Monday, September 30, 2013

ஏன் என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?


லாபான் யாக்கோபை நோக்கி: 'நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா? எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்? ... என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்? ... நான் செய்த குற்றம் என்ன? நான் செய்த பாவம் என்ன? ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்? (தொடக்கநூல் 31:27,30,36)

தன் தாய்மாமன் லாபானால் ஏமாற்றப்பட்டு அவரின் மூத்த மகள் லேயாவை திருமணம் செய்து கொள்கின்றார் யாக்கோபு. தொடர்ந்து தான் அன்பு செய்த அவரின் இரண்டாம் மகள் ராகேலுக்காக மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்கின்றார். யாக்கோபின் கடின உழைப்பாலும், புத்திக்கூர்மையாலும், விடாமுயற்சியாலும் லாபான் மிகுந்த செல்வனாகிறார். சொத்து கூடி வரும் நேரத்தில், 'இந்தச் சொத்து நம் தந்தையின் இறப்பிற்குப் பின் யாருக்கு உரிமையாகும்?' என்று விவாதிக்கின்ற லாபானின் புதல்வர்கள், 'ஒருவேளை யாக்கோபு எடுத்துக்கொண்டால் என்ன செய்வது?' என விவாதிக்கின்றனர். இந்த விவாதத்தைக் கேள்விப்படுகின்ற யாக்கோபு தன் மாமனிடமிருந்து தப்பிக்க முடிவெடுக்கின்றார். லாபானின் மனமும் முன்புபோல் இல்லை. 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்!' என்பது போல் யாக்கோபு என்ற பால் லாபானுக்கு புளித்ததல்லாமல், கசந்தே போய்விடுகின்றது. 

தப்பித்துச் செல்வது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த யாக்கோபு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்ல ஆண்டவர் அவரை அறிவுறுத்துகின்றார். தன் மனைவியருடன் ஆலோசனை நடத்திவிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் லாபனை விட்டு (காரான்) தன் சொந்த ஊருக்கு (பெயர்சேபா) புறப்படுகின்றார். யாக்கோபு தப்பிவிட்டதை மூன்று நாட்களுக்குப் பின் கேள்வியுற்ற லாபான் ஏழுநாட்கள் விரட்டிச் சென்று கிலயாதில் அவரைப் பிடிக்கின்றார். 'யாக்கோபிடம் எதுவும் கேட்காதே!' என்று ஆண்டவர் அவரை எச்சரிக்கின்றார். 

கிலயாதில் யாக்கோபும், லாபானும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டவைகளே இக்கேள்விகள். இருவருமே ஒருவர் மற்றவரை ஏதோ வகையில் ஏமாற்றியிருக்கின்றனர். இருவர் மேலும் தவறு இருக்கின்றது. 'சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டதைக் கூட நான் மன்னித்து விடுகிறேன். ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?' என்று கேட்கின்றார் லாபான். இஸ்ராயேல் மக்களின் மரபில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சிற்றாலயமும், அதன் தெய்வமும் இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவரே அந்தச் சிற்றாலயத்தின் பூசாரியாகவும் இருந்தார். ஒரே கடவுள் வழிபாடு, குருத்துவம் என்ற சித்தாந்தமும் இஸ்ராயேல் வரலாற்றில் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வருகிறது. 

குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது லாபானின் மகள் ராகேல். லாபான் அதைத் தேடியபோது அதன்மேல் அமர்ந்துகொண்டு, 'நான் மாதவிலக்காய் இருக்கிறேன். என்னால் எழுந்து நிற்க முடியாது!' என்று பொய்யுரைக்கின்றார் (!) ராகேல். சதித்;திட்டம், ஏமாற்றம், ஓட்டம், தேடுதல், விரட்டுதல், கோபம், பொய், விரக்தி என நகர்கின்றது நிகழ்வு. இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து உடன்படிக்கை செய்துகொள்கின்றனர். யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, நினைவுத்தூணாக நிறுத்தினார். மேலும் தன் உறவினர்களை, 'கற்களைச் சேகரித்துக்கொண்டு வாருங்கள்' என்கிறார். அக்கற்குவியல் அருகே உணவருந்துகின்றனர். அந்த இடத்திற்கு லாபான் 'எகர்சகதுத்தா' (அரமேயத்தில் 'சாட்சியக் குவியல்') என்றும், யாக்கோபு 'கலயேது' (எபிரேயத்தில் 'சாட்சியக் குவியல்') என்றும் பெயரிடுகின்றனர். இரண்டாவது முறையாக லாபான் அந்த இடத்திற்கு 'மிஸ்பா' (எபிரேயத்தில் 'கண்காணித்தல்') என்று பெயரிடுகின்றார். கற்குவியலும், நினைவுத்தூணும் உடன்படிக்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.

