Tuesday, August 29, 2017

வினை வைப்பான் விநாயகன்

இன்றைய பதிவு இணைவுப்பக்கம். இணைந்து படைப்பவர் என் நண்பர் அகஸ்டின் அவர்கள்.

எம்.ஆர். ராதா அவர்கள் நடித்த 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தின் ஒரு காட்சி இது. 'பசி, பசி' என அலறித்துடிக்கும் மோகன் (கதாபாத்திரம்) ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அங்கிருக்கும் முதியவரிடம், 'பசி, பசி, ஐயா ரொம்ப பசிக்கிறது. ஏதாவது சோறு போடுங்களேன்' என்பார். அந்த முதியவர், 'சோறு போடுறேன். ஒரு பாட்டுப் பாடு!' என்பார். 'தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்' என்று பாடத் தொடங்குவார் மோகன். வேகமாக குறுக்கிடும் அந்த முதியவர், 'அப்புறம் ஏன்டா அந்த கோவிந்தன் உன் க(கு)ஷ்டத்தை தீர்க்கவில்லை?' எனக் கேட்பார். 'அறிவு வந்துருச்சுடா. அப்பா எல்லாருக்கும் அறிவு வந்துருச்சு. அது சும்மா சாப்பாட்டுக்காக நான் படிச்ச டூப் பாட்டு' என்பார் மோகன்.

நிற்க.

நேற்று மாலை மேலூரில் உள்ள என் வீட்டிற்குச் சென்றேன். நான் புறப்படும்போது மணி 5. நான்கு வழிச்சாலை வந்துவிட்டதால் வேகமாகச் சென்றுவிடலாம் என நினைத்து புறப்பட்ட எனக்கு நான்கு வழிச்சாலையின் சேவைச் சாலை தொடங்கும் இடத்திலேயே பேருந்து நிறுத்தபட்டது ஷாக்காக இருந்தது. 'விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடக்க போகுது. பஸ் ஊருக்குள்ள போகாது. மேலூரு இறங்கிக்கோங்க!' என்றார் நடத்துனர். மூன்று ஆண்டுகளில் வேகமாக பலுகிப்பெருகி வரும் கடவுளர்களில் ஒருவர் விநாயகர்.

முணுமுணுத்துக்கொண்டே இறங்கிய பலரோடு இணைந்து நானும் இறங்கினேன். இறங்கிய இடத்திலிருந்து மேலூர் பேருந்து நிலையம் ஏறக்குறைய 3 கிமீ. நிறைய ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் நின்றிருந்தன. ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். கல்லூரி படிக்கும் அல்லது படிக்கும் நிலையில் இருக்கும் ஒரு இளவலும் அவளது அம்மாவும் கையில் பெரிய பையுடன் ஏறினார்கள். துணிக்கடையில் துணி வாங்கிவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் கைகளில் இருந்த பைகளிலும், அவர்களது முகத்திலும் ஒரே நேரத்தில் தெரிந்தது.

ஷேர் ஆட்டோவில் ஏறினார்கள். ஏறியும் ஏறாமல் அந்த அம்மா ஆட்டோக்காரரிடம், 'தம்பி, மேலூருக்கு எவ்வளவு?' எனக் கேட்டார். 'பத்து ரூபாய்' என்றார். 'பத்து ரூபாயா?' என்ற வியந்தவர் வேகமாக ஆட்டோவை விட்டு இறங்கினார். ஏன் இறங்கினார்கள்? என ஆச்சர்யப்பட்ட நேரம் அந்த அம்மா தன் மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார்: 'கையில் 14 ரூபாய்தான் இருக்கிறது. மேலூரில் இறங்கி நம் கிராமத்துக்குச் செல்லும் பஸ்சுக்குத்தான் அது சரியாக இருக்கும். நீ ஒரு டிரஸ் கம்மியா எடுத்திருந்தா இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்காதே. வா நடந்தே போவோம்!' நடந்தே போவோம் என்ற சொன்னவர் நடக்கவும் தொடங்கினார். 3 கீமிக்கு முன்னே இறக்கி விட்ட பேருந்து நடத்துனர் ஏன் அந்த 3 கிமீக்கான பணத்தை திருப்பி தரவில்லை? இது அநீதியில்லையா? என என் மனம் கேட்டது.

நடக்கத் தொடங்கிய அவர்களை ஆட்டோக்காரர் விட்டபாடில்லை. அவர்கள் பின்னாலேயே நெருக்கி ஓட்டிக்கொண்டு போனார், 'கையில் இருப்பதைக் கொடுமா!' எனச் சொல்லி அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். மேலூர் வந்தது. கையில் இருந்த மொத்தக் காசு 14 ரூபாயையும் கொடுத்துவிட்டு, தங்கள் கைகளில் பைகளோடு தங்கள் ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

அப்போது மணி ஏறக்குறைய 7.

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விநாயகருக்காக சாலை அடைக்கப்பட்டிருந்தது.

பேருந்து நிலையத்தின்முன் வரிசையாக நின்றிருந்த எந்த விநாயகருக்கும் இந்த இளவலையும், அவரின் அம்மாவையும் பற்றிக் கவலைப்படவில்லை. தன் பக்தர்களின் வினைகளைத் தீர்க்க, 'வினை தீர்ப்பான் விநாயகன்' வழிதெரியாமல் நின்றிருந்தார்.

இந்த விநாயகர் தனக்கு சப்பரம் கேட்டாரா? ஊர்வலத்திற்காக பேருந்துகளை நிறுத்தச் சொன்னாரா?

கையிலிருந்த கடைசிக் காசையும் உருவிவிட்டு கால் வலிக்க நடக்க வைத்த விநாயகருக்கு வானளாவிய சப்பரங்களும், வான வேடிக்கைகளும்.

நிற்க.

இது விநாயகருக்கு மட்டுமல்ல. எல்லா கடவுளர்களுக்கும் பொருந்தும்.

கடவுள், கடவுள் நம்பிக்கை எல்லாம் நமக்கு நாமே கொண்டிருக்கும் ஒரு இன்ஃபன்டைல் இன்ஃபேசு;சுவேஷன். சின்ன வயதில நம்மேல் புகுத்தப்பட்ட ஒரு காதல் இது. ஆகையால்தான் வேறு எந்தக் கடவுளையும் பற்றி நினைக்க மனம் மறுக்கிறது.

கடவுள் நம்மைக் காயப்படுத்துவதும் இல்லை. அவர் நம்மை குணப்படுத்துவதும் இல்லை.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

ஆம், அவற்றைக் கடவுளர்களும் நமக்குத் தருவதில்லை.

வருவதெல்லாம் தானாகவே வருகிறது.

வினை தீர்க்கும் கடவுளர்கள் வினை வைக்காமல் இருந்தால் நலம்!

Sunday, August 27, 2017

தூய அகுஸ்தினார்

நாளைய தூய அகுஸ்தினாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கின்ற அகுஸ்தினாரின் 'உள்ளக்கிடக்கைகளின்' ஒரு பகுதி இது (6:6):

புகழ், பணம், திருமணம் என நான் தேடி அலைந்தேன். நீ என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாய். இவைகளை நான் தேடியபோது எனக்கு கசப்பும், கஷ்டமுமே மிஞ்சியது. உன்னைத் தவிர நான் வேறெந்த இனிமையையும் கண்டுவிடக்கூடாது என்பதற்காக உன் பரிவு என்றும் என்மேல் இருந்தது. என் இதயத்திற்குள் பார், ஆண்டவரே. நான் இவை எல்லாவற்றையும் நினைவுகூர்ந்து உன்னிடம் மனம் திறக்க வேண்டுமென நீயே விரும்பினாய். சாவின் பிடியிலிருந்து என்னை நீ விடுவித்ததால் என் இதயம் உன்னைப் பற்றிக் கொள்வதாக. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நலம்தரும் உன்னைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக என் புண்ணை நீ கிள்ளி விட்டாய். நான் மகிழ்வை இழந்து நின்றேன். நான் என் மகிழ்வை இழக்க வேண்டும் என நீ விரும்பினாய். அன்றொரு நாள், நான் நீண்ட உரை ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தேன். அரசனைப் புகழ்ந்து பேசும் அந்த உரையில் நிறையப் பொய்கள் இருந்தன. அவைகள் பொய்கள் எனத் தெரிந்தவர்கள் என் உரையைப் பாராட்டுவார்கள். நான் அதை எப்படி நிகழ்த்துவேன் என்று என் மனம் கலங்கிக் கொண்டிருந்தது. இந்த எண்ணங்களோடு மிலான் தெருவில் நான் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பிச்சைக்காரரைக் கண்டேன். நன்றாகக் குடித்துக் களிப்புற்றிருந்தார் அவர். அது எனக்கு வருத்தமாக இருந்தது. நம் முட்டாள்தனத்தால் நாம் எவ்வளவு துன்பங்களை நம்மேல் வருவித்துக்கொள்கிறோம் என நான் என் நண்பர்களிடம் சொன்னேன். என் ஆசைகளால் உந்தப்பட்டு, என் மகிழ்ச்சியின்மையில் நானும் மகிழ்ச்சியைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். எந்தவொரு கவலையும் இல்லாத கட்டின்மையைத் தேடினேன். எங்களுக்கு முன்பாகவே அதை இந்த பிச்சைக்காரர் அடைந்துவிட்டார். ஒருவேளை நாங்கள் இதை அடையாமலே போகலாம். தான் பிச்சையெடுத்த சில சில்லறைகளைக் கொண்டு இந்தப் பிச்சைக்காரர் அந்த நிலையை அடைந்துவிட்டார். ஆனால் நான் நிறைய சம்பாதித்தாலும், நிறைய அறிவைப் பெற்றிருந்தாலும் அதை அடைய முடியவில்லை. தற்காலிக மகிழ்ச்சி தரும் இன்பத்தைக்கூட என்னால் அடைய முடியவில்லை.

பிச்சைக்காரரின் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி இல்லைதான். ஆனால் அது என் தன்னார்வங்களால் நான் தேடி அலைந்த மகிழ்ச்சியைவிட மேலானது. அவர் மகிழ்ச்சியாக இருந்தார். நான் கவலையாக இருந்தேன். அவர் எந்தவொரு கலக்கமும் இல்லாமல் இருந்தார். ஆனால் நான் பயங்களால் நிரம்பி வழிந்தேன். 'பயமா' 'மகிழ்ச்சியா' என்றால், நான் மகிழ்ச்சியையே தெரிவு செய்திருப்பேன். ஆனால் பிச்சைக்காரர் போல இருக்க விரும்புகிறாயா, அல்லது நான் இருப்பதைப் போல இருக்க விரும்புகிறாயா? என்றால், நான் என்னைப் போல இருப்பதையே விரும்பியிருப்பேன். பயங்களாலும், கவலைகளாலும் வறண்டு போன என்னைப்போலவே நான் இருக்க விரும்பினேன் என்று சொல்வது மடமையாக இல்லையா? எந்தக் காரணத்தை வைத்து நான் இதை நியாயப்படுத்த முடியும்? என் படிப்பு எனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்பதற்காக, நான் என்னையே பிச்சைக்காரரோடு ஒப்பிட முடியுமா? இல்லை. என் படிப்பால் எனக்கு மகிழ்ச்சியில்லை. ஆனால் அந்தப் படிப்பு மற்றவர்களின் இன்பத்திற்குப் பயன்பட்டது - என் படிப்பால் நான் மற்றவர்களை திருப்திப்படுத்தினேன். ஆகையால் நீ உன் ஒழுக்கம் என்னும் தடியால் என் எலும்புகளை நொறுக்கினாய்.

