Wednesday, June 28, 2017

நலம் எனக் கண்டேன்

ரெகுலரா செய்யனும்னு நினைச்சு ரெகுலரா செய்ற மிகச் சில காரியங்களில் ஒன்று பார்லர் போவது. ஆண்களுக்குப் பார்லர் என்றால் வெறும் ஹேர்டிரஸ் மட்டும்தான்!

நான் வழக்கமாகச் செல்லும் பார்லருக்கு ஃபோன் அடித்தேன். அதன் உரிமையாளர், பணியாளர், விருந்தினர் உபசரிப்பாளர், கடை திறப்பாளர் எல்லாம் ஒரே ஆள்தான் - முருகன் அண்ணன்.

7 மணிக்கு ஃபோன் அடித்து, '7:10 க்கு வருகிறேன்' என்றேன். 'வாங்க!' என்றார்.

போய்ப்பார்த்தால் 4 பேர் வெயட்டிங். அந்த 4 பேரில் ஒருவருக்கு 'டை' அடிக்க அப்போதுதான் பவுடரைக் கொட்டிக் கொண்டிருந்தார். ஆளுக்கு 10 நிமிடம் என்றாலும் 40 நிமிடங்கள் ஆகிவிடும். இங்கேயே நின்றாhல் செபத்திற்கு செல்ல முடியாது. போய்விட்டு வந்தால் கடை மூடிவிடுவார். ரொம்பவும் யோசித்துக்கொண்டே, 'அண்ணன், போய்ட்டு 8 மணிக்கு வர்றேன்!' என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

8 மணிக்குத்தான் என் அறையை விட்டு புறப்பட்டேன். பார்லர் போய் சேர்ந்தபோது 8:12 ஆகியிருந்தது. என்னை அழைப்பதற்காக தன் மொபைலை கையில் எடுக்க, நான் அங்கே போய் இறங்கினேன்.

போவதற்கு முன்பாகவே தூரத்தில் அவர் நிற்பதையும், அவரோடு உரையாடும் ஒருவரையும் கண்டேன். அருகில் வந்தபோது அவர் வட்டிக்கடைக்காரர் எனக் கண்டேன். வட்டிப்பணம் வசூலிக்க வந்திருந்தார் அவர். இவர் பார்லரின் கண்ணாடிக்குக் கீழிருந்த, கைப்பிடி ஒரு பக்கம் ஒடிந்து போயிருந்த டிராயரை இழுத்து அதில் இன்று விழுந்த அனைத்து பணத்தையும் எடுத்து அப்படியே வட்டியாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

இருக்கையில் அமர்ந்தேன்.

'எங்கே நீங்க வராமா போயிடுவீங்களோ!' என்றார்.

நான் அப்போது ஞானம் பெற்றேன்.

8 மணிக்கு இல்லத்திலிருந்து புறப்படும்போது எனக்குள்ளே ஒரு தயக்கம். 'நாளைக்கு போய் கொள்ளலாம்!' 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்!' என என் மூளை சொன்னது. ஃபோன் அடிச்சு, 'அண்ணன் எனக்கு வேலையிருக்கு. இன்னொரு நாள் வர்றேன்' என சொல்லலாம் என நினைத்தேன்.

அப்படி ஒரு வேளை நான் சொல்லியிருந்தால் என்ன நடக்கும்?

தன் டிராயரின் இறுதி பணத்தையும் கொடுத்துவிட்டு வெறும் கையராகத்தானே அவர் வீடு சென்றிருப்பார்! ஆக, நான் சொல்லும் சொல்லும், சொல்லைக் காப்பாற்றுவதும், காப்பாற்றாமல் விடுவதும் என்னை பாதிக்கிறதோ, இல்லையோ, அடுத்தவரை அதிகமாகவே பாதிக்கிறது.

குறைத்தே சொல்வதும், அதை நிறைத்தே காப்பாற்றுவதும் என்றும் நலம் எனக் கண்டேன்!

Saturday, June 10, 2017

மூன்றாகி ஒன்றானவா!

'சிலபேர் 100 ரூபாய் செலவு செய்து கடவுளை பார்க்கிறார்கள்.
சிலர் 100 ரூபாயை கடவுளாகப் பார்க்கிறார்கள்!'

