Wednesday, November 30, 2022

நல்லது மற்றும் எளிது

இன்றைய (1 டிசம்பர் 2022) நற்செய்தி (மத் 7:21-27)

நல்லது மற்றும் எளிது

நம் வாழ்க்கை 'நல்லது அல்லது சரியானது மற்றும் எளிது' என்னும் இரு துருவங்களுக்கிடையே இழுக்கப்பட்டுக ;கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, காலையில் 6 மணிக்கு அலாரம் அடித்தவுடன் எழுவது நல்லது மற்றும் சரியானது. ஏனெனில், நாம் வேலை செய்வதற்கு நிறைய நேரம் கிடைக்கின்றது. ஆனால், அது எளிது அல்ல? எது எளிது? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது என் விருப்பம். மதிப்பெண் பெறுவதற்கு எது சரியானது? கடின உழைப்பைச் செலுத்திப் படிப்பது. எது எளிதானது? புத்தகம் அல்லது மற்றவரைப் பார்த்து எழுதுவது.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியுடன் இயேசுவின் மலைப்பொழிவு நிறைவுபெறுகிறது. மற்ற ரபிக்களின் போதனை நிறைவுறுவது போல இயேசுவின் மலைப்பொழிவும் 'பாறையில் அல்லது மணலில் வீடு கட்டுதல்' என்னும் வார்த்தைப் படத்துடன் நிறைவு பெறுகிறது.

ஞான நூல்களில் 'இரு வழி நடத்தை' என்னும் ஓர் இலக்கியக் கூறு உண்டு. அதன்படி, வாசகரின் முன் இரு வாழ்வியல் எதார்த்தங்களை முன்மொழிகின்ற ஆசிரியர், அவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொள்ளுமாறு பணிக்கிறார். இரு வழிகளில் ஒரு வழி ஞானம் சார்ந்தது, மற்றது மதிகேடு சார்ந்தது. ஞானம் வாழ்வுக்கும் மதிகேடு இறப்புக்கும் அழைத்துச் செல்கிறது வாசகர் இவற்றில் நல்ல வழியைத் தேர்ந்துகொள்ள வேண்டும். இதே ஞானக்கூறு இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'ஆண்டவரே, ஆண்டவரே' என வாய்மொழியால் அழைத்தல் ஒரு வழி. கடவுளின் திருவுளம் நிறைவேற்றுதல் மற்ற வழி.

முந்தைய வழி எளிதானது. பிந்தைய வழி சரியானது.

இதே வாக்கியம் தொடர்ந்து உருவகமாகத் தரப்படுகின்றது. உருவகத்தில் வரிசை மாறுகிறது.

'பாறை மேல் வீடு கட்டுதல்' சரியானது. 'மணல் மேல் வீடு கட்டுதல்' எளிதானது.

எளிதானதை விடுத்துச் சரியானதைப் பற்றிக்கொள்பவரே இயேசுவின் சீடர் என்பது இப்பகுதியின் வாழ்க்கைப் பாடம்.

முதல் வாசகத்தில் (எசா 26:1-6), 'பாறை' என்பது ஆண்டவரின் உறுதி, வாக்குப்பிறழாமை, நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கவும், 'மண்' என்பது தீயோர் அடையும் நிலையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில், எளிதானதைப் பற்றிக்கொள்ள விரும்புபவர்கள் மெசியாவை நிராகரிக்கின்றனர். சரியானதைப் பற்றிக்கொள்பவர்களே அவர்களைக் கண்டுகொள்கிறார்கள்.

மரியாவை முதலில் மறைமுகமாக விலக்கிவிட நினைக்கும்போது யோசேப்பு எளிதானதைச் செய்ய விரும்புகிற நபராக அறிமுகம் செய்யப்படுகின்றார். ஆனால், சரியானது என்பது மரியாவை ஏற்றுக்கொள்வது என்பதை அவரே அறிந்துகொள்கின்றார்.

நம் வாழ்விலும் எளிதானதை விடுத்து, நல்லதையும் சரியானதையும் மட்டுமே பற்றிக்கொள்ள முயற்சி செய்தல் நலம்.


Tuesday, November 29, 2022

புனித அந்திரேயா

இன்றைய (30 நவம்பர் 2022) திருநாள்

புனித அந்திரேயா

புனித பேதுருவின் சகோதரர் என்று விவிலியத்திலும் வரலாற்றிலும் அறியப்படுகின்ற புனித அந்திரேயாவின் திருநாளை இன்று கொண்டாடுகின்றோம். 'அனெர்' அல்லது 'ஆன்ட்ரோஸ்' என்னும் கிரேக்கப் பதத்திலிருந்து இந்தப் பெயர் வருகின்றது. கிரேக்கத்தில் 'ஆண்மை' அல்லது 'பலம்' என்று பொருள். இவர் தமிழ் மரபில் 'பெலவேந்திரர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.

கீழைத் திருச்சபைகளில் 'முதலில் அழைக்கப்பட்டவர்' என்று இவர் அறியப்படுகின்றார். ஏனெனில், யோவான் நற்செய்தியின்படி இவரே இயேசுவின் முதற்சீடர். ஒத்தமைவு நற்செய்திகள் முதற்சீடர்களை, 'பேதுரு, அந்திரேயா' என்று இணைத்தே குறிப்பிடுகின்றன. கான்ஸ்தாந்திநோபில் திருஅவையின் முதல் திருத்தந்தை என்றும் கீழைத்திருஅவை இவரைக் கொண்டாடுகிறது. ஒத்தமைவு நற்செய்திகளின்படி இயேசுவால் அழைக்கப்படும்போது பேதுருவும் அந்திரேயாவும் மீன் பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். யோவான் நற்செய்தியில் அந்திரேயா திருமுழுக்கு யோவானின் சீடராக ஏற்கெனவே இருந்ததாக அறிமுகம் செய்யப்படுகின்றார். ஆங்கில 'எக்ஸ்' வடிவ சிலுவையில் இவர் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதாக மரபு சொல்கிறது. ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பாதுகாவலராக இவர் கொண்டாடப்படுகின்றார்.

முதல் வாசகத்தில் (உரோ 10:9-18) அனைவருக்கும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டதை உரோமைத் திருஅவைக்கு நினைவூட்டுகின்ற பவுல், 'நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?' எனக் கேட்கின்றார். இவ்வாறாக, 'மன்றாடுதல், நம்பிக்கை கொள்தல், அறிவிக்கப்படுதல், அனுப்பப்படுதல்' என்று அனைத்தையும் இணைக்கின்றார். திருத்தூதர்கள் இயேசுவால் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் செய்யும் நற்செய்திப் பணியின் பயனாக நம்பிக்கையாளர்கள் இறைவனோடு தங்களையே இணைத்துக்கொள்கின்றனர். இயேசுவுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துபவர்கள் திருத்தூதர்களே. 'நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன' என்று எசாயா இறைவாக்கு நூலை மேற்கோள் காட்டுகின்றார் பவுல். திருத்தூதர்கள் அறிவித்த ஒற்றைச் சொல்லும் காற்றோடு காற்றாகக் கலந்து அனைவரையும் சென்றடைகின்றது.

நற்செய்தி வாசகத்தில் (மத் 4:18-22), இயேசுவால் அழைக்கப்படுகின்ற அந்திரேயா (மற்றும் பேதுரு) தனது வலையை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றார். இயேசுவின் அழைத்தல் திடீரென வருகின்றது. மனிதர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அது வருகிறது. அழைப்பு வந்தவுடன் அழைக்கப் பெற்றவர்கள் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

யோவான் நற்செய்தியில் புனித அந்திரேயா பேதுருவையும் (யோவா 1:42), அப்பம் வைந்திருந்த இளவலையும் (6:9), கிரேக்கர்களையும் (12:22) இயேசுவிடம் கொண்டு வருகின்றார். இயேசுவின் உயிர்ப்புக்கு முன்னர் மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வருகின்ற அந்திரேயா, உயிர்ப்புக்குப் பின்னர் இயேசுவை மற்றவர்களிடம் கொண்டு போகின்றார். சீடத்துவத்தின் இரு புலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார் அந்திரேயா.

'படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 19). நாம் நம்மை அறியாமலேயே நம் சொல்லாலும் செயலாலும் இயேசுவை அறிவித்துக்கொண்டே இருக்கின்றோம். இந்த அறிவித்தல் உலகெங்கும் சென்றுகொண்டே இருக்கின்றது. திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பை உணர்ந்து, சின்னச் சின்ன வழிகளிலும் நற்செய்தி அறிவித்தால் எத்துணை நலம்!


Monday, November 28, 2022

ஆண்டவரின் ஆவி

நாளின் (29 நவம்பர் 2022) நல்வாக்கு

இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வில் மரியாவை வாழ்த்துகின்ற வானதூதர் கபிரியேல், மரியா தூய ஆவியால் கருவுருவார் என அறிவிக்கின்றார். தூய ஆவியார் இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை செயலாற்றுவதைக் குறிக்கும் விதமாக அமைகின்றன இன்றைய வாசகங்கள்.

முதல் வாசகம் (எசா 11:1-10) 'ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்' என்னும் மெசியா இறைவாக்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆவியாரின் கொடைகளான ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு ஆகியவை இங்கே வரையறுக்கப்படுகின்றன.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 10:21-24) தூய ஆவியால் பேருவகையடைகின்ற இயேசு வானகத் தந்தையைப் புகழ்வதுடன், தம் சீடர்களின் பேறுபெற்ற நிலையையும் அறிக்கையிடுகின்றார்.

ஆவியாரின் கொடைகளை உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பெற்றிருக்கின்ற நாம் அவருடைய உடனிருப்பை எண்ணிப் பார்த்து இயங்குதல் நலம்.


Sunday, November 27, 2022

வார்த்தையின் ஆற்றல்

நாளின் (28 நவம்பர் 2022) நல்வாக்கு

வார்த்தையின் ஆற்றல்

'வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவான் 1:14) என்னும் மனுவுருவாதல் மறைபொருளை நினைவுகூரும் திருவருகைக்காலத்தில், 'கடவுளின் வார்த்தை' கொண்டிருக்கின்ற ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

நற்செய்தி வாசகத்தில் (மத் 8:5-11), நூற்றுவர் தலைவரின் பையனுக்கு நலம் தருகின்றார். 'ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் பையன் நலமடைவான்' என்று இயேசுவின் வார்த்தையின் ஆற்றலின்மேல் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைகின்றார் நூற்றுவர் தலைவர். இயேசு அவருடைய நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தூரத்திலிருந்தே நலம் தருகின்றார். இயேசுவின் வார்த்தை நோயிலிருந்து நலத்திற்குப் பையனை அழைத்துச் செல்கிறது.

ஆக, இயேசுவின் வார்த்தை நலம் அல்லது புதுவாழ்வு தருகிறது.

'அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என நம்மை அழைக்கிறது பதிலுரைப் பாடல் (திபா 122).

தகுதியற்ற நம்மைத் தேடி வந்து மனுவுரு ஏற்றார் இறைவனின் வார்த்தை. அந்த வார்த்தை புதுவாழ்வும் நலமும் தருகிறது. அந்த வார்த்தையைத் தேடிச் செல்லும் நம் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.

இறைவனின் வார்த்தை ஆற்றல் கொண்டுள்ளது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் ஆற்றல் உண்டு. ஆக, வார்த்தையானவர் நம் உதடுகளில் இருந்து நாம் பேசும் வார்த்தைகளைப் புனிதப்படுத்துவாராக. நம் செயலுக்கும் வார்த்தைக்கும் உள்ள நெருக்கத்தை அதிகரிப்பாராக. நாம் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் வார்த்தைகளைச் சொல்ல நம்மைத் தூண்டி எழுப்புவாராக!


Saturday, November 26, 2022

ஆண்டும், ஆலயமும், விழித்திருத்தலும்

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

எசாயா 2:1-5 உரோமையர் 13:11-14 மத்தேயு 24:37-44

ஆண்டும், ஆலயமும், விழித்திருத்தலும்

புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகின்றோம். வருகிற நான்கு வாரங்களிலும் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், 'இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும். எல்லாக் குன்றுகளுக்கும் மேலாய் உயர்த்தப்படும். மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்' (எசா 2:2) என இறைவாக்குரைக்கிறார் எசாயா. மக்களினங்கள் இணைந்து வரும் மற்றும் சந்திக்கும் இடமாக ஆலயம் முன்நிறுத்தப்படுகிறது. தன் மனுவுருவாதலுக்குப் பின்னர் இயேசு தம்மையே உண்மையான ஆலயம் என முன்மொழிந்தார். ஆக, எசாயாவின் காட்சி இறைவனின் வாக்குறுதியாகவும், அது இயேசுவில் நிறைவேறுவதாகவும் உள்ளது. கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை இன்று நாம் பெற வேண்டும். நீதிக்கான வேட்கை கொள்பவர்கள் ஆண்டவரின் வழிகளைப் பின்பற்றுவதன் வழியாகவே அதைப் பெற்றுக்கொள்ள முடியும். தங்களுடைய தீய வழிகளைப் பின்பற்றுவோர் பாவத்தையே கொணர்கின்றனர். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்மை விழித்திருக்க அழைக்கிறார் இயேசு (மத் 24:42). விழித்திருத்தல் என்பது கண்களைத் திறந்திருப்பது அல்ல. மாறாக, விடுதலை பெற்ற இதயத்துடன், சரியான திசையை நோக்கி நம் கண்களைத் திருப்பி, கொடுப்பதற்கும் பணி செய்வதற்கும் தயாராகக் காத்திருப்பது. நாம் விழித்தெழ வேண்டிய தூக்கங்கள் எவை? கண்டுகொள்ளாத்தன்மை, தற்பெருமை, உறவுகளுக்கு நம்மையே மூடிக்கொள்ளும் மனநிலை, மற்றவர்களுக்குப் பொறுப்பேற்காத உளப்பாங்கு, தேவையில் உள்ளவர்களைக் கண்டுகொள்ளாத நிலை ஆகியவையே. விழித்திருத்தல் என்பது தேவையில் இருப்பவர்கள் கேட்பதற்கு முன்னரே அவர்களுக்கு உதவுகின்ற தயார்நிலையையும் குறிக்கிறது.

