Sunday, May 31, 2020

எட்டு பண்புகள்

இன்றைய (1 ஜூன் 2020) முதல் வாசகம் (2 பேது 1:1-7)

எட்டு பண்புகள்

பாஸ்கா காலம் நிறைவுற்று இப்போது நாம் ஆண்டின் பொதுக்காலம் ஒன்பதாம் வாரத்திற்குள் நுழைகின்றோம். தவக்காலத்தின் இறுதி நாள்கள் தொடங்கி பாஸ்கா காலம் முழுவதுமே நமக்கு ஆலய வழிபாடு இல்லாமல் போனது நிறையவே வருத்தம் தருகிறது. ஆலயத்தின் கதவுகள் விரைவில் திறக்கப்படும்.

நமக்காவது கொரோனா காலத்தில்தான் ஆலயம் இல்லை, அல்லது ஆலய வழிபாடு இல்லை. ஆனால், தொடக்கத் திருஅவையில் ஆலயமே இல்லை. இல்லத் திருஅவைகள் என்று சொல்லப்படுகின்ற சில வீடுகள் இணைந்த திருஅவைதான் இருந்தது. இன்று நாம் செய்திகளை கட்செவி அல்லது காணொளி வழியாக வழங்குவதுபோல, அன்றைய நாள்களில் திருத்தூதர்களின் அவர்களின் வழிவந்தவர்களும் கடிதங்கள் வழியாக வழங்கினர். கடிதம் எழுதுவது என்பது இன்றைய நம் அரசியல் தலைவர்கள் எழுதுவது போல அல்ல. நம் மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் காவிரி நீர் கிடைக்க நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதுவார், ஈழப்போர் நிற்க கடிதம் எழுதுவார். ஆனால், தன் மகனுக்கு அமைச்சரவையில் இடம் பெற விமானம் ஏறிச் சென்றார். ஆளும் இடங்களில் கடிதங்கள் என்பவை தேவையற்ற சுமைகளே.

ஆனால், இப்படிப்பட்ட கடிதம் போல அல்ல இன்றைய முதல் வாசகம் தொடங்கி நாம் இனி வரும் நாள்களில் வாசிக்கப் போகும் கடிதங்கள். அவை, மனித ஆன்மாவின் எண்ணங்களை ஊடுருவிச் செல்பவை. மாற்றத்தை ஏற்படுத்துபவை. எண்ணங்களைச் சீர்படுத்துபவை. உணர்வுகளை நெறிப்படுத்துபவை.

பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் பெரும்பாலும் துன்பம் பற்றியும், துன்பத்தை எதிர்கொள்தல் பற்றியும் எழுதுகின்றார். ஆனால், இரண்டாவது மடலில் அப்படிப்பட்ட ஓட்டம் இல்லை. கிறிஸ்தவ அழைப்பும், வாழ்க்கை நிலையும் எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலாகவே இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தின் நிறைவாக இருக்கும் அருள்வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது:

'ஆகையால், நீங்கள் உங்கள்
நம்பிக்கையோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும்,
அறிவோடு தன்னடக்கமும்,
தன்னடக்கத்தோடு மனஉறுதியும்,
மனஉறுதியோடு இறைப்பற்றும்,
இறைப்பற்றோடு சகோதர நேயமும்,
சகோதர நேயத்தோடு அன்பும்
கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்' (2 பேது 1:5-7)

இங்கே, நம்பிக்கை தொடங்கி அன்பு வரை பேதுரு எட்டு பண்புகளை முன்வைக்கின்றார். இலக்கிய அமைப்பு அடிப்படையில் இங்கே 'ஏணிப்படி வரிசை' அமைப்பைப் பார்க்கிறோம். அதாவது, ஒரு பண்பு இன்னொரு பண்பின் தொடக்கமாக இருக்கும். எ.கா., நம்பிக்கை, நற்பண்பு, நற்பண்போடு அறிவு. ஆக, ஒவ்வொரு பண்பும் அதற்கு முந்தைய பண்பின் மேல் கட்டப்பட வேண்டும். நம்பிக்கை இருந்தால் நற்பண்பு இருக்க வேண்டும். அல்லது நற்பண்பு நம்பிக்கையில் கட்டப்பட வேண்டும்.

இந்த எட்டு பண்புகள் இருந்தால் என்ன நடக்கும்?

அவரே தொடர்கிறார்: 'இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால் நீங்கள் சோம்பேறிகளாகவும், பயனற்றவர்களாகவும் இருக்க மாட்டீர்கள்!'

என்ன அழகான வார்த்தைகள்!

நாம் பல நேரங்களில் நம் வாழ்க்கை யாருக்கும் பயன்தரவில்லையே என்றும், எல்லா நாளும் ஒரே நாள் போலக் கடந்து செல்கிறதே என்றும், குறுகிய வட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் புலம்புகிறோம்.

அப்படிப்பட்ட புலம்பலும், கலக்கமும், சோர்வும் தேவையில்லை.

மேற்காணும் எட்டு பண்புகளும் நம்மைச் சுறுசுறுப்பாகவும், பயனுள்ளவர்களாகவும் வைத்திருக்கும்.

நற்செயல்: இந்த எட்டு பண்புகளில் என்னிடம் இருப்பவை, இல்லாதவை, நான் வளர்க்க வேண்டியவை ஆகியவற்றை எண்ணிப் பார்த்தல்.

Saturday, May 30, 2020

இது எப்படி?

தூய ஆவியார் பெருவிழா

நேற்று மாலை திரு. சுப. வீ அவர்களின், 'நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி' உரை கேட்டேன். தன் உரையை அவர் மகாபாரதத்தில் நடக்கும் ஒரு நிகழ்வோடு தொடங்குகிறார். மகாபாரதத்தில் குருக்ஷே;த்திரப் போரின் 13ஆம் நாள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எதிரான பங்காளி சண்டை அது. பாண்டவர்களின் அணியில் நின்று போரிடுவதற்காக அன்றைய நாளில் அர்ஜூனின் மகன் அபிமன்யு வருகிறார். எதிரணியினரான கௌரவர்கள் 'சக்கர வியூகம்' அமைத்துள்ளனர். அதாவது, சக்கரம் போல தங்கள் படையை நிறுத்தியுள்ளனர். தாமரை, சங்கு, முதலை என்று நிறைய வியூகங்கள் அமைக்கப்படுவதுண்டு. வியூகத்தை உடைத்தால்தான் எதிராளியின் அணிக்குள் மற்றவர்கள் நுழைய முடியும். யார் இதை உடைப்பார்கள்? என்ற கேள்வி எழும்போது, அபிமன்யு முன்வருகிறார். அபிமன்யு வெற்றியுடன் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே போகிறார். ஆனால், என்ன கொடுமை என்றால், உடைத்து உள்ளே சென்ற அபிமன்யு வெளியே வர முடியவில்லை. ஏனெனில், அவர் கற்றது பாதிதான். உள்ளே போகத் தெரிந்த அவருக்கு வெளியே வரத் தெரியவில்லை. உள்ளே அகப்பட்டுக் கொண்ட அவர் இறந்துவிடுகிறார்.

பாதி அறிவுடன் செயலாற்றும் ஒருவரை அபிமன்யுவிற்கு ஒப்பிடுவது வழக்கம்.

மேற்காணும் நிகழ்வைச் சுட்டிக்காட்டுகின்ற திரு. சுப. வீ அவர்கள், 'ஊரடங்கு என்னும் சக்கர வியூகம் அமைத்து, கொரோனாவுக்கு எதிரான போரில் உள்ளே சென்ற நம் அரசுக்கு வெளியே வரத் தெரியவில்லை' என்கிறார். ஊரடங்கினால் கொரோனோ கட்டுக்குள் வந்துவிடும் என்றும், 21 நாள்கள் இருந்தால் போதும் ஒழித்துவிடலாம் என்றும், மகாபாரதப் போர் 18 நாள்கள் என்றால் கொரோனோ போர் 21 நாள்கள் என்றும், கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் அனைவரும் இராணுவ வீரர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்த நடுவண் மற்றும் மாநில அரசுகள், இன்று ஊரடங்கிலிருந்து வெளியில் வர இயலாமல் நிற்கின்றனர்.

நிற்க.

வெளியில் வர வகையறியாத சீடர்களை வெளியில் கொண்டு வந்து நிறுத்தியதும், அவர்களின் நாவுகளின் கட்டுக்களை அவிழ்த்து அவர்களைப் பேச வைத்ததும் தூய ஆவியாரே.

அவரின் திருநாளை, பெந்தெகோஸ்தே பெருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

சீடர்கள் வெளியில் வந்ததையும், அவர்கள் பேசுவதையும் தத்தம் மொழிகளில் கேட்கின்ற அனைவரும், 'இது எப்படி?' எனக் கேட்கின்றனர், வியக்கின்றனர்.

தூய ஆவியாரைப் பற்றி சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு மூன்று விவிலியப் பகுதிகள் நினைவிற்கு வருவதுண்டு:

ஒன்று, திப 19:2. பவுல் தன்னுடைய தூதுரைப் பயணத்தில் எபேசு வருகின்றார். அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்கின்றார். அங்கிருந்தவர்கள், 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' எனப் பதில் தருகிறார்கள்.

இன்று, தூய ஆவியைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம்மையே கேட்டால், அல்லது நம் வாழ்வை சற்றே கூர்ந்து கவனித்தால், தூய ஆவி என்னும் ஒன்று நம்மில் இல்லாததுபோல நாம் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறுதிப்பூசுதலின் போது கிறிஸ்தவர்களாகிய நம் அனைவர்மேலும், குருத்துவ அருள்பொழிவின் போது நம் அருள்பணியாளர்கள்மேலும் இறங்கி வந்த ஆவியார் என்ன ஆனார்?

இரண்டு, திபா 51:11. பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் தாவீது பாடியதாகச் சொல்லப்படுகின்ற திருப்பாடல் 51இல், தாவீது ஆண்டவரிடம், 'உம் முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்! உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்!' என மன்றாடுகின்றார். தாவீது ஏன் இப்படி மன்றாட வேண்டும்? ஏனெனில், சவுல் கீழ்ப்படியாமையால் பாவம் செய்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலைவிட்டு நீங்கியது' (காண். 1 சாமு 16:14) அவருக்குத் தெரியும். ஆண்டவரின் ஆவி நீங்கியதால் சவுல் பொறாமையாலும், தீய எண்ணங்களாலும், வன்மத்தாலும், பிளவுண்ட மனத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறார்.

இன்று, ஆண்டவரின் ஆவி நம்மிடம் இருக்கிறதா? அல்லது நீங்கிவிட்டதா? ஒருவேளை நம்மிடமிருந்து அவர் நீங்கிவிட, சிம்சோன் போல நாம் அதை அறியாமல் இருக்கிறோமோ? (காண். நீத 16:20)

மூன்று, திபா 23:5. சில நாள்களுக்கு முன் இத்திருப்பாடல் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது, இத்திருப்பாடலில் நம் கத்தோலிக்க திருஅவையில் உள்ள ஏழு அருளடையாளங்களும் இருப்பதைக் காண முடிந்தது. அந்த வகையில், ஆவியாரைப் பற்றிய ஒரு வாக்கியமாக நான் கருதுவது: 'என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' இதன் சூழல் என்னவென்றால், எதிரிகளின்முன் விருந்து. இந்த 'விருந்தை' நாம் நற்கருணை என எடுத்துக்கொள்ளலாம். நம் எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் பசியும், வறுமையும், வீடின்மையும், ஆடையின்மையும், அல்லது சில நேரங்களில் நம் அழிவை. இப்படி எதிர்பார்க்கும் எதிரியின் முன் ஆண்டவர் நமக்கு விருந்தை ஏற்பாடு செய்கிறார் என்றால், அந்த எதிரியின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடுபொடியாக்குகின்றார் என்றே பொருள். கடவுள் அத்தோடு நிறுத்தவில்லை. நம் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார். 'தலையில் நறுமணத் தைலம் பூசுதல்' என்பது திருப்பொழிவின் அடையாளம். அந்த நிகழ்வில் ஆண்டவர் தன் ஆவியை திருப்பொழிவு செய்யப்படுபவருக்கு அருள்கிறார். இதன் விளைவு, 'பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' அதாவது, 'குறையொன்றும் இல்லை' என்ற நிலை உருவாகிறது.

இன்று, நம்மிடம் குறைவு மனம் இருந்தால் ஆண்டவரின் ஆவி நம்மிடம் இல்லை என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று இறைவார்த்தைப் பகுதிகளின் பின்புலத்தில், இன்றைய வாசகங்களைப் பார்க்கும்போது, தூய ஆவியாரின் வருகை, முன்பிருந்த நிலையை மாற்றி, 'இது எப்படி!' என்று காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:1-11) பெந்தெகோஸ்தே நிகழ்வு பற்றிச் சொல்கிறது. நிகழ்வில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று, காற்று. இரண்டு, நாக்கு. இவ்விரண்டு வார்த்தைகளுமே இரட்டைப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, காற்று. இந்த நிகழ்வில் பெருங்காற்று வீசுகிறது. அதே வேளையில், ஆவியார் என்னும் காற்று சீடர்களுக்குள் நுழைகிறது. இரண்டு, நாக்கு. பிளவுண்ட நெருப்பு நாக்குகள் இறங்கி வருகின்றன. சீடர்கள் வௌ;வேறு நாவுகளில் (மொழிகளில்) பேசுகின்றனர். ஆக, முன்பில்லாத ஒரு நிலை இப்போது வருகிறது. அடைத்து வைக்கப்பட்ட கதவுகள் காற்றினால் திறக்கப்படுகின்றன. கட்டப்பட்ட நாவுகள் பேச ஆரம்பிக்கின்றன.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13), புனித பவுல், கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், ஆவியாரையும் அவர் அருளும் வரங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையாளர்கள் தாங்கள் நம்பிக்கை நிலைக்குள் வந்தவுடன் ஆவியாரின் அருள்பொழிவையும், வரங்களையும் பெறுகின்றனர். ஆக, அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை, பிரிவினை வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-23) நம்மில் சில ஐயங்களை எழுப்புகின்றது.

