Tuesday, April 8, 2014

உனக்கு என்னோடு பங்கில்லை

சீமோன் பேதுருவிடம் அவர் வரவே, 'ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?' என்றார். 

'நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' என்றார்.

'அப்படியென்றால் பாதங்களை மட்டுமல்ல...என் உடல் முழுவதையும் கழுவும்!' என்றார்.

'குளித்துவிட்டவன் பாதங்களைக் கழுவினால் மட்டும் போதும். அவன் தூய்மையாவான்' என்றார்.

இன்று காலை புனித வாரப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரிய வியாழன் அன்று பாதம் கழுவும் சடங்கின் போது பாடப்படும் இந்த வரிகள் என்னை மிகவும் தொட்டன. எவ்வளவோ நாட்கள் இதைக் கேட்டிருந்தாலும் இன்று இந்தப் பாடலின் அர்த்தம் வித்தியாசமாக இருந்தது.

'தண்ணீர்!'

உலகில் மூன்றாம் உலகப் போர் வந்தால் அது தண்ணீருக்காகத் தான் வரும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து. இன்னும் கொஞ்ச நாளில் நம் ஊரில் தங்கம் திருடு போவதற்குப் பதில் தண்ணீர் திருடுபோகத் தொடங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இயேசுவின் பாடுகளில் 'தண்ணீர்' இரண்டு இடங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது:

தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு 'பங்கை' ஏற்படுத்த உதவியதும் தண்ணீர்தான்.

இவனுக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என பிலாத்து 'பங்கை' ஒதுக்கிக் கொள்ள உதவியதும் தண்ணீர்தான்.

என் இன்றைய கேள்வி என்ன?

யூதாசின் பாதங்களை இயேசு கழுவியிருப்பாரா? பாதங்களை இயேசு கழுவும் போது யூதாசின் மனதில் என்ன சிந்தனை ஓட்டம் இருந்திருக்கும்?

'உமக்கு என்னோடு பங்கு வேண்டாம்!' என யூதாசு இயேசுவை ஒதுக்க நினைத்தாலும். தேடி வந்து ஒட்டிக் கொள்கின்றார் இயேசு. இதுதான் இறைவன் நம்மேல் ஏற்படுத்திக் கொள்ளும் பங்கு.

எம்எச் 370 நிகழ்விற்குப் பின் தண்ணீர் இன்னும் பயமாக மாறியிருக்கிறது. விமானம் மறைந்து இன்றோடு மாதம் ஒன்றாகி விட்டது. வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் ஊகங்களாக இருக்கின்றனவே தவிர உறுதியாக எதுவும் இல்லை.

கொலை, தற்கொலை, கடத்தல், தீவிரவாதம், விபத்து, கோளாறு, கவனக்குறைவு என எவ்வளவோ காரணம் சொல்லப்படுகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த விமானம் இன்று இல்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த 239 பேர் இன்று இல்லை.

இந்த இரண்டு மட்டும்தான் உண்மை.

கண்ணீரும் தண்ணீரும் கலந்து விட்ட நிலையில் இன்னும் அதிசயம் நடக்கும் என்று காத்திருக்கின்றோம். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதிசயம் நடக்கும்!

தன் பாதங்களில் தண்ணீர்த் துளிகள் விழுந்த போது சீடர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்? 'ஆண்டவரே! நன்றாகக் கழுவும்!' என்று சொல்லியிருப்போமா? அல்லது வேண்டாம்! என்று சொல்லியிருப்போமா?

இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்விற்கும் அவரின் மண்ணகப் பிறப்பிற்கும் நிறைய ஒருமைப்பாடு இருக்கின்றது:

பந்தியிலிருந்து எழுந்து - விண்ணிலிருந்து எழுந்து
மேலாடையை அகற்றி - கடவுள் தன்மையை அகற்றி
ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு - மனித உருவம் ஏற்று
குணிந்து - பிறந்து
தண்ணீரை ஊற்றி - கண்ணீரைச் சிந்தி
ஒரு துண்டால் துடைத்தார் - துணிகளில் பொதிந்து

பாதம் கழுவுதலும் அப்பம் பிட்குதலும் ஒன்றே. தண்ணீரும் துண்டும் இன்று நமக்குச் சொல்வது 'நாம் இயேசுவின் பங்காளிகள்!'

நாமும் ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ வேண்டும்.

எனக்கு நிறைய நாளா ஒரு ஆசை...

'கொலுசு அணிந்த கால்களை முத்தமிட வேண்டும்' என்று...

ரொம்ப ஓவரா இருக்கு என்கிறீர்களா!

என் ஆசையைத் தானே சொன்னேன்...

