Saturday, April 30, 2016

நான்கு குணங்கள்

'அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' (திப 2:42)

திருத்தூதர்கள் எல்லாரையும் தழுவுவதற்கு நான்கு குணங்கள் இருந்தன.

அ. கீழ்ப்படிதல்
ஆ. நட்புறவு
இ. அப்பம் பிடுதல்
ஈ. இறைவேண்டல்

அ. கீழ்ப்படிதல்
எதற்கு அல்லது யாருக்கு கீழ்ப்படிந்தார்கள்? 'திருத்தூதர்களுக்கும், அவர்கள் கற்பித்தவற்றிற்கும்!' 'கீழ்ப்படிதல்' என்பதை ஒரு உருவகமாகச் சொல்ல வேண்டுமென்றால், 'கடல்நீரில் ஆற்று நீர் கலப்பது போன்றது.' கடல்நீர் உப்பு நிறைந்தது. ஆற்று நீர் இனிமையானது. ஆனால், ஆற்றுநீர் கடலைத் தழுவிவிட்டால் அதன் இனிமை குன்றிவிடும். 'தன் இனிமை குன்றிவிடும்' என்பதற்காக ஆறு ஒருவேளை கடலில் கலக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? நீர் தேங்கிவிடும். தேங்கிய நீர் நாற்றமெடுக்கும். திருத்தூதர்களின் போதனை சில நேரங்களில் இறைமக்களுக்கு உப்பாகவோ, அல்லது கசப்பாகவோ இருந்திருக்கலாம். ஆனால், தங்கள் இனிமை போனாலும் பரவாயில்லை என்று முழுமையாக அவர்களோடு கலந்துவிடுகிறார்கள்.

ஆ. நட்புறவு
'சகோதர உறவு' அல்ல. 'நட்புறவு.' என்னை அடிக்கடி திட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு பேராசிரியர் ஒருநாள் என்னை காஃபி பாரில் பார்த்தார். 'நண்பரே, எப்படி இருக்கிறீர்?' என்று கேட்டார். நான் சொன்னேன். 'நாம் நண்பர்கள் அல்ல. சகோதரர்கள். ஏனெனில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம். சகோதரர்கள்தான் நம்மேல் திணிக்கப்படுபவர்கள்' என்றேன். 'யார்கிட்ட?' 'எங்ககிட்டேவா?' சகோதர உறவை விட நட்புறவில் ஒருவர் தானே விரும்பி நுழைகிறார். ஆனால், சகோதர உறவைவிட, நட்புறவு நிலைக்கத்தான் நிறைய முயற்சிகள் வேண்டும். ஒவ்வொரு முறையும் தன் அர்ப்பணத்தைப் புதுப்பித்து அடுத்தவரை முழுமையாக அன்பு செய்பவர்தான் நட்புறவு கொள்ள முடியும்.

இ. அப்பம் பிடுதல்
இன்று நாம் வழிபாட்டில் பயன்படுத்தும் அப்பத்தை வத்திக்கானின் வழிபாட்டு ஆணையம்தான் தீர்மானிக்கிறது. 'இவ்வளவு தடிமனில், இவ்வளவு சுற்றுவட்டத்தில், இவ்வளவு கோதுமை, இவ்வளவு எண்ணெய்' எனக் கலந்து 'இவ்வளவு வெப்ப நிலையில் சுடப்பட்டு,' நடுவே 'சிலுவை,' அல்லது 'ஆல்ஃபா ஒமேகா, அல்லது 'ஆட்டுக்குட்டி' என வரையபட்டால்தான் இயேசு பிரசன்னமாவார் என்று நினைக்கிறது இந்த ஆணையம். அதனால்தான், அப்பம் சிறிது உடைந்தாலோ, கீறி இருந்தாலோ அருட்பணியாளர் கோபமாகிவிடுகிறார். திராட்சை ரசத்திற்கும் அதே போலத்தான்.வத்திக்கானின் இந்த நெறிமுறை இயேசுவை நம்மிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது. இயேசுவை மட்டுமல்ல, நம் ஒருவர் மற்றவரையும் அந்நியமாக்கவிட்டாது. ஆங்கில வார்த்தை 'company' அல்லது 'companionship' என்பது 'cum' ('உடன்') மற்றும் 'panis' ('அப்பம்') என்ற இரண்டு லத்தீன் வார்த்தைகளிலிருந்து வருகின்றன. ஆக, நாம் யாருடன் அப்பம் பிடுகின்றோமோ, அல்லது பகிர்கின்றோமோ, அவருடன் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஒற்றுமை என்பது சண்டை போடாமல் இருப்பது அல்ல. மாறாக, எல்லாம் எல்லாவற்றையும் பெறுவது. நான் நன்றாக உண்டு, உடுத்த, என் சகோதரன் உண்ணாமல், உடுத்தாமல் இருந்தால் அது ஒற்றுமையா? இல்லை. தொடக்க கிறிஸ்தவர்கள் 'அப்பம் பிடுதலை' ஒரு சமூக ஒருமைப்பாட்டு நிகழ்வாகச் செய்தனர். 'அதில் இயேசு இருக்கிறார்' என்ற இறையியலும், 'விவாகரத்து பெற்றவர் உண்ணலாமா கூடாதா' என்ற கட்டப்பஞ்சாயத்துக்களும் அங்கே இல்லை. அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஈ. இறைவேண்டல்
இறைவேண்டல் வழியாக தூய ஆவியானவருக்கு தங்களையே திறந்தனர். அவர் என்ன சொல்கிறார் என்பதை ஆய்ந்தறிந்தனர். 'இந்த செபம் சொல்வோம், அந்த செபம் சொல்வோம்' என்று செப புத்தகங்களும், இந்த செபத்தை சொல்லும்போது 'சிறிது குனியவும்' என்ற சிகப்பு எழுத்து நெறிமுறைகளும் இல்லை.

இந்த நான்கு பண்புகளும் இருந்ததால்தான் அவர்களால் வேகமாக எல்லாரையும் தழுவ முடிந்தது.

இந்த நான்கும் இன்று இல்லாததால்தான் நம்மிடையே இவ்வளவு பிளவுகள், வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வுகள். ஒரே மாதிரி அப்பம் சாப்பிடும் ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூது திருஅவையில்கூட ஒற்றுமை இல்லை. நாம் வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்து நம் சக்ரிஸ்டியில் வைத்துக்கொண்டதில் அப்பமும், ரசமும் உள்ளடக்கம்.

இந்த நான்கையும் தொடக்க நம்பிக்கையாளர்கள் 'ஒருநாள்' அல்லது 'இருநாள்' கடைப்பிடித்தார்களா? இல்லை. இதுவே, அவர்களின் பழக்கமாக இருந்தது. ஆகையால்தான் லூக்கா இங்கே, 'உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' என எழுதுகிறார்.


Friday, April 29, 2016

தடைக்கற்கள்

உரோமை அமைதி, கிரேக்க கலாச்சாரம், யூத நம்பிக்கை புதிய சமூகத்தின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்தாலும், வளர்ச்சிக்குச் சில தடைகளும் இருந்தன.

யூதர்களுக்கான தடைகள்

1. 'இவர்கள் ரபிகள் அல்லர்!'
யூதர்கள் தங்கள் மறைநூல்களையும், மதத்தையும் மிகப் பழமையானதாகக் கருதினர். மோசேயால் எழுதப்பட்ட சட்ட நூல்களையும், பின்னர் வந்த இறைவாக்கு நூல்களையும் விளக்கிச் சொல்வதற்கு என தகுதிபெற்ற மறைநூல் அறிஞர்களையும், போதகர்களையும் (ரபி) அவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் இயேசுவின் திருத்தூதர்கள் ரபிகள் அல்ல. பவுல் மட்டும்தான் யூதர்களின் விவிலியம் அறிந்தவர். மற்றவர்கள் தங்கள் காதுகளால் மட்டுமே கேட்டறிந்தவர்கள். தங்கள் தெருக்களில் மீனவராகவும், வரி வசூலிப்பவராகவும் பார்த்த ஒருவர் தங்களுக்கு மறைநூலை விளக்கிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2. 'தோல்வியடைந்த மெசியா!'
திருத்தூதர்கள் இயேசுவை மெசியா என அறிவித்தனர். இதையும் யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மரவேலை அல்லது கைவேலை செய்யும் ஒருவர், மூன்று ஆண்டுகளாக தெருப்போதகராக இருந்த ஒருவர், மிகவும் மோசமான சிலுவைச் சாவைத் தழுவிய ஒருவர் எப்படி தங்களுக்கு மெசியாவாக இருக்க முடியும் என்பது இவர்களின் வாதம். தங்களை எதிரிகளிடமிருந்து விடுவிக்கும் அரசராக அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இயேசு எள்ளளவும் இந்த எதிர்பார்பை நிவர்த்தி செய்யவில்லை.

3. 'கிறிஸ்தவ கட்டமைப்பு.'
ஆண்டாண்டு காலமாக ஆலயம், ஓய்வுநாள், விருத்தசேதனம் என்று கடைப்பிடித்து வந்தவர்களால் புதிய கட்டமைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'ஆலயம் தேவையில்லை. இயேசு போதும்,' 'ஓய்வுநாள் என்பது சனிக்கிழமை அல்ல, ஞாயிற்றுக்கிழமை,' 'விருத்தசேதனம் தேவையில்லை, திருமுழுக்கு போதும்' என்ற திருத்தூதர்களின் புதிய கட்டமைப்பு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காலங்காலமாக தூய இனம் என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள், தங்கள் இனத்தோடு மற்ற இனம் கலப்பதை விரும்பவில்லை.

யூதரல்லாதவருக்கான தடைகள்

1. 'புதிய கடவுளா?'
இயேசுவின் காலத்தில் உரோமையர்கள் ஏறக்குறைய கடவுளர்களை வரையறுத்து முடித்துவிட்டனர். இந்தக் கடவுளர்களின் தலைவராக நுமா மற்றும் யூபிடர் தான் கருதப்பட்டனர். அப்படியிருக்க, புதியதாக ஒரு கடவுளா? அதுவும், இந்தக் கடவுள் யூபிடருக்கும் மேலானவரா? என்பது புறவினத்தாரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

2. 'சமூக வாழ்க்கை'
நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அனைத்தையும் பொதுவாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய பொருளாதார நிலை உருவாகிறது. இவ்வளவு நாள்கள், 'என் குடும்பம்,' 'என் சொத்து' என இருந்தவர்கள், 'நம் குடும்பம்,' 'நம் சொத்து' என்று சொல்ல இடறல்பட்டனர். மேலும் புதிய நம்பிக்கை (கிறிஸ்தவம்) தழுவியவர்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தனர். 'ஒருவருக்கு ஒரு மனைவி,' 'பரத்தைமை கூடாது,' 'உடல் என்றால் பாவம்,' 'உடல் உயிர்க்கும்,' 'ஓவியம், கலை அறவே கூடாது. அவை சாத்தானின் செயல்கள்' என்று கிறிஸ்தவம் கொண்டிருந்த கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை.

3. 'குடும்ப வாழ்வு'
புதியதாக கிறிஸ்தவத்திற்கு மாறிய பெண்களை யாரும் திருமணம் முடிக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் நிறைய 'வாயாடிகளாக' இருந்தனர் என்று தெர்த்துவாலியன் எழுதிய கடிதம் ஒன்று குறிப்பிடுகிறது.

4. 'கிழக்கில் உதயம்'
'கிழக்கில்' இருந்து வரும் எதுவும், அன்று முதல் இன்று வரை 'மேற்கு' நாட்டிற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. கிழக்கே உள்ள மதங்களையும், மனிதர்களையும் மூன்றாந்தர மக்களாகவே பார்த்தனர் மேற்கு மக்கள். 'சிலுவையில் அறைஞ்சார்களாம்! எழுந்தாராம்! அவர் கடவுளாம்!' என்ற கேலிப்பேச்சை எங்கும் கேட்க முடிந்தது. உரோமையின் அரச மாளிகையில் உள்ள ஒரு சுவரில், சிலுவையில் கழுதை முகத்தோடு ஒரு மனிதர் தொங்கிக் கொண்டிருப்பது போல ஒரு ஓவியம் உள்ளது. அந்த ஓவியத்தின் கீழ், 'இவர் ஒரு கடவுள்' என்று எழுதப்பட்டுள்ளது.

படிக்கற்களைவிட தடைக்கற்கள் அதிகமாக இருந்திருக்கின்றன.


Thursday, April 28, 2016

நூல் பெயர் விளக்கம்

கி.பி. 80 முதல் 90க்குள் லூக்காவால் எழுதப்பட்ட நற்செய்தி-திருத்தூதர் பணிகள் என்ற ஒற்றை நூல்தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, லூக்கா நற்செய்தி எனவும், திருத்தூதர் பணிகள் எனவும் இரண்டு நூல்களாக ஆகிவிட்டன என்பது அறிந்தோர் கருத்து. இந்த இரண்டு நூல்களும் இணைந்து 27.5 சதவிகித இடத்தை இரண்டாம் ஏற்பாட்டில் பிடித்துவிட்டன.

இரண்டாம் ஏற்பாட்டின் ஐந்தாவது நூலாக இருக்கும் இந்நூலுக்கு, 'திருத்தூதர் பணிகள்' என பெயரிட்டவர் ஐரேனியு (இரண்டாம் நூற்றாண்டு). லூக்காவின் பெயரும், திருத்தூதர் பணிகள் என்ற பெயரும் இந்நூலில் இல்லை.

அலிகார்னாசுஸ் ஊரைச் சார்ந்த டயனிசியு 'உரோமை வரலாற்றையும்,' யோசேப்புஸ் 'யூதர்களின் வரலாற்றையும்' எழுத, அவர்களின் நூல்கள் மிகவும் பிரபலமாகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் 'கிறிஸ்தவத்தின் வரலாற்றை' எழுத முனைகின்றார் லூக்கா.

இதை ஒத்த வேறு நூல்கள் இல்லை.

'திருத்தூதர் பணிகள்' என்னும் பெயர் இந்நூலுக்கு பொருத்தமானதா?

இந்நூலைப் பொறுத்தவரையில் திருத்தூதர்கள் 13 பேர். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் 11 பேர். யூதா இஸ்காரியோத்துக்குப் பதிலாக தெரிவு செய்யப்பட்ட மத்தியா மற்றும் புறவினத்தாரின் திருத்தூதரான பவுல்.

இந்த 13 பேரில், வெறும் ஐந்து பேரைப் பற்றித்தான் இந்த நூல் பேசுகிறது.

பவுலைப் பற்றி அதிகமாகவும், பேதுரு மற்றும் யோவான் பற்றி கொஞ்சம் குறைவாகவும், யாக்கோபு மற்றும் பிலிப்பு பற்றி இன்னும் குறைவாகவும் இங்கே நாம் வாசிக்கின்றோம்.

மற்ற திருத்தூதர்கள் எங்கே சென்றார்கள், என்ன பணி செய்தார்கள் என்பதைப் பற்றி இந்நூலில் எவ்விதத் தரவும் இல்லை.

மேலும், இந்நூலில் சொல்லப்படும் தரவுகளும், பவுலின் மடல்களில் காணப்படும் தரவுகளும் கூட மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு, தமஸ்கு நகருக்கு செல்லும் வழியில் பவுல் மனமாற்றம் அடைந்ததாக லூக்கா எழுதுகிறார். ஆனால், பவுல் கலாத்தியருக்கு எழுதும் தன் திருமடலில் தான் அராபியா சென்று மனமாற்றம் அடைந்ததாக எழுதுகின்றார்.

எது எப்படி இருந்தாலும், திருத்தூதர்களை ஒரு இணைப்புக்கோடு என்று சொல்லலாம். இயேசுவுக்கும் நமக்கும் இடையே நிற்பவர்கள் இவர்கள். இவர்கள் வழியாகவே நாம் இயேசுவையும், அவர் கனவு கண்ட இறையரசையும் அறிந்து கொண்டோம்.

Wednesday, April 27, 2016

மூன்று காரணிகள்

என்னதான் நல்ல ஐஸ் க்ரீமை விற்கப் போனாலும், மழை பெய்யாமல் இருந்தால்தானே வியாபாரம் இருக்கும்.

அல்லது என்னதான் மாவு விற்கப் போனாலும் காற்று அடிக்காமல் இருந்தால்தானே இருக்கிற மாவு சாக்கில் இருக்கும்.

திருத்தூதர்கள் நல்லவர்களாக, அர்ப்பணம் உள்ளவர்களாக, கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், அவர்களின் பணிக்கேற்ற சூழல் இருந்தால்தானே அவர்கள் பணி சிறப்பாக நடைபெறும்.