ஒன்று, இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்று நடக்கிறது. அதாவது, 'வாரத்தின் முதல் நாள். மாலை வேளை.' ஆனால், வாரத்தின் முதல் நாள், மாலை வேளையில், லூக்காவின் பதிவின்படி (காண். லூக் 24), இயேசு எம்மாவு நகரில் இருக்கிறார். இயேசு எங்கேதான் இருந்தார்? யோவான் சொல்வது போல எருசலேமிலா? அல்லது லூக்கா சொல்வது போல எம்மாவு நகரிலா? அல்லது இரு இடங்களிலுமா?

இரண்டு, இந்த நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின் உயிர்ப்பு நாளில் சீடர்களுக்கு வழங்கப்படுகிறார். ஆனால், லூக்காவின் பதிவின்படி பெந்தெகோஸ்தே நாளில்தான் ஆவியார் இறங்கி வருகின்றார்.

மூன்று, இந்த நிகழ்வில் தோமா இல்லை. அப்படி என்றால், தோமாவின் மேல் தூய ஆவி அருளப்படவில்லையா? அல்லது மன்னிப்பு வழங்கும், நிறுத்தும் அதிகாரம் தோமாவுக்கு வழங்கப்படவில்லையா?

நான்கு, இந்த நிகழ்வில் இயேசு தன் சீடர்களின்மேல் ஆவியை ஊதினார் என்றால், அவர்கள் மீண்டும் எட்டு நாள்களுக்குப் பின்பும் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்தது ஏன்? இயேசு ஊதிய ஆவி அவர்களுக்கு ஊட்டமும் ஊக்கமும் தரவில்லையா?

இந்த ஐயங்கள் ஒரு பக்கம் எழ, மற்றொரு பக்கம், இயேசு இங்கே பாவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் பதிவுகளில் பாவம் பற்றிய குறிப்பு இல்லை, மாறாக, பணி பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா.' யோவான் நற்செய்தியின் பின்புலத்தை இங்கே புரிந்துகொள்வோம். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'நம்பிக்கையின்மை.' ஆக, பாவம் நீக்குதல் என்பது நம்பிக்கையின்மை நீக்குதல் என எடுத்துக்கொள்ளலாம். இங்கே, சீடர்கள் தாங்களே நம்பிக்கையின்மையில்தான் இருக்கிறார்கள். ஆக, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதன் மேல் தன் ஆவியை ஊதியதுபோல, இன்று இயேசு தன் சீடர்கள்மேல் ஆவியை ஊதுகின்றார். அவர்கள் இனி இன்றுமுதல் தங்கள் இயல்பு விடுத்து இயேசுவின் இயல்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சீடர்களின் பயம் மறைந்து, துணிவு பிறக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், பிரிவினை மறைந்து, ஒருமைப்பாடு பிறக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையின்மை மறைந்து, நம்பிக்கை பிறக்கிறது.

முந்தைய நிலை இப்போது இல்லை.

'இது எப்படி?' - தூய ஆவியாரால்!

இன்று நான் என் வாழ்வைப் பார்த்து, 'இது எப்படி?' என்று என்னால் கேட்க முடியுமா? அல்லது 'ஐயோ! மறுபடியும் இப்படியா?' என்று புலம்பும், பரிதவிக்கும் நிலையில் நான் இருக்கின்றேனா?

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 104), பாடலாசிரியர், 'ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்!' எனப் பாடுகின்றார்.

என் முகம் ஆண்டவரின் ஆவியாரால் புதுப்பிக்கப்படுகிறதா?

சீடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடம் இருந்ததுபோல, என்னுள் இருக்கும் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, வெட்கம், குற்றவுணர்வு, பலிகடா மனநிலை, சோர்வு, பின்வாங்குதல், இறுமாப்பு, பிரிவினை எண்ணம் ஆகியவை மறைகின்றனவா?

என் வாழ்க்கை இறைவனை நோக்கித் திரும்பியுள்ளதா?

என்னால் எல்லாரையும் மன்னிக்கவும் அன்பு செய்யவும் முடிகிறதா?

என் வாழ்வின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரும், தலைவரும் நான் என்ற எண்ணம் என்னில் வருகிறதா?

என் அருள்பொழிவு நிலையை நான் அன்றாடம் உணர்கிறேனா?

என் வாழ்வின் கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றிகூறுகிறேனா?

கண்ணியத்தோடு என் கடப்பாடு இருக்கிறதா?

இப்படியாக,

முன்பிருந்த நிலை என்னில் மாறினால், என்னைச் சுற்றியிருக்கும் நிலையும் மாறும்.

இந்த நேரத்தில் நான், 'இது எப்படி?' என்று எருசலேம் நகரத்தார் போலக் கேட்க முடியும்.

இப்படிக் கேட்டலில்தான் நான் எந்த வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும் செபங்களும்!

Friday, May 29, 2020

இவருக்கு என்ன ஆகும்?

இன்றைய (30 மே 2020) நற்செய்தி (யோவா 21:20-25)

இவருக்கு என்ன ஆகும்?

யோவான் நற்செய்தியின் இறுதிப் பகுதிக்கும், பாஸ்கா காலத்தின் இறுதி நாளுக்கும் வந்துவிட்டோம். யோவான் தன் நற்செய்தியை மிக அழகாக நிறைவு செய்கிறார்: 'இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.'

இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமா? அல்லது கூற்றா?

இல்லை.

இறையனுபவம் அல்லது இயேசு அனுபவம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஆக, உண்மையாகவே அனைத்து அனுபவங்களும் எழுதப்பட்டால் இந்த உலகமே கொள்ளாது.

யோவான் ஒரு அழகான நிகழ்வோடு நிறைவு செய்கிறார். அது அவரைப் பற்றியதே. அதாவது, இயேசு அன்பு செய்த சீடர் பற்றியது.

பேதுரு இயேசுவிடம் அவரைச் சுட்டிக்காட்டி, 'இவருக்கு என்ன ஆகும்?' அல்லது 'இவருக்கு என்ன நிகழும்?' எனக் கேட்கின்றார்.

இயேசுவோ, 'உனக்கு என்ன?' என்று கேட்டுவிட்டு, 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.

இந்த நிகழ்வின் பொருள் என்ன?

இது பேதுருவின் ஆளுமை பற்றியது அல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரையும் பற்றியது.

அதாவது, இறையனுபவம் பெறும்போது நம்மில் எழுகின்ற ஒரு கேள்வி என்னவென்றால், 'எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. நான் இறைவனைப் பின்பற்றுகிறேன். ஆனால், இவருக்கு என்ன ஆகும்?' என்று அடுத்திருப்பவரோடு ஒப்பிடும் மனநிலை.

என் நம்பிக்கைப் போராட்டத்தில் நான் கடவுளிடம் அடிக்கடி கேட்டதும் இதுதான். 'இந்து சகோதரருக்கு என்ன ஆகும்?' 'இசுலாம் சகோதரிக்கு என்ன ஆகும்?' 'கடவுளை நம்பாத ஒருவருக்கு என்ன ஆகும்?' 'திருப்பலிக்கு வராதவருக்கு என்ன ஆகும்?' 'செபமாலை செபிக்காதவருக்கு என்ன ஆகும்?'

இந்தக் கேள்விகள் இரண்டு காரணங்களால் எழுகின்றன:

ஒன்று, இயேசுவைப் பின்பற்றுவதில் எனக்குள்ள தயக்கத்தால்.

இரண்டு, என்னை அவர்களோடு ஒப்பிட்டு நான் அவர்களைவிட பெரியவன் என்று இறுமாப்பு கொள்வதால்.

இறைவனைப் பின்பற்றுவதில், இவை இரண்டுமே தவறு. தயக்கமும், இறுமாப்பும் சீடத்துவத்தின் பெரிய எதிரிகள்.

பேதுருவுக்கும் இதே தயக்கமும் இறுமாப்பும் இருந்திருக்கலாம். பேதுருவை நெறிப்படுத்துகின்ற இயேசு, 'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்!' என்கிறார்.

இன்று நாம் இறையனுபவம் பெற்றுவிட்டால், நம் கண்கள் இயேசுவின்மீது மட்டும் இருக்கட்டும். அப்போது தயக்கமும் இறுமாப்பும் மறைந்துவிடும்.

நற்செயல்: இயேசுவின் மேல் நம் கண்கள் பதிப்பதற்கு தடையாக இருக்கின்ற கவனச் சிதறல்கள் எவை?

Thursday, May 28, 2020

அன்பு செய்கிறாயா?

இன்றைய (29 மே 2020) நற்செய்தி (யோவா 21:15-19)

அன்பு செய்கிறாயா?

பாஸ்கா காலம் நிறைவுற இன்னும் ஓரிரு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியின் இறுதிப் பிரிவுகளிலிருந்து நாம் இன்றும் நாளையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல்.
ஆ. பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு
இ. பேதுருவின் இரண்டாம் அழைப்பு

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?'

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், மற்றவர்கள் சற்று தூக்கக் கலக்கமாக அங்கே தூங்கிப் போக, பேதுருவை தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். இங்கே, 'அன்பு' என்ற வார்த்தை, கிரேக்கத்தில் இரண்டு வார்த்தைகளாக உள்ளது: முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, 'அகாப்பாவோ' (தன்னலமற்ற அன்பு) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், 'ஃபிலயோ' (நட்பு அல்லது உறவுசார் அன்பு) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு.

ஆ. நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: 'உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.' இது பேதுருவின் இறுதிநாள்கள் மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். 'என்னால் இது இயலாது' என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

இந்த முதிர்ச்சியின் அடையாளங்கள் எவை? அண்மையில் நான் கண்ட ஒரு போஸ்டரில் அவை குறிக்கப்பட்டிருந்தன:

முதிர்ச்சியின் அடையாளங்கள்: சின்ன சின்ன விவாதங்கள் உன்னை காயப்படுத்துவதில்லை. வெளியில் உலாவச் செல்வதைவிட தூங்குவது சிறந்தது எனத் தோன்றும். நீ அதிகமாக மன்னிப்பாய். நீ திறந்த உள்ளத்துடன் இருப்பாய். வேற்றுமைகளை மதிப்பாய். அன்பை வலுக்கட்டாயமாக வரவைக்க மாட்டாய். மனம் வலித்தாலும் பொறுத்துக்கொள்வாய். யாரையும் எளிதாகத் தீர்ப்பிட மாட்டாய். மடத்தனமான வாய்ச்சண்டையை விட மௌனம் சிறந்ததென்பாய். உன் மகிழ்ச்சி மற்றவர்களிடமல்ல, உன்னிடம் தான் இருக்கிறது எனக் கண்டுகொள்வாய். நீதான் சரி என்று உன்னை நிரூபிக்க முயற்சிக்க மாட்டாய். உன்னை மற்றவர்களோடு ஒப்பீடு செய்ய மாட்டாய். தேவைக்கும் ஆசைக்குமான வித்தியாசம் அறிவாய். ஒவ்வொருவரும் அவரவருடைய பார்வையில் சரி என ஏற்றுக்கொள்வாய்.

இவை எல்லாவற்றையும் ஒற்றை வாக்கியத்தில், 'கைகளை விரித்துக் கொடுத்தல்' என்று சொல்லிவிடலாம்.

இ. 'என்னைப் பின்தொடர்'

இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். பின்தொடர்தல் என்பது பேதுரு இனி தன் வேலைகளை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல. இறக்கும் வரையிலும்!

நற்செயல்: இந்நிகழ்வில் நம்மைப் பொருத்திப் பார்த்து இயேசுவோடு உரையாடுதல்.


Wednesday, May 27, 2020

விவேகம்

இன்றைய (28 மே 2020) முதல் வாசகம் (திப 22:30, 23:6-11)

விவேகம்

பவுல் எருசலேமின் தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. 

சங்கத்திற்குள் நுழைகின்ற பவுல், அங்கே இருக்கின்ற சூழலைச் சட்டென்று புரிந்துகொள்கிறார். அங்கிருப்பவர்கள் இரு குழுவினராக இருக்கின்றனர். ஒரு குழுவினர் பரிசேயர், இன்னொரு குழுவினர் சதுசேயர். இவர்கள் இருவரும் யூதர்கள் என்றாலும், நம்பிக்கை அடிப்படையில் இரு குழுவினருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார் பவுல். 

பரிசேயர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். சதுசேயர்கள் அரசியல் பலத்தில் சிறந்தவர்கள்.

பரிசேயர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் நோக்கில், 'நான் ஒரு பரிசேயன்...' என்று தன்னுடைய வாதத்தைத் தொடங்குகிறார். உடனே அங்கே மோதல் உருவாகிறது. ஆக, பவுல் விசாரிப்பதற்காக அழைத்துவரப்பட்ட காரணம் ஒன்று, ஆனால், இங்கே நடப்பது வேறு. 

