Sunday, July 13, 2014

உன்னுள்ளே இறைவன்!

[தூய இலாத்தரன் பேரலாய நேர்ந்தளிப்பு விழா (07.11.2014)விற்கான மறையுரைச் சிந்தனை]

இன்று தூய லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றோம். 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டு லாத்தரனி குடும்பத்திற்குச் சொந்தமான அரண்மனை திருத்தந்தை சிக்ஸ்து அவர்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றது. அந்த அரண்மனையோடு இணைந்து பின் விரிவுபடுத்தப்பட்ட பேரலாயமே லாத்தரன் பேராலயம். திருமுழுக்கு யோவான் மற்றும் நற்செய்தியாளர் யோவான் என இரண்டு யோவான்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட பேரலாயம் இது. திருத்தந்தையின் நான்கு பேரலாயங்களில் முதன்மையானது இது. திருத்தந்தையரின் வாழ்விடம் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வத்திக்கான் நகருக்கு மாற்றப்பட்டாலும் இந்தப் பேராலயத்திலேயே திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ நாற்காலி இருக்கிறது. உலகின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் தாய் ஆலயம் இது. உரோமை மறைமாவட்டத்தின் கதீட்ரல் இது. உரோமை மறைமாவட்டத்தின் பேராயர் இல்லமே(!) லாத்தரன் அரண்மனை.

இன்று கலைநுணுக்கத்திற்காக பலர் இங்கே செல்கின்றனரே தவிர பக்திக்காக யாரும் செல்லவில்லை. தங்கள் நாட்டைச் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இன்றைய திருவிழா வழிபாட்டு ஆண்டில் சேர்க்கப்பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. நம்ம ஊர் வேளாங்கண்ணியிலோ, பூண்டியிலோ, ஓரியூரிலோ நுழையும் போது நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும் ஒரு கடவுள் உணர்வு இந்த ஆலயத்தில் ஏற்படுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இன்று எல்லாமே வெர்ச்சுவல் என்று மாறிவருகிறது. அதாவது இருக்கு! ஆனா இல்லை! இன்று பல இணைய தளங்கள் வெர்ச்சுவல் கோவில்களாக உள்ளன. செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என்றால் இந்துக்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, கிறித்தவர்களோ கோவிலுக்கும், மசூதிக்கும், செபக்கூடத்திற்கும் போகத் தேவையில்லை. இணைய தளங்களில் நுழைந்து வழிபாடுகளைக் காணலாம், மறையுரைகள், பாடல்களைக் கேட்கலாம், விண்ணப்பங்கள் மற்றும் நன்றிகளைப் பதிவு செய்யலாம். காணிக்கை செலுத்தலாம். ஒருசில தளங்களில் பாவசங்கீர்த்தனமும் செய்யலாம்.

இடம் சார்ந்த இறைவன் இன்று இணையம் சார்ந்த இறைவனாக மாறிவிட்டார்!

இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை வாசித்தோம். நான்கு நற்செய்தியாளர்களுமே குறிப்பிடும் ஒரு நிகழ்வு இது. யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் வாழ்வின் முதல் நிகழ்வாகவும், மற்ற நற்செய்தியார்கள் இறுதி நிகழ்வாகவும் எழுதுகின்றனர். இப்போது அடுத்த கேள்வி! எப்போதுதான் இயேசு தூய்மைப்படுத்தினார்? ஏன் இந்த முரண்பாடு?

எருசலேம் ஆலயம் நாம் நினைக்கும் அளவிற்கு எல்லாரும் நுழையக் கூடிய ஆலயம் அல்ல. டெம்பிள் போலீஸ் என்னும் காவலர்கள் எந்நேரமும் விழித்திருந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டே இருப்பர். மேலும் குருக்களுக்கான தனிப்பட்ட காவலர்கள், தலைமைக்குருவின் காவல் பணியாளர்கள் எனவும் நிறையப் பேர் இருப்பர். இவர்களை மீறி இயேசு சாட்டை எடுத்து வாங்குவோரையும், விற்போரையும் விரட்டியிருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு அல்ல.

