Wednesday, September 30, 2020

மௌனப் புன்னகையாள்

இன்றைய (1 அக்டோபர் 2020) திருநாள்

மௌனப் புன்னகையாள்

'வானிலிருந்து ஆசிகளை ரோசா மலர்களாக அள்ளித் தெளிக்கும் எங்கள் சின்ன ராணி குழந்தை தெரசா' என்று எங்கள் இளங்குருமட அதிபர் அருள்திரு. ஹெர்மஸ் மொடுதகம் அவர்கள் திருப்பலியில் கண்களை மூடிக்கொண்டு மன்றாடும் சின்னராணியின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

இளங்குருமடத்தில் நாங்கள் இருந்த அந்த ஆண்டு (1998-1999), சின்னராணி பற்றிய இரண்டு புத்தகங்களை நாங்கள் எங்கள் ஆன்மீக வாசிப்பிற்காக எடுத்திருந்தோம்: ஒன்று, 'ஓர் ஆன்மாவின் வரலாறு' - இது சின்னராணியின் தன்வரலாற்று நூல். இரண்டு, 'மௌனப் புன்னகையாள்' - இது சின்னராணி பற்றிய வரலாற்று நூல். மேற்காணும் இரண்டு நூல்களிலும், 'சின்ன வழி' அல்லது 'சிறிய வழி' என்பதுதான் அதிகம் பேசப்பட்டது.

சின்னராணியின் சின்ன வழி அல்லது சிறிய வழி பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

இன்று, நாம் பெரிய வழி பற்றியே பேசுகிறோம். இருவழிச் சாலை, நான்கு வழிச் சாலை, ஆறு வழிச் சாலை, என்பவை வளர்ந்து எட்டு வழிச் சாலையாக மாறிக்கொண்டு வருகின்றன. நம் இணைய வேகமும் 2, 3, 4, 5ஜி என அகன்று கொண்டே வருகின்றது. வாகனம் ஓடும் வழியும், இணையதள தரவு நகரும் வழியும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தாலும், நம் உள்ளம், உடல்நலம், மனநலம் ஆகியவை சிறியதாகிக்கொண்டே வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

'பெரிதினும் பெரிது கேள்' எனச் சொல்லும் இந்த உலகத்தின் சப்தங்களின் நடுவில், 'சிறிதினும் சிறிது கேள்' எனக் கற்பிக்கிறாள் மௌனப் புன்னகையாள்.

'சிறிய வழியில்' நடப்பது எப்படி?

சின்னராணியின் வார்த்தைகளிலேயே கேட்போம்.

1. 'அன்பு செய்வோம். ஏனெனில், அதற்காகவே நம் இதயங்கள் படைக்கப்பட்டன.'

2. 'சிறிய தியாகம் செய்வதற்கான வாய்ப்பையும்கூட நழுவவிட வேண்டாம்.'

3. 'அன்பு அனைத்தையும் வெல்லும்.'

4. 'நாம் அடையும் அனைத்தும் அன்பு இல்லையேல் வெறுமையே.'

5. 'நம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே நம்மை அன்புக்கு இட்டுச் செல்லும்.'

6. 'கடவுளின் பார்வையில் எதுவும் சிறியது அல்ல. நீ செய்வதனைத்தையும் அன்புடன் செய்து பழகு.'

7. 'உன் ஆன்மாவில் கடவுள் செயலாற்றுவதற்கு ஆண்டுகள் தேவையில்லை. ஒரு நொடி போதும்.'

8. 'கனிவு மட்டுமே நமக்கு வழிகாட்டும் விண்மீன்.'

9. 'நீ கடவுளின் பிள்ளை என்ற அறிவில் நீ மகிழ்ந்தால் அதுவே போதும்.'

10. 'நம்மைச் சுற்றியுள்ள பொருள்களில் அல்ல, மாறாக, நம் ஆன்மாவின் அடித்தளத்தில்தான் மகிழ்ச்சி குடிகொள்கிறது.'

11. 'எல்லா மலர்களும் ரோஜா ஆக விரும்பினால், வசந்தகாலம் தன் அழகை இழந்துவிடும்.'

12. 'கடவுளின் விருப்பம் நிறைவேற்றுவதில்தான் புனிதம் அடங்கியுள்ளது.'

13. 'அன்பு செய்யும் ஒருவர் கணக்குப் பார்ப்பதில்லை.'

14. 'உனக்கு அடுத்திருப்பவரின் குறைகளைப் பொறுத்துக்கொள்வதில்தான் அன்பு அடங்கியுள்ளது.'

15. 'உண்மை ஒன்றே எனக்கு ஊட்டம் தரும்.'

16. 'ஒவ்வொரு பொழுதாக வாழ்! ஒவ்வொன்றையும் இனிமையாக வாழ்!'

17. 'சிறுமலரும் நம்மிடம் பேசினால், கடவுள் அதற்குச் செய்த யாவற்றையும் நமக்குச் சொல்லும்!'

18. 'என் செபத்திலும் தியாகத்திலும்தான் என் வலிமை உள்ளது.'

19. 'ஒவ்வொருவரோடும் வாக்குவாதம் செய்வதைவிட, அவர்களின் கருத்தில் அவர்களை விட்டுவிடுவதே நலம்.'

20. 'இறைவேண்டலின் ஆற்றல் அளப்பரியது.'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:1-5), 'விண்ணரசில் பெரியவர்' என்று ஆபிரகாம், யாக்கோபு, மோசே, தாவீது, சாலமோன் போன்ற மாபெரும் மனிதர்களை முன்வைக்காத இயேசு, ஒரு சிறுபிள்ளையை முன்நிறுத்துகிறார். 'சிறியவர் ஆவதே பெரியவர் ஆவது' என்பது இயேசுவின் இனிய அறிவுரை.

பெரியவர் ஆகியே பழக்கப்பட்ட நாம் சிறியவர் ஆக முயற்சிக்க சின்னராணி பரிந்து பேசுவாராக!

Tuesday, September 29, 2020

விடை தெரியாத கேள்விகள்

இன்றைய (30 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (யோபு 9:1-12,14-16)

விடை தெரியாத கேள்விகள்

இரண்டு நாள்களுக்கு முன் நான் யோபு நூலை வாசிக்கத் தொடங்கினோம். அன்றைய நாளில் யூட்யூப் காணொளி ஒன்றில் அருள்பணியாளர் ஒருவர் யோபு பற்றி ஆற்றிய மறையுரையில், 'யோபு தன் நம்பிக்கையில் நிலைத்திருந்தார் என்றும், இறுதிவரை நாம் நம்முடைய நம்பிக்கையைக் காத்துக்கொண்டால், கடவுள் அனைத்தையும் தருவார்' என்றும் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு நெருடலாய் இருக்கின்றன.

இழந்தவர்கள் தாங்கள் இழந்தது அனைத்தையும் தங்கள் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டார்களா?

இல்லை!

உரோமையில் நான் சந்தித்த ரோசாப்பாட்டியில் நான் யோபு என்னும் கதைமாந்தரையே பார்த்தேன். அவர் தன் வாழ்நாள் முழுவதும் இழப்புகளை மட்டுமே சந்தித்தார். அவர் இறைநம்பிக்கையிலும் நிலைத்திருந்தார். ஆனால், இறுதியில் இழப்புகளோடு இறந்தும் போனார். அவரது நம்பிக்கைக்கு ஏன் கடவுள் பதில் தரவில்லை? அல்லது அவர் இழந்தவற்றை ஏன் கடவுள் திருப்பிக் கொடுக்கவில்லை?

'இன்று நாம் இழந்தால் நாளை அனைத்தும் கிடைக்கும்' என்ற செய்தியைத் தருவதல்ல யோபு நூல். ஒருவேளை இழந்த அனைத்தும் திரும்பக் கிடைத்தால் நலம். அவ்வளவுதான்.

யோபுவும் ரோசாப்பாட்டியும் தாங்கள் அனைத்தையும் இழந்தாலும், தங்கள் வாழ்க்கையில் உறுதியாக இருந்தனர். ஏன்? கடவுள்மேல் உள்ள நம்பிக்கையால் அல்ல. மாறாக, வாழ்வின் எதார்த்தங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதால்.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் யோபு தன் நண்பர்களுக்கு மறுமொழியாகக் கூறுகின்றார். 'கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்று அவர் கூறவில்லை. மாறாக, கடவுளின் செயல்களை நாம் அறியவோ, பொருள்கொள்ளவோ முடியாது. ஏன்? நாம் நேர்மையாய் இருப்பது கூட நமக்குத் தெரியாது. எடுத்துக்காட்டாக, எனக்கு பசியாக இருக்கிறது. நான் கடவுளிடம் மன்றாடுகிறேன். கடவுள் வழியில் என் கண்களுக்கு ஒரு நூறு ரூபாய் தாளைக் காட்டுகிறார். இப்போது, 'இது கடவுள் எனக்குத் தந்த பணம்' என நான் அதை எடுத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது 'இதை எடுப்பது களவு, இதை நான் உரியவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்று நான் தவறவிட்டவரைத் தேட வேண்டுமா? ஆக, நேர்மையாய் இருப்பது, கடவுள்முன் நேர்மையாய் இருப்பது எளிதான காரியமன்று. இது நேர்மை, இது நேர்மையற்றது என்பன எல்லாம் மனித வரையறைகளே அன்றி வேறொன்றும் இல்லை.

வாழ்வில் பலவற்றுக்கு நமக்கு விடை தெரியாது. ஆனால், விடை தெரிந்தது போல அல்லது விடை தெரிவது போல நாம் பேசுகிறோம் அல்லது செயல்படுகிறோம். விடை தெரிந்ததாக நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் தீயவர்கள் என்று தீர்ப்பிடுகிறோம்.

மெய்யான ஞானம் என்பது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஏன் துன்பம்? எனக்கு ஏன் துன்பம்? நல்லதே செய்யும் எனக்கு ஏன் துன்பம்? கடவுளை நம்புகிற எனக்கு ஏன் துன்பம்? கடவுளின் இரக்கம் எங்கே? கடவுளின் நன்மைத்தனம் எங்கே? என்னும் கேள்விகளுக்கு விடைகள் இல்லை. விடைகள் இல்லாத கேள்விகளோடு வாழப் பழகிக்கொள்வதே விவேகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:57-62), இயேசுவோடு வழிநடந்தவர்கள் அவரைப் பின்பற்ற விழைகின்றனர். தாமாக முன்வருபவர்களைத் தள்ளிவிடுகிற இயேசு, சிலரை வலிந்து அழைக்கிறார். 

ஏன்?

அப்படித்தான்! தானாக வருவதைத் தள்ளிவிடுவார். இழுத்தும் வராததை இறுகப் பற்றிக்கொள்வார். 

இது ஏன் என்று புரியாததால், அவர் கடவுள்.