நம் சிந்தனைக்கு: (அ) இத்திருவழிபாட்டு ஆண்டுக்கென நான் எடுக்கும் வாக்குறுதி என்ன? ஆன்மிக வாழ்வு வளர்ச்சிக்கு இப்புதிய ஆண்டை நான் எப்படிப் பயன்படுத்திக்கொள்வேன்? (ஆ) இயேசுவின் அன்றாட வருகையை நான் அறியா வண்ணம் வாழக் காரணங்கள் எவை? (இ) இயேசு என்னும் ஆலயத்தை நோக்கிய என் வாழ்க்கைப் பயணம் எந்த நிலையில் இருக்கிறது? அந்த மலைப் பயணத்தில் நான் எதிர்கொள்ளும் தடைகள் எவை? (ஈ) நான் என் அயலாரின் தேவைகளுக்கு விழித்திருக்கிறேனா?

அன்றாட வாழ்க்கையும் ஆண்டவரின் வருகையும்

அன்றாட வாழ்க்கையின் நடுவே ஆண்டவரின் வருகை நடந்தேறுகிறது என மொழிகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்கு முன்னர் மக்களின் வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதில் - உண்பது, குடிப்பது, பெண் எடுப்பது, பெண் கொடுப்பது – அவர்கள் கருத்தாய் இருக்கின்றனர். ஆனால், திடீரென ஒரு நாள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவர்கள் அழிந்துபோகின்றனர். பெரிய ஆபத்துகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் நடக்கும் முன்பும் ஒரு மாதிரியான அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கையில் நாம் இருக்கிறோம். அன்றாடப் பணிகள் மற்றும் பயணங்களில் மும்முரமாய் இருக்கிறோம். திடீரென வாழ்க்கை தலைகீழாகத் தடம் புரள்கின்றது. நற்செய்தி வாசகம் நம்மை அச்சுறுத்தவில்லை. மாறாக, வாழ்வின் மறுபக்கத்திற்கு நம் கண்களைத் திறக்கின்றது. அந்த மறுபக்கம் குறித்த பார்வையே நம் வாழ்க்கையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதுடன், அன்றாட வாழ்க்கையை நன்றாகவும் பயனுள்ளதாகவும் வாழ நம்மைத் தூண்டுகிறது. எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ, அதை அதை அப்போது செய்யவும், வாழ்வின் முதன்மையானவற்றை முதன்மையற்றவை ஆக்கிரமித்துக்கொள்ளா வண்ணம் காத்துக் கொள்ளவும் அறிவுறுத்துகிறது. நம்மைச் சந்திக்க வருகின்ற ஆண்டவரோடு நாம் கொள்ளும் உறவே ஒவ்வொன்றைப் பற்றிய புதிய புரிதலை நமக்குத் தருகிறது.

இந்தப் புரிதலைப் பெறுகின்ற நாம் மயக்கநிலையிலிருந்து எழுகின்றோம். இந்த உலகின் பொருள்கள் நம்மைக் கட்டுப்படுத்தாதபடி விழித்துக்கொள்கிறோம். ஆனால், அவை நம்மைக் கட்டுப்படுத்துமாறு அவற்றுக்கு நம்மையே நாம் கையளித்தால் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ளத் தவறிவிடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாள் அக்கறையும் ஆண்டவரின் வருகை என்னும் அக்கரை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும். அந்த நேரத்தில், 'இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விடப்படுவார்' (மத் 24:40). அவர் எந்த நேரம் வருவார் என்று நமக்குத் தெரியாததால், அவரோடு வழிநடக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 

நம் இதயத்தின் எல்கைகள் இத்திருவருகைக்காலத்தில் விரிவுபெறட்டும். அன்றாட வாழ்வு தரும் புதுமை மற்றும் புத்துணர்ச்சியை நாம் பற்றிக்கொள்வோம். உறுதியானவை என நாம் கருதுபவற்றையும், நம்மையே அடிமையாக்கும் எண்ணங்களையும் விடுப்போம். ஏனெனில், ஆண்டவரின் வருகை பற்றிய நேரம் உறுதிசெய்யப்பட இயலாதது. உறுதியற்ற நிலையில் நம்மை எதிர்கொள்ளும் அவர் வாழ்வின் அழகானவற்றை நமக்குக் காட்டுகிறார்.

நம் சிந்தனைக்கு: (அ) நாளின் ஒவ்வொரு பொழுதையும் கருத்தாய் வாழ நான் கற்றுள்ளேனா? (ஆ) என் வாழ்வின் முதன்மைகள் எவை? அவற்றை நான் சரியான நிலையில் வைத்துள்ளேனா? (இ) என் பொருள், உறவு, பணி போன்றவை போதும் என நினைத்து அனைத்தையும் உறுதியாக்கிக்கொள்ள விழைந்து சோர்வடைகின்றேனா?

புதிய பயணமும் இலக்கும் எதிர்நோக்கும்

புதிய திருவழிபாட்டு ஆண்டில் இறைமக்களாகிய நாம் புதிய பயணத்தைத் தொடங்குகின்றோம். இப்பயணம் பணியாக மலர்ந்து அனைத்து மனிதர்களையும் சென்றடைகின்றது.

ஆனால், நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம்? நம் பயணத்தின் பொது இலக்கு என்ன? 'ஆண்டவரின் வழிகளில் நாம் நடப்போம்' என்று புதிய பாதையை மொழிகின்ற எசாயா, நம் இலக்காக ஆண்டவரின் மலை இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். எருசலேம் இறைவனின் திருமுகத்தின், அவருடைய திருச்சட்டத்தின் அடையாளமாக இருந்தது. புதிய எருசலேம் ஆலயமாகத் தம்மையே முன்மொழிகிறார் இயேசு (காண் யோவா 2). மேலும், இறுதி நாள்களில் போர்க் கருவிகள் அனைத்தும் தொழில் கருவிகளாக மாற்றம் பெறும் என்றும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. அந்த நாள் மிகவும் அழகான நாளாக இருக்கும். ஏனெனில், மனிதர்கள் ஒருவர் மற்றவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, வளப்படுத்தத் தொடங்குவர். அத்தகைய அமைதியான நாளை எதிர்நோக்குதல் நலம்.

இப்பயணம் ஒருபோதும் முடிவுக்கு வருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் இப்பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு நாளும் நாம் அடைய வேண்டும். நாம் கொண்டிருக்கும் எதிர்நோக்கு நமக்கு ஏமாற்றம் தருவதில்லை.

நம் சிந்தனைக்கு: (அ) என் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு என்ன? (ஆ) நான் பேசும் சொற்கள், என் செயல்கள் ஆகியவை கூடச் சில நேரங்களில் போர்க் கருவிகள் போல இருக்கலாம். அவற்றை நான் தொழிற்கருவிகளாக மாற்றுவது எப்படி? (இ) என் வாழ்வின் எதிர்நோக்கு என்னும் திரி அணைந்து போகிறதா? என் வாழ்வின் தேக்கநிலை கண்டு நான் சோர்வடைகின்றேனா?

நிறைவாக,

'உறக்கம்' என்னும் உருவகத்தை நம் வாழ்க்கை நிலைக்கப் பயன்படுத்துகின்ற பவுல் (இரண்டாம் வாசகம்), நாம் எழ வேண்டிய கட்டாயத்தையும், இரவுக்குரிய செயல்களை விடுத்து, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களையும் அணிந்துகொள்ள நம்மை அழைக்கின்றார். பகலில் நடப்பது போல மதிப்புடன் நடக்கவும், ஊனியல்பின் செயல்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகின்றார்.

இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கிறது. திரியை ஏற்றும் நாம் இயேசு கிறிஸ்துவை, அவரின் மதிப்பீடுகளை, அணிந்துகொள்வோம்.

'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்னும் அழைப்பைக் கேட்ட திருப்பாடல் ஆசிரியர் தான் அகமகிழ்ந்ததாக மொழிகிறார் (பதிலுரைப்பாடல், திபா 122). புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் உதடுகளிலும் உள்ளங்களிலும் இதே மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.

திருவருகைக் கால வாழ்த்துக்களும், செபங்களும்!


Friday, November 25, 2022

என் வார்த்தைகள்

இன்றைய (25 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 21:29-33)

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது:

ஒன்று, காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத ஒன்றை அறிந்து கொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார். காணக்கூடிய அத்திமரத்தின் தளிரிலிருந்து காண இயலாத கோடைக்காலத்தை ஒருவர் அறிந்துகொள்ள முடிகிறது. அது போல, காணக்கூடிய அறிகுறிகளைக் கொண்டு காண இயலாத இறையாட்சியை அறிந்துகொள்ள முடியும்.

இரண்டு, அனைத்தும் நிகழும் வரை தலைமுறை ஒழியாது. விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் ஆண்டவரின் வார்த்தைகள் ஒழிய மாட்டா. ஆண்டவரின் வார்த்தை நிறைவேறும் என நாம் நேர்முகமாக எடுத்துக்கொள்ளலாம். எசாயா இறைவாக்கு நூலில் தனது வார்த்தை என்றென்றும் நிலைத்து நிற்பதாக ஆண்டவராகிய கடவுள் முன்மொழிகின்றார். 

நிகழ்வுகளைத் தெரிந்து தெளிதல் பற்றி இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

அன்றைய மக்கள் இயற்கையின் இயக்கத்தை வைத்துப் பல விடயங்களைக் கணிப்பார்கள். இன்று நாம் செயற்கைக்கோள்கள் வைத்திருந்தும் நம்மால் கணிக்க இயலவில்லை. இயற்கை ஒரு கணிதச் சமன்பாடு போல இயங்குகிறது என்பது கிரேக்க மெய்யிலாளர் பித்தாகரஸின் வாதம். இப்படி இருந்தால் அப்படி நடக்கும் என்று நாம் கணித்துவிட முடியும்.

இறுதிக்கால நிகழ்வுகளும் அப்படிப்பட்டவையே என்கிறார் இயேசு. அதாவது, மண்ணிலும் விண்ணிலும் நாம் காணும் அடையாளங்களைக் கொண்டு மானிட மகனின் வருகை அண்மையில் உள்ளது என்பதை நாம் கணித்துவிட முடியும்.

இந்தப் போதனை நமக்குச் சொல்வது என்ன?

(அ) தேர்ந்து தெளிதல்

ஒரு விடயத்தின் பல கூறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அல்லவை நீக்கி, நல்லவை தழுவலே தேர்ந்து தெளிதல். 'இது அல்ல! இது அல்ல!' என்று நாம் ஒவ்வொரு அடுக்காக நீக்கும்போதுதான் இயற்கையின் மறைபொருளை உணர முடிகிறது. தேர்ந்து தெளிதல் வளர நாம் நம் உள்ளுணர்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

(ஆ) காரணம் - காரியம்

இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் காரணம் - காரியம் என்றே நகர்கின்றன. 'காரணம் - காரியத்திற்கு' அப்பாற்பட்டவற்றை நாம் வல்ல செயல்கள் என்று சொல்கின்றோம்.

(இ) என் வார்த்தைகள் ஒழியா!

தன் வார்த்தைகள் அனைத்தும் நிறைவுறும் என இயேசு மொழிகின்றார். அதாவது, தன் வார்த்தை பொய்யாகாமல் நிறைவுபெறும் என்கிறார். நம்மைத் தயார்நிலைக்கும் விழிப்புநிலைக்கும் அழைக்கிறார் இயேசு.


Thursday, November 24, 2022

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய (24 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 21:20-28)

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று கருத்துருக்கள் உள்ளன: ஒன்று, எருசலேம் நகரின் அழிவு பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு,  இரண்டு, திருவெளிப்பாட்டு நடையில் முன்மொழியப்படுகின்ற உலகின் இறுதி நாள்கள், மற்றும் மூன்று, மானிட மகனின் வருகையின்போது நம்பிக்கையாளர்களின் பதிலிறுப்பு.

கிபி 70இல் நடந்த எருசலேம் முற்றுகை வரலாற்றில் மிக முக்கியமானது. முதல் யூத-உரோமைப் போர் என அழைக்கப்படுகின்ற அந்தப் போரில் எருசலேம் நகரமும் ஆலயமும் உரோமையர்களால் அழிக்கப்படுகின்றது. தீத்து மற்றும் திபேரியு ஜூலியஸ் இந்தப் படையெடுப்பை முன்னெடுக்கின்றனர். இந்த முற்றுகை ஏறக்குறைய ஐந்து மாதங்கள் நீடித்தன. யூதர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றாலும், இறுதியால் உரோமைப் பேரரசு வெற்றிகொள்கின்றது.

இந்தப் போரின் கோர முகத்தை வரலாற்று ஆசிரியர் யோசேஃபுஸ் இப்படிப் பதிவு செய்கின்றார்: 'அழிவின் காட்சி கொடூரமாக இருந்தது. மரங்களாலும் தோட்டங்களாலும் நிறைந்திருந்த இடங்கள் பாலைவனமாகக் காட்சி அளித்தன. யூதேயாவின் அழகைப் பார்த்து வியந்த எந்த அந்நியரும் இப்போது அதைப் பார்த்தால், அதன் பரிதாப நிலை கண்டு புலம்புவார். அழகின் அடையாளங்கள் அனைத்தும் குப்பையாகக் கூட்டித் தள்ளப்பட்டன. இதற்கு முன்னர் இந்த நகரைப் பார்த்த ஒருவர் அதைப் போல இன்னொரு முறை காண இயலாது. இந்த நகரில் தங்கியிருந்தவரும் இந்நகரை அடையாளம் காண இயலாது.'

எருசலேம் முற்றுகை நடைபெற்ற பின்னர், கிபி 80-90 ஆண்டுகளுக்குள் லூக்கா தன் நற்செய்தியை எழுதியிருப்பார். ஆக, எருசலேம் முற்றுகையை அவர் நேரடியாகக் கண்டவராகவோ, அல்லது எருசலேம் அழிவின் எச்சத்தைக் கண்டவராகவும் இருந்திருப்பார். முற்றுகை நடந்த வேளையில் பெண்களும், குழந்தைகளும் அனுபவித்த இன்னல்களை அவர் அறிந்திருப்பார். தன் காலத்திலும் எருசலேம் பிறஇனத்தார் கையில் இருப்பதைக் கண்டிருப்பார். தான் கண்ட அனைத்தையும் இயேசுவே முன்னுரைத்தாக அவர் பின்நோக்கிப் பதிவு செய்திருப்பார். இந்த இலக்கிய நடைக்குப் பெயர் 'ரெட்ரோஜெக்ஷன்' என்பதாகும்.

