Friday, June 30, 2023

கடவுளின் விருந்தோம்பல்

இன்றைய இறைமொழி

சனி, 1 ஜூலை 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 18:1-15. மத் 8:5-17.

கடவுளின் விருந்தோம்பல்

1. ஆபிரகாம் தம்மிடம் வந்த மூன்று மனிதர்களுக்கு விருந்தோம்பல் செய்கிறார். ஆபிரகாமின் அவசரமும் அக்கறையும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. வந்திருந்தவர்கள் ஆண்டவர் என்பது சற்று நேரத்தில் வாசகருக்குப் புலப்படத் தொடங்குகிறது. தமக்கு விருந்தோம்பல் செய்த ஆபிரகாமுக்கு விருந்தோம்பல் செய்கிறார் ஆண்டவர். அடுத்த இளவேனிற்காலத்தில் ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஒரு மகன் பிறந்திருப்பான் என மொழிகிற ஆண்டவர், அந்த மகனின் பெயரையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். மாதவிடாய் நின்று போன சாரா தனக்குள் சிரிக்கிறாள். 'நீ சிரித்தாய்' எனச் சொல்கிறார் ஆண்டவர். அதுவே, ஈசாக்கின் பெயராக மாறுகிறது. 'ஈசாக்கு' என்றால் எபிரேயத்தில் 'அவன் சிரித்தான்' என்பது பொருள். 

2. தம்மிடம் உதவி வேண்டி வந்த நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியக்கின்ற இயேசு, தூரத்திலிருந்தே அவருடைய பணியாளருக்கு நலம் தருகிறார். நூற்றுவர் தலைவரின் இல்லத்திற்குச் செல்லாமலேயே அவருக்கு விருந்தோமல் செய்கிறார் இயேசு.

3. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: (அ) ஆபிரகாமிடம் விளங்கிய தாராள உள்ளம் - தம்மிடம் வந்திருப்பது யார் எனத் தெரியாமலேயே அவர்களை உபசரிக்கும் உயர்ந்த உள்ளம். (ஆ) சாராவின் அச்சம் - அதாவது, குழந்தைத்தனமான அச்சம். தன் சிரிப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றவுடன், அச்சம் கொள்கிறாள். ஆனால், அந்த அச்சத்தில்தான் ஈசாக்கின் பெயர் வெளிப்படுத்தப்படுகிறது. (இ) நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை - இயேசு என்னும் இறைமகனின் சொற்களும் விருந்தோம்பல் செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார் அவர்.

Thursday, June 29, 2023

நம்பிக்கையும் நலமும்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 30 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 17:1, 9-10, 15-22. மத் 8:1-4.

நம்பிக்கையும் நலமும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவை அணுகி வருகிற தொழுநோயாளர் ஒருவர், அவர் முன் முழந்தாளிட்டு, அவர்மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் சமகாலத்தில், குணமாக்க இயலாத, அதே வேளையில் வெறுக்கத்தக்க நோயாகத் தொழுநோய் இருந்தது. தொழுநோயாளர்கள் தீட்டானவர்கள் எனக் கருதப்பட்டு, சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் இத்தொழுநோயாளர் இயேசுவை அணுகி வந்தது அவருடைய துணிச்சலையும், அவசரமான தேவையையும் காட்டுகிறது.

தன்னைக் குணமாக்குமாறு வேண்டுகிற தொழுநோயாளரை இரக்கத்துடன் தொடுகிறார் இயேசு. இதுவும் அக்காலத்தில் தகாதது எனக் கருதப்பட்டது. ஏனெனில், தொழுநோய் ஒருவர் மற்றவரிடமிருந்து பரவக்கூடியது. இயேசுவின் தொடுதல் அவருக்கு உடனடியாக நலம் தருகிறது. 

இப்பகுதி இயேசுவின் பண்புநலன்களையும் அவருடைய பணியையும் பற்றி பல முக்கியமான கருத்துகளைத் தருகிறது: முதலில், இயேசுவின் இரக்கம் மற்றும் விருப்பம். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள்மேல் இயேசு அக்கறை காட்டுகிறார். ஒதுக்கப்பட்டவர்கள்மேல் அன்பும் பரிவும் கொள்கிறார். மேலும், தம் சமகாலத்தில் வழக்கத்திலிருந்த சமூக மற்றும் சமய விதிமுறைகளை உடைக்கிறார். 

அதே வேளையில், தொழுநோயாளரின் நம்பிக்கையும் நமக்குத் தூண்டுதலாக இருக்கிறது. இயேசுவுக்கு அருகில் செல்லும் நாம் நலம் பெறுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர் தம் வாக்குறுதியை மீண்டும் ஆபிரகாமுக்கு நினைவு_ட்டுகிறார். ஆபிரகாம் தன் நம்பிக்கையில் உறுதி பெறுகிறார்.


Wednesday, June 28, 2023

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

இன்றைய இறைமொழி

வியாழன், 29 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

திப 12:1-11. 2 திமொ 4:6-8, 17-18. மத் 16:13-19.

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா' (காண். மத் 16:18) என்று பேதுருவையும், 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.

இவர்கள் இருவருக்கும் அடிப்படையான பண்புகள் எவை?

அ. உயிர்ப்பு அனுபவம்

பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்' (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.

ஆ. பொருந்தக் கூடிய தன்மை

பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: 'ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் ... யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் ... நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்' (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.

இ. எழுத்துக்கள்

'பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்' என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.

இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:

(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்

நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். 'ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!' என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. 'ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்' என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.

(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்

பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், 'உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.

(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்

தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, 'இயேசுவே இறைமகன்' என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.

புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின. நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்.

நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.


Tuesday, June 27, 2023

போலி இறைவாக்கினர்கள்

இன்றைய இறைமொழி

புதன், 28 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 15:1-12, 17-18. மத் 7:15-20.

போலி இறைவாக்கினர்கள்

போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. 

போலிகள் என்பவை 'போல' இருப்பவை. அவற்றுக்கென்று தனித்தன்மை கிடையாது. அவை மற்றவற்றைச் சார்ந்தே இருக்கின்றன. தாம் குறிப்பவற்றை அவற்றால் நிறைவேற்ற இயலாது. போலியான மருத்துவர்கள் நலம் தருவதற்குப் பதிலாக பயம் தருகிறார்கள். போலியான மருந்துகள் குணம் தருவதற்குப் பதிலாக நோயைத் தருகின்றன. போலியான பொருள்கள் நம்மை ஏமாற்றுகின்றன. அவை தம்மிலே முரணானவை.

இரு உருவகங்களைத் தருகிறார் இயேசு: ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய், மரமும் கனியும்.

ஆடு மற்றும் ஓநாய் ஒன்றுக்கொன்று முரணானது. வெளியே தெரிகிற உருவம் உள்ளே உள்ள இயல்புக்கு முரணானது. மரத்தின் கனி அதன் உள் இயல்பையே வெளிப்படுத்துகிறது. நல்ல மரம் கெட்ட கனி தர இயலாது. கெட்ட மரம் நல்ல கனி தர இயலாது. மரம் தன் இயல்பை மறுதலிக்க இயலாது.

இரு சவால்கள்: ஒன்று, போலியாக இருப்பவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் நாமே எத்தனை முறை போலியாக இருக்கிறோம். நம் சொற்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவது ஏன்? இரண்டு, நம் வெளிப்புறத்தில் மாற்றம் வரவேண்டும் எனில், நம் இயல்பிலும் மாற்றம் வர வேண்டும். 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துகொள்கிறார். உடன்படிக்கை செய்யும் நிகழ்வுக்கு முன், ஆபிரகாமின் பொறுமையின்மையைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய கடவுள் தனக்கு அளித்த வாக்குறுதி குறித்துப் பொறுமை இழக்கிறார் ஆபிரகாம். தன் வீட்டு அடிமை மகன் தனக்குப் பின் உரிமையாளன் ஆவான் என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறார். ஆண்டவராகிய கடவுளின் சொல்லும் செயலும் முரணாக இருக்குமோ எனப் பயந்து போகிறார் ஆபிரகாம். ஆனால், இறைவனில் முரண் இல்லை என்பதை அவர் விரைவில் கண்டுகொள்கிறார்.


Monday, June 26, 2023

மதிப்பு, பிறர்மைய எண்ணம், இடுக்கமான வாயில்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 27 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 13:2, 5-18. மத் 7:6, 12-14.

மதிப்பு, பிறர்மைய எண்ணம், இடுக்கமான வாயில்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தம் சீடர்களுக்கு மூன்று அறிவுரைகளை வழங்குகிறார் இயேசு: 

(அ) மதிப்பு மிக்க ஒன்றை அதன் மதிப்பு தெரியாதவற்றிடம் வீணாக்க வேண்டாம். தூய்மையானது எது என்பதை நாய்கள் அறிவதில்லை. முத்துகளின் மதிப்பை பன்றிகள் அறிவதில்லை. அவற்றுக்குப் பயன்படாத இவ்விரு பொருள்களுமே அவற்றால் அழிக்கப்படும். மதிப்பும் நோக்கமும் இணைந்தே செல்கின்றன. ஒரு பொருள் அதன் நோக்கத்தை நிறைவேற்றும்போதுதான் மதிப்பு பெறுகிறது. 

மதிப்பு மிக்க நம் பொருள், நேரம், ஆற்றலை நாம் சரியான நோக்கம் இல்லாமல் நாம் செலவிடும்போது, நாய்கள்முன்னும் பன்றிகள்முன்னும் அவற்றை எறிபவர்கள்போல இருக்கிறோம். ஆக, ஒன்றின் மதிப்பு மற்றும் நோக்கம் அறிந்து செயல்படுதல் நலம். எந்தவொரு செயலைச் செய்யுமுன்னும், 'இதைச் செய்வதன் நோக்கம் என்ன?' என்னும் கேள்வியையும், 'மதிப்புக்குரிய ஒன்றை மதிப்புக்குரிய மற்றொன்றோடு நான் மாற்றிக்கொள்கிறேனா?' என்னும் கேள்வியையும் கேட்பது நலம்.

(ஆ) பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என நாம் விரும்புவதை அவர்களுக்குச் செய்வது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகப் பகுதி. காரானிலிருந்து ஆபிராமும் லோத்தும் புறப்படுகிறார்கள். இருவரும் கால்நடைகள் மற்றும் பணியாளர்களுடன் பெருகி வருகிறார்கள். இட நெருக்கடி அதிகமாகிறது. இருவரும் வேறு வேறு திசைகளில் பயணம் செய்வது நலம் என நினைக்கிறார்கள். தான் தனக்குத் தேவையான நல்ல இடத்தைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, இடத்தைத் தெரிவு செய்யுமாறு லோத்தைப் பணிக்கிறார் ஆபிராம். அதாவது, தனக்குச் செய்யப்பட வேண்டும் என விரும்புகிற ஒன்றை, அவர் லோத்திற்குச் செய்கிறார். லோத்து தன் கண்களுக்கு நல்லதெனப்பட்ட பகுதியைத் தெரிவு செய்கிறார். ஆபிராமோ விடுபட்ட பகுதியைத் தெரிவு செய்கிறார். விட்டுக்கொடுத்த ஆபிராம் கெட்டுப்போகவில்லை. ஏனெனில், அவர் தெரிந்துகொண்ட பகுதியே வாக்களிக்கப்பட்ட நாடாக மாறுகிறது. 

ஆக, நாம் கூடி வாழும்போது நமக்கு அருகில் இருப்பவரின் தேவை உணர்ந்து செயல்படுவது நலம். பல நேரங்களில் தன்மைய எண்ணமும், தன்னலப் போக்கும் இதற்குக் குறுக்காக நிற்கின்றன. விட்டுக்கொடுப்பது நமக்கு வலியைத் தரும். ஆனால், தாராள உள்ளமும் பரந்த எண்ணமும் இருப்பவர் அந்த வலியைப் பொறுத்துக்கொள்கிறார்.

(இ) இடுக்கமான வாயில் வழியே நுழைதல். அகன்ற வழி, இடுக்கமான வழி என்னும் இரு வழிகளை முன்மொழிகிற இயேசு இடுக்கமான வழியைத் தெரிந்துகொள்ள அழைக்கிறார். வலி வழியாகத்தான் வழி என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது. ஏனெனில், இடுக்கமான வாயில் வழியே நுழைபவர் வலியை ஏற்கிறார். இடர்களைச் சந்திக்கிறார். யாரும் செல்லாத வழியில் செல்கிற ஒருவரே மாற்றத்தை ஏற்படுத்துகிறார். அகன்ற வழியில் பலர் செல்வதைப் பார்த்து நாம் அவர்கள்பின் செல்ல நினைக்கிறோம். அந்த வழி எளிதான வழியாக இருக்கலாம். ஆனால், சரியான வழியாக இருக்க முடியாது. மேலும், இடுக்கமான வழியாக செல்லும்போது நம் தான்மை மற்றும் அடையாளத்தை நாம் முழுமையாக வாழ்கிறோம்.


