Tuesday, June 30, 2020

கடலில் விழுந்த பன்றிகள்

இன்றைய (1 ஜூலை 2020) நற்செய்தி (மத் 8:28-34)

கடலில் விழுந்த பன்றிகள்

நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ 'வழக்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள்' வாழவே விரும்புகிறோம்.

சில வாரங்களுக்கு முன்பாக நான் எங்களுடைய நிறுவனம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு மாலையில் தேநீர் பருக எல்லாரும் வந்திருந்தார்கள். நான் 'குட் ஈவ்னிங் ஃபாதர்ஸ்' என்றேன். ஆனால், யாரும் பதில் ஒன்றும் கூறவில்லை. 'ஏன்?' என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்த இல்லத்தின் தலைவர் என்னிடம் சொன்னார்: 'நாங்கள் மாலையில் டீ குடிக்கும்போது குட் ஈவ்னிங் சொல்ல மாட்டோம். இரவு உணவருந்தும் முன்தான் சொல்வோம்.'

வழக்கத்திற்கு மாறாக குட் ஈவ்னிங் கூட சில நேரங்களில் கிடையாது.

அன்று இரவு இன்னொரு ஆச்சர்யம் இருந்தது.

உணவருந்திவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அன்றைய செய்தித்தாளைச் சேகரித்து பெட்டியில் போட வாட்ச்மேன் வந்தார். வந்தவர் புலம்பிக்கொண்டே வந்தார். 'என்ன அண்ணன்? என்ன ஆச்சு?' எனக் கேட்டேன். 'இல்ல ஃபாதர்! வழக்கமா மாலை முரசுதான் வரும். இன்னைக்கு மாலை மலர் வந்திருக்கு! யாரும் ஒன்னும் கேக்கல! ஏன் இப்படி மாத்தி போட்டாங்கன்னு தெரியல!' என்று புலம்பிக் கொண்டே சொன்றார்.

வழக்கங்கள்தாம் நிறுவனத்தின் முதுகெலும்பைப் பிடித்து நிற்க வைக்கும் தசை நார்கள். வழக்கங்கள் மாறிவிட்டால் நிறுவனம் அசைந்துவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 5:14-15,21-24) இஸ்ரயேல் மக்கள், 'வழிபாடு' என்னும் வழக்கத்தில் தங்களுடைய பாதுகாப்பு தேடுவதை ஆமோஸ் வழியாக ஆண்டவராகிய இறைவன் கண்டிக்கின்றார். மக்களிடையே நீதியை நிலைநாட்டுவதை விட, எரிபலிகள், தானியப் படையல்கள் செலுத்தும், வீணைகள் இசைத்துப் பாடல் பாடுவது எளிது என்றும், அதுவே தங்களது வழக்கம் என நினைத்தனர் இஸ்ரயேல் மக்கள்.

ஆம்! வழக்கங்கள் எளிதானவை! வழக்கங்கள் ஆபத்தற்றவை! வழக்கங்கள் பாதுகாப்பானவை!

ஆனால், இருவர் அநீதியாக அடித்துக்கொல்லப்பட, நாம் அவர்களுக்கு ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி நிறைவேற்றிவிட்டு அமைதி கண்டால் அந்த வழக்கம் ஆபத்தானது. இஸ்ரயேலில் இதுதான் நடந்தது. மக்கள் ஒருவர் மற்றவரை அநீதியாக நடத்திவிட்டு, ஆலயத்தில் நல்லுறவுப் பலிகள் செலுத்தி தங்கள் மனச்சான்றை ஆற்றுப்படுத்திக்கொண்டனர். இவர்களைக் கண்டிக்கிற ஆமோஸ், 'நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாய்ப் பாய்ந்து வருக!' என்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 8:28-34), பேய்பிடித்த இருவர் கல்லறைகளில் அலைந்து திருகின்றனர். இன்னொரு பக்கம் பன்றிகள் கூட்டமாய் பேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆக, பேய்பிடித்தவர்கள் கல்லறைகளில் உலவுவதும், பன்றிகள் அதனருகே கூட்டமாய் மேய்வதும்தான் வழக்கம். ஆனால், இயேசு அந்த வழக்கத்தை உடைக்கின்றார். பேய்களை பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பி, அவர்களுக்கு நலம் தருகின்றார். இயேசு இந்த வழக்கத்தை உடைத்ததால் கதரேனர் அச்சம் கொள்கின்றனர். இயேசுவை எதிர்கொண்டு வந்து, தங்கள் பகுதியை விட்டு அவர் அகலுமாறு அவர்கள் வேண்டுகிறார்கள்.

வழக்கத்தை மீறுபவர்களுக்கு எந்நகரிலும் இடமில்லை என்பது இங்கே தெளிவாகிறது.

வழக்கத்தை மீறுபவர் கடவுளே ஆனாலும் அவருக்கு நகரில் இடமில்லை. இதுதான் இன்றைய நற்செய்தியின் நிகழ்வாக இருக்கிறது.

ஆனால், வழக்கங்கள் மீறப்படவில்லை என்றால் சமூகம் வளராது.

இந்திய மண்ணில் இன்னும் மனுஸ்ம்ருதி வழக்கமே இருந்தது என்றால், நீங்களும் நானும் இன்று நம் 'குலத்திற்கு' உரிய தொழில்களைச் செய்துகொண்டிருந்திருப்போம். என் கையில் மடிக்கணிணியும் உங்கள் கையில் செயல்திறன் பேசியும் இருந்திருக்காது. நம் பெண்கள் மேல்சட்டை அணியாமல் இருந்திருப்பர். நம் கழுத்தில் எச்சில் உமிழ்வதற்கு ஒரு கூடை கட்டப்பட்டிருக்கும். நாம் செருப்பணிய முடியாது.

வழக்கங்கள் மீறப்படுதல் நலம்.

நம்மைப் பிடித்திருக்கும் வழக்கம் என்னும் பேய், பன்றிக்கூட்டங்களுக்குள் புகுந்து அவை கடலில் வீழ்ந்தால் நலம்!

Monday, June 29, 2020

காரணம் இல்லாமல்

இன்றைய (30 ஜூன் 2020) முதல் வாசகம் (ஆமோ 3:1-8, 4:11-12)

காரணம் இல்லாமல்

'நெருப்பின்றி புகையாது' என்பது பழமொழி.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலத்தில் இருக்கின்ற பிரச்சினை இரண்டு:

ஒன்று, இஸ்ரயேல் மக்கள் ஆமோஸின் இறைவாக்கை ஏற்க மறுக்கின்றனர். அவர் தானாக இறைவாக்குரைக்கின்றார் என்றும், அவரைக் கடவுள் அனுப்பவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

இரண்டு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்குக் காரணம் தாங்கள் இல்லை என்று கருதி, தங்கள் பாவங்களைப் பற்றி அக்கறையற்றவர்களாக, குறிப்பாக, அவர்கள் இழைத்த சமூக அநீதிகளைப் பற்றி அக்கறை இல்லாமல், பொறுப்புணர்வின்றி இருந்தனர். அதாவது, நம் அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் குறிப்பிட்டுருப்பது போல. அதாவது, சாத்தான்குளத்தில் சிறையில் இறந்தவர்களின் இறப்பு லாக்-அப் டெத் அல்ல. லாக்-அப் டெத் என்றால் அவர்கள் லாக்-அப்பிற்குள் இறந்திருக்க வேண்டும். இவர்கள் மருத்துவமனையில் இறந்தார்கள். ஆகவே, இது சாதாரண இறப்பு என்றார். இது எப்படி இருக்கிறது என்றால், பாம்பு கடித்த ஒருவர் கடித்த இடத்திலேயே இறந்தால்தான் அவர் பாம்பு கடித்து இறந்தார் என்று சொல்லப்படுவார். மாறாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் இறந்தால் அது ஏதாவது மூச்சுத்திணறல் அல்லது காய்ச்சலால் இறந்திருக்கலாம் அல்லது தானாக விரும்பி இறந்தார் என்றும் சொல்லப்படலாம். இதுதான் பொறுப்புணர்வற்ற நிலை.

இறைவாக்கினர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற பின்புலத்தையும், இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை என்ற பின்புலத்தையும் வைத்து இறைவாக்குரைக்கின்ற ஆமோஸ், அவர்களுடைய சமகாலத்து நடைமுறை வாழ்வில் உள்ள சில எடுத்துக்காட்டுக்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் தவற்றை அவர்களுக்கு உணர்த்துகின்றார். அவர் சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டுக்கள் மிகவும் எதார்த்தமானவையாக இருக்கின்றன:

'தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களா?'

'இரை அகப்படாமல் சிங்கம் கர்ச்சிக்குமா?'

'வேடன் தரையில் வலைவிரிக்காமல் பறவை கண்ணியில் சிக்குமா?'

'ஒன்றும் சிக்காமல் பொறி தரையிலிருந்து துள்ளுமா?'

'நகரில் எக்காளம் ஊதப்பட்டால் மக்கள் அஞ்சாமல் இருப்பார்களா?'

'ஆண்டவர் அனுப்பாமல் நகருக்குத் தீமை வருமா?'

ஆக, காரணம் இல்லாமல் காரியம் இல்லை. காரியம் என்பது காரணத்தின் மறுஉருவம். இதைப் புரிந்துகொள்பவர்கள் பொறுப்புணர்வுடன் நடப்பர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 8:23-27), இயல்பாக நடக்கின்ற இயற்கையின் சீற்றத்திற்கும், அதனால் எழும் தன் சீடர்களின் அச்சத்திற்கும் பொறுப்பேற்கின்ற இயேசு, காற்றையும் கடலையும் கடிந்துகொள்கிறார்.

இன்றைய நாளின் சிந்தனை இதுதான்:

பொறுப்பேற்பவருக்கு வாழ்வில் அனைத்தும் கட்டுப்படும்.

பொறுப்பைத் தட்டிக் கழிப்பவருக்கு அச்சமும் கலக்கமும் மிஞ்சும்.

Sunday, June 28, 2020

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

இன்றைய (29 ஜூன் 2020) திருநாள்

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா' (காண். மத் 16:18) என்று பேதுருவையும், 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.

இவர்கள் நமக்குத் தருகின்ற வாழ்வியல் பாடங்கள் எவை?

அ. உயிர்ப்பு அனுபவம் (Resurrection Experience)

பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்' (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.

ஆ. பொருந்தக் கூடிய தன்மை (Compatibility)

பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: 'ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் ... யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் ... நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்' (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.

இ. எழுத்துக்கள் (Writings)

'பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்' என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.

Saturday, June 27, 2020

தோற்பதால் வெல்தல்

பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

'வின் தெ க்ரவ்ட்!' 'மக்களை வெற்றிகொள்!'

தன்னிடம் உள்ள மாக்ஸிமுஸ் என்னும் கிளாடியேட்டர் அரங்கத்திற்குள் செல்லுமுன் இப்படிச்சொல்லிதான் அவனுடைய தலைவன் வழியனுப்புவான்.

'வின்னிங்!' 'வெற்றி கொள்தல்!' - நாம் அனைவரும் விரும்பும் ஒன்று.

வெற்றிகொள்தலில் இருவகை உண்டு. முதல் வகையில், ஒருவர் தன்னுடைய எதிராளியைத் தாழ்த்தி அல்லது அழித்து வெற்றி பெறுவார். இந்த வகை வெற்றியில் நிறைய இரத்தம், காயம், கண்ணீர், அழுத்தம் இருக்கும். இரண்டாம் வகையில், ஒருவர் தன்னுடைய எதிராளியை அல்லது அடுத்தவரை உயர்த்தி வெற்றி பெறுவார். இந்த வகை வெற்றியில் நிறைய மகிழ்ச்சி, நிறைவு, கருணை இருக்கும்.

அல்லது, முதல் வகை வெற்றி, எடுப்பதால் பெறும் வெற்றி. இரண்டாம் வகை வெற்றி, கொடுப்பதால் பெறும் வெற்றி.

இந்தக் கொரோனா காலத்தில் நம் நாட்டில் செயல்படும் அரசு, முதல் வகை வெற்றிக்கே முயற்சிக்கிறது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் தொடங்கப்பட்ட ஊரடங்கு மற்றும் லாக்டவுன், மருந்து, கவச உடை, சோதனைப் பெட்டி வாங்கியதில் ஊழல், பி.எம் கேர்ஸ் என்ற பெயரில் வேகமாக சேகரிக்கப்பட்ட ஆனால் மூடியே வைக்கப்பட்ட பணம், மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளைத் தனியார்வயப்படுத்துதல் என்ற நிலையில் செயல்பட்டு கொரோனா மேல் வெற்றிகொள்ள நினைக்கிறது. இம்முறைகளால் அரசுக்கும் வெற்றி இல்லை, மக்களுக்கும் வெற்றி இல்லை.

இன்னொரு பக்கம், சாதாரண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்கள் தங்களையே கொடுத்து மக்களை வெற்றிகொள்கிறார்கள்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, கொடுப்பதால் பெறும் வெற்றியை, அல்லது இழப்பதால் பெறும் வெற்றியை, அல்லது தோற்பதால் பெறும் வெற்றியைப் பற்றிப் பேசுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 அர 4:8-11,14-16) எலிசா வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். எலிசா சூனேம் என்ற நகருக்கு வருகின்றார். அங்கிருந்த பணக்கார மற்றும் செல்வாக்குநிறை பெண்மணி அவரை அழைத்து விருந்தோம்பல் செய்கிறார். தொடர்ந்து அவருக்கு உணவளிக்கிறார். ஒரு கட்டத்தில், 'நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும்போது இங்கே ஓய்வெடுக்கட்டும்' என்று தன் கணவனிடம் சொல்கின்றார்.

இங்கே நமக்கு மூன்று விடயங்கள் தெரிகின்றன: (அ) பெயரில்லா இந்தப் பெண்ணின் பரிவு - அதாவது, எலிசாவுக்கு என்ன தேவை என்பதை உணர்கிறார். அடுத்தவரின் தேவை என்ன என்பதை அறிதல்தான் பரிவு. பரிவு வந்தால் தான் பகிர்வு சாத்தியமாகும். (ஆ) எலிசா மேல் பரிவுகொள்வதோடு நிறுத்தாமல் அந்தப் பரிவை பகிர்வின் செயல்பாடாக மாற்றுகிறாள். எலிசாவுக்கென மாடியில் ஓர் அறையையும், படுக்கை, மேசை, விளக்கு போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறாள். (இ) பெண்கள்தான் இல்லத்தின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். ஏறக்குறைய நம் முந்தைய தமிழ்ச் சமூகம் போல. குறிப்பாக, வள்ளல் பாரி ஆண்ட பறம்பு நாட்டில் குடும்பத்தலைவியர்களே வீட்டின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். (ஈ) எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஓர் ஆண்டவரின் மனிதர் என அறிகிறார்.

ஆக, பரிவு கொண்ட ஒருத்தி, பகிர்ந்து கொள்ளத் துணிந்து, முன்பின் தெரியாத ஒரு அந்நியரை ஆண்டவரின் அடியவர் புனிதர் என வரவேற்கின்றார். இப்பெண்ணின் இச்செயலுக்கு எலிசா ஏதாவது கைம்மாறு செய்ய நினைக்கின்றார். 'அரசரிடமோ படைத்தலைவரிடமோ ஏதாவது பரிந்து பேச வேண்டுமா?' (காண். 2 அர 4:13) எனக் கேட்கின்றார். அப்பெண் மறுக்கிறாள். 'வேறு எந்த விதத்தில் உதவி செய்யலாம்' என நினைக்கின்ற எலிசா, குழந்தையின்மை என்னும் அவளது குறையைப் போக்குகின்றார்: 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்!' குழந்தையின்மை என்பது கடவுளின் சாபம் என்று மக்கள் கருதிய அக்காலத்தில், கடவுளின் சாபத்தை நீக்குகின்றார் எலிசா.