முத்தமிட்டேன் என்றா சொன்னேன்...

ஒருவரின் காலை நாம் தொடும்போது அவரின் வேர்களைத் தொடுகிறோம்.

உன் வேரில் என் விழுதுகளை இணைக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறோம்...

இயேசு நம் வேர்களைப் பற்றிக் கொண்டார்...

நாம் ஒருவர் மற்றவரின் வேர்களைக் பற்றிக் கொள்வோம்...

if life is a game...

Today when I was returning from the university, I had a chance to glance through a book. Let me share the gleanings today:

Title: If Life is A Game, These Are the Rules

Author: Cherie Carter-Scott

I found this short book to be most thought-provoking and one that I will want to revisit--often. There were several memorable passages . . . however, methinks that you'll most enjoy just thinking about the various rules that follow:


Rule One: You will receive a body. You may love it or hate it, but it will be yours for the duration of your life on Earth.

Rule Two: You will be presented with lessons. You are enrolled in a full-time informal school called "life." Each day in this school you will have the opportunity to learn lessons. You may like the lessons or hate them, but you have designed them as part of your curriculum.

Rule Three: There are no mistakes, only lessons. Growth is a process of experimentation, a series of trials, errors, and occasional victories. The failed experiments are as much a part of the process as the experiments that work.

Rule Four: A lesson is repeated until learned. Lessons will repeated to you in various forms until you have learned them. When you have learned them, you can then go on to the next lesson.

Rule Five: Learning does not end. There is no part of life that does not contain lessons. If you are alive, there are lessons to be learned.

Rule Six: "There" is no better than "here." When your "there" has become a "here," you will simply obtain a "there" that will look better to you than your present "here."

Rule Seven: Others are only mirrors of you. You cannot love or hate something about another person unless it reflects something you love or hate about yourself.

Rule Eight: What you make of your life is up to you. You have all the tools and resources you need. What you do with them is up to you.

Rule Nine: Your answers lie inside of you. All you need to do is look, listen, and trust.

Rule Ten: You will forget all of this at birth. You can remember it if you want by unraveling the double helix of inner knowing.

In addition, I liked the inspirational quotes that were utilized to help drive home some of the author's many points . . . among them:

No one can make you feel inferior without your consent.--Eleanor Roosevelt

Life doesn't require that we be the best-only that we try our best.--H. Jackson Brown, Jr.

Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time.--Thomas Edison

Good work.

Congrats to the author!

Sunday, April 6, 2014

கண் கசக்கும் கடவுள்

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் 'டைட்டானிக்' தன் கன்னிப் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிக் கொண்டிருந்த அந்தக் குளிர் இரவு. ஏப்பிரல் 15, 1912. 1500க்கும் மேற்பட்டோர் வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே போராடிக்கொண்டிருந்த போது அனைவரின் உதடுகளிலும் ஓடிய ஒரு பாடலாக 'டைட்டானிக்' திரைப்படத்தில் நாம் காணும் பாடல் இதுதான்: நியரர் மை காட் (என் இறைவன் அருகில் நான்). இந்தப் பாடலை எழுதியவர் சாரா ஃப்ளவர் ஆதம்ஸ். ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக உழைத்தாள். கனவும் நனவானது. லேடி மேக்பத்தாக நடித்து வெற்றி வாகை சூடினாள். ஆனால் அந்த வெற்றி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கை. அந்த நேரத்தில் விவிலியத்தை வாசிக்கத் தொடங்கினாள். பழைய ஏற்பாட்டின் யாக்கோபு கதையோடு தன் வாழ்க்கையை ஒப்பிட்டு, இருள், கனவு, விழிப்பு, நோய், தோல்வி, தனிமை, வலி என அனைத்தையும் இணைத்து அவள் ஒரு மதிய வேளையில் (1841) எழுதிய பாடலே இது:

Nearer, my God, to Thee,
Nearer to Thee!
E'en though it be a cross
That raiseth me.
Still all my song shall be

Nearer, my God, to Thee,
Nearer, my God, to Thee,
Nearer to Thee

... .... ....
... .... ....

ஒவ்வொரு கல்லறை அருகிலும் மனித மனம் பாடும் பாடல் இது.

இலை சருகாகும் என்பது இயற்கை நியதி. தொட்டிலில் படுத்தவர்கள் கல்லறையிலும் படுக்க வேண்டும் என்பதும் இயற்கை நியதி. மரணம் வாழ்வின் எதிரி அல்ல. வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பதே மரணம் தான்.

பெத்தானியாவிற்கு வந்த இயேசுவைப் பற்றி இன்று சிந்திப்போம்.