இந்த வரிகளைக் கொண்ட ஒரு படம் என் கண்ணில் பட்டது. படத்தில் மூதாட்டி ஒருவர் கோவில் வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பார். தன் இடதுகையை மடித்துக்கொண்டும், வலது கையை நீட்டிக்கொண்டும் இருக்க அவருடைய முகம் ஏக்கத்தோடு மேல் நோக்கிப் பார்க்கும்.
இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'இது ஒரு மறைபொருள்' என்று சொல்லிவிட்டு ஒற்றை வரியில் நம் மறையுரையை மூடிவிடலாம்.

ஆனால், அது ஒரு மறைபொருள் என்று சொல்வதுகூட கடவுளை ஒரு பொருளாகக் கருதி அந்நியப்படுத்துவது என நான் நினைக்கிறேன்.

கடவுள் மறைபொருளா? அல்லது காணும்பொருளா?
கடவுளை ரொம்ப சிம்ப்பிளா விளக்கணும்னா சமூக அறிவியலாளர்கள் எமில் டர்கைம் மற்றும் மிர்சியா எலியட் குறிப்பிடுவதுபோல, 'மனிதர்கள் தங்கள் பயத்திற்கு மாற்றாக கண்டுபிடித்த ஒரு சிந்தனைப் பொருளே கடவுள்.' இதையொட்டியே விவேகானந்தரும், 'இறப்பு என்ற ஒன்று இருக்கும் வரை, அடுத்து என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாத வரை கடவுள் இருந்துகொண்டே இருப்பார்' என்கிறார்.

ஆக, பயம் விலக்குவது கடவுள்.

பசி அல்லது பட்டினி என காய்ந்து கிடக்கும் அந்த பாட்டிக்கு 100 ரூபாய் கடவுளாகத் தெரிகிறது என்றால், அந்த 100 ரூபாய் அவரின் பயம் போக்குகிறது.

அதே வேளையில் கோவிலுக்குள் சென்றிருக்கும் ஒருவரின் பயம் 100 ரூபாயை தாண்டியதாக இருக்கிறது.

எனக்கு நாயைக் கண்டு பயம் என்றால், நான் பயப்படும் அந்த நேரத்தில் எனக்கு துணையாக இருக்கும் கல் அல்லது குச்சி ஒரு கடவுள்.

இருளைக் கண்டு பயந்து கிடக்கும் ஒருவனுக்கு உடன் செல்லும் போது, 'நல்ல வேளை! சாமி மாதிரி நீ வந்த!' என அவன் நம்மிடம் சொல்வதில்லையா?

ஆக, பயம் போக்கி நம்பிக்கை தருவது எல்லாம் நம் கடவுள்.

இரண்டாவதாக, கடவுள் நம்மில் உருவாக காரணமாக இருக்கும் உணர்வு நம் குற்ற உணர்வு. அதாவது, செய்யக்கூடாத ஒன்றைச் செய்தாலும், செய்ய வேண்டிய ஒன்றைச் செய்ய தவறினாலும் நம்மேல் குற்ற உணர்வு தொற்றிக்கொள்கிறது. இந்த குற்றவுணர்வு நம்மிடம் இருக்கும் வரையும் கடவுளுக்கான தேவை நம்மிடம் இருந்துகொண்டே இருக்கிறது. 

இந்த இடத்தில் கடவுள் மன்னிப்பாக வருகிறார்.

மூன்றாவதாக, அடுத்து என்ன நடக்கும் என்ற ஏக்கம். இந்த ஏக்கத்திற்கு மருந்தாக இருப்பது எதிர்நோக்கு.
இவ்வாறாக, பயம், குற்றவுணர்வு, ஏக்கம் இந்த மூன்று எதிர்மறை உணர்வுகளும் நம்மிடம் இருக்கும் பேய் என்றால், இந்த மூன்றுக்கு மாற்றாக வரும் நம்பிக்கை, மன்னிப்ப, எதிர்நோக்கு தான் கடவுள்.

கடவுள் என்பவர் நம் உள்ளத்து உணர்வு என்றாலும் அவரை தங்கள் அனுபவமாக மோசே, தொடக்க திருச்சபை, மற்றும் இயேசு உணர்ந்து கொள்வதை இன்றைய முதல், இரண்டாம், மூன்றாம் வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

'இவ்வாறு, முதலும் முடிவுமற்ற உண்மையான இறைத்தன்மையை அறிக்கையிடும்போது,
ஆள்வகையில் தனித்தன்மையையும்,
இறையியல்பில் ஒருமையையும்,
மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஆராதிக்கின்றோம்!'

