Friday, December 30, 2016

திருக்குடும்பம்

இன்று திருக்குடும்பத்தின் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

நேற்று மாலை கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' ஒலிநாடா கேட்டேன்.

வீடு பற்றிச் சொல்லும்போது, 'படி' மற்றும் 'நிலை' பற்றிச் சொன்னார்.

ஒவ்வொரு வீட்டிலும் இந்த இரண்டும் இருக்கும்.

வீட்டில் இருப்பவர் 'நிலை' போல உயர்ந்திருக்க வேண்டும் எனவும், உயர்ந்திருந்தாலும் 'படி'ந்து போக வேண்டும் என நினைவூட்டவுமே 'படி-நிலை' என்கிறார் கண்ணதாசன்.

திருக்குடும்பத்திலும் இந்த படியும் நிலையும் இருந்தது.

திருக்குடும்பம் மூன்று பண்புகளைக் கொண்டிருந்தது:

அ. பாதுகாப்பு
ஆ. பயணம்
இ. வளர்ச்சி

இந்தப் பண்புகள் நமதாகலாமே!

Wednesday, December 28, 2016

கைகளில்

நாளைய நற்செய்தி வாசகத்தில் குழந்தை இயேசுவை கைகளில் ஏந்துகிறார் சிமியோன்.

குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் தூக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய நாளின் மையம் குழந்தையா? முதியவரா? இரண்டு பேரும் தாம். ஒரு முதியவர் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். ஒரு அஸ்தமனம் ஒரு உதயத்தைத் தாங்குகிறது. வாழ்வின் முடிவும் வாழ்வின் தொடக்கமும் ஒன்றையொன்று சந்திக்கிறது.

எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது? நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே நிற்கிறேன்.'

சிமியோனுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கம் இதுதான். அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை ஏந்தியவுடன் அவர் சொல்லும் சொற்களுக்கு மிகுந்த வாழ்வியல் அர்த்தம் உண்டு:

'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன'.

தன் வாழ்க்கை முடிவுற்றது. இனி தான் அமைதியாகச் செல்லலாம் என்று மொழிகின்றார் முதியவர். வாழ்வில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது 'விடைபெறுவது'. எதற்காக மரணம் அல்லது பிரிவு பயத்தைத் தருகின்றது? 'பிடிமானம்'. நாம் 'இதுதான் எல்லாம்' என எதையாவது பிடித்துக் கொள்கின்றோம். அதை விட மனம் வரவில்லை. அது கண்டிப்பாக நம்மிடமிருந்து எடுக்கப்படும் என்று தெரியும். இருந்தாலும் நாம் அதை எளிதாக விடுவதில்லை. இது வாழ்வில் மட்டுமல்ல. அனைத்துப் பணிநிலைகளிலும் இருக்கலாம். குறி;ப்பாக, அரசியலில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், ஏன் குடும்பத்தில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு கட்டத்தில் அதை விட்டுத்தாங்கள் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. 'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று பிடித்துக் கொண்டேயிருப்பது அவர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பையே கொண்டு வருகின்றது. 'முகமலர்ச்சியுடன் விடைபெற' இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் சிமியோன். சிமியோனின் மனநிலை நமக்கு இருந்தால் இறப்பைக் கண்டும், பிரிவைக் கண்டும் பயப்படவே தேவையில்லை.

என் குடும்பத்தில், என் பணியில், என் படிப்பில், என் பயணத்தில், என் நண்பரில் நான் மீட்பைக் கண்டுகொண்டேன். என்னால் அமைதியாகப் போகமுடியும் என்று நம்மால் சொல்ல முடிந்தால் நாமும் சிமியோன்களே.

பல நேரங்களில் இவர்களில் நாம் மீட்பiயும் மகிழ்வையும் காண்பதில்லை. ஆகையால் தான் நம்மால் மகிழ்ச்சியோடு விடைபெற முடிவதில்லை. நம் வாழ்வின் உதயம் எந்த அளவிற்கு எதார்த்தமானதோ அந்த அளவிற்கு அஸ்தமனமும் எதார்த்தமானது. அஸ்தமனம் கூட அழகுதான் என்பதற்கு அடையாளம் சிமியோன்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே ஒரு குழந்தை. ஒவ்வொரு பொழுதும் ஒரு உதயம். ஒவ்வொரு பொழுதும் ஒரு அஸ்தமனம். திறக்கின்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும். நாம் சந்திக்கும் உறவுகள் எல்லாம் பிரிய வேண்டும். சில நேரங்களில் பிரியம் வளர பிரிந்துதான் இருக்க வேண்டும். சந்திப்பிற்கும், பிரிவிற்கும் இடையே ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்?

Tuesday, December 27, 2016

தெ ஸ்பை

பவுலோ கோயலோ அவர்களின் வெகு சமீபத்திய புதினம் 'தெ ஸ்பை' வாசித்து முடித்தேன்.

மாத்தா ஹரி என்ற நடன இளவல் உலகப்போரின்போது எதிரி நாட்டு உளவாளியாக மாறிய கதைதான் இது.
நடனம் செய்யவும், தன் கனவு நாட்டைக் காணவும் பாரிஸ் செல்லும் இளவல் அனுபவிக்கும் வாழ்க்கைப் போராட்டமே இந்தப் புதினம்.

இந்த நாவலில் என்னைக் கவர்ந்த சிலவற்றை நான் இங்கே பதிவு செய்கிறேன்:

'நீ இன்று எப்படி உணர்ந்தாலும், எழு, ஆடை அணி, வெளியே செல்!'

---

'நீ எதைப் பற்றியும் வெட்கப்படாதே. வாழ்க்கை உனக்குக் கொடுப்பதை அப்படியே எடுத்துக் கொள். எல்லாக் கோப்பையிலிருந்தும் குடி. சிலவற்றை சொட்டு சொட்டாக. சிலவற்றை அப்படியே. எப்படி வித்தியாசப்படுத்துவது? நீ சுவையற்றதை முதலில் குடித்திருந்தால் அடுத்து வருவது சுவையாக இருக்கும்.'

---

'ஒருவர் உன் வாழ்வில் இருந்து விலகுகிறார் என்றால், மற்றவர் வரப்போகிறார் என்று பொருள். நான் அன்பை திரும்பப் பெறுவேன்.'

---

'நீ எப்படி இருப்பதாக நம்புகிறாயோ அதுதான் நீ!'

---

'எதற்கும் விளக்கம் சொல்லாதே. உன் நண்பர்களுக்கு அது தேவையில்லை. உன் எதிரிகள் அதை நம்பப் போவதில்லை.'

---

'வாழ்க்கை நம்மை எப்படி கூட்டிச் செல்கிறது என்று தெரியாத ஒருவருக்கு எதுவும் இழப்பு அல்ல.'

---

'அன்பு ஒரு மறைபொருள்.'

---

'இளைஞன் ஒருவன் இருந்தான். இளவல் ஒருத்தி இருந்தாள். நீ என்னைக் கரம் பிடிக்க வேண்டுமெனில் சிகப்பு ரோஜா ஒன்று கொண்டு வா - என்றாள் இளவல். அந்த நாட்டில் வெள்ளை ரோஜாக்கள் மட்டுமே இருந்தன. அவளின் கரம் பிடிக்க இந்த இளைஞன் காடு மேடெல்லாம் சிகப்பு ரோஜா தேடினான். இதைப் பார்த்த நைட்டிங்கேல் பறவை இவனுக்கு உதவி செய்ய நினைத்தது.

ரோஜா செடியிடம் போய், 'எனக்காக ஒரு சிகப்பு ரோஜா கொடு!' என்றது.

செடி மறுத்தது. 'என்னால் சிகப்பு ரோஜா கொடுக்க முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். முழு நிலவு நாளன்று என் முட்களில் உன்னை மோதிக்கொண்டே பாட்டுப்பாடு. அப்போது வடியும் உன் இரத்தம் என் வெள்ளை ரோஜாவை சிகப்பாக்கும்.

முழு நிலா இரவும் வந்தது. நைட்டிங்கேல் பாடிக்கொண்டே தன்னை ரோஜாவின் முள்மேல் மோதியது. அந்தப் பறவையின் இரத்தம் மெதுவாக ரோஜா செடியில் வடிந்து அதன் தண்டுக்குள் புகுந்து வெள்ளை ரோஜாவை சிகப்பாக்கத் தொடங்கியது.

'இன்னும் வேகமாக பாடு. சூரியன் வரப்போகிறது' என அவசரப்படுத்தியது செடி.

தன்னிடம் இருந்த அனைத்து இரத்தத்தையும் வடித்துவிட்டது நைட்டிங்கேல். முழுவதும் சிவந்த ரோஜாவை எடுத்துக்கொண்டு இளைஞனிடம் சென்றது பறவை. அவனிடம் கொடுத்த அடுத்த நொடி அது இறந்துவிட்டது.

சிகப்பு ரோஜாவை எடுத்துக்கொண்ட இளைஞன் தன் இளவலை நோக்கி ஓடினான்.

ஆசையாய் நீட்டினான். அவளின் கரம் நோக்கி தன் கரம் நீட்டினான்.

'இந்த ரோஜா இல்லை நான் கேட்டது!' 'இந்த சிவப்பு அல்ல நான் விரும்புவது!' 'இந்த பூ என் ஆடைக்கு பொருத்தமாக இல்லை' - இப்படிச் சொல்லி தட்டிக்கழிக்கிறாள் இளவல்.

இதற்கிடையில் மற்றொரு இளைஞன் அவளைக் கரம் பிடித்து விடுகிறான்.

சோர்வோடு வீடு திரும்பும் காதலன் ரோஜாவை சாலை ஓரத்தில் போடுகிறான். அவ்வழியே வந்த ஒரு டிரக் ரோஜாவை ஏற்றி நசுக்குகிறது.

அவன் தான் விரும்பிய புத்தகங்களுக்குள் தன்னை மறுபடியும் புதைத்துக்கொண்டான். காதலிகளை விட புத்தகங்கள் மேலானவை. இந்த உலகத்தில் கிடைக்காதவற்றை எனக்கு கொண்டு வா என அவைகள் சொல்வதில்லை.

அந்த நைட்டிங்கேல் போல தன்னை உணர்ந்தாள் மாத்தா ஹரி.

---

'வாழ்க்கை மிகவும் கடினமானது. எளிதானவைகளும் அதில் இருக்கின்றன.

ஐஸ் க்ரீம் சாப்பிடுவது.

உன் குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பது.

உன் அறையைப் பெருக்கி சுத்தப்படுத்துவது.'

---

உன் கையில் உள்ள விதைகள் தூலிப் பூக்களின் விதைகள்.

இவைகளை நீ எப்படி வைத்து வளர்த்தாலும் தூலிப் பூக்கள்தாம் வரும்.

அவற்றில் ரோஜா எதிர்பார்த்தால் நீ விதையை இழந்துவிடுவாய்.

உன் வாழ்க்கையும் அப்படியே!

---

பூக்களே சிறந்த ஆசிரியர்கள்.
வாழ்வின் நிலையாமையை அவைகள் அறிந்திருந்தாலும் காலையில் அழகாக சிரிக்கின்றன.
அவைகள் எந்நேரமும் தண்டுகளைப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.
விழ வேண்டிய நேரத்தில் கீழே விழுந்து அடுத்த பூக்களுக்கு வழி விடுகின்றன.

---

கோயலோ ஒரு வித்தியாசமான நாவல் ஆசிரியர். இவரின் புதினத்தில் நிறைய கத்தோலிக்க சிந்தனைகளும், விவிலிய மேற்கோள்களும் காணக்கிடக்கும்.

செக்ஸ், காதல், அன்பு, பிரமாணிக்கமின்மை, பொறாமை, கோபம் என அனைத்தையும் போகிற போக்கில் இயல்பாக எழுதக்கூடியவர் இவர்.

'இது சரி! அது தவறு!' என்று எந்த அறநெறியையும் உட்புகுத்தாதவர்.

ஒவ்வொருவரும் தனக்கு விருப்பம் அல்லது சரி என்று சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்!

Sunday, December 18, 2016

சக்கரியா

'அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார்!'

ஆலயத்திற்குள் ஆரவாரத்தோடு சென்றவர் ஊமையாய் திரும்பி வருகிறார்.

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை அப்படித்தான் ஆக்கிவிடுகிறது.

தூபம் ஆட்டும்போதுகூட சக்கரியா இப்படி நடக்கும் என நினைத்திருக்க மாட்டார்.

மரியா கேள்வி கேட்டபோது தண்டிக்காத கபிரியேல், சக்கரியா கேட்டவுடன் தண்டித்துவிடுகிறார். பாவம் ஆண்கள்!

சக்கரியா தன் வீட்டிற்கு எப்படி சென்றிருப்பார்? தன் மனைவி எலிசபெத்தை சந்தித்தவுடன் என்ன சொல்லியிருப்பார்? கணவர்கள் மௌனமாக இருந்தால் மனைவியர் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

இறைவனின் முன்னிலையில் தேவையில்லாமல் வாய் திறக்கக்கூடாது என்பதற்கு சக்கரியா நல்ல உதாரணம்.

ஊமைகளின் உலகம் ஆச்சர்யமானதாகத்தான் இருக்கும்.

ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோட்டில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் வாய் பேச முடியாதவர்கள் கூடிப் பேசுவார்கள்(!). பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

ஆனால், ஊமை என்பதிலும் ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கும்.

சக்கரியாவை அந்த அமைதிக்குத்தான் அழைத்துச் செல்கிறார் கபிரியேல்.

குழப்பம், கலக்கம் இருக்கும்போது நம்பிக்கையும் காணாமல்போய்விடுகிறது. சக்கரியாவின் பிரச்சினை அதுதான்.