இதை பவுலின் விவேகம் என்று சொல்வதா? அல்லது அவருடைய சந்தர்ப்பவாதம் என்று சொல்வதா?

ஒருவரின் விவேகம் இன்னொருவரின் சந்தர்ப்பவாதம்.

பவுலின் இச்செயல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'ஒருவருக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.'

எடுத்துக்காட்டாக, நாம் ரின் சோப் வாங்க கடைக்குப் போறோம். 'ரின் சோப் இருக்கா?' எனக் கேட்கின்றோம். ஆனால், கடைக்காரர், 'ஸர்ஃப் எக்ஸெல்தான் நல்லா இருக்கும்' அல்லது 'இந்தாங்க ஏரியல்' என்று கொடுத்தால், நாம் அந்தக் கடைக்கு மீண்டும் செல்ல மாட்டோம். ஏனெனில், 'அவர் நான் விரும்புவதை அல்ல, தான் வைத்திருப்பதையே கொடுக்கிறார்.' 

பவுலிடம் கொடுப்பதற்கு நிறைய இருந்தது. இயேசுவைப் பற்றி, தன் பயணம் பற்றி, தன் நம்பிக்கை பற்றி என அவர் நிறைய பேசியிருக்க முடியும். ஆனால், அது தலைமைச் சங்கத்தின் தேவை இல்லை என்பதை உடனடியாக உணர்கின்றார். அவர்களுக்குத் தேவையானது எல்லாம், 'நீ யார்? அல்லது நீ யார் பக்கம்?' என்ற கேள்விக்கான விடைதான். பவுல் அதை அளிக்கின்றார்.

இதுதான் வெற்றியின் இரகசியம்.

இரண்டு விடயங்கள்,

ஒன்று, அடுத்தவர் நம்மிடம் எதையும் கேட்காமல் அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

இரண்டு, அடுத்தவர் கேட்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

நற்செயல்: நாம் விவேகமற்று நடந்த ஏதாவது ஒரு செயலை எண்ணி நமக்குள்ளே சிரித்துக்கொள்தல்.

Tuesday, May 26, 2020

உண்மையில்

இன்றைய (27 மே 2020) நற்செய்தி (யோவா 17:11-19)

உண்மையில்

இயேசு தன் சீடர்களுக்காகச் செய்யும் இறைவேண்டல் தொடர்கிறது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், 'உலகு' என்ற வார்த்தையோடு இணைந்து, 'உண்மை' மற்றும் 'அர்ப்பணம்' என்னும் இரண்டு வார்த்தைகள் மேலோங்கி நிற்கின்றன. இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றிச் சிந்திப்போம்.

அ. 'உண்மை' 

கிரேக்கத்தில் 'அலெதேயா' என்று அழைக்கப்படுகிறது. இது, 'அ' மற்றும் 'லெதேயா' என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டு. ஒரு பொருளை மறுப்பதற்கு 'அ' முன்னால் சேர்த்து எழுதுவது வழக்கம். தமிழிலும் இதுபோன்றே இருக்கிறது. 'மலா' அல்லது 'மலம்' என்றால் 'அழுக்கு'. ஆக, அழுக்கற்ற தன்மையைச் சுட்டிக்காட்ட, அ-மலா அல்லது அ-மலம் என்று சொல்கிறோம். 'ஞானி' என்றால் கடவுளை அறிந்தவர். அ-ஞானி அல்லது அஞ்ஞானி என்றால் கடவுளை மறுப்பவர். 

'லெதேயா' என்றால் 'மறைக்கப்பட்ட நிலை' அல்லது 'ஒளிவுமறை நிலை' அல்லது 'இருட்டு நிலை' என்பது பொருள். இதை மறுக்கும் விதத்தில், இந்த வார்த்தைக்கு முன் 'அ' இணைத்தால், 'மறைக்கப்படாத நிலை,' 'ஒளிவுமறை இல்லாத நிலை,' 'இருட்டு இல்லாத நிலை' என்று பொருள் கொள்ளலாம்.

ஆக, உண்மை என்றால் மறைக்கப்படாத, ஒளிவுமறை இல்லாத, இருட்டு இல்லாத நிலை.

இந்த நிலை சாத்தியமா என்றால் இல்லை?

எடுத்துக்காட்டாக, நம் மொழி இயல்பாகவே வரையறைக்குட்பட்டது. நம் வார்த்தைகளால் எல்லாவற்றையும் நம்மால் அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. 'எனக்கு தலை வலிக்கிறது' என்று நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். இந்த மூன்று வார்த்தைகளின் பொருளை நீங்கள், உங்களுக்கு ஏற்கனவே வந்த தலைவலியின் பின்புலத்தில் புரிந்துகொள்வீர்கள். ஆனால், தலை வலியை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், 'தலை எப்படி வலிக்கும்? நீ பொய் சொல்கிறாய்!' என்று என்னிடம் சொல்வீர்கள். ஆக, நம் மூளையில் ஏற்கனவே உள்ள வகையினங்களை முன்னிட்டே நாம் பொருள் கொள்ள முடியும்.

இயேசு சொல்லும் உண்மை என்ன?

அது மொழி சார்ந்த உண்மை அல்ல. 

உண்மை என்பது நம் ஆன்மாவின் போராட்டம். இது ஒரு தொடர் போராட்டம். உண்மை என்பது இருத்தலோடு சமரசம் செய்யாத மனநிலை. உண்மை என்றால் நேர்மை. உண்மை என்பது வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் உள்ள பொருந்துநிலை. உண்மை என்பது வெளிவேடமற்ற நிலை. உண்மை நலம் தரும். உண்மை இன்றி அன்பு சாத்தியம் இல்லை. இரகசியம் காப்பது வேறு, உண்மை பேசுவது வேறு. இரகசியம் காப்பதும் உண்மையே.

'உண்மை உங்களை விடுதலை செய்யும்' (யோவா 8:32) என்று இயேசு சொல்கிறார். என்னைப் பற்றி நான் தெரிந்துகொள்ளும் உண்மை என்னுடைய கட்டுக்களிலிருந்து விடுதலை செய்யும். உண்மை பேசுபவர் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, யார்மேலும் கோபப்படவோ, பொறாமைப்படவோ தேவையில்லை. அவர் தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளமாட்டார். அவருக்குக் குற்றவுணர்வு இருக்காது. அவர் தன்னையே மற்றவர்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்ள மாட்டார். மற்றவர்கள் தன்னை நிராகரித்தாலும், ஒதுக்கி வைத்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டார். 'இதுதான் நான்' என ஏற்றுக்கொள்வார். இதுதான் விடுதலை.

இந்த விடுதலையைத் தான் இயேசு தன்னுடைய சீடர்கள் பெற வேண்டுமென்று விரும்புகிறார்.

ஆ. 'அர்ப்பணம்'

அர்ப்பணம் என்பது இங்கே தூய்மையாக்கப்படுவதைக் குறிக்கிறது. அர்ப்பணம் ஆக்கப்படும் எதுவும் தூய்மையாக்கப்படுகிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 'தூய்மை' என்பது 'அழுக்கற்ற நிலை' அல்லது 'தயார்நிலை.' தூய்மையான பாத்திரம் சமையலுக்கு தயாராக இருக்கிறது. தூய்மையான ஆடை அணிவதற்கு தயாராக இருக்கிறது. தூய்மையான இல்லம் வாழ்வதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையான மனிதர் தனக்கும், பிறருக்கும், இறைவனுக்கும் தயாராக இருக்கிறார். 

ஆக, எந்த நிலையிலும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

வாழ்வை நாம் ஒருமுறைதான் வாழ வேண்டும். 

எடுத்துக்காட்டாக, கோபமாகப் பேசி, பின் அதற்காக மன்னிப்பு கேட்கும்போது, வாழ்வை நாம் இரண்டு முறை வாழ்கின்றோம். நேரம் மற்றும் ஆற்றல் இரு முறை வீணாகிறது. ஆனால், கோபமாக நாம் பேசவே இல்லை என்றால், வாழ்வு ஒரே முறைதான் வாழப்படுகிறது. இதுதான் தயார்நிலை. இதுதான் தூய்மை நிலை.

நற்செயல்: 'உண்மை' மற்றும் 'தூய்மை' பற்றிய என் புரிதல் என்ன? இவற்றை நான் என் வாழ்வில் எப்படிப் பேணிக் காத்து வருகிறேன்? என்று கேட்பது.


செபிக்கும் கடவுள்

இன்றைய (26 மே 2020) நற்செய்தி (யோவா 17:1-11)

செபிக்கும் கடவுள்

'கர்ணன்: காலத்தை வென்றவன்' என்ற மராத்திய மொழி (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) புதினத்தை நேற்று வாசித்து முடித்தேன். கதையாடல் கொண்டுசெல்லப்பட்ட விதம் மிக அருமை. நேற்று மாலையிலிருந்து 'மகாபாரதம்' வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஏற்கனவே வாசித்ததுதான். இருந்தாலும் அந்தப் புதினத்தின் பின்புலத்தில் வாசிக்க வேண்டும் என்பது என் அவா.

குருக்ஷேத்திரப் போரில் அர்ஜூனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ண பகவான் வருகிறார். மேலும், பாண்டவர்கள் மற்றும் கர்ணன் உள்பட கதைமாந்தர்களின் பலரின் தந்தையர்களாகக் கடவுளர்கள் இருக்கிறார்கள். கடவுளர்கள் மண்ணுலகிற்கு வந்த ஒரு நிகழ்வாக மகாபாரத நிகழ்வு இருக்கிறது. 

அந்தக் கடவுளர்களுக்கும் நம்முடைய கிறிஸ்தவத்தின் மகன் கடவுளாக இருக்கும் இயேசுவுக்குமான ஒரு முக்கியமான வித்தியாசத்தை இன்றைய நற்செய்தி நமக்குக் காட்டுகிறது.

'நமக்காக செபிக்கும் கடவுளாக' அவர் இருக்கின்றார்.

தன் தந்தையாக கடவுளிடம் இயேசு தன்னுடைய சீடர்களுக்காக செபிக்கின்றார்.

இரண்டு விடயங்கள் இங்கே புலப்படுகின்றன:

ஒன்று, செபத்தின் இன்றியமையாமை.

இரண்டு, இயேசுவுக்கும் தந்தைக்கும், இயேசுவுக்கும் சீடர்களுக்குமான உறவு.

செபம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

என்னைப் பொருத்துவரையில் செபம் என்றால் என்ன? என்னுள் இருக்கும் கடவுள் என் வழியாகத் தன்னிடம் பேசிக்கொள்கின்றார். அதுதான் செபம். 'நான் செபிக்கிறேன். நான் முழந்தாள் படியிடுகிறேன்' என்று எதுவும் கிடையாது. ஆக, கடவுள் தன்னோடு பேசிக்கொள்ள என்னையே நான் கருவியாக்கும் நிலைதான் செபம். பவுல், இடைவிடாமல் செபம் செய்யுங்கள் என்று சொல்வதன் பொருள் என்ன? இடைவிடாமல் கடவுளின் கருவியாக இருங்கள் என்பதுதான்.

மேலும், செபம் என்பது உறவை உறுதி செய்கிறது. உரையாடல் இல்லாத உறவு சாத்தியமில்லை. ஏனெனில், ஆங்கிலத்தில், 'no reply also is a reply' என்பார்கள். அதாவது, நாம் அனுப்பும் செய்திக்கு பதில் எதுவும் வரவில்லை என்றால், 'பதில் வரவில்லை' என்பதும் 'பதில்தான்.' ஆக, நாம் விரும்பியோ விரும்பாமாலே அடுத்தவரிடம் உரையாடிக்கொண்டே இருக்கின்றோம். 

இறுதியாக, இயேசு, 'அவர்கள் உலகில் இருப்பார்கள்' என்கிறார்.

உலகில் இருத்தல் என்பது நாம் கொண்டாட வேண்டியது.

ஒவ்வொரு நாள் விடிகிறது. அந்த விடியல் நமக்குக் கிடைப்பது பெரிய இராணுவப் படை நமக்குக் கிடைப்பதை விட மேலானது. ஏனெனில், நாம் ஒரு புதிய நாளைக் கொண்டு நிறையச் செய்ய முடியும். ஆக, புதிய நாளை இனிய நாளாக வரவேற்பதோடு நம் இருத்தலை இங்கே வீணான சண்டைகளினாலும் வாக்கு வாதங்களினாலும் சோம்பலினாலும் வீணடித்துவிடக் கூடாது.

நற்செயல்: விழித்திருப்பதும், செபித்திருப்பதும் இன்றைய நம் இருத்தலின் கொண்டாட்டங்கள் ஆகட்டும்.

Sunday, May 24, 2020

துன்பம் உண்டு

இன்றைய (25 மே 2020) நற்செய்தி (யோவா 16:29-33)

துன்பம் உண்டு

இந்த உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் மனித வாழ்வில் உள்ள துன்பத்தைப் பற்றிப் பேசுகின்றன. எடுத்துக்காட்டாக, 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று சொல்லும் புத்தமதம், ஆசையை வெல்வதற்கான அஸ்டாங்க மார்க்கம் (எட்டு வழி) கற்பிக்கிறது. இந்த எட்டு வழியைக் கடைப்பிடிப்பதால் துன்பம் நீங்கிவிடுமா? நீங்காது! துன்பம் நம் வாழ்வின் எதார்த்தம்.