Monday, September 28, 2020

அதிதூதர்களின் அவசியம்

இன்றைய (29 செப்டம்பர் 2020) திருநாள்

அதிதூதர்களின் அவசியம்

'கடவுளுக்கு நிகர் யார்?' எனப் பெயர் கொண்டு

எல்லா வகை தீமைகளையும் எதிர்த்துப் போராடும் மிக்கேலே (காண். திவெ 12:7)!

'கடவுளின் ஆற்றல்' எனப் பெயர் கொண்டு

கடவுளின் நற்செய்தியை திருமுழுக்கு யோவானின் மற்றும் இயேசுவின் பிறப்புச் செய்தியாக

அறிவித்த கபிரியேலே (காண். லூக் 1:19-26)!

'கடவுளின் நலம்' அல்லது 'கடவுள் நலம் தருகிறார்' எனப் பெயர் கொண்டு

மண்ணுலக மாந்தர்களோடு வழிநடந்து அவர்களுக்கு நலம் தரும் இரபேலே (காண். தோபி 3:17, 5:4)!
முன் எப்போதும் விட நீங்கள் இப்போது எங்களுக்குத் தேவை.

அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில், எங்கள் தலைவர்கள் தங்களையே கடவுளுக்கு நிகர் என ஆக்கிக்கொண்டு எடுக்கும் முடிவுகளால் தீமை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. தன்னலம், ஊழல், பேராசை, அடிப்படை வாதம், குறுகிய எண்ணங்கள், பிளவு மனப்பான்மை போன்ற தீமைகளை அழித்தருள வாரும் புனித மிக்கேலே!

தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையதளம், சமூக வலைத்தளம் என எல்லா ஊடகங்களிலும் வழங்கப்படும் செய்திகள், அரசியல் கட்சிகளால் 'வாங்கப்பட்ட செய்திகளாக' இருக்க, நாங்கள் அவை தரும் குப்பைகளால் நாளும் நாறடிக்கப்படுகிறோம். அவை எங்களுக்குச் சோர்வு தருகின்றன. சோர்வுற்ற எங்கள் மனங்களுக்கு நற்செய்தி தாரும் புனித கபிரியேலே!

கொரோனா பெருந்தொற்று, பெருந்தொற்று ஏற்படுத்தும் பயம், பயத்தால் வரும் தனிமை, தனிமையால் வரும் கோபம், கோபத்தால் வரும் விரக்தி என எங்கள் உள்ளமும் உடலும் ஆன்மாவும் நலிவுற்ற நிலையில், இன்றா, நாளையா, நாளை மறுநாளா என்று நாள்களை நகர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கும் எங்களோடு வழி நடந்து எங்களுக்கு நலம் தாரும் புனித இரபேலே!

Sunday, September 27, 2020

இழப்புகளைக் கையாளுதல்

இன்றைய (28 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (யோபு 1:6-22)

இழப்புகளைக் கையாளுதல்

இன்றைய முதல் வாசகம் யோபு நூலின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உரைநடையில் இருக்கும் இப்பகுதி, கதையின் முதன்மையான மாந்தர் யோபு அறிமுகம் செய்யப்படுகிறார்.

முதலில், யோபு ஒரு பேசுபொருளாக அறிமுகம் செய்யப்படுகின்றார். அதாவது, யோபுவைப் பற்றி, தெய்வப் புதல்வர்கள் நடுவில் ஆண்டவரும் சாத்தானும் பேசிக்கொள்கின்றனர். யோபுவைப் பற்றி கடவுள் நல்ல வார்த்தைகளில் சொன்னவுடன், சாத்தான் அதற்கு எதிர்மறையாகச் சொல்கின்றார். நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருடைய கதையில் வில்லன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டங்களைக் கடைப்பிடித்து, நற்செயல்கள் செய்து, இறைப்பற்றில் வாழ்ந்த யோபு, சாத்தானைப் பொருத்தவரையில் ஒரு வில்லன். அவ்வளவுதான்! இது சரியா? அல்லது தவறா? என்ற வாதம் இங்கே இல்லை. நம் வாழ்க்கையிலும் நாம் புகழப்படும் அல்லது பாராட்டப்படும் அதே காரணங்களுக்காக நாம் வெறுக்கப்படுவதும் உண்டு. இதுவே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொள்தல் நலம். அதை விடுத்து, அவர்களிடம், 'நான் அப்படி அல்ல!' என்று நம்மை நிரூபித்துக் கொண்டிருப்பதால் நேரமும் ஆற்றலும் விரயம் ஆகும். இறுதியில், பன்றிகள் முன் முத்துகளை எறிந்தது போலாகிவிடும்.

இரண்டாவதாக, சாத்தானுக்கும் ஆண்டவருக்கும் நடந்த உரையாடல் இந்த நூலை வாசிக்கும் உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால், யோபுவுக்குத் தெரியாது. தன்னைத் தண்டிக்க கடவுள்தாமே சாத்தானுக்கு அனுமதி அளித்துள்ளார் என்பது யோபுவுக்குத் தெரியாது. பாவம் யோபு! கடைசி வரையிலும் தான் எதற்காகத் துன்புற்றோம் என்பது அவருக்குத் தெரியாது. ஆக, நமக்கும் ஏதாவது துன்பம் வந்தால், அல்லது 'இது ஏன் எனக்கு நடக்கிறது?' என்ற கேள்வி எழுந்தால், ஒருவேளை நம்மைப் பற்றியும் ஏதாவது ஓர் உரையாடல் தெய்வப் புதல்வர்கள் நடுவில் நடந்திருக்கலாம் என எடுத்துக்கொள்வோம்.

மூன்றாவதாக, இழப்பைக் கையாள்தல். யோபு மூன்று வகை இழப்புகளை முதலில் எதிர்கொள்கிறார்: ஒன்று, கால்நடைகள். இரண்டு, பணியாளர்கள். மூன்று, பிள்ளைகள். இந்த மூன்றையும் இழந்ததால் அவர் அவருக்குரிய அனைத்தையும் இழந்தவர் ஆகிறார். ஆனால், இந்தச் செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அவருடைய வார்த்தைகள் எவை? 'என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன். அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன். ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!' முதலில், பாதியில் வந்தது அனைத்தும் பாதியில் போய்விடும் என்பது யோபுவின் ஞானமாக இருக்கிறது. பிறந்த மேனியனாய் வந்தவன் பிறந்த மேனியனாய்ச் செல்ல வேண்டும் என்பது நியதி என்பதால்தான், இந்துக்களின் மரபில், இறந்த உடலை எரியூட்டுகின்ற நிகழ்வில், இறுதியில் உடுத்தியிருக்கும் உடையும் அகற்றப்படுகிறது. இதை நினைவில் கொண்டால் நாம் பற்றுகளை விட முடியும். இரண்டாவதாக, 'நான் சம்பாதித்தேன். நான் உருவாக்கினேன். நான் பெற்றெடுத்தேன். என் பெயர் போற்றப் பெறுக' என்ற மனநிலையில் யோபு இருந்திருந்தால், மிகவும் மனமுடைந்து போயிருப்பார். ஆனால், அவர் ஆண்டவரிடமிருந்து தான் அனைத்தையும் பெற்றதாக உணர்கிறார். ஆக, வாழ்வை இரண்டு நிலைகளில் வாழலாம். 'என் செயல்களால் இது வந்தது' என்பது முதல் மனநிலை. 'அவரின் அருளால் வந்தது' என்பது இரண்டாவது மனநிலை. முதல் மனநிலையில் சோர்வு அதிகம். இரண்டாவது மனநிலையில் நிம்மதி அதிகம். மூன்றாவதாக, கொண்டிருத்தலையும் இழத்தலையும் ஒரே தளத்தில் பார்க்கிறார் யோபு.

இன்று, நான் என் வாழ்வின் இழப்புகளை எப்படி எதிர்கொள்கிறேன்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:46-50), 'சிறு பிள்ளையை ஏற்றுக்கொள்பவர் தன்னை ஏற்றுக்கொள்வதாக' இயேசு மொழிகிறார். சிறு பிள்ளை என்பது ஒன்றுமில்லாமையின் அடையாளம். ஒன்றுமில்லாமையை யோபு புன்முறுவலோடு ஏற்றுக்கொள்கிறார். தன் ஒன்றுமில்லாமையை உணர்பவர் எப்போதும் புன்னகைப்பார். அடுத்தவர் செயல் கண்டு, இருத்தல் கண்டு, கொண்டிருத்தல் கண்டு யோவான் போல பொறாமைப் படார் அல்லது கோபப் படார்.

Saturday, September 26, 2020

சாக்குப் போக்குகள்

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

I. எசேக்கியேல் 18:25-28 II. பிலிப்பியர் 2:1-11 III. மத்தேயு 21:28-32

சாக்குப் போக்குகள்

'இந்தியாவில் குரங்குகளைப் பிடித்தல்' என்று ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. குரங்கு பிடிப்பவர்கள் ஒரு பெட்டியில் குரங்கின் கை நுழையும் அளவுக்கு சிறிய துவாரம் இட்டு குரங்குகள் நடமாடும் இடத்தில் வைத்துவிடுவர். அந்தப் பெட்டிக்குள் நிறைய பருப்பு வகைகளை வைப்பர். பருப்பு வகைகளைக் காணும் குரங்கு அந்த துவாரத்திற்குள் கையை விட்டு அவற்றைக் கை நிறைய அள்ளும். கை நிறைய அள்ளிவிட்டு கையை வெளியே எடுத்தால் கை வராது. ஏனெனில், கை நுழையும் அளவுக்கு அந்த துவாரம் பெரியதாகவும், மூடிய கை வெளி வராத அளவுக்கு சிறியதாகவும் இருக்கும். குரங்கு என்ன செய்யும்? பருப்புகளை விட்டுவிடுமா? இல்லை. பருப்புகளைப் பற்றிக்கொண்டு எடுக்க முடியாமல் இங்குமங்கும் தவிக்கும்போது, அது வேடர்கள் கையில் அகப்பட்டுக்கொள்ளும்.

நம் வாழ்விலும், நம்மை முன்னோக்கிச் செலுத்தாதவாறு நாமும் சில பருப்புகளை கை நிறையப் பிடித்துக்கொள்கிறோம். 'என்னால் இது முடியாது ஏனெனில் ...' என்று நிறைய சாக்குப்போக்குகளைச் சொல்கின்றோம். 'ஏனெனில்' என்ற வார்த்தைக்குப் பின் வரும் அனைத்தும் சாக்குப் போக்குகளே. நாம் விடமுடியாமல் பற்றிக்கொள்ளும் பருப்புகளே சாக்குப் போக்குகள். வெற்றியாளர்கள் சாக்குப் போக்குகள் சொல்வதில்லை. அவர்கள் விளைவுகள்மேல் கவனம் குவிப்பார்களே தவிர, காரணங்கள்மேல் அல்ல.