மேலும், உலக முடிவு பற்றிய ஆவல் மேலோங்கி இருந்ததால், உலக முடிவு பற்றிய கருத்துகளும் இயேசுவால் முன்னுரைக்கப்படுவதாக எழுதப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்து ஸ்தாயிக்கியர்கள் பிரபஞ்சம் 3000 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அதன் பின்னர் அது மீண்டும் தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் என்றும் கருதினர். தங்கள் காலத்தில் அது நிகழ்வதாக அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

மானிட மகனின் இரண்டாம் வருகையும் கிறிஸ்தவ குழுமத்தால் எதிர்நோக்கப்பட்டது. மானிட மகனின் வருகையின்போது தங்கள் துன்பம் அனைத்தும் மறைந்துபோகும் என்று எண்ணினர். ஏனெனில், அவர்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

ஆக, லூக்கா என்னும் வரலாற்று ஆசிரியர், தன் சமகாலத்து நிகழ்வுகளை, இயேசு முன்னறிவித்த நிகழ்வுகளாகப் பதிவு செய்கின்றார். அல்லது இயேசுவே இதை முன்னுரைத்திருக்கலாம்.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, மாட்சியும் வீழ்ச்சியும் தொடர்ந்து நிகழக் கூடியவை. எருசலேமை வீழ்த்திய உரோமை பின்நாள்களில் தானும் வீழ்கிறது. பாவத்திற்கான தண்டனை என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், பாவமே செய்யாத பச்சிளங் குழந்தைகள் அழிக்கப்பட்டது ஏன்? நாம் பிறப்பது போலவே இறக்கிறோம். அப்படி மட்டும் நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இரண்டு, இறுதி நாள்கள் பற்றிய அச்சம். நம் தனிப்பட்ட வாழ்வின் இறுதி நாள்கள் பற்றிய அச்சம் நமக்கு இயல்பாகவே நம்மில் இருக்கிறது. 'இதுதான் நடக்கும்' என்று ஏற்றுக்கொள்கின்ற மனம் அச்சத்தைக் களையும்.

மூன்று, 'தலைநிமிர்ந்து நில்லுங்கள்.' இது படைவீரருக்கான சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கின்ற படைவீரர் தயார்நிலையில் இருக்கிறார்.


Wednesday, November 23, 2022

பிரச்சினையே வாய்ப்பாக

இன்றைய (23 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 21:12-19)

பிரச்சினையே வாய்ப்பாக

இயேசுவின் நிறைவுகாலப் போதனை தொடர்கிறது. லூக்கா நற்செய்தியாளரின் பதிவுகள் நிறைவுகாலத்தைப் பற்றிய அச்சத்தைத் தருவதாக இருந்தாலும், ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் செய்தி நிரம்பி வழியும். 

'உங்களைச் சிறையில் அடைப்பார்கள் .... உங்கள் எதிரிகளால் உங்களை எதிர்த்து நிற்க முடியாது'

'உங்களை எல்லாரும் வெறுப்பார்கள் ... உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது'

ஒரு பக்கம் எதிர்மறையாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் நம்பிக்கையும் மனவலிமையும் தருகின்றன இயேசுவின் வார்த்தைகள்.

இன்றைய நற்செய்தியில் வரும் ஒரு சொல்லாடல் நம்மைக் கவர்கிறது: 'எனக்குச் சான்று பகர இவை வாய்ப்பளிக்கும்'

ஆக, பிரச்சினை என்று வருகின்ற ஒன்று வாய்ப்பாக மாறும்.

பிரச்சினைகளை வாய்ப்பாக மாற்றுதல் ஒரு சிறந்த மேலாண்மைப் பாடம்.

நாம் பயன்படுத்துகின்ற புதிய புதிய தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் நம் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அல்லது பிரச்சினைகளின் விளைவாலும் வந்தவையே.

இயேசுவின் பொருட்டு ஆளுநர் முன் நிறுத்தப்படுவது ஒரு பிரச்சினை அல்ல. மாறாக, அது ஆளுநரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு. இதுவே இயேசுவின் புரிதலாக இருக்கிறது.

நம் வாழ்வில் பிரச்சினைகள் என நினைக்கும் பல, பிரச்சினைகளே அல்ல.

மற்றும் சிலவற்றை நாம் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

இயேசு இரண்டு வாக்குறுதிகள் தருகின்றார்:

(அ) யாரும் உங்களை மேற்கொள்ள முடியாது

(ஆ) உங்கள் தலைமுடி ஒன்றுகூட விடாது. அதாவது, தேவையற்றது என நினைக்கும் எதுவும்கூட உங்களிடமிருந்து பறிக்கப்படாது.

இறுதியாக, மன உறுதியோடு இருக்க அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் வாதைகள் முடிய, உயிர்கள் அனைத்தும் கடவுளைப் புகழ்கின்றன.

மன உறுதி கொள்பவர்களுக்கு எல்லாப் பிரச்சினைகளும் வாய்ப்புகளே!



Monday, November 21, 2022

எப்போது நிகழும்?

இன்றைய (22 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 21:5-11)

எப்போது நிகழும்?

கடந்த ஆண்டு மேலைநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரோடு என் ஆய்வுத்தாள் பற்றி காணொளி செயலி ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்தேன். நேற்றைய தினம் அவர் தன் அம்மாவைப் பார்க்கச் சென்றதாகச் சொன்னார். 'அம்மா எப்படி இருக்கிறார்கள்?' என்று கேட்டபோது, 'நன்றாக இருக்கிறார்கள். அவர்களே சமைக்கிறார்கள். துணிகளைத் தயார் செய்கிறார்கள். காரில் சென்று பக்கத்தில் பொருள்கள் வாங்கிக்கொள்கிறார்கள். அவருக்கு வயது 93' என்றார். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பொருத்தமான நாடுகள் மேலை நாடுகள் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், சாலையில் செல்லும் எவரும் இவர்களுக்காக நின்று உதவிகள் செய்வர்.

நிற்க.

கடந்த ஆண்டில், 'தெ ரிட்டில் ஆஃப் காமா' என்ற ஒரு நாவல் வாசித்தேன். அதில் வரும் கதைமாந்தர் ஒருவர் 'டெத் இன்ஸ்டிங்ட்' ('இறப்பு உணர்வு') என்னும் விநோதமான உணர்வால் துன்புறுவார். 26 வயது நிரம்பிய அந்தப் பெண், தன் வாழ்வில் தனக்கு எல்லாம் கிடைத்து விட்டதாக உணர்வதோடு, தன் வாழ்வு இப்படியே சீக்கிரம் முடிந்துவிட்டால் நலமாயிருக்குமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஏறக்குறைய 36 வயதில் அவர் இறந்துவிடுவார்.

நம் வாழ்க்கையில் நாம் மேற்காணும் இரண்டு உணர்வுகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்:

ஒன்று, வயது என்பது வெறும் எண்தான். ஆக, மேன்மையான மற்றும் நேர்முகமான உணர்வுகளைக் கொண்டு, நம் வேலைகளை நாமே செய்து, யாருக்கும் தீங்கு நினையாது, நம் உறவுகளோடு அல்லது நம் தனிமையோடு நேரத்தைச் செலவழித்து, ஒவ்வொரு நாளையும் இனிமையாக வாழ்தல்.

இரண்டு, என்ன வாழ்ந்து என்ன கண்டோம்? தொடங்கியது அனைத்தும் முடியத்தானே போகிறது. ஏன் தொடங்க வேண்டும்? அழகாக நிற்கின்ற கோவில் நாளைக்கு இடிந்து விழும் என்று இயேசுவே சொல்லியிருக்கின்றார். நாம் சேர்க்கின்ற சேமிப்பு இன்னொருவருக்குப் போகும். நாம் செய்யும் வேலையின் பயனை இன்னொருவர் அனுபவிப்பார். எதையும் புதிதாகச் செய்ய வேண்டும். புதியது ஒன்றும் வாங்க வேண்டாம். யாருடனும் பேச வேண்டாம். உறவாடுகின்ற அனைவரும் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரியத்தானே போகிறார்கள். அப்புறம் எதுக்கு ஒட்டு? உறவு?

மேற்காணும் இரண்டு எண்ணங்களும் நம்மில் இணைந்தே எழுகின்றன. சில நேரங்களில் நாம் பெரிய ஹீரோ மாதிரி உணர்கிறோம். யாரையும் எதையும் சமாளித்துவிடலாம் என்ற மனதைரியத்தோடு இருக்கிறோம். சில நேரங்களில் அதற்கு எதிர்மாறாக, ஜீரோ மாதிரி உணர்கிறோம். சின்ன விடயத்துக்கே அஞ்சுகிறோம். துணிச்சல் சிறிதும் இல்லாமல் இருக்கிறோம்.

'எல்லாம் முடிந்துவிடும்!' என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

அழகமான ஆலயமும் கல்லின்மேல் கல் இராதபடி ஆகிவிடும்!

'எல்லாம் முடிந்துவிடும்!' - என்ற வாக்கியம் ஒரே நேரத்தில் நம்மில் நேர்முகமான மற்றும் எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுகிறது. எப்படி?

'எல்லாம் முடிந்துவிடும்! எனவே, சீக்கிரம் வாழத் தொடங்கு! நன்றாக வாழத் தொடங்கு!'

'எல்லாம் முடிந்துவிடும்! எனவே, வாழ்ந்தால் என்ன? நன்றாக வாழ்ந்தால் என்ன?'

எந்த உணர்வின் அடிப்படையில் நான் வாழ வேண்டும் என்பதை நான்தான் தெரிவுசெய்ய வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று எச்சரிக்கைகளை விடுக்கின்றார்:

(அ) ஏமாந்து போகாதீர்கள் - நிறைய எதிர்பார்ப்புகள் கொள்தல் தவறு. எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது ஏமாற்றம் நிறைய ஏற்பட வாய்ப்புண்டு.

(ஆ) ஏமாற்றுபவர்கள்பின் போகாதீர்கள் - போலியான வாக்குறுதிகள் கொடுப்பவர்கள்பின் போகக் கூடாது. சமய போதகர்கள், கார்ப்பரெட் நிறுவனங்கள், அரசுகள் பல நேரங்களில் போலி வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன(ர்). யாரும் கடவுளர்கள் அல்லர். ஆக, யார் வாக்குறுதிகளையும் நம்பி அவர்கள்பின் செல்லத் தேவையில்லை.

(இ) திகிலுறாதீர்கள் - அச்சம் நம்மை இறுகக் கட்டும் கயிறு. நம்மை அறியாமலேயே அது நம் பாதங்களில் ஏறி, நம் உடலைக் கட்டி, நம் கழுத்தையும் நெறித்துவிடும். ஆக, நம்மைச் சுற்றி நடப்பவை பற்றிய அச்சம் தவிர்த்தல் நலம். ஊடகங்கள் பெரும்பாலும் நிகழ்வுகளை மிகைப்படுத்தியே கூறுகின்றன. தங்களுக்கு ஏற்றாற்போல சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் சொல்கின்றன. ஆக, ஊடகங்களிலிருந்து விலகி இருத்தல் நலம். மற்றொரு பக்கம், வதந்திகள். நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யார் எந்தச் செய்தியைச் சொன்னாலும், அவற்றைக் கேட்டு நாம் அஞ்சுதல் கூடாது. பல நேரங்களில் நமக்குச் செய்திகள் வராமல் இருந்தாலே நம் மனம் கலக்கமற்று இருக்கும்.

தொடங்கியது அனைத்தும் முடியும் என்பது எதார்த்தம்.

முடியும் போது அது முடியட்டும். முடிவதற்கு முன் நாமாகவே முந்திக்கொண்டு முடித்துவிட வேண்டாம்.

93 வயது ஆனாலும், காரை ஸ்டார்ட் செய்தல் நலம். 26 வயதில் முடிவு பற்றி எண்ணுதல் தவறு.


Sunday, November 20, 2022

காணிக்கை அன்னை

இன்றைய (21 நவம்பர் 2022) திருநாள்

காணிக்கை அன்னை

இன்று அன்னை கன்னி மரியாள் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடுகிறோம். நற்செய்தி நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்பு இல்லை என்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள் அல்லது திருமுறை அட்டவணைக்குள் வராத நூல்கள் என்றழைக்கப்படுகின்ற யாக்கோபின் முதன்மை நற்செய்தி, புனைபெயர் மத்தேயு நற்செய்தி, மற்றும் மரியாளின் பிறப்பு நற்செய்தி என்னும் நூல்களில் இந்நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுவக்கீம் மற்றும் அன்னா தம்பதியினர் தங்களுடைய அன்புக் குழந்தை மிரியமுக்கு ('மரியா') மூன்று வயது நிறைவுற்றபோது, அவரை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று கடவுளுக்கென்று அர்ப்பணம் செய்தனர். தன் 12வது வயது வரை (அதாவது, பதின்மப் பருவம் நிறைவுபெறும் வரை) மரியாள் ஆலயத்தில் இருந்தார். 12வது வயதில் யோசேப்பு அவருடைய பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். 

மேற்காணும் வார்த்தைகளால் இந்நிகழ்வை அந்நற்செய்தி நூல்கள் வர்ணனை செய்கின்றன. 

சுவக்கீம் மற்றும் அன்னாவின் இச்செயல், முதல் ஏற்பாட்டு அன்னாவை நமக்கு நினைவூட்டுகின்றது. கடவுளிடமிருந்து தான் வேண்டிப் பெற்ற சாமுவேல் என்னும் தன் குழந்தையை சிலோவிலிருந்த கடவுளின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று கடவுளுக்கே அர்ப்பணம் செய்கின்றார் அன்னா. தங்களுடைய வயது முதிர்ந்த நிலையில் தாங்கள் கடவுளிடம் வேண்டிப் பெற்றுக்கொண்ட மிரியமை ('மரியா') அவ்வாறே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர் அவருடைய பெற்றோர். ஆக, இன்றைய நாளில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் மரியாளின் பெற்றோர்களும்தான். அவர்களின் துணிச்சல் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. அவர்களின் அர்ப்பணம் நம்மைத் தூண்டியெழுப்புகிறது. அவர்களின் நம்பிக்கை நம் நம்பிக்கையின் அடிநாதமாய் இருக்கிறது.

