Thursday, January 31, 2019

எதுவும் செய்யாமலே

இன்றைய (1 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 4:26-34)

எதுவும் செய்யாமலே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'தானாக வளரும் விதை,' 'கடுகு விதை' என்ற இரண்டு உவமைகளை முன்வைக்கின்றார். இரண்டு உவமைகளிலும் விதைத்தவரின் வேலை விதைப்பதோடு நின்றுவிடுகின்றது. மற்றவை விதைக்குள்ளே இருந்து தானாக நடந்தேறுகின்றன.

இறையரசைப் பற்றி இது சொல்வது என்ன?

இறையரசின் விதைகளை இயேசு விதைத்துவிடுகின்றார். அவ்விதைகள் தங்களிலேயே வீரியம் கொண்டவை. ஆக, யாரும் எதுவும் செய்யாமலே அவைகள் வளர்ந்துவிட வாய்ப்பு உண்டு.

இயேசுவின் இவ்வுவமைகள் இறையரசின் பண்பைக் குறிக்கின்றனவே தவிர, நாமும் ஒன்றும் செய்யாமல் இருக்கலாம் என்ற பொறுப்பற்ற நிலையை அவை சொல்லவில்லை.

ஒரு சாதாரண விதையே தன் இயல்பாக மாறும் ஆற்றல் பெற்றிருக்கின்றது என்றால், நம் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருக்கும் இறைவனின் இயல்பை நோக்கி நாம் வளர்கிறோமா? என்பதுதான் இங்கே கேள்வி.

தானாக வளரும் விதையானது, தளிர், கதிர், தானியம் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது.

'உரோமை நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அது ஒரே நாளில் கட்டப்படவில்லைதான். ஆனால், அன்றன்றைக்கு உள்ள வேலையை அவர்கள் செய்திருக்கத்தான் செய்வார்கள். அன்றன்றைய வேலையைச் செய்யாமல் ஒரே நாளில் நகரமாக நாமும் உருவெடுத்துவிட முடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் தன் திருச்சபையினர் சிக்கல்களை எதிர்கொண்ட விதத்தைப் பாராட்டுகின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், அவர்களின் அந்தச் செயல்பாட்டை ஒரு மாபெரும் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றார்.

ஒவ்வொரு நாளும் எப்படி வளர்வது என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் அழகாச் சொல்கிறது:

'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே - அதாவது, எடுத்த காரியத்தில் நிலையாய் - குடியிரு. நம்பத் தக்கவராய் வாழ். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு.'

கொஞ்சம் கொஞ்சமாய், மெதுமெதுவாய் வாழ்வதே வாழ்க்கை.

அரக்கப் பரக்க, வேகமாக ஓடுவது வாழ்க்கை அல்ல. அது வளர்ச்சியும் அல்ல.

பிறக்கின்ற இந்தப் பிப்ரவரியில் இன்னும் கொஞ்சம் வேகம் குறைப்போம்.


Wednesday, January 30, 2019

விளக்குத்தண்டின் மீது

இன்றைய (31 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 4:21-25)

விளக்குத்தண்டின் மீது

நேற்று மாலை மருந்தகம் சென்றேன். திருச்சியின் பிரபலமான பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸின் மேலப்புதூர் கிளையைத் தாண்டி இருக்கிறது அம்மருந்தகம். அம்மருந்தகத்தை நெருங்கச் சில அடிகளே இருக்க, மூதாட்டி ஒருவர் பார்வையற்ற ஒருவரை அவர் ஊன்றி வந்த குச்சியைப் பிடித்து சாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தார். இம்மூதாட்டி ஸ்வீட் கடையின் வெளியில் அமர்ந்து யாசகம் செய்பவர். பார்வையற்ற நபர் இவருடைய வயதை ஒத்தவராகவும், நீட்டான பேண்ட், சர்ட் அணிந்தவராகவும் இருந்தார். இருளாகிவிட்டதாலும், அவர் குச்சியை ஊன்றி நடக்க வேண்டியிருந்ததாலும் ஒரு வேளை பார்வையற்ற நபரை இப்பெண் அழைத்துக்கொண்டு போகிறார் என நினைத்துக்கொண்டேன். மருந்தகம் சென்று திரும்பும்போது இப்பெண் திரும்பவும் தன் இடம் திரும்பிக்கொண்டிருந்தார். வழக்கமாக கூனிக் குறுகி அமர்ந்திருக்கும் இப்பெண் பெருமிதத்தோடு நடந்து வந்துகொண்டிருந்தார். 'அடுத்தவரின் கையை நம்பி இருந்த நான் இன்று ஒருவருக்கு கை கொடுத்தேன்!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா? அல்லது 'நான் இன்று ஒரு நல்லது செய்தேன்!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா? அல்லது 'என் இயல்பே நல்லது செய்வதுதானே!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா?

தன் இருப்புக்கு, தன் இயக்கத்திற்கு அடுத்தவர் இடும் யாசகத்தைச் சார்ந்திருக்கும் பெயரில்லா இந்தப் பெண் எனக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின் உருவகமாகத் தெரிகின்றார்.

தன் விளக்கை அவர் மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைக்காமல் விளக்குத் தண்டின் மீது வைத்தார்.

தொடர்ந்து இயேசு சொல்லும் வார்த்தைகள் ஒரே நேரத்தில் ஆறுதலாகவும், நெருடலாகவும் இருக்கின்றன:

'எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். இன்னும் கொஞ்சம் சேர்த்தும் கொடுக்கப்படும்'

- ஆக, வாழ்வில் இது செய்தால் இது கிடைக்கும் என்பதில்லை. அப்படியும் கிடைக்கலாம். அதற்கு மேலும் கிடைக்கலாம். ஏன்? கிடைக்காமல்கூடப் போகலாம்!

'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'

- அப்படின்னா பேங்க் லாக்கரை உடைத்து 5 கோடி மதிப்புடைய தனக்கு உரிமையில்லாத நகையை ஒருவர் உரிமையாக்கிக்கொண்டால் அவருக்கு இன்னும் 5 கோடி கொடுக்கப்படுமா? அல்லது ஒரு பெருநிறுவனம் சின்னஞ்சிறு நிறுவனங்களை எல்லாம் விழுங்குகிறது என்றால் அதன் பசிக்கும் இன்னும் பல நிறுவனங்கள் பலியாகுமா?

இல்லை.

'உள்ளவர்' என்பதையும் 'இல்லாதவர்' என்பதையும் அளவிடும் அளவுகோல் எனக்கு வெளியில் இல்லை. மாறாக, எனக்கு உள்ளேதான் இருக்கிறது.

ஒன்றும் இல்லாததாக உணர்ந்த அந்தப் பெண் தன் உதவும் குணத்தை தன்னுடைய கையிருப்பாகப் பார்த்தார். ஆக, அது அவரின் மகிழ்வைப் பெருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம்.

நம் அளவை மாறுபட்டாலும், நமக்கு அளக்கப்படும் அளவை மாறுபட்டாலும், நம்மை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்று மற்றவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், எனக்கு மிகுதியாகக் கூடினாலும் கூடவில்லை என்றாலும்,

என் விளக்கை நான் கட்டிலின் கீழ் வைத்துவிடக்கூடாது!

அப்படி வைப்பது - யாருக்கும் பயன் இல்லாமல் போவதோடல்லாமல், கட்டிலும் எரிந்துவிட, விளக்கும் அணைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

கண் தெரியாதவரைக் கரை சேர்த்த அந்த யாசகி விளக்குத் தண்டின்மீது விளக்கு.

அவர் அந்த நிலைக்கு வர முயற்சி அவசியம்.

தன் இருப்பை விட்டு எழ வேண்டும்.

தனக்கு அந்நேரம் வரும் யாசகத்தை இழக்க வேண்டும்.

தான் திரும்பி விரும்போது தன் இடம் பறிபோயிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இருந்த இடத்தில் எரிவதும், கட்டிலின் கீழ் எரிவதும், மரக்காலில் எரிவதும் பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், அந்தப் பாதுகாப்ப எந்நேரமும் ஆபத்தாக மாறலாம்.

Tuesday, January 29, 2019

விதைகள் உவமை

இன்றைய (30 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 4:1-20)

விதைகள் உவமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைகள் உவமை அல்லது விதைப்பவர் உவமையையும், அதற்கு இயேசு தரும் விளக்கத்தையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) உவமை, (ஆ) உவமைகளின் நோக்கம், (இ) உவமையின் விளக்கம்.

அ. உவமை

இந்த உவமையில் நான்கு காரணிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

1. விதைப்பவர்
2. விதைகள்
3. நிலம்
4. புற எதிரிகள்

1. விதைப்பவர் - இவர் ஒரே ஆள்தான். ஆனால், விதைகள் சரியாகப் பலன் கொடுக்காததற்கு இவரும் ஒரு காரணரே. இவர் அகலக் கை படைத்தவர். பணக்காரர். ஆகையால்தான், விதைகளை அள்ளி அவர் விருப்பம்போல தெளிக்கிறார். சிக்கனக்காரர் என்றால் சரியாக விதைகளை அளந்து, நல்ல நிலத்தில் மட்டும் தெளித்திருப்பார். இவரின் அகலக்கையே இவரைக் கடவுள் எனச் சொல்லிவிடுகிறது. ஏனெனில் கடவுள்தான், 'நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவன் ஒளிரவும் மழை பொழியவும் செய்கின்றார்.'

2. விதைகள் - விதைகள் அனைத்தும் ஒரே வகை வீரியம் கொண்டவையாகத் தெரிகின்றன. ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஒரே பலனைத் தராமல் சில முப்பது, சில அறுபது, சில நூறு எனத் தருவதைப் பார்த்தால் விதைகளின் வீரியத்திலும் வித்தியாசம் இருப்பது போல இருக்கிறது. ஆனால், இறைவார்த்தையை விதைகளுக்குப் பொருத்திப் பார்த்தால் இறைவார்த்தையின் வீரியம் ஏற்றத்தாழ்வாக இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

3. நிலம் - வழியோரம், பாறை, முட்புதர், நல்ல நிலம்.

மக்கள் நடக்கும் வழி வழக்கமாக இறுகிப்போய் இருக்கும். அதில் விழும் விதை நிலத்திற்குள் செல்லாது. மேலும் பறவைகளின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும். பாறை நிலம். மேலோட்டமாக மண். கொஞ்சம் தாண்டினால் பாறை. பாதி வழி செல்லும் வேர் மீதி வழி செல்ல முடியாது. முட்புதர். பசுமையான இடம்தான். ஆனால், விதைக்குத் தேவையான ஊட்டத்தை முள் எடுத்துக்கொள்வதோடு ஒரு கட்டத்தில் விதைக்கு இடம் இல்லாமல் நெருக்கிவிடும். நல்ல நிலம். நன்றாக உழப்பட்டு, உரமிடப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட நிலம். விரிந்துகிடக்கும் மண் அப்படியே விதையை விழுங்கி விடுகிறது. பலன் தர ஆரம்பிக்கிறது விதை. எல்லா விதைகளையும் நல்ல நிலம் ஒன்று போல வாங்கினாலும் பலன் கொடுப்பது என்னவோ விதைகளைப் பொறுத்தே இருக்கிறது.

4. புற எதிரிகள் - வழியோரத்தில் பறவைகள், பாறை நிலத்தில் பாறை, முட்புதர் நடுவில் முட்செடிகள் என புற எதிரிகளும், நல்ல விதைக்கு புற எதிரிகளும் இல்லை.

ஆ. உவமைகளின் நோக்கம்

காண இயலாத ஒன்றைக் காண்பதிலிருந்து சுட்டிக்காட்டுவதே உவமையின் இயல்பு. எடுத்துக்காட்டாக, 'சிம்சோன் சிங்கத்தைப்போல வலிமையானவன்' என்ற வாக்கியத்தில். சிங்கத்தின் வலிமை நமக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாத ஒன்றான சிம்சோனின் வீரத்தைப் பதிவு செய்வதாக இவ்உவமை அல்லது உருவகம் அமைகிறது.

இ. உவமைகளின் விளக்கம்

மாற்குவின் குழுமத்திற்கு இறைவார்த்தையைப் பற்றிய ஒரு போதனை தேவைப்பட்டது. ஆகையால், இந்த உவமையைப் பதிவு செய்து இயேசுவின் சொற்களாலேயே விளக்குகிறார் மாற்கு. இறைவார்த்தையை ஏற்றுப் பலன் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனையாக விளக்கம் அமைகிறது.

இந்த நற்செய்தி வாசகம் நமக்கு என்ன சொல்கிறது?

இன்றைய கால கட்டத்தில் இறைவார்த்தையை நாம் பல வழிகளில் ஏற்கிறோம். நம் வாழ்வு ஏறக்குறைய மூன்றாம் நிலம்போலத்தான் இருக்கிறது. நிறைய சிக்கல்களுக்குள் விழுகிறது இறைவார்த்தை. எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் விளையாடும்போது நாம் அடிக்கும் பந்து முட்புதருக்குள் விழுகிறது என வைத்துக்கொள்வோம். நம்மால் பந்தைப் பார்க்க முடியும். ஆனால், பந்தை நெருங்க முடியாது. அப்படி நெருங்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தடையாகக் கடக்க வேண்டும். பந்தைப் பார்த்தவுடன் நேரடியாக நாம் அதை நோக்கிக் கையை நீட்டினால் முட்கள் நம் கைகளையும், முகத்தையும், கால்களையும் காயப்படுத்திவிடும். அப்படி அனைத்தையும் விலக்கி அருகில் சென்றாலும் அந்த பந்து ஏற்கனவே அங்கிருந்த முள் ஒன்றால் காற்றிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

முட்புதர் இருக்கின்ற நிலம் நல்ல நிலம்தான். நல்ல நிலமாய் அது இருப்பதால்தான் அங்கே முள் வளர்கிறது. ஆனால், தேவையற்ற அந்த முள் விதையின் தேவையைத் திருடிவிடுகிறது.

ஆக, இன்று இறைவார்த்தை என்னில் விழ, எதெல்லாம் அதை நெறித்துவிடுகிறது? என எண்ணிப் பார்ப்போம். அவற்றை ஒவ்வொன்றாக எடுக்க முற்படுவோம்.

எடுத்துக்காட்டாக, மரியாளின் வாழ்வு. கபிரியேல் தூதர் இறைவார்த்தையை விதைக்கிறார் மரியாவில். மரியாளிடமும் ஒரு முள் இருந்தது. தயக்கம். 'இது எங்கனம் ஆகும்?' என்கிறார். தூதர், 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. உன் உறவினள் எலிசபெத்தும்...' என்று அடையாளம் தர, தயக்கம் என்ற முள்ளை அகற்றி, 'ஆம்' என்கிறார். வளனாருக்கு, சந்தேகம் என்ற முள். பேதுருவுக்கு தன் பாவம் என்ற முள், பவுலுக்கு தன் பழைய வாழ்வு என்ற முள், அகுஸ்தினாருக்கு மேனிக்கேயம் என்ற முள் - முள்களை அகற்றியவர்கள் நல்ல நிலம் ஆனார்கள்.

