Monday, February 29, 2016

யூதித்து - கதையாடல்

யூதித்து நூலின் உட்புகுமுன், 'கதையாடல்' என்ற இலக்கிய நடையின் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

நாம் வாசிக்கும் ஒரு சிறுகதை, நீண்ட நாவல், குறும்படம், திரைப்படம் எல்லாவற்றிலும் கதை இருக்கின்றது.

கதை ஐந்து கூறுகளைக் கொண்டிருக்கின்றது:

1. தொடக்கச் சூழல் (initial situation): 'ஒரு ஊர்ல...' என்று தொடங்கும்; இந்த சூழல் நமக்கு கதை நிகழும் இடம், நேரம், கதை மாந்தரின் அறிமுகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

யூதித்து நூலின் முதல் இரண்டு பிரிவுகள் நமக்கு வரலாற்று பின்புலத்தை முன்வைக்கின்றன.

2. இறுக்கம் (rising action): கதையில் நிறைய பிரச்சினைகள் அல்லது முடிச்சுகள் முன்வைக்கப்படும்.

அசீரியப் படையெடுப்பு, நெபுகத்னேசரின் ஆர்வம், கோபம், புதிய படைத்தலைவன், படையின் பலம் என பல பிரச்சினைகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன. இவற்றை வாசிக்கும்போதே வாசகரின் மனத்தில் கேள்வியும் எழுகின்றது: 'இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படுமா?' 'யார் தீர்வாக வருவார்?' 'எதிரிகள் அழிந்துவிடுவார்களா?'

3. திருப்பம் (turing point): இதுதான் கதையின் முக்கிய பகுதி. பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒருவரின் எழுச்சி இங்கே சுட்டிக்காட்டப்படும். எடுத்துக்காட்டாக, 'ஊதாரி மைந்தன்' (லூக்கா 15) கதையில் திருப்பம் இளைய மைந்தனின் உள்மன உரையாடலாக இருக்கின்றது: 'நான் எழுந்து செல்வேன்...' இந்த எண்ணம் வந்தவுடன் இளமைந்தன் எழுகின்றான். தன் தந்தையின் இல்லம் நோக்கி புறப்படுகின்றான்.

யூதித்து தன் கைம்பெண் கோலத்தைக் கலைந்துவிட்டு, ஓர் அரசமகள் போல ஆடையணிந்து புறப்படும் நிகழ்வுதான் யூதித்துநூலின் திருப்பம்.

4. தளர்வு (falling action): திருப்பத்திற்கு முன் சொல்லப்பட்ட அடுக்கடுக்கான பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும். முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.

யூதித்தின் அழகைக் கண்டு வீரர்கள் வியக்கின்றனர். யூதித்துக்கு எல்லார் பார்வையிலும் தயவு கிடைக்கின்றது. யூதித்து படைத்தலைவனை அணுகும் வாய்ப்பு பெறுகிறார்.

5. இறுதிச்சூழல் (final situation): பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு எல்லாரும் மகிழ்ந்திருக்கும் இனிய சூழல்.

எதிரிகளின் படை தலைவன் இல்லாமல் அழிந்து போகிறது. யூதர்களுக்கு வெற்றி கிடைக்கின்றது.

இந்த ஐந்து கூறுகளையும், தொடக்கம் (introduction), உச்சம் (climax), இறுதி (conclusion) என்னும் மூன்று கூறுகளாகச் சுருக்குகின்றார் அரிஸ்டாட்டில்.

அடுத்ததாக, கதையில் இருவகை மாற்றங்கள் நிகழ்கின்றன.

ஒன்று, துன்பம் மறைந்து இன்பம் வருகின்றது. எதிரிகள் அழிந்துவிடுகின்றனர். பிரிந்தவர்கள் சேர்ந்து விடுகிறார்கள்.

இரண்டு, அறியாமை மறைந்து அறிவு பிறக்கின்றது. யார் நல்லவர், யார் கெட்டவர், யார் சரியாகப் புரிந்து கொண்டார், யார் தவறாகப் புரிந்து கொண்டார் என வாசிப்பவருக்கு தெளிவு பிறக்கிறது.



Sunday, February 28, 2016

யூதித்து நூல் - முன்னோட்டம்

கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறைநூல்களில் இரண்டாவது இருப்பது யூதித்து நூல். 'யூதித்து' என்றால் 'யூதப்பெண்' என்று பொருள்.

'வளைக்கரமும் வாள்பிடிக்கும்!' - என்று யூதித்து நூலை இரண்டு வார்த்தைகளில் சுருக்கி விடலாம்.

'வலுவற்ற ஒரு பெண்ணின் கரத்தால்' (காண். யூதி 8:33, 9:9, 10, 12:4, 13:4, 14, 15, 15:10, 16:5), 'வலுவான இறைவன்', 'வலுவற்ற யூத மக்களைக் காக்கின்றார். 'கரத்தால்' என அடிக்கடி வரும் சொல்லாடல் விடுதலைப் பயண நூலில் யாவே இறைவன் தன் வலிமைமிகு கரத்தால் (காண். விப 15:6) இஸ்ரயேல் மக்களை விடுவித்ததை நினைவுபடுத்துகிறது.

கி.மு. 100ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த நூல் வரலாற்றின் பல மைல்கற்களை நீட்டித் தொடுகின்றது. நெபுகத்னேசர் ஆட்சி (1:1, 2:1) என்று சொல்லும்போது, ஏறக்குறைய கி.மு. 500ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், இந்த நூலில் அசீரிய தலைநகர் நினிவே அழிக்கப்பட்ட நிகழ்வும் (கி.மு. 612) குறிப்பிடப்பட்டுள்ளது. பாபிலோனியா (604-502), இரண்டாம் ஆலயம் (515) பற்றிய குறிப்புகளும் உள்ளன. பாரசீக மன்னர்களின் ஆட்சி, மூன்றாம் அர்த்தாகெர்கஸ் (358-338) அரசனின் படைத்தலைவர்கள் ஒலோபெரின், பகோவா என்பவர்களின் பெயர்களாகவும் தரப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செலுசிய மன்னன் நான்காம் அந்தியோக்கஸ் எபிஃபேனஸ் பற்றிய குறிப்பும் உள்ளது.

இந்த நூலில் வரும் கதைமாந்தர்கள் யூதித்து, அர்ப்பகசாது பற்றி வேறு எந்த வரலாற்று குறிப்பும் இல்லை. மேலும் பெத்தூலியா வாய்க்கால் பற்றிய எந்த தடயமும் தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைக்கவில்லை. ஆக, இந்த நூல் கடவுளை இஸ்ரயேல் மக்களின் மீட்பராக முன்வைக்கும் ஒரு வரலாற்று புதினம் (historical fiction or novella) என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. படைகளைக் கொண்டு அல்ல, ஒரு எளிய கைம்பெண்ணின் கரத்தால் மக்களைக் காப்பாற்றுகின்றார் இறைவன்.

'ஒருவர் கடவுள்மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம்' என்பது இந்நூலின் மையக்கருத்து.

இது முதலில் எபிரேய மொழியில் எழுதப்பட்டு, பின் அரமேயம் மற்றும் கிரேக்கத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தாலும், எபியேர மற்றம் அரமேய பிரதிகள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் எரோணிமுஸ் தன் இலத்தீன் மொழிபெயர்ப்பை அரமேய பிரதியிலிருந்து செய்ததாக எழுதுகிறார்.

யூத ரபிக்கள் இந்த நூலை தங்கள் விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. சீர்திருத்த சபையினரும் இந்த நூலை 'தூண்டப்பட்ட நூல்' என ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், தொடக்க திருஅவை இந்த நூலுக்கு மேன்மையான இடத்தை கொடுத்தது. தூய கிளமெந்து (கி.பி. முதல் நூற்றாண்டு) யூதித்தை துணிச்சலான அன்பிற்கு எடுத்துக்காட்டாக வைக்கிறார் (1 கொரிந்தியர் 55). யூதித்து திருஅவையின் முன்மாதிரி என்றும், புனிதக் கைம்பெண் எனவும், மரியாளை புதிய யூதித்து என்றும் சொல்கின்றார் எரோணிமுஸ். திரிதெந்தின் சங்கம் (1546) யூதித்து நூலை கத்தோலிக்க விவிலியத்தின் ஒரு நூலாக ஏற்றுக்கொண்டது.

யூதித்து நூலில் முதல் ஏற்பாட்டு நூல்களோடு நிறைய ஊடுபிரதித்தன்மை (intertextuality) காணப்படுகிறது. கடவுள் மோசேயின் கரம் கொண்டு இஸ்ரயேலை விடுவித்தது (விப 10:21-22, 14:27-30) போல, யூதித்தின் கரம் கொண்டு விடுவிக்கின்றார். சிசராவின் தலையில் ஆணி அறைந்து கொன்ற யாவேல் (நீத 4) போல, யூதித்து படைத்தலைவன் ஒலோபெரினைக் கொல்கின்றார். பெண் நீதித்தலைவர் மற்றும் இறைவாக்கினர் தெபோரா (நீத 4-5) போல, யூதித்து இஸ்ரயேலின் இடுக்கண்களில் துணைநின்று அறிவுரை வழங்குகின்றார். இஸ்ரேயல் மக்களின் பிதாமகள் சாராவின் அழகு பாரவோனை ஏமாற்றி நிறைய நன்மைகளை பெற்றுத்தந்ததுபோல (தொநூ 17:6, 12:11-20) யூதித்தின் அழகு ஒலோபெரினை ஏமாற்றுகிறது.

இன்று வரை பல பாடல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள், மற்றும் இலக்கியப் படைப்புக்களில் நட்சத்திரமாக மின்னுகின்றார் யூதித்து.

நூலை ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. அசீரிய அச்சுறுத்தல் (1:1-3:10)
2. பெத்தூலியா முற்றுகை (4:1-7:32)
3. யூதித்து, கடவுளின் மீட்புக் கரம் (8:1-10:10)
4. யூதித்தின் கவர்ச்சிப் போர் (10:11-13:20)
5. வெற்றியும் நன்றியும் (14:1-16:25)

Saturday, February 27, 2016

முடிவுரை

தோபித்து நூல் 14ஆம் பிரிவு, (அ) தோபித்தின் இறைவாக்கு, (ஆ) தோபித்தின் இறுதி அறிவுரை, (இ) கதைமாந்தர்களின் இறப்பு என்று மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது.

அ. தோபித்தின் இறைவாக்கு

நினிவே நகரம் நாகூம் இறைவாக்கினர் சொன்னதுபோலவே (1:1-3:19) அழிவுறும் என்கிறார் தோபித்து. நாகூம் நூல் எழுதப்பட்ட பின்தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும், தோபித்தை சட்டமும், இறைவாக்குகளும் தெரிந்த ஒரு மனிதராக இங்கே முன்வைக்கின்றார் ஆசிரியர். 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்!' (ஆமா! எதுக்காக பாஸ் உப்பைத் திங்கணும்?) என்பதுபோல, பிறர்க்கின்னா முற்பகல் செய்த நினிவேக்கு, பிற்பகல் தானே வந்து சேருகிறது இன்னல். மேலும், எருசலேம் நகரின் மக்கள் திரும்பி வருவதையும், வந்தவர்கள் தங்கள் நகரையும், ஆண்டவரின் ஆலயத்தையும் புதுப்பிப்பார்கள் என்றும் இறைவாக்குரைக்கின்றார்.

ஆ. தோபித்தின் இறுதி அறிவுரை

தான் இறக்குமுன் தன் மகனை தன்னிடம் அழைக்கின்ற தோபித்து, ஏற்கனவே அவருக்கு சொன்ன, 'தர்மம் செய்தல், நேர்மையாய் இருத்தல், உண்மை பேசுதல், இறைவனைப் புகழ்தல்' என்ற அறிவுரைகளைச் சொல்கின்றார். புதியதாக, 'இவற்றையெல்லாம் செய்ய உங்கள் குழந்தைகளுக்கும் பயிற்சி அளியுங்கள்!' என்கிறார்.

இங்கே இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும்:

1. குழந்தைகள். பெற்றோர்களின் மதிப்பீடுகள் குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டும். 'இதை உன் குழந்தைகளுக்குச் சொல்!' என்னும் சொல்லாடல் இணைச்சட்ட நூலில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறைவனின் இரக்கச் செயல்களும், அதை பெற்றோர்கள் அனுபவித்த விதமும், அவர்களோடு முடிந்துவிடக்கூடியவை அல்ல. மாறாக, வாழையடி வாழையாக குழந்தைகளோடு. குழந்தைகளின் குழந்தைகளோடு என பயிற்றுவிக்கப்பட வேண்டியவை.

2. பயிற்சி. நல்ல குணங்கள் நம்மில் வர பயிற்சி தேவை. தோபித்து சொல்லும் நற்குணங்கள் ஒரே இரவில் ஒருவருக்கு வந்துவிடக்கூடியவை அல்ல. ஒவ்வொன்றையும் வாழ்ந்து காட்ட பயிற்சி தேவை. உடலைப் பக்குவப்படுத்தப் பயிற்சி தேவை போல, உள்ளத்தையும், வாழ்வையும் பக்குவப்படுத்த பயிற்சி தேவை. பயிற்சியும், நேரமும் ஒன்று சேர்ந்து செல்லக்கூடியவை. எந்த அளவிற்கு ஒன்றோடு நாம் நேரம் செலவழிக்கின்றோமோ, அந்த அளவிற்கு அதில் நாம் பயிற்சி பெறுகிறோம்.

இ. கதைமாந்தர்களின் இறப்பு

தோபித்து 112 வயதிலும், தோபியா 117 வயதிலும் இறக்கின்றனர். தோபித்து பார்வை பெற்றபின் 50 ஆண்டுகள் வாழ்கின்றார். இந்த எண்கள் எல்லாம் நிறைவைக் குறிப்பவை. அன்னா, இரகுவேல் மற்றும் எதினாவும் இறந்துபோகின்றனர். இவர்கள் எல்லாரையும் நல்லடக்கம் செய்கின்றார் தோபியா.

சிந்தனையின் இறுதியாக,

1. எல்லாம் கடந்து போகும். போர், சண்டை, வன்முறை, இழப்பு, பார்வையற்ற நிலை, திருமணம் தள்ளிப்போதல், பேய், பயம், வறுமை எல்லாம் கடந்து போகும். அமைதி, பார்வை, திருமண விருந்து, திரும்பப் பெற்ற பணம், வழித்துணை, நண்பர்கள், நட்பு, பெற்றோர் - இதுவும் கடந்து போகும். 'ஒரு தலைமுறை மறைகின்றது. மறு தலைமுறை தோன்றுகின்றது' (சஉ 1:4).

2. திருமணம். சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகம் இருக்கும்: 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு.' இந்த வாசகத்தை திருமணத்திற்கு ஒப்பிட்டு, இந்நாட்களில் இத்தாலியன் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது:

'திருமணம் உடல்நலத்திற்குக் கேடு'. Ingredients: பணம் 55%, செக்ஸ் 23%, பொய் 22%

திருமணத்தை, குடும்ப வாழ்வை நமக்கேற்றாற்போல மாற்றிக்கொண்டு, முன்னேற்றம் என்று சொல்லி, எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் நமக்கு, தோபித்து-அன்னா, இரகுவேல்-எதினா, தோபியா-சாரா குடும்பங்கள் எதிர்சான்றாக இருக்கின்றன. நல்ல நட்பின் வழித்துணையின் அடையாளமாக இரபேலும் இருக்கிறார்.

3. எதை விட்டுச் செல்வோம்? இந்த உலகத்திற்கு நாம் வரும்முன்பு இந்த உலகம் இருந்தது. இந்த உலகை விட்டு நாம் சென்றபின்னும் இந்த உலகம் இருக்கும். நமக்கு முன் இருப்பவற்றையெல்லாம் பயன்படுத்துகிறோம். நாம் எடுத்த அனைத்திற்கும் பதிலாக எதை திரும்பக் கொடுக்கப் போகிறோம்? நாம் எதைப் பெற்றோம் என்பதைப் பொறுத்து அல்ல, எதை கொடுத்தோம் என்றே நாளை நாம் அறியப்படுவோம். இல்லையா?

தோபித்து நூல் - நல்வாழ்வின் டைரி


Friday, February 26, 2016

தோபித்து நூல் இறையியல்

தோபித்து நூல் 13ஆம் பிரிவில் ஒரு பெரிய இடைநில் பாடலை வாசிக்கின்றோம். இந்த இடைநில்பாடல் பிற்காலத்தில் எழுதப்பட்டு, இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சொல்வதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன:

அ. தோபித்து நூல் 12:22ஐ வாசித்துவிட்டு, அப்படியே ஒரு ஜம்ப் பண்ணி 14:2க்குப் போனால் கதை எந்தவொரு இடைவெளியும் இன்றி தொடர்கிறது.

ஆ. தோபித்து நூலின் உரைநடைப் பகுதியில் அதிகமாக முன்வைக்கப்பட்ட 'தர்மம்,' 'நீதி,' மற்றும் 'உண்மை' என்ற வார்த்தைகள் இந்தப் பாடலில் பயன்படுத்தப்படவே இல்லை.

இ. உரைநடைப் பகுதியில் மேலோங்கி நின்ற குடும்பம், நோய், திருமணம், கடன், உதவி, வானதூதர், வழிப்போக்கர் பற்றிய எந்த குறிப்பும் இந்த பாடலில் இல்லை. மாறாக, இந்தப் பாடலில் சொல்லப்பட்டவை இரண்டு கருத்துருக்கள்: (1) கடவுளின் இயல்பு, (2) மக்களின் நாடுகடத்தல், (3) எருசலேமின் மீட்பும், மறுஉருவும்.

விவிலியத்தின் எந்தவொரு பகுதியை வாசித்தாலும் நாம் மூன்று கேள்விகளைப் பின்புலத்தில் கொண்டு வாசிக்க வேண்டும்:

1. கடவுளைப் பற்றி என்ன சொல்கின்றது?
2. மனிதர்களைப் பற்றி என்ன சொல்கின்றது?
3. உலகத்தைப் பற்றி என்ன சொல்கிறது?

1. கடவுள்பற்றிய தோபித்து நூலின் புரிதல்

அ. கடவுள் இரக்கமுள்ளவர் (13:2). தான் தள்ளிவிட்ட மக்களையும் அரவணைத்துக்கொள்ளக் கூடியவர்.
ஆ. கடவுள் நீதியுள்ளவர் (13:7). மக்களின் செயல்களுக்கேற்ற தண்டனையை அவர்களுக்கு வழங்குபவர்.
இ. கடவுள் அரசர் (13:17). அனைத்தின்மேலும் அதிகாரம் கொண்டவர்.
ஈ. கடவுள் தந்தை (13:4). எல்லா உயிர்களும் அவரின் குழந்தைகள்.

