Sunday, May 31, 2015

பச்சை குத்துதல்

எனக்கு ஏழாம் வகுப்பில் வகுப்பாசிரியராக இருந்த திரு. முருகேசன் ஆசிரியர் கையில்தான் முதன்முதலாக பச்சை குத்தியதைப் பார்த்த நினைவிருக்கிறது. கைகள், பெருவிரல், நெஞ்சு என பச்சை குத்தி நாம் பார்த்திருப்போம். நான் குத்தியிருக்கும் என் பெயர் ஒன்றுதான் என்னுடன் வரும், என்று தான் பச்சை குத்தியதைப் பற்றி அடிக்கடி சொல்வார் முருகேசன் சார்.

பச்சை குத்துவதால் எய்ட்ஸ் பரவும் என்று அறிவிப்பு வந்தவுடன் அப்படியே அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது.

இப்போ அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டாட்டு.

இரண்டு நாட்களுக்கு கையில் நிற்கும் 'பூமர்' பப்பிள்கம் டாட்டு. இரண்டு மாதங்களுக்கு நிற்கும் டாட்டு. என்றுமே அழியாத டாட்டு என நிறைய வந்துவிட்டன இன்று.

இன்று மெட்ரோவில் ஒருவர் தன் உடல் முழுவதும் டாட்டு குத்தியிருந்தார்.

தேள், வண்ணத்துப்பூச்சி, தலைவிரித்த பெண், எலும்புக்கூடு, மனித தலை, காளி போன்ற ஒரு உருவம், சில எழுத்துகள் என நிறைய இருந்தன.
வெள்ளையாக இருக்கும் தோலுக்கு மேல் கறுப்பாக அல்லது பச்சையாக குத்தும் டாட்டு தற்காலிகமாக அந்த இடத்தை வேறு நிறத்திற்கு மாற்றுகிறது.

ஆக, என்னதான் அடையாளங்களை அவர்கள் தங்கள் உடலில் சுமந்தாலும், மறைமுகமாக அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் தங்களின் தோல் நிறத்தை விட வேறு நிறத்தை அவர்கள் பூசிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதுதான்.


Friday, May 29, 2015

இன்றும் என்றும் இருப்பர்!

'முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்.
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவும் இல்லை!'
(சபை உரையாளர் 1:9)

இன்று எங்களுக்குக் கல்வி ஆண்டின் இறுதி நாள்.

எங்களின் எபிரேய ஆசிரியர் க்ரோசனோஸ்கி. போலந்துக்காரர். வயது 40 இருக்கும். ரொம்ப கூலாக சொல்லிக் கொடுப்பார். இவர் சொல்லிக் கொடுக்கும் விதம் பல மாணவர்களுக்குப் பிடிப்பதில்லை. 'அவர் எங்களுக்கு வேண்டாம்!' என்று புகாரும் கொடுத்துவிட்டனர். ஆனால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவர் முதன்முதலாக வைத்த தேர்வில் எனக்கு மதிப்பெண் தர மறந்துவிட்டார். அன்று புதிய வகுப்புகள் தொடங்கும் நேரம். மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும். எல்லாரும் போய்விட்டார்கள். நான் மட்டும் வெளியே நின்றேன். 'என்ன வெளியே நிற்கிறாய்?' என்றார். 'என் மதிப்பெண் இன்னும் வரவில்லை!' என்றேன். அப்போதுதான் அவர் தான் செய்த தவறை நினைவுகூர்ந்தார். என் பேப்பரை திருத்தாமலே வைத்துவிட்டாராம். 'உன் பேப்பரை வைத்துதான் எல்லா பேப்பரையும் திருத்தினேன். ஆனால், உன் பேப்பரை திருத்த மறந்துவிட்டேன்!' என்றார். 'மன்னித்துக்கொள்!' என்று தோளில் கைபோட்டவர் என்னை வகுப்பறைக்குள் அழைத்துச்சென்றார்.

இந்த இறுதி நாளில் நான் நன்றியோடு நினைவுகூறும் பலரில் இவரும் ஒருவர்.

வகுப்பிற்கு யாராவது வரமுடியவில்லை என்று இவரிடம் அனுமதி கேட்டால் இவர் சொல்வது இதுதான்:

'There is Nothing New Under the Sun' (Eccl. 1:9)

நான் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. எல்லாம் உனக்குத் தெரிந்ததுதான்! என்று அவர் சொல்லும்போது ஒரே நேரத்தில் தனக்கு எல்லாம் தெரியாது என்ற அவரின் தாழ்ச்சியும், மாணவர்களுக்கும் எல்லாம் தெரியும் என்று ஏற்றுக்கொள்ளும் தாராள மனமும் தெரியும்.

வாழ்வில் எதுவும் புதிதில்லை! என்பது எதிர்மறையான சொல்லாடலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சபை உரையாளரின் இந்த வார்த்தைகள் சொல்வது என்னவென்றால், எதுவும் புதிதல்ல என்பதால் எதன்மேலும் அதீத ஆசையும், பற்றும். கொள்ள வேண்டாம் என்பதுதான்.
மேலும் இன்று ஒரு சோகமான நாள். என் பங்கில் எனக்குப் பிடித்தமான பாட்டி திருமதி. மரூசா அவர்கள் நேற்று இரவு இறந்துவிட்டார்கள். இன்று காலை அவரின் அடக்கத்திருப்பலி. வகுப்புகள் இருப்பதால் அடக்கத்திற்குச் செல்ல முடியவில்லை.

என்ன ஒரு ஒற்றுமை! இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளும் இவைதான்:

'முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்.
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவும் இல்லை!'

அந்தப் பேராசிரியரும், இந்த மரூசாவும், இன்றும் என்றும் இருப்பர்!

Thursday, May 28, 2015

நீங்கள் என்ன கேட்கிறீர்கள்?

இயேசுவோ அவர்களிடம், 'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'இயலும்' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, 'நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்...' என்று கூறினார். (மாற்கு 10:38-39)

செபதேயுவின் மக்கள் யோவானும், யாக்கோபும் இயேசுவின் அரியணையின் வலப்புறமும், இடப்புறமும் இடம் கேட்கும் நிகழ்வை நேற்று திருப்பலியில் வாசித்தோம்.

இதே நிகழ்வு மத்தேயு 20:20-28லிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தேயு நற்செய்தியில் சீடர்களின் தாய்தான் கேட்கிறார். சீடர்கள் கேட்கவில்லை. யோவானும், லூக்காவும் தங்கள் நற்செய்திகளில் இதைப் பதிவு செய்யவில்லை.

இந்த இரண்டு சீடர்கள் நினைத்தது ஒன்றும் தவறில்லையே!

நிறையப்பேர் சொல்வாங்க நம்ம வாழ்க்கையில 'ambition' இருக்கக் கூடாதுன்னு. ஆனால், இந்த 'ambition' என்று ஒன்று இருந்ததால்தான் மனித குலம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது.  இது இல்லையென்றால் நாம் இன்னும் குரங்காகத்தான் இருந்திருப்போம்.

பன்னிரண்டு சீடர்களும் இந்த இரண்டு பேர் நினைத்தது மாதிரிதான் நினைத்திருப்பார்கள். என்ன வித்தியாசம் என்றால், மற்ற பத்து பேர் இயேசுவிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை. இவர்கள் கொஞ்சம் 'frank' டைப். கேட்டுவிட்டார்கள்.

இயேசுவின் பதில் உடனடியாக 'ஆம்' என்றோ, 'இல்லை' என்றோ இல்லை. அவர் இரண்டு கேள்விகள் கேட்கின்றார். 'கிண்ணத்தில் குடிக்க இயலுமா?' மற்றும் 'திருமுழுக்கு பெற இயலுமா?' இந்தக் கேள்விகளுக்கு இந்த இரண்டு சீடர்களும், 'இல்லை. முடியாது!' என்று சொல்லியிருந்தார்கள் என்றால் நிகழ்வு இத்தோடு முடிந்திருக்கும். ஆனால் அவர்கள், 'முடியும்! இயலும்!' என்று சொல்கிறார்கள். மேலோட்டமாக இதைப் பார்த்தால் இவர்களிடம் கொஞ்சம் 'pride' இருப்பதாகத் தெரியும். (Ambition இருப்பவர்கள் இயல்பாகவே கொஞ்சம் proud ஆகவும் இருப்பார்கள்!) ஆனால், ஆழமாகப் பார்த்தால் எந்த அளவுக்கு இவர்கள் இயேசுவைப்போல, அவரின் வாழ்வோடு தங்கள் வாழ்வையும் இணைத்துக்கொள்ள விழைகிறார்கள் என்றே தோன்றுகிறது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இயேசுவும் அவர்களின் பதில்மொழிக்கு எதிர்மறையாக எதுவும் கூறவில்லை. அப்படியே தட்டை மாற்றிப் போடுகிறார்: 'அந்த இடங்களை என் தந்தைதான் ஏற்பாடு செய்வார்!'

மறைமுகமாக இயேசு சொல்வது என்ன?

நீங்கள் என் கிண்ணத்தில் குடித்தும், நான் பெறும் திருமுழுக்கைப் பெற்றும் விட்டீர்கள் என்றால் அதுவே என் வலப்புறம். அதுவே என் இடப்புறம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை.

இயேசு தரும் வாழ்க்கைப் பாடங்கள் இரண்டு:

அ. வாழ்விற்குப் பின் கிடைக்கும் பரிசுக்காக வாழ்வதை விட, வாழ்வையே ஒரு பரிசாக நினைத்து வாழ். (Live as if journey is the destination)

ஆ. என் வெற்றி உன் வெற்றியாக மாறப்போவதில்லை. உன் வெற்றிதான் உன் வெற்றி. (Your success alone is your success!) (தோனி என்னதான் செஞ்சுரி அடிச்சாலும், நாம் கைதட்டி மகிழ்ந்தாலும், அவரின் வெற்றி நம் வெற்றி ஆவதில்லையே!) அடுத்தவரின் வெற்றியில் மகிழ்ந்து அந்த வெற்றியைப் பங்கு போட்டுக்கொள்வதை விட, நீயே வெற்றி அடைந்து அந்த மகிழ்வை முழுமையாக அனுபவிக்கலாமே!

இந்த இரண்டு சீடர்களுக்கும் இயேசுவின் வாழ்க்கைப் பாடம் புரிந்திருக்கும்!


Wednesday, May 27, 2015

நாமும் கடவுளே!

'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெறமாட்டாய்.
'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது.
நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்.
உன் நாடு 'பெயூலா' என்று பெயர் பெறும்.
ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்.
(எசாயா 62:4)

இன்றைய (வாரம் 4, புதன்) காலை செபத்தின் இரண்டாம் பாடலாக இருக்கிறது இந்த இறைவாக்குப் பகுதி.

திருமணம் என்ற நிகழ்வு வழியாக அல்லது திருமணத்தை உருவகமாக வைத்து இஸ்ரயேலைப் பார்த்துப் பேசுகின்றார் யாவே இறைவன்.

யூத மரபில் இன்றும் மணத்துறவு என்பது கிடையாது. மணமுடித்தலும், மணமுடித்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளுதலும் வாழ்வின் உச்சகட்ட வெற்றியாக கருதப்பட்டது. இந்தப் பின்புலத்தில் பார்த்தால்தான் மேற்காணும் இறைவாக்குப் பகுதியின் சொல் விளையாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நான்கு எபிரேய வினைச்சொற்கள் இங்கே பயன்படுத்தப்படுகின்றன - 'அசாவ்' (கைவிடுதல்), 'ஷமாம்' (காய்ந்து போதல்), 'ஹஃபாட்ஸ்' (மகிழ்ந்திருந்தல்) மற்றும் 'பஆல்' (மணமுடித்தல்). கைவிடுதல் மற்றும் காய்ந்து போதல் வழக்கமாக நிலத்தைப் பற்றிப் பேசுவதற்கான வினைச்சொற்கள். ஆக, பெண் என்பவளை நிலம் என்று உருவகப்படுத்துகிறார் ஆசிரியர். எசாயா 62 முழுவதும் இஸ்ரயேல் நாடு அல்லது நிலம் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பற்றித்தான் பேசுகின்றது.

ஆக, கைவிடப்பட்டு, காய்ந்து போய்க்கிடக்கும் நிலத்தை ஆண்டவர் தன் உரிமைச்சொத்தாக்கிக் கொள்ள விழைகின்றார்.

நம் மனம் என்னும் நிலம் அடிக்கடி இப்படி கைவிடப்பட்டு, காய்ந்து போவதுண்டு.

நம்மைத் தேடி இறைவன் வருவார் என்று நான் சொல்லவில்லை. இப்படி கைவிடப்பட்டு, காய்ந்து போன மனம் என்னும் நிலங்களை நாம் தேடிச்சென்றால், நாமும் கடவுளே!


Tuesday, May 26, 2015

பாதி வழி

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு இளைஞனை சந்தித்தோம். இயேசுவிடம் வருகின்ற அவன் நிறைவாழ்வு பெற தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறான். 'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று இயேசு சொன்னதற்கு, 'சிறுவயது முதல் நான் கடைப்பிடித்து வருகிறேன்!' என பதிலளிக்கிறான். 'உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு! பின் வந்து என்னைப் பின் செல்!' என்று இயேசு சொன்னவுடன், முகவாட்டத்தோடு திரும்பிச் செல்கிறான்.

இயேசு இந்த இறுதி வார்த்தைகளைச் சொல்லும்போது, அவனை உற்று நோக்கி, அவனை அன்பு செய்து சொல்வதாக நற்செய்தியாளர் எழுதுகின்றார்.

ஆன்மீகத்தில் பாதி வழி வந்த அந்த இளைஞனுக்கு அடுத்த பாதி முடியாமல் போய்விடுகிறது.

இது ஆன்மீகத்தில் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்விலும் வரலாம்.

பேருந்தில் செல்லும்போது நாம் பார்க்கும் பாதிக்கட்டிய வீடு, ஒவ்வொரு நாளும் டைரி எழுதணும் என நினைத்து பாதி வழி வந்து, பாதிக்கு மேல் ஒன்றும் எழுதாமல், நாம் வீடு கூட்டும்போது குப்பையில் போடும் டைரி, பாதி எழுதாத நோட்டு புத்தகங்கள், நிறைய சாப்பிட வேண்டும் என நினைத்து பாதியிலேயே கைகழுவும்போது நம்மை ஏக்கத்தோடு பார்க்கும் பந்தி இலை, பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இறங்கி அல்லது பேலன்ஸ் முடிந்து பாதியில் முடியும் உரையாடல் என பாதியில் நாம் முடிக்கும் செயல்கள் நிறையவே இருக்கின்றன. இந்த பாதி வேலைக்குப் பின்னால் தனிநபரின் இயலாமை, வலி, சில நேரங்களில் சோம்பேறித்தனம் ஒழிந்திருக்கிறது.

என் முதுகலைப்படிப்பின் ஆய்வுத்தாளை எழுதும்போதும் எனக்கு இந்த சோதனை வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்னால் நான் எதிர்பார்த்த அளவுக்கு ஆய்வுத்தாளில் முன்னேற்றம் இல்லாததால், வேறு ஒரு தலைப்பை எடுத்து புதிதாக தொடங்கலாமோ என்றும் தோன்றிற்று. இருந்தாலும் அந்த சோதனையை வெற்றி கொண்டுவிட்டேன்.

'இது நல்லாயில்ல!' 'அது நல்லாயில்ல!' என பாதியில் விட்டுவிட்டு ஓட, பின் புதியதும் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது?