இன்றைய நாளின் முக்கியத்துவத்தை மேற்காணும் வரிகளில் பதிவு செய்கிறது இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை.

கடவுளைப் பற்றிய நம் அறிவு பல நேரங்களில் 'காணும் ஒன்றிலிருந்து காணாத ஒன்றிற்கு' என்ற திசையில்தான் இருக்கின்றது. உதாரணத்திற்கு, நியூட்டனின் புவிஈர்ப்பு விசை பற்றிய கண்டுபிடிப்பு. தன் கண்முன் நியூட்டன் காண்பது என்ன? மரத்திலிருந்து ஆப்பிள் விழுவது. காண்கின்ற இந்த நிகழ்விலிருந்து காணாத ஒன்றை அல்லது காண முடியாத ஒன்றை - புவி ஈர்ப்பு விசையை - கண்டுபிடிக்கின்றார். நியுட்டன் இதைக் கண்டறிவதற்கு முன் (டிஸ்கவரி) புவி ஈர்ப்பு விசை இல்லையா? அது என்றும் இருக்கிறது. ஆனால், இதுவரை மறைவாய் இருந்த ஒன்றை, மறைத்திருந்த திரையை அகற்றுகின்றார் நியூட்டன். 
இத்தகைய புரிதல்தான் நாம் கடவுளைப் புரிந்து கொள்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
மனிதர்கள் அல்லது உலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், இந்தக் காரியத்திற்கு (இபக்ட்) காரணம் ஒன்று இருக்க வேண்டும். இல்லையா?

என்னால் குறைவாக அறிய முடிகிறது என்றால், எல்லாவற்றையும் நிறைவாக அறியக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும். இல்லையா?

கைவேலைப்பாட்டிற்கே இவ்வளவு மாட்சியும், மேன்மையும் இருக்கிறது என்றால், இதை உருவாக்கிய கைக்கு அவை இன்னும் அதிகம் இருக்க வேண்டும். இல்லையா?

இப்படியாக, நாம் காணும் ஒன்றிலிருந்து காணாத ஒன்றிற்குக் கடந்து செல்வதில்தான் கடவுளைப் பற்றிய முதல் தேடல் இருக்கின்றது.

ஆனால், இந்தத் தேடல் எல்லா நேரங்களிலும் சாத்தியமா? இல்லை. அந்த நேரத்தில் கடவுளைப் பற்றிய அறிவை சாதகமாக்குவது அவரின் 'வெளிப்பாடு' (ரெவலேஷன்). கடவுளாகவே தன் இயல்பை மனிதர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அது இறைவாக்கு வழியாகவோ, அல்லது இறைமனிதர்கள் வழியாகவோ நிகழலாம். நம் கிறிஸ்தவத்தில் இந்த வெளிப்பாடு இன்னும் ஒரு படி அதிகம் போய், 'இறைவனே மனிதனாக மாறி' தன் இயல்பை வெளிப்படுத்துகின்றார். இதையே எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'பலமுறை பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்' (1:1) என்கிறார்.

ஆக, இன்று நமக்கு இரண்டு வகை அறிவு இருக்கின்றது:
அ. காணக்கூடிய ஒன்றிலிருந்து காண முடியாத ஒன்றிற்கு நம்மால் கடந்து செல்ல முடியும் அறிவு.
ஆ. இறைவனின் வெளிப்பாட்டினால் வரும் அறிவு.