2. மனிதர்கள் யார்?

அ. நெறிகெட்ட செயல்களைச் செய்யக்கூடியவர்கள் (13:5)
ஆ. கடவுளைப் புகழ்பவர்கள் (13:8)

3. உலகம் எப்படி இருக்கிறது?

அசீரியப் படையெடுப்பைப் பின்புலமாக கதை கொண்டிருந்தாலும், இந்த நூல் எழுதப்பட்ட நேரம் பாபிலோனிய படையெடுப்பு நிகழ்ந்திருந்தது. இந்தப் படையெடுப்பால் தரைமட்டமான ஆண்டவரின் நகர் எருசலேமும், அதன் இதயமான ஆலயமும் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், பல நாடுகளுக்கு அடிமைகளாக, குடியேற்றதாரர்களால் சிதறடிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூட்டுப்படுவர் என்ற நம்பிக்கையின் செய்தியைத் தருகிறது தோபித்து நூல்.

இறையியல் பிரச்சினைகள்

அ. நம்பிக்கையா? செயல்களா?

ஒருவர் மீட்படைவது நம்பிக்கையினாலா அல்லது செயல்களினாலா? இந்தக் கேள்விதான் கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து, சீர்திருத்த சபையினர் பிரிந்து செல்லக் காரணமாக இருந்தது. தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் 'நம்பிக்கையினால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகின்றார்,' என்றும், தூய யாக்கோபு தன் மடலில், 'செயல்கள் இல்லாத நம்பிக்கை இறந்துபோனது' என்றும் சொல்கின்றனர். இரு வேறுபட்ட கருத்துக்கள் விவிலியத்திலேயே இருப்பதால் நம்மால் ஒருங்கிணைந்த புரிதலுக்கு வருவது இயலாது. தோபித்து நூல் செயல்களினால்தான் ஒருவர் மீட்படைய முடியும் என்று சொல்கிறது. அதாவது, தர்மச் செயல்கள், நீதியான வாழ்வு, நடத்தையில் உண்மை இந்த மூன்றும் இருந்தால் ஒருவர் மீட்பு பெற முடியும். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த மூன்றும் இருந்தால் போதும். கடவுளின்மேல் நம்பிக்கை கொண்டிராதவர்களும் இந்த மூன்று செயல்களை மட்டும் செய்தால் அவர்கள் மீட்பு பெற்றுவிடுவார்களா?

ஆ. கேரட்டும், குச்சியும்

ஆங்கிலத்தில் 'the carrot and stick approach' என்ற ஒரு சொலவடை உண்டு. நல்லது செய்தால் கேரட். கெட்டது செய்தால் குச்சி. 'கண்ணுக்குக் கண்,' 'பல்லுக்குப் பல்,' 'காசுக்கு தோசை,' 'பாவத்திற்கு மரணம்' - ஆக, நாம் நல்லது செய்தால் கடவுள் நம்மை பரிசுகளால் நிரப்புவார். கெட்டது செய்தால் நம்மைத் தண்டிப்பார். இந்த வகை இறையியலில் மனிதர்கள் கடவுளை கைப்பொம்மையாக்கிவிட முடியும். அதாவது, தங்கள் செயல்களால் கடவுளை சிரிக்க வைக்கவும், கோபப்பட வைக்கவும் முடியும். நம் இயல்பிற்கேற்ப அவரின் இயல்பும் மாறுகிறது என்றால், அவரை 'மாறாத தெய்வம்' என நாம் எப்படி அழைக்க முடியும்?

இ. பொய்யும் உண்மையே

'உண்மையாயிரு!' என வசனத்திற்கு, வசனம் தோபித்து நூல் சொன்னாலும், இங்கே பொய் சொல்லும் ஒருவரையும் நாம் பார்க்கின்றோம். அவர்தான் இரபேல் வானதூதர். கடவுளின் திருமுன் பணி செய்யும் வானதூதரே பொய் சொல்லலாமா? இரபேல் இரண்டு முறை பொய் சொல்கின்றார்:

(1) 'நீ யார்? உன் குடும்ப பின்புலம் என்ன?' என்று தோபித்து கேட்டபோது, என் பெயர் அசரியேல், என் இனம் இஸ்ரயேல் இனம், என் குலமுதுவர் வழி அனனியா என்கிறார் இரபேல் (காண். 5:5, 13). வாசகர்களுக்குத் தெரியும் இது ஒரு பச்சைப் பொய் என்று.

(2) 'நீங்கள் யார்?' என்று இரகுவேலின் வீட்டில் எதினா கேட்டபோது, தோபித்துடன் தன்னையும் இணைத்துக்கொண்டு, 'நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள் நாங்கள்' (7:3) என்கிறார் இரபேல்.

இரண்டு பொய்கள் சொன்னாலும், இறுதியில் தோபித்துக்கும், தோபியாவுக்கும் தான் யார் என்று வெளிப்படுத்துகின்றார் (காண். 12:15).

இரபேலின் பொய்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

பின் வரும் காரணங்களுக்காக இவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர் விவிலிய ஆசிரியர்கள்:

அ. 'இரபேல்' என்பவர் ஒரு கதை மாந்தர். கதைமாந்தரையும் உண்மையான மாந்தரையும் ஒப்பிடுவது தவறு. 'இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே...' என்று திரைப்படத்தின் தொடக்கத்தில் போடுவதுபோல, நாமும் இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் எழுதிக்கொள்ள வேண்டும்.

ஆ. இரபேலின் வார்த்தைகள் வெளிப்புறத்தில் பொய் எனத் தோன்றினாலும், உள்ளார்ந்த அர்த்தத்ததில் உண்மையாகவே இருக்கின்றன. 'அசரியேல்' என்றார் 'கடவுளே உதவி' என்று பொருள். இரபேல் இங்கே செய்வதும் 'உதவிதானே.' 'அனனியா' என்றால் 'யாவே இரக்கமுள்ளவர்' என்று பொருள்.இரபேல் இங்கே கடவுளின் இரக்கத்தைக் காட்டத்தானே வருகின்றார். மக்கள் நாடுகடத்தப்படுகிறார்கள் என்றால் அங்கே கடவுளும் அவர்களுடன் செல்கிறார். ஆக, இரபேலும் நப்தலிக்கு நாடுகடத்தப்பட்டவர் என்று சொல்வது உண்மையே.

இ. 'ஏமாற்றுதல்' என்னும் இலக்கியக்கூறு. 'தன் பக்தர்களை சோதிக்க கடவுள் அவர்களை ஏமாற்றும் உருவில் வருதல்' என்பது பல சமய இலக்கியங்களில் உள்ள ஒரு கூறு. சிவபெருமானின் திருவிளையாடல்களில்கூட இதை நாம் பார்க்கின்றோம். இங்கே இரபேல் உதவி செய்வதற்காக வந்தாலும், தோபித்து குடும்பத்தில் துலங்கிய உண்மையையும், நீதியையும் சோதிக்க வருகின்றார்.

என்னதான் காரணம் சொன்னாலும், பேசுபவரின் நோக்கத்தையும், இடத்தையும் பொறுத்து பொய்யும் உண்மையாகலாமா? என்பது கேள்விக்குறியே.


Thursday, February 25, 2016

நலமே சென்று வருக!

'தோபியாவின் பயணத்தைப் பாதுகாத்த, சாராவின் பேயை ஓட்டிய, தோபித்து பார்வை பெற உதவிய அந்த இளம் வழிப்போக்கன் யார்?' என்ற கேள்விக்கான விடையாக இருக்கிறது தோபித்து நூல் பிரிவு 12.

1. எவ்வளவு சம்பளம்?

நூல் முழுவதும் தோபித்து நீதியானவராகக் காட்டப்படுகிறார். நீதி என்பது 'அவரவருக்கு உரியதை அவரவருக்கு கொடுப்பது.' உதாரணத்திற்கு, என் அலுவலகத்தில் அல்லது வீட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு, அவரின் திறமை மற்றும் அவர் செலவழித்த ஆற்றல், நேரத்திற்கு ஏற்ப அவருக்கான கூலியை நான் கொடுக்க வேண்டும். குறைவான கூலி கொடுத்துவிட்டு, அதிகமாக வேலை வாங்குகிறேன் என்றால், அவருக்குரியதை நான் அவருக்கு கொடுக்கவில்லை என்றே அர்த்தம்.

இரபேல் வெறும் வழித்துணையாக மட்டும் இல்லாமல், தோபியாவின் திருமணம் நடைபெறவும், தோபித்து பார்வை பெறவும் காரணமாக இருந்திருக்கிறார்.

அவருக்குரியது அவர் கொண்டு வந்ததில் பாதி. அதாவது, ஐந்து தாலந்து (காண். 4:20).

2. நான் யார்?

'கடவுளின் தூதருக்கே இந்த மனிதர்கூட்டம் சம்பளம் பேசுகிறதே!' என மனதிற்குள் சிரித்திருப்பார் இரபேல். தோபித்தையும், தோபியாவைம் தனியே அழைத்து தான் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அன்னா மற்றும் சாரா இந்தக் காட்சிக்குள் வரவில்லை. 'பெண்கள் இறைவனின் வெளிப்பாட்டை ஏற்கத் தகுதியில்லாதவர்கள்' என்பது இந்த நூல் எழுதப்பட்டபோது இருந்த '(மூட)நம்பிக்கை.' (ஆனால், சிம்சோனின் பிறப்பு பற்றிய அறிவிப்பு மனோவாகுவின் மனைவிக்குதான் அருளப்படுகிறது - நீத 13:3) ஆகையால், அன்னாவையும், சாராவையும் ஓரங்கட்டிவிடுகின்றார் ஆசிரியர்.

இரபேலின் வெளிப்பாடை இரண்டு பகுதிகாளப் பிரிக்கலாம்:

அ. அறிவுரைப் பகுதி
'நான்தான் தூதர்' என முதலில் சொல்லாமல், அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறார் இரபேல். அவர் சொல்லும் அறிவுரைகள் நான்கு:

- கடவுளைப் போற்றிப் புகழுங்கள். அவரின் பெயரை அறிக்கையிடுங்கள்
- நல்லது செய்யுங்கள். தீமை உங்களை அணுகாது
- செல்வத்தைவிட செபம் மேலானது
- நீதியைவிட தர்மம் மேலானது

ஆ. வெளிப்பாட்டுப் பகுதி

தொடர்ந்து தன் இயல்பு மற்றும் குணத்தை நான்கு வாக்கியங்களில் வெளிப்படுத்துகின்றார் இரபேல்:

- நான் வேண்டுதல்களை கடவுளிடம் எடுத்துச் செல்பவர்
- மனிதர்களைச் சோதிப்பவர்
- நலம் அருள்பவர்
- கடவுளின் திருமுன் நிற்கும் ஏழு வானதூதர்களில் ஒருவர்

(யூதர்கள் ஏழு அதிதூதர்கள் இருப்பதாக நம்பினர். மற்ற ஆறு பேரின் பெயர்கள்: 'கபிரியேல், மிக்கேல், உரியேல், இரகுவேல், ரமியேல், சரியேல்.' இந்த ஏழுபேரின் பெயர்களும் 'முதலாம் ஏனோக்கு' என்ற நூலில் வழங்கப்பட்டுள்ளன)

('தூபம் போல் என் செபம் உன் திருமுன் எழுவதாக' - திபா 141:2 என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார். வேளாங்கண்ணி மாதாவின் ஃபோட்டோக்களில் தூபத்தோடு வானதூதர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். தூபம் இங்கே செபங்களைக் குறிக்கின்றது. இரபேல் தூதரும் செபங்களை தூபமாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்)

3. 'நீங்கள் கண்டதெல்லாம் காட்சியே'

'நான் உண்டதுகூட காட்சியே!' என்கிறார் இரபேல். காணுகின்ற எல்லாவற்றையும் 'காட்சிப்பிழை' என்று பாரதியாரும், 'கண்ணாடியில் காண்பது போல மங்கலாகக் காண்கிறோம்' என்று பவுலடியாரும் சொல்கின்றனர். வாழ்வின் எதார்த்தங்கள் நம் உடல்கண்களுக்கு புலப்படுபவை அல்ல. அல்லது உடல்கண்களுக்கு புலப்படுபவை மட்டுமே எதார்த்தங்கள் அல்ல. நாம் காணமுடியாத உணர்வுகளும், எதார்த்தங்களுமே நம் வாழ்விற்கு அதிக அர்த்தங்கள் தருகின்றன.

4. 'இரபேலைக் காணமுடியவில்லை'

ஆம். இரபேல் மறைந்துவிட்டார். இனி தோபித்தும், தோபியாவும் ஒருவர் மற்றவரில் அந்த தூதரைக் காணவேண்டும். நாம் பிறந்தபோது ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு காவல்தூதரை தந்து நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகிறார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இந்த தூதர்கள் சில நேரங்களில் காணக்கூடிய நம் உறவுகளாகவும் இருக்கின்றார்கள்.

5. 'நலமே சென்று வருக!'

தோபியா இரபேலைப் பார்த்துச் சொல்லும் இந்த வாக்கியத்திற்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம்: (அ) பத்திரமாய் போய் வருக! (ஆ) இரபேல் என்னும் நலமே, சென்று வருக! - இரபேல் என்றால் நலம் என்றுதானே அர்த்தம்.


Wednesday, February 24, 2016

என் கண்ணின் ஒளியே

தோபியா நினிவே திரும்புவதையும், தோபித்துக்குப் பார்வை திரும்புவதையும் நமக்குச் சொல்கிறது தோபித்து நூல் பிரிவு 11.

அல்லது தோபியா நினிவே திரும்பியதால், தோபித்துக்கு பார்வை திரும்பியது என்றும்,

அல்லது தோபித்தின் கண்களின் ஒளியான தோபியா தன் இல்லம் திரும்பியது என்றும் சொல்லலாம்.

1. 'வீட்டை ஒழுங்குபடுத்துவோம்!'

இரகுவேல்-எதினா கண்ணீர் மல்க, தன் மகளையும்-மருமகனையும் வழியனுப்புகின்றனர். இரபேலும், அவர்களோடு சென்ற நாய்க்குட்டியும் உடன் சென்றது என்று குறிப்பிடுவதன் வழியாக, கொண்டு சென்றதில் எதுவும் குறைவுபடவில்லை என்கிறார் ஆசிரியர். இரபேல் தூதர் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியும், அடுத்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியுமே எண்ணிக்கொண்டிருக்கிறார். சாரா தோபியாவின் இல்லத்திற்குள் நுழையும் போது, அவரின் தந்தை பார்வையற்றவராக இருந்தால் மனம் வருந்துவார் எனவும், மேலும் தோபித்து பார்வை அற்று இருந்ததாலும், அன்னா நகரத்தின் வாயிலிலேயே காத்துக்கிடந்ததாலும், வீடு ஒழுங்கற்று இருக்கும் என எண்ணுகின்ற இரபேல், 'வீட்டை ஒழுங்குபடுத்துவோம்!' என தோபித்தை மட்டும் கூட்டிக்கொண்டு விரைகிறார். சாரா அன்னநடை போட்டு மெதுவாக வருகின்றார்.

நம் வாழ்விலும் 'வீட்டை ஒழுங்குபடுத்துதல்' அவசியம். நாம் இருக்கும் வீடு, பணிசெய்யும் அறை, என வெளிப்புற வீடு மட்டும் இல்லாமல், நம் மனம் என்னும் வீட்டையும் அடிக்கடி ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையானதை தக்கவைத்துக்கொண்டு, தேவையற்றதை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்றுக் கிடப்பதை முறைப்படுத்த வேண்டும்.

2. 'மகன் வருகிறான். உடன் சென்றவரும் வருகிறார்!'

தன் மகன் வருவதை தூரத்திலேயே பார்த்துவிடும் அன்னா ஓடிச்சென்று தன் கணவனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் தன் மகனை நோக்கி ஓடிச்சென்று, ஆரத்தழுவிக்கொள்கின்றார். 'மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்!' என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார்.

3. 'முற்றத்தில் மீண்டும்'

தோபித்து தட்டுத்தடுமாறி முற்றத்திற்கு வருகின்றார். எங்கே அவருக்கு பார்வை பறிபோனதோ, அங்கேயே அவருக்கு பார்வை கிடைக்க இறைவன் திருவுளம் கொள்கிறார். இரபேல் சொன்னதுபோல, மீனின் பித்தப்பையை தோபியா தன் தந்தையின் கண்களில் வைக்கிறார். 'கண்களின் ஓரத்திலிருந்த படலைத்தை அப்படியே,' கேடராக்ட் அறுவைச்சிகிச்சை செய்வது போல உரித்தெடுக்கிறார். தோபித்தின் கண்கள் முதலில் பார்த்தது தோபியாவைத்தான். 'என் மகனே! என் கண்ணின் ஒளியே! உன்னைப் பார்த்துவிட்டேன்!' என்று பூரிப்படைகின்றார். தொடர்ந்து கடவுளைப் போற்றுகின்றார். அவரின் புகழ்ப்பாடலில் 'வானதூதர்' என்ற பெயரை இரண்டுமுறை குறிப்பிடுகின்றார்.

4. 'வெற்றித்திருமகள்'

பயணம் வெற்றியானது, பணம் திரும்ப கிடைத்தது என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து தான் இரகுவேலின் மகள் சாராவை மணம் முடித்ததையும் தன் தந்தையிடம் சொல்கிறார் தோபியா.

5. 'மணமகளே! மருமகளே வா!'

தோபித்து கண்பார்வை பெற்றவராக, யாருடைய துணையுமின்றி நடப்பதைக் காண்கின்ற மக்கள் வியந்தபோது, அவர்களிடம் கடவுளின் இரக்கத்திற்குச் சான்ற பகர்கின்றார். 'உன் வீட்டிற்குள் வா!' என்று தன் வீட்டை, தன் மருமகளின் வீடாக்குகின்றார். 'நலம், பேறு, மகிழ்ச்சி!' - இம்மூன்றும் உன்னோடு வரட்டும் என்று வரவேற்கின்றார்.

'இந்த நாள் இனிய நாள்'

சாராவுக்கு திருமணம் நடந்துவிட்டது.
தோபித்துக்கு பார்வை கிடைத்துவிட்டது.
'சுபம்' என்று நூல் இங்கே முடிந்தாலும், இன்னும் வாசகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி மனத்தில் இருக்கிறது: 'யார் இந்த வழிப்போக்கன்?'


