக்களோடு போயிருந்தால் 'இஸ்ராயேல் மக்களுக்கு உணவு கொடுத்த அரசரே' என்று ப்ளக்ஸ் போர்ட் வைத்திருப்பார்கள். 'நீ பாவங்களை மன்னிக்கிறாய்? பேய்களை விரட்டுகிறார்? ஓய்வுநாளை மீறுகிறாய்? பாவிகளோடு உண்கிறாய்? இலாசரை உயிர்ப்பிக்கிறாய்? விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இரக்கம் காட்டுகிறாய்?' என்று குற்றம் சாட்டப்பட்டபோது, 'ஐயயோ, தெரியாம செஞ்சுட்டேன், இனிமே செய்யமாட்டேன். நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே இருக்கிறேன்' என்று தன் இறையரசுப்பணியை பேரம் பேசவில்லை. 'என் விருப்பம் அன்று, உம் விருப்பப்படியே ஆகட்டும்' என்று தன் தந்தையிடம் சரணடைகிறார். பேரம் பேசவில்லை.

ஏனென்றால், அவருக்குத் தெரியும் - 'அரசர்கள் பேரம் பேசுவதில்லை'. உண்மையை நேருக்கு நேராகத் தழுவுகின்றார். பொய்மையை, போலித்தனத்தை, முகமூடிகளைச் சாடுகின்றார்.

திருமுழுக்கில் நம் தலையில் பூசப்படும் 'கிறிஸ்மா' தைலத்தின் வழியாக நாமும் இயேசுவின் அரசுரிமையில் பங்கேற்கின்றோம். ஆனால், நாம் பேரம் பேசுவதில்லையா? நம் மதிப்பீடுகளில், உண்மைக்குச் சான்று பகர்வதில், உறவுகளில்?

இன்று நாம் காணும் ஊழல், வன்முறை, குற்றம், போர், இயற்கைச் சீர்கேடு, சுகாதாரமின்மை – அனைத்தும் உருவானது 'யாரோ ஒருவர் பேரம் பேசத் தொடங்கியபோதுதான்.' நாம் அரசர்கள். அரசர்கள் பேரம் பேசுவதில்லை!


Saturday, November 22, 2014

பண்ணையாரும் பத்மினியும்!

நேற்று இரவு 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற திரைப்படம் பார்த்தேன். எஸ்.யு. அருண்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் ஜெயப்பிரகாஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம். படம் முழுக்க கேமரா ஒரு பண்ணையாரையும், பிரிமியர் பத்மினி காரையும் சுற்றி வருகின்றது.

நாம் சின்ன வயதில் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்று கடைசி வரை கிடைக்காமல் போனால் வலி எப்படி இருக்கும் என்பதே திரைப்படத்தின் தொடக்கம் மற்றும் இறுதி காட்சிகளாக இருக்கின்றது. கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் காமெடி என படம் விறுவிறுப்பாக இருந்தது.

தனக்குள்ளதெல்லாம் தன் ஊருக்கு என்று பரந்த மனம் காட்டும் பண்ணையார், ஒரு பொருளாக இருந்தாலும் அதைத் தன் காதலி போல பார்த்துக்கொள்ளும் ஓட்டுநர், தனக்கு வலி வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என நினைக்கின்ற பண்ணையாரின் மனைவி என்று நிறைய கேரக்டர்கள் நிறைய மதிப்பீடுகளைக் குறித்துக் காட்டுகின்றனர்.

சிறுவர்கள் காருக்குப் பின்னால் ஓடும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நான் சின்ன வயதில் காருக்குப் பின்னாலேயே ஓடிப்போய் கீழே விழுந்த சில்லு மூக்கு உடைத்துக் கொண்டு வந்ததுதான் நினைவிற்கு வந்தது.

ஒரு கிராமத்தை செல்லுலாய்டடில் செதுக்கிய அழகிய திரைப்படம்.

ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் மையம்.

நாம் எல்லாரும் ஒரு கதையை வாழ்கிறோம். சில நேரங்களில் 'ஐயோ! அப்படி அந்தக் கதையை வாழாமல் போய்விட்டோமே!' என்று தவறிய வாய்ப்புகளைப் பற்றியும் வருந்துகிறோம். ஆலங்குளத்தில் பிறந்து விட்டு அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியவில்லையே என கவலைப்படுகிறோம்.

'நீங்க நடிக்க வரலைன்னா என்ன வேலைக்குப் போயிருப்பீங்க?' என்ற கேள்விக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதாநாயகி அழகாகச் சொல்வார்: 'ஒரு நல்ல ஆபிஸ் உத்தியோகத்துக்குப் போயிருக்கலாம். அப்படிப் போய் அங்கயும் ஏதாச்சும் ஒரு பிரச்சினையை இழுத்து வைத்துக் கொண்டு பேசாம நடிக்கப் போயிருக்கலாமோன்னு அழுதுகிட்டு இருந்துருப்பேன்'.

நாம் வாழ்க்கையில் ஒன்றைத் தேர்வு செய்யும் மற்றொன்றை கட்டாயம் இழக்க வேண்டிய ஒரு நிலை வந்துவிடுகிறது. அந்த இழப்பின் வடுக்கள் நம் சிறுவயது முதல் நம்மைத் துரத்திக் கொண்டே வருகின்றன.

ஒவ்வொருத்தருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.

இலங்கைச் சிறையிலிருந்து தூக்குத்தண்டனை ரத்தாகி வெளிவந்த ஐந்து பேர் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று திரும்பியுள்ளனர். அதில் இருவரின் குழந்தைகள் தங்களின் தந்தையின் முகத்தை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கின்றனர். என்ன ஒரு நெருடலான நேரம்? இந்தத் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கதை சொல்வார்கள்? எந்த இழப்பைச் சொல்லி அழுவார்கள்? இந்தக் குழந்தைகள் வளர்ந்தபிறகு தங்களின் குழந்தைகளுக்கும் தங்கள் தந்தையர் தப்பி வந்த கதையைச் சொல்வார்களா?

இன்று டுவிட்டர் தளத்தில் மேய்ந்த ஒரு பெண்ணின் இழப்பின் வரிகள் இவை:

'கணவனிடம் ஊடல் கொண்டாடி
தரையில் படுக்கும்போதெல்லாம்,
பாதி ராத்திரியில்
தரையில் இருந்து உருண்டு
கட்டிலில் விழுந்து விடுகிறேன்!'

நல்லாயிருக்குல? ரணகளத்திலயும் ஒரு கிலுகிலுப்பு!


Thursday, November 20, 2014

நாய் வளர்க்கலயோ நாய்?

இன்று மதியம் கல்லூரியிலிருந்து மெட்ரோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மொபைலில் ஆனந்த விகடன் படிப்பதில் மும்முரமாயிருந்தேன். நான் ஏறிய நிறுத்தத்திற்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பெண்மணி பெரிய நாயோடு ஏறினார். இத்தாலியில் நாய் ஒவ்வொன்றும் கன்னுக்குட்டி அளவிற்கு இருக்கும். நாயைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. வேகமாக எழுந்து வேறு இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டேன். அங்கிருந்து இந்த நாயைக் கவனித்தேன். நாயைப் பிடித்துக் கொண்டு வந்த பெண்மணி இப்போது நான் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். தன் கையில் பிடித்திருந்த நீண்ட குச்சியை வேகமாக மடித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் புரிந்தது அவர் பார்வையில்லாதவர் என்று. பார்வையில்லாதவர்களுக்கு வழிகாட்டும் நாய்கள் இருப்பதாக என்றோ வாசித்தது இன்று நினைவிற்கு வந்தது.

'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படத்தில் கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் குரோட்டன்ஸ் செடி வளர்ப்பதில் கருத்து வேறுபாடு உண்டாகும். அப்போது கதாநாயகன் கேட்பார்: 'பணக்காரர்கள் குரோட்டன்ஸ் செடி வளர்ப்பது என்பது பூனையும், நாயும் வளர்ப்பதுபோல. குரோட்டன்ஸ் செடிகளை ஆடு, மாடுகள் கூட மேய்வதில்லை. பூனையும், நாயும் அப்படித்தான். அவைகளுக்கு உணவளிப்பதிற்குப் பதில் தேவையில் இருக்கும் நான்கு குழந்தைகளுக்கு உணவளிக்கலாம்!' இதற்கு கதாநாயகி, 'எல்லாருமே கத்தரிக்காய், புடலங்காய் என சாப்பாட்டுக் காய்கறிகளே உருவாக்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி இருக்கும். இந்த குரோட்டன்ஸ் செடியால எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள்? இதை வளர்க்கும் நர்சரி உரிமையாளர். இதற்கு தொட்டி செய்பவர். தொட்டியை இடமாற்றுபவர். இதற்கு உரம் தயாரிப்பவர். ஆக, எல்லாவற்றிலும் ஒரு பயன்பாடு இருக்கவே செய்கின்றது!'

எனக்குத் தெரிஞ்சு நான் பிறந்தது முதல் எங்கள் வீட்டில் பூனைக்குட்டி இருந்திருக்கிறது. ஒன்று காணாமற்போக மற்றொன்று கொண்டுவரப்படும். அந்தப் பூனையோடு தான் உண்பது, உறங்குவது என சின்ன வயது கழிந்தது. மதுரை குருமாணவ பயிற்சிக்குச் சென்ற பின்பும் வீட்டிற்குக் கடிதம் எழுதும் போது அதில் 'பூனைக்குட்டி நலமா?' என்று நான் எழுதுவேன் என்று என் குருமட அதிபர் அண்மையில் சுட்டிக்காட்டினார்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்து உண்டு. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் திருமணமான முதல் நாள் அன்று 'குழந்தை பெற்றுக்கொள்வதா' அல்லது 'நாய்க்குட்டி வளர்ப்பதா' என்று கணவனும் மனைவியும் அமர்ந்து முடிவெடுத்துக் கொள்வார்களாம். இந்த மனநிலை கொஞ்சம் ஓவர்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

நான் கேள்விப்பட்ட வரையில் ஒரு பெண்மணி தன் பூனைக்குட்டியை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கொண்டு போக முயலும் போது, அந்த பூனைக்குட்டி தப்பியோட அதை அடையாளம் கண்டுபிடிக்க லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அதைக் கண்டும் பிடித்து விட்டாராம்.
'பாசம்கிறது ஒரு வகையான கிறுக்குதான!' என்ற நீர்ப்பறவைகள் டயலாக் தான் நினைவிற்கு வருகிறது.

பொம்மைகள், விளையாட்டுச் சாமான்களை விட செல்லப் பிராணிகள் கொஞ்சம் உயர்ந்தவை தாம். நம் உணர்வுகளை அவைகள் புரிந்து கொள்ளவில்லையென்றாலும் அவைகளிடம் நாம் வெளிப்படுத்தலாம். அவைகள் நம்மை எதிர்த்துப் பேசுவதில்லை. சண்டை போடுவதில்லை.

ஒவ்வொரு செல்லப் பிராணியும் தனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்கின்றது. எங்கு சென்றாலும் திரும்பி தன் இடத்திற்கே வந்துவிடுகிறது. இது மனித இனம் செய்த ஒரு சாதனைதான்.