'உன் நண்பன் லாசர் நோயுற்றிருக்கிறான்!' என்ற இயேசுவுக்குத் தந்தி அனுப்புகிறார்கள். ஆனால் அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அவரின் தாமதம் வியப்பூட்டுகிறது.

இறந்த லாசரின் கல்லறைக்கு அருகில் வருகின்றார்.

நம் வாழ்வில் நாம் ஒவ்வொரு நாளும் கல்லறைக்கு அருகிலேயே சென்று கொண்டிருக்கிறோம். இது எப்படி உண்மையோ அது போலவே கடவுளும் நம் கல்லறைக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை.

கடவுள் நம் அருகில் வருகின்றார். இதுதான் இறப்பு நமக்குச் சொல்லும் செய்தி.

இறப்பு நமக்கு ஒன்றும் பயமல்ல. ஏனெனில் இறந்த பின் நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாதே?

ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் இறப்புக்கள் நிறையவே இருக்கின்றன. நம் தோல்வி, நம் நோய், நம் தனிமை, மற்றவர்கள் நம்மேல் காட்டும் வெறுப்பு, மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல், வறுமை, பசி, அடிமைத்தனம் என ஒவ்வொரு நாளும் நிறைய இறப்புக்களை நாம் சந்திக்கின்றோம்.

இந்த நேரங்களில் நாம் நினைத்துக்கொள்ள வேண்டியது இதுதான்:

இவன் இறந்துவிட்டான்! இவள் தோற்றுவிட்டாள்! என உலகம் கல்லறை கட்டுகிறதா. கவலைப்பட வேண்டாம். இதோ அந்தக் கல்லறைக்கு அருகில் கண்களைக் கசக்கிக் கொண்டு கடவுள் நிற்கின்றார்.

இதை நினைக்கும் போதே மனம் சிலிர்க்கின்றது! புல்லரிக்கின்றது!

To view the song please click here...

Nearer My God, To Thee!

மரணம் ஒரு மந்திரச்சொல்

பெத்தானியாவின் லாசர் உயிர் பெற்ற நிகழ்வை இந்த ஞாயிறு நாம் திருப்பலியில் வாசிக்கின்றோம்.

உயிர் பெற்ற லாசர் வாழ்வை இரண்டாம் முறை வாழும் வாய்ப்பு பெற்றவர்.

முதன்முறை தவறியதையெல்லாம் பின் சரிசெய்திருப்பாரா?

தன் அக்கா, தங்கையிடம் 'இறப்பு' எப்படி இருந்தது என்று சொல்லியிருப்பாரா?

பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார்கள்?

இரண்டாம் முறை அவர் இறந்த போது மக்கள் அவரது அடக்கத்திற்கு வந்திருப்பார்களா? அல்லது 'இவர் மறுபடியும் உயிர்ப்பார்!' என நினைத்திருப்பார்களா?

மரணம்...என்றும் ஒரு மந்திரச்சொல்!

Saturday, April 5, 2014

குடம் சுமக்கும் மகளிர்

அவர்கள் நகரின் மேட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது, இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு, அவர்களிடம், 'திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆம். உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள்...' என்றனர். (1 சாமுவேல் 9:11-14).

சவுல் கழுதையைத் தேடும் நிகழ்வின் மற்றொரு பகுதியைப் பார்ப்போம்.

தண்ணீர் சுமக்கும் இளம்பெண்கள்.

இன்று இளம்பெண்களைச் சந்திக்க வேண்டுமானால் நாம் எங்கே செல்ல வேண்டும்? ஃபேஸ்புக்கிற்குத் தான்.

அன்று ஆண்கள் சந்திக்கும் இடமாக இருந்தது நகர வாயில். பெண்கள் சந்திக்கும் இடமாக இருந்தது கிணறு. இந்த இரண்டு இடங்களில்தாம் தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். 'அது யாரு? இது யாரு? அங்க என்ன நடந்தது? இங்க என்ன நடந்தது?' என்று ஒருவருக்கொருவர் 'டுவிட்' செய்தது நகர வாயிலிலும், கிணற்றடியிலும் தான்.

சவுல் கேட்கும் கேள்வியை விட அதிகமாகவே பதில் சொல்கிறார்கள் பெண்கள்.

சவுல் அரசராகும் நிகழ்வில் வேலைக்காரர், பெண்கள், கழுதைகள் முக்கியத்துவம் பெறுவதாக எழுதுகின்றார் இந்நூலின் ஆசிரியர். விளிம்புகள் மையமாகின்றன.

நம் வாழ்விலும் விளிம்புகள் மையமாகின்றன.

