இன்றைய (21 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 3:7-12)
வந்து விழுந்தனர்
'மக்கள் தன்னை நெருக்கிவிடாதவாறு இயேசு தனக்காகப் படகு ஒன்றை ஏற்பாடு செய்கின்றார்'
'நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று அவர்மேல் வந்து விழுந்தனர்'
மேற்காணும் வார்த்தைகள் சொல்லும் நிகழ்வைக் கற்பனை செய்து பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
நான் பேராயர் அவர்களின் செயலராக இருந்தபோது, மக்கள் பேராயர் அவர்களைத் தொட வேண்டுமென்று அவர்மேல் வந்து விழுவதைக் கண்டுள்ளேன்.
நாம் காண இயலாத ஒன்றைத் திடீரெனக் காணும்போது,
அல்லது நமக்கு ஒரு பெரிய தேவை இருந்து அந்தத் தேவையை நிறைவு செய்ய ஒருவர் இருக்கிறார் என்று எண்ணும்போது,
அல்லது ஒருவரின் உடனிருப்பு நமக்குப் பிடிக்கும்போது
நாம் அவரைப் பற்றிக்கொள்ள விரும்புகின்றோம்.
இயேசுவின் எதிரிகள் அவரைக் கண்டு விலகிச் செல்கின்றனர், தூர நின்று அவர்மேல் குற்றம் சுமத்த விழைகின்றனர், தள்ளி நின்று அவரைச் சிக்க வைக்கப் பார்க்கின்றனர்.
அதே வேளையில், இயேசுவின் நண்பர்கள் அல்லது அவருடைய பணியால் பயன்பெற்றோர் அவரைப் பற்றிக்கொள்ள விரும்புகின்றனர்.
மேலே வந்து விழுதலுக்கான எதிர்ப்பதம் விலகிச் செல்லுதல்.
இந்த நிகழ்வு நமக்கு இரு நிலைகளில் பாடம் கற்பிக்கிறது:
ஒன்று, நான் இன்று கடவுளை மேற்காணும் மாந்தர்கள்போலத் தேடுகிறேனா? அவர்மேல் போய் விழும் அளவுக்கு ஆர்வம் கொள்கிறேனா?
இரண்டு, மக்கள் தன்னை விட்டு விலகிச் சென்றாலும், தன்மேல் வந்து விழுந்தாலும் இயேசு சமநிலையில் இருக்கின்றார். மக்களின் செயல்கள் அவரின் மகிழ்ச்சியைக் குறைக்கவும் இல்லை, கூட்டவும் இல்லை. எல்லாரும் தன்னைத் தேடுகிறார்கள் என்று இயேசு மகிழவும் இல்லை, யாரும் தன்னுடன் இல்லையே என்று அவர் வருந்தவும் இல்லை. எதையும் பற்றிக்கொள்ளாத அவர், தன்னைப் பற்றிக்கொண்ட மக்களைப் பற்றிக்கொள்ள விரும்பவில்லை. இன்று நான் மற்றவர்களின் பாராட்டுகளையும் அல்லது விமர்சனங்களையும் எதிர்கொள்ளும்போது என் மனநிலை எப்படி இருக்கிறது? தன்னை அறிந்தவர்கள், தன்னை வென்றவர்கள், தன்னை அன்பு செய்பவர்கள் எந்த நிலையிலும் உறுதியாக இருப்பர்.