முதல் ஏற்பாட்டு அன்னாவும் இரண்டாம் ஏற்பாட்டு அன்னாவும், தாங்கள் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றுக்கொண்ட தம் பிள்ளைகளைக் கடவுளுக்கே கொடுத்து, கடவுளை நிரந்தரக் கடனாளியாக்குகின்றனர்.

ஒன்றை நாம் காணிக்கையாக்கும்போது அல்லது அர்ப்பணம் செய்யும்போது என்ன நிகழ்கிறது?

(அ) அர்ப்பணிக்கப்படும் ஒன்றை நாம் திரும்பப் பெற இயலாது. என்னை நான் முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, 'இல்லை! இப்போது வேண்டாம்! நாளை பார்த்துக்கொள்ளலாம்!' என்று சொல்ல முடியாது.

(ஆ) அர்ப்பணிக்கப்படும் அனைத்தும் முழுமையாக அர்ப்பணிக்கப்படுகிறது. என் உடல் மட்டும்தான், உள்ளம் அல்ல என்றெல்லாம் அங்கே பிரிக்க முடியாது.

(இ) அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று அர்ப்பணிக்கப்படுபவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.

மரியாள் காணிக்கையாக்கப்பட்ட அந்த நிமிடமே, கடவுளுக்கு உரியவர் ஆகிவிடுகின்றார். 'தோத்துஸ் துவுஸ்' ('முழுவதும் உமக்கே') என்பது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் இலக்கு வாக்கியம். அன்னை கன்னி மரியாளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்த திருத்தந்தை அவர். அன்னை கன்னி மரியாள் தன்னையே கடவுளுக்கு, 'முழுவதும் உமக்கே' என்று அர்ப்பணித்தவர்.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:

(அ) நம் கட்டின்மை அல்லது சுதந்திரம்

கடவுளின் திருவுளத்திற்குப் பணியவும் பணியாமல் இருக்கவும் நமக்குச் சுதந்திரம் உண்டு. அன்னை கன்னி மரியாளின் அர்ப்பணம் அவருடைய பெற்றோரும், பின்னர் அவரும் கொண்டிருந்த சுதந்திரத்தைக் காட்டுகிறது. இன்று நான் என் கட்டின்மையை அல்லது விருப்புரிமையை உணர்ந்து செயல்படுகின்றேனா?

(ஆ) கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகளுக்கு நாம் தரும் பதிலிறுப்பே அர்ப்பணம்

அவர் கொடுத்ததை அவருக்கே கொடுப்பது அர்ப்பணம். ஏனெனில், நம்மிடம் இருக்கும் எதுவும் நமதன்று. நமக்குக் கொடுத்த அவரிடமே நாம் அனைத்தையும் கொடுத்துவிட்டால் இருப்பது எல்லாம் நமதே. 

(இ) நம் சரணாகதி

'எனது, என்னுடைய, எனக்கு' என்பது அனைத்தும், அர்ப்பணத்தில், 'உனது, உன்னுடைய, உனக்கு' என்று ஆகிவிடுகிறது. அந்தச் சரணாகதியில்தான் நாம் நிரந்தரத்திற்குள் நுழைகின்றோம். ஏனெனில், நாம் நேரத்திற்குள் இருப்பவர்கள். அவர் நிரந்தரமானவர். நேரம் நிரந்தரத்தோடு கைகோர்ப்பதே அர்ப்பணம்.

நிற்க.

காணிக்கை அன்னையைத் தங்களின் பாதுகாவலியாகக் கொண்டிருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், மற்றும் துறவற சபைகளுக்கு நம் வாழ்த்துகளும் செபங்களும்.

மூன்று வயதில் எருசலேமின் ஆலயப் படிக்கட்டுகளில் முன்னேறிச் சென்ற அந்தக் குட்டி மிரியமின் குட்டிப் பாதங்கள் வழி நம் பாதங்கள் சென்றால் எத்துணை நலம்!


Saturday, November 19, 2022

நினைவிற்கொள்ளும் அரசர்!

கிறிஸ்து அரசர் பெருவிழா


I. 2 சாமுவேல் 5:1-3 II. கொலோசையர் 1:12-20 III. லூக்கா 23:35-43

நினைவிற்கொள்ளும் அரசர்!

ஒரு சாதாரண கதையோடு தொடங்குவோம்.

சிறுவன் ஒருவனுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஐஸ்க்ரீம் பார்லர் செல்கின்றான். ஒரு நாற்காலியைப் பார்த்து அமர்ந்த அவனிடம் வருகின்ற கடை ஊழியர், 'என்ன ஃப்ளேவர் வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'வெனில்லா' என்கிறான் சிறுவன். 'இரண்டு வகைகள் உள்ளன. ஒன்றின் விலை ரூ 45. மற்றொன்றின் விலை ரூ 55' என்கிறார் ஊழியர். 'இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?' கேட்கின்றான் சிறுவன். 'இரண்டாம் வகை ஐஸ்க்ரீமில் நிறைய முந்திரி மற்றும் பாதாம் பருப்புக்கள் சேர்க்கப்படும். அத்துடன் ஒரு சிறிய கார் பொம்மையும் இலவசமாகக் கிடைக்கும்' என்கிறார் ஊழியர். தன் பைக்குள் கையை விடுகின்ற சிறுவன் தன் பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, 'ரூ 45க்கு உள்ள ஐஸ்க்ரீம் கொடுங்கள்' என்று ஆர்டர் செய்கிறான். 'இவனிடம் காசு இவ்வளவுதான் இருக்கிறதுபோல!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊழியர் ஐஸ்க்ரீம் கொண்டுவருகின்றார். சாப்பிட்டுவிட்டு, 'நன்றி!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றான் சிறுவன். காலிக் கோப்பையை எடுக்க வந்த ஊழியர், ரூ 55ஐ சிறுவன் விட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கிறான். தனக்கு விருப்பமான ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நேரத்தில், தன் ஆசையை விலக்கிவிட்டு, ஊழியரை நினைவுகூர்ந்து அவருக்காக டிப் வைத்த சிறுவனை நினைத்து ஆச்சர்யப்பட்டார் ஊழியர்.

நினைவுகூரும் அனைவரும் அரசர்களே!

அல்லது

நினைவுகூருபவரே அரசர்!

தன்னுடைய விருப்பம் அல்லது நலனை முதன்மைப்படுத்தாமல் தேவையில் இருக்கும் பணியாளரை நினைவுகூர்ந்த அந்த இளவல் தன்னை அறியாமலேயே அந்தப் பணியாளரின் அரசர் ஆகின்றார்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக் கிழமையை இயேசு கிறிஸ்து அனைத்துலகுக்கும் அரசர் என்று கொண்டாடுகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 சாமு 5:1-3) வடக்கு இஸ்ரயேலுக்கு தெற்கு யூதாவுக்கும் ஏழு ஆண்டுகள் நடந்த கொடுமையான போர் முடிந்து, வடக்கு இஸ்ரயேலின் தலைவர்கள் தன்னுடைய ஊரான எபிரோனில் குடியிருந்த தாவீதிடம் செல்கின்றனர். தங்களை ஆள்வதற்கு தாவீதே சிறந்த அரசர் என்று முடிவெடுக்கின்றனர். தாவீதிடம் இருந்த பண்புநலன்களும் குணநலன்களும் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் அவர் என்று மற்றவர்களுக்குக் காட்டின. தாவீது பிலிஸ்தியர்களைக் கொன்றார் (காண். 1 சாமு 18:14-16). இப்படி நிறைய சாதனைகள் புரிந்தார். மேலும், ஆபிரகாம் முதன்முதலில் உரிமையாக்கிக் கொண்ட எபிரோன் பகுதியில் தாவீது இருந்ததாலும் வடக்கு இஸ்ரNயுல் தலைவர்கள் அவரை நாடி வந்து தங்களை அரசாளுமாறு வேண்டுகிறார்கள். 

அவர்களோடு தாவீது உடன்படிக்கை செய்துகொள்கின்றார். உடன்படிக்கை என்பது ஒருவர் மற்றவருக்கு இடையே இருக்கும் உறவுநிலையின் வெளிப்புற அடையாளம். அந்த அடையாளத்தைக் காணும்போதெல்லாம் ஒருவர் மற்றவர் மேலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் நினைவுகூர்வர். எடுத்துக்காட்டாக, வெள்ளப்பெருக்கிற்குப் பின் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையின் அடையாளமாக கடவுள் தன்னுடைய வில்லை (வானவில்லை) பூமிக்கு மேல் நிலைநிறுத்துகிறார். அந்த வில்லைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நோவாவுடன் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து பூமியை வெள்ளப்பெருக்கிலிருந்து காக்கின்றார்: 'என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். அதன் வில் தோன்றும்போது என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன் ... உடன்படிக்கையின் அடையாளம் இதுவே' (காண். தொநூ 9:13-17).

ஆக, தாவீது தன்னுடைய அரசாட்சியை உடன்படிக்கை என்ற நிகழ்வின் வழியாகத் தொடங்குகிறார். இந்த உடன்படிக்கையால் இவர் தன்னுடைய மக்களை என்றென்றும் நினைவுகூர்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:12-20) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், பவுல் மூன்று விடயங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்: (அ) கொலோசையர்களைக் கடவுள் இமைக்களுக்கான ஒளிமயமாக உரிமைப்பேற்றில் பங்குபெற அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார், (ஆ) இதன் வழியாக அவர்கள் இருளிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டனர், மற்றும் (இ) அம்மகனால் அவர்கள் பாவமன்னிப்பு என்னும் மீட்பைப் பெறுகின்றனர். இரண்டாம் பகுதி, ஒரு கிறிஸ்தியல் பாடலாக அமைந்துள்ளது. கிறிஸ்துவைக் கடவுளின் சாயல் என்று வர்ணிக்கும் பாடல் ஆட்சியாளர், அதிகாரம் கொண்ட அனைவரும் அவரால்தான் படைக்கப்பட்டனர் என்றும், அவரே திருச்சபையின் தலையும் தொடக்கமும் என்று விளக்குகிறது. 

கிறிஸ்து வழியாகக் கடவுள் அனைத்தையும் ஒப்புரவாக்கினார் என நிறைவு செய்கிறார் பவுல். 'ஒப்புரவு செய்தல்' என்னும் நிகழ்வில் அடுத்தவர் நினைவுகூரப்படுகின்றார். மேலும், 'ஆட்சியாளர்கள், அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்' என்று சொல்வதன் வழியாக, கிறிஸ்துவை ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் என்று சொல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 23:35-43) இயேசுவின் பாடுகள் வரலாற்றுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார். அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கீழே இருப்பவர்கள் பார்க்கிறார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறவர்களும் பார்க்கிறார்கள். இவ்விருவரின் எதிர்வினைகளைப் பதிவு செய்கிறார் லூக்கா. சிலுவைக்குக் கீழே நிற்கின்ற 'ஆட்சியாளர்கள்,' 'நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்' என்று எள்ளி நகையாடுகின்றனர். இவர்கள் கொஞ்ச நேரத்திற்கு முன் பிலாத்துவின் அரண்மனையில், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொன்னார்கள். மேலும், இவர்களின் வார்த்தைகளைக் கிண்டல் செய்யும் விதமாக பிலாத்துவும், 'இவன் யூதரின் அரசன்' என எழுதுகிறான். இந்தப் பலகையைப் பார்த்தவர்கள் இயேசுவைத் தங்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு இடறலாகப்பட்டது. தொடர்ந்து, சிலுவையில் அறையப்பட்டவர்களில் ஒருவர், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று!' என்று பழித்துரைக்கிறார். ஆனால், மற்றவர் அவரைக் கடிந்துகொள்கிறார். மேலும், 'இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்று சொல்லும் அவரிடம், 'இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என வாக்களிக்கிறார் இயேசு. தன்னுடைய பணிக்காலத்தில் மக்கள் தன்னை அரசானக்க நினைத்தபோது தப்பி ஓடிய இயேசு, 'நீ யூதர்களின் அரசனோ?' என்று பிலாத்து கேட்டபோது அமைதி காத்த இயேசு, 'நீர் என்னை நினைவிற்கொள்ளும்' என்று ஒரு கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார். மேலும், லூக்கா நற்செய்தியில் இயேசுவை அவருடைய பெயரைச் சொல்லி அழைத்த ஒரே நபர் இக்கள்வன் மட்டுமே. 

'நினைவிற்கொள்ளுதல்' அல்லது 'நினைவுகூர்தல்' என்பது முதல் ஏற்பாட்டில் கடவுளின் உடன்படிக்கையைக் குறிக்கும் சொல்லாடல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் துன்பம் அனுபவிப்பதை நினைவுகூர்ந்த கடவுள் கீழே இறங்கி வருகிறார் (காண். விப 2:24). இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டபோது அவர்கள்மேல் கோபம் கொண்டு எழுந்த கடவுள், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அமைதியாகின்றார் (காண். விப 32:13). 

ஆக, இன்றைய முதல் வாசகத்தில் தாவீது தான் கடவுளின் திருமுன் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அவர்களை ஆட்சி செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் ஒப்புரவுப் பணி நினைவுகூரும் பணியாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில், நல்ல கள்வனை நினைவுகூறும் அரசராக இருக்கிறார் இயேசு.

நம்முடைய குடும்பம் மற்றும் பங்குத் தளங்களில் உள்ள தலைமைத்துவத்திலும் இதே பிரச்சினைதான் காணப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி தன்னுடைய குடும்பத்தை நினைவுகூறும்போது நல்ல தலைவராக தலைவியாக இருக்க முடியும்.

நினைவுகூருதலுக்கு எதிர்ப்பதம் மறத்தல்.

நாம் எப்போதெல்லாம் மறக்கிறோம்? தேவையில்லாதது என நினைப்பவற்றை மறக்கிறோம், கண்டுகொள்ளாத்தன்மையால் மறக்கிறோம், அல்லது நம்மை மட்டுமே அதிகமாக நினைவுகூரும்போது மற்றவர்களை மறக்கிறோம்.

'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல. நான் அவரை அரசராக ஏற்றுக்கொள்கிறேனா? என்பதுதான் கேள்வி.

இன்றைய நாளில் நான் அந்தக் கள்வன் போல, 'என்னை நினைவுகூரும்' என்று இயேசுவிடம் சொல்லும்போது நான் அவரை என் அரசராக ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை எப்படி என்னால் சொல்ல முடியும்?