இத்தகைய எதார்த்தப் புரிதலைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம் முன்மொழிகின்றார்:

'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றிகொண்டு விட்டேன்'

இதில் மூன்று விடயங்கள் உள்ளன:

அ. உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு

'துன்பம்' என்ற வார்த்தைக்கு இங்கே கிரேக்கத்தில் 'த்லிப்ஸிஸ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'த்லிப்ஸிஸ்' என்ற பெயர்ச்சொல் 'த்லிபோ' என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. 'கசக்குவது,' 'பிழிவது,' 'நெருக்குவது,' 'அமிழ்த்துவது' என்பது இதன் பொருள். தானியங்களைக் கசக்குதல், துணியை அல்லது பழங்களைப் பிழிதல், கட்டகளை நெருக்கி அடுக்குதல், தண்ணீருக்குள் ஒன்றைக் கடினப்பட்டு அமிழ்த்துதல் போன்றவற்றைக் குறிக்க இவ்வினைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் அழுத்தம் பார்க்கும் கருவியில் த்லிப்ஸிஸ் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் பழைய சட்டப்படி, குற்றத்தை ஒத்துக்கொள்ளாத ஒருவர் மேல் பெரிய கனத்தை அழுத்திக் கொல்வது வழக்கம். அந்த வழக்கத்தின் பெயரும் 'த்லிப்ஸிஸ்.'

ஆக, இயேசு இங்கே சொல்வது உள்ளம் சார்ந்த ஓர் அழுத்தம். அல்லது அந்த அழுத்தம் தரும் துன்பம். பாம்பாட்டிச் சித்தர் துன்பத்தை இப்படி வரையறுக்கிறார்: 'உன் மனம் உனக்கு வெளியே இருந்தால் அது துன்பம். உனக்கு உள்ளே இருந்தால் அது இன்பம்.' எடுத்துக்காட்டாக, நான் யாரிடமாவது கோபம் கொண்டால், அல்லது யாரையாவது நான் மன்னியாமல் இருந்தால் என் மனம் அவரைப் பற்றி எண்ணிக்கொண்டே இருக்கிறது. இதுதான் துன்பம். இதுதான் அழுத்தம். மாறாக, நான் என் மனம் என்மேல் மையம் கொண்டிருந்தால் துன்பத்திற்கு இடமில்லை.

துன்பம் என்பது அதிகம் அல்லது குறைவு என்ற இரண்டு நிலைகளில் வருகிறது. எடுத்துக்காட்டாக, தைராய்டு நோயை எடுத்துக்கொள்வோம். இந்தச் சுரப்பி அதிகம் சுரந்தாலும் துன்பம், குறைவாகச் சுரந்தாலும் துன்பம். சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் துன்பம், குறைவாக இருந்தாலும் துன்பம். ஆக, அதிகமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும் எதுவும் துன்பம் தருகிறது. அதிகமாக பாசம் அல்லது ஆசை அல்லது காமம் கொண்டிருத்தல் பற்றுக்களை உருவாக்கி துன்பம் தருகிறது. அதே வேளையில், குறைவாக பாசம் அல்லது ஆசை அல்லது காமம் கொண்டிருத்தல் மனதில் வெறுமையை உருவாக்கி வறட்சியை ஏற்படுத்திவிடுகிறது. 

இந்த வாக்கியத்தில், 'உலகம்' என்பது நம் பொதுவான இல்லம். யோவான் நற்செய்தியில், 'உலகு' என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு: ஒன்று, கடவுளுக்கு எதிராகச் செயல்படும் எதிராளிதான் உலகு. இரண்டு, மனிதர்களின் இயங்குதளம் உலகு. இங்கே இந்த வார்த்தை இரண்டாவது பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆ. எனினும், துணிவுடன் இருங்கள்

துன்பம் போய்விட்டதால் அல்ல, மாறாக, துன்பம் இருந்தாலும் துணிவுடன் இருத்தல் வேண்டும். நம் இல்லங்களில் பெரிய பெரிய இழப்புக்களைத் தாண்டி நாம் எழுகிறோமே. எப்படி? துணிச்சல்தான். ஆக, துணிவு என்பது பயமற்ற நிலை.

இ. நான் உலகின்மேல் வெற்றிகொண்டுவிட்டேன்

இந்த செயல் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார் இயேசு. 'நிக்காவோ' என்றால் வெற்றி. அந்த வெற்றியில் எதிராளி முற்றிலும் தோற்கடிக்கப்படுவான். ஆனால், திரும்ப வரமாட்டான் என்பது பொருள் அல்ல. இயேசு தான் ஏற்கனவே உலகை வென்றுவிட்டதாக சீடர்களுக்கு முன்மொழிகின்றார்.

துன்பம் என்ற எதார்த்தத்தை இயேசு முழுமையாக அழித்துவிட்டதாகப் பொருள் இல்லை. அப்படிச் சொன்னால் அவர் தன்னையே முரண்படுத்துவதாக இருக்கும். ஏனெனில், இன்னும் சில நாள்களில் அவரே சிலுவையில் துன்புறுவார்.

ஆக, துன்பத்தின் நடுவிலும் துணிவுடன் இருக்க வேண்டும். இன்று வெற்றிகொள்ளலாம். நாளை மீண்டும் துன்பம் வரும். மறுபடியும் வெற்றி கொள்ள வேண்டும். இப்படியாக வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

நற்செயல்: துன்பத்தைப் பற்றிய என் புரிதல் என்ன என்று கேட்பது.

Saturday, May 23, 2020

ஆண்டவரின் விண்ணேற்றம்

வாழப் பழகிக்கொள்ளுங்கள்!

நம் நாட்டில் கொரோனா லாக்டவுனின் நான்காம் கட்டத்திற்குள் நாம் நுழையும் சில நாள்களுக்கு முன், நம் அரசு, 'கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்!' என்று அறிவுறுத்தியது. ஆக, கொரோனா அழியும், அழியாது என்ற பேச்சிற்கு இனி இடமில்லை.

இந்த உலகில் பிறந்து 33 ஆண்டுகள் தம் சீடர்களோடு வாழ்ந்து, இறையாட்சிப் பணி செய்து, பாடுகள் பட்டு, உயிர்த்த இயேசு, 'இந்த உலகோடு வாழ நீங்கள் பழகிக்கொள்ளுங்கள்' அல்லது 'நான் இல்லாமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறார். 

விவிலியத்தில் 'மறைதல்' என்பது இறைமைக்கு அடையாளம். கிதியோனிடம் பேசிய தூதர் மறைகிறார் (காண். நீத 6), சிம்சோனின் பெற்றோருடன் பேசிய கடவுளின் மனிதர் மறைகிறார் (காண். நீத 13), எம்மாவு சீடர்களோடு அப்பம் உண்ட இயேசு மறைகின்றார் (காண். லூக் 24). மறைதல் நிகழ்ந்தவுடன் அங்கே வந்திருந்தவர் இறைவன் என்பதைக் கண்டுகொள்கின்றனர் கதைமாந்தர்கள்.

இன்றைய திருநாளில் நாம் இயேசுவின் மறைதலையும், அந்த மறைதல் வெளிப்படுத்திய இறைமையையும் கொண்டாடுகின்றோம்.

விண்ணேற்றம் ஏன் என்பதற்கான விடையை நம் இறையியல் மூன்று நிலைகளில் புரிந்துகொள்கிறது:

அ. இயேசுவின் மண்ணுலக வாழ்வு முடிந்து இன்று அவர் தன் தந்தையின் இல்லம் திரும்புகிறார். மாட்சியும் ஆற்றலும் பெறுகின்றார்.

ஆ. திருத்தூதர்கள் இயேசுவின் பணியைத் தொடர்கின்றனர்.

இ. தூய ஆவியார் வருகைக்கான தயாரிப்பாக இது இருக்கின்றது.

விண்ணேற்றத்தை எளிதாகப் புரிந்துகொள்ள பழரசம் என்னும் உருவகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நாம் ஆரஞ்சு பழரசம் தயாரிக்கிறோம் என வைத்துக்கொள்வோம். பழரசம் நம் கைக்கு வந்தவடன் ஆரஞ்சு மறைந்துவிடுகிறது. ஆரஞ்சு மறைந்துவிட்டாலும் நம் கைகளில் பழரசம் இருக்கிறது. நம்மோடு இருந்த ஆரஞ்சு, நமக்கான பழரசமாக மாறியிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆரஞ்சு போய்விட்டதே என்று வருந்துவது அல்ல, மாறாக, அது பழரசமாக இன்று நம் கைகளில் இருக்கிறதே என்று மகிழ்ந்து, அதைப் பருகி, அதனால் ஊட்டம் பெறுவதே.

ஆக, இயேசுவின் ஊட்டம் இன்று நம்மிடையே இருந்தால், நம் விண்ணேற்றத்திற்கான வழியும் அதுவே.

அந்த ஊட்டத்துடன் வாழப் பழகிக்கொள்வதே சால்பு.


Friday, May 22, 2020

முன்வருதல்

இன்றைய (23 மே 2020) முதல் வாசகம் (திப 18:23-28)

முன்வருதல்

இன்றைய முதல் வாசகத்தில் அப்பொல்லோ என்ற கதைமாந்தரைப் பார்க்கிறோம். இவர் எபேசில் கற்பித்து வருகின்றார். 

இவரிடம் அப்படி என்ன சிறப்பு?

பவுலைப் போல தமஸ்கு நகரிக்குச் செல்லும் வழியில் ஆண்டவரை எதிர்கொள்ளவில்லை என்றாலும், பேதுரு மற்றும் யோவான் போல ஆண்டவரின் திருத்தூதர்களாக இவர் இல்லாவிடினும், தானாக முன்வந்து நற்செய்திப் பணி செய்கின்றார். தன்னுடைய திறமைகள் அனைத்தையும் நற்செய்திப் பணிக்காகச் செலவிடுகின்றார். என்ன ஆச்சர்யம்!

ஆக, நம் வாழ்வில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால், பெரிய அளவில், பெரிய நபராக, பெரிய அழைத்தலைப் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக, சிறிய அளவில், சிறிய நபராக, சிறிய அழைத்தலோடு செய்யலாம்.

முன்வருதல் எப்படி வரும்?

ஒன்று, எனக்கு என்மேல் தன்நம்பிக்கை இருக்கும்போது வரும். தன்நம்பிக்கை இல்லாமல் முன்வருதல் சாத்தியமில்லை. நான் நிறைய கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, ஏதாவது விளையாட்டு நடத்த, 'யாராவது முன்வருகிறீர்களா?' என்ற கேட்கும்போது, பலர் தயக்கம் காட்டுவதுண்டு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தன்நம்பிக்கை குறைவு. ஒரே ஒரு இடத்தில்தான் அமர்வில் இருந்த 20 பேரும் கைகளை உயர்த்தினர். 

இரண்டு, அடுத்தவர் தேவையில் இருக்கும்போது. என்னுடைய தன்நம்பிக்கை மட்டுமல்ல. அடுத்தவரின் தேவையும் சில நேரங்களில் நம்மை முன்வரத் தூண்டும். நாம் நடந்து சென்றுகொண்டிருக்கிறோம். திடீரென நமக்கு முன்னால் செல்லும் நபர் ஒருவர் மயங்கி விழுகிறார். உடனே நாம் ஓடிச் சென்று அவரைத் தூக்குகிறோம். இங்கே, நம் தன்னம்பிக்கையைவிட அவருடைய தேவை நம்மை ஓட வைக்கிறது.
மூன்று, பணி நிமித்தமாக. பணியின் நிமித்தமாக சில நேரங்களில் நாம் முன்வருவோம். மருத்துவமனைக்குச் செல்கிறோம். அங்கே காயம் பட்டு ஒருவர் கட்டிலில் அழைத்துவரப்படுகின்றார். நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கலாம், அடுத்தவர் தேவையில் இருக்கலாம். ஆனால், பணிசார் அறிவு இல்லாமல், அல்லது பணியின் கடப்பாடு இல்லாமல் நான் அவருக்கு உதவி செய்ய முன்வர முடியாது.

அப்பொல்லோ இந்த மூன்று காரணங்களுக்காக நற்செய்தி அறிவிக்க முன்வந்தாலும், இதையும் தாண்டி ஒரு காரணம் இருந்தது.

அவர், 'இயேசுவே மெசியா' என எடுத்துக்காட்டினார்.

தன் வாழ்வாலும், வார்த்தையாலும்.

நற்செயல்: சின்ன சின்ன விடயங்களில் நாம் முன்வருதலோடு இயங்குகிறோமா? என்று ஆராய்தல்.


