Thursday, July 10, 2014

சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது...நலம்...இனிமை!

திபா 131ஐப் போலவே திபா 133லிலும் மூன்று வசனங்கள்.

'சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது நன்று எனவும், இனியது எனவும் சொல்கிறது' முதல் வசனம்.

அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டு வசனங்களும் அந்த ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்பதன் உருவகங்களாக இருக்கின்றன:

அ. ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட நறுமணத்தைலம் போல.

ஆ. மலைப்பனி சீயோனின் மலைகள் மேல் இறங்குவது போல.

நாம் சின்ன வயதில் ஒற்றுமைக்கு எனக் கேள்விப்பட்ட கதைகள் மூன்று:

அ. சிங்கமும், எருதுகளும். தனித்தனியே மேய்ந்த எருதுகள் சிங்கத்திற்கு இரையாக, ஒரு நாள் முடிவெடுத்து அனைத்து எருதுகளும் ஒருங்கே இணைந்து சிங்கத்தை விரட்டுவது.

ஆ. வேடன் வலையில் சிக்கிய புறாக்கள் வேடன் வருவது கண்டு வலையோடு பறந்து போதல். பின் எலி ஒன்று அவர்களை விடுவித்தல்.

இ. மரணப்படுக்கையில் இருக்கும் தந்தை ஒருவர் தன் பிள்ளைகளை ஆளுக்கொரு குச்சி கொண்டு வரச் சொல்வார். குச்சிகள் தனித்தனியாக இருந்தால் அதை எளிதாக உடைத்து விடலாம். ஆனால் மொத்தமாக நின்றால் உடைக்க முடியாது.

இந்த மூன்று கதைகளும் ஒற்றுமை என்றால் பலம் என்றும், 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதையும் உருவகம் செய்பவை.

திருப்பாடலின் உருவகங்கள் ஒற்றுமையால் வரும் பலனைச் சொல்வதை விட, ஒற்றுமை என்பதும், இணைந்திருத்தல் என்பதும் நம் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றன.

முதல் ஏற்பாட்டில் முதன் முதலாக குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர் ஆரோன். மோசேதான் ஆரோனைக் குருவாகத் திருப்பொழிவு செய்கின்றார். முதல் ஏற்பாட்டில் குருக்களும், அரசர்களும், இறைவாக்கினர்களும் திருஎண்ணெய் ஊற்றி அருள்பொழிவு செய்யப்பட்டனர். ஆரோனின் தலைமேல் எண்ணெய் ஊற்றுகிறார் மோசே. அது அவர் தலையை நிறைத்து தாடியில் இறங்கி, ஆடையில் வழிந்து, கீழே ஓடுகின்றது. அப்படியென்றால் எவ்வளவு எண்ணெய் ஊற்றியிருக்க வேண்டும். அவர் முழுவதும் திருப்பொழிவு செய்யப்படுகிறார் என்பதன் அடையாளமே இது.

இன்று அருள்பணியாளர்கள் திருப்பொழிவு செய்யப்படும் போது அவர்களின் உள்ளங்கைகளில் மட்டும் திருஎண்ணெய் பூசப்படுகின்றது. ஆயர்கள் திருப்பொழிவு செய்யப்படும்போது அவர்களின் தலைமேல் திருஎண்ணெய் ஊற்றப்படுகின்றது.

சரி! வழிந்தோடும் எண்ணெய்க்கும், சகோதரர்களின் ஒற்றுமைக்கும் என்ன தொடர்பு? தலை வேறு, தாடி வேறு, உடல் வேறு, நிலம் வேறு என்றாலும் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக்கி விடுகின்றது. இந்த நான்கு இடங்களிலும் இருக்கும் எண்ணெயின் குணம் ஒன்றே. நறுமணமும் ஒன்றே. பிரிவினையோ, வேறுபாடோ கிடையாது.

கடவுள் முதன் முதலாக மனிதன் மேல் ஊதிய ஆவி (ஊதினார் என வைத்துக் கொள்வோம்!) தொடர்ந்து ஒருவர் மற்றவர் மேல் வழிந்தோடி வருகின்றது. ஆனால் நம் உள்ளுக்குள் இருக்கும் ஆவி ஒன்றுதான் என்றாலும், நம் வெளியுடல் எவ்வளவு பிரிவினையை அடையாளம் காட்டுகிறது? ஆண், பெண், வெள்ளை, கறுப்பு, உயர்ந்தவர், தாழ்ந்தவர், இருப்பவர், இல்லாதவர் - என எவ்வளவு வேறுபாடுகள்? வழிந்தோடும் தைலத்தை விடுத்து நாம் வெறும் தலையையும், தாடியையும், ஆடையையும் மட்டும் பிடித்துக்கொண்டோமோ?

மலையில் வழிந்தோடும் பனியிலும் முன்பனி, பின்பனி என்பது இல்லை. எல்லாமே ஒன்றுதான் - தண்ணீராய்க் கடலில் கலப்பது வரை. பிறவிப்பெருங்கடல் நீந்தும் நாமும் வெறும் பனித்திவளைகள் தானே!

இந்த எண்ணம் எப்போதும் நம்மில் இருந்தால் நம்மில் பிளவுகள் ஏது?

'சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது...நலம்...இனிமை!'


No comments:

Post a Comment