இங்கே, சூனேமியப் பெண் தன்னிடம் உள்ளதை இழந்ததால் எலிசாவின் நல்மனத்தினை வெற்றிகொள்கின்றார். எலிசாவின் கொடையினை வெற்றிகொள்கின்றார். தன்னுடைய ப்ரைவஸி, வசதி, பொருள்கள் என அனைத்தையும் கொடுத்தார். ஆனால், அப்படி இழந்ததால் கடவுளின் மனிதரின் நல்மனத்தை வெற்றிகொண்டார். அவருடைய வசதிகளும், பணமும், செல்வாக்கும் பெற்றுத்தராத குழந்தைப்பாக்கியத்தை கைம்மாறாகப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 10:37-42) மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கின்றது:

அ. சீடத்துவத்தின் அடையாளம் சிலுவை சுமத்தல்

ஆ. இயேசுவை ஏற்றுக்கொள்தல்

இ. இயேசுவின் சீடர்களுக்கு (சிறியோருக்கு) உதவுதல் மற்றும் அதன் கைம்மாறு

நற்செய்தி வாசகத்தின் மையமாக இருக்கின்ற வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது: 'தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.'

இழத்தலில்தான் ஒருவர் வெற்றி பெறுகிறார் அல்லது காத்துக்கொள்கிறார் என்பது இயேசுவின் புரட்டிப் போடுதலாக இருக்கிறது.

இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

என்னிடம் 1000 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். தேவையில் இருக்கும் ஒருவர் திடீரென்று என்னைத் தேடி வருகிறார். அவரிடம் நான் என்னிடம் உள்ள 1000 ரூபாயைக் கொடுத்துவிடுகிறேன். அப்படி என்றால் எனக்கு 1000 ரூபாய் இழப்பு தானே?

இல்லை!

அந்த 1000 ரூபாயை நான் இழக்கவில்லை. மாறாக, அந்த 1000 ரூபாயை நான் இன்னொருவருடைய கையில் கொடுத்து, இப்போது நான் அவரைப் பிடித்துக்கொள்கிறேன். ஆக, என்னிடமிருக்கும் 1000 ரூபாய் அப்படியே இருப்பதுடன், என் கைக்குள் இன்னொரு நபரும் இருக்கிறார். அப்படி என்றால் எனக்கு வெற்றிதானே! நான் எதையும் இழக்கவில்லைதானே!

இந்த உலகில் நாம் எதையும் இழக்கவும் முடியாது! எதையும் பெறவும் முடியாது! இன்னொருவரிடம் இருந்த ஒன்று என்னிடம் சற்று நேரம் இருக்கிறது. என்னிடம் சற்று நேரம் இருக்கும் ஒன்று இன்னொருவரின் கைக்கு மாறுகின்றது.

சூனேம் பெண் செய்ததும் அதுதான். எலிசாவுக்கு உணவு தந்ததால் அவருடைய பாத்திரம் காலியாகிப்போகவில்லை. மாறாக, தன் பானையில் இருந்த சோற்றை எலிசாவின் வயிற்றுக்கு மாற்றிக்கொள்கின்றார். பாத்திரத்தில் இருந்தால் சோறு கெட்டுப் போயிருக்கும். ஆனால், எலிசாவின் வயிற்றை அவள் சோற்றால் நிரப்பியதால், அவளின் வயிற்றை இறைவன் குழந்தையால் நிரப்புகின்றார்.

இப்படி நாம் பார்க்கத் தொடங்கிவிட்டால், நாம் அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.

இந்நாள்களில் நான், திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய, 'வேள்பாரி' என்னும் புதினத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பறம்பு நாட்டுத் தலைவன் பாரியைப் பற்றியது அது. 'முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி' என்று நாம் கேள்விப்பட்டிருப்பதை இவரைக் குறித்தே.

அந்த நிகழ்வு இப்படி நடக்கிறது.

பாரிக்கும் ஆதினிக்கும் திருமணம் நடக்கிறது. ஆதினி குறிஞ்சி நாட்டின் கால் பதித்த முதல் நாளில் அவளுக்கு தன் நாட்டின் ஆச்சர்யமான தீக்கக்கி மரத்தைக் காட்ட இரவில் அவளை அழைத்துச் செல்கின்றார். தன் தேரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுச் செல்லும் இவர்கள் அடுத்த நாள் மதியம்தான் அந்த இடம் வருகிறார்கள். அதற்குள் ஒரு முல்லைக்கொடி இவர்களுடைய தேரின் சக்கரத்தில் படர ஆரம்பிக்கிறது. மெதுவாகக் கொடியை விலக்கித் தேரை நகர்த்தலாம் என்கிறாள் ஆதினி. ஆனால், பாரிக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தன்னுடைய தேரை தன்னுடைய பொருளாக அல்லது உடைமையாகப் பார்க்காமல், காட்டில் நிற்கும் ஒரு மரமாகப் பார்க்கிறார். அப்படியே அதை விட்டுவிட்டு நகர்கிறார். ஆக, மரத்தின் நீட்சிதான் தேர். தேரின் எச்சம்தான் மரம். இதை அவர் கைக்கொண்டதால் அப்படியே தேரை 'இழக்க' துணிகின்றார். அவர் தேரை அன்று இழந்ததால் இன்று மாபெரும் புகழை அடைந்தவராக மாறுகின்றார். ஆக, இழத்தல் ஒருபோது இழப்பு அல்ல.

இழப்பதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது.

அதாவது, எனக்கு இதைவிட அதிகம் கிடைக்கும் என நினைத்து நான் இழப்பது.

எடுத்துக்காட்டாக, எனக்கு மேலிருக்கும் அதிபர் அல்லது ஆயர் அவர்களுக்கு நான் ஒன்று செய்தால், அது எனக்கு வேறொரு வகையில் கிடைக்கும் அல்லது இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் இழப்பது தவறு. ஏனெனில், அப்படிச் செய்யும் போது நான் எதையும் இழக்கவில்லை. மேலும், அவர்களை நான் எனக்காகப் பயன்படுத்திக்கொள்பவன் ஆகின்றேன். மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப்பொருள்கள் அல்ல. அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அதனால்தான், இயேசு, 'இறைவாக்கினரை இறைவாக்கினர் என்பதற்காகவும், நேர்மையாளரை நேர்மையாளர் என்பதற்காகவும்' என வரையறுக்கின்றார்.

இழத்தலையும் பெறுதலையும், அல்லது தோற்பதால் வெல்தலையும் இரண்டாம் வாசகம் (காண். உரோ 6:3-4,8-11) உருவகமாகச் சொல்கிறது. கிறிஸ்து இயேசுவோடு நம் பாவத்திற்கு இறந்த அல்லது நம் பாவத்தை இழந்த நாம் அவரோடு சேர்ந்து உயிர்க்கின்றோம். நம் இறப்பு நமக்கே வாழ்வாக மாறுகிறது.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சூனேம் பெண் தன் வீட்டின் சிறு பகுதியையும், தன் பாத்திரத்தின் சிறு உணவையும் இழக்கின்றார். ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொள்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், பாவத்தின் வழியாக நாம் இறக்கின்றோம். அந்த இறப்பே புதுவாழ்விற்கான கதவுகளை நமக்குத் திறந்துவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், உயிரை இழப்பவர் பெறுகின்றார். தன் உறவுகளை இழப்பவர் அவற்றைவிட பெரிய உறவைக் கண்டுகொள்கின்றார். சீடர்களுக்கு உதவி செய்பவர் கைம்மாறு பெறுகிறார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

அ. தோற்கப் பழகுதல்

அன்றாடம் நாம் கொரோனோ முன்னால் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய தனிமனித விலகலும், சமூக விலகலும், ஊரடங்கும், முகக்கவசமும், சானிட்டைசரும், நம் மருந்துகளும், நம் அறிவியல் கண்டுபிடிப்புக்களும் நமக்கு வெற்றியைத் தரவில்லை. ஆனால், நாம் தோற்கும் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், தடுப்பு மருந்து வெற்றி என்று நல்ல செய்திகள் நம் காதுகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. நாம் இவ்வளவு நாள்கள் இழந்தது நம்மிடம் தேவையில்லாதவற்றைத்தான். இவை யாவும் இல்லாமல், ஏன் இறை யாவும் இல்லாமலும் நான் இருக்க முடியும் என்று நமக்குக் கற்பித்து வருகிறது கொரோனா. ஆக, தொடர்ந்து தோற்கப் பழகுதல் வேண்டும். தோற்றலும் வெற்றியே என உணர்தல் நலம்.

ஆ. தாராள உள்ளம்

தேவையில் இருப்பவர்களை நான் என்னுடைய நீட்சியாகப் பார்க்கும் உள்ளம் வரவேண்டும் என்றால், 'ஒவ்வொரு விருந்தினரும் ஒரு ஆசீர்' என உணர வேண்டும். சில இல்லங்களில் இன்றும் திண்ணைகள் வைத்துக் கட்டுகின்றனர். சிலர் விருந்தினர்களுக்கென்று சிறப்பான பாத்திரங்களையும் தட்டுக்களையும் அறைகளையும் ஒதுக்கி வைக்கின்றனர். சிலர் அன்றாடம் ஒரு கை எக்ஸ்ட்ரா அரிசி சமைக்கிறார்கள். கைகளை விரித்துக் கொடுப்பதால்தான் இந்த உலகை நம் கைக்குள் வைத்துக்கொள்ள முடியும் எனக் கற்றுத் தந்தவர் கிறிஸ்து பெருமான். சூனேம் பெண்ணின் தாராள உள்ளத்தை நாமும் கொண்டிருக்க முயற்சிக்கலாம்.

இ. சிலுவை சுமத்தல்

சூனேம் பெண்ணுக்கு எலிசாவின் இருப்பு சில நேரங்களில் துன்பமாக, இடையூறாக இருந்திருக்கலாம். நம் வாழ்விலும் சில சுமைகள் சிலுவைகளாக அழுத்தலாம். ஆனால், சிலுவைகள் சுமக்காமல் வெற்றி இல்லை. நாம் சுமக்கும் கொரோனா என்னும் கொடிய சிலுவை விரைவில் மறைந்து போகும். சிலுவையைச் சுமப்பவர் வேறெந்தச் சுமையையும் தன்மேல் வைத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு கட்டத்திலும் நான் இழக்கத் துணியும்போது இழத்தலும் இன்பம் என அறிவேன்.

ஒருவர் மற்றவருக்கு பேரன்பு காட்டுதல் நலம். ஏனெனில், திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல, 'ஆண்டவரின் பேரன்பை நாம் எந்நேரமும் பாடுகிறோம்' (திபா 89:1).

Friday, June 26, 2020

சிறியதில் பெரியது

இன்றைய (27 ஜூன் 2020) நற்செய்தி (மத் 8:5-17)

சிறியதில் பெரியது

இரண்டு நாள்களுக்கு முன் அருள்சகோதரர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்: 'சில அறிகுறிகளில் அல்லது அற்புதங்களில் இயேசு நபர்களைத் தொடுகிறார். சிலவற்றில் தொடாமலேயே குணமளிக்கிறார். ஏன்?'

இயேசுவின் சமகாலத்தில் யூத ரபிக்களும் புறவினத்து ஷாமான்களும் அறிகுறிகள் மற்றும் அற்புதங்கள் நிகழ்த்தினர். அவர்களுடைய அற்புதங்கள் பெரும்பாலும் நபர்களைத் தொட்டு நிகழ்த்துவதாக இருந்தன. இயேசுவை ஒரு யூத ரபி போன்றவர் என்று சொல்லும் இடங்களில் அவர் தொட்டுக் குணமாக்குவதுபோலவும், அவரின் இறைத்தன்மை முதன்மைப்படுத்துகின்ற இடங்களில் அவர் தொடாமல் குணமாக்குவதுபோலவும் இருக்கிறது என்று நான் பதிலிறுத்தேன்.

இக்கேள்விக்கான விடையை நான் இன்னும் தேடிக் கூர்மைப்படுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொடாமல் ஒரு அற்புதம் நிகழ்த்துகின்றார்.

நூற்றுவர் தலைவர் ஒருவனுடைய மகன் நலமற்று இருக்கிறார். இங்கே 'மகன்' என்ற சொல்லை, கிரேக்கத்தில், 'பணியாளன்', 'அடிமை', 'துணை ஆள்', 'துணைவன்,' 'சின்னப் பையன்' என்றும் மொழிபெயர்க்கலாம். 'மகன்' என்று மொழிபெயர்க்காமல் 'பையன்' அல்லது 'இளவல்' என்று மொழிபெயர்க்கும் விளக்கவுரையாளர்கள், இந்த இளவல் நூற்றுவர் தலைவனின் ஓரினச்சேர்க்கை இணையராக இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தன் மகனுக்கோ அல்லது இணையருக்கோ அவர் இயேசுவிடம் உதவி கேட்டுப் புறப்பட்டு வருகின்றார்.

'ஐயா! என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்' - என்று பிரச்சினையை மட்டும் சொல்கின்றாரே தவிர, உதவி கேட்கவில்லை. ஒரு நூற்றுவர் தலைவர் சாதாரண ரபியிடம் உதவி கேட்பதா என்று நினைத்திருக்கலாமா?

இல்லை.

இயேசுவை அவருடைய பணிவாழ்வில் கடவுளாக, இல்லை, கடவுள் என்று முதலில் பார்த்தவர் இவர்தான்.

'நான் வருகிறேன்' என்று சொன்னவுடன், 'நான் தகுதியற்றவன்' என்று சரணடைகின்ற அவர், 'ஒரு வார்த்தை சொல்லும்! அதுவே போதும்!' என்கிறார்.

விவிலியத்தில் வார்த்தையால் அனைத்தையும் செய்தவர் யாவே இறைவன்தாம்.

அந்த யாவே இறைவனே நீர்தான்! - எனச் சொல்கிறார் இந்த இளவல்.

ஆகையால்தான் இயேசு, இஸ்ரயேலர் யாரிடமும் இந்த நம்பிக்கை இல்லை என்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளைப் பற்றி அறிந்தாலும் இயேசுவை அந்தக் கடவுள் என்ற நிலையில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஆனால், இந்த நூற்றுவர் தலைவர் அப்படி அல்ல. அவர் காண்பதில் காணாதவற்றைப் பார்த்தார்.

வில்லியம் ப்ளேக் சொல்வதுபோல, 'சிறிய மண்துகளில் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், சிறிய விதையில் பெரிய மரத்தையும், சிறிய நீர்த்துளியில் பெரிய கடலையும்' பார்த்தார் இவர்.

இன்று நாம் சில நேரங்களில், பெரிதாக்கிப் பார்க்கிறோம் பிரச்சினைகளையும் தவறுகளையும். ஆனால், நாம் பார்க்க வேண்டியது வாய்ப்புக்களையும் நம்பிக்கையையும்.

நம் நம்பிக்கைதான் பெரிதாக வேண்டுமே தவிர, நம் பிரச்சினைகளையும், மற்றவர்களின் தவறுகளையும் நாம் பெரிதாக்கக் கூடாது.

இந்த மனிதர் நமக்கு இதைக் கற்றுத் தருகிறார். இவர் எந்த அளவுக்கு நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றால், ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலியில் நற்கருணை வாங்குமுண் இவரின் வார்;த்தைகளைத்தான் செபிக்கின்றோம்: 'ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவள். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்! என் ஆன்மா நலமடையும்!'

இயேசுவைக் கடவுள் எனக் கண்டு அறிக்கையிட்டதால் இறவாமையைத் தழுவினார் இவர்! நம் உதடுகளில் இவர் இன்றும் வாழ்கிறார்.

சாதாரண அப்பத்துண்டில் நம்மால் கடவுளைப் பார்க்க முடிகிறது. எப்படி? இவர் சாதாரண தெருப் போதகர் ஒருவரில் கடவுளைப் பார்த்ததால்.

ஆக, சிறியதில் பெரியதைப் பார்த்தல் சால்பு. அப்படிப் பார்ப்பவர் நம்புவது அனைத்தும் நிகழும்.

Thursday, June 25, 2020

உன்னை நான் நினையாவிடில்

இன்றைய (26 ஜூன் 2020) பதிலுரைப் பாடல் (திபா 137)

உன்னை நான் நினையாவிடில்

நேற்றைய மற்றும் இன்றைய முதல் வாசகமும் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகின்றன. ஆண்டவருடைய நகரம், ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டு, ஆண்டவருடைய மக்கள் தாங்கள் முன்பின் தெரியாத ஒரு நாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகின்றனர். ஆண்டவருடைய உடன்படிக்கையை மீறியதாலும், சிலைவழிபாடு செய்ததாலும் இந்த நிகழ்வு நடந்தது என்று இஸ்ரயேல் மக்கள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொன்னாலும், 'ஒரு நகரில் பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தால், அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு நான் நகரை அழிக்க மாட்டேன்' (காண். தொநூ 18:32)இல் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்த கடவுள் தன் வாக்கை மறந்துவிட்டாரோ? என்று புலம்பவும், தங்கள் நாட்டில் பத்து நீதிமான்கள் கூட இல்லாமல் போனார்களோ என்று ஆதங்கப்படவும் செய்கின்றனர்.