நம் உலகம் இருக்கின்றது. உலகத்தில் நன்மை தீமை இருக்கின்றது. பாவம் இருக்கின்றது. இந்தப் பாவம் அழிய வேண்டும். உலகம் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்த காணக்கூடிய எதார்த்தங்களிலிருந்து நாம் கடவுளைப் படைக்கின்றோம்: 'உலகைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்,' 'உலகைப் பாவத்திலிருந்து மீட்பவர் ஒருவர் இருக்கிறார்,' 'உலகை தொடர்ந்து வழிநடத்துபவர் ஒருவர் இருக்கிறார்.' முதலாமவரை 'தந்தை' என்றும், இரண்டாமவரை 'மகன்' என்றும், மூன்றாமவரை 'தூய ஆவி' என்றும் அழைக்கின்றோம். இந்த வகை தமதிருத்துவம் 'இம்மனன்ட் டிரினிடி' அல்லது 'எகானமிக் டிரினிடி' அல்லது 'ஃபங்ஷனல் டிரினிடி' என அழைக்கப்படுகிறது.
இந்து மரபில் 'மும்மூர்த்திகள்' உண்டு - பிரம்மன், விஷ்ணு, சிவன் - பிரம்மன் படைக்கும் கடவுள், விஷ்ணு காக்கும் கடவுள், சிவன் அழிக்கும் கடவுள். இவர்கள் மூன்று கடவுளர்கள். மூவொரு இறைவன் அல்லர். மேலும், இவர்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையும் வருவதை புராணங்கள் சொல்கின்றன. இம்மூன்று பேருக்கும் சக்திகள் அல்லது துணை உண்டு - பிரம்மனுக்கு சரஸ்வதி, விஷ்ணுவுக்கு லக்ஷ்மி, சிவனுக்கு பார்வதி.  இந்த சக்திகளைக் கடவுளிடமிருந்து பிரித்துவிட முடியும். இவர்களுக்கு சக்தி இருப்பது போல, தந்தை அல்லது இயேசுவின் சக்தியே 'தூய ஆவி' என்று நாம் பிரித்தும் எடுத்துவிட முடியாது.
எனவே, தந்தை-மகன்-தூய ஆவி, மூன்று கடவுளர்களோ அல்லது மகனும், தூய ஆவியும் தந்தையின் சக்திகளும் அல்ல.

நீங்களும், நானும் முப்பரிமாண உலகில் வாழ்கின்றோம். நமக்கு நீளம், அகலம், உயரம் அல்லது தடிமன் என்ற மூன்று குணங்கள் உண்டு. நம்மில் ஒருவர் மற்றவரைப் போல இருக்கலாம், பேசலாம், சிரிக்கலாம். ஆனால், ஒருவர் மற்றவரும் ஒன்று என்று ஒருபோதும் ஆவதில்லை. கடவுளை நாம் இம்முப்பரிமாணத்திற்குள் அடக்க முடியாது. ஆக, அவர்கள் மூவராக இருந்தாலும் ஒருவர் மற்றவரும் ஒன்று என்று ஒருபோதும் ஆவதில்லை. 'ட்ரி' ('மூன்று') மற்றும் 'யூனிடா' ('ஒன்று') என்ற வார்த்தைகளின் இணைப்பே டிரினிட்டி. 1.1.1.=3 - கணிதக் குறியீட்டில் இப்படிச் சொல்லலாம்.

தமதிருத்துவத்திற்கு மூன்று உருவகங்கள் சொல்லப்படுவது வழக்கம்: (அ) கிளாவர் இலை - ஒரே இலைதான், ஆனால் இலை மூன்று பிளவுகளாக இருக்கும். (ஆ) தண்ணீர் - குணம் ஒன்றுதான். ஆனால் அது 'திடம்' (பனிக்கட்டி), 'திரவம்' (தண்ணீர்), 'வாயு' ('நீராவி') என்ற மூன்று நிலைகளில் இருக்கும். (இ) சூரியன் - ஒன்றுதான். ஆனால், அதன் வெளிப்பாடு 'ஒளி,' 'வெப்பம்,' 'கதிர்வீச்சு' என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது.

இந்த உருவகங்கள் வெறும் விரல்களே. இந்த விரல்கள் ஒருபோதும் அவை சுட்டிக்காட்டும் நிலவாக மாறிவிடுவதில்லை.

நிற்க.

தந்தை-மகன்-தூய ஆவி என்ற தமதிருத்துவம் பற்றி விவிலியம் என்ன சொல்கிறது:

முதல் ஏற்பாட்டில் மூன்று இடங்களில் 'தமதிருத்துவம்' என்ற மறைபொருளுக்கான புள்ளி இருக்கிறது.