Thursday, May 21, 2020

மகிழ்ச்சி

இன்றைய (22 மே 2020) நற்செய்தி (யோவா 16:20-23)

மகிழ்ச்சி

'இப்படியாக நான் மிலானின் ஒரு தெருவைக் கடந்தபோது வறுமையான பிச்சைக்காரன் ஒருவனைக் கண்டேன். ஏற்கனயே நிறையக் குடித்து போதையில் இருந்த அவன், வேடிக்கையாகப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வழிநடந்தான். நம்முடைய மடமையால் நமக்கு நிறைய துன்பங்கள் வருகின்றன என்று நான் என்னுடன் வந்த நண்பர்களுடன் புலம்பிக்கொண்டும் பேசிக்கொண்டும் சென்றேன். மேற்சொன்ன முயற்சிகளைப் போன்ற சில முன்னெடுப்புக்கள் எனக்கு கவலையைத் தந்தாலும், என்னுடைய உயரவா மற்றும் பேராவல் என்னும் குத்துக்கோல் என்னை மிகவே அழுத்தி மகிழ்ச்சியற்ற நிலையை நான் எந்நேரமும் சுமந்துகொண்டே இருக்குமாறு செய்தது. ஆனாலும், கவலையற்ற மனமகிழ்ச்சியே எங்களுடைய இலக்காக இருந்தது. அந்தப் பிச்சைக்காரன் எங்களுக்கு முன்னாலேயே அந்த நிலையை அடைந்துவிட்டான். அல்லது அந்த நிலையை எங்களால் அடையவே முடியாது. பிச்சையெடுத்துப் பெற்ற சில நாணயங்களால் அடைந்த மகிழ்ச்சியை நான் வளைந்து நெளிந்த பாதைகள் வழியாக அடைய விரும்பினேன். உண்மையான மகிழ்ச்சி அவனிடம் இல்லை. ஆனால், என்னுடைய பேரார்வங்களை நிறைவேற்றிக்கொள்ளும் என்னுடைய தேடல் அவனுடைய மகிழ்ச்சியைவிடப் பொய்யானது. அவன் மகிழ்ச்சியாக இருந்தான் என்பதிலும் நான் கவலையால் அலைக்கழிக்கப்பட்டேன் என்பதிலும் எந்த ஐயமுமில்லை. அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் பரபரப்பாக இருந்தேன். யாராவது என்னிடம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறாயா அல்லது அச்சத்தால் அலைக்கழிக்கப்பட விரும்புகிறாயா எனக் கேட்டால், மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன் என்றே சொல்லியிருப்பேன். ஆனால், நான் அந்த மனிதனைப் போல பிச்சைக்காரனாக இருக்க விரும்புகிறேனா அல்லது நான் இருப்பதுபோல இருக்க விரும்புகிறேனா என்று கேட்டால், அச்சமும் கலக்கமும் கொண்டு, நானாகவே இருக்க விரும்புகிறேன் எனச் சொல்லியிருப்பேன். என்ன ஒரு அபத்தமான தெரிவு? நிச்சயமாக இது சரியான தெரிவு அல்ல. ஏனெனில், நான் அவனைவிட அதிகம் படித்தவன் என்ற நிலையில் - என்னுடைய படிப்பை நினைத்து நான் எப்போதும் இன்புற்றிருக்கிறேன் - அவனைவிட மேலானவனாக என்னை நினைத்துக்கொள்ள முடியாது. என்னுடைய படிப்பு மனிதர்களைத் திருப்திப்படுத்துவதைவே நாடச் செய்தது. அவர்களுக்கு கற்பிக்கும் எண்ணத்துடன் அல்ல, மாறாக. வெறும் இன்பத்தைச் சேகரித்துக் கொடுப்பதாக இருந்தது. அந்தக் காரணத்திற்காக, ஒழுக்கம் என்னும் தடியால் 'என் எலும்புகளை நொறுக்கினீர்' (திபா 51:8).

'இன்பத்தின் ஊற்றில் வித்தியாசம் இருக்கிறது. பிச்சைக்காரன் தன்னுடைய இன்பத்தை குடிப்பதில் கண்டான். நீ உன்னுடைய இன்பத்தை புகழில் கண்டாய்' என்று சொல்பவர்கள் என் ஆன்மாவிடமிருந்து தூரமாகிப் போகட்டும். ஆனால் ஆண்டவரே உம்மில் இல்லாத புகழ் எது? அவனுடைய மகிழ்ச்சி எப்படி உண்மை இல்லையோ, அது போலவே என்னுடைய புகழும் உண்மை இல்லை. அது என் தலையை இன்னும் திருப்பியது. அந்த இரவு பிச்சைக்காரன் தூங்கி எழும்போது அவனுடைய போதை இறங்கியிருக்கும். ஆனால், நான் தூங்கி எழுந்தேன். அது என்னுடனே எழுந்தது. இப்படியாக நான் அதனோடு பல நாள்கள் தூங்கி எழுந்தேன். மனிதனின் இன்பத்தின் ஊற்றில் வித்தியாசம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நம்பிக்கையான எதிர்நோக்கு வீணான ஒன்றிலிருந்து மேலானது. இருந்தாலும், அவனுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அவன் என்னைவிட அதிக மகிழ்ச்சியாக இருந்தான்.'

(ஒப்புகைகள், புத்தகம் 6, பிரிவு 6)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள புனித அகுஸ்தினாரின் வார்த்தைகள், மகிழ்ச்சி பற்றிய அவருடைய அறிவுரையை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், மகிழ்ச்சி பற்றிய ஒரு புதிய புரிதலைப் பார்க்கின்றோம்:

'ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.
அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்' (காண். யோவா 16:23)

மகிழ்ச்சி என்ற உணர்வு எப்போதும் நீட்சியாகிக் கொண்டே இருக்கின்ற உணர்வு அல்ல. உணவு மகிழ்ச்சி தருகிறது என உண்கிறோம். ஆனால், அதன் மகிழ்ச்சி பசிக்கும் வரைதான். புத்தகம் மகிழ்ச்சி தருகிறது என வாசிக்கின்றோம். ஆனால், சிறிது நேரத்தில் மூளை சோர்ந்துவிடுகிறது. வாசிப்பு சுமையாகிறது. நம் அன்பிற்குரியவரைச் சந்திப்பது அல்லது அவரோடு தொலைபேசியில் பேசுவது மகிழ்ச்சி எனத் தொடங்குகின்றோம். ஆனால், சிறிது நேரத்தில் அந்த நபர் புறப்பட வேண்டும் அல்லது தொலைபேசியைத் துண்டிக்க வேண்டும்.

ஆனால், இயேசு தருகின்ற ஆன்மீக அல்லது உள்ளம்சார் மகிழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறது. அதை யாரும், எதுவும் எப்போதும் நீக்கிவிட முடியாது. தொடர்ந்து அது அப்படியே இருந்துகொண்டே இருக்கும். 

இதை எப்படி நாம் பெறுவது?

'மீண்டும் காணும்போது'

அது என்ன இயேசு நம்மை மீண்டும் காணும்போது?

பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது சொல்வார்கள்: 'நாம் இரண்டு முறை பிறக்கிறோம். ஒன்று, நாம் இந்த உலகில் பிறந்த நாளன்று. இரண்டு, நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற அறிந்த நாளன்று.'

இயேசு நம்மை மீண்டும் காணுதல் என்றால், நாம் அவருடைய அனுபவம் பெறுவது. இது செபத்தினாலும், நோன்புனாலும்தான் சாத்தியமாகும். நம் மனத்தின் எண்ணங்கள், புலன்களின் செயல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும்போது, நம் உள்ளம் எந்தவிதக் கீறலுமின்றி இருக்கும்போது.

இதை எப்படி உணர்ந்துகொள்வது?

நம் சுண்டுவிரல் நலமாய் இருக்கிறது என எப்போது சொல்கிறோம்? அதைப் பற்றியே நாம் நினையாமல் இருக்கும்போதுதான். வலிக்கும்போதுதான் சுண்டுவிரலை நினைக்கிறோம். அது போலவே, எதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் மனம் அமைதி நிலை அடைவதுதான் இயேசுவை மீண்டும் காண்பது. அல்லது இயேசு நம்மை மீண்டும் காண்பது.

இந்த நிலையில், நம் மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது.

மேலும், அந்த மகிழ்ச்சி வந்துவிட்டால் நமக்கு தேவை என்றும், ஆசை என்றும் எதுவும் இருக்காது.  அதையே இயேசு, 'அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்' என்கிறார். 

நற்செயல்: சற்று நேரம் அமைதியாக இருந்து நம் எண்ண ஓட்டங்களை ஆய்ந்து அறிவது.

Wednesday, May 20, 2020

கூடாரத் தொழில்

இன்றைய (21 மே 2020) முதல் வாசகம் (திப 18:1-8)

கூடாரத் தொழில்

'ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்' என்பது தமிழ் பழமொழி. எந்த மாடும் ஆடுவதில்லை. எந்த மாடும் பாடுவதில்லை. ஒருவேளை அசைகிற மாட்டை ஆடுகிற மாடும், கத்துகின்ற மாட்டை பாடுகின்ற மாடு என்று நம் முன்னோர்கள் சொன்னார்களோ?

தன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பவுல் இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறார். கொரிந்து நகரத் திருச்சபைக்குத் தான் எழுதிய முதல் திருமடலில், 'எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:22) என மார்தட்டுகிறார் பவுல். 

இவர் எப்படி எல்லாருக்கும் எல்லாமானார் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. எப்படி?

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இவர்கள் கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க இத்தாலியைவிட்டு வெளியேறி கொரிந்தில் குடியேறுகின்றனர். இவர்கள் தொழில் கூடாரம் செய்வது. கூடாரம் செய்வது எப்படிப்பட்ட வேலை என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா அல்லது நிரந்தரக் கூடாரம் அமைப்பவர்களா, கூரை வேய்பவர்களா, அல்லது கூடாரத் துணி நெய்பவர்களா, கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களாக - எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே, கணவனும் மனைவியும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இந்தச் சமுதாயத்தில் பெண் வேலையில் ஆணுக்குச் சமமாக இருந்திருக்கிறாள். இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார். இவர்களோடு இணைந்து கூடாரத் தொழில் செய்கின்றார். பவுல் எவ்வளவு ஆண்டுகள் செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், எதற்காகச் செய்தார் என்பது தெரிகிறது. அதாவது, தன்னுடைய செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்மதிப்புடன் அதைத் தானே சம்பாதிக்கிறார் பவுல். ஒருவேளை அக்கிலாவும்-பிரிஸ்கில்லாவும் ஏழைகளாக இருந்திருக்கலாம். அவர்களுக்குத் தான் சுமையாக இருக்கக் கூடாது என்ற நிலையில் தனக்குரிய உணவை உண்ணத் தானே உழைத்திருக்கலாம் பவுல். 
பவுலின் இந்தத் தன்மதிப்பும், யாருக்கும் எதிலும் கடன்படக் கூடாது அல்லது யாருக்கும் சுமையாய் இருக்கக் கூடாது என்ற உணர்வும் நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

தான் திருத்தூதுப்பணி செய்தாலும், அப்பணிக்கு உரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருந்தாலும் பவுல் மற்ற வேலையையும் செய்கின்றார். மனிதர்களைப் பொருத்தவரையில் அவர்கள் செய்யும் வேலையே அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது. 

'என் வாழ்க்கை என் கையில்' என பவுல் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இரண்டாவதாக, பவுலின் பழகும் திறன்.

இன்று நாம் ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். மாலையில் வீட்டுக்கு வந்து, 'இன்று அந்த வீட்டில் யாரும் என்கூட பேசவில்லை. அல்லது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை' என்று புலம்புகிறோம். ஆனால், 'நாம் அங்கே எத்தனை பேரோடு பேசினோம்? எத்தனை பேரைக் கண்டுகொண்டோம்?' ஆக, பழகுவதற்கான முயற்சியை நாம் முதலில் எடுக்க வேண்டும். இதைத்தான் செய்கிறார் பவுல்.

அக்கிலா-பிரிஸ்கில்லா வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கிற தொழுகைக்கூடத் தலைவரையும் நண்பராக்குகின்றார் பவுல். அந்த நட்பின் வழியாக அவரையும் நம்பிக்கையாளராக மாற்றுகின்றார் பவுல்.

நற்செயல்: முதலில், உழைப்பு. இரண்டாவது, பழகும் திறன்.

Tuesday, May 19, 2020

ஏதென்சில் பவுல்

இன்றைய (20 மே 2020) முதல் வாசகம் (திப 17:15,22 - 18:1)

ஏதென்சில் பவுல்

என்னுடைய இரண்டாம் ஆண்டு அருள்பணி நிலைப் பணிக்காக, மதுரை, ஞானஒளிவுபுரத்திற்கு உதவிப் பங்குந்தந்தையாகச் சென்றபோது, என்னை வழியனுப்பிய அருள்பணியாளர், 'மதுரை மறைமாவட்டத்தின் ஏதென்சுக்குச் செல்கிறாய். வாழ்த்துக்கள்' என்று சொல்லி வழியனுப்பினார்.

ஏன் அந்தப் பணித்தளத்தை அப்படி அழைக்கிறார்கள்?

ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

திப 17:19-20 அவர்களைப் பற்றிச் சொல்கிறது: பின்பு, அவர்கள் பவுலை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், 'நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்றனர்.

மேலும், சிலர், 'இதைப் பற்றி நீர் மீண்டும் வந்து பேசும். கேட்போம்' என்றனர் (காண். திப 17:32).

கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்திய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.

ஆக, ஏதென்ஸ் மக்கள் (1) நிறையக் கற்றவர்கள், (2) புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், (3) ஆழ்ந்து கேட்பவர்கள், (4) நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், (5) மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் (6) மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.

இந்த ஆறு பண்புகளும் நான் பணியாற்றிய ஞானஒளிவுபுரம் பங்குத்தளத்திற்கு பொருந்துவதால், இன்றும் அதை 'ஏதென்ஸ்' என அழைக்கலாம். இன்னும் ஒரு படிபோய், 'மதுரையின் ஏதென்ஸ் ஞானஒளிவுபுரம்' எனச் சொல்வதைவிட, 'கிரேக்கத்தின் ஞானஒளிவுபுரம் ஏதென்ஸ்' எனச் சொல்லலாம்! இல்லையா?