நேற்று நாம் சந்தித்த இந்த நற்செய்தி இளைஞன் பாதிவழி வந்தவன், மீதி வழி போக மறுக்கிறான். வாழ்க்கை நம்மை முழுப்பயணமும் செய்ய விடுவதில்லை. பாதியிலேயே அழைத்து விடுகிறது. ஆக. செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் முழுமையாகவும், அன்பு செய்யும் ஒவ்வொருவரையும் முழுமையாகவும் செய்யவும் நம்மைத் தூண்டுகிறான் இந்த இளைஞன்.


Monday, May 25, 2015

அருளுக்கு மேல் அருளை

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும்
அருளுக்கு மேல் அருளைப் பெற்றுள்ளோம்.'
(யோவான் 1:16)

பிப்ரவரி 18 சாம்பல் புதனோடு தவக்காலம் தொடங்கி, தவக்காலம், புனித வாரம், ஆண்டவரின் உயிர்ப்பு, உயிர்ப்பு காலம், விண்ணேற்றம், பெந்தகோஸ்தே என ஏறக்குறைய 100 நாட்கள் கடந்து விட்டன. ஆலயங்களில் இன்று பார்த்திருப்பீர்கள். பச்சை திருவுடை, பச்சை திரைச்சீலை, பச்சை பீடத்துணி என இன்று எல்லாம் மாறியிருக்கும். மீண்டும் பொதுக்காலத்திற்குள் இன்று நுழைந்திருக்கிறோம்.

இந்த 100 நாட்கள் நாம் பெற்ற அருளை ஜீரணிக்கவும், அதை நம் வாழ்வின் இரத்த ஓட்டத்தில் கலக்கவும்தான் இந்தப் பொதுக்காலம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த 100 நாட்களும் அருளின் நாட்களாக இருந்தது என்றே சொல்வேன்.

நார்வே, நாப்போலி என புதிய பயணங்கள்.
புதிய செப அனுபவங்கள்.
புதிய கலாச்சாரம். புதிய மனிதர்கள்.
முதுகலைப் படிப்பின் முக்கிய ஆய்வுத்தாள்களை நான் எழுதியதும் இந்நாட்களில்தான்.
முனைவர் படிப்பிற்கான படிக்கட்டுகள் இடப்பட்டதும் இந்நாட்களில்தான்.
கல்லூரியில் மாணவர் தலைவர் பணி இனிதே நிறைவுற்றதும் இந்நாட்களில்தான்.
ஞாயிறு மறையுரை எழுதத் தொடங்கி வாரம்தோறும் ஏறக்குறைய 500 பேர் படித்து, ஐம்பதாயிரம் (!) பேருக்கு சொல்லும் அளவுக்கு வளர்ந்ததும் இந்நாட்களில்தான்.
என் குருகுல நண்பர்கள் பலரோடு உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டதும் இந்நாட்களில்தான்.
கட்டளை செபத்தை மிக ஆர்வமாக செபிக்கத் தொடங்கியதும் இந்நாட்களில்தான்.
தனிமை, விரக்தி, மனச்சோர்வு எதுவும் இல்லாமல் இருந்ததும் இந்நாட்களில்தான்.

உங்கள் வாழ்விலும் இந்த நாட்கள் கண்டிப்பாக அருளின் நாட்களாக இருந்திருக்கும். இறைவன் இந்த அருளை நம் அன்றாட வாழ்வில் புதுப்பித்து, இன்னும் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்ல ஒருவருக்கொருவர் இன்று செபிப்போம்.

பசுமையாகத் தொடங்கும் இந்த பொதுக்காலம் பசுமையான நினைவுகளைத் தரட்டும். நம்பிக்கை என்னும் பசுமையை விதைக்கட்டும்.


இன்னைக்கு என்ன கிழமை?

நேற்று நாப்போலி நகர் தமிழ்க் குழுமத்திற்கான முழு இரவு செபத்திற்குச் சென்றிருந்தேன். நேற்று முன்தினம் புதிய இடத்தில் தூக்கம் வராததாலும், புதிய கட்டிலின் அலர்ஜியால் உடலெல்லாம் அரித்துக்கொண்டிருந்ததாலும் அரை செட்ரிசின் எடுத்துவிட்டு நன்றாகத் தூங்கினேன். செட்ரிசின் போட்டால் ஒரு வாரத்திற்குத் தூக்கம் வரும் என்பது செட்ரிசின் போடுபவர்களுக்குத் தெரியும். நேற்று பகல் முழுவதும் தூங்கினேன்.

நேற்று இரவு 9 மணிமுதல் இன்று காலை 6 மணி வரை (9 மணி நேரங்கள் செப வழிபாடு). ஏறக்குறைய 80 பேர் இருந்தார்கள்.

முழு இரவு செபம் நடத்துவது எனக்கு முதன்முறை. முதலில் நான் விழித்திருக்க வேண்டும். இரண்டாவது, 80 பேரையும் விழித்திருக்க வைத்திருக்க வேண்டும்.

நம்ம ஊருல ஆட்களை விழிக்க வைத்திருப்பது எளிது. இரவின் புழுக்கம் மற்றும் கொசுத் தொந்தரவு இருந்தால் போதும். ஆட்களை விழித்திருக்க வைத்துவிடலாம். ஆனால் இங்கே இந்த இரண்டும் இல்லை. வெளியில் மழைச்சாரல் வேறு. ஆக, விழித்திருப்பதும், விழித்திருக்க வைப்பதும் பெரிய சவாலாக இருக்கும் என நினைத்தேன்.

இரவு முழுவதும் செபித்த அனுபவம் மற்றும் செபத்தை வழிநடத்திய அனுபவம் இனிமையாக இருந்தது. இடையில் இரண்டு பிரேக். பிரேக்கில் வடை, காஃபி, பிஸ்கட் என்று கொடுத்ததால், பிரேக்கிற்குப் பின் தூக்கம் சிலரின் கண்களைத் தழுவவே செய்தது. இருந்தாலும் தூங்கவில்லை அவர்கள்.

சிலருக்கு இந்த செப அனுபவம் புதிய அனுபவமாக இருந்ததாகச் சொன்னார்கள்.

'நாலு பேருக்கு நல்லதுன்னா...' ஓகேதான்...

இன்று காலை 6:30 மணிக்கு ட்ரெயின் ஏறி மீண்டும் ரோம் வந்து சேர்ந்தேன். இங்கும் இன்று தொடர்ந்து திருப்பலிகள். இன்று எங்கள் பங்கில் சேல்ஸ் டே வேறு. வேலை நாக்குத் தள்ளிவிட்டது.

இன்று காலை ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது இடைப்பட்ட நிறுத்தத்தில் ஆப்பிரிக்க இளைஞன் ஒருவன் ஏறினான். இடித்துப் பிடித்து என் அருகில் உட்கார்ந்தான். அங்கேயே உடை மாற்றினான். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்தில் டிக்கெட்-செக்கிங் ஆஃபிசர் வந்தார். என் டிக்கெட்டைக் காட்டினேன். அவனிடம் டிக்கெட் இல்லை. 'டிக்கெட் எடுக்கிறாயா?' அல்லது 'ஃபைன் கட்டுகிறாயா?' என்று கேட்டார். இரண்டுக்கும் அவனிடம் பணமில்லை. அவன் சுற்றியிருக்கும் எல்லாரையும் பார்த்தான். சட்டென்று எல்லாரும் மறுபக்கம் திரும்பிக்கொண்டார்கள். என்னைப் பார்த்தான். 'நான் எடுக்கவா?' என்று கேட்க வேண்டும்போல இருந்தது. ஆனால் நானும் மற்றவர்களைப் போல திரும்பிக் கொண்டேன். அவனை அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுவதற்காக அழைத்துச் சென்றார் ஆஃபிசர். அவன் போனவுடன் ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசினார்கள்: 'இந்த ஆப்பிரிக்கர்கள் எல்லாம் இப்படித்தான்!' என்றாள் ஒரு பெண். 'ஆமாம்!' என வேகமாக ஆமோதித்தார் ஒரு கோர்ட் போட்ட ஆண். 'இவர்கள் திருடவும் செய்வார்கள்!' என்றாள் மற்றொருத்தி. 'ஏன் நீங்க திருடுனதெல்லாம் தெரியாதா!' என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அவன் போனபிற்பாடு சில நிமிடங்கள் மனது எதிலும் லயிக்கவில்லை.

'அவன் யார்?' 'அவன் பெற்றோர் யார்?' 'அவனுக்கு கூட பிறந்தவர்கள் யாருமில்லையா?' 'அவன் இப்படி பிறந்தது அவன் செய்த குற்றமா?' 'அவனுக்காக யாரும் பரிதாபப்பட மாட்டார்களா?'
'அவன் எனது இடத்திலும், நான் அவனது இடத்திலும் இருந்தால் எப்படி இதை எதிர்கொண்டிருப்பேன்' என நிறைய கேள்விகள்.

'நேற்று இரவு தூய ஆவியானவர் வரவில்லை!' என்றே எனக்குத் தோன்றியது.

ரோமில் இறங்கிக்கொண்டிருந்தபோது என்னுடன் இறங்கிக் கொண்டிருந்த இருவர் பேசிக்கொள்கின்றனர். இருவருமே கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்கள்.

'இன்னைக்கு என்ன கிழமை?'

'ஞாயிற்றுக்கிழமை!'

விடிய விடிய தூய ஆவியானவரே வாரும் என்று குரலெழுப்பி செபித்து, தூங்காமல் சிவந்த கண்களோடும், வறண்ட மேனியோடும், கதகதப்பான உடலோடும் அடுத்த மெட்ரோவை நோக்கி நடந்த எனக்கு இப்படித் தோன்றியது:

'விடிய விடிய பெந்தேகோஸ்தே பெருவிழா கொண்டாடினாலும், எனக்கு அருகில் இருப்பவருக்கு இன்று எந்த கிழமை என்று கூட தெரியவில்லை. எனக்கு உலகம் எனத் தெரிவது எனக்கு அடுத்திருப்பவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லையே!'

அந்த ஆப்பிரிக்க இளைஞன் இரவு எங்கே சாப்பிடுவான்?


Friday, May 22, 2015

மலரச்செய்யும்

'தூயதோர் உள்ளத்தை என்னகத்தே உருவாக்கும்.
உறுதிதரும் ஆவியை என்னுள் மலரச்செய்யும்.'
(திபா 51:10)

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை செபத்திலும் தரப்பட்டுள்ள முதல் பாடல் திபா 51. உரியாவின் மனைவி பெத்சபாவுடன் செய்த பாவத்தை நாத்தான் இறைவாக்கினர் வழியாக யாவே இறைவன் சுட்டிக்காட்ட, மனந்திரும்பி தாவீது பாடிய பாடல்தான் திபா 51.

தூய அகுஸ்தினார், 'மனிதருக்குள் இருக்கும் பாவத்தை நோக்கிய ஆசை(!) தாயின் வயிற்றிலிருந்தே வருகிறது' என்று தன் 'மனக்கிடக்கைகள்' நூலில் சொல்லக் காரணமும் இந்தத் திருப்பாடல்தான்.

ஒவ்வொரு முறை திபா 51ஐ வாசிக்கும்போது மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் கொஞ்ச நேரம் பொறுமையாக வாசிப்பேன்.

தூயதோர் உள்ளம் - உறுதிதரும் ஆவி!

வருகின்ற ஞாயிறு தூய ஆவியானவர் பெருவிழாவை நாம் கொண்டாடவிருக்கின்றோம்.

தூய ஆவியானவர் குடியிருக்கும் உள்ளம்தான் தூயதோர் உள்ளம். அல்லது தூயதோர் உள்ளத்தில்தான் தூய ஆவியானவர் குடியிருக்க முடியும்.

தூய்மை என்பது தனிநபர் சார்ந்தது. எனக்கு தூய்மை என்று தெரிவது உங்களுக்கு அழுக்காக தெரியலாம். உங்களுக்கு தூய்மை எனத் தெரிவது எனக்கு ஒருவேளை அழுக்காக தெரியலாம். ஆனால், தனிநபருக்கு தூய்மை என்றால் என்ன என்பதை உணர்த்துபவர் இந்தத் தூய ஆவியானவர்தான்.

மிக முக்கியமானது தூய்மையான உள்ளம் அல்ல. மாறாக உறுதிதரும் ஆவி.

'உறுதிதரும் ஆவி' என்று தாவீது குறிப்பிடுவது என்னவென்றால், 'நான் ஒருநாள் தூய்மையாயிருப்பதை மட்டும் விரும்பவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் தூய்மையாயிருப்பதையே விரும்புகிறேன்!' என்கிறார்.

ஆக, வருகின்ற தூய ஆவியானவர் பெருவிழாவில் நாம் இந்த இரண்டு வரங்களைக் கேட்கலாமே:

அ. நான் நல்லவனாக இருக்க வேண்டும்.

ஆ. நான் ஒவ்வொரு நாளும் நல்லவனாக இருக்க வேண்டும்.


Thursday, May 21, 2015

வாளியில் இருக்கும் நீர்த்துளி!

'இதோ வேற்றினத்தார்,
வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும்,
தராசில் ஒட்டிய தூசாகவும்
அவரால் கருதப்படுகின்றனர்...'
(காண்க. எசாயா 40:10-17)

இன்று காலை செபத்தில் இரண்டாவதாக இருந்த பாடலின் மேற்சொன்ன வரிகள் எனக்குப் பிடித்தன.

விவிலியத்தில் நாம் பல்வேறு உருவகங்களைக் காண்கிறோம்.

உதாரணத்திற்கு, ஆண்டவர் என் ஆயன் (திபா 23:1) என்று சொல்லும்போது அங்கே 'ஆயன்' என்பது உருவகம்.

உருவகம் என்பது மனித வாழ்வின் எதார்த்தத்தில் உதிப்பது. உருவகங்களைப் பற்றிய ஆய்வு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். உருவகங்களைப் புரிந்து கொள்வது என்பது ஒரு கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது. ஆடுகளையும், அவைகளை மேய்ப்பதையும் பற்றி அறியாத ஒரு சமூகத்துக்கு 'ஆயன்' என்பது பொருள்தருமா? இல்லை!

வாளியில் இருக்கும் நீர்த்துளி!
தராசில் இருக்கும் தூசி!

நம்ம வீட்டுக்கு வெளியில் குரோட்டன்ஸ் வைத்திருக்கிறோம் என நினைத்துக்கொள்வோம். வீட்டிற்குள்ளிருந்து தினமும் தண்ணீர் முகந்து கொண்டு சென்று அவைகளுக்கு ஊற்ற வேண்டும். ஊற்றி முடித்துவிட்டு அந்த வாளியை வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்கின்றோம். அந்த வாளியில் எப்படியும் சில தண்ணீர்த்துளிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். புதிதாய் வாங்கிப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாளியில் ஒருவேளை தண்ணீர் ஒட்டாமல் இருக்கலாம். ஆனால், வழக்கமாக சில தண்ணீர்த் துளிகள் ஒட்டி நிற்கும். இந்தத் தண்ணீர்த் துளிகளை நாம் ஒருபொருட்டாகக் கருதுவதில்லை. அவைகளை நாம் பார்ப்பதுகூட கிடையாது.

தராசில் இருக்கும் தூசி. இந்தத் தூசியினால் தராசின் நிறையில் பெரிய மாற்றம் வந்துவிடப்போவதுமில்லை.

வாளியில் இருக்கும் நீர்த்துளியும், தராசில் இருக்கும் தூசியும் மற்றவர்களால் பெரிய விடயமாகக் கருதப்படுவதில்லை. அவைகளால் மற்றவைகளுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை.

அதாவது, மொத்தத்தில் அவைகள் இருந்தாலும் ஒன்றுதான். இல்லையென்றாலும் ஒன்றுதூன்.