திருத்தூதர்களின் பணிக்கு இலகுவாக மூன்று காரணிகள் இருந்தன:

அ. உரோமை அமைதி
ஆ. கிரேக்க கலாச்சாரம்
இ. யூத நம்பிக்கை

அ. உரோமை அமைதி

'கண்ணுக்கெட்டுகிற தூரம் வரைக்கும் நம்ம வயல்தான்' என்று கிராமங்களில் நம் முன்னோர் சொல்வார்கள். ஒருவரின் கால் எட்டும் வரைக்கும் உரோமையின் ஆதிக்கம் தான் அக்காலத்தில் மத்திய கிழக்கில் இருந்தது. உரோமையர்களின் ஒரு நல்ல குணம் என்னவென்றால், அவர்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டால், அந்த நாட்டவருக்கு மருத்துவம், கல்வி, பயணம் என எல்லா சலுகைகளும் கிடைக்கும். மேலும், தங்கள் குடிமக்களுக்கு அமைதியை வாக்களித்தனர் உரோமையர்கள் (pax romana). எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மக்களும் வேறு மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், ஆட்சி செய்வது உரோமையர்கள் என்பதால், உலகமே ஒரு குட்டி கிராமமாக சுருங்கி நின்றது.

ஆ. கிரேக்க கலாச்சாரம்

இன்று முகநூல் கலாச்சாரம், மேக்டொனால்ட் கலாச்சாரம் என நிறைய கலாச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை வெறும் மேற்பூச்சுக்களே. 'கலாச்சாரம்' என்றால் 'ஒரு மனிதரை உருவாக்குவது அல்லது பண்படுத்துவது' என்று பொருள். இது ஒருவரின் நடை, உடை, பாவணை, வீடு, ஊர், ஓவியம், கலை என அனைத்திலும் வெளிப்படும். திருத்தூதர்களின் காலத்தில் கிரேக்க கலாச்சாரம் புகழ்பெற்றிருந்தது. அரசியல் சாசனம் தந்த பிளேட்டோவின் ரிபப்ளிக், தத்துவத்தில் மேலோங்கிய சாக்ரடிஸ் உரையாடல்கள், கணிதத்தில் அரிஸ்டாட்டில் என கலை மற்றும் கல்வியில் கிரேக்கம் முன்னேறி இருந்தது. அது மட்டுமல்லாமல், 'புதிய கருத்துக்களை தேடி அறிந்து கொள்ளவும், புதிய நபர்களைச் சந்தித்து அவர்களைப் பற்றி ஆர்வம் கொள்ளவும்' அவர்கள் விழைந்தனர். ஆகையால்தான் அரோயோபாகு மன்றத்தில் பவுல் பேசியபோது, 'உன் பேச்சு புதியதாக இருக்கிறது. மீண்டும் வந்து பேசு. நாங்கள் கேட்கிறோம்!' என்று சொல்கின்றனர் கிரேக்கர்கள்.

இ. யூத நம்பிக்கை

திருத்தூதர்கள் அனைவரும் யூத நம்பிக்கையில் பிறந்தவர்களே. இயேசுவை யூத நம்பிக்கையில் தாங்கள் கற்றிருந்த பல அடையாளங்களுக்குள் புகுத்தி மக்களுக்கு போதித்தனர். 'தலைமைக்குரு,' 'பாஸ்காப் பலி,' 'புளிப்பு மாவு,' 'புளியாத அப்பம்,' 'பாஸ்கா உணவு,' 'செபம்,' 'நோன்பு' என தாங்கள் ஏற்கனேவே கொண்டிருந்த வழிபாட்டு முறைகளில் இயேசுவைப் போதிக்கத் தொடங்கினர். இன்று நாம் கொண்டாடும் பல திருவிழாக்களும், வழிபாட்டு முறைமைகளும் யூத மதத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்டவைகள்தாம்.

இந்த மூன்றும் இனிய சூழலை உருவாக்கிக் கொடுக்க, திருத்தூதர்களின் பணி இனிதே தொடங்குகிறது.

Tuesday, April 26, 2016

அன்பார்ந்த மருத்துவர்

'திருத்தூதர் பணிகள்' நூலை எழுதியவர் லூக்கா.

'அன்பார்ந்த மருத்துவர் லூக்கா' (கொலோ 4:14) - இப்படித்தான் லூக்காவை அறிமுகம் செய்கின்றார் பவுல்.

லூக்கா - புறவினத்துக் கிறிஸ்தவர். மாற்குவிற்கு நெருக்கமானவர். பவுலின் உடன்பணியாளர்.

இவரைப் பற்றிய குறிப்பை நாம் பிலமோன் 24 மற்றும் 2 திமோ 4:11ல் பார்க்கின்றோம். மேலும், திருத்தூதர்கள் பணிகள் நூலில், 'நாங்கள்' என்று குறிப்பிடும் பகுதிகளிலும் இவர் மறைந்திருக்கிறார் (காண். 16:10-17, 20:5-21:17, 27:1-28:16).

இவரின் சொந்த ஊர் சிரியாவில் உள்ள அந்தியோக்கு (காண். திப 11:19-30, 13:1-4).

இவரின் நூற்களில் இருந்து நாம் இவரின் ஏழு நற்குணங்களை அறிந்து கொள்கிறோம்:

1. 'மாண்புமிகு தெயோபில் அவர்களே' (லூக் 1:1, திப 1:1). இப்படித்தான் அவர் தன் இரு நூல்களையும் தொடங்குகின்றார். 'தெயோபில்' என்பவர் யாராவது ஒருவருடைய பெயராக இருந்திருக்கலாம். ஆனால், அதற்கு மற்றொரு பொருளும் உண்டு. இந்த வார்த்தை, 'தெயோஸ்' (கடவுள்) மற்றும் 'ஃபிலியா' (அன்பு) என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பாகும். ஆக, 'தெயோபில்' என்றால் 'கடவுளால் அன்பு செய்யப்படுபவர்' அல்லது 'கடவுளின் அன்புக்குரியவர்' என்பது பொருளாகும். தன் நூல்களை எல்லாரையும் நோக்கி எழுதும் லூக்கா, எல்லாரையும் 'கடவுளின் அன்புக்குரியவர்' என அழைக்கிறார். இது இவரின் நேர்முக பார்வையைக் காட்டுகிறது. இவ்வுலகில் உள்ள எல்லாருமே கடவுளின் அன்புக்குரியவர்கள். நம்மை நம் அருகில் இருப்பவர்கள் அன்பு செய்யாவிட்டாலும், நம்மை அன்பு செய்ய கடவுள் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பியவர் லூக்கா. மேலும், இந்த அன்புக்குரிய அனைவரையும், 'மாண்புமிகு' என்று மதிப்புடன் அழைக்கின்றார்.

2. தாழ்ச்சி. தன் இரண்டு நூல்களிலும் 'நான் தான் இதை எழுதினேன்' என்று அவர் கையெழுத்து இடவில்லை. 'என்னைப்போல யாரும் எழுத முடியாது!' என்ற எண்ணத்தில்தான் அவர் இப்படி செய்திருக்க வேண்டும். என் எழுத்துக்களே என் கையெழுத்து என்று மறைமுகமாகச் சொல்கிறார் லூக்கா.

3. மருத்துவர் பணி (கொலோ 4:14). இவர் படித்தவர். அக்காலத்தில் மருத்துவம் படிப்பது என்பது மிகப்பெரிய ஒன்று. மருத்துவர் பணிக்கு மூளையின் இரண்டு பக்கங்களும் செயல்பட வேண்டும். மனித உடலும் தெரிய வேண்டும்.மனித உள்ளமும் தெரிய வேண்டும். இதில் கைதேர்ந்தவர் லூக்கா.

4. திருத்தூது ஆர்வம். திருத்தூதர் பவுலோடு இணைந்து பணி செய்கின்றார்.

5. விளிம்புநிலை மக்கள்மேல் உள்ள அக்கறை. இவரின் இரு நூல்களிலும் பெண்கள், நோயுற்றவர்கள், வறுமையுற்றோர் என்னும் விளிம்புநிலை மக்கள்தாம் முதன்மைப்படுத்தப்படுகின்றனர். யார் ஒருவர் வார்த்தை இல்லாத மக்களுக்கு வார்த்தையாக இருக்கிறாரோ, அவரே இனியவர்.

6. செபமும் இறைபுகழும். இவரின் நூல்களில் நாம் சந்திக்கும் இயேசுவும், திருத்தூதர்களும், திரு அவையின் உறுப்பினர்களும் எப்போதும் செபிக்கிறவர்களாகக் காட்டப்படுகின்றனர். இவர் செப மனிதராக இருந்ததால்தான் இவரால் இப்படி எல்லாரையும் செபிக்கும் மனிதர்களாகச் சித்தரிக்க முடிகிறது. இவரை செப மனிதராக மாற்றியது இவரில் இருந்த தூய ஆவி. 'தூய ஆவி' என்ற வார்த்தை மத்தேயுவில் 5 முறையும், மாற்குவில் 4 முறையும், லூக்கா-திபணியில் 53 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

7. அர்ப்பணம். எழுத்துப் பணி என்பது இன்று நாம் செய்வது போல மிகவும் எளிதானது அல்ல. தன் தொடுதிரையில் தட்டச்சு செய்து, மேகத்தின் மெமரியில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அன்று இல்லை. விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட தோல்களும், பப்பைரஸ் நெகிழிகளும்தான் அன்று பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மேல் எழுதவும், இவற்றைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு இடத்திற்கும் தூக்கிச் செல்லவும் நிறைய மெனக்கெட வேண்டும். தான் தொடங்கிய வேலையை அர்ப்பணத்தோடு முடிக்க நினைத்த லூக்காவின் அர்ப்பணம் வியக்கத்தக்கதாக இருக்கிறது. மேலும், இவரால் எல்லா மனிதர்களோடும் இயல்பாக பழக முடிகிறது. அரசவையில் இருப்போரும் இவருக்கு நண்பர்கள். அடிமைகளும் இவருக்கு நண்பர்கள். இவர் எந்தச் சூழலிலும் வாழும் பக்குவம் பெற்றவராகவும் இருக்கிறார்.


Monday, April 25, 2016

திருத்தூதர் பணிகள்

முதல் ஏற்பாட்டு பெண்களின்மேல் நாம் பதித்த பார்வை போதும்.

இன்று முதல் ஒரு புதிய முயற்சியைத் தொடங்குவோம்.

'முப்பது ஆண்டுகள்' என்று தற்போதைக்கு தலைப்பிட்டுக் கொள்வோம்.

கி.பி. 33 முதல் 64ஆம் ஆண்டுக்குள் என்ன நடந்தது என்பதுதான் நம் தேடல். நம் தேடல் 'கிறிஸ்தவத்தின் வேர்கள்.' நம் தேடலுக்குத் துணையாக இருப்பது 'திருத்தூதர் பணிகள்' நூல்.

இன்று உலகில் அதிகம் பேர் பின்பற்றும் நம்பிக்கையாக இருக்கிறது கிறிஸ்தவம். அது மட்டுமல்ல, உலகின் நாகரீகம், கலாச்சாரம், மருத்துவம், அரசியல் என எல்லாவற்றின்மேலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது.

'திருத்தூதர் பணிகள்' பற்றிய ஒரு விளக்கவுரை அல்ல இது.

இந்த நூலை சில கேள்விகளோடு பார்ப்போம்:

1. மிகக்குறுகிய காலத்தில் உலகத்தின் வரலாற்றைத் தலைகீழாக மாற்றிய இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. அவர்கள் செய்தது போல இன்று நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?
3. உலகின் முகத்தை மாற்றிய இந்த மக்கள் யார்?
4. அவர்கள் என்ன போதித்தார்கள்?
5. எதற்காக அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள்?
6. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?
7. அவர்களின் சமூக அக்கறை, செபம், முதன்மையான தேடல்கள் எவை?
8. சீடத்துவம், தலைமைத்துவம், திருஅவை வாழ்க்கை, தூய ஆவி பற்றிய அவர்கள் புரிதல் என்ன?

அவர்களிடமும் பிரிவினைகள் இருந்தன. அவர்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார்கள்.

இருந்தாலும் அவர்கள் நமக்கு நிறையவே கற்றுக்கொடுக்கிறார்கள்.

அவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் எவை? என்ற நம் தேடலில், நாம் அவர்களைப் போல இருக்க முடியவில்லையென்றாலும், அவர்கள் விட்டுச் சென்ற தடங்களை வைத்து நம் காலத்து நிகழ்வுகளுக்கு தீர்வு காண முடியுமா? என்று யோசிப்போம்.

Sunday, April 24, 2016

குல்தா

யோசியா அரசன் காலத்தில் வாழ்ந்த பெண் இறைவாக்கினர் இவர். 'குல்தா' என்றால் எபிரேயத்தில் 'உலகம்' என்பது பொருள். ஆனால், தற்போதைய எபிரேயத்தில் 'எலி' என்றும் பொருள்.

இதன் கிரேக்கப் பதமே 'கில்டா' அல்லது 'ஹில்டா' என்பது.

யூதா நாட்டு அரசர்களில் மிக முக்கியமானவர் யோசியா. இவரின் காலத்தில் தான் எருசலேம் ஆலயத்தில் 'இணைச்சட்ட நூல்' கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நூலில் உள்ளதுபோல யூத சமயத்தையும், சமூகத்தையும் சீர்திருத்த விழைகிறார் யோசியா.

இவர் காலத்தில் மிக முக்கியமாக இருந்த பிரச்சினை சிலை வழிபாடு.

தன் சீர்திருத்த முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன், தான் செய்வது சரியா என்று பார்க்க இறைவாக்கினரிடம் தன் அலுவலர்களையும், அமைச்சர்களையும், குருக்களையும் அனுப்புகிறார்.

அந்த நாட்களில் இறைவாக்கினர்தான் ஒரு சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்கினார். அவர் வழியாகவே கடவுளின் திருவுளம் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று இறைவாக்கினர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

யோசியாவின் காலத்தில் எரேமியா இறைவாக்குரைக்கத் தொடங்கியிருந்தாலும், எரேமியாவிடம் செல்லாமல், குல்தாவிடம் செல்கின்றார் யோசியா. ஒருவேளை எரேமியா வயதில் சிறியவராக இருந்திருக்கலாம். அல்லது குல்தா அனைவராலும் அறியப்பட்டவராக இருந்திருக்கலாம்.

யூதா நாட்டின் மேல் வரவிருக்கும் ஆண்டவரின் கோபத்தை முன்னுரைக்கின்றார் குல்தா.

அரசர் மற்றும் அமைச்சர்கள் முன் பயப்படாமல், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக உண்மையை மறைக்க நினைக்காமல், உள்ளதை உள்ளவாறு சொல்கின்றார் குல்தா.

பெண்கள், பெண் இறைவாக்கினர்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே சொல்லும் உரிமை பெற்றிருந்தனர் யோசியாவின் காலத்தில்.

Saturday, April 23, 2016

நாடுகடத்தப்பட்ட சிறுமி

சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்' என்றாள். (2 அரசர்கள் 5:2-3)

பவுலோ கோயலோ தன் தந்தையின் இறப்பிற்குப் பின் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கின்றார்:

'என் தந்தை இறந்தபின் நாங்கள் அவரை எரித்தோம். ஏனெனில், 'நான் இறந்தபின் என் உடலை எரித்து நான் அதிகம் இரசித்த கடற்கரையின் ஓரங்களில் என் சாம்பலைத் தூவி விடுங்கள். அப்படித் தூவும்போது இந்த சிடியை சிடி பிளேயரில் போட்டுப் பாட வையுங்கள்' என்றார். அவரின் சாம்பல் நிரம்பிய ஜாடியை எடுத்துக்கொண்டு, அவர் குறிப்பிட்ட கடற்கரைக்குச் சென்றோம். கொஞ்ச தூரத்திற்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு, ஜாடி, சிடி பிளேயர், சிடி என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றோம். ஜாடியைத் திறந்து பார்த்தால் உள்ளே இன்னொரு திருகு ஆணி ஆடிக்கப்பட்டிருந்தது. அதை எப்படித் திறக்க என இங்குமங்கும் அலைந்தோம். அந்த நேரத்தில் பிச்சைக்காரர் ஒருவர் அவ்வழியே வந்தார். அவரின் கையில் ஒரு ஸ்க்ரு டிரைவர் இருந்தது. அதை எங்களிடம் நீட்டிய அவர், 'இது பயன்படுமா என்று பாருங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்தான் நான் இதைக் கண்டெடுத்தேன். இறந்து போனவர் உண்மையிலேயே நல்லவராய் இருந்திருப்பார்!' என்று அதைக் கொடுத்துவிட்டு வழிநடந்தார். என் அப்பா உயிரோடு இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்வார், 'நீ செய்கின்ற எந்த ஒரு நல்ல செயலும் உன்னைப் பின்தொடர்ந்து வரும்!''

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை:

அ. நாம் செய்த நன்மை நம்மைப் பின்தொடரும்.

ஆ. ஸ்க்ரு டிரைவர் சிறியது என்றாலும், அதன் பயன்பாடு அவசியமாகிறது.

