Sunday, July 20, 2014

நண்பா! உன் ஆடை எங்கே?

(12.10.2014 பொதுக்காலம் 28ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி: மத்தேயு 22.1-14)

விண்ணரசு பற்றிய மேலும் ஒரு எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு: திருமண விருந்து. மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் உவமைக்கும், லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் உவமைக்கும் (லூக்கா 14:15-24) நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டின் பின்புலங்களும் வேறு.

இந்த உவமையை புரிந்து கொள்ள யூதர்களின் திருமண நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்து அடுத்த நாள் காலையில் தாலி கட்டி, அவசர அவசரமாய் வந்திறங்கும் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, 'சரி நல்லா இருங்க!' என்று வாழ்த்திவிட்டு ஓடும் நம்ம ஊர் திருமணம் போல அல்ல அது. திருமண நிகழ்வு ஏறக்குறைய ஆறுமாதங்கள் நடக்கக் கூடிய நிகழ்வு. பெற்றோர் பெண் பார்த்தல், பையனும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்தில், நிச்சயதார்த்தம் என முதல் படலம் நடந்தேறும். பையன் தன் வீடு திரும்ப, பெண்ணும் அவள் வீடு திரும்புவாள். முதல் படலம் நடந்தேறினாலே திருமணம் நடந்து விட்டதாகத்தான் அர்த்தம். பையன் தன் வீட்டில் இருக்கும் போது தந்தை தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விருந்தளிப்பது மரபு. நம் கதையின் மகன் இளவரசன். தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கின்றார் தந்தை. விருந்து தயாராகிவிட்டதும் 'எல்லாரும் வந்தாச்சா!' என்று பார்க்கின்றார். யாரையும் காணோம்! முதல் அவமானம்! 'என்ன ஆயிற்று' என்று பார்க்க ஆள் அனுப்புகிறார். அழைக்கப்பட்டவர்கள் வர முடியவில்லை என்று சொல்வதை விட, 'வர விருப்பம் இல்லை!' என்றே சொல்கிறார்கள். உவமையை வாசிக்கும் போதே அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அரசன் கூப்பிடுகிறான். அங்கே போனால் நன்றாக இருக்குமே. அரசனை வைத்து நாளைப்பின்னே நாலு காரியம் சாதிக்கலமே. பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்.

பின் அழைப்பு பொதுவாக்கப்படுகிறது. வருவோர், போவோர், நல்லவர், கெட்டவர் என அனைவரும் வருகின்றனர். மண்டபம் நிறைந்து விட்டது. விருந்து பரிமாறத் தயாராகி விட்டது. அரசன் வந்திருந்தோரைப் பார்க்க வருகிறான். 'திருமண ஆடை அணியாத ஒருவன்' அங்கே அமர்ந்திருப்பது அவரின் கண்களில் படுகிறது. 'வெளியே எறியுங்கள் இவனை!' - இது அரச கட்டளை. இந்த இடத்தில் அரசன் மேல் தான் நமக்குக் கோபம் வரகிறது! 'நீ கூப்பிட்டவங்க வரலை. சரி நாங்களாவது வந்தோமே என்று சும்மாயிருப்பதை விட்டு விட்டு, சட்டை ஏன் போடலை! வேட்டி ஏன் கட்டலை?' என்று கேட்டிருப்பார் அந்த திருமண ஆடை இல்லாதவர். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். 'திருமண ஆடை' என்பது திருமண விருந்திற்கு வரும் அனைவருக்கும் விருந்து வைப்பவர் கொடுக்கும் பரிசு. மண்டபத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடல் அளவிற்கேற்ப உடைகள் கொடுக்கப்படும். நம்ம ஊரில் திருமணம் முடிந்து, மொய் எழுதும் போது கொடுக்கும் 'தாம்பூலப் பை' போல என வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆடையைத் தான் அந்த நபர் அணிய மறுத்திருக்கிறார். எதற்காக மறுத்தார் என்பதற்கு உவமையில் பதில் இல்லை. 'அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்' என அவசர அவசரமாக உவமை முடிகிறது. இந்த வார்த்தைகளை வைத்துத்தான் கொஞ்சப் பேர் நரகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் உவமையின் நோக்கம் நரகத்தைப் பற்றியதோ, உத்தரிக்கிற நிலையைப் பற்றியதோ அல்ல. சரியா?

இந்த உவமை நம் முன் வைக்கும் சிந்தனைகள் என்ன?

