Friday, June 29, 2018

செல்க என்றால் செல்கிறார்!

நாளைய (30 ஜூன் 2018) நற்செய்தி (மத் 8:5-17)

செல்க என்றால் செல்கிறார்!

நூற்றுவர் தலைவர் ஒருவரின் 'பையன்' ('பணியாளன்' அல்லது 'மகன்') நலம்பெறும் நிகழ்வை நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். 'நான் வந்து குணமாக்குவேன்' என்று இயேசு அவரோடு செல்ல முன்வருகிறார். ஆனால் அவரோ, 'ஒரு வார்த்தை சொல்லும் என் மகன் நலமடைவான்' என்கிறார்.

அத்தோடு நில்லாமல், வார்த்தையின் வலிமை பற்றி அறிந்துள்ளார் இந்த தலைவர். எப்படி?

தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை நோக்கி, 'வா' என்றால் 'வருகிறார்,' 'செல்' என்றால் 'செல்கிறார்,' 'இதைச் செய்' என்றால் 'செய்கிறார்.'

அதிகாரத்தில் வார்த்தை அப்படியே செயலாக மாறிவிடுகிறது.

இதைச் சொல்வதன்வழியாக நூற்றுவர் தலைவன் இயேசுவுக்கு அனைத்தின்மேலும் அதிகாரம் உள்ளது என்பதை நம்புகிறார். இந்த நம்பிக்கையை இயேசு பாராட்டுகின்றார்.

'நீர் போகலாம். நீர் நம்பியவண்ணமே நிகழும்' என அனுப்பிவைக்கின்றார் இயேசு.

நம்பிக்கையும், வார்த்தையம் இணைந்தால் நலம்பெறுதல் சாத்தியமாகிறது.

Wednesday, June 27, 2018

இருவகை அடித்தளங்கள்

நாளைய (28 ஜூன் 2018) நற்செய்தி (மத் 7:21-29)

இருவகை அடித்தளங்கள்

இயேசுவின் மலைப்பொழிவு நாளைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவுபெறுகிறது.

தன் மலைப்பொழிவை இரு உருவகங்களோடு முடிக்கின்றார் இயேசு.

'பாறை மீது கட்டிய வீடா?' அல்லது 'மணல் மீது கட்டிய வீடா?'

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நாம் தெரிவுசெய்ய வேண்டும்.

முதல்வகை நபரை அறிவாளி என்றும், இரண்டாம் வகை நபரை அறிவிலி என்றும் சொல்கிறார் இயேசு.

மணல்மீது வீடு கட்டுவது மிக எளிதானது. வானம் தோண்டுவது முதல் கம்பி ஊன்றுவதுவரை வேலை எளிதாக முடியும். ஆனால் பாறைமீது வீடு கட்டுவது மிகவும் கடினமானது.

இயேசுவின் மலைப்பொழிவு எளிதாக வாழக்கூடிய ஒன்றன்று. அதை வாழ்வாக்க நிறைய துன்பங்களை சீடர் ஏற்க வேண்டும். ஆனால், அப்படி அந்தச் சீடர் ஏற்கத் தொடங்கியவுடன் அழகிய மாளிகை அங்கே உருவாகும்.


Monday, June 25, 2018

நாய்களுக்கு, பன்றிகளுக்கு

நாளைய (26 ஜூன் 2018) நற்செய்தி (மத் 7:6,12-14)

நாய்களுக்கு, பன்றிகளுக்கு

நாளைய நற்செய்தியை மேலோட்டாமாக வாசித்தால் நாய்களுக்கும், பன்றிகளுக்கும் எந்த வகையான உணவுகளை வைக்கக்கூடாது? என்று இயேசு சொல்வதுபோல அமைந்துள்ளது.

'தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்.
அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.'

'உங்கள் முத்துக்களைப் பன்றியின்முன் எறிய வேண்டாம்.
எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.'

இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. அதாவது, எதை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அவருக்குக் கொடுக்க வேண்டும். அல்லது ஒன்றின் மதிப்பை அறியாதவர்களுக்கு அதை நாம் கொடுக்கக் கூடாது. நாய்க்கு எலும்பும், பன்றிக்குக் கழிவும்.

நாய்களும், பன்றிகளும் தங்கள் செயலுக்குப் பொறுப்பானவை அல்ல. ஏனெனில் அவைகளால் இவற்றை மட்டும்தான் செய்ய முடியும்.

தூய்மையானது அசுத்தப்படுவதற்கும், முத்துக்கள் மிதிக்கப்படுவதற்கும் இவற்றைக் கொடுப்பவர்தான் பொறுப்பு.


Friday, June 22, 2018

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

நாளைய (23 ஜூன் 2018) நற்செய்தி (மத் 6:24-34)

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

முனிவர் ஒருவர் பிச்சை கேட்டு பணக்காரர் ஒருவரிடம் சென்றாராம்.

'எனக்கு சாப்பிட ஏதாவது கொடு!'

'இன்று போய் நாளை வாருங்கள். நாளை தருகிறேன்!'

'ஓ...நாளைக்கு வரைக்கு இருப்போம் என்று தெரியும் அளவிற்கு நீ பணக்காரானா?'

ஞானம் பெற்றார் அவர். தன்னிடம் உள்ள அனைத்தையும் முனிவருக்கு அள்ளிக் கொடுத்தாராம் அவர்.

நிற்க.

இரண்டு நாள்களுக்கு முன் என் நண்பர் என்னைப் பார்க்க வந்தார். அவர் வந்த நேரம் நான் ஒரு வருட திட்டமிடல் செய்துகொண்டிருந்தேன். அவர் ஒரு வருடம் செய்ய வேண்டியதையும் அவர் திட்டமிட்டார். திடீரென்று தன் திட்டமிட்ட பேப்பரை கிழித்த அவர், 'இது வேண்டாம்! ரொம்ப செயற்கையாக இருக்கிறது. இன்று மாலை நான் மதுரைக்குப் போகணும். அதுதான் என் திட்டம்!' அவ்வளவுதான்.

நிற்க.

'நாளைக்காக கவலைப்படாதீர்கள்' என்று இயேசு சொல்வதையும், நாம் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடங்கள் என திட்டமிடுவதையும் எப்படி சமரசம் செய்துகொள்வது?

'குருவியைப் பார், கிளியைப் பார், காட்டுமலர்களைப் பார்' என்று சொல்கிறார் இயேசு.

ஆனால், அவைகளுக்கு திட்டமிடல் தேவையில்லை.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் குருவி எப்படி கூடு கட்டியதோ அப்படியேதான் இன்றும் கட்டுகிறது.

ஒரே மாதிரி இருக்கத்தான் அது படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மனிதர்கள் அப்படியில்லை. அவர்களால் ஒவ்வொரு நொடியையும் தங்கள் விருப்பம்போல தெரிவு செய்து வாழ முடியும். தெரிவு மற்றும் கட்டின்மை வந்தவுடன் கவலை வந்துவிடுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நமக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. எல்லாவற்றையம் நாம் திட்டமிட்டாலும் திட்டமிடுதலையும் தாண்டிய செயல்கள் நடந்தேறிவிடுகின்றன. திட்டமிடாமல் இருந்துவிட்டாலும் பின்னால் வருந்துகின்ற சூழல் வந்துவிடுகிறது.

ஆக, திட்டமிடுவோம். ஆனால், கவலைகள் இல்லாமல் வாழ கட்டின்மையைத் தழுவிக்கொள்வோம்.