இறைவாக்கினர் எலிசா காலத்தில் அப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது. சிரியா நாட்டு இராணுவத்தலைவன் நாமானுக்கு தொழுநோய் பிடித்து விடுகிறது. அதிகாரம், ஆற்றல், பணம் என எல்லாம் இருந்தாலும், தொழுநோய் இவரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இவரால், இவரது இராணுவத்தால் அடிமையாக அழைத்துவரப்படும் எபிரேய சிறுமி ஒருத்தி இவர் வீட்டுக்கு வேலைக்கு வருகிறாள். வந்த இடத்தில் தன் தலைவர் இப்படி வருந்துவதைப் பார்த்து, 'எங்கள் ஊரில் உள்ள இறைவாக்கினரிடம் போய்க் காட்டுங்கள். அவர் சரியாக்கிவிடுவார்!' என்கிறார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டுச் செல்லும் நாமான் நலம் பெறுகிறார்.

இந்த அப்பாவி அடிமைச் சிறுமி என்னை மூன்று விதங்களில் வியக்க வைக்கிறாள்:

அ. 'எனக்கு கெட்டது நடந்தாலும், நான் அடுத்தவருக்கு நல்லது செய்வேன்.' ஒரு இளவல் நாடுகடத்திச் செல்லப்படுவது மிகவும் கொடுமையானது. அவள் தன் குடும்பத்தை இழந்துவிட்டாள். தன் சொத்துக்களை இழந்து விட்டாள். தன் தாய் மண்ணை இழந்துவிட்டாள். இப்படி தனக்கு எல்லாம் துன்பமாகவே நடந்தாலும், தன்னை அடிமைப்படுத்தியவனின் வீட்டிலேயே வேலை கிடைத்தாலும், 'இவன் தொழுநோய் வந்த நல்லா கஷ்டப்படட்டும்!' என்று மனதுக்குள் கடிந்து கொள்ளாமல், அடிமைப்படுத்தியவனுக்கும் நல்லது நினைக்கிறாள். 'நீ கெட்டவனாய் இருக்கிறது என்பதற்காக நான் நல்லவளாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமா?' என்றுதான் தன் மனதுக்குள் கேட்டிருப்பாள். அடுத்தவர் ஆற்றும் வினைக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டிராமல், தன் ஆற்றலை அழித்துக் கொள்ளாமல், தானே தான் விரும்பியதை செயல்படுத்துகிறாள். அவளின் உடல் வேண்டுமானால் அடிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவளின் உள்ளம் யாருக்கும் அடிமையல்ல.

ஆ. 'என் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை.' அந்தக் காலத்தில் ஒரு நாட்டிற்கும், மற்ற நாட்டிற்கும் இடையே நடக்கும் போரானது, இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போராக அல்ல, மாறாக, இரண்டு கடவுளர்களுக்கு இடையே நடக்கும் போராகவே பார்க்கப்பட்டது. ஆக, சிரியாவின் கடவுள் வெற்றிபெற்றவர்போல தெரிந்தாலும், அவரால் தலைவனின் தொழுநோயைக் குணமாக்க முடியவில்லை. அந்த ஆற்றலைப் பெற்றவர் தன் கடவுள்தான் என்று நம்புகின்ற சிறுமி, 'என் கடவுளால் உன்னைக் குணமாக்க முடியும்!' என்று தலைவனை நோக்கிச் சொல்வது தலைவனுக்கு பெரிய அவமானமாகவே இருந்திருக்கும். தன் கடவுளே நலம் நல்கும் கடவுள் என நம்புகிறாள் சிறுமி.

இ. 'எனக்கு இறைவாக்கினரைத் தெரியும்!' இறைவாக்கினர்கள் என்பவர்கள் அரசவையில் தான் அதிகம் ஒட்டியிருப்பர். பாமர மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்காது. எலிசா இந்தப் பெண்ணால் அறியப்படுகிறாள் என்றால், அவர் பாமர மக்களிடம் பழகியிருப்பார். அல்லது, இந்தச் சிறுமி உலக விஷயங்கள் அறிந்தவளாக இருந்திருப்பாள். ஆக, கடவுளோ, இறைவாக்கினரோ, எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கும் இப்பெயரில்லா சிறுமி அந்தக்காலத்து பி.ஆர்.ஓ.

'சிறுகுழந்தையின் பேச்சைக் கேட்டு இஸ்ரயேலுக்கு வழி நடந்த நாமானின் தொழுநோய் பிடித்த உடலும் சிறுகுழந்தையின் தோல் போல மாறியது' (2 அர 5:14).

Friday, April 22, 2016

சூனேம் நாட்டுப் பெண்

அவர் தம் கணவனை நோக்கி, 'நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல்தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்குக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார் படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்' என்றார். (2 அர 4:9-10)

முன் பதிவில் ஏழைக் கைம்பெண் ஒருவர் எலிசாவைச் சந்திக்கிறார்.

இன்று சூனேம் நாட்டுப் பெண் ஒருவர் அவரைச் சந்திக்கின்றார். இவர் பணம் படைத்தவர் (2 அர 4:8). 'என்னோடு உணவு உண்ணும்!' என வற்புறுத்துகின்றார். எலிசாவும் அவரோடு சென்று உணவருந்துகின்றார். அவர் உணவருந்திப் போன பின் அவரின் கணவனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடலைத்தான் மேலே வாசிக்கின்றோம்.

இவருக்கு எல்லாம் இருந்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாத குறை ஒன்று இருக்க, அந்தக் குறையும் நீங்கும் என வாக்குறுதி தருகிறார் எலிசா. அப்படியே குழந்தையும் பிறக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனானபோது வெயில் தாக்கி இறந்துவிடுகிறது. இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுக்கின்றார் எலிசா.

இந்தப் பெண்ணிடம் நான் வியக்கும் பண்புகள் மூன்று:

அ. அவரின் விருந்தோம்பலும், தாராள உள்ளமும். இந்த ஊருக்கு வந்திருப்பவர் யாரோ? என்று ஒதுங்கிவிடாமல், அல்லது கண்டுகொள்ளாமல் இல்லாமல், தன் வீட்டிற்கு உணவருந்த அழைக்கிறார். இயேசுவின் பணியின்போதும், நிறைய நேரங்களில் பெண்கள்தாம் அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டதாக லூக்கா நற்செய்தியாளர் எழுதுகிறார்.

ஆ. புத்திசாலித்தனம். 'இவர் புனிதர்போலத் தெரிகிறது!' என்கிறார் பெண். ஒரு ஆளைக் கண்டவுடன் அவரை மதிப்பிடக் கூடியவர்கள் பெண்கள். இதுதான் அவர்களின் 'ஏழாம் அறிவு.'

இ. நல்ல மனைவி. தான் விரும்பியதைச் செய்ய தன் கணவனின் அனுமதி கேட்கின்றாள். தனக்குப் பிடித்தது தன் கணவனுக்கும் பிடிக்க வேண்டும் என விரும்புகிறாள். மேலும், 'படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு' என இறைவாக்கினரின் தேவைகள் அனைத்தையும் தானே முன்கூட்டி அறிந்து அவற்றை நிறைவேற்ற விழைகின்றார்.


Thursday, April 21, 2016

இன்னொரு கைம்பெண்

எலிசா அவரை நோக்கி, 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்' என்றார். அதற்கு அவர், 'உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை' என்றார். (2 அர 4:2)

இறைவாக்கினர் எலியா சாரிபாத்தில் கைம்பெண் ஒருவரை எதிர்கொண்டதுபோல, இறைவாக்கினர் எலிசாவும் ஒரு கைம்பெண்ணை எதிர்கொள்கின்றார்.

அங்கே, எலியாவின் பசியைத் தீர்க்கின்றார் கைம்பெண்.

இங்கே, கைம்பெண்ணின் கடனைத் தீர்க்க வழிசெய்கின்றார் எலிசா.

கைம்பெண்ணிடம் இருந்த சிறிது எண்ணெயை அபரிவிதமாகப் பலுகச் செய்கின்றார் எலிசா. தன் வீட்டின் பாத்திரங்கள் மட்டுமல்ல, தன் அடுத்தவரின் வீட்டுப் பாத்திரங்களும் நிரம்பும் அளவுக்கு எண்ணெய் பெருக்கெடுத்து வருகின்றது.

நிரம்பி வழிந்த எண்ணெயை விற்றுக் கடனை அடைத்துவிடுமாறு அறிவுறுத்துகின்றார் எலிசா.

இவர் குடம் குடமாய் எண்ணெயை எடுத்துக் கொண்டு கடன்காரரிடம் சென்றபோது, அந்தக் கடன்காரர் என்ன நினைத்திருப்பார்? இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு குடம் எண்ணெய் எப்படி வந்தது? என்று சந்தேகித்திருக்கலாம். அல்லது அப்படியே வாங்கி வைத்து, 'அப்பாடா, கடன் பணம் கிடைத்துவிட்டது' என மகிழ்ந்திருக்கலாம்.

சிறிதளவு எண்ணெய் இருந்தாலும், எல்லாப் பாத்திரங்களையும் நிரப்பும் அளவுக்கு இருக்கிறது கடவுளின் அருட்செயல்.

இந்த அருட்செயலைக் கைம்பெண் அனுபவிக்க அவள் செய்ததெல்லாம், கடவுளின் அடியவர் சொன்னதை நம்பியதுதான்.


ஈசபேல்

'ஈசபேல்' என்றால் 'இளவரசன் யார்?' என்பது பொருள்.

ஏறக்குறைய கி.மு. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஒரு இளவரசி. எத்பால் என்ற சீதோன் நாட்டு (பொனிசிய) அரசனின் மகள். வடக்கு இஸ்ரயேலை ஆட்சி செய்த ஆகாபை மணம் முடிக்கின்றார் இவர்.

ஆகாபு அரசன் யாவே இறைவன் மேல் தீராத பற்றுக் கொண்டவர். அப்படி பற்றுக்கொண்டிருந்த தன் கணவனின் மனத்தை மாற்றி, பாகால் மற்றும் அசேரா தெய்வத்தின் பக்கம் திருப்புகின்றார் இவர். மேலும், பாகால் கடவுளுக்கு எதிராக இருந்த எல்லா இறைவாக்கினர்களையும், தேசத்துரோகக் குற்றத்தில் கைது செய்யச் சொல்கின்றார். இவரிடம் இருந்து தப்பி ஓடுபவர்தான் நாம் இரண்டு நாட்களுக்கு முன் சாரிபாத்தில் சந்தித்த எலியா. 'எலியா' என்றால் 'என் கடவுள் யாவே' என்பது பொருள்.
இவரின் நாம் 1 மற்றும் 2 அரசர்கள் நூலில் சந்திக்கின்றோம் (காண். 1 அர 16:31).

'ஈசபேலும் எலியாவும்'

எலியா இறைவாக்கினர் பாகாலின் 400 இறைவாக்கினர்களை போலி என நிரூபித்து கார்மேல் மலையில் வெற்றி கொள்கின்றார். தனது 400 இறைவாக்கினர்களைக் கொன்ற எலியாவைப் பழி தீர்க்க நினைக்கின்ற ஈசபேல் அவரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஈசபேலிடமிருந்து தப்பி ஓடுகின்றார் எலியா.

'ஈசபேலும் நாபோத்தும்'

நாபோத்து என்பவன் ஒரு சாதாரண விவசாயி. அவனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. தன் கணவன் ஆகாபின் தோட்டத்தை விரிவுபடுத்த எண்ணும் ஈசபேல் நாபோத்தின் தோட்டத்தைக் கேட்கின்றார். தன் மூதாதையரின் தோட்டத்தைத் தர மறுக்கின்றார் நாபோத்து. அப்புறம் என்ன? தீர்த்துக்கட்டிவிட வேண்டியதுதான். நாபோத்தின் மேல் போலி குற்றச்சாட்டுகளைக் கட்டி, அவரைக் கல்லால் எறிந்து கொல்லச் செய்கின்றார். இதை எதிர்க்கும் எலியா, 'உன் இரத்தத்தை நாய்கள் நக்கும்' என்று ஈசபேலைச் சபிக்கின்றார்.

'இறப்பு'

மூன்று ஆண்டுகளில் கணவன் ஆகாபு இறக்கின்றார். 'அடுத்து யார் அரசன்?' என்ற கேள்வி வருகின்றது. அந்த கேள்வி போராட்டமாக வெடிக்கின்றது. இந்தப் போராட்டத்தில் வீ;ட்டின் மேல்மாடியிலிருந்து எறியப்பட்டு கோரமாகக் கொல்லப்படுகின்றார். அவரின் இரத்தத்தை தெருநாய்கள் வந்து நக்குகின்றன.

'மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கும் பெண்களை' இன்றும் 'ஈசபேல்' என அழைக்கிறது ஆங்கில சொலவடை.

'வினை விதைத்தவன்(ள்) வினை அறுப்பான்(ள்)' - ஈசபேல்.


Tuesday, April 19, 2016

ஏழு ஆண்டுகள் ஏழு பாடங்கள்

'அவரோடு' (மாற்கு 3:14) என்ற விருதுவாக்கோடு, நான் (என் உடன் அருட்பணியாளர்கள் 7 பேரோடு) அடியெடுத்து வைத்த அருள்பணிநிலைப் பயணத்தின் ஏழாவது மைல்கல்லை இன்று கடக்கின்றேன். 'அவரோடு,' 'இவரோடு' என பயணம் இனிதாகவே அமைந்தது.

இந்தப் பயணத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட ஏழு பாடங்களை இன்று உங்களோடு பகிர்கின்றேன்.

1. 'உன் வார்த்தையை நீ மதி!' (Honour your word!)

ஆறு வருடங்களுக்கு முன் நான் எல்லீஸ் நகர் பங்குத்தளத்தில் இருந்தபோது, ஒரு சகோதரி தன் மகளின் பிறந்தநாள் அன்று ஆலயத்திற்கு அவளைக் கொண்டு வந்திருந்தார். நான் என் அலைபேசியில் அவளை ஃபோட்டோ எடுத்தேன். 'எனக்கு இதை அனுப்பி வையுங்கள்' என்றாள் அந்த சகோதரி. நான் 'சரி' என்றேன். ஆனால், மறந்துவிட்டேன். பின் நிறைய அலைபேசிகள் மாற்றியாயிற்று. நான்கு மாதங்களுக்கு முன் நான் எல்லீஸ் நகர் சென்றபோது, 'ஃபோட்டோ எப்போ அனுப்புவீங்க?' எனக் கேட்டார் அந்த சகோதரி. இதுபோல, ஞானாவில் நான் சார்லஸின் அம்மாவிடம், 'அக்கா, உங்க வீட்டுக்கு வர்றேன்!' என்று சொன்னேன். ஆனால், இன்னும் போகவில்லை. அவர்களை எங்கே பார்த்தாலும் என் மனம் குறுகுறுக்கின்றது. சின்ன விஷயங்கள்தாம். ஆனால், சின்ன விஷயங்கள்தானே பெரியவற்றை தீர்மானிக்கின்றன. இறைவன்முன் நான் கொடுத்த வாக்குறுதி - கட்டளை செபம், இறைவார்த்தையின்படி ஒழுகுதல், மணத்துறவு, வழிபாடுகளை உகந்த முறையில் நிறைவேற்றுதல், கிறிஸ்துவை ஒத்திருத்தல், நான் எனக்கு நானே கொடுத்த வார்த்தைகள், நான் பிறருக்குக் கொடுத்த வார்த்தைகள் அனைத்தையும் நான் மதிக்க வேண்டும். அந்த வார்த்தையை வெறும் காற்றாக்கிவிடல் கூடாது.