அவர்களை மீண்டும் கூட்டிவந்து ஆண்டவர் அவர்களைப் பெரிய இனமாக்குகின்றார். இருந்தாலும் அழிவு அழிவுதானே.

அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டுச் சென்றபோது, அவர்கள் பாடிய பாடலாக திபா 137 விளங்குகிறது.

ஒரு தனி மனித மற்றும் குழுமத்தின் வருத்தம், துன்பம், வெறுமை, இழப்பு, புலம்பல், கோபம், பகை அனைத்தையும் ஒரே பாடலுக்குள் கொண்டுவருகிறார் ஆசிரியர்.

மனிதன் கதைகளால் கட்டப்பட்டவன். கதைகளால் கட்டப்பட்ட அவன் தன் கதையை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்தக் கதையைப் பாடலாக்கிவிடுகின்றான். அந்தப் பாடலை யார் பாடினாலும் அந்த நபருக்குள் ஆதி மனிதன், நாடுகடத்தப்பட்ட மனிதன், அடிமையாகிப் போன மனிதன் மீண்டும் வந்து சில நிமிடங்கள் வாழ்ந்துவிட்டுப் போகின்றான். வாசித்த மனிதன் மறைந்துபோன அந்த மனிதனின் சோகத்தை தன்மேல் அப்பிக் கொண்டு தானும் கொஞ்ச தூரம் வழிநடக்கின்றான்.

மண், கோவில், கடவுள் என அனைத்தையும் இழந்து தங்கள் நாட்டைவிட்டு பாபிலோனியாவிற்கு அடிமைகளாக அழைத்துச்செல்லப்படும்போது அவர்கள் கடக்கின்ற ஒரு ஆற்றங்கரையில் நடக்கும் நிகழ்வே இப்பாடல். இந்தப்பாடலில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: அமர்ந்து, அழுதோம், யாழ்களை மாட்டி வைத்தோம், பாடும்படி, கேட்டனர், கடத்திச் சென்றோர், இசைக்குமாறு, பாடுவோம், மறந்தால், சூம்பிப்போவதாக, நினையாவிடில், கருதாவிடில், ஒட்டிக்கொள்வதாக, வீழ்ந்த, இடியுங்கள், தள்ளுங்கள், சொன்னார்கள், பாழாக்கும், திருப்பிச் செய்வோர், பிடித்து, மோதி, அடிப்போர் என அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார் இதன் ஆசிரியர். இந்தப் பாடலை வாசித்தால் அதில் உள்ள வேகம் கண்கூடாய்த் தெரியும்.

 'ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்' - இவையே இந்தப் பாடலின் மையமாக உள்ள வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தங்கள் இறைவனின் மேல் அவர்கள் கொண்டிருந்த அளவில்லாத பற்றையும், தாங்கள் 'அந்நியப்படுத்தப்பட்ட' நிலையையும் மிக அழகாகப் பிரதிபலிக்கின்றது. இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைவது இதுதான்: alienation. இந்த வார்த்தையை தமிழாக்கம் செய்ய முயன்றேன். 'அந்நியப்படுத்தப்படுதல்', 'தனிமைப்படுத்தப்படுதல்' போன்ற வார்த்தைகள் இதற்கான ஒரு அர்த்தத்தைத்தான் தருகின்றன. 'திக்கற்ற நிலை' என்ற வார்த்தை ஏறக்குறைய இதற்கொட்டிய அர்த்தத்தைத் தருகின்றது.

இப்பாடலில் காட்டப்படும் இஸ்ராயேல் மக்களின் உணர்வு இதுதான்: திக்கற்ற நிலை. இன்று கொரோனாவின் பின்புலத்தில் நாமும் திக்கற்ற நிலையில் இருக்கின்றோம். நம் தவறா? மோடியின் தவறா? எடப்பாடியின் தவறா? யார் தவறு? என்று தெரியாமல், நம் நோயை இறைவன்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது அரசு. 'பிரதம மந்திரி அக்கறை கொள்கிறார்' என்ற போலிப் பிரச்சாரம் கேட்டு அள்ளிக் கொடுத்தவர்கள் எல்லாம், தங்கள் அறையில் கணிணியின் மவுஸ் பிடித்துக்கொண்டு, 'அடுத்து என்ன செய்வது?' என யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

இஸ்ராயேல் மக்களின் திக்கற்ற நிலையும், அவர்களின் அழுகையும் நமக்குச் சொல்லும் பாடம் என்ன? நாம் எப்போது அழுகிறோம்? அதிக மகிழ்வையும், அதிக துன்பத்தையும் நம் கண்கள் மொழிபெயர்க்கும் முயற்சியே 'அழுகை'.

நம் தனிமைப்படுத்தப்பட்ட நிலை நமக்கு அழுகையைத் தருகின்றது. கருவறையின் சுகத்தை அனுபவித்த குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. ஏனெனில், இந்த உலகம் அதற்குத் தனிமையாகத் தெரிகிறது. வீட்டில் ஓடியாடி விளையாடும் குழந்தை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதும் அழுகிறது. தனிமை. பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து வேலை என்று சென்றால் அங்கும் முதல்நாள் தனிமை. தன் பெற்றோர், உடன்பிறப்புக்களை விடுத்து புதிய திருமண வாழ்க்கைக்குள் நுழையும்போது அங்கேயும் தனிமை. பத்து ஆண்டுகள் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு குருத்துவ அருட்பொழிவிற்குப்பின் பங்குத்தளத்திற்கும் செல்லும் அருள்பணியாளரின் கண்களிலும் கண்ணீர். ஒவ்வொரு வருடம் புதிய பங்குத்தளத்திற்குச் சென்றபோதும் நான் அழுதிருக்கிறேன்!

இதுதான் நமக்கு எல்லாம் என்று பற்றிக்கொண்டிருக்கும் ஒன்று நம்மை விட்டுப் பறிபோகும்போது நம்மையறியாமலேயே அழுது விடுகிறோம். நமக்கு மிக நெருக்கமானவரின் பிரிவு, இறப்பு, தேர்வில் தோல்வி, உறவுகளில் விரிசல், ஏமாற்றம் என பல நிலைகளில் நாம் தனித்துவிடப்படுகிறோம்.

வாழ்வில் என்ன நடந்தாலும், என்னதான் திக்கற்றநிலை வந்தாலும், என்னதான் தனிமைப்படுத்தப்பட்டாலும் அதற்குக் காரணமான நபர்களைத் தேடி பழிதீர்ப்பதை விடுத்து, 'எங்கே நடந்தது தவறு?' என்று ஆராய்ந்தால் அதுவே புதிய வாழ்க்கையின் முதற்படி.

என்னதான் தாங்கள் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டாலும், கொஞ்சம் நம்பிக்கை அவர்களின் நெஞ்சுக்குழிக்குள் இருந்ததால்தான், 'எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாகக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!' என்று அவர்களால் பாட முடிகிறது.

இந்த நம்பிக்கையே இன்று நம்மை அடுத்த நாள் எழச் செய்கிறது.

Wednesday, June 24, 2020

செயல்கள்

இன்றைய (25 ஜூன் 2020) நற்செய்தி (மத் 7:21-29)

செயல்கள்

இன்றைய நற்செய்திப் பகுதியோடு இயேசுவின் மலைப்பொழிவு நிறைவு பெறுகிறது. 'அவரது போதனையைக் கேட்டு மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்கின்றனர்.'

தன்னுடைய சமகாலத்து ரபிக்களைப் போலவே தன் உரையை நிறைவு செய்கின்றார் இயேசு. ரபிக்கள் தங்களுடைய போதனையை நிறைவுசெய்யும்போது ஏதாவது ஒரு கதை அல்லது ஓர் உருவகத்தைப் பயன்படுத்துவர். மேலும், போதனையை மக்கள் பின்பற்றவேண்டும் என்ற நிலையில், ஓர் இரட்டைக் கருத்தோடு முடிப்பர்.

இயேசு தன் மலைப்பொழிவின் இறுதியில் 'இருவகை அடித்தளங்கள்' என்னும் உவமையையும், 'நான் எந்த அடித்தளத்தில் கட்டப் போகிறேன்?' என்ற கேள்வியையும் தன் சீடர்கள்முன் வைக்கின்றார்.

மனித வார்த்தைகள் சோப்பு நுரைகள் போன்றவை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சோப்புநுரை சில நிமிடங்களில் மறைந்துவிடும். ஆனால், செயல்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்ட உருவங்கள் போன்றவை. அவை அழியாது.

வெறும் வார்த்தைகள் மறைந்துவிடும் - மணல்மேல் கட்டிய வீடு போல!

ஆனால், செயல்கள் நிலைக்கும் - பாறைமேல் கட்டிய வீடு போல!

இன்று நாம் பல நேரங்களில் மணல்மேல் வீடு கட்டுவதோடு, அதாவது, வெறும் சொற்களை அடுக்குவதோடு நிறுத்திக்கொள்கிறோம். சொற்களையும் தாண்டிய செயல்கள் மிக முக்கியமானவை.

நான் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குப் போகிறேன் என வைத்துக்கொள்வோம். மருத்துவர் என்னிடம், 'இந்த மாத்திரை எடுங்க! இந்த ஊசி போடுங்க!' என்று சொல்கின்றார். அந்த வார்த்தைகளை அவர் உதிர்ப்பதாலும், அவ்வார்த்தைகளை நான் கேட்பதாலும் மட்டும் என் நோய் சரியாகிவிடுமா? இல்லை. மாத்திரைகளை எடுத்தால்தான் சரியாகும்.

வெறும் சொற்கள் மட்டுமல்ல. செயல்களே விண்ணரசின் கதவுகளைத் திறக்கும்.

Tuesday, June 23, 2020

திருமுழுக்கு யோவானின் பிறப்பு

இன்றைய (24 ஜூன் 2020) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு

நண்பர் ஒருவர் வெளிநாட்டில் தன்னுடைய கல்லூரியின் தங்கும் இல்லத்தில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். கோவித்-19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நேரம். வயதான அருள்பணியாளர் (90 வயது) ஒருவரோடு இவர் அமர்ந்து காலை உணவருந்திக்கொண்டிருந்தார். உணவருந்தி முடித்தவுடன் அருள்பணியாளர், 'நான் நூலகத்திற்குச் செல்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அவரோடு அமர்ந்த மற்றவர்கள் ஒருசேர அவரிடம், 'உலகமே அழியப் போகிறது. நூலகத்திற்கு ஏன் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: 'நான் இறந்தால் தான் எனக்கு அது உலக அழிவு. அது வரை எனக்கு உலகம் இருக்கத்தான் செய்யும்.' சொல்லிவிட்டு அந்த அருள்பணியாளர் நூலகம் நோக்கி நடந்தார்.

'எதிர்காலத்தைக் கணிப்பதற்கான ஒரே வழி அதை உருவாக்குவதுதான்' என்பார்கள்.

தன்னுடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று முன்னறவிக்கப்பட்டாலும், 'இதுதான் என் உலகம்' என்று வாழ்ந்து மறைந்தவரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம்.

திருஅவை மூவரின் பிறந்தநாள்களைத் தான் கொண்டாடுகிறது: இயேசு, இயேசுவின் தாய் மரியா, இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான்.

இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:57-66,90) திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வையும், பெயரிடுதல் நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

- இதுதான் சக்கரியா-எலிசபெத்து இல்லத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரே கேள்வி.

இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சக்கரியாவின் பாடலிலிருந்து வாசகர் தெரிந்துகொள்ள முடியும்: 'நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்!'

மூன்று காரணங்களுக்காக இயேசுவைவிட எனக்கு திருமுழுக்கு யோவானை ரொம்பப் பிடிக்கும். ஏன்?

அ. தன் இலக்கு எது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் செயல்கள் அவருடைய இலக்கை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லவில்லை. 'இவர் யாரோ?' என்று மக்கள் எண்ணும்படியாகவே அவர் வைத்திருந்தார். ஆனால், திருமுழுக்கு யோவான் யார் என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். ஏனெனில், அவருடைய செயல்கள் அவருடைய இலக்கை அப்படியே வெளிப்படுத்தின.

ஆ. இரண்டாம் இடத்தில் இருப்பது

இன்றைய உலகில் நாம் நம்மிடம் இல்லாத ஒன்றையும் இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். ஆனால், அவர், 'நீர் மெசியாவா?' என்று மக்கள் கேட்டபோது, 'இல்லை' என்றும், 'மிதியடி வாரை அவிழ்ப்பவர்' என்றும் சொல்கின்றார். மேலும், மணமகனுக்கு அருகில் நிற்கும் தோழன் என்கிறார். திருமண நிகழ்வுகளில் மணமகனின் மேல் அள்ளி எறியப்படும் வெளிச்சம் தோழன்மேல் விழுவதில்லை. மணமகன் தோழர்களை யாரும் பார்ப்பதில்லை - ஆனால், மணமகள் தோழிகளை எல்லாரும் பார்ப்பர்! தன்னை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்வதன் வழியாக, 'இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன தவறு?' என்று நம்மைக் கேட்கத் தூண்டுகின்றார் யோவான்.

இ. செயல்கள் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன

இதையே நம் இன்றைய வாழ்வியல் பாடமாக எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில், Actions Express Priorities என்ற ஒரு சொல்அடை உண்டு. எடுத்துக்காட்டாக, இன்று காலை நான் தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இதுதான் என் முதன்மை என வைத்துக்கொள்வோம். ஆனால், காலையில் நான் தாமதமாக எழுகிறேன். நண்பர்களோடு நிறைய நேரம் கதை பேசுகிறேன். செய்தித்தாள் வாசிக்கிறேன். காரை எடுத்துக்கொண்டு கோயில் கோயிலாக சுற்றுகிறேன். மருத்துவமனைக்கு ஒருவரை அழைத்துச் செல்கிறேன். மதிய உணவு அருந்துகிறேன். கொஞ்ச நேரம் தூங்குகிறேன். கதைப் புத்தகம் வாசிக்கிறேன். ஆனால், நாளின் இறுதியில் நான் தபால் நிலையத்திற்குச் செல்லவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பிக்கவில்லை. நான் நாள் முழுவதும் வேறு வேறு வேலைகள் செய்தேன். தபால் நிலையம் செல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக மட்டுமே இருந்தது.

என்னுடைய இலக்குகள் என் வெறும் எண்ணங்களாக மட்டுமே இருந்தால் நான் இலக்கை அடைய முடியாது. நான் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறேன் என்றால், நான் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். எழுதவே செய்யாமல் நான் எழுத்தாளன் ஆக முடியாது. ஆக, 'எழுத்தாளன் ஆக வேண்டும்' என்ற என்னுடைய எண்ணம் 'எழுதுதல்' என்னும் செயலில் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால்தான் அது என்னுடைய முதன்மை என்பது தெளிவாகும்.

நாம் இன்று ஒரு வாரம் முழுவதும் செய்கின்ற செயல்களைப் பட்டியலிடுவோம். இன்னொரு பக்கம் நம் இலக்குகளைப் பட்டியலிடுவோம். இவை இரண்டிற்கும் பொருத்தம் இருந்தால் நாம் இலக்குகளை அடைவோம். பொருத்தம் இல்லை என்றால் நாம் இலக்குகள் வெறும் கனவுகளாகவே மறைந்துவிடும்.

திருமுழுக்கு யோவானின் செயல்கள் அவருடைய இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பாலைநிலத்தில் 'மறைந்து' வாழ்கின்றார். ஏனெனில், அது அவருடைய பணி. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, ஒட்டக மயிராடையை அணிகின்றார். அதுதான் அவருடைய எளிய வாழ்க்கை முறை. திருமுழுக்குக் கொடுக்கின்றார். அதுதான் அவருடைய பணி. தலை வெட்டுண்டு இறந்து போகின்றார். அதுதான் அவருடைய நியதி. தான் மெசியாவின் முன்னோடி எனக் கனவு காணவில்லை அவர். முன்னோடியாகச் செயல்படுகிறார்.