நிலம் அங்கே பலன் தந்தது.


Monday, January 28, 2019

அதோ - இதோ

இன்றைய (29 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 3:31-35)

அதோ - இதோ

இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக்கொண்டிருக்க, இயேசுவின் தாயும் சகோதரர்களும் வெளியே அமர்ந்து கொண்டு அவரைக் காணக் காத்திருக்கிறார்கள். இதைக் காணும் கூட்டம், 'அதோ உம் தாயும் சகோதரர்களும் ...' என இயேசுவின் போதனையை இடைமறிக்கிறது.

ஏன் கூட்டம் இயேசுவை இடைமறித்தது?

இயேசுவின் கவனத்தை ஈர்த்து இயேசுவிடம் நல்ல பெயர் வாங்கவா?

அல்லது தாய் மற்றும் சகோதரர்களின் இருப்பைப் பதிவு செய்யவா?

அல்லது தாய் மற்றும் சகோதரர்களை இவர் எப்படிக் கையாளுகிறார் என்று இயேசுவைச் சோதிப்பதற்கா?

காரணம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாக இருந்திருக்க, இயேசுவோ, 'இதோ இவர்கள்' என்று தனக்கு அருகில் இருப்பவர்களைக் காட்டுகின்றார்.

'அதோ அவர்கள்' என்ற நிலையில் இல்லாமல், 'இதோ இவர்கள்' என்ற நிலையில் இருப்பவர்கள்தாம் இயேசுவின் தாயும், சகோதரர்களும். அப்படி என்றால், இயேசு தன் சீடர்கள் முன்னிலையில் தன் தாய் மற்றும் சகோதரர்களை மறுதலித்தாரா? இல்லை. என் தாய் 'அதோ அங்கே' என்று இன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தாலும், இறைத்திருவுளம் நிறைவேற்ற அவர் சொன்ன 'ஆமென்' வழியாக அவர் 'இதோ இங்கே' நிற்கிறார் என்று மரியாளின் நிலையை உயர்த்துவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

'அதோ' என்ற நிலையிலிருந்து 'இதோ' என்ற நிலைக்கு நாம் எப்படிக் கடந்து வருவது?

அதற்கான விடை இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபி 10:1-10) இருக்கிறது. இயேசுவின் ஒரே பலியை மற்ற எல்லா பலிகளையும்விட மேலானதாகக் காட்டும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இன்று அது எப்படி மேலானது என்பதைச் சொல்கின்றார்.

ஆண்டுதோறும் இடைவிடாமல் பலி செலுத்துபவர்கள் ஆடு, வெள்ளாட்டுக் கிடாய்கள், மற்றும் மாடுகளைப் பலி கொடுத்தனர். அப்படிக் கொடுக்கப்பட்ட பலிகளில் ஒரு 'அந்நியத்தன்மை' இருந்தது. அதாவது, பலி கொடுப்பவர், பலிப்பொருள் இவர்கள் இருவரும் வேறு வேறாக இருந்தனர். ஆக, 'அதோ' பலிப்பொருள், 'இதோ' நான் என தங்களையே பலிகளில் இருந்து தூரமாக வைத்துக்கொண்டனர் மற்ற தலைமைக் குருக்கள். இந்த நிலையில், பலி தன்மேல் படாது, இரத்தத்தால் குருவின் உடை அழுக்காகாது, மற்றபடி இப்பலி ஒரு பாதுகாப்பான தூரத்தைக் கொண்டிருக்கும்.

ஆனால், இயேசுவின் பலியில் இந்த அந்நியத்தன்மை மறைகிறது. ஏனெனில், இயேசுவின் பலியில், 'பலிப்பொருளும்,' 'பலி கொடுப்பவரும்' ஒன்றாக இருக்கின்றனர். ஆக, 'இதோ' பலிப்பொருள், 'இதோ' நான் என இயேசு சொல்லும் போது அங்கே தூரம் இல்லை. ஆனால், இவ்வகை பலி ஆபத்து நிறைந்தது. ஏனெனில், பலியின் இறுதியில் பலி இடுபவர் இறந்து போவார். இங்கே பலியிடுபவர் தான் பாதுகாப்பை ரிஸ்க் செய்கிறார். இந்தப் பலி கொடுப்பது இவருக்கு வலிக்கும்.

இந்த இரண்டாம் நிலை பலிதான் இறைவனுக்கு ஏற்புடையதாகின்றது.

ஏனெனில், இங்கே பலியிடுபவரின் உள்ளமும், உடலும் ஒருங்கே நொறுங்குகிறது. ஆக, நொறுங்குகின்ற உள்ளமும், உடலும்தான் இறைத்திருவுளம் நிறைவேற்ற முடியும். தாய்மையை அடையும்போது ஒரு பெண்ணின் உடலும், உள்ளமும் நொறுங்குகிறது. மரியாள், 'ஆமென்' என்று சொன்னபோது, உள்ளத்தில் அவர் கொண்டிருந்த திட்டங்கள் நொறுங்கி, இறைத்திட்டத்திற்கு தன் உடலையும் நொறுக்கினார்.

ஆக, 'அதோ' என்ற நிலை மாறி, இறைவனுக்கு அருகில் 'இதோ' என்று அறிமுகமாக, 'நொறுங்குதல்' அவசியமாகிறது.

Friday, January 25, 2019

திமொத்தேயு, தீத்து

இன்றைய (26 ஜனவரி 2019) திருநாள்

திமொத்தேயு, தீத்து

நம் தாய்த்திருநாடு தனது குடியரசுப் பெருநாளைக் கொண்டாடும் இந்நாளில் நம் தாய்த்திருச்சபை புனிதர்களும், ஆயர்களுமான திமொத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறது.

தொடக்கத் திருஅவையின் ஆயர்களாக இருந்தவர்கள். பவுலின் உடன் உழைப்பாளர்களாக இருந்த இவர்கள் ஆயர்நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர். இவர்கள் வயதில் மிகவும் சிறியவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகையால்தான், தொடர்ந்து பவுல் இவர்களுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். திமொத்தேயு எபேசு நகரின் ஆயராக இருந்தவர். தீத்து கிரேத்துத் தீவின் ஆயராக இருந்தவர். கடிதம் கொண்டு செல்வது, பிரச்சினைகளைத் தீர்க்க தூதுவராக அனுப்புவது போன்ற பணிகளுக்கு பவுல் திமொத்தேயுவைத்தான் பயன்படுத்துகின்றார் (காண். திபா 19:2, 1 கொரி 4:17, 1 தெச 3:2).

பவுல், 'விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை,' 'என் அன்பார்ந்த பிள்ளை' என்று திமொத்தேயுவையும், 'அனைவருக்கும் பொதுவான அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை' என்று தீத்துவையும் அன்பொழுக அழைக்கின்றார் பவுல். இவ்விரண்டு பேரின் குடும்பப் பின்புலத்தையும் நன்றாக அறிந்திருக்கின்றார் பவுல்.

இன்றைய முதல் வாசகத்தை (காண். 2 திமொ 1:1-8) நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த வாசகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. ஆயர் நிலைக்கு உயர்த்தப்படுமுன் உள்ள திமொத்தேயு

- இவர் அடிக்கடி கண்ணீர் விடுபவராக இருக்கிறார் ('உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்' என்கிறார் பவுல்)
- வெளிவேடமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்
- இவரின் பாட்டி மற்றும் தாயின் தவப்புதல்வராக இருக்கிறார்

ஆ. ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திமொத்தேயு

- அருள்கொடை தூண்டி எழுப்பப்பட வேண்டும் (அதாவது, ஒரு திரி போல. விளக்கில் எரிந்துகொண்டிருக்கிற திரி, எண்ணெயில் மூழ்கிவிடாமல் இருக்க, அல்லது திரி எரிந்து அணைந்துபோகாமல் இருக்க, அது அடிக்கடி தூண்டி எழுப்பப்பட வேண்டும்.)
- கோழை உள்ளம் விடுத்து, வல்லமை, அன்பு, கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும்
- சான்று பகர்வதைக் குறித்து வெட்கப்படாமல் இருக்க வேண்டும்

இங்கே என்ன வியப்பு என்றால், திமொத்தேயு தன் வேர்களையும், விழுதுகளையும் ஒன்றாக ஒருங்கியக்கும் திறன் பெற்றிருக்கின்றார். சிலர் தங்கள் வேர்களில் தங்கி விடுவர். இன்னும் சிலர் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு வேர்களை மறந்துவிடுவர். ஆனால், 'தான் எங்கிருந்து வருகிறோம்' என்றும் 'தான் எங்கே செல்கிறோம்' என்றும் உணர்ந்தும், வாழ்ந்தும் உயர்ந்தார் திமொத்தேயு.

இவரின் இந்த வாழ்வு நமக்கு ஒரு பாடம்.

Thursday, January 24, 2019

பவுலின் மனமாற்றம்

இன்றைய (25 ஜனவரி 2019) திருநாள்

பவுலின் மனமாற்றம்

சவுல் பவுலாகிய மாறிய திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

சவுலின் மாற்றம் என்பது வெறும் வளர்சிதை மாற்றம் அல்ல. அல்லது ஆள்மாற்றம் அல்ல. மாறாக, இயல்பு மாற்றம். அவரின் மதிப்பு மாற்றம்.

எப்படி?

'கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன். சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன்' (திப 22:4) என்று தன்னைப் பற்றி அறிக்கையிடும் பவுல், உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கத்தில், 'இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது' (உரோ 1:1) என தன்னைப் பற்றிப் பெருமையுடன் எழுதுகின்றார்.

'ஒதுக்கிவைக்கப்பட்டவனாகிய பவுல்'

ஒதுக்கிவைக்கப்படுதல் என்பதை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, தேவையில்லை என்று ஒதுக்கிவைப்பது. எ.கா. உப்புமாவில் நாம் காணும் கறிவேப்பிலை அல்லது வெண்பொங்கலில் நாம் காணும் மிளகு. இரண்டு, நாம் எதிர்நோக்கியிருக்கும் ஒன்றிற்காகத் தயாராக வைப்பது. எ.கா. வரவிருக்கும் திருமண நிகழ்விற்காக அணியவிருக்கும் ஆடை அல்லது பெர்ஃப்யூம். ஓட்டல்களில் ஒதுக்கிவைக்கப்படும் இருக்கைகளும் இவ்வகையே.

ஆக, ஒதுக்கி வைக்கப்படும் ஒன்று மதிப்பு பெறுகிறது. ஒதுக்கிவைக்கப்படும் அதைப் பெறுபவர் மதிப்பிற்குரியவராக இருக்கிறார்.

பவுல் தன் மதிப்பு என்ற நிலையை எப்படித் தெரிந்து கொண்டார்?

இவர் திமொத்தேயுவுக்கு எழுதும் இரண்டாம் திருமுகத்தில் இப்படிப் பதிவு செய்கின்றார்: 'ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் ...' (2 திமொ 2:20-21) என எழுதுகின்றார்.

பெரிய வீடு என்பது இங்கே செல்வந்தர் ஒருவரின் வீட்டைக் குறிக்கிறது. பவுலின் சமகாலத்தில் பொன் கலன்கள் பூசை அறையில் வழிபாடுகள் செய்யப் பயன்பட்டன. இதன் அடிப்படையில்தான் இன்று நம் திருப்பலியிலும் பொன் அல்லது பொன் முலாமிட்ட பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். வெள்ளிக் கலன்கள் உணவுப் பாத்திரங்களாகப் பயன்பட்டன. கழிவறைகள் பயன்பாடு இல்லாத வீடுகளில் மனித திரவ மற்றும் திடக் கழிவுகளும், மற்றும் விருந்தின்போது ஒருவர் எடுக்கும் வாந்தி போன்ற கழிவுகளும் மண் மற்றும் மரத்தாலான கலன்களில் சேகரிக்கப்பட்டு, அடிமைகளால் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அடிமைகள் உணவு உண்ணும் பாத்திரங்களாகவும் மண் மற்றும் மரக்கலன்கள் பயன்பட்டன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மதிப்பு உண்டு என்பதை பவுல் மறுக்கவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் மதிப்பிற்குரியதுதான். ஆனால், அதன் பயன்பாட்டு மதிப்பு என்று வரும்போது பொன்னும், வெள்ளியும் முதன்மை பெறுகின்றன. அதிலும் பொன் மேலோங்கி நிற்கிறது.

ஆக, பவுல் தான் இதுவரை செய்த பணிகளான திருச்சட்டப்பணி, காவல் பணி, துன்புறுத்தும்பணி ஆகியவற்றையும், 'நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன். எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்' என்னும் அனைத்துக் கலன்களையும் அகற்றி, 'எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு' என்றும் 'குப்பை' என்றும் கருதுகிறார். ஆக, பவுல் தான் ஒதுக்கப்பட்டவன் என்ற நிலையில் கடவுளின் நற்செய்திப் பணிக்காக தன்னையே மதிப்பற்றவற்றிலிருந்து ஒதுக்கி வைத்துக்கொள்கிறார்.

இப்படி ஒதுக்கி வைக்கப்பதால் என்ன நடக்கிறது?

கடவுளின் நற்செய்திப் பணி நடந்தேறுகிறது. எப்படி?

பவுலே தொடர்ந்து எழுதுகிறார்: '... ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தூய்மையாக வைத்துக்கொண்டால் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார், எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார், தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்' (2 திமொ 2:20-21)

ஆக, மூன்று நிலைகளில் நற்செய்திப் பணி நடந்தேறுகிறது:

அ. மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார்

ஒரு பொருளின் மதிப்பு என்பது அதைப் பயன்படுத்துபவரின் கையில்தான் இருக்கிறது. அல்லது, மதிப்பற்ற ஒன்றிலிருந்து விலகி நிற்கும்போது அது மதிப்பு பெறுகிறது. நற்செய்திப் பணி என்னும் மதிப்புக்குரிய கடவுளின் பணியைத் தேர்ந்துகொள்ளும்போது ஒருவரின் தன்மதிப்பு இயல்பாகவே உயர்கிறது. தன்மதிப்பு கொண்டிருக்கும் ஒருவர் தூய்மையான உள்ளமும், அன்பும், அமைதியும் கொண்டிருப்பார். இழிவான ஊதியத்தின்மேல் அக்கறை கொண்டிருக்க மாட்டார். முதியோரிடம் கடுமையாக நடக்க மாட்டார். அனைவரையும் மதிப்பார். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்.