2. 'நீ என்ன செய்தாய் என்பதற்காகவோ, என்ன திறமை உன்னிடம் இருந்தது என்பதற்காகவோ அல்ல. மாறாக, நீ என்னவாக இருந்தாய் என்பதற்காகத்தான் நினைக்கப்படுவாய்.' (You are remembered not for what you do or what you have, but for what you are)

இன்று ஒரு பணித்தளத்தில் நான் செய்யும் வீடு சந்திப்பு, அன்பிய சந்திப்பு, இளைஞர் இயக்கக் கூட்டம், நற்கருணை வழங்குதல் போன்றவற்றை, எனக்குப் பின் வரும் அருட்பணியாளர் என்னைவிடச் சிறப்பாகச் செய்வார். அல்லது என்னிடம் இருக்கும் பாடும் திறன், மறையுரைத் திறன், கணிணித் திறன், நிர்வாகத் திறன் எனக்குப் பின்வருபவரிடம் இன்னும் கூடுதலாக இருக்கும். இன்று கோஹ்லி 110 ரன் அடித்தால், நேற்று 100 ரன் அடித்த தோனியை நாம் மறந்துவிடுவது இல்லையா. அப்படித்தான். ஆனால், நான் என்னவாக - எளிமையாக, புன்னகையோடு, எல்லாரோடும் பழகுவராக போன்றவை - இருக்கிறேனோ, அதற்காகத்தான் என்னை மக்கள் நினைவுகூறுவார்கள். ஆக, என் செயல்களுக்கும், என் திறன்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, நான் என் இருப்புக்கு, என் ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

3. 'உறுதித்தன்மையை விட்டுவிடு!' (Let go off certainty)

மூன்றும், இரண்டும் ஐந்து என்பது போலவும், இரு மடங்கு ஹைட்ரஜனும், ஒரு மடங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர் என்பது போல வாழ்க்கை எப்போதும் உறுதித்தன்மையோடு அறுதியிடக்கூடியது அல்ல. 'உறுதித்தன்மைக்கு' (certainty) எதிர்ப்பதம் 'உறுதியற்ற தன்மையல்ல' (uncertainty). மாறாக, ஆச்சர்யங்களுக்கு திறந்த மனத்தோடு இருத்தல். புனே பாப்பிறை பாசறையில் இறையியல் பயின்றபோது, இரண்டாம் ஆண்டு தொடங்கி, நான்காம் ஆண்டு முடிய, என் நண்பன் ஃபாத்திமாவும், நானும் தினமும் நூலகம், இணையம் என்று திரிந்து, மறையுரைக் கருத்துக்கள், நிறைய கருத்துரைகள், விவிலிய விளக்கங்கள், மென்பொருள்கள், குறுந்தகடுகள், காணொளிகள் என ஏறக்குறைய இரண்டு பெட்டிகளுக்குச் சேகரித்தோம். 'நல்ல அருள்பணியாளராக நாளை இருக்க வேண்டும்!' என்ற எண்ணத்தில் அப்படித் தயாரித்தோம். தூக்கம் மறந்தோம். உணவு மறந்தோம். சுற்றுலா மறந்தோம். 'நாளை என்ன செய்வது?' என்ற கவலைதான் இருந்தது. ஆனால், அருள்பொழிவு செய்யப்பட்ட பிறகு, அவன் ஆசிரியராக பள்ளியிலும், நான் உதவி அருட்பணியாளராக எல்லீஸ் நகரிலும் நியமிக்கப்பட்டோம். நாங்கள் தேடிச் சேகரித்த அந்த இரண்டு பெட்டிகளின் தரவுகளை நாங்கள் இன்றுவரை திறந்து பார்க்கவே இல்லை. இப்போது திரும்பிப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. பொருள், நேரம், ஆற்றல் விரயம் ஒரு பக்கம். இதைவிட மோசம், நாங்கள் எங்களின் 'நாளைக்காக' தேடிக்கொண்டிருந்ததால், எங்களின் 'இன்றை' அனுபவிக்க மறந்துவிட்டோம். எங்கள் வகுப்புத் தோழர்களுக்கு நாங்கள் அந்நியமானோம். இறையியலையும் ஏனோதானோவென்று படித்தோம். ஆக, இது படித்தால் நான் அதைச் செய்யலாம், இன்று இப்படி இருந்தால் நாளை அப்படி இருக்கலாம் என்ற எனக்கு நானே உறுதித்தன்மை கொடுப்பதை விட வேண்டும். நாளை கொண்டுவரும் ஆச்சர்யத்திற்கு மனம் திறந்து காத்திருக்க வேண்டும்.

4. 'உன் வாழ்வின் புதிய தமதிருத்தவம்: குடும்பம், உடன்பணியாளர்கள், இறையரசு உறவுகள்.' (Your New Trinity: Family, Fellow Priests, and Friends)

நீ குருமடத்திற்குச் செல்லும் வரை உன் உடன் வந்தது உன் இரத்த உறவு. அதாவது, உன் குடும்பம். அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள். குருமடம் நுழைந்த முதல் நாள் அன்று இன்று வரை உடன் வருவது உன் உடன் அருட்பணியாளர்கள். குருமட பயிற்சி மற்றும் அருள்பணி வாழ்வில் நாம் சந்திக்கும் மற்ற எல்லா உறவுகளும் இறையரசு உறவுகள். இந்த மூன்றையும், அதாவது 'இரத்த உறவு,' 'உடனிருப்பு உறவு,' 'இறையரசு' உறவு, நான் தமதிருத்துவமாகப் பார்க்க வேண்டும்.  முதலாம் உறவில் சில நேரங்கில் எதிர்பார்ப்புக்கள் இருக்கும். இரண்டாம் உறவில் சில நேரங்களில் போட்டி, பொறாமை, மனத்தாங்கல், ஏமாற்றம் இருக்கும். மூன்றாவது உறவில் எதிர்ப்பார்ப்புக்களும், ஏமாற்றங்களும் இருந்தாலும், அவர்கள் வழியாகவே கடவுளின் அருட்கரம் அதிகம் வெளிப்படும். இந்த மூன்றையும் நான் மனப்பக்குவத்தோடு ஒருங்கிணைக்க வேண்டும். என் அருள்பணி வாழ்வில் என் அம்மாவுக்கு எந்த அளவிற்கு பங்கிருக்கிறதோ, அதே அளவு பங்களிப்பு என் நண்பர்கள், மற்றும் என் இறைரசு உறவுகள் வழியாகவும் இருக்கிறது. இவற்றில் ஒருவர் பங்கு பெரிது, மற்றவர் பங்கு சிறிது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், நான் அதிகமாக ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடும்போதுதான். இந்த மூன்றும் எனக்குக் கொடுக்கப்பட்டவை. கொடுக்கப்பட்ட கொடைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதில் மகிழ்ச்சி காண்பதே சால்பு.

5. 'இன்று எது உன்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது.' (What's yours today is someone else's tomorrow).

கீதையின் சாரம் இது என்றாலும், இதுவும் ஒரு வாழ்க்கைப்பாடமே. இன்று நான் இருக்கும் அறையில் நாளை வேறொருவர் இருப்பார். இன்று நான் திருப்பலி வைக்கும் பீடத்தில் நாளை வேறொருவர் வைப்பார். இன்று நான் பேசி மகிழ்வுறும் ஒரு நபரோடு, நாளை மற்றவர் பேசி மகிழ்வார். மூன்று ஆண்டுகள் மதுரையில் இருந்துவிட்டு, மேற்படிப்புக்காக உரோமைக்கு வந்தபோது, நான் நிறையவற்றை இழக்க வேண்டியிருந்தது. நான் வைத்திருந்த டிவி, புத்தகங்கள், கணிணி, அலைபேசி, மேசை, நாற்காலி, ஃப்ளாஸ்க் என எல்லாவற்றையும் நான் அடுத்தவருக்கு விட்டு வந்தேன். இதை நான் இழந்துவிட்டேன் என்ற வருத்தம் எனக்கு இல்லை. நாளை நான் மதுரைக்கு திரும்புகிறேன் என்றால், இங்கு பயன்படுத்தும் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் புறப்பட வேண்டும். இதுதான் எதார்த்தம். இது பொருள்களுக்கு மட்டுமல்ல. நான் செய்யும் வேலைகளுக்கும், நான் சம்பாதித்த உறவுகளுக்கும் பொருந்தும். இதைச் செய்ய நிறைய துணிச்சல் வேண்டும். 'நேற்று என்னுடன் பேசிய ஒரு நபர் இன்று எனக்கு அடுத்திருக்கும் பணியாளரோடு பேசுகிறார்' என்றோ, 'நேற்று நான் வெள்ளையடித்த ஒரு அறைக்கு இன்று அடுத்தவர் கலர் அடிக்கிறார்' என்றோ, 'நேற்று நான் நடந்து போன இடத்திற்கு இன்று அடுத்தவர் பைக்கில் போகிறார்' என்று கேள்விப்படும்போதும் மனதில் பொறாமை உணர்வும், சின்னக் கோபமும் தோன்றி மறையும். ஆனால், இந்தப் பொறாமையால், கோபத்தால் நான் என் மகிழ்ச்சியைத்தான் இழக்கிறேன். ஆக, நபரோ, பொருளோ, இடமோ, வேலையோ - இன்று எது என்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது.  இந்த பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லைதான். ஆனால், உரோமில் தனிமையில், பசியில், நண்பர்களுக்கு ஃபோன் அடிச்சு அவர்கள் எடுக்க முடியாத நிலையில், படிப்பு போரடித்து, இடங்கள் போரடித்து, செபமும் வெறுமையாகி, எல்லாம் இருளாகி இருக்கும் அந்த மாலை நேரங்களை நான் அனுபவித்த வெறுமை உணர்வு, என் வெற்றிடத்தை இறைவன் மட்டுமன்றி, வேறு எந்த நபரும், பொருளும், இடமும் நிரப்ப முடியாது எனக் கற்றுத்தந்தது.

6. 'உன் எல்லையை மீறாதே!' (Do not trespass!)

உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணமோ, பொருளோ, அல்லது உனக்கு மேலிருக்கும் அருள்பணியாளரின் கட்டளையோ, உன் நண்பர்களிடம் நெருக்கமோ - எதுவானாலும், உன் எல்லையை மீறாதே.  இந்த எல்லைகளை மீறியதால் நான் நிறைய இழந்திருக்கிறேன். 'எனக்கு என் பாஸ் சாப்பாடு சரியாக போடுவதில்லை' என்று கோபத்தில் சில நேரங்களில் நான் என்னிடம் கொடுக்கப்படும் பணத்தை - 50அல்லது 100 ரூபாயை - நானே எனக்காகப் பயன்படுத்தியிருக்கிறேன். இந்தக் கோபத்தில் என் மனம் எனக்கு சப்பை கட்டுக் கட்டும். 'உனக்கு சோறு போடாமல் அவர் இருக்கிறார் அல்லவா! நீ இதை வைத்துச் சாப்பிட்டுக்கொள்!' என்று. ஆனால், இரண்டு மூன்று நாட்கள் கழித்து யோசித்தால் நான் செய்தது தவறு என்று தோன்றும். 'அவர் எனக்கு சோறு போடவில்லை என்பதற்காக நான் 100 ரூபாய் திருடுகிறேன் என்றால், அவர் எனக்கு விருந்து வைத்தால் நான் 100 ரூபாய் அவருக்கு கொடுக்கணும்தானே!' ஆனால் நான் அதைச் செய்வதில்லையே. அடுத்ததாக, பங்குப் பணிகளில் எல்லை மீறுதல். என்னுடன் இருக்கும் பணியாளரைவிட என்னால் நன்றாகச் செய்ய முடியும் என்பதற்காக, நானே அவருடைய இடத்தைப் பிடிக்க ஆர்வம் காட்டக்கூடாது. இது இன்னும் ஆழமாக, என் நட்பின் நெருக்கத்தில் நான் கடைப்பிடிக்க வேண்டும். என் பங்குத்தளத்தில் ஒரு அருள்சகோதரியோ, ஒரு இளவலோ என்னிடம் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் நெருக்கத்திற்குக் காரணம் என் அருள்பணிநிலைதானே தவிர, என் அழகோ, என் அறிவோ, என் படிப்போ, என் திறமையோ அல்ல. இவற்றால் அவர்கள் ஈர்க்கப்பெறலாம். ஆனால், இந்த உறவின் அடித்தளம் என் அருள்பணி நிலையே. நான் ஒரு மீட்டிங் என்று அழைத்தவுடன் தங்களின் மகளை ஒரு அம்மா அனுப்பி வைக்கிறார் என்றால், அவர் என் அருள்பணி நிலையை முன்னிட்டே அனுப்பி வைக்கிறார். ஆக, இந்த உறவுகளில் நான் முதலில் மட்டுமல்ல, எப்போதும் அருள்பணியாளர் என்றுதான் இருக்க வேண்டும். எல்லை மீறுதல் அறவே கூடாது. எல்லை மீறல்களும், பிறழ்வுகளும் கொஞ்ச நேர இன்பத்தைத் தரலாம். ஆனால், அவை ஏற்படுத்தும் கீறல்கள் காலத்தில் அழியாதவை.

7. 'உன் அழைத்தலில் தடுமாற்றம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது உன் முதலிரவை!' (When you have a crisis in your vocation, think of your first night)

முதலிரவா - ஆம். குருமடத்தில் சேர்ந்த முதலிரவு. 1994ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நான் ஞானாவில் உள்ள ஆயத்தநிலை குருமடத்தில் சேர்ந்தேன். எல்லாமே புதிதாக இருந்தது. அழைத்தல் பற்றிய புரிதலே இல்லை. நாங்கள் 14 பேர். புதிய ஊர்கள். புதிய முகங்கள். அந்த இரவு எந்த நம்பிக்கையில் நான் தூங்கினேன்? எங்கள் 14 பேரையும் அன்று ஒன்றாக உண்ணவும், உறங்கவும் வைத்தது நாங்கள் ஒட்டுமொத்தமாகக் கண்ட அருள்பணி என்னும் கனவு. அந்தக் கனவு அருள்பணி நிலையை அடைந்தவுடன் முடிவது அல்ல. அது என்றும் தொடர்வது. அருள்பணி நிலை திருப்தியாக இல்லையா? அழைத்தலில் தடுமாற்றம் வருகிறதா? - உடனே நீ என்ன செய்ய வேண்டும்? 'செபம் செய்ய ஆலயத்திற்கு ஓடாதே!' 'ஆன்மீகக் குருவை நோக்கி ஓடாதே - அவருக்கு இதைவிட பெரிய வேலை ஏதாவது இருக்கலாம்!' 'உன் நண்பர்களுக்கு ஃபோன் செய்யாதே - அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம்!' 'உன் உடன் பணியாளர்களைத் தொடர்பு கொள்ளாதே - அவர்கள் அன்பிய மீட்டிங்கில் அல்லது அவசரமான நோயிற்பூசுதல் கொடுத்தலில் இருக்கலாம்.' 'அப்படியே உறைந்து போயிரு!' 'அமைதியாக இரு!' 'நீ முதல் நாள் கண்ட கனவை திரும்பக் காண்!' 'அன்று நீ அணிந்த அரைக்கால்சட்டை, தூசி படிந்த காலணிகள், ஒரு பட்டன் இல்லாத சட்டை, உன் அம்மா விட்டுச் சென்ற யோசனை' என எல்லாவற்றையும் நினைவுகூறு. உன் ஆயர் அல்லது உன் உடன்பணியாளர் அல்லது உன் பணித்தள மக்கள் மேல் நீ கொண்டிருக்கும் கோபமல்ல. அந்தக் கனவே உன்னை உன்னை அழைத்தலில் நிற்க வைக்கும். நீ இவர்களுக்காக வரவில்லை. உனக்காகவும், அவருக்காகவுமே வந்தாய்.

'அவரோடு' என் பயணம் தொடர எனக்காக செபியுங்கள். என்னை ஆசீர்வதியுங்கள்.

Monday, April 18, 2016

மறுசந்திப்பு

அந்தப் பெண் எலியாவிடம், 'நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்' என்றார். (1 அர 17:24)

தன்னிடம் இருந்த ஒரு கையளவு மாவையும், சிறிதளவு எண்ணெயையும் வைத்து அப்பம் சுட்ட சாரிபாத்தின் வீட்டில் மாவுக்கும், எண்ணெய்க்கும் பஞ்சமே வரவில்லை.

ஆனால், இந்தக் கைம்பெண்ணுக்கு அடுத்த துன்பம் ஒன்று வருகின்றது. அவரது ஒரே மகன் இறந்துவிடுகிறான். தன் மகனைப் பறிகொடுத்த அவள் எலியாவிடம் அழுது புலம்புகிறாள். எலியா பையனைத் தூக்கிக்கொண்டு மாடி அறைக்குச் செல்கின்றார். 3000 வருடங்களுக்கு முன் கட்டிடங்கள் உள்ள வீடுகளில் மாடியறைகள் இருப்பது சாத்தியமா? ஒருவேளை இந்தக் கைம்பெண் மிக உயர்ந்த குடியைச் சார்ந்தவராக அல்லது பெரும் பணக்காரராக இருந்திருக்கலாம். அல்லது அந்த ஊரில் நிலவிய பஞ்சம் காரணமாக பணக்காரார்கள் அந்த ஊரை விட்டு வேறு நகருக்கு இடம்பெயர, இந்தப் பெண் அவர்களின் வீட்டை ஆக்கிரமித்திருக்கலாம். எது எப்படியோ, வீட்டில் ஒரு மாடி அறை இருக்கின்றது.

'மாடிக்கு ஏறிச்செல்லுதலை' ஒரு உருவகமாகவும் பார்க்கலாம். மலைக்கு ஏறிச் செல்வது என்பது இறை அனுபவமாக விவிலியத்திலும், சைவ மரபிலும் பார்க்கப்படுகிறது. பத்துக் கட்டளைகளைக் பெறுவதற்கும், உடன்படிக்கை செய்வதற்கும் மோசே மலைக்கு ஏறிச் செல்கின்றார். போதிப்பதற்கும், உருமாறுவதற்கும் இயேசு மலை மேல் ஏறிச் செல்கின்றார். இன்றும் நம் இந்து சகோதரர்கள் பழனி மலை, திருப்பரங்குன்றம் மலை, அழகர்கோயில் மலை என ஏறிச்சென்று முருகனை வழிபடுகின்றனர். மலை ஆன்மீக அனுபவத்தில் முக்கியமாக இருக்க ஒரே காரணம் இதுதான்: 'அதன் மேல் ஏறிச்சென்றால் நமக்கு எல்லாம் சிறியதாகத் தெரிகிறது.' நாம் கீழிருந்து பார்த்தபோது இரசித்து வியக்கும் பிரமாண்டமான கட்டிடங்கள், வாகனங்கள், கோபுரங்கள், நபர்கள் எல்லாம் வெறும் எறும்பு போல சின்னதாகத் தெரிகின்றனர். நாம் சம்பாதித்துக் கட்டிய பெரிய வீடு கூடு சிறிய புள்ளியாகத் தெரியும். மேலும், உலகம் இன்னும் அகலாகவும், பெரியதாகவும் இருப்பதாக நமக்குக் காட்டுவது மலைகள்தாம்.