'வேறுபாடு நம் மகிழ்ச்சியின் ஊற்றில் இருக்கிறது. பிச்சைக்காரர் தன் மகிழ்ச்சியை குடிப்பதில் கண்டார். நீயோ புகழை அடைவதில் அதைத் தேடினாய்' என்று மற்றவர்கள் என் ஆன்மாவிடம் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்ன புகழ் ஆண்டவரே? உன்னில் இல்லாத புகழே அது. எப்படி பிச்சைக்காரரின் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி இல்லையோ, அதுபோலவே, என் புகழும் உண்மையான புகழ் இல்லை. அது இன்னும் மோசமான விளைவையே என் மனத்தில் உருவாக்கியது. இரவு முடிந்தவுடன் போதை தெளிந்துவிடும் அவருக்கு. ஆனால், நான் ஒவ்வொரு நாள் விழித்தெழும்போதும் என் போதை தெளியவே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் அதை நோக்கியே ஓடினேன். மனிதன் தன் மகிழ்ச்சியை எதில் தேடுகிறான் என்பதில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். நம்பிக்கையான எதிர்நோக்கு தரும் மகிழ்வே எல்லா வீண் மகிழ்வைவிட மேலானது. இந்தப் பிச்சைக்காரர் என்னைவிட மகிழ்ச்சியாகவே இருந்தார். அவர் தன் களிப்பில் ஆழ்ந்திருந்தபோது, நான் என் கவலைகளில் ஆழ்ந்திருந்தேன். என் ஏக்கங்கள் என்னைத் தின்றன. 'நல்லா இருங்க!' என மற்றவர்களை வாழ்த்தி அவன் இன்னும் அதிக சில்லறைகள் பெற்றான். இன்னும் கொஞ்சம் மது வாங்கினான். ஆனால் நான் பொய் சொல்லி, பாராட்டு என்னும் வெற்றுக் குமிழைத் தேடினேன்.

எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவர்களின் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. என்னிடம் எதுவும் சரியாக இல்லை. நான் அவற்றைப் பற்றி கவலைப்பட்டேன். என் கவலைகளால் என் துன்பம் இரட்டிப்பானது. அதிர்ஷ்டம் என் கதவைத் தட்டினாலும், எழுந்து சென்று திறக்க முடியாத அளவிற்கு நான் சோர்வாக இருந்தேன். நான் எழுந்து திறந்து அதைப் பிடிக்குமுன் அது என்னைவிட்டுப் பறந்து போனது.

Saturday, August 26, 2017

நீங்கள் என்னை யாரென

நாம் கேட்கின்ற பல்வேறு அடிப்படைக் கேள்விகளுள் ஒன்று: 'நான் யார்?' இந்தக் கேள்வியைக் கொஞ்சம் விரிவுபடுத்தினால், 'எனக்கு நான் யார்?' 'என் நண்பர்களுக்கு நான் யார்?' 'என் குடும்பத்திற்கு நான் யார்?', 'என் சமூகத்திற்கு நான் யார்?', 'என் கடவுளுக்கு நான் யார்?' என்று கேட்டுக்கொண்டே போகலாம். இது வெறும் சுய அடையாளத்திற்கான கேள்வியாக மட்டுமல்லாமல், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவை, தொடர்பை அடையாளப்படுத்தும் கேள்வியாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கேள்வியை இன்று இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்றார். இயேசுவின் இந்தக் கேள்வி தன் அடையாளத்தைத் தான் தெரிந்துகொள்வதற்காக என்று இல்லாமல், தன் அடையாளத்தை மற்றவர்கள் எப்படி காண்கிறார்கள்? என்ற தேடலின் விளைவாகத்தான் அமைகின்றது. இந்தக் கேள்வி இரண்டு படிநிலைகளைக் கொண்டிருக்கின்றது: 1) மக்கள் என்னை யாரெனச் சொல்கிறார்கள்?, 2) நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?

இயேசுவின் இந்தக் கேள்வியும், சீடர்களின் பதிலும்:

மார்டின் பியூபர் என்ற ஜெர்மானிய மெய்யியலார் மனிதர்கள் உறவுகொள்ளும் நிலையை இரண்டாகப் பிரிக்கின்றார்: 'நான் - அது' (I-It), 'நான் - அவர்' (I-Thou). இதில் முதல் நிலை உறவு வெறும் தகவல் பரிமாற்றம் சார்ந்ததாக மட்டும் இருப்பதாகவும், இரண்டாம் வகை உறவில்தான் ஆத்மார்த்த உணர்வுகள் பரிமாறப்படுவதாகவும் முன்வைக்கின்றார். இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவும் கூட இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வகை உறவில் நாம் இருக்கும்போது இறைவன் நமக்கு வெறும் உயிரற்ற அடையாளமாக, நம்பிக்கைப் கோட்பாடாம மட்டும் இருக்கலாம். தலைவலிக்கு நாம் எடுக்கும் அநாசின் போல, இறைவனை பிரச்சினைகளின் போது மட்டும் தேடலாம். உடைகளைகத் தூய்மையாக்கும் வாஷிங் மெஷின் போல, நம் உள்ளத்தைப் பாவத்திலிருந்து தூய்மையாக்க மட்டும் தேடலாம். குற்றம் செய்தால் தண்டிக்கும் போலீஸ் போலவும், எப்போதும் அன்பளிப்புகள் வழங்கும் 'சாந்தா கிளாஸ்' போலவும் கூட பார்க்க வாய்ப்புண்டு. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து 'நீ – நான்' என்று அன்பு உறவில் இணைந்திருக்கும் நிலையில் நாம் இருக்கின்றோமா? என்று கேட்க வேண்டியது சவால்.

தற்செயலாக

நேற்று நாம் வாசிக்கத் தொடங்கிய ரூத்து நூல் இன்று முடிகிறது.

பெத்லகேம் வந்த நகோமி ரூத்தை தன் உறவினர் போவாசின் தோட்டத்திற்கு அனுப்புகின்றார். போவாசின் பார்வையில் தயை பெறுகின்றார் ரூத்து. பின் அவர் போவாசைத் திருமணம் செய்துகொள்கின்றார்.போவாசு வழியாக ஒபேது என்ற மகனைப் பெற்றெடுக்கின்றார். அவரே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.

இதில் என்ன அழகு என்றால் எல்லாம் தற்செயலாக நடக்கின்றது.

'தற்செயலாக, ரூத்து போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது.'

இந்த தற்செயல் நிகழ்வே மீட்பு வரலாற்றை மாற்றிப்போடுகின்றது.

வாழ்க்கையில் எல்லா நேரங்களும் திட்டமிட்டுக்கொண்டே இருக்கத் தேவையில்லை. 'இதைச் செய்தால் இது நடக்கும். இப்படிச் செய்தால் இப்படி நடக்கும்' என்பது அறிவியலுக்கு ஒத்துவருமே தவிர வாழ்விற்கு ஒத்துவராது.'

அதாவது, தற்செயலாக நடப்பவற்றிற்கு நம்மையே விட்டுவிடுவது.

தற்செயலாக ரூத்து அங்கே செல்லாவிட்டால் போவாசைக் கண்டிருக்க முடியாது. அவரின் பார்வையில் கனிவு கிடைத்திருக்காது. திருமணம் நடந்திருக்காது. குழந்தை பிறந்திருக்காது. நகோமியின் வருத்தம் நீங்கியிருக்காது.

தற்செயலும் நற்செயலே.

Friday, August 25, 2017

ரூத்து

'அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது' (காண். ரூத்து 1).

நாளைய முதல் வாசகத்தோடு நாம் ரூத்து நூலைத் தொடங்குகிறோம்.

இரண்டு பெண்கள்.

இருவரும் கைம்பெண்கள்.

தங்கள் வாழ்வில் வெறுமை, இழப்பு, வறட்சி, பசி என அனுபவித்தவர்கள் ஆண்டவரின் அற்புதச் செயல்கள் பெத்லகேமில் செய்யப்படுவதைக் கேட்டு அந்த நகர் நோக்கிப் புறப்படுகின்றனர்.

தன் கடவுள் வேற்றுக்கடவுள் என்றாலும் நகோமி கடவுளைத் தன் கடவுளாகத் தேர்ந்து கொள்கிறாள் ரூத்து.

விளைவு.

அவர்கள் பெத்லகேமை நெருங்கியபோது கோதுமை அறுவடை தொடங்கியிருக்கிறது.

இந்த நிகழ்வு கற்பிக்கும் பாடம் என்ன?

நகர வேண்டும்

வெறுமை, இழப்பு, வறட்சி ஆகியவை நம்மை ஓரிடத்தில் அல்லது ஓர் நேரத்தில் கட்டிவிடா வண்ணம் நாம் நகல வேண்டும்.

நகரும்போது நம்மை அறியாமலேயே அறுவடை தொடங்கியிருக்கும் இடத்தையும் நேரத்தையும் வந்தடைவோம்.

Wednesday, August 23, 2017

நத்தனியேல்

நாளை திருத்தூதரான பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம்.

திருத்தூதர் பிலிப்புவின் நண்பரான இவரை நத்தனியேல் என அழைக்கிறார் நற்செய்தியாளர் யோவான். பர்த்தலமேயு என்ற அரமேய வார்த்தைக்கு 'தலமேய் என்பவரின் மகன்' என்பது பொருள். இது இவருடைய அடைமொழி அல்லது குடும்பப்பெயராக இருந்திருக்கும். நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவான் 1:45-51) இவரை நாம் நத்தனியேல் என்றே அறியப்பெறுகிறோம். 'நத்தனியேல்' என்ற எபிரேய வார்த்தைக்கு 'கடவுள் கொடுக்கிறார்' அல்லது 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் நமக்குக் கொடை' என்று பொருள் கொள்ளலாம். 

நாளைய நற்செய்தி வாசகம் பிலிப்புவுக்கும் நத்தனியேலுக்கும், நத்தனியேலுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல்.

காட்சி 1: பிலிப்பு, நத்தனியேல். இடம். அத்திமரத்திற்கு அடியில். நேரம். நண்பகல்.

'நாங்கள் கண்டோம்!' என்று நாசரேத்தூர் இயேசுவைப் பற்றி தன் நண்பருக்கு பிலிப்பு அறிவிக்கின்றார். 'நாசரேத்தூர்ல இருந்து எப்புடிப்பா நல்லது வரும்?' என கிண்டல் செய்கிறார் நத்தனியேல். 'வா! பார்!' - என தன் நண்பரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார்.

காட்சி 2: நத்தனியேல், (பிலிப்பு), இயேசு. இடம். பாதசாரிகளின் நிழல்குடை. நேரம். மாலை.