இந்தக் கற்களை வைத்து நாம் இன்று சிந்திப்போம். கற்களால் நமக்குப் பயன் உண்டா? கண்டிப்பாக. 'கற்கள்' என்றாலே கற்களின் பயன்பாடுகளான 'கட்டிடம்', 'பாலம்', 'மலை' போன்றவைகளே நம் நினைவிற்கு வருகின்றன. ஒரு சில நேரங்களில் கற்கள் நமக்கு பயம் தருகின்றன: 'நமக்கு எதிரே வரும் பைத்தியக்காரரின் கையில் இருக்கும் கல்,' 'அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் மருத்துவர் கண்டுபிடிக்கும் நம் கிட்னி கற்கள்' - இந்தக் கற்கள் நமக்குப் பயம் தருகின்றன. இன்னும் சில நேரங்களில் கற்கள் நமக்கு எரிச்சலைத் தருகின்றன: 'நாம் வெளியே நடந்து செல்லும் போது நம் செருப்புகளுக்குள் நுழைந்து கொள்ளும் கற்கள், நாம் நடைப்பயிற்சி செய்யும் போதும் அல்லது ஓடும் போதும் நம் ஷூக்களுக்குள் நுழைந்து கொள்ளும் கற்கள்' - இந்தக் கற்கள் நமக்கு எரிச்சலைத் தருகின்றன.

நம் வேலையிலும், வியாபாரத்திலும் ஏன் நாம் பின்தங்கி விடுகின்றோம்? ஏன் திருமணங்கள் கசந்து விடுகின்றன? ஏன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலாய் மாறுகின்றனர்? ஏன் நட்பு புளித்து விடுகின்றது? எல்லாவற்றிற்கும் காரணம் 'நம் செருப்பில் ஒளிந்திருக்கும் கல்!'. 'நாம் ஏறிக்கொண்டிருக்கும் பெரிய மலை நமக்கு சோர்வைத் தருவதில்லை. மாறாக, நம் கால் செருப்பில் ஒளிந்திருக்கும் ஒற்றைக் கல்லை நமக்கு சோர்வைத் தருகிறது' என்ற வார்த்தைகளோடு தொடங்கும் ஒரு மேலாண்மையியல் நூல் 'The Pebble in the Shoe: 5 Steps to a Simple and Confident Life'. இதை எழுதியவர் 'Jim Fannin'. ஒரு சில கற்கள் நம் அலுவலக வேலைகளிலும், ஒரு சில கற்கள் நம் படிப்பிலும், ஒரு சில கற்கள் நம் நட்பிலும், ஒரு சில கற்கள் நம் குடும்ப வாழ்விலும் ஒளிந்து கொண்டு நமக்கு அசௌகரியத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. சின்ன அசௌகரியம்தானே என்று நாம் பொறுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினால், கொஞ்ச நேரத்தில் அது நம் கால்களைக் கிழித்து விடுகின்றது. சில நேரங்களில் நாம் அணியும் செருப்பையும் பதம் பார்த்து விடுகின்றது. 

'ஏமாற்றினாய் - ஏமாற்றப்பட்டேன்!' - இந்த இரட்டைக் கற்கள் யாக்கோபு மற்றும் லாபானின் காலணிகளுக்குள் நுழைந்து கொள்கின்றன. உடன்படிக்கையின் கற்குவியலுக்கு முன் தங்கள் காலணிகளில் ஒளிந்த கற்களை வெளியே எடுக்க முன்வருகின்றனர். காயங்கள் மறைந்து மன்னிப்பு பிறக்கின்றது. 

நம் வாழ்வில் சில கற்கள் நம் சின்ன வயசில இருந்தே நம்மைத் தொடர்கின்றன. சின்ன வயசு ஏமாற்றம், மனக்காயம், தவறான வழிகாட்டுதல், அவமானம், குற்றவுணர்வு போன்றவைகளும், பின் நம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளும், சில நேரங்களில் நம் சொந்தங்களும், உறவுகளும் கற்களாய் மாறி நம்மை உறுத்திக் கொண்டே இருக்கின்றன. 

