Saturday, October 31, 2015

தனித்தன்மை

அக்டோபர் மாதத்தின் இறுதிநாள்.

இந்த மாதம் நான் கட்டளை செபம் செபிப்பதற்குப் பதில், எனக்குப் பழக்கமில்லாத விவிலியப் பகுதிகள், நான் வாசிக்க வேண்டும் என நினைத்து, ஆனால் வாசிக்க முடியாத திருத்தந்தையரின் மடல்கள் இவற்றை வாசிக்க வேண்டும் என நினைத்து ஒரு லிஸ்ட் தயார் செய்து, செபித்துப் பார்த்ததில் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொண்டேன்:

ஒன்று, கட்டளை செபம் என்பது செபத்தின் ஒரு மாதிரிதான். அதே வடிவத்தைப் பயன்படுத்தி நாம் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, கிளமெண்ட் என்ற போப் எழுதிய பேச்சாற்றல் என்ற கட்டுரையைவிட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'லௌதாத்தோ சீ' (சுற்றுச்சூழல் பற்றியது) சவால்விடுவதாக இருக்கிறது.

இரண்டு, 'நாம் கேட்ட இசை சர்க்கரை இனிமையென்றால், கேட்காதவை தேன் இனிமை' என்பது போல, வாசித்த செபங்களைவிட, அறிந்த விவிலியப் பகுதிகளைவிட அறியாதவை இன்னும் ஆழமாக மனதைத் தொடுகின்றன.

'குழல் அல்லது யாழ் ஆகிய உயிரற்ற இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலிகளுள் வேறுபாடு இல்லையெனில் குழல் எழுப்பும் ஒலி எது, யாழ் எழுப்பும் ஒலி எது என்பதை எப்படி அறிய முடியும்?' (1 கொரி 14:7)

வழக்கமாக 1 கொரிந்தியர் நூலில் நாம் பிரிவு 13 (அன்பைப் பற்றியது) வாசித்துவிட்டு பிரிவு 15 (உயிர்ப்பு பற்றியது)க்கு தாவி விடுகிறோம். இவ்விரண்டிற்கும் இடையில் பிரிவு 14ல் தான் மேற்காணும் அழகான வசனம் வருகிறது.

இந்தப் பிரிவில் பவுல் ஒரு சின்ன பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார். அதாவது, இறைவாக்கு உரைப்பது பெரியதா அல்லது பரவசப்பேச்சு பெரியதா என்பதுதான் வாதம். இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கிறார் பவுல்.

அதாவது, ஒவ்வொருவரும் என்ன செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமாம்.

இளையராஜா, ரகுமான் என்ற இரு இசைக்கலைஞர்களை எடுத்துக்கொள்வோம்.

இளையராஜா இசையமைப்பதுபோலவே ரகுமானும் அமைக்கிறார் என்றால் இளையராஜா மற்றும் போதுமே. நமக்கு ரகுமான் எதற்கு?

நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை பெற்றிருக்கிறோம். அந்தத் தனித்தன்மையை நாம் அறிந்து அதை வெளிப்படுத்த வேண்டும்.

இதைத்தான் நாளை நாம் கொண்டாடும் புனிதர்களும் செய்தார்கள்.

நான் எழுப்பும் ஒலி என்ன என்று கண்டு, அந்த ஒலியைச் சிறப்பாக எழுப்பினால் என் வாழ்வு இனிமையானதே. அடுத்தவர் எழுப்பும் ஒலியைக் குறித்த கவலையோ, அடுத்தவர் எழுப்பும் ஒலியைப் போலவே என் ஒலியும் இருக்க வேண்டும் என்ற ஏக்கமும் எனக்குத் தேவையில்லை.

Friday, October 30, 2015

நண்பரே

'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்!'

திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டால் எங்கே அமர வேண்டும் இயேசு போதிக்கின்றார்.

திருமண விருந்துக்குப் போய் ரொம்ப நாளாச்சு. ஃபாதர் ஆன பின் எந்தத் திருமண விருந்துக்கும் போகவும் முடியல. கடைசியா நான் போன திருமண விருந்து என் தங்கையின் திருமண விருந்துதான் என நினைக்கிறேன். நம்ம ஊரு திருமண பந்திக்கு இயேசுவின் பிரின்சிபில் ஒத்து வருமா என்று தெரியல. ஒரு காலத்தில் ஒரு பந்தி முடிய அடுத்த பந்திக்கு மக்கள் எழுந்து போவார்கள். கொஞ்சம் வளர்ந்து அடுத்த பந்திக்கான ஆட்கள் படிகளில் நின்று இருப்பார்கள். இன்று சாப்பிடுபவரின் பின்னால் நின்றுகொண்டு, 'தம்பி, இந்த இலைக்கு பாயாசம் கொண்டு வாருங்கள்!' என்று நாம் சாம்பார் ஊற்றும்போதே கூவத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அந்தக் கூட்டத்தின் நெருக்கத்திலும், அவசரத்திலும், வியர்வையிலும், சூட்டிலும் பரிமாறப்படும் அன்பிற்கு இணையாக எந்த ஐந்து நட்சத்திர ஓட்டலும் இன்னும் வரவில்லை.

கடைசி இடத்தில் அமருங்கள். எதற்காக?

உங்களைவிட மதிப்பிற்குரியவரை ஒருவேளை அவர் அழைத்திருக்கலாம்.

கடைசி இடத்தில் அமர்வதால் இரண்டு நன்மைகள்:

அ. 'நண்பா' என அழைக்கப்பட முடியும்.

ஆ. மதிப்போடு மற்றவர்கள்முன் எழுந்து முன்னால் சென்று அமர முடியும்.

கடவுளின் மதிப்பீடுகள் மனித மதிப்பீடுகளிலிருந்து மாறுகின்றன என்பதற்கு இயேசுவின் இந்த உவமை சான்று. அதிக பணம், அதிக மதிப்பு, அதிக பலம் என முக்கியத்துவம் கொடுக்கும் நம் நடுவில் தாழ்ச்சியையும், மனச் சாந்தத்தையும் முதன்மைப்படுத்துகிறார் இயேசு.

நாமும் இன்று கடைசி இடத்தில் அமர்ந்தால் இயேசுவுக்கு அருகில் அமரலாம்.

ஏனெனில் அவர் தேர்ந்து கொள்வதும் கடைசி இடம்தானே.

விருந்தில் தான் கடைசி இடம்.

வாழ்க்கையில் கொஞ்சம் முன்னால போகணும் பாஸ்.

தீயா வேல செய்யணும்.


Thursday, October 29, 2015

உன் வாயில்களின் தாழ்களை

'அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்.
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.'

(திபா 147:13)

நாளைய பதிலுரைப்பாடலில் நாம் இந்த வரியை வாசிக்கின்றோம்.

இந்தத் திருப்பாடலின் பின்புலம் என்ன என்பது நமக்கு விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு வரிகளின் பின்புலம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறதா?

ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டினுள்ளே ஒருதாய். படுத்த படுக்கையாய் அவளது இள மகன். நடந்து கொண்டிருக்கும் போரில் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடக்கிறான். இந்தத் தாய் அந்த மகனுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வெளியில் இன்னும் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்நேரமும் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வந்து இந்தத் தாயையும், இந்தத் தாயின் இள மகனையும் கொன்றுவிடலாம்.

பயம், கலக்கம், திகில், ஆபத்து என எல்;லா உணர்வுகளும் நிரம்பியவளாய் இந்தத் தாய் இறைவனை நோக்கித் தன் கண்களை உயர்த்துகின்றாள். கண்ணீரோடு இறைவேண்டல் செய்கின்றார்.

அவளின் கண்கள் கண்ணீர் சொரிந்து கொண்டிருக்கும் நேரம் அவளின் இதயத்தின் காதுகளில் இறைவன் மெதுவாய் உச்சரிக்கும் வார்த்தைகளே இவை:

'அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்.
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.'

ஆக, வெளியிலிருந்தும் உனக்கு ஆபத்து இல்லை. உள்ளுக்குள் இருக்கும் உன் பிள்ளையும் நலம் பெறுவான்.

இறைவனின் பிரசன்னம் முழுமையான நலம் தருகிறது. பயம் போக்குகிறது.

நாளைய நற்செய்தியிலும் (காண். லூக் 14:1-6) இத்தகைய இறைவனின் முகத்தைத்தான் நாம் இயேசுவில் பார்க்கிறோம். நல்லது செய்வதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம், ஓய்வு நாள், வேலை நாள் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் நடுவில், தன் கரம் நீட்டிக் குணம் தருகின்றார் இயேசு.

இறைவனின் பார்வையில் எல்லா நேரமும் நல்ல நேரமே. எல்லா இடமும் நல்ல இடமே. எல்லா மனிதர்களும் நலம்பெறத் தகுதியானவர்களே.


Wednesday, October 28, 2015

நம் சார்பாக

சின்ன வயதில் பள்ளிப்பருவத்தில் சக மாணவனின் தோளில் (பல நேரங்களில் அவன் என்னைவிட உயரமாகவே இருப்பான்) கை போட்டுக்கொண்டு நடப்பதுண்டு. யாராவது கேட்டால், 'இவன் என் கூட்டாளி' என்று கெத்தாக பதில் சொல்வேன். 'இவன் என் கூட இருக்கிறான்' - என்பதன் அர்த்தம் புரியாமலேயே பள்ளிப்பருவம் கடந்து போனது.