மற்றொரு பக்கம் பிராணிகளின் மேல் வன்முறை.

ஆனா ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நம்மைவிட வலுக்குறைந்தவர்களிடமே நம் வன்முறையைக் காட்டுகிறோம். சிங்கத்தை அடிங்களேன் பார்க்கலாம்! புலியை வாலைப் பிடித்துத் திருகுங்களேன்!

என்னதான் சங்கிலி, பெல்ட் போட்டு நாயை இத்தாலியில் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனாலும், எந்தப் பிடியும் இல்லாமல் நம்ம ஊர் யானைப் பாகன்கள் அவ்வளவு பெரிய யானையை வாக்கிங் கூட்டிட்டுப் போவதைப் பார்க்கும் போது, 'தம்பி! நீ இன்னும் வளரனும்!' என்று தான் இத்தாலியைப் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

சரி! இந்த பதிவினால் என்ன பயன்?

நாய், பூனையை மாதிரி இதுவும் சும்மா இருக்கட்டுமே! எப்பவுமே பயன்பாட்டை மட்டுமே பார்க்க வேண்டுமா?


கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்!

என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
(சிலப்பதிகாரத்தில் மாதவி)

பிரபஞ்சன் அவர்கள் ஜூவியில் எழுதிய இந்த வாரத் தொடரின் முதல் வரிகள் இவை.  இந்த வார அவரது கட்டுரையின் தலைப்பு 'இரண்டாவது மனைவிமார்கள்'. என் இரண்டவாது மனைவிமார்கள் என இன்றைய நம் பதிவிற்கு தலைப்பிட்டால், வடிவேலு அவர்களின் காமெடி தான் நினைவிற்கு வருகிறது: 'இங்க கட்டிக்கவே வழியில்லையாம்! இதுல வச்சுக்குறாராம்!'

பிரபஞ்சனின் வரிகளில் தொடங்கி நம் பாதையை மாற்றிக் கொள்வோம்.

மாதவி சொல்லும் வார்த்தைகளின் பொருள் என்ன?

தன் மனைவி கண்ணகியை விட்டுவிட்டு நடன நங்கை மாதவியின் மேல் பற்றுக் கொண்டு அவளிடம் வரும் கோவலன் சில மாதங்களுக்குப் பின் மாதவியை விட்டுப் பிரிந்து விடுகிறான். இந்தப் பிரிவை அறிந்த மாதவி அளவில்லா துன்பத்தோடு எழுதும் வார்த்தைகளே இவை.

'அடிகளே, நான் எழுதுபவை தெளிவற்ற சொற்கள் என்றாலும் தங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாய் தந்தையரையும் விடுத்து, உயர் குலத்தில் பிறந்த உங்கள் மனைவியோடு நள்ளிரவில் வெளியேறினீர்கள்! (என்னிடமும் சொல்லிக் கொள்ளாமல்!) நான் செய்த பிழை என்ன? என் துன்பத்தைப் போக்குவீர்களாக. பொய்யைத் தவிர்த்து உண்மையையே காணும் பெரியவர்கள் நீங்கள்...' எனத் தொடர்கிறது.

'நான் என்ன குற்றம் செய்தேன்?' என்ற கேள்விக்கு கோவலன் மட்டுமல்ல, கோவலனைப் போல இருக்கும் யாரும் பதில் சொல்லிவிட முடியாது. கோவலனே மாதவியின் வீடு தேடி வந்தான். உண்டு உறங்கினான். திடீரென்று ஒருநாள், 'மாயப்பொய்க்காரி, சாகசக்காரி, நடிகை' என்று அவதூறுகளை வாரித்தூற்றிவிட்டு திருடன் போல இருட்டில் வெளியேறுகிறான். இந்த நேரத்தில் தான் மாதவி இந்தக் கேள்வியைக் கேட்கிறாள். கோவலனைவிட மாதவி புத்திசாலி.

மனைவிக்குப் பின் வந்தவளை 'மாற்றாள்' என்கிறது நம் இலக்கியம்.

பிரபஞ்சனின் கட்டுரையின் கருத்துக்கள் இவை. இப்போது இதிலிருந்து நாம் தொடங்குவோம்.

இதை வாசிக்கும் அனைவருக்கும் - ஆண் என்றால் இரண்டு மனைவியர், பெண் என்றால் இரண்டு கணவர்கள் - மாற்றாள்கள் அல்லது மாற்றான்கள் இருக்க வேண்டும் அல்லது இருப்பார்கள் என்பது பற்றி அல்ல நம் பதிவு.

நாம் வாழும் வாழ்க்கையை மனைவி என உருவகப்படுத்திக் கொள்வோம். ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார்கள் உளவியில் ஆய்வாளர்கள். ஒரு வாழ்க்கை நாம் வெளியில் வாழ்வது. மற்றொரு வாழ்க்கை நாம் இருக்கும் அறையில் வாழ்வது.

இல்லையில்லை! நானெல்லாம் ஒரு வாழ்க்கை தான் வாழ்கிறேன் என வரிந்து கட்டிக்கொள்ள வேண்டும். கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.

இரண்டு வாழ்க்கை இருப்பது தவறொன்றுமில்லை!

நாம் இருக்கும் அறையில் நாம் இருப்பதற்கும், நம் அறைக்கு வெளியே - ரோட்டில், கோவிலில், பள்ளியில், கல்லூரியில் - இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் உடுத்தும் உடை, சிந்திக்கும் சிந்தனை, பேசும் வார்த்தை, நடக்கும் நடை என எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கிறது. வெளியில் வாழும் வாழ்க்கை தான் நாம் ஊரறிய இருக்கும் நம் மனைவி. அவரைத் தான் எல்லாருக்கும் தெரியும். அவர் தான் 'லீகல்'. ஆனால் நம் அறைக்குள் வாழும் வாழ்க்கைதான் நம் மாற்றாள். அவளை நமக்கு மட்டும்தான் தெரியும். அவள் மற்றவர்களைப் பொறுத்தவரையில் 'இல்லீகல்'. இந்த இரண்டு பேரில் நமக்கு யாரை அதிகம் பிடிக்கும் என்றால் பல நேரங்களில் 'மாற்றாளைத்' தான். அட்லீஸ்ட் எனக்கு என் மாற்றாளைத் தான் பிடிக்கும்.

நம் உள்ளத்தில் நாம் வைத்திருக்கும் கொள்கை, நம்பிக்கை, நமக்குப் பிடித்தவை, நாம் அதிகம் இரசிப்பவை என பலவற்றை மற்றவர்களுக்குப் பயந்து அல்லது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தயங்கி நாம் நம் அறைக்குள் வைத்துவிடுகிறோம். நம் அறைக்குள் இருக்கும் போது இந்த உலகமே நமக்கு அடிமை போல தோன்றுகிறது. நம் அறைக்குள் அமர்ந்து கொண்டு நாம் யாரையும் நம்மோடு ஒப்பிடுவதில்லை. யார் என்ன டிரஸ் போடுகிறார்கள் என்று கவலைப்படுவதில்லை. இந்த உலகில் நாம் தான் என நமக்கு அடையாளம் காட்டுவது இந்த 'மாற்றாள்' என்னும் அறை வாழ்க்கை தான்.

சரி! இப்படியே இரண்டு பேரோடு தான் வாழனுமா? வேறு வழியே இல்லையா?

இருக்கிறது! நம் வாழ்க்கையின் இலக்கே இந்த இருமையை ஒழித்து ஒருமைக்குக் கடந்து செல்வது. இயேசுநாதர், மகாத்மா, நபி, புத்தர், மகாவீரர் - இவர்களைப் பார்த்தால் நமக்கு உண்மை தெரியும். 'மனைவி' என்ற புறவாழ்வையும், 'மாற்றாள்' என்ற அகவாழ்வையும் ஒருங்கிணைக்க வேண்டும். அகத்திலிருந்து தாமரை மலர்வது போலத் தான் இந்த செய்முறை அமைய வேண்டும்.

திடீரென்று உதறித் தள்ளிவிட்டு ஒரே நாளில் யோக்கியனாகும் கோவலனின் அணுகுமுறை தவறானது.

மேலும் நாம் பழகிய நண்பர்கள், பூர்வ ஜென்ம உறவுகள் என்று நாம் 'சரி' சொல்லி புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை உறவுகளில், திடீரென்று, 'நீ எனக்கு வேண்டாம்! நான் இன்றிலிருந்து யோக்கியனாக இருக்கப் போகிறேன்!' என்று சொல்லி அவர்களை வருத்தப்படுத்திய நேரங்களுக்காக இன்று நான் வருந்துகிறேன். இந்த நேரங்களில் நானும் கோவலனைப் போலத்தான் இருந்திருக்கின்றேன். 'ஏன் நான் வேண்டாம்னு சொல்லு!' என மாதவியைப் போல அவர்களும் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை ஏற்றுக்கொண்ட உறவுகளை உள்ளன்போடு அகவாழ்விலும், புறவாழ்விலும் சுமந்து கொண்டு பயணிக்கும் உறுதியான உள்ளம் வேண்டுகிறேன் இன்று!


Tuesday, November 18, 2014

எஃப் டிவியும், இலையுதிர்காலமும்!

சின்ன வயசுலயும், செமினரியில் இருக்கும் போதும் வீட்டுல எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமும் அல்லது எல்லா புரோகிராமும் கடுப்படிக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ற சேனலாகவும் இருந்தது எஃப் டிவி (ஃபேஷன் டிவி). ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி கேட்வாக் நடக்கும். பசங்க நடந்து வர்ற அன்னைக்கு மட்டும் வேகமா டிவியை ஆஃப் பண்ணிடுவது உண்டு. பசங்க நடந்து வர்றதைப் பார்த்தா நமக்குள்ளே அது என்னமோ ஒரு காம்ப்ளக்ஸ் வந்து விடுகிறது. எஃப் டிவியின் ஒவ்வொரு ஷோவுக்கு முன்னும் 'ஃபால் - விண்ட்டர்' (Fall-Winter), 'ஆட்டம்' (Autumn) என்றெல்லாம் போடுவார்கள். அப்போதெல்லாம் தெரியாத அர்த்தம் இத்தாலியின் முதல் ஆண்டுப் படிப்பின் போதுதான் தெரிந்தது. இலையுதிர்கால நாகரீக உடை, வசந்தகால நாகரீக உடை என்பதைத் தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் என கோடைகாலத்தில் ஆடைகளைக் குறைத்துக் கொண்டே வந்த மக்கள், அக்டோபர்-நவம்பர்-டிசம்பரில் ஆடையைக் கூட்டிக் கொண்டே வருவார்கள். இந்த நேரத்தில் மரங்களின் உலகில் ஒரு ஆச்சர்யம் நடக்கும். மனிதர்கள் உடைகளைக் கூட்டக் கூட்ட, மரங்கள் தங்கள் இலைகளைக் குறைத்துக் கொண்டே வரும். டிசம்பர் மாதத்தில் முழுமையாக ஆடை அணிந்து குளிரை எதிர்கொள்ள மனித இனம் தயாராகும்போது, முழுமையாக நிர்வாணமாகி குளிரை வரவேற்கின்றன மரங்கள்.