முதலில் கற்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். அந்தக் கற்கள் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். பின் அவைகளைக் களைய முனைய வேண்டும். இந்தக் கற்களை நாம் எப்படிக் களைவது? வாழ்வை எப்படி இனிமையாக்குவது? Jim Fannin சொல்லும் வழிகள் இவை:

Step 1: Be like the palm tree - sway with the hurricane but don't break.

Step 2: Learn to be like a light switch - know how to turn off the negative and turn on the positive.

Step 3: Learn to reboot - when you are feeling overwhelmed it is time to pause and reboot.

Step 4: Find a mentor - someone who will bring the best out of you.

Step 5: Learn the most powerful four-letter word: NEXT

சின்னஞ்சிறியவைகளே நம் வாழ்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சின்னஞ்சிறியவைகளில் கவனமாய் இருப்போம்! பெரியவற்றைச் சாதிப்போம்!

'ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்?'

'ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?'

Sunday, September 29, 2013

என்னை ஏமாற்றியது ஏன்?


அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: 'நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலை செய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்?' என்றார். அதற்கு லாபான்: 'மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை. ஆகையால் நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்' என்றான். (தொடக்கநூல் 29:25-26)

'நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்?' என்று லாபானைப் பார்த்துக் கேட்கின்றார் யாக்கோபு.

இதே கேள்வியைத்தான் இதற்கு முந்தைய பகுதியில் ஏசா தன் தந்தை ஈசாக்கைப் பார்த்துக் கேட்கின்றான். இருவரின் பின்புலத்திலும் இருப்பது தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற விரக்தியும், கோபமும், இயலாமையுமே.

தன் சகோதரனை இருமுறை ஏமாற்றுகின்ற யாக்கோபு, தன் தாய்மாமன் லாபானால் இருமுறை ஏமாற்றப்படுகின்றார். 'பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் தாமே வரும்!' என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப தான் ஒருபுறம் செய்த செயல்களுக்கு மறுபுறம் கைம்மாறு பெறுகின்றார் யாக்கோபு.

தலைமகன் உரிமையை வைத்து தன் அண்ணனை ஏமாற்றினார் யாக்கோபு. தலைமகள் உரிமையை வைத்து தன் மருமகனை ஏமாற்றுகின்றார் லாபான். 

தலைமகள் இருக்கும்போது இளையமகள் திருமண உரிமையைப் பெறுதல் வழக்கமன்று என்று பாரம்பரியத்தைத் துணைக்கு இழுக்கிறார் லாபான்.

இந்த நிகழ்வில் எனக்கு இருக்கும் மிகப்பெரும் நெருடல் இதுதான். 'யாக்கோபு ராகேலை விரும்பினார்' எனவும் 'ராகேலை முன்னிட்டு வேலை செய்தார்' எனவும் 'ராகேலின் காதலால் ஆண்டுகளும் நாட்களாகத் தோன்றின' எனவும் யாக்கோபு – ராகேல் காதலைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது (காண். தொநூ 29:17,20). அப்படியிருக்க, ராகேலுக்கும் லேயாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் யாக்கோபு எப்படி உடலுறவு கொண்டார்? 'குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த' கதையாக அல்லவா இது இருக்கிறது. இவள் தன் காதலியா அல்லது வேறு பெண்ணா என்று கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அவரின் பார்வை மறைந்திருந்ததா? அதிகாலையில் தான் அவள் லேயா என்பதைக் கண்டுகொள்கின்றார். விதி கண்ணை மறைத்து விட்டதா? தெரியவில்லை. 'நாம் ஏமாற்றினோம் என்றால் எப்படியாவது, எவ்வளவு அலர்ட்டாக இருந்தாலும் நாமும் ஏமாற்றப்படுவோம்!' என்பதே இங்கு தெளிவாகிறது. 'வாள் எடுத்தவன் வாளால் மடிவான்' என்றால் 'ஏமாற்றுகிறவனும் ஏமாற்றப்படுவான்!'. இதுதான் பிரபஞ்சத்தின் விதி. நாம் செய்யும் நன்மை நம்மிடமிருந்து புறப்பட்டு நலமாக நம்மிடமே திரும்பி வருகிறது. நாம் செய்யும் தீமையும் அவ்வண்ணமே நம்மை நோக்கித் தீமையாகத் திரும்புகிறது.