ஆக, செயல்கள் நம் முதன்மைகளை (priorities) வெளிப்படுத்துகின்றன.

நான் என் இல்லத்தில் கணவன்-மனைவி உறவில் இனியவராக இருக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிறேன் என வைத்துக்கொள்வோம். நான் இனிய வார்த்தைகள் பேசவும், செயல்கள் செய்யவும் வேண்டும். அப்படி இல்லாமல், 'நான் இனியவராக இருப்பேன்' என்று நினைத்தால் மட்டும் இனிய உறவு அமைந்துவிடாது.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு திருவிழாவில் நம் முதன்மைகளைச் சரிசெய்வதோடு, இலக்குகளுக்கு ஏற்றச் செயல்களைச் செய்ய முற்படுவோம்.


Monday, June 22, 2020

பன்றிகள்முன் முத்துக்கள்

இன்றைய (23 ஜூன் 2020) நற்செய்தி (7:6,12-14)

பன்றிகள்முன் முத்துக்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:

அ. பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்

ஆ. பொன்விதி

இ. குறுகிய வழி

இதில், 'அ' வை மட்டும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்'

யாராவது பன்றிகள் முன் முத்துக்களை எறிவார்களா? பன்றிகள் முன் முத்துக்களை எறியும் அளவுக்கு யாரிடமாவது முத்துக்கள் இருக்குமா?

இந்த வாக்கியத்தை நேரடிப் பொருளிலும், உருவகப் பொருளிலும் புரிந்துகொள்வோம்.

நேரடிப் பொருள்:

'தூய்மையானது எதையும் நாய்களுக்குப் போட வேண்டாம்'
'முத்துக்களை பன்றிகள்முன் எறிய வேண்டாம்'

இவ்விரண்டு வாக்கியங்களும் ஒருபோகு இணை வாக்கியங்களாக உள்ளன. அதாவது, முன்னதன் பொருளே பின்னதிலும் சொல்லப்படுகிறது. இயேசுவின் சமகாலத்தில், 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்' என அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் அழைக்கப்பட்டனர். புறவினத்தார் என்றால் யாரோ ஒருவர் என நினைக்காதீர்கள். நீங்களும் நானும் புறவினத்தார்தான். யூதர்களைத் தவிர அனைவரும் 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்.' இயேசுவும் இதே உளப்பாங்கைக் கொண்டிருந்தார். ஆகையால்தான், தன் மகளின் பேயை விரட்டுமாறு அவள் தன்னிடம் கெஞ்சியபோது, 'பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது முறையல்ல' என்கிறார். மேலும், இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் நடுவே, 'உன் தங்க மோதிரத்தை பன்றியின் மூக்கில் அணிந்துவிடாதே!' என்ற வாக்கியமும் இருந்தது. இங்கே, 'தங்க மோதிரம்' என்பது 'இறைவாக்குகளை' குறிக்கிறது. ஆக, இறைவாக்குகள் புறவினத்தாருக்கு அறிவிக்கப்படக்கூடாது என்பதைச் சொல்வதாக இந்த வாக்கியம் இருக்கிறது.

உருவகப் பொருள்:

'முத்துக்களைப் பன்றிகள்முன் எறிதல்'

என்னிடம் விலைமதிப்பு என இருக்கின்ற ஒன்றை தூய்மையற்றதன்முன் எறிவது.

'நீ எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை மற்றவர்களுக்கு இலவசமாகச் செய்யாதே!' என்றும், 'பிறர் உன்னிடம் எதையும் கேட்காமல் நீ அவர்களுக்குச் செய்தால் நீ செய்ததற்கு மதிப்பு இருக்காது, நீயும் வேலை வெட்டி இல்லாதவன் எனக் கருதப்படுவாய்!' என்றும் நான் என் வாழ்வில் உணர்ந்த ஒன்று.

நீங்க கேட்கலாம்: 'அப்படின்னா! நல்ல சமாரியன் வந்து கீழே விழுந்துகிடந்தவனுக்கு அவன் கேட்காமல்தானே உதவி செய்தான்?'

அவன் கேட்காமல்தான் உதவி செய்தான். ஆனால், அந்தச் சூழல் வேறு. அந்தச் சூழலில் ஒரு கட்டத்தில் அடிபட்டவன்கூட நலமானபின், 'நீதானடா என்னைக் காப்பாற்றினாய்! நான் இப்போது வாழ்வதற்கு ஏதாவது வழி அமைத்துக்கொடு!' என்று கூட நல்ல சமாரியனிடம் கேட்டிருக்கலாம். லூக்கா அதைப் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.

மேலும், என் மதிப்புக்குரிய நேரத்தையும் ஆற்றலையும், நான் உழைத்துப் பெற்ற பொருளையும் அதன் மதிப்பு தெரியாதவர்களிடம் அல்லது மதிப்பற்றவைகளிடம் செலவழித்தால், நான் பன்றிகள்முன் முத்துக்களை எறியத்தான் செய்கிறேன்.

பன்றிகள் என் முத்துக்களைக் காலால் மிதித்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், சில நேரங்களில், முத்துக்களான் நான் அவற்றைத் தாக்க நினைத்ததாக எண்ணி என்மேல் பாயக்கூடும். அந்த நேரத்தில் எனக்கான அழிவை நானே தேடிக்கொள்பவன் ஆவேன்.

வாழ்க்கைப் பாடங்கள் இரண்டு:

அ. எனக்கு அடுத்திருப்பவரை நான் தாழ்வாக அல்லது இழிவாகக் கருதுவது தவறு.

ஆ. என்னிடம் மதிப்புக்குரியது என நான் கருதுவதையும், மதிப்புக்குரிய என்னையும் மதிப்பற்றவற்றின்முன் எறிவதும் தவறு.

ஆங்கிலத்தில், 'டியர்' (dear) என்ற ஒரு வார்த்தை உண்டு. இதற்கு, 'அரிது' என்ற பொருளும், 'நெருக்கம்' என்ற பொருளும் உண்டு. உலகில் 'அரிதாக' இருப்பவர்கள்தாம் நமக்கு 'நெருக்கமாக' இருக்க வேண்டும். நான் 'நெருக்கமாக' இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'அரிதாக' (மதிப்புள்ளதாக) இருக்க வேண்டும்.

Sunday, June 21, 2020

துரும்பை எடுக்கட்டுமா?

இன்றைய (22 ஜூன் 2020) நற்செய்தி (மத் 7:1-5)

துரும்பை எடுக்கட்டுமா?

'கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் கல் எறியக்கூடாது' என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு.

அடுத்தவரின் குறையைச் சுட்டிக்காட்டுமுன் ஒருவர் தன்னுடைய குறையை அறிதல் அவசியம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்களுக்கு வழக்கறிஞர்களாகவும், மற்றவர்களின் குற்றங்களுக்கு நீதிபதிகளாகவும் இருக்கிறோம்' என்றும் சொல்லப்படுவதுண்டு. என்னுடைய குற்றம் என்றால் அதை நான் நியாயப்படுத்தவும், மற்றவர் குற்றம் செய்யவில்லை என்றாலும் அவருக்குத் தீர்ப்பு எழுதவும் நான் வேகமாகத் துடிக்கிறேன்.

இந்த மனப்பாங்கைத் தன்னுடைய சீடர்கள் கொண்டிருக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார் இயேசு. இன்றைய நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரின் மலைப்பொழிவுப் பகுதியில் அமைந்துள்ளது. 'தீர்ப்பு அளித்தல் - அளவையால் அளத்தல் - குறை காணுதல்' என்னும் மூன்று பகுதிகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.

தன் கண்ணில் மரக்கட்டை வைத்திருக்கும் ஒருவர் இன்னொருவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கும் நோக்கில், 'துரும்பை எடுக்கட்டுமா?' என்று கேட்டால் என்ன ஆகும்?

அ. இவருடைய கண்கள் ஏற்கனவே மரக்கட்டையால் மறைக்கப்பட்டிருப்பதால் மற்றவரின் கண்ணில் உள்ள துரும்பு தெரியாது.

ஆ. அப்படி அவர் எடுக்கும் முயற்சியில் அடுத்தவருடைய கண்களைக் காயப்படுத்துவதோடு தனக்கே தீங்கு விளைவிக்கவும் சாத்தியம் உண்டு.

இ. துரும்பு தானாகவே விழுந்துவிடும். மரக்கட்டையை எடுக்கத்தான் முயற்சி தேவை.

இயேசு இன்றைய நாளில் நம் பார்வையைச் சரி செய்ய அழைக்கின்றார்.
அகுஸ்தினார் தன்னுடைய 'ஒப்புகைகள்' நூலின் இறுதியில், தூய்மைப்படுத்துதல் பற்றிப் பேசுகின்றார். முதன்மையாக அவர் எழுதுவது, 'நம் புலன்களைத் தூய்மைப்படுத்துதல்' - குறிப்பாக, நம் பார்வையைச் சரி செய்தல். பார்வையைச் சரி செய்தல் என்பது, அடுத்தவரை இறைவனின் சாயலாகப் பார்த்தல், முற்சார்பு எண்ணங்களை அகற்றிவிட்டுப் பார்த்தல், தீர்ப்பிடும் கண்ணோட்டம் இல்லாமல் பார்த்தல். மேலும், நம்முடைய பார்வைக்கு தடையாக இருப்பது நம் தனிநபரின் பெருமை அல்லது இறுமாப்பு என்கிறார் அகுஸ்தினார்.

இன்று, எல்லார் கண்களிலும் துரும்பு அல்லது மரக்கட்டை இருக்கத்தான் செய்யும். நான் சகோதர அன்பில் அடுத்தவரைத் திருத்துகிறேன் என்றால், முதலில் என் தவற்றை நான் சரிசெய்தல் அவசியம். என் தவற்றை நான் சரிசெய்ய, 'நானும் தவறக்கூடியவன்' என்று ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சி அவசியம்.

Saturday, June 20, 2020

சிட்டுக்குருவிகளை விட

ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு

சிட்டுக்குருவிகளை விட

ழான் பால் சார்த் அவர்கள் எழுதிய 'நோ எக்ஸிட்' என்ற இருத்தியல் நாவலில் ஒரு வசனம் வரும். கதாநாயகன் தன்னுடைய காதலியைப் பற்றி, 'அவள் என்னைப் புழுவைப் போல உணரச் செய்கிறாள்' தன் நண்பனிடம் சொல்வான்.

இந்தக் கொரோனா காலத்தில் நாமும் ஏறக்குறைய புழுவைப் போல ஒருவர் மற்றவரால் கருதப்படுகிறோம். கைகொடுக்க கையை நீட்டிவிட்டு, அதைச் சட்டென இழுத்துக் கொள்வது, என் அறைக்குள் ஒருவர் வந்து சென்றவுடன் நான் அவர் கைவைத்த இடங்களை எல்லாம் துடைப்பது, மற்றவரைத் தள்ளி நிற்கச் சொல்வது, அருகில் வந்து யாராவது தும்மல் போட்டால் பதறி ஓடுவது என நிறையச் செய்கிறோம். ஆக, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் இன்று கொரோனா ஏந்தும் வாகனங்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறே நம்மையும் மற்றவர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால், இதற்கு நாம் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. நாம் வாழும் இச்சூழல் நம்மை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டது.

ஆக, நீங்களும் நானும் நம்மையே ஒரு புழுவைப் போல உணரும் இந்நாள்களில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு, நாம் புழு அல்ல என்பதை, 'நாம் சிட்டுக்குருவிகள் அல்ல' என்ற உருவகம் வழியாக எடுத்துச் சொல்கிறது.

இதைப் புரிந்துகொள்ளுமுன் மனித வாழ்க்கையின் நிலையை விவிலியம் சொல்லக் கேட்போம். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், மனிதரின் பரிதாபத்துற்குரிய நிலையைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்: 'மேன்மைமிகு அரியணையில் அமர்ந்திருப்போர் முதல் புழுதியிலும் சாம்பலிலும் உழலத் தாழ்த்தப்பட்டோர் வரை ... எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவுபற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு ... எல்லாருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சாவு, படுகொலை, சண்டை, வாள், பேரிடர், பஞ்சம், அழிவு, நோவு ஆகியவை உண்டு' (காண். சீஞா 40:3-4,8-9). இதுதான் மானுடத்தின் நிலை. இதை மாற்ற முடியாது. இதை நாம் மாற்றிவிட்டதாக இறுமாந்திருக்க முடியாது.

ஆக, நாம் எல்லாருமே சிட்டுக்குருவிகள் போல, புழு போல உணரலாம்.

'ஓ பாசிட்டிவ்' இரத்த வகையினரைக் கொரோனா தீண்டாது என்றும், பெண்களைவிட ஆண்களைத்தான் கொரோனா தாக்குகிறது என்றும் சொன்னாலும், கொரோனா பற்றிய அச்சம் அனைவருக்கும் பொதுச்சொத்தாகவே இருக்கிறது.

'அச்சம்' அல்லது 'பயம்' - இது ஒரு கொடூரமான உணர்வு. உளவியலில், 'கோபம், பயம், தாழ்வு மனப்பான்மை, மற்றும் குற்றவுணர்வு' என்று நான்கு எதிர்மறை உணர்வுகளைக் குறிப்பிடுகிறார்கள். இந்த நான்கு உணர்வுகளில் மையமாக அல்லது அடிப்படையாக இருப்பது பயம். பயத்திற்கும் மற்ற மூன்று உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது: எனக்கு இன்னொருவர் மேல் இருக்கிற பயம் அவர்மேல் கோபமாக வெளிப்படுகிறது, என்னை நான் முழுமையற்றவனாகக் கருதி பயம் கொள்வதால் தாழ்வு மனப்பான்மை பிறக்கிறது, மற்றும் நான் செய்த தவற்றின் விளைவு பற்றிப் பயப்படுவதால் குற்றவுணர்வு வருகிறது.

ஆனால், பயம் என்பது எதிர்மறை உணர்வு என்று சொல்லி நாம் ஒதுக்கிவைக்க முடியாது. பயத்திற்கு நேர்முகமான பண்புகளும் இருக்கின்றன. தேர்வைக் கண்டு பயப்படுகின்ற மாணவன் கடினமாக உழைக்கிறான். தன் குடும்பத்தின் எதிர்காலம் பற்றி அச்சப்படுகின்ற குடும்பத் தலைவர் தேவையான சேமிப்பை மேற்கொள்கிறார். கொரோனா பற்றிய பயத்தால் நாம் நிறைய சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். மறுவாழ்வு பற்றிய பயம் இருப்பதால்தான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு வாழ்கிறோம். இப்படியாக பயத்தினால் நிறைய நல்விளைவுகளும் ஏற்படுவது உண்டு.

இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பயம் தவிர்த்தல் அல்லது அச்சத்தை மேற்கொள்தல் வலியுறுத்தப்படுகிறது. இணைச்சட்ட நூலில் போர்கள் பற்றி அறிவுரை வழங்குகின்ற மோசே, 'உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப் போல ஊக்கம் இழந்து விடுவான்' (காண். இச 20:8) என்று கூறுகின்றார்.

நம்பிக்கையின் மிகப் பெரிய எதிரி பயம். பயத்தைப் போக்குவதற்கான மிக நல்ல மருந்து நம்பிக்கை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 20:10-13), எரேமியாவின் ஒப்புகை அல்லது முறையீட்டின் இரண்டாவது பகுதியை வாசிக்கின்றோம். இது ஓர் இறைவேண்டல் போலவும், அருட்புலம்பல் போலவும் இருக்கிறது: 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்துபோனேன் ... என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள் ... அவனைப் பழிதீர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.' 'சுற்றிலும் ஒரே திகில்' என்னும் சொல்லாடல், ஆண்டவர் பஸ்கூர் என்ற குருவுக்குக் கொடுத்த பெயர். இவர் கோவில் காவலர்களின் தலைவர். இவர் எரேமியாவைப் பிடித்துச் சிறையில் அடைக்கின்றார். ஏன்? எரேமியா எருசலேம் நகர் அழிந்துவிடும் என்றும், நெபுகத்னேசர் அரசர் தலைமையில் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அதைச் சாம்பலாக்குவார்கள் என்றும் இறைவாக்குரைக்கின்றார். அப்படி அவர் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. தொடர்ந்து, எருசலேமின் அழிவுக்குக் காரணம் அதன் தலைவர்களும், அவர்களின் சிலைவழிபாடும் கீழ்ப்படியாமையும்தான் என்று சொல்கின்றார். இதனால் அவர் நாட்டின் அமைதியைக் குலைக்கிறார் என்று மக்கள் சொல்ல, அவர் சிறையில் அடைக்கப்படுகின்றார். பஸ்கூர் என்னும் குரு இவரைச் சிறையில் அடைத்ததால், அந்தப் பெயரைச் சொல்லியே, 'சுற்றிலும் ஒரே திகில்' என்று சொல்லியே மக்கள் இவரை ஏளனம் செய்கின்றனர். ஆக, இவரைப் பயம் ஆட்கொள்கிறது.