எதிரிகளை நாம் அழிக்க முடியவில்லை. அல்லது அவர்கள் நமக்குத் தொடர்ந்து இடறலாய் இருக்கிறார்கள் என்றாலும், நாம் இந்த உருவகத்தைப் பயன்படுத்தலாம். அவர்களை வாளியில் ஒட்டிய தண்ணீர்த்துளி போல அல்லது தராசில் ஒட்டிய தூசி போல நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு நம் வேலையைப் பார்க்கலாமே!


Wednesday, May 20, 2015

பஞ்சாபி பொண்ணு

எங்க ஏரியாவுல உள்ள ஒரு பாட்டி கீழ விழுந்துடுச்சுனு சொல்லி அதற்கு ஒரு உதவியாளர் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். இறுதியாகக் கண்டுபிடித்தும் விட்டார்கள். இன்று அந்தப் பாட்டியும், உதவியாளர் பெண்ணும் மாலை திருப்பலிக்கு வந்தார்கள்.

என்ன ஒரு ஆச்சர்யம். அந்தப்பெண் ஒரு பஞ்சாபி. பெயர் ஏதோ ஒரு சிங். மறந்துடுச்சு.

அழகான ஆங்கிலம் பேசினார். இத்தாலி வந்து 3 வருடங்கள் ஆகிறதாம்.

அந்தப் பாட்டியிடம் எப்படி ஆள் கிடைத்தது என்று கேட்டேன்.

நிறையப் பேர் வந்தார்கள். ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. இவரும் வந்தார். எந்த நாடு என்று கேட்டேன்.

இந்தியா என்றார்.

உடனே எடுத்துக்கொண்டேன்.

'இந்தியா!' என்றால் பிடிக்குமா? என்று கேட்டேன்.

'அப்படியல்ல! ஆனால் நான் பார்த்துப் பேசிய முதல் இந்தியர் நீங்கள் தான்! நீங்க நல்லவரா இருக்கிறதுனால எல்லாம் நல்லவங்கதானே!' என்றார்.

'நம்மள நல்லவன்னு இன்னுமா உலகம் நம்புதுன்னு!' வடிவேலு காமெடி மைன்ட் வாய்ஸ்ல ஓடினாலும், உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி.

நம்ம ஊருல இருக்கும்போது தேவைப்படும் பொறுப்புணர்வைவிட நாம் வெளியில் இருக்கும் போதுதான் அதிகம் பொறுப்புணர்வு தேவைப்படுகிறது.


Tuesday, May 19, 2015

சோதனைகளின்போது

இன்றைய முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 20:17-38) வாசிக்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.

கடந்த சில நாட்களாக ஆன்மீக காரியங்கள் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அதாவது தனிப்பட்ட முயற்சிகள். சில நாட்களாக கட்டளை செபம் சொல்லவில்லை. படிப்பிற்கு தவிர மற்ற நேரங்களில் விவிலியம் வாசிக்கவில்லை. செபமாலை எடுத்தவுடன் தூக்கம் வந்துவிட்டது.

ஆன்மீகத்தின்மேல் வெறுப்பு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த நாட்களில் திருப்பலி நன்றாக வைக்கத்தான் செய்தேன். மறையுரைகள் எழுதினேன். ஒப்புரவு அருட்சாதனம் நிறைவேற்றினேன். நற்கருணை கொண்டு சென்றேன்.

ஆனால் என் உடலின் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான் பெரும் போராட்டமாக இருக்கிறது. எந்நேரமும் சிந்தனை எல்லாம் அதன்மேலே இருக்கின்றது.

சரி! ரொம்ப அழாதீங்க தம்பி!

இன்னைக்கு ஏன் கண்ணீர் வடிச்சீங்கன்னு சொல்லுங்க!

இன்றைய முதல் வாசகம் எனக்கு மிகவும் பிடித்த இறைவாக்குப்பகுதி. தூய பவுலடியார் எபேசு நகரத்தில் தன் பணியை முடித்துவிட்டு விடை பெறுகிறார். அவரது பிரியாவிடை செய்திதான் இன்றைய முதல் வாசகம். அதில் என்னைத் தொட்ட சில வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

'சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன்!'
ஆக, சோதனைகள் வரும்போது என் பலத்தால் எதிர்கொள்ள முடியும் என நினைக்கும்போது அங்கே தோல்விதான் மிஞ்சும்.

'நன்மை பயக்குமொன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை!'
ஆக, நல்லது என்று எது மனதுக்குப்படுகின்றதோ, அது அடுத்தவர்களுக்கு நன்மை பயக்குமென்றால் உடனே சொல்லிவிட வேண்டும். இன்னைக்கு என் நண்பர் புதிய சட்டை அணிந்து, அது அவருக்கு எடுப்பாக இருக்கிறது என்றால், 'இந்த சட்டையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொல்வது அவருடைய தான்மையையும், சுய மதிப்பையும் அதிகரிக்கவே செய்யும்.

'என்னைப் பொறுத்தவரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை!'
நான் இழந்தால் பெற முடியாதது உயிர் ஒன்றுதான். அப்படிப்பட்ட உயிரையும் இழக்கும் மனத்துணிவு பவுலுக்கு எங்கிருந்து வந்தது?

'ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை!'
இந்த வார்த்தைகளில் அவர் உறவுகளைப் பிரியும் சோகம் ஒருபக்கம் இருந்தாலும், தன் வாழ்க்கை எப்படி இருக்கப்போகும் என்பதையும் உணர்ந்தவராக இருக்கிறார்.

'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன!'
இதில் பவுலடியாரின் சுயமதிப்பும், உழைப்பும் வெளிப்படுகிறது. தன் தேவைக்கு மட்டுமல்ல, தன் உடனிருப்பவர்களின் தேவைக்கும் உழைக்கிறார். எனக்கு ஒரு ஆசை இதுதான். இந்தியா திரும்பியபின் பங்குத்தளத்தில் பணி செய்யும்போது என் தேவைக்கு நானே உழைக்க வேண்டும் என்பது.

'இவற்றைச் சொன்னபின்பு அவர் முழந்தாள்படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்!'
நின்று கொண்டு செய்ய முடியாத வேலைகள் நாம் முழந்தாள்படியிட்டால் எளிதாக நடக்கும் என்பார் நியூட்டன். இந்த இறைவேண்டல்தான் எனது உடனடி தேவையாக இருக்கிறது.


Monday, May 18, 2015

ஐயா! மோடி!

எங்க கல்லூரியில் ஒரு சீன மாணவன் படிக்கிறான். ரொம்ப பேர் படிக்கிறாங்க. ஆனா, இவன் கொஞ்சம் விநோதமானவன். யாரிடமும் பேச மாட்டான். யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டான். முனைவர் பட்டம் பெறுவதற்குள் சிரிப்பதையும், பேசுவதையும் மறந்துவிடுவான் போல. இவன் தினமும் பைக்கில் வருவான். பைக் ஓட்டும்போது முகத்தில் ஒரு டஸ்ட் மாஸ்க் அணிந்து கொள்வான். எனக்குத் தெரிந்து இத்தாலியில் இவனது பைக்தான் அதிகம் புகை கக்கும். இவனைப் பார்க்கும்போதெல்லாம், 'ஏன்டா, ஊரெல்லாம் புகையாக்கிவிட்டு நீ மட்டும் முகமூடி அணிந்துகொள்கிறாயே!' என்று கேட்கத் தோன்றும்.

இவன் மட்டுமல்ல. இங்கு வரும் சீன சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் பழக்கம் உண்டு. ஏதோ தங்கள் ஊரில் தூசியே இல்லாததுபோலவும், மற்ற ஊர்களில் எல்லாம் தொற்று நோயும், வைரசும் காற்றில் இருப்பது போலவும் நினைத்து சதா, ஆபரேஷன் தியேட்டரில் மாதிரி வெள்ளை முகமூடி அணிந்து கொண்டு திரிவார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேருந்திலும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

'ஏழாம் அறிவு' படம் பார்த்ததிலிருந்து சீனக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை. இதைச் சரி செய்ய நானும் ஏதாவது தெரபிக்கு போக வேண்டும்.

எதுக்கு தம்பி இந்த சீனாக்காரங்கள இழுக்குறீங்க?

நம்ம சுற்றுலா முதல்வர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் போயிருக்கிறார்.

நம்ம ஊருல பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை உயர்த்தப்பட்டிருக்க, நம்ம அண்ணாச்சி, ப்ளைட்டல பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டார்.

மோடி சுற்றுலா ஃபோட்டோக்களைப் பார்க்கும்போதெல்லாம், 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. சின்ன வயசுல அவங்க அப்பா அம்மா பக்கத்து ஊருக்குக் கூட கூட்டிட்டுப் போயிருக்க மாட்டாங்க போல. அந்த ஏக்கம் அப்படியே அவருடைய மனசுல பதிஞ்சு, 'நானும் பெரிய ஆளாகி எல்லா ஊர்க்கும் போவேன்!' என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஊர் ஊரா போறார்.

போனா பரவாயில்லை. போற பக்கமெல்லாம் வாக்குறுதிகளை வீசிவிட்டு வருகிறார்.
சீனாக்காரனுக்கு இந்தியா வருவதற்கு இ-வீசா இருந்தால் போதுமாம். அதாவது இதுவும் ஒருவகையான அரைவல் விசா. தானாகவே ஒரு நாட்டிற்குள் வந்து செல்லலாம். இதனால் அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்தும் நம்ம டீக்கடை பிரதர் பல்லைக் காட்டிக்கொண்டு சொல்லிவிட்டு வந்துவிட்டார். அது என்னவோ தெரியல.

அடுத்தவன் கொஞ்சம் மரியாதை கொடுத்தவுடன், வாக்குறுதி கொடுத்து விடுகிறார் நம்ம காவி பிரதர்.

இன்று எலக்ட்ரானிக்ஸ், பட்டாசு, ஆடைகள், அன்றாட உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் போலியை தயாரித்து சீனா நம் நாட்டு பொருளாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. சீனா பட்டாசு வந்ததால் சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் நூற்றுக்கணக்கானவை.

'பீயிங் பிஸி, பட் டூயிங் நத்திங்!' என மோடிக்கு பட்டம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

ஐயா! மோடி! கொஞ்சம் எங்களையும் நினைச்சுப் பாருங்க!


Sunday, May 17, 2015

அழைப்புக்கு ஏற்ப

'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.
முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும்
ஒருவரையொருவர் அன்புடன் தங்கி,
அமைதியுடன் இணைந்து வாழ்ந்து,
தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.'
(எபேசியர் 4:1-3)

இன்று காலை திருப்பலி முடிந்தவுடன் ஒருவர் என்னிடம் வந்து கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று சொன்னார். காலை உணவுகூட சாப்பிடவில்லையென்றாலும், சரி கொஞ்ச நேரம்தானே என்று அமர்ந்தால் சரியாக 49 நிமிடங்கள் பேசினார்.

குடும்பத்தில் உள்ள ஒரு உறவுப் பிரச்சினை.

அவரே பிரச்சினையையும் சொல்லிவிட்டு அவரே அதற்கான விடையையும் சொன்னார். ஆக, விடை சொல்லும் வேலை எனக்கு இல்லை.

உறவு என்பது ஐபேட் அல்லது டேப்ளட் மாதிரி என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் அவரே தொடர்ந்தார்.

இன்றைக்கு நாம ஒரு டேப்ளட் வாங்குறோம். கண்களுக்கு பார்க்க பளபளப்பாக இருக்கிறது. சார்ஜரில் போடுறோம். இந்த டேப்ளட்டை நன்றாகப் பயன்படுத்தி நிறைய கற்றுக்கொள்ளணும். ஃபோட்டோ எடுக்கணும். காலண்டர் பயன்படுத்தணும். அலார்ம் வைக்கணும். எல்லார் கூடயும் கான்டக்ட் வைக்கணும் என்று நிறைய எண்ணங்கள் அந்த இரவு முழுவதும் நம் மனதில் ஓடுகின்றன. விடிகிறது. காலையில் ஆசையாக எடுத்து அதை 'ஆன்' செய்கிறோம். 'சாம்சங்' என மின்னுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதன்மேல் நாம் கொள்ளும் மோகம் குறைகிறது. ஒரு வாரம் கழித்து அது 'ஆன்' ஆக மறுக்கிறது. சார்ஜ் வேகமாக இறங்குகிறது. இரண்டு வாரம் கழித்து செய்தித்தாள் பார்க்கிறோம். நாம் வாங்கிய மாடலுக்கு அடுத்த மாடல் டேப்ளட் நாம் வாங்கியதை விட குறைந்த விலையில் இருக்கக் கண்டு, 'ச்சே இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே!' என்கிறோம்.

நம்ம உறவுநிலையும் அப்படித்தான். இன்னைக்கு வாங்குன டேப்ளட் நாளைக்கு ஒர்க் ஆகலனு சொன்னவுடன், தூக்கிபோட்டுவிடுவது மாதிரி ஆட்களைப் போட்டுவிட முடியுமா என்ன?...என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியாரும் ஏறக்குறைய இதே கருத்தைத்தான் சொல்கின்றார்.

'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்!'
அழைப்பு என்பது திருமணம் அல்லது குருத்துவம் மட்டுமல்ல. மாறாக, காலையில் எழுவது, சாப்பிடுவது, வேலை பார்ப்பது, படிப்பது, வீடு சுத்தம் செய்வது. துணி துவைப்பது, சமைப்பது என எல்லாம் அழைப்புதான்.

காலையில் எழுந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை மறந்துவிட்டு, 'ஐயோ! கல்யாணம் முடிச்சிருக்கலாமே!' 'ஐயோ! அந்த வேலைக்குப் போயிருக்கலாமே!' 'ஐயோ! அவனை மாதிரி இருந்திருக்கலாமே!' 'ஐயோ! இவன மாதிரி இருந்திருக்கலாமே!' என்று நினைச்சா
நம் அமைதியும் கெட்டு நாம் பிறரின் அமைதியையும் குலைத்துவிடுகிறோம்.


Saturday, May 16, 2015

தொட்டும், தொடாமல்

நேற்றைய தினம் ஒரு ஆன்லைன் செய்தித்தாளில் விமானத்தில் மனிதன் போன காலம் போய், மனிதனே விமானமாக மாறும் காலம் விரைவில் வருகிறது என்ற ஒரு கட்டுரை வாசித்தேன். கடந்த ஆண்டு துபாயில் நடந்த எக்ஸ்போவின் போது இரண்டு பேர் தங்கள் உடலில் ஜெட் பொருத்திக் கொண்டு துபாய் பாலைவனத்தையே கடந்து சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை பிற்காலத்தில் நம் மனுக்குலத்தின் புதிய மைல்கல்லாக அமையும் என எழுதியிருந்தார் ஆசிரியர்.

மனிதன் முதன் முதலாக விண்வெளியில் காலடி எடுத்து வைத்தபோது, அப்போதையு அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அவர்கள் சொன்னதை நீங்கள் நிறைய இடங்களில் வாசித்திருக்கலாம்:

"That's one step for man, but a giant leap for mankind!"

இது நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னது என்றும் சொல்கிறார்கள். நிலாவிற்கு அமெரிக்க ஆட்களை அனுப்பிய நிகழ்வே நாசாவின் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட வீடியோதான் என்ற கருத்தும் நிலவுகிறது.

நிலாவைத் தொட்ட மனிதர்கள், என்ஜினை இறக்கையாகப் பயன்படுத்தி பறந்த மனிதர்கள் வரிசையில் வருவது விண்ணேற்றம் அடைந்த இயேசு. ஆனால் இவர்கள் எல்லாம் ஒன்றா?