நாம் பேசும் அல்லது பழகும் ஒவ்வொரு நபர், ஏன் நாம் நம் தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கும் தொலைபேசி எண்கூட மறைமுகமாக நமக்கு இதைத்தான் சொல்கிறது: 'இவர் என் சார்பாக இருக்கிறார்' அல்லது 'இவர் என்னோடு இருக்கிறார்' அல்லது 'அவரோடு நான் இருக்கிறேன்.'

அருட்திரு. மைக்கேல் ஆலோசனை, சே.ச., என் பாப்பிறைப் பாசறை அதிபர், நண்பர், வழிநடத்துநர். அவரின் மின்னஞ்சலில் எப்போதும் உரோ 8:31 அவரின் கையெழுத்தோடு இணைந்துவரும். இவ்வளவு நாட்கள் புரியாத அதன் அர்த்தம் நாளைய முதல் வாசகத்தை (உரோ 8:31-39) வாசித்துக்கொண்டிருக்கும்போது புரிந்தது.

உரோமை நகர திருஅவைக்கு எழுதும் திருமடலில் ஒரு பெரிய சொற்போரை நடத்திக் கொண்டிருக்கும் பவுல் ஒரு கட்டத்தில் நிறுத்தி, 'இதற்கு மேல் நாம் என்ன சொல்வோம்?' என்று தான் இவ்வளவு தூரம் மூச்சு விடாமல் பேசியதை ஒரே வரியில் சொல்கின்றார்: 'கடவுள் நம் சார்பாக இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?'

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் வார்த்தைகளில் எனக்குப் பிடித்தது இதுதான்: 'உன் மகிழ்வையும், இருப்பையும், இயக்கத்தையும் என்றும் மாறாத ஒன்றில் கட்டு - அது கடவுளாகவோ, கருத்தியலாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். ஆனால் ஆட்கள் மற்றும் இடங்களின் மேல் கட்டாதே. பின்னவர்கள் மாறக்கூடியவர்கள். முன்னவைகள் மாறாதவைகள்'.

வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி, ஆடையின்மை, இடர், சாவு, வாழ்வு, வானதூதர், ஆட்சியாளர், நிகழ்வன, வருவன, வலிமை மிக்கவை, உன்னத்தில் உள்ளவை - இவை எல்லாம் மாறக்கூடியவை.

மாறுகின்ற படைப்புப் பொருட்களை விடுத்து, மாறாத படைத்தவரைப் பற்றிக்கொள்வது எவ்வளவு நலம்.

அகுஸ்தினார் அடிக்கடி புலம்புவதும் இதற்காகத்தான். 'படைப்புப் பொருட்கள் படைத்தவராகிய உன்னிடமிருந்து என்னை தூர இழுத்துவச்சென்றனவே' என்று அழுகின்றார்.

பட்டினத்தாரின் ஒரு பாடலும் இந்தக் கருத்தியலை ஒத்தே இருக்கிறது:

'பிறந்தன இறக்கும். இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும். மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும். சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும். மறந்தன உணரும்.
புணர்ந்தன பிரியும். பிரிந்தன புணரும்.
அருந்தின மலமாம். புனைந்தன அழுக்காம்.
உவப்பன வெறுப்பாம். வெறுப்பன உவப்பாம்.
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
... ... ...
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!'

(கோயிற்றிருவகவல் - 1)

'கடவுள் என் சார்பில் இருக்கிறார்' என்ற உணர்வு ஆழமாக இருந்ததால்தான் இயேசுவால் ஏரோதுவை நரி என்று அழைக்கவும், அவனுக்கு சவால் விடவும் (காண். லூக் 13:31-35) முடிகிறது.

இந்த ஒரு உணர்வு என்னிடம் ஆழமாக இருந்தது என்றால் நான் என் வாழ்வில் நிகழும் எல்லாவற்றிலும் சமநிலையை எளிதாக உணர முடியும்.

இந்த உணர்வு மனிதர் தரும் பாராட்டை நம்பியிருக்காமல் என் மனதிற்கு நிறைவு தரும் ஒன்றில் நான் ஊன்றியிருக்க உதவி செய்யும்.

இந்த உணர்வு நம்மிடமிருக்கும் தாழ்வு மனப்பான்மை போக்கி நம்மை எல்லாவிடத்திலும் நேர்முகமாக மற்றவர்கள்முன் நிமிர்ந்து நிற்கத் துணை வரும்.

'கடவுள் நம் சார்பாக' என்று சொல்வதால் மட்டும் இவை நடந்துவிடாது. இது ஒரு மாய மந்திரம் அல்ல. நாம் யார் சார்பாக இருக்கிறோமோ அவரின் எண்ணங்களும், சொற்களும், செயல்களும் நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

இந்தக் கருத்தையொட்டிய திபா 124 நம் செபத்தில் இணைத்துப் படிக்கலாம்:

'ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் -
... ... ...
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!'


Tuesday, October 27, 2015

யூதா ததேயு

நாளை திருத்தூதர்களான சீமோன்-யூதா திருவிழா.

இந்த இரண்டு திருத்தூதர்களும் ஒன்றாக மறைசாட்சியம் தழுவியதால் திருஅவை இருவரின் திருநாளையும் ஒரே நாளில் கொண்டாடுகின்றது.

உரோமையில் நான் பணி செய்யும் பங்கின் திருவிழாவும் நாளைதான். என் பங்கின் பாதுகாவலர் யூதா ததேயு.

யார் இந்த யூதா ததேயு?

யூதா இஸ்காரியோத்து என்ற சீடரிடமிருந்து இவரைப் பிரித்துக் காட்டவே யூதா ததேயு என அவர் அழைக்கப்படுகின்றார். 'ததேயு' என்றால் அரமேயத்தில் 'இதயம்' அல்லது 'இதயத்திற்கு நெருக்கமானவர்' என்பது பொருள்.

இவரை இயேசுவின் சகோதரர் என்றும், இவரின் திருமணம்தான் கானாவில் நடந்தது என்றும், இந்தத் திருமணத்திற்குதான் இயேசுவும், அவர் தாயும், அவரின் சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தார்கள் என்றும் சொல்கிறது பாரம்பரியம்.

இவரின் உருவங்களில் ஐந்து கூறுகள் இருக்கும்:

1. உச்சந்தலையில் நெருப்பு நாக்கு - இவரின் பெந்தகோஸ்தே அனுபவத்தின் அடையாளம்.

2. கையில் நீண்ட தடி - இவரின் மறைபரப்புப் பணியின் அடையாளம்.

3. கைகளில் விரித்துப் பிடித்திருக்கும் இயேசுவின் முகம் பதிந்த துணி - இதைக் கொண்டு எடேசா மன்னனுக்கு உடல் நலம் தந்தார். மேலும், இது வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்த துணி என்றும் சிலர் சொல்கின்றனர்.

4. கையிடுக்கில் இருக்கும் தோற்சுருள் - இவர் எழுதிய திருமுகம் (புதிய ஏற்பாட்டு நூலில் இருக்கிறது)

5. கோடரி - இவரின் மறைசாட்சியத்தின் அடையாளம்

நம்பிக்கை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், கைவிட்டவர்களின் பாதுகாவலராக இருக்கிறார் யூதா ததேயு. இவர்கள் இந்தப் புனிதரை நாடக் காரணம் இவர் 'ததேயு', அதாவது 'நெருக்கமானவர்' - இயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்.

காலத்தால், இடத்தால் நாம் இயேசுவைவிட்டு தூரமாக இருந்தாலும், கைவிடப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம் நேரம், ஆற்றல், அரவணைப்பு கொடுத்தால் நாமும் 'ததேயுக்களே' - 'நெருக்கமானவர்களே!'

(படத்தில் காண்பது எங்கள் ஆலயத்தில் வீற்றிருக்கும் யூதா ததேயு திருவுருவம்)


Monday, October 26, 2015

பேறுகால வேதனை

'இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்' (காண். உரோ 8:18-25)

டென்மார்க் நாட்டில் 1000 க்கு 10 என்ற விகிதத்தில் குழந்தை பிறப்பு இறப்பதால் அந்த நாடு தன் குடிமக்களை வார நாட்களிலும் விடுமுறை எடுத்து ஊர் சுற்றி குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிப்பதாக இன்றைய காலை செய்தியில் சொன்னார்கள்.

தாய்மை அடைவது - இது ஏதோ தவறு என்றே கற்பிக்கிறது நம் தமிழ் ஊடகங்களில் வெளிவரும் நெடுந்தொடர்கள்.

'தவறு செய்யலாம். ஆனால் தாய்மை அடைந்துவிடக்கூடாது' என்று மற்றொரு பக்கம் ஒரு புரட்சி சித்தாந்தம் பரவிக்கொண்டிருக்கிறது.

தாய்மை அடைவதை ஓரு நோய் போல நினைத்து அதற்கு மருந்து, பக்குவம், பயிற்சி என்று கல்லா கட்டுகிறது மருத்துவ உலகம்.

'பேறுகால வேதனை' - நாளைய முதல் வாசகத்தில் தூய பவுலடியார் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றார்.

பேறுகால வேதனை நிறைய இடங்களில் உருவகமாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:

'நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நிலநடுக்கமும் ஏற்படும். இவையனைத்தும் பேறுகால வேதனையின் தொடக்கமே.' (மத் 24:7-8)

'பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றபின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்துவிடுகிறார்.' (யோவா 16:21)

மற்ற வேதனைக்கும் பேறுகால வேதனைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?