எரேமியா மூன்று காரணங்களுக்காக பயம் கொள்கின்றார்:

(அ) அவருடைய சொந்த ஊராரும், நண்பர்களும் அவருடைய சொற்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆக, உச்சக்கட்ட புறக்கணிப்பை உணர்கின்றார்.

(ஆ) தான் இறைவாக்குரைப்பது நடக்காமல் போனால் என்ன ஆகும்? என்று கடவுள்மேல் உள்ள நம்பிக்கையிலும் தளர்கிறார். ஏனெனில், பல நேரங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது. கடவுள் ஒரு நகரைத் தண்டிப்பதாகச் சொல்லி இறைவாக்கினர்களை அனுப்புவார். பின் அதைத் தண்டியாமல் விடுவார். அவர் நல்ல பெயர் எடுத்துக்கொள்வார். அவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு சென்ற இறைவாக்கினர் கொல்லப்படுவர் அல்லது விரக்திக்கு உள்ளாவர்.

(இ) உள்ளச் சோர்வு. தான் செய்கின்ற வேலைக்கான பயனை உடனே காண இயலாதபோது சோர்வு வருகிறது. இதை அருள்பணியாளர்கள் வாழ்வில் காணலாம். ஒரு கணவனும் மனைவியும் திருமணம் முடித்தவுடன் அவர்களின் அன்பின் கனி ஒரு வருடத்தில் குழந்தையாக மலர்கிறது. ஆனால், ஓர் அருள்பணியாளர் ஒரு பங்குத்தளத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தாலும், அவர் செய்த வேலையின் பயனை அவர் காண இயலாது, அல்லது அதைக் காணுமுன் அவர் மாற்றலாகிச் செல்வார். சில நேரங்களில் இறந்தும் போவார். இக்காரணத்தால் அருள்பணியாளர்களுக்கு இயல்பாகச் சோர்வு வருவதுண்டு. எரேமியாவும் அப்படிப்பட்ட சோர்வைத்தான் உணர்கின்றார்.

எரேமியாவின் பயம் எப்படி மறைகின்றது?

அவருடைய நம்பிக்கையால். எப்படி?

'ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என்று நம்பிக்கை கொள்கின்றார் எரேமியா. ஆண்டவரின் உடனிருப்பு எரேமியாவுக்கு நம்பிக்கை கொடுக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 10:26-33), இயேசுவின் மறைத்தூதுப் பணி அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம். தன்னுடைய சீடர்களைப் பணிக்கு அனுப்புகின்ற இயேசு, அவர்கள் சந்திக்கப் போகும் தீமைகள் குறித்து எச்சரிக்கின்றார். தான் எதிர்கொள்ளும் சிலுவையைத் தன் சீடர்களும் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார்:

'காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? ... எனவே அஞ்சாதிருங்கள்!'

இயேசுவின் சமகாலத்தில் இருந்த ஒரு பறவை சிட்டுக்குருவி. செல்ஃபோன் கோபுரங்கள் வந்த நாள் முதல் சிட்டுக்குருவிகள் மறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகளைக் கொல்வதற்கு அம்புகளும் குச்சிகளும் தேவையில்லை. கண்ணுக்குத் தெரியாத வான் அலை கூட அதைக் கொன்றுவிடும். அந்த அளவிற்கு வலுவற்றவைகள். அதாவது, அவை தம்மிலே வலுவானவை என்றாலும், வலுவற்ற ஒன்றின்முன் அவை விரைவாக வலுவிழந்துவிடுகின்றன. சீடர்களின் நிலையும் அப்படிப்பட்டதே. அவர்கள் தம்மிலே நிறைய ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டிருந்தாலும் எதிரிகள்முன் அவர்கள் வலுவற்றவர்களே.

இந்த உருவகத்தின் பொருள் என்ன?

(அ) கொசுறுக் குருவி

நாம் காய்கறிக் கடையில் கொசுறு கேட்பது உண்டு. நிறையக் காய்கறிகளுக்கு கறிவேப்பிலை கொசுறுவாகக் கொடுப்பது உண்டு. நகைக்கடையில் நாம் வாங்கும் நகைக்கு பை கொசுறு. துணிக்கடையில் கட்டைப் பை கொசுறு. கொசுறு அல்லது இலவசமாக வருவதை நாம் கண்டுகொள்வது கிடையாது. நாம் விலைகொடுத்த வாங்கிய தக்காளியில் புழு இருந்தால் முகம் வாடும் நாம், கறிவேப்பிலை வாடி இருந்தால் ஒன்றும் சொல்வது கிடையாது. லூக்கா நற்செய்தியில் இயேசு, 'இரண்டு காசுகளுக்கு ஐந்து குருவிகள்' (காண். லூக் 12:6) என்கிறார். இங்கே, 'காசுக்கு இரண்டு குருவிகள்' என்கிறார். காசுக்கு இரண்டு குருவிகள் என்றால், இரண்டு காசுக்கு நான்கு குருவிகள்தானே. இந்த ஐந்தாவது குருவிதான் கொசுறுக் குருவி. இலவசமாக வந்த குருவியைப் பராமரிக்கின்றார் கடவுள்.

(ஆ) ஆய்வுக் குருவி

சந்தையில் குருவிகள் வாங்க வருவோர், குருவிகளின் தரத்தைச் சோதிப்பது உண்டு. அப்படிச் சோதிப்பதற்காக, ஒரு குருவியைப் பறக்க விடுவர். சில நேரங்களில் அது பறக்கும். அல்லது குஞ்சாக இருந்தால் அது தரையில் விழும். தரையில் விழும் குருவிகூட 'தந்தையின் விருப்பம் இன்றி தரையில் விழாது' என்கிறார் இயேசு. ஆக, நாம் ஆய்வுக் குருவியாக இருந்தாலும் அச்சப்படத் தேவையில்லை.

(இ) எடுப்பார் கைப்பிள்ளை

நம் இல்லங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் சில நேரங்களில் தங்களின் கோபத்தை அவற்றின்மேல் காட்டுவார்கள். ஊரெல்லாம் சுற்றி வரும் கிளியைப் பிடித்து வளர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, நாம் கோபம் கொள்ளும் நாட்களில் அதற்கு உணவளிக்க மறுக்கும்போது, அக்கிளி எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிடுகிறது.

இயேசு தன்னுடைய சீடர்கள் இந்த மூன்று நிலைகளிலும் அச்சத்தை உணரலாம் என்று அவர்களை எச்சரிக்கின்றார்: அவர்கள் மற்றவர்களின் பார்வையில் இலவசங்களாகவும், ஆய்வுப் பொருள்களாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் தெரிவார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாவார்கள். இந்த அச்சத்தைக் களைகின்றார் இயேசு.

'சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்' என்கிறார்.

ஆக, நான் என்னுடைய இயல்பை விட நான் என்னையே பெரிதாக்கிப் பார்த்தால் இறுமாப்பு கொள்கிறேன், சிறியதாக்கிப் பார்த்தால் அச்சம் கொள்கிறேன். இறுமாப்பும் அச்சமும் ஆபத்தானவை.

நான் என் இயல்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அங்கே அச்சத்திற்கு இடமில்லை.

ஆக, சீடர்கள் தங்களுடைய பணிவாழ்வில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அச்சம் கொள்ளும் சீடர்கள் கடவுளின் பராமரிப்பை உணர்ந்தால் அவர்களின் அச்சம் மறைந்துவிடும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-15) பவுல் தன்னுடைய திருமடலில், நம்பிக்கை என்ற கருதுகோளிலிருந்து எதிர்நோக்கு என்ற கருதுகோளுக்குச் செல்கின்றார். 'குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு' என்று எழுதுகின்றார். 'குற்றம்' என்பது ஆதாமை மையப்படுத்தியதாகவும், 'அருள்கொடை' என்பது கிறிஸ்துவை மையப்படுத்தியதாகவும் இருக்கிறது. 'குற்றம்' என்பதில் உள்ள பயம், 'அருள்கொடை' என்பதில் அது மறைகிறது.

இறுதியாக,

முதல் வாசகத்தில், தன்னைச் சிட்டுக்குருவி போல உணர்ந்தவர், ஆண்டவரைத் தன்னுடன் நிற்கும் வலிமை மிகுந்த வீரராகப் பார்த்து பயம் களைகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், பணியில் தாங்கள் சந்திக்கும் சவால்களால் தங்களைச் சிட்டுக்குருவிகள் போல உணர்ந்தவர்கள், கடவுளின் பராமரிப்பை உணர்ந்தவர்களாக அச்சம் தவிர்க்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், நம் அச்சம் அகன்றுபோகும் என்ற எதிர்நோக்கைத் தருகின்றார்.

கொரோனா காலத்தில் நாம் அனைவரும் சிட்டுக்குருவிகள்போலக் கையறுநிலையில் இருக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத செல்ஃபோன் அலைகள் சிட்டுக்குருவிகளைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வதுபோல, இந்தக் கிருமி நம்மைக் கொல்கின்றது.

ஆனால், நாம் நினைவில் கொள்வோம்: 'சிட்டுக்குருவிகளைவிட நாம் மேலானவர்கள்.' ஏனெனில், திருப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல, 'கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!' (காண். திபா 69:32).

Friday, June 19, 2020

மரியாளின் மாசற்ற இதயம்

இன்றைய (20 ஜூன் 2020) திருநாள்

மரியாளின் மாசற்ற இதயம்

இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் மரியாளின் மாசற்ற இதய நினைவு கொண்டாடப்படுகிறது. காலையில் உணவறையில், 'அப்படியே சூசையப்பரின் இதயத்திற்கும் நினைவு கொண்டாடி இருந்தால் நலமாக இருக்குமே!' என்றேன். அப்போது இன்னொரு அருள்பணியாளர், 'ஆமாம்! சரிதானே! சூசையப்பருக்கும் இதயம் இருந்ததுதானே!' என்று உதவிக்கு வந்தார். இன்னொருவர், 'ஆம்! இருந்ததுதான்! ஆனால் அது மாசற்று இருந்ததா?' என்று கேள்வி கேட்டார்.

கொரோனா காலத்தில் சும்மா இருப்பதால்தான் இத்தனை கேள்விகள்.

ஆனாலும், வளனாருக்கும் விழா எடுத்திருக்கலாம்.

எதற்காக மரியாளின் இதயத்திற்கு விழா கொண்டாடப்படுகிறது? என்று யோசித்து தேடுபொறியில் தேடியபோது, இந்த விழாவிற்கான அடிப்படையாக லூக் 2:19 குறிப்பிடப்பட்டிருந்தது: 'மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார்.' இங்கே கூறப்படுகின்ற 'உள்ளம்' என்பது இதயம் என்றும், மரியாளின் 'அமல உற்பவம்' அவருடைய 'மாசற்ற' என்றும் மாறியிருக்கிறது.

மரியாள் கூட உள்ளத்தில் பட்டதை அவ்வப்போது பேசினார். ஆனால், பாவம் வளன்! பேசாமலேயே அனைத்தையும் மனத்தில் வைத்துக் கொண்டு மறைந்து போனார்.

நிற்க.

மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவாக மட்டுமே திருச்சபை கொண்டாடுகிறது. சில இடங்களில் இதற்கு விழா அல்லது பெருவிழாவும் எடுக்கப்படுகிறது.

மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம்.

வானதூதரின் வார்த்தை கேட்டு, 'இது எத்தகையதோ?' என்று வியப்பில் கலங்குகிறது இதயம்.

'இது எங்ஙனம் ஆகும்?' என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம்.

'எலிசபெத்துக்கு குழந்தையா?' என்று துள்ளிக் குதித்து உதவ ஓடுகிறது இதயம்.

'சத்திரத்தில் இடமில்லையா?' - பயம் கொள்கிறது இதயம்.

'வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?' - வியப்பு கொள்கிறது இதயம்.

'பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!' - ஆச்சர்யம் கொள்கிறது இதயம்.
'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?' - மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம்.

'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!' - ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம்.

'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!' - இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம்.

'இதோ! உம் மகன்!' - மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம்.

'மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?' - மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.

இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.

காயம்படுவதற்கும், குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.

Thursday, June 18, 2020

இயேசுவின் இதயம்

இன்றைய (19 ஜூன் 2020) திருவிழா

இயேசுவின் இதயம்

இன்றைய நாளில் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

ஒரு கேள்வி:

'நீங்க கடைசியா உங்க இதயத்தை என்றைக்கு நினைத்துப் பார்த்தீர்கள்?'

'இதயம்' என்பது இங்கே 'அன்பு செய்பவர்' அல்லது 'காதலி' அல்லது 'காதலன்' அல்லது 'நண்பர்' என்னும் உருவகப் பொருளில் அல்ல. மாறாக, நேரடிப் பொருளில் கையாளப்பட்டுள்ளது.

நாம் என்னைக்காவது நம் இதயத்தை நினைச்சுப் பார்க்கிறோமா?

மிக மிக அரிது என்றே நினைக்கிறேன். ஆனால், அந்த ஓர் உறுப்பு இல்லை என்றால் உயிர் இல்லை என்றாகிவிடுகிறது.

இயேசுவின் இறுதிநாள்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் என்னை எப்போதும் ஈர்ப்பதுண்டு:

ஒன்று, தன்னுடைய நினைவாக இயேசு நற்கருணையை ஏற்படுத்துகின்றார். அந்த நற்கருணையை உணவில் ஏற்படுத்துகின்றார். இந்தக் கலரில் அல்லது இந்த இடத்தில் அல்லது இந்த செய்முறையில் அல்லது இந்த அடையாளத்தில் என அல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவை முன்னிறுத்தி நற்கருணையை ஏற்படுத்துகின்றார்.

இரண்டு, சிலுவையில் அவர் தொங்கியபோது, தன்னுடைய இறுதிச் சொட்டு இரத்தத்தையும் தண்ணீரையும் நமக்காக விட்டுச் சென்று, நம்மேல் அவர் கொண்ட இறுதிவரை அன்பை உறுதி செய்கின்றார்.

யோவான் நற்செய்தியாளர் மட்டுமே இந்நிகழ்வைப் பதிவு செய்கின்றார்:

'படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.' (காண். யோவா 19:34)

இரத்தமும் தண்ணீரும் பற்றி நிறைய விளக்கம் தரப்படுவதுண்டு.

இயேசுவின் இதயம் இறுதியில் திறக்கப்பட்டபோது அங்கிருந்த இரத்தமும் தண்ணீரும் வெளியேறியதால் என்ன ஆயிற்று?

கடவுளின் இதயம் வெறுமை ஆயிற்று. ஆகவே, அங்கே உங்களுக்கும் எனக்கும் இடம் இருக்கிறது.

மீட்பரின் திறந்த இதயத்தை நாம் காணும் போதெல்லாம் அதை நோக்கி இழுக்கப்படுகின்றோம். ஏனெனில், நம் இறுதி இலக்கு அதுவே.

புனித அகுஸ்தினார் குறிப்பிடுவதுபோல, 'நாங்கள் செய்கின்ற அன்பு எல்லாமே உம்மை அன்பு செய்வதற்காகவே. நாங்கள் மேற்கொள்ளும் எல்லாப் பயணங்களுமே உம்மை வந்தடைவதற்கே. உம்மில் அமைதியைக் காணும் வரை அமைதியற்ற எங்கள் இதயங்கள் அமைதியைக் காண்பதில்லை.'

இயேசுவின் திருஇருதயத் திருநாள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் இதுதான்:

அவருடைய இதயத்தை நோக்கி நான் செல்ல வேண்டும். என் இதயமும் அவருடைய இதயம் போல வெறுமையாக்கப்பட்டு இறைவனுக்காகவும் மற்றவர்களுக்காகவும் திறக்கப்பட வேண்டும்.