இன்று நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் மற்றவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதை சுயஆய்வு செய்ய நம்மை அழைக்கின்றனர் இந்தக் குடம் சுமக்கும் மகளிர்.

Thursday, April 3, 2014

அவருக்கு நாம் என்ன கொடுப்போம்?

சவுல் தம் பணியாளரிடம், 'சரி, செல்வோம். ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அடியவருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே? என்ன செய்வோம்?' என்றார். பணியாள் சவுலை நோக்கி, 'இதோ! என் கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. இதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார்' என்றான். (1 சாமுவேல் 9:7-9)

இந்த விவிலியப் பகுதியை ஒன்றிற்கு இரண்டு முறை வாசியுங்களேன். நிறைய விஷயங்கள் புலப்படும்.

சவுலும் அவரது வேலைக்காரரும் காணாமற் போன கழுதையைத் தேடி அலைகின்றனர். கழுதை எங்கும் அகப்படவில்லை. 'திரும்பிப் போய்விடலாம்!' என சவுல் சொன்னபோது அவரது வேலைக்காரர் 'கடவுளின் அடியவர் ஒருவரைப் பற்றிக்' கூறுகின்றார்.

இந்த வேலைக்காரர் இப்படி கூறவில்லை என்றால் நிகழ்வு எப்படி மாறியிருக்கும்? சவுல் அரசராயிருப்பாரா? கழுதைகள் கிடைத்திருக்குமா? சாமுவேலைப் பார்த்திருப்பார்களா? கடவுளின் திட்டத்தில் வேலைக்காரருக்கும் பங்கிருக்கிறது. கடவுளின் திட்டத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. எல்லோரும் முக்கியமானவர்கள்.

சவுலும் பெரிய மனசுக்காரர்தான். 'நீ என்னடா சொல்றது!' என்று வேலைக்காரனை மட்டம் தட்டாமல் வேலைக்காரன் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றார்.

கதையின் முக்கியமான பகுதி இனிதான்.

'கடவுளின் மனிதருக்கு என்ன கொடுக்கலாம்?' இது சவுலின் கவலை. கடவுளின் மனிதரை மட்டுமல்ல, எந்த மனிதரைப் பார்க்கச் சென்றாலும் ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்பது என் அம்மாவிடம் நான் கற்ற ஒன்று. ஒரு சிலர் 'பெருமையா' சொல்லுவாங்க: 'நான் யாரைப் பார்க்கப் போனாலும் எதுவும் வாங்கிட்டுப் போக மாட்டேன். நானும் மத்தவங்க வாங்கிட்டு வர்றத விரும்ப மாட்டேன். பொருட்களா முக்கியம். மனுசங்க தானே முக்கியம்'.

ஆனால் இதில் எனக்கு மாற்றுக் கருத்து. கட்டாயம் ஏதாவது வாங்கிக்கிட்டு போகணும். பொருட்களும் முக்கியம்தான். பொருட்கள் என்றால் என்ன? நம் உடலின் நீட்சி (extension) தான் பொருட்கள். சீப்பை வைத்து தலை சீவுகிறோம். ஆதி மனிதர்கள் தங்கள் விரல்களால் தங்கள் தலைகளைக் கோதிவிட்டிருப்பார்கள். இன்று நாம் விரல்களுக்குப் பதில் சீப்பை நீட்சியாகப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் 'சாதக் கரண்டியைப்' பாருங்கள். உள்ளங்கை போலவே இருக்கும். நம் உள்ளங்கையின் நீட்சியே சாதக்கரண்டி. நம் காலின் நீட்சியே நாம் பயன்படுத்தும் சைக்கிள், கார், ஆட்டோ. நம் காது மற்றும் வாயின் நீட்சியே மொபைல் ஃபோன். நாம் ஒருவரைப் பார்க்கப் போகிறோம். பார்த்துவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் நம் நீட்சியாக நாம் அங்கே விட்டு வந்த பொருள் அவர்களோடு இருக்கிறது. வெளிநாடுகளில் தங்களுக்கு யாராவது அன்பளிப்பாகக் கொடுத்ததை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் தங்களுக்குத் தருவது அவர்களின் நீட்சி இன்றும் அதை மற்றவர்களோடு பங்கு போடுவது தவறு என்பதும் அவர்களின் சித்தாந்தம். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது நம்மையை நீட்சியாகக் கொடுக்கிறோம். இது சவுலிடம் நாம் கற்க வேண்டிய ஒன்று.