நான் என் நொறுங்குநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கள்வன் தன்னுடைய வலுவற்ற நிலையில் இயேசு மட்டுமே துணைவர முடியும் என்று நம்பினான். அவனுடைய வலுவற்ற நிலையில் அவன் இயேசுவின் வல்லமையை நாடி நின்றான்.

இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லமையாகக் காட்டிக்கொள்ளவும், வல்லமை உடையவர்களோடு தங்களையே அடையாளப்படுத்திக்கொள்ளவுமே விழைகின்றனர். ஆனால், வலுவற்ற கள்வன் வலுவற்ற இயேசுவில் வல்லமையைக் கண்டான். 

அந்தச் சிறுவன்போல.

வலுவற்ற அந்தச் சிறுவன் தன் வலுவற்ற நிலையில் தேவையிலிருக்கும் அப்பணியாளரைப் பார்த்தான்.

இன்று இயேசுவை நாம் அரசராகக் கொண்டாடுகிறோம். நம்முடைய வலுவின்மையை எண்ணிப் பார்ப்போம். வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் அவர் நம் வலுவின்மையை அறிந்தவர்.

தன்னுடைய வலுவின்மையை அறிந்த ஒருவர்தான் திருப்பாடல் ஆசிரியர்போல, ''ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்' (122:1) என்று பாட முடியும். ஆண்டவருடைய இல்லத்தில் நுழையும் நம்மை அவர் ஆள்வார்.

அவரின் ஆளுகைக்கு நாம் உட்படும்போது அவர் நம்மை நினைவுகூர்வார். ஏனெனில், நாம் அங்கே நம்முடைய நொறுங்குநிலையை நினைவுகூர்கிறோம்.

Friday, November 18, 2022

அனைவரும் உயிருள்ளவர்களே

இன்றைய (19 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 20:27-40)

அனைவரும் உயிருள்ளவர்களே

உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர்கள் இயேசுவிடம் கேள்வி ஒன்றைக் கேட்கின்றனர். இறந்தோரின் உயிர்ப்பைக் கேலிசெய்வது போல இருக்கிறது அவர்களுடைய கேள்வி: '... அப்படியானால், உயிர்த்தெழும்போது அவர் எழுவருள் யாருக்கு மனைவி ஆவார்?' 

சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய நான்கு குழுக்களில் முதன்மையானவர்கள். இவர்கள் ஆலயத்தைத் தங்கள் பொறுப்பில் வைத்திருந்தனர். தலைமைக்குருக்கள் அனைவரும் சதுசேயர்களாகவே இருந்தனர். அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் இவர்களுடைய கை ஓங்கியிருந்தது. இவர்கள் எபிரேய விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே இறைநூல்களாக ஏற்றுக்கொண்டனர். ஆகையால்தான், இயேசு அவர்களுக்கு விளக்கம் சொல்லும்போது விடுதலைப் பயண நூலிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். வானதூதர்கள், ஆவிகள் போன்றவற்றின் மேல் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இறந்தோர் உயிர்த்தெழுதல் மற்றும் இறப்புக்குப் பின்னர் வாழ்வு ஆகியவற்றை இவர்கள் மறுத்தனர்.

இவர்கள் எழுப்பும் கேள்வி, 'லேவிரேட் திருமணம்' என்னும் பின்புலத்தில் உள்ளது. லேவிரேட் திருமண முறைப்படி, கணவர் ஒருவர் தன் மனைவிக்கு மகப்பேறு அளிக்காமல் இறந்துவிடுவார் எனில், அவருடைய தம்பி அப்பெண்ணை மணந்து மகப்பேறு அளிக்கலாம். அப்படி அளிக்கும் மகப்பேறு இறந்த கணவருக்குரிய மகப்பேறு என்று கருதப்படும். ஆண்கள் விதையிடுபவர்கள், பெண்கள் விதையேற்பவர்கள் என்றும், ஆண்களின் வாரிசு காப்பாற்றப்பட வேண்டும் என்றும், குழந்தைப் பேறு என்பது இறைவனின் ஆசி என்பதால் எப்படியாவது இறையாசியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிலவிய அன்றைய சிந்தனைச் சூழலை இத்திருமணம் குறித்துக்காட்டுகிறது. 

இயேசு எப்படி விடையளிக்கின்றார்?

(அ) திருமணம் செய்துகொள்வதில்லை

திருமணம் செய்துகொள்தல் என்பது வாரிசு உருவாக்கத்திற்கே. யாரும் இறப்பதில்லை என்ற நிலை வந்தவுடன் வாரிசு எதற்கு? குழந்தை எதற்கு? எனக் கேட்கின்றார் இயேசு. ஆக, இறப்புக்குப் பின்னர் உள்ள வாழ்வு நீடித்த வாழ்வு. மறுபடியும் இறப்பு என்பது அங்கே இல்லை.

(ஆ) வானதூதரைப் போல இருப்பார்கள்

அதாவது, ஆண்-பெண் என்னும் பாலின வேறுபாடு களையப்படும். திருமணம் இருக்கும் வரை ஆண்-பெண் வேறுபாடு இருக்கும். அல்லது ஆண்-பெண் வேறுபாடே திருமண உறவுக்கு வழி செய்கிறது.

(இ) கடவுளின் மக்களே

அவர்கள் கடவுளின் வாரிசுகளாக இருப்பார்கள். நிரந்தரத்தில் இருப்பார்கள். என்றும் வாழ்வார்கள். ஏனெனில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற குலமுதுவர்கள் இறந்தாலும், அவர்கள் கடவுளில் வாழ்கின்றனர். அவர் வாழ்வோரின் கடவுள்.

மேற்காணும் கேள்வி-பதில் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

இறப்பு என்ற எதார்த்தம்தான் நம் வாழ்வுக்குப் பொருள் தருகிறது. இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் நாம் வாழ்க்கையை பொருளுடனும், வேகமாகவும், நன்றாகவும் வாழ முயற்சி செய்கின்றோம். இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு நமக்கு எதிர்நோக்கைத் தருகிறது. எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகிறது என்றால், யாரும் எதற்கும் முயற்சி செய்ய மாட்டார்கள். கல்லறையையும் தாண்டிய வாழ்வு ஒன்று உள்ளது என்பதே நம்மைப் புதிய முயற்சிகளுக்கும், மதிப்பீடுநிறை வாழ்வுக்கும் உந்தித் தள்ளுகிறது. வாழும் கடவுளின் மக்களாக இருக்கும் நாம் வாழ்வுக்குரிய காரணிகளை என்றும் தழுவிக்கொள்ள முன்வர வேண்டும்.


Thursday, November 17, 2022

பேதுரு, பவுல் பேராலயங்கள் நேர்ந்தளிப்பு

இன்றைய (18 நவம்பர் 2022) திருநாள்

பேதுரு, பவுல் பேராலயங்கள் நேர்ந்தளிப்பு

இந்த மாதம் 9ஆம் தேதி அன்று, புனித யோவான் லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளைக் கொண்டாடினோம். 

உரோமை நகரின் முதன்மையான பேராலயங்கள் நான்கு: புனித பேதுரு, புனித பவுல், புனித யோவான் லாத்தரன், மற்றும் புனித மரியன்னை. 

புனித பேதுரு மற்றும் புனித பவுல் பேராலயங்களின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். புனித பேதுரு பேராலயம் உரோமை நகரில் உள்ள வத்திக்கானின் நடுவிலும், புனித பவுல் பேராலயம் உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியேயும் அமைந்துள்ளன. இரண்டு பேராலயங்களின் கட்டிடக்கலை அமைப்பும் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகின்றன. 

புனித பேதுரு பேராலயத்தில் மைக்கேல் ஆஞ்சலோ அவர்கள் தன் கையொப்பமிட்ட ஒரே சிற்பம் என்றழைக்கப்படுகின்ற 'பியத்தா' சிற்பம் உள்ளது. புனித பவுல் பேரலாயத்தில், நாம் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் அந்தப் பக்கம் திரும்புவது போல வரையப்பட்டுள்ள அன்னை கன்னி மரியாளின் விண்ணேற்பு ஓவியம் அமைந்துள்ளது.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 28:11-16,30-31), பவுல் உரோமையை அடைந்த நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. பவுல் உரோமை நகரை அடைந்தவுடன் திருத்தூதர் பணிகள் நூல் முடிந்துவிடுகிறது. ஏனெனில், அன்றைய நாளில் உரோமைதான் உலகின் கடை எல்லை எனக் கருதப்பட்டது. 'பவுல் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார்' என்ற வாக்கியம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. வாடகை வீட்டிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி, சொந்த வீட்டிற்கு நகரும் மனிதர்கள் நடுவில், இயேசுவுக்காகத் தன் சொந்த வீட்டை விட்டு, இறுதியில் வாடகை வீட்டிற்குள் குடிபுகுகின்றார் பவுல். அவரின் வாடகை வீடான உரோமை அவரது இறுதியான சொந்த வீடாக மாறியது கடவுளின் அருள்கொடை அல்லது கடவுளின் அழைப்பே. நற்செய்திக்காகப் பவுல் கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த நீண்ட நெடிய பயணம். தர்சு நகரத்திலிருந்து புறப்பட்ட அவருடைய கால்கள் உரோமையை அடைகின்றார்.

புனித பவுல் பேரலாயம் தரும் செய்தி இதுதான்: 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' (சஉ 8:7). திருஅவையை எதிர்ப்பவராகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாலும், திருஅவையின் தூணாகத் தன் வாழ்க்கையை முடிக்கிறார். நம் வாழ்வின் பயணங்களின் தொடக்கம் தாழ்வாக இருந்தாலும், பிறழ்வாக இருந்தாலும் வருத்தம் வேண்டாம். தொடர்ந்து நாம் கிளைகள் பரப்பிக் கொண்டே இருந்தால் நலம். நம் கிளைகளை அரவணைத்துக்கொள்ள அவர் இருக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 14:22-33), பேதுரு கடலின் மேல் நடக்கும் முயற்சியைப் பார்க்கின்றோம். நீந்தத் தெரிந்த அவர், தன் இயேசுவுக்காக அந்தத் திறனை இழக்க முன்வருகின்றார். தன் தலைவரால் அள்ளப்படுவதற்காக தானே அமிழ்ந்து போகின்றார். தன் ஆண்டவரால் கடிந்துகொள்ளப்படுவதற்காகத் தானே தவறி விழுகின்றார். 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்ற அவருடைய வார்த்தைகள் பயத்தில் எழுந்தவை போல தெரிந்தாலும், 'எங்க! காப்பாத்துங்க பார்ப்போம்!' என்று உரிமையுடன் ஆண்டவரோடு விளையாடுகிறார் பேதுரு. கொஞ்சம் கடிந்துகொள்கின்ற இயேசு அவரை அள்ளித் தூக்குகின்றார். 

கடவுளுக்காக நம் திறன்களை வீணாக்குவது நன்று என்று கற்றுத் தருகிறார் பேதுரு. புனித பேதுருவின் பேரலாயத்திற்குள் நுழையும் ஒவ்வொரு பொழுதும், கத்தோலிக்க நம்பிக்கை என்னும் தாயின் கருவறைக்குள் நுழைந்து வெளிவருவது போன்ற உணர்வு என்னில் எழுவதுண்டு.

பேதுருவும் பவுலும் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள்.

அவர்களின் பேரலாயங்கள் இயேசுவோடு நம்மை இணைக்கும் தொப்புள் கொடிகள்.

Wednesday, November 16, 2022

கண்ணீர்விடும் கடவுள்

இன்றைய (16 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 19:41-44)

கண்ணீர்விடும் கடவுள்

இயேசு அழுததாக அல்லது கண்ணீர் வடித்ததாக இரண்டாம் ஏற்பாடு மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றது. முதலில், பெத்தானியாவில் லாசரின் கல்லறைக்கு அருகில் வருகின்ற இயேசு அழுகின்றார் (காண். யோவா 11:35). தன் நண்பன் லாசருக்காக மட்டும் அவர் இங்கே அழவில்லை. மாறாக, மனுக்குலம் இறப்பு என்ற ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எண்ணி, இறப்பு ஒரு குடும்பத்திலும் ஊரிலும் ஏற்படுத்தும் இழப்பை எண்ணி அழுகின்றார். இரண்டாவதாக, கெத்சமேனித் தோட்டத்தில் இறுதி இராவுணவுக்குப் பின்னர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவர் கண்ணீர் விட்டு இறைவேண்டல் செய்ததாகவும், அந்த இறைவேண்டலைக் கடவுள் கேட்டார் என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் பதிவு செய்கின்றார் (காண். எபி 5:7-9).

இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கண்ணீர் வடிக்கும் நிகழ்வு. 'இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா (19:41). மேலும், எருசலேம் நகர் விரைவில் இடிபடும் என்றும் முன்னுரைக்கின்றார். இதை இயேசுவே இறைவாக்காக உரைத்தார் என்றும், அல்லது லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தி எழுதப்படும்போது நடக்கின்ற எருசலேம் அழிவைக் கண்ணுற்று, அதை இயேசுவே முன்னுரைத்தார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

எருசலேம் இரு தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு: ஒன்று, 'அமைதிக்குரிய வழியை எருசலேம் அறியவில்லை.' 'அமைதிக்குரிய வழி' என்பது இயேசுவையே குறிக்கிறது. இயேசுவின் பணி கலிலேயாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு யூதேயாவிலும் அதன் தலைநகரான எருசலேமிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. அவரை அழிப்பதற்கான வழியை எருசலேம் தேடிக்கொண்டிருந்தது. இரண்டு, 'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை.' கடவுள் தேடி வந்த அருளின் காலம் இயேசு கிறிஸ்துவில்தான் வெளிப்படுகிறது. ஏனெனில், 'ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும்' (காண். லூக் 4) என்று இயேசு நாசரேத்தூர் தொழுகைக்கூடத்தில் போதிக்கின்றார்.

இயேசுவின் இந்த அழுகை நமக்கு உணர்த்துவது என்ன?