பவுலோ கோயலோ அவரின் தந்தையின் இறப்பைப் பற்றி இப்படி எழுதுகின்றார்: என் அப்பா ஒரு நல்ல மனிதர். வறுமையில் வாடிய போதும் யாராவது உதவி என்று வந்தால் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது உதவி செய்வார். நான் அடிக்கடி அவரைக் கண்டித்ததுண்டு. ஏன் இப்படிச் செய்கிறார் என்று புலம்பியதுண்டு. அவர் நான் புலம்பியபோதெல்லாம் சொல்வார், 'நாம் இன்று செய்வது நாளைக்கு நமக்குத் திரும்ப வரும்' என்று. தான் இறக்குமுன் தன் இறுதியாசையாக அவர் சொன்னது: 'நான் இறந்தபின் என்னைப் புதைக்க வேண்டாம். என்னை எரித்து விடுங்கள். எரித்த பின் என் சாம்பலை நான் அடிக்கடி ரசிக்கும் பசிபிக் கடற்கரை ஓரத்தில் தூவி விடுங்கள். அப்படித் தூவும் போது எனக்குப் பிடித்த இந்தப் பாடலை கேசட் பிளேயரில் போடுங்கள்'. ஒரு நாள் அவர் இறந்து விட்டார். அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டி அவரின் சாம்பல் அடங்கிய குடுவை, கேசட் பிளேயர், பேட்டரிகள் எடுத்துக்கொண்டு நானும் என் உறவினர்களும், நண்பர்களும் சென்றோம். அது மாலை நேரம். இருட்டிக் கொண்டிருந்தது. கடற்கரையில் யாருமில்லை. சாம்பலை எடுத்துத் தூவுவதற்காக குடுவையைத் திறந்தோம். குடுவையின் மூடியைத் திறந்ததும், உள்ளே மற்றொரு மூடி screwவால் டைட்டாக வைக்கப்பட்டிருந்தது. Screw driver இல்லாமல் எப்படித் திறப்பது என்று பலரும் முயற்சித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கம் ஒரு பிச்சைக்காரர் வந்தார். அவரின் கையில் ஒரு screw driverஇருந்தது. எங்களின் முயற்சியைப் பார்த்துவிட்டு, 'இது பயன்படுமா பாருங்கள்' என்றார். 'இந்த மனிதர் ரொம்ப நல்லவராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இது இப்போதுதான் நான் வரும் வழியில் என் காலில் தட்டியது' என்று சொல்லிவிட்டு வழி நடந்தார். அப்போதுதான் எங்கள் தந்தையின் வார்த்தைகளின் உண்மை புரிந்தது: 'நாம் இன்று செய்வது ஒருநாள் நம்மிடமே திரும்பி வரும்!'

நாம் தினமும் நம்மிடமிருந்து மற்றவருக்குக் கொடுக்கும் ஒரு பொருள் பணம். கைமாற்றாகவோ, கொடையாகவோ, நாம் வாங்கும் பொருட்களுக்காகவோ, நாம் பயன்படுத்தும் சேவைக்காகவோ என தினமும் பணம் நம்மிடமிருந்து வெளியே போகின்றது. பிச்சைக்காரர், ஆட்டோ, பேருந்து, கோயில் உண்டியல், சம்பளம் என பணத்தை நாம் மற்றவருக்கு ஏதோ ஒரு வகையில் தினமும் கொடுக்கின்றோம். அப்படிக் கொடுக்கும்போது அதை ஆசீர்வதித்துக் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மேலாண்மையியல் அறிஞர்கள். நாம் திட்டிக் கொண்டே கொடுக்கும்போதும், வேண்டா வெறுப்பாகக் கொடுக்கும்போதும் பிரபஞ்சத்தின் வலைப்பின்னலை நாம் சேதப்படுத்திவிடுகிறோம். நாம் கொடுக்கும்போது 'இந்தப் பணம் நலமே உன்னிடம் செல்லட்டும்!' என்றும் 'இந்தப் பணத்திற்காக நன்றி!' 'இந்தப் பொருளுக்காக, சேவைக்காக நன்றி!' என்று நாம் சொல்லும் போது அது நம்மிடம் நன்றியாக, ஆசீராகத் திரும்புவதோடு, நேர்மறையான எண்ணத்தையும் நம்மிடம் வளர்க்கின்றது.