மாடி அறைக்குப் பையனைத் தூக்கிச் செல்லுதல், எலியாவுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கின்றது. இறப்பின் வலி உணர்கின்றார் அவர். தனக்கு உயிர் கொடுத்த பெண்ணின் மகனுக்கு தன்னால் உயிர் கொடுக்க முடியவில்லையே என்ற கையறுநிலையில் இறைவனிடம் முறையிட, இறைவனும் அந்தப் பையனை உயிர்ப்பிக்கின்றார்.

'நம் வாழ்க்கையில் துன்பம் வரும்போதெல்லாம், 'இது எதற்காக?' 'எனக்கு மட்டும் ஏன் துன்பம்?' என அழுது புலம்புகின்றோம். ஆனால் அந்தத் துன்பம் மறைந்தபின்தான் அந்தத் துன்பத்தின் பொருள் நமக்குப் புரிகிறது' என்கிறார் பவுலோ கோயலோ.

தன் மகனை இழந்த துன்பம் அந்தப் பெண்ணுக்கு உண்மையான கடவுளை அடையாளம் காட்டுகிறது. உண்மையான கடவுளை அவர் அடையாளம் காண்பதற்காகத்தான் அந்தத் துன்பத்தை அவர் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

எலியா - சாரிபாத்து கைம்பெண் கதையை 'ஐந்தாம் மலை' என்ற தன் நாவலில் மிக அழகாகப் பதிவு செய்கிறார் பவுலோ கோயலோ. சாரிபாத்து என்ற நகரை அக்பர் என்று சொல்லும் அவர், பாகால் வழிபாட்டைப் பற்றி எதுவும் சொல்லாமல், அசீரியர்களின் அச்சுறுத்தல் மற்றும் போரைப் பின்புலமாக வைக்கின்றார்.

அந்த நாவலில் ஒரு நிகழ்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நாம் பிறந்தவுடன் நமக்குப் பெற்றோர்கள் பெயர் கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்யவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நமக்கு நாமே ஒரு பெயரைக் கொடுத்துக்கொண்டு அதன்படி வாழ வேண்டும் என்கிறார் கோயலோ. புதிய பெயரை நாம் கொடுப்பது புதிய வாழ்க்கையைத் தொடர உதவும். இந்தப் பெயரிடுதல் பற்றிய நிகழ்வை இங்கே தமிழில் மொழிபெயர்க்கிறேன்:

'துன்பங்கள் நடக்கும். நமக்கு வரும். நாம் அவற்றுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். அல்லது அவற்றுக்குக் காரணம் அடுத்தவர்கள்தாம் என்று சொல்வோம். அல்லது துன்பங்கள் இல்லாம் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்வோம். ஆனால் இவை முக்கியமல்ல. துன்பங்கள் வந்துவிட்டன. அவ்வளவுதான். அவைகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் நம்முள் எழுப்பிய பய உணர்வை ஓருங்கட்டிவிட்டு, புதிதாக நம் வாழ்க்கையைக் கட்டத் தொடங்க வேண்டும்.

'நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்துக் கொள்ளுங்கள். இப்போதிருந்தே கொடுங்கள். நீங்கள் இதுவரை நினைத்ததையும், கண்ட கனவுகளையும், மேற்கொள்ளும் போரட்டங்களையும் பிரதிபலிக்கும் தூய பெயராக அது இருக்க வேண்டும். என் பெயர் 'விடுதலை.'

அந்த நகரம் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தது. எலியாவைத் தன் வீட்டில் வரவேற்ற அந்தக் கைம்பெண் எழுந்தாள். 'என் பெயர் மறுசந்திப்பு' என்றாள்.

'என் பெயர் ஞானம்' என்றார் ஒரு வயதானவர்.

'என் பெயர் ஆல்ஃபாபெட்' என்று குதித்தான் கைம்பெண்ணின் மகன்.

சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். 'ஆல்ஃபாபெட் என்று யாராவது பெயர் வைப்பார்களா?' என்று கூட்டத்திலிருந்து கத்தினான் ஒரு சிறுவன்.

எலியா ஒன்றும் சொல்லவில்லை. அந்த மகன் எப்படி தன்னையே தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்கிறான் என்று பார்க்க மௌனமாக இருந்தார்.

'என் அம்மா கற்றுக்கொடுத்தவை தான் ஆல்ஃபாபெட். எழுதப்பட்ட எந்த எழுத்துக்களைக் கண்டாலும் நான் அவளை நினைவு கொள்வேன்' என்றான் மகன்.

Sunday, April 17, 2016

சாரிபாத்து கைம்பெண்

கைம்பெண் எலியாவிடம், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை. பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்' என்றார். (1 அர 17:13)

சாலமோன் அரசருக்குப் பின் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என இரண்டாகப் பிரிகின்றது.

வடக்கு இஸ்ரயேலை ஓம்ரியின் மகன் ஆகாபு ஆள்கின்றார். ஆகாபு ரொம்பவும் கிரிமினல். யாவே இறைவனை மறந்துவிட்டு, வேற்று தெய்வமான அசேராவுக்கு கம்பம் ஒன்றை நடுகின்றார். இந்த வழிபாட்டிற்காக பாகால் இறைவாக்கினர்களை நியமிக்கின்றார். மேலும் மனிதப்பலியும் செலுத்துகின்றார். இதனால் கோபித்துக்கொள்ளும் ஆண்டவர் இஸ்ரயேல் மேல் மழைபொழியா வண்ணம் மேகங்களைக் கலைக்கின்றார். நாட்டில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.

இந்தப் பஞ்சம் எலியா இறைவாக்கினரால் ஆகாபு அரசனிடம் அறிவிக்கப்படுகின்றது.

காகங்கள் வழியாக உணவு தந்த தன் இறைவாக்கினர் எலியாவைக் காப்பாற்றிய ஆண்டவர், அவரை சாரிபாத்து என்ற ஊரில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார்.

எலியா அந்த ஊருக்குள் வரும் நேரம் இந்தக் கைம்பெண் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டிருக்கின்றார். விறகுகள் கூட இல்லை. சுள்ளிகள் என்பதை தூசிக்கும், விறகுக்கும் இடைப்பட்டவை. இவற்றை வைத்து அடுப்பெரிக்க வேண்டுமானால் நிறைய பொறுக்க வேண்டும்.

ஆக, சுள்ளிகள் பொறுக்கிக் கொண்டிருந்தவர் ரொம்பவே களைத்துப் போயிருப்பார். இந்த நேரத்தில் அங்கு வரும் எலியா, 'எனக்கு உணவு கொடு!' என்கிறார்.

'கையளவு மாவும், சிறிதளவு எண்ணெயுமே இருக்கிறது. சாப்பிட்டு விட்டு நானும் என் மகனும் உயிர் துறப்போம்' என்கிறார் கைம்பெண்.

அவருக்கு ஒரு மகன் இருப்பது இங்கேதான் வாசகருக்குத் தெரிகிறது.

'நீ போம்மா...அப்பம் சுடு!' என்கிறார் எலியா.

போகிறார். சுடுகிறார்.

கலயத்தில் மாவும், சாடியில் எண்ணெயும் குறையவில்லை.

இங்கே இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும்:

1. எளிய மக்களின் ஆன்மீகம். நம்ம ஊர்களில் இன்றும் பார்க்கலாம் இந்த மக்களை. 'கடவுள் ஒருவரா அல்லது மூவரா அல்லது மூன்றாகி ஒன்றாக இருப்பவரா', 'விவாகரத்து பெற்றவர் நற்கருணை உட்கொள்ளலாமா', 'இது என் உடல், இது என் இரத்தம் என்று சொல்லும்போது அருள்பணியாளர் குனிந்து நிற்க வேண்டுமா அல்லது நேராக நிற்க வேண்டுமா' என்று எதுவும் இவர்களுக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். 'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்!' என்று தங்கள் கைகளை மட்டும் நம்பியிருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும் இவர்களுக்கு. ஆனால் கடவுளிடம் எதையும் கேட்க மாட்டார்கள். 'கையில வேலை, வாயில தோசை' அவ்வளவுதான். நாம வேலை செஞ்சா நமக்குச் சோறு என்ற அடிப்படையில்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கடவுளைத் தெரியாது. ஆனால் மனித முகங்களை உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். எலியாவைப் பார்த்து இந்தப் பெண், 'வாழும் உம் கடவுளாகிய' என்று 'உம்முடைய' என்று கடவுளை அந்நியப்படுத்துகின்றார். ஆனால், எலியாவை நெருக்கமாக்கிக் கொள்கின்றார்.

2. இந்த நிகழ்வைப் படிக்கும்போது கடவுள் மேல் கோபம் வருகிறது. ஆகாபு அரசன் தவறு செய்தால் கடவுள் அவனை அல்லவா தண்டிக்க வேண்டும். இந்தப் பாவப்பட்ட கைம்பெண் என்ன தவறு செய்தாள்? ஏற்கனவே கணவனை இழந்த துக்கம்? இப்போது பசி வேறு. ஒரு அரசனின் தவறு சாதாரண மக்களை ஏன் பாதிக்க வேண்டும்?

3. கைம்பெண்ணின் தியாகம். தனக்கும், தன் மகனுக்கும் உணவில்லை என்றாலும், வந்திருக்கும் மனிதருக்கு உணவு கொடுப்போம் என முடிவெடுக்கின்றார் கைம்பெண். தங்களிடம் உள்ளதை அப்படியே அள்ளிக் கொடுக்கும் இவ்வகைக் கைம்பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் அருள்பணி நிலையில், வழிபாடு அல்லது நன்கொடை என மக்களிடம் வாங்கும் பணம் குறித்து மிகவும் கவனமாகவும், நாணயமாகவும் இருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து கொடுப்பது ஒருவேளை அவருக்கும், அவருடைய மகனுக்குமான உயிர்ப்பிணையாகக் கூட இருக்கலாம். அது வெறும் பணம் அல்ல. அது அவர்களின் உயிர். அப்படியிருக்க, நான் அந்தப் பணத்தைக் குறித்து மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.

நாளையும் பார்ப்போம்.

Saturday, April 16, 2016

இரண்டு விலைமாதர்கள்

அப்பொழுது அரசர், 'என்ன இது? ஒருத்தி, உயிரோடு இருக்கிற இவன் என் மகன். செத்துவிட்டவன் உன் மகன்' என்கிறாள். மற்றவளோ, 'இல்லை! செத்துவிட்டவன் உன் மகன். உயிரோடு இருக்கிறவன் என் மகன்' என்கிறாள்' என்றார். பின்னர் அரசர், 'ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்' என்றார். (காண். 1 அர 3:16-28)

இன்று காலை டீ குடிக்க ஒரு கடைக்குச் சென்றிருந்தபோது, எங்கள் ஆலயத்தின் வெளியே நின்று உதவி கேட்கும் ருமேனியப் பெண் ஒருத்தி தன் கைக்குழந்தையுடன் கடைக்கு வந்தாள். தான் காலையில் பெற்ற நாணயங்களை அப்படியே பரப்பி எண்ணினாள். 90 சென்ட் வந்தது. அதை அப்படியே கொடுத்து ஒரு 'கொர்னெத்தோ' வாங்கித் தன் கைக்குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு, 'கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!' என்று குழாய்த்தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, அடுத்த திருப்பலிக்கு மக்கள் வருவதற்குமுன் சென்றுவிடவேண்டும் என்று ஆலயத்தை நோக்கி நடந்தாள்.

தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் தன் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, தான் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வயிற்றை நிறைத்துக் கொண்ட, அந்த அனாமிகாவின் தாய்மை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

சாலமோன் அரசர் ஞானம் பெற்றவுடன், அந்த ஞானம் எப்படிப்பட்டது என்பதை வாசகர்களுக்குக் காட்ட ஒரு நிகழ்வை பதிவு செய்கின்றார் ஆசிரியர். சின்ன வயதில் பார்த்த பள்ளி நாடகம் இது.

இரண்டு பெண்கள். ஒரு குழந்தை.

இரண்டு பேரும் விலைமாதர்கள் என்று சொல்கின்றார் ஆசிரியர். இங்கேதான் ஆசிரியரின் உச்சகட்ட கற்பனை இருக்கிறது. அதாவது, தான் ஒரு விலைமாதாக இருந்து, 'யாருக்கோ' பெற்றெடுத்த பிள்ளை என்றாலும், தாய்க்கு தன் பிள்ளை தன் பிள்ளைதான். தன் பிள்ளையின் நதி மூலம், ரிசி மூலத்தை தாய் ஆராய்வதில்லை.

இந்த இரண்டு பெண்களுக்கும் இரண்டு பெயர்கள் கொடுத்து கதையை இலகுவாக்கியிருக்கலாம் ஆசிரியர். ஆனால், கதையே ஒரு டெஸ்ட் என்பதால், பெயர்களையும் விட்டுவிடுகின்றார். எபிரேயத்தில் இதை வாசித்தால், யார் குழந்தையின் தாய் என்பதைக் கண்டுபிடிப்பது இன்னும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

முதலாமவள் - இரண்டாமவள் என்னும் இரண்டுபேர்.

முதலாமவள்தான் உண்மையான தாய்.

இருவரும் மூன்று நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுக்கின்றனர். இரண்டாமவள் தூக்கத்தில் தன் குழந்தையின்மேல் புரண்டு படுக்க அது இறந்துவிடுகிறது. கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா என்றால் இங்கே குழந்தை செத்தேவிட்டது. விடிந்து பார்க்கிறாள். தன் குழந்தை இறந்துவிட்டது. தூங்கிக்கொண்டிருந்தவளின் குழந்தையைத் தான் எடுத்து வைத்துக்கொண்டு, 'இது என் குழந்தை' என்கிறாள்.

உண்மையான தாய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

வழியெங்கும் நிறைய வாதாடியிருப்பாள். ஆனால் பாவம் அந்த வாதம் ஜெயிக்கவில்லை.

வாதம் அரசனின் அரண்மனைக்கு வருகிறது. இந்தச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அரசனுக்கு எப்படி நேரம் இருந்தது என்றும் தெரியவில்லை.

'இது என் குழந்தை' என இரண்டாமவளும்,

'இது என் குழந்தை' என முதலாமவளும் வாதிடுகின்றன.

'என்னடா இது நமக்கு வந்த சோதனை! ஒரு வாளைக் கொண்டு வாங்க! ஆளுக்குப் பாதி வெட்டிக் கொடுத்துவிடுவோம்!' என்கிறார் சாலமோன்.

'இதுதான் ஞானமா?' 'இதுதான் அறிவா?' என்று வாசகர் இங்கே வியக்கும்நேரம்தான் அந்த டுவிஸ்ட் வருகிறது.

தன் குழந்தை தன் கண்முன் அறுக்கப்படுவதைக் காணச் சகியாத முதலாமவள், 'குழந்தையை அவளிடமே கொடுத்துவிடுங்கள்' என்று அழுது வேண்டுகிறாள். மற்றவளோ, 'பாதிப்பாதி கொடுங்கள்' என்கிறாள். 'எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம்' என இருக்கிறாள் இரண்டாமவள்.

'முதல் பெண்ணிடம் குழந்தையைக் கொடுங்கள்! அவள்தான் குழந்தையின் தாய்!' என தீர்ப்பு வழங்குகின்றார் ராசா.

தான் இழக்க வேண்டிய நிலை வந்தாலும், அந்தக் குழந்தை உயிரை இழக்கக் கூடாது என்று குழந்தைக்காக விட்டுக்கொடுக்கும் இந்த முதலாமவள் நம் தாய்மார்களை நமக்கு நினைவூட்டுகிறாள்.


Friday, April 15, 2016

சேபா நாட்டு அரசி

தாவீதுக்குப் பின் அவருடைய மகன் சாலமோன் அரியணை ஏறுகின்றார்.

'உனக்கு என்ன வேண்டும்? நீண்ட ஆயுளா? செல்வமா? எதிரிகளின் அழிவா?' என்று ஆண்டவர் சாலமோனிடம் கேட்க, 'உன் மக்களுக்கு நீதி வழங்க ஞானம் வேண்டும்' என்கிறார் பவ்யமாக.
'ஞானம் கேட்டதால் நீ எல்லாவற்றையும் பெற்றாய்!' என உச்சி முகர்கின்றார் ஆண்டவர்.