(அ) இயலாமை

இயேசுவின் கண்ணீர் அவருடைய இயலாமை மற்றும் கையறுநிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. இறந்த ஒருவருக்கு அருகில் அமர்ந்து நாம் அழுகிறோம். எதற்காக? அவருடைய இழப்பை எண்ணி அழுகிறோம். ஆனால், அதற்கும் மேலாக, 'என்னால் உனக்கு ஒன்றும் செய்ய இயலவில்லையே! நான் உயிரோடிருக்க, நீ மட்டும் இறந்துவிட்டதேன்! என் உயிரை உனக்கு நான் கடனாகக் கொடுக்க இயலாதா?' என்ற இயலாமையில்தான் நாம் அழுகிறோம். இயேசு தன் பணிவாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டார். அவரை ஏற்றுக்கொள்ளாத எருசலேம் இறந்துவிட்டது. இதற்குமேல் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இயேசு அழுகின்றார்.

(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு

குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தன் கணவரின் அலங்கோலமான நிலை காண்கின்ற மனைவி அழுகிறார். குழந்தைகளும் இணைந்து அவரோடு அழுகின்றன. இந்தக் கண்ணீரின் நோக்கம் மனமாற்றம். மனைவி மற்றும் குழந்தைகளின் கண்ணீரைப் பார்த்தாவது, குடிக்கின்ற நபர் திருந்த மாட்டாரா? என்ற எண்ணத்தில் கன்னத்தில் வடியும் கண்ணீர்த் துளிகள் இவை. ஆனால், பல நேரங்களில் இக்கண்ணீரைப் போலவே மனமாற்றத்திற்கான எண்ணமும் விரைவில் காய்ந்துவிடுகிறது.

(இ) எச்சரிக்கை

சில நேரங்களில் நம் கண்ணீர் மற்றவர்களை எச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, வன்மத்துக்கு உள்ளான ஒருவர் தனக்கு மற்றவர் இழைத்த தீமையை எண்ணி அழுகிறார். அவருடைய கண்ணீர், தீமையை இழைத்த மற்றவருக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. 'நீயும் இதைப் போல அழுவாய்!' என்று தனக்கு அநீதி இழைத்தவரைக் கண்ணீர் எச்சரிக்கிறது.

நமக்காகக் கண்ணீர் வடிக்கும் கடவுள் நம் அருகில் இருக்கிறார். 

எருசலேம் போல நாமும் அமைதிக்குரிய வழியை அறியவில்லை என்றால், கடவுள் நம்மைத் தேடி வரும் காலத்தை நாம் அறியவில்லை என்றால், இயேசு இன்று நம்மையும் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றார்.


Tuesday, November 15, 2022

உமது மினா

இன்றைய (16 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 19:11-28)

உமது மினா

மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் தாலந்து எடுத்துக்காட்டைத் தழுவியது போல இன்றைய நற்செய்திப் பகுதி இருந்தாலும், மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு: (அ) மத்தேயு நற்செய்தியாளர், 'தாலந்து' கொடுக்கப்பட்டதாக எழுதுகிறார். லூக்கா, அதை, 'மினா' என்று குறிப்பிடுகின்றார். மினா தாலந்தை விட மதிப்பு குறைவானது. (ஆ) மத்தேயு நற்செய்தியாளர் ஐந்து, இரண்டு, ஒன்று வெள்வேறு அளவில் தாலந்துகளைக் கொடுக்கின்றார். லூக்கா நற்செய்தியில், பத்து பேர், ஆளுக்கு ஒரு மினா வழங்கப்பட்டதாகக் காண்கிறோம். (இ) மத்தேயு நற்செய்தியில் வீட்டுத் தலைவர் நெடுந்தொலைவு பயணம் செய்கின்றார். லூக்கா நற்செய்தியில் அவர் அரசுரிமை பெறுவதற்காகச் செல்கின்றார். (ஈ) தாலந்துகளைப் பணியாளர்களுக்குக் கொடுக்கின்ற தலைவர் அவர்களுக்கு எந்தவொரு அறிவுரையும் சொல்வதில்லை. ஆனால், மினாக்களைக் கொடுக்கின்ற தலைவர், அவற்றை வைத்து வாணிபம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். (உ) லூக்கா நற்செய்தியில் மூன்று பேரிடம் மட்டுமே கணக்குக் கேட்கப்படுகின்றது. (ஊ) மூன்றாவது பணியாளர் மத்தேயு நற்செய்தியின்படி, தாலந்தை மண்ணில் புதைக்கின்றார். லூக்கா நற்செய்தியின்படி, மினாவை கைக்குட்டையில் முடிந்து வைக்கிறார் பணியாளர். (எ) மத்தேயு நற்செய்தியில் தலைவர் நல்ல பணியாளர்களை வெறும் சொற்களால் பாராட்டுகின்றார். லூக்கா நற்செய்தியில் அவர்களை வாழ்த்துவதோடல்லாமல் உடனடியாக அவர்களை நகரங்களுக்கு மேற்பார்வையாளர் ஆக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கின்ற மூன்றாவது பணியாளர், 'இதோ! உமது மினா!' என்று தன் தலைவரிடம் ஒப்படைக்கின்றார்.

இவர் செய்த தவறு என்ன?

(அ) தலைவரைப் பற்றிய புரிதலைச் செயல்படுத்தாமல் இருக்கின்றார்.

தன் தலைவர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிந்துள்ளார் பணியாளர். ஆனால், அறிதலுக்கேற்ற செயல்பாடு அவரிடம் இல்லை. எடுத்துக்காட்டாக, சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை எடுத்தல் கூடாது என்பது அறிதல். அறிதலுக்கு ஏற்ற செயல்பாடு இருந்தால்தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிதல் மட்டும் அல்லாமல் செயலும் இணைந்து நிற்றல் வேண்டும்.

(ஆ) எளிதானதைச் செய்கின்றார்.

எளிதானதைச் செய்யலாம், அல்லது சரியானதைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, காலையில் நான் எழுந்து உடற்பயிற்சி செய்தால் என் உடல்நலத்துக்கு உகந்தது என உணர்கிறேன். ஆனால், காலையில் மணி அடித்தவுடன் நான் எழாமல் தொடர்ந்து உறங்குகிறேன். அப்படிச் செய்யும்போது நான் எளிதானதைச் செய்கிறேனே அன்றி, சரியானதைச் செய்யவில்லை. மினாவைக் கைக்குட்டையில் முடிந்துகொள்வது எளிது. வியாபாரத்தில் முதலீடு செய்வது சரியானது. அந்த நபர் எளிதானதைச் செய்யவே விரும்புகிறார்.

(இ) புதிய முயற்சிகள் பற்றிய அச்சம்.

வியாபாரத்தில் மினாவை இழந்துவிடக் கூடும் எனப் பயப்படுகின்றார் பணியாளர். ஆனால், அதற்கு மாற்றாக வட்டிக்கடை இருப்பதை அவர் மறந்துவிடுகின்றார். யோசிக்கும்போது புதிய முயற்சிகளும், முயற்சிகளுக்கான வழிகளும் பிறக்கவே செய்யும். நம் கதைமாந்தர் கொண்டிருந்த அச்சம் புதிய முயற்சிகளை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது.

லூக்கா நற்செய்தியில், இறையாட்சிக்கான நேரடியான உவமையாக இது இல்லை என்றாலும், சீடர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கின்ற பாடமாக இது இருக்கிறது.  

ஆண்டவராகிய கடவுள் என்னும் நம் தலைவர் பற்றிய நம் புரிதல் என்ன? நான் எளிதானதையே செய்ய விழைகிறேனா? சீடத்துவத்தில் நான் எடுக்கும் புதிய முயற்சிகள் எவை?

Monday, November 14, 2022

சக்கேயு

இன்றைய (15 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 19:1-10)

சக்கேயு

கதைமாந்தர்களை பெயர் சொல்லி அறிமுகம் செய்வதைவிட அவர்களின் உடல், மனப் பண்புகளைச் சொல்லி அறிமுகம் செய்வது லூக்காவின் இலக்கியத்திறத்திற்கு ஒரு சான்று.

'சக்கேயு பார்க்க விரும்பினார்,' 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' என்ற இரண்டு சொல்லாடல்கள் வழியாக சக்கேயு என்னும் கதைமாந்தரை நாளைய நற்செய்தி வாசகப் பகுதியில் அறிமுகம் செய்கிறார் லூக்கா. சக்கேயுவின் விருப்பத்திற்கு முதல் தடையாக இருந்தது அவரின் உடல் அமைப்பு என்பதால் இரண்டையும் ஒரே தொனியில் சொல்கின்றார் லூக்கா.

'சக்கேயு' என்ற பெயர் எந்த வார்த்தையிலிருந்து வந்தது என்று ஆராயும்போது, அறிஞர்கள் இரு வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றனர்: 'சக்கார் யாவே' ('கடவுள் நினைத்தார்' அல்லது 'கடவுளை நினைப்பது'), 'சக்கா யாவே' ('கடவுள் மட்டும்' அல்லது 'கடவுளின் தூய்மை'). இரண்டு வார்த்தைகளுமே சக்கேயுவுக்குப் பொருந்துவதாக இருக்கிறது: 'கடவுள் நினைத்தார்' - ஆகையால்தான், சக்கேயு ஏறி நின்ற மரத்திற்கு அருகில் வருகின்ற இயேசு, அண்ணாந்து பார்த்து, 'விரைவில் இறங்கி வா, உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்கிறார்.

மற்ற வீடுகளுக்கு (மார்த்தா-மரியா, பரிசேயர், தொழுநோயாளர் சீமோன்) உணவருந்தச் செல்லும் இயேசு இங்கே தங்கச் செல்கின்றார். இதைக் கூர்ந்து கவனித்தால் சக்கேயுவின் செயல்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு தங்குவதற்குத் தடையாக இருந்தவை சக்கேயுவின் வீட்டுப் பொருள்கள். அதாவது, 'கடவுள் மட்டுமே' எனப் பெயர் கொண்டிருந்த ஒருவர், 'கடவுளோடு சேர்த்து மற்றவற்றையும் வைத்திருந்தார்.' ஆகையால்தான், கடவுள் வந்தவுடன் மற்றவற்றைக் கழிக்கின்றார்: 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.' 

இயேசுவும், 'இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் மீட்பு என்பது பொருளாதார வழக்கில் பிணைத்தொகை. வீட்டில் உள்ள பாதிச் சொத்து போனவுடன் இயேசு 'மீட்பு' வந்துவிட்டது என்கிறார். பகிர்தலும், சுரண்டல் அகற்றுதலும்தான் மீட்பு என உணர்த்துகின்றார் இயேசு.

'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் தத்துவத்தின் மொழி. சக்கேயு தயாராக இருக்கும்போது இயேசு என்னும் நட்சத்திரம் தோன்றுகிறார். சக்கேயு நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஓர் இனம் புரியாத சோகமும் வேகமும் இழைந்தோடுவதை நம்மால் காண முடிகிறது. 

(அ) சக்கேயுவின் சோகம்

சக்கேயு மூன்று நிலைகளில் சோகமாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, வாழ்வியல் வெற்றிடம். சக்கேயுவிடம் பணம், அதிகாரம், ஆள்பலம் நிறைய இருந்தது. ஆனால், அவை எதுவும் அவருக்கு நிறைவு தரவில்லை. அவர் யூதர்களிடமிருந்து பணத்தை எடுத்து உரோமையர்களிடம் கொடுத்ததால் அவருடைய இனத்தாரே அவரை வெறுத்து அவரிடமிருந்து தள்ளி நின்றிருப்பர். ஆக, உறவுநிலையும் அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்திருக்கும். இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். தன் வெற்றிடத்தை இயேசு நிரப்ப மாட்டாரா என நினைத்து அவரைக் காண ஏக்கமாயிருக்கின்றார்.

இரண்டு, சக்கேயுவின் குறைபாடுகள். 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. இதை அவருடைய ஒட்டுமொத்தக் குறைபாடுகளின் உருவகம் என எடுத்துக்கொள்ளலாம். உடலளவில் குட்டையாக இருக்கின்றார். தன் கோபம், எரிச்சல், அநீதியான எண்ணம் போன்றவற்றால் உள்ளத்தாலும் குட்டையாக இருந்திருப்பார்.

மூன்று, மக்களின் கேலிப் பேச்சுகள். அவருடைய பணியும் அவருக்குக் கடினமாகவே இருந்திருக்க வேண்டும். யாரும் தாங்கள் உழைத்த பொருளை வரியாகத் தானம் செய்வதில்லை. வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே மக்கள் முயற்சி செய்வர். ஆக, அவர்களின் பொய்யைக் கண்டுபிடித்து, அவர்களைத் துன்புறுத்தி, அச்சுறுத்தி வரி வசூலிக்க அவர் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். இவரைப் பாவி என மக்கள் முத்திரை குத்தினர். ஆலயத்திலும், தொழுகைக்கூடங்களிலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். மேலும், உரோமை அரசும் நிறைய அச்சுறுத்தல்களை அவருக்குக் கொடுத்திருக்கும்.

இவ்வாறாக, உள்ளத்தில் வெற்றிடம், உடல் மற்றும் உறவுநிலைகளில் குறைபாடு, மக்களின் கேலிப் பேச்சுகள், கடவுளிடமிருந்து அந்நியப்பட்ட மனநிலை என சோகத்தில் மூழ்கியிருந்த சக்கேயு, தான் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற முடிவெடுக்கின்றார். முடிவெடுக்கின்ற அந்த நொடியில் மாற்றம் நிகழ்கிறது. 

(ஆ) சக்கேயுவின் வேகம்

முடிவெடுத்தவுடன் விரைவாகச் செயல்படுகின்றார். இயேசுவைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் வாழ்வா – சாவா என்பது போல அவரை விரட்டுகிறது. பார்க்க விரும்பும் ஆவல். ஆனால், அடுத்தடுத்த தடைகள். கூட்டம் பெரிய தடையாக இருக்கிறது. உடலளவிலும் அது தடையாக மாறுகிறது. உளவியல் அளவிலும் தடையாக மாறுகிறது. ஆக, தான் தனியே மரத்தில் ஏற முயற்சிக்கின்றார். வயது வந்த ஒருவர் மரத்தில் ஏறுவதை நம் சமூகம் கேலியாகவே பார்க்கும். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தன் உள்ளத்தின் சோகம் இந்தக் கேலியைவிடப் பெரியதாக இருந்ததால், அது அகல்வதற்கு எப்படியாவது ஒரு வழி பிறக்காதா என விரைவாக ஏறுகின்றார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன் அண்ணாந்து பார்க்கிறார். குனிந்து பார்ப்பதுதான் கடவுளின் இயல்பு. ஆனால், இங்கே கடவுள் அண்ணாந்து பார்க்கின்றார். ஒரு நொடி, இங்கே சக்கேயு கடவுளாக மாறுகின்றார். கீழே இயேசு நிற்பதைக் காண்கின்றார். கடவுளுக்கு மேலே நிற்பது நல்லதன்று என்று இறங்கி வருகிறார். 'உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று இயேசு சொன்னபோது சக்கேயுவின் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும்!