அ. முதன்மைப்படுத்துதல். 'மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்' என்ற திரைப்படத்தில் ஒரு இடத்தில் மோரி கதாநாயகனைப் பார்த்து இப்படிச் சொல்வார்: 'நம் தோள்பட்டையில் ஒரு குருவி அமர்ந்திருப்பது போல நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குருவியிடம் நாம் தினமும் ஒன்று கேட்க வேண்டும். என் அருமைக் குருவியே! இந்த நாள்தான் என் வாழ்வின் இறுதி நாளா? அப்படியென்றால் என் வாழ்வின் முக்கியமானவற்றை நான் இன்று செய்கிறேனா?' விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கொடுக்கும் காரணங்கள் விநோதமாக இருக்கின்றன: ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன், வயல் வாங்கியிருக்கிறேன், புதிதாக திருமணம் ஆகியிருக்கிறது! ஆகையால் வர முடியாது. அரசன் நினைத்தால் இந்த மூன்றையும் அழித்து விடலாம். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் கண்ணீர்விடக் காரணம் என்ன? நாம் முதன்மைப்படுத்துதலில் தவறுவதுதான். அன்பு, ஆன்மீகம், கரிசணை, பகிர்வு, விழிப்பு நிலை - இவைதான் நம் வாழ்வில் என்றும் நம் உடன் இருப்பவை. இவைகளை விட்டுவிட்டு மற்றவைகளை நாம் தேடும்போது நாம் அரைத்தூக்கத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறோம். நம்மிடம் 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்கின்றோம். அதே நபர் நம்மிடம் 'ஏன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும். பதிலுக்குப் பதில் நமக்குக் கோபம் தானே வரும்!

ஆ. எல்லாரும் வாருங்கள். தொடக்கத் திருச்சபையின் காலத்தில் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, நற்செய்தி புறவினத்தாருக்கு அறிவிக்கப்படுகிறது. யூதர்களே விருந்திற்கு வர மறுத்தவர்கள். புறவினத்தார்தான் மண்டபத்தில் இறுதியாக உணவருந்தியவர்கள். நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. வாழ்வின் எதார்த்தமும் இதுதான். கடவுளின் அன்பையும், மற்றவர்களின் அன்பையும் நாம் ஏற்றுக்கொள்ளாதபோது அது மற்றவர்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றது. வாழ்வில் சிலவற்றை நாம் இழந்துவிட்டால் அதை நம்மால் திரும்பவும் பெற முடிவதேயில்லை. கண்ணீர் விட்டாலும், விழுந்து புரண்டாலும் சென்றது சென்றதுதான். ஆகையால் இருக்கும் போதே, இருக்கின்ற ஒன்றை, இருப்பது போல ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் மனப்பக்குவம் அவசியம்.

இ. அழைக்கப்பட்டவர்களோ பலர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். திருமண ஆடை என்பது இயேசு கொண்டு வந்த மீட்பு. திருமுழுக்கு வழியாக நாம் கிறித்தவர்களாக மாறினால் மட்டும் விருந்தில் பங்கேற்றுவிடலாம் என்று சொல்லி விட முடியாது. இறைவன் தரும் மீட்பு என்னும் ஆடையை நாம் அணிந்து கொள்ள வேண்டும். கடவுளின் பரிசாக வரும் அந்த ஆடையை நாம் மாசுபடாமல் வைத்திருப்பதும் அவசியம். அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்படும் போது அருட்பணியாளருக்குத் திருவுடை அணிவிக்கும் சடங்கு நடைபெறும். அந்தச் சடங்கின் அர்த்தம் இந்த உவமையின் பின்புலத்தில் இன்னும் ஆழமான அர்த்தத்தைத் தருகின்றது. இறைவனின் விருந்தை, நற்கருணைப் பலியை, கொண்டாடும் போதெல்லாம் அருட்பணியாளர் இதை அணிகிறார். உடல் இதை அணிந்து கொண்டாலும், உள்ளம் அணியவில்லையென்றால், திருமண விருந்தில் நமக்கு இடமில்லை தானே! 'நண்பா! உன் ஆடை எங்கே?' என்று ஒருநாள் அவர் நம்மைக் கேட்டுவிட்டால்...!


3 comments:

  1. அழகாக உவமையின் ஆழத்தை எடுத்து கூறினீர்கள். நன்றி..கிட்டத்தட்ட 2 மாதங்களின் பின் மீண்டும் உங்கள் பதிவை வாசிக்கிறேன். ஒரு பாரிய விபத்தில் என் இடது முற்றாக உடைந்து விட்டது. எனக்காக உங்கள் ஜெப வேளையில் ஜெபிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே, தங்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி. உங்களின் உடல் நலத்திற்காக இறைவனை வேண்டுகிறேன். நன்றி!

      Delete
  2. சில தருணங்கள் நம் வாழ்வில் ஒருமுறை தான் நமக்குத் தரப்படுகின்றன.அந்த தருணங்களை கிடைத்த மாத்திரத்தில் நமதாக்கிக்கொள்வதுதான் விவேகம்.நம் வாசல் கதவு தட்டப்படும்போது நாம் திறக்காமல் காலம் தாழ்த்திவிட்டுப் பின் காலமெல்லாம் கண்ணீர் விடுவதால் யாருக்கு என்ன லாபம்? இதைப் புரியவைக்க எடுத்திருக்கும் முயற்சிக்கு ஒரு சபாஷ்!
    பெரியதொரு விபத்திலிருந்து மீண்ட நண்பருக்கு என் ஜெபங்களையும்,நல்லெண்ணங்களையும் உரித்தாக்குகிறேன்...

    ReplyDelete