'ஞானம்' என்றால் 'அறிவோடு கூடிய செயல்' அல்லது 'புத்திக்கூர்மை' அல்லது 'நன்மை தீமை ஆய்ந்து அறிந்து அதன்படி நடப்பது.'

சாலமோனின் ஞானம் மற்றும் புகழ் பக்கத்து நாடுகளுக்கும் பரவுகிறது.

இவரின் ஞானம் பற்றிக் கேள்வியுற்ற சேபா நாட்டு அரசி இவரைக் கேள்விகளால் சோதிக்க வருகிறார். இவரின் வருகை பற்றி இயேசுவும் தன் போதனையில் குறிப்பிடுகின்றார் (காண். மத் 12:42, லூக் 11:31).

வந்த அரசி அப்படி மெய்மறந்து போகின்றார்.

சாலமோனின் ஞானம் அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவர் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் என அனைத்திலும் துலங்குகிறது.

அ. சேபா நாட்டில் பெண்தான் முதலிடத்தில் இருக்கின்றார்.

ஆ. பெண்ணும் ஞானம் பெற்றவராக இருக்கிறார்

இ. பெண் நெடுந்தூரம் பயணம் செய்து அந்நிய நாட்டிற்குள் நுழையும் தைரியம் பெற்றிருக்கிறார்

சேபா நாட்டு இளவரசியிடம் எனக்குப் பிடித்தது அவரின் பாராட்டும் குணம். வாய்விட்டுப் பாராட்டுகின்றார் சாலமோனை:

'உம்முடைய ஞானம் பற்றி என் நாட்டில் கேள்வியுற்றேன். ஆனால் இங்கு காண்பதில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை' என்கிறார்.

மேலும், நிறைய பரிசுப்பொருள்களையும் கொடுக்கின்றார். அத்துனை பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை என வியக்கிறார் நூலாசிரியர்.

இந்தப் பாராட்டும், பரிசளிக்கும் குணத்தை இவரிடம் நான் கற்க விழைகிறேன்.

Thursday, April 14, 2016

தாமார்

அபிகாயிலுக்குப் பின் நாம் சந்திக்கும் பெண் பெத்சேபா.

மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டதால் ஒரு ஜம்ப் பண்ணி 2 சாமு 13க்குச் செல்வோம்.

அங்கே தாமார் என்ற பெண்ணைப் பார்க்கிறோம்.

தாவீதின் மகன் அப்சலோமின் சகோதரி என்று இவள் அறிமுகம் செய்யப்படுகிறாள் (2 சாமு 13:1). தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் இவள் மேல் மோகம் கொள்கிறான்.

'சகோதரி' என்பது 'தங்கை' அல்லது 'அக்கா' என்று பொருள்கொள்ளப்படத் தேவையில்லை. 'அத்தை மகள்,' 'மச்சாள்,' 'மச்சினி,' 'அக்கா,' 'கொழுந்தியா' என எல்லா உறவுகளும் 'சகோதரி' என்ற வார்த்தையால்தான் அழைக்கப்பட்டன.

மேலும், இங்கே சொல்லப்படும் சகோதரி தாமார் அம்னோனிடம், 'அரசரிடம் கேள். அவர் என்னை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பார்' என்கிறார். ஆக, இவர் உடன் பிறந்த சகோதரி அல்ல. மாறாக, திருமண உறவில் இணையும் உறவுநிலைக்காரர்.

தாமாரை தன் உரிமையாக்க வேண்டும் என்று அம்னோன் ஆசைப்படுகிறான்.

'ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்ற ஆசை ஒருவனின் உடலை உருக்கிவிடும்' என்ற கம்பரின் கூற்று அம்னோனில் உண்மையாகிறது. துரும்பாய் இழைக்க ஆரம்பிக்கிறான். இதைப் பார்க்கும் இவனது கிரிமினில் நண்பன் யோனதாபு ஒரு மோசமான அட்வைஸ் கொடுக்கிறான்.

'நீ படுத்துக்கொண்டு நோய்வாய்ப்பட்டது போல நடி. உன் அப்பா உன்னை விசாரிக்க வருவார். அந்த நேரத்தில் தாமாரை உன்னிடம் அனுப்பி வைக்கச் சொல்' என்பதுதான் அந்த அட்வைஸ்.

அம்னோனும் நடிக்கிறான். தாவீது வருகிறார். வந்து பார்த்தவர் தாமாரை அனுப்பி வைக்கிறார்.

ஒன்றுமறியாத தாமார் வந்து அம்னோனுக்காக பனியாரங்கள் சுடுகின்றாள். சுட்ட பணியாரங்களை எடுத்துக் கொண்டு போகிறாள். 'நீ உள்ளறைக்கு வந்து உன் கையால் எனக்கு ஊட்டி விட வேண்டும்' என்கிறான் அம்னோன்.

உள்ளறைக்குச் சென்றவுடன் அவள்மேல் பாய்ந்து, 'என்னோடு படு!' என்கிறான்.

அவள், 'வேண்டாம்!' என சொல்கிறாள்.

அவன் அவளது குரலுக்குச் செவிமடுக்கவில்லை. அவளை விட வலிமையாயிருந்ததால் அவன் அவளைக் கற்பழிக்கிறான். (2 சாமு 13:14)

தொடர்ந்து நடப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அவளைத் தொட்ட அடுத்த நொடியில் அம்னோன் அவளை வெறுக்கத் தொடங்குகிறான்.

'எழுந்து சென்றுவிடு!' என்கிறான்.

'என்னை அனுப்பிவிடுவது நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையைவிட மோசமானது!' என்று கதறுகிறாள் தாமார்.

ஆனால், அம்னோன் தம் பணியாளர்களைக் கொண்டு அவளை வெளியே துரத்தித் தாழிடுகிறான்.

வெளியே வந்தவள் அழுதுகொண்டே தன் உடைகளைக் களைந்து விரதமிருக்கிறாள். அவளது சகோதரன் அப்சலோம் நடந்ததைக் கேள்வியுற்று, தன் சகோதரர் அம்னோனைக் கொன்று பழிதீர்க்கின்றான்.

'உன் வாள் உன் கூடாரத்தை விட்டு நீங்காது!' என்று ஆண்டவர் தாவீதைச் சபித்தபின் நடந்த முதல் நிகழ்வு இது.

அதாவது, உரியாவின் மனைவி பெத்சேபாவை தான் உரிமையாக்கி உறவு கொண்டது மட்டுமல்லாமல், அவளின் கணவனை வாளுக்கு இரையாக்குகிறார் தாவீது.

'பிறர்க்கின்னா முற்பகல் செய்த' தாவீது 'தமக்கின்னாவை பிற்பகல்' தானே அறுவடை செய்கின்றார்.


Wednesday, April 13, 2016

அபிகாயில்

அபிகாயில் - அழகும், அறிவும்

(1 சாமு 25:1-42, 2 சாமு 3:3)

'அபிகாயில்' என்றால் 'என் அப்பாவே மகிழ்ச்சி' என்பது பொருள்.

வண்டி ஓட இரண்டு சக்கரங்கள் வேண்டும் என்று சொல்லும் கண்ணதாசன், அந்தச் சக்கரங்களில் ஒன்று சிறியதாய் இருந்தால் எந்த வண்டி ஓடும் என்று கேள்வியும் கேட்கின்றார். அபிகாயில் என்ற பெரிய சக்கரம், நாபால் என்ற சிறிய சக்கரத்தோடு திருமணத்தில் இணைகிறது.

நாபாலுக்கு 40 வயது இருக்கும். 'நாபால்' என்றால் 'முட்டாள்' என்பது பொருள். அவன் தன் பெயருக்கேற்ப முட்டாளாகவும், கோபக்காரனாகவும் இருக்கின்றான்.

அவனின் மனைவி அபிகாயிலுக்கு 16 முதல் 20 வயது இருக்கும். இவள் அழகி. அறிவாளி. அழகும் அறிவும் வெகு சிலருக்கே இணைந்து கிடைக்கும். அந்த பாக்கியசாலிகளில் இவளும் ஒருத்தி.

நாபால் என்பவன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பவன். இது அக்காலத்தில் ஒரு முக்கியமான தொழில். இவனிடம் பணம் நிறைய இருந்தது. மேலும் அபிகாயிலின் சொத்துக்களும் இவனுக்கு வந்தது.

இந்நேரம் தாவீது சவுலுக்குத் தப்பி பாலைநிலங்களில் திரிகின்றார். அவர் லோக்கல் தாதாவாக உருவெடுக்கிறார். அவருக்குக் கீழ் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை அனுப்பி, 'நமக்கு ஏதாவது வாங்கி வாருங்கள் நாபாலிடம்' எனச் சொல்கின்றார்.

'யார் அது தாவீது? அவனுக்கு ஏன் நான் தரணும்?' என்று மறுமொழி சொல்லி அனுப்பி விடுகின்றான் நாபால்.

உடனே நம்ம ஹீரோவுக்கு கோபம் வந்துவிடுகிறது. இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவனைக் கொல்லப் புறப்படுகிறார்.

இதற்கிடையில் தன் வீட்டிற்கு தாவீதின் ஆட்கள் வந்ததையும், தன் கணவன் அவர்களிடம் முட்டாள்தனமாக நடந்து கொண்டதையும் கேள்விப்பட்ட அபிகாயில், மிக வேகமாக செயலாற்றி, அப்பம், தண்ணீர், பயறு, அடை என எடுத்துக்கொண்டு தாவீதைச் சந்திக்க ஓடுகிறாள். தாவீதை நடுவழியில் கண்டு அவர் காலில் விழுந்து தன் கணவன் சார்பாக மன்னிப்பு கேட்கின்றாள் அபிகாயில். தாவீதும், 'சமாதானத்துடன் போ! உனக்குச் செவிகொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்' என்கிறார்.

வீட்டுக்கு வந்த அபிகாயில் தன் கணவனிடம் நடந்ததைக் கூற அவன் கல் மாதிரி உறைந்து போகின்றான். கொஞ்ச நாட்களில் இறந்துவிடுகின்றான்.

கணவன் இறந்துவிட்டதைக் கேள்விப்பட்ட தாவீது, 'நீ எனக்கு மனைவியாக இரு!' என தூது அனுப்புகிறார்.

'இதோ வருகிறேன்!' என்று ஓடுகிறார். தாவீதின் மனைவியாகிறார்.

இவர் தாவீதுக்கு கிலயாபு என்ற மகனைப் பெற்றெடுக்கின்றார்.

ஒரு பிரச்சினை உருவெடுக்கிறது. அந்தப் பிரச்சினையை பதற்றமின்றி, சமயோசிதமாகக் கையாளுகிறாள் அபிகாயில்.

கணவனின் மூடத்தனத்தால் தன் குடும்பம் அழியும் சூழல் வந்தபோது, தன் புத்திசாலித்தனத்தால் தன் குடும்பம் காக்கின்றாள் அபிகாயில்.

Tuesday, April 12, 2016

மீக்கால்

சவுல் தன் மூத்த மகள் மேராபை தாவீதுக்கு மணம் முடித்துக் கொடுக்க நினைக்கிறார். மூத்த மகளின் பெயர் 'மேராபு.' 'மேராபு' என்றால் 'அதிகமான' அல்லது 'நிறைய' என்பது பொருள்.

எல்லாம் கூடி வரும் நேரம், அவள் வேறொருவருக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கப்படுகின்றாள்.

அவளின் அடுத்த மகளின் பெயர் 'மீக்கால்.' 'மீக்கால்' என்றால் 'நீரோடை' என்று பொருள்.

இவளைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால், மணமகள்-விலையாக பெலிஸ்தியரின் 100 நுனித்தோல்களைக் கொண்டு வர வேண்டும் என்று சவுல் தாவீதுக்குக் கட்டளையிடுகின்றார்.

பெலிஸ்தியருக்கு எதிராக தாவீதைக் கிளப்பிவிட்டு, அவரைக் கொலை செய்யும் நோக்குடன் சவுல் இப்படிக் கட்டளையிடுகின்றார். ஆனால், தாவீது வெற்றிகரமாக 100 தோல்களுடன் வந்து மீக்காலை மணம் முடிக்கின்றார் (1 சாமு 18:20-28).

சவுல் தாவீதைக் கொல்லத் தேடியபோது, அவரை சவுலிடமிருந்து காப்பாற்றுகின்றாள் மீக்கால் (1 சாமு 19:12-17). தாவீது தப்பி ஓடியபின் அவள் வேறொருவருக்கு - பல்தியேல் - மனைவியாகிறாள் (1 சாமு 25:44). ஆனால் திரும்ப வந்த தாவீது அவளை மீண்டும் தன் மனைவியாக்கிக்கொள்கிறார் (2 சாமு 3:13-16).

ஆனால், சில நாட்களில் அவர்களுக்குள் மனத்தாங்கல் வந்துவிடுகிறது.

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்தபோது, தாவீது அரசர் ஆடி வருகின்றார் (2 சாமு 6:20-23).

மீக்கால் தாவீதை எதிர்கொண்டு, 'நீர் ஏன் இப்படி பைத்தியம் பிடித்ததுபோல ஆடி உன்னையே தாழ்த்திக்கொள்கிறாய்?' எனக் கேட்கின்றாள்.

'நான் ஆடினேன். இன்னும் ஆடுவேன். கடையனாகிய என்னை என் ஆண்டவர் தேர்ந்தெடுத்தார். இன்னும் நான் தாழ்த்திக் கொள்வேன். பணிப்பெண்களைவிட நான் தாழ்த்திக்கொள்வேன்' என்கிறார் தாவீது.

இப்படி மீக்கால் பேசியதால் அவளுக்கு குழந்தைப்பேறு கிடைக்கவில்லை.

அவளுக்கு குழந்தைப் பேறு இல்லாததை விளக்குவதற்கு எழுதப்பட்ட கதையாகக்கூட இது இருக்கலாம்.

ஆனால், தான் மனிதர்கள் முன் நல்லவனாய் இருப்பதைவிட, கடவுள்முன் நல்லவனாய் இருப்பதையே விரும்புகிறார் தாவீது.

மீக்கால் - அதை அறியாத அப்பாவியாக இருக்கிறாள்.

Monday, April 11, 2016

ஏலியின் மருமகள்

நீதித்தலைவர்கள் நூலைத் தொடர்ந்து சாமுவேல் நூல்களில் உள்ள பெண்களைப் பார்ப்போம்.

எல்கானாவின் மனைவியரான அன்னா மற்றும் பெனின்னா பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம். இதற்கடுத்து வரும் ஏலியின் மருமகளோடு நம் பயணத்தைத் தொடங்குவோம்.

சீலோவில் குருவாய் இருந்த ஏலிக்கு ('ஏலி' என்றால் 'என் கடவுள்' என்பது பொருள்') இரண்டு மகன்கள்: ஒப்னி, பினகாசு. 'ஒப்னி' என்றால் 'குத்துச்சண்டைக்காரன்' என்றும், 'பினகாசு' என்றால் 'வெண்கல வாய் உடையவன்' என்பதும் பொருள். ஏலி எந்த அளவுக்கு நல்லவராக இருந்தாரோ, அந்த அளவுக்கு அவரின் மகன்கள் கெட்டவர்களாக இருந்தனர்.

ஆலயத்திற்கு வருபவரை அரட்டி, மிரட்டி பணம் பறித்தனர். கூடார வாயிலில் பணியாற்றிய பெண்களோடு தகாத உறவு வைத்திருக்கின்றனர். இப்படி அவர்களைப் பற்றி மக்கள் பலவாறு பேசுமளவிற்க நடந்து கொள்கின்றனர். இந்த இருவரையும் அழிக்கப்போவதாக கடவுள் சாமுவேல் வழியாக எச்சரிக்கை விடுக்கின்றார்.

பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக போர் தொடுக்கின்றனர்.

இந்தப் போரில் இறந்தவர்களில் ஏலியின் மக்களும் அடங்குவர். அந்தப் போரில் வெற்றி பெற்ற பெலிஸ்தியர் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கடத்திக் கொண்டு செல்கின்றனர்.

தன் மகன்கள் இறந்த செய்தி கேட்டு துவண்டுவிடாத ஏலி, 'ஆண்டவரின் பேழை கைப்பற்றப்பட்டு விட்டது' என்றதும் நாற்காலியிலிருந்து மல்லாக்க விழுந்து இறந்து போகின்றார்.

இந்த நேரத்தில் பினகாசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

'ஆண்டவரின் பேழை கைப்பற்றப்பட்டுவிட்டது. மாமனார் இறந்துவிட்டார். கணவரும் இறந்துவிட்டார்' என்று ஒரே நேரத்தில் மூன்று துக்கம் தாளாமல், வேதனைக்குள்ளாகி குழந்தை பெற்றெடுக்கின்றாள்.

அந்தக் குழந்தைக்கு அவள் 'இக்கபோது' ('மாட்சியின்மை' அல்லது 'கடவுளின் மாட்சி அகன்றுவிட்டது' என்பது பொருள்).