ஆழ்ந்த அமைதியில் சக்கரியா இறைவனைக் கண்டார்!

தி என்ட் ஆஃப் தி அஃப்ஃபயர்

கிரகம் க்ரீன் எழுதிய 'தி என்ட் ஆஃப் தி அஃப்ஃபயர்' என்ற புதினத்தை வாசித்து முடித்தேன்.

கத்தோலிக்க எழுத்தாளர்.

தான் காதலித்த ஒரு பெண் (தன்னைக் காதலித்த ஒரு பெண்) தன் நண்பனுக்கு வாழ்க்கைத் துணையாகிவிட, தன் நண்பன்மேல் வெறுப்பும், தன் காதலி மேல் பொறாமையும் கொள்ளும் ஒருவனின் உள்மனப் போராட்டமே நாவலின் ஒற்றைவரி.

போகிற போக்கில் பாவம், காமம், காதல், செபம், நரகம், மோட்சம், கடவுள், அன்பு, வெறுப்பு, பொறாமை என அனைத்தையும் வரையறுக்கிறார் ஆசிரியர்.

இந்த நாவலில் நான் கோடிட்ட சில வரிகளை தமிழாக்கம் செய்கிறேன் இங்கே:

'உன்னை உன் பெற்றோர் அல்லது கடவுள் தவிர வேறு யாரும் அன்பு செய்ய முடியாது என்ற ஒரு நிலையில் நீ மற்ற ஒருவரால் அன்பு செய்யப்படுவதைக் கண்டு கொள்வது ஒரு ஆச்சர்யமான அனுபவம்.'

'கதைக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. நாமாக ஒன்றை எடுத்துக்கொண்டு இதுதான் தொடக்கம், இதுதான் முடிவு என நினைத்துக்கொள்கிறோம்.'

'நான் உன்னை என் கைகளால் தொட வேண்டும். நான் உன்னை என் நாக்கால் சுவைக்க வேண்டும். அன்பும் செய்யும் ஒருவனால் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியாது.'

'நான் உன்னை வெறுக்கிறேன், கடவுளே. நீ இருப்பது போல நினைத்து!'

'பாதுகாப்பற்ற நிலைதான் காதலர்கள் உணரும் கொடுமையான உணர்வு. ஆசையே இல்லாத திருமணம்கூட சில நேரங்களில் நல்லது எனத் தோன்றுகிறது. பாதுகாப்பற்ற உணர்வு வாழ்வின் அர்த்தத்தை திரித்து, நம்பிக்கையை விஷமாக்கிவிடுகிறது.'

'என் பொறாமையின் அளவைக் கொண்டே நான் என் அன்பின் அளவைக் கணிக்கிறேன்.'

'வலியை எளிதாக எழுதிவிட முடியும். ஏனெனில் வலியில்தான் நான் யார் என்று உணர்கிறேன். ஆனால் மகிழ்ச்சியை பற்றியை ஒருவர் எப்படி எழுத முடியும்?'

'உன்னை என் தோழியாக நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஏனெனில் தோழி இல்லாமல் ஒருவனால் இருக்க முடியும்!'

'நீ பயப்பட வேண்டாம். காதல் முடிவதில்லை. நாம் காணாமல் இருக்கிறோம் என்பதற்காக!'

'அவளோடு பேசுவதற்கு அடுத்த நல்ல செயல் அவளைப் பற்றிப் பேசுவது.'

'ஒருவர் துன்பப்படும்வரைதான் அவர் வாழ்கிறார்.'

'நாம் நம் மனத்தால்தான் அன்பு செய்கிறோம். மனத்தால் மட்டுமா? அன்பு தன்னை விரித்துக் கொண்டே போகிறது. எந்த உணர்வுமற்ற நகத்தில் கூட நாம் அன்பை உணர முடியும். நாம் உடையால்கூட நாம் ஒருவரை அன்பு செய்ய முடியும்.'

'இறுதியாக, நாம் அனைவரும் மனிதர்களே. அன்பே, அன்பே அனைத்தையும் குணப்படுத்தும் என்ற மாயையில் வாழும் மனிதர்கள்.'

'நான் அவளை அதிகம் நினைத்துப் பார்க்கவில்லை. அவள் இல்லாத பொழுதுகள்கூட அவளைப்பற்றியே நிறைந்திருந்தன.'

'நீ வைத்திராத ஒன்றை உன்னால் இழக்க முடியாது. உன்னுடையது அல்லாத ஒன்றை நீ வைத்திருக்க முடியாது. உன்னோடு நிலைக்காத ஒன்றை நீ பிடித்திருக்க முடியாது.'

'எனக்குச் சொந்தமாகாத ஒன்றை நான் இழந்து விட்டேன்.'

இந்த நாவலை வாசிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. கதையின் சில இடங்கள் குழப்பமாக உள்ளன. கதையில் பேசுவது யார் என்பது தெளிவில்லை. ஆங்கில பதங்களும் கொஞ்சம் பழமையானவை. கதை நடக்கும் காலம் 1929 முதல் 1944ஆம் ஆண்டு முடிய.

ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான் இது என்பது விக்கிபீடியாவின் கருத்து.

அன்பின் மற்ற பரிமாணத்தை அழகுற எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

Friday, December 16, 2016

நவநாள்

திருவருகைக்காலம் டிசம்பர் 16க்கு முன், டிசம்பர் 16க்குப் பின் என இரண்டு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையிலிருந்து கிறிஸ்து பிறப்புக்கான நவநாள் தொடங்குகிறது.

'புகழப் புகழ அமிர்தமான இயேசுவே' என்ற செபம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. இந்த செபம் தான் இந்த 9 நாள்கள் சொல்லப்படும்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கின்றோம்.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் தலைமுறை அட்டவணையை பதிவு செய்கின்றனர். மத்தேயு இயேசுவை ஆபிரகாமின் மகன் எனவும், லூக்கா ஆதாமின் மகன் எனவும் காட்டுகின்றனர்.

மத்தேயுவின் தலைமுறை அட்டவணையில் 5 பெண்களும் இடம் பிடித்திருக்கின்றனர்: தாமார், இராகாபு, ரூத்து, பெத்சேபா, மரியா.

இறைவனின் திட்டத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்.

இல்லையா?

Thursday, December 15, 2016

தெருவிளக்கு

'யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.'

இன்று மாலை அப்பல்லோ மெடிக்கல்ஸ் சென்றேன்.

மோடி கொண்டு வந்த பண மதிப்பு ரத்தால் கார்ட் பயன்படுத்தும் கடைக்கு மட்டுமே செல்ல முடிகிறது.

கார்ப்பரேட் வீடுகளில் மட்டுமே அடுப்பெரிய வேண்டும். மற்ற வீடுகளில் காலிப்பானைகள்தாம் இருக்க வேண்டும் என்ற அவரது நினைப்பில் யாராவது ஒரு லாரி மண் அள்ளி போட்டால் நலமாக இருக்கும்!

போகும் வழியில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் நான்கு சிறுவர்கள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் உண்டு. மதுரைக்கும் ஒரு மணம் உண்டு. அந்த மணத்தை உணர மாலையில் அதைச் சுற்றி வர வேண்டும்.

மதுரை பெயரளவில்தான் மாநகரம். ஆனால் அது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கிராமம். அவ்வளவுதான். இன்றும் மதுரையில் 50 காசுக்கு வடை வாங்க முடியும். இன்றும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்திருந்த நான்கு சிறுவர்கள் ஒருவன் மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அனைவரும் ஆரம்பப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்களைச் சுற்றி வந்த ஒரு குட்டி அழகி ஒரு நோட்டைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். நோட்டுக்குச் சொந்தக்காரன் கோபப்படவில்லை. பொண்ணுங்க இழுத்தா மதுரைப் பசங்க கோபப்பட மாட்டாங்க போல!

தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் எதிர்காலம் அழகாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.
நகரமயமாக்கலின் எந்தவித ஆரவாரத்திற்கும் ஆட்படாமல் தங்கள் வேலையை அழகாக செய்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

நிற்க.

'நீங்கள் ஒளியில் சிறிது நேரமே மகிழ்ந்திருந்தீர்கள்!' என தன் சமகாலத்து மக்களை குற்றம் சுமத்துகின்றார் இயேசு.

எப்பவாவது நல்லவராக இருப்பது எளிது.

எப்போவுமே நல்லவராக இருப்பது கடினம்.

அன்றும் - இன்றும் - என்றும்!

Tuesday, December 13, 2016

கேரல்ஸ்

நேற்று மாலை கேரல்ஸ் சென்றோம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் கேரல்ஸ் செல்வதாய் இருப்பதால் ஆர்வமாக இருந்தது.

புதிய பங்கு.

புதிய மக்கள்.

இருந்தாலும் நடை என்னவோ உள்ளுர் நடையாகத்தான் இருந்தது.

நேற்று மூன்று விடயங்கள் என் மனதைத் தொட்டன:

1. சிறிய வீடு. 7க்கு 7தான் வீட்டு அளவு. தாழ்வான வாசல். உள்ளே சமையலறையை மறைக்க ஒரு பெட்ஷீட் கட்டியிருந்தார்கள். குழந்தை இயேசுவை வைக்க ஒரு நாற்காலி போட்டிருந்தார்கள். அந்த நாற்காலி பக்கத்து வீட்டு இரவல் நாற்காலி. ஏனெனில் இந்த வீடு முடிந்தவுடன் அதை அடுத்த வீட்டிற்குக் கொண்டு போனார்கள். குழந்தை இயேசுவை வைத்தவுடன் பூக்களை குழந்தைக்கு சூடினார் அந்த அனாமிகா. அத்தோடு விடவில்லை. பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் புதிய ஆடை ஒரு செட்டை குழந்தையின்மேல் விரித்தார். அத்தோடு விடவில்லை. ஜெபம் முடிந்தவுடன் எல்லாருக்கும் ஒவ்வொரு பிஸ்கட் பாக்கெட் வழங்கினார்.

அவர் செய்தது எதுவும் என்னைக் கவரவில்லை என்றாலும், அந்த செயல்பாடுகளுக்குப் பின்னால் இருந்த அவரின் இயல்பு என்னைக் கவர்ந்தது. டோபி வேலைக்குச் சென்ற அவர் எந்நேரம் வீடு திரும்பியிருப்பார்? எங்கே மல்லிகை வாங்கியிருப்பார்? எப்போது துணிக்கடைக்குப் போயிருப்பார்? இத்தனை பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்க 2000 ரூபாய் நோட்டை மாத்தியிருப்பாரா?

2. சிறிய பொண்ணு. பெயர் அனாமிகா என வைத்துக்கொள்வோம். வயது 5. எல்லா இடத்திற்கும் நடந்தே வந்தது. குழந்தை இயேசுவை எந்த வீட்டில் வைத்தாலும் அதன் அருகில் போய் நின்று கொள்வாள் இவள். குழந்தை இயேசுவின் முகத்தை தன் பிஞ்சுக்கரங்களால் வருடிக் கொடுப்பாள். வருடிக் கொடுத்துவிட்டு எல்லாரையும் அண்ணாந்து பார்ந்து வெட்கத்தோடு சிரிப்பாள். அவளைப் பார்க்க நம்ம தமிழ் மாதிரியே இருந்தது. 'வாழ்த்துக்கள்' என்றால் 'வாழ்த்துக்கள்' என்பாள். 'நல்லா இருக்கீங்களா?' என்றால் 'நல்லா இருக்கீங்களா?' என்பாள்.

3. மற்றொரு அனாமிகா. வயது 21-24 இருக்கும்(!). ஆசிரியராகப் பணிபுரிகின்றார். மின்னல் போல வந்தார். சில வீடுகளில் பாடல்கள் பாடினார். மின்னல் போல மறைந்தார். ஒரு வீட்டில் நின்ற போது, 'இதுதான் எங்க வீடு!' என்றாள். தன் குடும்ப பின்புலம் தன்னைத் தடுக்க முடியாது என்ற பெருமிதம் அவர் கண்களில் இருந்தது. மிக நேர்த்தியாக சிறுவர், சிறுமியரை வழிநடத்தினார்.

ஏறக்குறைய 20 பேர். சிறியவர். பெரியவர்.

அதில் யாரையும் எனக்குத் தெரியாது.

ஆனால் நெருக்கமானவர் போல எல்லாரும் பழகினர்.

இதுதான் கிறிஸ்து பிறப்பு என அறிந்தேன்.

Thursday, December 8, 2016

சந்தைவெளி சிறுவர்கள்

'முகநூல், டிவி, பத்திரிக்கை மூன்றையும் மூடிவிட்டு அமர்ந்து கதை பேசினால் 80 வயது வரை வாழலாம்' என்று இன்றைய ஆனந்தவிகடனின் வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கால சிறுவர்கள் தாம் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.

சிறுவர்கள் வித்தியாசமானவர்கள்.

நான் சிறுவனாய் இருந்தபோது எந்நேரமும் சிறுவர்களை தெருவில் பார்க்கலாம். எங்க ஊரில் இருப்பது ஒரு தெருதான். ஒரு தெருவெல்லாம் ஊரா என்று கேட்காதீர்கள். அப்படித்தான்.

மாலை 4 மணிக்கு பள்ளி விட்டு வந்தால் அந்த தெருவில் எல்லாம் நடக்கும்.

வண்டிக்கார தாத்தா மாடுகளை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பார்.

பத்மா சித்தி பாத்திரம் விளக்கி கொண்டிருப்பார்கள்.

சங்கர் அக்காவும், சமுத்திரம் அக்காவும் தீப்பெட்டி கட்டு ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

நாட்டாமை வீட்டுப் பாட்டி தானாக கடுங்காப்பி போட்டுக்கொண்டிருக்கும்.