Sunday, June 25, 2023

தீர்ப்பு அளிக்காதீர்கள்!

இன்றைய இறைமொழி

திங்கள், 26 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 12:1-9. மத் 7:1-5.

தீர்ப்பு அளிக்காதீர்கள்!

'பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்' என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. கிரேக்கத்தில் 'மே க்ரிநெடே' என்று ஒற்றை வினைச்சொல்லாகத் தரப்பட்டுள்ளது இந்த அறிவுரை. 'க்ரினோ' என்னும் வினைச்சொல்லுக்கு, 'தீர்ப்பிடுதல், குற்றம் சுமத்துதல், அளவிடுதல், விமர்சனம் செய்தல்' என்று பல பொருள்கள் உண்டு. 

ஒரு பொருளை அல்லது நபரை நாம் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே அதை அளவிடுகிறோம், அல்லது விமர்சனம் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, என் கண் யாராவது ஒருவர் ஒரு புத்தகத்தை நீட்டினால், அதை வெறும் புத்தகம் என்று பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், என் மூளை உடனடியாக அதை அளவிடுகிறது அல்லது விமர்சனம் செய்கிறது. புத்தகத்தின் தலைப்பு, புத்தகம் எழுதப்பட்ட மொழி, புத்தகத்தின் தடிமன், அட்டையின் நிறம், புத்தகத்தின் வழுவழுப்பு என அனைத்தையும் அளவிட்டு, விமர்சனம் செய்கிறது. இவ்வளவு விமர்சனமும் இணைந்து அந்தப் புத்தகத்திற்கும் எனக்கும் இடையே ஒரு திரையாக நின்றுகொள்கிறது.

எனக்கு முன் ஒரு நபர் நிற்கும்போதும் இப்படித்தான் நிகழ்கிறது. நிற்கிற நபர் ஆணா பெண்ணா, கறுப்பா சிவப்பா, குட்டையா வளர்த்தியா, திருமணம் ஆணவரா ஆகாதவரா, குழந்தையா வளர்ந்தவரா, தமிழ் பேசுபவரா வேறு மொழி பேசுபவரா என என் மூளை விமர்சனம் செய்துகொண்டே செல்கிறது. இப்படி விமர்சனம் செய்துகொண்டே செல்லும்போது நான் என்னை அறியாமலேயே அந்த நபர்மேல் தீர்ப்புகளை எழுதிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நேரங்களில் என் மூளை அடுத்தவரின் எண்ணங்களையும் ஆராய்ந்துபார்க்கத் தொடங்கிவிடுகிறது.  இவ்வளவு அடையாளங்களுடன்தான் நான் அவரைப் பார்க்கிறேனே தவிர, அவரை நான் அவராக மட்டும் பார்ப்பதில்லை. 

'விமர்சனம் இல்லாத பார்வையே மனமுதிர்ச்சியின் அடையாளம்' என்கிறார் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. வெறும் மலரை மலராகவும், மலையை மலையாகவும், ஆளை ஆளாகவும் மட்டும் பார்த்தல் சிறப்பு.

தூர நாட்டிலிருந்து இல்லம் திரும்பி வந்த தன் இளைய மகனுக்காகக் காத்திருக்கிற தந்தை, 'என்னப்பா இப்படி வந்துருக்க?' என்று கேட்கவில்லை. வந்த மகனை அப்படியே தழுவிக்கொள்கிறார். அதுதான் தீர்ப்பு அளிக்காத பார்வை. விமர்சனம் செய்யாத மூளை. அவன் வந்து நின்ற நிலையை விமர்சனம் செய்துபார்த்தால் அவனைத் தழுவியிருக்க இயலாது அவரால். தன் மகனை மகன் என்று மட்டுமே பார்க்கிறார். ஆனால், மூத்த மகனோ வந்திருந்த தன் தம்பியைப் பார்க்கிறான், அவனுடைய வெறுங்கையைப் பார்க்கிறான். அவன் பழைய வாழ்க்கையை விமர்சனம் செய்கிறது இவனுடைய மூளை. விளைவு, தன் தம்பி என உழைக்காமல், 'இந்த உன் மகன்' என அந்நியப்படுத்துகிறான்.

விமர்சனம் இல்லாத பார்வையை நாம் பெறத் தடையாக இருப்பது நம் கண்ணில் உள்ள கட்டை. இந்தக் கட்டை நம் கண்களுக்கு வெளியே இல்லை. மாறாக, நம் மூளையிலிருந்து நம் கண்களை நோக்கியதாக இருக்கிறது. அதை நாம் நீக்கிவிட்டால் விமர்சனம் செய்யாத, தீர்ப்பிடாத, குற்றம் சுமத்தாத பார்வையைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிராமை (ஆபிரகாமை) அழைக்கிறார். 'நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டுக்குச் செல்' என்னும் குரலைக் கேட்டவுடன் புறப்படுகிறார் ஆபிராம். இதுதான் அவருடைய நம்பிக்கைப் பார்வை. அந்த நம்பிக்கைப் பார்வையில் எந்தவொரு விமர்சனமும், தீர்ப்பும், ஆராய்ச்சியும் இல்லை. 

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 33) வரிகளில், 'ஆண்டவர் கண்ணோக்குகிறார்' என வாசிக்கிறோம். ஆண்டவரின் பார்வை தீர்ப்பிடாத, குற்றம் சுமத்தாத, விமர்சனம் செய்யாத பார்வை. அப்படியே நம் பார்வையும் அமைவதாக!


Friday, June 23, 2023

திருமுழுக்கு யோவான் பிறப்பு

இன்றைய இறைமொழி

சனி, 24 ஜூன் 2023

பொதுக்காலம் 11-ஆம் வாரம்

எசா 49:1-6. திப 13:22-26. லூக் 1:57-66, 80.

திருமுழுக்கு யோவான் பிறப்பு

திருஅவை மூவரின் பிறந்தநாள்களைக் கொண்டாடுகிறது: இயேசு, இயேசுவின் தாய் மரியா, இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:57-66, 80) திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வையும், பெயரிடுதல் நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

- இதுதான் சக்கரியா-எலிசபெத்து இல்லத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரே கேள்வி.

இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சக்கரியாவின் பாடலிலிருந்து வாசகர் தெரிந்துகொள்ள முடியும்: 'நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்!'

இந்நாளில், திருமுழுக்கு யோவான் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்களைச் சற்றே சிந்திப்போம்:

1. தன் இலக்கு எது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் செயல்கள் பல நேரங்களில் அவருடைய இலக்கை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லவில்லை. 'இவர் யாரோ?' என்று மக்கள் எண்ணும்படியாகவே அவர் வைத்திருந்தார். ஆனால், திருமுழுக்கு யோவான் யார் என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். ஏனெனில், அவருடைய செயல்கள் அவருடைய இலக்கை அப்படியே வெளிப்படுத்தின. மேலும், 'இதுதான் நான்' என மற்றவர்களிடம் சொல்லிவிட்டார் திருமுழுக்கு யோவான்.

2. இரண்டாம் இடத்தில் இருப்பது

இன்றைய உலகில் நாம் நம்மிடம் இல்லாத ஒன்றையும் இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். ஆனால், அவர், 'நீர் மெசியாவா?' என்று மக்கள் கேட்டபோது, 'இல்லை' என்றும், 'மிதியடி வாரை அவிழ்ப்பவர்' என்றும் சொல்கின்றார். மேலும், மணமகனுக்கு அருகில் நிற்கும் தோழன் என்கிறார். திருமண நிகழ்வுகளில் மணமகனின் மேல் அடிக்கும் வெளிச்சம் தோழன்மேல் விழுவதில்லை. மணமகன் தோழர்களை யாரும் பார்ப்பதில்லை. தன்னை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்வதன் வழியாக, 'இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன தவறு?' என்று நம்மைக் கேட்கத் தூண்டுகின்றார் யோவான். அவருடைய தாய் எலிசபெத்துக்கும் இது தெரியும். தன் மகன் கடைசி வரை இரண்டாம் இடத்தில்தான் இருக்கப் போகிறான் என்று. இரண்டாம் இடமும் இனிய இடமே எனக் கற்றுத் தருகிறார் யோவான்.

3. செயல்கள் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன

என்னுடைய இலக்குகள் என் வெறும் எண்ணங்களாக மட்டுமே இருந்தால் நான் இலக்கை அடைய முடியாது. நான் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறேன் என்றால், நான் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். எழுதவே செய்யாமல் நான் எழுத்தாளன் ஆக முடியாது. ஆக, 'எழுத்தாளன் ஆக வேண்டும்' என்ற என்னுடைய எண்ணம் 'எழுதுதல்' என்னும் செயலில் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால்தான் அது என்னுடைய முதன்மை என்பது தெளிவாகும்.

திருமுழுக்கு யோவானின் செயல்கள் அவருடைய இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பாலைநிலத்தில் 'மறைந்து' வாழ்கின்றார். ஏனெனில், அது அவருடைய பணி. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, ஒட்டக மயிராடையை அணிகின்றார். அதுதான் அவருடைய எளிய வாழ்க்கை முறை. திருமுழுக்குக் கொடுக்கின்றார். அதுதான் அவருடைய பணி. தலை வெட்டுண்டு இறந்து போகின்றார். அதுதான் அவருடைய நியதி. தான் மெசியாவின் முன்னோடி எனக் கனவு காணவில்லை அவர். முன்னோடியாகவே செயல்படுகிறார்.

ஆக, செயல்கள் நம் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன. திருமுழுக்கு யோவானின் பிறப்புத் திருவிழாவில் நம் முதன்மைகளைச் சரிசெய்வதோடு, இலக்குகளுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய முற்படுவோம்.

4. மகிழ்ச்சி

திருமுழுக்கு யோவான் தாயின் வயிற்றில் இருக்கும்போது மகிழ்கின்றார். இவருடைய பிறப்பால் சுற்றத்தார் மகிழ்கின்றனர். மணமகனுக்கு அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்டு மகிழும் நண்பனே தான் எனத் தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார் யோவான். மகிழ்ச்சி என்பது பின்வருவனவற்றில் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார் யோவான்.

(அ) தாழ்ச்சியில்

'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று ஒரே நேரத்தில் இயேசுவை மணமகனாகவும் (காண். ரூத் 4), தன்னை அடிமையாகவும் முன்வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச அலுவலர்களும் வந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.

(ஆ) குரல் கேட்பதில்

மணமகன் குரல் கேட்பதில் மகிழும் மாப்பிள்ளைத் தோழர் இவர். அவருடைய குரல் கேட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோவான்.

(இ) தன் பணியைச் செய்வதில்

எளிமையான உணவுப் பழக்கம், அமைதியான பாலைவனம் என அவருடைய வாழ்க்கை ஒரு சிறுநுகர் வாழ்வாக இருந்தது. அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். வாழ்வு தரும் தண்ணீராக வந்த மெசியாவுக்கே தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார்.

(ஈ) துன்பம் ஏற்பதில்

ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏனெனில், தன் வாழ்க்கையின் இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. 

மகிழ்ச்சி என்பது ஒரு மாபெரும் உணர்வு. நாம் பிறந்தபோதும் நம் பெற்றோர் மகிழ்ந்தனர். நம் உதடுகள் அழகாகச் சிரித்தன. ஆனால், அன்றாட அலுவல்களின் அழுத்தத்திலும், வாழ்வியல் போராட்டத்திலும் நம் சிரிப்பை நாம் மறந்துவிட்டோம். இன்று நன்றாகச் சிரிப்போம்! ஏனெனில், 'ஒரு குழந்தை பிறந்துள்ளது!'

திருமுழுக்கு யோவானின் சுற்றத்தார் கேட்ட அதே கேள்வி – 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?' – என்னும் கேள்வியை நாம் நம்மைப் பற்றியே பல்வேறு விதங்களாகக் கேட்கிறோம்: 'இதுதான் நானா?' 'இதுதான் என் வாழ்வியல் இலக்கா?' 'நான் சரியான பாதையில்தான் செல்கிறேனா?' 'என் தான்மை என்ன?' இக்கேள்விகளுக்கான விடையை நாம் காணவும் இப்புனிதர் நமக்காக இறைவேண்டல் செய்வாராக!



Thursday, June 22, 2023

செல்வமும் உள்ளமும்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 22 ஜூன் 2023

பொதுக்காலம் 11-ஆம் வாரம்

2 கொரி 11:18, 21-30. மத் 6:19-23.