ஆ. எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்

இங்கே அடிக்கோடிடப்படுபவவை இரண்டு: நற்செயல், ஆயத்தநிலை. ஒரு வாகனம் போல. பயணம் என்பது நற்செயல். தேவையான பொருள்களும் பாதுகாப்பும் கொண்டிருப்பது ஆயத்தநிலை. ஆயத்தநிலையில் ஒரு பொருள் தன் உரிமையாளரின் பயன்பாட்டிற்காகத் தன்னையே முற்றிலும் கையளித்துவிடுகிறது. இதைத்தான் நாம் திருத்தொண்டர் மற்றும் அருள்பணியாளர் திருநிலைப்பாட்டின்போது, திருத்தொண்டரும், அருள்பணியாளரும் கீழ்ப்படிதல் என்ற வாக்குறுதியை அளித்தவுடன், ஆயர், 'இந்த நற்செயலை உம்மில் தொடங்கிய ஆண்டவர் அதை கிறிஸ்துவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வாராக!' என்கிறார். பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலும், ஆயர்பணி திருமுகங்களிலும் 'நற்செயல்' என்ற வார்த்தை 16 முறை வருகின்றது. பிறருக்கு உதவி செய்தல், தாராள உள்ளம் கொண்டிருத்தல், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், மறைநூலைப் படித்துக் காட்டுதல், மனநிறைவு கொள்தல் என்று சொல்லும் பவுல், இன்னும் ஒருபடி மேலே போய், தீத்துவிடம், 'நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு' (தீத் 2:7) என்கிறார்.

இ. தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்

கடவுளின் நற்செய்திப்பணியின் பயன் பணியாளருக்கு அல்ல. மாறாக, தலைவருக்கு. 'தெ ப்ரூஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' என்பார்கள். கேக் நல்லது என்றால் அது உண்பவருக்கு இனிமையாக இருக்க வேண்டும். மனிதர்கள் எல்லாரும் பயன்பாட்டுப் பொருளா? என்று கேட்கலாம். மனித உறவுகள் பயன்பாட்டு அடிப்படையாகத்தான் உள்ளன. பயன்பாடு இல்லாத உறவுநிலை இல்லை. பயன்களின் தன்மை மாறலாமே தவிர பயன்பாடு மாற முடியாது. 'நாம் யாருக்கு பணி செய்கிறோமோ அவர்களோடுதான் நாம் நெருக்கமாவோம்' என்பது ஆங்கிலப் பழமொழி. நம் வீட்டில் பாருங்கள். நம் வீட்டில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரிவதை விட நம்மிடம் வேலை செய்பவர்களுக்குத் தெரியும். ஆக, அடுத்தவருக்குப் பயனுள்ளவராயிருக்கும்போது அவருக்கும் எனக்கும் உள்ள உறவு அதிகரிக்கிறது.

ஆக, கடவுளின் நற்செய்திப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனாகிய பவுல் என்று தன்னை அடையாளப்படுத்தும் பவுல், மதிப்பற்றவற்றிலிருந்து தன்னையே ஒதுக்கிக்கொண்ட நாள்தான் இந்நாள்.

இந்நாளில் மதிப்பற்றவற்றிலிருந்து நாமும் ஒதுங்கி நின்று, மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படவும், எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், நம் தலைவருக்குப் பயனுள்ளவராக இருப்பவும் முயற்சிப்போம்.

Wednesday, January 23, 2019

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

இன்றைய (24 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 3:7-12)

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

கடந்த சில மாதங்களாக ஆனந்த விகடனில் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதும் 'இறையுதிர் காடு' என்ற ஒரு தொடர் வெளிவந்துகொண்டிருக்கிறது. இறைவன், இறையருள், இறையருளின் மிச்சம், இறையருளுக்கான ஏக்கம் என நிறைய கருத்துருக்கள் இந்தத் தொடரின் கதையில் நிழலாடுகின்றன.

இன்றைய நம் உலகத்தைத்தான் 'இறையுதிர் காடு' என்று உருவகம் செய்கிறார் ஆசிரியர்.

இன்று இறைவனுக்கான தேடல் ஒட்டுமொத்தமாகக் குறைந்துகொண்டு வருகிறது. மேலும், இவ்வுலகில் நடைபெறும் நிகழ்வுகள் நாம் 'நாட்டில்' வாழ்கிறோமா அல்லது 'காட்டில்' வாழ்கிறோமோ என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் காட்சி வித்தியமாசமாக இருக்கிறது.

'பெருந்திரளான மக்கள்,' 'பெருந்திரளான மக்கள் கூட்டம்,' 'நெருக்கிவிடாதவாறு,' 'அவர் மீது விழுந்துகொண்டிருந்தார்கள்' என்ற சொல்லாடல்கள் இயேசுவைத் தேடி மக்கள் திரண்டு வந்ததை நம்முன் கொண்டுவருகின்றது. இப்படி வந்தவர்கள் எல்லாருமே சாதாரண நபர்கள், தேவையில் இருந்தவர்கள், கையறுநிலையில் இருந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள், தொழுநோயாளர்கள்.

இயேசுவைத் தொட்டால் நலமடைவேன் என்ற இவர்களது நம்பிக்கையே இவர்களை இப்படி இயேசுவின் பின்னால் ஓடச் செய்கிறது.

'ஏழ்மையின் பயன்கள் இனிமையானவை' என்கிறார் ஷேக்ஸ்பியர். ஏனெனில், இந்த ஏழ்மைதான் நாம் மற்றவர்களைத் தேடிச்செல்லவும், இறைவனைத் தேடிச்செல்லவும் காரணமாக இருக்கிறது. அருள்பணி அல்லது துறவற வாழ்வில் மேற்கொள்ளப்படும் 'ஏழ்மை' என்ற வார்த்தைப்பாட்டின் பொருளும் இதுவே. அதாவது, 'என்னால் எல்லாம் முடியும்,' 'என்னிடம் அனைத்தும் இருக்கின்றன' என்ற நிலை மாறி, 'என் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் அடுத்தவரும் இறைவனும் தேவை' என்று ஒருவர் மற்றவரையும், இறைவனையும் தேடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஏழ்மை உணர்வு இருக்கும். இந்த உணர்வுதான் நம்மை அடுத்தவர் நோக்கி திருப்புகிறது. ஆனால், 'என்னால் எல்லாம் முடியும்' என்ற ஒரு மாயையை நாம் உருவாக்கிக்கொள்ளும்போது நான் என்னிலேயே உறைந்து போக வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இயேசுவின் சமகாலத்தவர்கள் அவரைத் தேடி ஓடுகிறார்கள். 'நாம் தெருவில் என்றாவது வேகமாக ஓடியிருக்கிறோமா?' பெரும்பாலும் இல்லை. ஏனெனில், 'அடுத்தவர் முன் ஓடுவது இழுக்கு' என்பது நாமாகவே வைத்திருக்கின்ற ஒரு கற்பனைப் புனைவு. ஆனால், அவசியம் என்று வரும்போது - ஆபத்து, விபரீதம், பேரிடர் - நாம் ஓடத்தான் செய்கிறோம். அந்த நேரத்தில் நாம் யார் கருத்தையும் பொருட்படுத்துவதில்லை.

இறைவனுக்கான தேவையும், தேடலும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் இனியவர்கள்.

Tuesday, January 22, 2019

கை சூம்பியவர்

இன்றைய (23 ஜனவரி 2018) நற்செய்தி (மாற் 3:1-6)

கை சூம்பியவர்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து, அதற்கு இயேசுவும் ஒத்துழைத்துப் பேச அவர் பரிசேயரின் கோபத்தைச் சந்தித்துக் கொண்டார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பரிசேயரின் தோள்களை உரசுகின்றார் இயேசு.

இன்றைய நற்செய்தி நடக்கும் இடம் தொழுகைக்கூடம். நாள் ஓய்வுநாள்.

முக்கியமான கதைமாந்தர்கள் கை சூம்பிய நபர், இயேசு, பரிசேயர்கள்.

அவர் ஓய்வுநாளில் அவருக்கு நலம் தருவாரா என்று அவர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க அந்த நிகழ்வும் நடந்தேறுகிறது. 'எழுந்து நில்லும்' என்று கை சூம்பியவரிடம் சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார் இயேசு.

நேரடியாக அவருக்கு நலம் தராமல். 'ஓய்வு நாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?' என்று அவர்களிடம் கேள்வி கேட்கின்றார். அவர்கள் பேசாதிருக்கிறார்கள்.

இங்கே இயேசுவின் இரண்டு உணர்வுகளையும் பதிவு செய்கின்றார் ஆசிரியர்: (அ) அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் பார்த்தார், (ஆ) அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தினார்.

பின் நலம் தருகின்றார். அவர்களும் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை ஒழிக்க சூழ்ச்சி செய்தனர்.

பேச வேண்டிய இடத்தில் பேசாத அவர்கள், பேச வேண்டாத இடத்தில் போய்ப் பேசுகிறார்கள் பரிசேயர்கள்.

இங்கே அவர்களின் நலம்பெற முடியாத சூம்பிய உள்ளமே வாசகருக்கு வருத்தம் தருகிறது.

'சூம்பிய கை' என்பது வளர்ச்சியில்லாத அல்லது வளர்ச்சி தடைப்பட்ட அல்லது வளர்ச்சி அகற்றப்பட்ட கை. ஆக, மொத்தத்தில் அந்தக் கையில் வளர்ச்சியோ, மாற்றமோ எதுவுமே இல்லை. ஏனெனில், அங்கே இரத்த ஓட்டம் இல்லை. புதிய செல்கள் பிறப்பதில்லை.

பரிசேயர்களின் மனமும் அப்படித்தான் இருக்கின்றது.

அவர்களின் வளர்ச்சி சட்டம் என்ற ஒன்றோடு முடிந்துவிடுகிறது. அதைத்தாண்டி இரக்கம் என்ற ஒன்று நோக்கி அது வளரவில்லை.

சாலையில் செல்லும்போது 'பச்சை' விளக்கு எரிகிறது என்று வாகனத்தை முன்நோக்கி செலுத்தச் சொல்கிறது சட்டம். ஆனால், 'சற்றே பொறு! முதியவர் ஒருவர் கடக்கிறார்!' என்று தடுத்து நிறுத்துகிறது இரக்கம். மனுக்குலம் சட்டத்திலிருந்து இரக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். நம் எண்ணங்களை, நம் மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கத்தான் சட்டங்களே தவிர, அவற்றையும் கடந்து நாம் சென்றால்தான் வளர முடியும். இல்லை என்றால் தேக்க நிலை உருவாகும். அந்தத் தேக்கம் நாற்றத்தைத் தோற்றுவிக்கும்.

நாம் நம் தனிப்பட்ட வாழ்வில் அடுத்தவரை மதிப்பிடுவதிலும், சில நேரங்களில் 'இது இப்படித்தான்' என்ற கற்பனையான சட்டங்களை மனத்தில் வைத்துச் செயல்பட்டு அவரைத் தீர்ப்பிடுகிறோம். அங்கே நம் உள்ளம் சூம்பிவிடுகிறது. மாறாக, சரி, தவறு என்பதைத் தாண்டி நல்லது கெட்டது, வாழ்வு அழிவு என்ற கேள்விக்கு வளர்வதே சால்பு.

Monday, January 21, 2019

செய்யக்கூடாததை

இன்றைய (22 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 2:23-28)

செய்யக்கூடாததை

'பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?' என்று இயேசுவிடம் அவருடைய சீடர்களைப் பற்றிக் குற்றம் சுமத்துகிறார்கள் பரிசேயர்கள் சிலர்.

இயேசுவும் பதிலுக்கு,

'பாருங்கள், செய்யக்கூடாத ஒன்றை தாவீது செய்யவில்லையா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார்.

மேலும், 'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர்கள் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை' என்ற புரிதலையும் தருகின்றார். ஆக, ஓய்வுநாள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியும். மனிதர்கள் இல்லாமல் ஓய்வுநாள் இருக்க முடியாது.

எபிரேயத்தில் 'ஷபாத்' என்றால் 'நிறுத்து' என்பது பொருள். வாரத்தின் ஏழாம் நாள் என்று சொல்லப்படும் 'சனிக்கிழமை' அன்று யூதர்கள் தாங்கள் செய்கின்ற வேலை அனைத்தையும் நிறுத்தினர். ஓய்வுநாளுக்கான காரணங்களாக இரண்டு சொல்லப்படுகின்றன: (அ) ஆண்டவராகிய கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். ஆக, நீங்களும் ஓய்வெடுங்கள், (ஆ) எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். அதை நினைவுகூர்ந்து நீங்கள் ஓய்வெடுங்கள்.

முதல் காரணத்தைவிட இரண்டாம் காரணமே ஏற்புடையதாக இருக்கிறது. 'வேலைக்கு மாற்று ஓய்வு' - இந்தப் புரிதல் மானுடப்புரிதலாக இருக்கின்றது.

பத்துக்கட்டளைகளில் ஓய்வுநாள் மூன்றாம் கட்டளைக்குள் வருகிறது. 1989ஆம் ஆண்டு போலந்து நாட்டு மொழியில், டெகலாக் - ஒன்ற ஒரு சீரிஸ் ஓடியது. ஒவ்வொரு கட்டளையையும் 'தூய்மை' என்ற வார்த்தையை மையமாக வைத்துப் புரிந்துகொள்கிறார் இதை இயக்கிய கீஸ்லோஸ்கி. 'நேரம் என்னும் தூய்மை. ஒரு நாள் என்பது பகல், இரவு என்றும், ஒரு வாரம் என்பது கிழமைகளாலும், ஒரு திங்கள் என்பது கிழமைகளாலும் பிரிக்கப்பட்டிருப்பது அர்த்தம் இல்லாமல் அன்று' என்கிறார் இவர்.

மனிதர்களை மற்ற விலங்குகள் அல்லது தாவரங்களிலிருந்து பிரித்துக்காட்டும் சில காரணிகளில் ஒன்று 'நேரம்.' இதையே சபை உரையாளர், 'காலத்தைப் பற்றிய உணர்வை கடவுள் மனிதருக்குத் தந்திருக்கிறார்' என்றார்.

ஆக, ஓய்வு, நேரம் - இவை இரண்டையும் பற்றிச் சிந்திப்போம்.

'ஓய்வு' - நமக்கு இன்றியமையாத ஒன்று. நம் வேலைப்பளுவின் நடுவில் சமரசம் செய்துகொள்ளப்படும் ஒரு அப்பாவி ஜீவன் இந்த ஓய்வுதான். இதையே டுவிட்டரில் ஒருவர், 'வேலையும் நிறைய இருக்கிறது. தூக்கமும் ரொம்ப வருகிறது. தூக்கத்தில் நடக்கிற வியாதி மாதிரி, தூக்கத்தில் வேலை செய்ற வியாதி இருந்தால் எத்துணை நலம்!' எனக் கேட்கிறார். ஓய்வு என்பது 'ஓய்ந்திருப்பது' அல்ல. அது, நம் இறப்பின் போதுதான் சாத்தியம். ஓய்வு என்பது மாற்று வேலை. வேலை என்பது மாற்று ஓய்வு அவ்வளவுதான். என் வேலை பாடம் சொல்லிக்கொடுப்பதாக இருந்தால் என் ஓய்வு படிப்பாக இருக்கலாம். என் வேலை படிப்பது என்றால் என் ஓய்வு பாடம் சொல்லிக்கொடுப்பதாக இருக்கலாம். ஓய்வு மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது. அதே நேரம் அதீத ஓய்வு உடல் நலத்திற்குத் தீங்காய் முடிகிறது. ஆக, ஓய்வுக்கும், வேலைக்குமான சமன் நிலை மிகவே அவசியம்.