நம்ம நாட்டுல ஒரு சில ஊர்களைத் தவிர மற்ற ஊர்களில் ஆண்டு முழுவதும் மேல் சட்டை இல்லாமல் இருந்து விடலாம். வீட்டிற்கு வெளியிலோ, அல்லது மொட்டை மாடியிலோ ஒரு கட்டிலையோ, பாயையோ விரித்துத் தூங்கிவிடலாம். ஆனால் இங்கு அப்படிச் செய்ய முடிவதில்லை. இத்தாலிக் குளிரையே தாங்க முடியாமல் இருக்கும் போது என் வகுப்புத் தோழன் ஒருவன் சொன்னான். அவங்க ஊரில் மைனஸ் முப்பத்து மூன்று டிகிரி குளிர் இருக்குமாம். 'தம்பி! நீ கொஞ்சம் தள்ளியே உக்காரு!' என்று சொன்னேன்.

புவி வெப்பமயமாதலில் இந்த ஆண்டு ஐரோப்பாவின் காலநிலையும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. வசந்த காலம் குறுகி கோடை நீண்டது போல, இலையுதிர் காலம் குறுகி குளிர்காலம் நீளும் என்பதும் பலரின் கணிப்பு.

குளிர் - இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் குளிரின் இதத்தை உணர்ந்து கொண்டே இருக்கலாம். குளிர்கிறது என்று ஸ்வட்டர் போட்டால் உடலின் வெப்பம் அதிகமாகி வாய்ப்புண் வந்துவிடும். வாய்ப்புண் வந்து விட்டது என்று ஸ்வட்டரைக் கழற்றினால் குளிர் வாட்டிவிடுகிறது. தீக்காயம், உடல்காயம் என கஷ்டப்படுவோருக்கு இது போதாத காலம். மூடவும் முடியாது! மூடாமல் விடவும் முடியாது!

கடந்த ஆண்டு குளிரினால் கடலும் இறுகி சில கப்பல்களும் நடுக்கடலில் மாட்டிக் கொண்டன. மீன் பிடிப்பும் இந்த நாட்களில் கிடையாது. சமுத்திரக்கனி 'நீர்ப்பறவைகள்' திரைப்படத்தில் சொல்வது போல 'ஆண்டு முழுவதும் மீன்வளம் இருக்கின்ற ஒரே கடல் நம்ம ஊர்க்கடல்தான்'.

இந்த தட்பவெப்ப சூழலில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது பசி - இந்தக் காலத்தில் அதிகமாகப் பசி எடுக்கும். இந்தக் காலத்தில் தான் அதிக உணவுப் பொருள் திருடுபோவதாகவும் இவர்களின் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடக்கத்திலிருந்து நம்மைத் துரத்தும் ஒரு பகைவன் தான் பசி. இந்தப் பசியினால் தான் ஒரு நாடு மற்றொரு நாட்டின் முன், ஒரு இனம் மற்றொரு இனத்தின் முன்னும் அடிபணிகிறது. இந்தப் பசி தான் ஆண்டான்-அடிமை பேதத்தை உருவாக்குகிறது.

'ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது' (நல்வழி 20) என பசியின் கோரத்தைப் பாடி முடிக்கிறார் ஒளவையார்.

தோலைத் தாக்கும் குளிர், வயிற்றைத் தாக்கும் பசி என வளர்ந்து மனதைத் தாக்கும் வெறுமையும் ஒட்டிக் கொள்கிறது. மரங்கள் தன் இலைகளை உதிர்த்து வெறுமனே நிற்பது போல மனமும் அடிக்கடி வெறுமையை உடுத்திக் கொள்கிறது.

மனித இனம் உச்சகட்ட துன்பத்தை அடையும் இந்தக் காலத்தில் தான் இயேசுவின் பிறப்பையும் கொண்டாடுகிறோம். மனுக்குலத்தின் குளிர், பசி மற்றும் வெறுமை என அவர் அனைத்திலும் பங்கேற்றார் என்பதைக் காட்டத்தான் இந்த மாதத்தைக் கொண்டாட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தார்களோ?

இப்போதே தெருக்களில் மின்-நட்சத்திரங்கள் கட்டப்பட்டுவிட்டன. கடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து விட்டார்.

மற்றொரு பக்கம் தெருக்களில் நடுங்கும் மனிதர்கள், பசிக்குக் கையேந்தும் இளைஞர்கள், மனதில் வெறுமையை மட்டும் சுமந்து கொண்டு விடியலுக்காய் காத்திருக்கும் கண்கள் என மக்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

காலச்சக்கரம் கடந்து கொண்டே இருக்கிறது.

'இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் கேர்ள் ஃப்ரண்டோட தான் வரணும்!' என்று கொடைக்கானல் டூர் போன போது சொன்னான் என் நண்பன்.

இன்று என்னமோ அவன் சொன்னதுதான் அடிக்கடி நினைவிற்கு வருகிறது!



நல்லா மழை பெய்யுது!

நல்லா மழை பெய்யுது!

நான்கு நாட்களாக உரோமை நகரில் தொடர் மழை. இங்கு மட்டும் இல்லாமல் வடக்கு இத்தாலியிலும் வாங்கு வாங்கு என வாங்குகிறது.

'உங்க ஊரு மான்சூன் (பருவக்காற்று மழை) போல இருக்கிறது என்று கமெண்ட் அடித்தார் நம்ம ஊர் தெரிந்த ஒரு மேதாவி!'

மழை பெய்தால் நம்ம ஊருல சமாளிக்க முடியாம திணறும் நம்ம ஊர் நிர்வாகம் போல இந்த ஊர் நிர்வாகமும் திணறவே செய்கின்றது.

தொடர்ந்து மழை பெய்யறதல என்ன ஒரு நன்மைன்னா குளிர் ரொம்ப குறைஞ்சிடுச்சு.

இங்க இந்த மழை பெஞ்சுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல நம்ம ஊர்ல 'கிஸ் ஆஃப் லவ்' (அன்பு முத்தம்) போராட்டம் என உதடுகளை நனைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம் இளவல்கள். ஒரு பக்கம் ஆதரவு. மற்றொரு பக்கம் எதிர்ப்பு.

'எங்க தனிப்பட்ட வாழ்க்கையில யாரும் தலையிட உரிமையில்லை' என்று அவர்கள் வக்காலத்து வாங்குவதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கவே செய்கிறது.

இந்த நேரத்தில் நம்ம ஊருல நாம இல்லையே என்ற ஆதங்கமும் ஒரு பக்கம் இருக்கிறது.

பப்ளிக்கா முத்தம் கொடுக்கலாமா? வேண்டாமா?
எங்க அப்பா, அம்மா முத்தம் கொடுத்து நான் பார்த்ததேயில்லை. ஏன்! செல்லப் பெயர் சொல்லிக் கூடக் கேட்டதில்லை. விடுமுறையில் நான் என் நண்பனின் வீட்டிற்குச் சென்றபோது 'ஹாய் பேப்ஸ்!' என்று செல்லமாக தன் மகன் முன்னும், என் முன்னும் கூப்பிட்டான். போன தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் உள்ள வளர்ச்சி இதுதான். இந்த வளர்ச்சியை ஒரே நாளில் கடக்க நினைப்பது விபரீதம் தான் உருவாக்கும்.

மேற்கத்திய நாகரீகம் நமக்கு வேண்டும் என நாம் ஏன் அதையும் கடன் வாங்க நினைக்கின்றோம் என்பதுதான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. என்னதான் வெளிநாட்டு ஓட்ஸ், பர்கர், பீட்சா சாப்பிட்டாலும், கோக் குடித்தாலும் இன்னும் 16 வயது வந்த பையனை தனி வீடு பார்த்து நாம் குடிஅமர்த்துவதில்லை. 14 வயது நம் மகள் சொல்லும் காதல் கதையைக் கேட்கவும் நாம் தயாராக இல்லை. அப்படியிருக்க இந்த முத்தப் போரட்டம் நியாயமா?

'முத்தமிட்டால் மூக்கும் மூக்கும் உரசுமா' என்று சினிமா வேறு நம்மை உசுப்பேத்திவிடுகிறது.

'இதுதான் சமயம்!' என்று நினைத்து சில கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்தப் பார்க்கின்றன.

ஆனால், முத்தமிட்டுப் பசியாற முடியாது என்பதை இந்த இளவல்கள் நினைவில் கொள்ள வேண்டும்.



Monday, November 17, 2014

பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்!

அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.
அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்.
ஒரு நாளும் தீங்கு நினையாள்.
...
...
எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள்.
வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
எழில் ஏமாற்றும்.
அழகு அற்றுப்போகும்.
(காண்க. நீதிமொழிகள் 31:10-31)

இன்று திருப்பலி நேரத்தில் இந்த முதல் வாசகத்தைக் கேட்டபோது எனக்குள் ஒரு சந்தேகம். என்ன சந்தேகம்?

நாம் ஞாயிறு திருப்பலியில் மூன்று வாசகங்கள் வாசிக்கின்றோம். இந்த மூன்று வாசகங்களில் முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் ஒரே மையக்கருத்தைக் கொண்டிருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து உவமையை வாசித்தோம். ஆனால் முதல் வாசகத்தின் மையக்கருத்து 'நல்ல மனையாள்'. 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். ஒருவனுக்கு அமையும் நல்ல மனையாளே அவன் தன் வாழ்வில் பெறும் தாலந்து என எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி எடுத்தால் அங்கே ஒரு சிக்கல். ஒரு மனைவி பெற்றவன் முதல் மற்றும் இரண்டாம் பணியாளரைப் போல மேலும் ஒரு மனைவி சம்பாதிக்க வேண்டுமா என்று கேட்கும் படி ஆகிவிடு;ம்.
'எழில் ஏமாற்றும். அழகு அற்றுப்போகும்!'

வெளிப்புற அழகை விட உள்ப்புற உழைப்பை அழகு என முன்வைக்கிறது முதல் வாசகம். பல கலாச்சாரங்களில் பெண்கள் உழைப்பது அல்லது வேலைக்குச் செல்வது இன்றும் தடைசெய்யப்பட்டதாக இருக்கின்றது. ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எபிரேய சமுதாயத்தில் பெண்களுக்கும் சரியான பங்கு இருந்தது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

அற்றுப்போகும் அழகை விடுத்து உழைப்பைப் பற்றிக் கொள்ள அழைக்கிறது இன்றைய நாள்.



Sunday, November 16, 2014

ஐந்தைவிட ஒன்று பெரிது இல்லையா?

நாளைய நற்செய்திப் பகுதியில் தாலந்து உவமையை நாம் வாசிக்கின்றோம்.

ஐந்து பெற்றவன் ஐந்து சம்பாதிக்கிறான்.

மூன்று பெற்றவன் மூன்று சம்பாதிக்கிறான்.

ஆனால் ஒன்று பெற்றவன் மேலும் ஒன்றைச் சம்பாதிக்காமல் அதைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறான்.

முதல் இரண்டு பேரைப் பாராட்டி, மூன்றாமவனை வெளியில் தள்ளும் தலைவன் ஒரு முதலாலித்துவ, ஏகாதிபத்திய சிந்தனையாளனாகவே எனக்குத் தோன்றுகிறான்.