சில அலுவலகங்களில் நமக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடம், 'ஒரு பிரிண்ட் எடுக்க வேண்டும்' என்று சொன்னால், உடனடியாக, அந்த வேளையை செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். 'இங்க் இல்லை', 'இணையம் வேலை செய்யவில்லை,' 'மற்ற வேலை ஓடிக்கொண்டு இருக்கிறது,' 'பென் டிரைவ் வேலை செய்யாது.' இங்க் இருக்கிறதா என்று பார்ப்பதும், இணையம் இருக்கிறதா எனப் பார்ப்பதும், வேலைகளை முதன்மைப்படுத்துவதும், கணிணியைச் சரியாக வைத்துக்கொள்வதும் இவர்கள் வேலைதான். ஆனால், அதைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். நம் ஊரில் உள்ள நிறையக் கடைகளில் இதே நிலைதான் இருக்கும். ஏதாவது ஒன்று இருக்கிறதா? எனக் கேட்டுச் சென்றால், 'இல்லை' என்பார்கள். அடுத்த முறை சென்றாலும் அதே விடைதான் கிடைக்கும். இந்தப் பொருள் இந்த இடத்தில் தேவையாய் இருக்கிறது, அதை வாங்கி விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றாது. ஒரு வேலையைச் செய்து வெற்றி பெறுவதை விட, வேலை செய்யாமல் இருக்கக் காரணம் கண்டுபிடிப்பர்.

நம் ஆன்மீக வாழ்விலும் நாம் சாக்குப் போக்குகள் சொல்ல வழி இருக்கிறது என்றும், அப்படிச் செய்வது சரி அல்ல என்றும் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:25-28) எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசேக்கியேல் இறைவாக்கினர் எரேமியாவின் சம காலத்தவர். இவர் தன் எருசலேம் நகர மக்களோடு பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார். தங்களது நகரமும் ஆலயமும் தகர்க்கப்பட்டதை கண்முன்னே கண்டவர்களுள் இவரும் ஒருவர். நாடுகடத்தப்பட்டவர்கள் தங்களுது இந்த நிலைக்குக் காரணம் தங்கள் முன்னோர்களின் பாவம் என்றும், கடவுள் தங்களை அநீதியாக நடத்துகிறார் என்றும் முறையிடுகின்றனர். அந்த முறையீட்டுக்கு ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகத் தரும் பதிலிறுப்பே முதல் வாசகம். அவர்களின் செயலுக்கு அவர்களே பொறுப்பு என்று எடுத்துரைக்கின்றார் எசேக்கியேல். மேலும், இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டு மனம்திரும்ப வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:1-11), பவுல் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார். பிலிப்பி நகர மக்கள் தன்னல பேராவல்களாலும், இறுமாப்பு மற்றும் பெருமித உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டு, பிரிவினைகள் மற்றும் சண்டை சச்சரவுகளை வளர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு நிலைகளில் பவுல் அறிவுறுத்துகிறார்: (அ) தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவரோடு உறவாட வேண்டும். (ஆ) கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, தங்களுக்குள்ளே சாக்குப் போக்குகள் சொல்வதைக் கைவிட வேண்டும். இரண்டாம் ஏற்பாட்டில் காணப்படும் கிறிஸ்தியல் பாடல்களில் மிகவும் அழகானதாக இருக்கின்ற ஒரு பாடலை எடுத்தாளுகின்ற பவுல், கிறிஸ்து கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை எந்தவொரு சாக்குப் போக்கும் சொல்லிப் பற்றிக்கொள்ளவில்லை என்றும், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி நம்மைப் போல ஒருவரானார் என்றும் நினைவுறுத்துகின்றார் பவுல்.

நற்செய்தி வாசகத்திற்கு (காண். மத் 21:28-32) முன்னர் உள்ள பகுதியில் யூதத் தலைவர்கள் இயேசுவின் அதிகாரம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கின்றனர். இயேசுவின் ஞானம், ஆற்றல், மற்றும் தாக்கம் கண்டு பொறாமை கொள்கின்ற அவர்கள் தங்களின் நேர்மையற்ற நிலையில் அவ்வாறு செய்கின்றனர். இந்தப் பின்புலத்தில் இயேசு, 'ஒரு தந்தையும் இரு மகன்களும்' என்னும் உவமையை முன்வைக்கிறார். கதையின்படி, மூத்த மகன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல மறுக்கிறான். பின்னர் மனம் மாறி வேலைக்குச் செல்கின்றார். ஆனால், இளைய மகனோ போவதாகச் சொல்லிவிட்டு போக மறுக்கிறான். இரண்டாம் மகன், தொடக்கத்திலிருந்தே நேர்மையற்ற நிலையில் இருக்கிறான். இதன் வழியாக, இயேசு, தன்னை எதிர்த்தவர்களின் நேர்மையற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார். இளைய மகன் தோட்டத்திற்குச் செல்லாமல் இருக்க, தனக்கென சாக்குப் போக்குகளைக் கண்டறிவது போல, இயேசுவின் சம காலத்தவர்களும் சாக்குப் போக்குகளைக் கண்டறிகின்றனர்.

நாம் ஏன் சாக்குப் போக்குகள் சொல்கிறோம்?

1. துன்பம் ஏற்பது நமக்குப் பிடிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வங்கிக்கு வருமாறு என்னிடம் ஒருவர் உதவி கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடன் செல்வதற்கு நான் என்னையே வருத்திச் செல்ல வேண்டும். இத்துன்பம் எனக்கு விருப்பமில்லை என்பதால், நான் ஏதாவது சாக்குப் போக்கு சொல்கிறேன்.

2. பொறுப்புணர்வு இல்லை அல்லது குறைவு. நம் முதற்பெற்றோர் பாவம் செய்தவுடன், ஒருவர் மற்றவரைச் சுட்டிக்காட்டுகின்றனரே தவிர, தங்கள் செயலுக்கான பொறுப்பை தாங்கள் ஏற்கத் தயங்கினர். பொறுப்பு ஏற்கத் தயங்கும் ஒருவர் எளிதாகச் சாக்குப் போக்கு சொல்வார்.

3. விமர்சனத்தைத் தவிர்ப்பதற்காக. நாம் ஒரு செயலைச் செய்து, அதனால் விமர்சனத்திற்கு ஆளாவதை விட, எதுவுமே செய்யாமல் இருத்தல் நலம் என்ற உணர்வும் சாக்குப் போக்குகள் சொல்ல நம்மைத் தூண்டுகிறது.

சாக்குப் போக்குகளால் வரும் தீமைகள் எவை?

1. நாம் வளர முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பொழுதும் நாம் பொறுப்பைத் தட்டிக் கழித்துக்கொண்டே இருப்பதால் வளர்ச்சி சாத்தியமில்லாமல் போகிறது. எடுத்துக்காட்டாக, நான் நன்றாக மறையுரை வைக்க வேண்டும் என விரும்புகிறேன். மறையுரை வைக்கும் திறனில் நான் வளர நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்போது, நான் சாக்குப் போக்கு சொல்லி வாய்ப்புகளைத் தள்ளிவிடுகிறேன். அப்படி நான் இருந்தால் வளர்ச்சி சாத்தியம் இல்லை.

2. என் நம்பகத்தன்மை குறையும். ஒன்றைச் செய்வதாக நான் ஒத்துக்கொண்டு, பின் சாக்குப் போக்கு சொல்லி அதிலிருந்து நான் பின்வாங்கினால், நான் பொய்யன் ஆவதோடு, என் நம்பகத்தன்மையும் குறையும்.

3. சாக்குப் போக்குகள் வாழ்வை மலடாக்கிவிடுகின்றன. எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. என்னைச் சுற்றியுள்ள சூழலை அல்லது என் பெற்றோரை அல்லது என் சமூகத்தை நான் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், நான் என் வாழ்வில் கனிதர இயலாது. நான் அடுத்தவரை நோக்கி விரலைக் காட்டும் ஒவ்வொரு பொழுதும் என் வாழ்வை நான் மாற்றத் தயாராக இருப்பதில்லை.

இறுதியாக,

முதல் வாசகத்தில், பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள், தங்கள் குற்றங்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி, பொறுப்புணர்வு இன்மை என்ற பருப்புகளைக் கைகளுக்குள் பிடித்துக்கொண்டனர்.

இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர இறைமக்கள் தங்கள் தன்னலம் மற்றும் இறுமாப்பு உணர்வுகளைப் பருப்புகளாக ஏந்திக் கொண்டனர்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சம காலத்து யூதத் தலைவர்கள் தங்களது பொறாமை, முற்சார்பு எண்ணம், பிடிவாத உள்ளம் என்னும் பருப்புகளைக் கைநிறைய வைத்துக்கொண்டனர்.

விளைவு, அவர்கள் கையை வெளியே எடுக்க முடியாமல், வெறும் காரணங்களைத் தேடிக்கொண்டே இருந்தனர்.

ஆங்கிலத்தில், சாக்குப் போக்குகளை, 'lame excuses' என்று அழைக்கிறார்கள். ஏனெனில், சாக்குப் போக்குகள் நம்மை முடமாக்கிவிடுகின்றன.

சாக்குப் போக்குகள் விடுக்க, 'ஆண்டவரே, உம் உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்!' (காண். திபா 25:5) என்று திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து செபிப்போம்.

Friday, September 25, 2020

படைத்தவரை நினை

இன்றைய (26 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (சஉ 11:9-12:8)

படைத்தவரை நினை

இன்றைய முதல் வாசகப் பகுதிதான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் எடுத்த விவிலியப் பகுதி. இந்தப் பகுதியையும், நம் மண்ணின் பட்டினத்தாரின் 'உடற்கூற்றுவண்ணம்' என்னும் பாடலையும் ஒப்பீடு செய்தேன். இன்றைய முதல் வாசகப் பகுதி, உரைநடை போல இருந்தாலும் இது ஓர் எபிரேயப் பாடல். 
'கதையாடல் செய்யுள்' அல்லது 'கதையாடல் பாடல்' என்னும் இலக்கியக் கூற்றைக் கொண்டது. இதன்படி, ஒரு கதையானது பாடல் வடிவில் பாடப்படும். இங்கே பாடப்படுவது யாருடைய கதை?

உங்கள் மற்றும் என் கதை இது. ஆம்! தனிமனிதரின் வாழ்வியல் பயணத்தை கதைப்பாடலாக எழுதுகிறார் சபை உரையாளர். பிறப்பிலுருந்து இறப்பு வரை மனிதர்கள் நான்கு நிலைகளாகப் பயணம் செய்கிறார்கள்: தாயின் வயிற்றுப் பருவம், குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மற்றும் முதிய பருவம்.
இந்தப் பாடலில் உள்ள சில கருத்துருக்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

1. 'இளையோரே!'