(அ) கடவுளின் பெயர். கடவுளுக்கு 'எலொகிம்' என்ற பெயர் தொநூ 1ல் பயன்படுத்தப்படுகிறது. 'எல்' என்றால் ஒருமை. 'எலொகிம்' என்றால் பன்மை. ஆக, கடவுள் தன்னையே 'நாங்கள்' (ஒன்றுக்கு மேற்பட்டவர்) என்றுதான் அழைக்கின்றார். மேலும், 'கடவுளின் ஆவி தண்ணீரின் மேல் அசைவாடிக்கொண்டிருக்கிறது' என்றும் 1:2ல் நாம் வாசிக்கின்றோம். ஆக, கடவுள் என்பவர் ஒருவர். அவரின் ஆவி என்பவர் அவருக்கு வெளியே தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருப்பவர் என்ற புரிதலுக்கு நம்மை இது இட்டுச் செல்கிறது. ஆனால், எதற்காக 'எலோகிம்' என்ற வார்த்தை பன்மையில் பயன்படுத்தப்படுகிறது என்பது இது வரை மறைபொருளாகவே இருக்கிறது.

(ஆ) ஆபிரகாமை சந்திக்க வந்த அந்த மூன்று பேர். ஆண்டவர் மெம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றுகிறார் (காண். தொநூ 18:1-15). ஆபிரகாம் 'மூன்று மனிதர்கள்' தம் அருகில் நிற்கக் காண்கின்றார். 'ஆண்டவர்' ஒருவர் என்று சொல்லிவிட்டு, மூன்று மனிதர்களாகத் தோன்றுகிறார். இந்த நிகழ்வை தன் ஓவியத்தின் கருப்பொருளாக மாற்றும் ருப்ளேவ் என்ற ஓவியர், இவர்கள் மூவரையும் வானதூதர்கள்போல வரைந்து, இவர்கள் நடுவே உணவாக நற்கருணையை வைத்துவிடுகிறார். இதுவே புகழ்பெற்ற 'லா திரினித்தா' என்ற ஓவியம். 

(இ) ஞான இலக்கியம். எபிரேயர்களின் வாழ்வில் தோரா, இறைவாக்கு ஆகியவற்றைத் தொடர்ந்து ஞான இலக்கியங்கள் வளர்ந்த காலத்தில், கடவுளின் ஞானம் ஒரு மனிதராகவே உருவகிக்கப்படுகின்றார். மேலும் இந்த ஞானம் கடவுளுக்கு வெளியே நிற்பவராகவும் காட்டப்படுகின்றார் (காண். முதல் வாசகம்). ஆக, கடவுள் வேறு, அவரின் ஞானம் வேறு என்ற புரிதல் இங்கே தொடங்குகிறது.
இவ்வாறாக, முதல் ஏற்பாட்டில் சில தடங்கள் இருந்தாலும், புதிய ஏற்பாட்டில்தான் இது வளர்ச்சி பெறுகிறது.
தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்களைச் சந்திக்கும் இயேசு, 'தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்' (மத் 28:19) என்கிறார். இதை இயேசுவே சொன்னாரா அல்லது தன் காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த திருமுழுக்கு ஃபார்முலாவை இயேசுவே சொல்வது போல மத்தேயு எழுதினாரோ என்பது நமக்குத் தெரியவில்லை. 'நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக' (கலா 1:3) என்று 'தந்தை-மகன்' என்ற இருவரை முன்னிறுத்தும் பவுல், காலப்போக்கில், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக' (2 கொரி 13:13) என்கின்றார். (இந்த வார்த்தைகளைக் கொண்டுதான் திருப்பலியின் தொடக்கத்தில் அருள்பணியாளர் இறைமக்களை வாழ்த்துகின்றார்)

விவிலியத்தின் புரிதல் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாலும், தொடக்கத் திருஅவையில் தமதிருத்துவம் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன:

அ. இயேசு மனிதராகப் பிறந்தபோது தமதிருத்துவத்தில் குறை ஏற்பட்டதா?

ஆ. இயேசு பிறப்பிலேயே கடவுளின் மகனா, அல்லது 'நீ என் அன்பார்ந்த மகன்' என்று திருமுழுக்கின்போது தத்தெடுக்கப்பட்டாரா? (அடாப்ஷன்)

இ. இயேசு சிலுவையில் இறந்தபோது, அவர் மட்டும் இறந்தாரா? அல்லது அவரோடு சேர்ந்து மூவொரு இறைவனும் இறந்தாரா? அவர் மட்டும் இறந்தாhர் என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்? மூவொரு இறைவனும் இறந்தார் என்றால், அந்த இரண்டு நாட்கள் நாம் கடவுள் இல்லாமல் இருந்தோமா?