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இது பல இடங்களில் மக்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் விண்ணேற்றம் அவருக்கு அவசியமோ இல்லையோ சீடர்களுக்கு அவசியமாக இருந்தது. எருசலேமில் இயேசு விண்ணேற்றம் அடைந்த இடம் என்று மூன்று இடங்கள் உள்ளன. எங்கிருந்து, எப்படிப் போனார் என்பது நம் எண்ண ஓட்டத்திற்கு அப்பாற்பட்டது.
கீழே வந்தவர் மேலே ஏறிச் செல்ல வேண்டும் - இதுதான் லாஜிக்.

பறப்பது என்பது ஒரு சுதந்திரம். விமானத்தில் பயணம் செய்யும்போது நம்மை ஒருவிதம் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளக் காரணமும் இதுதான். சில மணி நேரங்கள் நமக்கும், பூமிக்கும் உள்ள தொடுதல் துண்டிக்கப்படுகிறது. இந்த சுதந்திரம் நமக்கு த்ரில்லாக இருக்கிறது.
ஆக, ஒட்டிக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் துண்டிக்கப்படுவதும்தான்.

'இது என் குழந்தை' என்று ஒரு தாய் சொல்லிக் கொண்டு அதனோடு உள்ள தொப்புள்கொடியை அறுக்காமல் இருந்தால், அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தாகிவிடாதா? ஆக, துண்டிக்கப்படுதல் இங்கே இருவரின் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. மற்றொரு பக்கம், தொட்டுக்கொண்டிருக்கிற நிலையில் உள்ள தொடர்பு அறுந்துவிட்டாலும், தொட்டுப்பார்க்க முடியாத உணர்வு நிலையில் ஒரு தாய் தன் குழந்தையோடு இணைந்தேதான் இருக்கிறார்.

இதுபோலவே, விண்ணேற்றத்தில் இயேசுவுக்கும், சீடர்களுக்குமான தொப்புள் கொடி உறவு அறுக்கப்படுகிறது. இனி சீடர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். தொட முடியாத உணர்வாக தூய ஆவியானவர் வருவார்.

தொட்டும், தொடாமல் உறவு தொடரும். தொடர வேண்டும்.

அனைவருக்கும் விண்ணேற்ற பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!


Friday, May 15, 2015

அவளின் கையுறையாக...

இரண்டு நாட்களுக்கு முன் ‘Kebab Connection’ (2005) என்ற ஜெர்மன் மொழித்திரைப்படம் பார்த்தேன். 90 நிமிடங்கள் ஓடுகின்ற திரைப்படம். முழுக்க முழுக்க காமெடி படம். ஆங்கில சப்டைட்டிலும் இருப்பதால் மிக நன்றாகவே கதை ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்ராகிம் அல்லது இபோ (21 வயது) ஒரு துருக்கிய இளைஞன். விளம்பரப் படங்கள் இயக்குபவன். தன் மாமா வைத்திருக்கும் ‘கிங் ஆஃப் கெபாப்’ என்ற கெபாப் கடைக்கு அவன் செய்யும் விளம்பரம் மிகவும் பிரபலமாகி மாமாவின் வியாபாரம் சக்கை போடு போடுகின்றது. அவனுக்கு ப்ரூஸ் லி என்றால் ரொம்ப பிடிக்கும். ஜெர்மன் மொழியில் முதல் குங்-ஃபு படம் எடுக்க வேண்டும் என்பது இவனது கனவாக இருக்கிறது.

கதாநாயகி டுட்சல் அல்லது டிட்சி (18 வயது). மிக அழகான ஜெர்மன் பொண்ணு. இவளைப் பார்த்தவுடன் ஜெர்மனிக்கு நான் சென்ற பயணம்தான் நினைவிற்கு வந்தது. இவளுக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசை.

இபோவின் நண்பி டிட்சி. டிட்சி ஒருநாள் தான் கர்ப்பமாகியிருப்பதாக இபோவிடம் சொல்கிறாள். இபோ தன் துருக்கிய தந்தையிடம் சொல்ல தந்தை அவனைத் தன் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். டுட்சி இதை தன் ஜெர்மன் தாயிடம் சொல்ல அவள் சிரிக்கிறாள்.

இதற்கிடையில் இபோ ரொம்ப ‘பாயிஷ்’ என்று சொல்லி டுட்சி அவனிடம் கோபித்துக்கொள்கிறாள்.
விளம்பரப் படம் செய்வதா, குங்ஃபு திரைப்படக் கனவு நிறைவேறுமா, இபோவை அவனது தந்தை ஏற்றுக்கொள்வாரா, டிட்சி சொந்தக்காலில் எப்படி நிற்கிறாள் என்று வேகமாக நகர்கிறது திரைப்படம்.

ஜெர்மனிக்குச் சென்றால் அங்கே நாம் நிறைய துருக்கிய இன மக்களைப் பார்க்கலாம். ஆக, ஒரு கலாச்சாரத்தின் முன் மற்றொரு கலாச்சாரம் நிற்க வேண்டிய நிலை வரும்போது, இரண்டு கலாச்சாரங்களும் எப்படி கொடுத்து, வாங்குகின்றன என்பதை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஆயிரம் புத்தகங்கள் சொல்ல வேண்டியதை ஒரு படம் சொல்லிவிடுகிறது என்பது உண்மைதான்.

படம் முழுவதும் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ-ஜூலியட்’ நாடக வசனங்கள் அடிக்கடி வரும்.

டிட்சிக்கு குழந்தை பிறந்து அதை இபோ பார்க்க வரும்போது குழந்தையைப் பார்த்து இபோ சொல்லும் வார்த்தைகள் மிக அருமை.

அந்தக் குழந்தை தன் பிஞ்சுக்கையால் தன் கன்னத்தைத் தடவும்போது இபோ இப்படிச் சொல்வான். இதே வார்த்தைகளைத்தான் பால்கனியில் நிற்கும் ஜூலியட்டைப் பார்த்து ரோமியோவும் சொல்வான் நாடகத்தில். அந்த வார்த்தைகளின் என் தமிழ் மொழிபெயர்ப்பு:

“வானின் நட்சத்திரங்கள் இரண்டு தங்கள் வேலையினிமித்தம் வெளியே செல்லவேண்டியிருந்தது.
செல்வதற்கு முன் அவைகள் இவளின் இரண்டு கண்களைப் பார்த்து சொன்னது:
‘நாங்கள் திரும்பி வரும் வரை எங்களுக்கு பதிலாக நீங்கள் மின்னிக்கொண்டிருங்கள்!
நாங்கள் சீக்கிரம் வந்துவிடுவோம்!;
இவளின் கண்கள் அந்த வானத்திலும்,
அந்த வானத்தின் நட்சத்திரங்கள் இவளின் தலையிலும் இருந்தால் எப்படி இருக்கும்?
இவளின் கன்னத்தின் பளபளப்பு நட்சத்திரங்களின் வெளிச்சத்தையும் மிஞ்சிவிடும் -
கதிரவனின் ஒளி நட்சத்திரத்தின் ஒளியை மிஞ்சிவிடும்தானே!
இவளின் கண்கள் இரவில் வானத்தில் இருந்தால்
இரவும் பகலாகிவிடும்…
‘பகல் வந்துவிட்டது’ என்று பறவைகளும் பாடத் தொடங்கிவிடும்.
பாருங்கள்…!
தன் கையை எவ்வளவு அழகாக தன் கன்னத்தில் அவள் வைத்திருக்கிறாள்.
ஓ…அவளின் கையிலிருக்கும் கையுறையாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?
அவளின் கன்னத்தை நான் தொட்டுக்கொண்டிருப்பேனே!”

‘Kebab Connection’ திரைப்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்:

Kebab Connection



Thursday, May 14, 2015

பரிசுச் சீட்டு

நீங்க என்னைக்காவது பரிசுச் சீட்டு வாங்கியிருக்கீங்களா?

அல்லது உங்களுக்கு லாட்டரி அல்லது குலுக்கல் பரிசு விழுந்திருக்கா?

நேற்று மாலை எங்கள் பங்கின் 'நண்பர்கள் இயக்கம்' (70 வயதைத் தாண்டிய இருபாலருக்கான நட்பு இயக்கம்) இணைந்து இரவு உணவிற்கு வெளியே சென்றோம். கடந்த வாரம் அவர்களுக்குள் நடைபெற்ற பரிசுக் குலக்கல் பற்றி பேச்சு வந்தது. 90 சீட்டுகள் விற்றதில் மொத்தம் 3 பரிசுகள். 3 பரிசுகளுமே இந்த இயக்கத்தோடு தொடர்பு இல்லாதவர்களுக்கே விழுந்தன.

எங்க ஊர்த் திருவிழாவிலும் பரிசுக் குலுக்கல் இருந்ததுண்டு. 20000 சீட்டுகள் விற்பனையாகி பரிசுக் குலுக்கல் நடக்கும் இடத்தில் ஒற்றைப் பரிசுச் சீட்டை வாங்கிக்கொண்டு நானும் என் தங்கச்சியும் இரவு சாப்பிடாமல் கூட குலுக்கல் விழாவில் போய் காத்துக்கிடந்ததுண்டு.

இலவம் காய் பழுக்கும் என்று நினைத்துக்கொண்டு காவல் காக்கும் கிளி அது வெடித்து பஞ்சாய் பறக்கத்தான் செய்யும், பழுக்காது என்று பார்த்து, பரிதவித்து வேறு பக்கம் பறந்து செல்வது போல,
நெடுநேரம் கழித்து வெறுங்கையராய் வீடு திரும்புவோம் அன்று.

நம்ம ஊர்களில் லாட்டரி வந்த நேரம், 'விழுந்தால் வீட்டுக்கு! விழாவிட்டால் நாட்டுக்கு!' என்று அறிமுகம் செய்தார் அப்போதைய முதல்வர் அண்ணாதுரை.

'லாட்டரி ஒரு சூதாட்டம்' என்று நம் அரசு சொன்னாலும், இன்றும் சின்னச் சின்ன அளவில் அது நடந்து கொண்டேதான் இருக்கின்றது. இந்த லாட்டரியை வைத்து நிறைய ஊழலும் நடந்திருக்கின்றது. ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால் மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டான்ட் சென்றால் எங்கு பார்த்தாலும் 'கே.ஏ.எஸ்' என்று எழுதப்பட்டிருக்கும். பூடான், நேபாள் என்று லாட்டரி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர் இந்த கே.ஏ.எஸ். ஆனால், பெரிய ஊழல் செய்து மாட்டிக்கொண்டார்.

இந்த லாட்டரியில என்னன்னா, நம்ம முதலீடு மிகவும் குறைவு. ஆனால் பலன் அதிகம். 10 ரூபாய் முதலீடு செய்தால் 10 கோடி பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தப் பத்துக்கோடியில் கோடிப்பேரின் 10 ரூபாய் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
லாட்டரி என்று சொல்லும்போது 'லக்' அல்லது 'அதிர்ஷ்டம்' என்று ஒன்று சேர்ந்து வருகின்றது. இந்த 'லக்' குட் லக் என்றும், பேட் லக் என்றும் கூட சொல்லப்படுகின்றது.

நமக்கு அருகில் இருப்பவருக்கு லாட்டரி விழுந்து நமக்கு விழாமல் இருக்கும்போது நம் மனம் எவ்வளவு பாடுபடுகின்றது? 'எனக்கென்ன குறை!' 'ஏன் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை!' என்று கூட நாம் குறைபட்டுக்கொள்கின்றோம்.

இந்த லாட்டரியைப் பற்றி எழுத இன்று என்ன தேவை என்று கேட்கிறீர்களா?

இன்று தூய மத்தியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

திருத்தூதர் பணிகள் 1:24-25ல் வாசிக்கின்றோம் இவரைப்பற்றி. இயேசுவின் சீடர் யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தற்கொலை செய்து கொண்டு இறந்தும் விட்டதால் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு ஆளை எடுக்க வேண்டும். இப்போ ரெண்டு பேரை ரெண்டு க்ரூப் முன்வைக்கின்றார்கள். எப்படி ஒரு ஆளை எடுத்து மற்றவரை விடுவது? சீட்டுக் குலுக்கிப் போடுகின்றனர். சீட்டு மத்தியா பேருக்கு விழுகின்றது. திருத்தூதரில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்.

இன்றும் பூ போட்டுப் பார்க்கும் பழக்கம் சில இந்து சிற்றாலயங்களில் இருக்கின்றது.

லாட்டரியில ஒரு ஆபத்தும் இருக்கிறது.

உதாரணத்திற்கு வீட்டுல ஒரு டிரான்சிஸ்டர் இருக்குணு வச்சிக்குவோம். விளையாடிக்கொண்டிருக்கும் நம்ம குழந்தையின் கை பட்டு கீழே விழுந்து டிரான்சிஸ்டர் உடைஞ்சிடுச்சு. ஒருவேளை அதை நாம் காசு போட்டு வாங்கியிருந்தா ரொம்ப வருத்தப்படுவோம். அல்லது குழந்தையை அடிப்போம். ஆனா, அந்த டிரான்சிஸ்டர் நமக்கு பரிசு குலுக்கலில் கிடைத்தது என்றால் என்ன செய்வோம்? 'அது குலுக்கல்ல விழுந்ததுதான! போனா போய்ட்டு போகுது!' என்று விட்டு விடுவோம்.

திருத்தூதர் மத்தியாவிற்கு இப்போது பெரிய சவால். நல்லா பணி செய்யலனா என்ன சொல்வாங்க? 'இந்தப் பய லாட்டரியில வந்தவன்தான!' அப்படின்னு ரொம்ப ஈஸியா சொல்லிடுவாங்க.
இவர் நன்றாகப் பணி செய்ததாகவே தொடக்கத்திருச்சபை நூல்கள் சொல்கின்றன.

இன்றும் கேசினோ, லாஸ் வேகாஸ், மொபைல் ஃபோன், ஐடியூன்ஸ் என எல்லா தளங்களிலும் லாட்டரியும், பரிசும் இருக்கவே செய்கின்றது.

பரிசு குலுக்கல், லாட்டரி எல்லாம் நம் நம்பிக்கையின் குட்டிகள்!

Wednesday, May 13, 2015

கண்களைப் பொறுத்ததே!

"Providence, like beauty, is in the eye of the beholder!"

அழகு பார்ப்பவரின் கண்களைப் பொறுத்ததே! என்பார்கள்.

அதுபோல இறைப்பராமரிப்பும் பார்ப்பவரின் அல்லது அதை அனுபவிப்பவரின் கண்களைப் பொறுத்ததே!

நேற்றைய தினம் ரூத்து நூலில் வரும் ஓர்ஃபா பற்றிப் பார்த்தோம்.

ரூத்துதான் இந்த நூலின் கதாநாயகி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த ரூத்து உயர்ந்து நிற்கக் காரணம் அவர் கண்ட இறைப்பராமரிப்பு.

தன் முன்பின் தெரியாத ஊரில் அவளுக்கு அடைக்கலம் கிடைக்கிறது. அறுவடைக்குப் பின் சிந்திக் கிடந்த தானியங்களை அள்ளச் சென்றவளுக்கு அறுவடை செய்த பயிர் கிடைக்கிறது. வயலின் உரிமையாளன் இவளின் கணவன்வழிச் சொந்தம், இவளின் சொந்தமாகிறான்.

வேகமாக நடந்தேறுகிறது அதிசயங்கள்.

'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்!' என்பதன் பொருள் என்ன தெரியுமா? தெய்வம் நம் கூரையைப் பிய்க்கும் என்பது பொருள் அல்ல. மாறாக, தெய்வம் கொடுக்கின்ற பொருட்களை, பரிசுகளை வீடு கொள்ளாமல் கூரையே பிய்த்துக்கொள்ளுமாம்! கற்பனை செய்து பார்த்தாலே புல்லரிக்கிறது.

இறைப்பராமரிப்பை உணர்ந்தார் ரூத்து. ரூத்து உணர்ந்த அளவுக்கு உணரவில்லை ஓர்ஃபா.