ஏற்கனவே ஒருசிலரோடு பயணியர் நிழற்குடையின்கீழ் அமர்ந்திருக்கும் இயேசு, நத்தனியேலின் வருகையைப் பார்த்து, 'இதோ! கபடற்ற இஸ்ரயேலர் வருகிறார்!' என்கிறார். இயேசு சொல்வதைக் கேட்டுவிட்டு நத்தனியேல், 'என்னை எப்படி உமக்குத் தெரியும்?' என, இயேசுவோ, 'நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டேன்!'. 'அப்படியா! ரபி! நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்!' 'என்னப்பா! இதுக்கே இப்படி ஆச்சர்யப்படுற! இன்னும் பெரியவற்றை நீ காண்பாய்!'

இந்த உரையாடலில் 'காணுதல்', 'அத்திமரம்', 'இஸ்ரயேலர்', 'இறைமகன்', 'ரபி' என நிறைய உருவகங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வதை விடுத்து, இந்த உரையாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணங்களை மட்டும் நான் பதிவு செய்ய விழைகிறேன்.

1. நான் என் நண்பரிடம் என்ன பேசுகிறேன்? 

பிலிப்பு மற்றும் நத்தனியேல் என்ற நண்பர்களுக்கு இடையேயான உரையாடல் இயேசுவைப் பற்றி அல்லது 'மக்கள் எதிர்பார்த்த மெசியா' பற்றி இருக்கின்றது. இரண்டு விடயம் இங்கு: ஒன்று, இயேசுவைச் சந்தித்த ஒருவரால் இயேசுவைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அந்த அளவுக்கு இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரை நிரப்பிவிடுகிறது. ஆக, இன்று நான் இயேசுவை நற்கருணையில் அல்லது இறைவார்த்தையில் அல்லது என் அயலாரில் பார்க்கிறேன் என்றால், நான் எந்த அளவுக்கு இயேசுவால் நிரப்பப்படுகிறேன். இரண்டு, நான் இயேசுவைப் பற்றி தயக்கம் இல்லாமல் என் நண்பர்களிடம் பேசுகிறேனா? அல்லது என் பேசுபொருள் என்னவாக இருக்கின்றது? 

2. நான் அகத்தைக் காண்கிறேனா, அல்லது புறத்தைக் காண்கிறேனா? 

இயேசுவோட வார்த்தையில் உள்ள நேர்முக ஆற்றலைப் (positive energy) பார்த்தீர்களா! நத்தனியேலைக் கண்டவுடன், 'இவரே கபடற்ற இஸ்ரயேலர்!' என்கிறார். இயேசுவும் கபடற்றவர்தான், இஸ்ரயேலர்தான். ஆனால், இவ்வளவு பெரிய வார்த்தைகளை தன்னைப் பற்றிச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல் தன்னைத் தேடிவரும் ஒருவரைப் பற்றிச் சொல்லப் பயன்படுத்துகின்றார். அது எப்படி இயேசுவால சொல்ல முடிஞ்சது? 'அத்திமரத்தின் கீழ் உன்னைக் கண்டேன்' என்று நத்தனியேலைத் தெரிந்த இயேசுவுக்கு, 'நாசரேத்தூரிலிருந்து நல்லது வரக்கூடுமா?' என்ற நத்தனியேலின் கிண்டல் அல்லது முற்சார்பு எண்ணம் (prejudice) தெரிந்திருக்கும்தானே! அப்படியிருந்தும் எப்படி மனதார பாரட்டுகின்றார். மெய்யியலில் essence மற்றும் accident என்று பொருளுக்கு இரண்டு கூறுகள் இருப்பதாகச் சொல்வார்கள். Accident மாறலாம். ஆனால் essence மாறுவதில்லை. இயேசு அப்படித்தான் நத்தனியேல் பேசிய வார்த்தைகளைப் (accident) பொருட்படுத்தவில்லை. அவரின் அகத்தின் இருக்கும் நபரை (essence) மட்டுமே பார்க்கின்றார். இன்று நான் மற்றவரிடத்தில் பார்ப்பது என்ன? Essence அல்லது accident?

3. இயேசு எனக்கு யார்? 

'யோசேப்பின் மகன் இயேசு' என்று பிலிப்பு சொன்னாலும், நத்தனியேல் இயேசுவிடம், 'நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேலின் அரசர்' என அறிக்கையிடுகின்றார். நாசரேத்தூர்க்காரர்தான! என்று நையாண்டி செய்தவர் எப்படி இவ்வளவு பெரிய அறிக்கை செய்கின்றார். விவிலிய ஆராய்ச்சியில் சொல்வார்கள். இனி வரும் யோவான் நற்செய்திப் பகுதி அனைத்தும் இந்த நத்தனியேலின் அறிக்கையின் விளக்கவுரைதான் என்று. இயேசு எனக்கு யார்? ஒரு பெயரா? அல்லது ஒரு கருத்தியலா? அல்லது ஒரு வரலாற்று நபரா? அல்லது என்மேல்கொண்ட அன்பிற்காக தன்னையே சிலுவையில் கையளித்து, உயிர்த்து, இன்றும் என்னுடன் உடன்வருபவரா? உள்ளத்தின் மௌனத்தில் ஒவ்வொருவரும் இதற்கு விடைகாணுதல் வேண்டும்.

Tuesday, August 22, 2017

மரங்களும், மக்களும்

நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 9:6-15) கிதியோனின் கடைசி மகன் யோத்தாம் ஒரு கதை சொல்கிறார்.

தங்களை அரசாளும்படி ஆள்களைத் தேடுகின்ற மரங்கள் ஒலிவம், அத்தி, திராட்சை எனத் தேடி கடைசியில் முட்புதரின் கைகளில் விழுகின்றன.

அபிமெலக்கு அரசனான நிலை அப்படித்தான் இருந்தது என உருவகிக்கிறது கதை.

நம்முடைய இன்றைய இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலையும் இதற்கு விதிவிலக்கல்ல.

மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்கள் போல இருக்கிறார்கள் - என்று பார்வையற்ற அந்த மனிதன் சொன்னது முற்றிலும் சரியே.

Monday, August 21, 2017

அரசியான மரியாள்

நாளை அன்னை மரியாளை அரசி அல்லது அமைதியின் அரசி எனக் கொண்டாடுகிறோம்.

'அமைதியின் அரசி' சுரூபம் உரோமையின் மேரி மேஜர் பேராலாயத்தில் ஒய்யாரமாக உள்ளது. ஒரு கையில் குழந்தை இயேசுவை ஏந்தி கம்பீரமாக அமர்ந்து கொண்டு மறு கையினால், 'நிறுத்து' என்று சொல்வது போல இருப்பார்.

அமைதி என்பது ஒரு கொடை.

பல நேரங்களில் நாம் அதை வெளியே தேடுகிறோம். ஆனால் அது நம்மில் இயல்பாகவே இருக்கிறது. நாம்தான் அதன்மேல் கல் எறிந்து குலைத்துக்கொள்கிறோம்.

எபிரேயத்தில் அமைதி என்ற வார்த்தையை 'ஷலோம்' என அழைக்கின்றனர்.

'ஷலோம்' என்றால் முழுமை.

அதாவது, ஓட்டை இல்லாத நிலை.

ஒரு மண்பானை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதனுள் தண்ணீர் ஊற்றி வைக்கிறோம். வைக்கின்ற தண்ணீர் அப்படியே இருந்தால்தான் அது நல்ல பானை. தண்ணீர் வெளியேறினால் அது கீறிய அல்லது உடைந்த பானை என்கிறோம்.

சின்னஞ்சிறு கீறலும் கூட பானையின் தண்ணீரை கலங்கடித்து வெளியேற்றிவிடுகின்றது.

மரியாள் தொடக்கமுதல் இறுதிவரை தன் பானையை கீறல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவரின் எல்லா செயல்பாடுகளும் எந்தவொரு முன்பின் முரண் இன்றி ஒருங்கியக்கம் பெற்றிருந்தன.

மரியாள் நம் அமைதியைக் காத்துக்கொள்ள நல்ல முன்மாதிரி.

Sunday, August 20, 2017

பத்தாம் பத்திநாதர்

நாளை தூய பத்தாம் பத்திநாதரின் திருநாள் என்று எழுதும்போதே என் மனம் 1994-1998 ஆம் ஆண்டுகள் நோக்கி பயணம் செய்கிறது.

மதுரை ஞானஒளிவுபுரம் தூய பத்தாம் பத்திநாதர் ஆயத்தக் குருமடத்தில் தங்கியிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை தூய பிரிட்டோ மேனிலைப்பள்ளியில் தொடர்ந்தேன்.

அந்த நான்கு ஆண்டுகளும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு தூங்கா இரவாகத்தான் இருக்கும். இந்தத் திருநாளுக்கு முன் குருமடமே 4 டீம்களாக பிரிக்கப்பட்டு (சில ஆண்டுகளில் 2) விளையாட்டு மற்றும் திறன்வளர் போட்டிகள் நடைபெறும். 4ஆண்டு மாணவர்களோடும் பழக இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

அந்த நான்கு ஆண்டுகளில் என்மேல் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய நபர் எங்கள் குருமட அதிபர் அருள்திரு. மரிய அருள் செல்வம் அவர்கள்தாம். அவர்களும், அருள்தந்தை ஹெர்மஸ் (பேதுரு கல்லூரி, விரகனூர்) கற்றுக்கொடுத்த வாழ்க்கைப்பாடங்கள்தாம் இதுவரை என்வாழ்வில் துணைநிற்பவை. அப்பெல்லாம் வாழ்க்கையும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு அன்று அவர்களுடைய உடனிருப்பு தந்த பாடம் உதவுகிறது.

அந்தக் குருமடம் தாலாட்டி வளர்த்த அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 19:16-22), நிறைவுள்ளவாய் இருக்க விரும்பினால் குறைவுள்ளவனாய் இரு என ஓர் இளைஞனை அனுப்பி வைக்கிறார் இயேசு.

குறைவில்தான் நிறைவு இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் எம் குருமட அதிபர்கள்.

நன்றியோடு நினைக்கின்றேன்.

Friday, August 18, 2017

ஊழியம் புரிவோம்

'ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.' (காண். யோசுவா 24:14-29)

யோசுவாவின் தலைமையில் யோர்தானைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழையும் இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் வார்த்தைகளைக் கேட்கும் நிகழ்வே நாளைய முதல் வாசகம்.

யாருக்கு ஊழியம் புரிவது? - இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு வரும் விடையே அவர்களின் வாழ்க்கையை மாற்றிப்போடும்.

பாரவோனிடமிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெறும் நிகழ்வில் முக்கியமாக உள்ளதும் இந்தக் கேள்வியே: 'பாரவோனுக்கு ஊழியம் புரிவதா. அல்லது கடவுளுக்கு ஊழியம் புரிவதா?'

கடவுளுக்கு ஊழியம் புரிதல் என்றால் கடவுள் பற்றிய சிந்தனைகளை மட்டும் கொண்டிருத்தல் ஆகும். தாங்கள் கைகளில் வைத்திருக்கும் மற்ற தெய்வங்களை ஆற்றில் எறிந்துவிட வலியுறுத்துகின்றார் யோசுவா.