Wednesday, June 17, 2020

தந்தையின் உள்ளம்

இன்றைய (18 ஜூன் 2020) முதல் வாசகம் (சீஞா 48:1-15)

தந்தையின் உள்ளம்

நாம் கடந்த சில நாள்களாக வாசித்து வந்த எலியா நிகழ்வுகள் முடிவுற்ற வேளையில், இன்றைய முதல் வாசகத்தில், எலியாவுக்கு சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் செலுத்தும் புகழாஞ்சலியை வாசிக்கின்றோம். அவருடைய கவிதைக் கதம்பத்தில் ஒரு வாக்கியம் என்னை ஈர்க்கிறது:

'தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கு' ... 'நீர் இஸ்ரயேலின் குலங்களைக் கடிந்துகொள்வீர்'

'தந்தையின் உள்ளம் மகன் நோக்கி'

இதே சொல்லாடலை நாம் மலாக்கி 4:6 மற்றும் லூக் 1:17இல் வாசிக்கின்றோம்.

தந்தையின் உள்ளம் எப்போதும் மகன் நோக்கித்தானே இருக்கும்? தன் மகனை மறக்கின்ற தந்தை யாராவது உண்டா? இந்தச் சொல்லாடலின் பொருள் என்ன?

முதலில், இதன் இறையியல் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

விவிலியத்தில் 'ஊழ்வினை' என்பது உண்டு. சிலப்பதிகாரத்திலும், 'ஊழ்வினை உகுத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வள்ளுவர் 'ஊழ்' என்பதற்கென ஒரு அதிகாரமே வைத்துள்ளார். அதாவது, தந்தை செய்கின்ற செயல் மகனைப் பாதிக்குமா, பாதிக்காதா? என்பதுதான் ஊழ்வினையின் கேள்வி. விவிலியம் இதை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்கிறது: ஒன்று, தந்தையின் குற்றத்திற்காக கடவுள் மகனைத் தண்டிக்கிறார். எடுத்துக்காட்டாக, தாவீது பத்சேபாவுடன் பாவம் செய்து பிறந்த குழந்தை இறந்து போகிறது. ஆனால், தவறு செய்த தாவீது உயிர் வாழ்கிறார். இரண்டு, ஒருவர் ஈச்சம் பழம் சாப்பிட்டால் இன்னொருவருக்கா பல் புளிக்கும் என்று கேட்கின்ற எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாகப் பேசுகின்ற கடவுள், அவரவருடைய பாவங்களுக்கான தண்டனை அவரவருக்கே என்கின்றார்.

ஆக, தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவது என்பது, எலியா நிகழ்வின் பின்புலத்தில், ஒருவர் தன்னுடைய மகனையும் மனத்தில் கொண்டு தன் வாழ்வை நன்முறையில் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. என் பாவம் என்னுடன் போனால் பரவாயில்லை. ஆனால், அது என் மகனையும் பாதிக்கும் என்றால், நான் இன்னும் அதிகக் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இதை மிக சாதாரண உலகியல் உறவு அடிப்படையில் புரிந்துகொள்வோம்.

ஒரு தந்தை தன் மகனுக்கு மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும் அல்லது செய்கிறார்:

அ. தான்மை அல்லது அடையாளம்

'நான் யார்?' என்ற என் அடையாளத்தையும், என் தான்மையையும் கொடுப்பவர் என் தந்தையே. தந்தை தன்னுடைய பெயரை மட்டும் எனக்குத் தருவதில்லை. மாறாக, நான் கொண்டிருக்கும் விழுமியங்கள், மதிப்பீடுகள், மற்றும் பண்புகள் அனைத்தும் அவரிடமிருந்தே வருகின்றன.

ஆ. வாக்குறுதி

தந்தை தன் மகனுக்கு தன்னுடைய உடனிருப்பை வாக்குறுதியாக அளிக்கின்றார். 'எந்த நேரத்திலும் நான் உன்னுடன் இருக்கிறேன்' என்ற உறுதியைத் தருகின்றார். மேலும், மகன் செய்வது அனைத்தையும் தந்தை ஏற்றுக்கொள்கின்றார். நேர்முகமான காரியங்களைப் பாராட்டி மகிழ்கின்றார்.

இ. தொடுதல்

தந்தை தன் மகனைத் தன்னுடைய உடல் மற்றும் உணர்வுகளால் தொடுகின்றார். இத்தொடுதலே மகனுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

ஆக, இரண்டாவது நிலையில், எலியா ஒவ்வொரு தந்தையையும் பொறுப்புடன் வாழ அழைக்கின்றார்.

இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்:

மகன் அல்லது மகள் என்பவர் தந்தை மற்றும் தாயின் நீட்சி. நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். பெற்றோர்கள் என்னும் மரங்கள் நன்மரங்கள் என்றால் பிள்ளைகள் நற்கனிகளே. நாம் எத்தகைய மரங்களாய் இருக்கிறோம்? எத்தகைய கனிகளைக் கொடுக்கிறோம்?

Tuesday, June 16, 2020

கடவுள் எங்கே?

இன்றைய (17 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 2:1,6-14)

கடவுள் எங்கே?

'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்ற கேள்வி நம்மில் பல நேரங்களில் எழுவதுண்டு. இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், நம் தேடல் பெரும்பாலும், 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று அவரைத் தேடுவதில் அல்ல. மாறாக, 'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலில்தான் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவின் பணி முடிந்து, எலிசாவின் பணி தொடங்குகிறது. நிகழ்வில் எலியா உயிருடன் தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். அந்த நேரத்தில், தனக்கு இரண்டு மடங்கு ஆவி வேண்டும் என எலியாவிடம் கேட்கின்றார். எலியாவைப் பார்த்துக்கொண்டே இருந்தால் அது நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலிருந்து கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்துத் தன்னுடன் வைத்துக்கொள்கின்றார் எலியா.

தன்னிடம் உள்ள ஆற்றலைச் சோதிப்பதற்காக, அல்லது தன் அருகில் இருக்கின்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரின் முன் தன் ஆற்றலை அறிவிப்பதற்காக, அவர் இவ்வாறு செய்கின்றார்.

எலியா தன்னுடைய மேலாடையை அடித்துபோது யோர்தான் ஆற்றின் தண்ணீர் இரண்டாகப் பிரிகிறது. இப்போது எலிசா அடிக்கும்போதும் அவ்வாறே நடக்கிறது.

ஆண்டவரின் ஆவி இவ்வாறாக காணக்கூடிய ஓர் அடையாளத்தை நிகழ்த்திக் காட்டுகின்றார்.

இதற்கு மாறாக,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் - இறைவேண்டல், இரக்கச் செயல்கள், நோன்பிருத்தல் - மறைவாகச் செய்யுமாறு கற்பிக்கின்றார். இங்கே காண்பவர் இறைவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலை விட, 'நீர் என்னோடு இருப்பதால்' என்ற நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையில் மறைவாய் உள்ள இறைவனிடம் நாம் உரையாடவும் உறவாடவும் முடியும். அந்த நம்பிக்கைப் பயணம் சில நேரங்களில் எளிதானது அல்ல.

Monday, June 15, 2020

உன்னையே விற்றுவிட்டாய்

இன்றைய (16 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 21:17-29)

உன்னையே விற்றுவிட்டாய்

நேற்றைய முதல் வாசகத்தில் நடந்த நிகழ்வின் தொடர்ச்சியை இன்று வாசிக்கின்றோம். நாபோது இறந்துவிட்ட செய்தி கேட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள ஆகாபு புறப்பட்டுச் செல்கின்றார். அவரைச் சந்திக்க எதிரில் வருகின்றார் இறைவாக்கினர் எலியா.

இந்த வாசகத்தில் இரண்டு, மூன்று பாடப் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, 'நீ அவனிடம் சொல்ல வேண்டியது' என்று ஆண்டவர் எலியாவுக்கு இரண்டு முறை சொல்கின்றார் (காண். 21:19). ஆண்டவர் எதைத்தான் சொன்னார்? இரண்டையும் சொன்னார் என்றால், ஏன் அவர் தொடர்ச்சியாகச் சொல்லவில்லை. இரண்டு, ஆகாபு அரசன் தண்டிக்கப்படுவது அவன் மறைமுகமாகச் செய்த இக்கொலைக்காகவா அல்லது அவன் இஸ்ரயேல் மக்களை சிலைவழிபாட்டுக்குத் தூண்டி எழுப்பியதாலா? மூன்று, ஆண்டவர் நிகழ்வின் இறுதியில் ஆகாபை மன்னிக்கின்றார். ஆனால், நூலின் இறுதியில் ஆகாபின் இரத்தத்தை நாய்கள் நக்குகின்றன.

இப்படிப்பட்ட முரண்களை வாசிக்கும்போதெல்லாம் நாம் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். அரசரைப் பற்றிய எந்தப் பதிவுகளையும் நாம் இருப்பதுபோல அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசவைக் கவிஞர்கள் அல்லது அரசர்கள் தங்களுடைய அரசனை ஏற்றிப் போற்றி எழுதுவது மரபு. எடுத்துக்காட்டாக, சாலமோன் ஞானத்திற்காக மன்றாடுகின்றார். ஆனால், அவருடைய வாழ்வின் இறுதியில் மிகவும் மதிகேடான செயல் செய்து இறந்து போகின்றார். சாலமோன் ஞானத்திற்காக மன்றாடியிருப்பாரா? தெரியாது? அவருடைய அரசவை ஆசிரியர் ஒருவர், சாலமோனிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக எழுதியிருக்கலாம். மேலும், பல ஞான ஆசிரியர்கள் தங்கள் எழுத்துக்களை சாலமோனின் எழுத்துக்களாக வார்த்தளித்திருக்கலாம். இங்கேயும், ஆகாபு அரசன் இழிவான இறப்பை எதிர்கொண்டாலும், தொட்டும் தொடாமலும் எழுதுகின்றனர் ஆசிரியர்கள்.

நாபோத்திடம் திராட்சைத் தோட்டம் இருந்தது உண்மை. அதை ஈசபேல் தட்டிப் பறித்தது உண்மை. அதற்கு மறைமுகமான தூண்டுதலாக ஆகாபு இருந்தது உண்மை. எலியா இறைவாக்குரைத்ததும் உண்மை. ஆனால், ஆகாபை கடவுள் மன்னித்தாரா? அல்லது தண்டித்தாரா? என்பது உறுதியாக இல்லை.

இன்றைய வாசகத்தில் உள்ள மூன்று சொல்லாடல்களை நாம் சிந்திப்போம்:

அ. 'என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?'

எலியா ஆண்டவரின் வாக்கைத் தனக்கு உரைத்தபோது, ஆகாபு, 'என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?' எனக் கேட்கின்றார். ஆண்டவரின் கண்கள் ஆயிரம் சூரியன்களுக்கு ஒப்பானவை என்றும், அவற்றுக்கு மறைவானது எதுவும் இல்லை எனவும் சொல்கின்றன ஞானநூல்கள். ஆக, நாம் செய்கிற செயல்கள் அனைத்தையும் இறைவன் காண்கின்றார். குறிப்பாக, வறியவர்களுக்கு துன்பம் இழைக்கப்படும்போது ஆண்டவர் அவர்கள் சார்பாக செயலாற்றுகிறார். ஆனால், நாபோத்து உயிரோடு இருக்கும்போது தன்னை நோக்கி அவர் அழைத்தபோது, அவரைக் காப்பாற்ற வராத கடவுள், இப்போது அந்த நிகழ்வைக் கண்டுபிடித்து தண்டனை கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன?

ஆ. 'உன்னையே விற்றுவிட்டாய்'

பாவம் செய்தல் என்பதை 'விற்றுவிடுதல்' என்ற சொல்லாடல் வழியாக பல நிகழ்வுகளில் பதிவு செய்கிறது முதல் ஏற்பாடு. பாவம் செய்யும்போது நான் என்னுடைய தான்மையை, அறிவை, சுதந்திரத்தை என்னுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் விற்றுவிடுகிறேன். எடுத்துக்காட்டாக, நான் கோபத்தில் யாரையாவது அடித்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், நான் அந்தக் கோபத்தின் அடிமையாக என்னை விற்றுவிடுகிறேன். ஆனால், நாம் எந்த உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், நபர்களுக்கும், கருத்தியல்களுக்கும் நம்மை விற்றல் ஆகாது.

இ. 'நாய்கள் நக்கும்'

இது ஒரு பக்கம் தண்டனையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதுதான் வாழ்வின் எதார்த்த நிலை. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைப் பறித்த ஆகாபு, அதில் காய்கறி போடப் போவதாகச் சொன்னார். அவர் காய்கறி போட்டாரா, போடவில்லையா, எவ்வளவு விளைச்சல் கிடைத்தது, கிடைக்கவில்லை என்று எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகாபு இறந்தபோது அவர் பறித்துக்கொண்ட தோட்டம் அவரைக் காப்பாற்றவில்லை. அவர் அடைத்த வேலிகள் நாய்களைத் தள்ளி வைக்கவில்லை. இறப்பின் முன், நாய்களின் முன் ஆகாபு கையறுநிலையில் கிடக்கின்றார். தான் பறித்துக்கொண்டு அதே நிலத்தில் தன் இரத்தத்தைச் சிந்துகின்றார். இதையே பட்டினத்தார், 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்கிறார். காதறுந்த ஊசி கூட கடைசியில் உடன் வராதபோது, தோட்டத்தைப் பறிப்பதும், தோட்ட உரிமையாளரைக் கொல்வதும் ஏன்?

Sunday, June 14, 2020

மூதாதையர் சொத்து


இன்றைய (15 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 21:1-16)

மூதாதையர் சொத்து

நான் உரோமையிலிருந்து நார்வே நாட்டிலுள்ள பெர்கனுக்கு உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஈழத் தமிழர்களின் நிறைய இல்லங்களைச் சந்தித்தேன். தங்கள் இல்லங்களை விட்டு அவர்கள் இன்று வெளியே இருந்தாலும், வெளிநாட்டில் நல்ல நிலையில் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். அப்படி நான் சென்ற இல்லங்களில் உள்ள ஒருவரிடம், 'அண்ணன்! நீங்கள் சொந்த நாட்டில் இருந்தால்கூட இந்த நிலையில் இருந்திருக்க முடியாதல்லவா! முதன்மையான மருத்துவம், கல்வி, இல்லம் உங்களுக்குக் கிடைத்திருக்காதல்லவா! அப்படி இருக்க நீங்கள் ஏன் உங்கள் சொந்த நாடு திரும்ப வேண்டும் என ஆவல் கொள்கிறீர்கள்?' எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தந்தது: 'இங்கு எல்லாம் இருந்தாலும் இது என் மண் அல்ல. அங்கு எனக்கு எதுவும் இல்லை என்றாலும் அது என் மண்' என்றார்.

நாம் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டோம் என்பது நிறைய வகையில் உண்மை என்றே நினைக்கிறேன். ஏனெனில், நாம் பிறந்த மண்தான் நம் எல்லாமாக இருக்கிறது. நம் மண்ணில் விளையாத எதுவும் நம் உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை. நம் மணத்தின் வாசம் நமக்கு இனிமையாக இருக்கிறது.

வெளியூர்களில் திருமணம் முடித்துச் சென்ற எங்க ஊர் அக்காமார்கள் திருவிழா மற்றும் சுப நிகழ்வுகளுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம், வெறும் தரையில் அப்படியே வீட்டிற்குள் படுத்திருப்பார்கள். எத்தனை மெத்தையில் எங்கெல்லாம் தூங்கினாலும் சொந்த மண்ணில் தூங்குவதுபோல வராது என்பார்கள். மேலும், நாம் வாழும் இந்த உலகில் நமக்கு என்று கொஞ்சம் மண்ணையாவது (நிலத்தையாவது) உரிமையாக்கிக் கொள்ள நினைக்கிறோம். நம் மண் அல்லது இடத்தில் வேறு யாராவது நுழைந்தால் அந்த அத்துமீறலை எதிர்க்கிறோம்.