'இளையோரே!' என இங்கே விளிப்பது ஓர் இலக்கிய நடை. அதாவது, ஞானநூல் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும்போது, தங்களுக்கு முன்னால் உள்ள மாணவர்களை மனத்தில் வைத்தோ, அல்லது நேரிடையாக நிறுத்தியோ கூறுவர். இந்தப் பின்புலத்தில்தான் நீதிமொழிகள் நூல் ஆசிரியரும், 'பிள்ளாய்!' என விளிக்கிறார். மேலும், 'இளமை' என்பது நாம் எப்போதும் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஒரு பருவம். ஆக, தன் வாசகர்கள் அனைவரிடமும் இருக்கும் இளமை உணர்வை நினைவூட்டுவதற்காகவும், 'இளையோரே' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சபை உரையாளர்.

2. 'மகிழ்ச்சியோடு இருப்பதற்கே'

'மகிழ்ச்சி' என்பது சபை உரையாளர் நூலின் சில இடங்களில் 'வீண்' என்று அழைக்கப்பட்டாலும், 'மகிழ்ச்சி' என்பது மட்டுமே வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதே சபை உரையாளரின் அறிவுரை. மகிழ்ச்சி எப்போது வரும்? 'மனக்கவலை ஒழியும்போது,' 'உடலுக்கு ஊறு வராதபோது.' இங்கே, மகிழ்ச்சி என்பது முதலில் மனம் சார்ந்த விடயம் என்பதையும் சபை உரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.

3. 'படைத்தவரை மறவாதே'

எபிரேயத்தில் கடவுள் என்பதற்கு, 'எலோஹிம்' என்ற பதமும், ஆண்டவர் என்பதற்கு 'யாவே' என்ற பதமும் பயன்படுத்தப்படுகிறது. சபை உரையாளர் இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தாமல், 'படைத்தவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆக, கடவுள் என்று ஒரு பெயரைச் சொல்லி அவரை அந்நியப்படுத்தாமல், கடவுளுக்கும் நமக்குள் உள்ள உறவை முன்வைத்து, 'படைத்தவர்' என அழைக்கிறார். மேலும், படைத்தவர் என்பவர் எந்தவொரு மதத்திற்கும் உரியவர் அல்லர். மாறாக, அனைவருக்கும் பொதுவானவர். மனிதர்களில் யாரும் சுயம்பு கிடையாது. அதாவது, தாங்களாகவே உதித்தவர்கள் அல்லர். நமது இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் இறைவனையே சார்ந்திருக்கிறோம்.

4. 'வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே' 

'வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே' என்று சொல்லும் நாள்கள் என்பது முதுமைப் பருவத்தின் நாள்கள். ஏனெனில், முதுமைப் பருவத்தில் உடல் சோர்கிறது, உள்ளம் வாடுகிறது. அந்த நாள்கள் விரைவில் வரும் என்பது சபை உரையாளரின் கருத்து.

5. 'இயற்கை நிகழ்வு'

முதுமைப் பருவத்தை இயற்கை உருவகங்களாகப் பதிவு செய்கிறார் சபை உரையாளர். ஆக, மனிதர்கள் என்பவர்கள் இயற்கையின் ஒரு பகுதியினர். நாம் பல நேரங்களில் இதை மறந்துவிட்டு இயற்கைக்கு எதிராகப் பயணம் செய்கிறோம். நம் மருத்துவ உலகம் மூப்படைதல் அல்லது வயது முதிர்தலை ஒரு நோய் போல சித்தரிக்கிறது. நரைத்த தலைக்கு பூச்சு, முகத்தில் விழும் சுருக்கத்திற்கு நெகிழி அறுவைச் சிகிச்சை, தேய்ந்த பகுதிகளுக்கு சிலிக்கான் நிரப்புதல் என்று முதுமைக்கு எதிராக நம்மைப் போராடச் சொல்கிறது. ஆனால், வயது முதிர்தலை ஒரு எதார்த்த நிகழ்வாக எடுத்து அதைத் தன்னோடு அணைத்துப் புன்முறுவல் செய்கிறார் சபை உரையாளர். 'வாதை மரம் பூப்பூக்கும் முன்னும்' ('நரை விழும் முன்'), 'வெட்டுக்கிளி போல நடை தடுமாற' ('உடலுறவின் இயக்கம் குறைய'), 'ஆசை அற்றுப் போகுமுன்' ('உணவு மற்றும் உறவின்மேல் உள்ள ஆசை குறைவு') என வாழ்வின் இறுதியில் வரும் அனைத்தையும் இனிதே அனுபவிக்கச் சொல்கிறார் சபை உரையாளர். இங்கே, வாழ்வின் இரட்டைத்தன்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளமை என்பதன் இணையான முதுமை அவசியம். இளமையைத் தழுவிய நாம் முதுமையையும் தழுவ வேண்டும் என்பதே உண்மை.

6. 'மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கு, கடவுள் தந்த உயிர் கடவுளுக்கு'

சபை உரையாளரின் காலத்தில் மோட்சம், நரகம், உத்தரிக்கிற நிலை என்ற புரிதலோ, மனித ஆன்மா என்றென்றும் வாழும் என்ற புரிதலோ இல்லை. இறந்தால் மண் உடலுக்கு, உயிர் கடவுளுக்கு என்ற புரிதல் மட்டுமே இருந்தது. சபை உரையாளரைப் பொருத்தவரையில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. விலங்குகள் போலவே மனிதர்கள் இறக்கின்றனர் (காண். சஉ 3:19-21) அவ்வளவுதான்! இருந்தாலும், 'நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார்' என்று இந்தப் பகுதியில் சொல்கிறார் சபை உரையாளர். இந்த வரி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று சொல்கின்றனர் சிலர். மற்றும் சிலர், கடவுளின் தீர்ப்பு நமக்கு இந்த உலகத்திலேயே கிடைக்கும் என்று சொல்கின்றனர்.

இறுதியாக, 'வீண் முற்றிலும் வீண்' என்று சபை உரையாளர் முடிக்கின்றார். 

Thursday, September 24, 2020

வாழ்வின் இரட்டைத்தன்மை

இன்றைய (25 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (சஉ 3:1-11)

வாழ்வின் இரட்டைத்தன்மை

மனிதர்கள் பார்க்கும் விதத்தை வருணிக்க கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு: 

முனிவன் ஒருவன் அரசவீதியில் நடந்துசென்றுகொண்டிருந்தான். அது அரசன் வரும் நேரம். முனிவனை விலகி நடக்கச் சொல்லுமாறு குதிரையில் வாளேந்திய வீரன் ஒருவன் வேகமாகச் சென்று முனிவன் அருகில் நிற்கிறான். 'அரசன் குதிரையில் வருகிறான். விலகி நடங்கள்!' என்று மூச்சிரைக்க வீரன் சொன்னபோது, முனிவன் திரும்பிப் பார்த்து, 'வருவதில் யார் அரசன்?' எனக் கேட்கிறான். 'மேலிருப்பது அரசன், கீழிருப்பது குதிரை' என்கிறான் வீரன். 'மேல் எது? கீழ் எது?' தொடர்கிறான் முனிவன். 'நான் இருப்பது மேல். நீ இருப்பது கீழ்' என வீரனும் தொடர்கிறான். 'நான் எது? நீ எது?' என முனிவன் கேட்க, அமைதி காக்கிறான் வீரன்.

முனிவன் அனைத்தையும் இணைத்தே பார்த்தான். வீரன் அனைத்தையும் பிரித்தே பார்த்தான். இருவருடைய பார்வையும் வௌ;வேறாகத் தெரிந்தாலும் பார்வை ஒன்றுதான். எப்படி? ஒரு குச்சியை எடுத்து, அதில் இரண்டு நுனிகள் உள்ளன என்று வீரன் சொன்னால், அது ஒரே குச்சிதான் என்கிறான் முனிவன். இரண்டு நுனிகளும் இணைவது குச்சியில்தான். ஆக, குச்சியின் நுனிகள் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருந்தாலும், அவை ஒன்றையொன்று இணைக்கின்றன அல்லது ஒன்றோடொன்று பொருந்துகின்றன.

வாழ்வின் இரட்டைத்தன்மையை மிக அழகாக உணர்ந்தவர்களும், இரட்டைத்தன்மையின் இயல்பு, பிரிப்பது அல்ல, இணைப்பது என்பதையும் உணர்ந்தவர்கள் நாம் விவிலியத்தின் முதல் (பழைய) ஏற்பாட்டில் காணும் சபை உரையாளரும், நம் தமிழ் மண்ணில் வாழ்ந்த பட்டினத்தாரும் ஆவர். ஏறக்குறைய கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிரேய ஞான நூல் ஆசிரியர் சபை உரையாளரும் (எபிரேயத்தில், 'கொஹெலத்'), கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்த் துறவுக் கவிஞர் பட்டினத்தாரும், வாழ்வின் தெளிவற்ற தன்மை, நிலையாத்தன்மை, உடையுமை, தெளிவற்ற நிலை, உறுதியற்ற நிலை, மற்றும் நொறுங்குநிலை ஆகியவற்றை உணர்ந்து, தங்கள் சமகாலத்து மாந்தர்கள் வாழ்வின் இந்நிலையிலும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும், தங்களைப் படைத்தவரை என்றும் நினைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 

'பிறப்புக்கு ஒரு காலம். இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்.
கொல்லுதலுக்கு ஒரு காலம். குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்.
இடித்தலுக்கு ஒரு காலம். கட்டுதலுக்கு ஒரு காலம்.
அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம்.
துயரப்படுதலுக்கு ஒரு காலம். துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்.
கற்களை எறிய ஒரு காலம். கற்களைச் சேர்க்க ஒரு காலம்.
அரவணைக்க ஒரு காலம். அரவணையாதிருக்க ஒரு காலம்.
தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம். இழப்பதற்கு ஒரு காலம்.
காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்.
கிழிப்பதற்கு ஒரு காலம். தைப்பதற்கு ஒரு காலம்.
பேசுவதற்கு ஒரு காலம். பேசாதிருப்பதற்கு ஒரு காலம்.
அன்புக்கு ஒரு காலம். வெறுப்புக்கு ஒரு காலம்.
போருக்கு ஒரு காலம். அமைதிக்கு ஒரு காலம்.' 
(சபை உரையாளர் 3:2-8)

பிறப்பும் இறப்பும் இரண்டு என்றாலும் வாழ்க்கை என்றால் ஒன்றுதான். நடவும் அறுவடையும் இரண்டு என்றாலும் பயிர் என்றால் ஒன்றுதான். கொல்லுதலும் குணப்படுத்துதலும் இரண்டு என்றாலும் உடல் என்றால் ஒன்றுதான். இடித்தலும் கட்டுதலும் இரண்டு என்றாலும் கட்டடம் என்றால் ஒன்றுதான். அழுகையும் சிரிப்பும் இரண்டு என்றாலும் பதிலுணர்வு என்றால் ஒன்றுதான். துயரமும் மகிழ்ச்சியும் இரண்டு என்றாலும் மனப்பாங்கு என்றால் ஒன்றுதான். கற்களை எறிதலும் சேர்த்தலும் இரண்டு என்றாலும் குவியல் என்றால் ஒன்றுதான். அரவணைத்தலும் அரவணையாதிருத்தலும் இரண்டு என்றாலும் நெருக்கம் என்றால் ஒன்றுதான். தேடிச் சேர்ப்பதும் இழப்பதும் இரண்டு என்றாலும் தேடல் என்றால் ஒன்றுதான். காத்தலும் எறிதலும் இரண்டு என்றாலும் பொருள் என்றால் ஒன்றுதான். கிழிப்பதும் தைப்பதும் இரண்டு என்றாலும் ஆடை என்றால் ஒன்றுதான். பேசுதலும் பேசாதிருத்தலும் இரண்டு என்றாலும் மொழி என்றால் ஒன்றுதான். அன்பும் வெறுப்பும் இரண்டு என்றாலும் உறவு என்றால் ஒன்றுதான். போரும் அமைதியும் இரண்டு என்றாலும் வரலாறு என்றால் ஒன்றுதான்.

'பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்' 
(பட்டினத்தார், கோயிற்றிருவகவல், 1)

உயிர் என்றால் ஒன்று, பிறப்பும் இறப்பும் இரண்டு. கதிரவன் என்றால் ஒன்று, தோன்றுதலும் மறைதலும் இரண்டு. மலர் என்றால் ஒன்று, பெருத்தலும் சிறுத்தலும் இரண்டு. நினைவு என்றால் ஒன்று, உணர்தலும் மறத்தலும் இரண்டு. உறவு என்றால் ஒன்று, இணைதலும் பிரிதலும் இரண்டு. உணர்வு என்றால் ஒன்று, உவப்பும் வெறுப்பும் இரண்டு. மேலும், இங்கே பட்டினத்தார், நாம் அருந்தியது சில நிமிடங்களில் கழிவாகிவிடுகிறது என்றும், நாம் உடுத்தியது சில நிமிடங்களில் அழுக்காகி விடுகிறது என்றும் சொல்லும்போதும், அருந்துவதும் கழிவதும் இரண்டு என்றாலும், உணவு என்றால் ஒன்று எனவும், உடுத்துவதும் அழுக்காவதும் இரண்டு என்றாலும், உடை என்றால் ஒன்று எனவும் கூறுகின்றார்.

நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ நம் வாழ்வியல் அனுபவங்கள் எல்லாமே இரட்டைத்தன்மை கொண்டே இருக்கின்றன. வேலை-ஓய்வு, பகல்-இரவு, விழிப்பு-தூக்கம், தொடக்கம்-முடிவு என வாழ்க்கை நகர்கிறது. நாம் திறந்த புத்தகத்தை மூடுகிறோம், மூடிய புத்தகத்தைத் திறக்கிறோம். அலைபேசியில் ஓர் அழைப்பைத் தொடங்குகிறோம், அதே அழைப்பை முடிக்கிறோம். வாகனத்தை இயக்குகிறோம், அதன் இயக்கத்தை நிறுத்துகிறோம். 

மேற்காணும் ஞானியரின் வாழ்வின் இரட்டைத்தன்மை பற்றிய புரிதல் நமக்கு வழங்கும் பாடங்கள் மூன்று: (அ) இரட்டைத்தன்மையின் பொருந்துநிலையைப் பார்த்தல். அதாவது, இன்று நான் ஒருவர் என்மேல் கோபப்படுவதைப் பார்த்தால், அவர் என்மேல் அன்புகாட்டிய நேரத்தையும் எண்ணிப் பார்த்தல்.  (ஆ) ஒன்றை மட்டும் பற்றிக்கொள்ளாதிருத்தல். அதாவது, அவரின் கோபத்தை மட்டுமே பற்றிக்கொண்டு அவர்மேல் பகைமை வளர்க்காமல், அவரை மன்னித்தல். (இ) ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும் போது அடுத்தது வேகமாக வந்துவிடுகின்ற வாழ்வின் நிலையாத்தன்மையைக் கொண்டாடுதல். கோபமும், அன்பும் மறையக்கூடிய, மாறக்கூடிய உணர்வுகள் என அறிந்துகொண்டு, அவற்றைக் கொண்டிருக்கும் அந்த இனியவரைக் கொண்டாடுதல்.

Wednesday, September 23, 2020

புதியது எதுவும் இல்லை

இன்றைய (24 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (சஉ 1:2-11)

புதியது எதுவும் இல்லை

இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நாம் சபை உரையாளர் நூலிலிருந்து முதல் வாசகம் வாசிக்கின்றோம்.

'வீண் முற்றிலும் வீண்!' எனத் தன் நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர். 'வீண்' என்பதற்கு எபிரேயத்தில் 'ஹபேல்' என்னும் சொல் பயன்படுத்துகிறது. 'ஹேபல்' என்றால் 'காற்று' அல்லது 'ஆவி' அல்லது 'நிலையற்றது' அல்லது 'வெறுமையானது' என்பது பொருள். இந்த வார்த்தையின் மூலம் நமக்கு ஆச்சரியம் தரக்கூடியது. ஆதாம்-ஏவாளின் இரண்டாம் மகனது பெயர் 'ஹாபேல்' (தமிழில், 'ஆபேல்'). எபிரேய விவிலியம் முதலில் உயிர் எழுத்துக்கள் இல்லாமலே எழுதப்பட்டன. உயிரெழுத்துகளை நீக்கிவிட்டால், 'ஆபேல்' மற்றும் 'வெறுமை' என்னும் சொல்லின் மெய்யெழுத்துகள் 'ஹபல' என்னும் மூன்று எழுத்துக்களே. சபை உரையாளர், 'ஆபேல்' என்ற வார்த்தையை எடுத்து விளையாடுகிறார். அதாவது, ஆபேல் கடவுளுக்கு உகந்தவராய் இருந்தார். அவருடைய பலி கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், அவரது கடவுளோ அல்லது அவரது பலியோ அவரை அவருடைய அண்ணன் காயினிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை. பரிதாபமாக இறந்து போகிறார் ஆபேல். 

ஆக, தான் கடவுளுக்குப் பயந்து நடந்தாலும், கடவுளுக்கு உகந்த பலி செலுத்தினாலும், ஏதோ ஒரு கயவன் கையால் இறப்பு வரும் என்றால், கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்? கடவுளுக்கு ஏன் பலி செலுத்த வேண்டும்? என்னும் கேள்விகள் சபை உரையாளருக்கு எழுகின்றன. ஆக, 'நற்செயல்' என்பது வீண் என முடிவு செய்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் இவர் விதிக்கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொள்கின்றார்: 'விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (காண். சஉ 9:2).

இரண்டாவதாக, மனிதரின் உழைப்பை வீண் என்கிறார் சபை உரையாளர். இரண்டு நிலைகளில்: ஒன்று, இன்று காலையில் நான் என் அறையைச் சுத்தம் செய்கிறேன். மாலையில் அது மீண்டும் அழுக்காகிவிடுகிறது. ஆக, என் உழைப்பு ஒரு நாளைக்குரிய பயனைக்கூட எனக்குத் தருவதில்லை. இரண்டு, என் உழைப்பின் பயனை நான் அதற்காக உழைக்காத ஒருவருக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் என்னை நினைவில் வைக்கமாட்டார்கள். அருள்பணியாளர்கள் சிலர் எங்கள் மறைமாவட்டத்தில் இறந்தபோது நான் இதைக் கண்டுள்ளேன். அவர் இறந்த இரு வாரங்களுக்கு அடிக்கடி வந்து தங்களுக்குத் தேவையானதை எடுத்துச் செல்வர். அதற்குப் பின், நினைவுத் திருப்பலி பற்றி அறிவிக்க அவர்களை தொலைபேசியில் அழைத்தால்கூட அழைப்பை ஏற்கமாட்டார்கள். எந்த ஒரு உழைப்பும் இல்லாமலேயே இன்னொருவரின் உழைப்பின் பயனை ஒருவர் அனுபவிப்பது பெரிய ஏமாற்றம். ஆக, உழைப்பது வீண் என்கிறார் சபை உரையாளர். எதற்காக வீடு கட்ட வேண்டும்? வீட்டை நீ கட்டுவதற்கு உழைப்பாய், மன உளைச்சலுக்கு ஆளாவாய், கடன் வாங்குவாய், அவமானப்படுவாய், வலி தாங்குவாய். ஆனால், நீ இறந்தபின் அந்த வீடு, அதற்காக உழைக்காத, மன உளைச்சலுக்கு ஆளாகாத, கடன் வாங்காத, அவமானப்படாத, வலி தாங்காத ஒரு மடையனுக்கு (அப்படித்தான் சொல்கிறார் சபை உரையாளர்) செல்லும். அவனுக்கு அது தேவை இல்லாததால் அந்த வீடு ஒரு சுமையாகத் தோன்றும். ஆக, உழைத்து என்ன பயன்? 

மூன்றாவதாக, யாருடைய நினைவும் எப்போதும் நிலைப்பதில்லை. நம் வீட்டிலேயே பார்க்கலாம். எனக்கு என் அப்பா மற்றும் அவரது அப்பா தாண்டி எந்த நினைவும் இருக்காது. அது என் தவறு அல்ல. ஏனெனில், அதற்கு முந்தைய தலைமுறையினர் என்னோடு நேரடித் தொடர்பில் இல்லை. ஆக, இரத்த உறவு, திருமண உறவு, மற்றும் உடன்படிக்கை உறவு என்னும் மூன்று உறவுகளுமே வீண் சபை உரையாளருக்கு.

நான்காவதாக, சலிப்பு அல்லது ஏமாற்ற உணர்வு. ஆங்கிலத்தில் இதை disenchantment என்று அழைப்பார்கள். சலிப்பு இரண்டு நிலைகளில் வருகிறது: ஒன்று, ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதால். தினமும் எழ வேண்டும், பல் துலக்க வேண்டும், பசித்தால் சாப்பிட வேண்டும், கழிவுகளை அகற்ற வேண்டும், ஆடை அணிய வேண்டும், அணிந்து அழுக்கானதைத் துவைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும், உறங்க வேண்டும். மறுபடியும் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். இரண்டு, நிறைவு கிடைக்காததால் வரும் சலிப்பு. நாம் எவ்வளவு சுவையாகச் சாப்பிட்டாலும் நாக்கு இன்னும் சுவையானதையே தேடுகிறது. அப்படியே கண்களும், காதுகளும் தேடுகின்றன. யூட்யூப் பார்க்கிறவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு வீடியோ பார்ப்போம் என்று தொடங்குவது, அடுத்து, அடுத்து எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். கொஞ்ச நேரத்தில் இனிமையாகத் தொடங்கியது சோர்வாக முடியும். ஆக, இதுவும் வீண் என்கிறார் சபை உரையாளர்.