'நேரம்' - இதை நாம் உருவாக்க முடியாது. இது நமக்குக் கொடுக்கப்படுவது. நமக்குக் கொடுக்கப்படும் இதை நாம் எப்படியும் பயன்படுத்தலாம். இன்று மேலாண்மையியலில் அதிகம் பேசப்படுவது நேர மேலாண்மையே. நேரத்தை மேலாண்மை செய்தால் நிகழ்வுகளை மேலாண்மை செய்துவிடலாம். கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் ஓடிக்கொண்டே இருக்க, அந்த நொடி கடந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஒன்று அப்படியே கடந்துவிடுகிறது. நேரத்தைப் பற்றிய அதீத அக்கறை சில நேரங்களில் நம்மை ஓய்வெடுக்க முடியாமல் செய்துவிடுகிறது.

'ஓய்வு' 'நேரம்' - இந்த இரண்டிலும் முதன்மைப்படுத்தப்படுவது மனிதரின் நலமே.

மனிதரின் நலம் கருத்தில் கொள்ளப்படாத 'ஓய்வு' என்பது வெறும் கட்டிலே. 'நேரம்' என்பது வெறும் கடிகாரமே.

Friday, January 18, 2019

இயேசுவின் முதன்மைகள்

இன்றைய (19 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 2:13-17)

இயேசுவின் முதன்மைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மத்தேயுவை அழைக்கும் நிகழ்வும், அந்த நிகழ்வின் இறுதியில் வரும் விருந்து உபசரிப்பும், அந்த விருந்து உபசரிப்பில் பங்கேற்று இயேசுவைப் பற்றிய மக்களின் விமர்சனமும், அதற்கு இயேசுவின் பதிலும் என நான்கு பகுதிகள் உள்ளன.

மக்களின் விமர்சனத்திற்கான இயேசுவின் பதிலை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'

தன்னுடைய வாழ்க்கை யாருக்காக என்ற முதன்மையைத் தெளிவாக அறிந்திருக்கிறார் இயேசு.

மருத்துவர் யாருக்கெல்லாம் தேவை?

அவருடைய குடும்பத்திற்கு, அவருடைய நண்பர்களுக்கு, அவருடன் வேலை பார்ப்பவர்களுக்கு, அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு, மற்றும் அவரிடம் நலம் நாடி வருபவர்களுக்கு. இந்த ஐந்துக் குழுக்களில் இறுதியில் வருகின்ற நலம் நாடி வருபவர்களுக்குத்தான் மருத்துவர் இன்றியமையாதவர் ஆகிறார். அல்லது மற்ற நான்கு குழுக்களில் உள்ளவர்கள் தாங்கள் நோயுறும்போது மருத்துவரை நாடுவர். ஆக, மருத்துவரின் பணி நோயற்றவர்களை அல்ல, நோயுற்றவர்களைத் தேடிச் செல்வதாக இருத்தல் வேண்டும்.

தான் எல்லாருக்கும் என அனுப்பப்பட்டாலும், வந்தாலும் தன் பணி யாருக்கு என்பதை வரையறுக்கின்றார் இயேசு. 'நேர்மையாளர்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்.' முந்தையர்களுக்கு இயேசு தேவையில்லை என்று பொருள் அல்ல. மாறாக, அவர்கள் ஏற்கனவே கரை சேர்ந்தவர்கள். கரை சேர்ந்தவர்களுக்கு மரக்கலம் தேவையில்லை. கடலில் உழல்வோருக்குத்தான் தேவை. கரை சேர்ந்தவர்கள் எனக்குப் பிடித்தமானவர்கள் என்பதற்காக மரக்கலத்தை அவர்களுக்குக் கொடுத்தால், அது அவர்களுக்கு ஒரு பக்கம் சுமையாகவும், மறுபக்கம் கடலில் அமிழ்ந்துகொண்டிருப்போருக்கு ஆபத்தாகவும் முடியும்.

இயேசு தன்னுடைய பணியின் முதன்மை என்ன என்பதை அறிந்திருந்தார். மேலும், அதை யாருக்காகவும் அவர் வளைத்துக்கொள்ளவில்லை. தன்னைப் பற்றிய விமர்சனம் எழுகிறது என்ற காரணத்திற்காக அதை மாற்றிக்கொள்ளவோ, அல்லது தன் முதன்மையை இழக்கவோ இல்லை.

நம் வாழ்வின் முதன்மைகளை நிர்ணயித்த பிறகு நிறைய மற்றவைகள் வரும். மற்றவைகளைக் கவனித்துக்கொண்டே இருந்தால் முதன்மையானவைகள் துன்புறும் நிலை ஏற்படும்.

முதன்மையை நாம் எப்படி நிர்ணயிப்பது?

'எந்தச் செயலை நான் மட்டுமே செய்ய முடியுமோ அதில்தான் என் முதன்மை கட்டப்பட வேண்டும்'

கடிதம் எழுதுவது என வைத்துக்கொள்வோம்.

கடிதம் எழுதுவதுதான் முதன்மையே தவிர, அதை அனுப்புவதற்கான வழியை ஆராய்வது முதன்மை அல்ல. கடிதத்தை யார் வேண்டுமானாலும் போஸ்ட் அல்லது கூரியர் செய்யலாம். ஆக, எழுதுவதை விட்டுவிட்டு, எப்படி அனுப்புவது? யார் வழியாக அனுப்புவது? என்று குழப்பிக் கொண்டிருப்பது நம் நேரத்தை வீணடிப்பதோடல்லாமல், கடிதம் எழுதுவதற்கான நேரத்தையும் இழக்க வேண்டிய நிலையில் கொண்டுNபுhய் விடும்.

மேலும், முதன்மையை நிர்ணயிக்கும் போது நம்மால் பயன்பெறுபவர்களை மனத்தில் கொள்ளவேண்டும். நோயுற்றவர்களை நாடிச் செல்லும் மருத்துவர் தன் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே செல்கின்றார். அவரை நோய் பற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம். ஆனால், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டுச் சென்றால்தான் நோயுற்றவருக்கு நலம் தர முடியும். பாவிகளோடு தங்குவதும் தன் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே செல்வதே.

ஆக, என் முதன்மைகள் என் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதை மட்டும் நாடாமல், வெளியில் இருப்பதை நாட வேண்டும். நான் ஒரு ஆசிரியர் என வைத்துக்கொள்வோம். 90 மார்க் வாங்குகிற நல்ல மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது என் பாதுகாப்பு வளையம். நான் பெரிதாக ஒன்றும் கஷ்டப்படத் தேவையில்லை. ஆனால் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களை நான் தேடிச் செல்லும்போது அது எனக்கு வலிக்கும். அந்த வலிதான் என் முதன்மையை நிர்ணயிக்க வேண்டும்.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேன்மையாக முன்வைக்கின்றார்: 'நம் தலைமைக்குரு (இயேசு) நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்.'

இயேசுவைப் போன்று முதன்மையை நிர்ணியக்கவும், நிர்ணயித்த முதன்மையில் நிலைத்திருக்கவும், வலுவின்மையில் முதன்மையைப் பதித்துக்கொள்ளவும் நம்மால் முடிந்தால் எத்துணை நலம்!

Thursday, January 17, 2019

இயேசு தம்முள் உணர்ந்து


இன்றைய (18 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 2:1-12)


இயேசு தம்முள் உணர்ந்து

'உள்ளுணர்வு' - இதைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். 'உள்ளுணர்வில்' இரண்டு வகை உண்டு: ஒன்று, கடந்த காலம் பற்றிய உள்ளுணர்வு. இரண்டு, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு. நம்மில் சிலருக்கு சில ஊருக்கு அடிக்கடி போவது பிடிக்கும். சில நேரங்களில் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் இதே போல என்றோ நடந்ததுபோல இருக்கும். இதை 'கடந்த காலம் பற்றிய உள்ளுணர்வு' என்கிறார்கள். அதாவது, கடந்த பிறப்பில் நாம் இருந்த இடமோ, பழகிய இடமோ, நடந்த நிகழ்வோ மீண்டும் நடப்பது போல இருப்பதே இவ்வுணர்வு. இரண்டாம் வகை உள்ளுணர்வு, இப்போது நடக்கும் நிகழ்வுகள் பற்றியது. 'இவரை இன்று கூப்பிடலாமே!' என்று ஃபோனைக் கையில் எடுப்போம். அந்த நேரம் அவரிடமிருந்து ஃபோன் வரும். கையில் தட்டைச் சுமந்து கொண்டு செல்லும்போதே, 'இது இன்று உடையும்' என்று உள்ளுணர்வு சொல்லும். அதே போல தட்டு உடையும். சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களின் இறப்பையும் இந்த உள்ளுணர்வு சொல்லிவிடும்.

'உள்ளுணர்வு' - நம் 'ஆழ்மனதோடு' (சப்கான்சியஸ்) தொடர்பு கொண்டது. விழிப்பு நிலையில் இருக்கும்போது உள்ளுணர்வு செயலாற்றுவதில்லை. மாறாக, ஆழ்மனது விழித்து இருக்கும்போதுதான் அது செயலாற்றுகிறது. ஆழ்மனது நிறைய ஆற்றல் வாய்ந்தது. அது நினைத்தால் எதையும் செய்து முடித்துவிடும். அது பிரபஞ்சத்தோடு தொடர்பு உடையது. 'நான் பணக்காரன் ஆக வேண்டும்' என்று ஆழ்மனம் முடிவெடுத்துவிட்டால் பணத்தை அப்படியே கொண்டு வந்து கொட்டிவிடும் என்றெல்லாம் உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஏன் இந்தப் பின்புலம்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர் சுமந்து வருகின்றனர். அவரை அவர் குணமாக்க சிலர் முணுமுணுக்கின்றனர். அந்த நேரத்தில், 'அவர்கள் தமக்குள் எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து' என்று பதிவு செய்கின்றார் மாற்கு.

அதாவது, அடுத்தவர்கள் தமக்குள் உணர்வதை இயேசு தம்மில் உணர்கிறார். இதுதான் ஆழ்மனத்தின் ஆற்றல். என் ஆழ்மனது மற்றவரின் ஆழ்மனதோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அப்படியே அங்கிருக்கும் டேட்டாவை நாம் இங்கே இழுத்துக்கொள்ள முடியும்.

இந்த ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ளலாம். எப்படி?

முதலில், விழிப்புநிலை. நம்மைப் பற்றிய, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய விழிப்பு நிலை.

இரண்டாவது, காணுதல். பார்த்தல் வேறு, காணுதல் வேறு. பார்த்தல் இயல்பாக நடக்கக் கூடியது. காணுதல் தெரிவுடன் செய்யப்பட வேண்டியது. நான் நிறையவற்றைப் பார்க்கலாம். ஆனால், சிலவற்றையே காண்கிறேன். 

மூன்றாவது, உணர்வுகளுக்குப் பெயர் இடுவது. சில நேரங்களில் நாம் மொட்டையாக, 'எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. மனசு சரியில்லை' என்று சொல்லி மௌனம் காப்போம். இந்த நேரத்தில், 'என் உணர்வு என்ன?' என்பதை என்னால் சரியாகச் சொல்ல நான் கற்க வேண்டும். வருத்தமா? ஏமாற்றமா? விரக்தியா? சோர்வா? விலகுதலா? - இப்படி ஒவ்வொரு நொடியும் நம் வெளிப்புற செயல்களைச் சொல்வது போல, உள்ளே நாம் உணரும் உணர்வுகளையும் அறிந்துகொள்ளல் அவசியம்.

இயேசுவின் இவ்வாற்றல்தான் அவரை எதிரிகளையும் எதிர்கொள்ள அவருக்குக் கற்றுத்தருகின்றது. 


Wednesday, January 16, 2019

இன்றே என எண்ணி

இன்றைய (17 ஜனவரி 2019) முதல் வாசகம் (எபி 3:7-14)

இன்றே என எண்ணி

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் (காண். மாற் 1:40-45) ஒத்த பகுதியான லூக் 5:12-16 (தொழுநோயாளரின் நோய் நீங்குதல்)-ஐ நாம் கடந்த வார நாள்களில்தான் வாசித்து சிந்தித்தோம். எனவே, இன்றைய சிந்தனைக்காக முதல் வாசகத்தை எடுத்துக்கொள்வோம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலை எழுதியவர் பவுல் அல்லர் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பவுல் இத்திருமடலின் ஆசிரியர் இல்லை என்று சொல்லப்படுவதற்கான சில சான்றுகளில் ஒன்று, 'அறிவுரைப் பகுதி.' பவுலின் திருமடல்கள் பொதுவாக, முன்னுரை-உள்ளடக்கம்-அறிவுரை என்ற அமைப்பில் இருக்கும். ஆனால், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் இந்த அமைப்பு சற்றே மாறியிருக்கிறது. முன்னுரை, வாழ்த்து என எதுவும் இல்லாமல் தொடங்கும் மடல், ஒரு கருத்தியில் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவுரைப் பகுதி என்ற அமைப்பைக் கொண்டுள்ளது.

'உள்ளத்தைக் கடினமாக்கிக் கொள்ளுதல்' என்னும் கருத்தியலும், அதைத் தொடர்ந்து வரும் அறிவுரைப் பகுதியும்தான் இன்றைய முதல் வாசகம்.

இம்மடலின் ஆசிரியர் தன் குழுமம் நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் தங்களின் பாலைநிலப் பயணத்தின்போது இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் அவரின் அடியாரான மோசேக்கும் எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர் (காண். எண் 14:1-35). 'அக்கிளர்ச்சியின் போது அவர்கள் கொண்டிருந்த 'கடின இதயத்தை' நீங்கள் கொண்டிருக்காதீர்கள்' எனத் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார் ஆசிரியர். அப்படி கடின உள்ளம் கொண்டிருப்பவர்கள் கடவுள் தரும் ஓய்வைக் கண்டடைய மாட்டார்கள் என்பதும் இவரின் கருத்து. 'ஓய்வு' என்பது 'இறப்பு' அல்லது 'மறுவாழ்வு' அல்லது 'மோட்சம்' ஆகியவற்றைக் குறிப்பது அல்ல. மாறாக, இவ்வுலகிலேயே நாம் அனுபவிக்கும் 'அமைதி,' 'நலம்' ஆகியவற்றைக் குறிப்பது.

