Saturday, July 5, 2014

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்...

இன்றைக்கு நமக்கு நிறைய கவலைகள் இருக்கு! அப்படித்தானே!

கவலைகளைக் களைவதற்காகக் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புக்களும் நமக்கு இன்னும் அதிக கவலைகளையே கொண்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக, ஐயோ! தூரத்தில் இருக்கும் நம் நண்பரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையே என்ற கவலையைப் போக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. ஐயோ! நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் பேச முடியவில்லையே என்ற கவலையைப் போக்க அலைபேசி வந்தது. ஐயோ! முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லையே என்ற கவலையைப் போக்க வீடியோ ஃபோன் காலிங் வந்தது. இந்த மூன்று கண்டுபிடிப்புக்களும் ஒரு கவலையைப் போக்கினாலும், மற்றொரு கவலையை உடன் கொண்டுவரத் தானே செய்கிறது.

தொலைபேசி பில், டாப்அப், நெட்வொர்க், ஆஃப்ஃபர், பேட்டரி பிராப்ளம், இண்டர்நெட் பிராப்ளம் என கவலைகள் ஒரு பக்கம். ஃபோன் என்கேஜ்ட் என்றால் பிராப்ளம்! ஃபோன் எடுக்கவில்லையென்றால் பதற்றம்! ஃபோன் எடுத்து விட்டால் பேசிக்கிட்டே இருக்கிறாங்களே என்ற கவலை! கவலைக்கு மேல் கவலை வந்து விடுகிறது!

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்களுக்கு இருந்த கவலை மூன்று மட்டும் தான்:

அ. தங்கியிருக்க வீடு.
ஆ. பாதுகாப்பான நகரம்.
இ. வயிற்றுக்கு உணவு.

இந்த மூன்று கவலைகளும் ஆண்டவரால் அன்றி வேறு எதனாலும் நிறைவு செய்யப்படுவதில்லை என்றும், ஆண்டவரின் துணையில்லாமல் நாம் மட்டும் இதை நிறைவேற்ற முயற்சிப்பதும் வீண் என்கிறது இன்றைய திபா 127.

அ. ஆண்டவரே வீட்டைக் கட்ட வேண்டும்.
ஆ. ஆண்டவரே நகரைக் காக்க வேண்டும்.
இ. ஆண்டவரே உழைப்பிற்கேற்ற பயனைத் தர வேண்டும்.

இந்த மூன்றும் இறைவனிடமிருந்து வரும்போது ஒருவருக்குக் கிடைக்கும் ஆசீரே 'பிள்ளைப்பேறு'.

பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம். அவர் அளிக்கும் பரிசு.

பிள்ளைகள் நம் வழியாக இந்த உலகிற்கு வந்தாலும் அவர்கள் நமக்குச் சொந்தமானவர்கள் அல்லர். அவர்கள் மேல் நாம் நினைப்பதை திணிக்க முடியாது. அவர்கள் எதிர்காலத்திற்கு உரியவர்கள். நாம் இறந்த காலத்தில் பெற்ற பாடங்களையும், சிந்தனைகளையும் அவர்களும் பின்பற்ற வேண்டும் என நினைப்பதும் சால்பன்று.

இன்று நம் கவலைகள் என்னவென்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம். கவலைகள் எல்லாமே தேவையற்றவைதான். பல கவலைகள் நம் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருப்பவை. அவைகளைக் குறித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்றைக்கு மழை பெய்கிறதே என்று கவலைப்பட்டால் மழை நின்றுவிடுமா என்ன?

கவலைகள் வேண்டாம்...!

இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்...!

நாம் கடவுளின் செல்வம்! அவர் உலகிற்குத் தந்த பரிசு!


1 comment:

  1. இன்றைய நாகரீக யுவனின் கவலைகள் தேவையற்றவை எனவும்,ஒருவனுக்கு வீடு,உணவு,தங்குமிடம்..இவை பற்றிய கவலைகளே உண்மையானவை எனவும் இவை நிறைவேறும் பட்சத்தில் இறைவன் பொழியும் ஆசீர்தான் 'பிள்ளைப்பேறு' என்றும் கூறியுள்ளீர்கள்.அப்படியெனில் பிள்ளைப்பேறு பெற்ற அனைத்துப்பேருக்கும் இந்த மூன்று செல்வங்களும் கிடைத்திருக்கும் வேண்டுமே...ஆனால் அது நடைமுறை உண்மையல்லவே..யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? எப்படியோ எங்கள் மூளையைத் துருப்பிடிக்கவிடாமல் அதைக் கசக்கிப் பிழிந்து யோசிக்க வைப்பதற்கு நன்றிகள்....பாராட்டுக்கள்...

    ReplyDelete