ஐந்தாவதாக, 'புதியது என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை!' என்கிறார் சபை உரையாளர். யாரோ ஒருவர் எங்கோ செய்ததை நாம் மீண்டும் செய்கிறோம். அவ்வளவுதான்! 'ஐஃபோன் புதியதுதானே! இணையம் புதியது தானே!' என நாம் கேட்டால், சபை உரையாளர் சொல்வார், 'ஆம்! அவை புதியவைதான். ஆனால், தகவல் பரிமாற்றம் என்பது பழையதுதானே!' புதியது எதுவும் இந்த உலகில் எதுவும் இல்லை என்பதால், நம் தேடல் அனைத்தையும் வீண் என்கிறார் சபை உரையாளர்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 9:7-9) சபை உரையாளரின் கருத்துகளை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. இயேசுவின் அரும்பெரும் செயல்களை நினைவுகூர்கின்ற ஏரோது, 'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யார்?' என்று மனம் குழம்புகின்றான். இறையாட்சி பற்றி அறிவித்தாலும், நீதியானதையே பேசினாலும் நம்மை முன்பின் தெரியாத ஒருவன் நம் தலையை எடுத்துவிட முடியும் என்றால், இறையாட்சி பற்றி அறிவித்து என்ன பயன்? நீதியானதைப் பேசி என்ன பயன்? - எனக் கேட்கிறார் சபை உரையாளர்.

சபை உரையாளரை எப்படிப் புரிந்துகொள்வது?

ஞானியர் வாழ்வின் இரட்டைத்தன்மையை உணர்ந்தவர்கள். பிறக்கின்ற குழந்தையில் அதன் இறப்பைப் பார்க்கிறவர்கள். ஒரு குச்சியின் ஒரு புறத்தை எடுக்கும்போது அதன் மறுபுறத்தையும் சேர்த்துப் பார்க்கிறவர்கள். 

பிறக்கின்ற குழந்தை வயதானபின் இறப்பது வீண் என்று தோன்றலாம்.

ஆனால், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்க்கை இனிது என்கிறார் சபை உரையாளர். அதுதான் நாளைய முதல் வாசகம்.

Tuesday, September 22, 2020

ஓர் அங்கி போதும்!

இன்றைய (23 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 9:1-6)

ஓர் அங்கி போதும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பேய்களை அடக்கும் பிணிகளைப் போக்கும் வல்லமை மற்றும் அதிகாரத்தைத் தம் சீடர்களுக்கு வழங்குகின்றார். 

தொடர்ந்து, அவர்கள் தங்கள் பணிக்கு எதை எடுத்துச் செல்லக் கூடாது, எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதையும் கற்பிக்கின்றார்.

பேய்களை அடக்குதல் மற்றும் பிணிகளைப் போக்குதல் என்னும் வார்த்தைகளை உருவகப் பொருளில் கையாண்டால், 'பேராசை' என்னும் பேயை அடக்க வேண்டும் என்றும், 'பேராவல்' என்னும் பிணியைப் போக்க வேண்டும் என்று இயேசு சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஏனெனில், 'கைத்தடி, பை, உணவு, பணம்' ஆகியவற்றில், அதாவது உணவு மற்றும் உடைசார் தேவைகளில் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய கட்டுப்பாட்டை, பேராசையை அடக்குதல் என நாம் புரிந்துகொள்ளலாம். 'ஒரு வீட்டில் தங்காமல் ஒவ்வொரு வீடாக நகர்தல்' என்பது பேராவலின் அடையாளம் அல்லது தேடலின் நிறைவற்ற நிலையின் அடையாளம் என எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, ஒருவர் தன்னிடம் உள்ள பேராசை மற்றும் பேராவல் என்னும் தீமைகளை அடக்கவும், விரட்டவும் கற்றுக்கொண்டால் அங்கே இறையாட்சி அறிவிக்கப்படுகிறது.

இதே கருத்துதான் இன்றைய முதல் வாசகத்திலும் சொல்லப்படுகிறது.

கடவுளின் இல்லத்திற்குள் வருகின்ற அடியார் ஒருவர், 'வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்! வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும். எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்' என வேண்டுகிறார்.

ஆக, இறைவனிடம் வேண்டும் இந்த இனியவருக்கு, தன்னிடமுள்ள பேராசை மற்றும் பேராவல் போக வேண்டும் என்று ஆண்டவரிடம் வரம் கேட்கிறார்.

இவை நம்மிடமிருந்து போக நாம் என்ன செய்ய வேண்டும்?

'தன்நிறைவு' பெறுதல் வேண்டும்.

'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பார்கள். 

'போதும் என்பவர்க்கு இதுவே போதும். போதாது என்பவர்க்கு எதுவுமே போதாது.'

இன்று நம்மிடமுள்ள பொருள்களை நாம் இழக்க முன்வரலாம். பல ஆண்டுகளாக நாம் அணியாமல் வைத்திருக்கிற உடைகளையும், பயன்படுத்தாத பொருள்களையும் தேவையில் இருப்பவர்களோடு பகிரலாம். பல நாள்கள் பயன்படுத்தாத அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சந்தாக்களை நிறுத்தலாம். பல மாதங்களாகப் பயன்படுத்தாத கிரெடிட் கார்ட்களை வங்கியில் ஒப்படைக்கலாம். 

ஏனெனில், நாமும் இயேசுவின் சீடர்களே. நமக்கும் அவர் அதிகாரம் வழங்கியுள்ளார்.

Monday, September 21, 2020

உழுவதும் பாவம்

இன்றைய (22 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (நீமொ 21:1-6,10-13)

உழுவதும் பாவம்

இன்று தொடங்கி வருகிற பத்து நாள்களுக்கு (ஞாயிறு தவிர), முதல் வாசகம், ஞான நூல்களிலிருந்து வாசிக்கப்படுகிறது.

'மேட்டிமையான பார்வை, இறுமாப்பு கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்' (நீமொ 21:4) என்ற இறைவார்த்தையை இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த வசனத்தில் சில பாடச்சிக்கல்கள் உள்ளன:

'பார்வையின் பெருமிதமே மனத்தின் அகந்தையாம். அக்கிரமிகளிடம் பிறக்கிறதெல்லாம் பாவம்' என்கிறது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.

இந்த மொழிபெயர்ப்பைப் பொருத்தவரையில், 'மனத்தின் அகந்தையே பார்வையில் பெருமிதமாக' வெளிப்படுகிறது. ஆனால், பொதுமொழிபெயர்ப்பில், இவை இரண்டும் வௌ;வேறு என்பது போலக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், எபிரேய விவிலியத்தில், 'மேட்டிமையான பார்வை, இறுமாப்பு கொண்ட உள்ளம், மற்றும் உழுவதும் பொல்லாரின் பாவங்கள்' என்று உள்ளது. 'உழுவது' என்னும் வார்த்தை தமிழ் வுல்காத்தா மொழிபெயர்ப்பில், 'வெளிச்சம்' என்று உள்ளது. அதாவது, மேட்டிமையான பார்வையும் இறுமாப்புநிறை உள்ளம் கொண்டவர்களின் வெளிச்சம்கூட ஆபத்தானது என்பது போல இதன் பொருள் உள்ளது.

'உழுவதும் பாவம்' என்னும் சொல்லாடலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இங்கே பயன்படுத்தப்படும் இலக்கியக் கூற்றின் பெயர் 'சினையாகு பெயர்' அல்லது 'ஆகுபெயர்' (ஆங்கிலம் மற்றும் கிரேக்கத்தில் 'ஸினெக்டொகே'). இதில், ஒரு பெயர் ஒன்றன் மொத்தத்தைக் குறிக்கிறது. அதாவது, சிறிய ஒன்றைப் பயன்படுத்தி பெரிய ஒன்றைக் குறிப்பது. எடுத்துக்காட்டாக, 'நெற்றி வியர்வை வியர்த்து நீ அப்பத்தை உண்பாய்' (காண். தொநூ 3:19) என்னும் அருள்வாக்கியத்தில், 'அப்பம்' என்பது 'எல்லா உணவையும்' குறிக்கிறது.

ஆக, 'உழுவதும் பாவம்' என்பதன் வழியாக, பொல்லார் செய்கின்ற எல்லா செயல்களும் தீமையானவை என்றும், அவர்கள் நிலத்தை உழுவதில்கூட அவர்களின் மேட்டிமையான பார்வையும், இறுமாப்புநிறை உள்ளமும் வெளிப்படும் என்றும் அருள்வாக்கியம் நமக்குச் சொல்கிறது.

மேட்டிமையான பார்வை மற்றவர்களை வெறும் புழுக்களாகப் பார்க்கிறது. நாம் பெறுகின்ற பொருள், அருள், கல்வி, சமூக நிலை, வேலை போன்றவை நமக்குப் பல நேரங்களில் மேட்டிமையான பார்வையைத் தரலாம். இந்தப் பார்வையின் ஊற்று இறுமாப்பு நிறை உள்ளம். இறுமாப்பு உள்ளம் கொண்டவர்கள் தங்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து உயர்த்திக்கொள்வதோடு தங்கள் பார்வையிலிருந்தே தங்களை உயர்த்திக்கொள்கின்றனர். பள்ளிகளில் நாம் பயிலும்போது வழங்கப்படும் பரிசுதான் நம்மை முதன்முதலில், 'நான் மற்றவரை விடப் பெரியவன், பெரியவள்' என்ற ஓர் உணர்வைத் தரத் தொடங்குகிறது. இந்த உணர்வுக்குத் தன்னையே விற்பவர்கள் இறுதிவரை, மற்றவர்களின் பாராட்டை விரும்புகிறார்கள், அல்லது தங்களைத் தாங்களே மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தே உள்ளம் மகிழ்கிறார்கள். இவர்கள் செய்யும் எந்தச் செயலிலும் இவர்களின் இந்த உணர்வு வெளிப்பட்டுவிடும்.

'நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்' (காண். தொநூ 3:5) என்று மனுக்குலத்தை சோதித்த பாம்பின் மாய வலையும் இறுமாப்பே.