செல்வமும் உள்ளமும்

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மிடம் இரு கேள்விகளை முன்வைக்கின்றது: 'உன் செல்வம் எங்கே?' 'உன் இதயம் எங்கே?' என்ற கேள்விக்கான விடையே, செல்வம் எங்கே இருக்கிறது என்பதற்கான விடை. ஏனெனில், 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' என்கிறார் இயேசு.

இரண்டாவது கேள்வி, 'உன் பார்வை எங்கே?' – 'உன் கண்கள் எங்கே?' என்பதற்கான விடையே இக்கேள்விக்கான விடை. 'கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்' என்கிறார் இயேசு.

இவ்விரண்டு கேள்விகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருந்தாலும், இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையவை. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் தான் ஓர் அறிவிலி போலப் பேசுவதாகச் சொல்கிற பவுல், தான் அறிவித்த நற்செய்தியே உண்மையானது என்றும், தன் பணியே மற்ற 'போலி' திருத்தூதர்களின் பணியைவிட மேலானது எனவும் நிரூபிக்க, தான் பட்ட துன்பங்கள், அடைந்த துயரங்கள் அனைத்தையும் வகைப்படுத்துகிறார். இறுதியில், 'இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது' என்று பவுல் கூறுகிறார். மற்ற திருத்தூதர்களைவிட பவுல் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் இதுவே என நினைக்கிறேன். மற்ற 'போலி' திருத்தூதர்கள், நம்பிக்கையாளர்களால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை மையமாக வைத்து நற்செய்தி அறிவித்தனர். ஆனால், பவுலோ, தான் நற்செய்தி அறிவிக்காவிட்டால் அவர்களுக்கு என்ன ஆகும் என அவர்களைப் பற்றிக் கவலை கொள்கிறார். 

பவுலின் உள்ளம் அவருடைய திருச்சபையில் இருந்தது. ஏனெனில், திருச்சபையே அவருடைய செல்வம்.  

யோசுவா நூலில் (அதி. 16) ஒரு நிகழ்வு உண்டு. எரிக்கோ நகருக்கு எதிராக மக்கள் போரிடுகின்றனர். அங்கிருக்கும் அனைத்தையும் அழித்துவிடுமாறு ஆண்டவராகிய கடவுள் அறிவுறுத்துகின்றார். ஆனால், ஆக்கான் என்பவரின் கண்கள் அங்கிருந்த பொன் மற்றும் வெள்ளிமேல் படிகிறது. அவற்றை அவர் எடுத்து மறைத்துவைத்துக் கொள்கின்றார். அவருடைய எண்ணமெல்லாம் மறைத்து வைக்கப்பட்ட பொன் மேல் இருக்கின்றது. விளைவு, ஏய் நகருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோல்வியடைகின்றனர்.

ஆக, நம் செல்வம் நேர்முகமாகவும் இருக்க முடியும், எதிர்மறையாகவும் இருக்க முடியும். நம்மை மற்றவர்களை நோக்கித் திருப்பவும் முடியும், நம்மை நோக்கியே திருப்பவும் முடியும்.

இரு சவால்கள்:

ஒன்று, நம் கண்கள் நலமானதாக இருக்க வேண்டும். அதாவது, பொறாமை, பகைமை, ஆசை, கோபம் கொண்டதாக இருத்தல் கூடாது.

இரண்டு, நம் செல்வம் இறைவனாக வேண்டும். அவரில் நம் இதயம் இருக்க வேண்டும்.


Wednesday, June 21, 2023

எல்லா வகையிலும் செல்வராகி

இன்றைய இறைமொழி

புதன், 21 ஜூன் 2023

பொதுக்காலம் 11-ஆம் வாரம்

2 கொரி 9:6-11. மத் 6:1-6,16-18.

எல்லா வகையிலும் செல்வராகி

கொரிந்து நகர மக்கள் தாங்கள் பெற்றிருக்கிற வளங்களையும் திறன்களையும் மற்ற திருச்சபைகளோடு பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுகிற பவுல், விதைப்பவர் உருவகத்தைப் பயன்படுத்தி, 'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார், நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்' என மொழிகிறார். மேலும், விதைகளை வழங்கும் இறைவனே அறுவடையையும் மிகுதியாக்குவார் என்கிறார். 'நீங்கள் எல்லா வகையிலும் செல்வராகி வள்ளன்மை மிகுந்தவர்களாக விளங்குவீர்கள்' என வாழ்த்துகிறார் பவுல்.

'எல்லா வகையிலும் செல்வராகி' என்னும் சொல்லாடல் நம் சிந்தனையைத் தட்டி எழுப்புகிறது. 'வளமை இறையியல்' (ப்ராஸ்பெரிட்டி தியாலஜி) அல்லது 'வளமை நற்செய்தி' (ப்ராஸ்பெரிட்டி காஸ்பல்) என்னும் சொல்லாடல்கள் இன்று அதிகமாகப் பேசப்பட்டு விமர்சிக்கப்படுகின்றன. அதாவது, சில பிரிவினை சபைப் போதகர்கள் வளமை நற்செய்தியை அறிவிக்கிறார்கள் எனவும், அவர்கள் இயேசு காட்டிய எளிமையை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பல நேரங்களில் நாம் ஏழ்மையை உயர்த்திப்பிடித்துப் பேசுகிறோம். ஏழ்மை அல்லது வறுமை ஏற்றுக்கொள்ளத்தக்க நிலை என்று சொல்வதுடன், அதுவே பேறுபெற்ற நிலை என்கிறோம். ஆனால், நம் ஆண்டவராகிய கடவுள் நாம் எல்லா வகையிலும் செல்வராக வேண்டும் என விரும்புகிறார். ஏழ்மையாக இருத்தல் நலம்தான். ஆனால், செல்வம் கொண்டிருக்கும்போது நிறைய விடயங்களை நம்மால் செயல்படுத்த முடியும்.

நற்செய்தி வாசகத்தில், தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் என்னும் அடிப்படையான சமய நெறிச் செயல்பாடுகளைப் பற்றித் தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிற இயேசு, அவற்றைச் செய்கிறவர்கள் அலட்டிக்கொள்ளாமல் செய்ய வேண்டும் என்கிறார். அதாவது, மற்றவர்களின் பார்வையில் வெகுமதி பெறுவதற்காகவோ அல்லது மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவோ அல்ல, மாறாக, உள்ளாந்த மாற்றம் அடைவதற்காகவே ஒருவர் இவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

உள்ளார்ந்த மாற்றத்தை மையப்படுத்திச் செயல்படுகிற ஒருவர் எல்லா வகையிலும் செல்வராகிறார். 

இன்று நம்மிடம் உள்ள வறுமை அல்லது ஏழ்மை மனப்பாங்கை விடுப்போம். நம்மிடம் உள்ள வளமை, செல்வம், ஆற்றல், திறன் அனைத்தையும் பட்டியலிடுவோம். அவற்றை அன்றாடம் மேம்படுத்துவதே நம் இலக்காக இருக்கட்டும்.

மிகுதியான செல்வம் வரும்போது மிகுதியாக அதைப் பகிர்ந்துகொள்ள முடியும். இதையே இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 112), 'சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும் ... அவர்கள் வாரி வழங்கினர், ஏழைகளுக்கு ஈந்தனர்' என வாசிக்கிறோம்.


Saturday, June 17, 2023

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

ஆண்டின் பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு

விப 19:2-6அ. உரோ 5:6-11. மத் 9:36-10:8.

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

முதல் வாசகப் பகுதி சீனாய் மலை உடன்படிக்கை நிகழ்வின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, செங்கடல் வழியாகக் கால் நனையாமல் கானான் நாட்டுக்குள் கடத்துகிறார். நீண்ட பயணம் செய்து அவர்கள் சீனாய் மலையை வந்தடைகிறார்கள். மோசே மட்டும் மலை ஏறிச் செல்கிறார். மக்கள் பாளையத்தில் குடியிருக்கிறார்கள். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்கிறார். இது நிபந்தனை உடன்படிக்கை ஆகும். ஏனெனில், 'நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்தால்' என்னும் நிபந்தனை அதில் அடங்கியுள்ளது. மேலும், இந்த உடன்படிக்கை வழியாக அவர்கள் பெறுகின்ற உரிமைகளையும் முன்மொழிகிறார்.

கடவுளுக்கு ஏற்புடையவராக்கப்படுதல் (நியாயப்படுத்தப்படுதல்) என்னும் கருத்துருவை உரோமை நகரத் திருஅவைக்கு விளக்கும் பவுல், இயேசு கிறிஸ்துவின் இறப்பு வழியாக நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என முன்மொழிந்து, கடவுள்தாமே இந்நிகழ்வை முன்னெடுத்தார் என்றும், ஒப்புரவின் கனியான மகிழ்ச்சியைத் தருபவர் கடவுள் என்றும் கூறுகிறார்.

நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: முதல் பிரிவில், இயேசு மக்கள்கூட்டத்தின்மேல் பரிவு கொள்கிறார். அறுவடையின் ஆண்டவரை நோக்கி மன்றாடுமாறு சீடர்களை அழைக்கிறார். இரண்டாம் பிரிவில், பன்னிருவரைத் தம்மிடம் வரவழைத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார். மூன்றாம் பிரிவில், பணிக்கான அறிவுரையை வழங்குகிறார்.

இன்றைய நாளின் வாசகங்களைப் பின்வரும் சொல்லாடல்களை அடிக்கோடிட்டுப் புரிந்துகொள்வோம்: பரிவு கொள்தல், பெயரிடப்படுதல், கொடையைப் பகிர்தல்.

அ. கடவுளின் பரிவை அனுபவித்தல், பரிவு கொள்தல்.

ஆ. கடவுளால் நாம் பெயரிடப்படுதல்.

இ. கடவுளின் கொடையைப் பேணிப் பகிர்ந்தளித்தல்.

அ. கடவுளின் பரிவை அனுபவித்தல், பரிவு கொள்தல்

திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் காணுகின்ற இயேசு, 'ஆயர் இல்லா ஆடுகளைப் போல அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டதை' கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்கிறார். 'பரிவு' என்பதை 'இரக்கம்' என்றும் புரிந்துகொள்ளலாம். எபிரேயத்தில், 'ரஹெம்' ('பரிவு') என்னும் சொல்லுக்கு 'ஒரு தாய் தன் மடியிலிருக்கும் பிள்ளையைக் குனிந்து பார்க்கும் சொல்லோவியம்' தரப்படுகிறது. அதாவது, கையறு நிலையிலிருக்கும் தன் குழந்தையின் கண்களைக் கூர்ந்து நோக்குகிற தாய், அக்கண்கள் வழியாகக் குழந்தையின் தேவை அறிந்து அதை நிறைவு செய்கிறார். ஆக, இரக்கம் என்பது உணர்வாக எழுந்தாலும் அது செயலாகக் கனிகிறது. இயேசுவைப் பின்தொடர்ந்து நடந்த மக்கள் பொருளாதார, ஆன்மிக, அரசியல், மற்றும் சமூகத் தளங்களில் வலுவிழந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் கையறுநிலை கண்டு அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார் இயேசு. தாம் ஒருவரால் மட்டும் பணி சாத்தியமில்லை என உணர்ந்தவராக, தம்மோடு உடனுழைக்க பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார். அறுவடை செய்பவர்கள் சீடர்கள் என்றாலும் அறுவடையின் உரிமையாளர் கடவுளே என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். சீடர்கள் தாங்கள் செய்கிற பணிகள் வழியாகக் கடவுளின் பரிவை மனிதர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

பரிவு என்பது மேன்மையான உணர்வு. கடவுளின் பரிவை நாம் அன்றாட வாழ்வில் கண்டுணர்கிறோம். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் பிரச்சினைகள் அல்லது துயரங்கள் நம்மை அலைக்கழிக்கும்போது கடவுள் நம்மைவிட்டுத் தூரமாகச் சென்றுவிட்டதாக, அல்லது கடவுள் தம் முகத்தை மூடிக்கொண்டதாக உணர்கிறோம். நம் கையறுநிலைகண்டு பரிவுகொள்பவர் நம் இறைவன் என்னும் நம்பிக்கை பெறுவோம். கடவுளின் பரிவை அல்லது இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்வோம்.