நாளைக்கு காலையில் நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான் என் திட்டம் என வைத்துக்கொள்வோம்.

இன்று மாலையிலிருந்து பனி பெய்கிறது, புகைமூட்டமாக இருக்கிறது, காற்று வேகமாக அடிக்கிறது. சிகரம் ஏற முடியவில்லை. திட்டமிட்டபடி நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். குற்றவுணர்வுகொள்ளவும் வேண்டாம். நாளை மறுநாள் வரை பார்ப்போம். தட்பவெப்ப நிலை சீராகவில்லையா. உடனே தரை திரும்புவோம். யாரிடம் போய் நான் என்னை நிரூபிக்க வேண்டும்.

பிறரிடம் நான் என்னையே நிரூபிக்க வேண்டும் என்று கவலைப்பட்டால் அது வேண்டாம். பிறருக்குத்தான் என்னைப் பற்றி அறிந்துகொள்ள நேரமில்லையே. ஏனெனில் அவரைப் பற்றியும் அறிந்துகொள்ள எனக்கு நேரமில்லையே!

ஆக, அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

இருந்தாலும், நாளைய நாள் தொல்லையில்லாமல் இருக்க நம்மால் எதை செய்ய முடிந்தாலும் அதை செய்யலாம். மனிதர்களால் தான் நாளையிலும், நேற்றிலும் வாழ முடியும். பறவைகள் மற்றும் பூக்களுக்கு அது சாத்தியமில்லை.



Thursday, June 21, 2018

யோசேபா என்னும் குட்டி ஏஞ்சல்

நாளைய (22 ஜூன் 2018) முதல் வாசகம் (2 அர 11:1-4,9-18,20)

யோசேபா என்னும் குட்டி ஏஞ்சல்

நாளைய நற்செய்தி வாசகம் 'விண்ணுலகில் செல்வம்' சேர்த்து வைத்தலைப் பற்றிப் பேசுவதாலும், மண்ணுலக செல்வமும் இங்கே நிலையில்லாமல், விண்ணுலக செல்வமும் இங்கே உறுதியில்லாமல் இருப்பதால் அதை விட்டுவிட்டு, நாளைய முதல் வாசகத்தை எடுப்போம்.

இசபெல், ஆகாசு என அடுத்தடுத்த அரச குடும்பத்தார் கொல்லப்பட, அரச குடும்பத்தைச் சார்ந்த அத்தலியா என்ற தாயே தன் மகன்கள் மற்றும் மகள்களைக் கொல்லத் துணிகிறார். ஆக, அரசு தனக்குள்ளேயிருந்து விழ ஆரம்பிக்கிறது.

இப்படி எல்லாரும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க அவ்வீட்டில் குட்டியாக வலம் வந்த பச்சைக் குழந்தை 'யோவாசை' யோசேபா என்னும் சித்தி தூக்கிக்கொண்டு போய் வேறிடத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாள். அப்படிக் காப்பாற்றியதோடல்லாமல் அவனுக்கு ஏழு வயது வந்தபோது அவனை அரசராக்கி அழகு பார்க்கிறாள். அந்தக் குழந்தையைக் கொல்ல குழந்தையின் அம்மாவே வரும்போது சித்தி தன் சாமர்த்தியத்தால் அந்த அநீத தாயைiயும் அவரைப் பின்பற்றுபவர்களையும் அழகிக்கின்றார்.

'யோவாசு ஏழு வயதில் அரசன் ஆனான்' - இப்படி நிறைவடைகிறது நாளைய முதல் வாசகம்.

அத்தலியா - யோசேபா

இந்த இரண்டு பெண்களை எடுத்துக்கொள்வோம்.

அத்தலியா தனக்கு வெளியே நடக்கின்ற நிகழ்வுகள்தாம் தன் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் காரணி என எண்ணி அனைத்தையும், அனைவரையும் அழிக்க முனைகின்றாள். ஆனால், அதுவே அவளது அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

ஆனால், யோசேபாவோ தானே வெளிப்புற காரணிகளால் அநீதிக்கு உட்படுத்தப்பட்டாலும், இப்போது இருக்கின்ற சூழலில் அனைவருக்கும் நலமானதை எப்படிச் செய்ய முடியும் என யோசித்து அதன்படி நடக்கிறார். இவ்வாறாக, தன் வாழ்க்கையை தனக்கு வெளியே இருப்பவர்களிடமும், இருப்பவைகளிடமும் விற்றுவிடாமல் தன் வாழ்க்கை தன் கையில் என பொறுப்புணர்வோடு செயலாற்றுகிறாள்.

இந்தக் குட்டி ஏஞ்சலால் உயிர்பிழைக்கிறார் குட்டி அரசர்.

Wednesday, June 20, 2018

அவர்கள் நினைக்கிறார்கள்!

நாளைய (21 ஜூன் 2018) நற்செய்தி (மத் 6:7-15)

கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்!

'எல்லாம் நினைப்புதான்,' 'நினைப்பு பொழப்ப கெடுக்கும்' என்று சொலவடைகள் நாம் கேட்டதுண்டு.

இப்படிப்பட்ட ஒரு நினைப்பைப் பற்றி இயேசு நாளைய நற்செய்தி வாசகத்தில் பேசுகின்றார்.

'நினைப்பு' என்பது 'நிறைவேறாத ஒரு சொற்கோர்வை.'

புறவினத்தார் எப்படிப்பட்ட ஒரு நினைப்பு வைத்திருக்கிறார்களாம்?

'மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் செபம் கேட்கப்படும்'

ஆக, சொற்களுக்கும் செபத்திற்கும் தொடர்பில்லை என்கிறார் இயேசு.

இயேசுவின் செபத்திலும் நிறைய சொற்கள் இருக்கின்றனவே? என்று நாம் சொல்லலாம்.

ஆனால், இங்கே அவைகள் சொற்களாகத் தெரிந்தாலும் அவைகள் எல்லாம் செயல்களே.

ஆக, சுருங்கச் சொல்லி நிறையச் செய்தலே செபம்.

இல்லையா?

Tuesday, June 19, 2018

வலக்கை செய்வது இடக்கைக்கு

நாளைய (20 ஜூன் 2018) நற்செய்தி (மத் 6:1-6,16-18)

வலக்கை செய்வது இடக்கைக்கு

'வலது கை' 'இடது கை' வைத்து விவிலியத்தில் சில உருவகங்கள் கையாளப்படுகின்றன. யோனா நூலில் நினிவே நகர் மக்களைப் பற்றிப் பேசும்போது, 'அவர்கள் வலக்கை எது இடக்கை எது என தெரியாதவர்கள்' என குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

ஆக, கை உருவகம் வரும்போதெல்லாம் 'தெரிதல்' ('அறிவு') தொடர்பான பொருள்தான் அங்கே வருகிறது.

மற்றவர்களுக்கு தர்மம் செய்யும்போது வலக்கை செய்வது இடக்கைக்கு தெரிய வேண்டாம் என்கிறார் இயேசு.

நெருக்கமான கைகளுக்கே தெரியக்கூடாது என்று இங்கே சொல்வது எதைக் குறிக்கிறது?

கொஞ்சம்கூட வெளிவேடத்தனத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதே இயேசுவின் போதனையாக இருக்கிறது.