இதற்கு எதிர்மாறாக, 'தாழ்ச்சி' என்ற வார்த்தையை விவிலியம் ஒரு மதிப்பீடாக முன்வைக்கிறது (காண். மத் 11:29). 'ஹ்யுமிலிட்டி' ('தாழ்ச்சி') என்னும் ஆங்கில வார்த்தையின் இலத்தீன் மூலம், 'ஹ்யூமுஸ்' ('மண்'). அதாவது, நம்மில் உள்ள 'மண்' என்னும் பொதுமையை உணர்தலும், அந்தப் பொதுமையில் ஒருவர் மற்றவரைக் கொண்டாடுவதும் சால்பு.

Sunday, September 20, 2020

புனித மத்தேயு

இன்றைய (21 செப்டம்பர் 2020) திருநாள்

புனித மத்தேயு

இன்று, நற்செய்தியாளரும் திருத்தூதருமான புனித மத்தேயுவின் திருநாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

ஒத்தமைவு நற்செய்திகளில், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், மற்றும் மத்தேயு என்னும் ஐந்து திருத்தூதர்களின் அழைப்பு கதையாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து பேரில், முதல் நான்கு பேரை இயேசு அழைக்கும்போது, 'என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' (காண். மாற் 1:17) என்ற ஒரு வாக்குறுதி கொடுத்து அழைப்பதாக உள்ளது. ஆனால், மத்தேயு நற்செய்தியாளர் அழைக்கப்படும் நிகழ்வில், 'என்னைப் பின்பற்றி வா!' என இயேசு சொல்ல, மத்தேயுவும் உடனடியாக அவரைப் பின்பற்றுகிறார் 

'நீ தயாராக இருக்கும்போது உன் விடிவெள்ளி வானில் தோன்றும்' என்பது செல்டிக் பழமொழி. மத்தேயு தயாராக இருந்தபோது இயேசு என்னும் விடிவெள்ளி அங்கே தோன்றுகிறார். 'ஏன்? எங்கே? எப்படி? எவ்வளவு நாள்கள்?' என எந்தக் கேள்விகளுமின்றி புறப்பட்டுச் செல்கிறார் மத்தேயு.

மத்தேயு உடனடியாகப் புறப்பட்டுப் போகக் காரணம் என்ன? அவர் செய்த தொழில் அவருக்கே பிடிக்கவில்லையா? அல்லது இயேசுவைப் பின்பற்றும் ஆர்வம் ஏற்கெனவே இருந்ததா? 

காரணம் தெரியவில்லை. ஆனால், மத்தேயு உடனடியாக எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார்.

முதல் கேள்வி:

இன்று, இறைவன் தரும் அழைப்பிற்கான நம் பதிலிறுப்பு உடனடியாக இருக்கிறதா? பதிலிறுப்பு செய்ய நான் தயார் நிலையில் இருக்கிறேனா? மத்தேயு நற்செய்தியாளர் பெற்ற துணிச்சல் எனக்கு வருமா?

தொடர்ந்து, மத்தேயு தன் வீட்டில் இயேசுவுக்கு விருந்து வைக்கின்றார். விருந்தின் நோக்கம் இரண்டாக இருக்கலாம்: ஒன்று, தான் இதுவரை சேர்த்த சொத்து அனைத்தையும் இழப்பதற்கான ஒரு முயற்சி. எலிசா அழைக்கப்பட்டவுடன் ஏறக்குறைய இப்படித்தான் செய்கின்றார். தான் உழுதுகொண்டிருந்த ஏரை எரித்து, மாடுகளைச் சமைத்து விருந்து வைக்கிறார். தான் சேர்த்த பணம் இனி தனக்குத் தேவையில்லை என உணர்கின்ற மத்தேயு, இயேசுவுக்கும் தன் நண்பர்களுக்கும் விருந்தாகப் படைக்கின்றார். இரண்டு, 'இதுதான் நான் ஆண்டவரே! இவர்கள்தாம் என் நண்பர்கள்! இதுதான் என் எளிய பின்புலம்! இதுதான் என் நோயுற்ற நிலை! இதுதான் என் நொறுங்குநிலை!' என இயேசுவிடம் தன்னையே திறந்து காட்ட, விருந்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார் மத்தேயு. இயேசுவின் சமகாலத்தில் வரிதண்டுதல் மிகவும் இழிவான தொழிலாகக் கருதப்பட்டது. ஏனெனில், இதைச் செய்வோர் யூதர்களாக இருந்தாலும் உரோமைக்குப் பணி செய்வதால், சொந்தங்களின் இரத்தத்தையே குடிக்கும் அட்டைப் பூச்சிகளாக அவர்கள் கருதப்பட்டனர். மேலும், வரிவசூல் பெரும்பாலும் உரோமை நாணயங்களால் நடைபெற்றது. புறவினத்தார் சார்ந்த பொருள்களை (நாணயங்களை); தொடுவதால் வரிதண்டுபவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்டனர். மேலும், வரிவசூல் செய்வதற்காக இவர்கள் அநீதியான தண்டனைகளை மக்களுக்கு வழங்கவும், வரிவசூலில் வித்தியாசம் காட்டவும், எளியவரை வதைக்கவும் செய்தனர். 

இரண்டாவது கேள்வி:

'இதுதான் நான்!' என என் ஆண்டவரிடம் நான் மனம் திறக்கத் தயாரா?

இந்தத் திருநாளில் புனித மத்தேயு நமக்கு வழங்கும் வாழ்வியல் பாடங்கள் இரண்டு:

ஒன்று, மேலானது வரும் போது கீழானதைத் தள்ளி விடும் துணிச்சல், மனவுறுதி, மற்றும் விடாமுயற்சி.

இரண்டு, தன் பழைய வாழ்க்கையின் குற்றவுணர்வு தன் புதிய வாழ்க்கையில் தன் செருப்பில் சிக்கிய கல்லாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் தன்னைப் பற்றி வைத்த விமர்சனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.

புனித மத்தேயுவின் நற்செய்தி, இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை (இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை இங்கே, காண். மத் 28:19) உள்ள நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. 'எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்ற கடவுள் நம்மோடு செய்தியோடு நற்செய்தி நிறைவு பெறுகிறது. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் சில உவமைகள் (எ.கா. பத்துக் கன்னியர், திராட்சைத் தோட்டப் பணியாளர்) மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிள பிரச்சினைகளை நாம் புரிந்துகொள்ள உதவுவதோடு, அவர் அவற்றைக் கையாண்ட விதத்தையும் எடுத்தியம்புகிறது. மத்தேயு நற்செய்தியில் வரும் மலைப்பொழிவு என்றென்றும் நிலைக்கும் ஓர் இனிய அறநெறி.

'உரோம் நகர் நம்மோடு' என வரிதண்டிய மத்தேயு, 'கடவுள் நம்மோடு' என இயேசுவை அறிமுகம் செய்கின்றார். இது முதலில் அவரது வாழ்வியல் அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.

இன்றைய நாளில், மத்தேயு நற்செய்தியின் ஏதாவது ஒரு பகுதியை அல்லது நற்செய்தி முழுவதையும் வாசிக்கலாம்.

புனித மத்தேயு, வங்கியாளர்கள், காசாளர்கள், மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர்.

Saturday, September 19, 2020

எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே!

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

I. எசாயா 55:6-9 II. பிலிப்பியர் 1:20-24,27 III. மத்தேயு 20:1-16

எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே!

மனித உணர்வுகளில் மேலோங்கி நிற்கின்ற உள்ளுணர்வு 'முக்கியமாக உணர்தல்' என்பதுதான். பசி மற்றும் பாலியல் உணர்வுகளைவிட சில நேரங்களில் இது நம்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், நம்மில் சிலர் பசியைக்கூடப் பொறுத்துக்கொள்வோம். ஆனால், மற்றவர்களைப் போல நடத்தப்படுவதை நாம் எளிதில் பொறுத்துக்கொள்வதில்லை. இது மனித உணர்வுகளில் காணப்படும் ஒரு பெரிய முரண். 'அனைவரும் சமம்' என்று எல்லா இடங்களிலும் முழங்கும் நாம், மற்றவரோடு சமமாக்கப்படுவதை விரும்புவதில்லை. அப்படி ஆக்கப்படுவது அநீதி என உணர்கிறோம்.

எடுத்துக்காட்டாக, நான் வங்கிக்குச் செல்கிறேன். நான் ஓர் அருள்பணியாளர் என்பதை உடனே அங்கிருக்கும் அனைவரும் அறிந்துகொண்டு, நான் எந்த வரிசையிலும் நிற்காமல் வேலை முடித்து வீடு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். நான் செல்வதற்கு முந்தின தினம் வங்கியில் வேலை மாறுதல்கள் நடந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். நான் அங்கே செல்கின்ற போது என்னை யாருக்கும் தெரியவில்லை. நான் எல்லாரோடும் அமர்ந்து என் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நிலை ஏற்படுகிறது. 'நான் ஒரு ஃபாதர். உங்கள் வங்கிக் கிளைக்குப் பின்னால் உள்ள கல்லூரியில் இருக்கிறேன்' எனச் சொன்னாலும், அங்கிருந்த பணியாளர், 'டோக்கன் எடுத்துட்டு உட்காருங்க! நம்பர் வந்தவுடன் போங்க!' என்று சொன்னால் எனக்குக் கோபம் வரும். 'என்னை மற்றவரோடு இணையாக்கிவிட்டீரே!' என்று என் உள்ளமும் கொதிக்கும். இனி இந்த வங்கிக்கு வரக்கூடாது என்று அவசர முடிவு தோன்றி மறையும். 

ஆக, மனிதர்களாகிய நம்மில் மேலோங்கி இருக்கும் 'முக்கியமாக உணர்தல்' என்னும் உணர்வு, நாம் நம்முடைய தான்மை அடிப்படையிலும், வேலை அடிப்படையிலும், திறன்கள் அடிப்படையிலும் மற்றவர்களைவிட மேலானவர்கள் என்ற உணர்வைத் தருவதோடு, நாம் ஒருவர் மற்றவரோடு இணையாக்கப்பட்டால் நம் உள்ளம் நெருடல் கொள்கிறது. நம் சமூகத்தில் உள்ள சாதியம் இந்த வேறுபாட்டை இன்னும் அதிகம் வளர்க்கிறது. இந்த சாதிய மேட்டிமை எண்ணம் இன்னும் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டிருக்கிறது. நாம் அனிச்சை செயலாகவே நம் மேட்டிமை உணர்வைக் காத்து வருகின்றோம்.

மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் இப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இருந்தது. ஏற்கெனவே யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் அல்லது கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் பின்னர் வந்த புறவினத்தாரையும் மற்றவர்களையும் தாழ்வானவர்களாகக் கருதினர். மேலும், முதலில் வந்த தங்களுக்கே தலைமைத்துவம் கிடைக்க வேண்டும் எனக் கருதினர். இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய நற்செய்திப் பாடம் (காண். மத் 20:1-15) அமைகிறது.