நற்செய்தியாளர்கள் இயேசுவின் நற்செய்தியை எழுதிய காலம் கிபி 70 முதல் 120. கிபி 70ல் எருசலேம் ஆலயம் உரோமையர்களால் தரைமட்டமாக்கப்படுகிறது. யூதர்கள் ஒரு பக்கமும், கிறித்தவர்களாக மாறிய யூதர்கள் மறுபக்கமும் என அங்குமிங்கும் அலைபாய்கின்றனர். யூதர்கள் தங்களுக்கென செபக்கூடங்களைக் கட்டிக்கொண்டு கிறித்தவர்களை அங்கே நுழைய அனுமதிக்கவில்லை. இப்போது ஆலயமும் இல்லை! செபக்கூடமும் இல்லை! என்ன செய்வது? கிறித்தவர்கள் எங்கே போவார்கள்?

நற்செய்தியாளர்களின் மூளையில் ஒரு எண்ணம் உதித்தது. இயேசுவின் உடலையே ஆலயமாக்கிவிட்டால் நமக்கு கல்லால் ஆன ஆலயம் தேவையில்லையே! இயேசுவே இதைச் சொல்வதாக ஒரு நிகழ்வை கற்பனை செய்து எழுதுகின்றனர். இந்த நிகழ்வு கற்பனை நிகழ்வு அல்லது இறையியல் நிகழ்வு என்றாலும் இது நமக்கு ஒரு சில பாடங்களைச் சொல்லத்தான் செய்கின்றது:

அ. ஆள்சார்ந்த பிரசன்னம். பழைய ஏற்பாட்டில் கடவுள் என்பவர் இடம் சார்ந்த பிரசன்னமாக கருதப்பட்டார். உடன்படிக்கைப் பேழை, சந்திப்புக் கூடாரம், சாலமோனின் ஆலயம் என இறைவனை இந்த இடங்கள் பிரசன்னமாக்கியிருந்தன. புதிய ஏற்பாட்டில் இறைவன் இடம் சார்ந்த பிரசன்னத்தை விடுத்து ஆள்சார்ந்த பிரசன்னமாக மாறுகின்றார். இயேசு தன் உடலை ஆலயத்திற்கு ஒப்பிட்டதை, தூய பவுலடியார் இன்னும் ஒரு படி எடுத்துப் போய் நம்பிக்கை கொண்ட அனைவருமே இறைவனின் ஆலயங்கள் என்று கதவுகளை அகலத் திறக்கின்றார். இது மேற்கத்திய சிந்தனைக்குப் புதியது என்றாலும் இந்து மரபில் இது பல ஆண்டுகளாக இருந்து வருகின்ற ஒன்று. 'தத்வமசி' 'அகம் பிரமாஸ்ய' என்பவை குறிப்பிடுவதெல்லாம் இதுதான்: 'நீயே இறைவன்!' 'உன்னுள்ளே இறைவன்!' நம்முள் இறைவன் என்றால் நாம் ஒருவர் மற்றவரை மதிக்கவும், அன்பு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஆ. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். கோவில் ஒரு சமூகத்தின் அடையாளம். வெறும் கற்கள் ஒரு கோவிலை உருவாக்குவதில்லை. மாறாக, மக்கள் தாம் அதை உருவாக்குகின்றனர். மக்களை மையப்படுத்தாமல் வெறும் வழிபாடுகளையோ, அல்லது குருக்களையோ மையப்படுத்தும் கோவில்கள் கோவில்கள் ஆகாது. அவை காட்டும் ஆன்மீகமும் ஆன்மீகம் அல்ல. வியாபாரம்!

இ. இன்று கோவிலுக்கு எதற்காகப் போகிறோம் என்று நம் இளைய தலைமுறையினரைக் கேட்டால், 'நண்பர்களைச் சந்திக்க!' என்பார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கோவிலுக்கு யாரும் வரவில்லை என்பதால் கோவில்கள் டிஸ்கோ பார்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. செல்போன் போல கடவுளையும் கைக்குள் வைத்துக்கொள்ளவே இன்றைய தலைமுறை விரும்புகிறது. எந்தக் கோவிலுக்கும் போகலாம், எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்ற எண்ணமும் வந்து விட்டது. இந்த நிலையில் லாத்தரன் பேராலயமும், நம் ஊரின் ஆலயங்களும் 'வெள்ளை யானைகளாக' மாறிவிடும் நாள் மிக அருகில் உள்ளது.

கோவில்களின் கோபுரங்கள் போல நம் எண்ணங்கள் உயர்ந்தால், அவைகளின் மணிகள் போல நாம் இறைப்பிரசன்னத்திற்கு நம் சகோதர, சகோதரிகளை அழைத்தால், ஒருவர் மற்றவரின் இறைச்சாயலை மதித்து அன்பு செய்தால் மட்டுமே ஆலயம் அருள் தரும்! பொருள் தரும்!


No comments:

Post a Comment