ஏன்?

மூன்றாமவன் சம்பாதிக்கவில்லையென்றால் தான் என்ன?

ஐந்து பெற்றவன் தன்னிடம் உள்ளதைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கலாமே?

ஏன் எல்லாருமே சம்பாதிக்க வேண்டுமா?

சம்பாத்தியம் அல்லது பணம் ஒன்றுதான் நாம் வாழணுமா, வேண்டாமா என்பதன் அளவுகோலாக இருக்க வேண்டுமா?

தனக்கு பணம் வேண்டாம் என்பதால் அவன் மண்ணில் புதைத்திருக்கலாமே. பணத்திற்குச் செலவிடுவதற்குப் பதில் தன் நேரத்தை தன் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும், தன் சமுதாயத்திற்கும் அவன் செலவழித்திருந்தால் அது குற்றமா?

இன்றைக்கு நாம் எண்களை வைத்தேப் பார்த்துப் பழகிவிட்டோம்.

வங்கியின் இருப்பில் தெரியும் எண்.

மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் எண்.

என நம் தரத்தையும், மதிப்பையும் வெறும் எண்களை வைத்தே நிர்ணயிக்கப் பழகிவிட்டோம்.

ஐந்தைவிட ஒன்று பெரிது இல்லையா?

ஏன் எப்போதும் ஐந்து மட்டுமே பெரிதாக இருக்க வேண்டும்?

Saturday, November 15, 2014

நீ எனக்கு ட்ரபுள் கொடுக்கிற!

பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை. மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். (காண். லூக்கா 18:1-8).

மனந்தளராமல் செபம் செய்வதற்கு இயேசு தரும் எடுத்துக்காட்டாக லூக்கா நற்செய்தியாளர் எழுதும் பகுதியே இது.

நீதியற்ற நடுவரின் மனக்குமுறலை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம்.

அவரின் இரண்டு குணநலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

அ. அவர் கடவுளுக்கு அஞ்சுவதில்லை.
ஆ. மக்களையும் மதிப்பதில்லை.

இவர் அந்தப் பெண்ணைப் பற்றிப் புலும்புவது இரண்டு:

அ. அவர் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஆ. அவர் உயிரை வாங்கிக்கொண்டே இருக்கிறார்.

ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர். ராதா, 'டிவன்ட்டி ஃபோர் அவர்ஸ் நீ எனக்கு ட்ரபுள் கொடுக்கிற!' என்று தன் அம்மாவைக் கடிந்து கொள்வார். 'ஆமா! இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கணும்! அதுக்காக நீ தினமும் வந்து எனக்குத் தொல்லை கொடுக்குற!' என்று தொடர்வார்.

நாம் போய்க்கின்ற ஒரு பயணத்தில் குறுக்கே எது வந்தாலும் அதை நம் மூளை தொந்தரவு எனக்கருதுகிறது. அது நிஜமாக நாம் செய்யும் பயணம் என்றாலும் சரி, நம் எண்ண ஓட்டம் செய்யும் பயணம் என்றாலும் சரி, நாம் செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு வேலை என்ற பயணம் என்றாலும் சரி.

யூடியுபில் நாம் ஒரு வீடியோவைத் தொடுக்கு செய்தால் வீடியோ வருவதற்குப் பதில் விளம்பரம் வந்தால் அது ஒரு தொல்லை. நாம் கூகுளில் ஒரு பக்கத்தைத் திறக்க, நாம் விரும்பும் பக்கம் திறக்காமல் வேறொரு தளத்திற்கு நாம் மாற்றப்பட்டால் அது ஒரு தொல்லை. அவசரமாக ஒரு மின்னஞ்சல்; அனுப்ப நாம் மெயில்பாக்ஸை திறக்க, 'நான் திறப்பேனா!' எனச் சுற்றிக் கொண்டிருக்கும் வட்டம் ஒரு தொல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது 'டிங்! டிங்!' என அடிக்கும் நாம் இராக்கோழி நண்பர்களின் வாட்ஸ் ஆப் அலர்ட், காலையில் அடிக்கும் அலார்ம் ஒரு தொல்லை. காலையில் ஒரு முக்கியமானவரோடு பேச வேண்டி அலைபேசியை எடுத்தால், நைட்டோடு நைட்டாக நம் காலர் டியூன் புதுப்பிக்கப்பட்டு நம் பேலன்ஸ் 0.10 எனக்காட்டினால் அது ஒரு தொல்லை. நாம் சாப்பிடும்போது தட்டப்படும் கதவு, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது வரும் 'கிரெடிட் கார்டு வேண்டுமா?' என்ற அழைப்பு. கதவைப் பூட்டிக் கொண்டிருக்கும் போது வரும் 'கேபிள் டிவி காரர்'. இப்படி நாம் சந்திக்கும் தொல்லைகள் ஏராளம்.

நாம் அன்றாடம் ரசித்து ஏங்கும் ஒன்றே சில நேரங்களில் தொல்லையாக மாறிவிடுவது உண்டு. 'இப்போது பேச மாட்டாளா! அப்போது பேச மாட்டாளா!' என ஏங்கும் காதலியின் குரல் திருமணத்திற்குப் பின், 'ஏன்டி! உன் எஃப்.எம்அ ஆஃப் பண்ணவே மாட்டியா?' என்று கேட்கும் அளவிற்கு மாறிவிட்டால், முதல் நாள் புதிய பங்குத் தளத்திற்குப் பக்கத்தில் கடந்து செல்லும் ஒருவரைக் கூட 'அண்ணே! வாங்க ஒரு கப் காஃபி சாப்பிட்டுப் போங்க!' என்ற அருட்பணியாளர், 'எப்பப் பார்த்தாலும் இவனுகளுக்கு வேற வேலையில்லை. தட்டிக்கிட்டே இருப்பானுக! என்று தலைதுவட்டிக் கொண்டே வந்து கதவு திறந்தால் அங்கே அடுத்தவர் தொல்லையாக மாறிவிட்டார் என்றே அர்த்தம்.

தொல்லை யாருக்கு வரும்?

மேலே காணும் நீதியற்ற நடுவர் போல இருப்பவருக்கு. அதாவது எனக்குக் கடவுளும் வேண்டாம், மனிதர்களும் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு எல்லாமே தொல்லையாக மாறிவிடும்.

தொல்லையாக ஒன்றை நாம் நினைக்காமல் இருக்க நமக்கு இருக்க வேண்டியது நிறைய பொறுமை. அப்புறம் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு. இந்த இரண்டும் தான் நான் எனக்கு அடிக்கடிக் கொடுத்துக் கொள்ளும் மருந்து.


Friday, November 14, 2014

அப்படியா?

நாளை நம் தாய்த்திருநாட்டில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

தன் பிறந்த நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார் 'சாச்சா நேரு' (நேரு மாமா). இது இன்று எத்தனை குழந்தைகளுக்குத் தெரியும் என்பதே தெரியவில்லை.

நேரு மாமா இதைப் பள்ளிக் குழந்தைகளின் தினமாக அறிவித்தாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஏன்னா இப்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் மட்டும் தான் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

என் பள்ளி வயது குழந்தைகள் தினத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ஆரம்பப் பள்ளி, மேனிலைப் பள்ளி. ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தினம் என்றால் ரோஜாப் பூவும், ஆரஞ்சு மிட்டாயும் கொடுப்பார்கள். மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் என்றால் அன்றுதான் நாங்கள் கலர் சட்டை அணிய முடியும்.

ஆனால் இன்று பள்ளிகளில் குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களும் மாறிவிட்டன. ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆசிரியர்களை என்டர்டயின் செய்கிறார்கள். குழந்தைகள் தினத்தன்று ஆசிரியர்கள் மாணவர்களை என்டர்டயின் செய்கிறார்கள். வெறும் நாடகம், நடனம் இருந்த ஆசிரியர்கள் இப்போது குழந்தைகள் தினத்தன்று ஃபேஷன் ஷோ, மானாட மயிலாட எனக் கிளம்பி விட்டார்கள். ஒவ்வொரு ஆசிரியருக்குள் இருக்கின்ற குழந்தை வெளிவரவாவது இந்தக் குழந்தைகள் தினம் காரணமாக இருக்கிறதே. இப்போதெல்லாம் குழந்தைகள் தினம் அன்று மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கிடையாது. மாணவர்கள் பாடப்புத்தகங்களைச் சுமக்கத் தேவையில்லை.

குழந்தைகள் தினம் மாறிவிட்டது என்றால் அதற்குக் காரணம் இன்று குழந்தைகளும் மாறிவிட்டார்கள்.

முன்னெல்லாம் பெரியவங்க தங்களுக்கு முன்னால வந்து நின்னா, குழந்தைங்க உடனடியா எழுந்து நிப்பாங்க. ஆனா இன்னைக்கு பெரியவங்களுக்கு மரியாதையா அவங்க தங்கள் காதில் மாட்டியிருக்கும் இயர் ஃபோனை மட்டும் கழற்றிக் கொள்கிறார்கள்.

முன்னெல்லாம் தம்பி உங்க பேரு என்ன? என்று கேட்டால், 'பாபு', 'கோபி' என பதில் வரும். ஆனால் இன்று 'ஏன் கேட்குறிங்க?' என்று எதிர்கேள்வி தான் வருகிறது.

ஆயா வடை சுட்ட கதை சொன்னா அந்தக் காலத்துக் குழந்தைங்க 'உம்' கொட்டி கேட்பாங்க. இப்ப அதே கதைய சொன்ன, 'போங்க அங்கிள்! யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க!' என்று தான் பதில் வருகிறது.

இன்று குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோமோ இல்லையோ, நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும்.

'தெ சைல்ட் இஸ் த ஃபாதர் ஆஃப் மேன்' என்பார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். குழந்தைப் பருவத்தில் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் வயது வந்தபின்னும் இருப்பார் என்பது இதன் அர்த்தம். ஒரு முழு மனிதரைப் பெற்றெடுப்பது ஒரு குழந்தை தான். ஆக குழந்தைப் பருவம் இனிய பருவமாக இருக்க வேண்டும்.

இன்றைய ஸ்மார்ட்ஃபோன்கள் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவைத்திருக்கின்றது. எப்படி தெரியுமா? தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கவனித்திருக்கிறீர்களா? கொஞ்ச நேரம் பார்த்துக்கிட்டே இருங்களேன். ஆச்சர்யமாக இருக்கும். திடீர்னு சிரிக்கும். நெற்றியைச் சுருக்கும். முகத்தைச் சிலிர்க்கும். கையில ஸ்மார்ட்ஃபோன் வச்சிருக்கிறவங்களையும் உத்துப் பாருங்களேன். திடீர்னு சிரிப்பாங்க. வெட்கப்படுவாங்க. நெற்றியைச் சுருக்குவாங்க. முகத்தைச் சிலிர்ப்பாங்க. பெருமூச்சு விடுவாங்க.

குழந்தைகளிடம் நான் அதிகம் ரசிக்கும் ஒரு குணம் 'ஆச்சர்யம்!'

எதையும் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்!

'அப்படியா?' என்று கேட்பார்கள்.