இந்தப் பாடத்தின் கதையாடல் இரண்டு தளங்களில் அமைந்துள்ளது: 

(அ) திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே: (1) நேரம் இங்கே 6, 9, 12, 3, 5 என நகர்கிறது. (2) தோட்டப் பணியாளர்கள் ஒரே இடத்தில் நிற்க, நிலக்கிழார் உள்ளேயும் வெளியேயும் செல்கின்றார். (3) எல்லாருக்கும் வேலை செய்யும் ஆர்வம் இருக்கிறது. பின்னவர்கள் வேலைக்கு அமர்த்தப்படவில்லை. அவர்கள் சோம்பேறிகள் அல்லர். 

(ஆ) திராட்சைத் தோட்டத்திற்கு உள்ளே: (1) நேரம் இங்கே 5, 3, 12, 9, 6 என தலைகீழாக மாறுகிறது. கடைசியில் வந்தவர்கள் முதலில் கூலி பெறுகின்றனர். (2) நிலக்கிழார் இங்கே ஒரே இடத்தில் நிற்க, பணியாளர்கள் உள்ளேயும் வெளியேயும் செல்கின்றனர். (3) அதிகம் வேலை செய்தவர்கள் தங்கள் வேலைக்கு மதிப்பு குறைந்துவிட்டதாக முணுமுணுக்கின்றனர்.

'முன்னவரையும் பின்னவரையும் இணையாக்குதல்' - இதுவே இயேசுவின் எடுத்துக்காட்டின் மையப்பொருள். 

'கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர்' என்றால், இன்று ஆதிக்கம் செலுத்துபவர் நாளை அடிபணிவர் என்றும், இன்று அடிபணிபவர் நாளை ஆதிக்கம் செலுத்துவார் என்பதும் இதன் பொருள் அல்ல. மாறாக, முதல் மற்றும் கடைசி என இல்லாமல் அனைவரும் சமம் என்பதே இதன் பொருள். 

நிலாக்கிழார் மற்றும் தோழர் ஒருவரின் உரையாடல் மிகவும் எதார்த்தமாக உள்ளது:

'கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தனர். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே!'

'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'

இந்த உரையாடலை, உளவியல் அடிப்படையில் பொருள்கொண்டால், நிறைய உணர்வுகள் இங்கே பரிமாறப்படுவதை நம்மால் உணர முடிகிறது. முதலில் வேலைக்கு வந்து, இப்போது முணுமுணுப்பவர்கள் தங்கள் மூளையிலிருந்து பேசுகின்றனர். மற்றவர்களை விமர்சனம் செய்கின்றனர். தங்கள் கஷ்டத்தை முன்வைக்கிறார்கள். தங்கள் உழைப்பு சுரண்டப்பட்டதாக அங்கலாய்க்கிறார்கள். ஒரு மணி நேரம் வேலை செய்தவருக்கு ஒரு தெனாரியம் என்றால், 12 மணி நேரங்களுக்கு 12 தெனாரியங்கள் என மனக்கணக்குப் போட்டதால் ஏமாற்றம் அடைகின்றனர்.

ஆனால், நிலாக்கிழாரின் அளவுகோல் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர் மனத்திலிருந்து வேலை செய்கிறார். அவர் எதையும் கணக்குப் பார்க்கவில்லை. கடைசியில் வந்தவர்களின் தேவை அறிந்த அவர், அனைவருக்கும் ஒரே ஊதியத்தை நிர்ணயிக்கின்றார். தான் சொன்ன வார்த்தையை தான் மதிப்பதாக அவர் மறுமொழி கூறுகிறார். மேலும், தானே நிலக்கிழார் என்பதையும், மற்றவர் வெறும் ஊழியர் என்பதையும் நினைவூட்டுகிறார். மேலும், 'இவர்களை எங்களுக்கு இணையாக்கிவிட்டீரே' என்று சொல்லும் அவர்கள், தலைவனுக்கு இணையானவர்கள் அல்லர் என்றும் மறைமுமாகச் சுட்டிக்காட்டுகிறார். 

ஆக, இன்றைய நாள் நமக்கு ஒரே நேரத்தில், நாம் ஒருபோதும் நம் தலைவருக்கு இணையானவர்கள் அல்ல என்றும், பணியாளர்கள் என்ற நிலையில் நாம் ஒருவர் மற்றவருக்கு இணையானவர்கள் என்றும் கற்றுத்தருகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:6-9), ஆண்டவராகிய கடவுள், தமது எண்ணங்களுக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார். இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 1:20-24,27), பவுல், தனது எண்ணங்களால் ஏற்படும் இழுபறி நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு முன்வைக்கும் வாழ்வியல் பாடங்கள் எவை?

(அ) தலைவன் - ஊழியக்காரன் வரையறை

நம் கிராமங்களில், ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்களைப் பார்த்திருப்போம். ஆட்டு உரிமையாளர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், ஆடு மேய்ப்பவர்களுக்கு இடையே சண்டை நடக்கும். 'தலைவனே அமைதியாய் இருக்கிறான். ஊழியக்காரனுக்கு என்ன சத்தம்?' என்ற சொலவடையும் இதையொட்டி உருவானதே. இந்த வரையறை நாம் சரியாக உணராதபோது நிறைய நிர்வாகம்சார் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு தளத்திலும் நான் யார், என் வரையறை என்ன என்பதை உணர வேண்டும். நிகழ்வில் வரும் முணுமுணுப்பவர் தன் வரையறையை மீறுகிறார். தலைவன் எப்படி நடக்க வேண்டும் என அவன் வரையறுக்க முயல்கிறான். 12 மணி நேரங்கள் தோட்டத்தில் நிற்பதால் அவன் ஒருபோதும் தலைவன் ஆகிவிட முடியாது. பல நேரங்களில் ஊழியக்காரர்கள் தங்களையே தலைவர்கள்போல எண்ணிக்கொள்வதால் நிறைய பிரிவினைகளும், பொறாமை மற்றும் போட்டி உணர்வுகளும் எழுகின்றன.

(ஆ) இணையாக்குதல்

ஒரு பக்கம் வாழ்க்கை நமக்கு தலைவன்-ஊழியக்காரன் வரையறையை வைத்திருந்தாலும், இன்னொரு பக்கம் அது நம் அனைவரையும் ஒன்றாகவே நடத்துகிறது. தலைவனுக்கும் ஊழியக்காரனுக்கும் பிறப்பு, இறப்பு, நேரம் என அனைத்தும் சமமே. அப்படி இருக்க, நான் என்னையே மற்றவருக்கு இணையாக்குவது குறித்து முணுமுணுத்தல் கூடாது. நான் என் கையில் இருக்கிற காசைப் பார்ப்பதை விடுத்து, எனக்கு அடுத்திருப்பவரின் கையில் உள்ள காசைப் பார்க்கும்போதுதான் முணுமுணுக்கத் தொடங்குகிறேன். மாறாக, அவன் கையும் என் கையும் ஒன்று என நினைத்தால் நான் வேற்றுமை பாராட்ட மாட்டேன். ஆக, இன்று நான் எந்த நிறுவனத்தின் அல்லது குழுமத்தின் அல்லது குடும்பத்தின் தலைமை நிலையில் இருந்தாலும், எனக்குக் கீழிருக்கும் மற்றவர்களோடு என்னை வைத்துப் பார்த்து, கொஞ்சம் பணிதல் நலம். ஏனெனில், நான் மேலிருப்பது என் தகுதியால் அல்ல. மாறாக, எனக்கு மேலிருப்பவரின் அருளால்தான். பாம்புக் கட்டத்தில், பாம்பு எப்போதும் கொத்தலாம்!

(இ) வாழ்வை இரண்டு நிலைகளில் வாழ்தல்

ஆங்கிலத்திலேயே இதை எழுதுகிறேன். 'Because of' மற்றும் 'In spite of' என்னும் இரண்டு நிலைகளில் நம் வாழ்வை நாம் வாழலாம். முதல் நிலையில், என் விருப்பு-வெறுப்பு அனைத்தையும் மற்றவர் கன்ட்ரோல் செய்வார். நான் நன்றாக இருப்பேன், ... அடுத்தவர் எனக்கு நன்றாக இருக்கிறார். ஆனால், இரண்டாம் நிலையில், என் விருப்பு-வெறுப்பு அனைத்தையும் நான் கன்ட்ரோல் செய்வேன். அடுத்தவர் என்னிடம் நன்றாக இல்லை என்றாலும், நான் அவரிடம் நன்றாக இருப்பேன். நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்த அந்த இனியவர், முதல் நிலையில் வாழ்ந்தால் அடுத்த நாள் வேலைக்கு வர மாட்டார். இரண்டாம் நிலையில் வாழ்ந்தால் புன்முறுவலோடு வேலைக்கு வருவார். வாழ்க்கை என்னை நன்றாக நடத்தினால்தான், மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு எனக்கு முக்கியத்துவம் தந்தால்தான், என் உழைப்பு மதிக்கப்பட்டால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றால் அது இயலாத காரியம். ஆனால், வாழ்க்கை என்னை நன்றாக நடத்தவில்லை என்றாலும், மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், என் உழைப்பு சுரண்டப்பட்டாலும் நான் எனக்குரிய கடமையைச் செய்வேன் என நினைத்தால் அங்கே மகிழ்ச்சி என் கையில். அதை எந்த நிலக்கிழாரும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது! மேலும், நிலக்கிழாரும் இரண்டாம் நிலையில்தான் தன் வாழ்க்கையை வாழ்கிறார்.

இறுதியாக,

வாழ்க்கை என்ற திராட்சைத் தோட்டத்தில் நாம் நிற்பது அவரின் அழைப்பால்தான்.

அழைப்பால் வந்த நாம் உழைப்பால் அதை நமதாக்கிக்கொள்ள நினைத்தல் தவறு.

உழைத்த நாம் கையை நீட்டி வாங்கத்தான் முடியும்.

கையை விரித்துக் கொடுப்பவர் அவர்.

முணுமுணுக்க வேண்டாம்!

முடிந்தால், அவரின் தாராள உள்ளத்தை நாமும் பெற்றுக்கொள்வோம்!

எதையும் விமர்சித்து, எதையும் திறனாய்வு செய்து, எவருடைய தவற்றையும் சுட்டிக்காட்டி நாம் எதையும் சாதிப்பது இல்லை. ஏனெனில், நிலக்கிழார் தான் விரும்பியபடியே செய்கிறார். அவரின் விருப்பப்படி செய்ய அவருக்கு உரிமை உண்டு. ஏனெனில், அவர் நிலக்கிழார்!

'அவர் அனைத்திலும் நீதி உள்ளவர். அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே!' (காண். திபா 145:17)