இங்கே, நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தொடர்ந்து, பவுல் இன்று நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:

(1) பவுலின் அறிவுத்திறன்

பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். ஆக, நமக்கு நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(2) பவுலின் துணிச்சல்

பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.

(3) சமயோசிதப் புத்தி

எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். 'நீங்கள் அறியாத தெய்வத்துக்கு' என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!

விளைவு,

மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல்.

நற்செயல்: புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?

Monday, May 18, 2020

கண்ணியம்

இன்றைய (19 மே 2020) முதல் வாசகம் (திப 16:22-34)

கண்ணியம்

அறிஞர் அண்ணாவின் சமாதியில், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று சொல்லி, 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று எழுதியிருப்பார்கள்.

கண்ணியம் ('integrity') என்றால் என்ன என்பதற்கு நிறைய நாள் பொருள் தேடினேன்.

'தவறு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் தவறு செய்யாமல் இருப்பதே கண்ணியம்' என்று ஒரு தமிழ் அகராதியில் சொல்லப்பட்டிருந்தது.

அதாவது, 10 லட்சம் ரூபாயைக் கையிலேயே வைத்திராத ஒருவன் அதை ஒரு போதும் திருடினான் என்று சொல்ல முடியாது. அவன் தன் வாழ்க்கையில் அவ்வளவு பணத்தைப் பார்த்ததே இல்லை. ஆக, அவன் அதைத் திருட வாய்ப்பே இல்லை.

ஆனால், 10 லட்சம் ரூபாயைக் கையில் வைத்திருக்கும் ஒருவன் அதை திருடாமல் இருந்தால் அது கண்ணியம். ஏனெனில், திருடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதைச் செய்ய மறுக்கிறான்.
பெரியகுளத்திற்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் 'எஸ்ஸார்;' நிறுவனத்தின் பெட்ரோல் நிரப்பும் இடம் இருக்கிறது. அங்கே ஒருமுறை பெட்ரோல் போட்டுவிட்டு, சக்கரங்களில் நைட்ரஜன் நிரப்பினேன். சதீஷ் என்ற இளவல் நிரப்பினார். பெட்ரோல் போட்டால் நைட்ரஜன் இலவசம். இருந்தாலும், அவனிடம் மற்ற நேரங்களில் வசூலிக்கப்படும் 20 ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அவர், 'வேண்டாம் சார்!' என்றார். ஒருவேளை சிசிடிவி கேமரா இருப்பதால், அல்லது யாரும் பார்த்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறாரோ எனச் சுற்றிலும் பார்த்தேன். அப்படி ஒன்றும் அங்கே இல்லை. மேலும், அது இரவு. அவர் உறுதியாக, 'வேண்டாம் சார்! பத்திரமாகப் போங்க!' என்று மட்டும் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சதீஷ் செய்த செயலுக்குக் காரணம் அவரிடமிருந்த கண்ணியம். தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் - அது தவறு அல்ல - அவர் தவறு செய்யவில்லை.

இது என் அருள்பணி வாழ்வைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. இதே கண்ணியத்தை நான் என் பணி வாழ்வில், தனி மனித வாழ்வில் செயல்படுத்த முடிகிறதா? என்று என்னையே கேட்க வைத்தது.

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் மற்றும் சீலாவின் கண்ணியத்தைப் பற்றி நாம் வாசிக்கின்றோம்.

அதாவது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பாடிய புகழ்ச்சிப் பாடலில், நிலம் அதிர்ந்து, சிறைக் கதவுகள் திறக்கின்றன. கை மற்றும் கால் விலங்குகள் உடைகின்றன. ஆனால், அவர்கள் தப்பி ஓடவில்லை. தப்பி ஓடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் அத்தவற்றைச் செய்யவில்லை.

அவர்களின் இந்தக் கண்ணியம் சிறைக்காவலர் தன் குடும்பத்தாரோடு மீட்படைய உதவுகிறது.

காவலர் கைதிகளைப் பார்த்து, 'பெரியோரே!' என அழைக்கின்றார். இந்த நிலைக்கு அவர்களை உயர்த்தியது அவர்களுடைய கண்ணியம்.

மேலும், 'மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கின்றார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம், தனக்கு விடுதலை தருமாறு கேட்கின்றார் காவலர். என்ன ஆச்சர்யம்!

அவர் பவுலையும் சீலாவையும் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றார். காயங்களைக் கழுவுகின்றார். உணவு பரிமாறுகின்றார். வீட்டார் அனைவரும் பேருவகை அடைகின்றனர்.

ஆக, இருவரின் கண்ணியம் இன்னொரு குடும்பத்தின் பேருவகைக்கு வழிவகுக்கின்றது.

கண்ணியமற்ற செயல் எல்லாருடைய மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாகி விடுகிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி, இறுதியில் கொலையும் செய்யத் துணிகின்றார் தாவீது. அவரின் செயல், அவருடைய மகிழ்ச்சியின்மையின், பெத்செபாவின் மகிழ்ச்சியின்மையின், உரியாவின் மகிழ்ச்சியின்மையின், நாத்தானின் மகிழ்ச்சியின்மையின், இறுதியில் ஆண்டவரின் மகிழ்ச்சியின்மையின் காரணமாக மாறுகிறது. தாவீதின் வீ;ட்டில் அன்றிலிருந்து ஒரு கத்தி அவரின் தலைக்கு மேல் தொங்கத் தொடங்குகிறது. பாவம் அவர்!

நற்செயல்: தவறுவதற்கான வாய்ப்புக்களை நான் எப்படி கையாளுகிறேன்?

Sunday, May 17, 2020

லீதியா

இன்றைய (18 மே 2020) முதல் வாசகம் (திப 16:11-15)

லீதியா

திருத்தூதர்களின் பணி ஒரு பக்கம் தொழுகைக்கூடங்களிலும், பிறசமய ஆலய வளாகங்களிலும் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஆற்றங்கரைகளிலும், காற்றின் தூசியிலும் நடந்தேறுகிறது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், செந்நிற அல்லது பிங்க் நிற ஆடைகள் செல்வந்தர்களாலும், அரசவை உறுப்பினர்களாலும், மேட்டுக்குடி மக்களாலும் அணியப்பட்டன. இவர் செய்கிற இந்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. அண்மையில், திரு. ஆனந்த் ஸ்ரீனிவாஸன் என்னும் நிதி நிபுணரும் தன் மனைவி செய்கின்ற வேலைகளைப் பற்றி காணொளி ஒன்றில் பதிவு செய்திருந்தார். வேலை ஒரு மனிதருக்கு தன் மதிப்பு கொடுக்கின்றது. ஆணும் பெண்ணும் இணைந்தே இறைவனின் படைப்புப் பணியில் பங்கேற்கின்றனர். ஆக, பெண்களுக்கு வேலை என்பது அவர்களுடைய உரிமை. ஆண்களைப் போல அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது வேறு விடயம் (just kidding)!

லீதியா வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார். திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார். லூக்கா அழகாக எழுதுகின்றார்: 'அதன் பின் லீதியா எங்களிடம், 'நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்' என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.'

இங்கே இவரின் இன்னொரு பண்பையும் பார்க்க முடிகிறது.

தாராள உள்ளம். லீதியாவுக்கு வயது ஏறக்குயை 20 முதல் 25க்குள் தான் இருந்திருக்க வேண்டும். தனியாக வாழ்பவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடித்தவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடிக்கத் தயார்நிலையில் இருக்கலாம். ஆனால், பவுலைத் தன் இல்லத்தில் ஏற்கின்றார். தான் பெற்ற நம்பிக்கைக்கு உடனடியாகக் கைம்மாறு செய்கின்றார் லீதியா. இதுதான் இவரின் பண்பு. நமக்கு நல்லது ஒன்று நடந்தால் உடனே ஏதாவது ஒன்றை மற்றவருக்குச் செய்ய வேண்டும் என்பார் இத்தாலியின் ரோஸா பாட்டி. ஏனெனில், நாம் செய்வது நமக்கே திரும்பி வரும் என்பது பிரபஞ்சத்தின் விதி. ஆக, மீட்பையும் நம்பிக்கைiயும் இலவசமாக வாங்காமல் அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராகின்றார் லீதியா.

இந்த இளவல் நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

அ. தன்மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை - இது அவருடைய தொழிலில் வெளிப்பட்டது.

ஆ. புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம் - இது அவருடைய மனமாற்றத்தில் வெளிப்பட்டது.

இ. அந்நியரை வரவேற்கும் பரந்த மனம் - இது திருத்தூதர்களை ஏற்றுக்கொண்டதில் வெளிப்பட்டது.

நற்செயல்: இம்மூன்றில் நான் எதை வாழ்கிறேன் என ஆய்வது.


Friday, May 15, 2020

இணைப்பு

இன்றைய (16 மே 2020) முதல் வாசகம் (திப 16:1-10)

இணைப்பு

ஒரு தாய் தன் குழந்தையோடு இணைந்திருத்தலுக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருகிறார். ஒரு தாயும் அவருடைய கைக்குழந்தையும் அருகருகே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தாயை எழுப்ப வேண்டும். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் சத்தமாக அழைக்கிறீர்கள். அவர் எழுவதாக இல்லை. அவர் மேல் சிறிய காகிதத்தை அல்லது பென்சிலை தூக்கிப் போட்டு எழுப்புகிறீர்கள். ஆனால் ஒரு பயனும் இல்லை. இப்போது அதே காகிதத்தை அருகிருக்கும் குழந்தையின்மேலோ அல்லது மெதுவாக அந்தக் குழந்தையின் கையை அல்லது காலைத் தொட்டாலோ உடனடியாக தாய் விழித்துக்கொள்வார். கருவறைக்குள் தொப்புள்கொடி வழியாக இணைந்திருந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வந்தாலும் தாயோடு ஒருவகையான பிணைப்பில் இணைந்திருக்கிறது. ஆகையால்தான், குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் அந்த 'கம்பியில்லாத் தொடர்பு' இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியாருக்கும் திருத்தூதர்களுக்கும் அத்தகைய இணைப்பு இருப்பதைப் பார்க்கின்றோம். திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும், இப்போது திமொத்தேயுவும் இணைந்து தூய ஆவியாரோடு இணைந்திருக்கின்றனர். ஆகையால்தான், ஆசியாவில் நற்செய்தி அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுத்தார் என்றும், தூய ஆவியார் தங்களைப் பித்தினியாவுக்குப் போகவிடவில்லை என்றும், காட்சியில் ஒருவர் வந்து தங்களை அழைத்தார் என்றும் அறிந்துகொள்கின்றனர்.

'கடவுள் நினைப்பது இதுதான்' என்று மிகச் சிலருக்கு மட்டுமே இன்ட்யூஷன் இருக்கும். சிலர் இந்த இணைப்பு நிலையில் நன்றாக இருப்பர். எடுத்துக்காட்டாக, 'இன்று இதைச் செய்யலாம்' என்று அவர்கள் மனத்தில் பட்டால் பட்டுமே அதைச் செய்வார்கள்.

கடவுளைக் கொஞ்சம் அகற்றிவிட்டு, இதையே பவுலோ கொயலோ பிரபஞ்சத்தின் மனம் என்கிறார். நம் மனம் பிரபஞ்சத்தின் மனத்தோடு இணைந்திருக்கிறபோது நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறோம். இந்த இணைப்பை வளர்த்துக்கொள்ளலாம். எப்படி? முதலில் நம்மை முழுமையாக அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நேர்முக எண்ணங்களை நிறையக் கொண்டிருக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும். உடல் மற்றும் மூளையின் செயல்களைக் குறைக்க வேண்டும்.

'இன்ட்யூஷன்' பற்றி என்னுடைய கருத்துக்கு என் நண்பர்கள் நிறையப் பேர் எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. அது ஒரு 'ஃப்ளுக்'. அல்லது அது எதேச்சையாக நடப்பது. அல்லது அது ஒரு தற்செயல் நிகழ்வு. இப்படி எல்லாம் சொல்வார்கள். ஆனால், தன்னோடு இணைப்பில் ஒருவர் செய்யும் அனைத்தும் இதன் வழியாக ஒருவருக்குத் தெரியும்.

ஏனெனில் விவிலியமே இதைச்சொல்கிறது.

யாரிடமெல்லாம் ஆலோசனை கேட்கலாம் என்ற அறிவுறைப் பகுதியில், சீராக்கின் ஞானநூல் ஆசிரியரும் இதையொட்டியே,

'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது வேறெதுவுமில்லை.
காவல் மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.' (சீஞா 37:13-15)

என எழுதுகிறார்.

பவுல், பர்னபா, மற்றும் திமொத்தேயுவுக்கு இது நிறைய இருக்கிறது.

நற்செயல்: நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைப்பை உணர்தல்.


Thursday, May 14, 2020

சங்கமும் சீலாவும்

இன்றைய (15 மே 2020) முதல் வாசகம் (திப 15:22-31)

சங்கமும் சீலாவும்

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. புதிய நம்பிக்கையைத் தழுவியிருக்கும் புறவினத்து இனியவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று சிலர் நிர்பந்திக்க, அதைப் பற்றிய திருத்தூதர்களின் கருத்தைக் கேட்பதற்காக பவுலும், பர்னபாவும் எருசலேம் செல்கின்றனர்.