மில்லுக்கு வேலைக்குப் போனவர்கள் ஒருசேர வீடு திரும்பிக்கொண்டிருப்பர். அவர்களின் காலி டிபன் பாக்ஸ்கள் சைக்கிள் மணி போல 'டிங் டிங்' கென்று குதித்துக் கொண்டிருக்கும்.

4:05 மணி பி.ஆர்.சி. பஸ் புளுதி பரப்பி பறந்து போய்க்கொண்டிருக்கும்.

அப்படியே இந்த கலகலப்போடு வீடு வந்து யூனிஃபார்மை அவிழ்த்து எறிந்துவிட்டு, மாற்று உடை அணிந்துவிட்டு தெருவுக்கு வந்துவிடுவோம்.

அம்மன் கோவில் மேடைதான் நாங்கள் சந்திக்கும் இடம்.

இடத்தில் சேர்ந்தவுடன் என்ன யோசனை வருகிறதோ அந்த விளையாட்டை விளையாட ஆரம்பிப்போம்.

7 மணி வரை விளையாட்டு.

7 மணிக்கு கோவிலில் செபம்.

அம்மன் கோயில் - பிள்ளையார் கோயில் - முருகன் கோயில் - மாதா கோயில் - எல்லா வழிபாடுகளையும் அட்டென் பண்ணுவோம்.

தூரத்தில் இருக்கும் எசக்கி கோயிலுக்கு மட்டும் போகமாட்டோம். அங்கு பேய் ஆடுவதை பார்த்திருக்கிறோம்.

8 மணிக்கு சாப்பாடு.

8:30க்கு தெருவிளக்கில் வீட்டுப்பாடம்.

வீட்டுப்பாடம் முடிந்தவுடன் திருடன்-போலீஸ்.

9:30க்கு சங்கம் கலையும்.

இப்படித்தான் எல்லா நாள்களும் நகர்ந்தன.

இன்று என் ஊர்த்தெரு வெறிச்சோடி இருக்கின்றது.

சிறுவர்கள் வீட்டுக்குள் சுட்டி டிவி, போகோ, டிஸ்கவரி என பார்க்கின்றனர்.

நிறைய விளையாட்டுக்களை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

நாளைய நற்செய்தியில் இயேசு தன் சமகாலத்து சந்தையில் விளையாடிய சிறுவர்களை உருவகமாக எடுத்துக்கொள்கின்றார்.

இன்று அவர் வந்தால் யாரை உருவகப்படுத்துவார்!


Wednesday, December 7, 2016

அமல உற்பவி

நாளை அன்னை மரியாளின் அமல உற்பவத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் நாளை விடுமுறை. நாளைய தினம்தான் வீடுகளில் குடில் அமைப்பார்கள். குடில் பொருள்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும். நாளை முதல் இல்லங்களில் நட்சத்திரங்கள் மற்றும் ஒளி விளக்குகள் தொங்கவிடுவார்கள்.

அன்னை மரியின் அமல உற்பவம் ஒரு விசுவாசக் கோட்பாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவரின் தூய்மை மற்றும் மாசின்மை பற்றிய எண்ணங்கள் திருஅவையில் பரவலாக இருந்தன.

பவுலோ கோயலோ என்னும் நாவலாசிரியரும் தன் எல்லா புதினங்களையும்,

'அமல உற்பவியான மரியாளே,
உன்னை நாடிவரும் மக்களுக்கு அடைக்கலமாய் இரும்!'

என்றுதான் தொடங்குவார்.

'தூய்மை' என்பது ஒரு மேலான மதிப்பீடு.

சமூகவியல் கருத்தின்படி மனிதர்கள் தங்களில் காணப்படும் உயர்ந்த எண்ணங்களையும், மதிப்பீடுகளையும் அப்படியே உயர்த்தி அவற்றை கடவுளாக்கி விடுவார்கள். ஆக, கடவுள் என்பது நம் ஒட்டுமொத்த மேலான எண்ணங்களின் தொகுப்பு என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்து.

'தூய்மை' என்பது கடவுளுக்கு அடுத்த நிலை என்பது ஆங்கிலப் பழமொழி.

ஆடையில் தூய்மை, உணவில் தூய்மை, உறைவிடத்தில் தூய்மை என தூய்மையை நாம் பேணுகிறோம்.

'தூய்மை' என்பதை வைத்தே மனித இனத்தில் பிரிவுகளும் உண்டாகின.

ஆக, தூய்மை என்பது பல நேரங்களில் மக்களை பிரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. 'தூய உணவு உண்பவர்கள்,' 'தீட்டு உணவு உண்பவர்கள்' என்ற பிரிவினை இன்றும் இருக்கிறது.

ஆனால், மரியாளின் தூய்மை நம்மை அவரிடமிருந்து பிரித்துவிடவில்லை.

'நான் தூய்மையற்றவர்,' 'மரியா தூய்மையானவர்' என்று மரியாவை அந்நியமாக்கும் அல்லது பிரித்துப்பார்க்கும் விழா அல்ல இது. மாறாக, அவரோடு நம்மையே ஒன்றித்துக்கொள்ளும், அவரின் தூய்மையில் பங்குகொள்ளும், அவரின் தூய்மை போல நம் தூய்மையை அமைத்துக்கொள்ளும் விழா.

நம் உள்ளமும், இல்லமும் தூய்மை பெற அந்த அமலி அருள்வாராக!

அனைத்து அமலன், அமலி, நிர்மலாக்களுக்கும் நாமவிழா வாழ்த்துக்கள்.

Tuesday, December 6, 2016

ஜெ. ஜெயலலிதா

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.
கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்.
அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.'
(எசாயா 40:25-31)

டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆன்மா இறைவனில் நிலையான இளைப்பாற்றியைக் கண்டடைவதாக!

செல்வி. ஜெயா அவர்களுக்கு நாளைய முதல்வாசகப் பகுதி அழகாகப் பொருந்துகிறது.

தன் வாழ்நாள் முழுவதும் தன்னைத் தோல்விகள் விரட்டினாலும் ஓடினார். களைப்படையவில்லை. நடந்தார். சோர்வடையவில்லை.

ஆனால், அவரின் இறப்பு இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாவம்! தனிமை ஒன்றையே தன் வாழ்வின் துணையாக இறுதிவரை கொண்டிருந்தார்.

சின்ன உருவகம்.

என் கழுத்தில் பெரிய தங்க மாலை இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

நான் தனியாக நடந்து செல்கிறேன்.

என் தங்க மாலையைப் பார்த்த சிலர் என்னோடு சேர்ந்து நடக்கின்றனர்.

என்னோடு பேசுகின்றனர். சிரிக்கின்றனர். வழிநடக்கின்றனர்.

அவர்கள் என்னிடம் பேசுவது என் கழுத்தில் இருக்கும் தங்க மாலைக்குத்தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இருந்தாலும், வழி தூரமாகவும், பயமாகவும் இருப்பதால் நான் அவர்களை என் துணைக்கு வைத்துக்கொள்கிறேன்.

சில நாட்களில் என்மேல் உள்ள அக்கறை மாறி என் தங்க மாலை பற்றியே அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்.

நான் என்ன செய்வது என்று புலம்புவேன்.

அவர்களை வைத்துக்கொள்ளவும் முடியாமல், விடவும் முடியாமல் எத்தனிப்பேன்.

நிற்க.

இந்த நிலைதான் ஜெயாவுக்கு இறுதியில் இருந்தது.

'பகைவர்களை வென்றுவிட்டேன். ஆனால் நண்பர்களிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே!'

என்ற கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

Sunday, December 4, 2016

கட்டின்மை

இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி, 'நான் உமக்குச் சொல்கிறேன்.நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!' என்றார்.

... ... ...

இதைக்கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய் ... 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று பேசிக்கொண்டார்கள்.

(காண். லூக் 5:17-26)

நான்கு பேர் அவரைத் தூக்கிவர அவர் அழைத்துவரப்படுகின்றார்.

குணம் அடைந்தவுடன் தன் கட்டிலையே தூக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றார்.

அவர் தன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு சாலையில் போனபோது மக்கள் என்ன பேசியிருப்பார்கள்?

என் அறையின் நாற்காலியை அடுத்த அறைக்குத் தூக்கிக்கொண்டு போகவே எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஆனால் அந்த நபர் எப்படி கட்டிலை தலையில் தூக்கிக்கொண்டு தன் வீடு சென்றிருப்பார்?

அவரைத் தூக்கி வந்த அந்த நான்கு பேர் எங்கு சென்றார்கள்?

சின்ன வயசுல எங்க ஊருக்கு எந்த கார் வந்தாலும் அதன் பின்னாலே கொஞ்ச தூரத்துக்கு ஓடுவோம். எப்படியும் அந்தக் காரைத் துரத்தி தொட்டுவிட வேண்டும் என்ற ஒரு வீராப்பு இருக்கும் அன்று. காரில் செல்பவர்கள் கடிந்து கொண்டாலும் நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்.

இவர் கட்டிலைத் தூக்கிக்கொண்டு சென்றபோது அவரைச்சுற்றியும் சிறார் கூட்டம் ஓடியிருக்கும்.

அவர் அவர்களை அதட்டியிருப்பாரா?

அல்லது புன்னகை செய்திருப்பாரா?

'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று மக்கள் சொல்கிறார்களே. அப்படி எதை அவர்கள் புதுமை என நினைத்தார்கள்?

எல்லாரையும் சார்ந்திருந்த ஒருவர் எவரையும் சாராத ஒரு கட்டின்மை அடைந்த நிலைக்கு கடந்து போகின்றார்.

அதுதான் புதுமை என நான் நினைக்கிறேன்.

Saturday, December 3, 2016

பிரான்சிஸ் சவேரியார்

இன்று தூய பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தில் ஒரு அழகுப்போட்டி நடைபெற்றது.

இரண்டு ஃபோட்டோக்களைப் போட்டு, 'இவற்றில் எது அழகு?' என்ற கேள்வி கேட்கப்பட்டு, ஓட்டு எடுக்கப்பட்டது.

இடது பக்கம் தூய சவேரியாரின் அழியாத உடலின் பாதம். வலது பக்கம் 'தாளம்' படத்தின் ஐஸ்வர்யா ராயின் பாதம்.

வலது பக்க படத்திற்குத்தான் நிறைய ஓட்டுகள் விழுந்திருந்தன.

இறுதிச்சுற்றில், ஐஸ்வர்யாவின் பாதமே வென்றது.

ஐஸ்வர்யா வென்றதில் எனக்கு எந்த கோபமும், வருத்தமும் இல்லை. இன்று பல நேரங்களில் நம் பார்வை அப்படித்தான் இருக்கிறது.

மிருதுவாக, இளமையாக, பளபளப்பாக, சிகப்பாக இருப்பதுதான் நம் கண்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது.

ஆனால், வன்மையாக, முதுமையாக, பொலிவிழந்து, சிகப்பில்லாமால் இருப்பதும் அழகுதான் என்பதை உணர்ந்ததால் தான் சவேரியார் நம் நாட்டிற்கு வந்தார்.

அவரின் பாதங்கள் இன்று போட்டியில் வேண்டுமானால் வெல்லாமால் இருக்கலாம்.

ஆனால், அந்தப் பாதங்களில் இருந்த வேகம், தளராத துணிச்சல், நேர்கொண்டு நிமிர்ந்த நடை காலத்தைக் கடந்த பாடங்கள் - அவரின் அழியாத பாதங்கள் போலவே!

Thursday, December 1, 2016

பார்வை

பார்வையற்ற இருவர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
(காண். மத் 9:27-31)

இயேசு பார்வையற்ற இருவருக்கு பார்வை தருகின்றார்.

இயேசு தனது வீடு வந்து சேர்ந்தபோது அவர்களும் வந்தனர் எனப் பதிவு செய்கின்றார் மத்தேயு.

இயேசுவின் வீட்டிற்கு அந்தப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது யார்?

இயேசுவே அழைத்துச் சென்றாரா?

அல்லது ஏதோ ஒரு நல்ல உள்ளம் அழைத்துச் சென்றதா?

கண் தெரியாத ஒருவரின் கைகளைப் பிடித்து நடந்திருக்கிறீர்களா?

நான் ஒருமுறை நடந்திருக்கிறேன்.

அவரை விட எனக்குத்தான் பயம் அதிகமாக இருந்தது அன்று.

பார்வையற்றவர்களை அழைத்து வந்தவர்களைப் பார்த்த பார்வையற்றவர் என்ன சொல்லியிருப்பார்?

'நன்றி' மட்டுமா?

இல்லை.

ஒளியாம் கிறிஸ்துவிடம் அழைத்து வந்த அவர் அவர்களுக்கு ஒளி பெற்றுத் தருகின்றார்.

'ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு' என்கிறார் திபா ஆசிரியர் (27:1).

நாமும் மற்றவர்களை இயேசுவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எத்துணை நலம்!

Wednesday, November 30, 2016

இரு வீடுகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21,24-27) 'இரு வீடுகள்' உருவகத்தைப் பதிவு செய்கின்றார்.

இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர்கள் பாறைமேல் கட்டப்பட்ட வீடுகள் என்றும்,

அதைக் கேட்டு நடக்காதவர்கள் மணல்மேல் கட்டப்பட்ட வீடுகள் என்றும் சொல்கின்றார்.

எதன்மேல் வீடு கட்டுவது எளிது?

மணல்மேலா? அல்லது பாறைமேலா?

மணல்மேல்தான்.