Monday, June 18, 2018

மற்றவருக்கும் மேலாக

நாளைய (19 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:43-48)

மற்றவருக்கும் மேலாக

'அடுத்திருப்பவருக்கு அன்பு பகைவருக்கு வெறுப்பு' என்ற பழைய கட்டளையை புரட்டிப்போட்டு, தன் சீடர்கள், 'பகைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்' என்று போதிக்கும் இயேசு தொடர்ந்து, 'நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டுமே வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாக செய்துவிடுவதென்ன?' என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

மேலாண்மையியலில், 'வாக்கிங் தெ எக்ஸ்ட்ரா மைல்' என்ற ஒரு கருத்தியில் உண்டு.

மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது இக்கருத்தியல்:

முதல் வகை மனிதர்கள் தங்கள் எல்கை வரை கூட நடக்க முயற்சிக்காதவர்கள். இவ்வகை மனிதர்கள் தங்கள் அன்பை தங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்வார்கள். அடுத்தவர்களை அன்பு செய்ய மாட்டார்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள் தங்கள் எல்கை வரை நடந்து எல்கையைத் தொட்ட திருப்தி கொள்பவர்கள். இவர்கள் தங்களையும் அன்பு செய்வார்கள். தங்களை அன்பு செய்பவர்களையும் அன்பு செய்வார்கள். அன்பிற்கு அன்பு. பகைக்குப் பகை.

மூன்றாம் வகை மனிதர்கள் தங்கள் எல்கையைத் தாண்டிச் செல்பவர்கள். இவர்கள் தங்களையும் அன்பு செய்து, தங்களை அன்பு செய்பவர்களையும் அன்பு செய்து, இறுதியில் எல்லாரையும் தங்கள் அன்பால் தங்களோடு இணைத்துக்கொள்ள முயல்வார்கள்.

இந்த மூன்றாம் வகை மனிதர்களே 'எக்ஸ்ட்ரா மைல்கல் நடப்பவர்கள்'

இவர்களால் இது எப்படி முடியும்?

தங்கள் வரையறை, தங்கள் வாழ்க்கையை தாங்கள்தாம் முடிவுசெய்யவேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் இவர்கள்.

'வானகத் தந்தையின் நிறைவை' அளவுகோலாக சீடர்கள் வைத்துக்கொண்டால் அவர்கள் தங்கள் எல்லைகளை எளிதாகக் கடந்துவிடுவர்.

ஆக, இன்று நான் அடுத்தவரைப் போல இருப்பதில் மட்டும் நிறைவு கொள்கிறேனா? அல்லது இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அடி எடுத்து வாழ முயல்கிறேனா?


Sunday, June 17, 2018

தீமை செய்பவரை

நாளைய (18 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:38-42)

தீமை செய்பவரை

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது.

'கண்ணுக்குக் கண்,' 'பல்லுக்குப் பல்' என்ற பழைய கட்டளையை புரட்டிப்போடும் இயேசு, 'தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்'

இங்கே 'ஆன்டிஸ்டேமி' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'ஹிஸ்டேமி' என்றால் 'நிற்றல்' என்பதும், 'ஆன்டி' என்றால் 'எதிர்த்து' அல்லது 'நேருக்கு நேர்' என்றும் பொருள்.

எனக்கு முன் இருப்பவர் ஒரு வினையாற்ற, நான் நேருக்கு நேர் நின்று மற்றொரு வினை ஆற்றினால் அதற்குப் பெயர் எதிர்வினை ஆற்றுதல்.

எதிர்வினை மீண்டும் மற்றொரு எதிர்வினையைத்தான் வருவிக்கும்.

ஆக, எதிர்வினை ஆற்றுதலை விடுத்து நேர்முகமாக வினையாற்ற அழைக்கின்றார் இயேசு.

நேர்முக வினையாற்ற வேண்டும் என்றால் நாம் அடுத்தவருக்கு முன் நேருக்கு நேராக நிற்கக் கூடாது. மாறாக, அவரை விட சற்று மேலே அல்லது உயர்ந்த நிலையில் நிற்க வேண்டும். தொடர்ந்து இயேசு தரும் 'கன்னம்,' 'மேலாடை,' 'மைல்கல்' என எல்லா எடுத்துக்காட்டுக்களிலும் 'எதிர்வினை' மறைந்து 'நேர்முக வினை' முன்நிற்கிறது.

எதிர்வினை ஆற்றும்போது நம் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் நம் முன்னால் நிற்கும் அந்த எதிராளிக்கு விற்றுவிடுகிறோம். நான் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை எனக்கு முன் நிற்கும் அந்த எதிராளி தீர்மானிக்குமுhறு விட்டுவிடுகிறோம்.

நேர்முக வினை ஆற்ற வேண்டுமெனில் முதலில் பொறுமை வேண்டும். அதாவது, அடித்தவுடன் திரும்ப அடித்தால் அங்கே நாம் பொறுமை இல்லாமல் இருக்கின்றோம். 'பொறுமையோடு' இணைந்து நிற்பது 'அறிவு'. 'அவன் செஞ்சான்னா நீயும் செய்வியா. உனக்கு அறிவு எங்க போச்சு' என்று என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாம் நான் அறிவை பயன்படுத்தத் தவறியிருக்கிறேன் என நான் பின்னால் நினைத்ததுண்டு. 'பொறுமை,' 'அறிவு' ஆகியவற்றோடு சேர்ந்து கொஞ்சம் 'சொரணைக் குறைவு' வேண்டும். சூடு, சொரண இருந்து என்ன ஆகுப்போகுது? நடப்பது நடந்துதான் தீரும். அவனை திரும்ப அடித்து என் கை ஏன் வலிக்க வேண்டும்? அவன் அடித்ததோடு விட்டால் எனக்கு கன்னம் மட்டும்தான் வலிக்கும். அவனைத் திருப்பி அடித்தால் எனக்கு கையும் அல்லவா வலிக்கும்!


Friday, June 15, 2018

வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ

நாளைய (16 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:33-37)

வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ

நாளை நம் இசுலாமிய சகோதர, சகோதரிகள் ரமலான் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இசுலாமில் எனக்கு பிடித்த பலவற்றில் ஒன்று அவர்களின் மசூதி அறிவிப்புக்கள். இன்று மாலை 6 மணிக்கு அவர்களின் மசூதியில் ஒரு சிறப்பு நிகழ்வு நடக்கிறது என வைத்துக்கொள்வோம். மாலை 5 மணிக்கு அதைப்பற்றி அறிவிப்பு செய்யும்போது, 'இன்ஸா அல்லா - கடவுளுக்குத் திருவுளமானால்' என்று தொடங்கி அறிவிப்பார்கள். 1 மணி நேரத்திற்குள் என்ன ஆகிவிடப் போகிறது? என நான் நினைத்ததுண்டு.

ஆனால், இதையொட்டிய ஒரு பகுதி யாக்கோபு எழுதிய திருமடலிலும் உள்ளது.

'நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப் பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே, அவ்வாறு சொல்லாமல், 'ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம். இன்னின்ன செய்வோம்' என்று சொல்வதே முறை' (யாக் 4:15) என்கிறார் யாக்கோபு.

அதாவது, நம்மால் இயலாதது எதையும் நம்மால் இயலும் என்பது போல பேசக்கூடாது.

நம்மையும் தாண்டிய, நம் ஆற்றலையும், வரையறையையும் தாண்டிய நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. ஆனால் பல நேரங்களில் அவற்றை நாம் கன்ட்ரோல் செய்ய நினைக்கும்போது நாம் விரக்திக்கு ஆளாகிறோம். அவற்றை கன்ட்ரோல் செய்யலாம் என நாம் நமக்கு நாமே அல்லது நாம் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிடுகின்றோம். பின் அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றோம்.