அந்த மகிழ்ச்சியில் அவர் மீண்டும் எழுந்து நிற்கின்றார். தன் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும், எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கவும் உறுதி ஏற்கின்றார். தன் வாழ்வின் தேடல் நிறைவுபெற்றதாக உணர்கிறார். இயேசுவைக் கண்டவுடன் தன் வாழ்வு முடிந்துவிட்டதாகவும், இனி தனக்கு எதுவும் தேவையில்லை என்றும் நினைக்கிறார் சக்கேயு.

'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார் இயேசு.

ஆக, மீட்பு என்பது மறுவுலகில், நாம் இறந்த பின்னர் நடக்கும் நிகழ்வு அல்ல. மாறாக, இன்றே இப்பொழுதே நாம் அதை அனுபவிக்க முடியும்.

'இழந்து போனதைத் தேடி மீட்க மானிட மகன் வந்திருக்கிறார்' என்று இயேசு தன் வருகையின் நோக்கத்தையும் முன்வைக்கின்றார்.

மற்றவர்களைப் பொருத்தவரையில் சக்கேயு தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்தார். ஆனால், சக்கேயுவைப் பொருத்தவரையில் அவர் தன் இழத்தலில்தான் அனைத்தையும் பெற்றார்.

நம் வாழ்வின் சோகமும் வேகமும் இறைவனை எதிர்கொள்ளும் நேரங்கள்.

சோகம் நம் உள்ளத்தை நிரப்பினால் வேகம் குறைக்க வேண்டாம். வேகம் கூட்டுதல் சோகத்தைக் களைக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (திவெ 3), யோவான் தன் திருவெளிப்பாட்டு நூலை திருஅவைகளுக்கு எழுதும் முன்னுரைப் பகுதியை வாசிக்கின்றோம். இலவோதிக்கிய திருஅவை குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. அதன் வெதுவெதுப்பான தன்மை கடவுளுக்கு ஏற்புடையதாக இல்லை. சக்கேயு வெதுவெதுப்பாக இருக்க விரும்பவில்லை. 

தனக்குச் செல்வமும் வளமையும் இருந்தாலும், தன் ஆடையற்ற நிலையை உணர்ந்த சக்கேயு இயேசுவை அணிந்துகொள்கின்றார்.



Sunday, November 13, 2022

இது என்ன?

இன்றைய (14 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 18:35-43)

இது என்ன?

'பார்வையற்ற ஒருவர் பார்வை பெறும் நிகழ்வை' நாம் ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா என்னும் மூன்று நற்செய்தி நூல்களிலும் வாசிக்கின்றோம். மூன்று இடங்களிலும் இயேசு எருசலேம் நகருக்கு அருகில் இருக்கும்போதுதான் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அறிகுறி அல்லது வல்ல செயலை நாம் ஓர் உருவகம் அல்லது உவமை என எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், முன்பின் தெரியாத பார்வையற்ற ஒருவர் இயேசுவை, 'தாவீதின் மகன்' எனக் கண்டுகொண்டு அறிக்கையிடுகின்றார். ஆனால், இயேசுவுக்கு அருகில் இருக்கின்ற சீடர்கள் அவரைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த பார்வையற்ற அந்த இனியவர், 'இது என்ன?' என்று கேட்கின்றார்.'

இந்தக் கேள்வி அவரது வாழ்வின் போக்கையே மாற்றிப் போடுகின்றது. இனி அவர் இரந்து உண்ணத் தேவையில்லை. இனி அவரை யாரும் அதட்ட மாட்டார்கள்.

கிரேக்கத்தில், 'ட்டி எய்யே டூட்டோ?' ('இது என்னவாய் இருக்கிறது?' அல்லது 'இது என்னவாய் இருந்தது?') என்பதுதான் இந்தக் கேள்வியின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

இதுவரை அவர் கேள்வியுறாத ஒரு நிகழ்வு தன் முன் நடந்ததாக அவர் உணர்ந்திருக்கலாம்.

அல்லது தன் உள்ளுணர்வால் அவர் உந்தப்பட்டிருக்கலாம்.

அல்லது காத்திருந்த தன் காதலன் தன்னைக் கடந்து சென்ற காதலியைத் தன் உள்ளத்தில் உணர்ந்திருக்கலாம்.

அல்லது வெற்றுப் பாத்திரம் ஏந்திக் கொண்டிருந்த ஒருவன் தன்னைக் கடந்து ஓர் அட்சய பாத்திரம் கடந்து செல்வதைத் தன் மனத்தில் உணர்ந்திருக்கலாம்.

அல்லது தன்னைப் படைத்தவர் தன் படைப்புப் பொருளைக் கண்டுகொள்ளாமல் கடந்து போகிறார் என அவர் நினைத்திருக்கலாம்.

ஆனால், கடந்து போகிறார் கடவுள். கடந்து போகிறது கூட்டம்.

நிற்கின்றார் அவர். பார்வையற்ற நபர்.

ஒரே நொடியில் ஒரு முடிவை எடுக்கின்றார்.

'இது என்ன?' என்று கேட்கின்றார்.

இந்தக் கேள்வியை அவர் கேட்டவுடன், கேட்கப்பட்டவர்கள் தயங்கியிருப்பார்கள்.

'டேய்! நீ ஏன் கேள்வி கேட்கிறாய்?' 'எது நடந்தால் உனக்கென்ன!' என்ற நிலையில் அவரை அதட்டியிருப்பார்கள்.

'இது என்ன?'

இந்தக் கேள்வி நமக்கு இரண்டு நிலைகளில் எழலாம்:

ஒன்று, ஏதாவது ஒன்றைக் குறித்து நமக்குத் தெளிவில்லாத போது இந்தக் கேள்வி எழலாம். 

இரண்டு, 'இதுவரை எனக்கு நடந்தது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், இது என்ன?' என்ற ஓர் ஆச்சரியத்தில் எழலாம்.

இந்தக் கேள்வியை நாம் கேட்கும்போது பலர் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், இங்கே காணும் கூட்டம், ஒரே வேளையில் படிக்கல்லாகவும் தடைக்கல்லாகவும் இருக்கின்றது.

'நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார்' என்று சொல்கிறார்கள். இந்தச் செய்த அந்த நபருக்கு உதவியாக இருந்திருக்கும்.

ஆனால், 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' என்று அவர் கத்தியபோது, அவரை அதட்டுகின்றனர். 

நாம் கேள்வி கேட்கும்போது மற்றவர்கள் நமக்கு விடையளிக்கலாம், அல்லது விடையளிப்பது போல விடையைத் தவிர்க்கலாம், ஆனால், விடையை அளிக்க மறுக்கலாம்.

ஆனாலும், 'இது என்ன?' என்ற தேடல் இருந்தால் விடை கண்டிப்பாய்க் கிடக்கும்.

மேலும், இயேசு அவரிடம், 'நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' எனக் கேட்டவுடன், 'ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்கிறார்.

இரண்டு விடயங்கள் இங்கே நமக்கு ஆச்சரியம் தருகின்றன.

முதலில், தனக்கு எது தேவை என்ன என்பதை அவர் அறிந்தவராக இருக்கிறார். இன்று எனக்கு எது தேவை என்பது எனக்குத் தெளிவாக இருக்கிறதா? கடவுளிடம் இறைவேண்டல் செய்கின்றோம். நம் விண்ணப்பங்களில் தெளிவு இருக்கிறதா? அல்லது சாதாரண மொழிப் பரிமாற்றங்களில், எனக்கு எதை தேவை என்பதை நான் உணர்கின்றேனா?

இரண்டு, 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்கிறார் அந்த நபர். அவர் ஏற்கெனவே பார்வை பெற்றிருந்தவர் என்பது சிலரின் கருத்து. ஆனால். இயேசுவைத் தாவீதின் மகன் எனத் தன் மனக்கண்களால் கண்டுகொண்டது முதல் பார்வை. இப்போது அவரைத் தன் உடற்கண்களால் பார்க்க விரும்புகிறார். முதல் பார்வை தெளிவானால் இரண்டாவது பார்வை மிகவும் எளிதாகும்.

நிற்க.

இன்று, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது, நம்மைச் சுற்றி மக்கள் கடந்து போகும்போது, 'இது என்ன?' என்று கேட்போம். இந்த ஒற்றைக் கேள்வி நம் கடந்தகால வாழ்க்கையை மாற்றிவிடும். புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும்.

'இது என்ன?' என்ற கேள்வி அடுத்தவர்களின் அந்தரங்கத்தை ஆராய்வதற்கு நாம் எழுப்ப வேண்டாம். என் அந்தரங்கத்தில் அது எழ வேண்டும். அடுத்தவர்களைக் கடிந்துகொள்வதற்காக அல்ல, என்னை நானே கடிந்துகொள்வதற்காக எழ வேண்டும்.

Saturday, November 12, 2022

வாழ்வின் மறுபக்கம்

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

I. மலாக்கி 4:1-2 II. 2 தெசலோனிக்கர் 3:7-12 III. லூக்கா 21:5-19

வாழ்வின் மறுபக்கம்

சில ஆண்டுகளுக்கு முன் கவிதை ஒன்றை வாசித்தேன். கவிதையின் தலைப்பு 'மற்றும்.' அதை ஒரு டைரியில் குறிப்பும் எடுத்தேன். அந்த வரிகள் இவை:

'நாம் அனேகமாய்ப்

பார்ப்பதில்லை - பார்த்ததில்லை

ஒரு சருகு இலையின் பின்புறத்தை

ஒரு மரப்பாச்சியின் பின்புறத்தை

ஒரு மலையின் பின்புறத்தை

ஒரு சூரியனின் பின்புறத்தை

மற்றும் 

நம்முடையதை'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பள்ளத்தாக்கின் அந்தப் பக்கத்திலிருந்து எருசலேம் ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும் அவர்களோடு சேர்ந்து கோவிலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்: 'என்னே கோவிலின் அழகு! என்னே கவின்மிகு கற்கள்! என்னே அழகு!' இயேசுவின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழ, அவர் உடனே திரும்பிப் பார்த்து, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்' என்கிறார்.

இது எப்படி இருக்கு தெரியுமா?

நம்ம வீட்டுல உள்ள ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு. அந்தக் குழந்தையைப் பார்க்க குடும்பத்தாரோடு நாம் செல்கிறோம். குழந்தையின் சிரிப்பு, நிறம், அழகு, மென்மை, முக அமைப்பு ஆகியவற்றை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் நேரம், நம்மோடு கூட்டத்தில் வந்திருந்த ஒருவர், 'இந்தக் குழந்தை ஒருநாள் இறந்துபோகும்!' என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அந்த மனிதரை எதிர்மறையாளர் என்றும், கோணல்புத்திக்காரர் என்றும் சாடுவதோடு, அவருடைய இருப்பை நாம் உடனே தவிர்க்க முயற்சிப்போம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் தவறில்லையே. பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்கத்தானே வேண்டும்!

'இந்தக் கோவில் இடிபடும்!' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'இந்தக் குழந்தை இறந்து போகும்' என்று அந்த நபர் சொன்ன போது ஏற்பட்ட அதிர்வையே இயேசுவின் சமகாலத்தவர்நடுவே ஏற்படுத்தியிருக்கும்.

நம்மிடம் ஒரு நாணயம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த நாணயத்தைக் கஷ்டப்பட்டு இரண்டாக உடைத்துவிடுகிறோம். அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றோம். நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் அருகருகே வைத்து பண்டமாற்றம் செய்ய முயல்கின்றோம். கடைக்காரர் நாணயத்தைச் செல்லாக்காசு என்கிறார். நாணயம் இரண்டு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டாலும் செல்கின்ற நாணயம் தங்க நாணயத்தைத் தவிர வேறு நாணயங்கள் இல்லை.

நாணயங்களின் மறுபக்கம் ஒருபக்கத்தோடு ஒட்டியிருந்தால்தான் நாணயத்திற்கு மதிப்பு.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டுணர அழைக்கின்றது.

இவர்கள் பேசுவதைக் கேட்க நமக்கு நெருடலாக இருக்கும். ஏனெனில், வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதும் நெருடலாகவே இருக்கும். ஆகையால்தான் பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கின்றோம். அல்லது தள்ளி வைக்கின்றோம்.

திருவழிபாட்டு ஆண்டின் ஏறக்குறைய இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். இன்றைய வாசகங்கள் வாழ்வின் முடிவைப் பற்றிப் பேசுகின்றன. வாழ்விற்கு முடிவு கிடையாது. மறுபக்கம்தான் உண்டு.

வாழ்வின் மறுபக்கத்தை எப்படிக் காண்பது?

இன்றைய முதல் வாசகம் (காண். மலா 4:1-2) மலாக்கி இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர்கள் நூலை நிறைவு செய்பவர் மலாக்கி. பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின், புதிய ஆலயம் கட்டப்பட்டதன் பின்புலத்தில், புதிய ஆலயத்தில் நிலவிய சமய சடங்குகளைக் கண்டிக்கின்ற மலாக்கி, வரப்போகும் மெசியா பற்றி முன்னுரைக்கின்றார். அந்த நாளை 'ஆண்டவரின் நாள்' என அழைக்கின்றார். அந்த நாளில் ஆண்டவர் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளித்து அமைதியையும் ஒருங்கியக்கத்தையும் மீண்டும் சரி செய்வார். 