Tuesday, February 23, 2016

வழிமேல் விழி

தோபித்து நூல் 10ஆம் பிரிவில் ஒரே நேரத்தில் இரண்டு மேடைகளில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

மேடை 1: தோபியாவின் வீடு

தோபித்தும், அன்னாவும் தங்கள் மகன் தோபியா இன்னும் ஊர் திரும்பாததை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். தன் மகன் இன்னும் திரும்பவில்லையே என எண்ணுகின்ற தோபித்தின் உள்ளத்தில் நிறைய கேள்விகள்: 'ஒருவேளை அங்கு தாமதம் ஆகிவிட்டதோ? கபேல் இறந்திருப்பாரோ? தோபியாவுக்குப் பயணம் கொடுக்க யாரும் இல்லையோ? பாதை தவறிவிட்டார்களோ? வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ?' கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன. ஆனால், அன்னா முடிவே எடுத்துவிட்டார்: 'ஐயோ! என் மகன் இறந்துவிட்டான்!' பெண்கள் அவசரப்பட்டு முடிவெடுப்பது அவர்களின் டிஎன்ஏவில் இருக்கும் ஒரு குணமோ! தன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள் இருப்பினும், தன் மனைவிக்கு நேர்முகமான பதிலையும், நம்பிக்கையையும் தருகின்றார் தோபித்து. ஆனால், அன்னா புத்திசாலி. அவளுக்கு வெற்றுச் சமாதானம் ஏற்புடையதாக இல்லை. தன் மகனைக் கண்ணால் கண்டு, கையால் தொட்டால்தான் நம்புவேன் என அடம்பிடிக்கிறாள். பெண்கள் கண்ணால் காணாத ஒன்றைவிட, காணக்கூடிய ஒன்றாலேயே அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத தத்துவ அறிவை விட, கண்ணுக்குப் புலனாகும் தோட்டத்து மலரே அவர்களை ஈர்க்கிறது. மேலும், அன்னா தன் மகன் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். பகலெல்லாம் பாதையில் தவம் கிடக்கிறார். இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டிருக்கிறார் அந்த ஏழைத்தாய். பகலின் விழிப்பும், இரவின் உறக்கமின்மையும், அவள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் காட்டுகிறது.

மேடை 2: சாராவின் வீடு

பதினான்கு நாட்கள் 'சாராவும், சாரா சார்ந்த இடமும்' என வாழ்ந்த நம் இளவல் தோபியாவுக்கு இப்போதுதான் மயக்கம் தெளிகிறது. தன் தந்தையும், தாயும், அவர்களின் காத்திருத்தலும் நினைவிற்கு வருகின்றன. மெதுவாக கண்களைக் கசக்கிக்கொண்டே, 'ஆமா! நான் எங்கே இருக்கிறேன்!' என கேட்கிறார் தன் மாமாவிடம். 'மருமகனே! நீ இங்கதான்டா இருக்க! இன்னும் கொஞ்ச நாள் இருடா! உங்க அப்பா-அம்மாகிட்ட தூதர்களை அனுப்பி ஆறுதல் சொல்கிறேன்!' என தன் மகளைப் பிரிய மனமில்லாத இரகுவேல் புதிய பிட்டைப் போடுகின்றார். 'நான் போயே ஆகவேண்டும்!' என அடம் பிடிக்கிறார் தோபியா. இரபேல் கொஞ்சம் பயந்திருப்பார். 'பயபுள்ள நம்மள கபேலிடம் அனுப்பி காசு வாங்கி வரச் சொன்னதுபோல, சாராவுடன் இருக்கிறேன் என சொல்லி, இப்போ தோபித்திடமும் அனுப்பி வைப்பார்களோ!' என எண்ணியிருப்பார். தன் மருமகன் அடம் பிடிப்பதைப் பார்த்த இரகுவேல்-எதினா, மருமகனையும், தன் மகள் சாராவையும் வழியனுப்ப தயாராகின்றனர்.

இரகுவேல் - எதினா ஆசியுரைகள்

'ஆண்-பெண்' இணைதலை மிக அழகாக இங்கே பதிவு செய்கின்றார் ஆசிரியர். அதாவது, இரகுவேல்-ஆண், சாரா-பெண்ணுக்கும், எதினா-பெண், தோபியா-ஆணுக்கும் ஆசி அளிக்கின்றனர்.

'நலமுடன் போய் வா!' என இருவரும் வாழ்த்துகின்றனர். இருவரின் ஆசியுரைகளிலும் குழந்தைப்பேறு முதன்மையாக இருக்கின்றது. இரண்டுபேருமே மனநிறைவு பெற்று வாழுமாறு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த ஆசியுரைகள் நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. 'கட்டியணைக்க ஒரு நேரம். விட்டுப்பிரிய ஒரு நேரம்.' கட்டியணைக்கும் நாம் அனைவரும் விட்டுப்பிரிய வேண்டும் என்பதே வாழ்க்கை நியதி. இவை இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றை எடுக்கும்போது மற்றொன்றும் கூடவே வந்துவிடுகிறது. ஒரே இடத்தில்; இருப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியம் அந்த இடத்தை விட்டு நகர்வது. 'நான் இங்கேயே இருக்கவா!' என்று நம் அன்பிற்குரியவரிடம் கேட்பதைப் போல, அவரிடம் 'நான் போய்ட்டு வரவா!' என்று கேட்கவும் வேண்டும். பதினான்கு நாட்கள் நடந்த விருந்தும், உபசரிப்பும், விருந்தினர்கள் மற்றும் நண்பர்களின் உடனிருப்பும் உற்சாகம் தந்தாலும், இந்த உற்சாகத்திலேயே உட்கார்ந்துவிட முடியுமா? இல்லை. 'கப்பல்கள் கட்டப்படுவது துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு அல்ல, கடலில் பயணம் செய்யவே' என்பார்கள். துறைமுகத்தின் இதமும், பாதுகாப்பும் இனிமையாக இருந்தாலும், கப்பல் கட்டப்பட்டதன் நோக்கம் அதுவல்லவே. இனி தோபியா-சாரா புதிய பயணத்தை தொடங்க வேண்டும்.

2. 'என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக!'
நீ 'நற்பேறும் நலமும் பெறுவாய்!' என்று திருப்பாடல் 128:2ம் நற்பெயரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. புதிய வீட்டிற்கு மருமகளாய் செல்பவள் எப்படி இருக்க வேண்டுமாம்? நற்பெயரோடு இருக்க வேண்டுமாம். அதாவது, 'இவள் நல்ல பொண்ணு!' என்ற பெயர் எடுக்க வேண்டும். 'அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்பதெல்லாம் எனக்கு முக்கியமல்ல. நான் நானாத்தான் இருப்பேன்!' எனச் சொல்லத் துடிக்கும் இந்தக்காலத்து மருமகள்கள் கொஞ்சம் இந்த வார்த்தைகளை நினைவில் கொள்தல் நலம்.

3. 'உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளும்!'
இது எதினா, தோபியாவிடம் சொல்லும் வார்த்தை. 'என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில் இனி நான் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்க வேண்டும்' என்று சொல்வதைவிட, ஒருபடி போய், 'வெங்காயம், வெள்ளைப்பூண்டு உரிக்கும்போதுகூட கண்ணீர் வரக்கூடாது!' என்கிறார் எதினா. பெண்கள் ஆண்களை விட எளிதாகக் கண்ணீர் விடக் கூடியவர்கள். 'நான் 10 மணிக்கு உன்னைப் பார்க்க வருகிறேன்!' என நண்பியிடம் சொல்லிவிட்டு, 'நான் வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகலாம்!' என மெசேஜ் அனுப்புங்களேன். அடுத்த பக்கம் உடனே கண்கள் கலங்கிவிடும். ஆக, பெண்களுக்கு கண்ணீர் வருவதற்கு முதல் காரணம் ஏமாற்றம். 'எள்ளளவும் என் மகளை எதிலும் ஏமாற்றிவிடாதே!' என்று தோபியாவிடம் உருகுகிறாள் எதினா.

4. 'மனநிறைவோடு போய்வா!'
இல்லற வாழ்வின் நிறைவு 'பணநிறைவு' அல்ல. 'மனநிறைவே!' திருமணத்தில் 22ஆம் நாள் என்று ஒன்று உண்டு. அதாவது, திராட்சை ரசம் குறையத் தொடங்கும் நாள் அது. 21 நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும். புதிய வாழ்க்கைத் துணை, புதிய ஸ்பரிசம், புதிய உரையாடல், புதிய சாப்பாடு டேஸ்ட், புதிய வீடு, புதிய பாத்திரம், புதிய ஆடைகள் என த்ரில்லிங்காக இருக்கும் நிலை மறைந்து, எல்லாம் பழையதாகத் தொடங்கும் நாள்தான் 22ஆம் நாள். ஒவ்வொன்றிலும் குறைகள் தெரியத்தொடங்கும் நாள் அது. மனநிறைவு உள்ளவரால்தான் அந்த நாளைக் கடக்க முடியும்.

5. 'உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி'
தோபியா தான் பெற்ற ஆசீருக்கு காணிக்கையாக, தன் மரியாதையை அவர்களுக்கு பரிசளிக்கின்றார். மேலிருப்பவர் கீழிருப்பவரை வாழ்த்துவதும், கீழிருப்பவர் அதற்கு காணிக்கையாக மேலிருப்பவருக்கு தன் மரியாதையையும், மதிப்பையும் அளிப்பதும் எபிரேய மற்றும் தமிழ் வழக்கம்.

மேற்காணும் ஆசியுரைகள் இல்லற வாழ்க்கை நிலைக்கு மட்டும்தான் பொருந்துமா? இல்லை.

2009ஆம் ஆண்டு ஏப்பிரல் 18ஆம் தேதி, சனிக்கிழமை. அடுத்த நாள் மாலை நான் அருட்பணியாளராக திருப்பொழிவு செய்யப்படவிருக்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, 'எல்லாம் நல்ல படியா நடக்கட்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். என்னை ஆசீர்வதியுங்கள்' என என் அம்மா முன் நின்றேன். தங்கையும் வீட்டில் இருந்தாள். 'அப்பாவின் கல்லறை வரை போவோம்! வா!' என்று என்னை அழைத்துக்கொண்டு ஏறக்குறைய 700 மீட்டர் நடத்திச் சென்றார் அம்மா. வழக்கமாக அப்பாவின் கல்லறைக்குச் செல்லும்போதெல்லாம், என்னோடு சேர்ந்து அப்பாவின் காலருகில் நிற்கும் அம்மா, அன்று என்னை கால்மாட்டில் நிற்க வைத்துவிட்டு, அவர் தலைமாட்டில் நின்றுகொண்டார். மதிய வெயில் நன்றாக அடித்துக்கொண்டிருந்தது. 'காலணிகளைக் கழற்றி நில்!' என்று சொன்னவர், தன் உதடுகளை அசைத்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டார். இடையிடையே கண்களில் கண்ணீரும் நிறைந்து வழிந்தன. இறுதியாக, கல்லறையில் மண்ணை எடுத்து, என் நெற்றியில் இட்டு, 'போய் வா!' என்றார்.

தன் மகனை கடவுளின் மருமகனாக, மதுரை உயர்மறைமாவட்டத்தின் மருமகனாக, மகனாக அனுப்பி வைத்த அவரின் உதடுகளிலும், அமைதியாக ஆழ்துயில்கொண்டிருந்த என் அப்பாவின் உதடுகளிலும், இரகுவேல்-எதினாவின் வார்த்தைகள்தாம் இருந்திருக்கும்:

அ. 'என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக!'

ஆ. 'உன்னிடம் ஒப்படைக்கப்படும் மக்களின் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்! நீயும் யார் கண்ணீருக்கும் காரணமாகிவிடாதே!'

இ. 'மனநிறைவோடு போய் வா!'

நற்பேறு, நன்னடத்தை, மனநிறைவு - இம்மூன்றும் இல்லறம், துறவறம் என்ற இரண்டு வாழ்க்கை நிலைகளுக்கும் பொருந்துமே!



Monday, February 22, 2016

கடன்பட்டார் நெஞ்சம்

'இரண்டு கார் வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இருக்கும்போது ஒரு கார் வாங்கு!' என்பதும், 'ஒட்டாக முடிவெட்டுவதும், நீளமாக சட்டை தைப்பதும் என் அப்பா காலத்து பொருளாதார தத்துவங்கள்.

'மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்து மூன்று ஆண்டுகள் இறுதியில் கார் வாங்கு!' என்று சொல்லும் அப்பாவிடம், 'இன்று காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் தவணையாக மூன்றாண்டுகளுக்கு கட்டிவிடலாம்' என்று மகன் சொல்வது இந்தக் கால பொருளாதார தத்துவம்.

இன்று கடன் அட்டைகள் அதிக புழக்கத்தில் உள்ளன. 'இன்று பொருளை வாங்கு! இன்று சந்தோஷமாக இரு! நாளை பணம் கட்டு!' என்று வங்கிகளும், நிறுவனங்களும் நம்மை தூண்டில்போட்டு இழுக்கின்றன.

கடன்படுதல் என்பது மிகப்பெரிய வேதனையைத்தான் தருகின்றது. கடன்பட்டார் நெஞ்சம் எப்போதும் 'வாழ்வா-சாவா' என்ற போராட்டத்திலேயே இருக்கும் என்பதை கம்பரும் எடுத்துச் சொல்கின்றார். இலங்கை வேந்தன் இராவணனுக்கு எதிராக இராமனின் ஆயுதங்களும், படையும் எழுந்தபோது இலங்கை வேந்தன் பட்ட மனத்துயரை பின்வருமாறு வர்ணிக்கிறார் கம்பர்:

'விடம்கொண்ட மீனைப்போலும் வேந்தழல் மெழுகுபோலும்
படம்கொண்ட பாந்தள்வாயிற்பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத் துற்றபோது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன்'

(விஷம்உண்ட மீன் எப்படி துடிக்குமோ, நெருப்பில் விழுந்த மெழுகு எப்படி உருகுமோ, பாம்பின் வாயில் சிக்கிய தேரை என்ன பாடுபடுமோ, கடன்பட்டவர் எப்படி பதைபதைப்பார்களோ, அப்படி பதறினான் இலங்கை வேந்தன்)

தோபித்து நூலில் வரும் கபேல் எதற்காக தோபித்திடம் இவ்வளவு பெரிய தொகை கடன்பட்டார் எனத் தெரியவில்லை.அவர் நெஞ்சமும் பதைபதைத்துக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். தான் பட்ட கடனை அடைக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார் கபேல். பணம் முத்திரையிடப்பட்டு தயாராக இருக்கிறது. அதைக் கொண்டு போய்ச் சேர்ப்பதே இப்போது எஞ்சியிருக்கும் வேலை.

கபேலிடமிருந்து தோபியா (ரபேலை அனுப்பி) கடனைத் திரும்ப பெறும் நிகழ்வை தோபித்து நூல் 9ஆம் பிரிவில் நாம் வாசிக்கின்றோம்.

இரகுவேல் தன் மருமகன் தோபியா தன்னைவிட்டு 14 நாட்கள் எங்கும் போகக்கூடாது என கட்டளையிட்டுவிட்டார். செல்லக்கிளி சாராவைக் காணாமலேயே காதலில் விழுந்தவர், அவரைக் கண்டவுடன் சிறிதளவேனும் அவரை விட்டுப் பிரிய மறுக்கிறார்.

இந்த இடத்தில் கல்கி, 'பார்த்திபன் கனவில்' பதிவு செய்யும் ஒரு வரி நினைவிற்கு வருகிறது: 'இரும்பு வலிமையானதுதான். அதை யாராலும் வளைக்க முடியாதுதான். ஆனால், காந்தத்தின் முன் இரும்பு தன் வலிமையை முழுவதும் இழந்துவிடுகிறது. காந்தம் செல்லும் திசையில் இரும்பும் செல்ல ஆரம்பிக்கிறது.'

தோபியா என்ற இரும்பு, சாரா என்ற காந்தத்தால் ஈர்க்கப்பட்டுவிட்டது. தானும் போகக்கூடாது, வேலையும் நடக்க வேண்டும் என நினைக்கும் தோபியா, 'இரபேல் அண்ணா! நீங்க போய் வாங்கிட்டு வாங்களேன்!' என்கிறார்.

தோபியா அண்ணனுக்கு இரண்டு அன்புக்கட்டளைகள் இடுகின்றார்: (அ) பணத்தை வாங்கி வாருங்கள், (ஆ) கபேலையும் திருமணத்துக்கு அழைத்து வாருங்கள்.

இப்படியாக, அவர் பணத்தைப் பெற்ற மாதிரியும் ஆயிற்று. கபேலைப் பார்த்தது மாதிரி ஆயிற்று. ஒரே கல்லில் மூன்று மாங்காய்? பணம் முதல் மாங்காய். கபேல் இரண்டாம் மாங்காய். அதென்ன மூன்றாம் மாங்காய்? சாராவுடன் இணைந்திருக்க முடிகின்ற இந்த தருணமே அது.

அ. சென்றார், வென்றார்

'நான்கு பணியாளர்கள், இரண்டு ஒட்டகங்களோடு இரபேல் சென்றார்' என்று ஆசிரியர் எழுதுவது, பணத்தின் மதிப்பை குறிக்கிறது. அதாவது, கடன்தொகையைப் பெற்று தூக்கிக்கொண்டு வருவதற்கு இவ்வளவு மனித மற்றும் ஒட்டக ஆற்றல் தேவைப்பட்டது. ஆவணத்தைக் காட்டி பணம் திரும்பப் பெறப்படுகிறது.