ஈ. இவர்கள் மூவரும் மூன்று கடவுளர்களா?

உ. தந்தை-மகன் என்று நாம் அழைக்கும்போதே, ஒருவர் மற்றவரைவிட மேலாக அல்லது முதன்மையாக இருக்கிறார் என்று ஆகிவிடுகிறது இல்லையா? (சப்ஆர்னிசனிசம்)

ஊ. கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் மூன்று பேராக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். முதல் ஏற்பாட்டில் யாவே என்றும், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு என்றும், தொடர்ந்து திருச்சபை வரலாற்றில் தூய ஆவி என்றும் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மோடலிசம்). ஆக, தமதிருத்துவம் என்பது ஒரு வெளிப்பாடே அன்றி அது இறைஇயல்பு அல்லவே?

எ. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மனிதர் என்று சொல்வது மனித இனம் மற்ற உயிர்களிடமிருந்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் ஆணவத்தின் வெளிப்பாடு இல்லையா?

இந்த எல்லாக் கேள்விகளையும் தாண்டி, 'கடவுள் மூவொரு இறைவன்' என்று நாம் நம்புகின்றோம்.

கடவுள் தமதிருத்துவமாய் இருப்பது அவரின் இயல்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. ஆனால், நாம் கடவுளை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படித்தான் நம்மையும், மற்றவர்களையும் பார்க்கின்றோம். ஆக, தமதிருத்துவம் பற்றிய புரிதல் நம் வாழ்க்கை மற்றும் உறவுநிலைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

'மூவொரு இறைவன் மறைபொருள்' வைக்கும் சவால் ஒன்றே:
உறவு

மூவொரு இறைவன் என்பவர் மூன்று ஆட்கள். உறவு நிலையில் இணைந்திருக்கும் நபர்கள். இந்த நபரோடு நாம் உறவுகொள்ள முடியும். அவர்களின் உடனிருப்பை நாம் அனுபவிக்க முடியும். 'மூவொரு இறைவனும், சமூகமும்' (டிரினிட்டி அன்ட் சொசைட்டி) என்ற நூலை எழுதும் விடுதலை இறையியலாளர் லெயோனார்டோ பாஃப் என்பவர், கடவுள் மூன்று ஆட்களாக இருப்பது நம் சமூகத்திற்கு பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார். ஒருவேளை கடவுள் ஒரு ஆளாக இருந்தால், 'நான் நினைப்பதே சரி. என் விருப்பப்படிதான் எல்லாம் நடக்க வேண்டும்' என்ற மனநிலை நம்மில் உருவாகிவிடும். அல்லது இரண்டு ஆட்களாக இருந்தால், அவர்களுக்குள் பிரிந்து கொண்டு, 'நான்-அவர்' என்ற நிலையும், பிரிவினையும் சமூகத்தில் உருவாகிவிடும். ஆனால் அவர்கள் மூன்று ஆட்களாக இருந்தால்தான் நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்க முடியும். ஆக, ஒருவர் மற்றவரோடு நாம் நெருங்கி நிற்கும் உறவு நிலைக்கு முன்மாதிரியாக இருப்பவர் மூவொரு இறைவன்.

இந்த இறைவன் நம் உறவிற்கு சொல்லும் குணங்கள் மூன்று: 

(அ) தனித்தன்மை - 'நானும்,' 'நீயும்' தந்தை-மகன், கணவன்-மனைவி, தோழன்-தோழி என எந்த உறவு நிலையில், எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், நானும், நீயும் வேறு. நான் நினைப்பதையே நீயும் செய்ய வேண்டும் என நான் நினைப்பது தவறு. 'ஐந்து விரல்களும் ஒன்றல்ல' என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், ஐந்து விரல்களும் ஒன்றாய் இருந்தால் எவ்வளவு நலம் என்ற நினைப்பில், என்னைப் போல அடுத்தவரும், அடுத்தவரைப் போல நானும் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

(ஆ) 'உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவர் என எண்ணுங்கள்' (உரோ 12:10). நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து எல்லாவற்றிலும் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒருவர் மற்றவரோடு கட்டப்பட்டவர்கள். பூமித்தாயின் ஒரே வயிற்றில் இருப்பவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒரு நோக்கம் இருக்கிறது. 'என் நோக்கம் பெரியது,' 'உன் நோக்கம் சிறியது' என்று சொல்லவோ, 'என் பிறப்பு உயர்ந்தது,' 'உன் பிறப்பு தாழ்ந்தது' என்று சொல்லவோ இடமில்லை.