மற்ற எல்லா வேதனைகளும் மகிழ்ச்சியில் முடிவதில்லை. உதாரணத்திற்கு, புற்றுநோய் அல்லது கைகால் உடைந்து போதல் தரும் வேதனை. இந்த வேதனையால் நமக்கு மகிழ்ச்சி வருவதில்லை. மாறாக, இந்த வேதனை முடிந்ததே என மகிழ்ச்சி வருகிறது. ஆனால் பேறுகால வேதனையில்தான் துன்பமும், மகிழ்ச்சியும் இணைந்து வருகிறது.

பெண்கள் அனுபவிக்கும் பேறுகால வலியை அனுபவிக்க வாருங்கள் என்று லண்டனில் ஒரு மருத்துவமனை தொடர் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, செயற்கையாக இந்த வலியை ஆண்களுக்கு ஊட்டுகிறது. நான்கு கட்டமாகத் தரப்படும் வலியில் 100ல் 1 ஆண் மட்டுமே நான்காம் கட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடிகிறதாம். உண்மையில் பெண்கள்தாம் பலசாலிகள்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும்கூட நமக்கு பேறுகால வேதனையைத்தானே தருகிறது. என்னிடம் உதவி கேட்டு வரும் ஒருவருக்கு நான் 500 ரூபாய் தருகிறேன் என்றால் ஒரே நேரத்தில் எனக்கு துன்பமும், இன்பமும் இருக்கிறது - துன்பம், ஏனென்றால் என் பணம் என்னை விட்டுப் போகிறது. இன்பம், ஏனென்றால் மற்றவரின் தேவையை என்னால் நிறைவு செய்ய முடிகிறது.

மேலும் பேறுகாலம் போல அல்லது தாய்மை அடையும் காலம் போல வாழ்வை வாழ்தல் மிக நல்லது. எப்படி? வளைகாப்பு என்ற நிகழ்வில் பேறுகாலத்திற்கு தயாராய் இருக்கும் பெண்ணின் கைகளில் வளைகளை நிரைப்புவார்கள். எதற்காக? நான் நினைக்கும் காரணம் இதுதான்: இந்தப் பெண்ணின் இருப்பை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வெளியில் இருக்கும் மற்றவருக்கும் கண்ணாடி சிணுங்கல்கள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உள்ளே இருக்கும் குழந்தை இந்த சிணுங்கல் கேட்டு மகிழும். வெளியே இருக்கும் வளர்ந்தவர்கள் இந்தப் பெண்ணின் இருப்பை நினைத்து அவரை மதிப்பர். அவருக்கு பணிவிடை செய்ய தயாராயிருப்பர்.

நாம் எழுப்பும் சின்னச் சின்ன சிணுங்கல்களும், நம் உள்ளே இருக்கும் நம் மனம் என்னும் குழந்தைக்கு உற்சாகமாகவும், நம் வெளியில் இருப்பவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் இருக்கலாமே!

ஆபிரகாமின் மகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:10-17) மூன்று நபர்களைப் பார்க்கிறோம்.

பதினெட்டு ஆண்டுகளாய் தீய ஆவி பிடித்திருந்து நிமிர முடியாத ஒரு பெண்.

ஓய்வுநாளில் குணப்படுத்தும் இயேசு.

ஓய்வுநாளில் மக்கள் குணம்பெறுவதை எதிர்க்கும் தொழுகைக்கூடத் தலைவர்.

இயேசுவின் அறிகுறிகள் எல்லாவற்றிலும் இந்த மூன்றுபேரைப் பார்க்கலாம்: ஒருவர் தேவையில் இருப்பார், அடுத்தவர் தேவையை நிறைவேற்றுவார், மற்றவர் எதிர்ப்பாக இருப்பார்.

இயேசு இந்த அறிகுறியை தானாகவே நிறைவேற்றுகின்றார். ஆக, இங்கு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின்மேல் தான் கோபப்பட வேண்டும். ஆனால், தன் கோபத்தை வந்திருந்த மக்கள் மேல் காட்டுகின்றார்.

மேலும், அவருக்கு மக்களின் நலத்தைவிட ஓய்வுநாள்தான் பெரிதாகத் தெரிகிறது.

21 நாட்களாக வத்திக்கானில் நடந்து வந்த குடும்பம் பற்றிய திருப்பேரவை இன்றோடு நிறைவேறியது. விவகாரத்து பெற்றவர்களும், மறுமணம் செய்தவர்களும் நற்கருணை உட்கொள்ளலாம் என அனுமதித்திருக்கிறது பேரவை. ஆனால், அதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இன்னும் பேரவையின் தீர்மானங்கள் முழுமையாக வெளியேறவில்லை. ஆனால், திருஅவை தனக்குத்தானே வைத்திருக்கும் தன் சட்டங்களை கொஞ்சம் தளர்த்தி எல்லார்மேலும் கருணை காட்டுகிறது என்பது இதில் புலப்படுகிறது. இந்த பேரவை குறித்த நிறைய விமர்சனங்கள் தொலைக்காட்சியில் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

சில சமயங்களில் நம் திருஅவை சட்டங்கள் யூதர்களின் சட்டங்களைவிட மிக கொடுமையாகவே இருக்கின்றன. இயேசுவின் ஆவியிலிருந்து சட்டம் நம்மை தூர கொண்டுவந்துவிட்டது.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 8:12-17) தூய பவுல், நாம் இயேசுவின் ஆவியால்தான் கடவுளை 'அப்பா, தந்தாய்' என அழைக்கிறோம் என பெருமைப்படுகிறார்.

இயேசுவுக்கு இது நன்றாக தெரிந்தது. ஆகையால்தான் கூன்விழுந்த அந்தப் பெண்ணையும் 'மகள்' என அழைத்து நிமிரச் செய்கின்றார்.


Saturday, October 24, 2015

போர்வை

இன்று காலை ஒரு பாட்டிக்கு நற்கருணை கொடுக்க அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, வழியில் கேட்பாரற்ற ஒரு போர்வை கிடந்தது. அந்தப் போர்வையைச் சுற்றி ஒரு கூட்டம். கொஞ்சம் தள்ளி போலீஸ் வாகனங்கள் நின்றிருந்தன. 'நேற்று இரவு தெருவில் இந்தப் போர்வையைப் போர்த்தி தூங்கியிருந்த ஒரு ஆப்பிரிக்க அகதி இறந்துவிட்டார் என்றும், அவரை இன்று காலையில்தான் அப்புறப்படுத்தினார்கள்' என்று வழியில் இரண்டு பேர் பேசிக்கொண்டு சென்றனர். 'இந்த அகதிகள் எல்லாம் நம் நாட்டிற்குள் வரக்கூடாது!' என்று ஒருவரும், 'அவர்கள் வேறெங்கே போவார்கள்' என்றும் அவர்களே மாறி மாறிப் பேசிக்கொண்டார்கள்.

பாட்டி வீட்டிற்குச் சென்று நற்கருணை கொடுக்கும் சடங்கில் நற்செய்தியை எடுத்து பார்த்திமேயு பகுதியை வாசித்தபோது, பார்த்திமேயு தன் போர்iவையை வீசி எறிந்ததை வாசித்தவுடன் எனக்கு இந்த ஆப்பிரிக்க அகதியின் போர்வை என்னவோ செய்தது.

பார்த்திமேயு வீசிவிட்டு வந்த போர்வையும் இப்படித்தானே கொஞ்ச நாட்கள் கேட்பாரற்றுக் கிடந்திருக்கும்.

இன்று தெருக்களில் எண்ணற்றவை கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் தாங்கள் பார்த்துப் பார்த்து வாங்கிய ஒன்றை வெகு சாதாரணமாக மக்கள் இன்று தூக்கி எறிந்து விடுகிறார்கள். செருப்பு, பாய், மெத்தை, கால் ஒடிந்த நாற்காலி, கீறல் விழுந்த கண்ணாடி, அட்டை கிழிந்த புத்தங்கள், கண்களை இழந்த, கைகளை இழந்த பொம்மைகள் என எண்ணற்றவைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஆனால் இவைகள் ஒவ்வொன்றும் நமக்கு எதை நினைவுறுத்துகின்றன? இந்தப் பொருட்களை 'இதுதான் எல்லாம்' என பாதுகாத்த ஒருவர் இருந்தார் என்பதைத்தானே.

'இன்று எனக்குப் பிடிப்பது' ஏன் நாளை 'எனக்குப் பிடிக்காதது' என ஆகிவிடுகிறது.

நான் வைத்திருக்கும் ஒன்றைவிட அதிக மதிப்பு உள்ள மற்றொன்று வந்தவுடன், நான் ஏற்கனவே வைத்திருப்பதை விட்டுவிடுகிறேன். பார்த்திமேயுக்கும் அப்படித்தான். தன் போர்வையைவிட மதிப்புள்ள இயேசுவைக் கண்டவுடன் போர்வை ஒருபொருட்டாகத் தெரியவில்லை.

விவிலியத்தில் போர்வை அல்லது மேலாடை என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. உடனே என் நினைவிற்கு வந்த எல்லா 'போர்வை'- 'மேலாடை' வார்த்தைகளையும் எண்ணிப் பார்த்தேன்.

'ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, 'என்னோடு படு' என்றாள். உடனே அவர் அவள் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.' (தொநூ 39:11-12)

'...எலியா போர்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தார்...எலியா எலிசாவிடம் சென்று தன் போர்வையை அவர்மீது தூக்கிப் போட்டார்.' (1 அர 19:13, 19)

'இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின்மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார். அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் தன் மேலாடையை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.' (மாற் 14:52)

இந்த மூன்று மற்றும் பார்த்திமேயு நிகழ்வில் மேலாடையை விட்டுவிடும் இடத்தில் ஒரு வேகம் அல்லது ஓட்டம் இருக்கிறது. போர்வையை மாற்றுதல் அல்லது போர்வையை விலக்குதல் புதிய ஒரு செயலின் அடையாளமாக இருக்கிறது.

ஒவ்வொருநாள் நாம் போர்வை விலக்கி படுக்கையிலிருந்து எழும்போதும் புதிய மனிதர்களாக, புதிய செயல்கள் செய்யத்தானே எழுகிறோம்.

இன்று படுக்கையறையிலோ, தெருவிலோ எந்தப் போர்வையைக் கண்டாலும், மடித்து வைக்கப்பட்ட ஒவ்வொரு போர்வையும் இதைப் போர்த்தியிருந்தவர் இப்போது புதிய இயல்புக்குக் கடந்தவிட்டார் என நினைவுகூரலாமே.

Friday, October 23, 2015

பிம்பக் காதல்கள்

நேற்று மாலை 'ரோமியோ- ஜூலியட்' (தமிழ்) திரைப்படம் பார்த்தேன். ஷேக்ஸ்பியரின் தலைப்பு என்பதால் திரைப்படமும் அந்த நாடகத்தை ஒட்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஒரு தொடர்பும் இல்லை.

ஒரு காதலி, இரண்டு காதலர்கள். இல்லை. ஒரு காதலி, இரண்டு காதல்கள் என்று சொல்லலாம்.

காதலி ஐஸ்வர்யா முதலில் கார்த்திக்கையும், பின் அர்ஜூனையும் காதலிக்கிறாள். இறுதியில் கார்த்திக்கைக் கரம் பிடிக்கிறாள். வழக்கமான தமிழ் மசாலாதான். இடையிடையே கொஞ்சம் ஓவர் செண்டிமென்ட். காதலியை கொஞ்சம் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் காட்டியிருக்கிறார்கள்.

பணமா? அன்பா? - இதுதான் கேள்வி. முதலில் காதலி பணத்தையும், இரண்டாவதாக அன்பையும் தெரிந்துகொள்கிறாள். இதுதான் ஒற்றைவரியில் திரைப்படம்.

ஆனால், இங்கே காட்டப்படும் காதல் என்னன்னா ரொம்ப தப்பான காதல்.

அதாவது, காதல் என்பது அடுத்தவர்மேல் வருவது. அடுத்தவரைப்பற்றிய என் பிம்பத்தில் வருவது அல்ல.

உதாரணத்திற்கு, எக்ஸ்ஒய்இசட் என்று ஒரு பொண்ணு இருக்கா என வைத்துக்கொள்வோம். அவள் சிறந்த நாட்டியக்காரி. அவளின் நடனம் எனக்குப் பிடிக்கிறது. நடனமாடும் அவளின் பிம்பம் என் மனதில் விழுந்துவிடுகிறது. அவள்மேல் நான் காதல் கொள்கிறேன். ஆனால் சில நாட்களில் அவள் உடல்நலம் குறைந்து நடனமாட முடியாமல் போய்விடுகிறது. இப்போது அவள்மேல் உள்ள என் அன்பும் குறைந்துவிடுகிறது. இங்கே என்ன நடக்கிறது என்றால், நான் அவளை அன்பு செய்யவில்லை. மாறாக, என் உள்ளத்தில் பதிந்த அவளின் பிம்பத்தைதான் நான் அன்பு செய்திருக்கிறேன். அந்த பிம்பம் மறைந்தவுடன் அன்பும் மறைந்துவிடுகிறது.

காதலிக்காதீங்க! என்று இடையிடையே விழிப்புணர்வு தருவதாக கொஞ்சம் பாடல்கள் வேறு. ஐயோ ராமா! யாராவது இவங்ககிட்டு இருந்து எங்களைக் காப்பாத்துங்களேன்!

இன்று திரைப்படங்கள் காட்டும் காதல்கள் பெரும்பாலும் பிம்பக் காதல்களே.

பிம்பக் காதல்கள் வளரக் காரணம் இன்று யாருக்கும் பொறுமை இல்லை. நிழலைப் பார்க்த்தான் நமக்கு நேரம் இருக்கிறது தவிர, நிஜத்தைப் பார்க்க நேரமில்லை. கடவுள், மனிதர்கள், வேலை, படிப்பு என்று நாம் நிழல்களைத்தான் இன்று விரட்டிக்கொண்டிருக்கிறோம்.

நிற்க.

நாளைய நற்செய்தியில் (லூக்கா 13:1-9) ஒரு திறமையான தோட்டக்காரரை நாம் சந்திக்கின்றோம். இயல்பாகவே எனக்கு இந்த தோட்டக்காரர் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. பயன்தராத ஒரு மரத்தைக் காட்டி, 'இதை வெட்டிவிடு!' என்று தோட்டத்து உரிமையாளன் சொல்கிறான். 'எனக்கென்ன! அவனது மரம்! வெட்டச் சொல்கிறான். நான் வெட்டுகிறேன்' என்று வெட்டி சாய்த்துவிட்டு, தூக்குச் சட்டியைத் திறந்து கஞ்சி குடிப்பதை விட்டுவிட்டு, இந்தத் தோட்டக்காரர் யோசனை சொல்கிறார். என்ன யோசனை?

'இந்த ஆண்டு இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி. இல்லையானால் வெட்டிவிடலாம்.'

யோசனையின் முதல் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

'நான் இதற்கு இன்னும் அதிகம் கவனம் செலத்துவேன்' என்கிறார் தோட்டக்காரர்.

மரத்தைச் சுற்றி முதலில் அகன்ற பாத்தி கட்ட வேண்டும். அந்தப் பாத்தியில் தேவையான நீர் இருக்க வேண்டும். நீர் தேவைக்கு அதிகமாக இருந்தாலும் மரம் அழுகிவிடும். அந்த பாத்தியின் மண்ணை உரமுள்ளதாக்க எரு போட வேண்டும். ஆக மொத்தம் இந்த ஆண்டு அந்த தோட்டக்காரருக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை.

தோட்ட உரிமையாளருக்கு மரத்தின் பிம்பம்தான் கண்ணுக்குத் தெரிந்தது. அவருக்கு பொறுமையில்லை.

ஆனால் தோட்டக்காரருக்கு மரம் மரமாகத் தெரிகிறது. அவருக்கு எண்ணற்ற பொறுமை இருக்கிறது.

இன்று கடவுள் நம் பிம்பத்தைப் பார்த்து, நாம் செயல்படுவதைப் பார்த்து, நாம் நன்றாகப் படிப்பதைப் பார்த்து, நாம் புண்ணியங்கள் செய்வதைப் பார்த்து, நம்மை அன்பு செய்பவர் அல்லர். அவர் நம்மை நாமாகப் பார்க்கிறார். நாம் பலன்தரவில்லையென்றாலும் இன்னும் அதிகம் பராமரிக்கவும் தயாராயிருக்கிறார். 'இவனைக் கவனிப்பது டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், ரிசோர்சஸ் வேஸ்;ட்' என்று நினைப்பதில்லை.

இந்த நிகழ்வு எனக்கு இரண்டு கேள்விகளை வைக்கின்றது:

அ.  ஒருவர் எனக்கு எவ்வளவு பயன்தருகிறார் என்பதை வைத்துத்தான், அல்லது ஒருவரின் பிம்பத்தை வைத்துத்தான் நான் அவரை ஏற்றுக்கொள்கிறேனா? அல்லது அன்பு செய்கிறேனா?

ஆ. என் உறவில் ஒருவேளை என் அன்பிற்குரியவர் நான் எதிர்பார்க்கும் கனி தரவில்லையென்றால், அல்லது என் உறவு கனிதரும் உறவாக இல்லையென்றால் நான் அவரை அல்லது அதை வெட்டிச் சாய்ப்பதில் குறியாய் இருக்கிறேனா? அல்லது இன்னும் கொஞ்சம் அதிகம் நேரம் கொடுத்து, உரமிட்டு, அதைக் கனிதர வைக்கும் அக்கறையும் பொறுமையும் காட்டுகிறேனா?


Thursday, October 22, 2015

உள்ளே போராட்டம்

'பத்தாம்நாள் வெற்றி' என்று பொருள் கொள்ளும் 'விஜயதசமி' பண்டிகையில், நம் இந்து சகோதரர்கள், துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றனர்.

மனிதருக்கு வெளியே இருக்கும் தீமையை வெற்றி கொள்ள மனிதருக்கு கடவுளின் துணை தேவைப்படுகிறது என்பதை இன்றைய நாள் குறிக்கிறது.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 7:18-25) தூய பவுல் 'மனிதருக்கு உள்ளே இருக்கும் தீமை' குறித்தும், அந்தத் தீமையோடு மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தில் வெற்றி பெறத் தேவையான இறைவனின் பிரசன்னம் குறித்தும் எழுதுகிறார்.