பிரபஞ்சம் ஒரு சக்கரம். சுற்றிக்கொண்டே இருக்கும். இன்று மேலிருப்பது நாளை கீழ் வரும். இன்று கீழ் இருப்பது நாளை மேல் செல்லும். நாம் கொடுப்பது திரும்பும். நாம் எடுப்பது பறிபோகும்!

'என்னை ஏமாற்றியது ஏன்?'

Saturday, September 28, 2013

ஒன்றும் வாங்காமல் வேலை செய்யலாமா?


அதன்பின் லாபான் யாக்கோபை நோக்கி, 'நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்' என்றான் ... யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், 'உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்' என்றார். அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் இராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால் அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது. (தொடக்கநூல் 29:15,18,20)

யாக்கோபு தன் தாய்மாமன் வீட்டிற்கு வந்து விட்டார். விருந்து உபசாரங்கள், முத்தங்கள், ஆரவாரங்கள், குசலம் விசாரித்தல் அனைத்தும் முடிந்து விட்டன. எபிரேய மற்றும் தொடக்ககால மத்திய கிழக்கு வழக்கப்படி விருந்தினர்கள் மூன்று நாட்கள் மட்டும் இலவசமாகத் தங்கலாம். அதன்பின் அவர்கள் தங்க வேண்டுமெனில் அந்த வீட்டாரோடு வேலை செய்ய வேண்டும். யாக்கோபு ஒரு மாத காலம் தங்கிய போதே தன் தாய்மாமன் வீட்டில் வேலை பார்க்கத் தொடங்கியிருக்கலாம். இப்போது அவரின் உழைப்பைப் பார்க்கின்ற தாய்மாமன் அவருக்குத் தேவையான சம்பளத்தைக் கோருமாறு கேட்கின்றார். சம்பளமாக அவரின் மகளைக் கேட்கின்றார் யாக்கோபு. இதுதான் இன்றைய கேள்வியின் பின்புலம்.

'மருந்தும் விருந்தும் மூன்றுவேளை' என்பது நம் பழமொழி. ஆனால் முப்பது நாட்கள் விருந்தளிக்கிறார் லாபான். 'இவன் இங்க எதற்கு வந்தான்?' 'இன்னும் எவ்வளவு நாள் இருப்பான்?' 'ரெண்டு பொண்ணுங்க வேற இருக்காங்களே!' 'இவன்ட்ட இருந்து நம்ம பொண்ணுங்கள காப்பாத்தறதா?' அல்லது 'நம்ம பொண்ணுங்ககிட்ட இருந்து இவனக் காப்பாத்தறதா?' 'எந்நேரமும் கத்தியில நடக்கிற மாதிரியே இருக்கு!' 'இவன்ட்ட எப்படிக் கேட்பது?' – என அத்தனைக் கேள்விகளையும் மனசுக்குள்ளே கேட்டுக்கொண்டு, 'எவ்வளவு சம்பளம் வேண்டும்?' என்று மட்டும் வாயால் கேட்கிறான். 'எவ்வளவு நாள் இங்க இருப்பீங்க மாப்ள!' என்பதன் அழகுப்பதம்தான் 'எவ்வளவு சம்பளம் வேண்டும்?' என்ற கேள்வி. 

நம்ம வீடுகளிலும் பார்க்கலாம்;. தேவையில்லாத விருந்தினர் அல்லது உறவினர் வந்து விட்டால் அந்த வீட்டார் ஜாடை மாடையாகப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பர். நான் ஒருமுறை ஒரு பங்கில் ஹவுஸ் விசிட் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வீடாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்ற போது மணி மாலை 5:30. அப்பொழுதுதான் அவ்வீட்டுத் தலைவி தன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியிருப்பார் போலும். 'சாயங்காலம் பூசை இருக்கா ஃபாதர்?' என்றார். 'இருக்கு' என்றேன். 'எத்தனை மணிக்கு?' என்றார். '6:00 மணிக்கு' என்றேன் 'என்ன டீச்சர், நீங்க அடிக்கடி பூசைக்கு வருவீங்க. நீங்க புதுசா கேட்கிறீங்களே?'ன்னு கேட்கப் போகும்போது, என் மனசு சொன்னது: 'டேய் மாங்கா...அவங்க பூசைக்காக டைமிங் கேட்கல. நீ எப்போ கிளம்புவன்னு கேட்கறதுக்காக டைமிங் கேட்கறாங்க!' உடனே சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