வேலைக்காரன் தான் இன்று எனக்குப் பிடித்த கேரக்டர். தலைவனிடம் இல்லாத ஒன்று வேலைக்காரனிடம் இருக்கிறது. வெள்ளி. இருப்பது மட்டுமல்லாமல் அதைக் கொடுக்கவும் துணிகிறான் வேலைக்காரன். 'நம்மிடம் உள்ள வெள்ளியைக் கொடுக்கிறோமே! கொடுத்தால் சவுல் திரும்பக் கொடுப்பாரா? அல்லது கொடுக்க மாட்டாரா?' என்ற பயமில்லாமல் விரித்துக் கொடுக்கிறான் (generosity). பல நேரங்களில் தங்களிடம் ஒன்றும் இல்லாதவர்களே வேகமாக தங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள்.

'கொடுக்கும் போது நமக்குக் குறைவதில்லை!' என்பதை எவ்வளவு மௌனமாக அறிந்து வைத்திருக்கிறான் வேலைக்காரன். 'உன் கழுதைதானே. நீ தேடு. கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன?' என்று நினைக்கவில்லை வேலைக்காரன். 'கூலிக்கு மாரடிப்பது' என்ற சொல்லாடல் உண்டு. செய்கின்ற ஒன்றால் எனக்கு என்ன ஆதாயம் என்று கருதாமல் தன்னிடம் உள்ள அனைத்தையும் தரத் துணிகின்றான் பணியாளன்.

என்னைப் போன்ற இறைப்பணியாளர்களுக்கு இந்தப் பணியாள் இன்று ஒரு நல்ல பாடம். என் நேரத்தை, என் அறிவை, என் ஆற்றலை, என் பணத்தை மற்றவர்களோடு பகிரும் போது அது குறைவதில்லை எனவும், பெருகத்தான் செய்யும் எனவும் கற்றுக்கொடுத்துவிட்டார் இந்தப் பணியாளர்.

கொடுக்கும் போது நாம் கடவுளாகிறோம்.

கையைக் கும்பிட்டு வழிபடும் ஆன்மீகத்தைவிட,
கையை விரித்துக் கொடுக்கும் ஆன்மீகமே சிறந்தது
என்பது சவுலின் வேலைக்காரர் சொல்லும் செய்தி.

'பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே.
கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக் கொள்ளாதே'
என்கிறது சீராக்கின் ஞானம் (4:31).

கழுதைகளைத் தேடி

'மூன்று நாட்களுக்குமுன் காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?' சவுல் மறுமொழியாகக் கூறியது: 'இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறியதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?' (1 சாமுவேல் 9:20-21)

இன்று எபிரேய மொழித் தேர்வு எழுதினேன். வினாத்தாளில் வந்த ஒரு கேள்வி மேற்காணும் பகுதியை எபிரேய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பு செய்வது.

படிக்கும் போது வராத சிந்தனை தேர்வில் பதில் எழுதும் போது வந்தது.

சவுலின் வார்த்தைகளில் இருந்து அவரது பின்புலத்தை அறிந்து கொள்ளலாம். சிறிய குலம். சிறிய குடும்பம். கழுதைகளைத் தேடிப் போகிற குடும்பம். அதாவது தங்கள் வாழ்வில் எல்லாமாய் இருந்த கழுதைகள் தொலைந்து போய் தேடுகின்ற சாதாரண குடும்பம்.

ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். விவிலிய வரலாற்றுக் காலத்தில் ஒருவரின் எருதோ, கழுதையோ தொலைந்தால் அது பகைவருடையதாய் இருந்தால் கூட அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். எருது விவசாயத்திற்கும், கழுதை போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டும் இல்லாமல் ஒருவரிடமிருந்து களவு செய்வது மிகப் பெரிய குற்றம். மேலும் அவைகள் வழி தவறி வந்திருந்தால் கூட உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். இன்று நம் கார், பைக்கிற்கு நம்பர் பிளேட் இருந்தது போல அவைகளுக்கும் இருந்திருக்குமா? பின் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்?

சரி நம் நிகழ்விற்கு வருவோம்.

கழுதை தேடி வந்தவர் அரசனாகிறார்.

ஆனால் சவுலின் எண்ணமெல்லாம் இன்னும் கழுதையின் மேலே இருக்கின்றது.

'கழுதையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்!'

சாமுவேலின் வார்த்தைகள் தாம் இன்று நாம் சிந்திப்பவை.

அரசனாகி விட்டால் கழுதைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.

அதாவது, வாழ்வில் நாம் மேலானவற்றை அடையும் போது கீழானவைகளே பற்றிப் பிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது.

ஏணியில் ஏறுகிறோம். கீழே உள்ள படி ரொம்பவும் பிடித்திருக்கிறது என்பதற்காக அங்கேயே நின்று கொண்டிருந்தால் நாம் மேலே ஏற முடியாது. வாழ்வில் மேலானவை வரும் போது கீழானவைகளை விட்டு விடும் மனப்பக்குவம் வேண்டும்.