வாழ்வின் ஆச்சர்யங்கள் நம் அன்றாட அலுவல்களில் மறைந்து கொண்டே வருகின்றன.

இன்று நாமும் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுப் பழகலாமே!



Thursday, November 13, 2014

அவரோ ஒரு சமாரியர்!

அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, 'பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!' என்றார். (காண்க. லூக்கா 17:11-19)

இந்த நற்செய்திப் பகுதி லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. லூக்கா நற்செய்தி புறவினத்தாரின் நற்செய்தி, பெண்களின் நற்செய்தி என்று அழைக்கப்படக் காரணம் அவர் அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே.

இந்த நற்செய்திப்பகுதி பத்துத் தொழுநோயாளர்களை மையமாக வைத்துத் தொடங்கினாலும் கிளைமாக்ஸில் வருவது அல்லது முதன்மைப்படுத்தப்படுவது ஒரு சமாரியனே.

ஏன் அவர் மட்டும் திரும்பி வந்தார்? அல்லது வேறு வார்த்தையில் கேட்டால், ஏன் அவர் மட்டும் குருக்களிடம் காட்டச் செல்லவில்லை?

மற்ற ஒன்பது பேரும் இயேசுவிடமிருந்து புறப்பட்டு நேராக குருக்களிடம் செல்கின்றனர். ஆனால் சமாரியர் மட்டும் பாதியிலேயே திரும்பி இயேசுவிடம் வருகின்றார்.

அ. சமாரியர் தன் அடையாளத்தைத் தனக்குள் தேடினார்.
தொழுநோய் பெற்றவர்கள் குருக்களிடம் காட்ட வேண்டும் என்பது லேவியர் நூல் 14:1-32ல் சொல்லப்பட்டுள்ள மோசேயின் சட்டம். இஸ்ரயேல் மக்களிடையே வாழும் சமாரியருக்கும் இது பொருந்தும். ஆக, பத்து பேரும் அனுப்பப்படுகின்றனர். ஆனால் போகும் வழியிலேயே குணம் பெற்று விடுகின்றனர். நலம் அவர்களுக்கு இயேசுவால் தான் வருகிறதே ஒழிய குருக்களால் அல்ல. மற்ற ஒன்பது பேருக்கும் தாங்கள் நலம் பெற்றதில் ஒருவேளை நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். குருக்கள் மட்டுமே தங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைத்திருக்கலாம். இந்த ஒன்பது பேரும் தங்கள் அடையாளத்தை தங்களுக்கு வெளியில் தேடுகின்றனர்.

நம்ம வாழ்க்கையிலயும் நம்ம சந்தோஷத்தைப் பல நேரங்களில் நிர்ணயிப்பது நமக்கு வெளியில் இருப்பவர்கள் தான். இது ஒரு தவறான அணுகுமுறை. 'நீ போட்டுருக்கிற சட்டை நல்லா இருக்கு!' னு மத்தவங்க சொன்னா சந்தோஷப்படுறோம். நாம் என்னதான் ஃப்ரஷ்ஸா இருந்தாலும் 'என்னப்பா டல்லா இருக்குற!' என்ற மற்றவர்கள் சொன்னவுடன் நாம் வாடிவிடுகிறோம். நாம் எப்படி இருக்கிறோம் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது நாமாக மட்டுமே இருக்க வேண்டும். இதைத்தான் அந்த சமாரியர் செய்கின்றார். 'நீ என்னடா என்னை நல்லாயிட்டேன்னு சொல்றது! நான் தொழுநோய் பிடிச்சு கிடந்தப்ப நீ எங்கடா போன? நான் சரியானா உன்கிட்ட வரனுமோ! எனக்குத் தெரியும் எங்கே போகணும்னு என்று முடிவெடுத்து இயேசுவிடம் செல்கின்றார்.

ஆ. இரட்டிப்பு துன்பம்
தொழுநோய் பிடித்தவர்களை யூதர்கள் தள்ளி வைத்துவிடுவார்கள். ஆக, தொழுநோய் பிடித்திருக்கிறது என்ற காரணத்தில் முதலில் ஒதுக்கப்படுகிறார் இந்தச் சமாரியர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அங்கே மற்ற தொழுநோய் பிடித்தவர்களோடு இருக்க முடியாது. ஏனெனில் இவர் சமாரியர். மற்றவர்கள் யூதர்கள். அதெப்படி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இனத்தோடு மற்ற இனத்தார்கள் ஒன்று சேர முடியும்? ஆக, கண்டிப்பாக இந்தச் சமாரியர் இரட்டிப்பு துன்பங்களை அனுபவித்திருக்க வேண்டும். ஆகையால் தான், குணம் பெற்ற பின்பும் தன் உடன் இருந்தவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். பல நேரங்களில் துன்பங்கள் நமக்கு மனவுறுதியையே தருகின்றன. 'என்னால் தனித்து நிற்க முடியும்!' என துணிகின்றான் பாருங்கள். 'அவங்ககூட போகலன்னா அவங்க என்ன நினைப்பாங்க! அவங்க பெரியவங்க' என்று நினைக்காமல், 'போங்கடா நொன்னைகளா!' என்று தன் வழி செல்கின்றார். நாம் அனுபவிக்கும் துன்பம், வலி, தனிமை போன்றவற்றை நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் வினையூக்கிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் சமாரியர் ஒரு நல்ல உதாரணம்.

இ. நம்பிக்கை.
'உமது நம்பிக்கை உமக்கு நலம் தந்தது' என்கிறார் இயேசு. மற்றவர்கள் திருச்சட்டத்தை நம்பினார்கள். ஆனால் சமாரியர் மட்டுமே இயேசுவை நம்புகிறார். அந்நியர்களுக்கு இயல்பாகவே கடவுள் நம்பிக்கை வரும். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களின் மொழி பேசாத, உங்களின் உணவை உண்ணாத, உங்களைப் பற்றி யாருமே தெரியாத, உங்கள் உடை உடுத்தாத ஒரு ஊருக்கோ, நாட்டிற்கோ போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். போகும் போது நினைப்பீர்கள். நம்ம ஊரு மாதிரியே அந்த ஊரும் இருக்கும். நம்ம ஊர்க்காருங்க மாதிரியே அவங்களும் இருப்பாங்கன்னு! ஆனா, உங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். உங்களை ஒரு பொருளாக மட்டுமே நினைப்பார்கள். நீங்க உங்க ஊருல பெரிய டானாக இருந்தாலும், இங்க நீங்க இருக்குறதுக்கு ஒரு கார்டு வாங்கணும். அதைத் தூக்கிக்கிட்டே திரியணும். உங்க பெர்மிட் நம்பர் தான் உங்க அடையாளம். உங்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படும். நீங்க ஏதாவது நோயைக் கொண்டு வந்திருக்கீங்களான்ன தரோவா செக் பண்ணுவாங்க. நீங்க அவங்க மொழியை அவங்கள மாதிரியே பேச முடியுமான்னு டெஸ்ட் வைப்பாங்க. இவ்வளவு நடக்கும் போது நீங்க யார்கிட்ட பேசுவீங்க? உங்க கூடவே நீங்க எவ்வளவு நேரம் தான் பேசுவீங்க. அல்லது உங்க ஊர்ல உள்ளவங்ககிட்ட பேசுவீங்களா? நீங்க பேசணும்னு நினைக்கிற நேரம் அவங்களுக்கு நைட் ஆயிடுமே! ஸோ! நேச்சுரலி நீங்க உங்க கண்களை மேல தான் உயர்த்துவீங்க. அப்படித்தான் நடக்கிறது இந்தச் சமாரியருக்கும்.

இன்னைக்குக் கடவுளிடம் போறது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அவரிடம் திரும்பப் போவதும் முக்கியமே. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்த அந்நியர்!


Wednesday, November 12, 2014

கண்ணீர் ரேகைகள்!

'மொத தபா பார்த்தேன் உன்ன
பேஜார் ஆயி போயி நின்னே நின்னே
கிஷ்ணாயில் ஊத்தாம பத்த வச்சியே
கொழாத் தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்'

கடந்த நான்கைந்து நாட்களாக என் உதடுகள் இந்தத் தத்துவப் பாடலையே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன. ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசையில், ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் பாடலே இது. பாடலின் இன்டர்லியூடை உன்னிப்பாகக் கேட்டால் 'வெங்காபாய்ஸ்' ஆல்பத்தின் 'ஷலலா லாலா' வாடை அடிக்கிறது.

இந்தப் பாடலின் பல்லவியில் வரும் ஒரு வார்த்தை 'கிஸ்ணாயில்' (கிறிஷ்ணா ஆயில்) - இது ஒரு சென்னைச் செந்தமிழ் வார்த்தை. இது குறிக்கும் பொருள் 'மண்ணெண்ணெய்'. இப்போதெல்லாம் 'கெரசின்' என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் தெரிகிறது. கெரசின் வார்த்தையைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் - மண்ணெண்ணெய், கிஸ்ணாயில் எனத் தொடர்ந்து 'சீமத்தண்ணி' என்ற வார்த்தை வரை போகலாம். அதாவது 'சீமை தண்ணீர்' - வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் அல்லது வெளிநாட்டில் புழக்கத்தில் இருக்கும் தண்ணீர்.

சரி தம்பி! ஏன் இந்த கெரசின் ஆராய்;ச்சி!

'சீமத்தண்ணியை' போலவே கொஞ்சம் பழைய வார்த்தை 'சீஸா' (அதாவது, குடுவை அல்லது பாட்டில்).

'ஏய்யா...அந்தச் சீமத்தண்ணி சீஸாவை எடுத்துட்டு வா!' - கிஸ்ணாயில் வார்த்தை எனக்கு இந்த வாக்கியத்தை நினைவூட்டியது. இந்த வாக்கியத்தை அடிக்கடி என்னிடம் சொன்னவர் என் அய்யாமை (அய்யாவின் - அப்பாவின் அம்மா). இன்று அவருடைய நினைவு நாள். நேற்று இரவு முதல் இவரின் நினைவாகவே இருந்தது. ஆகவே, இன்றைய பதிவு இவரை மையமாக வைத்து எழுதலாம் என நினைத்தேன். போரடித்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!

இவரின் பெயர் லட்சுமி அம்மாள் - லட்சுமி என்பதுதான் பெயர். 'அம்மாள்' என்பது மரியாதைக்காக ஒட்டிக் கொண்டது. இவர் பிறந்த ஊர் இராசபாளையத்திற்கு தெற்கே இருக்கும் 'ஜமீன் நத்தம்பட்டி' - ஆனால் ஜமீன்கள் இருந்தார்கள் என்பதற்கு தடம் ஏதுமில்லை. இவர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. ஆனால் இறந்த ஆண்டு 2007. இவருக்கு ஒரு தங்கை உண்டு - அவரின் பெயர் 'ராஜலட்சுமி'.