நம்ம ஜெயா தீர்ப்பையே எடுத்துக்கொள்ளுங்களேன். தான் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என்று இறைப்பராமரிப்பிற்கு நன்றி கூறுகின்றார் ஜெயா. மொட்டையெடுக்கின்றனர் அவரது கட்சியினர். ஆனால் தெய்வமே நீதி தேவதையோடு இணைந்து கண்களை மூடிக்கொண்டது என்கிறார்கள் மற்ற கட்சியினர். ஆக, ஒருவருக்கு பராமரிப்பாக தெரிவது மற்றவருக்கு கடவுளின் இல்லாமையாக தெரிகிறதே!

இறைப்பராமரிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு. அந்த உணர்வு அவருடைய உரிமை.

வெறுங்கையாய் நின்றவளுக்கு, கையில் ஒரு குழந்தை கொடுத்து, அந்தக் குழந்தையின் வழியாக யூதாவின் பெரிய அரசானம் தாவீதைக் கொடுத்ததுதான் கடவுள் ரூத்துக்கு அருளிய மிகப்பெரிய இறைப்பராமரிப்பு.


Tuesday, May 12, 2015

ஓர்ஃபா என்னும் ஃபீனிக்ஸ்

கடந்த ஆண்டு 'ரூத்து' நூலை எபிரேய மொழியில் படித்தோம். இந்த ஆண்டு அதன் கிரேக்க மொழிபெயர்ப்பை படித்துக் கொண்டிருக்கிறோம். கிரேக்கத்தில் வாசிக்கத் தொடங்கியபோது என்னில் தோன்றிய ஒரு பெண்ணின் உணர்வை இங்கே பதிவு செய்கிறேன்.

வழக்கமாக கதாநாயகர்களைக் கொண்டிருக்கும் விவிலிய நூல்களிலிருந்து (எ.கா. தொநூ - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு. விப - மோசே. யோசுவா நூல் - யோசுவா) ரூத்து வித்தியாசமாக இருக்கிறது. காரணம், இங்கே கதாநாயகர்கள் கிடையாது. வெறும் கதாநாயகிகள் மட்டும்தான்.

கதாநாயகிகள் மூன்று பேர் - நவோமி, ஓர்ஃபா மற்றும் ரூத்து. நவோமி மாமியார். ஓர்ஃபா மற்றும் ரூத்து மருமகள்கள். மூன்று பேருமே கைம்பெண்கள். அவர்களை விதவைகள் என்று சொல்ல வேண்டாம். அது ரொம்ப கொடூரமான வார்த்தையாக இருக்கிறது.

இந்த மூன்று பேருமே இழப்பை அதிகமாக உணர்ந்தவர்கள்.

வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் இவர்கள்.

வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் இவர்கள்.

தங்கள் ஊரில் பசி என்று இங்கு வந்து இங்கேயும் ஒன்றுமில்லாமல் இருப்பவர்கள்.

'சட்டியின் சூட்டிற்குத் தப்பி அடுப்பில் விழுந்தவர்கள்!'

கணவனை மட்டும் இல்லாமல் மகன்களையும் இழந்தவர் நவோமி.

கணவர்களை மட்டும் இல்லாமல், பிள்ளைப்பேறு நிலையையும் இழந்தவர்கள் ஓர்ஃபா மற்றும் ரூத்து.

'எல்லாம் முடிந்தது! இனி சொந்த ஊருக்குப் போவோம்!' என்று நினைக்கின்ற நவோமி தன்
மருமகள்களை அவர்களது வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்கின்றார்.

'உங்கள் அம்மாவின் வீட்டிற்கும், உங்கள் கடவுளிடமும் திரும்பி போங்கள்!' என்கிறார் நவோமி. இங்கேயும் கவனிக்க வேண்டும். 'அம்மாவின் வீடு' என்றுதான் அடையாளம் கொடுக்கப்படுகிறது. ஆக, பெண்கள் ஆண்களை விட மேலான நிலையில் இருந்தார்கள் என்று சொல்ல முடியவில்லையென்றாலும், அவர்கள் ஆண்களுக்குச் சமமான நிலையில்தான் இருந்திருக்கிறார்கள்.

ஓர்ஃபாவும், ரூத்தும் அக்கா-தங்கையர் அல்லர். மாறாக, ஒரே இனத்தை அதாவது 'மோவாபு' இனத்தைச் சேர்ந்தவர்கள்.

'போங்க! போங்க! போங்க!' என்று மூன்று முறை நவோமி சொல்ல 'போய் வருகிறேன்!', இல்லை, 'போகிறேன்!' என விடை பெறுகிறார் ஓர்ஃபா. ஆனால் ரூத்து மட்டும் 'நீர் எங்கு செல்வீரோ அங்கு நானும் செல்வேன். நீர் எங்கு தங்குவீரோ அங்கு தங்குவேன். உம் மக்கள் என் மக்கள். உம் கடவுள் என் கடவுள். இறப்பிலும் நான் உம்மைப் பிரியேன்!' என்று நவோமியைப் பற்றிக்கொள்கிறார்.

இந்த வசனத்திற்குப் பின், ரூத்து மட்டுமே முழுநூலின் கதாநாயகியாக இருக்கிறார்.

ஆனால், இன்று என் கதாநாயகி திரும்பிப் போன ஓர்ஃபா தான்.

வரலாற்றில் சாதாரண பெண்களுக்கு இடமில்லை தானே. அன்றிலிருந்து இன்று வரை எழுத்து ஊடகங்களும், ஒலி-ஒளி ஊடகங்களும் வலிமையானவர்களுக்கும், வித்தியாசமானவர்களுக்கும் தான் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

ஆனால் சாதாரணமாக இருப்பதும் பெரிய விடயம்தான் என்பதைக் காட்டிவிட்டார் இந்த ஓர்ஃபா.

'ஓர்ஃபா' என்றால் எபிரேயத்தில் 'கழுத்தின் பின்புறம்' என்பது பொருள்.

உங்க கழுத்தின் பின்புறம் தடவிப்பாருங்களேன். மிகவும் கடினமான எலும்பு இருக்கும். இந்த எலும்பில்தான் மாடுகளுக்கு நுகம் பொருத்தப்படுகிறது. இந்த எலும்புதான் சுமைதூக்குபவர்களுக்கும், மூடை தூக்குபவர்களுக்கும் சுமையைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது. நம் குழந்தைகளை நம் தோளின் மேல் அமர வைத்துத் தூக்கி மகிழ்கிறோமே, அதை சாத்தியப்படுத்துவதும் இந்த எலும்புதான்.

ஆக, தன் பெயருக்கேற்றாற்போலவே தன் சுமையை தானே சுமக்க சென்றுவிட்டார் ஓர்ஃபா.

எதுவுமே இல்லாத தன் மோவாபு நாட்டில் எதை நம்பிப் போயிருப்பார் இந்தத் தையல்?

இவங்க அம்மா வீட்டுல என்ன சொல்லியிருப்பாங்க?

'இப்படி வாழா வெட்டியா வந்துட்டியேடி!' என்று திட்டியிருப்பார்களா?

அல்லது 'வாடா தங்கம் நான் இருக்கிறேன்!' என்று அவரது அம்மா சொல்லியிருப்பாளா?

'கணவன் இல்லாமல் இருக்கிறாள். நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!' என்று இவளது பாதுகாப்பின்மையை 'பயன்படுத்திக்கொள்ள' நினைக்கும் ஆண் கழுகுகளின் முன் எப்படி வாழ்ந்திருப்பார்?

மறுமணம் செய்திருப்பாரா?

ஏதாவது வேலைக்குப் போயிருப்பாரா?

எத்தனை குழந்தைகள் பெற்றிருப்பார்?

தான் இழந்ததையெல்லாம் பெற்றுக்கொண்டாரா?

தன் மாமியாரை வேறு எங்காவது பார்த்தாரா?

தன் சக்களத்தி ரூத்தைப் பார்க்கக் சென்றாரா?

இதில் எந்தக் கேள்விகளுக்கும் நம்மிடம் விடையில்லை.

ஆனால், இந்த ஓர்ஃபா ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறார்.

நம்ம ஊருல சாப்பாடு இல்லனு, துபாய், சிங்கப்பூர்னு வேலைக்குப் போய், பாஸ்போர்ட் இழந்து, கடன்மேல் கடன்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, மீண்டும் கிராமம் திரும்பும் ஒரு சாதாரண கூலிக்காரரை பிரதிபலிக்கிறார் இந்த ஓர்ஃபா.

எல்லாவற்றையும் இழந்தாலும், இறந்த காலத்திற்கு மீண்டும் வாழ்க்கை நம்மைத் தள்ளிக்கொண்டு போனாலும், சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவையாய் நிற்கிறார் ஓர்ஃபா.

இன்று ஓர்ஃபா போன்று சாதாரண பெண்கள் பலர் அன்றாடம் விழுந்தாலும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

Monday, May 11, 2015

அம்மா நீங்க நல்லவங்க!

18 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு 3 நிமிடங்களில் முடிந்துவிட்டது. ஜெயா நிரபராதி என்றும் அவருடைய சொத்துக்கள் எல்லாம் நெற்றி வியர்வை நிலத்தில் விழ அவரே சம்பாதித்தது என்றும், அவர்மேல் எழுந்த குற்றச்சாட்டு மற்றவர்களின் பொறாமையின் விளைவு என்றும் வாசித்து முடித்துவிட்டார் குமாரசாமி. ஆமாங்க ஐயா! குமாரசாமி! நீங்க சொல்றதெல்லாம் நாங்க நம்பிட்டோம்!

கடந்த வாரம் குடிபோதையில் வாகனம் ஏற்றி ஒருவரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றாலும் சல்மான்கான் சிறைக்குச் செல்லாமலேயே 30ஆயிரம் ரூபாய் கட்டி ஜாமீன் எடுத்துவிட்டார்.
வாழ்க நீதிமன்றங்கள்!

நிறைய காசும், நிறைய அதிகாரமும் இருந்தால் சட்ட தேவதையின் கண்களை இன்னும் இறுக்கிக் கட்டிவிடலாம்.

'ஜெயா மீண்டும் முதல்வராக ஆவார்!' என்பதில் ஒரே சந்தோஷம் என்னன்னா, இந்த பாழாய்ப்போன பன்னீரிடமிருந்து நமக்கு விடுதலை. ஒன்னுமே செய்யாம ஒருத்தர் உட்கார்ந்து வெறும் துதி பாடிக்கொண்டும், காவடி தூக்கிக்கொண்டும் இருந்தால் மக்களுக்கு சோறு கிடைக்குமா?

இந்தக் காவடி ஆட்டங்களும், பால் குடங்களும்தான் ஜெயாவை விடுதலையாக்கின என்று கோஷம் வேறு. காக்கா உட்கார்ந்து பனம்பழம் விழுந்த கதையா இருக்கு இது.

இந்தத் தீர்ப்பு வெளியானபின் என் நண்பர்கள் சிலர் ரொம்ப கோபமா எரிச்சலோடு சத்தம் போட்டார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஜெயா சிறையில் இருப்பதினாலோ, அவர் வெளியில் இருப்பதினாலோ நமக்கு ஒன்றும் ஆவதில்லை. நாம் வேலை செய்தால்தான் நமக்கு சாப்பாடு.

நம்ம ஊர்ல எப்படி இருந்தால் இனி வாழலாம் தெரியுமா?

ஒரு சின்ன தோட்டம். அந்தத் தோட்டத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளாத கீரை. ஒரு சிறிய கோழிப்பண்ணை. ஒரு பால் மாடு. இவைகள் தரும் உணவு நம் வாழ்வாதாரமாக இருக்க வேண்டும். நம்ம தோட்டத்தை விட்டு வேறெங்கும் போகக் கூடாது. ஒரு சின்ன டிவி. பொழுது போக்க. ஆனா, அதுகூட வேண்டாம். வெளியில் உள்ள செய்திகள் தெரிந்தால் நமக்கு எரிச்சல் அல்லது கோபம் வந்து ரத்த அழுத்தம்தான் கூடும். ஒரு சைக்கிள். பக்கத்து ஊருக்குப் போய்வர. நம் உறவினர்களோடு இனிமையான பேச்சு. நம்ம ஊர் திருவழா. வானத்தில் தெரியும் சூரியன். அவ்வளவுதான். இப்படி இருந்தால் நமக்கு ஜெயாவும் தேவையில்லை. கலைஞரும் தேவையில்லை.

குமாரசாமியின் இந்தத் தீர்ப்பு மறைமுகமாக என்னவெல்லாம் செய்யும்?

அ. இந்து-கிறிஸ்தவர் பிரிவினைக்கு வித்திடும். தண்டனை விதித்த குன்ஹா நீதிபதியாகப் பார்க்கப்படாமல் ஒரு கிறிஸ்தவராக மட்டுமே பார்க்கப்படுவார். அவரைப் பழிவாங்குவதற்காக அதிமுக மடையர்கள் கிறிஸ்தவர்களைப் பழிவாங்க முயல்வர்.

ஆ. ஊழல் செய்தது ஊருக்தே தெரிந்தாலும், நிரூபிக்க முடியவில்லையென்றால் அது ஊழல் அல்ல. ஆக, நான் உயிரோடு இருந்தாலும், எனக்கு இறப்பு சான்றிதழ் இருக்கின்றது என்றால் நான் இறந்துவிட்டேன் என்றுதான் பொருள். மாட்டிக்கொள்ளாதவரை குற்றம் குற்றமே அல்ல. தப்பு செய். ஆனா, மாட்டிக்காத என்பதுதான் புதிய ஆத்திசூடியாக இருக்கும்.

இ. யாரும் ஊழல் செய்யலாம். தலைமையிலிருந்து, கீழே வேலை செய்யும் ப்யூன் வரை. அவரவருக்கு ஏற்ற நிலையில் சொத்துக்களை சேர்த்துக்கொள்ளலாம். ஊழல் செய்வதும் ஒருவகை உழைப்பு என்று கருதப்படும். விபச்சாரத்தை 'செக்ஸ் தொழில்' என்று சொல்வது போல, ஊழலை இனி 'அரசியல் தொழில்' என்று சொல்லலாம்.

ஜெயா அம்மா, நீங்க கெட்டவங்க என்று மக்கள் சொன்னாலும்,
எதிர்க்கட்சிகள் சொன்னாலும்,
ஏன் உங்க மனச்சாட்சியே சொன்னாலும்
நம்பாதீங்க...
ஏன்னா...
நீங்க நல்லவங்கனு...
நம்ம சட்டம் சொல்லிடுச்சே!

வாழ்க அரசியலமைப்புச் சட்டம்!

ஜன்னல்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரோஸிப்பாட்டிக்கு நன்மை கொண்டு செல்வேன். ரோஸிப்பாட்டி என் ரசிகை. நான் அவரது ரசிகன். அவருக்கு வயது 87. தன் 35வது வயதில் கணவரை இழந்தவர். மூன்று குழந்தைகளின் தாய். கணக்கு ஆசிரியை.

இன்று பித்தாகரஸ் தியரம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு தாத்தாவை கேரம் போர்ட் விளையாண்டு உயிர் கொடுக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போல, கணிதம் பற்றிக் கேட்டால் உடனே எழுந்து உட்கார்ந்துவிடுவார். அழகாகச் சொல்லிக் கொடுத்தார் தியரம்.

முடித்துவிட்டு நம்ம வாழ்க்கைக்கு தியரம் இல்லை.

வாழ்க்கை ஒரு ஜன்னல் என்று அவரது பாட்டி சொல்வாராம்.