இந்த ஓய்வைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

கடின உள்ளம் கொண்டிராமல் கடவுளை நம்ப வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு முன் பேருந்தில் ஒருவரைச் சந்தித்தேன். சந்திப்பு விடைபெறும்போது கை குலுக்க கை நீட்டினேன். அவரும் கை நீட்டினார். 'உங்க கை ரொம்ப மிருதுவாக இருக்கிறது' என்றார். 'உங்க கை மேல யார் கை பட்டாலும் மிருதுவாகத்தான் தெரியும்' என்று நான் சிரித்தேன். ஏனெனில், அவருடைய கை அவ்வளவு கடினமாக இருந்தது. அதற்கு அவர் சொன்னார், 'நான் ஒரு ஓட்டுநர். அன்றாடம் கைகள் ஸ்டியரிங் என்னும் இரும்பு வளையத்தைப் பிடிப்பதால் கை மரத்துப் போய்விட்டது' என்றார். ஆக, செடி போல மிருதுவாக இருக்க வேண்டியது நாள்பட்ட பயன்பட்டால் கடினமான மரமாகிவிடுகிறது.

நாள்தோறும் நாம் செய்கின்ற செயல் நம் கைகளையே மரத்துப்போகச் செய்கின்றது. அதே நேரம், நாள்தோறும் என நினைக்கும் நாம் கடின உள்ளம் கொண்டவராகிவிடுகிறோம்.

ஆனால், மற்றொரு வித்தியாசமான அறிவுரையை இங்கு தருகிறார் ஆசிரியர்: 'ஒவ்வொரு நாளும் இன்று என எண்ணி வாழுங்கள்!'

'நாள்தோறும்' என வாழ்வதற்கும், 'இன்று' என வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்?

'நாள்தோறும்' என வாழும் வாழ்க்கையில் புதுமை இருக்காது. வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும். அது போரடிக்கும். ஆனால், 'இன்று' ஒருநாள்தான் என வாழும் வாழ்க்கையில் புதுமை இருக்கும். இனிமை இருக்கும். இளமை இருக்கும்.

பெரியவர்கள் 'நாள்தோறும்' வாழ்கின்றனர். ஆனால், குழந்தைகளே 'இன்று ஒருநாள்' என வாழ்கின்றார்கள். ஆகையால்தான், அவர்களின் உள்ளமும் உடலும் மென்மையாக இருக்கிறது.

கடின உள்ளம் கடவுளை மட்டுமல்ல, மற்றவர்களையும் நமக்குள் அனுமதிக்காது.

ஒவ்வொருவரையும் 'இவர்' எனவும், ஒவ்வொரு பொழுதையும் 'இன்று ஒருநாள்' எனவும் எண்ணி வாழ அழைக்கிறது இன்றைய முதல் வாசகம்.


Tuesday, January 15, 2019

கன்சிஸ்டன்ஸி

இன்றைய (16 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 1:29-39)

கன்சிஸ்டன்ஸி

மனித தகைமை பற்றிப் பேசப்படும்போது அதிகமாக வலியுறுத்தப்படும் சில பண்புகளில் ஒன்று 'கன்சிஸ்டன்ஸி' ('இசைவு,' 'ஒவ்வுமை,' 'சீர்மை,' 'அக இசைவுடைமை,' 'நிலைப்புத்தன்மை,' 'நிலைத்தன்மை').

அதாவது, சாலையில் என் நண்பனோடு நடந்துகொண்டிருக்கிறேன் நான். வழியில் வயதான ஒருவர் உதவி கேட்டு வருகின்றார். உடனே நான் அவருக்கு 10 ரூபாய் கொடுக்கிறேன். சில நாள்கள் கழித்து அதே நண்பனோடு நடந்துகொண்டிருக்கும் என் எதிரே மற்றொரு வயதானவர் உதவி கேட்டு வருகின்றார். அவருக்கு நான் பணம் கொடுக்க மறுக்கின்றேன்.

'என்னடா! அன்று நீ கொடுத்தாய்! இன்று முகம் திருப்பிக் கொண்டாய்! ஒரே மாதிரி இருக்கணும்டா! மாறிக்கொண்டே இருக்கக்கூடாது!' என என் நண்பர் என்னைக் கடிந்துகொள்கிறார்.

மேற்காணும் 'கன்சிஸ்டன்ஸி' தான் நாம் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கும் நட்பிற்கு மிக அவசியமாகிறது. 'நேற்று ஒன்று, இன்று வேறு, நாளை இன்னும் வேறு' என்று நான் பேசினால், செயல்பட்டால் நட்பு முறிந்துவிடும்.

கடவுளுக்கு இது பொருந்துமா?

கடவுள் என்றும் ஒரே மாதிரி இருக்கிறாரா? இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயெசுவின் கலிலேயப் பணி சுருக்கத்தை வாசிக்கின்றோம்.

இதில் இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கிறோம்:

அ. சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப்பிடித்து அவரைத் தூக்கினார்.

இது முதல் நாள் நிகழ்வு.

ஆ. இயேசு விடியற்காலையில் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் ... சீமோன் அவரைக் கண்டதும், 'எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்' என்றார். அதற்கு அவர், 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம் ...' என்றார்.

இது இரண்டாம் நாள் நிகழ்வு.

முதல் நாள் சீமோன் சொன்னவுடன் உடன் சென்ற இயேசு, இரண்டாம் நாள் ஏன் செல்லவில்லை?

இயேசுவிடம் ஏன் கன்சிஸ்டன்ஸி இல்லை?

இயேசுவின் இச்செயல் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கிறது:

1. கடவுள் தான் விரும்பியதைச் செய்கிறார். அவரிடம் கன்சிஸ்டன்ஸி தேவையில்லை. மோசேயின் சிறு குற்றத்திற்காக அவரைக் கொடியதாகத் தண்டிக்கவும் முடியும். தாவீதின் பெரிய குற்றத்திற்காக அவரை முழுவதும் மன்னிக்கவும் முடியும். ஆக, நம் இறைவேண்டல்களால் அல்லது நேர்ச்சை செயல்களால் கடவுளை நாம் 'கையாள' முடியாது. அவர் நாம் 'கீ' கொடுக்கின்ற பொம்மை அல்ல. அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்கிறார் அவ்வளவுதான்.

2. இதையே நம் வாழ்விற்குப் பொருத்திப் பார்ப்போம். வாழ்வில் நம்முடைய முதன்மைகள் மாறக்கூடியவை. முதல் நாள் நான் முதியவருக்கு உதவி செய்தபோது 'இரக்கம்' என்னுடைய முதன்மையானதாக இருந்தது. இரண்டாம் நாள் நான் முதியவருக்கு உதவி செய்யாதபோது 'பணம் மிச்சப்படுத்துவது' என்னுடைய முதன்மையானதாக இருக்கிறது. ஆக, முதன்மைகள் மாறக்கூடியவை. முதல் நாள் இயேசுவின் பணி அனைவருக்கும் நலம் தருவதாக இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் அதுவே இறைவேண்டல் என முதன்மை மாறுகின்றது. ஆக, முதன்மைகள் மாறும்போது 'கன்சிஸ்டன்ஸி' உடைகிறது.

3. 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்' - இது நமக்கு வரும் பெரிய சோதனை. 'எல்லாரும்' என்பதை மிகை வார்த்தை. 'நாலஞ்சு பேர்' இயேசுவைத் தேடியிருப்பார்கள். ஆனால், 'எல்லாரும்' என்று சொல்கின்றார் சீமோன். 'மிகைப்படுத்துதல்' மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆபத்தானது அந்த மிகைப்படுத்துதலுக்கு செவிகொடுத்து அதை அப்படியே நம்பி விடுவது. இயேசுவுக்கு சீமோனின் மிகைப்படுத்துதல் புரிந்தது. அதே நேரத்தில், 'எல்லாரும் தேடுகிறார்கள்' என்ற வார்த்தைகள் தரும் புகழ்ச்சியில் அவர் மயங்கிவிடவில்லை. எந்த நேரத்திலும் 'நாம் இன்றியமையாதவர்கள்' என்ற எண்ணம் நமக்கு வரவே கூடாது. அந்த எண்ணம் வரும்போது உடனடியாக நம் கன்சிஸ்டன்ஸியை உடைத்துவிட வேண்டும்.

மேலும், இயேசுவின் மாறுபட்ட செயல்களை, முரண்பாடு என்று பார்க்காமல், 'மக்கள் அனுபவம்,' 'இறை அனுபவம்' என்று முழுவதுமாக எடுத்தால் அங்கே முரண்பாடு இல்லை.

ஏனெனில், இறைவனிடம் எப்போதும் 'கன்சிஸ்டன்ஸி' உண்டு.

இதையே பவுல், 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' (2 திமொ 2:13) என்கிறார்.


Monday, January 14, 2019

பொங்கல் திருவிழா

இன்றைய திருவிழா - பொங்கல் திருவிழா

தை மாதத்தின் முதல் நாளான இன்று நாம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். தை 1 ஆண்டின் புத்தாண்டா அல்லது சித்திரை 1 ஆண்டின் புத்தாண்டா என்பதில் நிறைய அரசியல் இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

பொங்கல் - இதை நான் மூன்று வார்த்தைகளில் புரிந்து கொள்ள விழைகிறேன்: (அ) இயற்கை, (ஆ) இனிமை, (இ) இணைப்பு.

அ. இயற்கை

பொங்கல் அன்று நாம் சூரியனுக்கு நன்றி சொல்கிறோம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பொங்கல் திருநாளில் இயற்கையின் ஐம்பெரும்பூதங்களும் இணைந்திருக்கின்றன. 'மண்' பானை, அதில் இடப்படும் 'நீர்,' அதைச் சுட வைக்கும் 'நெருப்பு,' நெருப்பை உந்தித் தள்ளும் 'காற்று,' பானைக்குள் நிரம்பி பின் பொங்குதலுக்கு வழிவிடும் 'ஆகாரயம்.' இப்படியாக இயற்கையின் மொத்தமும் பொங்கல் திருநாளில் நினைவுகூறப்படுகிறது.

ஆ. இனிமை

சர்க்கரை, கரும்பு என இனிமை இங்கு முன்வைக்கப்படுகிறது. அறுசுவைகளில் ஆற்றல் தரும் சுவை இனிப்பு. ஆகையால்தான், நம் உடலில் குளுக்கோஸ் குறைந்தவுடன் நம் ஆற்றல் குறைந்துவிடுகிறது. ஆக, ஆற்றலைக் கொண்டாடும் இந்நாளில் இனிமை சுவை பரிமாறப்படுகிறது.

இ. இணைப்பு

இன்றைய நாளில் மனிதர்கள் இயற்கைக்கும், மனிதர்கள் ஒருவர் மற்றவருக்குமான இணைப்பைக் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாவின் நீட்சியாக வரும் 'மாட்டுப்பொங்கல்' மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உள்ள இணைப்பையும், தொடர்ந்து வரும் 'காணும் பொங்கல்' அல்லது 'கன்னிப் பொங்கல்' மனிதர்கள் தங்களுக்குள்ளான இணைப்பையும் கொண்டாடுவதாக அமைகிறது.

இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்தில் நாம் பயன்படுத்தும் முதல் வாசகம் (காண். யோவேல் 2:21-24, 26-27), 'நிலமே, நீ அஞ்சாதிரு! காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்!' என்று இயற்கையை நோக்கிப் பேசும் ஆண்டவர், 'களங்களில் கோதுமை நிறைந்திருக்கும். ஆலைகளில் திராட்சை ரசம் வழிந்தோடும்' என்று ஆறுதல் தருகின்றார். இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களின் நிந்தையை அகற்றுகின்றார் கடவுள்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 6:6-11, 17-19), 'இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான். ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும' என்கிறார் பவுல். ஆக, பொங்கல் நாளில் நாம் கொள்ள வேண்டிய ஒரு மதிப்பீடு 'மனநிறைவு.' 'போதும்' என்றால் 'இதுவே போதும்!' 'போதாது' என்றால் நமக்கு 'எதுவுமே போதாது!'

நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) தொழுநோய் நீங்கப்பெற்ற பத்துப் பேரில் சமாரியன் ஒருவர் திரும்பி வந்து நன்றி சொல்வதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆக, நன்றியின் நாள் இது என்பதை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த எல்லா வாசகங்களையும் இணைக்கும் முகத்தான் இருக்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 126). 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள் ... விதை எடுத்துச் செல்லும்போது அழுகையோடு செல்கின்றார்கள். அரிகளைச் சுமந்து வரும்போது அக்களிப்போடு வருவார்கள்.'

விதைக்கும் ... அறுவடைக்கும் இடையே ஒன்று இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அது என்ன? உழைப்பு

விதை ஏதோ ஒரு மேஜிக்கினால் அறுவடைக்கு தயாராவதில்லை.

நாம் நிலத்தின் அரிசியை அப்படியே கடவுளுக்குப் படைப்பதில்லை. அதில் நம் உழைப்பைக் கலந்து பொங்கலாகப் படைக்கிறோம். திருப்பலியிலும் அப்படித்தான். நாம் கோதுமைப் பயிரையோ, திராட்சைக் கொடியையோ அப்படியே கடவுளுக்கு அளிப்பதில்லை. அவற்றில் நம் உழைப்பைக் கலந்து அவற்றை அப்பமாக, இரசமாக ஒப்புக்கொடுக்கிறோம். ஆக, உழைப்பு ஒன்றே ஒரு பொருளின், நபரின் இயல்பை மாற்றுகிறது.

ஆக, இன்றைய நாளில் உழைப்பு என்ற கொடைக்காக நன்றி கூறுவோம்.

'இயற்கை,' 'இனிமை,' 'இணைப்பு' - இம்மூன்றையும் ஒன்றாகக் கட்டுவது உழைப்பே.


Sunday, January 13, 2019

விட்டுவிட்டுச் சென்றார்கள்

இன்றைய (14 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 1:14-20)

விட்டுவிட்டுச் சென்றார்கள்

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவிலிருந்து திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் தொடங்குகிறது. இந்தப் பொதுக்காலத்தின் வார நாள்களில் நாம் மாற்கு நற்செய்தியாளரோடு பயணம் செய்யவிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித்தொடக்கத்தையும் அவர் தன் முதற்சீடர்களை அழைத்த நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

இயேசுவின் முதற்சீடர்கள் அழைக்கப்படும் நிகழ்வு கலிலேயக் கடற்கரை ஓரத்தில் நடந்தேறுகிறது. ஆக, கடவுள் மனிதர்களை அழைக்கும்போது பெரும்பாலும் அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது இறைவெளிப்பாடு நாம் வேலை பார்க்கும் இடத்தில் நடந்தேறுகிறது.

'சென்றார் - கண்டார் - சொன்னார் - வந்தார்கள்'

இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்குமா இந்த அழைத்தல்?