நாம் யாருக்கு அல்லது எதற்கு ஊழியம் புரிகிறோமோ, அப்படியே அந்த ஆள் மற்றும் பொருளோடு இணைந்துவிடுகிறோம்.

ஊழியம் புரிதலுக்கு உள் மனக் கட்டின்மையும், உள் மன உறுதியும் அவசியம்.

Thursday, August 17, 2017

திருநங்கையாய்

'சிலர் பிறவியிலேயே அண்ணகராய் (திருநங்கையராய்) - மண உறவு கொள்ள முடியாதவராய் - இருக்கின்றனர்.
வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 
மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்கு தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.'
(காண். மத் 19:3-12)

2009ஆம் ஆண்டு என்னுடன் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட நண்பர் வரன் தனது விருதுவாக்காக, 'இறையாட்சிக்கான திருநங்கையாய்' என எடுத்திருந்தார். இந்த நற்செய்திப் பகுதியே நாளைய நற்செய்தி வாசகம்.

இன்று காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அருள்சகோதரி ஒருவரின் இறப்பு செய்தி வந்தது. 'அருள்சகோதரி ஒருவர் இறந்துவிட்டார்' என்ற செய்தி வாசிக்கப்பட்டவுடன், எல்லா ரியாக்ஷனும் ஒரே மாதிரி இருந்தது. 'வயசானவங்களா?' என கோரஸாகக் கேட்டார்கள். 'ஆம்' என பதில் வந்தது. வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை.

உலகத்தில் அரசியல் அல்லது சினிமா அல்லது விளையாட்டு பிரமுகர் இறந்தால், ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லது அப்துல் கலாம் இறந்தால், அவர் சொல்லிய, சொல்லாத, அவர் விட்டுச்சென்ற, விட்டுச்செல்லாதவை பற்றியெல்லாம் பேசும் நமக்கு ஓர் அருள்சகோதரியின் இறப்பு பெரிதாகத் தெரிவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

2016, மே 12 அன்று அருள்சகோதரிகளின் தலைமை அன்னையரைச் சந்தித்த திருத்தந்தை இப்படி உரையாடினார்: 'உங்கள் இல்லங்களில் வயதான அருள்சகோதரிகளை எங்கே வைத்திருக்கிறீர்கள்? அவர்கள் வயதானவர்கள் என்று நீங்கள் முத்திரையிடுவதில்லையா? இன்று வயதான அவர்கள் ஒரு காலத்தில் உங்களைப் போல இருந்தவர்கள். நீங்கள் அனுபவிக்கின்ற கனிகளுக்கான விதைகளை விதைத்தவர்கள். அவர்கள் அன்று பேருந்தில் பயணம் செய்து பணம் சேர்த்ததால்தான் நீங்கள் இன்று கார்களில் வேகமாக பயணம் செய்கிறீர்கள். அவர்கள் அன்று வெறும் தண்ணீரை குடித்துக்கொண்டு பணிசெய்ததால்தான் இன்று நீங்கள் வயிறார உண்கிறீர்கள். இன்று அவர்கள் பயனற்றவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு வயதாகிவிட்டது. மறதி வந்துவிட்டது. வெறும் காட்சிப் பொருளாகிவிட்டார்கள். இன்று அவர்கள் உங்களுக்காக செபிக்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்? நீங்கள் ஒருநாள் முழுவதும் அமர்ந்து செபிக்க முடியுமா? அவர்களால் முடியும். ஆக, அவர்களைப் பார்க்கச் செல்லுங்கள். அவர்களது அனுபவம் எப்படி இருந்தது எனக் கேளுங்கள். உங்களுக்குச் சொல்ல அவர்களிடம் நிறைய கதைகள் உண்டு.'

அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக தினமும் இறக்கின்றனர். ஆனால் அவர்கள் இறுதி ஆசை, இறுதி வார்த்தை என யாரும் கவலைப்படுவதில்லை.

இன்று வயதான அருள்பணியாளர் ஒருவரை மருத்துவமனைக்குச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர். நிறைய பங்குகளில் பணி செய்தவர். நிறைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர். இன்று முன்பின் தெரியாத ஒரு கேர்டேக்கரின் தயவில் அவர் இருக்கிறார். இவ்வளவு எழுதும் நானும்கூட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் இருக்க முடியவில்லை. 'வேலை இருக்கிறது!' என வந்துவிட்டேன். எல்லாருக்கும் வேலை இருக்கிறது. ஆகையால் வேலையில்லாமல் படுத்துக்கிடக்கும் ஒருவரைப் பார்த்துக்கொள்ள நேரமில்லை. 

இரண்டு மாதங்களுக்கு முன் மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பெரிய பதவியில் இருக்கும் ஓர் அருள்பணியாளர் மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தார். மாற்றுவதற்கு லுங்கி கூட கொண்டு வராததால் தனது பேண்ட், பனியன் என ஒருக்களித்துப் படுத்திருந்தார். 'யார் கூட இருக்கா?' எனக் கேட்ட போது, தன் டிரைவர் இருப்பதாகச் சொன்னார். இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து தன் உதவிக்காக யாரையும் அழைத்துவர முடியவில்லையா? அல்லது அப்படிப்பட்ட உறவை வளர்க்கவில்லையா? அல்லது அப்படி இருக்க விரும்பவில்லையா?

நிற்க.

அண்ணகர் அல்லது திருநங்கை என்பது உடல்சார்ந்த ஒன்றல்ல என இன்று நான் புரிந்துகொள்கிறேன்.

அது உடல் சார்ந்தது அல்ல. உறவு சார்ந்தது.

மண உறவில் உள்ளவர்களைப் பார்த்துக்கொள்ள கணவன், மனைவி, பிள்ளைகள், மாமா, மச்சான் என யாராவது வந்துவிடுவார்கள். அதுதான் சுற்றத்தின் அழகு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சுற்றம் நம்மைச் சுற்றியே இருக்கும்.

ஆனால், எல்லாம் இருந்தும் யாருமே இல்லாததுபோல இருந்து,
எல்லாம் இருந்தும் யாருமே இல்லாததுபோல இறக்கும் நிலையில் இருக்கும்
அருள்சகோதரி, அருள்பணியாளர் அனைவருமே
இறையாட்சிக்கான திருநங்கையரே!
ஏனெனில், தனித்துவிடப்பட்ட நிலையே திருநங்கை நிலை.

இன்று ஒரு நிமிடம் மௌனமாக இருந்து இந்த உலகில் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் எல்லா அருள்சகோதரிகள், அருள்பணியாளர்களுக்காக செபிக்கலாம் என நினைக்கிறேன்.

Wednesday, August 16, 2017

அருள்பணியாளரின் பணி

நாளைய முதல் வாசகத்தில் (காண். யோசு 3:7-11, 13-17) யோசுவா நிகழ்வுகள் தொடங்குகின்றன.

'நான் மோசேயுடன் இருந்ததுபோலவே உன்னுடனும் இருப்பேன்' என மொழிகின்ற கடவுள், தன் பிரசன்னத்தை அப்படியே உறுதி செய்கின்றார். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்ததுபோல யோசுவாவின் தலைமையில் யோர்தான் நதியைக் கடக்கின்றனர்.

ஆனால், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.

அங்கே மோசே தானே தன் கைகளால் செங்கடலைப் பிரித்தார்.

இங்கே யோசுவாவிற்கு குருக்களின் துணை தேவைப்படுகிறது.

(குருக்களின் அதிகாரம் மேலோங்கி இருந்த காலத்தில் ஒருவேளை இந்த இறைவாக்குப் பகுதி எழுதப்பட்டிருக்கலாம்)

ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் ஏறக்குறைய 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பேழையின் ஊடாகக் கடந்து போகும் வரை குருக்கள் உடன்படிக்கை பேழையை ஏந்தியவர்களாக தண்ணீருக்குள் நிற்கின்றனர்.

தனக்கு கால் நனைந்தாலும் பிறரின் கால் நனையாமல் அக்கரைக்கு அவர்களைக் கடத்துவதே அருள்பணியாளரின் பணி.

Tuesday, August 15, 2017

தேவையானது ஒன்றே

நாளைய முதல் வாசகத்தில் (காண். இச 34:1-12) மோசேயின் இறப்பைப் பற்றி வாசிக்கின்றோம்.

என் அறையில் என் அம்மா எனக்குப் பரிசளித்த மோசேயின் சிலை ஒன்று உண்டு.

ஒட்டகம் ஒன்றைத் தன் கையில் பிடித்தவராக மறு கையில் உருவிய வாளை ஏந்தியவராய் நிற்கும் மோசேயின் குட்டி உருவம் பார்க்கும்போதே நடப்பது போல இருக்கும்.

அவர் கையில் ஏந்திய அந்த வாள், 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று சொல்வதுபோல இருக்கும் எனக்கு.

கதைமாந்தர்களின் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என முழுவதுமாக செய்யும் பதிவுகளில் மிக முக்கியமானவை யாக்கோபு மற்றும் மோசே. யாக்கோபு இஸ்ரயேல் இனத்தின் தந்தை. மோசே அந்த இனத்திற்கு உயிரும் உருவும் கொடுத்தவர்.

தொடக்கமுதலே கடவுளின் கரம் இவரை வழிநடத்துகிறது.

இறுதியில், இவரின் கண்களை இறைவனே மூடி, இறைவனே இவரை நல்லடக்கம் செய்கின்றார்.

'ஆண்டவர் நேருக்குநேர் இவருடன் பேசியதுபோல வேறு எவருடனும் பேசியதில்லை' என நிறைவு பெறுகிறது இவரின் கதை.

மோசே ஒரு வரலாற்றுக் கதைமாந்தர் அல்ல. மாறாக, இலக்கிய கதைமாந்தர் என்பதை உறுதி செய்ய இன்று விவிலியத்தில் நிறைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

இவர் வரலாற்று மாந்தராக இல்லாவிடினும், இவர் ஆச்சர்யத்துக்குரியவர். தன் இனத்திற்காக தன் இன்ப, துன்பங்களை ஒதுக்கி வைத்தவர். இவர் ஆற, அமர்ந்து பேசியதாக, சிரித்ததாக எந்தப் பதிவும் இல்லை. எந்நேரமும் தன் மக்களை தன் உள்ளத்திலும், கரத்திலும் சுமந்தவர். துணிச்சல்காரர். எந்தவித முணுமுணுப்பையும் பொருள்படுத்தாதவர்.

'ஆனால், தேவையானது ஒன்றே' என்று இயேசு மார்த்தாவைப் பார்த்துச் சொன்னதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டியவர்.

விடுதலைப் பெருநாள்

இன்று மாலை மதுரை நகர்வழி நடந்து சென்றேன்.

சுதந்திரப் பெருநாள் கொண்டாட்டத்தின் எச்சங்கள் நிறைய தெரிந்தன தெருக்களில்.