'உங்கள் தலைமுடியை வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ முடியாது' எனச் சொல்லும் இயேசு, 'ஆம்' என்றால் 'ஆம்' என்றும், 'இல்லை' என்றால் 'இல்லை' என்றும் சொல்லுங்கள் எனச் சொல்கிறார் இயேசு.

ஆக, தேவையில்லாமல் நான் எனக்கு நானே வாக்குறுதி கொடுப்பதும், மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதும் தவறு. இல்லையா,

நாளைய நற்செய்தி நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது:

அ. எனக்கு நானே, நான் மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. என்னால் மாற்ற இயலாததை மாற்ற முடியாது.

ஆ. என் கன்ட்ரோல் வரையறையைத் தாண்டி இருப்பதைப் பற்றி நான் கவலைப்படுதல் கூடாது.

Thursday, June 14, 2018

இச்சையான பார்வை

நாளைய (15 ஜூன் 2018) நற்செய்தி (மத்தேயு 5:27-32)

இச்சையான பார்வை

கடந்த வாரம் தெ பெர்சனஸ் எம்பிஏ என்ற மேலாண்மையியல் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் 'மோனோஐடியலிஸம்' என்ற ஒன்றைப் பற்றிப் பேசுகின்றார். அதாவது, நாம் செய்ய வேண்டிய ஏதாவது ஒன்றை மூளைக்குச் சொல்லிவிட்டால் மூளை அதை ஒட்டியதை அப்படியே செய்யும்.

உதாரணமாக, சாலையில் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நூற்றுக்கணக்கான கார்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் கூர்ந்து பார்க்கிறோம். சிலவற்றை பொதுவாக பார்க்கிறோம். ஆனால், 'மாருதி ஆல்டோ 800- கிரே கலர்' கார் வாங்க வேண்டும் என இந்த நாள்களில் மனம் சிந்தித்துக்கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அடுத்த நாள் சாலையில் செல்லும்போது நம் கண்களுக்கு 'மாருதி ஆல்டோ 800 - கிரே கலர்' கார்கள் நிறைய தென்படும். எல்லா நாளும் எல்லா கார்களும் ஓடுகின்றன. ஆனால் நம் மூளைக்கு நாம் கொடுக்கின்ற கட்டளையை வைத்து அது நம் பார்வையைச் சுருக்கி விடுகிறது.

நம் உணர்வு உறுப்புக்களுக்கும், மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நாம் பார்ப்பவை, கேட்பவை, தொடுபவை, நுகர்பவை, ருசிப்பவை அனைத்தையும் மூளை பிராசஸ் செய்கிறது. அதே போல நாம் எதைப் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், தொட வேண்டும், நுகர வேண்டும், ருசிக்க வேண்டும் என மூளை நம் உறுப்புக்களுக்குக் கட்டளையிடுகிறது.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விபச்சாரம் செய்தல் பற்றிய போதனையில் 'இச்சையான பார்வையே' விபச்சாரம் என்கிறார். அதாவது, ஒருவர் ஒரு பெண்ணை வன்முறையாக நெருங்குகின்றார் என்றால், அவர் உடல் அளவில் நெருங்குவதற்கு முன் தன் மூளையில் அவரை நெருங்கிவிட்டார் என்பதுதான் இயேசுவின் வாதம். ஆக, வெளியில் உடல் அளவில் நடக்கும் நிகழ்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், மூளையில் நடக்கும் முதல் நிகழ்வையே கட்டுப்படுத்திவிடுங்கள் என்கிறார் இயேசு. இவ்வாறாக, நோய்க்கான அறிகுறியைக் குணமாக்குவதைவிட நோயின் வேரைக் குணமாக்க அழைப்புவிடுக்கின்றார் இயேசு.

நம் கண்கள் - நம் மூளைக்கு தகவல்களைக் கொண்டுவரும் முக்கியமான உறுப்பு இது. ஆக, இதன் வழியாக நாம் எதைப் பார்க்கிறோம் என்பதும், நம் மூளை எதைப் பார்க்கச் சொல்கிறது என்பதைப் பற்றியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையா?


Wednesday, June 13, 2018

கடைசிக் காசு

நாளைய (14 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:20-26)

கடைசிக் காசு

'கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்கிறார் இயேசு.

'காசு' என்பது கிரேக்க மூலத்தில் 'குவாத்ராடெஸ்' (அதாவது 64ல் 1 என்று கொடுக்கப்பட்டுள்ளது). நேற்று திருச்சி சிறையில் இருந்து 10 கைதிகள் நன்னடத்தைக்காக விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி வந்தது. அதாவது ஒருவரின் நன்னடத்தை சட்டத்தின் பார்வையில் அவருக்கு விடுதலையைப் பெற்று தருகிறது. அவர் விடுதலை பெறுவது மட்டுமல்லாமல் அவர் செலுத்த வேண்டிய பிணையிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றார்.

அதாவது, எதிரியோடு சமரசம் செய்து கொள்ளாமல் விட்டால் அவர் நம்மை நடுவரிடம் கையளிக்க கடைசிக் காசு மட்டும் நாம் விடுதலை செய்யப்படமாட்டோம் என்கிறார்.

சமரசம் இரக்கத்தைவிட மேலானது என்கிறார் இயேசு.

சட்டம் யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை. அது 64ல் 1 என்ற அளவில் மிக சிறிய அளவாக இருந்தால் கூட. ஆனால், பிரச்சினையை வெளியே சமரசம் செய்துவிட்டால் நாம் பிரச்சினையிலிருந்து தப்பிவிடலாம். இதற்குத் தேவை கொஞ்சம் கவனமும், நிறைய வேகமும்.

வழியிலேயே எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டும்

ஒருவேளை எதிரி காலில் விழச் சொன்னால்?
அல்லது வழியில் நம்மை அடித்தால்?
அல்லது நம்மை அவமானப்படுத்தினால்?

எல்லாவற்றையும் பொறுத்து சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சமரசம் செய்யாமல்போhனால் வரும் விளைவு இதைவிட கொடுமையாக இருக்கும்.

இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

அந்தந்த நேரத்திற்கு உரியதை அந்தந்த நேரத்திற்குள் செய்துவிட்டால் நாம் நாளை நடக்கவிருப்பதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

நம்ம ஊர் வழக்கப்படி புரிந்துகொள்ளவேண்டுமென்றால்,

நாம் சுமக்கும் கடைசிக் காசு நாம் இறந்தபின் நம் நெற்றியில் வைக்கப்படும் காசுதான்.

எதிரியுடன் சமரசம் செய்துகொள்ளாதபோது அது நம்மை அழித்துவிடும் அல்லது கடைசிக்காசு நிலைக்குக் கொண்டுவந்துவிடும். இல்லையா?

Tuesday, June 12, 2018

சிறியவர் பெரியவர்

நாளைய (13 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:17-19)

சிறியவர் பெரியவர்

'யார் பெரியவர்?' என்ற கேள்வி நற்செய்தி நூல்களில் திருத்தூதர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டுக்கொள்ளும் கேள்வியாக இருந்தாலும், நாளைய நற்செய்தி வாசகத்தில் பெரியவர் யார்? சிறியவர் யார்? என்ற வரையறையைத் தருகின்றார் இயேசு.

ரொம்ப எளிதான புரிதல்தான்.