இன்று துறவற அல்லது அருள்பணி அழைத்தலுக்கு அழைக்கப்பட்டவர் 'ஆம்' என்று சொல்ல ஏறக்குறைய 10 முதல் 14 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே 'ஆம்' என்று சொல்லி வந்தாலும், அன்றாடம் இதை மறுஆய்வு செய்யும் சூழல்களும் உருவாகிவிடுகின்றன.

இயேசுவின் முதற்சீடர்களால் ஒரே முறை அதுவும் உடனடியாக எப்படி 'ஆம்' என்று சொல்ல முடிந்தது?

இன்று நாங்கள் 'ஆம்' என்று சொல்வதற்கு முன் நிறைய படிக்கவும், பணி அனுபவம் பெறவும் வேண்டியுள்ளது. ஆனால், இயேசு முதற் சீடர்களுக்கு எந்தவொரு பாடமும் நடத்தவில்லை, பணி அனுபவமும் தரவில்லை, நீண்ட உரை ஆற்றவில்லை. ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கிறார்: 'நீங்கள் மனிதரைப் பிடிப்பவர் ஆவீர்கள்!' இந்த வாக்குறுதியை முதற்சீடர்கள் புரிந்துகொண்டார்களா என்றுகூடத் தெரியவில்லை.

'என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்று இயேசு சொன்னவுடன், சீமோனும் அந்திரேயாவும் தங்கள் 'வலைகளை விட்டுவிட்டு,' 'உடனே' அவரைப் பின்பற்றினார்கள். ஆக, இவர்கள் தங்கள் வாழ்வாதாரமான வலைகளையும், மீன்பிடித் தொழிலையும் 'உடனே' விடுகின்றனர். இரண்டாம் குழுவினரான யாக்கோபும் யோவானும் தந்தை செபுதேயு, கூலியாள்கள், படகு எனத் தங்கள் உறவு, தங்கள் அதிகாரம், தங்கள் உடைமை அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர்.

இது எப்படி சாத்தியம்?

ஜென் மதத்தில் ஒரு சொலவடை உண்டு: 'நீ தயாராக இருக்கும் போது உன் மாஸ்டர் தோன்றுவார்.' கலிலேயக் கடற்கரையில் அன்று எவ்வளவோ பேர் இருந்திருப்பார்கள். நிறைய சப்தம் இருந்திருக்கும். அந்தச் சப்தங்களின் நடுவில் இவர்கள் இயேசுவின் சப்தத்தைக் கேட்கக் காரணம் அவர்கள் 'தயாராக இருந்தார்கள்.' அவர்கள் தயாராக இருந்ததால் மாஸ்டர் தோன்றினார்.

நேற்று ஜே.கே. என அழைக்கப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வராலாற்றை வாசிக்கத் தொடங்கினேன். தெயோசோஃபிக்கல் சொஸைட்டி எனப்படும் அமைப்பில் அவர் இருந்தபோது, இவர் அமெரிக்கா சென்று அங்கு நோய்வாய்ப்பட்ட தன் தம்பி நித்யாவுடன் இருக்கும் ஒருநாள் அந்த இரவு அவருக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. 'உண்மையைக் கண்டறியும் அவர்', 'உண்மையை ஒவ்வொருவரும்தான் கண்டுகொள்ள வேண்டும். எந்தப் புனித நூலும், எந்த குருவும் அதற்கு உதவ முடியாது' என்ற தான் கண்ட அனுபவத்தை உணர்கின்றார்.

முதல் சீடர்களின் அழைத்தல் அனுபவமும் எந்தவொரு பரிந்துரைக் கடிதமும், அல்லது நடுவில் ஒருவரும் இல்லாமல் நடந்தேறுகிறது.

நான் எப்போது தயாராக இருக்கின்றேனோ, அப்போது அவர் தோன்றுவார். அவரைக் காணும் அந்த நொடியில் நானும் என் வலைகளையும், உறவுகளையும் விட்டுவிட்டுப் பின்செல்ல முடியும்.

ஆம் என்ற பதிலை அவருக்கு ஒவ்வொருவரும் தனித்தனியே கொடுக்க வேண்டும்.

அவர் இன்றும் வருகிறார். அவருக்காகத் தயாராய் இருப்பவர்கள் 'ஆம்' என்று பின்தொடர்கின்றனர். மற்றவர்கள் தொடர்ந்து தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டும், தங்கள் வேலையாள்களை அடக்கி ஆண்டுகொண்டும், படகின்மேல் உரிமை கொண்டாடிக்கொண்டும், தங்கள் உறவுகளைப் பேணிக்காத்துக்கொண்டும் இருக்கின்றனர்.


Friday, January 11, 2019

பெருமகிழ்ச்சி அடைகிறார்

இன்றைய (12 ஜனவரி 2019) நற்செய்தி (யோவா 3:22-30)

பெருமகிழ்ச்சி அடைகிறார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் தாராள உள்ளம் என்ற ஆளுமைத் திறத்தைப் பார்க்கின்றோம்.

இயேசுவும் யோவானும் எதிர்கொள்கின்றனர் இந்நிகழ்வில். இந்நிகழ்வைப் பதிவு செய்வதற்கு முன்னோட்டமாக, இயேசுவும் யோவானும் வேறு வேறு இடங்களில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். இயேசு திருமுழுக்கு பெறுவதை மத்தேயு, மாற்கு, லூக்கா பதிவு செய்ய, இயேசு திருமுழுக்கு கொடுப்பதை யோவான் மட்டுமே பதிவு செய்கின்றார். வேறு வேறு இடங்கள் திருமுழுக்கு கொடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படக் காரணம் இயேசுவின் சீடர்களுக்கும், திருமுழுக்கு யோவனின் சீடர்களுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்தாம்.

இப்படி இருவரின் சீடர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருக்க, இயேசுவும் யோவானும் ஒருவரை ஒருவர் மதிப்பவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்ற வரிகள்தாம் நினைவிற்கு வருகிறது.

திருமுழுக்கு யோவான் ஒரு மேன்மகனார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது?

எப்படி?

திருமுழுக்கு யோவானிடம் வருகின்ற சிலர் இயேசுவைப் பற்றி கோள் மூட்டுகின்றனர். 'நீர் ஒருவருக்குத் திருமுழுக்கு கொடுத்தீரே - அதாவது, உம்மை விட ஜூனியர் ஒருவர் இருக்கிறாரே - அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் போகிறார்கள்.'

இவ்வார்த்தைகளைக் கவனித்தீர்களா?

எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என வைத்துக்கொள்வோம். அந்தப் பிடிக்காத நபரைப் பற்றி என்னிடம் கோள் மூட்டுகின்ற ஒருவர் ரொம்பவும் மிகைப்படுத்திப் பேசி, என் நல்லெண்ணத்தைப் பெறவும், என் கோபத்தைத் தூண்டி அவரிடமிருந்து இன்னும் என்னைப் பிரிக்கவும் முயல்வார். இது அப்படியே இங்கு நடக்கிறது? 'அவர் திருமுழுக்கு கொடுக்கிறார்' என்று மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், 'எல்லாரும் அவரிடம் போகிறார்கள்' என்று மிகைப்படுத்துகின்றார். மேலும், 'எல்லாரும் அவரிடம் போகிறார்கள்' அப்படின்னா என்ன அர்த்தம்? 'உம்மிடம் யாரும் வருவதில்லை. உம் புகழ் குறைந்துவிட்டது' என்று உள்ளீடாகக் சொல்கிறார்.

வழக்கமாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும்போது கேட்பவருக்கு இயல்பாக கோபமும், சொல்லப்பட்ட நபரின் மேல் பொறாமையும் வரும். இந்தப் பொறாமை அல்லது கோபத்தில் அவர், 'அவன் என்னிடம் படித்தவன்தான்! அல்லது நான்தான் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன்' என்று சொல்லிச் சமாளிப்பார். இல்லையா?

ஆனால், திருமுழுக்கு யோவான் இப்படி எதிர்வினை ஆற்றவில்லை.
'அப்படியா? எல்லாரும் போறாங்களா? மகிழ்ச்சி தானே!' என்று சொல்லியதோடல்லாமல், 'இயேசுவின் ஆற்றல் விண்ணிலிருந்து வந்தது' என்று இயேசுவின் ஆற்றலுக்குச் சான்றுபகர்கின்றார். மேலும், 'நான் மெசியாவுக்கு முன்னோடிதானே தவிர மெசியா அல்ல' என்ற தன் தான்மையை ஏற்றுக்கொள்கின்றார். மேலும், இயேசுவை மணமகனாகவும் தன்னை மணமகன் தோழனாகவும் உருவகிக்கின்றார்.

'தோழனாக மணமகனின் அருகில் இருத்தலே மகிழ்ச்சி' என்று தன்னில் மகிழ்ச்சி காண்கிறார் யோவான்.

இறுதியாக, 'அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எது செல்வாக்கு குறைய வேண்டும்' என்று தாராள உள்ளத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றார் யோவான்.

ஒரு பள்ளியில் பணியாற்றும் போது, அல்லது அருள்பணியாளராகப் பணியாற்றும்போது இம்மாதிரியான ஒப்பீடுகளை அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 'நேற்று வந்த டீச்சர் உங்கள விட நல்லா பாடம் எடுக்குறாங்க!' அல்லது 'புதுசா வந்திருக்கிற ஃபாதர் அல்லது ஃப்ரதர் நல்லா மறையுரை வைக்கிறார்!' என்று மற்றவர்கள் சொல்லும்போது, அங்கே, ஒப்பீடும் பொறாமையும் வரக்கூடாது. மாறாக, 'என் இருப்பில் என் இயல்பில் நான் செய்ய இயன்றதைச் சிறப்பாகச் செய்தேன்' என்ற பக்கவமும், 'அடுத்தவராலும் நன்றாகச் செயல்பட முடியும்' என்ற பரந்த மனமும் இருந்தால் நம் மகிழ்ச்சி பறி போகாது.

இந்த உலகம் பல நேரங்களில் முதல் இடங்களையே கொண்டாடுகிறது. ஆனால், இரண்டாம் இடமும் கொண்டாடப்பட வேண்டியது என்கிறார் யோவான். திருமண வீட்டில் கேமரா மணமகனைச் சுற்றியே வரும். ஆனால், அதற்காக அவர் அருகில் இருக்கிற தோழன் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தோழனாக இருப்பதும் நிறைவுதானே. மணமகனோடு ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்?

இரண்டு கேள்விகள்:

1. மற்றவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சொல்லும்போது என் மனப்பாங்கு எப்படி இருக்கிறது? அவர்களுது ஒப்பீடுகளால் நான் என் இயல்பை மாற்றிக்கொள்கிறேனா? என் மகிழ்ச்சியை இழக்கிறேனா?

2. நான் என் அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, என் இருப்பில் நிறைவு கண்டு, அடுத்தவர் வளர வேண்டும் என்ற பரந்த மனம் கொள்கிறேனா?

Thursday, January 10, 2019

இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்

இன்றைய (11 ஜனவரி 2018) நற்செய்தி (லூக் 5:12-16)

இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுநோயாளர் ஒருவரின் நோய் நீக்குதலை வாசிக்கின்றோம். நோய் நீக்கிய அவர், நோய் நீங்கப் பெற்றவரிடம், 'யாருக்கும் சொல்ல வேண்டாம்' எனச் சொல்லி அனுப்புகின்றார். ஆயினும், இயேசுவைப் பற்றிய செய்தி பரவுகின்றது.

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' - இயேசு தான் செய்த அற்புதங்களில் ஒரே ஒரு முறை தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஏறக்குறைய, 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று சொல்லி அனுப்புகின்றார். கல்லறைகளில் வாழ்ந்த பேய் பிடித்தவரிடம் மட்டும்தான், 'ஆண்டவர் உனக்குச் செய்ததை உன் உறவினருக்கு அறிவி' என அனுப்புகின்றார்.

இதை ஆய்வாளர்கள் 'மெசியா இரகசியம்' என்கிறார்கள்.

'உன்னிடம் விலைமதிப்பான பொருள் ஒன்று இருந்து, அதை அடுத்தவரிடம் நீ சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்' என்று 'தி ஆல்கமெஸ்ட்' நாவலில் சொல்கிறார் பவுலோ கோயலோ. 'இவனிடம் என்ன இருக்கப் போகிறது!' என்ற ஏளனம் அடுத்தவர்களிடம் இருக்கும் விலைமதிப்பானதைக் கண்டுகொள்ள நம்மைத் தடுத்துவிடுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் இயேசு, 'யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று சொல்கிறாரோ?

மேலும், சில விடயங்கள் யாரும் சொல்லவில்லை என்றாலும் எப்படியும் தெரிந்துவிடும். தொழுநோய் நீங்கிய இவரை மோசேயின் சட்டப்படி குருவிடம் காட்டுமாறு அனுப்புகிறார் இயேசு. 'உனக்கு எப்படி நோய் நீங்கியது?' என்று குரு கேட்கும்போதும், உறவினர்கள் கேட்கும் போதும் இவர் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படித்தான் இயேசுவைப் பற்றிய செய்தி வேகமாகப் பரவுகின்றது.

இதில் என்ன விந்தையென்றால், ஊருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்த தொழுநோயாளர் ஊரின் உறுப்பினராகிறார். ஊருக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த இயேசு தன்னையே தனிமைப்படுத்திக்கொள்கின்றார்.

'பெயர்' அல்லது 'புகழ்' ஒரு பெரிய போதை. நம் படைப்பாற்றலைக் கெடுப்பது இதுவே. ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஒரு நிகழ்வை நடத்துங்கள். 'மிக அழகாக இருந்தது' என்று பாராட்டுகிறார்கள். நீங்கள் அந்தப் பாராட்டில் சற்று மயங்குகிறீர்கள். அடுத்த ஆண்டும் விழா வருகிறது. அந்நேரமும் நீங்கள்தான் இந்நிகழ்வைச் செய்ய அழைக்கப்படுகிறீர்கள். அந்த நேரம் படைப்பாற்றல் நம்மில் பெரும்பாலும் மழுங்கியே இருக்கும்.

இயேசு இதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார். 'எனக்கு இத்தனை பேரைத் தெரியும்,' 'என் குரூப்பில் இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்,' 'நான் பலருக்கு அறிமுகமானவர்,' 'என்னை எல்லாருக்கும் தெரிய வேண்டும்' என்று நாம் வாழும் கலாச்சாரத்திற்கு மாற்றுக் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குகின்றார் இயேசு. 'அறிமுகம் அவசியமில்லை' என்று தனிமைத்தவம் செய்கிறார்.

தான் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்துவிட்டு, வார்த்தைகள் பேச வேண்டாம், செயல்கள் பேசட்டும் எனத் தனியே ஒதுங்கி இறைவேண்டல் செய்கின்றார் இயேசு.