ஏனெனில் வானம் தோண்டுவது எளிதாகவும், கற்களை அடுக்கி அடித்தளம் போடுவது எளிதாகவும் இருக்கும். வீடு கட்டுவதற்கு சாரம் கட்டுவதற்கு கம்புகளை நடுவதற்குக் கூட எளிதாக இருக்கும்.

ஆனால், பாறைகள் அதிகம் உள்ள இடத்தில் வேலை மிக மெதுவாக நடக்கும். வானம் தோண்டுவது கடினமாக இருக்கும். அப்படியே பாறைகளை வெடி வைத்து தகர்க்க நினைத்தாலும் அது தன்போக்கில் வெடித்துச் சிதறும். பாறைகள்மேல் அடித்தளம் இடுவதும் கடினம். ஏனெனில் கற்கள் பாறைகளின்மேல் நிற்காது. வீடு கட்டுவதற்கு சாரம் கட்டுவதும் கடினம். சாரம் சரியாகக் கட்டாமல் மேலே நிற்பது பாதுகாப்பும் இல்லை.

கடினமாக இருக்கிறது என்பதற்காக அதைக் கைவிட்டுவிட்டு எளிதாக உள்ள மணலைத் தேர்ந்துகொண்டோம் என்றால், இன்று வேண்டுமானால் அது நன்றாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் அது பலம் அல்லது பலன் தராது.

ஆக, எளிதாக இருப்பதும், வேகமாக நடப்பதும் என்றும் பாதுகாப்பானது அல்ல.

நேற்று மாலை வாக்கிங் போகும்போது எங்களைக் கடந்த போன ஒரு இளவலின் கைப்பையில், 'குட் திங்ஸ் டேக் டைம்' என எழுதியிருந்ததன் பொருள் எனக்கு இன்று தெரிகிறது.

இறைவார்த்தையைக் கேட்பது என்பது எளிமையான வழியைத் தேர்ந்தெடுப்பது அல்ல. மாறாக, கடினமான, அதிகம் முயற்சி தேவைப்படுகின்ற வழியைத் தேர்ந்தெடுப்பது.

நாம் கட்டும் வீடு எந்த வீடு?

Tuesday, November 29, 2016

அந்திரேயா

'ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்?
தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்?
அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்?
அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?'

(உரோமையர் 10:9-18)

நாளை திருத்தூதரான அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

சீமோன் பேதுருவின் சகோதரர் என அறியப்படும் இவர் யோவான் நற்செய்தியில் பிலிப்பின் நண்பராக வருகிறார்.

இயேசுவைத் தேடிச் சென்றவரும் இவரே.

இயேசுவை மற்றவர்களிடம் அழைத்து வந்தவரும் இவரே.

இவர் ஒரு நல்ல பி.ஆர்.ஓ.

நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் 'படி நடை' (step pattern) என்னும் இலக்கிய நடையைக் கையாளுகின்றார்.

மேலே காணும் வசனத்தைக் கவனித்தீர்களா?

மேலிருந்து ஒருமுறை வாசித்துவிட்டு, கீழிருந்து மேலாக மற்றொரு முறை வாசியுங்கள்:

அனுப்பப்படுதல் - அறிவித்தல் - கேள்விப்படுதல் - நம்பிக்கை கொள்தல்

இதில் முதல் இரண்டு திருத்தூதர் செய்ய வேண்டியது.

இறுதி இரண்டு போதனையைக் கேட்பவர் செய்ய வேண்டியது.

அனுப்பப்பட்டாலன்றி அறிவிக்க முடியாது என்பது பவுலின் வாதம்.

பவுலின் வாதத்தை இன்னும் ஒரு படி கீழே இழுக்கலாம். 'அழைக்கப்படாத' ஒருவர் எப்படி அனுப்பப்படுவார்?

நாம் ஒவ்வொரு நிலையிலும் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் நாம் 'தி அதர்' நோக்கி பயணம் செய்கிறோம்.

அப்படி அனுப்பப்படும்போது நம் வேலை என்ன?

அறிவித்தல்.

எதை அறிவிக்க வேண்டும்?

கிறிஸ்துவின் செய்தியை.

இன்று காலை டீ குடித்துக் கொண்டிருந்தபோது அகுஸ்தினார் பற்றிய பேச்சு எழுந்தது.

'பெண் என்னும் போதையிலிருந்து (addiction) அகுஸ்தினார் மீளவில்லை. அவர் அப்படியே இறையியல் என்ற இன்னொரு போதையைப் பிடித்துக் கொண்டு முந்தைய போதையைக் கைவிட்டார். மனிதர்களுக்கு ஒவ்வொரு கட்டமும் ஒரு போதை தேவைப்படுகிறது' என்றார் நண்பர் ஒருவர்.

போதை (addiction) என்றால் என்ன?

உதாரணத்திற்கு, மது எனக்கு போதை தருகிறது என்பதை நான் எப்படி உணர்வேன்?

இப்போது மணி மாலை 4. இன்று இரவு வெளியே விருந்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், 4 மணிக்கே நான் 8 மணி விருந்தையும் அதில் பரிமாறப்படும் மதுவையும் நான் எண்ணிப்பார்க்கவும், அப்படி எண்ணிப்பார்ப்பதால் என் இப்போதைய வேலை பாதிக்கப்படுகிறது என்றால் நான் அதற்கு போதை என்று பொருள்.

அதாவது, போதை நம் எண்ணத்தை முதலில் நிரப்பிவிடுகிறது.

ஆகையால்தான், பாலியல் வன்புணர்ச்சி கூட முதலில் அதைச் செய்பவரின் மூளையில் அரங்கேறுகிறது என்று சொல்கிறார்கள். பின் தான் அது மற்றவரின் உடல்மேல் நடத்தப்படுகிறது.

திருத்தூதர்களின் வாழ்வு ஆச்சர்யமாக இருக்கிறது.

எந்நேரமும் கிறிஸ்துவையும், அவரோடு இருந்த அனுபவத்தையும் தங்கள் எண்ணத்தில் நிறைத்திருந்தனர். ஆகையால்தான் தங்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், சொந்த ஊர் என அனைத்தையும் விட்டுவிட்டு கிறிஸ்துவை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க அவர்களால் முடிந்தது.

அனுப்பப்படுபவரால் நிரப்பப்பட்டால் ஒழிய அறிவித்தல் சாத்தியமல்ல.

அறிவித்தல் ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஏனெனில் எனக்கு அடுத்திருப்பவரின் நம்பிக்கை அதைச் சார்ந்தே இருக்கிறது.

Monday, November 28, 2016

கருத்தமர்வு

'பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்!'

(காண். எசாயா 11:1-10)

'அந்நாளில்' எனத் தொடங்கும் எசாயா இறைவாக்குப் பகுதியை நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.

ஒன்றிற்கொன்று எதிர்மறையானது எல்லாம் நேர்முகமாக ஆகும் என்கிறது இறைவாக்குப் பகுதி.

வன்மையானது மென்மையானதோடு கைகோர்க்கும்.

விஷம் அமிர்தத்தோடு கைகோர்க்கும்.

பாசிட்டிவ் நெகடிவ் இரண்டும் ஒன்றாகிவிடும்.

குழந்தை கட்டுவிரியனின் வளைக்குள் கையை விடும்.

கட்டுவிரியனும் குழந்தையை ஒன்றும் செய்யாது!

இதெல்லாம் நடக்குமா? - என்ற கேள்விதான் நம்முள் எழுகிறது.

'நடக்கும்' என்ற நம்பிக்கையைத் தருகிறது இறைவாக்கு.

இன்று எங்கள் கல்லூரியில் 'தலித் கலக்கம்: ஓர் இறையியல் பதில்' (Dalit Unrest: A Theological Response) என்ற தலைப்பில் கருத்தமர்வு நடைபெற்றது.

முனைவர் ராம் புனியானி மற்றும் அருள்முனைவர் மரிய அருள்ராஜா, சேச, என்னும் இரண்டு ஆன்றோர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

நம் தாய்த்திருநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலித் மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அறிவுசார் மற்றும் உடல்சார் வன்முறைகளுக்கு எதிராக எழுந்திருக்கும் கலகக்குரல் ஏன்? என்பதுதான் கருத்தமர்வுகளின் கேள்வியாக இருந்தது.

கருத்தமர்வுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்:

1. 'ஆள்வோரின் முன்வைப்புகளும், செயல்பாடுகளும் என்றும் ஒன்றாக இருப்பதில்லை!' (The claims and the aims of the ruling class are not always equal)

அதாவது, 'நான் எல்லா மக்களுக்காகவும் இருக்கிறேன்' என்பது நம் மோடி அவர்களின் முன்வைப்பு. ஆனால், 'நான் அம்பானி மற்றும் அதானிக்காகத்தான் இருக்கிறேன்' என்பது அவரின் செயல்பாடு.

2. மதங்களும் அவற்றின் போதனைகளும் மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்க வேண்டுமே தவிர ஒருபோதும் பிரிக்கக் கூடாது.

3. 'எதற்கும், யாருக்கும் அடிமை ஆகாதீர்கள். எதையும், யாரையும் அடிமைப்படுத்தாதீர்கள்' - இதுதான் நம் விவிலியத்தின் ஒரே போதனை.

4. 'மிகச் சிறியோருக்கு என்று மீட்பு கிடைக்கிறதோ அன்றே எல்லாருக்கும் மீட்பு கிடைக்கிறது!'

அதாவது, என் சக மனிதர் சங்கடப்பட்டுக்கொண்டிருக்க நான், 'இறைவா நீ தந்த மீட்புக்கு நன்றி!' என்று பாட்டுப்பாடிக் கொண்டிருப்பது சால்பன்று.

5. 'கடவுளோடு நீங்கள் படைப்பாளி. சக மனிதரோடு நீங்கள் வேலைக்காரர். இயற்கையோடு நீங்கள் உடன்பிறப்பு.' (With God you are a creator. With fellow humans you are a worker. With nature you are a co-born)

இரண்டு கருத்தமர்வுகளுக்கு இடையே காட்டப்பட்ட காணொளிக்காட்சியும் என்னை மிகவும் தொட்டது.

'நன்றாக அடி. அவர்கள் காதுகளுக்குக் கேட்கட்டும்!'

என்று பறை முழக்கத்தோடு தொடங்கிய காணொளி அதே முழக்கத்தோடு நிறைவுபெற்றது.

காணொளிகளில் காட்டப்பட்ட சில குழந்தைகள், அவர்களின் செருப்பணியா பாதங்கள், காலையில் படிப்பு-மாலையில் வேலை போன்றவை என் குழந்தைப் பருவத்தை எனக்கு நினைவூட்டின.

பல குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் பரிதவிக்க,

சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வால் சிக்குண்டிருக்க,

நான் சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் ஏதோ பெரிய இழப்பாக நினைத்து வாழ்வது எனக்கே மனவுறுத்தலாக இருந்தது.

கருத்தமர்வின் இறுதியில், என் அருகில் இருந்த நண்பர், 'நீ எதுவும் கேள்வி கேட்கலயா?' என்றார்.

அதே அறையில் 8 ஆண்டுகளுக்கு முன் நான் கேள்வி கேட்டது நினைவிற்கு வந்தது அந்நேரம். அந்நாள்களில் இப்படி கேள்வி கேட்டுத்தான் கூட படித்துக்கொண்டிருந்த அருள்செல்வியரை இம்ப்ரஸ் செய்வது வழக்கம்.

ஆனால், இன்று எந்த மாணவரும் கேள்வி கேட்கவில்லை.

'இம்ப்ரஸ்' செய்யத் தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்களா?

அல்லது

'என்ன கேட்டு என்ன ஆகப்போகுது?' என தளர்ந்துவிட்டார்களா?

இருதுருவங்கள் இணையும் என்பது நாளைய இறைவாக்கு தரும் நம்பிக்கை.

Sunday, November 27, 2016

மாற்றம்

இன்று திருவருகைக்காலத்தை தொடங்குகிறோம்.

இன்றுதான் வழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு நாள்.

கடந்த திருவருகைக்காலம் முதல் கட்டளை செபம் வாசிப்பதை தவறாமல் செய்து வருகிறேன். அப்படின்னா அதுக்கு முன்னால செய்யலயா என்று கேட்கிறீர்களா?

நேற்று பெங்களுர் சென்றுவிட்டு திரும்பினேன்.

விமான நிலையத்தில் நிறைய நேரம் உட்கார வேண்டியிருந்ததாலும், கையில் படிக்க ஒன்றும் இல்லாததாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால் இரண்டு இளவல்கள். இருவர் கையிலும் அரைலிட்டர் பிஸ்லரி பாட்டில். அதைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். புலியை முறத்தை அடித்து விரட்டிய தமிழச்சியும், உருளைக்கல் தூக்கி திருமணம் செய்த மறத்தமிழனும் இன்று பிஸ்லரி பாட்டில் மூடியோடு மல்லுக்கட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது.

கால்மேல் கால்போட்டு மற்றொரு இளவல். மஞ்சள் நிற தேநீர் ஆடை (டிசர்ட்) அணிந்திருந்தாள். கையில் மோட்டோ ஃபோன். அவரைக் கடந்து சென்ற ஒருவருக்கு வழி காட்டும் முகமாக, தன் ஷூ காலை 45 டிகிரி நகற்றி வழிகாட்டினாள். அடுத்தவர் வந்தால் எழுந்து வழிவிடும் மரியாதை இன்று பாதத்தைத் திருப்புவதாக மாறிவிட்டது ஆச்சர்யமாக இருக்கிறது!

தெரிந்தவர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அவர்கள் ஃபோன் பேசும்போது கடந்து சென்றால்போதும். பேசிக்கொண்டே புன்முறுவல் செய்கிறார்கள்.