இன்றைய முதல் வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், கடவுள் ஆணவக்காரரை அழிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கிறார் மலாக்கி. நெருப்பு என்ற உருவகத்தைக் கையாளும் இறைவாக்கினர், ஆணவக்காரர் அனைவரும் அந்த நெருப்புக்குள் தூக்கி எறியப்படுவர் என்று எச்சரிக்கின்றார். அவர்கள் வேர்களோடும் கிளைகளோடும் எரிக்கப்படுபவர். அதாவது, அவர்களில் ஒன்றும் மிஞ்சாது. உலகத்தின் முகத்திலிருந்து தீமை முற்றிலும் துடைத்து எடுக்கப்படும். இரண்டாவது பகுதியில், கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள் பெறும் பரிவைப் பற்றிச் சொல்கிறார் இறைவாக்கினர். 'நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் - அதாவது கதிர்களில் - நலம் தரும் மருந்து இருக்கும்.' இவரின் இறைவாக்குப் பகுதி மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரே நெருப்புதான். அது ஒரு பக்கம் ஆணவக்காரருக்கு அழிவாக இருக்கிறது. மறு பக்கம் நீதிமான்களுக்கு நலம் தரும் மருந்தாகவும், நீதியின் ஆதவனாகவும் இருக்கிறது. 

வாழ்வில் எல்லாம் ஒன்றுதான். ஒரு பக்கம் அழிவு என்றால், மறு பக்கம் நலம். ஒரு பக்கம் தீமை என்றால், மறு பக்கம் நன்மை. இரண்டும் அப்படியே இருக்கும். இரண்டையும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 தெச 3:7-12) தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதி அறிவுரைப்பகுதியாக இருக்கிறது. பவுல் தெசலோனிக்காவில் நற்செய்தி அறிவிக்கின்றார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிப் போதிக்கின்றார். அவர் சென்ற சில மாதங்களில் அங்கே வருகின்ற வேறு சிலர் பவுல் அறிவித்த நற்செய்திக்குப் பிறழ்வான நற்செய்தி ஒன்றை அறிவித்து நம்பிக்கையாளர்களின் மனத்தைக் குழப்புகின்றனர். இவர்கள் இறுதிநாள் விரைவில் வருகிறது என்று அறிவித்ததோடு, 'இனி யாரும் வேலை செய்யத் தேவையில்லை. இருப்பதை அமர்ந்துகொண்டு உண்போம். அல்லது இருப்பவர்களிடம் வாங்கி உண்போம்' என்று சொல்லி எல்லாரையும் ஊக்குவிக்கின்றனர். ஆக, எங்கும் சோம்பல் பெருகுகிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றி அல்லது பயமுறுத்தி உண்கின்றனர். 'எல்லாமே அழிந்துவிடும். இனி எதற்கு வேலை செய்ய வேண்டும்?' என்று ஓய்ந்திருக்கின்றனர். 

இதை அறிகின்ற பவுல் இவர்களின் இச்செயலைக் கண்டித்துக் கடிதம் எழுதுகின்றார். முதலில், தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வை அவர்களுக்கு எடுத்தியம்புகின்றார்: 'உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல. மாறாக, எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டினோம்.' ஆக, பவுல், தனக்கு உணவை இலவசமாகப் பெற உரிமை இருந்தும் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்கிறார். இரண்டாவதாக, 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று தான் ஏற்கனவே கொடுத்திருந்த கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். இதன் வழியாக மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், மற்றவர்கள் ஏமாற்றப்படுவதையும் தடுக்கின்றார் பவுல். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்ற வேளையில் ஒழுக்கமான, நேர்மையான வாழ்வை வாழவும் வேண்டும் என்றும், கடின உழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் பவுல்.


ஆக, தங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை - அதாவது, உலக அழிவை - மட்டுமே கண்டு, வாழ்வின் மறுபக்கத்தை - உழைப்பை, அன்றாட வாழ்வின் இன்பத்தை - மறந்து போன தெசலோனிக்க நகர மக்களை வாழ்வின் மறுபக்கத்தையும் காண அழைக்கின்றார் பவுல்.


இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 21:5-19) எருசலேம் அழிவைப் பற்றி லூக்கா இரண்டாவது முறை பேசும் பகுதியாக இருக்கிறது (காண். 19:43-44). எருசலேம் ஆலயத்தின் இறுதி அழிவு கி.பி. 70இல் நடந்தது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவு இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால்தான் என்று முந்தைய பகுதியில் மக்களை எச்சரிக்கிறார் லூக்கா. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில், வரப்போகும் தீங்கை முன்னுரைக்கின்ற இயேசு, அதை எதிர்கொள்ளத் தன் சீடர்களைத் தயாரிக்கின்றார். போலி மெசியாக்கள் தோன்றுவார்கள் என்றும், போர்களும், எதிர்ப்புக்களும், கொந்தளிப்புக்களும், கொள்ளை நோய்களும், பஞ்சமும், துன்புறுத்தல்களும், வருத்தங்களும், மறைசாட்சியப் போராட்டங்களும் வரும் என்றும் எச்சரிக்கின்றார் இயேசு. 

இப்படி எச்சரிக்கின்ற இயேசு, 'நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்' என்றும், 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது' என்றும் நேர்முகமாக நம்பிக்கை தருகின்றார்.

இதுதான் இயேசு காட்டுகின்ற வாழ்வின் மறுபக்கம். வாழ்வின் ஒருபக்கம் துன்பம் என்றால், போராட்டம் என்றால், மறுபக்கம் இன்பம் அல்லது அமைதி உறுதியாக இருக்கும்.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டறிய மூன்று தடைகள் உள்ளன:

1. ஒற்றைமயமாக்கல்

வாழ்க்கை என்ற நாணயத்தை நாம் பல நேரங்களில் வலிந்து பிரிக்க முயல்கின்றோம். பிரித்து ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மற்ற பகுதியைத் தூக்கி எறிய நினைக்கிறோம். நன்மை, ஒளி, நாள் என சிலவற்றை உயர்த்தி, தீமை, இருள், இரவு ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால், இரண்டு பகுதிகளும் இணைந்தே வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும். இதையே சபை உரையாளர், 'வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: 'அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகின்றார்'' (சஉ 7:14). ஆக, வாழ்வின் இருபக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும். ஒரு பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியை விட வேண்டாம். ஏனெனில், சூரியனின் ஒரு பக்கம் ஆணவக்காரரைச் சுட்டெரிக்கிறது என்றால், அதன் மறுபக்கக் கதிர்களில் நேர்மையாளர்களுக்கான நலம் தரும் மருந்து இருக்கும்.

2. அவசரம் அல்லது சோம்பல்

ஒற்றைமயமாக்கலில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை வெறுத்து ஒதுக்குகின்றோம் என்றால், அவசரத்தில் மறுபக்கத்தை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவும் தவறு. எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பதற்காக பிறந்த குழந்தைகளைக் கொல்வது போன்றது அவசரம். எல்லாக் கட்டிடங்களும் ஒருநாள் இடிந்துபோகும் என்பதற்காக எல்லாக் கட்டிடங்களையும் இடிக்க நினைப்பது அவசரம். தெசலோனிக்கத் திருஅவையில் இதே பிரச்சினைதான் இருந்தது. 'கடவுள் வரப் போகிறார், உலகம் முடியப் போகிறது' என்ற அவசரத்தில், ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டுவிட்டு, ஓய்ந்திருந்தனர். அவசரத்துடன் சோம்பலும் வந்துவிடுகிறது. பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை யூகித்துக்கொண்டே விரக்தியும் அடைகிறோம். 'இது இப்படி ஆகுமோ? அது அப்படி ஆகுமோ?' என்னும் வீணான குழப்பங்களும் அவசரத்தின் குழந்தைகளே.

3. பயம்

இதைப் பற்றி இயேசு நற்செய்தி வாசகத்தில் அறிவுறுத்துகின்றார். மனித அல்லது இயற்கைப் பேரழிவுகள் பயத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய உடைமைகள் அல்லது உயிரும் பறிக்கப்படலாம். ஆனால், இந்தப் பயத்தைப் போக்க இயேசு நம்பிக்கையும் எதிர்நோக்கும் தருகின்றார்: 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது!' - ஒருநாள் தைராய்டு மாத்திரை எல்ட்ராக்சினை நிறுத்தினால், ஒருநாள் வேறு தண்ணீரில் குளித்தால், ஒரு நாள் ஷாம்பு மாற்றிப் போட்டால் தலைமுடி கொட்டுகிறது. ஆனால், இயேசு சொல்வது இந்த முடி கொட்டுவதை அல்ல. பயத்தால் ஒரு முடி கூட கொட்டாது. அல்லது பயம் நம் வாழ்வில் ஒரு முடியையும் உதிர்க்க முடியாது. 

வாழ்வின் மறுபக்கத்தை நாம் பார்ப்பதற்குத் தடையாக இருக்கின்ற ஒற்றைமயமாக்கல், அவசரம்-சோம்பல், பயம் ஆகியவற்றை விடுத்தல் அவசியம்! இவற்றை விடுத்தலே ஞானத்தின் முதற்படி! 

இவற்றை விடுக்கும் எவரும், வாழ்வின் இருபக்கங்களையும் கொண்டாட்ட முடியும். அந்தக் கொண்டாட்டத்தில் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்' (திபா 98:5) என்று பாட முடியும்.


Friday, November 11, 2022

இறைவேண்டலும் நம்பிக்கையும்

இன்றைய (12 நவம்பர் 2022) நற்செய்தி (லூக்கா 18:1-8)

இறைவேண்டலும் நம்பிக்கையும்

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொல்கின்றார். இரண்டாம் பகுதியில், 'மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்று தன் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

'மனந்தளராமல்' எப்போதும் இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு ஓர் எடுத்துக்காட்டு தருகின்றார். நகரில் இருந்த கைம்பெண் ஒருவரிடம் கைம்பெண் தனக்கு நீதி வழங்கக் கேட்டுச் செல்கின்றார்.

உவமையில் வரும் நடுவர் கதையின் முரணாக இருக்கின்றார். அதாவது, மற்ற கதைமாந்தர்களின் இருத்தலை நேர்முகமாகக் காட்டுவதற்காக, இந்த நபரை எதிர்மறையாகப் பயன்படுத்துகின்றார் ஆசிரியர். இந்த நபர் தவறான மனப்பாங்கும், பிறழ்வான செயல்பாடும் கொண்டிருக்கின்றார். 'கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் இருப்பதே' இவருடைய மனப்பாங்கு. மேலும், கைம்பெண் ஒருவர் தன்னிடம் நீதி கேட்டு வந்தபோது, நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் இருக்கின்றார். ஆக, இவருடைய செயல்பாடும் பிறழ்வுபட்டதாக இருக்கிறது. 

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் தங்களின் கணவன் சொத்தைப் பெறுவதற்கு வழக்காட வேண்டியிருந்தது. அந்தப் பின்புலத்தில்தான் தனக்கு நீதி கிடைக்க இந்த நடுவரிடம் செல்கின்றார் கைம்பெண்.

இயேசு குறிப்பிடும் நடுவரின் வாழ்க்கை இலக்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது: 'அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை.' வித்தியாசமானதாக இருக்கிறது இது. இப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தால் வாழ்வு எத்தனையோ நலம்! கடவுளுக்கு அஞ்சுவதால் நமக்கு தேவையற்ற குற்றவுணர்வு வருகிறது. மனிதர்களை மதிப்பதால் தேவையற்ற மனப்பாரம் வருகிறது. கடவுளும் தேவையில்லை. மனிதர்களும் தேவையில்லை. நாம் இப்படித்தான் படைக்கப்பட்டோம். ஆனால், காலப்போக்கில் கடவுளும், மனிதர்களும் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பதுபோல வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நிகழ்வுக்கு வருவோம்.

இப்படிப்பட்ட ஒரு தத்துவ ஞானியிடம் மாட்டிக்கொண்ட கைம்பெண் தொடர்ந்து வேண்டுகிறார்.

நாம் ஒரு வேலையை முடிக்க இரண்டு காரணங்கள்தாம் உள்ளன:

அ. கடவுளுக்கு அச்சம்

ஆ. நமக்கு மேல் இருக்கும் மனிதர்களுக்கு மதிப்பு

இந்த இரண்டும் இருப்பதால்தான் நாம் வேலையைக் குறித்த காலத்தில் செய்து முடிக்கிறோம். இந்த நடுவரிடம் இந்த இரண்டும் இல்லை. 'கடவுளுக்கு அஞ்சுபவராக' இருந்தால், 'நீர் செய்வது திருச்சட்டத்திற்கு எதிரானது' என்று கடவுளை மையப்படுத்தி முறையிட்டிருப்பார் கைம்பெண். அல்லது 'மனிதர்களை மதிப்பவராக' இருந்தால், 'உனக்கு மேலதிகாரியிடம் சொல்லி விடுவேன்' என மிரட்டியிருப்பார் கைம்பெண். ஆனால், இந்த இரண்டிற்கும் வழியில்லாததால், அந்தப் பெண் மூன்றாவது ஆயுதத்தைத் கையில் எடுக்கிறார். அதுதான் 'விடாமுயற்சி.' இங்கே, 'ஒருவரின் விடாமுயற்சி மற்றவரின் தொல்லை' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, 'ஒருவரின் மனவுறுதி மற்றவரின் பிடிவாதம்' என்பதைப் போல.

கைம்பெண்ணின் விடாமுயற்சியைத் தொல்லையாக உணரும் நடுவர் நீதி வழங்குகிறார்.

ஆனால், கடவுள் அப்படிப்பட்டவர் அல்லர் என்கிறார் இயேசு.

மேலும், இறுதியில், 'ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்ற தன் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கைம்பெண்ணின் விடாமுயற்சியை உந்தித் தள்ளியது நம்பிக்கையே.

இங்கே, கைம்பெண் தனக்குரிய நீதியைப் பெற உரிமைகொண்டிருக்கின்றார். ஆனால், அவருடைய உரிமை மறுக்கப்படுகின்றது. எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத ஒருவர்கூட இறுதியில் மற்றவருக்குரிய உரிமையை வழங்கத் தயாரகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் நமக்கு உரிமைகள் இல்லை என்றாலும், நமக்கு உடனடியாகச் செவிசாய்க்கின்றார். கடவுளின் நன்மைத்தனம் பொறுப்பற்ற நடுவரின் முரண் எனக் காட்டப்படுகிறது. 

தொடர்ந்து, மண்ணுலகில் நம்பிக்கை மறைந்து வருவதையும் இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

இறைவனிடம் மன்றடும்போது, நாம் விண்ணப்பம் செய்யும்போது நம் மனப்பாங்கு நம்பிக்கை கொண்டதாகவும், நம் செயல்பாடு மனந்தளராமலும் இருத்தல் வேண்டும்.