ஆ. கடவுளால் பெயரிடப்படுதல்

'எல்லா மக்களிலும் நீங்களே என் உரிமைச் சொத்து,' 'நீங்களே குருத்துவ அரசர்,' 'தூய மக்களினம்' என்று இஸ்ரயேல் மக்களுக்குப் பெயர்களைக் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். சீடர்கள் என மொத்தமாகத் தெரிந்தவர்களில் பன்னிருவரை அழைத்து அவர்களுக்குப் புதிய பெயர்களை வழங்குகிறார் இயேசு. பெயரிடப்படுதல் என்பது உரிமை கொண்டாடப்படுதலைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தாம் கொண்ட பரிவின் காரணமாக இஸ்ரயேல் மக்களைத் தம் உரிமைச்சொத்து எனக் கொண்டாடுகிறார். மற்ற நாட்டினரைவிடச் சிறிய இனமாக இருந்த மக்களை அரசர்கள் என்றும், கடவுளின் தூய இனம் என்றும் அழைத்து அவர்களுக்கு மேன்மை அளிக்கிறார். சீடர்கள் என்ற நிலையில் இருந்தவர்களைப் பன்னிருவர் என்னும் நிலைக்கு உயர்த்துகிற இயேசு, தீய ஆவிகளை ஓட்டவும் நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் தந்து அவர்களை ஆற்றல்படுத்தி, அவர்களைத் தம் உடனுழைப்பாளர்களாக மாற்றுகிறார்.

திருமுழுக்கு நிகழ்வில் நாம் அனைவரும் பெயரிடப்படுகிறோம். பெயரிடப்பட்டுள்ள நாம் அனைவருமே ஓர் அழைப்பைப் பெற்றுள்ளோம். அந்த அழைப்பை நாம் நினைவுகூர்ந்து, அந்த அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்கிறோமா?

இ. கடவுளின் கொடையைப் பேணிப் பகிர்ந்தளித்தல்

தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசுவின் அறிவுரைப் பகுதி, 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்' என்று நிறைவுபெறுகிறது. 'இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே' என்று இரண்டாம் வாசகம் நிறைவுபெறுகிறது. கடவுள்தாமே ஒப்புரவின் மகிழ்ச்சியைக் கொடையாக வழங்குவதாக மொழிகிறார் பவுல். நம் ஒவ்வொருவரின் செயல்களை விட கடவுளின் அருளே மேன்மையாக இருக்கிறது. இதையே திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்' (127:1) எனப் பதிவு செய்கிறார். நாம் எந்த முயற்சியை எடுத்தாலும், முயற்சியின் பலன் கடவுளின் மடியில்தான் உள்ளது. அனைத்தையும் கடவுளின் கொடையாகப் பார்ப்பதற்கு நமக்கு நம்பிக்கைப் பார்வை அவசியம். 'இது என்னால் வந்தது, இதை நான் செய்தேன், இது என் முயற்சி' என நான் என் செயல்களுக்கு முதன்மையிடம் அளிக்கும்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறேன். மற்றவர்களின் செயல்கள் மற்றும் முயற்சிகளோடு ஒப்பிட்டு வருத்தம் கொள்கிறேன். ஆனால், அனைத்தையும் அனைவரையும் கொடையாகப் பார்க்கிற உள்ளம் மனச்சோர்வு அடைவதில்லை. வருத்தம் கொள்வதில்லை. பன்னிருவராகத் தெரிந்துகொள்ளப்பட்டதும், தீய ஆவியின்மேலும் நோய்களின்மேலும் கொள்ளும் ஆற்றலும் கடவுளின் கொடைகள் என்பதை உணர்ந்தவர்களாகச் சீடர்கள் பணியாற்ற வேண்டும்.

கொடையாகப் பார்க்கும் உள்ளம் கணக்குப் பார்க்காது. கணக்குப் பார்க்கிற உள்ளம் கொடைகளைக் கொண்டாடாது. நம் ஆற்றல், திறன், வெற்றி, இருத்தல், இயக்கம் என அனைத்தையும் கடவுளின் கொடைகளாகப் பாவித்துக் கொண்டாடுகிறோமா? கொடையாகவே அவற்றை மற்றவர்களோடு பகிர்கிறோமா?

நிற்க.

கடவுளின் பரிவு, கடவுளின் உரிமை, கடவுளின் கொடை என அனைத்தும் கடவுளிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன. இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர் பாடுவது போல, 'ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள். அவர் மேய்க்கும் ஆடுகள்!' (திபா 100) அன்று அவரிடம் சரணடைவோம். அவருடைய பரிவையும் கொடையையும் பெற்றுள்ள நாம் அவற்றை ஒருவர் மற்றவருக்கு – குடும்பத்தில், பங்குத்தளத்தில், சமூகத்தில் - வழங்க முயற்சி செய்வோம்.


Thursday, June 15, 2023

இயேசுவின் தூய்மைமிகு இதயம்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 16 ஜூன் 2023

பொதுக்காலம் 10-ஆம் வாரம்

இச 7:6-11. 1 யோவா 4:7-16. மத் 11:25-30.

இயேசுவின் தூய்மைமிகு இதயம்

அ. விழா வரலாற்றுப் பின்புலம்

1. தொடக்கத் திருஅவை இயேசுவின் அன்பு மற்றும் இரக்கம் குறித்து தியானித்தது. தொடக்கத் திருஅவைத் தந்தையர்களில் புனித அகுஸ்தீன் மற்றும் புனித கிறிஸோஸ்தம் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் எழுதியுள்ளார்கள்.

2. மத்தியக் கால மறைஞானியர் ('மிஸ்டிக்') புனித ஜெர்ட்ருட் மற்றும் புனித மெக்டில்ட் போன்றோர் இரக்கம்நிறை இயேசு பற்றிய அனுபவங்களையும் காட்சிகளையும் பெற்றனர்.

3. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.

4. திருத்தந்தை 9ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11ஆம் பயஸ் 'இரக்கம்நிறை மீட்பர்' என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.

ஆ. திருஇதய பக்தி முயற்சிகள்

1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல். 

2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.

3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.

4. நற்கருணை ஆராதனை: முதல் வெள்ளிக் கிழமைகளில் தனிப்பட்ட அல்லது குழும நற்கருணை ஆராதனை செய்தல். திருப்பலி கண்டு நற்கருணை உட்கொள்தல்.

5. இல்லம் மற்றும் பணியிடங்களில் படம் அல்லது திருவுருவம் நிறுவுதல்: அவருடைய கண்கள் நம்மை நோக்கியிருக்குமாறு, அவருடைய கண்பார்வையில் நம் வாழ்க்கையை வாழ்தல்.

6. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.

இ. திருஇதயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள்

1. அன்பு என்னும் செயல்

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்துகொண்டதன் நோக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் மோசே. மக்கள் சொற்பமாக இருந்தார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தாம் அவர்கள்மேல் கொண்ட அன்பினால் ஆண்டவர் அவர்களைத் தேர்ந்துகொள்கிறார். இந்த அன்பு வெறும் உணர்வு அல்ல. மாறாக, ஒரு செயல்பாடு. இந்த அன்பே அவர்களைப் பாரவோனின் அடிமைத்தளையிலிருந்து மீட்கிறது, செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்கிறது, தண்ணீர் தருகிறது, மன்னாவும் இறைச்சியும் பொழிகிறது, சீனாய் மலையில் உடன்படிக்கை செய்கிறது. மக்கள் தவறிச் சென்றாலும் ஆண்டவராகிய கடவுளின் அன்பு நீடித்ததாக, நிலையானதாக இருக்கிறது. ஆக, இத்திருநாள் நமக்கு நினைவூட்டுவது அன்பு. அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு செயல்பாடு. அன்பினால் இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டார் எனில், அதே அன்பை நாம் ஒருவர் மற்றவருக்குப் பகிர்தல் நலம். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது' என எழுதுகிறார் திருத்தூதர் யோவான்.

2. பெருஞ்சுமையும் இயேசுவின் சுமையும்

'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களைத் தம்மிடம் அழைக்கிற இயேசு,' தாம் கனிவும் மனத்தாழ்மையும் உடையவராக இருப்பதாக முன்மொழிந்து, 'என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது' என்கிறார். இயேசுவிடம் நாம் கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ள வேண்டும். கனிவு அவருக்கும் மற்றவர்களுக்குமான உறவில் வெளிப்படுகிறது. மனத்தாழ்மை அவருக்கும் தந்தை கடவுளுக்கும் உள்ள உறவில் வெளிப்படுகிறது. கனிவு கொண்ட உள்ளம் யாரையும் காயப்படுத்துவதில்லை. மனத்தாழ்மை என்பது மற்றவர்கள்மேல் உள்ள சார்புநிலையைக் கொண்டாடுவது. இயேசு நம் சுமைகளை அகற்றுவதில்லை. மாறாக, அவற்றை எதிர்கொள்வதற்கான பாடத்தைக் கற்பிக்கிறார். அனைத்தையும் அன்பினால் எதிர்கொண்டால் நுகம் அழுத்துவதில்லை, சுமையும் எளிதாகும்.

3. ஆண்டவர் அருளும் மன்னிப்பு

பல நேரங்களில் நாம் பயம் மற்றும் குற்றவுணர்வுடன் வாழ்கிறோம். இறைவன் நம்மைத் தண்டிக்கிற நீதிபதி என நினைக்கிறோம். இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 103) ஒரு புதிய புரிதலை நமக்குத் தருகிறது: 'அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார். நோய்களையெல்லாம் குணமாக்குகிறார் ... ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.' இயேசுவின் இதயம் கடவுளின் மன்னிப்பை நமக்கு அடையாளப்படுத்துகிறது.

இறுதியாக,

இயேசுவின் இதயம் சிலுவையில் குத்தித் திறக்கப்பட்டபோது, இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன. இரத்தம் அவருடைய இறையியல்பையும், தண்ணீர் நம் மனித இயல்பையும் குறிக்கிறது. நம் மனித இயல்பை ஏற்ற அவர், நம் இயல்பையும் இருத்தலையும் இயக்கத்தையும் அறிவார். 


Tuesday, June 13, 2023

நிறைவேற்றுவதற்கே

இன்றைய இறைமொழி

புதன், 14 ஜூன் 2023

பொதுக்காலம் 10-ஆம் வாரம்

2 கொரி 3:4-11. மத் 5:17-19.

நிறைவேற்றுவதற்கே

இயேசுவின் சமகாலத்தவர்கள், குறிப்பாக அவருடைய சீடர்கள், தங்களுடைய உள்ளத்தில் ஐயம் ஒன்று கொண்டிருந்தனர். இயேசுவின் போதனைகள் இஸ்ரயேலின் சட்டத்திற்கு மாறுபட்டவையா? என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தபோது, தாம் சட்டங்களையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை, மாறாக, அவற்றை நிறைவேற்ற வந்ததாக உறுதிபடக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் தொடங்கி இறுதி வரை, பல்வேறு முதல் ஏற்பாட்டுக் குறிப்புகள் இயேசுவில் நிறைவேறுவதாகப் பதிவு செய்கிறார். நிறைவேறுதல் என்று சொல்லும்போது, சட்டம் மற்றும் இறைவாக்குகளின் நீட்சியாகத் தாம் இருப்பதாக முன்மொழிவதுடன், தாமே நிறைவு என்றும் கூறுகிறார். இயேசு சட்டங்களை நிறைவேற்றும் விதம் எப்படி என்பது தொடர்ந்து வரும் பாடப்பகுதிகளில் தெளிவாகிறது.

முதல் வாசகத்தில், தன்னை, புதிய உடன்படிக்கையின் பணியாளர் என அறிமுகம் செய்கிறார் பவுல். பழைய உடன்படிக்கையின் மாட்சியைவிட, புதிய உடன்படிக்கையின் மாட்சி உயர்ந்தது. 

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 99), 'நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்' எனப் பாடுகிறார் ஆசிரியர். தூயவராகிய கடவுள் சட்டங்கள் வழியாகவும் இறைவாக்குகள் வழியாகவும் கிறிஸ்து இயேசு வழியாகவும் தம்மையே வெளிப்படுத்துகிறார். நம்மைத் தேர்ந்தெடுத்து புதிய உடன்படிக்கையின் பணியாளர்களாக மாற்றுகிறார்.



Monday, June 12, 2023

உப்பும் ஒளியும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 13 ஜூன் 2023

பொதுக்காலம் 10-ஆம் வாரம்

2 கொரி 1:18-22. மத் 5:13-16.