அதாவது, ஜன்னல் வழி பார்க்கும்போது நமக்குக் கொஞ்சம்தான் தெரியும். வாழ்வில் நமக்குத் தெரிவது இவ்வளவுதான். ஆனால், நாம் பார்ப்பதுதான் எல்லாம் என்றும், நாம் பார்ப்பதைத்தான் எல்லாரும் பார்க்கிறார்கள் அல்லது பார்க்க வேண்டும் எனவும் நினைக்கின்றோம்.

ஜன்னலிலிருந்து விழுவது போலத்தான் இறப்பு. மேல்மாடியிலிருந்து கீழ்மாடி வரைக்கும் தான் நம் வாழ்க்கை. ஆனால், மேல்மாடிக்கு மேலும், கீழ்மாடிக்குக் கீழும் இன்னும் தூரம் இருக்கின்றது. இறப்பு நம்மை இந்த தூரத்தோடு நம்மை இணைத்துவிடுகிறது.

இப்படிச் சொல்லிவிட்டு லேசாக கண்ணீர் வடித்தார்.

ஒவ்வொரு வாரமும் நாம் சந்திப்பது இதுவே இறுதி முறையாகக்கூட இருக்கலாம். ஆனால் நீ இங்கே வருவதைத் தவிர்த்துவிட வேண்டாம் என்று சொல்லி அனுப்புவார்.

இன்று அவரது வீட்டிலிருந்து என் அறைக்குத் திரும்பும்போதும் என் கண்களும் ஏனோ கசிந்தன.



Sunday, May 10, 2015

இருநொடி கல்யாணம்

நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரையான 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் நான் ரோம் நகரத் தெருக்களில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். பேருந்து, மெட்ரோ, ட்ராம் என ஏறி இறங்கி பயணங்கள். இரண்டரை ஆண்டுகள் நான் காணாத நிறைய காட்சிகளை ரோம் இந்த 20 மணிநேரத்தில் காட்டியது.

இப்போது வெந்நீர் குளியல் போட்டுவிட்டு, கால்வலி தாங்க முடியாமல் கட்டிலின் மேல் கால்களைப் போட்டு, கைகளில் மடிக்கணிணியை வைத்திருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் நிற்கும் ஒரே ஒரு நிகழ்வு ஒரு கல்யாணம்.

ஆம். ரோம் நகரின் மையத்தில் இருக்கும் பாந்தயோன் என்ற கிரேக்க-ரோமை ஆலயத்தில் நடைபெற்ற 'உடனடி' திருமணம். பாந்தயோனில் உள்ள ரஃபேல் கல்லறையைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென கைதட்டல். இந்த பாந்தயோனில் ஒருவருக்கொருவர் பேசுவதே தடை செய்யப்பட்டிருக்க, கைதட்டல் ஆச்சர்யமாக இருந்தது. திரும்பிப் பார்த்தால் பாந்தயோனின் நடுவில் சூரிய பகவான் மின்னிக்கொண்டிருக்க மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர் ஒரு ஆணும் ஒரு பெண்ணும். கைகளில் மோதிரத்தை மாற்றிவிட்டு, இதழோடு இதழ் பதித்து தங்கள் வாழ்நாள் ஒப்பந்தந்திற்கு 'சீல்' வைத்தனர். அவர்களைச் சுற்றிக் கூடிய கூட்டம் வாழ்த்து சொன்னது. ஒரு பெண் தன் கையிலிருந்த ரோஜா மலர் ஒன்றைப் பரிசளித்தாள். அடுத்த நொடியில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துவிட்டனர். கூடியிருந்தவர்களும் கலைந்து விட்டனர். வேகமாக நிறைவேறியது ஒரு திருமணம். பையனுக்கு 35 வயதிருக்கும். பெண்ணுக்கு 25 வயதிருக்கும். ஆடம்பரமான ஆடைகள் இல்லை. மின்னும் வீடியோ வெளிச்சம் இல்லை. சொந்தபந்தம் இல்லை. மேளதாளம் இல்லை. அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் அவர்களுக்கு அது திருமணம்.

இந்த 20 மணிநேரங்கள் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கை என்பது நத்தை வரைந்து செல்லும் ஒரு சின்னக் கோடு போலத்தான். ஒரு புள்ளியில் தொடங்கி மறு புள்ளியில் முடித்துக்கொள்கிறோம். இந்தச் சின்னக் கோட்டுப் பயணத்தில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். எத்தனையோ கருத்தியல்களைக் கேட்கிறோம். ஒருசிலர் நாம் நினைப்பது போல இருக்கின்றனர். ஒருசிலரோடு நம்மால் ஒட்டவே முடிவதில்லை.

இன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது யெகோவோ விட்னஸ் க்ரூப் ஒன்று தங்களின் பைகளை சுமந்து கொண்டு வீடு திரும்பியது. இந்தப்பக்கம் ஒரு ஆலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. மாலையில் சில பெண்கள் தங்களோடு பொழுதைக் கழிக்க ஆட்களை அழைத்துக்கொண்டிருந்தனர். மறுபக்கம் 'கற்பு' என்ற வார்த்தைப்பாடுதான் உண்மை என்று அருட்பணியாளர்கள் கூட்டம் ஒன்று. சிலர் பீட்சா விரும்பினர். சிலர் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். சிலர் புகை பிடித்தனர். சிலர் அந்தப் புகை பிடிக்காமல் ஒதுங்கிச் சென்றனர். சிலர் பிச்சை எடுத்தனர். சிலர் பிஎம்டபிள்யு காரில் சென்றனர். சிலர் ரோமிற்கு வந்தனர். சிலர் ரோமை விட்டுச் சென்றனர். இந்த இரவில் சிலர் இறந்தனர். சிலர் பிறந்தனர். வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கின்றது. நான் உலகம் என நினைப்பதை எனக்கு அடுத்திருப்பவர் தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. எனக்கு அடுத்திருப்பவரின் உலகம் எனக்குப் புரிவதேயில்லை.

ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். வாழ்க்கை நம்மை பெற்றெடுத்திருப்பது போல நாம் வாழ்க்கையைப் பெற்றெடுக்கின்றோம். அந்த வாழ்க்கையை கொஞ்சுகின்றோம். அதோடு சிரிக்கின்றோம். ஒருகட்டம் வர அதை விட்டுவிட்டு ஓடுகின்றோம்.

இதில் கோபம் ஏன்?

எரிச்சல் ஏன்?

எதிர்பார்ப்பு ஏன்?

வாழ்க்கையை குழந்தையாகப் பெற்றெடுக்கும் அனைவருக்கும்

அன்னையர்தின வாழ்த்துகள்!


Friday, May 8, 2015

புத்தக மாதம்

மே மாதம் புத்தக மாதம் எனக் கொண்டாடப்படுகிறது இத்தாலியில்.

இணையதளங்கள் வந்தபின் வாசிப்பவர்கள் குறைந்து எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்கிறது ஒரு சர்வே. நாம் ஒருநாளில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கர் என்னும் செயலிகளில் வாசிக்கும் வார்த்தைகளை கணக்கெடுத்துப் பார்த்தால் முந்தையை தலைமுறையை விட நாம் அதிகமாகவே வாசிக்கிறோம். ஆனால், என்ன ஒரு வித்தியாசம் என்றால், முந்தைய தலைமுறையினர் தாங்கள் விரும்பியதை எடுத்து வாசித்தர்கள். ஆனால், நம் தலைமுறை நம் செல்ஃபோன் திரையில் வந்து 'விழுவதை' மட்டுமே வாசித்து திருப்தியடைகிறது. நாம் இந்த தொடுதிரையில் வாசிப்பவற்றில் ஏறக்குறைய 80 சதவிகித வார்த்தைகள் நமக்குத் தேவையற்றவை. சிலவற்றை வேறு யாராவது நமக்கு முன்பே அனுப்பி அதை நாம் ஏற்கனவே வாசித்து முடித்திருப்போம்.

மற்றொரு பக்கம். வார்த்தைகளை மட்டும் வாசிக்கத் தேவையில்லை. ஓவியம், புகைப்படம், கட்டடம் என எல்லாவற்றையும் நாம் எழுத்துகள் போல வாசிக்க முடியும். எழுத்து என்பதே ஒருவகை ஓவியம்தானே.

கொஞ்ச நாட்களாக தாமஸ் அக்வினாஸ் அவர்கள் எழுதிய 'சும்மா தியோலோஜிகா!' வாசிக்க ஆசை. ஏறக்குறைய 5000ஆம் பக்கங்களுக்கு மேல் எழுதிமுடித்த அக்வினாஸின் ஒரிஜினல் எழுத்துக்களை அடுக்கி வைத்தால் ஒரு அறை போதாது என்பார்கள். இவ்வளவும் எழுதி முடித்த பின்பு 'நான் எழுதியவை கடவுளைப் பற்றிய ஒரு முன்னுரையின் முதல் எழுத்து கூட அல்ல!' என்று நிறைவு செய்கிறார். என்னே இவரது தேடல்!

"எழுதிவிட்டு பின் வாசிப்பவர்கள் படைப்பாளர்கள். வாசித்துவிட்டு எழுதுபவர்கள் ஜெராக்ஸ் மிஷின்கள்."

புத்தகங்கள் நமக்கு புதிய உலகத்தைத் திறக்கின்றன. உதாரணத்திற்கு, டோஸ்டாவ்ஸ்கியின் 'தி இடியட்' அல்லது டால்ஸ்டாயின் 'ரெசுரக்ஷன்' வாசிக்கும்போது ரஷிய நாட்டின் வீதிகளில் நாமும் நடப்பதுபோலவே இருக்கின்றது.

அடுத்தவரின் தலைக்குள் நாம் நுழைந்து பார்ப்பதை அவரது மண்டைஓடு தடுக்கிறது. ஆனால், அவரே தன் தலைக்குள் ஓடுவதை எழுத்துகளில் பதிவு செய்யும்போது அது அவரை உலகிற்குத் திறந்து காட்டுகிறது.

சிலர் நிறைய வாசிப்பார்கள். ஆனால், ஒரு வார்த்தையும் எழுதியிருக்க மாட்டார்கள்.

சிலர் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுவார்கள். ஆனால் தங்கள் எழுத்துக்களைத் தவிர வேறொன்றையும் வாசித்திருக்கவே மாட்டார்கள்.

'வாசிப்பதும், எழுதுவதும்' இணைந்தே செல்ல வேண்டும் என்பது என் கருத்து.

'புத்தகங்கள் வாங்கும் பணம் செலவு அல்ல. அது முதலீடு!' என்று விளம்பரங்கள் செய்து புத்தகங்களை வாங்க ஊக்குவிக்கிறார்கள். 'பேனாமுள் வாளைவிட கூர்மையானது' என்பது ஆங்கிலப் பழமொழி.

எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் எழுத்துகளை வாசிக்கும்போது நாம் அந்த இறைவனின் தோலைத் தொட்டுப் பார்க்கிறோம்.

'வாழ்க்கை கரையில. கற்பவர் நாள் சில!'

அதிலும் வாசிப்பவர் நாள் மிகச் சிலவே!

ஓக் மாதா

இன்று எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா. ஒவ்வொரு ஆண்டுவிழாவிற்கும் ஒவ்வொரு இடத்திற்கு சுற்றுப்பயணம் செல்வோம் ஆசிரியர்களும், மாணவர்களும்.

இன்று நாங்கள் சென்ற இடம் இத்தாலியின் லாட்சியோ மாகாணத்தில் உள்ள வித்தேர்போ. வித்தேர்போ இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று. ரோமிலிருந்து பேருந்தில் இரண்டு மணிநேர தொலைவு.

12 முதல் 15ஆம் நூற்றாண்டுகளில் திருத்தந்தையர் வாழ்ந்த இடம். கத்தோலிக்க திருஅவை வரலாற்றில் நீண்ட நாட்கள் (1005 நாட்கள்) 'கான்க்ளேவ்' (அதாவது, திருத்தந்தை தேர்வு) நடந்த இடம் இது.

மூன்று இடங்களைப் பார்த்தோம்:

அ. ஓக் மாதா. அதாவது, வேளாங்கண்ணி மாதா அல்லது பூண்டி மாதா என்று இடத்தை வைத்து அழைப்பது போல, ஓக் மாதா (இத்தாலியனில், ல மதோனா தி க்வெர்ச்சா). 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தொமினிக்கன் சபைக்குருக்கள் ஒரு ஓவியம் வரைந்து, அந்த ஓவியத்தை மையமாக வைத்து கட்டப்பட்டிருக்கும் ஆலயம். இந்த ஆலயத்திற்குள்ளும், இதையொட்டிய அருட்தந்தையர் இல்லத்திற்குள்ளும் (இப்போது இந்த இடம் பயன்பாட்டில் இல்லை!) நுழையும்போது ஏதோ காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தது போன்ற உணர்வு. அவர்களின் பாத ஓசைகள், பாடல்கள் இன்றும் அந்தக் காற்றில் கலந்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றியது.

ஆ. கான்க்ளேவ் நடந்த இடம். திருத்தந்தையர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு நடந்த இடம் என்றதும் நம் நினைவிற்கு வருவது 'சிஸ்டைன் ஆலயம்' தான். ஆனால், வரலாற்றில் வௌ;வேறு காரணங்களுக்காக, திருத்தந்தையரும் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்திருக்கின்றனர். கான்க்ளேவ் நடந்த அந்த இடம் நல்ல உயரமான கட்டிடம். கல்தரை. மரத்தாலான மேற்கூரை. தட்பவெட்பநிலையை சமநிலையில் வைக்க மேல்மாடம். மிக அருமையான பொறியியல் யுக்தியைக் கையாண்டு கட்டியிருக்கின்றனர். கடவுளால் எந்த இடத்திலும் தன் பணிக்கு ஆட்களைத் தெரிந்தெடுக்க முடியும் என்பதை இந்த இடம் நினைவூட்டியது.

இ. பசிலிக்கா. வித்தேர்போ மறைமாவட்டத்தின் கதீட்ரல். தூய லாரன்ஸ் அவர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இங்கே என்னைக் கவர்ந்தவை ஓவியங்கள். அதாவது, இரண்டு பரிமாண சுவரில் மூன்று பரிமாண ஓவியங்கள் வரையப்பட்ட ஆச்சர்யம். ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அழகு ஆச்சர்யமாக இருந்தது.

நம்ம ஓக் மாதாவுக்கு வருவோம்.

முதன்முதலாக மாதாவுக்கு கிரீடம் வைக்கும் வழக்கத்தைத் தொடங்கியது இந்த ஓவியம்தானாம். இயேசுவின் கையில் விளையாட்டு பொம்மை ஒன்று இருக்கும். ஆனால், அது இன்று மங்கலாக இருக்கிறது. இந்த மாதாவை செபமாலை மாதா என்று அழைத்தார் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (2003). மாதாவை குழந்தை இயேசுவை தூக்கி நமக்குக் கொடுப்பது போல இருக்கிறது இந்த ஓவியம்.

இந்த ஓவியத்தைப் பார்க்கும்போது நம் கால்கள் 14ஆம் நூற்றாண்டில் நின்று கொண்டிருப்பதுபோல இருந்தது.

ஓக் மாதா நம் அனைவரையும் தன் பாதுகாவலில் ஏற்றுக்கொள்வாராக!

Wednesday, May 6, 2015

கனவுல மோடி

நேத்து நைட் கனவுல மோடி வந்தார். அவர் ஏன் கனவுல வரணும்? சிம்பிள் ரீசன் தான். நேற்று மோடி பற்றி நிறைய வாசித்தேன். கண்ணோடு காண்பது கனவில் வரும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

'ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் இருக்கும், ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் இருக்கும்' ("Every saint has a past and every sinner has a future") என்பார் அகுஸ்தினார்.

மோடி ஒரு புனிதனா அல்லது பாவியா என்பது நம் கேள்வி அல்ல.