ஆ. வந்தார், வாழ்த்தினார்

தோபியாவின் திருமண நிகழ்வில் பங்கேற்க உடனே புறப்பட்டு வருகின்றார் கபேல். வந்தவர் வாய்நிறைய வாழ்த்துகிறார்: 'நல்லவனே, சிறந்தவனே' என தோபியாவையும், 'நன்மையும், சிறப்பும், நேர்மையும், வள்ளன்மையும் உள்ளவர்' என தோபித்தையும் ஒருசேர வாழ்த்துகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறது:

1. பணியைப் பகிர்ந்தளிப்பது. இது ஒரு முதன்மையான மேலாண்மையியல்பாடம். அலுவலகத்தில் நாம் செய்யும் பணியிலிருந்து, நம் மொபைல்ஃபோனுக்கு டாப்-அப் செய்வது வரை எல்லாவற்றையும் 'நானே செய்வேன்' என நினைத்து, மாய்ந்து மாய்ந்து வேலை செய்வது தவறு. நம்மை அறியாமல் நாம் பணியைப் பகிர்ந்தளிக்கவும் செய்கிறோம். உதாரணத்திற்கு, நம் உறவினர்கள் அல்லது நண்பர்களின் பிறந்த நாள் மற்றும் வீட்டு வைபவங்களுக்கு பரிசை நாம் அஞ்சல்வழி அனுப்புகிறோம். நாமே நேரிடையாக செல்ல முடியாதபோது, அந்த வேலையை நாம் அஞ்சல் அலுவலகத்தோடு அல்லது கூரியர் சேவையோடு பகிர்ந்துகொள்கிறோம். தோபியா தன் பணியை இரபேலோடு பகிர்ந்து கொள்கின்றார்.

2. நேர்மையும், நாணயமும். இந்த இரண்டும் இருந்தால் மனிதர்களும், வானதூதர்களை வேலை வாங்கலாம். நூலின் இந்தப் பிரிவை வாசித்தவுடன் எனக்கு சுருக்கென்றது. அதாவது, தன் வேலையை எல்லாம் விட்டுவிட்டு வந்த வழிப்போக்கன் ஒருவரை, தன் திருமண நிகழ்வின் மகிழ்ச்சி தடைபட்டுவிடக் கூடாது என்ற 'தன்னலத்தில்' தோபியா, இரபேலிடம் வேலை ஏவுகின்றார். இது எப்படி நியாயமாகும்? ஆனால் இதன் அர்த்தம் என்னவென்றால், நேர்மையும், நாணயமும் நம்மிடம் இருந்தால் நாம் வானதூதர்களுக்கும் கட்டளையிட முடியும். அவர்களும் நம் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பர்.

3. தயார்நிலையில் கடன். 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' (உரோ 13:8) என எழுதிகிறார் பவுல். நாம் படும் எந்தக் கடனையும் உடனே முத்திரையிட்டு திரும்பச் செலுத்தும் தயார்நிலையில் இருக்க வேண்டும். மேலும், சில நேரங்களில் வாழ்வில் நாம் படும் கடன்களை திரும்பச் செலுத்த முடியாது என்பதையும் உணரும் ஞானம் வேண்டும்.


Sunday, February 21, 2016

அயர்ந்த தூக்கம்

'இறந்துவிடுவார் என நினைத்தார்கள். ஆனால் அவர் தூங்கிக்கொண்டிருந்தார்.'

இப்படித்தான் சொல்ல வேண்டும் தோபித்து நூல் 8ஆம் பிரிவை.

சாராவின் கையையும், தோபியாவின் கையையும் ஒருசேரப் பிடித்து திருமணத்தை நடத்திவைத்தார் இரகுவேல்.

1. 'பெற்றோர் உறங்க விரும்பினர்'

'சாரா-தோபித்து' முதலிரவுக் காட்சியை இப்படித்தான் பதிவு செய்கின்றார் ஆசிரியர். 'இந்தத் திருமணம் நிறைவடையுமோ, அல்லது இந்த மணமகனும் இறந்துவிடுவாரா?' எனக் கலங்கிக்கொண்டிருக்கும் இரகுவேல்-எதினாவின் கண்களுக்கு தூக்கம் எங்கிருந்து வந்தது? 'உறக்கம்' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தி, மணமக்களும் இனிதே உறங்குவார்கள் என்ற செய்தியை வாசகருக்கு முன்வைக்கின்றார் ஆசிரியர்.


2. 'இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து'

மணவறைக்குள் நுழைந்த தோபியா செய்யும் முதல் வேலை மீனின் ஈரலையும், இதயத்தையும் நெருப்பில் போட்டு பேயை விரட்டுவது. வீட்டைவிட்டு வெளியே வந்த பேயை இரபேல் எகிப்து நோக்கி ஓட்டிக்கொண்டு போய் அங்கே விலங்கிடுகிறார். 'எகிப்து' இங்கே இஸ்ரயேலர்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்ற 'விலங்கை' நினைவுபடுத்துகிறது.

3. 'தோபியா-சாரா மன்றாட்டு'

தோபியாவும், சாராவும் எழுந்துநின்று மன்றாடுகின்றனர். மூன்று விடயங்களை இங்கே கவனிக்க வேண்டும்:

(ஆ) எழுந்து நின்று செபித்தல் - முழுமையான கட்டின்மையை இது குறிக்கிறது. அமர்வதும், படுத்திருப்பதும் ஒருவகையான அடிமைத்தனத்தை குறித்தது பண்டைக்காலத்தில். அடிமைகளை ஓரிடத்திலிருந்து, மற்ற இடத்திற்கு அமர வைத்தும், படுக்க வைத்தும் (சில நேரங்களில் இடத்தை சேமிப்பதற்காக நிற்க வைத்தும்) கடத்தினர். மேலும் நிற்கும்போது நாம் உயர்ந்து நிற்கிறோம். ஆக, நம் எண்ணங்கள் இறைவனுக்கு இன்னும் நெருக்கமாகின்றன.

(ஆ) தொடக்கநூலில் படைப்பின் நோக்கம். ஆண்-பெண் படைப்பு பற்றி தொடக்கநூலில் சொல்லியிந்ததை இருவரும் நினைவுகூறுகின்றனர்.

(இ) இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். ஒருவர் மற்றவரைத் தழுவுதலின் நோக்கம் என்ன என்பதை இங்கே காண்கிறோம்.

4. 'எட்டிப்பார்த்த பணிப்பெண்'

முன்இரவில் துயில் எழும் இரகுவேல் தன் மனைவி எதினாவை எழுப்ப, எதினா பணிப்பெண்ணை எழுப்ப, பணிப்பெண் கையில் விளக்கோடு மெதுவாக அறைக்குள் சென்று பார்க்கிறாள். ஒருவேளை தோபித்து இறந்துவிட்டால், யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுவதற்கே இந்த முயற்சி. 'இறந்து போயிருப்பார்' என நினைத்து, எட்டிப்பார்த்த பணிப்பெண், 'அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்' தோபியாவை ஆச்சர்யத்தோடு பார்த்திருப்பார். 'அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்' என்று வாசிக்கும் வாசகரின் உதட்டில் ஒரு புன்னகை வந்துபோகும்.

5. 'இரகுவேலின் பாட்டு'

தன் மருமகன் நலமே உள்ளார் என அறிந்த இரகுவேல் கடவுளின் இரக்கத்தைப் புகழ்ந்து பாடுகின்றார். தோபியா-சாரா, இரகுவேல் என இருவரின் மன்றாட்டுக்களிலும், 'இறைவனின் இரக்கமே' மேலோங்கி இருக்கின்றது. அதாவது, வாழ்வில் நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்குக் காரணம் இறைவனின் இரக்கமே என்பதை தோபித்து நூல் அழகாக பதிவு செய்கின்றது.

6. 'பதினான்கு நாள்கள்'

திருமண விழா இனிதான் ஆரம்பம். வழக்கமாக யூத பாரம்பரியத்தில் ஏழு நாட்கள் திருமண விழா நடக்கும். ஆனால், இங்கே புதுமையான முறையில் மருமகன் காப்பாற்றப்பட்டதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. பதினான்கு நாட்கள் விழா எடுக்கின்றார் இரகுவல். சாரா வாழ்வு இவ்வளவு நாட்கள் சுரங்கப்பாதை இருட்டாய் இருந்தது. இப்போது இறுதியில் ஒளி தோபியா வடிவில் வந்திருக்கிறது. சாராதான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பாள். தூக்கு போட்டு இறக்கும் அளவுக்குச் சென்றவளுக்கு, இந்த புதிய மகிழ்ச்சி அவளை திக்குமுக்காடவைத்திருக்கும்.

7. 'தம்பி...இனி நீ என் மகன்;!'

மருமகனை மகனாக்கிக்கொள்கிறார் இரகுவேல். மாமனார்-மருமகன் உறவு, தந்தை-மகன் உறவு என மாறுகிறது. 'என் மகள், நாங்கள், எங்களின் உடைமைகள் அனைத்தும் இனி உனதே!' என அனைத்தையும் தாரை வார்க்கின்றார் இரகுவேல். ஏனெனில் தோபியா, நிறைவுற்ற இந்த திருமண உறவின் வழியாக, இரகுவேல்-எதினா குடும்பத்தின்மேல் இருந்த பழிச்சொல்லையும், கேலிப்பேச்சையும் துடைக்கின்றார்.


Saturday, February 20, 2016

உடற்சாடல் பிண்ணனி

பக்தி இலக்கியங்களில் காணப்படும் ஒரு முக்கியமான கூறு உடலைச் சாடுவது.

எடுத்துக்காட்டாக, புனித அகுஸ்தினாரின் 'Confessions' நூலில், அவர் உடலை சாடுகின்றார். உடலைப் பாவத்தைத் தூண்டும் ஒரு காரணியாகவே பார்க்கின்றார்.

இந்தக் கூறு பட்டினத்தாரின் பாடல்களிலும் மேலோங்கி நிற்கிறது.

மனிதர்கள் தங்கள் மனத்தால் அல்லது சிந்தையால் தங்கள் உடலையும் கடந்துவிடுகிறார்கள். 'இது நான். இது என் உடல்' என அவர்களால் வேறுபடுத்திச் சொல்ல முடிகிறது.

'காலையில் மலசலத்தால் துன்பம்
கட்டுச்சியில் பசிதாகத்தால் துன்பம்
மாலையில் துயில் காமத்தால் துன்பம்'

என உடல் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பட்டினத்தார் உடலால் வரும் துன்பத்தைச் சுட்டிக்காட்டிவிட்டு, அந்த உடலால் நாம் பெறும் பயன்களைச் சுட்டிக்காட்ட மறுத்துவிடுகிறார்.

உடல் நம்மை மற்றவர்களுக்கு காட்டும் ஒரு வெளிப்பாடு.

நாம் பேசுவதும், வேலை செய்வதும், உறவாடுவதும் இந்த உடலின்வழியாக மட்டுமே சாத்தியம்.


Friday, February 19, 2016

கரம்பிடித்த கண்ணாளன்

தன் தந்தையிடம் கடன்பட்டிருந்த கபேலிடமிருந்து பணத்தை மீட்க ரபேலுடன் புறப்பட்டு வந்த தோபியா இப்போது பாதி வழியில் நிற்கின்றார். தான் செய்ய வேண்டிய வேலை மறந்து இப்போது மனமெல்லாம் சாரா நிறைந்திருக்கிறாள். தன் மனம் நிறைத்த சாராவை அவர் கைப்பிடிக்கும் நிகழ்வைப் பதிவு செய்கிறது தோபித்து நூல் 7ஆம் பிரிவு.

அ. புரியாத புதிர்கள்

1. 'நம் உறவினர் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லும்.' தோபியா இரபேலை முன்பின் அறியாதவர். இருந்தாலும், இரபேல் சாராவைப் பற்றிச் சொன்னவுடன், சாராவின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவுடன் அவருக்கு எல்லாம் தெரியும் என முடிவெடுக்கின்றார் தோபியா. எக்பத்தானா வந்தும், வராமல், 'என்னை இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்!' என்கிறார் தோபியா.

2. முற்றத்தில் இரகுவேல். தோபியாவையும், இரபேலையும் முற்றத்தில் எதிர்கொள்கின்றார் இரகுவேல். இவர்கள் இருவரும் வருவர் என்று அவருக்கு ஏற்கனவே தெரிந்ததா? அல்லது தன் மகளுக்கேற்ற மணவாளன் யாராவது வருவார்களா? என்று எந்நேரமும் காத்திருந்தாரா?

3. மகிழ்ச்சிக் கண்ணீர். தோபியாதான் தன் உறவினர் தோபித்தின் மகன் எனத் தெரிந்தவுடன் கண்ணில் வெள்ளம் வந்துவிடுகிறது இரகுவேலுக்கு. அவர் அழ, அவரோடு சேர்ந்து அவரது மனைவி எதினா (எபிரேயத்தில் 'மகிழ்ச்சி' என்று பொருள்) அழ, அவரோடு சேர்ந்து சாரா என வீடே ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது.

4. 'குளித்தபின் கை அலம்பி விட்டு.' இரபேலும், தோபியாவும் இரகுவேலின் வீட்டில் உணவருந்த அமர்கிறார்கள். இருவரும் முதலில் குளிக்கிறார்கள். குளித்தவுடன் தான் அவர்கள் தூய்மையாகிவிடுகிறார்களே! பின் எதற்கு மறுபடியும் கை அலம்புகிறார்கள்?

5. 'உண்டு பருகுங்கள்!' தோபியா தன் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று தன் காதில் இரகசியம் விழ, 'உண்டு பருகுங்கள்!' என்று இருமுறை சொல்லி இகுவேல் அவர்களை திசை திருப்புவது ஏன்?

ஆ. ஆச்சர்யங்களும் பாடங்களும்

1. தோபித்தின் புகழ். தோபித்தின் தர்மமும், நேர்மையும், அவருக்கு பார்வை பறிபோனதும் எக்பத்தானா வரை தெரிந்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், பண்டைக்கால சமூகத்தில் ஒருவர் மற்றவர் நலனில் காட்டிய அக்கறையை. தூரத்தில் இருந்தாலும், தகவல் தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், ஒருவர் மற்றவரை அறிந்திருக்கின்றனர். யாஹூ இணையதளத்தில், 'இன்லேன்ட் லெட்டர் என்றால் என்ன?' என்று ஒருவர் கேள்வி எழுப்ப, நிறைய பேர் கீழே பதிலை எழுதியிருக்கின்றனர். வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பி அதில் இரண்டு டிக் விழுந்தவுடன் துள்ளிக்குதிக்கும் தலைமுறைக்கு இன்லேன்ட் லெட்டரின் ஆச்சர்யம் தெரியாது. பெட்டிக்கடையில் வாங்கி, 'நீ இங்கு நலம். நான் அங்கு நலமா?' எனக் கேட்டு, ஒட்டும் இடம் தவிர எல்லா இடத்திலும் குட்டிக்குட்டியாய் எழுதி, எச்சில் அல்லது சோற்றுப்பருக்கையால் ஒட்டி, வெளியே 'கெஸ்' என எழுதி, 'கடவுளே! இது பத்திரமாய் போக வேண்டும்!' என சிவப்பு கலர் போஸ்ட் பாக்ஸ்முன் குட்டி செபம் செய்து, உள்ள போட்டு, அது பத்திரமாய் உள்ளே விழுந்த சத்தத்தை கவனமாயக் கேட்டு, லெட்டர் டெலிவரி ஆக மூன்று நாட்கள், பதில் கிடைக்க மூன்று நாட்கள் என ஒருவாரம் காத்திருந்து, 'நான் இங்கு நலம்' என்ற பதிலைக் காணும்போது நம் உதடுகளில் தவழும் புன்னகையை இன்று நாம் கைபேசியில் இழந்துவிட்டோம். நாம் அழைத்து அடுத்தவர் ஃபோனை எடுக்கவில்லையென்றால் பொறுமை இழக்கின்றோம்;.

2. 'எங்களுக்கு, உங்களை!' தோபியாவின் தாராள உள்ளம் இங்கே தெரிகிறது. நல்ல பொண்ணு ஒருத்தியை பார்க்கப்போகிறார் தோபியா. கூடவே இரபேலும் வருகிறார். இரபேல் வானதூதர் என்பதால் தோபியாவைவிட கொஞ்சம் அழகாகவே இருந்திருப்பார். நல்ல உடற்கட்டு, கவர்ச்சியான தோற்றம், புன்னகை முகம் என எல்லாவற்றிலும் தோபியாவிடை சிறந்தே இருந்திருக்க வேண்டும். ஆனால், தோபியா அவரைப் பார்த்து பொறாமைப்படவோ, தன்னை அவரோடு ஒப்பீடு செய்யவோ இல்லை. 'நீங்கள் யார்?' என்று இரகுவேல் கேட்டதும், 'நாங்கள்' இரபேலையும் இணைத்தே பதில் தருகின்றார். 'நான் தோபித்தின் மகன், இவர் நான் வழியில் கண்டவர்' என இரபேலை பிரித்துப் பார்க்கவில்லை. மூச்சுக்கு மூச்சு 'நாங்கள்,' என்றும் 'எங்களுக்கு' என்றும் சொல்கிறார். ஒருவேளை, தன்னைவிட இரபேல் அழகாயிருக்கக் கண்டு, அவரை சாரா மனம் முடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவரிடம் இல்லை. நட்பில் இருக்கும் அனைவருக்கும் தோபியாவின் பரந்த உள்ளம் நல்ல பாடம். சில நேரங்களில் காதல் அல்லது திருமணம் இரு நண்பர்களின் நட்டை உடைத்துவிடுகிறது. அல்லது நண்பர்கள் காதலால் பிரிந்து எதிரிகளாகவிடுகின்றனர்.

3. இரபேல் ஒரு வண்ணத்துப்பூச்சி அல்ல. இரபேலுடைய நல்ல உள்ளத்தையும் இங்கே பார்க்க வேண்டும். பார்க்கின்ற பூக்களின்மேல் எல்லாம் அமரத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சி அல்ல இரபேல். 'என் வாழ்க்கை எனக்கு, தோபியா வாழ்க்கை தோபியாவுக்கு' என மனநிறைவோடு இருக்கிறார். 'எனக்கு இதுவும் வேணும், அதுவும் வேணும்' என்று நினைப்பதும், 'ஐயோ! அது எனக்கு கிடைக்கலயே!' என ஏங்குவதும் தேவையற்றது என மௌனமாகக் கற்பிக்கின்றார் இரபேல். மணமகனின் தோழனாக இருப்பதில் நிறைவுகாண்கிறார் இரபேல். ஏனெனில் அவருக்குத் தெரியும் தன் வேலை மணம் முடிப்பது அல்ல, விண்ணக இறைவனின் வேலையைச் செய்து முடிப்பது என்று.

4. திருமணம் என்றால் என்ன? திருமணம் பற்றிய பண்டைக்கால புரிதலை நாம் இரகுவேலின் வார்த்தைகளில் பார்க்கின்றோம்: திருமணம் விண்ணகத்தில் உறுதி செய்யப்படுகிறது. திருமணத்தில் ஒருவர் மற்றவரின் உரிமையாக மாறுகின்றனர். திருமணத்தில் இணையும் மணமக்களை ஆண்டவர்தாம் காக்கின்றார்.

