Wednesday, July 30, 2014

இது எதுக்குங்க எனக்கு?

இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர்(கள்) யோபுவின் பிள்ளைகள். நூலின் தொடக்கத்திலேயே இவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'யோபுவுக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்' (யோபு 1:2). 'ஏழு' மற்றும் 'மூன்று' எனும் எண்கள் நிறைவைக் குறிப்பன. எதுவும் குறைவின்றி யோபு இருந்தார் என்று குறிப்பால் உணர்த்தவே இந்த எண்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

முதல் அதிகாரத்தில் வரும் இந்த 10 பேரும் அதே அதிகாரத்தில் அடுத்த 13 வசனங்களில் இறந்து போகின்றனர். 'எல்லாம் இருந்தது' என்ற நிலையிலிருந்து 'ஒன்றும் இல்லை' என்ற நிலைக்குப் போய்விடுகின்றார் யோபு.

19ம் அதிகாரம் 18ல் 'குழந்தைகள் என்னைக் கேலி செய்கின்றனர்' என்று சொல்லப்படுகின்றது. இங்கே குறிப்பிடப்படும் 'குழந்தைகள்' யோபுவின் குழந்தைகளா? அல்லது அவரின் பக்கத்து வீட்டுக் குழந்தைகளா? யோபுவின் குழந்தைகள் என்றால் அவரின் அனைத்துப் புதல்வர்களையும் அவர் இழக்கவில்லையா?

அதிகாரம் 42:13ல் 'அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்' என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்த ஏழும், மூன்றும் ஏற்கனவே உள்ள புதல்வர், புதல்வியரா? அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைகளா? புதல்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் யோபின் புதல்வியர் 'எமிமா', 'கெட்டிசியா' 'கெரேன் அப்பூக்கு' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், யோபின் புதல்வியரைப் போல அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை என்ற குறிப்பும் நூலில் உள்ளது.

யோபின் புதல்வரும், புதல்வியரும் சேர்ந்து விருந்துண்கிறார்கள். இது தவிர வேறு ஒன்றும் அவர்கள் செய்வதாகச் சொல்லப்படவில்லை. மேலும் 'விருந்துண்ணும்போது இவர்கள் ஒருவேளை கடவுளைப் பழித்துரைக்கலாம்' என யோபு பலி செலுத்துவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதிகம் மகிழ்பவர்களாகவும், அந்த மகிழ்வில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாதவர்களாவும், தன் தந்தையின் சொத்தை அனுபவிப்பவர்களாகவும் மட்டுமே இவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கதை மாந்தர்(கள்) நமக்குச் சொல்வது என்ன?

யோபு தான் பெற்றதை கடவுளின் கொடையாகக் கருதியது போல, இவர்கள் தங்கள் சொத்து அனைத்தையும் தன் தந்தையின் கொடையாகக் கருதுகின்றனர். நமக்குத் தரப்படும் கொடைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு தாராள மனம் வேண்டும். 'ஐயோ! இது எதுக்குங்க எனக்கு!' என்று நாம் சொல்கின்றோம். அடுத்தவர்கள் நமக்குக் கொடைகள் கொடுக்கும்போது கைகளை விரித்து ஏற்றுக்கொள்ளும் போது நாம் அவருடைய உரிமைச்சொத்தின், அவருடைய மகிழ்வின், அவருடைய அன்பின் பங்காளிகளாக மாறுகின்றோம்.

'இது என் உடல்! இது என் இரத்தம்!' என்று இயேசு தன் சீடர்களிடம் அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, 'ஐயோ! இது எதுக்குங்க எங்களுக்கு! நாங்கள் சாப்பிட்டு வந்துட்டோமே!' என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இயேசுவின் கொடையே நமக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கும்.

எல்லாம் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது. நம்மால் தனியாக நிற்க முடியும் தான். ஆனால் நமது நீட்சியாக இருக்கும் நம் அன்பிற்குரியவர்கள் தங்கள் நேரத்தையும், ஆற்றலையும், அறிவையும், பொருளையும் நம்மோடு பகிரும்போது புன்னகையோடு ஏற்றுக்கொள்ளும் வரம் கேட்கலாமே இறைவனிடம்!


1 comment:

  1. சரியாக்க் கூறியுள்ளீர்கள்.அடுத்தவருக்கு ஒரு பரிசு கொடுக்க எப்படி ஒரு தாராள உள்ளம் வேண்டுமோ அதே தாராள உள்ளம் அந்தப் பொருளைப் பெறுபவருக்கும் வேண்டும்.'ஈகோ' நிறைந்திருக்கும் ஒருவரால் மற்றவரிடமிருந்து வரும் எதையுமே இரசிக்க இயலாது.நாம் கொடுப்பவரா...பெறுபவரா..இருவரின் வேலையையும் நிறைவாகச் செய்யவும்,செய்பவரைப் பாராட்டவும் பழகுவோமே!

    ReplyDelete