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சமூக அறிவியல் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு பிரின்சிபல்: 'பிரின்சிபல் ஆஃப் சப்சிடியாரிட்டி'. இதன் பொருள் என்னவென்றால் அவருக்குரிய வேலையை அவரவர் செய்ய வேண்டும். அன்று நான் கற்ற உதாரணம்: மைக்கேல் ஜாக்சனின் வேலை தன் ஷோவிற்கு டிக்கெட் கொடுப்பது அன்று. நடனம் நன்றாக ஆடுவது. அந்த வேலையை அவர் செய்ய வேண்டும். அவர் மட்டும் தான் செய்ய முடியும். டிக்கெட் விற்பனையைப் பற்றி அவர் கவலைப்படக் கூடாது.

சவுலின் வேலை இனி அரசனாய் இருப்பது. கழுதைகளைத் தேடிக் கொண்டிருப்பது அல்ல.

நம்ம வாழ்க்கையில பல நேரங்களில் நாம் கழுதைகளைத் தேடிக் கொண்டே இருந்து விடுகிறோம். இத்தகைய தேடுதல் நம்மைக் கடந்த காலத்தோடே கட்டி வைத்து விடுகிறது.

உடல் சார்ந்த தேவைகள் பூர்த்தியாகிவிட்டதா அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். உள்ளம் சார்ந்த தேவைகள். பின் மதிப்பீடு சார்ந்த தேவைகள். பின் சுயநிர்ணயம் சார்ந்த தேவைகள். பின் மேன்மைக்கான தேவைகள். மதிப்பீடுகளைப் பற்றிய தேவைக்கு வளர்ந்து விட்டு மீண்டும் உடல் சார்ந்த தேவைகளுக்கு இறங்கி வரக் கூடாது.

தூய பவுலடியாரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்' (1 கொரி 13:10).

சரி...ஃபாதர்...உடல் சார்ந்த தேவைகளுக்கு இறங்கி வரக்கூடாதுதான்...ஆனால் உடல் சார்ந்த தேவையே நிறைவேறாத போது என்ன செய்வீங்க...?

பசிக்கு சாப்பாடு இல்லாதவங்ககிட்ட பரலோகம் பத்திப் பேசுவோம்னா எப்படி வருவாங்க...? படிச்சவங்களாச்சே நீங்க. பசிக்கு ஏதாவது செய்யுங்க. அப்புறம் நாங்க பரலோகம் பத்திப் பேச வர்றோம்...

சிந்திக்க வேண்டிய கேள்வி...நாம் அன்றாடம் சந்திக்கும் கேள்வி...

பல வீடுகளில் இன்று தேடுவதற்குக் கழுதைகளே இல்லை...பின் எப்படி...அவைகளைத் தேடி...அரசனாவது என நினைக்கிறீங்களா...?

கழுதைகள் வரும் ... நீங்களும் அரசனாவீர்கள்!

Tuesday, April 1, 2014

ஜன்னல் சலனங்கள்

நேற்றைய தினத்திலிருந்து நாங்கள் ஒரு மணி நேரம் மீண்டும் முன்னால் வந்து விட்டோம். அக்டோபர் 26ஆம் தேதி பின்னால் சென்றோம். இந்த நேரம் மாறுவது ரொம்ப விநோதமான ஒன்று. ஒரு இரவில் எல்லாருமே மாறிவிடுகிறார்கள். உடல்தான் தூங்கவும், சாப்பிடவும் மறுக்கிறது. நேற்றிலிருந்து தான் நாங்கள் ஜன்னலைத் திறந்தும் வைக்கத் தொடங்கிவிட்டோம்.

இவ்வளவு நாள் ஜன்னல் பூட்டியே கிடந்து நேற்று திறந்தவுடன் மனமெல்லாம் ஒரு புத்துணர்ச்சி.

என் சின்ன வயதில் எனக்கு ஜன்னலில் அமர்வது என்றால் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் தானே?

ஒரு ஜன்னலில் நானும், மறு ஜன்னலில் என் தங்கையும் ஏறி ரயில் விளையாடுவோம்.

கதவிற்கும், ஜன்னலுக்கும் என்ன வித்தியாசம்?

ஒன்று பெரிதாய் இருக்கும். மற்றொன்று சிறிதாய் இருக்கும். அவ்வளவுதானா?