மூவர்ணக் கொடிகள், மூவர்ணக் கோலங்கள், கடைகளில் மூவர்ண பலூன் அலங்காரங்கள், மூவர்ண முகப் பூச்சுக்கள், காலையில் குத்தி மாலையில் தலை தொங்கி நின்ற சட்டைக் கொடிகள், சுதந்திர தின வாழ்த்து போஸ்டர்கள் நிறையவே இருந்தன.

71 ஆண்டுகளுக்கு முன் நாம் சுதந்திரம் பெற்ற அந்த நாளில் இவற்றில் ஒன்றுகூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், தெருக்களில் மக்கள் கூடி நின்று நிறைய பேசியிருப்பார்கள். 'இனி வெள்ளக்காரங்க நம்ம நாட்டுல இருக்க மாட்டாங்க!' என சொல்லியிருப்பார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை ரேடியோ பெட்டியில் கேட்டிருப்பார்கள். விடுதலைக்காக போரிட்டவர்கள் தங்கள் போராட்டக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், சுதந்திரம் என்பது நாமே தேர்ந்துகொண்ட ஒரு சுமையாக மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கோட்டையில் கொடியேற்றுபவர்கள் எல்லாம் தங்களை மீடியாக்கள் சரியாக படம் பிடிக்கின்றனவா என்று பார்க்கின்றனரே ஒழிய, யாருக்கும் யாரைப் பற்றியும் அக்கறையில்லை.

சுதந்திரம் இன்று கொண்டாட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர இன்னும் நம் வாழ்வாகவில்லை.

சமயம், இனம், பொருளாதாரம் உரிமைகள் அன்றாடம் பறிபோய்க்கொண்டே இருக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும், எவ்வளவு பணம் கையில் வைத்திருக்க வேண்டும், எதை வழிபட வேண்டும் என எல்லாமே நம் கார்பரேட் அரசியலால் வரையறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சாமானியன் இந்த சுதந்திரத்தின் வாடை அறியாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான்.

சாமானியனாகவே இருந்துவிடுதல் நலம்.

Sunday, August 13, 2017

கோல்பே

நாளை புனித மாக்ஸிமிலியன் மரிய கோல்பே திருநாளைக் கொண்டாடுகிறோம்.

சிறையிலிருந்த இவர் தன் சக கைதி ஒருவருக்குப் பதிலாக இறப்பைத் தழுவிக்கொள்ள முன்வருகின்றார்.

பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்கள் குருக்களைப் பற்றி எழுதிய நூல்களில் ஒன்று, 'தெ ப்ரீஸ்ட் இஸ் நாட் ஹிஸ் ஓன்' ('குருவானவர் தனக்கென உரியவர் அல்லர்') என்பது.

தன் குருத்துவ திருநிலைப்பாட்டு நாளில், 'இதோ வருகிறேன்' என்று சொல்லி அவர் ஒரு அடி எடுத்துவைத்து முன்வரும் பொழுதே அவர் தனக்கென உரியது அனைத்தையும் துறந்துவிடுகின்றார்.

கோல்பே ஒரு அருள்பணியாளர் என்ற நிலையில் தன்னையே கையளிப்பதற்குப் பதிலாக நிறைய காரணங்கள் சொல்லி தப்பியிருக்கலாம்:

அ. 'நான் யூதன் இல்லை. நான் போலந்துக்காரன். நான் ஏன் ஒரு யூதனுக்காக இறக்க வேண்டும்' என நினைத்திருக்கலாம்.

ஆ. இறப்பதற்கு என தெரிவு செய்யப்பட்டவர்களைப் பார்த்து, 'கவலைப்படாதீர்கள். நீங்கள் மறுவாழ்வு பெறுவீர்கள். உங்களுக்காக நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன்' என்று சொல்லியிருக்கலாம்.

இ. 'நம் எதிரிகளை எல்லாம் பழி தீர்க்க கடவுள் வருவார். விவிலியத்தில் எல்லாம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எல்லாம் நடக்கும்' என்று சொல்லியிருக்கலாம்.

இப்படி எதுவும் சொல்லாமல், 'இதோ வருகிறேன்' என முன்வருகிறார் கோல்பே.

தன் குருத்துவ அருள்பொழிவின்போது இவர் சொன்னதைவிட இன்று அவர் சொல்லும்போது நிறைய தைரியம் வேண்டும் இவருக்கு.

இவரின் இந்தச் செயல் நமக்கு மூன்று பாடங்களைச் சொல்கின்றது:

அ. நாம் தினமும் காலையிலிருந்து மாலை வரை நிறைய வேலைகளைச் செய்கின்றோம். இத்தனை வேலைகளைச் செய்ய வேண்டும் என பட்டியலிடுகின்றோம். ஆனால், மாலையில் அந்த லிஸ்டை பார்த்தால் சோர்வு வந்துவிடுகிறது. இப்படி அடுத்தடுத்த நாள் லிஸ்டில் வேலை சேர்ந்து கொண்டே போகிறது. ஆனால், நாம் எவ்வளவு வேலைகள் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. மாறாக, இந்த வேலைகளின் வழியே நான் எப்படி மாறுகிறேன் என்பதுதான் முக்கியம். கோல்பே நிறைய வேலைகளைச் செய்யவில்லை. மாறாக, தான் செய்கின்ற ஒரே வேலையின் வழியாக தான் எப்படி மாறுவோம் என நினைத்துச் செய்கின்றார்.

ஆ. இன்றில் வாழ்வது. இன்றில் அல்லது இப்பொழுதில் வாழும் ஒருவர்தான் தியாகம் செய்ய முடியும். மற்றவர்கள் எல்லாம், 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடுவர். ஆக, தியாகம் என்று வரும்போது நாளை என்பது மறந்துவிட வேண்டும்.

இ. தியாகம் என்பதை ஆங்கிலத்தில் 'ஸேக்ரிஃபைஸ்' (sacrifice) என்கிறோம். இது 'ஸாக்ரும்' (sacrum), 'ஃபாச்சரே' (facere) என்னும் இரண்டு இலத்தீன் வார்த்தைகளின் சேர்க்கை. ஆக, ஒன்றைக் கடவுளுக்கு நேர்ந்தளிப்பது, அல்லது கடவுளுக்காக ஒதுக்கி வைப்பது. அல்லது கடவுளாக மாறுவது அல்லது மாற்றுவது. தியாகம் செய்யும் போது நாம் தன்னிலை மறக்கின்றோம். தன்னிலை மறப்பதுதானே இறைமை.

என் நண்பனுக்காக கொஞ்ச நேரம் என் ஃபோன் சார்ஜரைத் தரவும் கணக்குப் பார்க்கும் எனக்கு கோல்பேயின் உயிர் துறத்தல் பெரிய சவாலாக இருக்கிறது.


Saturday, August 12, 2017

பேய் இறைமகன் ஆன கதை

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 14:22-33) நாம் காணும் உரையாடல்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

'ஐயோ, பேய்!'

'துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்!'

'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் வரக் கட்டளையிடும்!'

'வா!'

'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!'

'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'

'உண்மையாகவே நீர் இறைமகன்!'

நிகழ்வின் தொடக்கத்தில் பேயாகத் தெரிந்தவர் இறுதியில் இறைமகனாகத் தெரிகிறார்.

நம்ம வாழ்க்கையிலும் இதே போன்ற அனுபவம் இருந்திருக்கலாம்.

நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை, கஷ்டம், நோய், வறுமை, இயலாமை போன்ற பொழுதுகளில், முதலில் 'பேய்' போல தெரிவது, சட்டென்று மாறுது வானிலை என்பதுபோல, 'இறைமகனாக' தெரிய ஆரம்பிக்கிறது.

இந்த மாற்றத்திற்கு இடையில் நம் மனம், 'பயம்,' 'தயக்கம்,' 'ஏக்கம்,' 'அவநம்பிக்கை' என பயணம் செய்கிறது.

இயேசு தன் சீடர்கள் வாழ்வின் எதார்த்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களை இந்த எல்லா உணர்வுகள் வழியாகவும் அழைத்துச் செல்கிறார். இயேசு நினைத்திருந்தால் தான் அமர்ந்திருக்கும் மலையிலேயே இருந்துகொண்டு ஒரே வார்த்தையில் கடலின் கொந்தளிப்பை அடக்கியிருக்கலாம்.

ஆக, நாமாகவே நம் வாழ்வின் நிலைகளைக் கடந்து செல்வதே அற்புதம்.


மறந்துவிடாதபடி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ரிச்சர்ட் கார்ல்சன் அவர்கள் எழுதிய You Can Be Happy No Matter What: Five Principles for Keeping Life in Perspective என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லும் ஐந்து ஒழுங்குகளில் ஒன்று 'உணர்வு.' நம் மனம் இயல்பாகவே 'நிறைவு, அன்பு, நன்றி' (Contentment, Love, Gratitude)  என்ற மூன்று உணர்வுகளைக் கொண்டிருக்கிறது என்றும், இந்த மூன்றும் மேலோங்கி நிற்கும் நேரம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும், இந்த மூன்றும் குறையக் காரணம் நம் எண்ணங்கள் எனவும், அந்த எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்தினால் நாம் இந்த உணர்வுகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் எழுதுகின்றார்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். இச 6:4-13) நாம் யூதர்களின் மிக முக்கியமான விவிலியப்பகுதியை வாசிக்கின்றோம். 'ஷெமா இஸ்ரயேல்' என எபிரேயத்தில் அழைக்கப்படும் இந்தப் பகுதி இறைவன்மேல் யூதர்கள் கொண்டிருக்கின்ற அன்பு, 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும்' இருக்க வேண்டும் என எடுத்தியம்புகிறது.

நாளைய வாசகத்தின் இறுதிப்பகுதி மிகவும் கவனிக்கத்தக்கது:
'நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும்,
நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும்,
நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும்,
நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும்
அவர் உனக்குக் கொடுக்கும்போதும்,
நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும்...
ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு!'

நகர்கள், வீடுகள், கிணறுகள், தோட்டங்கள் அமைக்க நிறைய நாட்களும், ஆட்களும் வேண்டும். எந்தவொரு உடல் உழைப்பும், ஆற்றல் விரயமும் இல்லாமல் இஸ்ரயேல் மக்களுக்கு இவை அனைத்தும் கொடையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

இதே உணர்வை நாமும் நம் வாழ்வில் பல இடங்களில், பல நேரங்களில் அனுபவித்திருக்கிறோம்.

நிறைவு வந்தவுடன் அன்பும், நன்றியும் இருக்க வேண்டும்.

இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் அங்கே மகிழ்ச்சி இழப்பு வந்துவிடும்.

நாளைய வாசகம் நேர்முகமான உணர்வில் வளர நம்மைத் தூண்டுவதாக.

Thursday, August 10, 2017

அனுப்பாத மணி ஆர்டர்

இன்று மாலை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் கருத்தமர்வுக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன்.

இன்று காலையிலேயே என் மனதில் ஒரு மனிதரின் முகம் ஓடிக்கொண்டிருந்தது. மதுரையின் ஏதோ ஓரிடத்திலிருந்து எங்கள் இல்லம் நோக்கி வருபவர் அவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அவர் இங்கே வருவதாக இங்குள்ள அருள்தந்தையர்கள் குறிப்பிட்டனர். அவரைப் பார்க்க எனக்குப் பிடிக்கும். ஒரே காரணம். அவர் என் அப்பாவைப் போல இருப்பார்.