ஆண்கள் எல்லாம் நேற்று என்ன நடந்தது என்பதைப் பற்றி விமர்சனம் செய்துகொண்டும், நாளை என்ன நடக்கும் என்று ஊகித்துக் கொண்டும் உரையாடிக்கொண்டிருந்தனர்.

பெண்கள் தங்களைப் போல யாராவது ஆடை அணிந்திருக்கிறார்களா என்று பார்த்து அவர்களிடமிருந்து விலகி நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், குழந்தைகள் புத்திசாலிகள்.

கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் விளையாடி மகிழ்ந்தனர்.

நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பதற்கு மறந்தவர்கள் பார்ப்பவற்றை எல்லாம் தங்கள் ஃபோனில் படம் எடுத்து தங்கள் மெமரியை விட ஃபோன் மெமரியை அதிகரித்துக்கொண்டிருந்தனர்.

சப்வேயில் வாங்கிய பர்கரை கையிலே பிடிக்க முடியாமல் இருந்தபோது, அதை தங்கள் லிப்ஸ்டிக்கில் படியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் இரு சாப்ட்வேர் கிளிகள்.

இது எல்லாமே மாற்றம்தான்.

எல்லாவற்றிற்கும் பெரிய மாற்றம் கடந்த வாரம் என் வகுப்பறையில் பார்த்தது.

இரண்டு பேர் பப்பிள் கம் மென்றுகொண்டே பாடம் கவனித்துக்கொண்டிருந்தனர். நான் போர்ட் பக்கம் திரும்பும்போதெல்லாம் போட்டிக்கு வாயில் முட்டை வேறு விட்டு சிரித்துக்கொண்டனர்.

திருவருகைக்காலத்தில் நாம் சிந்திப்பதும் மாற்றம்தான்.

இந்தக்காலத்தில் நாம் வாசிக்கும் எல்லா வாசகங்களும் மாற்றம் பற்றித்தான் இருக்கும்.

நிறைய நேர்முகமான செய்தியைத் தாங்கிவரும் இத்திருவருகைக்காலம் நமக்கு அருளின் காலமாக அமைவதாக.

Thursday, November 24, 2016

கண்களைப் பிடுங்கி

சிம்சோன்-தெலீலா திரைப்படத்தின் ஒரு க்ளிப் பார்த்தேன் நேற்று.

சிம்சோனின் தலைமுடி மழிக்கப்பட தன் ஆற்றலை இழக்கின்றார் சிம்சோன்.
அவரின் கண்களைப் பிடுங்குகின்றனர் பிலிஸ்தியர்.
மிகவும் கொடுமையான நிகழ்வு அது.

ஆனால் அதன் அர்த்தத்தை நீத 14:1-5 ஐ இணைத்து வாசித்தால்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

சிம்சோன் படலத்தில் சிம்சோன் சொல்லும் முதல் வார்த்தை, 'நான் பார்த்தேன் ஒரு பெண்ணை!' என்பதுதான்.

திம்னா என்ற நகருக்குச் செல்லும் சிம்சோன் அங்கே ஒரு பெண்ணைக் கண்டதாக தன் பெற்றோரிடம் வந்து செல்கின்றார்.

மேலும், இஸ்ரயேலின் பாவமும் அதுதான். ஒவ்வொருவரும் தங்கள் கண்ணில் சரி என்று பட்டதைத்தான் செய்தனர்.

கண் என்று தொடங்கி கண் இழந்து முடிகிறது சிம்சோனின் வாழ்க்கை.

இரண்டாம் ஏற்பாட்டிலும் இதே போன்றதொரு சொல்லாடல் வருகிறது.

கலாத்திய நகர திருச்சபைக்கு எழுதும் பவுல், 'எனக்காக நீங்கள் உங்கள் கண்களையும் பிடுங்கிக் கொடுப்பீர்கள்!' என்கிறார் (4:15).

கண்களை வைத்து அன்பை வளர்த்தார் சிம்சோன்.

ஆனால், அன்பே ஒரு கட்டத்தில் அவரின் கண்களை எடுத்துவிடுகிறது.

அன்பின் அடையாளமாக கண்களைப் பிடுங்குதலை முன்வைக்கிறார் பவுல்.

Tuesday, November 22, 2016

மீக்காவும் லேவியும்

இன்று நீத 17-18 பிரிவுகளை விவிலிய பாடமாக எடுத்தேன்.

இரண்டு மூன்று எண்ணங்கள் உதித்தன.

அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்:

1. 'நீ எனக்கு தந்தையாகவும், குருவாகவும் இருப்பீர்!'

மீக்கா ஒரு பணக்காரர். தன் வீட்டில் ஒரு ஆலயம் ஏற்படுத்துகின்றார். அங்கே சிலைகளை செய்து வைக்கின்றார். அவரைத் தேடி லேவி குலத்து இளைஞன் ஒருவன் வருகிறான். வந்தவனை தன் வீட்டிற்குள் அழைத்து, அவரை அருள்பொழிவு செய்து 'நீ எனக்கு தந்தையாகவும், குருவாகவும் இருப்பீர்' என்கிறார். 16 வயது பையனைப் பார்த்து 60 வயது உள்ள ஒருவர், 'நீ எனக்கு அப்பாவாக இரு!' என்றால் அது பொருத்தமாகவா இருக்கிறது? - இந்தக் கேள்வி என்னுள் எழுந்தது. ஆனால், மலாக்கி 2:1-10ஐ இணைத்து வாசித்தால் இதன் அர்த்தம் புரிகிறது: 'ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவரது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் நாட வேண்டும். ஏனெனில், படைகளின் ஆண்டவரின் தூதர் அவர்.' அதாவது, குருவாக நியமிக்கப்பட்ட ஒருவர் எந்த வயது என்றாலும் அவர் இறைவனின் பிரதிநிதி ஆகிவிடுகிறார். ஆக, இங்கே உரிமை மட்டுமல்ல. குருவுக்கான பொறுப்பு, குறிப்பாக அவர் தன் வாயை பயன்படுத்தும் விதம், சொற்களைப் பயன்படுத்தும் விதம் பற்றிய அக்கறை இன்னும் அதிகமாகிறது.

2. 'லேவி மீக்காவின் மகன்களில் ஒருவராக இருந்தார்!'

'நீ எனக்கு அப்பா போல இருப்பீர்!' எனச் சொல்லிவிட்டு அவரை மகனைப் போல நடத்துகின்றார் மீக்கா. இதை நேர்முகமாக பார்க்கலாம் அல்லது எதிர்மறையாக பார்க்கலாம். எந்த நிலையிலும் சமநிலை அவசியம். மேலும் மகன்போல தன்னையே மற்றவர்கள்முன் தாழ்த்தும் மனப்பக்குவம் குருவுக்கு அவசியம்.

3. யார் முதலில் பேசுகிறார்?

மீக்காவின் வீட்டைத்தேடி தான் குல மக்கள் வருகிறார்கள். வழக்கமாக தன் ஆலயத்திற்கு வருபவர்களைப் பார்த்து, 'நீங்க யாரு? எங்க இருந்து வர்றீங்க?' என்று குருதானே கேட்கணும். ஆனால், இங்கே மக்கள் முந்திக் கொள்கிறார்கள். 'நீ யாரு? இங்க என்ன செய்ற? உன்னை யார் இங்கே கூட்டி வந்தார்கள்?' என குருவை மக்கள் கேட்கிறார்கள்.

நல்லா கவனச்சோம்னா ஒன்னு தெரியும். யார் முதல்ல வாயை திறக்கிறார்களோ அவர்கள்தான் வாதத்தில் வெற்றி பெறுவார்கள். இங்கே குருவின் வாய் கட்டப்பட்டிருக்கிறது. காரணம் அவர் மீக்காவை சார்ந்திருக்கிற படியால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.

ஆக, யார் பக்கமும் சாராமல் இருக்கிற ஒரு குருதான் வாய்திறந்து பேச முடியும்.

4. எது நல்லது?

'உனக்கு எது நல்லது? ஒரு தனிமனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? அல்லது ஒரு குலத்திற்கு, ஒரு இனத்திற்கு குருவாக இருப்பதா?' என எதிர்கேள்வி கேட்கின்றனர் தான் மக்கள். இந்த லேவி சந்தர்ப்பவாதியாக இருக்கிறார்.

அதாவது, எது அதிக லாபம் என்று பார்த்து அந்த பக்கம் சாய்ந்து கொள்கிறார்.

குரு லாபம் பார்த்து செயல்படல் கூடாது அல்லவா?

5. 'குழந்தைகளும், கால்நடைகளும், உடைமைகளும் முன் செல்ல...'

வழக்கமாக நாம சப்பரம் தூக்குனா என்ன அறிவிப்பு சொல்வோம்? குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னால் செல்லுங்கள் என்றுதானே. இந்த வழக்கம் நீத 18:21ல் இருந்துதான் வந்திருக்க வேண்டும். மீக்காவின் ஆலயத்தில் உள்ள சிலைகளை எடுத்துக்கொண்ட தான் மக்கள் அவற்றை ஒய்யாரமாக சுமந்து கொண்டு போகிறார்கள்.

நீதித்தலைவர்கள் நூல் குருக்கள் பற்றியும், நம் வழிபாட்டு முறை பற்றியும் நிறைய சொல்கிறது.

Monday, November 21, 2016

பாடகி

ஆலயப் பாடகர்கள், பாடகர்குழுவினர் இவர்களின் திருநாளை நாளை நாம் கொண்டாடுகிறோம்.

இவர்களின் பாதுகாவலி செசிலி.

'ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பது' என்கிறார் தூய அகுஸ்தினார்.

வழிபாட்டில் பாடல் பாடுவது என்பது எல்லா சமயங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.

பெரிய இறையியல் கோட்பாடுகளைக் கூட மிக எளிதாக புரிய வைக்கும் ஆற்றல் பாடலுக்கு உண்டு:

'முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா!'

என்பது ஒரு பாடல் வரி.

தமதிருத்துவத்தை இவ்வளவு சுருக்கமாக, இவ்வளவு எளிதாக வேறு யாராலும் சொல்ல முடியாது.

செசிலி ஒரு அழகி.

தன் அழகையும் அறிவையும் தன் இசையாக இறைவனுக்கு அர்ப்பணித்தாள்.

இன்னைக்கு ஒருநாளாவது நானும் பாடலாம்னு நினைக்கிறேன்.

Sunday, November 20, 2016

பேச வேண்டும்!

'அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்!'

(காண். மத்தேயு 12:46-50)

நாளை அன்னை மரியாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இயேசுவைச் சந்திக்க அவரின் தாயும் சகோதரர்களும் வருகின்றனர்.

இயேசுவைச் சந்தித்து நிறைய நாள்கள் ஆகிவிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் வந்திருக்க வேண்டும். தன் தாய் மற்றும் சகோதரர்களைச் சந்திக்க முடியாமல் இயேசுவுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கிறது போலும்.

கதவருகில் வந்து நின்றவர்களையும் கவனிக்காமல் கடமையில் கருத்தாய் இருக்கிறார் இயேசு.

அங்கிருந்த ஒருவர் இயேசுவுக்கு வந்திருந்தவர்களை அறிமுகம் செய்கின்றார்.

வந்துதான் நிற்கின்றார்கள்.

ஆனால், அந்த ஒருவர் சொல்வதைக் கவனித்தீர்களா?

'உம்மோடு பேச வேண்டும் என வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்கிறார்.

சில நேரங்களில் இந்த ஒருவர் நம் வாழ்விலும் வருகிறார்.

இவருக்கு நாம் நினைப்பதும் தெரியும்.

குட்டி மரியா கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்நாளில் நாம் குட்டியாய் இருந்த நாள்களை எண்ணிப்பார்க்கலாமே!

குட்டி விரல், குட்டி கை, குட்டி கால், குட்டி உதடு, குட்டி காது, குட்டி மூக்கு - சான்ஸே இல்லை!

Saturday, November 19, 2016

கதவுகள் மூடி

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நாளை நிறைவு செய்கிறோம்.

'தந்தையைப் போல இரக்கம் உள்ளவர்களாய்' என்று நாம் கொண்டாடிய இரக்கத்தின் யூபிலி ஆண்டு எனக்கு இரட்டிப்பான ஆசீரைத் தந்தது.

'இரக்கத்தின் தூதுவர்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரக்கத்தைப் பற்றி போதிக்கவும், சிறப்பு ஒப்புரவு வழிபாட்டை நடத்தவும், திருப்பீடத்தால் மட்டுமே மன்னிக்கப்படக்கூடிய பாவங்களை மன்னிக்கும் பொறுப்பு பெற்றதும் என்னை திருத்தந்தை அவர்களுக்கு நன்றி கூறத் தூண்டுகின்றன.

இறைவனின் இரக்கத்தை உணர்ந்தால் மட்டுமே, அவரின் கண்கள் என் கண்களைச் சந்தித்தால் மட்டுமே நான் எனக்குக் கீழிருப்பவர்களின் கண்களைச் சந்திக்கவும், இரக்கம் காட்டவும் முடியும்.

நான் இறைவனின் இரக்கத்தை நிறைய நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.

அந்த வாய்ப்புக்களுக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்.

நிறைய ஆலயங்களில் மறையுரை நிறைவேற்றவும், ஒப்புரவு வழங்கவும் வாய்ப்பு பெற்றேன்.

நான் சந்தித்த ஒவ்வொருவரும் எனக்கு இறைவனின் செய்தியைக் கொண்டுவந்தனர்.

வாழ்க்கை பெரியது என்று வாழக் கற்றுக்கொடுத்தனர்.