நாம் நம்மோடும் தனித்திருக்கும் பொழுதே இறைவேண்டல். நம் வாழ்வு தாயின் கருவறையில் தொடங்கிய போதும் (இரட்டைக் குழந்தைகள் தவிர), நாம் கல்லறையில் துயில் கொள்ளும்போதும் (மொத்தமாக அடக்கப்படும் இடங்கள் தவிர) தனியாகவே இருக்கிறோம்.இந்த இரண்டும் தனிமை அல்ல. மாறாக, தன்மைய நிலை. இங்கே தான் நம்மை நாமே நமக்கு அறிமுகம் செய்துகொள்ளவும், புதியதாக்கிக்கொள்ளவும் முடியும்.

ஆக, அடிக்கடி ஆள் நடமாட்டம் இல்லாத, அதே போல நம் மூளையிலும் நிறைய ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் நாம் இருத்தல் சால்பு.


Wednesday, January 9, 2019

இன்று நிறைவேறிற்று

இன்றைய (10 ஜனவரி 2019) நற்செய்தி (லூக் 4:14-22)

இன்று நிறைவேறிற்று

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் இயேசு தன் சொந்த ஊரான நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்தில் தன் பணியைத் தொடங்கியதை நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் பணித் தொடக்கத்தைக் கலிலேயாவில் உள்ள பொதுவிடத்தில் வைக்கின்றார். லூக்காவோ அதை தொழுகைக்கூடத்தில் நடப்பதாக எழுதுகிறார். லூக்காவின் நற்செய்தி இறைமைய அல்லது செப மைய நற்செய்தி. ஆக, இங்கே நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஆலயத்தில் (எ.கா. செக்கரியாவின் அழைப்பு), செபக்கூடத்தில் (எ.கா. இயேசுவின் பணித்தொடக்கம்), செப நேரத்தில் (எ.கா. இயேசுவின் திருமுழுக்கு) நடைபெறுவதுபோல பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இன்றைய நற்செய்தியை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. இயேசு செபக்கூடத்திற்கு வருகிறார். அதுவும் 'வழக்கத்தின்படி' வருகின்றார். அப்படி வந்த அவரிடம் வாசிக்குமாறு இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு தரப்படுகின்றது.

ஆ. அதைப் பிரித்து அவர் வாசிக்கின்றார்.

இ. வாசித்து இருக்கையில் அமர்ந்த அவர்மேல் அனைவரின் கண்களும் பதிந்திருக்க, 'நீங்கள் கேட்ட வாக்கு இன்று நிறைவேறிற்று' என்கிறார். அனைவரும் அவரின் மொழிகளைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர்.

இந்த மூன்று பகுதிகளும் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைச் சொல்கின்றன:

அ. 'வழக்கம்'

இயேசுவுக்கு இருந்த சில 'வழக்கங்களில்' ஒன்று 'ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் செல்வது' அல்லது 'தன் சொந்த மக்களோடு இணைந்து இறைவேண்டல் செய்வது.' ஆக, இறைவேண்டல் செய்வதையும், அதை மற்றவர்களோடு சேர்ந்து செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இயேசு. மேலாண்மையியலில் மேன்மைக்கான வழிகாட்டியாகச் சொல்லப்படும் கருத்துக்களில் ஒன்று, 'வழக்கமாக்குவது.' நாம் ஒன்றிரண்டு நாள்கள் செய்யும் செயல்கள் நம்மைப் பாதிப்பதில்லை. நம்மிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், வழக்கமாக்கிக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் நம்மில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நான் என்றாவது ஒரு நாள் கருணையாக இருந்தால் அது என் ஆளுமையைப் பாதிப்பதில்லை. ஆனால், நான் அன்றாடம் கருணைச் செயல்கள் செய்யும்போது அது என் வழக்கமாக மாறிவிடுகிறது. அப்படி மாறுகின்ற வழக்கம் என்னைக் கருணை உள்ளவராக உருவாக்கிவிடுகிறது.

ஆ. 'இலக்குத் தெளிவு'

'என்னுடைய இலக்கு இதுதான்' என்று நீங்கள் எதையாவது யாரிடமாவது சொல்லிப் பாருங்களேன். உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். 'வாழ்க்கை இயல்பானது. அதை இலக்கு நிர்ணயித்து நாம் கட்டுப்படுத்தக்கூடாது. இலக்கு நிர்ணயம் செய்யும்போது நம் படைப்புத்திறன் பாதிக்கும். அந்தந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும்' என பிரசங்கம் வைப்பார்கள். இவர்கள் சொல்வது சரிதான். ஆனால், 'இரு மான்களை விரட்டுபவர் ஒரு மானையும் பிடியார்' என்பது பழமொழி. ஆக, இலக்கு என்பது நான் 'எந்த மானை விரட்டப் போகிறேன்' என்ற தெளிவுதான். இயேசு தன் பணியைத் தொடங்க நிறைய இலக்குகள் இருந்தன. அவர் 'பத்துக்கட்டளைகளை' வாசித்து, 'இந்தக் கட்டளைகள் போல் அனைவரும் வாழ வேண்டும்' எனச் சொல்லியிருக்கலாம். அல்லது 'ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை' வாசித்து, 'நிலத்தை கடவுள் கொடுப்பார்' என்று சொல்லியிருக்கலாம். அல்லது 'திருப்பாடல் 23'ஐ வாசித்து, 'நானே அந்த ஆயன்' எனச் சொல்லியிருக்கலாம். அல்லது 'எரேமியாவின் புதிய உடன்படிக்கையை' எடுத்து, 'என்னில்தான் புதிய உடன்படிக்கை நிறைவேறுகிறது' எனச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் தெரிவு செய்கின்ற இலக்கு வித்தியாசமாக இருக்கிறது. 'எளியவரோடும், சிறைப்பட்டவரோடும், பார்வையற்றவரோடும், அந்நியப்படுத்தப்பட்டோரோடும், விளிம்பு நிலையில் இருக்கிறவரோடும்' கைகோர்க்கின்ற, 'ஆண்டவரின் அருளை' அறிவிக்கின்ற ஒன்றைத் தன் இலக்காக எடுத்துக்கொள்கின்றார். முற்சொன்ன அனைத்தும் - பத்துக்கட்டளைகள், நாடு, ஆயன், உடன்படிக்கை - தேவைதான். ஆனால், 'என் இலக்கு இது' என நிர்ணயம் செய்கின்றார். 'இந்த நேரத்தில் நான் என்ன செய்யப் போகிறேன்?' 'இவரிடம் நான் எப்படி பேசப் போகிறேன்?' என சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் இலக்குகள் நிர்ணயிக்கப்படும்போது நிகழ்வுகளும் இனிதாகின்றன, நம் ஆற்றலும் சேமிக்கப்படுகிறது.

இ. 'நிறைவேறிற்று'

சின்ன வயதில் நம்மைப் பார்த்தவர்கள், நம்மைக் கைகளில் ஏந்தியவர்கள், நம் கரம் பிடித்து 'அ-ஆ' சொல்லிக்கொடுத்தவர்கள் என பல நல்லவர்கள், 'எதிர்காலத்தில் நீ இப்படி இருப்பாய்!' என நம்மைப் பற்றி இறைவாக்குரைத்திருப்பார்கள். அல்லது நம் பெற்றோரிடம், 'இவன் இப்படி இருப்பான் - இவள் இப்படி இருப்பாள்' என்று நம்மைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள். இவைகளை நாம் பல நேரங்களில் மறந்திருப்போம். இவற்றை இன்று எண்ணிப்பார்ப்போம். இவைகளில் ஒன்றையாவது நாம் நிறைவேற்றியிருந்தால், நாமும், 'இன்று நிறைவேறிற்று' என்று சொல்ல முடியும்.

இறுதியாக, 'பணி நடைபெற வேண்டும்' என்றால் 'பணியைத் தொடங்க வேண்டும்.' 'பணியைத் தொடங்க வேண்டும்' என நினைத்தால் மட்டும் 'பணி நடந்துவிடாது,' 'பணியைத் தொடங்க வேண்டும்.' வெறும் எண்ணங்கள் வாழ்வாகாது. ஏனெனில், 'வெறுங்கை முழம் போடாது.'

Tuesday, January 8, 2019

மழுங்கிப் போயிருந்தது


மழுங்கிப் போயிருந்தது

'இரவில் அல்லது தனிமையான ஓர் அறையில் திடீரென ஓர் உருவத்தை நாம் கண்டால், 'பேய்' என்று அலறுகிறோமே தவிர, 'கடவுளே' என்று கும்பிடுவதில்லை' என்பது நான் அண்மையில் இரசித்த டுவிட்டர் கீச்சொலி. என்னதான் நாம் கடவுளை முழுக்க முழுக்க நம்பினாலும், அவர் நம் முன் தோன்றமாட்டார் என்பதே அதைவிடப் பெரிய நம்பிக்கையாக நிற்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படி ஒரு உருவத்தைக் கடலில் பார்த்த இயேசுவின் சீடர்கள், 'அது பேய்' என்று அலறுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நேற்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுகிப் பெருகி, பசும்புல் தரையில் அமர வைத்து மக்களைப் பசியாற்றும் இயேசு, மக்கள் கூட்டத்தையும், தொடர்ந்து சீடர்களையும் அனுப்பவிட்டு - 'கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு' எனப் பதிவு செய்கின்றார் மாற்கு - இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். இறைவேண்டல் முடித்துவிட்டு திரும்புகிறார். படகு நடுக்கடலில் இருக்கின்றது. அவர்கள் அங்கே தண்டு வலிக்கப் பெரிதும் வருந்த, இவர் தனியே ஒய்யாரமாகக் கடலில் நடந்து அவர்களைக் கடக்க விரும்புகிறார்.

அவர்களைக் கடந்து செல்ல அவர் ஏன் விரும்பினார்? என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் கடந்து செல்வதைக் கண்டு சீடர்கள், 'அலறுகிறார்கள்,' 'அஞ்சிக் கலங்குகிறார்கள்.' தங்கள் வயிற்றுக்கு உணவு கொடுத்தவர் பேயாகத் தெரிகின்றது அவர்களுக்கு. ரொம்ப சிம்பிள் லாஜிக். இயேசுவை அவர்கள் அங்கே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான்.

எதிர்பார்ப்பை உடைப்பதுதானே அற்புதம். 'ஐயாயிரம் பேர் பசியாறுவார்கள்' என சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்போது அற்புதம் நடந்தேறுகிறது. 'துணிவோடு இருங்கள்' என்று சொன்ன இயேசு அவர்களோடு படகில் ஏறிக்கொள்கின்றார். 

சீடர்களின் உணர்வுகளை ஐந்து வார்த்தைகளில் சொல்கின்றார் மாற்கு: (அ) 'அலறினார்கள்,' (ஆ) 'அஞ்சிக் கலங்கினார்கள்,' (இ) 'மலைத்துப் போனார்கள்,' (ஈ) 'புரிந்து கொள்ளவில்லை', (உ) 'உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.'

மாற்கு நற்செய்தியாளர் சீடர்களை கொஞ்சம் க்ரே ஸ்கேலில்தான் வரைகின்றார். சீடர்களின் முதல் புரிந்துகொள்ளாத்தன்மையை இங்கே பார்க்கின்றோம்.

'மழுங்கிய உள்ளம்' - 'மழுங்குதல்' என்ற வார்த்தையை பெரும்பாலும் நாம் கூர்மையானவற்றின் எதிர்ப்பதமாகப் பார்க்கின்றோம். மழுங்கிய கோடரி மரத்தை வெட்டுவதில்லை. மழுங்கிய கத்தி காய்கறிகள் வெட்டுவதில்லை. அப்படியே வெட்ட முயன்றாலும் அது நிறைய கைவலியைக் கொடுப்பதோடு, நாம் வெட்டுகின்ற பொருளையும் பாழாக்கிவிடுகிறது - தக்காளியைக் கூர்மையான கத்தியால் வெட்டினால் அழகாக இருக்கிறது, மழுங்கிய கத்தியால் வெட்டினால் நம் முகத்தில் பீய்ச்சி அடித்துவிடுகிறது - இல்லையா?

எப்போது கத்தி மழுங்குகிறது? அதிகப்படியாக பயன்பாட்டிற்கு உட்படும்போது, அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும்போது. பயன்பட்டு மழுங்கினால் பரவாயில்லை. தவறாகப் பயன்படுத்தப்பட்டு மழுங்கக்கூடாது.

'உள்ளம் மழுங்குதல்' என்பது 'புரிந்துகொள்ளும் தன்மை இழத்தல்' என்பதன் உருவகமே. இயேசுவை மிக எளிதாக, ஒரு சாதாரண நபராக எடுத்துக்கொள்கிறார்கள் சீடர்கள். அவர்கள் சில மணிநேரங்களுக்கு முன் கண்ட அற்புதம் அவர்களின் புரிதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் கண்ட அற்புதம் அவர்களின் புரிதலைக் கூர்மைப்படுத்தவில்லை. 'இது என்ன விந்தை!' என அவர்கள் ஆச்சர்யப்படவில்லை. 'ஆகா, இவரல்லவா ஆண்டவர்!' என்று இயேசுவை உச்சி முகரவில்லை. 'பேய்' என அஞ்சுகிறார்கள்.

இன்று நான் என் ஆன்மீக வாழ்வில் எப்படி இருக்கிறேன்? இறைவனையும், அவரின் அருஞ்செயல்களையும் நான் அன்றாடம் அனுபவித்தாலும், அவரைக் கண்டுகொள்ளாமல் என் மனம் சில நேரங்களில் மழுங்கியிருப்பது ஏன்?

இதை நம் மனித உறவுகளில் பொருத்திப் பார்த்தால், 'மழுங்கிய உள்ளத்தால்'தான் சந்தேகம், ஒப்பீடு, பொறாமை வருகிறது. வாழ்வின் நிறைவான பொழுதுகளைத் திரும்பிப் பார்த்தால், கடல் போன்ற அலையடிக்கும் பொழுதுகளில் என் உள்ளம் கூர்மையாகும்.

இறுதியாக, இயேசுவின் பதிலுணர்வு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் மழுங்கிய உள்ளத்தை, புரிந்துகொள்ளாத்தன்மையை, அலறலை, அச்சத்தைக் கடிந்துகொள்ளவில்லை. ஒரு புன்னகையோடு படகில் ஏறிக்கொள்கிறார். 

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு 'நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்' என்ற கதைதான் நடத்த முடியுமே தவிர, 'ஆஸ்கர் வைல்டின் பாடல்களை' நடத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

புன்னகை - நம் வாழ்வில் நாம் சந்திக்கும் மழுங்கிய உள்ளங்களைக் கடக்க உதவும் படகு.


Monday, January 7, 2019

பசும்புல் தரையில்

இன்றைய (8 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 6:34-44)

பசும்புல் தரையில்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்ற சில பகுதிகளில் ஒன்று இது. ஏறக்குறைய எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்யும் ஒரு விடயத்தை இன்றைய நாள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்!' (6:39)

இந்த வார்த்தைகளை கொஞ்சம் ரிவைண்ட் செய்துகொள்வோம்.