என் அப்பாவுக்கும் இவருக்கும் இருக்கும் நிறைய ஒற்றுமைகளில் ஒன்று ஆஸ்துமா.

இந்த நோய்க்கான மருந்து மற்றும் இன்ஹேலர் வாங்க பணம் கேட்டு வருவார். காலியான மருந்து டப்பாவையும், இன்ஹேலரையும் சாட்சிக்காக எடுத்து வருவார். இவர் நீட்டும்போது என் அப்பாவே என்னிடம் அவற்றை நீட்டுவதுபோல இருக்கும்.

என் அப்பா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் இன்னும் வீட்டில் இருக்கிறது. அவர் எனக்காக எழுதிய முதல் மற்றும் கடைசி கடிதம் இதுவே. என் அம்மா எழுதும் கடிதங்களில் முகவரி எழுதித் தருவார். மற்றபடி எனக்குக் கடிதம் எழுதவில்லை. நான் புனேயில் இருந்த நேரம் தனக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது எனவும், மருத்துவச் செலவிற்கான பணம் ரூபாய் 1000 அனுப்புமாறும் கேட்டிருந்தார். நான் புனேயில் வேலைபார்த்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்ததால் கையில் கொஞ்சம் பணம் இருந்தது. ஆனால் அப்பாவுக்கு மணி ஆர்டர் அனுப்புவதை நான் சீரியஸா எடுத்துக்கொள்ளவில்லை. வீட்டில் அம்மா பார்த்துக்கொள்வார்கள் என விட்டுவிட்டேன்.

அடுத்த சில மாதங்களில் அப்பா இறந்துவிட்டார்.

அவரின் அடக்கம் முடிந்து நான் குருமடத்திற்கு வந்த சில நாள்களுக்குப் பின் அவரின் கடிதம் கண்ணில்பட்டது.

'இவ்வளவு நாள்கள் என் அப்பா நான் அனுப்பும் அந்த மணியார்டருக்காக காத்திருந்திருப்பாரோ?' என்ற கேள்வியோடு குற்றவுணர்வும் பற்றி;கொண்டது.

இன்றும் மணியார்டரைப் பார்க்கும்போதெல்லாம் நான் அனுப்பாத அந்த மணியார்டர்தான் என் நினைவிற்கு வருகிறது.

ஆனால், ஒரு ஆச்சர்யம். ஒவ்வொரு வருடமும் என் அப்பாவைப் போன்ற ஒருவரை நான் சந்தித்துவிடுகிறேன்.

இன்று வந்திருந்த அந்த நபர் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தார் எனத் தெரியாது. சவரம் செய்யாத முகம். மெலிந்த தேகம். உடலை மிஞ்சும் உடை. படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்தார். எப்பெல்லாம் முக்கியமான வேலையாக வெளியே செல்கிறேனோ அப்பெல்லாம் என் அப்பாவின் ஃபோட்டோவைப் பார்ப்பது வழக்கம். இன்றும் அப்படிப் பார்த்துவிட்டு வந்தபோதுதான் இவர் அமர்ந்திருக்கக் கண்டேன். இதை வெறும் தற்செயல் என்று சொல்வதா?

'மருந்து காலியா...' என வாய் திறந்தார். 'இருங்க...வர்றேன்' என்று சொல்லிவிட்டு, அறைக்குச் சென்று, மீண்டும் திரும்பி ஒரு பையை அவரிடம் கொடுத்து, 'போய்ட்டு வாங்க!' என அனுப்பினேன்.

அவர் நான் கொடுத்த பையை அப்படியே எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்கவோ, திறந்து பார்க்கவோ இல்லை.

அந்த நொடி நான் ஒரு பாடத்தைக் கற்றேன்.

'ஒன்றுமே இல்லாத ஒருவருக்கு எதைக் கொடுத்தாலும் அது அவருக்குக் கொடையே. அதை அவர் ஆராய்ச்சி செய்வதோ, இரசிப்பதோ இல்லை. ஆக, எந்த அளவுக்கு தன் இல்லாமையை இவர் உணர்ந்திருந்தால், அல்லது அனுபவித்திருப்பார்.'

அவர் கேட்டைக் கடக்குமுன் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.

போனவர் நின்றார்.

திரும்பி வந்தார்.

'உங்க பேரு?' என்றார்.

'யேசு க..' என நிறுத்திக்கொண்டேன்.

'உங்க பேரு?' எனக் கேட்க வாய் திறக்கப் போனேன்.

'கருணாநிதி' என்பதற்குப் பதிலாக வேறு பெயர் சொல்லிவிடுவாரோ என நினைத்து வாயை மூடிக்கொண்டேன்.

நான் அன்று அனுப்பாத மணி ஆர்டரை என் அப்பாவுக்கு இப்படி இன்று அனுப்புவதில் நான் மகிழ்கிறேன்.

Wednesday, August 9, 2017

லாரன்ஸ்

நாளை தூய லாரான்ஸின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உரோம் நகரின் முதல் மறைசாட்சி இவர்.

நாளைய தினம் உரோமில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம் லாரன்ஸ் அடுப்பில் வதைக்கப்பட்டு இறந்ததுதான் என்பர் பெரியவர்கள்.

மறைசாட்சியம் - இன்று வரை என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒரு வார்த்தை.

குருமாணவப் பயிற்சியின் தொடக்ககாலத்தில் எனக்கு புரியாத புதிராக இருந்தது மறைசாட்சியம் என்ற வார்த்தை.

இந்து மரபில் மறைசாட்சியம் என்பது இல்லை. இந்து மறைக்காக யாரும் சாட்சியாக இறந்ததில்லை. இந்துமதம் யாரையும் அப்படிக் கொண்டாடுவது இல்லை.

இவ்வளவு ஏன்? ஒருவர் அடுத்தவருக்காக இறப்பது என்ற கான்செப்டே அங்கே இல்லை. ஆகையால்தான் மறைசாட்சியம் எனக்குப் புரியவில்லை.

இருக்கும்போது பிறருக்காக இருக்கும் நாமும் மறைசாட்சிகளே!

பார்க்கும் விதம்

பொருள்கள் இப்படி இருக்கின்றன என்பதால் நாம் அவற்றை அப்படிப் பார்ப்பதில்லை.
நாம் இப்படி இருக்கின்றோம் என்பதால்தான் நாம் அவற்றை அப்படிப் பார்க்கிறோம்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எண் 13, 14) நாம் இதற்கான எடுத்துக்காட்டைப் பார்க்கிறோம்.

மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டை நெருங்கிவிட்டனர். நாட்டிற்குள் நுழையுமுன் அதற்கு முன்னேற்பாடாக உளவு பார்க்க மக்களை அனுப்பி வைக்கின்றார்.

'ஆழம் பார்த்துக் காலை விட வேண்டும்' என்பதில் மோசே தெளிவாக இருக்கின்றார்.

ஒரே குழுவாகச் சென்றாலும், இரண்டு குழுக்களாக திரும்பி வருகின்றனர்.

ஒரு குழுவினர் ரொம்ப தைரியமாக வருகின்றனர்.

மற்ற குழுவினர் பயந்து போய் வருகின்றனர்.

இரண்டாம் குழுவினரின் பயம் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களின் வளர்ச்சியையும் தடை செய்யும் என்பதால் மோசே அவர்களை அப்பறப்படுத்திவிடுகின்றார். மேலும் இரண்டாம் குழுவினர் போராடுவதற்குத் தயங்குபவர்களாகும் இருக்கின்றனர்.

இரண்டாம் குழுவினரின் பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் தங்கள் கடவுளின்மேல் நம்பிக்கை கொள்ளாமல், தங்களின் சொந்த ஆற்றல்மேல் மட்டுமே நம்பிக்கை கொண்டதே.

இன்று நாம் மற்றவர்களைப் பார்க்கும் விதம் எப்படி இருக்கிறது?


Monday, August 7, 2017

புறணி

மனிதர்கள் சமூகமாக மாற உதவிய மிக முக்கிய காரணி என்று சமூகவியல் மற்றும் மானுடவியல் அறிஞர்கள் குறிப்பிடுவது புறணி (gossip).

புறணி பேசுவதில் இரண்டு விஷயங்கள் அடிப்படையாக இருக்கின்றன:

அ. புறணி பேசும் இருவர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தங்களை அறியாமலேயே ஒரு குழு உணர்வு பிறக்கிறது. இந்தக் குழுவுணர்வே, 'நாம்' - 'அவர்கள்' என்ற பேதத்தை உருவாக்குகிறது. 'நம்மைச்' சார்ந்தவர்களுக்குள் நாம் உட்கார்ந்து கொண்டு, நம்மைச் சாராத 'அவர்களைப்' பற்றி பேசுவதே புறணி. இவ்வாறாக, புறணி நமக்கு ஒரு சார்பு உணர்வைத் தருகிறது.

ஆ. புறணி பேசும் குழுமம் தனக்கென்று 'உண்மை' என்ற ஒரு கற்பனை வட்டத்தை உருவாக்குகிறது. தன் குழு நினைப்பதுதான் உண்மை என இது ஒருவர் மற்றவருக்குச் சொல்கிறது. இந்த வட்டத்திற்குள் வராதவர்கள் பேசுவது உண்மை அல்ல எனவும் இந்தக் குழு முடிவு செய்துகொள்கிறது.


நிற்க.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எண்ணிக்கை 12:1-13) இருவர் புறணி பேசுகின்றனர். மிரியமும், ஆரோனும் இணைந்து கொண்டு தங்கள் சகோதரன் மோசே பற்றிப் பேசுகின்றனர். இவர்கள் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு மோசேயின் புறவினத்து அல்லது எத்தியோப்பிய மனைவி. சகோதர சகோதரிகளுக்குள் சண்டை சச்சரவு வர பல இடங்களில் மனைவிதான் காரணம் என்பது விவிலிய பதிவும்கூட.

மேலும், இவர்களின் புறணி மோசேயுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. கடவுளையும் வம்புக்கு இழுக்கிறார்கள்.

'புறவினத்துப் பெண்ணைத் திருமணம் முடித்த இவனுக்கு மட்டுமா அல்லது இவனுக்கு எப்படி கடவுள் தன்னை வெளிப்படுத்த முடியும்? யோக்கியர்களாகிய எங்களுக்குத்தான் அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்' எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டதோடல்லாமல் தாங்கள் சார்ந்தவர்களிடமும் சொல்கின்றனர்.

இதைக் கேட்டுக் கோபப்படுகின்ற கடவுள் தனக்கும் மோசேக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை அழகாகச் சொல்கின்றார்:

'ஆனால் என் அடியான் மோசேயோடு அப்படியல்ல. என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன். நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல. நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான்.'

இவ்வாறாக, எல்லா நிலைகளிலும் மிரியம் மற்றும் ஆரோனை விட மோசே உயர்ந்திருப்பதாக கடவுள் சொல்கின்றார்.

தாங்கள் பேசிய புறணிக்குப் பரிசாக மிரியம் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றார்.