உப்பும் ஒளியும்

மலைப்பொழிவில் இயேசு மொழிந்த எட்டு பேறுபெற்ற நிலைகளுக்கும், அவர் வழங்குகின்ற கட்டளைகளுக்கும் இடையே நிற்கிறது இன்றைய நற்செய்தி வாசகப்பகுதி. 'நீங்கள் இப்படி இருக்க வேண்டும்' என மொழிவதற்குப் பதிலாக, 'நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்' எனத் தம் சீடர்களின் தான்மையை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார் இயேசு. இத்தான்மையே அவர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைதல் வேண்டும். மேலும், சீடர்களின் செயல்கள் அல்ல மாறாக, அவர்களுடைய இத்தான்மையே அவர்களுடைய இருத்தலையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கிறது. தம் சீடர்கள் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் இயேசு. முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் இனம், திருச்சட்டம், எருசலேம், ஆலயம் போன்றவை ஒளியாகக் கருதப்பட்டன. ஆனால், இயேசு இதுமுதல் தம் சீடர்களே ஒளி என அழைப்பதன் வழியாக, ஒரு மாற்றுச் சமூகத்தை முன்மொழிவதுடன், இந்த அடையாளம் தருகின்ற பொறுப்புணர்வையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

(அ) 'நீங்கள் மண்ணுலகுக்கு உப்பாய் இருக்கிறீர்கள்'

உணவுக்குச் சுவையூட்ட, உணவைப் பதப்படுத்த, பலிப்பொருளோடு கலக்க என பல நிலைகளில் உப்பு பயன்படுகிறது. உப்பு தான் தழுவுகிற பொருளோடு கலந்து தன்னைப் பிறரின் கண்களுக்கு மறைத்துக்கொள்கிறது. ஆனால், மற்றவர்கள் உப்பைச் சுவைத்துப் பார்க்க முடியும். உப்பின் தன்மை அதன் உவர்ப்புத் தன்மையில்தான் இருக்கிறது. அத்தன்மையை அது இழந்தாலோ, அல்லது அதிலிருந்து அது பிறழ்வுபட்டாலோ அது தேவையற்ற பொருளாக மாறிவிடும். தட்பவெப்பநிலை, காலம், பொதிந்துவைக்கப்பட்ட இடம் போன்றவை உப்பின் தன்மையின்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சீடருடைய வாழ்விலும் புறக்காரணிகள் பல செயல்பட்டு அவர்களுடைய தன்மையைச் சீர்குலைக்க முயற்சி செய்யும். அந்த நிலையிலும் சீடர்கள் தங்கள் தன்மையை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் செய்கிற அனைத்தோடும் கலந்து அதற்குச் சுவை ஊட்ட வேண்டும்.

(ஆ) 'நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'

'ஒளி' என்னும் உருவகத்தோடு 'மலைமேல் உள்ள நகர்,' 'விளக்கு' என்னும் உருவகங்களும் இப்பகுதியில் இணைந்து மொழியப்படுகின்றன. உலகின் ஒளியாக வந்த இயேசு இப்போது தம் சீடர்களையும் ஒளி என அழைக்கிறார். உப்பு நாக்குடன் தொடர்புடையது. ஒளி கண்களுடன் தொடர்புடையது. ஒளி இருக்கும் வரைதான் வாழ்வு இருக்கிறது என்பது பண்டைக்கால நம்பிக்கை. மனித வாழ்க்கையும் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பெரிய மாற்றம் அடைந்துவிட்டது. ஒளி ஓர் உயிரின் இருத்தலை உறுதிசெய்வதுடன், இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. உப்பு மற்றும் ஒளி ஆகியவற்றின் இருத்தல் அவற்றின் பயன்பாட்டுத்தன்மையில்தான் இருக்கிறது. உப்பு கரைவது போல ஒளி கரைவதில்லை. ஆனால், ஒளி மற்றவர்களுக்குப் பயன்படாமல் தடுக்கப்படலாம். தடைகளைத் தாண்டி ஒளிர்கிறார்கள் சீடர்கள்.

இரண்டாம் உருவகத்தின் இறுதியில், 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க' என்னும் கட்டளை கொடுக்கிற இயேசு, அப்படி ஒளிர்வதன் வழியாகச் சீடர்கள் அல்ல, மாறாக, 'விண்ணகத் தந்தையை மக்கள் போற்றிப் புகழ்வார்கள்' என்கிறார். 'உங்கள் விண்ணகத் தந்தை' என்னும் சொல்லாடல் மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான ஒன்று. இங்கேதான் அது முதன்முதலாகப் பயன்படுத்தப்படுகிறது. சீடர்கள் வானகத் தந்தையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்னும் புதிய தான்மையும் இங்கு புலப்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், தானும் தன் பணியும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை அறிந்து, தன்விளக்கம் அளிக்கிறார் பவுல். தன் சொற்களிலும், செயல்களிலும் முரண் எதுவும் இல்லை என்று எடுத்துரைக்கிறார்: 'நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை.' கடவுளின் முரண்படா நிலை போல தன் நிலையும் இருப்பதாகக் கூறுகிறார்.

உப்பு தன் உப்புத்தன்மையை இழந்தால் தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில், அது பார்ப்பதற்கு உப்பு போல இருந்தாலும், உப்புத்தன்மை அதில் இல்லை.

தடுக்கப்படும் ஒளி இருளை உண்டாக்குவதான் அது தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில், ஒளியாக இருந்தாலும் அதன் மறைவான இருத்தல் இருளையே உண்டாக்குகிறது.

சீடர்களுடைய சொற்களும் செயல்கள் முரண்கள் தவிர்த்ததாக இருத்தல் வேண்டும். 

இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 119), 'உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்' எனப் பாடுகிறார் ஆசிரியர். ஆண்டவரின் முக ஒளி நம்மேல் வீசுவதால் நாம் ஒளிர்கிறோம். அவர் நம்மை அழைத்ததால் உப்பாக இருக்கிறோம்.

இன்று நாம் கொண்டாடுகிற பதுவை நகர் புனித அந்தோனியார் தன் எளிமைமிகு வாழ்வாலும், ஆற்றல்மிகு நற்செய்தி அறிவிப்புப் பணியாலும் உலகின் உப்பாக ஒளியாகத் துலங்கினார்.


Saturday, June 10, 2023

பசி – நற்கருணை - இணைந்திருத்தல்

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

இச 8:2-3,14-16. 1 கொரி 10:16-17. யோவா 6:51-58.

பசி – நற்கருணை - இணைந்திருத்தல்

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவின் மறைபொருளை பசி, நற்கருணை, இணைந்திருத்தல் என்னும் மூன்று சொற்களால் புரிந்துகொள்ள முன்வருவோம்:

அ. நம் பசி அனுபவம்.

ஆ. நற்கருணை நம் வாழ்வின் மையம்.

இ. நற்கருணை வழியாக இயேசுவோடு இணைந்திருத்தல்

அ. நம் பசி அனுபவம்

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களோடு உரையாடுகிற மோசே, அவர்களுடைய பாலைவனப் பயணத்தை நினைவூட்டுகின்றார். நீண்ட பயணத்தின் நோக்கம் என்ன என்பதை எடுத்துரைக்கின்றார். 'அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார்' என உரைக்கிறார். பசி என்பது எல்லா உயிர்களுக்குமான அடிப்படையான உணர்வு. மனிதர்களைப் பொருத்தவரையில் அனைவருக்கும் பொதுவாக இருக்கக் கூடிய உணர்வு இது. ஏழைகள், பணக்காரர்கள், ஆள்பவர்கள், ஆட்சிசெய்யப்படுபவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், நோயுற்றவர்கள், நலம் பெற்றவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், துறவிகள், போகிகள் என அனைவருக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய உணர்வு இது. இந்த ஓர் உணர்வுதான் நம் வாழ்வின் இயக்கத்தை நிர்ணயிக்கின்ற உணர்வாக இருக்கிறது. பசி எடுக்கிற உயிர்தான் தொடர்ந்து வாழ முடியும். இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் பசியாக இருந்தபோது அவர்களுக்கு மன்னமா பொழிகிறார் ஆண்டவராகிய கடவுள். தொடர்ந்து, வயிற்றுப் பசி நிறைவேறிய அவர்கள் கடவுளைப் பற்றிக்கொண்டு தங்கள் ஆன்ம பசி போக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பமாக இருந்தது. ஆன்மப் பசியைப் போக்குவது ஆண்டவரின் வார்த்தைகளே. நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பலுகச் செய்து தந்து அவர்களுடைய உடல் பசியைப் போக்குகிறார். தொடர்ந்து, அழியாத வாழ்வுதரும் உணவு பற்றி அவர் அவர்களோடு உரையாடுகிறார்.

உடல் பசியை அல்ல, மாறாக, நம் ஆன்மிகப் பசியைப் போக்குவதே ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடலும் திருஇரத்தமும். அப்படியெனில், என் உடல்சார் தேடலிலிருந்து ஆன்மிகத் தேடலுக்கு என்னால் கடந்து செல்ல இயல்கிறதா? உடல்பசியால் வாடும் என் சகோதர சகோதரிகள்மேல் நான் காட்டும் அக்கறை என்ன? உடல் பசியைத் தாண்டி, நீதிக்கான நேர்மையான வாழ்வுக்கான பசியை நான் கொண்டிருக்கிறேனா?

ஆ. நற்கருணை நம் வாழ்வின் மையம்

கொரிந்து நகரில் நற்கருணைக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எண்ணற்ற பிறழ்வுகள் இருந்தன. சிலை வழிபாடு, ஏற்றத்தாழ்வு போன்றவற்றைக் களைய வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்துகிற பவுல், திருவிருந்து கொண்டாடப்படுவதன் பொருளை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார் (இரண்டாம் வாசகம்). அப்பம் பிடுதல் தொடக்கத் திருஅவையின் முதன்மையான செயல்பாடாக இருந்தது. இந்நிகழ்வு வழியாக அவர்கள் இயேசுவை நினைவுகூர்ந்து அவருடைய உடனிருப்பு உணர்வைப் புதுப்பித்துக்கொண்டனர். மேலும், ஒரே அப்பத்தை உண்பதன் வழியாக ஒரே உடலாக மாறுகிறோம். நம்மிடையே உள்ள வேற்றுமைகள் மறைகின்றன.

நற்கருணை என் வாழ்வின் மையமாக இருக்கிறதா? ஞாயிறு நற்கருணைக் கொண்டாட்டங்களுக்கு நான் எதற்காகச் செல்கிறேன்? ஞாயிறு கடமையை நிறைவேற்றுவதற்காகவா? அல்லது நற்கருணையால் ஊட்டம் பெறுவதற்காகவா? பங்குத் தளத்தில் ஒரே அப்பத்தில் பங்குபெறும் நான் ஒருவர் மற்றவரிடம் வேறுபாடு பாராட்டாமல், மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேனா? நற்கருணையிலிருந்து என் கவனத்தைத் திருப்பும் கவனச் சிதறல்கள் எவை?

இ. நற்கருணை வழியாக இயேசுவோடு இணைந்திருத்தல்

'இணைந்திருத்தல்' (கிரேக்கத்தில், 'மெனேய்ன்') என்னும் வினைச்சொல் யோவான் நற்செய்தியில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. கடவுள்மேல் நாம் வேரூன்றி நிற்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு இச்சொல் எடுத்துரைக்கிறது. 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன் ... அவர்களும் என்னால் வாழ்வர்' என உரைக்கிறார் இயேசு. இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையம் உண்பதன் வழியாக நான் அவரோடு இணைகிறேன். அவருடைய மதிப்பீடுகளும் பண்புகளும் என்னுடையவை ஆகின்றன. 

நற்கருணை உண்ணும்போது, நற்கருணை வணங்கும்போது, நற்கருணை வழங்கும்போது, நானே நற்கருணையாக மாறும்போது இயேசுவோடு இணைகிறேன் எனில், இவற்றுக்கான தயாரிப்பும் தயார் மனநிலையும் என்னிடம் இருக்கின்றனவா? இயேசுவோடு இணைந்திருப்பதற்குப் பதிலாக நான் அவரிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கக் காரணங்கள் எவை?

ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் அடிப்படை உணர்வாகிய பசி உணர்வைக் கையிலெடுத்து, உணவின் வழியாகத் தம்மை நமக்கு வெளிப்படுத்தத் திருவுளம் கொண்டார். பசியற்ற வயிறுகள் மட்டுமே கடவுள்நோக்கிக் திரும்புகின்றன. கடவுள் நோக்கித் திரும்புகின்ற உள்ளங்கள் அவரோடு தம்மை இணைத்துக்கொள்கின்றன.

Friday, June 9, 2023

நல்லதைச் செய்யுங்கள்

இன்றைய இறைமொழி

சனி, 10 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 12:1, 5-15, 20. மாற்கு 12:38-44.

நல்லதைச் செய்யுங்கள்

தோபியாவுடன் வழி நடந்தது யார் என்று வாசகருக்குத் தெரியும். ஆனால், கதைமாந்தர்களுக்குத் தெரியாது. நூலின் இறுதியில் அசரியா தன்னை யாரென்று அறிமுகம் செய்கின்றார். தோபித்தையும், தோபியாவையும் தனியாக அழைத்துச் சென்ற இரபேல் தன்னை வெளிப்படுத்துகின்றார்:

'நல்லதைச் செய்யுங்கள். தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. நீதியுடன் இணைந்த தர்மம் அதைவிடச் சிறந்தது ... தர்மம் சாவினின்று காப்பாற்றும், பாவத்திலிருந்து தூய்மையாக்கும்' என அறிவுரை பகர்கின்றார் தூதர். மேலும், அவர்களின் வாழ்வில் தான் உடனிருந்த பொழுதுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய அறநெறி, வானதூதர் பற்றிய நம்பிக்கை, கடவுளின் உடனிருப்பு ஆகிய கருத்துருகளை நாம் இங்கே காண்கின்றோம்.