5. திருமணம் நடைபெறும் விதம். திருமணம் இரண்டு படிகளில் நடந்தேறுகிறது. ஒன்று, 'இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக்கொண்டு உன் தந்தைவீட்டிற்கு அழைத்துச் செல்' என்று அப்பா, தன் மகளின் கையைப் பிடித்து, மணமகனிடம் கொடுக்கின்றார். இரண்டு, ஓர் ஏட்டில் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுக்கின்றார். முதலில் வாய்மொழியாக, அடுத்து எழுத்துவடிவில் அரங்கேறுகிறது திருமணம். ரொம்ப எளிதான, ஆனால் மிகவும் அர்த்தமுள்ள திருமணம்.

6. தாயின் பங்களிப்பு. மணமகளின் தாய்க்கும் திருமண நிகழ்வில் முக்கிய பங்கு இருக்கிறது. 'இவன் தோபித்து மாதிரி இல்லையா? என்று இரகுவேல் கேட்க, எதினாதான், இளைஞர்களிடம், 'நீங்கள் யார்?' எனக் கேட்கிறார். மேலும், திருமண ஒப்பந்த ஏட்டை அவள்தான் தயார் செய்கிறாள். அவளுக்கும் எழுதப் படிக்க தெரிந்திருக்கிறது. திருமணத்தை நிறைவு செய்யும் மூன்றாம் காரணியான, உடலுறவு நிறைவேற அறையைத் தயார் செய்கின்றாள். கலங்கி நிற்கும் தன் மகளுக்கு, 'அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர் உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார், துணிவுகொள், மகளே' என நம்பிக்கை வார்த்தைகள் சொல்கிறாள்.

7. தமிழர் திருமண முறை. அப்பா-அம்மா-மகன், அப்பா-அம்மா-மகள் என திட்டமிட்ட குடும்பங்களாக இருக்கின்றது இந்த இருவரின் குடும்பங்களும். திருமணத்திற்கு முன் பெண்பார்க்கும் படலம் இருக்கிறது. திருமணத்தில் ஆலயம் மற்றும் அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை. முதலிரவு மணப்பெண்ணின் வீட்டில் நடந்தேறுகிறது. இந்தக் கூறுகள் தமிழரின் பண்டைக்கால திருமண முறையை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆனால், இன்று நம் திருமண நிகழ்வுகள் மேலைத்தேயமயமாகிவிட்டன என்பது வேதனைக்குரிய ஒன்று.


Thursday, February 18, 2016

மீனும், சாராவும்

'மீனிடம் காலைக் கொடுத்தார்.
சாராவிடம் உள்ளத்தைக் கொடுத்தார்' -
இப்படித்தான் சுருக்க வேண்டும் தோபியா நூல் பிரிவு 6ஐ.

தோபியாவும், ரபேலும் எக்பத்தானா நோக்கி பயணம் செய்கின்றனர். 'அவர்களது நாயும் உடன் வந்தது' என்று சொல்வதன் வழியாக கதையாசிரியர் தன் கதையை மிகவும் ரசனையோடு படைக்கின்றார். தோபித்து ஒருவேளை வழிப்போக்கனை முழுமையாக நம்பாததால் தன் நாயையும் உடன் அனுப்பி வைத்திருப்பாரோ?

அ. மீனிடம் கால்

வழி நெடுக தூசியில் நடந்த தோபியா சற்று இளைப்பாற திக்ரீஸ் ஆற்றுக்குச் செல்கின்றார். பாதங்களை தண்ணீரில் வைத்து அலம்பிக் கொண்டவரின் காலை மீன் ஒன்று பற்றிக்கொள்கின்றது. கரைக்கருகில் அவ்வளவு பெரிய மீன் எப்படி வரும்? என்ற கேள்வியைக் கேட்டு நம்மையே புத்திசாலிகளாக்காமல், கதையின் ஓட்டத்தோடு செல்வோம். 'காப்பாற்றும்!' என்று கத்த, 'நீர் பிடியும்' என பதில் தருகின்றார் ரபேல். தோபித்து அதைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், ரபேலின் சொல்லின்படி மீனின் பித்தப்பை, இதயம், ஈரல் போன்றவற்றை எடுத்துக்கொள்கின்றார். இவற்றின் பலன் என்ன என்பதை தொடர்ந்து ரபேல் சொல்கின்றார்: 'இதயமும், ஈரலும் நெருப்பிலிடப்பட்டால் பேய் போய்விடும்' 'பித்தப்பையினால் கண்ணின் வெண்புள்ளிகள் சரியாகும்.' இந்த வசனத்தில் வாசகர்களுக்கு கதையின் நிறைவு தெரிந்துவிடுகிறது. அதாவது, சாராவைப் பிடித்திருக்கும் பேய் ஓடிவிடும். தோபித்தின் கண்களில் வெண்புள்ளிகள் நீங்கி அவர் பார்வை பெறுவார்.

ஆ. சாராவிடம் உள்ளம்

போகின்ற வழியில் எங்கே தங்க வேண்டும் என்று ரபேல் அறிவுரை சொல்கின்றார். தங்கப்போகும் வீடு இரகுவேலின் வீடு. 'இரகுவேல்' என்றால் 'கடவுளின் நண்பன்' என்பது பொருள். நம் தமிழ்மரபில், 'ரகு' என்பது பொதுவான பெயர். 'ரகு' என்றால் 'நண்பன்' அல்லது 'அருகில் இருப்பவன்' என்பது பொருள். சாராவுக்கு திருமணம் ஏழு முறை நடந்து, ஏழுமுறையும் கணவர்கள் இறந்துவிட்டதை தோபித்து அறிந்திருக்கி;ன்றார். அதை அவருக்கு ரபேலும் நினைவூட்டுகின்றார். சாரா தன் இனத்தைச் சார்ந்தவள் என்பதை உறுதியாக உணரும் தோபியா காணாமலே காதலில் விழுகின்றார்.

இ. வாக்கும், வாழ்வும்

1. 'இளைஞர்.' தோபியா பிரிவு 6ல் இப்படித்தான் அழைக்கப்படுகின்றார். அதாவது, அவர் திருமணம் முடிக்க தயாரானவர் என்பதை மறைமுகமாகக் காட்டுகிறது இந்த வார்த்தை.

2. 'பிடியும். உறுதியாகப் பிடியும்.' 'என்னைக் காப்பாற்றும்' என தோபியா முறையிட, 'நீரே பார்த்துக்கொள்ளும்' என தூரமாய் நிற்கிறார் தூதர். தூதர்கள் நம் அருகில் இருந்தாலும், நம் வேலையை நாம்தான் செய்ய வேண்டும். அவர்கள் நமக்கு அறிவுரை தருகிறார்கள். நம் வல்லமையை நாமே தெரிந்து கொள்ள உதவுகிறார்கள். மேலும், தோபியாவின் இந்த அனுபவம் அவரை முதலிரவுக்கு தயாரிக்கும் அனுபவமாகவும் இருக்கிறது. தனிமையான அந்த இரவில் 'ஏழு முறை பேயால்' வதைக்கப்பட்ட சாராவோடு இருப்பதற்கு துணிச்சல் வேண்டுமல்லவா?

3. 'அறிவுள்ளவள். துணிவுள்ளவள். அழகானவள். நல்லவரின் மகள்.' இந்த நான்கு வார்த்தைகளால் சாராவை வர்ணிக்கிறார் ரபேல். 'அறிவு' முதன்மைப்படுத்தப்படுவது வியப்பைத் தருகிறது. இது சாரா பெற்றிருந்த கல்வியறிவையோ, பெற்றிருந்த பட்டங்களையோ குறிக்கவில்லை. மாறாக, 'நன்மை-தீமை பகுத்தறியும்' ஞானத்தைக் குறிப்பிடுகிறது. 'அறிவு, துணிவு, அழகு' - இந்த மூன்றும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும்.

4. பயணமே வாழ்வாக. பல நேரங்களில் நாம் பயணத்தின் முடிவில்தான் மகிழ்ச்சி என நினைக்கிறோம். இன்று பணம் சம்பாதித்து நாளை வாழலாம் என சேர்த்து வைக்கின்றோம். ஆனால், வாழ்க்கை என்பது பயணத்தின் இறுதியில் நாம் அடையும் இடத்தில் அல்ல. மாறாக, அது பயணத்தில்தான் இருக்கிறது. பயணத்தின் முடிவில் தோபியா தன் தந்தையின் பணத்தை திரும்ப பெறுகிறார் என்றாலும், பயணத்தின் ஊடே அவர் ஒரு அழகான பெண்ணையும் மனைவியாக்கிக்கொள்கிறார். போகிற வழியில் வருபவற்றை எதிர்கொண்டு அணைத்துக்கொண்டு வாழ்வதே சால்பு.

5. வியப்புக்களின் இறைவன். 'சாரா' பற்றிய செய்தி தோபியாவை 'கண்ணா ரெண்டாவது லட்டு திண்ண ஆசையா!' என துள்ள வைத்திருக்கும். இதுதான் இறைவனின் அருட்கரத்தின் வலிமை. அவர் அள்ளிக்கொடுக்கின்ற இறைவன். இழந்தவற்றைத் தேடித்தருகின்ற இறைவன்.

6. நம்பிக்கை. தோபியா முன்பின் தெரியாத வழிப்போக்கனை முழுமையாக நம்புகின்றார். அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பி மீனைப் பிடிக்கிறார்,சாராவின் மேல் காதல் கொள்கின்றார். நம் வாழ்வில் உடன் வருபவர்களை நம்புவதா, வேண்டாமா என்று நாம் காலம் கடத்திக்கொண்டே இருக்க தேவையில்லை.

7. 'உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப்பட்டவள்.' நாம் ஒவ்வொருவருமே பாதி மனிதர்கள்தாம். நம் அடுத்த பாதியை தேடி நாம் இந்த உலகில் அலைந்துகொண்டிருக்கின்றோம். அடுத்த பாதியை எல்லாரும் கண்டுகொள்கின்றனரா? என்பது கேள்வி. ஆனால், அப்படி கண்டுகொள்ள முடியவில்லையென்றாலும், நாம் கண்டுகொண்டவர்களை, 'இவர்தான் என் பாதி' என நினைத்து வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சியே.

8. மீனும் சாராவும்
நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போடுவது மீன். வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவள் சாரா. கண்களை மூடாதது மீன். தன் மணவாளனுக்காக கண்களை மூடாமல் காத்திருக்கிறாள் சாரா.

'எங்கே எனது கவிதை?
கனவில் எழுதி முடித்த கவிதை?' என ஹம் செய்து கொண்டே, தனக்குள் புன்னகைத்துக்கொண்டே, ஒரு கையில் மீனும், மறு கையில் ரபேலின் விரலும் என வழி நடக்கும் தோபியா, தன் காதலைக் கண்டாரா?

அடுத்த பிரிவில் பார்க்கலாம்.


Wednesday, February 17, 2016

ரபேல்

அ. இரண்டு கேள்விகள்

'நான் எப்படி போவேன்?' என்ற தோபியாவின் கேள்வியும், 'அவன் எப்படி போவான்?' என்ற அன்னாவின் கேள்வியும்தான் தோபித்து நூல் பிரிவு 5ன் இரு பிரிவுகள்.

1. 'நான் எப்படி போவேன்?' (5:1-17)
தோபியாவின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது இரண்டு பிரச்சினைகள்: ஒன்று, கடன் வாங்கியவர் யார் என்பதும், கடன்வாங்கியவருக்கு தோபியா யார் என்பதும் தெரியாது. தெரியாத ஒருவரிடம் எப்படி பணத்தைக் கொடுப்பார்? என்ற கேள்வி. இரண்டு, அவர் இருக்கும் ஊருக்கும், அந்த ஊருக்குமான வழியும் தெரியாது. முதல் பிரச்சினையை தோபித்தே தீர்த்து வைக்கின்றார். பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததற்கான ஆவணத்தின் ஒரு பகுதிய தோபித்திடம் இருக்கிறது. இரண்டாம் பிரச்சினைக்கு தீர்வாக, ஊருக்கு வழிகாட்டும் ஒருவரை இப்போது கண்டுபிடிக்க வேண்டும். வெளியே செல்லும் தோபியாவின் கண்களில் ரபேல் படுகின்றார். 'நான் ஆளைக் கண்டுபிடித்துவிட்டேன்!' என தோபியா ஓடிவர, தோபித்தோ, 'அவரை நான் பார்க்க வேண்டும். அழைத்துவா!' என்கிறார். ரபேலும் வர, உடன்செல்லும் பணி அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பணிக்கான கூலியும் நிர்ணயிக்கப்படுகின்றது. இருவரும் பயணத்தை தொடங்கப்போகின்றனர்.

2. 'அவன் எப்படி போவான்?' (5:18-23)

இதற்கிடையில் தோபியாவின் தாய் அன்னாவுக்கு ஒரு கவலை: 'ஏன்  குழந்தையை அனுப்பினீர்?' என தன் கணவன் தோபித்திடம் கோபித்துக்கொள்கிறார். 'பணம் பெரிதா? குழந்தை பெரிதா?' என பட்டிமன்றம் வைக்கின்றார். இறுதியில் கணவனின் நம்பிக்கை வார்த்தைகளால் ஆறுதல் பெறுகின்றார்.

ஆ. வார்த்தைகளும், வாழ்வும்

தோபித்து 5ஆம் பிரிவில் வரும் நிறைய வார்த்தைகள் நம் ஆர்வத்தை தூண்டுகின்றன. அந்த சொல்லாடல்களின் பொருளையும், அவை நமக்கு விடுக்கும் வாழ்வியல் சவால்களையும் இங்கே பார்ப்போம்.

1. கேள்வி கேட்கும் மகன்
தோபியா தன் தந்தைக்கு கீழ்ப்படிவதில், அறிவுசார்ந்த கீழ்ப்படிதல் இருக்கிறதே தவிர, அங்கே அடிமையின் கீழ்ப்படிதல் இல்லை. தோபியாவின் கேள்விகள் அவரை நமக்கு அறிவுள்ள ஒரு இளைஞனாக நம்முன் நிறுத்துகின்றன. அறிவோடு சேர்ந்து தோபியாவுக்கு தன் தந்தையின்மேல் அக்கறையும் இருக்கிறது. 'பணம் போனா போய்ட்டுப்போகுது!' என்று தொட்டும் தொடாமல் பதில் சொல்லாமல், தந்தையின் தளபதியாக புறப்படத்தயாராகின்றார்.

2. ஆவணம்
தோபித்து ரொம்ப தெளிவான ஆள். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்டதில். பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணத்தை இருபது ஆண்டுகள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். 'ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார். நானும் கையொப்பமிட்டேன். அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம்' (5:3). இங்கே பண்டைக்கால பத்திரம் எழுதும் முறை நமக்கு விளங்குகிறது. இந்தப் பழக்கம்தான் இன்று வங்கியில் சலானாக இருக்கிறது. நாம் பணம் செலுத்தும்போது, சலானில் நாமும், காசாளரும் கையொப்பமிட, ஒரு பகுதி நமக்கு கிழித்து தரப்படுகிறது. அடுத்த பகுதி காசாளரிடம் தங்கிவிடுகிறது. இதுபோலவே, நாம் படித்து பெறும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்களும், இரண்டுபேர் கையெழுத்திட ஒரு பகுதி நமக்கு கிழித்து தரப்படுகிறது. மற்ற பகுதி நாம் படித்த பள்ளியிலேயே தங்கிவிடுகிறது.

400 கிலோ அல்லது பத்து தாலந்து வெள்ளி (4:20) பணத்தை இப்போது தோபியா பெற்று வர வேண்டும். ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தினாரியம். ஒரு தினாரியம் ஒன்பது ஒருநாள் கூலி. ஆக, பத்து தாலந்து என்றால் அறுபதாயிரம் தினாரியம். ஒருவரின் 165 ஆண்டுகள் சம்பளம் இது. இது பெரிய தொகைதான்.

3. சென்றார், கண்டார்
தோபியா வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் அவரின் கண்களில் ரபேல் படுகின்றார். ஆனால், அவரை வானதூதர் என தோபியாவால் கண்டுகொள்ள முடியவில்லை. தோபித்துக்கு புறக்கண்கள் இருளாயிருந்தன. தோபியாவுக்கு அகக்கண்கள் இருளாயிருந்தன. தேடினார். கண்டார். தேடுவோரின் கண்களுக்கு மட்டுமே உதவி செய்வோர் தெரிவர்.

4. எங்கிருந்து வருகிறீர்?
நம் தமிழ்வழக்கில் புதிதாக ஒருவரை சந்திக்கும்போது, 'நல்லா இருக்கீங்களா?' என்று கேட்பதுபோல, எபிரேய வழக்கில், 'எங்கிருந்து வருகிறீர்?' என்று கேட்பது மரபு.

5. வானதூதர் எல்லாம் அறிவார்
'மேதியாவுக்கு வழி தெரியுமா?' என்று தோபியா கேட்க, மேதியா என்ன, நீ தேடும் கபேலையும் எனக்குத் தெரியும் என்கிறார் ரபேல். நம் வாழ்வில் வரும் வானதூதர்களுக்கும் எல்லாம் தெரியும்.

6. அவரை என்னிடம் அழைத்து வா
தோபியா வளர்ந்த இளவல் என்றாலும், அவரோடு செல்லும் வழிப்போக்கர் நல்லவரா என்று பார்க்க விரும்பி தன்னிடம் அழைத்து வருமாறு சொல்கின்றார் தோபித்து. இது பெற்றோர் கற்க வேண்டிய நல்ல பண்பு. அதாவது, நட்பு, பழக்கம், காதல், திருமணம் என்ற எந்த பாதையில் தன் குழந்தையை அனுப்புமுன், உடன்செல்பவர் யாரென்று பார்க்க பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும். 'அவரை, அவளை என்னிடம் கூட்டி வா! அவரின், அவளின் குலம், இனம் என அனைத்தையும் பார்க்க வேண்டும்!' இப்படி குலம், இனம் பார்ப்பது மனிதர்களைப் பிரித்துப் பார்க்கவோ, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என தரம்பிரிக்கவோ அல்ல. மாறாக ஒருவரின் பின்புலத்தை அறிந்துகொள்வது அவரை நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது. வானதூதருக்கே குலம், கோத்திரம் பார்க்கும் பெருமை தோபித்துக்குத்தான் உண்டு!