அங்கே திருத்தூதர்கள் இவர்களை வரவேற்கின்றனர். இவர்களின் செயல்களைப் பற்றிக் கேட்டறிகின்றனர். தொடக்க காலத்தில் எருசலேம் திருச்சபைதான் முதன்மையான திருச்சபையாக இருந்தது. அதன் தலைவராக யாக்கோபு இருந்தார். உரோமைத் திருஅவை முதலிடம் பெற்றது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வரலாறு.

பேதுருவும், யாக்கோபுவும் எருசலேம் சங்கத்தில் ஆற்றும் உரைகளைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம்.

முதலில், இவர்கள் இருவரின் பரந்த உள்ளம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதாவது, பவுலும் பர்னபாவும் தங்கள் பணிகளைப் பகிர்ந்துகொண்ட போது இவர்கள் பொறாமைப்படவோ, போட்டியுணர்வுகொள்ளவோ இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, அடுத்தவர்களின் வெற்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதற்கு பெரிய உள்ளம் தேவை. அது இவர்களிடம் இருக்கிறது.

தொடர்ந்து, பேதுரு, 'நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றார். புறவினத்துச் சீடர்களைத் தன்னைப் போல அல்லது தன் இடத்தில் வைத்துப் பார்க்கிறார். நான் அந்த இடத்தில் இருந்தால் எப்படி நினைப்பேன்? என்று தன்னை சீடர்களின் காலணிகளுக்குள் நிறுத்துகிறார் பேதுரு. மேலும், இப்படி எளியவருக்கு துன்பம் தருவது கடவுளையே சோதிப்பதாகவும் என்ற இறையச்சமும் பேதுருவிடம் இருக்கிறது.

அடுத்ததாக, யாக்கோபு, இறைவாக்கு நூல்களைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் ஆண்டவரின் இல்லத்தில் இடம் உண்டு என்று சொல்வதோடு, அவர்கள் பின்பற்ற வேண்டிய சில ப்ராக்டிகல் விடயங்களை மட்டும் சொல்கிறார். 'கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தல் ஆகாது!'

இவ்வாறாக, இவர்கள் இருவருமே பிறரைக்குச் சுமையாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று ரொம்ப சென்ஸிட்டிவாக இருக்கின்றனர். 'சென்ஸிட்டிவிட்டி' அல்லது 'பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்தல்' ஒரு உன்னதமான கொடை.

இச்செய்தியை புறவினத்தாருக்கு அறிவிக்க, திருத்தூதர்கள் 'சீலாவை' தேர்ந்தெடுக்கின்றனர்.  திருத்தூதர் பணிகள் நூலில் வரும் 'சீலாவை' நான் நிறைய நாள்கள் பெண் என்றே நினைத்தேன். ஆனால், 'சைலஸ்' என்ற கிரேக்கப் பெயர் கொண்ட இவர் ஓர் ஆண்.

எருசலேம் திருச்சங்கம் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்கு விடை கண்டபின் அதை உடனடியாக கடிதம் வழியாக திருச்சபையாருக்கு அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் முறை அந்தக் காலத்தில் இருந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகின்றது.

ஒரு கடிதம் எழுதுகின்றனர். கடிதத்தை பவுல் மற்றும் பர்னபாவின் கைகளில் கொடுத்தனுப்பியிருக்கலாம். ஆனால், 'பவுலும் பர்னபாவும்தான் இதை எழுதினார்கள்' என்று யாராவது குற்றம் சுமத்தக்கூடும் என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து, தங்கள் திருச்சபையிலிருந்த இருவரை - யூதா மற்றும் சீலா - அனுப்புகின்றனர். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? 'இருவரின் சாட்சியம் செல்லும்' என்பதற்காகவும், வழியில் ஏதாவது ஒரு விபத்து நேரிட்டு ஒருவர் இறக்க நேரிட்டாலும் மற்றவர் இருப்பார் என்ற எண்ணத்திலும் இருவர் அனுப்பப்படுகின்றனர்.

தூது அனுப்புப்படுபவர் தன்னை யார் அனுப்பினாரோ அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். ஆகையால்தான் ஞானநூல்கள் தூது அனுப்புதலைப் பற்றி அதிகம் பேசுகின்றன.

சீலா தான் அனுப்பப்பட்ட தூதுக்கு உண்மையானவராக இருக்கிறார்.

தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராக, எந்தவொரு உடனடி இன்பத்தையும் விரும்பாதவராக இருக்க வேண்டும்.

நற்செயல்: இன்று நாம் எல்லாருமே நற்செய்தியின் அல்லது இயேசுவின் நற்செய்தியின் தூதுவர்களே. சீலாவிடம் துலங்கிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா?

Wednesday, May 13, 2020

பணியாளரும் நண்பரும்

இன்றைய (14 மே 2020) நற்செய்தி (யோவா 15:9-17)

பணியாளரும் நண்பரும்

திராட்சைக் கொடி உருவகத்தைத் தொடர்ந்து, இயேசு தனக்கும் தன் சீடர்களுக்குமான உறவை மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.

'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்' என்கிறார்.

இவற்றை என்றால் எவற்றை? அன்பில் நிலைத்திருப்பதை.

ஒவ்வொரு உறவின் நோக்கமும் மகிழ்ச்சி தான். நாம் யாரும் யாருடனும் துன்பப்பட வேண்டும் என்ற நோக்கில் உறவில் இருப்பது கிடையாது. சில நேரங்களில் மகிழ்ச்சியற்ற தருணங்கள் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக உறவுநிலை நமக்கு மகிழ்ச்சி தர வேண்டுமே தவிர, துன்பம் அல்லது கவலை தரக்கூடாது.

எப்போது மகிழ்ச்சி வரும் என்றால், நாம் நண்பர் நிலையில் இருக்கும்போது.

உறவில் இரண்டு நிலைகள் சாத்தியம்: ஒன்று, பணியாளர் நிலை. இரண்டு, நண்பர் நிலை.

பணியாளர் நிலையில் உறவு என்பது அதிகாரம் சார்ந்ததாக இருக்கும். ஒருவர் மற்றவரை திருப்திப்படுத்துவதே அங்கே இலக்காக இருக்கும். அல்லது ஒருவர் மற்றவரிடம் தன்னுடைய திருப்தியை அங்கே இரக்கின்ற நிலை இருக்கும். மேலும், 'நான் உனக்கு இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதைச் செய்' என்று சொல்கின்ற நிலை இருக்கும்.

இதற்கு மாற்றாக, நண்பர் நிலை என்பது அன்பு சார்ந்ததாக இருக்கும். அங்கே ஒருவர் மற்றவரை திருப்திப்படுத்த மாட்டார்கள். மாறாக, நிறைவு செய்வார்கள். அங்கே ஒருவர் மற்றவர் இரக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். ஏனெனில், இருவரும் நிறைவு நிலையில் இருப்பார்கள். நிறைவு மனநிலையில் இருப்பவர்கள் எந்தக் குறையையும் பொருட்படுத்த மாட்டர்கள்.

உறவு நிலை நண்பர் நிலையில் அமைந்தால் வாழ்வில் கனி தருதல் சாத்தியமாகும். கனி தருவதற்காகவும், நிலைத்திருக்கும் கனிகளைத் தருவதற்கும் தன் சீடர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாக இயேசு சொல்கிறார்.

ஆக,

'அன்பில் நிலைத்திருக்க வேண்டும்'

'அன்பில் நிலைத்திருந்தால் மகிழ்ச்சி பிறக்கும்'

'மகிழ்ச்சி நண்பர் நிலை உறவில் நீடிக்கும்'

'இந்த உறவில் நீடித்த நிலைத்த கனிதருதல் சாத்தியமாகும்'


Tuesday, May 12, 2020

இணைந்திருத்தல்

இன்றைய (13 மே 2020) நற்செய்தி (யோவா 15:1-8)

இணைந்திருத்தல்

'இணைந்திருத்தல்' மற்றும் 'கனிதருதல்' என்பவை யோவான் நற்செய்தியில் நாம் அதிகமாக வாசிக்கும் கருத்துருக்கள்.

இவ்விரண்டு கருத்துருக்களையும் இன்றைய நற்செய்தியில் 'திராட்சைக் கொடியும் கிளைகளும்' உருவகம் வழியாக நமக்கு விளக்குகிறார் இயேசு.
இயேசுவின் உருவகங்கள் எல்லாமே தன்னுடைய சமகாலத்து மக்களின் வாழ்வியல் சார்ந்ததாக இருக்கிறது. ஆக, மக்கள் பயன்படுத்தும் அல்லது மக்கள் நடுவில் வழக்கத்தில் இருக்கும் ஒன்றை எடுத்து, அவர்கள் கண்களுக்கு எட்டாத ஒரு பொருளை அவற்றின் வழியாக விளக்குகிறார். ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் உருவகங்கள் பெரும்பாலும் இறையரசு அல்லது விண்ணரசை நோக்கியதாக இருக்கின்றது. ஆனால், யோவான் நற்செய்தியில் உருவகங்கள் தந்தை-இயேசு உறவைக் குறிப்பதாக அமைந்துள்ளன.

திராட்சைக் கொடி நடப்படுவதன் நோக்கம் கனிதருவதே. கனி தருவதற்கு கிளைகள் கொடியோடு இணைந்திருக்க வேண்டும். சீடர்களின் நோக்கம் கனி தருவதே. அப்படி அவர்கள் கனி தர அவர்கள் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும்.

இணைந்திருத்தலும் கனிதருதலும் இணைந்தே செல்ல வேண்டும்.

இணைந்திருத்தல் மட்டும் இருந்து கனிகள் இல்லை என்றால், அது கொடிக்குச் சுமையாக மாறிவிடும். காலப் போக்கில் தறித்துவிடப்படும். ஏனெனில், அது சுமையாக இருப்பதோடு மற்ற கொடிகளுக்குச் செல்லும் சத்தையும் தான் உண்டுகொண்டு இருக்கும்.

'என்னை விட்டுப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று இயேசு சொல்வது பெரிய எச்சரிக்கையாக இருக்கிறது. கிளை ஒன்று கொடியுடன் இணையாமல் திராட்சை படர விடப்படும் கம்பியுடனும் அல்லது கம்பியைத் தாங்கும் கல்லுடனும் இணைந்தால் என்ன ஆகும்? ஒன்று, இணைதல் சாத்தியமன்று. இரண்டு, அப்படி இணைந்தால் அவற்றின் சூடு கொடியைப் பொசுக்கிவிடும்.

இயேசுவோடு இணைந்திருப்பது எப்படி?

அவருடைய வார்த்தைகள் நம்மில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது அவற்றை நாம் ஏற்று அதன்படி வாழ வேண்டும்.

ஒன்றை இறைவனின் வார்த்தை என்று நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

நாம் கனிதருவதை வைத்து எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனோ தொற்று ஒரு பக்கம் இருந்தாலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தனிமனித விலகல் சற்றே குறையத் தொடங்குகிறது. இந்நேரத்தில், ஒருவர் மற்றவரோடு இணைந்திராமல் இருப்பதே நல்லது. ஆனால், நாம் மீண்டும் கனிதரத் தயாராக இருக்க வேண்டும்.

மீண்டும் நம் வாழ்வோடு நம்மை இணைத்தாலே கனிதருதல் சாத்தியமாகும்.

நற்செயல்: நாம் இயேசுவோடு இணைந்து கனிதந்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தல்.

Monday, May 11, 2020

இவ்வுலகின் தலைவன்

இன்றைய (12 மே 2020) நற்செய்தி (யோவா 14:27-31)

இவ்வுலகின் தலைவன்

காலங்காலமாக கடவுள் மறுப்புக்கு சொல்லப்படும் ஒரு கருப்பொருள் 'தீமை.'

கடவுள் நல்லவராகவும் வல்லவராகவும் இருந்தால் தீமை ஏன்?

கடவுள் நல்லவர் என்றால் தீமையை அவர் விரும்ப மாட்டார்.

கடவுள் வல்லவர் என்றால் தீமையை அவர் அழித்துவிடுவார்.

ஆனால், தீமை இன்றும் இருக்கிறது.

ஆக, கடவுள் வல்லவரும் இல்லை, நல்லவரும் இல்லை. மொத்தத்தில், கடவுள் இல்லை.

இதுதான் கடவுள் மறுப்பு வாதம்.

யோபு நூலில் கடவுள் சாத்தான் சொல்வதைக் கேட்பது போல இருக்கும். இதை வைத்துச் சிலர், கடவுள் தீமை அல்லது தீயவனுக்குக் கட்டுப்படுகிறார் என்று சொல்வதுண்டு.

இதற்கேற்றாற் போல உள்ள இன்னொரு பகுதிதான் இன்றைய நற்செய்திப் பகுதி.

இயேசு தன்னுடைய இறுதி இராவுணவில், சீடர்களுடனான தன்னுடைய உரையாடலில், 'இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை. ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான்' என்கிறார்.

இங்கே, 'இவ்வுலகின் தலைவன்' என்பதை, 'இவ்வுலகின் இளவரசன்' என மொழிபெயர்க்கலாம்.

இந்தச் சொல்லாடல் யூதாசைக் குறிப்பதாகச் சொல்கின்றனர் சிலர். ஆனால், இது அலகை அல்லது சாத்தானையே குறிக்கிறது.