இன்று இந்நூலை வாசிக்கும்போது நமக்குள் சில கேள்விகள் எழலாம்: 'ஏன் கடவுள் இன்று தூதர்களை அனுப்புவதில்லை? ஏன் இன்று அறிகுறிகளும் வல்ல செயல்களும் நடந்தேறுவதில்லை? கடவுள் ஏன் தூரமாக நிற்கிறார்? நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது ஏன்?'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். காணிக்கைப் பெட்டியில் இவரே அதிகம் போட்டார் எனப் பாராட்டுகின்றார் இயேசு.

மறைநூல் அறிஞர்களைப் பற்றிக் கவனமாக இருங்கள் என எச்சரிக்கிற இயேசு, 'அவர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்' என்கிறார். தொடர்ந்து, தன்னிடம் இருந்த இரு செப்புக் காசுகளையும் ஏழைக்கைம்பெண் போட்டார் எனப் பாராட்டுகிறார் இயேசு. முதலில் உள்ள எச்சரிக்கையுடன் இணைத்துப் பார்த்தால், மறைநூல் அறிஞர்கள் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், கோவிலோ இருக்கிற செப்புக் காசுகளையும் பிடுங்கிக்கொள்கிறது என்று வாசிக்கத் தோன்றுகிறது. ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ள இரு செப்புக் காசுகளையும் போடும் அளவுக்கு கோவில் அல்லது சமயம் அவளது உள்ளத்தை மாற்றியிருக்கிறது என்பது நமக்கு வேதனை அளிக்கிறது. கைம்பெண்ணின் இரு செப்புக்காசுகளில்தான் கோவில் பராமரிக்கப்பட வேண்டும் என்றால், அக்கோவில் தேவையா என்றும், செப்புக்காசுகளுக்கு இணையாக அக்கைம்பெண்ணுக்குக் கோவில் எதைக் கொடுத்தது என்றும் கேட்கத் தோன்றுகிறது. மற்றவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொடுத்தார்கள், இக்கைம்பெண்ணோ தன் உள்ளத்தைக் கொடுத்தால் என்று சுருக்கி எழுத மனம் மறுக்கிறது.

அந்தப் பெண்ணின் பார்வையில் இது ஒரு பெரிய போராட்டமாக இருந்திருக்கும். ஒருவேளை கடவுள்மேல் உள்ள கோபத்தால் கூட அவர் அனைத்தையும் கடவுளுக்கே கொடுத்திருக்கலாம். அவள் தன் அடுத்த வேளை பற்றிக் கவலைப்படவில்லை. அவளின் துணிச்சல் நமக்கு வியப்பாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களின் காசுகள்தாம் நம் ஆலயங்களிலும் வந்து விழுகின்றன என நான் நினைக்கும்போது அருள்பணியாளராகிய என் பணி எவ்வளவு பொறுப்புணர்வுமிக்கது என்பதை நான் உணர்கிறேன். 

தான் பாராட்டப்பட்டதையும் அறியாமல் தன் பணியைச் செய்துவிட்டு, தன் காணிக்கையைச் செலுத்திவிட்டு தன் இடம் நகர்கிறார் ஏழைக் கைம்பெண்.

இன்றைய வாசகங்களை இணைத்துப் பார்க்கும்போது, நாம் கற்கிற ஒரு பாடம் இதுதான்: 'நல்லதைச் செய்யுங்கள்.' எளிதானது வேறு, நல்லது வேறு. நாம் பல நேரங்களில் எளிதானதைச் செய்கிறோம். நல்லதைச் செய்யத் தயங்குகிறோம். நல்லதைச் செய்வதற்குத் துணிச்சல் தேவை. நல்லதைச் செய்கிறார் தன் மகிழ்ச்சியை மட்டும் பார்க்கிறாரே தவிர, மற்றவர்களுடைய எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. நல்லதைச் செய்கிறார் இன்று என்னும் பொழுதில் வாழ்கிறார். 

தோபித்து நல்லதைச் செய்தார். ரபேல் அவருடைய உதவிக்கு அனுப்பப்பட்டார்.

ஏழைக்கைம்பெண் நல்லதைச் செய்தார். இயேசு அவரைப் பாராட்டினார்.

ரபேல் நம்மிடம் அனுப்பப்படவில்லை என்றாலும், இயேசு நம்மைப் பாராட்டவில்லை என்றாலும் நல்லதைச் செய்தல் நலம்.


Thursday, June 8, 2023

என் கண்ணின் ஒளியே

இன்றைய இறைமொழி

வெள்ளி, 9 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 11:5-17. மாற்கு 12:35-37.

என் கண்ணின் ஒளியே

தோபித்து நூல் கதையின் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிட்டது. சாராவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. வானதூதர் இரபேல் அலகையைக் கட்டிப்போட்டுவிடுகின்றார். தோபியா உயிர் பிழைக்கின்றார். அந்த வீட்டில் விருந்து அரங்கேறுகிறது. விருந்தின் களிப்பு முடிந்தவுடன் தந்தையை நினைவுகூர்கின்றார் தோபியா. உடனடியாகத் தந்தையின் இல்லம் திரும்ப ஏற்பாடுகள் நடக்கின்றன. நிறையப் பரிசுப் பொருள்கள் மற்றும் திரும்பப் பெற்றக் கடன் தொகையுடன் இல்லம் திரும்புகிறார் தோபியா. சாராவும் பணிப்பெண்களும் ஆடு, மாடுகளும் மெதுவாக வந்து சேர்கின்றன.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் இரபேலின் வார்த்தைகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றார் தோபியா. தன் தந்தையின் கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்க்க, அவர் பார்வை பெறுகின்றார். மீனுக்கும் கண்ணுக்கும் தொடர்பு உண்டு. கண் பார்வை சிறக்க மீன் எண்ணெய் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கண் பார்வை கிடைத்தவுடன், 'என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்!' என உள்ளம் மகிழ்கின்றார் தோபித்து. திருமணம் நிகழ்ந்த செய்தி கேட்டு உடனடியாக நகரின் வாயில் நோக்கிச் செல்கின்றார். அவர் தனியே செல்வதைக் காண்கின்ற ஊரார் வியக்கின்றனர்.

'ஆண்டவர் தன்மேல் இரக்கம் காட்டியுள்ளார்' என அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அறிக்கையிடுகின்றார் தோபித்து.

இதுதான் தோபித்தின் நம்பிக்கைப் பார்வை.

தன் வாழ்வில் நடக்கின்ற அனைத்திலும் கடவுளின் கரத்தைப் பார்க்கின்றார். இப்படிப் பார்ப்பதற்கு அசாத்தியத் துணிவும் நம்பிக்கையும் வேண்டும். நம் மனித உள்ளம் இயல்பாக, நம் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தன்னால்தான் இயன்றது என அறிவித்துக்கொள்ள முயற்சி செய்கின்றது. 'எல்லாம் என் கையால்!' என்ற எண்ணம் தான் பல நேரங்களில் நம் எண்ணமாக இருக்கிறது.

நம்பிக்கைப் பார்வை நமக்கு எளிதாக வருவதில்லை.

தாவீது அரசரின் வாழ்க்கையில் இதைப் பார்க்கின்றோம். தாவீதின் நம்பிக்கைப் பயணத்தை, 'பத்சேபாவுக்கு முன்' 'பத்சேபாவுக்குப் பின்' என்று பிரிக்கலாம். பத்சேபா நிகழ்வுக்கு முன் வரை, அனைத்தும் தன் கையால், அனைத்தும் தனக்கு என்று நினைக்கின்றார் தாவீது. தானே முடிவெடுக்கின்றார். தானே செயல்படுகின்றார். தானே உரியாவைக் கொல்கின்றார். ஆனால், ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தை அனுபவித்த அந்த நொடி முதல் அவருடைய வாழ்க்கை மாறுகிறது. நிறைய சோக நிகழ்வுகள் நடக்கின்றன. சொந்த மகனே அவரைக் கொல்லத் தேடுகின்றான். தன் சொந்த நாட்டிலேயே நாடோடியாக, பித்துப் பிடித்தவராகச் சுற்றித் திரிகின்றார், நிறைய பாலியல் பிறழ்வுகளும் வன்முறை நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. சவுலின் வீட்டார் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர். ஆனாலும், அவர் அனைத்தையும் இறைவனின் செயல் எனப் பார்க்கின்றார்.

எடுத்துக்காட்டாக, சவுலின் உறவினரான சிமயி, தாவீதைப் பழித்துரைக்கும்போது, 'அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில், ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்' என்கிறார்.

தோபித்து தன் மருமகளையும் கண்டு இல்லத்திற்குள் வரவேற்கின்றார். 'நலம், பேறு, மகிழ்ச்சி' ஆகிய அனைத்தும் உன்னோடு வருக! என வரவேற்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தாவீதுக்கும் மெசியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசப்படுகிறது.

தாவீது ஒரே நேரத்தில் மெசியாவின் தந்தையாகவும், மெசியாவின் பணியாளராகவும் இருக்கின்றார். அவர் மெசியாவின் தந்தை, ஏனெனில் இயேசு அவருடைய வழிமரபினராக இருக்கிறார். அவர் மெசியாவின் பணியாளர். ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் அவரைத் தம் பணிக்கு அழைத்தார்.

இறைவனின் கரத்தின் செயலை நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் கண்டு, அவருடைய இரக்கத்தைப் போற்றவது நலம்.

ஒவ்வொரு நாள் துயில் எழும்போதும் நமக்கு புதியதொரு நாள் கிடைக்கின்றது. அலெக்சாந்தர் அரசரின் பெரும்படை கூட ஒரு நாளுக்கு ஈடாகாது. அந்த நாளில் இறைவனின் இரக்கத்தை காணுதலும், அதே இரக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதும் இன்றைய நம் உறுதிப்பாடாக இருக்கலாம்.


Wednesday, June 7, 2023

மூன்று புள்ளிகள்

இன்றைய இறைமொழி

வியாழன், 8 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 6:10, 7:1, 9-14, 8:4-8. மாற் 12:28-34.

மூன்று புள்ளிகள்

சதுசேயர் இயேசுவைச் சோதித்ததைத் தொடர்ந்து, மறைநூல் அறிஞர்களும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' யூதர்கள் அனைவருக்கும் இக்கேள்விக்கான விடை தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூத ஆணும் தன் 12 வயது முதல் 'இஸ்ரயேலே கேள்' என்னும் இறைவேண்டலைச் செபிக்கும் வழக்கத்தைத் தொடங்குவார். இயேசு கற்றறிந்த மறைநூல் அறிஞர் அல்ல என்பதும், அவர் தச்சுத் தொழில் செய்யும் எளிய பின்புலம் கொண்டவர் என்பதும் அவருடைய சமகாலத்து எதிரிகளின் பேசுபொருளாக இருந்ததால் அவரைக் கேலி செய்யும் நோக்கத்துடனே இக்கேள்வியை அவரிடம் கேட்கிறார்கள் மறைநூல் அறிஞர்கள். 

இயேசு இக்கேள்விக்கான விடையைப் பகிர்வதுடன், முதன்மையான கட்டளையைச் சற்றே நீட்டி, அயலார்மேல் அன்பு, தன்மேல் அன்பு என மூன்று புள்ளிகளை முன்வைக்கிறார். 

இறைஅன்பு என்னும் புள்ளி நம் வாழ்வின் ஆதாரம்.

தன்அன்பு என்னும் புள்ளி நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் உருவாக்கம்.

பிறரன்பு என்னும் புள்ளி நம் வாழ்வு மற்றவர்கள்மேல் ஏற்படுத்தும் தாக்கம்.

இம்மூன்று புள்ளிகளும் வேறு வேறு நிலைகளில் மையங்களாக நம் வாழ்க்கையைச் சுழற்றுகின்றன.

இம்மூன்று புள்ளிகளையும் மையங்களாக வைத்துச் சுழன்ற ஓர் இணையரின் எடுத்துக்காட்டைப் பார்க்கிறோம். தோபியாவுக்கும் சாராவுக்கும் திருமணம் நடந்தேறுகிறது. ஒருவர் மற்றவரைத் தழுவுமுன் இருவரும் இணைந்து இறைவனைத் தழுவிக்கொள்கிறார்கள். 

இறைவனை ஆதாரமாகப் பற்றிக்கொள்வதற்கு நம்மிடம் உள்ள தடை தன்நிறைவு. அதாவது, 'நான் மட்டும் போதும்' என நினைப்பது.

நம்மை நாமே தொடர்ந்து உருவாக்கிக்கொள்வதற்குத் தடையாக இருப்பது 'இது போதும்' என நினைப்பது.

