Wednesday, October 4, 2017

ஆண்டவரின் மகிழ்வே

'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' (காண். நெகே 8:1-12)

நாளைய முதல் வாசகம் ரொம்பவே துள்ளலான வாசகமாக இருக்கிறது.

இஸ்ரயேல் மக்கள் முதன் முதலாக பைபிள் எழுதப்பட்டு வாசிக்கப்படுவதைக் கேட்கின்றனர். இதுதான் இவர்கள் கேட்ட முதல் பைபிள் அல்லது நற்செய்தி.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் யாரும் பசியோடும், தாகத்தோடும், வெறுமையோடும் செல்லக்கூடாது எனவும், அனைவரும் இந்த நாளைக் கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார் எஸ்ரா.

'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்ற வரியைச் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'ஆண்டவரின் மகிழ்வு' என்ற வார்த்தையை 'ஆண்டவர் கொள்ளும் மகிழ்வு,' அல்லது 'ஆண்டவர் மேல் கொள்ளும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவரால் கொள்ளும் மகிழ்வு,' அல்லது 'ஆண்டவருடைய மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம்.

'ஆண்டவருடைய மகிழ்வு' என்ற பொருளில்தான் எபிரேய சொல்லாடல் உள்ளது. ஆங்கிலத்திலும் 'தெ ஜாய் ஆஃப் த லார்ட்' என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் கேள்வி. ஆண்டவர் மகிழ்ச்சி அடைவாரா? துன்பம் அடைவாரா? அவருக்கு ஃபீலிங்ஸ் உண்டா.

உண்டு என்று நாம் எடுத்துக்கொள்வோம். ஏனெனில் இங்கே ஆண்டவர் ஓரு சாதாரண மனிதருக்கு ஒப்பிடப்படுகிறார்.

ஆண்டவருடைய மகிழ்வு எதில் இருக்கும்?

இன்னைக்கு என்னோட மகிழ்வு எதில் இருக்கிறது?

என்னோட மகிழ்வு குறுகியது. சில நிமிடங்களே நீடிக்கக் கூடியது. குற்றவுணர்வுடன் கூடியது.

என்னோட மகிழ்வு பல நேரங்களில் என் வலுவைக் குறைத்துவருகின்றது.

ஆனால், இதற்கெல்லாம் மாறாக ஆண்டவருடைய மகிழ்வு நமக்கு வலிமையைத் தருகிறது என்கிறது நெகேமியா நூல்.

நாம் செய்யும் ஒரு செயல் ஆண்டவருடைய மகிழ்வா என எப்படிக் கண்டுகொள்வது?

ரொம்ப சிம்பிள்.

எந்த செயலைச் செய்யுமுன் கண்களை மூடிக்கொண்டு நமக்குப் பிடித்தமான கடவுளின் முகம் ஒன்றை மனதில் கொண்டுவர வேண்டும். அந்த முகம் சிரித்தது என்றால் அது ஆண்டவரின் மகிழ்வு. அது சிரிக்கவில்லை என்றால் அது என் மகிழ்வு.

ஆண்டவரின் மகிழ்வு வலிமை.

எனது மகிழ்வு வலுவின்மை.

Tuesday, October 3, 2017

அசிசி

ஏழைகளின் தந்தையாகிய இறைவா,
அசிசி நகர் புனித பிரான்சிஸ்குவை நீர் தேர்ந்தெடுத்து,
எளிய வாழ்வாலும், தாழ்ச்சி நிறை பண்பாலும்
கிறிஸ்துவைப் போன்றிருக்கச் செய்தீரே:
அவருடைய சிறப்பான வாழ்வுக்காக
உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம்.
அவரிடம் விளங்கிய மகிழ்ச்சி, மனச்சுதந்திரம், மன நிறைவு
முதலிய பண்புகளைக் கடைப்பிடிக்கவும்,
கிறிஸ்துவின் மீது உண்மையான அன்பும்
ஆழமான உறவும் கொண்டு வாழவும் எங்களுக்கு அருள்தாரும்.

(உரோமை திருப்பலி புத்தகம், சபை மன்றாட்டு, அக்டோபர் 4)

நாளை தூய பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். முதன் முதலாக எனக்கு பிரான்சிஸ்கு அசிசியாரின் கப்புச்சின் சபையினரின் அறிமுகம் கிடைத்தது நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோதுதான். நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள அவர்களின் தியான இல்லத்திற்கு சுற்றுலாவின் ஒரு பகுதியாக நாங்கள் அப்போது சென்றிருந்தோம்.

அடுத்தடுத்து அவரது வாழ்க்கை வரலாறைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கிடைத்த ஐந்து காய வரத்தைப் போல எனக்கும் வர வேண்டும் என்று நிறைய நாள் வேண்டியிருக்கிறேன். விடிந்தவுடன் எழுந்து அப்படி ஏதாவது காயம் வந்திருக்கிறதா என்றும் பார்த்திருக்கிறேன்.

அசிசியார் என்னை அடுத்தபடியாக கவர்ந்தது என்னுடைய திருத்தொண்டர் பணியின் போது. அசிசியார் திருநாளின் சபை மன்றாட்டை வாசிக்கக் கேட்டபோது நான் கேட்ட மூன்று வார்த்தைகள் 'மகிழ்ச்சி, மனச்சுதந்திரம், மன நிறைவு' அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை நமக்குச் சொல்வதாக இருக்கிறது.