கேள்விகள் கேட்கப்படும்போது உடனே பதிலைச் சொல்லிவிடக் கூடாது. ஏன்? எதற்கு? என்று கொஞ்சம் கிரிமினலாக யோசிக்க வேண்டும். யாக்கோபும் யோசித்தே சொல்கின்றார். அக்கா இருக்கும்போதே தங்கச்சிக்கு கொக்கி போடுகின்றார். ராகேலைப் பற்றிச் சொல்லும் பைபிள் 'வடிவழகும், எழில்மிகு தோற்றமும்' உடையவள் என்கிறது. ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பற்றி விளக்கும் இடத்திலும் இதே வார்த்தைகள்தான் உள்ளன. விலக்கப்பட்ட கனி 'அழகும், எழில்மிகு தோற்றமும்' கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்' இருக்கிறது. ஏற்கனவே சொல்லியிருக்கிறோம் - ஏதாவது 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாகத் தெரிந்தால்' – தம்பி, கொஞ்சம் கவனம். ஆழம் பார்த்துக் காலை விடுங்க!

யாக்கோபுக்குக் களிப்பூட்டுகிறது என்று தெரிந்து அதையே பயன்படுத்தி அவரை ஏமாற்றத் துணிகின்றார் லாபான். நம் மனித வரலாற்றில் நாம் இதுவரை கண்ட போர், இரத்தம், கண்ணீர், இறப்பு, நாடுகடத்தல், ஓட்டம், சிறை என அனைத்திற்கும் காரணம் இதுதான் - 'கண்களுக்குக் களிப்பூட்டியது!' 

யாக்கோபு தன் சம்பளமாக ராகேலைக் கேட்கின்றார். இதே நடைமுறை இன்றும் மத்திய பிரதேசத்தின் காண்டுவா என்ற நகருக்கருகில் வசிக்கும் ஒரு பழங்குடி இன மக்களிடம் உள்ளது. 'பெண் எடுக்க விரும்பும் மணமகன் பெண் எடுக்கும் வீட்டில் அந்தப் பெண்ணிற்காக மூன்று ஆண்டுகள் உழைக்க வேண்டும்'. இதுவும் ஒருவகையான 'வரன் தட்சணை' (வரதட்சணை) – குரு தட்சணை போல! தன் உழைப்பைக் கொடுத்துத் தன் மனைவியை உரிமையாக்கிக் கொள்ள விழைகிறார் யாக்கோபு. 

உழைப்பும், அன்பும் இணைவதே திருமணம் என்பதை யாக்கோபின் பதிலும், அவரின் செயலும் நமக்குச் சொல்கின்றது. 'ஆண்டுகள் நாட்களாகத் தெரிகின்றன!' – ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த 'தியரி ஆஃப் ரெலடிவிட்டியை', சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டுபிடித்து விட்டார் யாக்கோபு. 

ஆண்டுகள் நாட்களாகத் தெரிவது காதலில். 

நாட்கள் ஆண்டுகளாகத் தெரிவது காதலர்களின் பிரிவில்.

நாம் சிந்துகிற வியர்வைத்துளிகள் நாம் அன்பு செய்யும் ஒருவருக்காக என்றால் பெரிய கஷ்டங்களும் எளிதாகவே தெரிகின்றன. 

நம் வாழ்க்கையின் மீது நமக்கு அன்பிருந்தாலும் நம் வாழ்க்கை 'dragging' ஆக இருக்காது. அடுத்தடுத்துக் கடந்து போய்க்கொண்டே இருக்கும்.

வாழ்வையும், நம் வாழ்வின் வாழ்வாக இருப்பவர்களையும் அன்பு செய்வோம்.

அந்த அன்பே அனைத்தையும் வெல்லும்!

Friday, September 27, 2013

நீ என் எலும்பும் சதையுமல்லவா?


தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார். லாபான் அவரிடம், 'நீ என் எலும்பும் சதையுமல்லவா?' என்றான். அவனுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். (தொடக்கநூல் 29:13-14)

'என் எலும்பும் சதையும்!'