கட்டளைகளில் மிகச் சிறியதை மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் சிறியவர்.
கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்து அதை கற்பிக்கிறவர் பெரியவர்.

ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளிதான் இயேசுவைப் பொறுத்தவரையில் 'சிறியவர்' 'பெரியவர்' என்ற அடையாளத்தைத் தருகின்றது.

இன்றைக்கு பணம், பதவி, படிப்பு, பின்புலம் ஆகியவற்றை வைத்துத்தான் பெரியவர்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றார்கள். ஆனால், இவையெல்லாம் தாண்டிய ஒரு அடையாளம்தான் இயேசு முன்வைப்பது.

இயேசுவின் சமகாலத்தில் நிறைய போதகர்களும், மறைநூல் அறிஞர்களும் தாங்கள் போதிப்பது ஒன்று, செய்வது மற்றொன்று என வாழ்ந்தனர். இந்த நிலையைத்தான் இயேசு கடிந்துகொள்கிறார்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளைக்கும் நாம் செய்கின்ற செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்தால் நமக்கு நாமே பெரியவர் ஆகிவிடலாம்.

எப்படி?

நாளை காலை 5:30 மணிக்கு எழ வேண்டும் - என நான் எனக்குச் சொல்கிறேன். அதே போல காலையில் எழுந்துவிடுகிறேன். என் சொல்லுக்கும், செயலுக்கும் நெருக்கம் வந்துவிட்டது. ஆக, என் மனது என்னை அறியாமல் தன்மதிப்பு கொள்ளத் தொடங்குகிறது. 'என்னால் முடியும்!' என்று நேர்முகமான ஆற்றலை எனக்குத் தர ஆரம்பிக்கிறது.

ஆனால் நான் 5:30 என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு எழுந்தால் என் மனம் என் வார்த்தைகளை நம்ப மறுக்க ஆரம்பிக்கிறது. 'சின்ன விஷயத்தையே உன்னால் செய்ய முடியவில்லையே!' என்று என் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது.

ஆக, சொல்லும் செயலும் இணைந்து சென்றால் அடுத்தவர் முன்னிலையில் நாம் சிறியவர்-பெரியவர் என்றல்ல. நமக்கு நாமே பெரியவர் ஆக முடியும்.

Monday, June 11, 2018

மலைமேல் இருக்கும் ஊர்

நாளைய (12 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:13-16)

'மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது!'

கொடைக்கானல் மலையில் தங்கியிருந்து இரவில் சுற்றிலும் பார்த்தால் நிறைய விளக்குகள் எரிவது தெரியும். நின்று எரியும் விளக்குகள். நகர்ந்து கொண்டே இருக்கும் வாகனங்களின் விளக்குகள். ஆலய எல்.இ.டிக்கள், ஹோட்டல் விளம்பரங்கள் என நிறைய தெரிவது வானத்து நட்சத்திரங்கள் கொஞ்சம் இறங்கி வந்தது போல இருக்கும்.

தமிழில் 'உள்ளங்கை நெல்லிக்கனி,' 'வெள்ளிடை மலை,' 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு' என்ற சொல்லாடல்கள் உள்ளன.

அதாவது, நேருக்கு நேர் தெரிகின்ற ஒன்றை மறைக்க முடியாது.

இப்படித்தான் இருக்க வேண்டும் சீடரின் குணம் என்கிறார் இயேசு.

மற்றவரால் மறைத்துவிட முடியாத அளவிற்கு நம் குணம் உயர்ந்துவிட்டால் நாமும் ஒளிவீசலாம். இல்லையா?

'துன்பத்தால் மனஉறுதியும்,
மனஉறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்' (உரோ 5:3) என்ற பவுலின் வார்த்தைகள் இன்றைய காலை செபத்தில் வந்தன.

'தகைமை' என்றால் 'கேரக்டர்' அல்லது 'நடத்தை' என்று இன்று நான் கண்டுபிடித்தேன்.

ஆக, மனஉறுதிதான் என் நடத்தையை உருவாக்குகிறது.

ஒளியாக, உப்பாக இருப்பதும் ஓர்நாள் நிகழ்வு அல்ல. அது என் தொடர்நடத்தையால் வரும் பயன்.

Sunday, June 10, 2018

பர்னபா

நாளை திருத்தூதர் பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'பர்னபா' என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம். அரமேயத்தில் 'பர் நப்யா' என்று பிரித்தால் 'இறைவாக்கினரின் மகன்' அல்லது 'இறைவாக்கின் மகன்' என்றும், கிரேக்கத்தில் 'ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்' எனப் பிரித்தால் 'ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்' என்றும் மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). 'இறைவாக்கும்' 'ஆறுதல் தருவதும்' சேர்ந்தே செல்லும் என்பது பவுலின் கூற்று (காண். 1 கொரி 14:3).

சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் 'பர்னபா' என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.

சைப்பிரசு நாட்டின் பாதுகாவலராக இன்று வரை அவர் கொண்டாடப்படுகிறார்.

திப 9:26-27ல் இவரின் முக்கியமான பண்பு வெளிப்படுகிறது:

'பவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.'

பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் சவால் விடுகிறது:

1. இணைப்புக்கோடு

பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அல்லது ஒருவரை சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நம் உறவுநிலைகளில் நாம் இணைப்புக்கோடாக இருத்தல் அவசியம் என்பதை நாம் அறிவோம். இதை அருள்பணி வாழ்விற்குப் பொருத்திப் பார்த்தால், ஓர் அருள்பணியாளர் என்பவர் இறைவனுக்கும், மக்களுக்கும் உள்ள ஓர் இணைப்புக்கோடு. இவர் இந்த இருவரையும் முழுமையாக அறிந்தால்தான் தன் பணியைச் சரியாகச் செய்ய முடியும்.

2. நம்பிக்கை

'ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்' என்பதை நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். 'அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?' என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

3. 'அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்.'

பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். 'உன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்' என்று சொல்லிக் காட்டவோ, அல்லது 'அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்' என்று பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப் பார்க்கின்றார். இது அவரின் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. மற்ற திருத்தூதர்களோடு சேர்ந்து கொண்டு இவரும் பவுலை நிராகரித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. என்னே இவரின் தாராள உள்ளம்!

பர்னபா - நம் ஆறுதல்!

Friday, June 8, 2018

அன்னை மரியின் அமல இதயம்

நாளைய (9 ஜூன் 2018) நற்செய்தி (லூக் 2:41-52)

அன்னை மரியின் அமல இதயம்

இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை 'அன்னை மரியின் அமல இதயம்' கொண்டாடப்படுகிறது.

'உம் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும்' என்ற சிமியோனின் வார்த்தைகள்தாம் மரியாளின் அமல இதயத் திருநாள் கொண்டாட்டத்தின் பின்புலம். இயேசுவின் இதயத்தை ஈட்டி ஒன்று ஊடுருவியது போல அன்னையின் இதயத்தை வாள் ஊடுருவுகிறது.

நாளைய நற்செய்தி வாசகத்தில் சிறுவன் இயேசு எருசலேமில் காணாமல் போய் மீண்டும் கிடைக்கும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

'மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?' - இதுதான் மரியாள் இயேசுவைப் பார்த்த கேள்வி.

'நான் இப்படித்தான்மா செய்ய முடியும். வேற எப்படிச் செய்ய முடியும்?' - என்பதுதான் இயேசுவின் மனதில் எழுந்த விடையாக இருக்கலாம்.