ஆனால் ஆரோனுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை? என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆரோன் ஒரு தலைமைக்குரு. அவருக்கு தொழுநோய் பீடித்தால் அவர் தீட்டுப்படுவார் என்பதற்தாக ஆசிரியர் இப்படி பதிவு செய்தாரா அல்லது பெண்ணுக்கு மட்டுமே தண்டனை என்ற ஆணாதிக்க சிந்தனையா என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

மிரியமின் தொழுநோய் நீங்கள் கடவுளிடம் மோசே பரிந்துரை செய்கின்றார்.

இந்த நிகழ்வு மூன்று பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது:

அ. கடவுள் ஒன்றை அல்லது ஒருவரைத் தேர்ந்துகொண்டார் என்றால் அவரை அவருக்குப் பிடிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதை விட்டு கடவுளின் தேர்வை நாம் சந்தேகிக்கவோ, கேலி செய்யவோ கூடாது.

ஆ. கடவுளின் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு.

இ. நாம் ஒருவர் மற்றவரைப் பற்றி புறணி பேசும்போதெல்லாம் மிரியமின் தொழுநோயை நினைத்துக்கொண்டால் புறணி குறையும். புறணி பேசும் போது நம்மை அறியாமல் நாமே நம்மை அழுக்காக்கிக் கொள்கின்றோம். புறணியில் பரிமாறப்படும் வார்;தைகள் அணுகுண்டுகளுக்குச் சமம். 'புறணி ஒரு தீவிரவாதம்' என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.


நானா கருத்தரித்தேன்?

மோசே ஆண்டவரிடம் கூறியது: 'உம் அடியானுக்கு ஏன் இந்தக் கேடு? நீர் எனக்கு கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்' (காண். எண்ணிக்கை 11:4-15)

இன்று மாலை குருப்பட்ட திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.

குருப்பட்ட நிகழ்வின் இறுதியில் பேசிய பேராயர் அவர்கள், 'குருப்பட்டம் பெறும் அன்று இருக்கும் ஆடம்பரம், ஆரவாரம், கூட்டம், ஆடல், பாடல், விருந்து, வெளிச்சம் நாள்கள் கடக்க கடக்க கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இன்று இலகுவாகத் தொடங்கும் வாழ்க்கை அன்று கடினமாகவும் பளுவாகவும் இருக்கும். அருள்பணியாளர் அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

இனிமையாகத் தெரிந்தது சுமையாகத் தெரிகின்ற ஒரு நிகழ்வைத்தான் நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இன்றைய குருப்பட்ட திருப்பலியில் வாசிக்கப்பட்ட முதல் வாசகமும் இதுவே.

மோசே ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.

கடவுள் இஸ்ரயேல் மக்களை 'வணங்கா கழுத்துள்ள மக்கள்' என்று சொன்னபோது அவர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கிய மோசே (விப 32), சிறிது ஆண்டுகளில், 'இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களை நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்?' என தன்னை மற்ற மக்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்கின்றார்.

'அன்பில்லாமல் செய்யும் எந்த வேலையும் பளுவே' என்பார் என்னுடைய ஆன்மீக குரு.

மோசேக்கு மக்கள் மேல் இருந்த அன்பு குறைந்துவிட்டதா?

அல்லது அவர்கள் அவரிடம் அதிகம் இறைச்சி, உணவு கேட்டு தொந்தரவு செய்தார்களா?

அல்லது இது இயல்பாகவே மனிதர்களுக்கு, அருள்பணியாளர்களுக்கு வருகின்ற ஒரு ...ஆ?

அல்லது மோசேக்கு வயதாகிவிட்டதா?

கடவுள் மோசேயைக் கடிந்துகொள்ளவில்லை. உடனடியாக 1 உதவியாளரை அல்ல, 70 உதவியாளர்களைத் தருகின்றார்.

Sunday, August 6, 2017

எண்ண வேண்டாம்

எங்கள் இல்லத்தில் வாழும் ஒரு தந்தைக்கு பணம் அன்பளிப்பு கொடுத்த ஒருவர் அவரிடம் கொடுக்கச் சொல்லி என்னிடம் தந்தார்.

காலை உணவு முடித்துவிட்டு அந்த தந்தைக்காக காத்திருந்தேன்.

கவரைக் கொடுத்தேன்.

கொடுத்தது யார் என்று சொன்னேன்.

'நன்றி' என்றார்.

'சிரித்தார்.'

கவரைத் திறந்தார். பார்த்தார்.

ஆனால் எண்ணிப் பார்க்கவில்லை.

'எண்ணிப்பாருங்க!' என்றேன்.

'எதுக்கு எண்ணனும்? கிப்டா வந்ததுதான!' என்றார்.

'நமக்கு வர்ற கிப்ட எண்ணக்கூடாது. இது என்ன நான் வாங்கும் சம்பளமா? நான் எதுக்கு எண்ணனும்? கிப்டா வர்ற பணத்தை எண்ணினா, 'இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமோ?' என்ற எண்ணம் வரும்.

கிப்ட் கொடுத்தவருக்கு நன்றி.

கிப்டை ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த ஃபிலாசஃபி எனக்கு பிடித்திருந்தது.

என் வாழ்வின் கிப்டுகளை நான் எண்ணிப்பார்த்து ஏங்குவதை விட, அப்படியே எடுத்துக்கொண்டு பகிரத் தொடங்கினால் வாழ்க்கை இனிமையே!

Saturday, August 5, 2017

வியான்னி

இன்று அருள்பணியாளர்களின் பாதுகாவலர் தூய வியான்னியின் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த வாரம் கனடா நாட்டில் நடந்த ஒரு திருமணத்தை முன்நின்று நடத்த உரோமையின் திருச்சடங்குகள் பேராயம் 55 வயது நிறைந்த அருள்சகோதரி ஒருவருக்கு அனுமதி கொடுத்திருந்தது.

அருள்பணியாளர் இல்லாத சூழலில் ஒரு பொதுநிலையினரும் திருமணத்திற்கு தலைமை ஏற்கலாம் என திருச்சபைச்சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்த அடிப்படையில்தான் அருள்சகோதரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், இவர் திருமணத்தை ஆசீர்வதித்தாரா அல்லது ரிஜிஸ்டரில் மட்டும் கையெழுத்திட்டாரா என்ற தரவுகள் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிகழ்வு நடந்த இரண்டாவது நாள், 'அருள்பணியாளர்கள் இனி தேவையில்லை' என்ற கட்டுரை இணையதளத்தில் வெளியானது.

'அருள்பணி நிலை' இன்று தேவையா? இல்லையா? என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துவிட்டோம்.

'நாம் செய்யாத எதை அருள்பணியாளர்கள் செய்துவிடுகிறார்கள்?' என்ற கேள்வியும் எழுகிறது.

நிற்க.

'அருள்பணியாளர்களும் வலுவற்றவர்களே, அவர்களும் மனிதர்களே' என்ற சிந்தனை ஓட்டத்தில் இன்று நிறைய வாட்ஸ்ஆப் செய்திகள் வலம் வந்தன. இப்படி சொல்வது ஏதோ ஒருவகையில் நம் வலுவின்மையை மேற்கொள்வதற்குப் பதிலாக, அந்த வலுவின்மையோடு சமரசம் செய்துகொள்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது.

நிற்க.

அருள்பணியாளர்கள் இந்த நாள்களில் நேர்மையற்றவர்களாகவும், பணம் மற்றும் பதவி விரும்பிகளாகவும், தன்னலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சாப்பாட்டு அறையில் வந்திருந்த இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள். பேசி முடித்துவிட்டு ஒருவர் சொன்னார், 'இவர்கள் விரும்பித்தானே வந்தார்கள்! அப்புறம் என்ன அதை ஏற்றுக்கொள்ள!'
'இதோ வருகிறேன்' என்று ஓர் அருள்பணியாளர் சொல்லி திருநிலைப்படுத்தும் சடங்கிற்குள் நுழையும்போது யாரும் அவரை நிர்பந்திப்பதில்லை.

அவரே விரும்பி வருகிறார்.

அப்படி விரும்பி வரும் நான், 'இல்ல இல்ல நான் அப்படி நினைத்தேன், இப்படி நினைத்தேன்' எனச் சொல்வது ஏன்?

நானே விரும்பிதான் இதை தெரிந்துகொண்டேன் என்றால் என் வாழ்வில் சமரசங்கள் எதற்கு?

இறுதியாக,

'அருள்பணியாளராக நீ என்ன பெற்றாய்?' என என்னிடம் யாராவாது கேட்டால்,

'அருள்பணியாளராக இல்லாவிட்டால் நான் நிறையவற்றை இழந்திருப்பேன்' என்று விடை சொல்வேன்.

விரும்பி வந்தார் வியான்னி.

இறுதி வரை தன் கஷ்டங்களை விரும்பி ஏற்றார்.

விரும்பிவிட்டால் எதுவும் சுமையல்ல!

Thursday, August 3, 2017

கண்ணீர் கதை

இன்று காலை கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். மருத்துவர் வர காலம் தாழ்த்தியதால் அவரின் அறையில் ஒட்டப்பட்டிருந்த எல்லா போஸ்டர்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அவற்றில் ஒரு போஸ்டர் என்னைக் கவர்ந்தது.

போஸ்டரின் தலைப்பு: 'உலர்ந்த கண்கள்'

கண்கள் ஏன் உலர்கின்றன? உலர்கண்களுக்கு மருத்துவம் என்ன? உலர் கண்கள் யாருக்கெல்லாம் அல்லது எப்போதெல்லாம் வரும்? என நிறைய தகவல்களைக் கொண்டிருந்தது அது.

கண்கள் கண்ணீர் இல்லாததால் உலர்ந்து போகின்றன - இதுதான் சிம்பிளான பதில்.

தண்ணீர் இல்லாத தரை எப்படி உலர்கிறதோ, அப்படியே கண்ணீர் இல்லாத கண்ணும் உலர்ந்துவிடுகிறது.

கண்ணீர் எப்படி வருகிறது என்ற படமும் அங்கே வரையப்பட்டிருந்தது:

கண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்:

அ. சாதாரண கண்ணீர். இந்தக் கண்ணீர்தான் நம் கண்களுக்கு ஈரப்பதம் தருகின்றது.

ஆ. ரிஃப்ளக்ஸ் கண்ணீர். வெளியே நடக்கும் ஒரு நிகழ்வுக்கு நம் கண்கள் எதிர்வினை புரியும் கண்ணீர். புகை, வெங்காயம் உரித்தல், கண்களில் தூசி விழுதல் போன்ற நேரங்களில் வரும் கண்ணீர் இது. இந்தக் கண்ணீர் நம் கண்களின் கோர்னியாவின் மேற்புறத்தை தூய்மைப்படுத்துகிறது.