இவ்வாறாக, கடவுளின் பேழையைத் தங்கள் மாட்சியாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள்.


Sunday, April 10, 2016

சீலோவின் மகளிர்

கூட்டமைப்பின் முதியோர்கள் 'பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்?' என்று கேட்டனர்.
... ... ...
எனவே அவர்கள் பென்யமின் புதல்வர்களை நோக்கி, 'செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்து கொண்டு கவனமாக உற்று நோக்குங்கள். சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்போது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீலோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கிக் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்' என்றனர்.

(நீத 21:16, 20-21)

ஒவ்வொரு குலம் வாரியாக நடந்த நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லிக் கொண்ட வந்த நீதித்தலைவர்கள் நூல் பென்யமின் குலத்தில் நடந்த நிகழ்வு பற்றி இறுதியாகக் கூறுகிறது.

குலங்களுக்குள் நடந்த போரில் பென்யமின் குலத்தில் உள்ள பெண்களும் கொல்லப்படுகின்றனர். குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் கொல்லக் கூடாது என்பது போர் விதி. ஆனால் அந்த விதியும் இங்கே மீறப்படுகிறது.

இப்படியாக பெண்கள் அழிக்கப்பட்டுவிட்டதால், ஆண்கள் துணையின்றித் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று ஊரார் கூட்டம் போடுகின்றனர். அப்போது சொல்லப்படும் பதில்தான் மேற்காணும் இறைவசனம்.

'நாம எல்லாரும் பக்கத்து ஊர் திருவிழாவுக்குப் போவோம். நீங்க தோட்டத்துக்குள்ள ஒளிஞ்சுக்கோங்க. அந்த ஊர் பொண்ணுங்க நடனமாட வரும்போது, நீங்க அவங்களைத் தூக்கிக்கொண்டு ஓடி மனைவியாக்கிக் கொள்ளுங்கள்.'

பெண் திருடக்கூடிய அல்லது கொள்ளையிடக்கூடிய ஒரு பொருளாக மாறிவிட்டாள். இஸ்ரயேல் சமூகத்தில் பெண் என்பவள் தந்தை அல்லது சகோதரன் அல்லது கணவன் ஆகியோரின் உடைமையாகவே கருதப்பட்டாள். ஒரு ஆண் வைத்திருந்த கம்பு, கம்பளி போலவேதான் பெண்ணும். தாய், மனைவி, கன்னி, விதவை என ஆணுக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை வைத்தே அவள் அறியப்பெற்றாள். இது பெண் இனத்திற்கு நம் வரலாறு செய்துவிட்ட பெரிய துரோகம்.

இஸ்ரயேலின் பன்னிரு புதல்வர்களில் பென்யமின்தான் கடைக்குட்டி. யாக்கோபால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர் இவர். இவரின் குலத்தில் பெண் இல்லாமல் போய்விட்டது என்றால் இஸ்ரயேல் சமூகம் எவ்வளவு மோசமான நிலையை அடைந்துவிட்டது எனப் பார்க்கலாம். தாங்களே பெண் தேடிப் போய், பெண்பார்த்து, திருமணம் முடித்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் நிலை மாறி, 'ஒரு பெண் கிடைத்தால் போதும்' என்று இரவில் தூக்கிக்கொண்டு ஓடும் அளவிற்கு பென்யமின் குலம் தாழ்ந்து விட்டது. அதாவது, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என விரும்பி, தேர்ந்தெடுத்து சாப்பிட்ட இனம், 'உப்புமா கிடைத்தால் போதும்' என்று சொல்லுமளவிற்கு இறங்கிவிட்டது.

அக்சா தான் விரும்பியதைக் கேட்டு வாங்கும் அளவுக்கு உரிமை பெற்றிருந்தாள். தெபோரா ஆண் படைவீரர்களுக்குக் கட்டளையிடும் துணிவு பெற்றிருந்தார். தொடர்ந்து வந்த பெண்களின் நிலை அப்படியே சுருங்கி லேவியரின் மனைவி, சீலோவின் மகளிர் என அனைவரும் மௌனிகளாகப்படுகின்றனர்.

ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தச் சமூகத்தின் வளர்ச்சியை நாம் கணக்கிட முடியும்.

மீண்டும் அதே பல்லவியுடன் முடிகிறது நீதித்தலைவர்கள் நூல்:

'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்' (21:21)

நீதித்தலைவர்கள் நூலின் பெண்கள் பற்றிய நம் ஆய்வு நிறைவு பெற்றது.

Saturday, April 9, 2016

லேவியரின் மறுமனைவி

அவர் அவளிடம், 'எழுந்திரு! புறப்படுவோம்' என்றார். பதில் இல்லை. எனவே அவர் அவளைக் கழுதை மீத தூக்கி வைத்துத் தன் வீட்டை நோக்கிச் சென்றார். (நீத 19:28)

கோபம் - வேசித்தனம் - கண்டுகொள்ளாத்தன்மை - குடிவெறி - சொல்பேச்சு கேளாமை - ஓரினச் சேர்க்கை - வன்முறை - கற்பழிப்பு - படுகொலை

இந்த எல்லா வார்த்தைகளின் உருவகமாக இருக்கின்றது நீத 19.

இதை வாசிப்பவர்களுக்கு, விவிலியத்தில் - இறைவார்த்தையில் - இப்படியொரு கொடூரமான நிகழ்வு நடப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இருக்கிறது இந்தப் பகுதி.

கதைக்கு வருவோம்.

லேவியர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு ஒரு மறுமனைவி (வைப்பாட்டி). லேவியர்கள் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள். இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அருட்பணியாளர்களாக இருப்பவர்கள். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் துர்மாதிரியாக இருக்கிறார். இதுவே முதல் பிறழ்வு.

இவரின் மறுமனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். காலங்காலமாக பெண்கள் செய்யும் விடயம்தான் என்றாலும்(!), இங்கே 'வேசித்தனம்' செய்தாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணவனைப் பிரிந்து தனியே இருக்கும் பெண்ணுக்குப் பாலியல் பிறழ்வுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததால் இங்கே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அவள் போன நான்காம் மாதம், லேவியர் அவளை அழைத்துவர தன் வேலையாள் மற்றும் இரு கழுதைகளோடு புறப்பட்டுச் செல்கிறார். அவள் போன நாலைந்து நாட்களில் அவளைத் தேடினால் பரவாயில்லை. இவர் நான்கு மாதம் காத்திருக்கின்றார்.

'நம்ம மாப்ள வந்திருக்கார்' என்று மனம் மகிழ்ந்த பெண்ணின் அப்பா, 'மூன்று நாட்கள் இருந்து நல்லா ஜாலியா இருந்துட்டு போங்க!' என்று விருந்து வைக்கின்றார். மூன்று நாட்கள் குடித்து முடித்த லேவியர் பயணத்துக்குப் புறப்படும்போது, 'இன்னும் ஒரு நாள் இருங்க!' என்கிறார் மாமா. நான்காம் நாளும் குடிக்கிறார் லேவியர். 'சரி மாமா நாங்க கிளம்புறோம்!' என ஐந்தாம் நாள் சொல்ல, 'இருங்க மாப்ள, மெதுவா போகலாம்' என இன்னும் ஊற்றிக்கொடுக்கின்றார் மாமா. ஐந்தாம் நாள் மாலையாயிற்று. 'மாமா, நாங்க கண்டிப்பா போயே ஆகணும்!' என தன் மறுமனைவியுடன் புறப்படுகின்றார் லேவியர்.

போகும் வழியிலேயே சூரியன் மறையத் தொடங்குகிறது. 'சூரியன் மறையத் தொடங்கினான்' என்ற சொல்லாடலே, 'ஏதோ நடக்குப் போகிறது!' என்று வாசகரை அலர்ட் செய்கிறது.

'நாம் எபூசு (வேற்று மனிதர்களின் நாடு) சென்று அங்கே இரவைக் கழிப்போம்!' என்று ஐடியாக் கொடுக்கின்றான் வேலைக்காரன்.

'இல்லை! நம் சொந்த மனிதர்கள் இருக்கும் பிபயாவில் போய் இரவைக் கழிப்போம்' என்று மறுமொழி சொல்கின்றார் லேவியர்.

கிபயாவுக்குப் போகிறார்கள். ஆனால் அவர்கள் ஊருக்குள் நுழைந்தவுடன் யாரும் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைக்கவில்லை. பாலைவன சமூகத்தில் 'விருந்தோம்பல்,' அல்லது 'அந்நியரை வரவேற்றல்' என்பது மிக முக்கியமான பண்பு. இதுதான் எல்லாப் பண்புகளிலும் மேலானதாகக் கருதப்பட்டது. ஏனெனில் பாலைநிலத்தில் வெட்ட வெளியில் தங்குவது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தானது. ஆனால் இங்கே விருந்தோம்பல் செய்ய யாருமில்லை.

அந்நேரம் வயலிலிருந்து வீடு திரும்பும் ஒரு முதியவர், 'வாங்க! என் வீட்டில் வந்து தங்குங்க!' என அழைக்கிறார்.

இவர்களும் செல்கின்றனர். சாப்பிட்டுவிட்டு குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்நகரின் இழிமனிதர்கள் அவ்வீட்டின் கதவைத் தட்டுகின்றனர். 'டேய் கிழவா! உன் வீட்டுக்கு வந்திருக்கும் அந்த மனிதனை வெளியே அனுப்பு. நாங்கள் அவனோடு உறவு கொள்ள வேண்டும்' என சத்தம் போடுகின்றனர்.

தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினருக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் அது விருந்தோம்பல் விதிக்கு முரணானது. ஆகையால், அந்த முதியவர், 'வேண்டாம்! இந்தக் கொடிய செயலைச் செய்யாதீர்கள் அந்த மனிதனுக்கு. வேண்டுமானால், கன்னியான என் மகளையும், அவரின் மறுமனைவியையும் வெளியே கொண்டு வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்' என்கிறார்.

விருந்திற்கு வந்திருக்கும் மறுமனைவிக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் வந்திருக்கும் ஆணுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதிலேயே தெரிகிறது பெண்களுக்கு இச்சமூகம் கொடுத்திருந்த அங்கீகாரம்.

அவர்கள் கேட்பதாக இல்லை.

இதற்கிடையில் லேவியர் தன் மனைவியை வெளியே தள்ளிவிடுகின்றார். தள்ளி விட்டு கதவை அடைத்து மீண்டும் முதியவரோடு சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கின்றார். வெளியே தள்ளப்பட்ட மறுமனைவியோடு இரவு முழுவதும் வைகறை வரை நகரத்தார் உறவுகொண்டு இழிவு படுத்துகின்றனர். இதைக் கண்டுகொள்ளாமல் குடித்துக் கொண்டிருக்கவும், தூங்கவும் அந்த லேவியருக்கு எப்படி மனம் வந்திருக்கும்?

விடிந்துவிட்டது. பயணத்துக்குத் தயாராகிவிட்டார் லேவியர். கதவைத் திறக்கிறார். வெளியே கதவின் நிலையில் சாய்ந்து கிடக்கிறாள் மறுமனைவி. அவள் உயிரோடு இருக்கிறாளா, அல்லது இறந்துவிட்டாளா என்று கூட கண்டுகொள்ளாத லேவியர் அவளை அப்படியே கழுதை மேல் ஏற்றி வழிநடக்கின்றார்.

தன் வீட்டிற்கு வருகின்றார். அவளின் உடலை ஒரு கத்தியால் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டுகின்றார். அவள் எப்போது இறந்தாள்? கழுதையில் ஏற்றும்போதா? அல்லது வழியிலா? அல்லது இவன் கத்தியால் குத்தும்போதா?

துண்டுகளாய்க் கூறுபோட்ட லேவியர், இஸ்ரயேலின் பன்னிரு குலத்துக்கும் பன்னிரு துண்டுகளை அனுப்புகின்றார்.

நீதித்தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் சமூகம் எப்படி தரம் தாழ்ந்து போயிருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

கதை முழுவதும் மறுமனைவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளின் மௌனம் நமக்கு பெரிய அலறலாகக் கேட்கின்றது.

கழுதைக்கும், வேலையாளுக்கும் இருந்து மரியாதை கூட அந்தப் பெண்ணுக்கு இல்லை.

கணவனும் மதிக்கவில்லை. தந்தை வீட்டிலும் ஏற்கப்படவில்லை. அந்நிய நாட்டில் அவமானம் மற்றும் கற்பழிப்பு. சொந்தக் கணவனின் கையால் படுகொலை.

லேவியரின் தன்னலம் மற்றும் தன்மையப்போக்கு, கண்டுகொள்ளாத்தன்மை மற்றும் குடிவெறி கண்டிக்கத்தக்கதே.

அவரின் இந்த எல்லா தீய குணங்களுக்கும் பலிகடாவாகிறாள் ஒரு பச்சிளம் பெண்!

Friday, April 8, 2016

மீக்காவின் அம்மா

மீக்கா தன் அம்மாவிடம், 'உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்' என்றார். அப்பொழுது அவர் தாய், 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்றார். (நீத 17:2)

'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்'

- இந்த வசனம் நீதித்தலைவர்கள் நூலில் நான்கு முறை வருகின்றது. நீதித்தலைவர்கள் நூல் காலத்தில் இஸ்ரயேல் சமூகம் எப்படி இருந்தது என்பதை இது படம்பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் நேர்மையாகச் செயல்பட்டனர் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் தனக்கு எது சரி என்று பட்டதோ அதைச் செய்து கொண்டிருந்தனர்.

இன்றைய நம் சிந்தனையின் நாயகி 'மீக்காவின் அம்மா'

'மீக்கா' என்றால் 'யார் நிகர்?' என்பது பொருள். இந்த மீக்கா எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்தவர். இங்கேதான் யாவே வழிபாடு சிறப்பாக இருந்தது.

இவரின் அம்மா வைத்திருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள் திருடு போய்விடுகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவருடைய மகனே இதைத் திருடியிருக்கின்றார். சொந்த வீட்டிலேயே திருட்டா? 'நான் தான் திருடினேன்' என மீக்கா சொல்ல, அவரைக் கடிந்து கொள்வதற்குப் பதிலாக, அவரை வாழ்த்துகின்றார் அவரின் அம்மா. ஒருவேளை காசு கிடைத்த மகிழ்ச்சியில் வாழ்த்தினாரோ? அல்லது 'நீ ஒரு நல்ல திருடன்' என்று வாழ்த்தினாரோ?

'இதை நீயே வைத்துக்கொள்!' என்று தன் மகனிடம் வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுக்கும் தாய், அந்தக் காசுகளை வைத்து, செதுக்கிய உருவமும், வார்ப்புச் சிலையும் செய்யும்படி கேட்கிறாள். மகனும் அப்படியே செய்கிறார்.

செதுக்கிய உருவம் என்பது மரத்தில் செதுக்கப்படும் சிலை.

வார்ப்புச் சிலை என்பது உலோகங்களை உருக்கி, வார்ப்பில் இட்டு செய்யப்படும் சிலை.

ஆக, சிலைவழிபாடு கண்டிக்கப்பட்டு, ஆண்டவரை மட்டுமே வழிபட வேண்டிய இடத்தில், ஆண்டவர் ஓரங்கட்டப்பட்டு, சிலைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சிலைகள் யாருடையவை என்றும் நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து மீக்கா, தன் சிற்றாலயத்திற்கென்று ஒரு குருவையும் வேலைக்கு அமர்த்துகின்றார்.

இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தச் சிலைகள் திருடப்பட்டுவிடுகின்றன.

மீக்காவின் அம்மா - ஒரு புதிர்.


Thursday, April 7, 2016

தெலீலா

தெலீலா சிம்சோனிடம், 'மனம் திறந்து பேசாமல் நீர் என்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை' என்றாள். அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். (நீத 16:15-16)

வீட்டிற்கு அடிக்கடி வந்து பாலைக் குடித்துவிட்டுச் செல்லும் பூனையை திருத்துவதற்கு கிராமத்தில் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாலை நன்றாகச் சுட வைத்து, கொதிக்க கொதிக்க அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைப்பார்கள். அதில் நாக்கை வைத்துச் சுட்டுக்கொள்ளும் பூனை மறுபடி பாலின் பக்கமே செல்லாது.

பூனை கற்றுக்கொள்ளும் அளவிற்குக் கூட சிம்சோன் கற்றுக்கொள்ளவில்லை.

திம்னாத்தில் உள்ள பெண்ணால் சூடுபட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு என நிறைய 'பட்டாலும்' சிம்சோன் இப்போது மூன்றாவதாக ஒரு பெண்ணிடம் தொடர்பு கொள்கின்றார். அவர் தொடர்பு கொண்ட இரண்டாம் பெண் காசாவின் விலைமகள். தான் முதலில் ஏமாற்றப்பட்டபோது, அது அந்தப் பெண்ணுக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும், அந்தப் பெண்ணின் ஊருக்கும் அழிவாய் முடிகிறது. இவ்வளவு அழிவு என்னால் நேர்ந்துவிட்டதே! என்ற வருத்தம் சிம்சோனிடம் அறவே இல்லை.