இரக்கத்தின் யூபிலி கதவுகள் பூட்டப்படும் இந்நாளில் நம் இதயத்தின் கதவுகள் திறக்கட்டும் என்பதே என் மன்றாட்டாக இருக்கிறது.

அனைவருக்கும் யூபிலி வாழ்த்துக்களும், செபங்களும்!

Friday, November 18, 2016

பாறை

'என் கற்பாறையாகிய ஆண்டவர் போற்றி!'

(திபா 144)

இன்று எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா.

நன்றித் திருப்பலி எங்கள் பாப்பிறை குருமாணவர் இல்ல ஆலயத்தில் நடந்தது.

சிரோ-மலபார் என்னும் ரீதியில் திருப்பலி இருந்தது.

அன்றுக்கும் இன்றுக்கும் ஒப்பிடும்போது மாணவர் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது.

மற்றபடி அன்றைவிட இன்று இல்லம் வளர்ந்திருக்கிறது.

பாப்பிறை ஆலயம் பனந்தோப்பு மாதிரியில் கட்டப்பட்டிருக்கும். இன்று அதற்கு வண்ணம் தீட்டி மெருகேற்றியிருக்கிறார்கள்.

'என் கைகளுக்கு போர்ப்பயிற்சி கொடுப்பவர் ஆண்டவரே' என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள்தாம் இன்று என் உதட்டில் இருந்தன.

அருள்பணி நிலைக்கான பயிற்சி மற்றும் தொட்டிலாக இருந்த இந்த இல்லத்தில் மீண்டும் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி.

Thursday, November 17, 2016

தேனைப் போல்

'அது என் வாயில் தேனைப் போல் இனித்தது.
ஆனால், அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.'
(காண். திவெ 10:8-11)

ஆண்டவரின் ஏட்டுச்சுருளை திண்ணுமாறு பணிக்கப்படுகின்றார் யோவான்.

அது எப்படிங்க சுருளை திங்க முடியும்?

பேப்பரை சாப்பிட முடியுமா?

இங்தான் ஒரு சிம்பலிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது:

வாய் என்பது நாம் பேசும் வார்த்தைகளின் பிறப்பிடம்.

ஆனால், வயிறு என்பது யூத மரபில் உணர்வுகளின் பிறப்பிடம்.

அதாவது, நான் உங்களைப் பார்த்து, 'ஐ லவ் யு' என்று சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம்.

இந்த வார்த்தைகளின் பிறப்பிடம் வாய்.

ஆனால், அன்பு என்ற உணர்வின் பிறப்பிடம் வயிறு.

பல நேரங்களில் வாயில் இனிப்பது வயிற்றில் கசக்கும்.

அதாவது, எல்லார்ட்டயும் ரொம்ப எளிதா 'ஐ லவ் யு' அப்படின்னு சொல்லிட முடியும்.

ஆனால், எல்லாரிடமும் ஒரே மாதிரி அன்பு உணர்வைக் காட்டும்போது, அல்லது காட்ட இயலாதபோது அது வயிற்றில் கசக்கிறது. அதாவது, அது உணர்வாக வர மறுக்கிறது.

நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 119) இறைவனின் திருச்சட்டம் இனிப்பதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார்.

அந்த இனிமை உதட்டிலும், வயிற்றிலும் இருந்தால் நலமே.

Wednesday, November 16, 2016

கண்ணீர் கடவுள்

'ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை!' (காண். லூக் 19:41-44)

'எல்லாம் எனக்குத் தெரியும்!' என்று நாம் நினைக்கும் சில நேரங்களில், நமக்கு அருகில் நடப்பது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

அப்படித்தான் நடக்கிறது எருசலேமுக்கும்.

இங்கேதான் கடவுளின் ஆலயம் இருந்தது.

இங்கேதான் மன்னாதி மன்னர்கள் முடிசூட்டி ஆண்டார்கள்.

இந்த ஊரைத் தேடித்தான் ஒட்டுமொத்த பட்டிதொட்டிகளும் படையெடுத்தன.

இங்கேதான் திருச்சட்டங்கள் கற்பிக்கப்பட்டன.

இங்கேதான் நாகரீகம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இவ்வளவு நடந்த இடத்தில் கடவுளின் பிரசன்னம் மட்டும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

கடவுளின் பிரசன்னத்தை எப்படி கண்டுகொள்வது.

இஞ்ஞாசியாரின் தியான முறையில் இதை 'டிஸர்ன்மென்ட்' என அழைக்கிறார்கள்.

எங்கள் கல்லூரியில் ஒரு வயசான அருட்தந்தை இருக்கிறார்.

அவரின் டிஸர்ன்மென்ட் ரொம்ப சிம்பிள்.

ஏதாவது பற்றி முடிவெடுக்க வேண்டுமானால் கண்களை மூடிக்கொண்டு இயேசுவின் முகத்தை சில மணித்துளிகள் கற்பனை செய்து பார்ப்பாராம். அந்த முகம் சிரித்தால் தான் செய்ய முனைவதை செய்வாராம். அந்த முகம் சிரிக்க மறுத்தால் அந்தச் செயலை அப்படியே விட்டுவிடுவாராம்.

ஏனெனில் இயேசுவை அழவைத்துவிட்டு நாம் செய்யும் செயல்கள் கல்லின்மேல் கல் இராதபடி ஆகிவிடுமாம்.

இதைத்தான் கமாலியேல் திருத்தூதர் பணிகளில் மிக அழகாகக் கூறுவார்:

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்!' (திபா 5:39)

Tuesday, November 15, 2016

தாலந்து

'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்.

இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.'

(காண். லூக்கா 19:11-28)

நாளைய நற்செய்தியில் தாலந்து உவமை அல்லது மினா உவமையை நாம் வாசிக்கின்றோம்.

மேற்காணும் வார்த்தைகள் நம்ம மோடியின் வார்த்தைகள் போல இருக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்நேரம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டார்.

கறுப்பு பணத்தை அழிக்க தான் எடுத்த முயற்சி அப்படி இப்படி என பில்ட் அப் கொடுத்தார்.

இந்த ஒருவாரத்தில் எந்த ஒரு கறுப்பு பண முதலையும் பிடிபடவில்லை.

கறுப்புப் பண முதலைகளை விட்டுவிட்டு, பாவம் கடுகுப்பெட்டிக்குள் கையை விட்டுவிட்டார்.

உள்ளவர் எவருக்கும் நிறைய கொடுக்கிறார்.

இல்லாதவரிடமிருந்து இருப்பதையும் எடுத்து ரோட்டில் நிற்க வைத்துவிட்டார்.

ஒரு மினா கொடுத்து பத்து மினா கொடுத்தவரை பாராட்டும் தாலந்து பிரபு என் கண்களுக்கு ஒரு முதலாளி போலவே தெரிகின்றார்.

Monday, November 14, 2016

வெதுவெதுப்பாய்

'நீ குளிர்ச்சியாகவும் இல்லை. சூடாகவும் இல்லை.
குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.
இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.'

இலவோதிக்கிய நகர் திருச்சபைக்கு எழுதும்போது தூய யோவான் மேற்காணும் வார்த்தைகளைச் சொல்கின்றார்.

தமிழில் 'ரெண்டுங்கெட்டான்' என்று சொல்வோம்.

இங்கிட்டும் சேராம, அங்கிட்டும் சேராம இருக்கும் ஒரு நிலை.

சாயங்காலம் 5 மணிக்கு மீட்டிங் என அறிவிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

அப்படி வைத்தால் 4 மணிக்கு விளையாடவும் போக முடியாது. 6 மணிக்கு உட்கார்ந்து படிக்கவும் முடியாது. இப்படி 5 மணி ப்ரோக்ராம் மற்ற இரண்டு ப்ரோக்ராம்களை கெடுத்துவிடுகிறது.

வெதுவெதுப்பாய் இருப்பது என்பது யார்பக்கமும் சைட் எடுக்காமல் எல்லாருக்கும் நல்லவராக அல்லது நியூட்ரலாக இருக்க நினைப்பது.

சில நேரங்களில், 'நான் நியூட்ரல்' என சொல்லிக்கொள்வதுண்டு.

ஒரு எலியின் வாலை யானை தன் காலால் மிதித்துக் கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த எலியிடம் போய், 'நான் நியூட்ரல்' என்றால், அதற்கு அந்தப் பதிலால் ஒரு பயனும் இல்லை.

நான் அதன் பக்கம் நின்று யானையின் காலை உயர்த்தி அதன் வாலை விடுவித்தால்தான் அதற்குப் பயன் உண்டு.

நாளைய நற்செய்தியில் நாம் காணும் சக்கேயுவும் வெதுவெதுப்பான தண்ணீராக இருக்கின்றார்.

ஆனால், இயேசுவை சந்தித்தவுடன் மாற்றம் பெறுகிறார்.
அவரின் இரக்கத்தால் பற்றி எரிந்து கொதிக்கின்றார்.

Sunday, November 13, 2016

முந்தி மாதிரி நீ இல்லை!

நாளை முதல் சில நாள்களுக்கு திருவெளிப்பாட்டு நூலிலிருந்து முதல் வாசகப் பகுதியை வாசிக்க இருக்கின்றோம்.

தன் திருவெளிப்பாட்டை ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறார் யோவான்.

அவர் விளிக்கும் முதல் திருச்சபை எபேசு.

எபேசு திருச்சபையின் நேர்முக குணங்கள் என மூன்றை முன்வைக்கின்றார்:

அ. உன் செயல்கள
ஆ. உன் கடின உழைப்பு
இ. உன் மனவுறுதி

ஆனாலும், குறை ஒன்றும் உண்டு என விரல் நீட்டுகின்றார்:

'முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை!'

சிம்சோன் காலத்திலிருந்தே இந்த புகார் மனுக்குலத்தில் ஒருவர் மற்றவர்மேல் உண்டு.

தெலீலா சிம்சோனைப் பார்த்து, 'நீ முன்போல என்னை அன்பு செய்வதில்லை!' என கடிந்து கொள்கிறாள்.

அன்பு குறையுமா?

அன்பு குறைவது ஒரு குறையா?

என் நட்பு வட்டத்திலும் என்னிடம் இதே புகாரை என் உற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

'முந்தி மாதிரி நீ இல்லை!'

'இப்ப எல்லாம் மாறிட்ட!'

'முன்னால மாதிரி நீ எனக்கு நேரம் செலவிடுவதில்லை!'

 இவை சாம்பிள்கள்.

ஆனா, வாழ்வில் நம் இலக்குகள் அல்லது அதை நோக்கிய பயணம் மாற மாற நம் உற்றவர்களுக்கான நேரம் குறையத்தான் செய்கிறது.

மேலும், தேவைகள் என்ற ஏணியில் அனைத்தையும் வைத்துப் பார்த்தால், வயது மாற மாற நம் விருப்பங்களும் மாறுகின்றன.

20 வயது முதல் 30 வயது இருக்கும்போது நிறைய உறவுகள் வேண்டும், நிறையப்பேரை தெரிய வேண்டும் எனத் தேடும் மனம், 35 நெருங்கும்போது 'தனியாய் இருப்பது நல்லது,' 'தனியாய் இருக்க நேரம் வேண்டும்' என ஏங்குகிறது.

5 வயசுல நமக்கு பஞ்சு மிட்டாய் பிடிச்சது. அதை அன்று நமக்கு கொடுத்த கடைக்காரர் இன்றும் அதை நமக்கு கொடுத்து, 'தம்பி, இது உங்களுக்கு விருப்பம்தான!' என நம் கைகளில் திணித்தார் என்றால் அவர்மேல் நமக்கு கோபம் வந்துவிடுகிறது.

ஒரு கட்டத்தில் நமக்கு பிடித்தது அல்லது நமக்கு எல்லாம் என இருந்தது இன்னொரு கட்டத்தில் நமக்கு திகட்டிவிடுகிறது.

இது எனக்கு மட்டுமா? என ஆய்ந்து பார்த்ததில் இது எல்லாருக்குமான (ஓரளவுக்கு) பரந்துபட்ட உணர்வாகவே இருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதன் வாழ்வியல் வடிவங்கள்தாம் இந்த உணர்வுகள் என நினைக்கிறேன்.

மனிதர்கள் மாறுகிறவர்கள். அல்லது மாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

ஆனால், கடவுள் மாறாதவர்.

மாறாதவரிடத்தில் நான் கொண்டுள்ள அன்பும் மாறாமல் இருக்க வேண்டும் என அவர் விரும்புகின்றார்.

ஆகையால்தான்,

எபேசு நகர திருச்சபையைப் பார்த்து, 'முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என நினைத்துப்பார். மனம் மாறு. முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்!' என்கிறார்.

இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து விநோதமான கனவுகள் வருகின்றன:

அ. நான் செல்ல வேண்டிய இரயில் காத்திருக்கிறது. ஆனால், என் லக்கேஜ் ஒன்று தொலைந்துவிடுகிறது. அதைத்தேடி நான் அலைகிறேன். நான் என்னதான் அலைந்து தேடினாலும் நான் வரும் வரை அந்த இரயில் போக மறுக்கிறது.

ஆ. வலது காலில் இரண்டு இடத்தில் எலி கடிக்கிறது. காயம் என்று போன இடத்தில் கால் அகற்றப்படுகிறது.

இ. முன்பின் தெரியாத காட்டுப்பகுதி. யாருமில்லாத இடத்தில் ஒரு இளம்பெண். அந்தப் பெண்ணின் வீட்டில் விருந்து. பின் அந்தக் காட்டுப்பகுதியிலிருந்து என் வீட்டிற்கு வரும் பாதையை நான் மறந்து சுற்றுகிறேன்.