'வானதூதர் உனக்கு மங்கள வார்த்தை அறிவித்த போது நீ ஏன் இப்படிச் செய்தாய்?' என்று தன் தாயைப் பார்த்தும்,

'வானதூதர் உனக்கு கனவில் அறிவுறுத்தியபோது நீ ஏன் இப்படிச் செய்தாய்?' என்று தன் தந்தையைப் பார்த்தும், சொல்ல நினைத்திருப்பார்.

ஆனால், 'நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்' என சுருக்கமாக விடை தருகின்றார்.

... ...
... ...

'அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'

அன்னை மரியின் அமல இதயம் ஒரே நேரத்தில் கேள்வியும் கேட்டது, மௌனமாக உள்ளத்திலும் இருத்தியது.

கேள்வியும், மௌனமும் இதயத்தின் இரண்டு பகுதிகள்.

இரண்டு பகுதிகளில் இரண்டாம் பகுதியை நோக்கி நகர்வதே நம் பயணம். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் கேள்விகளை விட மௌனமே விடையாகிறது.

Thursday, June 7, 2018

திருஇருதய பெருவிழா

நாளைய (8 ஜூன் 2018) நற்செய்தி (யோவா 19:31-37)

திருஇருதய பெருவிழா

நாளை இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஇருதயப் பெருவிழா அருள்பணியாளர்களின் அர்ப்பண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

'ஆனால் படைவீரர் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.' என நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.

விவிலியத்தில் இரண்டு பேருடைய விலா திறக்கப்படுகிறது.

படைப்பின் தலைமகனாகிய முதல் ஆதாம்.

படைப்பின் பிதாமகனாகிய இரண்டாம் ஆதாம் இயேசு.

முதல் ஆதாம் ஆழ்ந்து தூங்குகின்றார்.
இரண்டாம் ஆதாம் இறந்து தொங்குகின்றார்.

முதல் ஆதாமின் விலாவைத் திறப்பவர் ஆண்டவராகிய கடவுள்.
இரண்டாம் ஆதாமின் விலாவைத் திறப்பவர் படைவீரர்.

முதல் ஆதாமின் விலாவிலிருந்து எலும்பு எடுக்கப்பட்டது.
இரண்டாம் ஆதாமின் விலாவிலிருந்து இரத்தமும், தண்ணீரும் எடுக்கப்படுகின்றன.

எலும்பு என்பது நம் உடலின் திடப்பொருள்.
தண்ணீர் என்பது நம் உடலின் திரவப்பொருள்.

இரத்தம் என்பது திடப்பொருளின் மேல் பரவிக்கிடக்கும் நாளங்களில் ஓடும் திரவப்பொருள்.

திடமும், திரவமும் கலந்தால்தான் மனிதம் பிறக்க முடியும்.

இதையேதான் பட்டினத்தாரும்,

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

என எழுதுகின்றார்.

அதாவது, இங்கே ஆணிடம் ஊறும் விந்து மற்றும் பெண்ணிடம் ஊறும் சுரோணிதம் கலந்து குழந்தை உருவாகிறது என்கிறார். இவரின் கூற்றுப்படி விந்து மனித உடலின் திடப்பகுதிக்கும், சுரோணிதம் மனித உடலின் திரவிப்பகுதிக்கும் காரணமாக இருக்கிறது.
படைப்பில் இதுவரை மேலோங்கி இருந்த எலும்பின்மேல் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் தெளிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன? படைப்பு உயிர் பெறுகிறது.

எசேக்கியேல் 37:1-14ல் நாம் பள்ளத்தாக்கில் நிறைந்து கிடந்த உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

படைப்பு முழுவதும் உலர்ந்து எலும்புகள். படைப்பின்மேல் விழும் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் உலர்ந்தவற்றிற்கு ஈரம் தருகிறது.

திருஇருதயப் பெருநாளில் காய்ந்துபோன, உலர்ந்துபோன நம் உடலை, உள்ளத்தை, மனதை இறைவன் தன் இரத்தத்தால், தண்ணீரால் ஈரமாக்க அவரிடம் அவற்றை கொண்டுவருவோம்.

இது முதல் பொருள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர் திராட்சை இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன், திருக்கிண்ணத்தின் இரசத்தோடு ஓரிரு தண்ணீர்த் துளிகளைச் சேர்க்கின்றார். அப்படி அவர் சேர்க்கும்போது சொல்லப்படும் செபம் இதுதான்:

'இந்த தண்ணீர் மற்றும் இரசத்தின் மறைபொருளால்
நாங்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையில் பங்குபெறுவோமாக.
அவரே தாழ்வுற்று எங்களின் மனிதத்தன்மையில் பங்கேற்றார்.'

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் 'இரத்தம்,' 'தண்ணீர்' என்ற இரண்டையும் கலந்து இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். 'இரத்தம்' அல்லது 'இரசம்' இயேசுவின் இறைத்தன்மையையும், 'தண்ணீர்' நம் ஒவ்வொருவரின் மனிதத்தன்மையையும் குறிக்கிறது. கிண்ணத்தில் ஊற்றப்பட்டவுடன் இரண்டும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன.

நம்மிடம் பிரிக்க முடியாதபடி இறை மற்றும் மனித இயல்புகள் இருக்கின்றன. இயேசு தன்னிடமும் இவை இருந்தன என்பதை தன் விலாவைத் திறந்து காட்டிவிட்டார்.

ஆக, நம்மிடம் இருக்கும் இந்த இரண்டு இயல்புகளும் ஒருங்குநிலையில் இயங்க இன்றைய நாளில் செபிக்கலாம்.

மூன்றாவதாக,

இன்று நம் எல்லா இதயங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுப்போம். இதயம் சார்ந்த நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதயத்தின் இருப்பை நாம் அதன் நோயின்போதுதான் நாம் உணர்கிறோம். ஆனால், நம் இயக்கத்திற்குக் காரணமான இந்த இதயத்தைப் பாதுகாக்க நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நல்ல உணர்வுகள் அவசியம் என்பதை இன்று நாம் நன்றாக உணர்கிறோம். நம் இதயங்களைப் பேணிக்காக்க இன்று உறுதி எடுக்கலாம்.


இயேசுவின் திருஇருதயமே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்!


Wednesday, June 6, 2018

முதன்மையான கட்டளை

நாளைய (7 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 12:28-34)

முதன்மையான கட்டளை

ஏரோதியர், சதுசேயரைத் தொடர்ந்து மறைநூல் அறிஞரும் இயேசுவைச் சோதிக்கின்றனர்.

'எல்லாவற்றிலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்கின்றனர்.

இயேசு முதன்மையான கட்டளையாகிய 'இறையன்பு' கட்டளையைச் சொன்னதோடு, பிறரன்புக் கட்டளையையும் அதே நிலையில் வைக்கின்றார்.

இறையன்பு நாம் ஊன்றியிருக்கும் வேர் என்றால், பிறரன்பு நாம் பரப்பும் கிளை.

இறைவனிடமிருந்து நாம் பெறுகிறோம். அதை பிறருக்கு கொடுக்கிறோம். பெறுதல் இல்லாமல் கொடுத்தல் சாத்தியமில்லை. பெறுதல் மட்டும் இருந்தால் தேங்கிவிடுவோம். கொடுத்தல் மட்டுமே இருந்தால் வறண்டுவிடுவோம்.

ஆக, முதன்மையானது என்பது பெறுதலையும், கொடுத்தலையும் சமன்செய்து பழகுவது.