பவுலின் லாஜிக் ரொம்ப அருமை:

நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இருக்கிறது.
ஆனால் அதைச் செய்யத்தான் என்னால் முடியவில்லை.

இதைச் செய்ய முடியவில்லை என்பது முதல் போராட்டம். அதாவது, விரும்புவதும், செய்வதும் ஒத்துப்போவதில்லை. உதாரணத்திற்கு, நான் காலை 5:30 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் நான் எழுவதற்கு 7 மணி ஆகிவிடுகிறது. இங்கே விரும்புவதும், செய்வதும் ஒத்துப்போவதில்லை.

இரண்டாவது போராட்டம் என்னவென்றால், நான் நன்மையைச் செய்யாமல் போவதுகூட இருக்கட்டும். ஆனால் நான் விரும்பாத தீமையையும் செய்துவிடுகிறேனே. அதாவது 5:30 மணிக்கு எழவில்லையென்றாலும் பரவாயில்லை. 7 மணி வரை தூங்கி அந்தத் தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு, அல்லது அந்த சிறுதூக்க நேரத்தைத் தேவையற்ற சுயஇன்பத்திற்கும் (உதாரணத்திற்கு!) பயன்படுத்திவிடுகிறேனே. ஒருவேளை நான் 5:30 மணிக்கு எழுந்தால், நன்மை செய்தவனாகவும் ஆவேன். தீமையைத் தவிர்த்தவனாகவும் ஆவேன்.

ஆனால் என்னால் முடியவில்லையே எனப் புலம்புகிறார் பவுல்.

இந்தப் போராட்டத்திற்கான காரணத்தையும் கண்டுபிடிக்கிறார் பவுல். அதாவது கடவுளின் சட்டத்திற்கு எதிரான பாவம் என்னும் சட்டம் என் உறுப்புகளில் செயலாற்றுகிறது.

'நல்லது - தீயது' என்பது ஒரு சட்டம். இது கடவுளின் சட்டம்.

'இன்பம் தருவது - துன்பம் தருவது' என்பது மற்றொரு சட்டம். இது பாவத்தின் சட்டம்.

என் உடல் இந்த இரண்டாவது சட்டத்தின் படி நடக்கத் தொடங்கி 'இன்பம் தருவதை' தழுவிக்கொண்டு, 'துன்பம் தருவதை' தள்ளி விடுகிறது.

பவுல் தன் இயலாமையை 'ஐயோ! இரங்கத்தக்க மனிதன் நான்!' என வெளிப்படுத்துகின்றார்.

பவுலின் இயலாமைதான் நம் ஒவ்வொருவரின் இயலாமையும்கூட.

இந்த இயலாமையில் நாம் சில நேரங்களில் நம் செயல்களை நியாயப்படுத்தவும் தொடங்கிவிடுகிறோம். 'இது மனித பலவீனம்!' என்று மனித வரலாற்றில் எத்தனையோ ஆயிரம் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மற்றொரு பக்கம், 'என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வேன்!' என்று சொல்கிறோமே, அந்த 'எவ்வளவு' என்ன என்பதை நாம் அளந்து பார்த்திருக்கிறோமா? 'இவ்வளவு'தான் என்று நாம் சுருக்கிக்கொள்ளவில்லையா?

மேலும், பவுலின் நாணயத்தையும், நன்னயத்தையும் நாளைய முதல்வாசகம் சொல்கிறது.

அதாவது, 'இதுதான் நான்' என்று தன் மனப்போரட்டத்தை தன் திருஅவைமுன் வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றார். 'நான் புனிதன்' என்றோ, 'நான் போரட்டத்தை வென்றவன், நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்' என்று தன்னை எடுத்துக்காட்டாகவும் முன்வைக்கவில்லை. அருள்நிலையில் இருக்கும் எனக்கு இந்தப் பண்பு அவசியம். பல நேரங்களில் என் பலவீனங்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருப்பதில்தான் நான் கருத்தாயிருக்கிறேன். 'மற்றவர்களைவிட நான் சிறந்தவன்' என்று என்னையே தள்ளிவைத்துக்கொள்ளாமல், 'மற்றவர்களைப் போலவே நானும் பலவீனங்களோடு போராடுபவன்' என்று என்னையே அவர்களோடு ஒன்றிணைத்துக் கொண்டால் எத்துணை நலம்!


Wednesday, October 21, 2015

சம்பளம்

'பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு' (காண். உரோ 6:19-23)

நீங்கள் பாவத்திற்கு அடிமையா அல்லது கடவுளுக்கு அடிமையா என்று கேள்வி கேட்கும் பவுல், தொடர்ந்து உரோமைத் திருச்சபைக்கு அறிவுறுத்துவதுதான் நாளைய முதல் வாசகம்.

இதுவரை நீங்கள் பாவத்திற்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்கியிருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு சாவைத் தவிர என்ன கிடைத்தது? என்று கேட்கும் பவுல், 'இனியாவது கடவுளுக்கு அடிமையாக்குங்கள்' என அவர்களை மன்றாடிக் கேட்கின்றார்.
'பாவத்தின் சம்பளம் மரணம்' - என்று சில பெந்தேகோஸ்து சபையினர் சுவரொட்டிகள் அடித்து மதுரை கோரிப்பாளையும் பகுதி முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.

'பாவத்தின் சம்பளம் மரணம்' என்றால் 'பாவத்தின் போனஸ் என்ன?' என்று யாராவது எழுதியிருக்கலாம் என நான் என் நண்பரிடம் கமெண்ட் அடித்தேன்.

'பாவத்தின் சம்பளம் சாவு' என்று சொல்லும்போது பவுல் இரண்டு விஷயங்களைச் சொல்கின்றார்:

1. தொடக்கத்தில் முதற்பெற்றோரின் பாவத்தால் சாவு உலகிற்கு வந்தது. ஆக, அவர்களின் பாவத்தின் சம்பளம் மரணம்.

2. ஒவ்வொருமுறை நாம் பாவம் செய்யும்போது சின்னதாக இறக்கிறோம். உடலளவில் இல்லையென்றாலும், மனதளவில்.

ஆனால் 'டாடி எனக்கொரு டவுட்டு!'

பாவம் என்ற ஒன்றே இல்லையென்றால், மனித தவறை இயற்கைநிகழ்வாக எடுத்துக்கொண்டு சென்றால் எத்துணை நலம்.

பாவம் என்று வந்தவுடன் குற்றவுணர்வு வந்துவிடுகிறது. இந்த குற்றவுணர்வின் குழந்தை பயம். குற்றவுணர்வும் பயமும் சேர்ந்து பெற்றெடுத்த குறைமாதக் குழந்தைதான் நாம் கொண்டிருக்கும் சமயம் - எந்த சமயம் என்றாலும் சரி.

'நாம் செய்யும் நல்லதுக்காக கைதட்டாத கடவுள், நாம் செய்யும் கெட்டதுக்காக நம் கண்ணைக் குத்துவார்' என்று சொல்வது எவ்வளவு பெரிய மடமை.

ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்!


Tuesday, October 20, 2015

நீங்கள் அடிமைகள்

'எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ
அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ?' (உரோ 6:16)

சட்டத்திற்கு உட்படுவதா, அருளின் ஆட்சிக்கு உட்படுவதா என்று தொடர்ந்து தன் திருமடலில் விவாதிக்கின்றார் பவுல்.

இதில் சட்டம் என்பது பாவம் என்றும், அருளின் ஆட்சி என்பது கடவுள் என்றும் இடையே ஒப்பீடும் செய்துகொள்கின்றார்.

அடிமைத்தனம் என்றவுடன் கறுப்பாக சங்கிலியால் கட்டப்பட்ட ஒருவர் பொதுவிடத்தில் வெள்ளையர் ஒருவரால் விலைபேசப்படும் வரலாறு புத்தகத்தின் படம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் இது மட்டும்தானா அடிமைத்தனம்?

இன்று அடிமைத்தனம் பல முகங்களைக் கொண்டு நம் முன் நடமாடி வருகிறது.

தொலைபேசிக்கு, மதுவிற்கு, இணையதளத்திற்கு, படிப்பிற்கு, வேலைக்கு என நிறைய அடிமைத்தனங்கள் தினந்தோறும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒன்றிற்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்பதை நாம் இரண்டு குணங்களில் வைத்துத் தெரிந்து கொள்ளலாம்:

அ. அந்த ஒன்றிடம் நான் என்னையே ஒப்புவித்துவிடுகிறேன்
ஆ. அந்த ஒன்றிற்கு நான் எப்போதும் கீழ்ப்படிகிறேன்

அ. ஒப்புவித்தல். 'ஒப்புவித்தல்' என்பது திருக்குறளில் ஒரு அதிகாரம் படித்துவிட்டு அடுத்தவரிடம் ஒப்புவிக்கும் படிப்பு யுக்தி அன்று. ஒப்புவித்தல் என்பதில் நான் என் மனதை மற்றவரிடம் கொடுத்துவிடுகிறேன். அதாவது, அடுத்தவரைப் போல நான் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன். உதாரணத்திற்கு, நான் மதுவிற்கு அடிமை என வைத்துக்கொள்வோம். அங்கே என் மனம் எப்போதும் மதுவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். ஏற்கனவே குடித்த பாட்டில், நாளை குடிக்கப் போகும் பாட்டில், இன்று குடிக்கும் பாட்டில், இந்த மதுவை வாங்குவதா, திருடுவதா, விலையில்லாமல் குடிப்பதா, குடித்துவிட்டு நேற்றுபோல சாப்பிடாமல் கிடப்பதா, அல்லது நன்றாக சாப்பிடுவதா என்று மதுவையொட்டி மட்டும் என் சிந்தனை அமைந்துவிட்டால் நான் மதுவிற்கு அடிமை. இந்த ஒப்புவித்தலில் என்னால் வேறெதையும் பற்றி சிந்திக்கவே முடியாது. வேறொரு வேலையை நான் செய்ய வேண்டியிருப்பினும் என் மனம் என்னவோ மதுமேலேயே இருக்கும்.