இவற்றில் எல்லாம் பெரிய விநோதம் என்னவென்றால், இந்தக் கனவுகள் காலையில் எழுந்தவுடன் என் நினைவில் இருப்பது என்பதுதான்.

வாழ்க்கை ஒரு டெடர் நாவல்போல இருக்கிறது கனவில்.

ஹலோ! பயந்துட்டீங்களா!

Thursday, November 10, 2016

கோடு

'உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை.'

இன்றும் பிலமோன் - ஒனேசிமு - பவுல் கடிதத்தின் ஒரு வரியை எடுத்துக்கொள்வோம்.

'நீ உன்னையே எனக்கு கடனாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை நான் உனக்கு நினைவூட்டத் தேவையில்லை' என்று பிலமோனுக்குச் சொல்லும் பவுல், எதற்காக, 'உன் உடன்பாடினின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை' எனச் சொல்கிறார்?

அதாவது, பிலமோனின்மேல் தனக்கு உரிமை இருந்தாலும்,

அவரின் ஒனேசிமுவின்மேல் உரிமை இருந்தாலும்,

தன் கோட்டைத் தான் தாண்டக்கூடாது என்பதில் மிகவும் கருத்தாய் இருக்கிறார் பவுல்.

'கோடு தாண்டாமல் இருத்தல்' உறவில் மிக முக்கியமானது.

வார்த்தையில், செயலில் கோடு தாண்டுவதற்கு முன், முதலில் நாம் நம் எண்ணங்கள் வழியாகவே கோடு தாண்டுகிறோம்.

எண்ணத்தால்கூட கோடு தாண்டாமல் இருத்தல் எல்லா உறவுகளையும் இனிய உறவுகளாக வைக்கும்!

இல்லையா?

Wednesday, November 9, 2016

ஒனேசிமு

நாளைய முதல் வாசகத்தில் (காண். பிலமோன் 7-20) பவுல் பிலமோனுக்கு எழுதும் கடிதத்தை வாசிக்கிறோம்.

'பிலமோன்' என்றால் 'முத்தம்' அல்லது 'அன்பு' அல்லது 'நட்பு' என்று பொருள்.

பிலமோனின் ஒரு அடிமை அல்லது ஒரே அடிமையின் பெயர் ஒனேசிமு. ஒனேசிமு என்றால் பயன்படுபவன் என்பது பொருள். அடிமைகளுக்கு பெயர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அவன் என்ன செய்கிறானோ அதுவே அவனுக்கு பெயராகிவிடும். இந்த அன்பன் பயன்படுபவனாக இருந்ததால் ஒனேசிமு என பெயர் பெறுகிறான்.

பிலமோனுக்கு அடிமையாக இருந்த ஒனேசிமு ஓடிப்போய் பவுலோடு சேர்ந்து கொள்கிறான்.

அப்படி தன்னோடு சேர்ந்து கொண்ட ஒனேசிமுவை திரும்ப அவனின் தலைவரிடம் அனுப்புகிறார் பவுல்.

அப்படி அனுப்பும்போது ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்து அனுப்புகிறார்.

அக்கால உரோமை சட்டப்படி அடிமை ஒருவன் தலைவனை விட்டு ஓடினால் அப்படி ஓடிய அடிமையும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனும் ஒரே மாதிரி தண்டனை பெறுவர்.

ஆனால், தண்டனை அல்ல. மன்னிப்பே முன்னிறுத்தப்படவேண்டும் என்பது பவுலின் வேண்டுகோளாக இருக்கிறது.

இந்தக் கடிதத்தில் பவுலின் மூன்று குணங்கள் எனக்குப் பிடிக்கின்றன:

அ. பவுலின் தொடர்புகள் (contacts). 'எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்' என பெருமைப்படும் பவுல் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார். தலைவருக்கு தலைவராக அடிமைக்கு அடிமையாக ஆணுக்கு ஆணாக பெண்ணுக்கு பெண்ணாக. இந்தக் காலத்தில் ஒருவரை முன்னேற்றிச் செல்வது அவரின் அறிவோ திறமையோ அல்ல. மாறாக, அவரின் தொடர்புகளே.

ஆ. பவுலின் பெருந்தன்மை. தன்னிடம் ஓடி வந்த அடிமையை பெருந்தன்மையோடு பார்த்ததோடல்லாமல், அப்படியே பார்க்குமாறு பிலமோனையும் அறிவுறுத்துகின்றார்.

இ. எப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை அல்ல, மாறாக, எப்படி ஒருவன் மாற முடியும் என்று பார்க்கும் உள்ளம் கொண்டவராக இருக்கின்றார். இவன் அடிமைதான். இவனுக்கு என்ன தெரியும்? என அவனைப் பயன்படுத்த நினைக்காமல், அவனை ஒரு நம்பிக்கையாளனாக, சகோதரனாக மாற்ற முடியும் என நினைக்கின்றார்.

ஆக, நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி மாறுகிறோம் என்பதுதான் முக்கியம்.

இல்லையா?

Tuesday, November 8, 2016

500 - 1000 ரூபாய்

கொஞ்ச மாதங்களுக்கு முன் வந்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில், 500 மற்றும் 1000 ரூபாயை ஒழித்துவிடுங்கள். கறுப்பு பணம் ஒழிந்துவிடும் என்ற உரையாடல் வரும்.

ஒருவேளை மோடி அந்த படத்தைப் பார்த்துத்தான் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ?

என்ன அறிவிப்பு?

இன்று நள்ளிரவு முதல் (இன்னும் 23 நிமிடங்கள் இருக்கின்றன) 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதாம்.

சென்றால்தான் அது செல்வம்.

நம்மை விட்டு அது செல்லாது என்றால் அது எது என்றுமே செல்லாததுதான்.

இப்போ என்ன செய்வது?

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ள வழிகள் உண்டு.

ஆனால், நம் பணம் வங்கியில் அல்லது கணக்கில் போடப்பட்டு மீண்டும் புதிய நோட்டுக்களாக தரப்படும்.

அதிகமான, கள்ள நோட்டு புழக்கம், கணக்கில் வராத பணம் இவற்றிற்கான ஒரு செக் இது.

இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் அரசியல் மற்றும் மதம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கிவிடுகிறார் செஸ்டர்டன்.

இந்த இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது பணம்.

ஒன்று, பணம் வேண்டும் என்று சொல்லும்.

மற்றொன்று, பணம் வேண்டாம் என்று சொல்லும்.

இந்த இரண்டு எதிர்துருவ கருத்துக்கள் இருந்தால்தான் சமூகம் முன்னேறிச் செல்லும்.

மோடியின் இந்த முன்னெடுப்பு நிறைய நேர்முக, எதிர்மறை உணர்வுகளைத் தூண்டியுள்ளது.

என்ன நடக்கிறது?

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, November 7, 2016

முன்மாதிரியாய்

'நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு!'

(காண். தீத்து 2:1-8,11-14)

தான் புதிதாய் கிரேத்து தீவில் மேற்பார்வையாளராய் நியமித்துவிட்டு வந்த பவுல் தொடர்ந்து அறிவுரைகள் எழுதி உற்சாகப்படுத்துகின்றார்.

மற்றவர்களுக்கு நீ அறிவுரை சொல்வதற்குப் பதிலாக நீயே முன்மாதிரியாய் இரு என்று பவுல் சொல்வதுதான் கிளாஸிக்.


Sunday, November 6, 2016

மலைமேல் ஏற

இன்று எங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள ஃபீனிக்ஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு நண்பர்கள் நால்வர் சென்றோம்.

உள்ளே நுழையுமுன் பாதுகாப்பு சோதனை.

ஒவ்வொரு கடைக்குள் நுழையும்போதும் கைப்பை சோதனை.

வழக்கம்போல கடைகளை வேடிக்கை பார்த்துவிட்டு, கடைசியில் ஒரு டீ குடித்துவிட்டு வீடு திரும்பினோம்.

ஏறக்குறைய 3 மணிநேரம் உள்ளேயே சுற்றிக்கொண்டிருந்ததால் ரொம்பவே கால் வலிக்கிறது.

'இந்த வணிக வளாகத்திற்குள் ஏறி வர உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'

இப்படி யாரும் யாரையும் கேட்டுவிட முடியுமா?

முடியாது.

'எல்லார் கையிலும் பையிலும் பணம் இருக்க வேண்டும்' என்பது ஒரு தகுதி.

'யாருக்கும் காயம் ஏற்படுத்தவோ, பொருள்களை சேதப்படுத்தவோ கூடாது' என்பது மற்றொரு தகுதி.

மற்றபடி யாரும் யாருக்கும் பொறுப்பல்ல.

நிறைய கடைகள்.

தனித்தனியே சிலர்.

ஜோடியாக பலர்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஓடித் திரியும் சின்னஞ்சிறுசுகள்.

'இதையெல்லாம் பார்க்காமலேயே வளர்ந்துட்டோம்ல!' என்று ஓரமாய் நாற்காலிகளில் அமர்ந்து அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிடும் வயது வந்தவர்கள்.

நிற்க.

நாளைய பதிலுரைப் பாடலில் (திபா 24) ஆசிரியர் ஒரு கேள்வி கேட்கின்றார்:

'ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?'

அவரே பதிலையும் சொல்கின்றார்.

அ. கறைபடாத கைகளும் மாசற்ற உள்ளமும் உடையவர்.

ஆ. பொய்த்தெய்வங்களை நோக்கி தம் உள்ளத்தை உயர்த்தாதவர்.

ஒரு மாலுக்குள் நுழைந்தாலும் இந்தத் தகுதிகள் தேவை என்றே நினைக்கிறேன்.

இன்று கண்கள் நிறையவே அலைபாய்ந்தன.

உள்ளம் அலைபாய்வதால்தான் கண்களும் அலைபாய்கின்றனவோ!

'பொய்த்தெய்வங்களை நோக்கி தன் கண்களை உயர்த்தாதவரும் மாலுக்குள், மலைமேல் நுழையலாம்!'

Saturday, November 5, 2016

தேவையானது ஒன்றே!

இலத்தீன் மொழியில் 'unum necessarium' என்ற சொல்லாடல் உண்டு.

மார்த்தா-மரியா வீட்டில் இயேசு இருந்த போது, 'ஆனால், தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார்' என்கிறார்.

அந்தத் தேவையானது ஒன்றைத் தெரிந்து கொள்வது தான் இலத்தீன் சொல்லாடலின் பொருள்.

இன்று நம் வாழ்வின் உள் ஓட்டத்தை ஒரு நிமிடம் உட்கார்ந்து ஆராய்ந்தால், அதில் நிறையவற்றை நாம் காணலாம்:

'தேவையானது'

'தேவையற்றது'

'தேவைப்படலாம் என நினைப்பது'

'பின் தேவைப்படலாம் என நினைப்பது'

'தேவையில்லை ஆனாலும் இருக்கலாம் என நினைப்பது'

'தேவையில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது'

இப்படி நிறைய இருக்கலாம்...

வாழ்க்கை சில நேரங்களில் நிறைய ப்ரொஜக்டரில் இருந்து மொத்தமாக வரும் படத்திரள் போல இருக்கின்றது.

நிறையவற்றிலிருந்து சிலவற்றிற்கு,

சிலவற்றிலிருந்து ஒன்றிக்கு

என வாழ்க்கை ஒன்றில் குவிந்தால்

அதுவே தேவையானது!

Friday, November 4, 2016

பயிற்சி

'என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.'

(காண். பிலி 4:10-19)

தூய பவுல் தன் மனநிறைவு பற்றி பிலிப்பியருக்குச் சொல்லும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது.
'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும்.
வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ,
நிறைவோ, குறைவோ
எதிலும், எந்தச் சூழலிலும் வாழ பயிற்சி பெற்றிருக்கிறேன்!'

'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு!'

இந்த இரண்டு எழுத்துக்களையும் அருகருகே வைத்துப் பார்ப்போம்.

முதலில், மனநிறைவுடன் வாழ்வது ஒரு பயிற்சி.

அதாவது, எழுத்து, ஓவியம், கலை, இசை போல மனநிறைவும் ஒரு பயிற்சி.

யாருக்கு மனநிறைவு வரும்?

அதாவது, என் அடையாளம் எனக்கு வெளியிலிருந்து வருவதில்லை என நினைத்தால் மனநிறைவு தானே வந்துவிடும். இல்லையா?

இரண்டாவது, இறைவன் தரும் வல்லமையின்மேல் நம்பிக்கை.

இந்த இரண்டும் நமக்கு இருந்தால் எத்துணை நலம்!

Thursday, November 3, 2016

என்னைப் போல

'சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்!'

(காண். பிலி 3:17-4:1)

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக வாட்ஸ்ஆப்பில் நீண்ட கவிதை ஒன்று வந்தது.

நிலவு சூரியனைப் போல இருக்க விரும்புவதில்லை

ரோஜா மல்லிகை போல இருக்க விரும்புவதில்லை

என நீண்டு

ஆக, நீ நீயாக இரு

யாரைப் போலவும் இருக்க முயலாதே!

என்ற செய்தி தரப்பட்டது.

நான் நாங்களாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் நீங்களாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், நாம் சில நேரங்களில் இவரைப் போல இருக்க, அவரைப் போல இருக்க என ஆசைப்படுகிறோம்.

சில நேரங்களில் நமக்கு மாதிரிகளும் தேவைப்படுகிறார்கள்.

ஆகையால்தான், நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் 'என்னைப் போல இருங்கள்!'

இயேசுவும்கூட, தான் சீடர்களின் பாதம் கழுவியபின் 'என்னைப் போல செய்யுங்கள்!' என்கிறார்.

இங்கே பவுலின் நாணயம் மற்றும் நேர்மை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.