ஆனாலும், அதிகாரம், பணம், ஆள்பலத்தால் இன்று நிலம் அத்துமீறல் செய்யப்படுகிறது. இந்த அத்துமீறலில் அநீதியாக அதிகாரமற்றவர்கள் இரத்தம் சிந்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் மூன்று அத்துமீறல்கள் நடக்கின்றன:

அ. அதிகார அத்துமீறல்

ஆகாபு ஓர் அரசன். அவனுடைய அரண்மனைக்கு அருகில் நாபோத்து என்பவரின் திராட்சைத் தோட்டம் இருக்கிறது. 'அதை எனக்குக் கொடு. நான் அதில் காய்கறி போட வேண்டும்' என அரசன் கேட்கிறார். ஆனால், அரசனையும் எதிர்க்கிறார் நாபோத்து. தன் மூதாதையரின் சொத்து தன்னைவிட்டுப் போய்விடக் கூடாது என இறைவனிடம் மன்றாடுகின்றார். ஏமாற்றத்தில் அரசன் முகவாட்டமாய் இருக்கின்றான். அங்கே வருகின்ற அரசி ஈசபேல், 'இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்து கொள்வது?' எனக் கேட்கின்றாள். அதாவது, 'அரசன் அழலாமா? கெஞ்சியா கேட்டாய்? நீ அடித்து அல்லவா பறித்திருக்க வேண்டும்' என்று யோசனை சொல்கிறாள். கணவனின் கையாலாகத நிலையில், அவளே கடிதம் எழுதி, அவனுடைய முத்திரையைப் பயன்படுத்தி, நாபோத்தைக் கொல்ல ஏற்பாடு செய்கிறாள். அரசனின் அதிகாரத்தை அத்துமீறல் செய்கிறாள் ஈசபேல். அந்த அத்துமீறலுக்கு இடம் கொடுக்கின்றான் அரசன்.

ஆ. நில அத்துமீறல்

நாபோத்து பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்படுகின்றார். உடனே ஆகபா அந்த திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கப் புறப்பட்டுப் போகின்றார். ஆக, தனக்குத் தேவை என்றால், தன் தேவை நிறைவேற வேண்டுமென்றால், இன்னொருவனை அழித்து அத்துமீறல் செய்யலாம் என்ற இன்றைய இழி மதிப்பீட்டின் தலைமகனாகின்றான் ஆகாபு. அந்தத் தோட்டத்தில் அவன் நுழையும்போதெல்லாம் அவனுடைய மனச்சான்று அவனுக்கு உறுத்தலாக இருக்காதா?

இ. இறைக்கட்டளை அத்துமீறல்

இங்கே ஆகாபும், ஈசபேலும், அவர்கள் அனுப்பிய இழி மனிதர்களும் மூன்று கட்டளைகளை மீறுகின்றனர்:  'பிறர் உடைமையை விரும்புகின்றனர்,' 'பொய் சொல்கின்றனர்,' மற்றும் 'கொலை செய்கின்றனர்.' நில அத்துமீறல் வெளியே நடந்தேறுமுன் ஆகாபின் உள்ளத்தில் பேராசையாகவும், ஈசபேலின் உள்ளத்தில் வன்மமாகவும், இழிமனிதர்களின் உள்ளத்தில் பொய்மையாகவும் ஊற்றெடுக்கிறது.

அத்துமீறல்கள் என்றும் ஆபத்தானவை.

ஆனால், அத்துமீறல் செய்கிறவர்கள் மட்டுமே இன்று நன்றாக இருக்க முடியும். 

நாபோத்தின் குரலைக் கேட்டு எலியாவை அனுப்பிய ஆண்டவர், இன்று யார் அழுகுரலையும் கேட்டு யாரையும் அனுப்புவதில்லை.


Saturday, June 13, 2020

பசியும் உணவும்

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

பசியும் உணவும்

கடந்த மாதம் 8ஆம் தேதி, மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் அருகில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 16 பேரை சரக்கு ரயில் ஏறிக் கொன்றதை நாம் கேள்விப்பட்டோம், காணொளிகளில் கண்டோம். கொரோனோ தொற்றின் பக்க விளைவுதான் இவர்களின் மரணம். 20 வயது முதல் 30 வயது வரை உள்ள இளவல்கள்தாம் இவர்கள். மகாராட்டிர மாநிலத்தின் இரும்பு பட்டறையிலிருந்து மத்திய பிரதேசத்தில் இருக்கிற தங்கள் இல்லம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். இவர்கள் தண்டவாளத்தில் தூங்கினார்களா அல்லது பசியால் வாடி விழுந்து கிடந்தார்களா அல்லது பயணக் களைப்பால் சோர்ந்து அமர்ந்து, அப்படியே தூங்கிப் போனார்களா என்று நமக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு அருகில் கிடந்த சில சப்பாத்திப் பொட்டலங்களையும் நாம் படத்தில் பார்த்திருப்போம்.

ஒரு பக்கம் மனித உடல்கள், இன்னொரு பக்கம் மனித உடலுக்கு ஊட்டம் தருகின்ற சப்பாத்தி.

நிற்க.

கொரோனா தொற்றின்போது அனைவருக்கும் அரசே உணவு வழங்கலாம் என்றும், நம் நாட்டின் சேமிப்பு கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் நிறைய சேமித்துவைக்கப்பட்டு எலிகளுக்கு உணவாகிக்கொண்டிருக்கின்ற வேளையில் அவற்றை அரசே அனைவருக்கும் வழங்கலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டபோது, அரசு, 'இல்லை! நாங்கள் அவற்றிலிருந்து எத்தனால் எடுத்து நிறைய சானிடைசர் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப் போகிறோம்!' என்றது. உணவுக்கே வழி இல்லாதபோது சானிடைசரை நம் உடலில் தடவினால் என்ன, தடவாவிட்டால் என்ன? இங்கே ஒருவனுக்கு உணவு இல்லாதபோது, எங்கோ ஒருவன் நன்றாக உணவருந்தி படுக்கையில் சாயும்போது அவன் கைகளில் இரு துளிகள் சானிடைசரைப் பூசுவதில் அரசு அக்கறை காட்டுவது ஏன்?

ஒரு பக்கம் பசி, இன்னொரு பக்கம் வீணடிக்கப்படும் உணவு.

நிற்க.

நம் ஆலயங்களில் திருப்பலி கொண்டாடி, நற்கருணை உண்டு ஏறக்குறைய எண்பது நாள்கள் ஆகின்றன. ஆடம்பர ஆடைகள் அணிந்து, சாம்பிராணி போட்டு, சுற்றி வந்து, நெற்றியில் குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து, பாடல் குழுவினர் உச்ச தொனியில் பாடிய நற்கருணைக் கொண்டாட்டங்கள் இனி நம் ஊர்களில் நடக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. அருள்பணியாளர்கள் ஒருவர் பயன்படுத்திய திருவுடையை அடுத்தவர் பயன்படுத்தலாமா? சாம்பிராணி போடுவதால் தும்மல் வரும்போது என்ன செய்வது? நெற்றியில் குங்குமம் இடலாமா? இடும்போது இடுபவர் கையுறை அணிந்திருக்க வேண்டுமா? ஆரத்தி எடுக்கும் தட்டுகள் சேனிட்டைஸ் செய்யப்பட வேண்டுமா? பாடல் குழுவினர் இணைந்து பாடும்போது எச்சில் தெறிக்காதா? அல்லது அவர்கள் முகக்கவசம் அணிந்து பாட வேண்டுமா?

இன்று நாம் சௌகரியமாக நற்கருணையை மையமாக வைத்து திருச்சபையைச் சுருக்கிவிட்டோம். நற்கருணை இல்லை என்றால் வழிபாடு இல்லை என்று ஆக்கிவிட்டோம்.

'இதோ! எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்!' என்று இயேசு சொன்னதை, நாம் நற்கருணைக்கு பொருத்தி, அவர் நற்கருணையில் இருக்கிறார் என்றும், நற்கருணையில் இறைவனின் பிரசன்னத்தைக் கொண்டுவருபவர் குரு அல்லது ஆயர் என்றும், ஆக, இவர்கள் முக்கியம் என்றும் சொல்லி, இறைவனே மையம் என்பது மாறி நற்கருணையே மையம் என்றும், நற்கருணையே மையம் என்பது மாறி அருள்பணியாளர்களே மையம் என்றும் நிலை மாறிவிட்டது. இந்த எண்பது நாள்களில் நாம் யாரும் அருள்பணியாளர்களையோ, ஆயர்களையோ தேடவில்லை. நமக்கு முடிவெட்டுபவர்களைத் தேடினோம், நம் இல்லங்களைத் தூய்மையாக்குபவர்களைத் தேடினோம், தெருக்களின் துப்புரவுப் பணியாளர்களைத் தேடினோம், நம் மருத்துவர்களைத் தேடினோம். அருள்பணியாளர்களும் ஆயர்களும் தேடப்பட்டாலும் அவர்கள் மற்ற தேவைகளுக்காகத்தான் தேடப்பட்டார்களே தவிர, ஆன்மீகத் தேவைகளுக்காகத் தேவைப்படவில்லை. அருள்பணியாளரின் துணை இல்லாமல், இறுதி அருளடையாளங்கள் இல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டோம், இறக்கப் பழகிக் கொண்டோம். அவர்கள் இல்லாமல் இறந்தவர்களை அடக்கம் செய்யப் பழகிக் கொண்டோம். 'கடவுள் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டோம்' என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.

இந்தக் கொரோனா காலத்தில் என்னையே நான் இப்படி திறனாய்வு செய்துகொள்கிறேன்.
காணொளிகளில் திருப்பலி பார்க்கும்போதெல்லாம், தொலைக்காட்சியில் யாரோ உணவு தயாரிக்க சொல்லிக் கொடுக்கும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி நடப்பதுபோலவே எனக்கு சில நேரங்களில் தோன்றும். என் வீட்டில் குழந்தைகள் பட்டினியாக இருக்க, நான் அவர்கள் முன் டிவியில் தோன்றி, நான் மட்டும் உணவருந்திவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்க, அக்குழந்தைகள் டிவியின் அந்தப் பக்கத்திலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாலோ, நான் உணவருந்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாலோ அவர்கள் பசியாறி விடுவார்களா? ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அப்படிச் செய்வாரா?

ஆனால், இப்படிச் செய்வதையும் நம் திருஅவையின் நற்கருணை இறையியல், 'ஆசை நன்மை' என வரையறுத்துள்ளது. அதாவது, நான் என் கற்பனையிலேயே இயேசுவை உட்கொண்டதாக எண்ணிக்கொள்ள முடியும். இது ஏறக்குறைய மருத்துவத்தில் உள்ள 'பிளாஸிபோ இஃபெக்ட்' போல. அதாவது, காய்ச்சல் உள்ள ஒருவருக்கு அல்லது அது இருப்பதாக நினைக்கும் ஒருவருக்கு, வெறும் மாவுக்கட்டியை மாத்திரையை என்று கொடுத்தால், அவர் அந்த மாத்திரை தன்னைக் குணமாக்கிவிட்டது என்று நம்புவதோடு, குணமும் ஆகின்றார். ஆக, அங்கே மாவுக்கட்டி ஒன்றும் செய்வதில்லை. அவருடைய மனம் அல்லது உடல் தன்னையே குணமாக்கிக்கொள்கிறது.

எல்லாரும் சொல்கிறார்கள்: 'இனி பழைய நிலை திரும்பாது'

என்னைப் பொறுத்தவரை, பழைய நிலை திரும்பக் கூடாது.

இல்லங்களில் இல்லத் தலைவரும், தலைவியும் இணைந்து அமர, இறைவார்த்தை அல்லது நல்ல வார்த்தை ஏதாவது வாசிக்கப்பட, அவர்கள் குழந்தைகள் நற்பயிற்சி தரப்பட, அவர்களும் அண்டை வீட்டாரும் அமர்ந்து பசியாறினால் அது நற்கருணை.

தொடக்கத் திருஅவையில் இப்படித்தான் நற்கருணை கொண்டாடப்பட்டது. அங்கே யாருக்கும் ஆரத்தி எடுக்கப்படவில்லை. ஏன்? இயேசு கொண்டாடிய கல்வாரிப் பலியே நற்கருணைப் பலி என்கிறோம். இயேசுவுக்கு யார் ஆரத்தி எடுத்தார்கள்? இயேசு நிர்வாணமாக சிலுவையில் தொங்க இங்கே நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு பட்டாடைகள் தேவையா? புளித்த காடியை அவர் ஈசோப்புத் தண்டில் வைத்துச் சுவைக்க, இங்கே இரசப் பாத்திரத்தில் சிலுவை அடையாளம் இருக்கிறதா, முத்து பதித்திருக்கிறதா என்று நாம் அங்கலாய்ப்பது ஏன்?

நிற்க.

எங்கே பசி இருக்கிறதோ, எங்கே அந்தப் பசிக்கு உணவு இருக்கிறதோ அங்கே நற்கருணை இருக்கிறது.

இப்படித்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நற்கருணையை வரையறுக்கிறது.

பசி இல்லாமல் உணவு மட்டும் இருந்தாலோ, அல்லது உணவு இல்லாமல் பசி மட்டும் இருந்தாலோ அங்கே நற்கருணை இல்லை.

மகாபாரதத்தில் ஆரண்ய பருவத்தில் பின்வரும் நிகழ்வு உண்டு. துர்வாச முனிவர் ஒரு கோபக்கார முனிவர். முனிவர்களுக்கு எல்லாம் ஏன் கோபம் வருகிறது? என்றும், அனைத்தையும் துறந்த முனிவர்கள் தங்கள் கோபத்தை ஏன் துறப்பதில்லை? என்றும், ஏன் அவர்கள் தவம் கலைக்கப்படும்போதெல்லாம் சாபம் இடுகிறார்கள்? என்றும் நான் கேட்பதுண்டு. அதை விட்டுவிடுவோம். துர்வாச முனிவர் தன்னுடைய பத்தாயிரம் சீடர்களோடு கௌரவர்களின் அரண்மனைக்கு வருகின்றார். மகாபாரதக் காலத்தில் பத்தாயிரம் பேர் இருந்தார்களா என்பது இன்னொரு கேள்வி. துர்யோதனன் நன்றாக விருந்து கொடுக்கின்றார். விருந்தில் திருப்தி அடைந்த துர்வாச முனிவர், 'துர்யோதனா! உன்னுடைய உபசரிப்பில் மகிழ்ந்தோம். ஏதாவது ஒரு வரும் கேள்!' என்கிறார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, பாண்டவர்களை அழிக்க நினைக்கின்றார் துர்யோதனன். காட்டில் வனவாசத்திலிருக்கும் பாண்டவர்களிடம் இவரை அனுப்பினால், அவர்கள் இவருக்கு உபசரிப்பு செய்ய முடியாமல் சபிக்கப்பட்டு அழிந்து போவர் என்ற எண்ணத்தில், 'நீங்களும் உங்கள் சீடர்களும் பாண்டவர்களிடம் சென்று சில நாள்கள் தங்கி அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கபடமாகச் சொல்கின்றார். முனிவரும் அவருடைய குழாமும் புறப்பட்டுச் செல்கின்றனர். பாண்டவர்கள் ஒரு குடிசையில் வாழ்கின்றனர். அவர்கள் அப்போதுதான் மதிய உணவருந்தி முடித்துள்ளனர். அவர்களுடைய அட்சய பாத்திரம் அன்றைய தேவையை நிறைவு செய்துவிட்டது. அதற்கு மேல் அங்கே ஒன்றுமில்லை. 'தர்மா! நாங்கள் குளித்துவிட்டு வருமுன் உணவு தயாரித்து வை!' என்று சொல்லிவிட்டு முனிவர் குளிக்கச் செல்கின்றார். திரௌபதி கண்ணனிடம் மன்றாட, கண்ணன் அவர்களுக்குப் பசி எடுக்காமலே செய்துவிடுகின்றார். அதாவது, இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு எழுந்த ஓர் உணர்வைத் தருகின்றார். அந்த நிறைவில் பாண்டவர்களை சபிப்பதற்குப் பதிலாக, ஆசீர்வதித்துச் செல்கின்றார் துர்வாச முனிவர்.

ஆனால்,

முதல் ஏற்பாட்டில் யாவே இறைவன் அப்படிச் செய்யவில்லை. நாணற்கடலை பிளக்கச் செய்து இஸ்ரயேல் மக்களை பாதம் நனையாமல் எகிப்திலிருந்து வெளியேற்றியவருக்கு, அவர்கள் பயணம் முழுவதும் பசி எடுக்காமல் செய்திருக்க இயலாதா? இயலும். கானாவூரில் வெறும் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இரண்டாம் ஏற்பாட்டு இயேசுவுக்கு, எல்லாருடைய கைகளிலும் உணவுப் பொட்டலம் வந்து விழுமாறு செய்திருக்க இயலாதா? இயலும்.

ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

பசியைக் கொடுக்கிறார்கள். பின் உணவைக் கொடுக்கிறார்கள்.

பசி என்ற ஓர் உணர்வும் தேவையும் இருந்தால்தான் உணவு என்ற ஒரு பொருளுக்கு மதிப்பிருக்கும்.

மகாராட்டிரத்தில் இறந்துபோன தொழிலாளர்கள் பசித்திருக்கிறார்கள்.

இன்று எவ்வளவோ பேர் நம் ஊர்களில் பசித்திருக்கிறார்கள்.

நம் திருஅவை முழுவதும் ஆன்மீகப் பசியுற்றிருக்கிறது.

இந்த நேரத்தில், உணவு தேவை. அந்த உணவுதான் நற்கருணை.

இயேசு தன்னுடைய நினைவாக விட்டுச் செல்ல, மனித வாழ்வின் அடிப்படை உணர்வான பசியைத் தேர்ந்தெடுக்கிறார். உச்சிப் பொழுதில் எடுக்கும் பசி நம் மனித நொறுங்குநிலை மற்றும் வலுவின்மையின் அடையாளம். இத்தகைய பசி இறைவனை நோக்கி எழுந்தால்தான் நற்கருணை நமக்கு விருந்தாக முடியும். அல்லது அது ஒரு வெறும் சடங்காக மாறிவிடும்.

அப்படிச் சடங்காக மாறிவிட்ட நிலையிலிருந்து கொரிந்து நகர திருஅவையை விடுவிக்க விழைகின்றார் பவுல். ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுபவர்கள் நடுவே பிரிவினை இருக்கக் கூடாது எனக் கற்பிக்கின்றார்.

நற்கருணை புதுமைகள், நற்கருணை புனிதர்கள், நற்கருணை அற்புதங்கள் என எண்ணற்றவை நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவர்களுக்குப் பசித்தது. ஆகையால், நற்கருணை அவர்களுக்கு நிறைவு தந்தது.

இன்றைய நாள் எனக்கு வைக்கும் சவால் என்ன?

நான் அருள்பணியாளராக நற்கருணையைக் கொண்டாடவோ, அல்லது பொதுநிலையினராக நற்கருணையை உட்கொள்ளவோ இருக்கிறேன் என்று என் வரையறையைச் சுருக்கிக்கொள்தலை விடுத்து, நானே நற்கருணையாக, உணவாக மாற வேண்டும்.

இதைத்தான் இயேசு செய்தார்: 'நானே உணவு' என்றார்.

என்னைக் காணும் எவரும், உங்களைக் காணும் எவரும், 'நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?' என்று கேட்டால், நாம் இன்று கொண்டாடும் திருநாள் பொருள் பெறும்.

ஏனெனில்,

'எப்படிக் கொடுக்க இயலும்?' என்பது கேள்வி மட்டுமல்ல.

'எப்படிக் கொடுக்க இயலும்!' என்பது வியப்பும் கூட.

கேள்வியிலிருந்து வியப்புக்குக் கடந்து சென்றால், அங்கே அப்பம் இயேசுவின் உடலாகவும், இரசம் இயேசுவின் இரத்தமாகவும் மாறும்.

திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, June 12, 2020

குறுக்குசால்

இன்றைய (13 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 19:19-21)

குறுக்குசால்

'அவன் ஏன்யா குறுக்குசால் ஓட்றான்?'

'குறுக்குசால் ஓட்டுதல்' என்னும் சொலவடையை நான் மதுரையில்தான் கேட்டேன். இது ஒரு விவசாய சமூகச் சொல்லாடல். ஒருவர் மாட்டைப் பூட்டி ஏர் ஓட்டுகிறார். அப்படி ஓட்டும்போது நிலத்தைக் கிழித்துக்கொண்டே செல்லும் வரிக்குப் பெயர் சால். நேராக ஒருவர் ஓட்டிக்கொண்டிருக்க, இன்னொருவர் அவருக்குக் குறுக்கே இன்னொரு ஏர் பூட்டி ஓட்டினால் அது முதலாம் நபரின் வேகத்தைக் குறைப்பதோடு, உழுதல் சீராக இருப்பதையும் அது தடை செய்துவிடும். ஆக, ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் இடறல் தருதலுக்குப் பெயர்தான் குறுக்குசால் ஓட்டுகின்றார்.

குறுக்குசால் ஓட்டுதல் விவசாயிகளின் பார்வையில் தவறு எனத் தெரிந்தாலும், இறைவனின் செயலுக்கு அது அவசியமானதாக இருக்கிறது.

தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயின் வாழ்வில் குறுக்குசால் ஓட்டி அவரை எகிப்துக்கு அனுப்புகிறார் ஆண்டவர்.

மீன் பிடித்துக்கொண்டிருந்த முதற் சீடர்களின் வாழ்வில், வரி வசூலித்த மத்தேயு மற்றும் சக்கேயு வாழ்வில், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் வாழ்வில், தமஸ்கு நகர் செல்லும் பவுல் வாழ்வில் என கடவுள் சரமாரியாக குறுக்குசால் ஓட்டுகின்றார்.

கடவுள் ஓட்டும் குறுக்குசால் மனித வாழ்வையே புரட்டிப் போட்டுவிடுகின்றது.

ஆண்டவராகிய கடவுளின் கட்டளையை உடனே நிறைவேற்றுகின்றார் எலியா. 'உனக்குப் பதிலாக எலிசாவை இறைவாக்கினராக அருள்பொழிவு செய்' என்று சொன்னவுடன் ஓடிச் சென்று, எலிசாவை அருள்பொழிவு செய்கின்றார். இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் ஆர்வத்தில் அப்படிச் செய்தாரா அல்லது 'ஆள விட்டாப் போதும்!' என்று தன் பணியைத் துறந்துவிட நினைத்தாரா என்று தெரியவில்லை.

இந்த நிகழ்வில் சில விடயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

அ. ஏர் பூட்டி உழும் எலிசா

எலிசா அவருடைய அன்றாட வேலையில் மும்முரமாக இருக்கின்றார். பதினொரு ஏர்கள் முன் செல்ல, பன்னிரண்டாவதை ஓட்டிக்கொண்டு செல்கின்றார். பன்னிரண்டு என்பது நிறைவைக் காட்டுகிறது. மேலும், எல்லாருக்கும் இறுதியில் இவர் செல்வதால், மற்றவர்கள் ஓட்டுவதை இவர் கண்காணிக்கவும் முடியும். பன்னிரண்டு தேர்கள் ஓடும் அளவுக்கு உள்ள பெரிய வயல்பரப்பின் உரிமையாளராக இருக்கின்றார் எலியா. ஆக, கடவுள் நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டே நம்மை அழைக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் ஏரை வைத்து உழுதுகொண்டிருப்பதுதான். அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்க வேண்டும்.

ஆ. மேலாடை

எலியா எலிசாவின்மேல் தன் மேலாடையைத் தூக்கிப் போடுகின்றார். இதுதான் அவர் செய்த அருள்பொழிவு. ஒருவருடைய மேலாடை ஒருவரின் ஆற்றலை அடையாளத்தையும் குறிக்கின்றது. தான் பெற்றிருந்த அருள்பொழிவை தன் சீடர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் எலியா. இந்த மேலாடையை எலிசா தன் வாழ்வின் இறுதிவரை வைத்திருக்கின்றார். இதைக் கொண்டே யோர்தான் ஆற்றை இரண்டாகக் கிழிக்கின்றார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் தன் மேலாடை என்னும் அருள்பொழிவால் மூடியுள்ளார்.

இ. நான் விடைபெற்று வர அனுமதியும்

தன் தாய் தந்தையிடம் சென்று வர அனுமதி கேட்கின்றார் எலிசா. உடனே அனுமதி அளிக்கின்றார் எலியா. ஆனால், இயேசுவோ தன் சீடர்களுக்கு அப்படிப்பட்ட அனுமதியை மறுக்கின்றார். ஏனெனில், இறையரசின் அவசரம் அப்படி. விடைபெற்று வருதல் என்பது தன் பழைய காலத்தை மறத்தல். அதை அடையாள முறையில் நிறைவேற்றுகின்றார் எலிசா. எல்லாருக்கும் விருந்து கொடுக்கின்றார்.

ஈ. படகுகளை எரித்தல்

தன் வாழ்வாதாரத்திற்கான ஏர்கள் மற்றும் மாடுகளை எரிக்கின்றார் எலிசா. ஆங்கிலத்தில், படகுகளை எரித்தல் என்ற சொல்லாடல் வழியாக இதை அழைக்கிறோம். அதாவது, திரும்பிச் செல்லும் வாய்ப்புக்களை அழித்துவிட்டு, 'வாழ்வா-சாவா' என்ற நிலையில் வாழ்க்கையோடு ஒற்றைக்கு ஒற்றை போராடுதல்.

இந்த நான்கும் அருள்பணி நிலையில் இருப்பவர்கள் அல்லது அழைக்கப்படுபவர்கள் தங்கள் மனத்தில் நிறுத்த வேண்டியவை:

அ. தங்கள் அன்றாட வாழ்வில் இறைவனின் குறுக்கீட்டை உணர வேண்டும்.

ஆ. அவர்தரும் அருள்பொழிவை ஏற்க வேண்டும்.

இ. பழைய வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டும்.

ஈ. தன் பாதுகாப்பு வளையங்களை, தான் சாய்ந்துகொள்ளும் தூண்களை உடைத்து எரிக்க வேண்டும்.

இன்றைய நாளில் நாம் நினைவுகூரும் புனித பதுவை நகர் அந்தோனியார் இந்த நான்கையும் செய்கின்றார். அன்பின் கோடிஅற்புதராக இன்றும் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

இவர் மேலும் ஒரு துயரத்தை அனுபவித்தார்.

தன்னோடு இருப்பவர்களின் நிராகரிப்புதான் அது.

தன் திறன்கள் மற்றும் திறமைகள் நிராகரிக்கப்பட்டு, பாத்திரம் தேய்க்கும் பணிக்கு அவர் ஒதுக்கப்பட்டபோது, அவர் தன் வாழ்விலிருந்து விலகிக்கொள்ளவில்லை. விடாமுயற்சியோடு தொடர்ந்தார். அதனால்தான், அவரை அந்த நிலைக்கு அனுப்பியவர் வெறும் அருள்பணியாளராக நின்றார், இவர் புனிதராக உயர்ந்தார்.

நாமும் உயரலாம். அல்லது வாழ்க்கை முழுவதும் பாத்திரம் தேய்த்துக்கொண்டே இருக்கலாம்.

எங்கிருந்தாலும், தன் ஏரோடும், மாடுகளோடும் அங்கே குறுக்குசால் ஓட்ட வருவார் ஆண்டவர்.

Thursday, June 11, 2020

விந்தையான கடவுள்

இன்றைய (12 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 19:9-16)

விந்தையான கடவுள்

வாழ்க்கை பல நேரங்களில் நம் முகத்தில் செங்கல்லாலும் சம்மட்டியாலும் அடிக்கும்.

ஒரு ரபியிடம் வருகின்ற இளவல், 'ரபி, நான் எல்லாருக்கும் நல்லதையே செய்கிறேன். யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. ஆனால், நான் மற்றவர்களை நடத்துவதுபோல அவர்கள் என்னை நடத்துவதில்லையே!' என முறையிடுகிறார். அதற்கு ரபி, 'தம்பி! நீ வெஜிடேரியன் மெனு அருந்துகிறவன் என்பதற்காக பாய்ந்து வரும் மாடு உன்னை முட்டாமல் விடுமா? நீ இறைச்சி உண்கிறாயோ, காய்கறி உண்கிறாயோ! மாடு அதைப் பொருட்படுத்துவதில்லை! அது தன் சுபாவத்தில் செயல்படும்! நாய் குரைப்பது அதன் சுபாவம்! ஆக, மனிதர்கள் செயல்பாடும் அவர்களுடைய சுபாவம்!'

எலியா நானூறு பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றுவிடுகிறார்.

மற்றவர்கள் முன் தன் கடவுள் யாரென்று நிரூபித்த அவருக்கு தன் கடவுள் யாரென்று தெரியவில்லை. தெரியாமல் தவிக்கின்றார். நானூறு இறைவாக்கினர்களைக் கொன்று பாகால் வழிபாட்டை நிறுத்திய அவருக்கு, கடவுள் நன்மை அல்லவா செய்திருக்க வேண்டும்? ஆனால், கடவுள் ஒரு நன்மையும் செய்யவில்லை. நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவருடைய உயிருக்கே உலை வைக்கின்றார். இசபெலுக்கு தப்பி ஓடுகின்றார் எலியா.

பாவம் அவர்! அவர் செய்த நன்மையை கடவுள் அவருக்குத் திருப்பிச் செய்யவில்லை!

ஆகையால்தான், 'ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்! என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' என்று தற்கொலை எண்ணத்தால் அலைக்கழிக்கப்படுகிறார். உலகை வென்ற ஒருவர் தன்னையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்கும் போவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால் வரும் வெற்றிடமே இந்த எண்ணத்திற்குக் காரணம்.

இந்த வெற்றிடத்தை நிரப்ப கடவுள் முன் வருகின்றார். எலியாவுக்குத் தன்னை மெல்லிய ஒலியில் வெளிப்படுத்துகின்றார். சூறாவளியிலும் தீயிலும் கடவுள் இல்லை. இதை ஓர் உருவகமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எலியாவின் உள்ளம் சூறாவளி போலும், தீ போலும் எரிந்துகொண்டிருக்க, அங்கே கடவுள் இல்லை. மனம் இளைப்பாறி தென்றல் மாதிரி ஆனவுடன் அங்கே கடவுள் வருகின்றார்.

இங்கே கடவுளை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. ஏன்?

முதலில், கடவுள்தான் எலியாவிடம், 'வெளியே வா! மலைமேல் என் திருமுன் வந்து நில்!' என்கிறார். ஆனால், தன்னை வெளிப்படுத்தும்போது, 'எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?' எனக் கேட்கிறார்.

கடவுளுக்கு அம்னேசியாவா அல்லது அல்ஸைமர் நோயா என்று தெரியவில்லை.

'யோவ்! நீ தான இங்க நிக்கச் சொன்ன! இப்ப இங்க என்ன செய்றனு? கேட்கிற!' என்று மனதுக்குள் முனகியிருப்பார். ஏனெனில், எலியா கோபக்காரர்.

எலியாவை கடவுள் ஒரு வார்த்தைகூட சொல்லிப் பாராட்டவில்லை.

மாறாக, 'உன் வேலை முடிந்துவிட்டது' என்கிறார். எவ்வளவு கொடுமை!

ஒரு தலைவரிடம், 'ஐயா, வேலை முடிந்து விட்டது!' என்று பணியாள் சொல்ல, 'நீ போகலாம்! உனக்குப் பதிலாக வேறு ஆள் போட்டாயிற்று!' என்று சொன்னாள் அவனுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எலியாவுக்கு.

இந்த நிகழ்விலிருந்து என்ன தெரிகிறது?

ஒன்று, நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மையே கிடைக்கும் அல்லது நடக்கும் என்பது முட்டாள்தனம்.

இரண்டு, தீமையை ஒரு நாள் அழிக்கப்படும் என நினைப்பதும் முட்டாள்தானம். எலியா பாகால் இறைவாக்கினர்களை அழித்துவிட்டதால் இஸ்ரயேலில் பாகால் வழிபாடு முடிந்துவிடவில்லை. அது இன்னும் அதிகமாக தொடர்ந்தது.

மூன்று, கடவுள் விந்தையாகச் செயலாற்றுபவர். 'போய் அவனை அடி!' என்பார். அவனைப் போய் அடித்தால், 'ஏன் அவனை அடித்தாய்?' என்பார். ஏனெனில் கடவுள் என்பவரே முரண்தான்.

நான்கு, இந்த உலகில் நம்மை விட்டால் யாருமில்லை என்ற நினைப்பு பெரிய மடமை. அப்படி எலியா நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், 'நீ போய் எலிசாவை அருள்பொழிவு செய்!' என அவரை அனுப்பிவிடுகின்றார்.

நற்செயல்: இந்த நான்கு பாடங்களில் ஏதாவது ஒன்றை நம் வாழ்வோடு பொருத்திப் பார்த்தல்.