7. மங்கலம் உண்டாகட்டும்
தோபித்து நால் பிரிவு 5 முழுவதும் நிறைய வாழ்த்துச் சொற்கள் உள்ளன: 'எங்கிருந்து வருகிறீர்?' 'வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக!' 'அஞ்ச வேண்டாம்!' 'உன் வரவு நல்வரவாகுக!' 'எல்லாம் நலமாக அமையட்டும் தம்பி!' 'நலமே சென்றுவா!' தெரியாத மனிதரோடு உரையாடுவதாலும் மங்கலச் சொற்களால் உரையாடுகின்றார் தோபித்து. ரொம்பவே பாசிட்டிவ் எனர்ஜி கொண்ட மனிதர் தோபித்து. அப்படிப்பட்ட ஒருவரால் தான் எல்லாரிடமும் இயல்பாக பேசவும், வாழ்த்தவும் முடியும்.

8. பெயர்கள்
'கபேல்' என்றால் 'கடவுள் வல்லமையானவர்'
'ரபேல்' என்றால் 'கடவுளே நலம்' அல்லது 'கடவுள் நலம் நல்குபவர்'
'அனனியா' என்றால் 'ஆண்டவர் அருள்கூர்பவர்'
'அசரியா' என்றால் 'ஆண்டவர் உதவி செய்பவர்'

ரபேலின் பெயர் வரும் இடங்களில் எல்லாம், 'நலம்' என்ற சொல்லும் உடன் வருகிறது இந்தப்பிரிவில். மேலும், 'அசரியா' என்பது தன் பெயர் எனச் சொல்கின்றார் ரபேல். ஆக, தூதர்கள் நமக்கு உதவி செய்பவர்கள்.

9. எனக்கு இனி என்ன மங்கலம்?
தன் பார்வை பறிபோய்விட்டதால் தன் வாழ்வில் இனி மங்கலமே இல்லை என ரபேலின் வாழ்த்தை ஏற்க தயங்குகின்றார் தோபித்து. தன்னை இருளில் வாழ்பவன் எனச் சொல்கின்றார். இருள் என்பது எபிரேய மொழியில் இறப்பையும் குறிக்கும். நாம் வாழ்வற்ற நிலையில் இருந்தாலும் நலம் தரக்கூடியவர் இறைவன்.

10. நீ நல்ல குடும்பத்தைச் சார்ந்தவன்
தோபித்தின் இந்த வார்த்தைகள், 'பிறப்பால் ஒருவன் நல்லவனாகப் பிறந்தாலும், வளர்ப்பால்தான் அவன் நல்லவன் ஆகிறான்' என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன.

11. சம்பளம்
இது தோபித்தின் அடுத்த பொருளாதாரக் கொள்கை. இதுவே அவரது நீதியும் கூட. ஒவ்வொரு நாள் பயணத்திற்கும் ஒரு தெனாரியம் சம்பளம் எனவும், மேலும் வழிப்போக்கனின் உணவு மற்றும் இதர செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கான்ட்ராக்ட் பேசுகிறார் தோபித்து. வாழ்வில் எதுவும் இலவசம் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரு கூலி அல்லது விலை உண்டு. மேலும், இலவசமாக நாம் எதையும் பெறக் கூடாது. ஒவ்வொருவரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். அந்த உழைப்பிற்கேற்ற கூலி தரப்பட வேண்டும்.

12. தம்பி
மூச்சுக்கு மூச்சு, தோபித்து ரபேலை, 'தம்பி' 'தம்பி' என அழைக்கிறார். இது மரியாதைநிமித்தம் பயன்படுத்தப்படும் வார்த்தை. இறுதியாக, தன் மகனைப் பார்த்து, 'உன் சகோதரனோடு போ!' என்கிறார். புதிதாக வந்த வேற்று இளைஞனை உடனடியாக ஏற்று, தன் மகன்போல கண்டுபாவிக்கும் தாராள உள்ளம் கொண்டிருக்கிறார் தோபித்து.

13. முத்தமிடுதல்
நீண்ட பயணம் செல்வதற்கு முன் ஒருவர் மற்றவர் கன்னங்களில், 'நீ என்னவன், நான் உன்னவள், நான் உனக்காக காத்திருக்கிறேன்' என வழங்கப்படும் முத்திரையே முத்தம்.

14. பணமா? குழந்தையா?
இரண்டையும் ஒப்பிட்டு கேட்கும் அன்னாவுக்கு பதில் சொல்லும் தோபித்து, 'தோபியா நலமே வீடு திரும்புவார்' என நம்பிக்கை தெரிகின்றார். குழந்தைதான் பணத்தைவிட பெரியது என்றாலும், பணம் இல்லாவிட்டால் குழந்தை மட்டும் இருந்து என்ன புண்ணியம். பணமும் வாழ்க்கைக்கு தேவை என்றும், பயணமும் தன் மகனின் வளர்ச்சிக்குப் பயன்படும் எனவும் எண்ணித் துணிகின்றார் தோபித்து.

தாயும், தந்தையும் கண்ணீர் மல்க வழியனுப்ப, இளவல் தோபியா, முன்பின் தெரியா வழித்தூதர் ஒருவரோடு வழிநடக்கின்றார் மேதியா நோக்கி.

Tuesday, February 16, 2016

அவன் என் மகன்

அ. எண்கள்

ஒன்று

தோபித்து நூல் பிரிவு 4ஐ ஒட்டுமொத்தமாக இணைக்கும் ஒன்று என்னவென்றால், தோபித்து தன் மகன் தோபியாவுக்கு வழங்கும் அறிவுரை. 'நான் சாக வேண்டும்' என்று கடவுளிடம் மன்றாடிவிட்டு வந்த தோபித்துக்கு மனம் நெருடலாகவே இருக்கின்றது. தான் இறந்துவிட்டால் தான் கபேலுக்கு கடன் கொடுத்த விடயம் தன் மகனுக்கு தெரியாமல் போய்விடுமே என்ற துயரும், தான் இறந்தபின் தன் மகன் எப்படி வாழ்வான் என்ற கவலையும் தோபித்தைப் பற்றிக்கொள்ள, 'தம்பி தோபியா இங்கே வா!' என்று தன்னருகே அழைத்து அறிவுரை பகர்கின்றார்.

இரண்டு

தோபித்தின் அறிவுரை ஒரே கட்டளைதான்;: 'நினைத்துப்பார்' அல்லது 'நினைவில்கொள்'. யாரை? இரண்டு பேரை. (1) அம்மாவை, (1) ஆண்டவரை.

1. அம்மாவை நினைவில்கொள்
'அவளை மதித்து நட. அவளை கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்' என்று நேர்முகமாகவும், 'அவள் மனம் புண்படும்படி எதுவும் செய்யாதே' என்று எதிர்மறைச் சொல்லாகவும் கட்டளையிடுகிறார் தோபித்து (4:3-4). ஏன் அம்மாவை நினைவில் கொள்ள வேண்டும்? ஏனெனில் அவள் உன்னைப் பெற்றெடுத்தாள். உனக்காக வலிகள் தாங்கினாள். சீராக்கின் ஞானநூல், நீதிமொழிகள் என்ற ஞானநூல்களில்தாம் 'தாயின்' முக்கியத்துவம், தாயின் அறிவுரையின் முக்கியத்துவம் அதிகமாக சுட்டிக்காட்டப்படுகிறது. எபிரேய சமூகம், நம் முற்கால தமிழ்சமூகம் போல தாய்வழி சமூகமாகவே இருந்திருக்கிறது.

2. ஆண்டவரை நினைவில்கொள்
'ஆண்டவரை நினை! அவருடைய கட்டளைகளை மீற விரும்பாதே!' (4:5) என்றும், 'ஆண்டவரைப் போற்று, அவரிடம் மன்றாடு, அவரிடம் அறிவுரை கேள்!' (4:16-17) என்றும் கட்டளையிடுகின்றார்.

நம் வாழ்வில் நாம் நல்லவர்களாக இருக்க தோபித்து சொல்லிக் கொடுக்கும் மிக எளிய மந்திரம், 'அ-ஆ' - 'அம்மா-ஆண்டவர்.' இந்த உலகில் நமக்கு நல்லது நினைப்பவர்கள் இந்த இரண்டுபேர்தாம். மேலும், நாம் அதிகம் புரிந்து கொள்ளாததும் இந்த இருவர்தாம். நாம் அதிகம் கோபப்படுவதும் இந்த இருவர்மேல்தாம்.

மூன்று

தோபித்து பிரிவு 4ல் மூன்று கிரேக்க வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன - 'எலேமோசினா' ('தர்மம்'), 'டிகாயுசுனே' ('நீதி'), மற்றும் 'அலேதேயா' ('உண்மை'). வாழ்விற்கு தேவையானது அன்பு என்பது இன்று நாம் அடிக்கடி ரொமான்டிக்காக பேசும் ஒன்று. ஆனால், மேற்காணும் மூன்று மதிப்பீடுகள்தாம் நம் வாழ்வை மற்றவர்களுக்குப் பயனுள்ள வழியில் வாழ உதவி செய்கின்றன. 'நான் எல்லாரையும் அன்பு செய்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, இந்த மூன்று மதிப்பீடுகளும் இல்லாமல் வாழ்ந்தால் அன்பு வெறும் வாய்ச்சொல்லாக மட்டும்தானே இருக்கும்.

ஆ. பத்துக்கட்டளைகள்

தோபித்தின் அறிவுரை மோசே வழியாக கடவுள் வழங்கிய பத்துக்கட்டளைகளின் (காண். விப 20:2-17, இச 5:6-21, கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி, பிரிவு 3, பகுதி 2) மறுவார்த்தைகளாவும் உள்ளது:

கட்டளை 1: 'ஆண்டவரை நினை' (தோபி 4:5)
கட்டளை 2: 'நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்கு கைம்மாறு கிடைக்கும்' (4:14)
கட்டளை 3: 'எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று' (4:19)
கட்டளை 4: 'என்னை நல்லடக்கம் செய். அம்மாவை நினைவில்கொள்' (4:3-4)
கட்டளை 5: 'நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு' (4:14)
கட்டளை 6: 'எல்லாவகை தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்' (4:12)
கட்டளை 7: 'அநீதியின் வழிகளில் செல்லாதே' (4:5)
கட்டளை 8: 'அவருடைய கட்டளைகளை மீற விரும்பாதே' (4:5)
கட்டளை 9: 'நல்லொழுக்கம் உடையவனாய் இரு' (4:14)
கட்டளை 10: 'உடனே கூலியைக் கொடுத்துவிடு. இரவு முழுவதும் வைத்திராதே' (4:14)

இந்தப் பத்துக்கட்டளைகளும் எனக்கும் இறைவனுக்கும், எனக்கும் பிறருக்கும் உள்ள உறவு மேம்பட வழிகோலுகின்றது.

தோபித்து இன்னும் ஒருபடி போய், எனக்கும் எனக்கும் உள்ள உறவு மேம்படவும் மூன்று கட்டளைகள் தருகின்றார்:

1. சோம்பேறியாயிராதே. 'சோம்பலே பஞ்சத்திற்கு காரணம்' (4:13)
2. உன்னை அன்பு செய். 'நல்லொழுக்கமுடையவனாய்...அளவு மீறி மது அருந்தாதே' (4:15)
3. எல்லாருக்கும் செவிகொடு. ஆனால் முடிவை நீயே எடு. 'ஞானிகளிடம் அறிவுரை கேள்' (4:18)

இ. அறவே வேண்டாம்

செருக்கு, அநீதி, சோம்பல் இந்த மூன்றும் அறவே ஒரு மனிதருக்கு கூடாது.

ஈ. மறைந்திருக்கும் மூன்று உண்மைகள்

1. வாழ்வுக்குப் பின் வாழ்வு. நம் வாழ்வு இறப்போடு முடிந்துவிடுவதில்லை. வாழ்விற்குப் பின்னும் வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வை அடைவதற்கான ஒரே வழி தர்மம் செய்தல்.

2. அறிவுரை வழங்கும் ஆண்டவர். ஆண்டவரின் அறிவுரையை எப்படி அறிவது? 'எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன். இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது' (16:7) என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர். ஆக, ஆண்டவர் அறிவுரை வழங்குவது நமக்கு மனச்சான்றின்வழி. சில நேரங்களில் மனச்சான்றையும் நாம் ஏமாற்ற அல்லது அதனுடன் சமரசம் செய்து கொள்ள முடியும். இந்த நேரத்தில் நாம் கவனமாய் இருத்தல் வேண்டும்.

3. 'நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே!' தோபித்தின் அறிவுரைப்பகுதியில் என் நெஞ்சம் தொட்டது இதுதான். இந்த ஒற்றை வாக்கியத்தில் 'சுயமரியாதை' அல்லது 'தன்மதிப்பு' என்னும் மிக மேன்மையான மதிப்பீட்டை தன் மகனுக்கு கற்றுக்கொடுக்கிறார். மேலும், இந்த வாக்கியம், 'ஏழையாயிருக்கிறோம் என்பதற்காக திருடாதே!' 'ஏழையாயிருக்கிறோம் என்பதற்காக பிறர்முன் கைகட்டி நிற்காதே!' 'ஏழையாயிருக்கிறோம் என்பதற்காக உன்னையே மட்டம்தட்டிக்கொள்ளாதே' என்ற உள்பொருள்களையும் கொண்டிருக்கிறது.

உ. தோபித்தும் ஆபிரகாம் லிங்கனும்

தோபித்து தன் மகனுக்கு வழங்கும் அறிவுரை, ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு வரைந்த மடலை எனக்கு நினைவூட்டுகிறது. இந்த மடலின் வரிகளை என் நண்பி ஒருத்தி என் பிறந்தநாளுக்கு பரிசாக அனுப்பியிருந்தாள். அந்த மடலை இங்கு சுருக்கமாக தமிழாக்கம் செய்கிறேன் (ஆங்கில மூலத்திற்கு இங்கே சொடுக்கவும்:Dear Teacher - Abraham Lincoln ):

'(என் மகன்) கற்க வேண்டும்...
எல்லா மனிதரும் நீதியானவர்கள் அல்லர்,
எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்லர் என்று.
இருந்தாலும் பொய்யானவர்கள் நடுவிலும் உண்மையானவர் இருக்கிறார்,
தன்னலம் கொண்ட அரசியல்வாதிகள் நடுவிலும் நல்ல தலைவர் இருக்கிறார்...

அவனுக்கு கற்றுக்கொடுங்கள்
பகைவன் இருப்பதுபோல நண்பனும் இருக்கிறான் என்று...

பொறாமையிலிருந்து அவனை விலக வையுங்கள்
முடிந்தால், புன்னகையின் மேன்மையை அவனுக்கு உணர்த்துங்கள்
புத்தகங்கள் தரும் ஆச்சர்யத்தை அவன் அறியச்செய்யுங்கள்.
அதே நேரம், மௌனமாக வானத்தை நோக்கி விண்மீன்களைக் கண்டு வியக்கவும்,
மலைச்சாரல் மலர்களை ரசிக்கவும் அவன் அறியட்டும்.

ஏமாற்றவதைவிட தோற்பதே சிறந்தது என அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
தோற்றாலும் அதிலும் பெருந்தன்மையோடு அவன் இருக்கட்டும்.
எளிதாக வரும் 100 ரூபாயைவிட
கஷ்டப்பட்டு வரும் 10 ரூபாய் மேலானது என அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

எல்லாரும் தவறு என்று சொன்னால்கூட, அவனுக்கு தன் மனக்கிடக்கைமேல் உறுதியான நம்பிக்கை பிறக்க வையுங்கள்.மென்மையானவரோடு மென்மையாகவும், வன்மையானவரோடு வன்மையாகவும் வாழக் கற்றுக்கொடுங்கள்.

கூட்டத்தைப் பின்பற்றுவதிலிருந்து அவன் விலகி நிற்கட்டும்.
எல்லோரின் அறிவுரையைக் கேட்டாலும், அவற்றைக் தரம்பிரிக்க அவன் கற்றுக்கொள்ளட்டும்.
நல்லதை மட்டும் எடுத்து, கெட்டதை அவன் விடுக்கட்டும்.

அழுவதற்கு அவன் வெட்கப்பட வேண்டாம்.
அதிஇனிமையான வார்த்தைகளால் அவன் கவரப்பட வேண்டாம்.
தன் சிந்தனையை அதிக விலைக்கு விற்கட்டும்
ஆனால், ஒருநாளும் தன் ஆன்மாவையும், இதயத்தையும் அவன் விற்றுவிட வேண்டாம்.

சத்தமிடும் கூட்டத்திற்குத் தன் காதுகளை அவன் மூடிக்கொள்ளட்டும்.
'சரி' என்று தெரிந்தால், தனியாகவே அவன் போராடட்டும்.

அவனை மென்மையாகக் கையாளுங்கள். ஆனால், ரொம்பவும் செல்லம் கொடுக்காதீர்கள்.

நெருப்பே வலிமையான இரும்பை உருவாக்கும்.

பொறுமையற்று இருக்க அவன் துணிச்சலோடும்,
துணிச்சலோடு இருக்க அவன் பொறுமையாகவும் இருக்கட்டும்.

எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்க கற்றுக்கொடுங்கள்.
தன்னை நம்பும் ஒருவனால்தான் இந்த மனுக்குலத்தை நம்ப முடியும்.

இதுதான் என் கட்டளை...உங்களால் முடிந்தவரை இதைச் செய்யுங்கள்...

அவன் ரொம்ப நல்ல பையன்...அவன் என் மகன்'


Monday, February 15, 2016

திரும்பவும் வீட்டிற்குள்

அ. இலக்கியக் கூறு
உரைநடையாக சென்று கொண்டிருக்கும் தோபித்து நூல் இங்கே கொஞ்சம் செய்யுளாக மாறுகின்றது. தோபித்து நூல் 3:2-6 மற்றும் 3:11-15 செய்யுள் வடிவில் இருக்கின்றது. இவ்வாறு உரைநடையின் இடையே வரும் செய்யுளை ஆங்கிலத்தில் 'Inset Hymn' (இடைநில் பாடல்) என சொல்கிறார்கள். இவ்வகைப் பாடல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டு, உரைநடைக்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி சேர்க்கப்பட்டாலும், இவைகள் உரைநடையின் கதைமாந்தர்களின் உணர்வு, கதையின் ஓட்டம் அனைத்தையும் ஒத்தே இருக்கின்றன. விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் காதல், சோகம் போன்ற உணர்வுகள் பாடல்களாகக் காட்டப்படுவதுபோல, உரைநடையின் ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி, கதைமாந்தர்களின் உணர்வை பாடலாக்குகின்றனர் ஆசிரியர். உதாரணத்திற்கு, இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளை உரைநடையாக பதிவு செய்யும் லூக்கா, பிறப்பு முன்னறிவிப்பு, மரியா-எலிசபெத்து சந்திப்பு என உரைநடையாக எழுதிவிட்டு, டக்கென நிறுத்தி மரியாளை பாடல் ஒன்று பாடல் வைக்கின்றார். இவ்வகைப் பாடல்களின் நோக்கம் இரண்டு: ஒன்று, இதுவரை நடந்தவற்றை வாசகருக்கு நினைவூட்டுவது. இரண்டு, இனி வரவிருப்பவைகளுக்கு வாசகரைத் தயாரிப்பது.