இ. அழுகின்ற கண்ணீர் அல்லது உளவியல் கண்ணீர். அதிக மகிழ்ச்சி, அதிக துக்கம், ஏமாற்றம், வருத்தம் போன்ற நேரங்களில், நம் உணர்வுகளின் உந்துதலால் சுரக்கும் கண்ணீர் இந்தக் கண்ணீர். இதை இயற்கையான வலிநிவாரணி (லெயுசின் என்கெஃபாலின்) என்கிறது மருத்துவம். நம் மூளையில் உள்ள லிம்பிக் பகுதிதான் நம் உணர்வுகளின் பிறப்பிடம். அந்த லிம்பிக் பகுதிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் உள்ள தொடர்பில் அசட்டில்கோலின் என்ற கண்ணீர் சிஸ்டம் கன்ட்ரோல் உண்டு. இந்த சின்ன ஸ்பார்க்தான் நீரைச் சுரக்க வைக்கிறது. ஆக, உணர்வு - நரம்பு - கண்ணீர் துகள் என மூன்று படிகளாக உருவாகிறது கண்ணீர்.

கண்ணீர் இடம் அல்லது நேரம் சார்ந்தது.

இறப்பு நடந்த இடத்தில் அல்லது மருத்துவமனையில் நாம் கண்ணீர் வடிக்கிறோம்.

அல்லது இழப்பு, துயரம் போன்ற நேரங்களில் கண்ணீர் வடிக்கிறோம்.

கண்ணீர்ல என்ன ஒரு சிறப்புன்னா என்னதான் நாம கண்ணீர் வடித்தாலும் நம் முகத்தைக் கழுவும் அளவிற்கு கண்ணீர் வடிக்க நம்மால் முடியாது. நாம் முகத்தில் அடிக்கும் தண்ணீர் காய்வதை விட, நம் கண்ணீர் வேகமாகக் காய்ந்துவிடுகிறது.

கண்ணீரில் முதலைக் கண்ணீர் என்ற வார்;த்தையை அறிமுகப்படுத்தியவர்கள் கிரேக்கர்கள்.

குழந்தைகள் தங்கள் கண்ணீர் வழியாகவே மற்றவர்களுடன் பேசுகிறார்கள். அவர்களின் அழுகைதான் அவர்கள் பேசும் மொழி.

மேலும் ஒரு பெண் வருடத்திற்கு 50 முறை அழுகிறார் என்றால் ஒரு ஆண் 10 முறை மட்டுமே அழுகிறார் என்பது சர்வே முடிவு.

Wednesday, August 2, 2017

விண்ணரசு

'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?' என்று இயேசு கேட்க, அவர்கள் 'ஆம்' என்றார்கள்.

பின்பு அவர், 'ஆகையால், விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்' என்றார்.

(மத்தேயு 13:51-52)

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் மேற்காணும் இரண்டு வசனங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.

அ. புரிந்துகொண்டீர்களா?

நாம் நம் அன்றாட உரையாடல்களில் ஒருவர் மற்றவரை நோக்கி கேட்கும் வார்த்தை 'புரிந்துகொண்டீர்களா?' என்பது. வழக்கமாக இது மேலிருந்து கீழ் நோக்கி வரும் கேள்வி. எடுத்துக்காட்டாக, ஆசிரியர் மாணவரைப் பார்த்து, 'புரிந்துகொண்டீர்களா?' என்று கேட்கலாம். அதே கேள்வியை மாணவர் ஆசிரியரை நோக்கிக் கேட்டால் அந்த மாணவரின் கதி அதோகதிதான்.

தான் ஒரு நல்ல ஆசிரியராக இருக்க நினைக்கும் இயேசு தன் சீடர்களைப் பார்த்து, 'புரிந்துகொண்டீர்களா?' எனக் கேட்கிறார்.

அவர்கள் வேகமாக, 'ஆம்' என்கின்றனர். 'இல்லை' என்று சொன்னால் இன்னும் இவர் பேசிக்கொண்டே இருப்பார் என நினைத்து 'ஆம்' என்றார்களா? அல்லது உண்மையிலேயே 'ஆம்' என்றார்களா என்பது தெரியவில்லை.

இயேசுவின் கேள்வி நாம் மியுசிக் பிளேயரில் வைத்திருக்கும் 'சிறுநிறுத்தம்' (pause) என்ற பட்டனைப் போன்றது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல், காணொளி, அல்லது உரைவீச்சு ஆகியவற்றை சில நேரங்களில் நாம் 'சிறுநிறுத்தம்' செய்கிறோம். சிறுநிறுத்தம் இசையின் ஓட்டத்தைத் தடை செய்கிறது. அதே நேரத்தில் அந்த சிறுநிறுத்தம் இசையை நம் உள்ளத்தில் பதிய வைக்கிறது.

ஓடிக்கொண்டே இருக்கும் நம் வாழ்க்கைக்கும் இந்த சிறுநிறுத்தம் பட்டன் அவசியம்.

'புரிந்துகொண்டாயா?' அல்லது 'புரிந்துகொண்டேனா?' என்ற கேள்வி எனக்கு அவசியம்.

அதாவது, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறுநிறுத்தம் செய்து, 'இந்த நிகழ்வின் பொருள் என்ன?' 'இந்த உறவின் பொருள் என்ன?' 'இந்த தோல்வியின் பொருள் என்ன?' 'இந்த பயணத்தின் பொருள் என்ன?' என நம்மையும், நம்மைச்சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்வது அவசியம்.

ஆ. கருவூலத்திலிருந்து

அப்படி 'சிறுநிறுத்தம்' செய்பவர் யாரைப் போல இருக்கிறார்?

வீட்டு உரிமையாளரைப் போல.

அவர் என்ன செய்கிறார்? தன் இரும்புப் பெட்டி அல்லது இரும்பு அறையாகிய கருவூலத்தைத் திறந்து புதியவற்றையும், பழையவற்றையும் வெளிக்கொணர்கிறார். கருவூலத்தில் புதியதும், பழையதும் ஒருங்கே இருப்பது வீட்டு உரிமையாளரின் நிறைவைக் காட்டுகிறது. அதாவது, செலவழிக்க முடியாத அல்லது செலவழிக்கத் தேவையில்லாத ஒருவரின் கருவூலத்தில் பழையதும் இருக்கும், புதிதாக அவர் சம்பாதித்த பொருளும் இருக்கும்.

காற்று நுழையாத அந்த இடத்திலிருந்து அவர் வெளியே கொண்டுவருகிறார்.

எதற்காக?

பயன்பாட்டிற்காக.

ஆக, வாழ்வின் அர்த்தம் புரிய வேண்டும். அப்படி புரிந்தவுடன் நம் உள்ளத்தில் இருக்கும் புதிய மற்றும் பழைய முத்துக்களும், சொத்துக்களும் வெளியே சென்று பயன்தர வேண்டும்.

இரண்டு பாப்பாஸ்

இன்று அதிகாலை காலை திருப்பலிக்காக செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்குச் சென்றிருந்தேன். 'நல்லா இருக்கீங்களா?' என்ற கேள்வியை மட்டும் அவர்கள் பாஷையிலேயே கேட்டேன். அவர்களும் தங்கள் பாஷையிலேயே பதில் சொன்னார்கள். 'இவருக்கும் பேச்சு வராது போல!' என என்னை நினைத்திருப்பார்கள்.

திருப்பலி நேரத்தில் இரண்டு குழந்தைகள் பேசிக்கொண்டிருந்தன. இந்தக் குழந்தைகள் சைகை மொழியில் மட்டும் பேசிக்கொண்டதால் எந்த சப்தமும் வரவில்லை.

இந்தக் குழந்தைகளின் சலனமற்ற, சத்தமற்ற மௌன உலகத்தை அனுபவிக்க எனக்கும் ஆசையாக இருந்தது. மொழி படத்தின் கதாநாயகன் இந்த அனுபவத்தைப் பெற தன் காதுகளில் பஞ்சு வைத்து இறுக்கமாகக் கட்டிக்கொண்டு ஊரை வலம் வருவது நினைவிற்கு வந்தது.

உரோம் நகருக்குச் சென்ற புதிதில் நானும் செவித்திறன் குறைவான, பேசும்திறன் குறைவானவனாக இருந்தேன். மொழி தெரிந்தால்தானே அவர்கள் பேசுவது புரியும். மொழி தெரிந்தால்தானே பதில் பேச முடியும். ஏறக்குறைய 6 மாதங்கள் மௌனத்திலேயே கடந்தது. ஆக, நாம் எல்லாருமே செவித்திறன் - பேச்சுத்திறன் குறைந்தவர்களாக இருக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம்.

திருப்பலி முடிந்து கேக் வெட்டும் நேரத்தில் மேற்சொன்ன இரண்டு குழந்தைகளும் அருகருகே நின்றுகொண்டன. இருவர் முகங்களிலும் அப்படி ஒரு சிரிப்பு. 'உங்க பெயர் என்ன?' என்று கேட்டேன். 'அட்சயா' என பதில் வந்தது. 'இவருக்கு காது கேட்குமா?' என்றேன். 'அதற்கான மெஷின் வைத்தால் கேட்கும். இந்தக் குழந்தைக்கு அது பொருத்தப்பட்டுள்ளது' என்றார் ஓர் அருள்சகோதரி. தானும் கேக் வெட்ட வேண்டும் என புன்னகையோடு கேட்டாள் அட்சயா. சரி என்றனர் அருள்சகோதரிகள். கேக் வெட்டியவள் முகத்தில் அவ்வளவு புன்னகை.

அதாவது, பெரிய கூட்டத்தின் நடுவிலும் தான் செய்ய நினைத்ததை செய்து முடித்து மகிழ்ச்சி கண்டாள் அட்சயா.

ஆனால், வளர வளர நாம் இந்த 'நினைத்ததை செய்வதை' மறந்துவிடுகின்றோம். நாமாக நம் ஆசைகளை குறுக்கிக் கொள்கிறோம். அல்லது 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?' என்று மீதிக் கனவுகளை புதைத்துவிடுகிறோம்.


இது கேக் பாப்பா. முதல் பாப்பா.

இரண்டாவது பாப்பா பலூன் பாப்பா. பள்ளி ஒன்றின் அலுவலக திறப்பு. விழாத்தலைவரை வரவேற்க நிறைய குழந்தைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இரண்டு குழந்தைகள் படிக்கட்டுகளில் நின்றனர். அவற்றில் ஒரு குழந்தையின் கையிலிருந்த பலூன் கீழே விழுந்தது. அதை எடுக்க அது இறங்கி வந்த நேரம் காற்று அடித்தது. காற்றில் பலூன் நகர ஆரம்பித்தது. 'அதைப் பிடிங்க' என்று அந்தக் குழந்தை கத்த, செபம் செய்து கொண்டிருந்தவர்களின் மௌனம் கலைந்தது.

தான் செய்ய நினைத்ததை செய்ததோடல்லாமல், அதற்கு உதவ மற்றவர்களையும் அழைக்கிறாள் இந்த இரண்டாவது பாப்பா அல்லது பலூன் பாப்பா. நாங்கள் செய்த செபம், திறக்கப்பட்ட அலுவலகம், நன்கொடையாளர்கள், விழாத்தலைவர்கள் என யாரைப் பற்றியும் அக்கறைப்படாத இந்த பாப்பா தன் பலூன் மேல் மட்டுமே அக்கறையாக இருந்தது.

இரண்டு பாப்பாக்கள்!

இனிய பாப்பாக்கள்!