Tuesday, June 5, 2018

சகோதரர் எழுவர்

நாளைய (6 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 12:18-27)

சகோதரர் எழுவர்

இத்தாலிய மொழியில் 'இ ஸெத்தெ ஃப்ரலெ;லி' (சகோதரர் எழுவர்) என்ற காமெடி மேடை நாடகம் ஒன்று உண்டு. ஒரு பெண். அவரை மூத்த சகோதரர் மணக்கிறார். அவர் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். பின் ஒருவர் பின் ஒருவராக அந்தப் பெண்ணை மணக்கின்றனர். முதலாமவர் அந்தப் பெண்ணை மணக்கும்போது அவருக்கு வயது 20. கணவருக்கு வயது 25. ஏழாம் நபர் மணக்கும்போது அவருக்கு வயது 55. வயது வித்தியாசம், பாலின வித்தியாசம், ஏற்கனவே இருந்த உறவு முறை மாற்றம், ஒவ்வொருவரும் அந்தப் பெண்ணை இம்ப்ரஸ் செய்யும் விதம், இந்த திருமணத்தின்மேல் சமூகத்தின் பார்வை, அவர்களுக்குள் புரிந்துகொள்ளாமை - இப்படி பல விடயங்களை நகைச்சுவையாகச் சொல்கிறது அந்த நாடகம். ஆனால், இவ்வுலக வாழ்வோடு அந்த நாடகம் முடிந்துவிடுகிறது.

இன்று நம் சமூகத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ளலாம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் இயேசுவைச் சோதிக்க வருகிறார்கள். இவர்கள் அறிவாளிகள். நிறைய படித்தவர்கள். ஆகையால் இவ்வுலகம் சாராததை விடுத்து மறுவுலகு சார்ந்த ஒன்றை கேட்கிறார்கள். இவர்கள் உயிர்ப்பின்மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள். இவர்கள் பணக்காரர்கள். அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் உயிர்ப்பு பற்றியும், மறுவாழ்வு பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு இவ்வுலகமே மோட்சம்தானே. மறுவுலகம், உயிர்ப்பு எல்லாம் மிடில் கிளாஸ் வகுப்புகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை.

'உயிர்ப்பு இருக்கா? இல்லையா?' என்று நேரடியாகக் கேட்காமல், அப்படி உயிர்ப்பு என்ற ஒன்று இருந்தால் அது எவ்வளவு நகைப்புள்ளதாக இருக்கும்? என்ற எண்ணத்தில் 'ஒரு பெண் - ஏழு கணவர்கள்' எடுத்துக்காட்டைச் சொல்கின்றனர்.

'உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது' - என ஒரே வார்த்தையில் பதிலை முடிக்கின்றார் இயேசு. திருமணம் என்பது கடவுள் மனிதனின் தனிமைக்குத் தந்த மருந்து. அப்படித்தான் விவிலியம் சொல்கிறது. உயிர்ப்புக்குப் பின் மனிதர்கள் தனிமை உணர்வை அடைவதில்லை. அவர்கள் 'விண்ணகத் தூதரைப் போல' இருப்பர். தூதர்கள் உணர்வுகளைக் கடந்தவர்கள். ஆக, அவர்களுக்குத் திருமணம் தேவையில்லை.

மேலும், இறந்தவர்கள் கடவுளில், கடவுளுக்காக, கடவுளோடு என மாறிவிடுகிறார்கள்.

இந்த நிலை இறப்பிற்குப் பின்தான் சாத்தியமா?

இல்லை.

இங்கேயும் நாம் உணர்வுகளைக் கடந்து, அனைவரையும் கடவுளில், கடவுளுக்காக, கடவுளோடு அன்பு செய்ய முடியும் என நினைவூட்டுகிறது நாளைய முதல் வாசகம் (காண். 2 திமொ 1:1-3, 6-12). எப்படி?

முன்பின் தெரியாத திமொத்தேயுவை, 'என் அன்பார்ந்த பிள்ளை' என பவுலால் எப்படி அழைக்க முடிந்தது? அப்படித்தான்.


Monday, June 4, 2018

உருவமும் எழுத்தும்

நாளைய (05 ஜூன் 2018) நற்செய்தி (மாற்கு 12:13-17)

உருவமும் எழுத்தும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற நான்காம் ஆண்டு நிறைவின் நினைவாக வெளியிடப்பட்ட நாணயம் ஒன்றை நேற்றுப் பார்த்தேன்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இரக்கத்தின் இறைவன் மனிதரைக் கட்டித் தழுவுவது போலவும், மறு பக்கத்தில் திருத்தந்தை அவர்களின் ஆயர்பணி இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் இந்த நாணயத்தில் இல்லை.

இந்த நாணயத்தை வைத்திருப்பதால் என்ன பயன்? அல்லது இந்த நாணயத்தின் பொருள் என்ன? அல்லது இந்த நாணயத்தை ஏன் சேகரிக்கிறார்கள்? அல்லது ஏன் வெளியிடுகிறார்கள்?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தந்தை ஆளுகைக்கு இந்த நாணயம் சான்று.

எந்த நாணயமும் சொல்வது யாருடைய ஆளுகை என்பதைத்தான்.

நாணயம் ஒன்றைக் காட்டி இயேசுவின் 'நாணயத்தை' சோதிக்க வருகிறார்கள் 'ஏரோதியர்கள்.' ஏரோதியர்கள் இரட்டை உள்ளம் கொண்டவர்கள். அதாவது, தங்களை ஆள்வதற்கு தங்களின் மன்னன் ஏரோதுதான் தகுதியானவன் என்பது ஒரு உள்ளம். இருந்தாலும் அந்நிய நாட்டு அரசனின் உருவம் பதித்த நாணயத்தை வைத்திருப்பது இரண்டாவது உள்ளம்.

தன் இனத்து இரத்தம்தான் தன்னை ஆள வேண்டும் என்றால் ஏரோதியர்கள் யூதனான ஏரோதின் உருவத்தையோ அல்லது யூதக் கடவுளான யாவே இறைவனின் உருவத்தையோ கொண்ட நாணயத்தை வைத்திருக்க வேண்டும். இவர்கள் தாங்களே தங்கள் கொள்கைக்கு பிரமாணிக்கமாக இல்லாமல் இயேசுவின் பிரமாணிக்கத்தை சோதிக்க வருகின்றனர்.

இவர்களின் இரட்டை உள்ளத்தை தோலுரிக்கின்றார் இயேசு: 'சீசருக்கு உரியதை சீசருக்கு கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள்.'

இங்கே இயேசு 50-50 பிரமாணிக்கத்தை முன்வைக்கவில்லை. மாறாக, ஓர் அரசியல் புரட்சிக்கு வித்திடுகின்றார். சீசருக்கு உரியதைக் கொடுத்து (உரோமை அரசை அழித்து) அவனை அனுப்பிவிடுங்கள். பின் கடவுளுக்கு உரியதை முழுமையாகக் கொடுங்கள்.

கடவுளுக்கு பிரமாணிக்கம் என்று சொல்லிக்கொண்டு சட்டை பாக்கெட்டில் சீசரைத் தூக்கிக்கொண்டு திரிவது நலமன்று என்கிறார் இயேசு.

என் பிரமாணிக்கம் யாருக்கு? - என்பது நாளைய நற்செய்தி எழுப்பும் கேள்வி.