என்னைப் பலர் இன்னும் 'லட்சுமி அம்மாளின் பேரன்' என்றே அறிவார்கள். பரம்பரை இந்து. முருக பக்தை. பலருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவச்சி. பகல் நேரங்களில் கூலிக்குக் காட்டு வேலைக்குச் செல்வார். காட்டு வேலை பார்த்துவிட்டு வந்தாலும் வெள்ளைச் சேலை பளிச்சென்று அணிந்து வருவார். சுத்தத்தின் மறுஉருவம். வெள்ளைச் சேலை ஏன்? திருமணம் முடிந்து 7 வருடங்களிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் ஏறக்குறைய 60 வருடங்கள் அந்த இழப்பைக் காட்டுக் கொள்ளாமலேயே வாழ்ந்தவர். டெய்லி ஃபோன் பண்ணும் கேர்ள்பிரண்ட் ஒரு வாரம் ஃபோன் பண்ணலன்னா வரும் இழப்பை, விரக்தியை எப்படி ஹேண்டுள் பண்ணுவது என்று செமினார்களும், வெபினார்களும், புத்தகங்களும் எழுதப்படுகின்ற இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை ஒரு நொடியும் காட்டிக் கொள்ளாமல் தன் இரு மகன்களையும் வளர்த்தெடுத்தவர். இவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. தன் வாழ்நாளில் இவர் மேற்சட்டை அணிந்ததும் கிடையாது. அதன்பின் இருப்பது ஒரு இருண்ட சமூகப் பிண்ணனி. நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் தமிழகத்தின் தென்முனை முழுவதும் திருவாங்கூர் என அழைக்கப்பட்டு ஒரே மாகாணமாக இருந்தது. நம் நாட்டில் சாதியம் மிகக் கொடுமையாக பின்பற்றப்பட்டதும் இந்த மாகாணத்தில் தான். கீழ்ச்சாதியினரும், பனைஏறி என்று அழைக்கப்பட்ட நாடார் இன ஆண் மற்றும் பெண்கள் மேற்சட்டை அணியக் கூடாது என்பது ஒரு வழக்கமாக இருந்தது. இது அவர்களின் அடிமைத்தனத்;தின் அடையாளமாம். 1919ல் முதன்முதலாக வேதமாணிக்கம் என்பவர் கிறிஸ்தவராக மாறுகிறார். கிறிஸ்தவராக ஒருவர் மாறினால் அவர் சாதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்பதால் அவரும் அவரின் குடும்பத்தாரும் மேல்சட்டை அணியலாம். மேல்சட்டை அணிய வேண்டும் என்பதற்காக கிறித்தவராக மாறியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் என் அம்மாவின் அம்மா குடும்பம். ஆனால் எங்கள் அய்யாமையின் குடும்பத்தார் மாற மறுத்துவிட்டனர். நாடு விடுதலை பெற்று சாதியப் பாகுபாடு ஓரளவு மடிந்தாலும் இவர் என்னவோ மேல்சட்டை அணியாமலேயே இருந்துவிட்டார்.

பகலில் காட்டு வேலை செய்வார். இரவில் பாம்புக் கடி வைத்தியம் செய்வார். கோவிலில் குறி சொல்வார். திருவிழாவின் போது முளைப்பாரி இடுவார். முளைப்பாரியை சுமந்து செல்லும் போது கும்மி பாட்டு பாடுவார். எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் சுற்றுவட்டத்தில் எந்த ஊர் திருவிழாவென்றாலும் 'லட்சுமி அம்மாள் செய்த முளைப்பாரிதான்' தூக்கிச் செல்லப்படும். அந்த நாட்களில் கடுமையான விரதமும் இருப்பார்.

10க்குப் 10 கூரை வீடுதான் அவரின் கணவர் அவருக்குக் கட்டிக் கொடுத்தது. அங்கேதான் நான் பிறந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் அந்த வீடு இடிக்கப்பட்டது. வீடு இடிக்கப்பட்ட வரை அங்கு மின்விளக்கு கிடையாது. தினமும் மாலை மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி சுத்தம் செய்வதே இவரின் தலையாய கடமை. எங்க வீடு மட்டும்தான் கல்பதித்தது என்று பெருமைப்படவும் கற்றுத் தந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளையடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூரை மாற்றம் என வீட்டைப் பக்குவமாகப் பாதுகாத்தார். இரவில் தன் தங்கையின் வீட்டிற்குத் தூங்கச் சென்றுவிடுவார்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் முருகன் கோயில் பொங்கல் கொண்டு வருவார். எங்க அம்மாவுக்கும் அவர்களுக்கும் சண்டை நடக்கும். 'எங்க சாமி பேயொன்றும் இல்லை!' என்று சொல்லி வாதத்தில் ஜெயிப்பார். திருநீறும், சர்க்கரையும் கலந்து செய்யப்படும் அந்தப் பொங்கல் இன்றும் தொண்டைக்குழியில் இருக்கின்றது.

நான் குருமடம் போகிறேன் என்பதை இறுதிவரை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் அவரின் இறுதி நாட்களில் கிறிஸ்தவ கோயிலுக்கு அடிக்கடி சென்றார்.

முருகன் படம், மாதா படம், அம்மன் படம் என எல்லாம் இருக்கும் ஒரு இடம் எங்கள் வீட்டின் ஜன்னல் தான். அங்கே தான் திருநீறும் இருக்கும். சந்தனமும் இருக்கும். பாண்ட்ஸ் பவுடரும் இருக்கும். எதை வேண்டுமானாலும் எடுத்துப் பூசிக் கொள்ளலாம். அம்மா ஒரு பக்கம் பைபிள் படிக்க, அய்யாமை மறுபக்கம் கந்தசஷ்டி கவசம் படிப்பார்கள். எனக்கு இன்றுவரை இரண்டும் ஒன்று என்றே தோன்றுகிறது.

ஏறக்குறைய 84ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார். அப்போது நான் புனேயில் இறையியல் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வந்து அவரின் கல்லறை எங்கே என்று கேட்டபோது, அவரை அடக்கம் செய்யவில்லை, எரியூட்டினோம் என்றார்கள். இன்றும் எங்கள் ஊரின் காற்றில் தான் அவர் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பது என் நம்பிக்கை. என் தங்கை மகள் ஃபிலோ ஒய்யாரமாக நடக்கும் போதெல்லாம் என் அய்யாமையைத் தான் எனக்கு நினைவூட்டுகிறார்கள்.

இளம் வயதில் தன் கணவனையும், முதிர்வயதில் தன் மூத்த மகனையும் (என் அப்பா) இழந்து விட்டார். முதல் இழப்பை ஏற்றுக் கொண்ட அளவிற்கு இரண்டாம் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (அடுத்த சில மாதங்களில் அவரது இரண்டாம் மகனும் இறந்து விட்டார் என்பது இன்னொரு சோகம்!)

அவரிடம் நான் கற்றுக்கொண்டதாக இன்று நன்றியோடு நினைவுகூறுவது மூன்று:

அ. உழைக்காமல் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது. தான் இறந்த அன்று கூடப் பகலில் காட்டு வேலைக்குச் சென்று வந்தவர். எந்த அன்பளிப்பையும் ஏற்காதவர். தன் உடல்நலத்திற்காகவோ, தன் பயணத்திற்காகவோ, தன் செலவிற்காகவோ தன் மகனைச் சார்ந்திருக்கவே இல்லை. நாம் சாப்பிடும் பருக்கைக்கு நாம்தான் உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

ஆ. பரந்த மனப்பான்மை. அவருக்கு எல்லாச் சாமியும் ஒன்றுதான். ஒவ்வொரு சாதியினரும் முருகன், பெருமாள், அம்மன், கருப்பசாமி, வீரணன் என்று தங்களுக்கென்று சாமிகளை வைத்திருந்தாலும், இந்த எல்லாத் திருவிழாக்களிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட வெகுசிலரில் இவரும் ஒருவர். 'எனக்கு நற்கருணை கொண்டுவருவாயா!' என்று கூட என்னிடம் சொல்லி அனுப்பியவர்.

இ. இவர் சிரித்தும் பார்த்ததில்லை. அழுதும் பார்த்ததில்லை. தன் வாழ்நாளில் தொலைக்காட்சி பெட்டி பார்த்திராதவர். ரேடியோ கேட்டிராதவர். சுற்றுவட்டத்தின் 15 கிமீ மேல் பயணம் செய்திராதவர். தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை வைத்துக் கொண்டவர். நான்கு சேலைகளுக்கு மேல் வைத்திராதவர். செருப்பு அணியாதவர். மோதிரம், நகை என்று எதையும் தன் உடல் தொட அனுமதிக்காதவர். இறுதிவரை கண்பார்வை, காதுகேளும் திறனோ குறையாதவர். ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளாதவர். தன் ஊர் தான் உலகம் என வாழ்ந்தவர்.

இன்றும் எங்கள் ஊரின் தண்ணீராய், மண்ணாய், காற்றாய் மற்ற முன்னோர்களோடு கலந்து எங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதே என் உறுதியான நம்பிக்கை.


Tuesday, November 11, 2014

அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க!

உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? ... ... நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள். (காண். லூக் 17:7-10)

கடந்த மூன்று நாட்களாக வலைப்பதிவு சரியாக எழுதவில்லை என்று என் மனதில் இன்று காலை உறுத்திக் கொண்டே இருந்தது. அது என்னவோ மனசு சரியில்லையென்றால், மூளையும், உடலும் வேலை செய்ய மறுத்துவிடுகின்றது. மனசு சரியில்லையா, மூளை சரியில்லையா அல்லது உடம்பு சரியில்லையா என்று குழம்பும் அளவிற்கு ஒன்றையொன்று பிண்ணிப் பிணைந்து இருக்கிறது என்பதுதான் மனித வாழ்வின் ஆச்சர்யம். பெண்களுக்கு 'அந்த மூன்று நாட்கள'; இருப்பது போல, ஆண்களுக்கும் இயற்கை 'அந்த மூன்று நாட்களை' வைத்திருக்கிறது என்பது உண்மை எனவே தோன்றுகிறது. மாதத்தில் எப்படியும் மூன்று நாட்கள் 'மூட்' சரியில்லாமல் போய்விடுகிறது.

இப்பெல்லாம் விகடன் புத்தகங்கள் வந்தவுடன் படித்துவிடுகிறேன்.

இந்த வார ஜூனியர் விகடனில் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அழகிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதன் பின்புலத்தில் மேற்காணும் நற்செய்தியைச் சிந்திக்க விழைகிறேன்.

மனித சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று ஒருபக்கம் பகுப்பு. பணக்காரர் - ஏழை என்ற பகுப்பு. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நம்ம ஊருக்கு வந்தபோது கூடவே 'அரசாங்க அலுவலர் - ப்யூன்' என்ற பகுப்பும் நுழைந்துவிட்டது. அதாவது ஒருவர் ஏவுவார் - மற்றவர் ஏவப்படுவார். இது அரசு அலுவலகத்தில் மட்டுமல்லாமல் நாம் பணியாற்றும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், ஏன் மறைமாவட்டம் மற்றும் துறவற இல்லத்திலும் இருக்கின்றது. ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். கீழிருப்பவர் மேலிருப்பவருக்கு பயந்து இருக்க வேண்டும். மேலிருப்பவர் சொல்வது - சில நேரங்களில் முட்டாள் தனமாக இருந்தாலும் - கீழிருப்பவரால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இப்படி இருந்தால் தான் சமூகம் அல்லது திருஅவை என்ற எந்திரம் இயங்கும். கீழிருப்பவருக்கும் சேர்த்து மேலிருப்பவரின் மூளை வேலை செய்யும். ஆகவே கீழிருப்பவர் ஒருபோதும் தன் மூளையைப் பயன்படுத்தவே கூடாது. 'ஏன்!' என்றும் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது 'கீழ்ப்படிதல் இல்லை!' அல்லது 'கடவுளின் திருவுளத்திற்கு எதிர்ப்பு' அல்லது 'போராளி!' அல்லது 'கோபக்காரன்!' என்ற மிகப்பெரிய பட்டங்களைக் கொடுத்துவிடும்.