கதவைப் போல ஜன்னலும் ஒரு பாஸிபிளிட்டி. கதவு என்பது சுவரில் இருக்கும் வெறும் ஓட்டை அன்று. அது ஒரு பாஸிபிளிட்டி. அதன் வழியாகவே நாம் உள்ளே செல்கிறோம். அதன் வழியாகவே நாம் வெளியே வருகிறோம். வருவதையும், போவதையும் சாத்தியமாக்குவது கதவு. ஜன்னல் அதிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஜன்னல் வழி எவரும் போவதுமில்லை. வருவதுமில்லை. ஆபத்துக் காலம் தவிர!

ஆனால் ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல்கள் அதிகம் வருவது ஜன்னல்கள் வழியாகவே.

பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை.

தெருவில் செல்வோரின் பேச்சு.

எங்கோ சிறுவர்கள் இடும் கூச்சல்.

வெடிச் சத்தம்.

கார் ஹார்ன்.

என நிறைய சத்தங்கள் ஜன்னல் வழியே தான் வருகின்றன. 

ஜன்னல்கள் சில நேரம் ஆபத்தானவை. பேருந்தில் ஜன்னல் வழி கையை நீட்டி கை இழந்தவர்கள். ரயிலின் ஜன்னல் வழி தவறி விழுந்த மொபைல். சோலார்பேட்டையில் இன்றும் ஜன்னல் வழி நடக்கும் நகைத் திருட்டு. 

ஜன்னல் நம்மைப் பாதி தைரியசாலிகளாக மாற்றுகிறது. கதவில் லென்சு பொறுத்தும் வசதி வராத நிலையில் யாராவது கதவைத் தட்டினால் அல்லது காலிங் பெல் அடித்தால் முதலில் ஜன்னலைத் திறந்து அவர் யாரென்று பார்ப்போம். 

மற்றவர்களுக்குத் தெரியாமல் நமக்கு மட்டும் தெரியும்படி பார்க்க ஜன்னல் இடைவெளிகளைப் பயன்படுத்துகிறோம். 

ஜன்னல் நமக்கு எல்லாவற்றையும் காட்டிவிட்டு சலனமில்லாமல் இருக்கும். 

நம்மைச் சுற்றி இருக்கும் நம் உறவுகளும் ஒரு வகையில் ஜன்னல்களே. அவர்கள் வழியே நாம் உலகைப் பார்க்கிறோம். கேட்கிறோம். நுகர்கிறோம். சுவைக்கிறோம். தொடுகிறோம். 

'எங்கே என் கையைத் தொடு பார்ப்போம்' என்று ஒரு குழந்தை ஜன்னலின் வழியே கையை நீட்டிக் கொண்டிருந்தது. 

'எங்கே நீங்களும் தொடுங்கள் பார்ப்போம்!'

இது என் உடல்!

'எடுத்து, உடைத்து, நன்றி செலுத்தி, கொடுத்து' தன் சீடர்களிடம், 'இது என் உடல்!' என்கின்றார் இயேசு. இயேசுவின் உடலை உண்கின்றார்கள். அவர்கள் காட்டுமிராண்டிகள் என உரோமைக் குடிமக்கள் தொடக்கக் கிறித்தவர்களை ஏளனம் செய்தனர். தொடக்கமுதல் இன்றுவரை நம்மை ஒரே உடலாகக் கூட்டிச் சேர்ப்பது இயேசுவின் உடல். எதற்காக இயேசு தன் உடலை நமக்குத் தர வேண்டும்? உடலின் பொருள் என்ன? உயிர் என்பது காண முடியாதது. இந்தக் காண முடியாத, தொட முடியாது உயிர் வாழ்வதற்குத் காண்கின்ற, தொடுகின்ற ஒரு உடல் அவசியம். உடல் நமக்கு ஸ்திரத்தன்மையைத் தருகின்றது. இந்த உடலின் வழியாகவே நாம் இந்த உலகில் கால் ஊன்றுகிறோம். உடல் இல்லையென்றால் நாம் வெறும் ஆவிதான். இந்த உடல் ஒரு அற்புதமான படைப்பு. உடலின் இயக்கம் குறித்து அதிகமாக வியக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (திபா 139).