தமக்குச் சேர வேண்டிய பழங்கள்

நாளைய (4 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 12:1-12)

தமக்குச் சேர வேண்டிய பழங்கள்

திராட்சைத் தோட்டம் ஒப்பந்த அடிப்படையில் சில பணியாளர்களிடம் தரப்படுகிறது. தோட்டத்தின் விளைச்சலைப் பெற்று வருமாறு தலைவர் முதலில் பணியாளர்களை அனுப்புகின்றார். அவர்களில் சிலரை தோட்டத் தொழிலாளர்கள் கல்லால் எறிகின்றனர், சிலரை கொல்கின்றனர், சிலரை விரட்டி அனுப்புகின்றனர். இரண்டாவதாக, முன்பைவிட அதிக பணியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக, தலைவரின் ஒரே மகன். தலைவரின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருக்க, நடப்பது என்னவோ வேறு மாதிரி இருக்கிறது. 'இவனே சொத்துக்குரியவன். இவனைக் கொன்றால் தோட்டம் நம்முடையது!' என அவர்கள் சொல்லிக் கொண்டே அந்த மகன் மீது பாய்ந்து கொல்கிறார்கள்.
இந்த இடத்தில் வாசகருக்கு உச்ச கட்ட கோபம் வருகின்றது. மகன் சின்னஞ்சிறுவனாகத் தான் இருந்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் திராட்சைத் தோட்டம் எடுத்தால் அது விளைந்தவுடன் முதல் வேலையாக தலைவனுக்குரிய பங்கைத் தர வேண்டும் என்பது இணைச்சட்ட நூலின் பரிந்துரை. அவர்களின் முதல் தவறு, 'தலைவனுக்குச் சேர வேண்டியதைத் தனக்கென வைத்துக்கொண்டது!' - இதை பேராசை, ஊழல், பதுக்குதல் என அழைக்கலாம். இரண்டாவதாக, வன்முறை. யார்மேல்? தலைவனின் பணியாளர்கள் மேல். மூன்றாவதாக, கொலை. யாரை? ஒரே மகனை. இப்படிப்பட்ட தொழிலாளர்கள் பற்றி தலைவனுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் அவர்களிடம் தோட்டத்தை ஏன் ஒப்படைத்தார்? தொழிலாளர்களுக்கு தலைவன் மேல் அப்படி என்ன கோபம்? அப்படிக் கோபம் இருந்தால் அதை தலைவன் மேல் காட்டியிருக்கலாமே? ஏன் மற்றவர்கள் மேல் காட்ட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு உவமையில் பதில் இல்லை.

இந்த உவமையை இயேசுவே சொன்னார் என்றால் அது தன் இறப்பை முன்குறிப்பதாக இருக்கிறது. இல்லை, இது நற்செய்தியாளரின் கற்பனை என்போமாகில் இயேசுவின் படுகொலையை அவர்கள் உருவகமாக எழுதி, 'புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்' என்ற புதிய கிறித்தவர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை, புத்துணர்ச்சி தரவதற்காக எழுதப்பட்டது. இந்த இரண்டு எண்ண ஓட்டங்களிலும், தந்தை என்பது வானகத் தந்தையையும், தந்தையின் பணியாளர்கள் என்பவர்கள் இறைவாக்கினர்களையும், மகன் என்பவர் இயேசுவையும், தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் பரிசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள், தலைமைக்குருக்கள் எனவும் உருவகம் செய்து கொள்ளலாம். புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்தாம் புறவினத்தார்கள். புறக்கணிக்கப்பட்ட கற்களாக இருந்த இவர்கள் மூலைக்கற்களாகின்றனர்.

திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் செய்த தவறு என்ன?

தலைவருக்குச் சேர வேண்டிய பங்கை அவர்கள் கொடுக்க மறுத்ததுதான்.

மறுத்ததோடல்லாம் அந்தப் பங்கு தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிலக்கிழாரின் பணியாளர்கள் மற்றும் மகனையும் அழிக்கின்றார்கள்.

'எதெல்லாம் கொடுக்கப்படுகிறதோ அதெல்லாம் இறுதியில் திரும்ப பெறப்படும்' என்பதுதான் வாழ்க்கை நியதி. திராட்சைத் தோட்டம் நம்மிடம் கொடுக்கப்படுகிறது என்றால் அதைக் கொடுத்தவர் வந்து, 'என்னுடையது' என்று கேட்கும்போது கொடுத்துவிட வேண்டியதே சால்பு. அதுவே நீதியும்கூட.

அவருக்குச் சேர வேண்டிய பழங்களை நான் இன்று கொடுக்கின்றேனா?

Friday, June 1, 2018

எங்களுக்குத் தெரியாது

நாளைய (2 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 11:27-33)

எங்களுக்குத் தெரியாது

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு வருகின்றனர். வந்தவரிடம், 'எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கின்றீர்?' என்று கேள்வி எழுப்புகின்றனர் தலைமைக்குருக்களும் அவர்களது சகாக்களும்.

'அதிகாரம்' - இது மிக முக்கியமான வார்த்தை.

யாருக்கு அதிகாரம் இருக்கிறது? - இந்தக் கேள்விதான் வாழ்வில் நம் பல செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது.

சிகப்பு லைட் எரிந்தாலும் கடந்துவிடலாம் என நினைத்து காரின் ஆக்ஸிலேட்டரைக் கொடுக்கும் நாம் டிராஃபிக் போலீஸ் நிற்பதைப் பார்த்தவுடன் கியரை டவுன் செய்து வண்டியை நிறுத்துகிறோம். நாம் வண்டியில் இருக்கிறோம். அவர் கீழே நின்று கொண்டிருக்கிறார். அவரை விட நமக்குத்தான் இப்போது வசதி. வேகமாக அவரையும் இடித்துக்கொண்டு போய்விடலாம். ஆனாலும் நாம் அமைதியாக இருக்கின்றோம். ஏனெனில் 'அதிகாரம்' அவரிடம் இருக்கிறது.

வேஷ்டியை இடுப்புக்கு மேல கட்டி நிற்கும் எங்க வாட்ச்மேன் நான் உள்ளே வரும்போது அப்படியே நிற்கிறார். ஆனால் என்னுடன் இல்லத்தின் அதிபர் வரும்போது வேஷ்டியை இறக்கிவிடுகிறார். ஏனெனில் அதிபருக்கு இருக்கும் 'அதிகாரம்.'

நம் அதிகாரம் மதிக்கப்படாதபோது நம்மை அறியாமல் நமக்கு கோபம் வந்துவிடுகிறது.

இயேசுவையும் அவரின் பணிகளையும் கண்டு தங்களையும், தங்களின் பணிகளையும் அவரோடும், அவற்றோடும் ஒப்பிட்ட தலைமைக்குருக்கள் தங்களின் அதிகாரம் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கிறார்கள்.

இவர்கள் அவரைக் கேள்வி கேட்க, அவரும் அவர்களை எதிர்கேள்வி கேட்கின்றார்.

பதில் தெரிந்திருந்தும் தப்பித்துக்கொள்வதற்காக 'எங்களுக்குத் தெரியாது' என்கின்றனர்.

'அறியாமை' - இது ஒன்றுதான் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியும்.

நம்மை அறியாதவர்கள்மேல் நாம் அதிகாரம் செலுத்துவதில்லை. இல்லையா?

'தெரியாது' என்று சொல்லி இயேசுவின் அதிகாரத்தை ஏற்க மறுக்கிறார்கள் தலைமைக்குருக்கள். இயேசுவும் அதே நாணயத்தைக் கொண்டு அவர்களை அமைதியாக்குகின்றார்.