எந்தவொரு மாசும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் அல்லது ஏதோ ஒருவிதத்தில் முன்மாதிரியாக இருந்தால்தானே, அப்படிச் சொல்வதற்கு வாய் வரும்.

இன்று நான் என் பணித்தள மக்களைப் பார்த்து, 'என்னைப் போல இருங்கள்!' என்று சொல்ல முடியுமா?

Wednesday, November 2, 2016

திராக்மா

வருகின்ற ஞாயிறு திருப்பலிக்காக மறையுரை எழுத தயாரானேன் இன்று. நற்செய்தி வாசகத்தை வாசித்தேன். மிகவும் கடினமான நற்செய்திப் பகுதிகளில் ஒன்று அது. ஒரு பெண்ணை ஏழு பேர் திருமணம் செய்து உயிர்ப்பில் அவர் யாருக்கு மனைவியாய் இருப்பார்? என்று கேட்கும் பகுதி. எதைப் பற்றி எழுதுவது? உயிர்ப்பு என்றால் என்ன? இறப்பிற்குப் பின் என்ன நடக்கும்? பெண் கொள்வதில்லை, கொடுப்பதில்லை, வானதூதர்களைப் போல இருத்தல் என்றால் என்ன? என நிறைய கேள்விகள்.

ஒவ்வொரு வாரமும் நல்ல மறையுரை எழுதி அல்லது சொல்லி மற்றவர்களை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்ற நினைப்பு என்னில் வரும்போதெல்லாம், நான் என் வாழ்க்கையை யாருக்காக வாழ்கின்றேன்? எனக்காகவா? அல்லது மற்றவர்களுக்காகவா? என்ற கேள்வியும் வரும்.

சரி.

மேற்காணும் குழப்பமான கேள்விகள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க, என் அம்மாவுக்கு ஃபோன் பண்ணினேன்.

போனை எடுத்தவர்கள்,

'இராசபாளையத்திற்கு வந்தேன். அப்பா கல்லறைக்கு மாலை வாங்கினேன். மழை பெய்து கொண்டிருக்கிறது. பஸ்க்காக காத்திருக்கேன்' என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்கள்.

ரொம்ப இரைச்சலாக இருந்ததால், 'அப்புறம் பேசுகிறேன்' என சொல்லிவிட்டு ஃபோனை வைத்தேன்.

('அப்புறம் பேசுறேன்' என்று நாம் ஃபோனில் சொல்வதன் அர்த்தம் 'இப்ப வை!' என்பதுதானே!)

ஃபோனை வைத்துவிட்டு சாப்பிடச் சென்று கொண்டிருந்தேன்.

என் அம்மா மாலையை வாங்கிக் கொண்டு மழையில் இராசபாளையம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதுதான் மனதிற்குள் ஓடியது.

'உயிர்ப்பு, மறுவாழ்வு, இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு, மோட்சம், நரகம், உத்தரிக்கிற நிலை' என நாம் பெரிய வார்த்தைகளில் பேசுகிறோம். சிந்திக்கிறோம்.

ஆனா, என் அம்மா மாதிரி சாதாரண ஆள்களுக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை.

தன் கணவர் இறந்துவிட்டார் என்பது அவர் கண்ட நிஜம். வாழ்க்கையை தொடர்ந்து வாழ வேண்டும் என்பதும் நிஜம். தன் இருப்பை தன் கணவருக்கு உணர்த்துவதற்குத்தான் இந்த மாலை.

நான் என் அப்பாவுக்கு ஒப்புக்கொடுக்கும் திருப்பலியை விட, என் அம்மா கால் கடுக்க மழையில் நின்ற வாங்கும் மாலையும், காத்திருத்தலும் அவருக்கு ஒப்புக்கொடுக்கும் பெரிய பலி என்றே எனக்க எண்ணத் தோன்றுகிறது.

மாலை வாங்கும்போது என் அப்பாவைப் பற்றிய எந்த எண்ணம் அவரின் மனதில் ஓடும்?

இன்று ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன்: 'வாழ்வின் மகத்துவங்கள் பெரிய நூல்களிலும், பெரிய மகான்களின் சித்தாந்தத்திலும் இல்லை. அவைகள் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளில், மாலை வாங்குவதில், பேருந்துக்காக காத்திருத்தலில், மழையில் நனைதலில்தான் இருக்கின்றன.'

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 15:1-10) காணாமல்போன நாணயம் அல்லது திராக்மா பற்றிய உவமையைச் சொல்கிறார் இயேசு.

பெண் ஒருத்தி தன்னிடமிருந்த 10 திராக்மாக்களில் ஒன்றைத் தொலைத்துவிட்டு, தேடுகிறாள், கண்டுகொள்கிறாள். மகிழ்கிறாள்.

ஆனால், தன்னிடமிருந்த ஒரே திராக்மா என்னும் தன் கணவரையும் தொலைத்துவிட்ட என் அம்மா எப்போது அதைக் கண்டுகொள்வார்? எப்போது மகிழ்வார்?

வாழ்வில் சில நேரங்களில் நாம் தொலைக்கும் திராக்மாக்கள் நம் வீட்டை எவ்வளவு கூட்டிப் பெருக்கினாலும், நமக்குக் கிடைப்பதில்லை.

நாம் இவ்வுலகில் தொலைத்த திராக்மாக்களைக் கண்டுகொள்வதற்காகவதாவது மறுவாழ்வு அல்லது உயிர்ப்பு வேண்டும்.

இல்லையா?

Tuesday, November 1, 2016

சாக்காடு

இன்று காலை தேநீர் இடைவேளையின் போது என் நண்பர் தனராஜ் அவர்கள் தான் கடைசியாகப் படித்த நாவல் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

'தெ மேன் ஊ டைட்' (the man who died) (இறந்த மனிதன்). இதை எழுதியவர் டி.எச். லாரன்ஸ்.

டி.எச். லாரன்ஸ் அவர்களின் அனைத்து நாவல்களிலும் மேலோங்கி நிற்கும் ஒரு சிந்தனை என்னவென்றால், 'ஆவியைவிட உடல் வலிமையானது.'

கிறிஸ்தவர்கள் இதைக் கேட்டவுடன் முகம் சுளிப்பர்.

ஏனெனில் கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரையில் 'உடலைவிட ஆவிதான் வலிமையானது'. இயேசுவின் உயிர்ப்பு இந்த கருதுகோலின் அடிநாதமாக இருக்கிறது. இயேசுவின் உடலைவிட அவரின் ஆவி அல்லது ஆன்மா வலிமையாக இருந்ததால்தான் அவரால் உயிர்க்க முடிந்தது. ஆக, லாரன்ஸ் சொல்வதை ஏற்றுக்கொண்டால் நாம் இயேசுவின் உயிர்ப்பை மறுக்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் இயேசுவைப் பற்றிப் பேசும்போது அவரின் உயிர்ப்பை பற்றியே பேசுகிறோம். ஆக, 'இறந்த மனிதன்' என்னும் இந்த நாவல் ஒரு மாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறது. இயேசுவின் உடலை அவரின் உடலின் தேவைகளை மறுபார்வை செய்யத் தூண்டுகிறது.

உடலைவிட ஆவிதான் வலிமையானது என்பதை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்கிறது:

'வாழ்வு தருவது ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது.' (யோவான் 6:63)

'உங்கள் மனம் ஆர்வமுடையதுதான். ஆனால், உடல் வலுவற்றது.' (மத்தேயு 26:41)

இதை வேறு வார்த்தைகளில் - ஆவி, ஊனியல்பு - என பதிவு செய்யும் பவுலடியார் ஆவியின் கனிகள், ஊனியல்பின் செயல்கள் என்ற பட்டியலையும் தருகின்றார் (காண். கலாத்தியர் 5:16-24)

அ. ஆவி உடலைவிட வலிமையானது
ஆ. உடல் ஆவிiயைவிட வலிமையானது

இந்த இரண்டு சிந்தனை நிலைகளில் எது சரி?

அல்லது யார் சரி? கிறிஸ்தவமா? அல்லது நாவலாசிரியர் லாரன்ஸா?

நிற்க.

இன்று நாம் அனைத்துப் புனிதர்களின் திருநாளையும், நாளை அனைத்து ஆன்மாக்களின் திருநாளையும் கொண்டாடுகிறோம்.

அல்லது

இன்று நாம் மகிமை பெற்ற திருச்சபையின் விழாவையும், நாளை துன்புறும் திருச்சபையின் விழாவையும் கொண்டாடுகிறோம்.

'ஆவி உடலைவிட வலிமையானது' என்ற சிந்தனைக்கு சான்று பகர்வோர் இருக்கும் இடம்தான் மகிமை பெற்ற திருச்சபை.

'உடல் ஆவியைவிட வலிமையானது' என்ற நிலையில் இருந்தோர் இருக்கும் இடம்தான் துன்புறும் திருச்சபை.

இப்படி நான் சொல்லிவிட்டால், ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தியதுபோல ஆகிவிடுவேன்.

பின் என்ன வழிதான் சரி?

சரியான வழி, தவறான வழி என எதுவும் இல்லை. உனக்கு உன் வழி. எனக்கு என் வழி.

அவ்வளவே.

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' (குறள் 339)

மரித்த ஆன்மாக்கள் இறைவனில் நித்திய இளைப்பாற்றியை கண்டடைவார்களாக!

Monday, October 31, 2016

பால்குடி

'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.'
(காண். திபா 131)

இன்று காலை திருப்பலியில் வாசிக்கப்பட்ட இந்த திருப்பாடல் வரிகள் என்னைத் தொட்டன.

நேற்று மாலையிலிருந்து மனத்தில் ஒரு போராட்டம். வாழ்க்கையில் என்ன சாதிச்சிட்டோம்? ஏறக்குறைய 35 வருடங்கள் வாழ்ந்தாயிற்று? இங்கிருந்து போகும்போது எதை விட்டுச் செல்வேன்? நான் போகும் பாதை சரிதானா? இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? என்னைப் பிறர் எதற்காக நினைவுகூறுவார்கள்? - இப்படி நிறைய கேள்விகள்.

இந்தக் கேள்விகளோடு தூங்கப்போன எனக்கு இன்று காலை மேற்காணும் வரிகளைக் கேட்டது இதமாக இருந்தது.

அறைக்கு வந்து இந்தப் பாடலை எபிரேயத்தில் வாசித்தேன்.

'தாய்மடி தவழும் குழந்தை' என்பதற்குப் பதிலாக அங்கே 'பால்குடி மறந்த குழந்தை' என்று இருக்கிறது.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை:

அ. பால்குடி மறப்பது (weaning)

பால்குடி மறப்பது அல்லது மறக்கச் செய்வது குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான பருவம். தாயின் வயிற்றில் தொப்புள்கொடி வழியாக தன்னை அவளோடு இணைத்துக் கொள்ளும் குழந்தை, பிறந்தவுடன் அவளின் மார்புக் காம்பு வழியாக தன்னை இணைத்துக் கொள்கிறது. பால் குடிக்கும் பருவம் வரை அது தன்னை தன் தாயின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. ஆனால், இப்படி அது தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். பால்குடி மறக்கச் செய்தல் தாயின் மிகப்பெரிய வேலை. ஏனெனில் தன்னிடமிருந்து தன் குழந்தையைப் பிரிக்கும் அந்த முயற்சி அவளுக்கும் வலிக்கும். ஆனாலும் அவள் தன் குழந்தைக்காக அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். தாயைவிட குழந்தைக்கு வலி அதிகம். இனி அது எல்லாவற்றையும் தன் சொந்த முயற்சியில் செய்ய வேண்டும். தன்னைத் தானே வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அதன் உள்ளத்தில் ஒரு போரட்டம் இருக்கும். தாயுடன் இருக்க முடியாதா? தனியாக என்ன செய்வது? என்ற கேள்விகள் எழும். மற்றொரு பக்கம் 'என்னால் எல்லாம் முடியும்' என்ற எண்ணமும் அதற்கு இருக்கும். இந்தப் போராட்டத்தில் அது தன் அமைதியை இழக்கும். அப்படி இழக்கும் அந்த குழந்தைக்கு தாய்மடி ஆறுதல் தரும்.

இத்தகையை அமைதியை இறைவன் தனக்கு தர வேண்டுகிறார் தாவீது.

ஆ. வலுவற்ற நிலை (weak)

இதுதான் மிகவும் கொடியது. தன் தாயின் மார்பும் தனக்கும் இல்லை, தன்னாலும் தன் கால்களால் நிற்க முடியாது என்ற வலுவற்ற நிலையில் குழந்தை இருக்கும். 'நான் எங்கே போவேன்?' 'எனக்கென்று யார் இருக்கா?' என்ற கேள்வி உள்ளத்தில் எழும். இந்தக் கேள்விகள் நமக்கும் எழும்போதுதான் நாம் நிறைய உறவுகளையும், பணத்தையும், புகழையும் சம்பாதிக்க நினைக்கிறோம். அவர்கள் அல்லது அவைகளில் நம் பாதுகாப்பை தேடுகிறோம். நாம் வயது வந்தவர்கள். இவற்றை சம்பாதிக்க நம்மால் முடியும். ஆனால் குழந்தைக்கு முடியுமா? இல்லை. அது மறுபடி தன் தாயின் மடியில்தான் கிடக்க வேண்டும். ஆக, எல்லாவற்றையும் அள்ளி அணைத்திட வேண்டும் என்ற அம்பிஷன் இருந்தாலும், மனம் அமைதி வேண்டுமெனில் அது இறைமடியை நாட வேண்டும்.

'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
பால்குடி மறந்த குழந்தையென என் நெஞ்சம் அமைதியாயுள்ளது!'