ஏதேன் தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும் ஆனவள்' என்றான். (தொநூ 2:22-23)

லாபானின் வார்த்தைகள் ஆதாமின் வார்த்தைகளை ஒத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒருவர் மற்றவரின் நெருக்கத்தைக் காட்டும் சொல்லாடல் 'flesh and blood'. ஆனால் எபிரேயமும், நம் தமிழும் 'எலும்பும் சதையும்' என்றே குறிப்பிடுகின்றது. நாம் ஒருவர் மற்றவருக்குள்ள நெருக்கத்தை அவர்கள் 'எலும்பும் சதையும் போல' அல்லது 'நகமும் சதையும் போல' (நாம் வெட்டிவிடக்கூடிய எலும்புதானே நகம்) என்கின்றோம். 

எலும்பும் - சதையும்.

மற்றொரு வகையில் பார்த்தால் ஒரு மனிதரின் உடலை 'எலும்பும், சதையும்' என நாம் பிரித்துப் பார்க்கின்றோம். வலியது எலும்பு. மெலியது சதை. வளைந்து கொடுக்காதது எலும்பு. வளைந்து விழுவது சதை. எலும்பு இல்லாத சதை வெறும் ஆடை போன்றது. துவைத்துக் கயிற்றில் தொங்க விட்டுவிடலாம். சதை இல்லாத எலும்பு வெறும் ஸ்டான்ட் போன்றது. 

மனிதர்களின் மனதைப் பற்றி 'அர்த்தமுள்ள இந்துமதத்தில்' குறிப்பிடும் கண்ணதாசன், ஆணின் மனத்தை வலுவான கல் என்றும், பெண்ணின் மனத்தை நெகிழ்ந்து போகும் களிமண் என்றும் வர்ணிக்கின்றார். திருமண பந்தத்தில் இணையும் இருவரும் இப்படி இருந்தால்தான் இல்லறம் என்ற வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். கணவனும் கல்லாய் இருந்து, மனைவியும் கல்லாய் இருந்தால் வீடு சரிந்து விடும். கணவனும் களிமண்ணாய் இருந்து, மனைவியும் களிமண்ணாய் இருந்தால் வீடு கரைந்து விடும். 

ஒவ்வொரு மனிதரிடமும் 'ஆண்மை' (கடினம்) உண்டு, 'பெண்மை' (நெகிழ்வு) உண்டு. ஆண்மை என்ற எலும்பு, பெண்மை என்ற சதையைத் தேடுகின்றது. பெண்மை என்ற சதை ஆண்மை என்ற எலும்பைத் தேடுகின்றது. மனிதரின் படைப்பைப் பற்றிப் பேசுகின்ற கிரேக்கப் புராணம், 'ஆணும் பெண்ணுமாக மனிதரைப் படைக்கின்ற கடவுள் இருவரின் ஆற்றல், வீரம், அன்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டு சரிபாதியாக வெட்டிவிடுகின்றார். அன்று முதல் ஒரு பாதி மற்றொரு பாதியைத் தேடிக் கொண்டே இருக்கின்றது' என்று சொல்கின்றது. இந்தத் தேடல் நிறைவேறும் தருணம்தான் திருமணம். அப்படின்னா திருமணம் முடிக்காதவங்க? என்று கேட்காதீங்க.

'புள்ளியும் கோடும் - கணிதம் வழியாக ஒரு காதல்' என்ற ஒரு குறும்படம் பார்த்தேன் (பார்க்கத் தூண்டியது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்). கணிதத்தை மிக எளிய காதல் கதையாக எடுத்துள்ளார்கள். அடித்துப் போட்டாலும் கணக்கு வராத நம் மாணவர்கள் இதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். ஒரு புள்ளியைக் காதலிக்கும் நேர்கோட்டின் கதை என்ற கற்பனையே இக்குறும்படம். தத்துவம், தேடல், விஞ்ஞானம், கவிதை, மாற்றம், உளவியல் சிக்கல், கடவுள் என்ற எந்தக் கோணத்திலும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