இன்றைய நற்செய்தியிலும் இயேசுவின் போதனை இந்தத் 'தலைவன் - பணியாளன்' பகுப்பை நியாயப்படுத்தவதாக இருக்கின்றது. பகல் முழுவதும் தோட்டத்தில் வேலை செய்த பணியாள் மாலை வந்தாலும் வீட்டிற்கு வந்து 'ஓய்வு எடுப்போம்!' என ஓய்ந்திருக்க முடியாது. வரிந்து கட்டிக் கொண்டு தலைவனுக்குப் பணி செய்ய வேண்டும். சாப்பாடு தயார் செய்ய வேண்டும். அவர் உண்டு குடிக்கும் வரை அருகிருக்க வேண்டும். தலைவர் நன்றிகூட சொல்ல மாட்டார்.

இதை இடதுசாரி மூளையோடு வாசித்தால் உடனே கோபம் வந்துவிடுகிறது. மேற்காணும் கதையில் வரும் இரண்டு பேருமே மனிதர்கள் தாம். ஆனால் அவர்களுக்குள் ஏன் ஏற்றத்தாழ்வு - ஒருவர் ஆணையிடுகிறார், மற்றவர் அடிபணிகிறார். அந்த அடிபணிதலுக்குத்தான் 'சம்பளம்' தருகிறோமே என்று ஆணையிடுபவர் சொல்லலாம். ஆனால் ஏன் அவர் சம்பளம் கொடுக்க வேண்டும். அதை இவர் வாங்க வேண்டும். இந்த ஏற்றத் தாழ்வு எங்கிருந்து வந்தது. என்னிடம் வேலி இருக்கிறது என்பதற்காக என் ஊரில் உள்ள ஊரணியைச் சுற்றி வேலியிட்டுவிட்டு இந்தத் தண்ணீர் எனக்குச் சொந்தம். மற்றவர்கள் எல்லாம் எனக்கு வேலை செய்தால் தண்ணீர் குடிக்க விடுவேன் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்?

'கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே' என்ற கீதை உபதேசமும் மேட்டுக்குடியினருக்கு சால்ரா தட்டுவதாகவே இருக்கின்றது. இன்னும் இதை முதலாளித்துவ சிந்தனையில் சொன்னால், 'வேலை பார்! சம்பளம் எதிர்பாராதே!' என்பது போல இருக்கிறது.

நன்றாகப் படிக்கின்ற மாணவன் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கும் போதும், மாய்ந்து, மாய்ந்து வேலை செய்யும் ஒருவருக்கு பணிஉயர்வு மறுக்கப்படும் போதும் ஆறுதலுக்குச் சொல்லப்படும் வார்த்தைகளும் இவைதான்.

வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல நடக்காதுதான். ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?

(ஏன் தம்பி இவ்வளவு கோபப்படுறீங்க?)

பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிடும் ஒரு ருஷ்யக் கதை இது:

அச்சுமேலவ் ஒரு கீழ்நிலை குமாஸ்தா. ஒருநாள் நாடகம் பார்ப்பதற்காக ஒரு தியேட்டருக்குச் செல்கிறான். இரண்டாம் வரிசையில் இடம் கிடைக்கிறது. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போதே இவனுக்குத் தும்மல் வருகிறது. அடக்கிப் பார்க்க நினைக்கிறான். முடியவில்லை. தும்மிவிடுகிறான். தும்மலின் நுண்ணிய தண்ணீர்த் துளி முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர் மேல் பட்டிருக்குமோ என்ற நினைப்பில் முன் வரிசையைப் பார்க்கிறான். அவனுக்கு முன்னே அமர்ந்திருப்பவர் அவனது தாசில்தார். 'ஐயயோ! எஜமான் மேலேயே தும்மல் பட்டுவிட்டதே!' என நினைத்து, 'தும்மல் என்பது ஒரு இயற்கை உபாதை. அதை அடக்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்!' என்கிறான். அவரும் அவன் தும்மியதைக் கண்டுகொள்ளாமல், 'பரவாயில்லை!' என்கிறார். இவனுக்கு மனதில் ஒரு நெருடல். வழக்கமாகப் பேசுவதுபோல இவர் பேசவில்லையே என நினைத்து மெதுவாக அவருடைய பின்கழுத்துப் பகுதியை துடைத்து விடுகிறான். 'யார்' என அதிர்ந்தவராக அவர் திரும்பிப் பார்த்து சற்றுக் கோபமாக, 'பேசாம! நாடகம் பார்க்க விடுறியா?' என்கிறார். ஐயயோ! எஜமான் கோபப்பட்டுவிட்டாரே என நினைத்துக் கொண்டு இடைவேளை நேரத்தில் போய் மீண்டும் மன்னிப்பு கேட்கிறான். நாடகம் முடிந்து வீட்டிற்குச் செல்கிறான். தூக்கமே வரவில்லை. எஜமானின் வீடு நோக்கிச் செல்கிறான். நேரம் அதிகாலை 3:45 மணி. அழைப்பு மணியை அடிக்கிறான். ஒருவேளை கவர்னர் தான் வந்துவிட்டாரோ என எண்ணி அவரும் தன் சீருடையை அணிந்தவராக தட்டுத்தடுமாறி வருகிறார். வந்து பார்த்தால் குமாஸ்தா. அவருக்கு கோபம். 'இன்னும் ஒரு தடவை உன்னைப் பார்த்தால் சுட்டுவிடுவேன்!' என்று துப்பாக்கியை எடுக்கின்றார். அவன் பயந்து வீட்டிற்குத் திரும்புகிறான். விடிந்தவுடன் அவனை எழுப்ப அவனது மனைவி செல்கிறாள். அங்கே குமாஸ்தா இறந்து கிடக்கிறான்.

தன் மேலதிகாரி மேல் தும்மிவிட்டோம் என்கிற பயம் அவனைக் கொன்றுவிட்டதா? ஏன் இந்த அடிமைத்தனம்? நமக்கு மேலிருப்பவர்களை நாம் எந்நேரமும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமா? என்று பல கேள்விகளை எழுப்பி ருஷ்யப் புரட்சிக்கு வழிவகுத்தது இந்தக் கதை.

'ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க!' என்று எங்க கணக்கு வாத்தியார் அடிக்கடி எங்களைத் திட்டுவார்.

மாடுகள் தங்களுக்குக் கொம்பு இருப்பதை மறந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. அதுபோலத்தான் நம்மேல் சுமத்தப்படும் நுகங்களை நாமும் எடுத்துக் கொண்டு, 'அவர் சொல்லிட்டார்! இவர் சொல்லிட்டார்! நாம செய்யணும்! என்று ஓடுகிறோம்.

'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்!' என்று சொல்லும்போது, 'என்னால் ஒரு பயனும் இல்லையா?' என்ற கேள்விதான் என்னுள் எழுகின்றது.


Monday, November 10, 2014

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்!

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்!

திருத்தூதர்கள் இயேசுவிடம் கேட்கும் மிகச் சில விண்ணப்பங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இயேசு நம்பிக்கையை மிகுதியாக்கும் வழியைச் சொல்லாமல் நம்பிக்கை மிகுந்தால் என்னவாகும் என்று மட்டும் சொல்லி முடிக்கின்றார்.

நம்பிக்கை என்பது தனிநபரைப் பொறுத்ததுதான் போல.

எவ்வளவோ பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகச் சொல்லிக் கொள்கிறோம்.

ஆனால் இன்னும் ஒரு சின்னக் கல் கூட நகர்ந்ததில்லையே.

அப்படியென்றால் நம்பிக்கை இன்னும் தேவை போல!

Sunday, November 9, 2014

இரும்புத்திரை!

நாளை லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

1989 நவம்பர் இதே நாளில் தான் 'இரும்புத்திரை' என்றழைக்கப்பட்ட பெர்லின் சுவர் தகர்த்தெறியப்பட்டு மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் இணைந்தது.

இன்று நமக்குத் தேவைப்படுபவை சுவர்கள் அல்ல. மாறாக, பாலங்கள்.

இதை இரண்டு நிகழ்வுகளும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

ஆனால் இன்று கடவுள் என்னவோ ஒருவர் மற்றவரை இணைக்கும் பாலமாக இருப்பதற்குப் பதில், ஒருவரை மற்றவரிடமிருந்து பிரிக்கும் சுவராக மாறி விட்டார் அல்லது நாம் மாற்றிவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

இயேசுவின் உயிர்ப்பு விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே உள்ள சுவரை உடைத்தது என்று சொல்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஆனால், இயேசுவின் பெயரால் இன்று நாம் ஒருவர் மற்றவருக்கிடையே கட்டிக்கொண்ட சுவர்களும் ஏராளம்.

எந்த இயேசு நிஜமான கடவுள்? என்பது இப்போது அடுத்த கேள்வி.

ஒருவர் மற்றவரைப் பிரித்து வைக்கும் கடவுள் கடவுளே அல்ல. கடவுளின் பெயரால் இணைவதை விடுத்து, மனித நலனுக்காக ஒருவரையொருவர் தழுவிக்கொள்வதும், நம்மையே உயிருள்ள ஆலயங்களாக ஒருவர் மற்றவருக்கு அர்ப்பணிப்பதுமே லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விடுக்கும் பாடம்.



Saturday, November 8, 2014

அன் இன்சைடு ஜாப்!

'ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடைக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' (பிலிப்பியர் 4:11-13)

நாம் வாழற வாழ்க்கையில நம்ம மகிழ்ச்சிக்கோ, துன்பத்திற்கோ காரணம் நமக்கு வெளியில் இல்லை. மாறாக, நமக்கு உள்ளே தான் இருக்கின்றது. நம் அனுமதியின்றி நம்மை யாரும் காயப்படுத்தவும் முடியாது, மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் முடியாது.

இதை இன்னும் ஒருபடி மேலே போய் ஐன்ஸ்டினின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 'உன் மகிழ்ச்சியை ஒரு நபரின் மேலோ, இடத்தின் மேலோ கட்டாதே! மாறாக, ஒரு சிந்தனையின் மேல் கட்டு. ஏனெனில் நபரும் மாறிவிடும், இடமும் மாறிவிடும். ஆனால் சிந்தனை மாறாது. ஏனெனில் சிந்தனை நம் உள்ளே இருக்கிறது'.

தூய பவுலடியாரும் தன் வாழ்க்கையை 'உயிர்த்த இயேசுவின்' மேல் கட்டிவிடுகின்றார். ஆகையால் தான் வாழ்வின் நிகழ்வுகள் அவருக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.