ஆ. கீழ்ப்படிதல். 'டே இங்கே வா! இதை ஐந்து காப்பி ஜெராக்ஸ் எடுத்து வா!' என்று என் ஆசிரியர் என்னிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனடியாக நான் அதை எடுத்துக்கொண்டு ஜெராக்ஸ் செய்ய ஓடுகிறேன். இதை நீங்கள் 'கீழ்ப்படிதல்' என்கிறீர்கள். இந்தக் கீழ்ப்படிதலில் என்ன நடக்கிறது? என் ஆசிரியரின் கால் மற்றும் கையாக நான் செயல்பட்டு அவருக்குத் தேவையானதை நான் நிறைவேற்றிக்கொடுக்கிறேன். கீழ்ப்படிதலில் நான் அவருக்கு அல்லது அதற்கு என் உடலையும் கொடுத்துவிடுகிறேன். மதுக்கடை நோக்கியே என் கால்கள் இருக்கும். எங்கே பாட்டில் இருக்கிறது என்று கண்களும், கைகளும் தேடும். மதுவைத் தொட்டுப் பார்ப்பதில், சுவைத்துப் பார்ப்பதில் அலாதி இன்பம் பிறக்கும். அந்த இன்பத்தை முன்னதாகவே மனம் கற்பனை செய்து பார்க்கும்.

ஆக, என் மனமும், என் உடலும் என்னிடம் அன்றி மற்றவரிடம் அல்லது மற்றதிடம் நான் கொடுத்துவிட்டால் நான் அவருக்கும், அதற்கும் அடிமையாகிவிடுகிறேன்.

பாவம் என்ன செய்கிறதாம்? நம்மை உடலின் இச்சைகளுக்கு அடிமையாகச் சொல்கிறது (உரோ 6:12).

கடவுளுக்கு நான் அடிமையானால் என் மனதை கடவுளுக்கு ஒப்புவித்து, என் உடலை கடவுளுக்கு கீழ்ப்படியச் செய்வேன்.

அருள்நிலை வாழ்வில் 'கீழ்ப்படிதல்' என்பது நாங்கள் கொடுக்கும் அல்லது எடுக்கும் மூன்று வாக்குறுதிகளில் மூன்றாவதாகும். எனக்கு மேலிருக்கும் ஆயருக்கு நான் கீழ்ப்படிய வேண்டும். அந்த ஆயர் என்முன் கடவுளின் பிரதிநிதியாக இருக்கின்றார்.

கீழ்ப்படிதலில் ஒரு மனச்சுதந்திமும் இருக்கிறது. அதாவது, நான் கீழ்ப்படிந்துவிட்டால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, அடுத்த ஜூன் முதல் என்ன செய்வது என்று என் மனதில் குழம்பிக் கொண்டிருக்காமல், 'ஆயர் அனுப்பும் இடத்திற்குச் செல்வேன்' என்று நான் கீழ்ப்படிந்துவிட்டால், அங்கே என் மனம் சுதந்திரம் பெற்றுவிடுகிறது. என் கவலை மேகம் கலைந்துவிடுகிறது. அதற்காக, 'பொறுப்பை தட்டிக்கழித்தல்' என்றும் நான் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன்று நான் கேட்கும் கேள்வி இதுதான்:

நான் எதற்கு அல்லது யாருக்கு அடிமையாகிறேனோ, அதற்கு அல்லது அவருக்கு என் மனதையும், உடலையும் ஒப்படைத்துவிடுகிறேன்?

இன்று நான் எதற்கு அல்லது யாருக்கு அடிமை?

அல்லது

இன்று எதனிடம் அல்லது யாரிடம் என் மனமும், உடலும் இருக்கிறது?

Monday, October 19, 2015

பாவம் நல்லது

'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' (காண். உரோ 5:20-21)

நான் உரோமையருக்கு எழுதிய திருமடலை முதன்முதலாக வாசித்தபோது என்னைத் தொட்ட வரி இந்த வரிதாம்.

ஆங்கிலத்தில் இன்னும் அழகாக இருக்கும்: "Where sin was abundant grace was overabundant".

இதைச் சொல்லியும், சொல்லாமல் பவுல் தொடர்ந்து இப்படி எழுதுகிறார்: 'அதற்காக அருள் பெருக வேண்டும் என்று பாவம் செய்யலாமா?'

இப்படி ஒரு கேள்வி வரும் என்பதை அவராகவே யோசிக்கின்றார். என்னவொரு லாஜிக்! என்னவொரு இன்ட்டலிஜன்ஸ்!

ஒரு மனிதரால் பாவம் வருகிறது இந்த உலகிற்குள். சரி! எல்லாம் முடிந்துவிட்டது! - என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு மனிதரால் அருள் வருகிறது.

'முடிவு என உலகம் நினைப்பதை விடிவு எனக் காட்டுபவர்தான் இறைவன்!'

இந்த நாட்களில் அகுஸ்தினாரின் 'கன்ஃபெஷன்ஸ்' மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அகுஸ்தினாரின் வாழ்வுக்கு மேற்காணும் பவுலின் வரி நன்றாகவே பொருந்துகிறது.

எந்த அளவிற்கு அவர் இறைவனை விட்டுத் தூரத்தில் இருந்தாரோ, அதைவிட அதிகமாக அவரைப் பற்றிக்கொள்கின்றார்.

பாவத்தின் இயல்பு இதுதான். கொஞ்ச நேரம் இன்பத்தைத் தந்துவிட்டு நம் நீண்ட நேர மகிழ்ச்சியைக் களவாடி விடுகிறது.

பவுலின் இந்த வார்த்தைகள் சொல்வது என்ன?

'இருளாய் இருக்கிறது என்று மனம் கலங்கிவிடக் கூடாது. ஒளி வரும்.'

ஒவ்வொரு ஆன்மாவும் இருள்சூழ்ந்த இரவை அனுபவிக்கும் - தோல்வியில், விரக்தியில், ஏமாற்றத்தில், ஆசையில், கோபத்தில், குரோதத்தில், வெறுப்பில். ஆனால், அந்த இரவு கடந்து போகும்.

காலையில் வெளிச்சம் உள்ளே வரும் - வெற்றியில், சுறுசுறுப்பில், பெறுதலில், ஆசையைக் கடத்தலில், மன்னித்தலில், ஏற்றுக்கொள்ளுதலில், அன்பு பாரட்டுதலில்.

இந்தப் பின்னைய வெளிச்சம் உள்ளே வந்தவுடன் முந்தைய இருள் பறந்து போய்விடும்.

இருளை அனுபவித்த ஒருவர்தான் ஒளியை ரசிக்க முடியும்.

ஆக, 'கறை நல்லது' என்று சர்ஃப் எக்சல் விளம்பரம் சொல்வது போல, 'பாவம் நல்லது' என நாம் சொல்லலாமே!



வாழ்வு வந்துவிடாது

'நான் நல்லா இருக்கிறேன்!
எனக்கு நிறையா சொத்து இருக்கிறது!
என் வயலில் நல்ல அறுவடை!'
என்று கட்டிலில் படுத்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த
செல்வந்தன் ஒருவனுக்கு கெட்ட கனவு வருகிறது.

இந்த செல்வந்தன் யாரையும் ஏமாற்றவில்லை.
யார் சொத்தையும் அபகரிக்கவில்லை.
அவன் உழைத்தான். அவன் அறுவடை செய்தான்
அவன் சொத்து சேர்த்தான்.

பின் ஏன் கடவுள் அவனை இப்படிச் சாட வேண்டும்?

இரண்டு காரணங்கள்:

அ. மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது
ஆ. கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய் தமக்காக செல்வம் சேர்ப்பது ஆபத்து

வாழ்வு என்றால் என்ன?
கடவுள் முன்னிலையில் செல்வம் என்றால் என்ன?

இரண்டும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.

அதாவது, நாம் நம்மிலேலே நிறைவானவர்கள்தாம். நமக்கு வெளியில் இருக்கும் எதுவும், யாரும் நம்மை நிறைவு செய்வதில்லை.

அப்படி வெளியிலிருந்து நம்மை நிறைவு செய்தால் அவர் கடவுளாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால் கடவுள்தான் நமக்கு உள்ளேயும் இருக்கிறாரே.


Saturday, October 17, 2015

வலப்புறமும், இடப்புறமும்

இயேசுவின் சீடர்கள் 12 பேரில் 2பேர்தான் மிகவும் பணம்படைத்தவர்களாக, அல்லது பணக்கார பின்புலத்தோடு வந்திருக்க முடியும்.

யார் அந்த இரண்டு பேர்?

செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவான்.

ஏன்?