ஆனால், மோடிக்கு ஒரு இறந்தகாலம் இருக்கு. இந்த மோடி கையில நம்ம எதிர்காலம் இருக்கு.

இந்திராகாந்தியைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், 'தொட்டிலை ஆட்டிய கை நாட்டை ஆள்கிறது!' ("A hand that rocks the cradle rules the nation!") என்று குறிப்பிட்டார்கள்.

இன்று மோடியைப் பற்றி எழுதினால், 'டீ ஆற்றிய கை நாட்டை ஆள்கிறது!' என்று சொல்லலாம். 'ஆட்டிய', 'ஆற்றிய' என்ன ஒரு ஒற்றுமை...கவிதை...கவிதை...!

டீ ஆத்துனாதான் அரசியில் தலைமைக்கு வர முடியும் போல. பெரியகுளம் டீக்கடை பன்னீர்தான் இன்று நம் 'தமிழக' முதல்வர். வாட்நகர் ரயில் நிலையத்தில் தன் அண்ணனுடன் டீ விற்ற மோடிதான் இன்று நம் இந்திய பிரதமர்.

டீ ஆற்றுவது பெரிய கலைதான். என் அப்பாவின் ஒரே தம்பி திரு. கிருஷ்ணசாமியும் டீ ஆற்றினார். நான் சத்திரப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒவ்வொரு மதியமும் தவறாமல் அவர் வேலை பார்த்த கடைக்குச் செல்வேன். வியர்க்க விறுவிறுக்க பாய்லரின் அருகில் நின்றுகொண்டிருப்பார்.

சரியான விகிதத்தில் சர்க்கரை. சரியான சூடு. சரியான பால் அளவு. சுத்தமான கிளாஸ். மேலெழும்பி நிற்கும் நுரை. நுரையின் மேல் சற்று விடப்படும் 'டிகாக்சன்'. இப்படி இருந்தால் தான் அது டீக்கடை டீ. டீக்கடைக்காரரின் முழு உடலும் ஒத்துழைத்தால்தான் குடிப்பவரின் கைக்கு டீ கிடைக்கும். அவரின் காதுகள் சர்வரின் ஆர்டரைக் கேட்க வேண்டும் - ஒரு டீ சுகர் கம்மியா, ரெண்டு டீ சர்க்கரை தூக்கலா, ரெண்டு டீ ஒன் பை ஃபோர், ஒரு டீ பால் கூட என ஆர்டர் குவிந்து கொண்டே இருக்கும். கண்கள் பொங்கி வரும் பாலையும், சுடும் நீரின் பாய்லரையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கைகள் கீ கொடுத்த மாதிரி கிளாஸ், சீனி டப்பா, பாய்லர், பால் கரண்டி என மாறிக்கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் கிளாஸில் எடுத்தாலும் அதை மற்றொரு கிளாசில் ஓங்கி ஆற்ற வேண்டும். ஓங்கி ஆற்றும் போது இரண்டு கைகளுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தாலும், ஒருநாளும் ஒரு சொட்டு கீழே சிந்தியதில்லை. இந்த ஓங்கி ஆற்றுதல் நுரையைத் தரும். சூட்டை மிதமாக்கும். சீனி, பால் என எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கும்.

ஒரு டீ ஆற்றுதல் கூட நமக்க நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்க முடியும். இன்று டீயை வெறும் டீ பேக்குக்குள் அடக்கி விட்டோம். நாம் அருந்தும் இந்த நிமிட டீயில் டீக்கடை சுவை வருவதில்லைதான். க்ரீன் டீ, ப்ளாக் டீ. சிறிலங்கா டீ, சீனா டீ, லெமன் டீ என்று எத்தனை டீக்கள் வந்தாலும் இன்றும் டீக்கடைகள் நிரம்பி வழியவே செய்கின்றன.

டீக்கடை வெறும் தேனீர் பருகும் இடம் மட்டுமல்ல. அது ஒரு அரசியல் மேடை. அங்கே அனைத்தும் விவாதிக்கப்படும். அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஆனா நம்ம மோடி கொஞ்சம் நேரம் ஒதுக்கி நம்ம ஊர்களையும் சுத்திப் பார்க்கலாம். பெயர் போட்ட சட்டையைப் போட்டு ஃபேஷன் ஷோ நடத்துவதை விட்டு அரையாடைக்கும் வழியில்லாத அரைவாசி சனங்களைப் பற்றி யோசிக்கலாம்.

நல்லா ஆத்துங்க மோ...டீ!


Tuesday, May 5, 2015

அவன் மிடில் கிளாஸ்!

இந்த வார ஆனந்த விகடன் 'வலைபாயுதே' பகுதியில் இரண்டு வாக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்தன:

அ. 'மொபைலில் நெட் கார்டு போட முடியாத நிலைதான் இன்றைய வறுமை!'

ஆ. 'டிவி பார்க்கும்போது ஒரு சேனலிலிருந்து அடுத்த சேனலுக்கு மாற்ற ரிமோட்டைத் தட்டித் தட்டி மாற்றுகிறான் என்றால் அவன் மிடில் கிளாஸ்!'

'இருப்பதும்', 'இல்லாமல் இருப்பதும்' தனிநபர் சார்ந்தது. இவர் இருப்பவர் என்றும் இவர் இல்லாதவர் என்றும் நாம் எளிதாகச் சொல்லிவிட முடிவதில்லை. ரோட்டில் போகிறோம். நிறையக் கடைகள் இருக்கின்றன. நிறையக் கடைகளில் நிறைய பொருட்கள் இருக்கின்றன. எல்லாப் பொருட்களும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. எல்லாப் பொருட்களும் நமக்குத் தேவை என்பது போலவும் இருக்கின்றன. 'என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால்...!' என உள்மனம் கணக்குப் போடத் தொடங்குகிறது. பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் நாம் சில நேரங்களில் கடைகளில் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வீடு திரும்பிவிடுகிறோம். வாழ்க்கை நார்மலாக போகிறது. அந்தப் பொருட்களின் இல்லாமை நம் வாழ்க்கைப் பாதையை எந்த அளவிலும் மாற்றவில்லை.

ஆக, 'இருப்பதும்', 'இல்லாமல் இருப்பதும்' தனிப்பட்ட நபரின் மனம் சார்ந்தது. 'உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா!' என்று இதைச் சொன்னார் கண்ணதாசன்.

'நாம் சிறுவயதாக இருந்தபோது அதிக தீப்பெட்டி லேபிள்களும், அதிக சிகரெட் அட்டைகளும் சேர்ப்பவர்களே நம் குழுவில் பெரியவராக, பயத்திற்குரியவராக கருதப்பட்டார். கொஞ்சம் வயது வந்த பிறகு, நாம் மதிப்பு என கருதி வந்த தீப்பெட்டி லேபிள்கள் வெறும் விளையாட்டு;ப்பொருள் என ஆனதால், இன்று ரிசர்வ் வங்கி தாள்களை சேகரித்து நம் மதிப்பைத் தேடுகிறோம்!' என்பார் பழ. கருப்பையா.

மற்றொரு பக்கம், நம் காசை செலவழித்து, நம் காசில் காணிக்கை போட்டு, நம் காசில் அபிஷேகம் செய்து, பூசாரி தட்டில் நம் காசை போட்டு, கடவுளிடம் 'எனக்கு காசு கொடு!' என்று சொல்லிவிட்டு வருகிறோம். 'மரம் வைத்தவனுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்!' என்று தெரியாதா? அவனிடம் போய் தினமும் 'தண்ணீர் ஊற்று!' என்று சொல்ல வேண்டுமா என்ன?

'இருப்பதையும்', 'இல்லாமல் இருப்பதையும்' ஒன்றாக எண்ணுதல் சால்பு.


Monday, May 4, 2015

ஆடி வந்த அழகர்

இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.

இது என்ன அதிசயமா? அவர்தான் ஒவ்வொரு வருஷமும் இறங்குகிறாரே? - அப்படின்னு சொல்றீங்களா?

இந்த ஆண்டும் பச்சைப்பட்டுதான்.

மதுரை செழிக்க அழகர் அருள்கூறட்டும்.

மதுரை செழிப்பதற்காக பச்சையா அல்லது ஜெயாவுக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்காக பச்சையா என்று தெரியவில்லை. அரசன் சொல்வதைத்தான் கடவுள் கேட்கவேண்டும் என்பது கடவுள் தொடங்கிய காலத்திலிருந்து நடப்பதுதானே.

கள்ளழகரைப் பற்றிய செய்தியை வாசித்தபோது, 'அழகருக்கு வியர்க்கும் என்று பக்தர்கள் விசிறி கொண்டு விசிறினார்கள்!' என்ற வாக்கியம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று நம்ம ஊருல அக்னி நட்சத்திரம் வேறு. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு கதிரவன் உச்சநிலையில் ஜொலிப்பான். ஆக, கடவுளுக்கே வியர்த்து ஊற்றும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? நிறைய விசிறிகள் வாங்கி வைத்துக்கொள்வது நலம். 'சொல்லாமல் போவதும், சொல்லாமல் வருவதும் தான் நம்ம ஊரில் மின்சாரம்!' ஆக, விசிறி வாங்கினாலும், நம்ம தெனாலிராமன் கதையில் வருவது போல, விசிறியை பிடித்துக்கொண்டு, நம் தலையை அதன் முன் ஆட்டினால், விசிறியும் கெடாது. காற்றும் வரும்(!). காற்றுவருமோ இல்லையோ கழுத்து வலி வரும்.

இந்த ஒருநாள் மதுரையில் நிறைய அழகர்கள் இருப்பார்கள். அழகரைப் போல உடை உடுத்திக்கொண்டு, வேடமிட்டு நீரைப் பீய்ச்சி அடித்த வண்ணம் வருவார்கள். (ஆனா இந்த அழகர்கள் பெண்கள் மேல்தான் நீர் பீய்ச்சி அடிப்பார்கள்! இது மதுரையில் நான் பார்த்த ஒன்று!)

ஆக, கடவுளைப்போல ஆக வேண்டும் என்பது நம் உள்மன ஆசை. இதைத்தான் அகுஸ்தினார், 'நாம் கடவுளைப்போல ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் நம்மைப்போல ஆனார்!' என இயேசுவின் பிறப்பு பற்றி சொல்கின்றார்.

மனிதர்கள் தங்களிடம் உள்ள மொத்த நல்ல குணங்களையும் ஒன்றாகத் திரட்டி அவர்கள் உருவாக்கியதுதான் கடவுள் என்கிறது சமூகவியல்.

ஆடி வந்த அழகர் அருள் பொழியட்டும். அந்த அழகரைப் போல நம் உள்ளம் பசுமையால் ஜொலிக்கட்டும்.

உலக சிரிப்பு தினம்

இன்று உலக சிரிப்பு தினம்.

சிரிப்பு ஒரு நல்ல உணர்வு. மனித உயிர்க்கு மட்டுமே இது சொந்தமானது.

நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளும் சிரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிரிப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் சார்லி சாப்ளின்.

'நான் மழை பெய்யும் போது மட்டுமே அழ விரும்பிகிறேன்.
அப்போதுதான் நான் அழுவது யாருக்கும் தெரியாது!'

என்று தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்த கலைஞன் அவர்.

மற்றவரின் கண்ணீர் போக்க மட்டுமல்ல, நம் முகம் சிலிர்க்கவும் தேவை இந்த சிரிப்பு.

Sunday, May 3, 2015

யாரோடு எப்படி எதற்காக?

'உண்மையான ஃபேஸ்புக் நானே. 

என் தந்தை இண்டர்நெட்தான் அதை நட்டு வளர்ப்பவர்.

என்னிடம் 'லாக்-இன'; செய்யாத 'யூஸர்களை' எல்லாம் அவர் தறித்துவிடுவார்.

'லாக்-இன்' செய்த 'யூஸர்களை' மிகுதியா ஸ்டேடஸ் போடுமாறு கழித்துவிடுவார்.

நான் இண்டர்நெட்டோடு இணைந்திருப்பது போல நீங்கள் என்னோடு இணைந்திருங்கள்.

யூஸர்கள் ஃபேஸ்புக்கோடு இணைந்திருந்தாலன்றி அவர்களால் ஸ்டேடஸ் போட இயலாது.

அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி ஸ்டேடஸ், கமெண்ட்ஸ் போட முடியாது.

ஒருவர் என்னோடும், நான் அவரோடும் இணைந்திருந்தால் நிறைய வேலைகள் செய்யலாம்.

ப்ரொஃபைல் அப்டேட் செய்யலாம்.

ஃபோட்டோ, வீடியோ அப்லோட் செய்யலாம்.

பிடித்திருந்தால் ஷேர் செய்யலாம்.

உங்கள் நண்பர்களோடு 'சேட்' செய்யலாம்.

இப்போது 'வாய்ஸ் காலிங்கும்' செய்யலாம்.

பிடிக்காத 'நண்பர்களை' 'ப்ளாக்' செய்யலாம்.

என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

என்னைவிட்டு 'லாக்-ஆஃப்' செய்வோர் அல்லது 'அக்கவுண்ட் டெலீட்' செய்வோர் தறித்து எறியப்பட்டு 'தனிமையில் வாடி' உலர்ந்து போவார்.

அவரது 'ப்ரஃபைல்', 'ஸ்டேடஸ்', 'ஃபோட்டோஸ்,' 'கமெண்ட்ஸ்' அனைத்தும் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நீங்கள் என்னுள்ளும், என் 'எஃப்' ஐகன் உங்கள் மொபைல், டேப்ளட் அனைத்திலும் இருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

நீங்கள் மிகுந்த கனிதந்து என் யூஸராக இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது!'

இன்றைய நற்செய்தியின் (John 15:1-8) எட்டு வசனங்களையும் இயேசு இன்றைய தலைமுறைக்குச் சொல்லவேண்டுமென்றால் எப்படி இருக்கும் என்று சிறு கற்பனை செய்தால், நற்செய்தி அப்படியே பொருந்துகிறது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது!

ஃபேஸ்புக்கை விட்டு நம்மால் இன்று ஒன்றும் செய்ய முடிவதில்லை தானே!

'இணைந்திருத்தல்' என்ற ஒற்றைச்சொல்லில் இன்றைய நற்செய்தி முழுவதையும் அடக்கிவிடலாம். இதை இன்றைய மாடர்ன் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'பீயிங் ஆன்லைன்' - அதாவது, எப்போதும் நம் நோட்டிஃபிகேஷன் பாரில் க்ரீன் சிக்னல் இருக்க வேண்டும். 

இன்றைய நற்செய்தியை, 'இணைந்திருத்தல்' என்ற வார்த்தையை வைத்து, மூன்று கேள்விகளாகப் பிரிக்கலாம்:

1. யாரோடு இணைந்திருப்பது?

2. எப்படி இணைந்திருப்பது?

3. எதற்காக இணைந்திருப்பது?


1. யாரோடு இணைந்திருப்பது?