நம் வாழ்வு மற்றவர்கள்மேல் தாக்கம் ஏற்படுத்துவதற்குத் தடையாக இருப்பது நம் மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்வது.

இவை போன்ற தடைகள் தகர்த்தல் சிறப்பு.


Tuesday, June 6, 2023

அவர் வாழ்வோரின் கடவுள்

இன்றைய இறைமொழி

புதன், 7 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 3:1-11, 16-17. மாற்கு 12:18-27.

அவர் வாழ்வோரின் கடவுள்

தோபித்து நூலின் கதைமுடிச்சு இறுகுகிறது. நன்மைகள் மட்டுமே செய்து வந்த தோபித்து பார்வை இழக்கிறார். இகுவேலின் ஒரே மகளாகிய சாரா அடுத்தடுத்து கணவர்களை இழந்து பணிப்பெண்ணின் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார். தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணி வீட்டின் மாடியறைக்கு வருகிறார். தோபித்து வீட்டு முற்றத்தில் அமர்ந்துகொண்டு இறைவேண்டல் செய்கிறார். சாரா வீட்டின் மாடியில் அமர்ந்து இறைவேண்டல் செய்கிறார். இறைவேண்டல் முடித்து இருவரும் தத்தம் வீட்டினுள் நுழைகிறார்கள். பார்வை போய்விட்டது என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பது அன்றைய கால நம்பிக்கை. இதை ஒட்டியே, 'கண்தான் உடலுக்கு விளக்கு' (மத் 6:22) என்கிறார். தோபித்தைப் பொருத்தவரையில் இனி எல்லாமே இருள்தான். இறந்தவர்கள் இருக்கும் இடம் இருள் எனக் கருதப்பட்டது. இறந்தோரை அடக்கம் செய்யும்போது அவர்கள் கீழுலுகுக்கு, இருளின் உலகுக்குச் செல்கிறார்கள். ஏழு முறை திருமணம் செய்துகொண்ட சாராவை பேய் பிடித்தவர் என ஊரார் தூற்றுகிறார்கள். தூற்றுச்சொல் படிப்படியாகப் பரவி பணிப்பெண் வழியாக சாராவின் காதுகளை எட்டுகிறது. மற்றவர்கள்முன் மானம் இழந்துவிட்ட சாரா தன் உயிரையும் இழக்க நினைக்கிறார். 

ஆனால், இருவருமே இறைவனை நினைவுகூர்ந்து அவரிடம் இறைவேண்டல் செய்கிறார்கள். இறைவேண்டல் செய்த அந்த நொடி அவர்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது. பிரச்சினையைத் தங்கள் கண்களுக்கு அருகில் வைத்துப் பிடிக்கும் கல் போலப் பார்க்காமல், சற்றே தள்ளி வைத்துப் பார்க்கிறார்கள். தங்கள் கடவுள் வாழ்வோரின் கடவுள் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகிற சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வியை எழுப்புகிறார்கள். ஒரு பெண்ணும் ஏழு கணவர்களும் என்னும் உருவகம் வழியாக உயிர்ப்புக்குப் பின் உள்ள வாழ்வைக் கேலி செய்கிறார்கள் சதுசேயர்கள். ஏனெனில், அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பவில்லை. வாழ்க்கை என்பது இவ்வுலகில் முடிந்துவிடக் கூடியது என்னும் குறுகிய பார்வை கொண்டிருந்த சதுசேயர்களின் பார்வையைச் சற்றே நீட்டி, கடவுளின் முன்னிலையில் இறந்தோரும் வாழ்கின்றனர் என்பதால் அவர் வாழ்வோரின் கடவுள் என முன்மொழிகிறார் இயேசு.

இவ்விரு வாசகங்களும் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) இருள் மற்றும் பழிச்சொல் ஏற்றல். நம் வாழ்வின் சில பொழுதுகளில் நாம் இருளில் நடப்பது போல உணர்கிறோம். நம் கண்கள் திறந்திருந்தாலும் நம்மால் எதையும் பார்க்க முடியாமல், குழப்பத்தில் இருக்கிறோம். மேலும், நமக்கு அருகில் இருப்பவர்கள் நம்மைப் பற்றிய தவறான புரிதல்கொண்டு நம்மேல் பழிச்சொல் கூறுவர். இம்மாதிரியான நேரங்களில் பொறுமை மிக அவசியம். இல்லை எனில், உணர்வுகளால் நாம் அலைக்கழிக்கப்பட நேரிடும்.

(ஆ) இறைவேண்டல் செய்தல். இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்யும்போது, அச்சொற்கள் இறைவனைத் தேடிச் செல்கின்றனவோ என்னவோ, அவை நம்மை நோக்கி வந்து நம் வாழ்க்கை மாற்றுகின்றன. நாம் சொல்லும் நேர்முகச் சொற்கள் நமக்கு ஊக்கம் தருகின்றன. இறைவனின் உடனிருப்பு நமக்குப் பலம் தருகிறது.

(இ) இறப்பின் காரணிகள் தவிர்த்தல். நம் கடவுள் வாழ்வோரின் கடவுள் எனில், நாம் வாழும் கடவுளின் மக்கள் எனில் இறப்பு எண்ணங்களும், செயல்பாடுகளும் நம் வாழ்வில் மறைய வேண்டும். 'எல்லாம் முடிந்தது', 'என்னால் இயலாது', 'இது போதும்', 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' போன்ற எண்ணங்கள் நம் வாழ்வின் இயக்கத்தை மெதுவாக நிறுத்துகின்றன. இத்தகைய எண்ணங்களிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.


Monday, June 5, 2023

கத்திய ஆட்டுக்குட்டி!

இன்றைய இறைமொழி

செவ்வாய், 6 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 2:9-14. மாற்கு 12:13-17.

கத்திய ஆட்டுக்குட்டி!

நேற்று நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகத்தில் தோபித்து என்னும் கதைமாந்தர் அறிமுகம் செய்யப்பட்டார். மிகவும் நேர்மையாளராக இருக்கிற தோபித்து சட்டம் வரையறுக்கிற நற்செயல்களையும், அறத்தின் அடிப்படையிலான செயல்களையும் செய்கிறார். தோபித்தின் நற்செயல்களில் முதன்மையானது இறந்தவர்களை அடக்கம் செய்தல். இறந்தவர் ஒருவரை அடக்கம் செய்துவிட்டு, இல்லம் வருகின்ற தோபித்து முற்றத்தில் உறங்குகிறார். அப்போது அங்கே கூரையில் நிற்கிற குருவிகளின் எச்சம் கண்களி;ல் விழ, அவர் பார்வை இழக்கிறார். நற்காரியம் செய்துவிட்டுத் தூங்கிய ஒருவரைக் கடவுள் காப்பாற்ற வேண்டாமா? நன்மை செய்கிற ஒருவருக்குத் தீமை நிகழ்வதேன்? என்னும் கேள்விகள் வாசகருக்கு எழுகிறது. 'பார்வை இழந்ததைப் பற்றித் தோபித்து முறையிடவில்லை' எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஆக, நற்குணங்கள் செய்வதால் தீமை நம்மைவிட்டு அகலும் என்னும் உத்திரவாதம் இல்லை. தோபித்து எந்தவொரு முறைப்பாடும் இல்லாமல் இருக்கிறார். அதாவது, தன் கட்டுக்குள் இயலாத ஒன்றைப் பற்றி அவர் அக்கறைப்படவில்லை.  நேர்மையாளர்கள் ஏன் துன்புற வேண்டும்? என்னும் கேள்விக்கான விடை புதிராகவே உள்ளது.

வாசகத்தின் பிற்பகுதியில், தோபித்துக்கும் அவருடைய மனைவி அன்னாவுக்கும் இடையேயான உரையாடல் தோபித்து பற்றிய இன்னொரு பார்வையைத் தருகிறது. தோபித்தின் மனைவி அன்னா கைவேலைப்பாடு செய்பரவாக அறிமுகப்படுத்துகிறார். அன்னா தன் வேலைக்கு அன்பளிப்பாகப் பெற்ற ஆட்டுக்குட்டி திருடப்பட்டதாக இருக்குமோ எனத் தன் மனைவிமீது சந்தேகம் கொள்கிறார் தோபித்து. நேர்மையாளர்கள் சில நேரங்களில் மற்றவர்களின் நேர்மை மற்றும் நன்மைத்தனம் பற்றிச் சந்தேகப்படுவதோடல்லாமல், மற்றவர்கள் அனைவரும் தீயவர்கள் என்றும் தீர்;ப்பளிக்கின்றனர். எனவேதான் நேர்மையாக இருப்பது ஒருவகை வெறி என மொழிகிறார் சபை உரையாளர்: 'நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறிகொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக்கொள்வானேன்?' (சஉ 7:16). தோபித்து தன் மனைவியின் செயலைக் குறித்து நாணுவதாகப் பதிவு செய்கிறார். அதாவது, இவர் எந்த அளவுக்கு நேர்மையாளர் என்றால் மற்றவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் சார்பாக வெட்கப்படுகிறார். இவ்வாறாக, தோபித்தின் நேர்மையை முன்மொழிகிறார் ஆசிரியர்.

நற்செய்தி வாசகத்தில், 'சீசருக்கு உரியதைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள்' (மாற் 12:13-17) என்கிறார் இயேசு. அவரிடம் கேள்வி கேட்டவர்களுக்கு இந்த விடை புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களுடைய கேள்வி வரி செலுத்துவதைப் பற்றியதாக இருந்தது. 'நீதி என்பது அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது.' ஒருவருக்கு உரியதைக் கொடுப்பது என்பதற்கு முன்னால், அவருக்கு உரியது எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும். ஆய்ந்தறிந்தபின் அதை அவருக்கு வழங்குவதில் சமரசம் செய்துகொள்ளாமல் இருத்தல் வேண்டும். 

கத்திய ஆட்டுக்குட்டி தோபித்தின் வாயைத் திறக்க வைத்தது.

இயேசுவைச் சோதிக்க வந்த ஏரோதியர் அவருடைய வாயைத் திறக்கிறார்கள். 

தோபித்தும் இயேசுவும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். 'ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்' என இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 112) வாசிக்கிறோம். 

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) முறைப்பாடு தவிர்த்தல். நம் கட்டுக்குள் இல்லாதவை பற்றிய முறைப்பாடு பல நேரங்களில் நம்மைச் சோர்வாக்கிவிடுகிறது. நம் கட்டுக்குள் இல்லாதவை பற்றிய விழிப்புணர்வு இருத்தல் நலம். கட்டுக்குள் இல்லாதவற்றை அப்படியே ஏற்றுக்கொள்தலும் நலம்.

(ஆ) நேர்மையாளராக இருத்தல். நேர்மையாளராக இருந்தால் நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல, மாறாக, நேர்மையாளராக இருப்பதால் நல்லது நடக்கவில்லை என்றாலும் நேர்மையாளராக இருத்தல் சிறப்பு.

(இ) பொருள்சார்ந்த செயல்பாடுகளிலும் அருள்சார்ந்த செயல்பாடுகளிலும் முழுமையாக ஈடுபடுதல். 


Saturday, June 3, 2023

அனுபவம்-சான்று, கடவுள்-அன்பு, ஒற்றுமை-வேற்றுமை

மூவொரு கடவுள் பெருவிழா

விப 34:4-6,8-9. 2 கொரி 13:11-13. யோவா 3:16-18.

அனுபவம்-சான்று, கடவுள்-அன்பு, ஒற்றுமை-வேற்றுமை

இன்று மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதி வாக்கியம் மூவொரு இறைவன் வாய்ப்பாடாக அமைந்துள்ளது: 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்களனைவரோடும் இருப்பதாக' (2 கொரி 13:13). இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் மூவொரு கடவுள் மறைபொருளை பின்வரும் சொல்லாடல் இணைவுகளாகப் புரிந்துகொள்வோம்: 'அனுபவம்-சான்று,' 'கடவுள்-அன்பு,' 'ஒற்றுமை-வேற்றுமை.'

அ. மூவொரு கடவுள் நம்பிக்கையை அனுபவித்தலும் சான்று பகர்தலும்

கடவுள் அனுபவம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு சமூகத்தவர் அல்லது ஒரே நம்பிக்கையைப் பகிர்கின்ற மக்கள், தங்கள் கடவுள் இப்படித்தான் என்று அனுபவித்து அதைச் சொற்களால் வடிக்க முயற்சி செய்கின்றனர். யூதர்களின் யாவே, இசுலாமியர்களின் அல்லா, இந்துக்களின் விஷ்ணு-பிரம்மன்-சிவன், புத்தர்களின் புத்தர், சைனர்களின் மகாவீரர் இப்படியாக, மனிதர்கள் கடவுளர்களையும், கடவுள்-மனிதர்களையும் கொண்டாடி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட கடவுள் என்பவர் ஒரு அனுபவமே. ஆக, மூவொரு இறைவன் என்பது வெறும் நம்பிக்கைக் கோட்பாடு அல்ல. மாறாக, முதலில் அது ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்துள்ளது: ஆபிரகாமுக்கு மெம்ரே என்ற இடத்தில், மோசேக்கு சீனாய் மலையில் (முதல் வாசகம்) , யோசுவாவுக்கு எரிக்கோவில், திருத்தூதர்களுக்கு இயேசுவில் (நற்செய்தி வாசகம்), முதல் கிறிஸ்தவர்களுக்கு தூய ஆவியாரில் (இரண்டாம் வாசகம்).