இன்பமோ, துன்பமோ எதுவும் தன்னை ஒன்றும் செய்யவிடாமல் தன் சமநிலையைத் தக்கவைக்கத் தெரிந்து கொண்டார் பவுலடியார்.

'எந்நிலையிலும் மனநிறைவு!' - இது இன்று நமக்குத் தேவையான மனநிலை. மிகவும் ஆபத்தான மனநிலை என்னவென்றால் 'எனக்கு இது போதாது!' என்ற மனநிலை. போதாது என்றால் எதுவும் போதாது என்பார்கள். நாம் முன்பு ஒருமுறை குறிப்பிட்டபடி 'உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா!' என்ற கண்ணதாசன் வார்த்தைகளின் மறுவடிவமே இவை.

இந்த மனநிலை வர நாம் என்ன செய்யவேண்டும்? நமக்குத் தேவையானதெல்லாம் ஒரு அசைக்க முடியாத கன்விக்ஷன். பணம் வருகிறதோ, வரலையோ, நண்பர்கள் நம்மிடம் பேசுகிறார்களோ, பேசவில்லையோ, படிப்பு மூளையில் ஏறுகிறதோ, இல்லையோ, 10க்கு 10 வாங்குகிறோமோ, அல்லது பெயிலாகிறோமோ எதுவும் நம்மை அசைத்துவிடக் கூடாது. இது எல்லாவற்றையும் கடந்த ஒரு 'ஈக்வானிமிட்டி'.

கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் என் நண்பர்கள் யாருக்காவது ஃபோன் செய்து அவர்கள் அதை எடுக்கவில்லையென்றாலோ, திரும்ப எடுக்கவில்லையென்றாலோ மனசு சஞ்சலமாகவே இருக்கும். இப்பவெல்லாம் அந்தச் சஞ்சலமே இருப்பதில்லை. நண்பர்களின் அனுதாபத்தின் மேலும், நமக்குத் தெரிந்தவர்களின் பாராட்டுக்களின் மேலும் நம் மகிழ்ச்சி என்ற படகைக் கட்டக் கூடாது என்று இப்போது கற்றுக் கொண்டேன்.

'ஹேப்பினஸ் இஸ் அன் இன்சைடு ஜாப்' என்பார் ஜான் பவல்.

அந்த இன்சைடு ஜாப்பை ஒழுங்கா செய்ய வரம் தா இறைவா! என்பதே என் செபம்.


Friday, November 7, 2014

தப்பினால் தப்பில்லை!

முதலாவதாக வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு. உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்!' என்றார். பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ உம் கடன் சீட்டு. உட்கார்ந்து எண்பது என்று எழுதும்!' என்றார். (காண் லூக்கா 16:1-8)

மறையுரை வைக்கக் கடினமாக இருக்கும் ஒருசில விவிலியப் பகுதிகளில் மேற்காணும் நற்செய்தியும் ஒன்று.

'சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் திருட்டுக்கு வழிவகுக்கின்றது' என்று பேசிய ஒரு உளவியல் அறிஞரின் செய்தியை தினத்தந்தி டிவியில் இன்று பார்த்தேன். அதில் 'தப்பினால் தப்பில்லை' என்னும் சுஜாதாவின் வரியைக் குறிப்பிட்டார் அவர். அதாவது நாம் தவறு செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று நாம் தப்பினால் அது தவறு இல்லை என்று நாம் நினைக்கத் தொடங்கிவிட்டோம்.

வண்டியில் செல்கிறோம். சாலையைக் கடக்க வேண்டும். ரெட் சிக்னல் இருக்கின்றது. ஆனால் வேறு வாகனமும் இல்லை. டிராஃபிக் கான்ஸ்டபிளும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ரெட் சிக்னலை மதிக்காமல் செல்கின்றோம். யாரும் பார்க்கவில்லையென்றாலோ, நம் தவறுக்கு 'ஃபைன்' போடவில்லை என்றாலோ நாம் செய்வது சரி என்று நம் மனதிற்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்குகிறோம். காலப்போக்கில் இந்த மனது என்ன செய்யும்? நாம் இப்படி சொல்லிக் கொடுப்பதை எல்லா இடத்திலும் 'அப்ளை' செய்ய ஆரம்பிக்கும்! 'ஆசிரியர் பார்க்காத நேரம் பார்த்து எழுது!' 'யாரும் பார்க்காத நேரம் கணக்கை மாற்றி எழுது!' 'அவர் அசந்த நேரம் அவரின் பையை எடு!' - இப்படியாக ஒரு பழக்கத்தை நாம் விட மறுத்தாலும் பின்னாளில் அந்தப் பழக்கம் நம்மை விட மறுக்கின்றது.

மேற்காணும் நற்செய்திப் பகுதியில் வீட்டுப் பொறுப்பாளர் செய்தது சரியா? தவறா? என்று இன்றும் நிறையப் பேர் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இயேசு அந்த வீட்டுப் பொறுப்பாளரின் முன்மதியைப் பாராட்டுகின்றார். அதாவது, ஏதோ ஒரு வகையில் அந்த பொறுப்பாளர் தன் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளப் பார்க்கிறார். நம்மிடம் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை வைத்து விண்ணரசை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே இயேசுவின் போதனையாக இங்கு இருக்கின்றது.



Thursday, November 6, 2014

கொஞ்சம் ப்ரீஸ்ட்லி ஜெலஸி!

நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன். இஸ்ரயேல் இனத்தவன். பென்யமின் குலத்தவன். எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். (காண். பிலிப்பியர் 3:3-8)

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி இது. தூய பவுலடியார் தான் பெருமை கொண்டிருந்த அனைத்தையும் இயேசுவின் மேலுள்ள நம்பிக்கைக்காக இழக்கத் துணிகின்றார். எந்த அளவுக்கு இயேசுவை அனுபவித்திருந்தால் இப்படி இருக்கத் தோன்றும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக 'அழகன்' திரைப்படம் பார்த்துவிட்டு, மதுபாலாவின் குட்டி நாக்கிற்காக சொத்தையே எழுதிக் கொடுக்கலாம் என்று என் அம்மாவிடம் வேடிக்கையாகச் சொன்னேன்.

ஒருவரின் மேல் நமக்கு அதீதமான விருப்பம் வந்துவிட்டால் அவருக்காக நாம் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றோம். சினிமாக் காதல்களில் சிலர் 'எனக்காக கடலில் குதிப்பாயா?' 'எனக்காக சாலையில் ஆடையின்றி ஓடுவாயா?' என்று கேட்க அதற்கு அந்தக் காதலர்களும் கடலில் குதிக்கின்றார்கள், ஆடையின்றி ஓடுகிறார்கள். ஆக, ஒன்றைப் பெற வேண்டும் என்று நம் மனம் முடிவெடித்தவுடன் மற்றதைத் துறக்கத் துணிந்துவிடுகிறது. இதற்கு வெறும் மூளையின் ஒத்துழைப்பு இருந்தால் போதாது. முழு மனமும் ஒத்துழைக்க வேண்டும்.

இன்று காலை இணைச்சட்ட நூலைக் குறித்த ஒரு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். 'முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு வலிமையோடும் கடவுளை அன்பு செய்வது என்றால் என்ன?' என்பதே கட்டுரையின் உட்பொருள். இப்படிச் செய்வது என்றால் வேறு எண்ணத்திற்கே இடமிருக்கக் கூடாதாம். கடவுள் மட்டும் தான் முழுமையாக இருக்க வேண்டுமாம். இதன் பின்புலம் இஸ்ரயேல் மக்கள் வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது என்பதுதான். ஆக, இஸ்ரயேலின் கடவுள் மட்டுமே ஒருவரின் உள்ளம், மூளை, உடல் என இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு நவம்பர் 26 முதல் 2016 பிப்ரவரி 2 வரை உள்ள ஆண்டை திருத்தந்தை 'இயர் ஆஃப் கான்சக்ரேடட் லைஃப்' (அர்ப்பண வாழ்வின் ஆண்டு) எனக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார். துறவற நிலையில் இருக்கும் அருட்செல்வர்களுக்கும், அருட்செல்வியருக்கும் தங்களையே சுயஆய்வு செய்ய அழைக்கும் ஆண்டு என்கிறார் திருத்தந்தை. இதில் மறைமாவட்ட அருட்பணியாளர்களும் அடங்குவர் என்கின்றனர் சிலர். ஆனால் 'இது எங்களுக்கு மட்டும்' என உரிமை கொண்டாடுகின்றனர் துறவற நிலையில் உள்ளவர்கள். (இந்தக் கொண்டாட்டத்தின் மீது கூட அவர்களுக்கு அப்படியொரு எக்ஸ்க்லுசிவம்!)

அருட்பணி நிலைக்கு வந்தபின் எனக்கு ஆதாயமானது என நான் பற்றிக் கொள்வதும் அதிகமாகவே இருக்கிறது. என் படிப்பு, என் பங்கு, என் பங்கு மக்கள், என் பணி என இவைகள் முன்னிறுத்தப்படும்போது கிறிஸ்துவை நான் 'குப்பையாகக்' கருதத் தொடங்கிவிட்டேனோ என்ற பயமும் வந்துவிடுகிறது.

தன் இனம், குலம், பிறப்பின் அடையளாம், சமய அடையாளம் என அனைத்தையும் துறக்கும் பவுலடியார் அர்ப்பண வாழ்விற்கான பெரிய சவாலை இன்று முன்வைக்கின்றார்.

'இந்த வருடம் எங்க பங்கில் உள்ள சின்ன ஃபாதர் மிக அதிகமாக மிஷன் சண்டே கலெக்ஷனுக்கு பணம் சேகரி;த்தார். நீங்க ஒன்னும் பண்ணல!' என்று நக்கலடித்தார் என் நண்பர் ஒருவர். முதலில் கொஞ்சம் ப்ரீஸ்ட்லி ஜெலஸி வந்தது. ஆனால் நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: 'விண்டோஸ் 7ஐ விட விண்டோஸ் 8 பெட்டர் இல்லையா? ஐஓஎஸ் 7.2 ஐ விட ஐஓஎஸ் 8 பெட்டர் இல்லையா? டைப்ரைட்டரை விட கம்ப்யூட்டர் பெட்டர் இல்லையா? அதுபோலத்தான் உங்க சின்ன ஃபாதரும். முந்தைய எடிஷனை விட பின்பு வருவது பெட்டர் ஆகத்தான் இருக்க வேண்டும்.'

என் நண்பர் தொடர்ந்து சொன்னார்: 'பின்பு வந்தது பெட்டரா இருக்கு என்பதற்காக முந்தையது அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு பயன்பட்டது என்பதையும் மறக்க முடியாதுதானே! டைப்ரைட்டர் பயன்படுத்திய காலத்தில் டைப்ரைட்டர் பெரியது இல்லையா!' (இது நண்பரின் பெருந்தன்மை!)

என் அடையாளங்களை, என் திறமைகளை, என் ஆற்றல்களை மட்டும் நான் ஆதாயம் என்று நினைக்கிறேனா என்று என்னிடமே நான் கேள்வி கேட்கத் தூண்டுகிறார் தூய பவுலடியார்.