தோபித்து 3ல் காணும் இரண்டு இடைநில் பாடல்களும் மன்றாட்டுக்கள் வகையைச் சார்ந்தது.

ஆ. இரண்டு பேர்

தோபித்து நூல் 3ஆம் பிரிவு மிக முக்கியமானது. ஏனெனில் இங்குதான் கதைமாந்தர் தன்மையில் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து படர்க்கையில் பேச ஆரம்பிக்கின்றார். மேலும், இங்கேதான் கதையின் அடுத்த முக்கிய கதைமாந்தர் சாரா அறிமுகம் செய்துவைக்கப்படுகின்றார்.

தோபித்துக்கும், சாராவுக்கும் ஐந்து ஒற்றுமைகள் இருக்கின்றன:

1. தோபித்து வீட்டின் முற்றத்தில் இருக்கின்றார். சாரா வீட்டின் மாடியில் இருக்கின்றார். நம் வீடுகளின் முற்றம், வாசற்படி, திண்ணை, படிக்கட்டுகள் போன்றவற்றிற்கு உணர்வுப்பூர்வமான அர்த்தமும் உண்டு. அதாவது, வீட்டிற்குள் கணவன்-மனைவிக்குள், பெற்றோர்-பிள்ளைக்குள் சண்டை வரும்போது, பாதிக்கப்பட்டவர் அழுவதற்கு ஓடிச்செல்லும் இடம் அதுதான். நம் வீட்டுத் திண்ணைகளும், படிகளும், மாடிகளும், எத்தனை பேரின் கண்ணீரைத் தாங்கியிருக்கின்றன. இப்படி ஓடிச் சென்று நாம் அவற்றில் அமர்ந்து அழும்போது, நாம் நம்மைக் காயப்படுத்தியவருக்கு எதிராக மௌனமாக போராட்டம் செய்கின்றோம். 'இனி உனக்கும், எனக்கும் சம்பந்தமில்லை' என தற்காலிமாக நமக்குள் சொல்லிக்கொள்கிறோம். மேலும், முற்றம், திண்ணை, படி, மாடி இவைதான் நம்மை வெளியுலகத்தோடு இணைக்கின்றன. உள்ளேயிருந்து வெளியே கடத்தும் காரணிகள் இவை. இங்கே நாம் அமரும்போது நமக்குள் ஒருவித பாதுகாப்பின்மையும் இருக்கிறது. வீட்டிற்குள் இருக்க பயம். ஏனெனில் நம்மைக் காயப்படுத்தியவர் உள்ளே இருக்கிறார். வெளியேறிச் செல்ல பயம். ஏனெனில் வெளியுலகம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. இந்தப் போராட்டத்தில் நாம் இடையிலேயே நின்றுகொள்கிறோம். தோபித்தும், சாராவும் இப்படித்தான் இருக்கின்றனர்.

2. இருவருமே இரு பெண்களால் பழித்துரைக்கப்பட்டவர்கள். தோபித்து தன் மனைவி அன்னாவால். சாரா தன் பணிப்பெண் ஒருத்தியால்.

3. இருவருமே கடவுளை நோக்கி மன்றாடுகின்றனர். நம் மனித உள்ளம், தான் மீறமுடியாத ஒரு எல்லையை, அல்லது தன் சக்திக்கு மீறிய ஒன்றைக் கையாளும் நிலை வரும்போது, தன்னையறியாமலேயே அது கடவுளை நோக்கி தன் கண்களையும், கைகளையும் உயர்த்துகிறது.

4. இருவருமே சாக வேண்டும் என விரும்புகின்றனர். தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தங்களின் இறப்பு தான் என நினைக்கின்றனர்.

5. ஆனால் இருவருமே தங்களின் இறப்பு எண்ணத்தை விடுத்து வீட்டுக்குள் திரும்புகின்றனர். தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள், சாரா மாடியிலிருந்து வீட்டிற்குள் நுழைகின்றனர்.

இ. இரண்டு பாடல்கள்

தோபித்து பாடலும், சாரா பாடலும் மன்றாட்டுக்களாக இறைவனை நோக்கி எழுகின்றன. இந்த இரண்டு பாடல்களும் ஒரேவகை அமைப்பைக் கொண்டிருக்கின்றன:

1. புகழ்ச்சி (3:2, 3:11)
2. மன்னிப்பு (3:3-5, 3:12-14)
3. விண்ணப்பம் (3:6, 3:15)

ஈ. இரண்டு பிரச்சினைகள் - ஒரு தீர்வு

இந்தப் பாடல்கள் வழியாக இந்நூலின் ஆசிரியர் மற்றொன்றையும் தன் வாசகருக்குத் தெரியப்படுத்துகின்றார். அதாவது, இந்த நூல் தீர்க்கப்போகும் பிரச்சினைகள் இரண்டு:

1. பார்வையற்ற தோபித்து பார்வை பெறுதல்
2. திருமணம் கைகூடாத சாரா திருமணம் முடித்தல்

கடவுள் இந்த இருவரின் மன்றாட்டுக்களுக்கும் செவிகொடுக்கின்றார். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக தன் தூதர் ரபேலை அனுப்புகின்றார்.

உ. வாழ்வியல் சவால்கள்

1. முற்றம். மாடி. நம் வாழ்வில் எந்தப் பிரச்சினையென்றாலும், அந்த இடத்திலேயே, அல்லது பிரச்சினை தரும் அந்த நபரின் பிரசன்னத்திலிருந்து தற்காலிகமாக ஓடிவிட வேண்டும். நமக்கென்று ஒரு முற்றத்தை, ஒரு மாடியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அந்த நேரத்தில் நாம் மற்றவற்றின்மேல் கவனம் செலுத்தக் கூடாது. உதாரணத்திற்கு, என்மேல் ஒருவர் கோபப்பட்டு கத்திவிட்டார் என்பதை மறக்க, நான் டிவி அல்லது காமெடி பார்த்து என்னையே திசைதிருப்பக் கூடாது. திசைதிருப்புதல் ('distraction' or 'displacement') ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம். இது தற்காலிக தீர்வையே தரும். நிரந்தர தீர்வு வேண்டுமெனில், நாமே அமைதியாக அமர்ந்து நம் பிரச்சினையின் வேரைக் கண்டுபிடிப்பதும், நம்மைக் காயப்படுத்தியவரிடம் நேருக்கு நேர் பேசி பிரச்சனையைத் தீர்ப்பதுவுமே.

2. இரண்டாம் யோசனை. 'நான் இறந்து போகட்டும்' என மூன்றுமுறை செபிக்கின்ற தோபித்து தன் மனைவி மற்றும் மகள் நினைவு வந்தவுடன் வீட்டிற்குள் போகின்றார். தூக்குப்போட்டு இறப்பதற்காக கயிற்றுடன் மாடி ஏறி வந்த சாரா, 'நான் இறந்துவிட்டால் என் தந்தையை யார் பார்த்துக்கொள்வார்' என்று இறங்கி வருகின்றார். அவசர முடிவுகள்தாம் பல நேரங்களில் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகின்றன. காதல், படிப்பு, வேலை போன்றவற்றில் தோல்வியை தழுவியவர்கள் ஒரு நிமிடம் தங்களையே குடும்பம் என்ற பெரிய வட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டியதும், தங்கள் முடிவுகளைச் செயலாக்குமுன் ஒரு நொடி தன் பெற்றோரை நினைப்பதும் அவசியம்.

3. மனிதர்களின் வார்த்தைகள் சோப்புநுரை. மனைவியின் பழிச்சொல் தோபித்துக்கு, பணிப்பெண்ணின் பழிச்சொல் சாராவுக்கு வெறும் சோப்புநுரைகளாக தெரிந்தன. காற்று பட்டால் எல்லாம் கடந்துவிடும்.


Sunday, February 14, 2016

பரண்மேல் குருவிகள்

'அறைக்குள் சடலம் -
முற்றத்தில் குருவிகள் -
இடுப்பில் ஆட்டுக்குட்டி'

இந்த மூன்று சொல்லாடல்களுக்குள் அடக்கிவிடலாம் தோபித்து நூல் பிரிவு இரண்டை.

அ. அறைக்குள் சடலம் (2:1-8)

தோபித்து விருந்துண்ண அமர்கிறார். தனியாக அமர்ந்து சாப்பிட மனம் ஒப்பவில்லை. 'வெளியே போய் ஏழை யாரையாவது அழைத்து வா!' என தன் மகனை அனுப்புகிறார். இந்த நிகழ்வு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனெனில் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' (லூக் 14:13-14) என்னும் இயேசுவின் வார்த்தைகளை தோபித்து ஏற்கனவே வாழ்ந்துகாட்டினார் என்று சொல்கிறது. ஏழையைத் தேடிப்போன மகன் தோபியா, வழியில் ஒரு சடலம் காணக் கண்டு வீடு திரும்பி தன் தந்தையிடம் சொல்கிறான். தோபித்து உடனே மேசையை விட்டு எழுந்து, சென்று, சடலத்தை மீட்டு, தன் அறைக்குள் ஒளித்துவிட்டு, குளித்துவிட்டு, விருந்துண்ண அமர்கிறார். தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. 'உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்' என்ற ஆமோசின் இறைவாக்கை நினைவுகூர்கிறார். கதிரவன் இறந்தபின் சடலத்தை அடக்கம் செய்கிறார்.

ஆ. முற்றத்தில் குருவிகள் (2:9-10)

'நல்ல காரியம் ஒன்றைச் செய்துவிட்டோம்!' என்ற பெருமிதத்தில் குளித்துவிட்டு, முற்றத்துத் திண்ணையில் படுக்க, பரண்மேலிருந்த குருவிகளின் எச்சங்கள் கண்களில் பட, வெண்புள்ளிகள் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழக்கின்றார் தோபித்து. நான்கு ஆண்டுகள் பார்வையில்லாமல் இருக்கிறார்.

இ. இடுப்பில் ஆட்டுக்குட்டி (2:11-14)

தொடர்ந்து தோபித்து தன் மனைவி அன்னாவைப் பற்றிச் சொல்கின்றார். அன்னாவின் கைவேலைப்பாடுகளை வாங்கும் உரிமையாளர், அவளின் கூலியோடு சேர்த்து அவளுக்கு ஓர் ஆட்டையும் பரிசாகக் கொடுக்கின்றனர். கையில் சம்பளமும், இடுப்பில் ஆட்டுக்குட்டியுமாய் வீடு வந்து சேர்கிறாள் அன்னா. ஆட்டுக்குட்டியை முற்றத்தில் கட்டிப்போடுகின்றார். ஆடு கத்தக் கேட்டு, 'என்ன இது புது சத்தம்!' என ஆச்சர்யப்படுகிறார் தோபித்து. 'ஆட்டைத் திருடிக்கொண்டு வந்தாயா?' என தன் மனைவி மேல் கோபம் கொள்கிறார். தன் நேர்மையை சந்தேகிக்கும் தன் கணவரை கடிந்து கொள்கிறார் அன்னா. தோபித்தும் தன் சந்தேகத்திற்காக மன்னிப்பு கேட்கின்றார்.

1. நல்லதொரு குடும்பம். சுவையாக உணவு சமைக்கும் மனைவி. மனைவி என்ற சொல்லைக் குறிக்கும் 'bride' என்னும் ஆங்கிலச் சொல்லின் ஜெர்மானிய பதம் 'Braut' (இதன் வேர்ச்சொல் 'Brühen' (= to make broth or soup)
என்பதற்கு சமைப்பவர் என்பது பொருள். சுவையை ருசித்து அனுபவித்து, பகிர்ந்து உண்ணும் கணவன். சாப்பிட உட்கார்ந்தாலும், வேலை சொன்னவுடன், கீழ்ப்படிந்து ஓடிய மகன்.

2. அறையில் சடலம், மேசையில் உணவு. தன் அறையில் மாற்றானின் உயிரற்ற சடலம் இருக்க, தன் கையில் உணவை எடுக்கும் தோபித்து எவ்வளவு பெரிய மனத்துயரை அனுபவித்திருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும். மேலும், மாற்றானின் உயிரற்ற உடலை தன் வீட்டில் வைப்பதன் மூலம், தன் வீட்டிற்கே தீட்டுப்பட்டாலும் பரவாயில்லை என்றவராய், நல்ல காரியம் செய்வதில் கருத்தாய் இருக்கிறார்.

3. முற்றத்தில் வந்த சோதனை. இவ்வளவு முயற்சிகள் எடுத்து நல்லது செய்ய நினைக்கும் தோபித்து சின்ன சிட்டுக்குருவியின் வடிவில் வருகிறது சோதனை. மேலும் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தன் வீட்டு முற்றத்தை சிட்டுக்குருவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டார் தோபித்து. குருவிகளின் எச்சம் விழுந்து பார்வையற்றுப் போனதால் இவரின் நல்ல செயல்களுக்கு பெரிய தடை வந்துவிட்டது. பார்வையற்ற ஒருவர் இனி எப்படி குழி வெட்டி இறந்தோரை அடக்கம் செய்வார்? இனி எப்படி திருப்பயணம் செய்வார்? இனி எப்படி வேலை செய்து பத்திலொரு பாகம் கொடுப்பார்? ஆனால், சோதனைகள்தாம் நாம் யாரென்று நமக்கே காட்டுகின்றன. அகுஸ்தினார் அழகாக எழுதுவார்: 'சோதிக்கப்படாத ஒருவர் தன்னை எப்படி முழுமையாக அறிந்து கொள்வார்? வெற்றிபெறாத ஒருவர் எப்படி மகுடம் சூடுவார்? போராடாத ஒருவர் எப்படி வெற்றி பெறுவார்?'

4. அன்னாவின் கைவேலைப்பாடு. தொடக்ககால எபிரேய சமூகத்தில் பெண்களும் வேலை செய்திருக்கிறார்கள். வேலை வழியாக ஒருவர் தன்னையே அறிந்து கொள்கிறார். ஆக, வேலை மனித அடையாளத்தில் மிக முக்கியமானது. அன்னாவின் கைவேலைப்பாடு எந்த அளவிற்கு அழகாக இருக்கிறது என்றால், அதை வாங்கும் உரிமையாளர் ஓர் ஆட்டுக்குட்டியை போனஸாக கொடுக்கிறார். இன்று நாம் செய்யும் வேலையை உணர்ந்து, இரசித்து, அர்ப்பணத்தோடு செய்ய நம்மை தூண்டுகிறார் அன்னா.

5. 'உம்முடைய தருமங்கள் எங்கே?' அன்னாவின் இடுப்பிலிருந்து ஆட்டுக்குட்டி கத்துவதை வைத்து அவர் ஆட்டைத் திருடிவிட்டார் என தவறாகப் புரிந்துகொள்கிறார் தோபித்து. ரொம்ப நல்லவரா இருப்பதில் வரும் பிரச்சினை இதுதான். தங்களை நல்லவராக நினைக்கும் சிலர், தாங்கள் மட்டும்தான் நல்லவராக இருக்க முடியும் என்று நினைப்பது மட்டுமல்லாமல், மற்ற எல்லாரையும் கெட்டவராகவே நினைக்கின்றனர். இந்த அணுகுமுறை தவறானது. எல்லாருக்கும் சட்டங்கள் தெரியும். எல்லாருக்குள்ளும் நல்ல குணம் இருக்கிறது. நல்ல தரும காரியங்கள் செய்துவிட்டு, நம் மனம் இப்படி குறுகிவிட்டால் என்ன பயன்? இதைச் சரியான நேரத்தில் துணிச்சலோடு தோபித்துக்குச் சுட்டிக்காட்டுகிறார் அன்னா.

Saturday, February 13, 2016

தமிழர் வாழ்வு

 கடந்த சனியன்று பட்டினத்தாரின் திருவேகம்பாலையின் முதல் பகுதியைப் பார்த்தோம். இன்று அதன் தொடர்ச்சியைக் காண்போம்:

14க்குப்பின் தொடர்ந்து வரும் பாடல்களில் ஈகை செய்யாதவரை, விருந்தோம்பல் அனுசரிக்காதவரை, இரக்கம் காட்டாதவரை, எதிர்பாலினத்தின்மேல் மயக்கம் கொள்வோரை, கல்லாதவரை, உண்மை சொல்லாதவரை, குருவின்போதனைபடி நில்லாதவரை என எண்ணற்றோரை சாடுகின்றார்.

ஆனால், இந்தப் பாடல்களில் 10ஆம் நூற்றாண்டு தமிழர் வாழ்வும், சிந்தனையும் அதிகமாகக் காணக்கிடக்கிறது:

அ. 'ஆற்றில் கரைத்த புளி' (22)

இந்த உருவகம் நமக்கு பரிச்சயமான உருவகம். இதன் பொருள் என்ன? ஆற்றில் புளியைக் கரைப்பதால் ஆற்றுக்கும் பயனில்லை. புளிக்கும் பயனில்லை. மேலும் புளியின் ருசியை ஆற்றுத்தண்ணீர் மிகவும் நீர்மமாக்கிவிடுகிறது. நம்ம வீட்டுல ரசம் வைக்கும்போதே, புளி அளவும், தண்ணீர் அளவும் சரிவிகதமாக இருந்தால்தான் ரசம் சுவையாக இருக்கும். இல்லையா?

தன்னிடம் இருக்கின்ற அன்பு என்ற புளியை தான் ஆற்றில் கலந்து - அதாவது, படைப்புப்பொருட்களின்மேல் - கலந்து நான் படைத்தவராகிய உன்னை மறந்துவிட்டேனே என சிவபெருமானிடம் புலம்புகின்றார் பட்டினத்தார்.

ஆ. பூவையரின் ஒப்பனை (29)

'முட்டற்ற மஞ்சளை எண்ணெயில்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டு பொட்டிட்டு பித்தளையோலை விளக்கியிட்டு...'