இவர்களை இயேசு அழைக்கும்போது, இவர்கள் தங்கள் தந்தையை கூலியாட்களோடும், தங்கள் படகையும், வலைகளையும் விட்டுவிட்டு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆக, இவர்களுக்குச் சொந்தமாக படகு, வலைகள் - அதாவது, தொழில் - இருந்தது. மேலும் இந்தக் குடும்பத்தை நம்பி சில கூலியாட்களும் இருந்தனர். கூலியாட்களை வைத்திருப்பது என்பது இயேசுவின் காலத்தில் பெரிய அதிகாரத்தின் அல்லது பணபலத்தின் அடையாளமாக இருந்தது.

இந்த சகோதரர்கள் தங்களுக்கென்று இருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றனர்.

பேதுருவோடு இணைந்த இந்த இரண்டு சீடர்களும் இயேசுவைச் சுற்றிய முதல் வட்டத்தில் இருக்கின்றனர்.

இந்த இருவரும் இயேசுவுக்குப் பின்னும் திருச்சபையில் முதன்மையான இடம் பிடித்திருந்தனர். யாக்கோபும், யோவானும் இயேசுவுக்கு இரத்த உறவானவர்கள் என்றும் பாரம்பரியம் சொல்கிறது. ஆக, இரத்த உறவு அடிப்படையில் இவர்களில் ஒருவரையே தொடக்கத் திருச்சபை இறைமக்கள் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள விரும்பினர்.

'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும்' என்ற சொல்லாடலை நாம் நற்செய்தி நூலில் நாளைய பகுதி தவிர இரண்டு இடங்களில் வாசிக்கின்றோம்: இறுதி நீதித்தீர்ப்பின்போது கடவுள் வலப்புறம், இடப்புறம் என மக்களைப் பிரிக்கின்றார். இரண்டாவதாக, இயேசுவின் அருகில் வலப்புறம் ஒருவரும், இடப்புறம் ஒருவரும் சிலுவையில் அறையப்படுகின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளிலும், வலது என்பது சிறந்தது என்பதும், இடது என்பது தாழ்வானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆக, வலதைத் தேர்ந்து கொண்டு, இடதை ஒதுக்கிவிட வேண்டும்.

ஆனால், இன்று வலது-இடது பேதம் யாரும் பார்ப்பதில்லை. நம்ம ஊர்க்குழந்தைகளும் இப்போ இடது கையில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பதில்லை.

நாளைய நற்செய்தி வாசகத்திலும் வலது-இடது பேதமில்லை. யாக்கோபும், யோவானும் இயேசுவுக்கு அருகில் இருக்க விரும்புகின்றனர். அருகிருக்க விரும்புவது தவறா? இல்லை. பின் அவர்களின் தவறு என்ன?

'நான் அருகிலிருக்கிறேன். மற்றவர்கள் தூரத்தில் இருக்கட்டும்' என்று தங்களை முன்னிருத்தி மற்ற பதின்மரை ஓரங்கட்டியதுதான் தவறு. இது மற்றவர்கள் மனதிலும் கோபத்தை உருவாக்குகிறது.

'ஃபேவரிட்டிசம்' - இது பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அடிக்கடி வரும் சோதனை.

சிலரை மட்டும் என்னருகில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை தள்ளி விடுவது. அல்லது சிலரின் நெருக்கத்தால் மற்றவர்கள் தாங்களாகவே தள்ளி நின்று கொள்வது. இப்படி இருக்கும்போது அங்கே பாதிக்கப்படுவது நடுவில் அமர்ந்திருப்பவரும், அருகில் நிற்பவரும்தான். நடுவில் அமர்ந்திருப்பவரை மற்றவர்கள் வெறுப்பர். அருகில் நிற்பவர்கள்மேல் மற்றவர்கள் பொறாமை கொள்வர்.

தன் திருஅவையின் நலன்கருதி இயேசு இவர்களின் கோரிக்கையை உடனடியாக நிராகரிக்கின்றார். 'அது யாருக்கோ எழுதியிருக்கிறது!' என்று சொல்லி கடையை மூடுகின்றார்.

இன்று கடவுளை நான் நெருங்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது. ஆனால் இந்த ஆசை அல்லது நெருக்கம் மற்றவர்களை அவரை நெருங்கவிடாமல் செய்யக் கூடாது.

என்னைவிட பெரியவர்கள், பதவியில் இருப்பவர்கள் என யாரைப் பார்த்தாலும் என் மனம் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விழைந்தால், நான் ஒருநிமிடம் மற்றவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். என் அடையாளம் எனக்கு உள்ளேயே இருக்கிறது. பெரியவர்களுடன் நான் இணைந்திருப்பதால் எனக்கு மேன்மை வந்துவிடுகிறதா. இல்லை. என் மேன்மை எனக்குள். அந்த மேன்மையை மென்மையாக கடைசியில் இருப்பவரின் பாதம் கழுவப் பயன்படுத்தினால் அதுவே சால்பு.


Friday, October 16, 2015

தூய ஆவியாருக்கு எதிரான பாவம்

நான் ஒப்புரவு அருளடையாளம் நிறைவேற்றும்போதெல்லாம் என்னில் நெருடலாக இருக்கும் நற்செய்தி வாசகம் நாளைய நற்செய்தி வாசகம்தான் (லூக்கா 12:8-12).

'எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்' என்று சொல்லும் இயேசு 'தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் மட்டும் மன்னிக்கப்படாது' என்கிறார். இதை லூக்கா மட்டுமல்ல, மத்தேயுவும், மாற்கும் பதிவு செய்கின்றனர்.

தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் என்றால் என்ன?

மேலும் இந்தப் பாவம் இயேசுவின் சமகாலத்தில் மட்டும் இருந்ததா? அல்லது இன்றும் இருக்கிறதா?

எபேசு நகருக்கு எழுதும் திருமடலில் 'தூய ஆவியானவருக்கு துயரம் வருவிக்காதீர்கள்' (4:30) என அறிவுறுத்துகிறார் பவுல்.

இந்தப் பாவம் பற்றி அறிந்து கொள்ள நாளைய முதல்வாசகத்தின் கதாநாயகன் நமக்குத் துணைவருவார்.

நாளைய முதல்வாசகத்தில் (காண். உரோ 4:13,16-18) தூய பவுல் ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கை பற்றி எழுதுகின்றார்.

'எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினாலும், அவர் எதிர்நோக்கினார்.
தயங்காமல் நம்பினார்.'

தயக்கம்தான் தூய ஆவியானவருக்கு எதிரான பாவம்.

சின்ன வயதில் ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த உலகை அழிப்பது எப்படி என்று பேய்க்குட்டிகள் கூட்டம் போட்டு யோசித்தனவாம். ஒரு பேய் சொன்னதாம்: 'நான் எல்லார் மனதிலும் கோபத்தை உருவாக்கிவிடுகிறேன். எல்லாரும் ஒருவரையொருவர் அழிப்பார்கள்!' ஆனால் இது யாருக்கும் பிடிக்கவில்லை. இன்னொரு பேய் சொன்னதாம்: 'நல்லது சொல்பவர்களை அல்லது நல்லது செய்பவர்களைக் கொன்றுவிடலாம். தீமை மட்டுமே நிலைக்கும்!' இந்த யோசனையையும் யாரும் விரும்பவில்லை. எல்லாப் பேய்களும் இப்படிச் சொல்லிக்கொண்டே சென்றன. ஆனால் எதுவும் நன்றாகப் படவில்லை. கடைசியில் ஒரு குட்டிப்பேய் சொன்னதாம்: 'நான் உலகிற்குப் போகிறேன். எல்லாரிடமும் போய் கடவுளை நம்புங்கள், நல்லது செய்யுங்கள் என்று சொல்வேன்!' எல்லாருக்கும் ஷாக். 'ஐயயோ!' என்றன எல்லாப் பேய்களும். 'கொஞ்சம் பொறுங்க!' என்று சொல்லி குட்டிப்பேய் தொடர்ந்து சொன்னது: 'ஆனால், இன்றே நம்ப வேண்டுமா! இன்றே நன்மை செய்ய வேண்டுமா! என்று தயக்கத்தை விதைப்பேன்!'

தயக்கம் தங்கிவிட்டால் நாமும் இருக்கும் இடத்தில் தங்கிவிடுகிறோம். வாழ்க்கை தேங்கி விடுகிறது. ஆகையால்தான் 'தங்குதலும்' 'தேங்குதலும்' தொடர்புடைய வார்த்தைகளாக இருக்கின்றன.

ஆபிரகாம் தயக்கம் காட்டியிருந்தால் தன் சமவயதினர்போல மறைந்திருப்பார். ஆனால், தயங்காமல் நம்பினார்.

இன்று என்னை ஏற்றுக்கொள்வதிலும், என் நண்பர்களை ஏற்றுக்கொள்வதிலும், என் இறைவனை ஏற்றுக்கொள்வதிலும் நான் தயக்கம் காட்டுகிறேனா?

இந்தத் தயக்கம் என்னுள் குடியிருக்கும் தூய ஆவியானவருக்குத் துயரம் வருவிக்கிறது!


Thursday, October 15, 2015

புளிப்பு மாவு

இட்லி, தோசை, ஆப்பம் என நாம் சுவைக்கும் தென்னிந்திய உணவுகள் சமைப்பதற்கும், ரொட்டி, கேக் போன்ற வெளிநாட்டு உணவுகள் சமைப்பதற்கும் மாவு புளிக்க வேண்டும்.

அதிகம் புளித்தாலும் ஆபத்து. கொஞ்சம்கூட புளிக்காவிட்டாலும் ஆபத்து.