நாம் திருமுழுக்கு பெற்றபோது மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்கு பெற்றோம். நம் வழிபாடுகள் அனைத்தையும் மூவொரு கடவுள் பெயரால்தான் தொடங்கி நிறைவு செய்கிறோம். திருச்சிலுவையின் அடையாளத்திலும் நாம் மூவொரு கடவுள் பெயரையே சொல்கிறோம். தந்தையாகிய கடவுள் நம் நெற்றியையும், மகனாகிய கடவுள் நம் இதயத்தையும், தூய ஆவியார் நம் கரங்களையும் ஆட்சி செய்ய வேண்டும் என இறைவேண்டல் செய்கிறோம். நம் எண்ணம், உணர்வு, வலிமை என அனைத்தும் மூவொரு கடவுளால் புனிதப்படுத்துகின்றன. மேலும், நாம் மற்றவர்கள்முன் நம்பிக்கை அறிக்கை செய்யும்போதும், திருச்சிலுவை அடையாளத்தை வரைகிறோம். இவ்வாறாக, மூவொரு கடவுள் நம்பிக்கை என்பது நம் அன்றாட வாழ்வியல் அனுபவமாக இருப்பதுடன், சான்று பகர்தலுக்கான தளமாகவும் இருக்கிறது.

நாம் அன்றாடம் நமக்கு நாமே அல்லது மற்றவர்கள்மேல் வரையும் இந்த அடையாளம் ஓர் அனிச்சை செயல்போல நடந்தேறுகிறதா? அல்லது நாம் அதன் பொருளுணர்ந்து மூவொரு கடவுளின் உடனிருப்பைக் கொண்டாடுகிறோமா?

ஆ. கடவுள் அன்பாக இருக்கிறார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நிக்கதேமுடன் உரையாடுகிற இயேசு, 'கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என மொழிகிறார். கடவுளின் முதன்மையான உணர்வாக அன்பு முன்வைக்கப்படுகிறது. மேலும், கடவுளின் இந்த அன்பு தம் மகனையே உலகுக்காக அளிக்கும் தற்கையளிப்பு என்னும் செயலாக வெளிப்படுகிறது. முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தம்மையே மோசேக்கு வெளிப்படுத்தும் நிகழ்வில் 'இரக்கம்,' 'பரிவு,' 'பேரன்பு,' 'நம்பகத்தன்மை,' 'பற்றுறுதி,' 'மன்னிப்பு' ஆகியவை அன்பின் பரிமாணங்களாக வெளிப்படுகின்றன. கடவுள் காணக்கூடாத நிலையில் அல்ல, மாறாக, அனுபவித்து உணரக்கூடிய உணர்வுகளாக நம் நடுவில் இருக்கிறார்.

கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் நான் உணர்கின்ற பொழுதுகள் எவை? அவருடைய அன்பையும் இரக்கத்தையும் உணர்கின்ற நான் அவற்றை மற்றவர்களுக்குக் காட்ட முயற்சி செய்கிறேனா?

இ. வேற்றுமையில் ஒற்றுமை

கடவுள் மூன்று ஆள்களாக இருந்தாலும் ஒரே இறைத்தன்மையைக் கொண்டிருக்கிறார். மூன்று ஆள்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் வேறுபாடும் உயர்வு தாழ்வும் இல்லை. மதிப்பும் ஏற்றுக்கொள்தலும் ஒருவரை மற்றவர் நிரப்புதலும் அங்கே நிரம்பி வழிகிறது. நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம். பாலினம், சமயம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், படிப்பு, பதவி, பணம் என அனைத்திலும் நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம். ஆனால், மானுடம் என்ற நிலையிலும், நம்மில் குடிகொள்ளும் இறைச்சாயல் என்ற நிலையிலும் நம்மிடம் ஒற்றுமைக்கான கூறும் உள்ளது. 

வேற்றுமையில் ஒற்றுமை என்பது கடவுளில் செயல்படுகிறது எனில், என் தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வில் நான் அதை வாழ்வாக்காதது ஏன்? என்னிடமிருந்து மற்றவரை வேற்றுமைப்படுத்தும் காரணியை எண்ணிப்பார்ப்பதை விடுத்து, மற்றவரையும் என்னையும் இணைக்கும் காரணிகளைப் போற்றி வளர்க்க நான் முயற்சி செய்யாதது ஏன்?

நிற்க.

நாம் எதற்காகக் கடவுளைத் தேடுகிறோம்?

நம் வாழ்வில் நாம் உணரும் பத்து எதிர்மறை உணர்வுகளில் அல்லது உணர்வுகளால் நாம் இறைவனைத் தேடுகிறோம் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்:

1. பயம் - எதிர்காலம், நிகழ்காலம், மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய பயம்.

2. கோபம் - எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததால் எழும் கோபம்.

3. குற்றவுணர்வு - நாம் செய்த தவறு அல்லது பாவத்திற்காக எழும் வருத்தம்.

4. தாழ்வு மனப்பான்மை - தன்மதிப்பு குறைந்த நிலை.

5. பொறாமை - குறைவு மனப்பான்மை கொண்டிருத்தல்.

6. பலிகடா ஆக்கப்படுவது - எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று உணர்வது.

7. ஒதுக்கப்படுதல் - பிறப்பிலிருந்து அல்லது சூழ்நிலைகளால்.

8. நிராகரிக்கப்படுதல் - தகுதி பெற்றிருந்தும் தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற உணர்வு.

9. விலகிக்கொள்தல் - ஒரு நபர் தானே விலகிக் கொள்தல்.

10. இறுமாப்பு - தன்னிடம் இருப்பதை விட அதிகமாகக் காட்டிக்கொள்வது. லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போல.

இந்த உணர்வுகளில் சில உணர்வுகளை, அல்லது எல்லா உணர்வுகளையும் உணருகின்ற ஒருவர், அவற்றுக்கு மாற்றாக அல்லது மருந்தாக நேர்முக உணர்வுகளைத் தேடுகின்றார். பயத்திற்கு மருந்தாக நம்பிக்கை, கோபத்திற்கு மருந்தாக ஏற்றுக்கொள்தல், குற்றவுணர்வுக்கு மருந்தாக மன்னிப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக தன்மதிப்பு, பொறாமைக்கு மருந்தாக நிறைவுமனம், பலிகடா மனநிலைக்கு மருந்தாக தலைவன் மனநிலை, ஒதுக்கப்படுதலுக்கு மருந்தாக உள்வாங்கப்படுதல், நிராகரிக்கப்படுதலுக்கு மருந்தாக அங்கீகரிக்கப்படுதல், விலகிக்கொள்தலுக்கு மருந்தாக பங்கேற்றல், இறுமாப்புக்கு மருந்தாக தன்னறிவு.

கடவுளைத் தேடுதல் என்பது நம் அன்றாட வாழ்வியல் அனுபவம். கடவுளே தம்மை நமக்கு வெளிப்படுத்தினாலன்றி அவரை நாம் அறிந்துகொள்ள இயலாது. 'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (யோவா 1:18).

காணக் கூடாத கடவுளின் காணக் கூடிய முகமாக வந்த இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியதோடு, கடவுள்தன்மை நோக்கிப் பயணம் செய்வது நமக்கும் சாத்தியம் எனக் கற்பித்தார்.

கடவுள் அனுபவம் பெற்றுள்ள நாம் கடவுளுக்குச் சான்று பகரவும், அன்பாகவும் மதிப்பாகவும் ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்தல் நலம்.


Friday, June 2, 2023

எந்த அதிகாரத்தால்?

இன்றைய இறைமொழி

சனி, 3 ஜூன் 2023

பொதுக்காலம் 8-ஆம் வாரம்

சீஞா 51:12-20. மாற் 11:27-33.

எந்த அதிகாரத்தால்?

இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்திவிட்டார். அவர் ஆலயத்தின் அருகே இருப்பதைக் காண்கின்ற தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், 'எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்?' என்று அவரிடம் கேள்வி கேட்கின்றனர்.

அவர்களின் கேள்வி இயல்பானதுதான். ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மறைநூல் அறிஞர்களும், போதகர்களும், 'தலைமைச் சங்கத்தின் அதிகாரத்தால்,' 'சட்ட நூல்களின் அதிகாரத்தால்,' 'தான் சார்ந்திருக்கின்ற பள்ளியின் அதிகாரத்தால்' போதித்தனர். அதிகாரத்தை மீறி அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்த அதிகாரத்தையும் பெற்றவர் அல்லர் என்பதை அவர்கள் அறிவர். ஆகையால்தான் இந்தக் கேள்வியை அவர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர்.

கேள்வி கேட்டவர்களிடம் விடையாக எதிர்கேள்வி கேட்கிறார் இயேசு: 'திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? மண்ணகத்திலிருந்து வந்ததா?' இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன விடை தந்தாலும் மாட்டிக்கொள்வர். ஆகவே, 'எங்களுக்குத் தெரியாது' என்று சொல்லித் தப்புகின்றனர். இயேசுவும் தன் அதிகாரம் பற்றி அவர்களுக்கு விடை தர மறுக்கின்றார்.

நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புனித அகுஸ்தினார், 'நம்புகிறவர் விளக்கம் கேட்பதில்லை. விளக்கம் கேட்பவர் நம்புவதில்லை' என்பார்.

இயேசு, தன் அதிகாரம் விண்ணிலிருந்து வந்தது என்று சொன்னால் மறைநூல் அறிஞர்கள் நம்பப் போவதில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆக, தன்னை நம்பத் தயாராக இல்லாதவர்களுக்காக தன் ஆற்றலை வீணடிக்கவில்லை இயேசு.

இயேசு எந்தவொரு ஆற்றல் கசிவுகளையும் (energy leaks) கொண்டிருக்கவில்லை.

ஆற்றல் கசிவு என்றால் என்ன?

ஒரு பானையில் இருக்கும் சிறிய கீறல் பானையில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிடுகிறது. எதிர்மறை உணர்வுகளால் - பயம், கோபம், கலக்கம், குற்றவுணர்வு, ஒப்பீடு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, முற்சார்பு எண்ணம் - நம்மில் விழும் கீறல்கள் நம் ஆற்றலை வீணடித்துவிடுகின்றன.

எந்த நிலையிலும் இயேசு தன்னை முழுவதும் அறிந்தவராக இருந்தார். தன்மேல் ஆளுகை செலுத்தினார். எந்தவொரு உணர்ச்சிப் பெருக்கிற்கும் அவர் இடம் தரவில்லை.

நாம் பல நேரங்களில் தேவையற்று மற்றவர்களுக்கு நம்மைப் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறோம். அல்லது, நாம் யார் என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றோம். அப்படிச் செய்யும்போதெல்லாம் நம் ஆற்றல் கசிந்துகொண்டிருக்கின்றது.

இயேசுவின் அதிகாரம் அவருக்கு உள்ளேயே இருந்தது.

'ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்புகிறேன்' என முதல் வாசகத்தில் மொழிகிறார் ஆசிரியர். அதாவது, தன் வாழ்நாள் முழுவதும் தன் ஆற்றல் கசிவுகளால் ஞானத்தைப் பெறும் ஆற்றலை இழக்கிறார் ஆசிரியர்.

ஆற்றல் கசிவுகளை மேற்கொள்வது எப்படி?

(அ) தன்னறிவு. நம் நேரம் மற்றும் கவனம் எதை நோக்கியதாக இருக்கிறது என்பது பற்றிய தன்னறிவு முதற்படி. நாம் எதை எண்ணிக்கைக்குள் கொண்டுவருகிறோமோ அதை நம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

(ஆ) தன்கட்டுப்பாடு. நம் மூளை நம் விருப்பத்தின் கட்டுக்குள் இருக்க வேண்டும். இதுவே தன்கட்டுப்பாடு.

(இ) தன்முனைப்பு. நாம் விரும்புவதைச் செய்யக் கூடிய தன்முனைப்பு. அதாவது, நம் இலக்கு எதுவோ அதைத் தெளிவாக வைத்துக்கொண்டு தன்னலத்தோடு தொடர்ந்து முன்னேறுவது.