மஞ்சள் மிக மேன்மையான கிருமிநாசினி. வியர்வை மற்றும் சோர்வால் நம் உடலில் உருவாகும் அழுக்கைக் களைகிறது. இது. மேலும், எண்ணெய் முகம் வறட்சியாவதைத் தடுக்கிறது. மெட்டி என்பது மோதிரம். இப்போது இதை நாம் திருமணத்திற்குப் பின் பெண்கள் காலில் அணியும் மோதிரமாக பொருள் கொள்கிறோம். பொட்டு, நம் இரண்டு புருவங்களுக்கும் இடையே இருக்கின்ற சிந்தனை சக்கரத்தை தூண்டி எழுப்புகிறது. பித்தளையோலை என்பது பித்தளை நகை. தங்கம் வெகு அரிதான உலோகமாக இருந்ததால், பெரும்பாலும் பித்தளை நகைகளையே அணிந்தனர். மேலும் பித்தளைக்கு பாசிட்டிவ் எனர்ஜியை இழுக்கும் ஆற்றல் உண்டு. ஆகையால்தான் சாமி சிலைகளும், கும்பங்களும் பித்தளை மற்றும் வெண்கலம் கலந்து செய்யப்படுகின்றன.

ஆக, பெண்களின் ஒப்பனை ஒவ்வொன்றுக்கும் மருத்துவ குணம் இருந்தது. இன்று எல்லாவற்றையும் நாம் விட்டுவிட்டு, கார்னியர், டவ், லாரியல், facial, bleach என மாறிவிட்டது வரலாற்று விபத்து.

இ. மறுபிறப்பு (42)

'அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியயேனும் அறிந்திலேன்
இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ
என்செய்வேன் கச்சியேகம்பனே!'

பட்டினத்தார் மறுபிறப்புக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். இதற்கு முன் நாம் பிறந்திருப்போம். இன்னும் நாம் பிறப்போம். இறைவனின் திருச்சந்நிதியை அடையும் வரை, மோட்ச நிலையை அடையும் வரை நாம் தொடர்ந்து பிறந்துகொண்டே இருப்போம்.

'பார்த்திபன் கனவு' நூலில் கல்கி அழகாக பதிவு செய்கிறார்:

'நாம் இறக்கின்றோம் என நினைக்கிறாயா?
இல்லை.
இறப்பில் உடல்தான் மண்ணுக்குப் போகிறது.
உயிர் தான் இருந்த இடத்திலேயே இருந்துவிடுகிறது.
அது தன் சந்ததியைக் காக்கிறது. அதன் வளர்ச்சியில் பெருமை கொள்கிறது.'


Friday, February 12, 2016

தோபித்து - தன் அறிமுகம்

தோபித்து என்னும் கதைமாந்தர் யார் என்பதை தோபித்தே சொல்வதாக பதிவு செய்கிறார் நூலின் ஆசிரியர்.

அ. முன்மாதிரியான யூதர்

'என் வாழ்நாளெல்லாம் உண்மையையும், நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்' (1:3) - இதுதான் தோபித்தின் மிஷன் ஸ்டேட்மெண்ட். இனி இந்த நூலில் வருவதெல்லாம் இந்த இரண்டு வார்த்தைகளின் விளக்கவுரைதான்.

ஆ. இணைச்சட்டத்தார் இறையியல் (Deuteronomist Theology)

இணைச்சட்ட நூலில் சொல்லப்பட்டதன்படி நடக்க மக்களை அறிவுறுத்திய இறைவாக்கினர்களும், விவிலியநூல் ஆசிரியர்களும் 'இணைச்சட்டத்தார்' என அழைக்கப்படுகின்றனர். இணைச்சட்ட நூல் சொல்வது என்ன? 'சட்டங்களை கடைப்பிடி - வாழ்வாய்! சட்டங்களுக்கு கீழ்ப்படியாவிட்டால் - சாவாய்!' நம் நாட்டார் வழக்கியலில் சொல்ல வேண்டுமெனில், 'கையில காசு - தட்டுல தோசை'. நன்மை செய்தால் நன்மை நடக்கும், தீமை செய்தால் தீமை நடக்கும். எ.கா. 'நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்...அவர் என்னை பெருமைப்படுத்தினார்' (தோபி 1:12-13). 'கடவுளுக்கு அஞ்சினால் அவர் நமக்கு நன்மை செய்வார்' என்பதே இப்புரிதல்.

தோபித்து இத்தகைய இறையியலை வாழ்பவராகத்தான் முன்வைக்கப்படுகின்றார்.

இணைச்சட்ட நூல் சொன்ன அனைத்தையும் பின்பற்றுகின்றார்:

1. 'நான் என் முழு மனத்துடன் என்; கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்' (தோபி 1:12. இச 6:2-4)
2. 'பசியுற்றோருக்கு உணவளித்தேன்' (தோபி 1:17. இச 15:11)
3. 'ஆடையற்றோருக்கு ஆடையளித்தேன்' (தோபி 1:17. இச 24:13)
4. 'இறந்தவரை அடக்கம் செய்தேன்' (தோபி 1:17. இச 21:23)
5. 'வெள்ளியைக் கடன் கொடுத்தேன்' (தோபி 1:14. இச 15:6-8)
6. 'ஆறு ஆண்டுகள் சேர்த்து வைத்து ஏழாம் ஆண்டு எருசலேம் திருப்பயணம் சென்றேன்' (தோபி 1:7. இச 16.6)
7. 'பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுத்தேன்' (தோபி 1:6. இச 14:22-29)
8. 'வேற்றினத்தாரின் உணவை நான் உண்ணவில்லை - சிலைகளை வணங்கவில்லை' (தோபி 1:11. இச 13)
9. 'என் தந்தையின் வழிமரபைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்தேன் - வேறு கலப்பு உறவு கொள்ளவில்லை. இனத்தின் தூய்மை காத்தேன்' (தோபி 1:9. இச 7:3)
10. 'பெற்றோருக்கு கீழ்ப்படிந்து அவர்கள் அறிவுரையைக் கேட்டேன்' (தோபி 1:8. இச 5:16, 21:18)

இணைச்சட்ட நூலின் முக்கியக்கூறுகள் அனைத்தையும் தான் வாழ்ந்து காட்டுவதாக அறிக்கையிடுகின்றார் தோபித்து.

இ. தோபித்து - யோபு ஒற்றுமை

தோபித்து இணைச்சட்டத்தார் இறையியலை தீவிரமாக வாழ்ந்தாலும், சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அரசனிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, அவரின் உடைமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன: '...என்னைக் கொல்லத் தேடினர்...என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு...என் மனைவி அன்னாவையும், என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சவில்லை' (தோபி 1:20). 'நீதிமான்கள் அல்லது நிர்மல உள்ளம் கொண்டோர் ஏன் துன்புறுகின்றனர் (the suffering of the just or the innocent)?' என்ற கேள்வி நாம் யோபு நூலை வாசிக்கும்போது நம்முள் எழுகிறது. யோபுவைப் போல உடலில் துன்பங்கள் ஏற்படாவிடினும், தன் மகன்களை இழக்காவிடினும், தோபித்தின் துன்பமும், யோபுவின் துன்பத்தை ஒத்திருக்கிறது என்பது கண்கூடு.

ஈ. வாழ்வின் இருபருவங்கள்

எபிரேய விவிலியம் மனிதரின் வாழ்வை இரண்டு பருவங்களாகப் பிரிக்கிறது: (அ) இளமைப் பருவம், (ஆ) பெரியவர் பருவம். தோபி 1:4-8 தோபித்தின் இளமைப்பருவம் பற்றியும், 1:9-22 அவரின் பெரியவர் பருவம் பற்றியும் சொல்கிறது. அந்தந்த பருவத்திற்குரியதை அந்தந்த பருவத்தில் வாழ்கிறார் தோபித்து.

உ. வாழ்வியல் சவால்கள்

1. 'பசித்தோர்க்கு உணவு. நிர்வாணத்தை அணிந்தவர்களுக்கு ஆடை. இறந்தோருக்கு நல்லடக்கம்.' உணவு, ஆடை, அடக்கம் - இயற்கையால் அல்லது சக மனிதர்களால் மனுக்குலத்திற்கு ஏற்படும் இடர்பாடுகள் நேரங்களில் இந்த மூன்றும்தான் அவசிய தேவையாக இருக்கின்றன. தோபித்தின் காலத்தில் நடைபெற்ற போரினால் மக்கள் உணவு, ஆடை இல்லாமல் வருந்தினர். இறந்தோர் தெருக்களில் கிடந்தனர். நம் வாழ்வில் இந்த மூன்றில்தாம் நாம் வலுவற்று நிற்கின்றோம். நாம் செய்யும் வேலை, மேற்கொள்ளும் பயணம், சம்பாதிக்கும் உறவு அனைத்தும் இந்த மூன்றிற்காகத்தானே: இருக்கும் வரை நமக்கு சாப்பாடு, உடை வேண்டும். இறக்கும்போது உறவுகள் வந்து நம்மை அடக்கம் செய்ய வேண்டும். இந்த மூன்றையும் நாம் 'உடல்சார்ந்த இரக்கச் செயல்கள்' (Corporal Works or Acts of Mercy) (மொத்தம் 7) என்று சொல்கின்றோம். இன்று இந்த மூன்று செயல்களுமே குறைந்துவருகின்றன. உணவு, உடை கொடுக்க முடியாவிட்டாலும், இறந்தோரை அடக்கம் செய்ய, இறந்தவருக்கு மரியாதை செலுத்த, அந்தக் குடும்பத்தாரோடு உடன் நிற்க நாம் முயற்சி செய்யலாம்.

2. 'பத்தில் ஒரு பங்கு.' தோபித்து மாத சம்பளம் வாங்கி வருவதை கற்பனை செய்து பார்ப்போம். வீட்டிற்கு வந்தவுடன் சம்பள பணத்தை அப்படியே மேசையில் விரித்து பத்து பங்குகளாக கூறுபோடுகின்றார். முதல் பங்கு ஆலயத்திற்கு, இரண்டாம் பங்கு திருப்பயணத்திற்கு, மூன்றாம் பங்கு கைவிடப்பட்டவர்க்கும், கைம்பெண்களுக்கும், நான்காம் பங்கு சாப்பாட்டிற்கு, ஐந்தாம் பங்கு மருந்திற்கு, ஆறாம் பங்கு விருந்தினர் உபசரிப்புக்கு, ஏழாம் பங்கு மகனின் படிப்பிற்கு, எட்டாம் பங்கு வீடு பராமரிப்பிற்கு, ஒன்பதாம் பங்கு கடன் கொடுக்க, பத்தாம் பங்கு அவசரத்துக்கு. என்ன அழகான நிதிநிலை மேலாண்மையை தோபித்து செய்கின்றார்! இப்படி பிரித்து வாழும்போது நாமும் முதன்மையானவைகளுக்கு நிதி ஒதுக்கவும், நம் வரையறைக்குள் வாழவும் கற்றுக்கொள்கிறோம்.

3. 'ஒருவர் காட்டிக்கொடுக்கின்றார். மற்றொருவர் பரிந்து பேசுகின்றார்' (தோபி 1:19,22) கடவுள் ஒரு கதவை அடைத்தால், மறு கதவை திறப்பார் என்பதுபோல, ஒருவர் தோபித்தைக் காட்டிக் கொடுத்ததால் அவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. ஆனால், அதே நேரத்தில் மற்றவரின் பரிந்து பேசுதலால் தோபித்து தன் உடைமைகளையெல்லாம் திரும்ப சம்பாதிக்கின்றார். நம் வாழ்விலும் இந்த இரண்டு பேரும் வருவார்கள். நாமும் இந்த இரண்டுபேர் போலவும் வாழ்கின்றோம். முதலாமவர் மறைந்து, பரிந்து பேசும் இரண்டாமவர் நம்மில் மேலோங்கி நின்றால், நாமும் அடுத்தவர்களின் இழப்புக்களை ஈடு செய்ய முடியும்.

Thursday, February 11, 2016

கதைச்சுருக்கம்

'இது தோபித்தின் கதை' என்று தொடங்கும் இந்த நூல் தோபித்து மற்றும் அவரது மகன் தோபியாவைப் பற்றியது. 'தோபி' (Tov-i) என்றால் எபிரேயத்தில் 'நான் நல்லவன்' என்றும், 'தோபியா' (Tov-ya) என்றால் 'ஆண்டவர் நல்லவர்' என்பதும் பொருள்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேல், சாலமோன் அரசனின் ஆட்சிக்குப் பின், வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என இரண்டாகப் பிரிகிறது. கி.மு. 722ஆம் ஆண்டில், இரண்டாம் சார்கனின் மகனாகிய சென்னாகெரிப்பின் தலைமையில் இஸ்ரயேலை முற்றுகையிடும் அசீரியர்கள், வெற்றி கொண்டு இஸ்ரயேல்வாழ் மக்களை அசீரியாவின் தலைமையிடமான நினிவே நகருக்கு நாடுகடத்திச் செல்கின்றனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையே இந்நூல்.

நாடுகடத்தப்பட்ட சூழலிலும், இறைவன் நன்மையற்றவர், கைவிட்டுவிட்டார் என கலங்கி நிற்கும் நேரத்திலும், இறைவனின் நன்மைத்தனத்தை மக்கள் எண்ணிப்பார்த்து வாழ்வதற்காக எழுதப்பட்ட பாடம் இது. ஒரு கதை அல்லது நாவல்லா போல இதை எழுதக் காரணம், மனிதர்களுக்கு இயல்பாகவே கதைமேலும், கதைமாந்தர் மேலும் இருக்கும் நாட்டமே.

பக்தி, பெற்றோருக்கு கீழ்ப்படிதல், தர்மம் செய்தல், செபித்தல், திருமணத்தின் தூய்மை, சட்டங்களைக் கடைப்பிடித்தல் என ஒவ்வொன்றையும் பற்றி கட்டுரை எழுதி அல்லது போதித்து போரடிக்காமல், மிக அழகாக இவை எல்லாவற்றையும் ஒரு கதையாகச் சொல்லிவிடுகின்றார் இதன் ஆசிரியர்.

நூலில் மொத்தம் 15 பிரிவுகள். 1:3-3:6 வரை உள்ள பகுதி, தோபித்தே தன்வரலாறு கூறுவதாகவும், தொடர்ந்து வருபவை, மூன்றாமவர் பதிவுசெய்வதுபோலவும் கொடுக்கப்பட்டுள்ளது.

தோபித்து-அன்னா குடும்பம் நினிவேயில் வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரே மகன் தோபியா.

இந்த நூல் எழுதப்பட்ட காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம். இது முதலில் அரமேயத்தில் எழுதப்பட்டு, அரமேயம் நமக்கு கிடைக்கப்பெறாமல் இதன் கிரேக்க மொழிபெயர்ப்பே நம்மிடம் உள்ளது.

கதைச்சுருக்கம்

தோபித்து ஒரு நேர்மையாளர். நாடுகடத்தப்பட்டு அந்நிய நாட்டில் இருந்தால், தன் யூத சட்டதிட்டங்களுக்கும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்பவர். மற்ற தெய்வங்களை மனதாலும் நாடாதவர். நிறைய செல்வங்களைக் கொண்டிருந்தவர். இறந்தவர்களை அடக்கம் செய்வது, இரந்தோருக்கு தர்மம் செய்வது என இவரின் வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. ஒரு வெப்பமான இரவில், இறந்த ஒருவரை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பி, தன் வீட்டுத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருக்க, குருவிகளின் எச்சம் கண்களில் விழ, கண்பார்வை இழக்கின்றார். வெறுமையின், தவிப்பின் வெளிப்பாடாய், 'நான் சாவதே மேல்' என கடவுளிடம் செபிக்கிறார். அதே நாளில் மேதியா நாட்டு எக்பத்தானா நகரில் உள்ள சாராவும், தோபித்தின் உறவுக்காரரின் மகள், ஏழுமுறை திருமணம் நடைபெற்று அண்டை அயலாரின் கேலிப்பேச்சுக்கு ஆளானதாலும், ஒவ்வொரு முறை திருமணம் நடைபெற்ற முதல் இரவில் தன் கணவனைத் தழுவும்வேளையில் அசுமதேயு என்ற அலகை அவர்களைக் கொன்றுவிட, மனவிரக்தியில் இறைவனை நோக்கி மன்றாடுகிறாள்.

தோபித்துக்கு கண் பார்வை கிடைக்குமா? சாராவுக்கு திருமணம் நடக்குமா? - இந்த இரண்டும்தான் இந்த இடத்தில் நமக்கு வருகின்ற கேள்விகள். இந்த கேள்விக்கு விடைகொடுக்க வானிலிருந்து இறங்கி வருகின்றார் ரபேல் என்னும் தேவதூதர்.

தான் இறக்கும் தருவாயில் இருப்பதாக உணர்கின்ற தோபித்து, தன்னிடம் கடன்பெற்றிந்த தன் தூரத்து உறவினர் இரகுவேலிடம் பணத்தை பெற்று வருமாறு மேதியா நாட்டுக்கு தன் ஒரே மகன் தோபியாவை அனுப்புகிறார். இந்த பயணத்தில் யார் உடன் செல்வார் என தோபியாவின் தாய் அன்னா கலங்கி நிற்க, அங்கே வருகின்றார் இரபேல். வந்திருப்பவர் வானதூதர் என்று தெரியாமலேயே உடன் நடக்கிறார் தோபியா. போகின்ற வழியில் தோபியா தன் பாதங்களைக் கழுவ திக்ரீசு ஆற்றில் இறங்குகிறார். அவரின் பாதங்களை மீன் ஒன்று கவ்விக்கொள்கிறது. அந்த மீனைக் கொல்லுமாறு இரபேல் கட்டளையிட, அதைக் கொன்று, அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து 'மருந்துப்பொருட்களாக பயன்படும்' என எடுத்துவைத்துக்கொள்கின்றார் தோபியா. மேதியாவில் இரபேல் சொன்னவாறு சாராவை மணம் முடிக்கிறார். மீனின் இதயமும், ஈரலும் அந்த இரவில் சுட்டெரிக்கப்பட அலகை அழிகின்றான். திருமணம் நடந்தேறுகிறது. சாராவுடன் தன் வீடு திரும்பும் தோபியா, மீனின் பித்தப்பையை வைத்து தன் தந்தையின் பார்வையை திரும்பச் செய்கின்றார். இரபேல் தான் யார் என அவர்களுக்கு வெளிப்படுத்த டக்கென மறைந்துபோகின்றார்.

தோபித்தின் புகழ்ப்பாடலோடு நிறைவுபெறுகிறது நூல்.

புலம்பல் பாடலோடு தொடங்கும் நூல் புகழ்ப்பாடலோடு முடிகிறது - இதுதான் நூலின் ஒற்றை வாக்கியம்.