இந்த மூன்றும் இன்றும் என்றும் நம் வாழ்வில் நிலைபெற இன்று செபிக்கலாமே!

Monday, October 2, 2017

ஓரியூர்

இன்று மதுரை உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர் புனித அருளானந்தரின் திருத்தலத்திற்கு திருயாத்திரை சென்றோம்.

சிவகங்கை மறைமாவட்டத்தின் எல்கைக்குள் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான் 9ஆம் வகுப்பில் குருமடத்தில் சேர்ந்தபோது ஏற்கனேவே அங்கிருந்த சிவகங்கை மறைமாவட்டத்தின் அருள்சகோதரர்கள் தங்கள் ஊர்களின் பெயர்களைச் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

தங்கச்சி மடம், அக்கா மடம், செங்குடி, இராஜசிங்க மங்கலம், சிலுகவயல், பச்சேரி, அக்காவயல், அரண்மனை வாசல், அரசனூர் போன்ற ஊர்களிலிருந்து படித்தவர்கள் சொன்ன பெயர்களை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பெயர்கள் தொன்மையானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும் தெரிந்தன.

இன்று சிவகங்கை, காளையார்கோவில், பள்ளித்தம்மம், புலியடிதம்மம் வழியே கடந்து சென்றபோது இந்தப் பகுதியில் அமைந்திருந்த பழங்கால வீடுகளின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. குட்டையான சுவர்கள். உயரமான ஓடுகள் வேயப்பட்ட கூரைகள். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன. வீட்டுக்குள்ளேயே உணவுப்பொருள்களை சேமிக்கும் இடங்களும் இருந்தன.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் உண்டு.

எதார்த்தமான எளிமையை இந்த ஊர்களில் காண முடிந்தது.


கிழிஞ்ச சட்டை

டி.எச். லாரன்ஸ் அவர்கள் எழுதிய 'The Man Who Died' என்ற நாவலில் ஒரு வயதான ஏழைத்தம்பதியினர் பற்றி இப்படி பதிவு செய்கின்றார்.

'அவர்கள் வீட்டிற்கு இளைஞன் ஒருவன் வருகிறான்.
குற்றுயிராய் வந்த தனக்கு உணவு தந்து உயிர் தந்ததால் அவளுக்கு தன்னிடமிருந்த காசுகள் சிலவற்றை அள்ளிக்கொடுத்தான்.
அவள் அவற்றை எண்ணிப் பார்த்தாள்.
அவள் ஏழையாய் இருந்ததால் மீண்டும் மீண்டும் அதை எண்ணிப் பார்த்தாள்.'

இது மிகவும் உண்மை.

ஏழைகளின் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.

அவர்கள் அதை அடிக்கடி எண்ணிக்கொண்டிருப்பார்கள். இருப்பதையும் தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என நான் நினைக்கிறேன்.

இன்று மாலை ஒரு ஆலய நிகழ்வுக்காக சென்றிருந்தேன்.

வயதான நபர் ஒரு ஆலயத்தின் திருப்பண்ட அறையில் பணிவிடை செய்துகொண்டிருந்தார். அவரிடம் ஒரு வேலை கொடுப்பதற்காக அங்கிருந்த அருள்பணியாளர் அவரை அழைத்தார். வேகமாக ஓடி வந்த அவரின் முழுக்கை சட்டை கதவின் கைப்பிடியில் பட்டு அப்படியே அவர் சட்டையை கிழித்துவிட்டது.

இருந்தாலும் அருள்பணியாளர் சொன்ன வேலையை முடித்துவிட்டு தன் இடத்திற்கு மீண்டும் வந்தார்.

அவரின் சட்டை கிழிந்ததை அவரையும் என்னையும் தவிர வேறு எவரும் கவனிக்கவில்லை.

எந்த அளவிற்கு நைந்து போயிருந்தால் சட்டை கிழிந்திருக்கும்!

அல்லது எந்த அளவிற்கு அவர் வேகமாக கடந்திருந்தால் சட்டை கிழிந்திருக்கும்!

எப்படியோ சட்டை கிழிந்துவிட்டது.

திருப்பலியின் நிறைவு வரை அவரின் கவனம் அவரின் சட்டையின்மேல்தான் இருந்தது. கிழிசலை மறைக்க ஏதேதோ செய்து பார்த்தார். இறுதியில் முழுக்கை சட்டையை அரைக்கை சட்டையாக சுருட்டிக்கொண்டார்.

பின் அவரின் முகத்தில் ஒரு புன்னகை.

அவரின் சட்டை கதவிடுக்கில் கிழிந்தது என்பது எனக்கும் அவருக்கும் தெரியும்.

ஆனால் மற்றவர்களுக்கு அந்தக் கிழிசல் அவரின் ஏழ்மையாகத் தெரியுமோ?

நான் காணும் ஒவ்வொன்றுக்கும் பின்னும் ஒரு காரணம் இருக்கலாம். அப்படி இருக்க நான் பார்ப்பதை வைத்து 'இதுதான் சரி. இதுதான் தவறு' என தீர்ப்பிடுவது தவறு என்று கற்றேன் இன்று.