'சீடர்கள் படகேறி பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.' (6:33)

அவர்களோடு இயேசுவும் செல்கின்றார். இவர்கள் செல்வதைக் கேட்ட மக்கள் இவர்களுக்கு முன் ஓடோடிச் செல்கிறார்கள். தாய்மார்கள், குழந்தைகளை வைத்திருப்போர், வயதானவர்கள், செருப்பு அணிந்தவர்கள், பிய்ந்துபோன செருப்புக்கு கயிறு கட்டி அணிந்திருந்தவர்கள், செருப்பே அணியாதவர்கள், சிறு குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், நொண்டிக் கொண்டிருப்போர் என அனைவரும் ஒருமிக்க ஓடுகின்றனர். ஓடியது எதை நோக்கி? பாலைநிலம் நோக்கி.

ஏனெனில், மாற்கு மீண்டும் இதைக் குறிப்பால் உணர்த்துகிறார்: 'இயேசு கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்தார்' (6:34). பாலைநிலத்தில் இருக்கும் ஆடுகளுக்குத்தான் ஆயன் தேவை. பசும்புல் தரையில் இருக்கும் ஆடுகளுக்கு ஆயன் தேவையில்லை. அந்த ஆடுகளைப் பார்த்து பரிவுகொள்ளத் தேவையில்லை.

ஆனால், கொஞ்ச நேரத்தில் என்ன நடக்கிறது?

இயேசு அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். உணவும் கொடுக்க முனைகிறார்.

அப்போதுதான், அங்கே முதல் அற்புதம் நிகழ்கிறது. 'பசும்புல் தரை' அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. தனிமையான பாலைநிலத்தில் எப்படி பசும்புல் தரை வந்தது?

பாலைநிலத்திலும் பசும்புல் தரையைக் கண்டுபிடிக்க இன்றைய நற்செய்தி மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:

அ. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது. அதாவது, இயேசு நினைத்திருந்தால் கற்பித்துவிட்டு அப்படியே அவர்களை அனுப்பியிருக்கலாம். வெறும் போதனை பசி ஆற்றாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். 'போங்க! நல்லா சாப்பிடுங்க!' என்று அவர் அவர்களை அனுப்பியிருக்கலாம். அல்லது, 'சாப்பிட்டு வந்துட்டீங்களா?' என்று கேட்டு மௌனம் காத்திருக்கலாம். 'சாப்பிட்டியா?' என்ற கேள்வி ஒருபோதும் பசியாற்றுவதில்லை. மாறாக, சாப்பிடக் கொடுக்கும்போதுதான் பசி ஆறுகிறது. அதுதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது.
ஆ. எதிர்மறை எனர்ஜியைக் கண்டுகொள்ளக் கூடாது. சீடர்களின் எனர்ஜி எதிர்மறையாக இருக்கிறது. 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே. ஏற்கனவே நெடுநேரம் ஆகிவிட்டது ... ஏதாவது உணவு வாங்கிக் கொள்ளுமாறு அவர்களை அனுப்பிவிடும்!' என்று யோசனை சொல்கின்றார்கள். முதலில், கேட்காமல் எந்த யோசனையும் கொடுக்கக் கூடாது என்ற இங்கிதம் தெரியவில்லை இவர்களுக்கும். அடுத்ததாக, யாருக்கு யோசனை கொடுக்க வேண்டும்? என்ற அறிவும் அவர்களுக்கு இல்லை. மேலும், இந்த யோசனையால் யாருக்கும் பயன் இல்லை. இயேசு இந்த யோசனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுகிறார். மற்றவர்களின் கருத்து தன் செயலைப் பாதிக்க இயேசு ஒருபோதும் விடவில்லை. இது நமக்கு ஒரு நல்ல ஆளுமைப் பாடம்.

இ. 'போய்ப் பாருங்கள்!' - 'இல்லை, இல்லை எனச் சொல்லாதீர்கள். போய் இருப்பதைப் பாருங்கள்' என அனுப்புகிறார் இயேசு. போகிறார்கள். பார்க்கிறார்கள். 'ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் காண்கிறார்கள்.' பல நேரங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால், காண்பதில்லை. நம் மனம் கூர்மையற்று இருப்பதாலும், பல கவனச் சிதறல்கள் இருப்பதாலும் நம்மால் காண இயல்வதில்லை.

இந்த மூன்று படிகளும் நடந்தவுடன்,

அங்கே பசும்புல் தரை தெரிகிறது.

ஆக, நம் வாழ்விலும், 'வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பதை விட இன்னும் கொஞ்சம் அதிகம் செய்யும்போது,' 'எதிர்மறையான எனர்ஜியைக் கண்டுகொள்ளாமல் விடும்போது,' 'கையில் இருப்பதைக் கூர்ந்து காணும்போது,' பசும்புல் தரை தெரியும்.

இந்த முதல் அறிகுறி நடந்தவுடன், நிறைவு என்ற அடுத்த அற்புதமும் நடந்தேறும்.

Sunday, January 6, 2019

விளிம்பிலிருந்து மையம் நோக்கி

இன்றைய (7 ஜனவரி 2019) நற்செய்தி (மத் 4:12-17, 23-25)

விளிம்பிலிருந்து மையம் நோக்கி

நாம் சாதாரண கண்ணாடி டம்ளரில் தண்ணீர் குடிக்கும்போது (ஸ்ட்ரா வைத்துக் குடிக்கும் நேரம் தவிர) விளிம்பில் இதழ் பதித்தே நாம் குடிக்கின்றோம். மையத்திலிருக்கும் தண்ணீரை விளிம்பு வழியாகவே நாம் அடைகின்றோம். மையத்திலிருக்கும் தண்ணீருக்கு உருவம் கொடுப்தே கண்ணாடி டம்ளரின் விளிம்புகளே. ஆனால், பல நேரங்களில் கண்டுகொள்ளாப்படாமல் இருப்பவைகளும் விளிம்புகளே.

'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என அடிக்கடி மொழிவார் அறிஞர் அண்ணா. அதே போலவே பல இடங்களில் 'மையம் வளர்கிறது, விளிம்பு தேய்கிறது' என்பதே எதார்த்தம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித்தொடக்கத்தை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்வதை வாசிக்கின்றோம். இயேசுவின் சமகால பாலஸ்தீனம் கலிலேயா-சமாரியா-யூதேயா என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தது. சமாரியா நிலப்பரப்பில் இனக்கலப்பு செய்து தீட்டானதாகக் கருதப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்தனர். யூதேயாவிலும், கலிலேயாவிலும் யூதர்கள் வாழ்ந்தனர். இந்த யூதர்களில் யூதேயாவில் வாழ்ந்தவர்கள் உயர்குடி மக்கள். பொருளாதார, அரசியல் பலம் கொண்டிருந்தவர்கள். ஆனால், கலிலேயாவில் வாழ்ந்தவர்கள் சாதாரண விவசாய, வெகுசன மக்கள். இயேசுவின் பணி அக்கால யூத மையமான யூதேயாவில் தொடங்காமல் விளிம்பாக இருந்த கலிலேயாவில் தொடங்குகிறது.

ஏன்?

இஸ்ரயேல் ஒரு இனமாக உருவெடுத்தபோது அதன் பயணம் விளிம்பிலிருந்தே தொடங்கியது. ஆபிரகாம் புறப்பட்ட 'ஊர்' என்ற இடம் ஒரு விளிம்பு. இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் செங்கடல் கடந்தது ஒரு விளிம்பு. அசீரியா, பாபிலோனியா, மோவாபு, மிதியான், பிலிஸ்தியா போன்ற மையங்களை எதிர்த்து தன் இருப்பை உறுதி செய்தபோதும் அது விளிம்பாகவே இருந்தது. காலப் போக்கில் அது மையமாக வளர்ந்தது.

விளிம்புகள் இயல்பாகவே நொறுங்கும் தன்மை கொண்டவை.

மேலும், கலிலேயா என்ற விளிம்பில் பணியைத் தொடங்கும் இயேசு, 'நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர்' போன்ற விளிம்பு நிலை மக்களிடமிருந்து தொடங்குகிறது. இவ்வாறாக, இயேசு தன் பணித் தொடக்கத்திலேயே தன் அடையாளத்தை வலிமையில் காணாமல் வலுவின்மையில் காண்கின்றார்.

எடுத்துக்காட்டாக, 'ஊதாரி மகன்' (லூக் 15:13-32) எடுத்துக்காட்டில், தந்தை, மையத்திலிருந்த தன் மூத்த மகனுக்காகக் காத்திராமல், விளிம்பிலிருந்த இளைய மகனுக்குக் காத்திருக்கும் இரக்கத்தைக் கடவுளின் இரக்கம் என முன்வைக்கின்றார்.

இன்று, ஒரு புகைப்படம் எடுப்பதில் தொடங்கி நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மையத்தில் இருக்கவே நாம் விரும்புகிறோம். ஆனால், மையம் மாறக் கூடியது. வேகமாக மறையக் கூடியது. ஆனால், விளிம்பு எப்போதும் இருக்கக் கூடியது.

இன்றைய நாளில் நம் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களை எண்ணிப் பார்க்கலாம். அப்படிப்பட்ட யாரையாவது ஒருவரைச் சந்திக்கலாம். ஏன்? நம் விளிம்பு நிலையையே நாம் கொண்டாடலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 யோவா 3:22-4:6), எதிர்க்கிறிஸ்து பற்றிய போதனைக்கு முன், அன்பைப் பற்றிப் பேசுகின்றார் யோவான். ஒருவர் மற்றவரிடம் நாம் செலுத்தும் அன்பு விளிம்பிலிருந்தே தொடங்குகிறது. ஒருவரின் தனிமை என்ற விளிம்பை மற்றவரின் தனிமை என்ற விளிம்போடு நெருக்குவதே அன்பு. இப்படியாக விளிம்புகள் இணைந்து வலிமை பெறுவதே அன்பின் வலிமை.

Friday, January 4, 2019

இதைவிட பெரியவற்றை

இன்றைய (5 ஜனவரி 2018) நற்செய்தி வாசகம் (யோவா 1:43-51)

இதைவிட பெரியவற்றை

யோவான் நற்செய்தியில் இயேசு பிலிப்பு ஒருவரைத்தான் 'என்னைப் பின்தொடர்ந்து வா!' என்று அழைக்கின்றார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்தவர். இவர், அந்திரேயா, பேதுரு எல்லாரும் ஒரே ஊர்க்காரர்கள்.

இயேசுவைச் சந்தித்த பிலிப்பு தன் நண்பர் நத்தனியேலைத் தேடிச் செல்கின்றார். பார்த்தலோமேயு என்ற திருத்தூதரைத்தான் யோவான் நத்தனியேல் என்று குறிப்பிடுகின்றார். 'நத்தனியேல்' என்றால், 'நாத்தான்,' 'ஏல்' - 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள். இவர் பிலிப்புக்கு நல்ல நண்பராக இருக்கின்றார். ஆகையால்தான், 'இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சார்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்' என்று சொன்னவுடன், 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று கிண்டலாகக் கேட்கின்றார்.

அதாவது, ஒரே ஊர்க்காரர்களான இவர்கள் மற்ற ஊரான நாசரேத்தைப் பற்றிக் கேலி பேசுகின்றனர். இது ஒரு கபடற்ற, எதார்த்தமான கேலி. இங்கே இவர் மற்ற ஊரைத் தாழ்த்திப் பேசுவதன் வழியாக தன் ஊரை உயர்த்திப் பேசுகின்றார். இது நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடலில் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. இந்த எதார்த்தத்தையே இயேசு 'கபடற்ற உள்ளம்' என்று பாராட்டுகின்றார்.

'இவர் உண்மையான இஸ்ரயேலர் ... கபடற்றவர்...'

இஸ்ரயேலர். ஏனெனில், மற்ற இஸ்ரயேலர் போல இவரும் மெசியாவின் வருகை நாசரேத்தில் இருக்காது என நம்பினார்.

கபடற்றவர். ஏனெனில், தன் உள்ளத்தில் பதித்த ஒன்றை மிக எதார்த்தமாக தன் நண்பரிடம் பகிர்கின்றார்.

இதை ஒரு வகையான வெகுளித்தனம் என்றுகூடச் சொல்லலாம்.

நம்ம ஊர் கிராம மக்களின் உரையாடல்களிலும் இந்த வெகுளித்தனத்தை இயல்பாகப் பார்க்க முடியும். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத ஒருவர்தான் கபடற்ற நிலையில் இருக்க முடியும். ஏனெனில், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கின்ற மனம் பொய் சொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக, ஆசிரியர் இன்று சரியாகப் பாடம் நடத்தவில்லை என வைத்துக்கொள்வோம். அதுதான் உண்மை. விளைவுகள் பற்றிக் கவலைப்படாத மாணவன், 'சார், இன்னைக்கு நீங்க நடத்திய பாடம் புரியவில்லை' என்று நேருக்கு நேராகச் சொல்வான். ஆனால், விளைவுகள் அல்லது பரிசுகள் எதிர்பார்க்கும் மாணவன், 'சார், வர வர நீங்க ரொம்ப நல்லா நடத்துறீங்க!' என்பான். விளைவுகளை யோசித்த அடுத்த நொடி கபடு மனத்தில் வந்துவிடுகிறது.

இயேசுவிடம் வருகின்ற நத்தனிNயுல், 'ரபி, நீரே இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என மொழிகிறார். இயேசுவைக் கண்ட அந்த நொடியில் அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்கின்றார். கபடற்றவர்கள் தாங்கள் காண்பதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வார்கள். கபடற்ற இடையர்கள் வானதூதர்களின் வார்த்தைகளை நம்பித் தங்கள் ஆடுகளை விட்டுவிட்டு பெத்லகேம் செல்கின்றார்கள். ஆனால், ஏரோதால் விண்மீனைப் பின்தொடர்ந்தும், ஞானியரைப் பின்தொடர்ந்தும் செல்ல முடியவில்லையே?

இன்று, 'இதைவிடப் பெரியவை' என்று இயேசு சொல்பவை எவை?

அ. கபடற்ற உள்ளம்

ஆ. மனதில் உள்ளதை அப்படியே பகிரக்கூடிய நண்பரின் உடனிருப்பு

இ. இயேசுவைக் கண்டவுடன் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 யோவா 3:11-21), 'நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்' என்றும், 'கடவுள் முன்னிலையில் உண்மையால் நம் மனத்தை அமைதியுறச் செய்ய முடியும்' என்றும் சொல்வதன் வழியாக, நம் உள்ளத்தில் இருக்கும் அன்பு நம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்றும், நம் மனத்தை உண்மையால் (கபடற்ற தன்மையால்) மட்டுமே அமைதியாக்க முடியும் என்றும் சொல்கிறார் யோவான்.