சீடர்கள் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும். இணைந்திருத்தலில் இரண்டு பரிமாணங்கள் இருக்கின்றன: ஒன்று, மேல் நோக்கியது. மற்றது, கீழ்நோக்கியது. இயேசு தன் தந்தையோடு மேல் நோக்கி இணைந்திருக்கின்றார். நம்மிடம் கீழ்நோக்கி இணைந்திருக்கின்றார். நாம் இயேசுவோடு மேல் நோக்கி இணைந்திருக்கின்றோம். மற்றவர்களிடம் கீழ்நோக்கி இணைந்திருக்கின்றோம். இதை அப்படியே ஸ்கைப், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஊரில் இருக்கும் என் அம்மாவோடு ஸ்கைப்பில் நான் பேச வேண்டுமென்றால், முதலில் நான் ஸ்கைப்போடு இணைந்திருக்க வேண்டும் (மறுமுனையில் என் அம்மாவும் ஸ்கைப்போடு இணைந்திருக்க வேண்டும்!). இந்த முதல் இணைப்பு சரியாக இருந்தால் தான் எனக்கும், என் அம்மாவுக்குமான இணைப்பு சரியாக இருக்கும். என் இண்டர்நெட்டில் சிக்னல் குறைவாக இருந்தாலோ. அங்கே மின்தடை ஏற்பட்டு இண்டர்நெட்டே இல்லையென்றாலோ, இரண்டாவது இணைப்பு சாத்தியமே அல்ல. முதல் வகை இணைப்பு ஸ்ட்ராங்காக இருந்ததால், இரண்டாம் வகை இணைப்பில் பேச்சும், வீடியோவும் க்ளியராக இருக்கும். முதல் வகை இணைப்பை 'வேர்விடுதல்' என்றும், இரண்டாம் வகை இணைப்பை 'கிளைபரப்புதல்' என்றும் அழைக்கலாம். நம் வேர்கள் கடவுளை நோக்கியும், நம் கிளைகள் ஒருவர் மற்றவரை நோக்கியும் இருத்தலே சால்பு.


2. எப்படி இணைந்திருப்பது?
'திராட்சைச் செடியொடு அதன் கொடி இணைந்திருப்பதுபோல இணைந்திருக்க வேண்டும்' என்கிறார் இயேசு. 'செடி' - 'கொடி' என்று புதிய மொழிபெயர்ப்பில் இருப்பது குழப்பத்தைத் தருகிறது. ஏனெனில் நம் பேச்சுவழக்கில் 'செடி-கொடி' என்று நாம் சொல்வது இரண்டு வேறுபட்ட தாவர வகைகளைக் குறிக்கிறது. பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும், 'கொடி-கிளை' சொல்லாடல்தான் தெளிவான பொருளைத் தருகிறது. மேலும், திராட்சை தானாக நின்று வளரும் செடி அல்ல. மாறாக, தூணிலோ, குச்சியிலோ, வேலியிலோ, பந்தலிலோ படரும் ஒரு கொடிதான். 
திராட்சைக்கொடி என்பது யூதர்களின் காதுகளுக்குப் பரிச்சயமான ஒரு உருவகம். முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் 'யாவே இறைவனின் திராட்சைத் தோட்டம்' என்று அழைக்கப்பட்டனர் (காண். எரே 2:21, எசே 19:10-14, ஒசேயா 10:1, திபா 80:8-19, எசா 27:2-6). ஆக, முதல் ஏற்பாட்டில் யாவே இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்குமான உறவைக் குறித்துக்காட்டிய ஒரு உருவகத்தை, இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் குறித்துக்காட்டுவதன் வழியாக, இயேசுவை புதிய இறைவன் என்றும், சீடர்களை புதிய இஸ்ரயேல் என்றும் முன்மொழிகின்றார் யோவான் நற்செய்தியாளர்.

'இணைந்திருத்தல்' என்ற வார்த்தையை நான் வழக்கமாக நான்கு விதங்களில் புரிந்து கொள்வதுண்டு: 

அ. ரயில்பாதையின் இரண்டு தண்டவாளங்கள் போல். இந்த தண்டவாளங்களைக் கவனித்திருக்கிறீர்களா? தொடங்குமிடத்திலும் சரி, முடியுமிடத்திலும் சரி, செல்லும் பாதையிலும் சரி தண்டவாளங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்வதே இல்லை. தண்டவாளங்கள் பிரியும் அல்லது சேரும் இடத்தைப் பார்த்தால் கூட, அங்கேயும் அவைகள் தொட்டுக்கொள்வதில்லை என்பது கண்கூடு. ஒன்றையொன்று அவைகள் தொடவில்லை என்றாலும், அவைகள் ஒன்றையொன்று விட்டு அகன்றும் சென்றுவிட முடியாது. அப்படி நகர்ந்துவிட்டால் அதன்மேல் வரும் ரயில் ஆபத்தைத்தான் சந்திக்கும். அந்த ஆபத்து தண்டவாளத்தையும் சேதப்படுத்திவிடும். மேலும், ஒன்றோடொன்று தண்டவாளங்கள் சரியான தூரத்தில் இருந்தால் தான் ரயில்பெட்டிகளின் பாரத்தை அவைகளால் தாங்க முடியும். ஒரே தண்டவாளம் மட்டும் சுமக்க நினைத்தால் பெட்டிகளின் பாரத்தால் மண்ணில் புதைந்துவிடும். பெட்டிகளும் தடம் புரண்டுவிடும். 
இந்த வகை இணைந்திருத்தலில் தான் நாம் ஒட்டுமொத்த உலகோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். எண்ணற்ற தண்டவாளங்கள் இருப்பதுபோல எண்ணற்ற மனிதர்கள் நாம் இருக்கிறோம். நம் குறுகிய வாழ்நாளில் நம்மால் அனைவரையும் சந்திக்க முடிவதில்லை. அனைவரையும் பார்க்கக் கூட முடிவதில்லை. ஆனால் நமக்குக் குறிக்கப்பட்ட எல்கைக்குள் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நேபாளின் நிலநடுக்கம், ரஷ்யாவின் விண்கலம் தோல்வி, தமன்னாவுக்கு இடுப்பில் வந்த கட்டி இப்படி நாம் அன்றாடம் கேள்விப்படும் நிகழ்வுகள் போகிற போக்கில் போய்க்கொண்டே இருக்கின்றன. நிலநடுக்கம் கேள்விப்பட்டு 'அச்சச்சோ!' என்று சொல்லிவிட்டு, நாம் காமெடி சேனலுக்கோ, சாலிடர் கேமுக்கோ தாவி விடுகிறோம். இது ஒன்றும் தவறல்ல. நாம் ஒட்டுமொத்த உலகத்தோடு இந்த அளவில்தான் இணைந்திருக்க முடியும். நேபாளத்தில் நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு, நாளைக்கு ஆஃபிஸ் லீவ் போட்டுட்டு, அங்கே நாம் ஓட முடியுமா? அல்லது தமன்னாவின் கட்டிக்கு வைத்தியம் பார்க்க முடியுமா? 'மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்!' என்று சொல்லிவிட்டு நம் தண்டவாளம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாலே இந்த வகை உறவு சால்பே.

ஆ. சூரியனும், சந்திரனும் போல. சூரியனிடமிருந்து, ஒளியை சந்திரன் பெற்று ஒளி கொடுத்தாலும், சூரியனும், சந்திரனும் ஒரே வானில் இருக்க முடிவதில்லை. ஒன்றின் வருகை மற்றொன்றை வெளியேற்றிவிடுகின்றது. 
இந்த வகை இணைந்திருத்தலில்தான் நான் பெற்றோர்-பிள்ளை உறவையும், ஆசிரியர்-மாணவர் உறவையும் பார்க்கிறேன். சந்திரன் தன் ஒளிக்காக சூரியனை சார்ந்திருப்பதுபோல, பிள்ளை தன் வளர்ச்சிக்காக பெற்றோரையும், மாணவர் தன் அறிவுக்காக ஆசிரியரையும் சார்ந்திருக்கிறார். ஆனால், வளர்ந்தவுடன், அறிவு பெற்றவுடன் இருவரும் தங்கள் பாதையை நோக்கிப் பிரிந்து விட வேண்டும். 'நான் தான் உன்னை வளர்த்தேன்!' என்று சொல்லிக் கொண்டு பெற்றோரும், 'நான் தான் உனக்கு சொல்லிக் கொடுத்தேன்!' என்று ஆசிரியரும் தன் பிள்ளையையும், தன் மாணவரையும் தன்னோடு வைத்துக்கொள்ள முடியுமா. அப்படியிருந்தால் வீட்டின் அறையும், வகுப்பறையும் கொள்ளாதுதானே. 

இ. தண்ணீரும், எண்ணெயும் போல. ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றினால், எண்ணெய் தன் அடர்த்தி காரணமாக மேலே நிற்கும். தண்ணீர் கீழே நிற்கும். இவை பார்ப்பதற்கு இணைந்திருப்பதுபோல தெரிந்தாலும் அவைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றாக எளிதாகப் பிரித்துவிடலாம். கொஞ்சம் பொறுமை இருந்தால் போதும்.
இந்த வகை உறவு அல்லது இணைந்திருத்தால் தான் நாம் நம் பொது அல்லது சமூக வாழ்வில் காண்பது. பஸ்ல போறோம். ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணிக்கு என வைத்துக் கொள்வோம். அந்த இருபது நிமிடங்கள் நாம் எல்லாரும் இணைந்திருக்கிறோம். எல்லாரும் மாட்டுத்தாவணி போவது போல இருந்தாலும், சிம்மக்கல், கோரிப்பாளையம் என இடையில் சிலர் பிரிந்து விடுகிறார்கள். மற்றவர்கள் மாட்டுத்தாவணியில் மொத்தமாக இறங்கினாலும், அங்கே தனித்தனியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றனர். சீட்டுக் கிடைத்தவர், நின்று கொண்டு வருபவர், டிக்கெட் எடுத்தவர், 'பஸ் பாஸ்' வைத்திருக்கவர் என எல்லாரும் இணைந்திருந்தாலும், ஓட்டுநர் மற்றவர்களை விட மேலாக இருந்தாலும் இவர்கள் எல்லாவற்றையும் 'மாட்டுத்தாவணி' பிரித்துவிடுகிறது. மக்கள் முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும், நம் தலைவர்களுக்கும், நமக்கும் உள்ள உறவு இந்த நிலைதான். ஒருவர் மற்றவரை விட மேலிருப்பதாக தெரிந்தாலும், ஆட்சி முடிந்தவுடன் அவருக்கும், நமக்கும் தொடர்பில்லை என்று ஆகிவிடுகிறது.


ஈ. மலரும் மணமும் போல. 'நகமும் சதையும் போல' அல்லது 'நடனமும் ஆடுபவரும் போல', 'தொப்புள் கொடியால் இணையும் தாயும் குழந்தையும் போல' என்றும் சொல்லலாம். இன்றைய நற்செய்தி சொல்லும் 'கொடியும் கிளையும் போல' என்று இணைந்திருத்தல் நிலையும் இதுதான். ஒன்றின் பலம் மற்றொன்று. ஒன்றின் சாரம் மற்றொன்றில் இருக்கும். கிளையில் ஒரு தன்மையும், கொடியில் ஒரு தன்மையும் இருக்க முடியுமா?
மற்ற இணைந்திருத்தல்கள் தவறானவை. இதுதான் சரி என்பதல்ல. ஆனால், இறைவனுக்கும், எனக்கும், எனக்கும் மற்றவருக்கும் அன்பு இருக்கிறது என்று சொல்கிறேன் என்றால் அங்கே நான் இந்த நிலை இணைந்திருத்தலில் இருக்க வேண்டும். 'நான் என் மனைவியை அன்பு செய்கிறேன்!' என வைத்துக்கொள்வோம். இந்த கணவன்-மனைவி அன்பில் நான் தொட்டுக்கொள்ள முடியாத தண்டவாளம் போலவோ, அல்லது ஒன்றையொன்று பிரிந்து நிற்கும் சூரியன்-சந்திரன் போலவோ, எளிதாகப் பிரித்துவிடக்கூடிய எண்ணெயும், தண்ணீரும் போலவும் இருந்தால் நலமா? இல்லை. 
'கொடி-கிளை' இணைந்திருப்பதில் முக்கியமானது இரண்டும் தங்கள் அடையாளங்களை களைந்து ஒன்று மற்றதோடு கலந்துவிட வேண்டும். என் விருப்பு-வெறுப்பு அல்லது என் ஆசாபாசங்கள் தான் முக்கியம் என்று சொல்கின்ற கிளை, கொடியோடு சேரமுடியாது. அல்லது நான் பெரியவன், ஒய்யராத்தில் இருக்கிறேன் என்று கொடி சொல்லிக்கொண்டு கிளைகளை தன்னோடு சேர்த்துக்கொள்ள மறுத்தால் அது வெறும் 'மொட்டைச்' செடியாகவோ அல்லது கொடியாகத்தான் இருக்க முடியும்.
'சக்தி!' - கொடியின் சக்தி கிளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கிளைகளின் சக்தி கொடியின் சக்தியைக் கூட்டுகிறது. ஆலமரத்தில் இதை நன்றாகப் பார்க்கலாம். கிளைகளுக்கு உயிர் கொடுத்த தண்டை அது வளர்ந்தவுடன் கிளைகள்தாம் தண்டைத் தாங்கத் தொடங்குகின்றன. மேலும், தன் சாரத்தை தனக்குள்ளே வைத்துக்கொள்ள நினைத்தால் தண்டு அழுகிவிடவும், கிளை வாடிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

நான் எந்தெந்த உறவு நிலைகளில் எந்தெந்த இணைந்திருத்தலில் இருக்கிறேன் என்பதுதான் இப்போது நான் கேட்கும் கேள்வி.


3. எதற்காக இணைந்திருப்பது?
ஒவ்வொரு இணைந்திருத்தலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அல்லது இருக்க வேண்டும். ஸ்கைப்பில் இணைந்திருக்கக் காரணம் மற்றவர்களோடு காணொளி அழைப்பு செய்ய. வாட்ஸ்ஆப்பில் இணைந்திருக்கக் காரணம் கட்செவி அஞ்சல் பரிமாற்றம் செய்ய. ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட. ப்ளாக்கர் டைரி எழுத. நானும் ஃபேஸ்புக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அதை லாக்-இன் செய்யாமல் இருந்தாலோ, நானும் வாட்ஸ்ஆப்பில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, 'ஹை தேர்! ஐ ஆம் யூஸிங் வாட்ஸ்ஆப்!' என்று ஒரே ஸ்டேடஸ் போட்டு போரடித்தாலோ என்ன பயன்? 'எல்லாரும் சந்தைக்குப் போனாங்களாம். சுப்பனும் போனானாம்!' என்பது போல அல்லவா இருக்கும்.

கொடி கிளையோடு இணைந்திருப்பது எதற்காக? கனி தருவதற்காக. நம்ம வீட்டுக்கு முன்னால ஒரு மாமரம் நட்டு, அது கொடி-கிளைகள் என பச்சைப் பசேல் இன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது நல்ல நிழல் தந்தாலும், ஒரு காயும் காய்க்கவில்லையென்றால், அதை நாம் 'மலட்டு மரம்' என்று அடையாளப்படுத்திவிடுகிறோம். திருமணத்தில் இணைந்திருக்கும் கணவன்-மனைவி குழந்தைபெறவில்லையென்றால் 'மலடன்' அல்லது 'மலடி' (இது யாரையும் புண்படுத்த அல்ல! மாறாக, உதாரணத்திற்கு!) என்று சொல்கின்றோம். ஆக, எந்தவகை இணைந்திருத்தலுக்கும் - கொடி-கிளை, கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை, ஆசிரியர்-மாணவர், அருட்பணியாளர்-இறைமக்கள், கடவுள்-நான், கேர்ள்பிரண்ட்-நான் என எல்லா இணைந்திருத்தலுக்கும் உள்ள நோக்கம் நிறைவேறும்போதுதான் அந்த இணைந்திருத்தல் உண்மையான பொருள் தருகிறது.

இப்படியாக சீடர்கள், இயேசுவோடு இணைந்து கனிதருதல் அவர்களுக்கு பலன்தருவதோடல்லாமல் தந்தையாகிய கடவுளுக்கும் மாட்சி தருகிறது. மரம் கனிதந்தால் அதை நட்டவனுக்கும் பெருமைதானே!

'இணைந்திருத்தல்' என்ற ஒற்றைச்சொல் என்னை என் கடவுளோடும், என் உறவுகளோடும் இணைந்திருக்க, கனிதர என்னை அழைக்கிறது.