ஆகையால்தான் தெலீலாவின் மடியில் போய் விழுகின்றார்.

'தெலீலா' என்றால் 'மென்மை' அல்லது 'மென்மையானவள்' என்பது பொருள்.

சிம்சோனின் வீக்னஸ் என்ன என்பதை தெரிந்துகொள்ள, அவரின் வீக்னஸையே பயன்படுத்துகின்றனர் பெலிஸ்தியர். ஆம், பெண் என்ற வீக்னஸைப் பயன்படுத்தி, அவரின் திறன் எதில் அடங்கி இருக்கிறது என காண விழைகின்றனர். இந்த டீலை முடித்துக் கொடுக்க தெலீலாவுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை 'ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள்.'

'உன் ஆற்றல் எதில் அடங்கியுள்ளது?' என்று தெலீலா மும்முறை கேட்க, மும்முறையும் 'அங்கே, இங்கே' என ஏமாற்றி விடுகிறார் சிம்சோன். முதல் முறை இவர் ஏமாற்ற, பெலிஸ்தியர் அவர்மேல் பாய்ந்தபோது, அவர் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கலாம். ஏமாற்றப்படுவதற்காக தன்னையே வலிந்து தருகின்றார். நான்காம் முறை, தெலீலா ரொம்பவே உருக, உயிர் போகுமளவிற்கு நச்சரிக்கப்படும் சிம்சோன், தன் ஆற்றலின் இரகசியத்தைச் சொல்லிவிடுகின்றார்.

'என்னிடம் மறைக்கிறீர்! என்னை ஏமாற்றுகிறீர்!' என்று உருகும் தெலீலா, தானும் அவரிடமிருந்து மறைக்கும் தன் இரகசிய திட்டம் பற்றி ஒன்றும் சொல்லாமல் விடுகின்றார்.

இந்த நேரத்தில் சிம்சோன் சபை உரையாளரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்திருந்திருந்தால், தப்பியிருப்பார்:

'சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும். உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்...மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையும் நான் கண்டதில்லை.' (சஉ 7:26-28) (சபை உரையாளரின் இந்த வார்த்தைகள் இன்றுவரை மறைபொருளாகவே இருக்கின்றன!)

தெலீலா ஒரு புத்திசாலி! சிம்சோனின் காம வேட்கையை வைத்து பணம் சம்பாதித்து விடுகிறாள்.

'தம்பி சிம்சோன் ஒன்றைப் புரிந்துகொள்: 'there is no such thing as a free lunch. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை நீ கொடுக்க வேண்டும்!'' எனச் சொல்லாமல் சொல்கிறாள் தெலீலா.




Wednesday, April 6, 2016

திமினாத்தின் இளம்பெண்

சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், 'நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுதலை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே' என்றாள். அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர்முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்துவிட்டாள். (நீத 14:16-17)

சிம்சோனுக்கு இளம் வயது ஆகிவிட்டது. திம்னாத் என்ற பெலிஸ்தியரின் ஊருக்குச் செல்கின்றார். அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார். 'அவளை எனக்கு மணம் முடியுங்கள்!' என தன் அம்மா-அப்பாவிடம் சொல்கிறார். 'தம்பி, நம்ம சொந்தத்திலேயே எவ்ளோ பொண்ணுங்க இருக்க, நீ அந்த விருத்தசேதனம் செய்யாதவன் வீட்டுலயா பொண்ணு எடுக்கணும்?' என்று புலம்பித் தவிக்கிறாள் அம்மா. மகன் விடுவதாயில்லை. 'எனக்கு அவா தான் வேணும்!' என்று அடம்பிடிக்கிறான் மகன். பெற்றோர்-பிள்ளை சகிதம் பெண் பார்க்கப் போகிறார்கள்.

'நீங்க போய்கிட்டே இருங்க, நான் வர்றேன்!' என சொல்லிவிட்டு கொஞ்சம் பின் நடக்கும் சிம்சோன், தன்னைத் தாக்க வந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொல்கின்றார்.

திம்னாத்துக்குப் போகிறார். பெண்ணுடன் பேசுகிறார். அவள் அவருக்குப் பிடித்தவராகத் தெரிகிறார்.

சில நாள்களுக்குப் பின் அவளைக் கூட்டிச் செல்ல பெற்றோர்-மகன் என மறுபடியும் திம்னாத் செல்கின்றனர். வழியில் தான் கொன்ற சிங்கத்தின் நிலை என்னாயிற்று என பார்க்கிறார் சிம்சோன். தேனீக்கள் சிங்கத்தின் பிணத்தில் கூடுகட்டியிருக்கின்றன. அந்தத் தேனை எடுத்து தான் நக்கியதும் அல்லாமல், தன் பெற்றோருக்கும் கொடுக்கின்றார்.

சிம்சோனின் முதல் தீட்டு இது. கடவுளுக்கான நாசீராக இருப்பவர் எந்தப் பிணத்தின் அருகிலும் செல்லக்கூடாது. அப்படியிருக்க, சிம்சோன் சிங்கத்தின் பிணத்தின் அருகில் சென்றதோடல்லாமல், அதில் கட்டியிருந்த தேனையும் பருகுகின்றார்.

திருமண வீடு. முப்பது நண்பர்கள். நன்றாகக் குடிக்கின்றார் சிம்சோன். குடித்தல் இரண்டாம் தீட்டு. வந்திருந்த நண்பர்களுக்கு விடுகதை ஒன்றைப் போடுகின்றார்:

'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது.'

விடை சொன்னால் நான் உங்களுக்கு 30 நார்ப்பட்டாடை (இன்றைய மதிப்புக்கு 30 லட்சம் ரூபாய்). சொல்லாவிட்டால் நீங்க எனக்கு கொடுக்கணும்.

விடை தெரியாத உறவுக்காரப் பையன்கள் சிம்சோனின் காதலி-மனைவியிடம் சென்று பயமுறுத்துகிறார்கள். 'நீ விடையைக் கேட்டுச் சொல். இல்லையென்றால் உன்னையும் உன் வீட்டையும் கொளுத்திவிடுவோம்!'

தன் கையிலிருந்த ஒரே ஆயுதமான அழுகையைப் பயன்படுத்தி விடுகதையின் விடையை சிம்சோனிடம் கேட்டுப்பெறுகிறாள் இளம்பெண்.

அவள் அவர்களிடம் சொல்ல, அவர்கள் அவனிடம் சொல்கிறார்கள்.

நம் கதாநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. வேகமாக அஸ்கலோன் சென்று அங்கிருந்த 30 பிலிஸ்தியர்களைக் கொன்று, அவர்களின் நார்ப்பட்டாடைகளைக் கொண்டு வந்து வந்து குவிக்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து தன் மனைவியைப் பார்க்க ஓர் ஆட்டுக்குட்டியுடன் வருகின்றார்.

இதற்கிடையில் அவரின் மனைவியை அவரின் மணமகன்தோழனுக்கு தாரை வார்த்துவிடுகிறார் அவளின் அப்பா. 'நீ அவளோடு தங்கையைக் கட்டிக்கொள்!' என்கிறார். மறுபடியும் கோபம் கொண்ட சிம்சோன் திம்னாத் நகரின் வயலைத் தீக்கிரையாக்குகிறார். கோபம் கொண்ட ஊர் மக்கள் இளம்பெண்ணையும், அவளின் அப்பாவையும் நெருப்பில் எரிக்கின்றனர்.

பார்க்கிறாள். பேசுகிறாள். அழுகிறாள். இரகசியம் உடைக்கிறாள். தீக்கிரையாகிறாள்.திம்னாத்தின் இளம்பெண்.

இந்தப் பெண்ணின் இறப்புக்கு யார் காரணம்?

இந்த நிகழ்வில் வரும் எல்லாரையும் காரணமாகச் சொல்லலாம். நாம் எங்கே நின்று பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து குற்றவாளி மாறுவார்.

சிம்சோன் மயக்க நினைத்தார். அந்த மயக்கத்தை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

கணவனா? உறவுக்கார பையன்களா? என்ற கேள்வி வரும்போது, கணவனைக் கைகழுவுகின்றாள் பெண்.

விடுகதைக்கு விடையும் கேள்வியாகவே இருக்கின்றது:

'தேனினும் இனியது எது?
சிங்கத்தினும் வலியது எது?'


Tuesday, April 5, 2016

சிம்சோனின் அம்மா

மனோவாகு தம் மனைவியிடம், 'நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்துவிட்டோம்' என்றார். அவர் மனைவி அவரிடம், 'ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார். இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார். இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்' என்றார். (நீத 13:22-23)

'ஐயோ! எல்லாம் போச்சு!' என்று பதறிய தன் கணவனுக்கு நம்பிக்கை ஊட்டும் இந்த புத்திசாலி மனைவி யார்?

இவர்தான் சிம்சோனின் (சாம்சன்) அம்மா.

சிம்சோனின் அம்மாவை கற்பனை செய்து பார்த்தால் நம் கிராமங்களில் காடு மேடுகளென்று பாராமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டு திரியும், 20 முதல் 25 வயதுவரை உள்ள, சாதாரண குடும்ப பின்புலத்தைக் கொண்ட, ஏற்றிக் கட்டிய சேலை, கையில் நீண்ட கம்பு, மற்றொரு கையில் தூக்குச்சட்டி, கழுத்தில் ஒரு துண்டு, கழுத்தில் மஞ்சளா, வெள்ளையா என்று தெரியாமல் வெளிறிப்போன தாலிக்கயிறு, அந்தக் கயிற்றில் சில ஊக்குகள், ஒரு முருகன் டாலர், காதுகளின் கம்மலை அடகு வைத்துவிட்டு, ஓட்டைகள் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக சொருகப்பட்ட வேப்ப இலைக் குச்சிகள், வறண்ட சருமம், கலைந்த முடியைக் கொண்ட, ஒரு அலமேலு, அல்லது முருகேசுவரி, அல்லது ருக்குமணிதான் நினைவிற்கு வருகிறார்.

சிம்சோனின் அம்மா ரொம்ப சாதாரணமான பொண்ணு.

கடவுள் என்னவோ சாதாரணமானவர்களைத் தேடியே போகிறார். இந்தச் சின்னப் பொண்ணுக்கு இருக்கும் ஒரே கவலை 'குழந்தையின்மை.' தன் கண்முன்னே தான் வளர்த்த ஆடுகள் எல்லாம் குட்டிகள் போட்டு பலுகிப் பெருக, தான் மட்டும் முதிர்கன்னியாகவே இருப்பது அவளுக்கு நெருடலாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும், அதைப்பற்றி அவள் வருந்தவில்லை. 'சாப்பிடவே வழியில்லையாம்! இதுல குழந்தை குட்டிகள் வேறா!' என்று கூட தனக்குத் தானே தைரியம் சொல்லியிருப்பாள். அல்லது 'எல்லாம் நல்லதுக்குத்தான்! நடக்கும்போது நடக்கட்டும்!' என்று காத்திருப்பாள்.

இவள் தன் கணவனின் பெயரை வைத்தே அறியப்படுகிறாள். 'அங்க போறது யாரு? மனோவாகு பொண்டாட்டியா!' என்றுதான் பக்கத்து வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் பேசியிருப்பார்கள்.

இவளைத் தேடி வருகிறார் ஆண்டவரின் தூதர். 'இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்!' என்று தொடங்கி ஏதேதோ சொல்கின்றார். மரியாள், 'ஆமென்!' என்று சொல்லியது போல, இந்தப் பெண் ஒன்றும் பதில் சொல்லவில்லை. நேரே தன் கணவனிடம் ஓடுகிறாள். 'என்னங்க! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்குக் காலையில ஆடு மேய்ச்சுகிட்டு இருந்தப்போ...' என்று தொடங்கி ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றாள்.

இவளின் கணவன் ஓர் ஆர்வக்கோளாறு. அதே நேரத்தில் கடவுள் பக்தியும் உள்ளவர். 'ஐயா! கடவுளே! இன்னைக்கு வந்த தூதர் மறுபடியும் ஒரு நாள் வரட்டும்!' என்று கடவுளிடம் கேட்கி;ன்றார். தன் மனைவி சொல்வதை நம்பவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கடவுளின் தூதர் மறுபடியும் வருகின்றார். ஆனா, இப்போவும் இந்தப் பொண்ணு தனியா வயலில் நின்றுகொண்டு இருக்கிறாள். இரண்டு முறையும் இவள் தனியாக நிற்கக் காரணம் என்ன? 'குழந்தையில்லை' என்பதால் ஒருவேளை மனோவாகு இவளுடன் ஒட்டவில்லையோ? காரணம் தெரியவில்லை.

'ஐயா! ஒரு நிமிட் இருங்க! என் ஹஸ்பெண்டைக் கூட்டி வருகிறேன்!' என்று அரைகுறை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, தன் கணவனைத் தேடி ஓடுகிறாள். கணவனும் தூதரைப் பார்க்க விரைந்து வருகின்றார்.

தான் முன்பு சொன்னதை கடவுளின் தூதர் திரும்பவும் சொல்கிறார்.

'ஆமா! உங்க பேரு என்ன? நாங்க உங்களுக்கு ஏதாவது செய்யணுமா?' என்று வெகுளித்தனமாகக் கேட்கிறார் மனோவாகு.

'என் பேரை நீ ஏன்ப்பா கேட்குற?' என முறைத்துக்கொள்ளும் தூதர், 'நீ கடவுளுக்கு வேண்டுமாhனல் பலி செலுத்து என்கிறார்!' பலி செலுத்துகிறார் மனோவாகு. அந்தப் பலியின் நெருப்பில் கரைந்து மறைந்து போகிறார் தூதர்.

மனோவாகுவிற்கு பயம். 'கடவுளையே பார்த்துட்டோம்! கடவுளையே சோதிச்சுட்டோம்! சாகப்போறோம்!' என்கிறார்.

'தோடா...ஏன் இப்படி பயந்து சாகுற? இப்போ என்ன ஆய்டுச்சு? அவர் நம்மள தண்டிக்கிறதுனா நம்மகிட்ட வந்திருப்பாரா...சும்மா கம்முனு கிட!' என ஆறுதல் சொல்கிறார் அம்மணி.

மனோவாகின் மனைவி மூன்று விடயங்களைக் கற்பிக்கிறாள் நமக்கு:
1. தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள சீக்ரெட். கடவுளின் தூதரின் வார்த்தைகளைத் தன் கணவரிடம் சொல்லும் இவள் ஒரு முக்கியமான விஷயத்தை மறைத்துவிடுகிறாள். 'பிள்ளை கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என்று சொன்னவள், 'அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது,' என்பதையும், 'அவன் இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிப்பான்' (13:5) என்பதையும் மறைத்துவிடுகிறாள். இந்த விஷயம் மூவருக்கு மட்டுமே தெரிகிறது: கடவுள், அம்மா, மகன். யாருக்குமே தெரியாத இந்த சீக்ரெட்டை தெலீலாவிடம் சொன்னதால்தான் சிம்சோன் சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒவ்வொரு குழந்தையை தன் கருவில் தாங்கும்போதும் ஒரு தாய் கடவுளிடமிருந்து ஒரு செய்தியைப் பெறுகிறாள். அந்தச் செய்தியை அவள் தன் குழந்தைக்கு மட்டும் சொல்கிறாள். தன் கணவனுக்கும் அவள் சொல்வதில்லை. இதுதான் தொப்புள்கொடி உறவு. இந்த தொப்புள்கொடி வழியாக தாய் தன் குழந்தைக்கு உணவை மட்டும் பகிர்வதில்லை. தன் எண்ணம், ஏக்கம், கலக்கம், கனவு அனைத்தையும் பகிர்கிறாள்.

2. தாயின் தியாகம். கடவுளுக்கான நாசீராக இருப்பவர்தான் மதுவோ, திராட்சை ரசமோ அருந்தக் கூடாது (காண். எண் 6:1-5). ஆனால், இங்கே தன் மகன் நாசீராக ('அர்ப்பணிக்கப்பட்டவனாக') இருப்பதற்காக, தான் பட்டினி கிடக்கின்றாள் இந்த ஏழைத்தாய்.

3. அறிவாளி. ஆண்களுக்குப் புரியாத பல விஷயங்களை பெண்கள் மிக எளிதாக புரிந்து கொள்கிறார்கள். இங்கே கடவுளின் மனதையே புரிந்து கொள்கிறாள் இந்தச் சின்னப் பொண்ணு. தன் ஆழ்மனதோடு தொடர்பில் இருக்கும் ஒருவர் எல்லா மறைபொருள்களையும் அறிந்து கொள்வார். வாழ்வின் எல்லா சூழல்களிலும் பதற்றமின்றி செயலாற்றுவார். சிம்சோனின் அம்மாவும் தன் ஆழ்மனதோடு தொடர்பில் இருந்தாள்.

சிம்சோனின் அம்மா - நம் அம்மாக்களின் உருவகம்!