இயேசுவே சாத்தானை இவ்வுலகின் தலைவன் என ஏற்றுக்கொள்கிறார் என சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால், அவனுக்கு தன்மேல் அதிகாரம் இல்லை என உறுதியாகச் சொல்கின்றார் இயேசு.

இந்த நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

(அ) 'வார்த்தை மினிமலிஸம்'. வாழ்வியில் மினிமலிஸத்தோடு இணைந்து இன்று 'வார்த்தை மினிமலிஸம்' மற்றும் 'எண்ணம் மினிமலிஸம்' பேசப்படுகிறது. வார்த்தைகளைக் குறைப்பது, எண்ணங்களைக் குறைப்பது. இயேசு தான் மிகுதியாகப் பேசப் போவதில்லை என்கிறார். ஏனெனில், வார்த்தைகள் எல்லா நேரமும் தேவைப்படுபவை அல்ல. வார்த்தைகள் இல்லாமல், அல்லது குறைவான வார்த்தைகளுடன் வாழப் பழகுதல்.

(ஆ) 'அதிகாரம் இல்லை.' நான் ஒருவருக்கு என்மேல் அதிகாரம் கொடுத்தால் ஒழிய, அவர் என்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆக, என்மேல் நான் யாருக்கும், எதற்கும் அதிகாரம் கொடுக்கக் கூடாது. நமக்குத் தேவை 'தன்னாளுகை.'

நற்செயல்: நாம் பேசும், எண்ணும் வார்த்தைகளை 'எண்ணி' பார்ப்பது.

Sunday, May 10, 2020

கல்லும் காலும்

இன்றைய (11 மே 2020) முதல் வாசகம் (திப 14:5-18)

கல்லும் காலும்

'கல்' மற்றும் 'கால்' என்னும் இரண்டு வார்த்தைகளை மையப்படுத்தி நகர்கிறது இன்றைய முதல் வாசகம். பவுலும் பர்னபாவும் இக்கோனியாவில் நற்செய்தி அறிவிக்கின்றனர். அங்கே இருந்த யூதர்கள் அவர்கள்மேல் பொறாமை கொண்டு கல்லெறியத் திட்டமிடுகின்றனர்.

அவர்கள் தப்பி லிஸ்திராவுக்குப் புறப்படுகின்றனர்.

அங்கே கால் வழங்காத ஒருவர் இருக்கின்றார். நம்பிக்கை கொண்டிருந்த அவரிடம் பவுல், 'நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்' என அவரும் நிற்கின்றார்.

இதைக் கண்டு ஆச்சர்யப்படுகின்ற மக்கள், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று சொல்லி, பர்னபாவை 'சேயுசு' எனவும், பவுலை 'எர்மசு' என்றும் அழைக்கின்றனர்.

ஏனெனில், கடவுள்தாமே மனிதர்களின் குறைபாட்டைப் போக்கி நிறைவாக்க முடியும் என்பது பவுலின் சமகாலத்தவரின் நம்பிக்கையாக இருந்தது.

ஆனால், என்ன நடக்கிறது என்றால்,

'கடவுளர்களே நம்மிடம் வந்துவிட்டார்கள்' என்று சொன்னவர்கள் சில நிமிடங்களில் அவர்கள்மேல் கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏன்?

மற்றவர்கள் தூண்டிவிட்டதால்.

இயேசு ஒரு முறை கல்லறையில் கட்டப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து பேயை அல்லது பேய்களை பன்றிகளுக்குள் அனுப்புவார். அந்த நிகழ்வில், இயேசு அப்பேயிடம், 'உன் பெயர் என்ன?' என்று கேட்கும்போது, பேய், 'என் பெயர் லெகியோன்' என்று சொல்லும். 'லெகியோன்' என்றால் 'கூட்டம்.'

நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இந்தக் கூட்டம் நம்மில் எப்போதும் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும். இந்தக் கூட்டம் உணர்ச்சியாலும் உணர்வுகளாலும் மட்டுமே உந்தித் தள்ளப்படும். இந்தக் கூட்டம் எதையும் ஆய்வுக்கு உட்படுத்தாது. தான் விரும்புவதையும் மற்றவர்கள் விரும்புவதையும் அப்படியே செய்யும்.

லிஸ்திராவில் பவுல் மற்றும் பர்னபாவைச் சுற்றியிருந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொண்டார்கள்.

நற்செயல்: என் வாழ்வை நகர்த்துவது 'நானா' அல்லது 'கூட்டமா?' என்று கேட்டறிவது. கூட்டத்தின் செயல்பாட்டைக் குறைக்க முயற்சி எடுப்பது.

Friday, May 8, 2020

கால்களில் தூசி

இன்றைய (9 மே 2020) முதல் வாசகம் (காண். திப 13:44-52)

கால்களில் தூசி

தொழுகைக்கூடத்தில் பவுல் நீண்ட உரையாற்றுகின்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் அடுத்த ஓய்வுநாளிலும் கூட ஆரம்பிக்கின்றனர்.

இது யூதத் தலைவர்களுக்குப் பொறாமையை வர வைக்கிறது.

பொறாமை - இது மிகவும் அழிக்க முடியாத தீ. அடுத்தவரை ஒரே நொடியில் அழித்துவிடுகின்ற தீ. ஆனால், கடவுளுக்கு அஞ்சுபவர் இதிலிருந்து தப்புவார் என்பதுதான் இன்றைய முதல் வாசகத்தின் பாடமாக இருக்கிறது.

யூதத் தலைவர்கள் தங்களைப் பழித்துரைப்பதைக் காண்கின்ற பவுலும் பர்னபாவும், 'நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்' எனப் புறப்படுகின்றனர்.

இது ஒரு நல்ல வாழ்வியல் மேலாண்மை பாடம்.

பள்ளிக்கூடத்தில் நன்றாகப் பாடம் நடத்துகிறார் ஓர் ஆசிரியை. அவளுடைய இருப்பு கண்டு பொறாமை கொள்கின்ற மற்ற ஆசிரியர்கள் அவள்மேல் இல்லாதது பொல்லாதது சுமத்துகின்றனர். அந்த ஆசிரியை கீழ்வகுப்புக்கு மாற்றப்படுகிறாள். ஆனால், அவள் அழவில்லை. 'நான் அங்கே போகிறேன். இன்னும் சிறிய குழந்தைகளுக்கு என்னால் இன்னும் நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்' எனப் புறப்படுகிறாள்.

இதே செயலைத்தான் பவுலும் பர்னபாவும் செய்கின்றனர்.

பணியை நிறுத்திவிடவோ, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிவிடவோ இல்லை.

வாழ்க்கை மிகப் பெரியது, உலகம் மிகப் பெரியது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தங்களுடைய பழைய வாழ்வை அப்படியே முதுகுக்குப் பின் தூக்கி எறிந்துவிட்டு, புதிய வாழ்க்கையை, புதிய மக்களைத் தேடிப் புறப்படுகின்றனர்.

அதன் அடையாளமாக, 'தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிடுகின்றனர்.'

எனக்கு இங்கே ஒன்று ஆச்சர்யமாக இருக்கிறது?

நற்செய்தியை அறிவிப்பதால் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் அவமானமும், பழிப்புரையும், அடிகளும்தான்.

அப்புறம் எப்படி அவர்களால் தொடர்ந்து பணி செய்ய முடிந்தது?

இறையனுபவம் பெற்றவர்கள் தாங்கள் ஓய்ந்திருக்க முடியாது என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா

அல்லது

கமாலியேல் தலைமைச் சங்கத்தில் சொன்னது போல,

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது' (காண். திப 5:39)

ஊதி அணைத்துவிட இறைப்பணி ஒன்றும் மெழுகுதிரி அல்ல, அது காட்டுத்தீ!

- என்று உணர்த்துகிறது இந்நிகழ்வு.

கடவுள் தன் பணியை மனிதர்கள் வழியாகத் தனக்கே செய்துகொள்கின்றார். மனிதர்கள் வெறும் கருவிகளே.

பவுலுக்கும் பர்னபாவுக்கும் தெரியும்: 'இவ்வுலகில் நடப்பவை எதுவும் தற்காலிகமாக, எதேச்சையாக நடப்பதில்லை. எல்லாம் திட்டமிட்டே நடக்கின்றன. நடக்கின்ற அனைத்திற்கும் காரணம் இருக்கிறது.'

ஆகையால், அவர்களின் வருகை இன்னொரு நகரத்தாருக்கு மகிழ்ச்சி தருகின்றது. அந்த மகிழ்ச்சியில் அவர்கள் தங்கள் துன்பங்களை மறந்துவிடுவார்களா?

இல்லை! இரண்டையுமே அவர்கள் மறப்பதில்லை! ஏனெனில், இது அவர்களின் பணி அல்ல!

Thursday, May 7, 2020

இதுவே நற்செய்தி

இன்றைய (8 மே 2020) முதல் வாசகம் (திப 13:26-33)

இதுவே நற்செய்தி

இன்றைய மற்றும் நாளைய நற்செய்தி வாசகப் பகுதிகளை நாம் வருகின்ற ஞாயிறன்று வாசிக்க விருப்பதால், இவ்விரண்டு நாள்கள் சிந்தனைக்கு முதல் வாசகப் பகுதிகளை எடுத்துக்கொள்வோம்.

நேற்றைய முதல் வாசகத்தில் (காண். திப 13:13-25), பவுலும் அவரோடு இருந்தவர்களும் அந்தியோக்கியா வருகின்றனர். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கே அமர்ந்திருக்கின்றனர். இங்கே ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று எந்த தனிப்பட்ட வழிபாட்டு அடையாளத்தையும், முறையையும் பெற்றிருக்கவில்லை. யூத அடையாளங்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையுமே பின்பற்றினர். இந்தப் பின்புலத்தில்தான் பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஓய்வுநாளை அனுசரிக்கின்றனர், தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றனர். திருச்சட்டமும் இறைவாக்கு நூல்களும் வாசிக்கப்படுகின்றது. யூதர்களின் இதே பின்புலத்தில்தான் நாம் ஞாயிறு திருப்பலியில் முதல் வாசகம், இரண்டாம் வாசகம் என இரண்டு வாசகங்களை வாசிக்கின்றோம்.

தொழுகைக்கூடத் தலைவர் இவர்களிடம் ஆளனுப்பி, 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' என அழைப்பு விடுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரின் தாராள உள்ளமும், புதியவர்களை ஏற்றுக்கொள்ளும் பரந்த உள்ளமும் இங்கே தெரிகிறது.

'இல்லப்பா! எங்களுக்குச் சொல்ல ஒன்னும் இல்ல!' என்று பவுல் ஒதுங்கவில்லை.

'நற்செய்தி அறிவிக்க எப்படா வாய்ப்பு கிடைக்கும்?' என்ற பேரார்வத்தால் பற்றியிருந்த பவுல், இந்த வாய்ப்பை அப்படியே பற்றிக்கொண்டு, நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகிறார்.

இன்று, நாம் இதே நற்செய்தி அறிவிப்பு ஆர்வம் கொண்டிருக்கிறோமா? யாராவது ஒருவர் விவிலியம் அல்லது கடவுள் பற்றி ஏதாவது ஐயம் எழுப்பினால்கூட, நாம் தெரியாததுபோல அங்கிருந்து ஒதுங்கிவிடுகிறோம் இல்லையா?

பவுல், இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பை மிக அழகாக சுருக்கமாகச் சொல்கின்றார்.

அவரின் சுருக்கமும் இதுதான்: 'இறந்த கிறிஸ்து இன்று உயிருடன் வாழ்கிறார். அவரால் நாம் வாழ்வு அடைந்தோம்.'

'கிறிஸ்து வாழ்கிறார்' என்று நம் திருத்தந்தை வழங்கியுள்ள திருத்தூது ஊக்கவுரைச் செய்தி போல, 'கிறிஸ்து இன்றும் நம்மோடு' என உறுதியாகக் கூறுகிறார் பவுல்.

'இதுதான் நற்செய்தி' என்கிறார் அவர்.

பவுலுக்கு இது வாழ்வியல் அனுபவமாக மாறியது.

நம்மை யாராவது ஒருவர் அன்பு செய்யும்போது, 'நான் அன்பு செய்யப்படுகிறேன்' என்ற உணர்வு நமக்கு உற்சாகத்தையும், ஆறுதலையும், ஆதரவையும் தருகிறது.

கையில் காசு இல்லாமல், ரொட்டிக் கடைக்கு வெளியே கைக்குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணிடம், 'வா! உனக்கு வேண்டிய அனைத்தையும் கடையிலிருந்து எடுத்துக்கொள்!' எனச் சொல்ல, 'இல்ல...என்கிட்ட காசு இல்ல!' என அவர் சொல்ல, 'நான் உனக்காக பணம் கொடுத்துவிட்டேன்!' என்று நாம் சொன்னால், அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு மகிழும்!

இதே மகிழ்ச்சி உணர்வையே கிறிஸ்து கொணர்ந்த மீட்பு நமக்குத் தருகிறது.

எனில்,

நான் மகிழ வேண்டாமா? நான் நற்செய்தியை அறிவிக்க வேண்டாமா?

நற்செயல்: என் மகிழ்ச்சியே என் நற்செய்தி எனில், இனி நான் கவலைப்படுவதோ, கலக்கம் கொள்வதோ இல்லை என்ற தீர்மானம் எடுத்தல்.