உடல் வழியாக நாம் நம்மை மற்றவர்களுக்குத் திறக்கின்றோம். இந்த உடல்தான் நம்மை மற்றவரோடு இணைக்கின்றது. இந்த உடலின் வழியாகவே நாம் உள்வாங்குகிறோம். நம்மை இடத்திற்கும், காலத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக வைப்பது இந்த உடல்தான். உடல் என்று நாம் சொல்லும்போது உடலின் வழியாக நாம் செய்யும் மூன்று முக்கியமான வேலைகளை நினைக்க வேண்டும். ஒன்று மொழி. உடல்தான் மொழியைச் சாத்தியமாக்குகிறது. மொழி ஒருவர் மற்றவரை இணைக்கும், பிரிக்கும் ஊடகமாக இருக்கின்றது. நாம் பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல, நம் உடலின் அனைத்து இயக்கங்களும் மொழிதான். இரண்டு நம் பாலியல்பு. உடல் தான் நம்மை ஆண் எனவும், பெண் எனவும் காட்டுகிறது. இந்தப் பிரிவு ஒருவர் மற்றவரைப் பிரித்துப் பார்ப்பதற்கோ, அடிமைப்படுத்துவதற்கோ, பயன்படுத்துவதற்கோ அல்ல. ஒருவர் மற்றவரை நிறைவு செய்வதற்கு. மூன்று வேலை. உடல் தான் நம்மை வேலைசெய்பவர்களாக மாற்றுகிறது. நாம் செய்யும் வேலை நமக்கும், பிறருக்கும், நம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன் தந்து இறைவனோடு கரம் கோர்க்கும் உடன் படைப்பாளிகளாக மாற்றுகிறது. உடல் இல்லையென்றால் நம் ஓவியம், நடனம், இசை என்ற எந்த அழகியலும் வந்திருக்க வாய்ப்பில்லை.

நாம் உண்கின்ற உணவு நம் உடலின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. இயேசுவின் உடலை நாம் உண்கின்றோம் என்றால் இயேசு நம் உடலாக மாற வேண்டும். நம் மொழி, நம் பாலியல், நம் வேலை என அனைத்திலும் இயேசுவின் பிரசன்னம் இருக்க வேண்டும். உடலைப் பல நேரங்களில் சாதி, மதம், கலாச்சாரம், கறுப்பு, வெள்ளை எனப் பிரிவுபடுத்தும் கருவியாக நாம் பார்க்கும் நிலை மாற வேண்டும்.

இயேசு தரும் இரண்டாவது கொடை இரத்தம். இரத்தம் என்றால் வாழ்வு என்பது பழைய ஏற்பாடும், இன்றைய அறிவியலும் நமக்குச் சொல்லும் பாடம். தொழில்நுட்பம், விஞ்ஞானம், அறிவியல் வளர்ந்தாலும், நம் இரத்தத்தின் வகைகளைக் கண்டறிந்தாலும், இன்னும் நம் ஆய்வுக்கூடங்களில் தயாரித்து விட முடியாத ஒரு ஆச்சர்யமாகத்தான் திகழ்கின்றது இரத்தம். பழைய ஏற்பாட்டின் ஆடு, மாடுகளின் இரத்தம் செய்ய முடியாத ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பை தன் இரத்தத்தின் வழியாகச் செய்து முடிக்கின்றார் இயேசு. நிறைவுபெற்ற பாவம் போக்கும் பலியாகத் தன்னையே ஒப்படைத்து விண்ணையும், மண்ணையும் ஒன்றாக்குகின்றார் இயேசு. 'என் இரத்தத்தின் இரத்தமே!' என்று இன்று அரசியல்வாதிகள் நம்மோடு உறவு கொள்வது போலியாக இருக்கின்றது. ஆனால் இயேசுவின் இரத்தத்தில் நாம் கொண்டுள்ள இணைப்பு உண்மையானது. ஒரே இரத்தத்தில் நாம் கலக்கின்றோம் என்றால் பிரிவினைக்கும் ஏற்றத்தாழ்விற்கும் இடமில்லை. ஒருவர் மற்றவரின் செந்நீரையும், கண்ணீரையும் சிந்தவும் நமக்கு உரிமையில்லை. உலகம் இன்று வரை எவ்வளவு பேரின் செந்நீரைச் சிந்தியிருக்கின்றது? காயின் தன் சகோதரன் ஆபேலின் இரத்தம் நிலத்தில் விழக் காரணமானான். ஆனால் புதிய ஆபேலாகிய கிறிஸ்துவின் இரத்தம் அனைவரையும் நிலத்திலிருந்து தூக்கிவிடக் காரணமானது.

இன்று நாம் ஆண்டவரின் பாத்திரத்தில் கையிடுகின்றோம். ஒரே உடல். ஒரே இரத்தம். அவரின் பாத்திரத்தில் கையிடும் உரிமை நமக்கு இருக்கின்றது என்றால் அவரைப் போலவே வாழும் கடமையும் நமக்கு இருக்கத்தானே செய்கின்றது. நாம் அப்படி இல்லாதபோது நம்மையும் தூய பவுலடியார் இப்படிச் சாடுவார்:

'...நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்...இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல...எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்...நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது' (1 கொரி 12:17-34. 10:21).