செயற்கையாக புளிப்பை ஊட்ட நாம் 'ஈஸ்ட்' என்னும் பாக்டீரியா சேர்க்கின்றோம். இந்த ஈஸ்ட் மாவில் சேர்க்கப்பட்டுவிட்டால் அதை மற்ற மாவிலிருந்து பிரிக்க முடியாது (inseparable process). மேலும், இந்த ஈஸ்ட் மற்ற மாவில் பரவி அதை புளிப்பேற்றுவதையும் நாம் தடுக்க முடியாது (uncontrollable process). இந்தப் புளிப்பேற்றும் முறை நம் புலன்களுக்கும் அப்பாற்பட்டது. மேலும் புளிப்பேறிய மாவை நாம் மறுபடியும் புளிப்பில்லாமல் ஆக்க முடியாது (irreversible process).

பரிசேயர்களின் 'ஈஸ்ட்' குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்?

அவர்களின் மனப்பாங்கு (attitude) குறித்து எச்சரிக்கையாயிருங்கள்?

நம் ஒட்டுமொத்த தான்மையை ஒரு பெரிய பனிப்பாறை (iceberg) என எடுத்துக்கொண்டால் நம் செயல்கள், சொற்கள் எல்லாம் வெளியில் தெரியும் வெறும் 5 சதவிகிதம்தான். ஆனால், வெளியில் தெரியாத 95 சதவிகிதம்தான் நம் மனப்பாங்கு. இதைப் பொறுத்தே நம் செயல்பாடுகள் அமைகின்றன. இதுதான் நம் வாழ்வின் இன்ப, துன்பங்களை நிர்ணயிக்கிறது. நம் வாழ்வை நாம் சமமாக வாழ உதவி செய்கிறது.

பரிசேயரின் மனப்பாங்கு அல்லது வெளிவேடம் புளிக்காரம் போல மற்றவர்கள் மேல் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நாம் கவனமாக இல்லாவிட்டால் அது வேகமாக பரவி, நம்மையும் புளிப்பேற்றிவிடும். அப்படி நாமும் புளிப்பேறிவிட்டால் நம் மனப்பாங்கை மாற்றுவது மிகவும் கடினம். நம் செயல்கள் அல்லது சொற்களும் புளிப்பேறத் தொடங்கிவிடும். நாமும் அவர்கள்போல வெளிவேடம் போட தொடங்கிவிடுவோம்.

பரிசேயர்களின் புளிப்பு மாவு என்னும் மனப்பாங்கு மட்டுமல்ல, நாம் நமக்கு வெளியிலிருந்து வரும் எல்லா புளிப்பு குறித்தும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நாம் நம் புலன்கள் வழியாக எதை உள்ளே எடுத்துக்கொள்கிறோம் என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.

இதையே தூய பவுல் கொரிந்து நகரத் திருச்சபைக்கு (5:6-8) எழுதுகிறார்:

'நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

எனவே புளிப்பு சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்புமாவோடு அல்ல. மாறாக, நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக!'

இன்று என் மனப்பாங்கை மாற்றும் புளிப்பு மாவு எது?

Wednesday, October 14, 2015

நைட் வாட்ச்மேன்

வலைப்பூவில் பதிவிட்டு இன்றுடன் 20 நாட்கள் ஆகிவிட்டன.

21 நாட்கள் ஒன்றைத் தொடர்ந்து செய்தால் அது ஒருவரின் அழிக்க முடியாத பழக்கமாகிவிடும் என்று கல்வியியல் மேலாண்மையியலில் சொல்வார்கள். 20 நாட்கள்தான் ஆகின்றன. ஆக, இது பழக்கமாக மாற வாய்ப்பில்லை.

விடுமுறை முடிந்து இனிதே உரோமை திரும்பினேன்.

கொஞ்சம் உடல்நலக்குறைவு. இது தவிர வேறொன்றும் குறையில்லை.

புதிய இடங்கள், புதிய நபர்கள், புதிய சந்திப்புகள் என இந்த விடுமுறை பல புதியவற்றிற்கு வழிவகுத்தது.

புதியவை வந்தால் பழையவை மறைந்துவிடுமா என்ன?

பழைய நட்பு, பழைய உறவு எதுவும் அர்த்தத்தில், சுவையில் குறைந்துவிடவும் இல்லை.

கோப்பைகளை நிரப்பி தழும்ப வைக்கின்றார் இறைவன். அவருக்கு நன்றி.

வலைப்பூ உருவாக்குவது எந்த அளவிற்கு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதை நாடி வரும் வாசகர்களைத் தக்கவைப்பது.
ஒருநாளைக்கு ஒரு லட்சம் பேர் பார்க்கும் வலைப்பூக்களும் இருக்கின்றன.

நாளைய இறைவாக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் திபா 130ஐ சிந்தனையின் மையமாக எடுத்துக்கொள்வோம்.

அருட்பணியாளர் இறந்தவரின் வீட்டில் சொல்லும் செபத்தின் தொடக்கம் இந்தத் திருப்பாடல்தான்.

இந்தத் திருப்பாடலில் வரும் மிக அழகிய உருவகம் 'வாட்ச்மேன்!'

'விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,
ஆம், விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது' (திபா 130:5)

என்று பாடுகின்றார் ஆசிரியர்.

ஒருகாலத்தில் திடகாத்திரமாக உள்ளவர்கள் மட்டும்தான் வாட்ச்மேன்களாக நியமிக்கப்பட்டனர். இன்று ரிடையர்ட் ஆன ஆண்கள்தான் அதிகமாக வாட்ச்மேன்களாக இருக்கின்றனர்.

நானும் என் நண்பர் அகஸ்டினும் ஒருநாள் இரவு மாட்டுத்தாவணியில் இருந்து புதூர் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம். ஃபியட் கார்களின் ஒர்க்ஷாப்பின் வெளியில் ஒரு ஸ்டீல் சேரில் அமர்ந்திருந்த வயதான வாட்ச்மேன் (70க்கு மேல் இருக்கும்) கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து தன் சைக்களில் மாட்டியிருந்த டிபன் கேரியரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

தன் வாழ்நாளில் சைக்கிளைவிட வேறு எதிலும் பயணம் செய்திராத ஒருவர் ஃபியட் கார் நிறுவனத்தில் காப்பாளராக இருப்பது எவ்வளவு பெரிய முரண்!

ஒன்பது மணிதான் ஆகியிருந்தது. ஆனால், அவரின் முகத்தில் தூக்கம் அப்பியிருந்தது. பகல்முழுவதும் வேறு வேலைக்குச் சென்றுவிட்டு, இந்த வயதில் இரண்டாம் வேலை பார்க்கும் இவரின் குடும்பப் பிண்ணனி என்னவோ?

ஆனால் இவரைப் போலவே இந்த இரவில் கண்விழிக்கும் எல்லா வாட்ச்மேன்களின் ஒட்டுமொத்த உணர்வைப் பதிவு செய்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

'எப்போது விடியும்?' என்று காத்திருக்கும் இந்த வாட்ச்மேன்களின் உணர்வு வெறும் ஏக்கம் மட்டுமல்ல. பயமும் கூட. இரவில் எதுவும் நடக்கலாம். பாதுகாப்பாக இந்த இரவு விடியுமா என்ற பயம். தன்னை நோக்கி வரும் யாவரிடமும் இவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பனி, குளிர், மழை என எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். வேண்டா வெறுப்பாக ஆறிப்போயிருக்கும் டீயைக் குடித்துக்கொள்ள வேண்டும். சற்றே கண்ணயர்ந்தாலும், எந்த அரவமும் அவரை எழுப்ப வேண்டும். மேலும், உலகமே தூங்கிக்கொண்டிருக்கும் வேலையில் இவர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும். மற்றவர்கள் செய்வதற்கு முரணான காரியத்தை செய்வதால்தான் இவர் ஊதியம் பெறுகின்றார்.

இவரின் உச்சகட்ட பாதுகாப்பு இவரின் கையில் இருக்கும் ஒரு குச்சிதான். கள்வர்களால் இவர் தாக்கப்பட்டாலும் இவரைக் கண்டுகொள்வார் யாருமில்லை. இவர்களுக்கென்று எந்த பணி நிரந்தரமும் கிடையாது. இவர்களின் உரிமைகளுக்காக யாரும் போராடுவதில்லை. பகலில் போரடச் சென்றுவிட்டால் இரவில் இவர்களால் எப்படி விழித்திருக்க முடியும்?

நம் மனித வாழ்க்கையை இவரோடு பொறுத்திப்பார்க்க எந்த அளவிற்கு ஞானம் பெற்றிருக்க வேண்டும் திருப்பாடல் ஆசிரியர்?

நம் மனித வாழ்வும் தூக்கத்தில் விழித்திருக்கும் இந்த காவலர் போன்றதுதானே. அடுத்த என்ன நடக்கும் என்ற பயம், விடியுமா என்ற ஏக்கம், டீ தரும் உற்சாகம் என எல்லாம் கலந்ததுதானே என் வாழ்க்கை.

பின்வரும் வரிகளை மௌனமாக வாசித்தாலே போதும்.

வாழ்வை நாம் புதியதாகப் பார்க்கத் தொடங்குவோம்:

'ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்.

என் நெஞ்சம் காத்திருக்கின்றது.

அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,

ஆம், விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,

என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது...'