(இ) கூட்டாற்றல். 'என் கணினி, என் மொபைல், என் கடன் அட்டை, என் வாகனம்' என அன்றாடம் வாழ்க்கையை நாம் சுருக்கிக்கொண்டே போகின்றோம். 'எனக்கு அடுத்திருப்பவரை' என் போட்டியாளராக மட்டும் பார்க்கவே என் நுகர்வு உலகம் எனக்கு கற்றுக்கொடுக்கிறது. சம்பளம் வாங்கும் மனைவி கணவனுக்குப் போட்டியாகத் தெரிகிறாள். தான் சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும் என் தோழியின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் செல்ஃபி எனக்குப் போட்டியாகத் தெரிகிறது. இந்த போட்டி உணர்வு, நான் அடுத்தவரை வெறுக்கவும், அல்லது அவரைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. 'யாரும் இல்லாமல் நீ வாழலாம்!' அல்லது 'நீ யாருக்காகவும் வாழத் தேவையில்லை!' 'உனக்கு வேண்டியது எல்லாம் சந்தையில் இருக்கிறது!' என்று சந்தைக் கலாச்சாரம் நம் உறவு நிலைகளைத் தகர்ப்பதில் குறியாக இருக்கிறது. அதன் சோதனைகளுக்கு நாம் நம்மையே கையளித்தல் சால்பன்று.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே.

இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன்.

உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!

வாழ்க்கையில் சில விஷயங்கள் மறைபொருளாக இருந்தால்தான் மகிழ்ச்சி. நட்பு, அன்பு, காதல், தாய்மை, மரியாதை, உண்மை, நேர்மை போன்ற அடிப்படை எதார்த்தங்கள் நமக்கு என்றுமே முழுமையாக விளங்குவதில்லை. அதுதான் வாழ்வின் மகிழ்ச்சி. புரிந்துவிட்டால் அங்கே தேடுவதற்கு ஒன்றுமேயில்லாமல் போய்விடுகிறது. நாம் ஒருவர் மற்றவரிடமும் மறைந்திருக்கும் இறைமையைக் காண வேண்டும். ஒவ்வொரு மனிதரும், இயற்கையின் ஒவ்வொரு அசைவும் நமக்கு இறைச்சாயலை உணர்த்த வேண்டும். 'காக்கைச் சிறகினலே நந்தலாலா, உந்தன் கரிய நிறம் தெரிகிறது நந்தலாலா' என்ற பாரதியின் வார்த்தைகளும் இறைமைத் தேடுதலையே உணர்த்துகின்றன. 'துறவியும், மீனும்' என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது. ஒரு குளத்தில் மீன் ஒன்றைக் காண்பார் ஒரு புத்தமதத் துறவி. பார்த்தவுடன் அந்த மீனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விடும். தன் அறையில் இருந்த ஒரு வலையை எடுத்து வீசுவார். மீன் தப்பி விடும். 'மீனைப் பிடிப்பது எப்படி?' என்று புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவார். தான் யாரைச் சந்தித்தாலும், 'மீனைப் பிடிப்பது' பற்றியே பேசுவார். அதை எப்படியும் பிடித்து விடவேண்டும் என்று இரவும், பகலும் முயற்சியெடுப்பார். அவரது சிந்தனை வேறெதிலும் செல்லவில்லை. அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றார். தன் சக துறவிகளைச் சேர்த்துக் கொண்டு முயற்சி செய்கின்றான். அப்போதும் முடியவில்லை. திடீரென ஒருநாள் அவனுக்குத் தோன்றுகிறது. மீனைப்பிடிப்பதை விட அதன்போக்கில் கலந்து விடுவதே நல்லது என்று எண்ணி குளத்திற்குள் குதிக்கின்றான். மீனோடு சேர்ந்து நீந்துகின்றான். இறுதியில் இருவரும் ஒன்றாக இணைந்துவிடுகின்றனர். இறைமை இறைமையோடு கலப்பதும், மனிதம் இறைமையோடு கலப்பதும், மனிதம் மனிதத்தோடு கலப்பதும் மறைபொருள்தான்.