புள்ளி ஒன்றின் வசீகரத்தில் மயங்கி அதைக் காதலிக்கத் தொடங்குகிறது ஒரு நேர்கோடு. புள்ளிக்கோ கோட்டினைப் பிடிக்கவேயில்லை. கோடு என்பது மந்தமான, செயலற்ற, பிடிவாதமான ஒன்று என நினைக்கிறது புள்ளி. கோடாக இருப்பதில் தனித்துவமில்லை என்று அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது புள்ளி. புள்ளியைக் கவர்வதற்காக பல்வேறு வடிவங்களில் தன்னை வளைக்கின்றது கோடு. முன்பின் ஆடுகின்றது. தன்னையே வளைக்கின்றது. எப்படியாவது புள்ளியை கரெக்ட் பண்ண நினைக்கிறது கோடு. இந்த விளையாட்டில் புள்ளி என்பது அசைவில்லாத, தன்னை மையப்படுத்திக் கொள்கின்ற உளவியல் கூறு என்றும், கோடு என்பது நமது மாறக்கூடிய தன்மை என்றும் நமக்குப் புரிகிறது. மாறாத கடினத்தன்மை புள்ளி. மாறுகின்ற நெகிழ்வுத்தன்மை கோடு. இந்தக் காதல் நாடகத்தின் முடிவில் புள்ளி கோட்டினை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அத்துடன் கோட்டின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. 

கணிதத்தைப் பற்றி நாம் புரிந்துகொண்டாலும் வாழ்வின் தத்துவங்களையும், உறவின் சித்தாந்தங்களையும் அழகாகக் காட்டுகின்றது இக்குறும்படம்.

கோடு என்றால் நாம் எப்போதும் 'அடிஸ்கேலால்' நேராக வரையும் கோட்டையே நினைக்கின்றோம். வளைவாய் இருப்பதும் கோடுதான். மனிதர்களில் 'நேராக' இருப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல. 'வளைவு, சுளிவு'களோடு இருப்பவர்களும் மனிதர்கள்தான். நம்மில் ஒரு பகுதி மாறாத புள்ளிபோல இருக்கும். மற்ற பகுதி மாறிக்கொண்டேயிருக்கும் கோடுபோல இருக்கும். புள்ளிதான் எலும்பு. கோடுதான் சதை. இரண்டும் இணைந்தால்தான் வாழ்க்கை சாத்தியம்.

நம்மில் இருக்கும் இரண்டையும் ஏற்றுக்கொள்வோம். இரண்டும் சேர்ந்தவர்கள்தாம் நாம். 

இதே நெருக்கத்தை நம் உறவுகளில் தேடுவோம். 'நீயா – நானா' என்ற போட்டி உறவு அல்ல. 'நீயும் நானும்' என்ற கைகுலுக்கலே உறவு. நம் நெருக்கமான உறவுகள் பூர்வ ஜென்ம உறவுகள். சாப்பிட்டுவிட்டுக் கைகழுவும் நேரத்தில் கைவிட்டுவிட நினைக்க வேண்டாம்!

'நீ என் எலும்பும் சதையுமல்லவா?'

Follow the link to view the video:


Thursday, September 26, 2013

அவர் நலம்தானா?


யாக்கோபு இடையர்களை நோக்கி, 'சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என, அவர்கள்: 'நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்' என்றார்கள். மீண்டும் அவர், 'நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவர்கள், 'அவரை எங்களுக்குத் தெரியும்' என்றார்கள். 'அவர் நலம்தானா?' என்று யாக்கோபு கேட்க, அவர்கள் 'ஆம்' அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்' என்றார்கள். (தொடக்கநூல் 29:4-6)

இரண்டு மாதங்களுக்கு முன்பாக இதே நாளில் தந்தி சேவையை நிறுத்தியது இந்தியா. இந்த இறுதி நாளில் பலர் வாழ்த்துத் தந்திகளை அனுப்பி இந்த நாளைக் கொண்டாட தபால் அலுவலகங்களிலும், தந்தி அலுவலகங்களிலும் குவிந்தனர். தந்தி சேவையை நிறுத்துவதற்கான காரணம் என்ன? பயனாளர்கள் அல்லது நுகர்வோர்கள் குறைந்து விட்டனர். எதற்காக? பெருகிவிட்ட மின்னஞ்சல், குறுந்தகவல், அலைபேசி தந்திக்கான தேவையை அறவே குறைத்து விட்டது. 'தந்தி' என்றால் பயம். ஒருவரின் மரணச்செய்தி அறிவிக்கவே தந்தி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. எங்க ஊரில் யாராவது ஒருவருக்கு தந்தி என்று தபால் நிலையத்திலிருந்து தந்தி வந்தால் ஊரே தபால் அலுவலகத்தைச் சுற்றிக் கூடிவிடும். தந்தியில் நலமான தந்தியும் உண்டு. வாழ்த்துத் தந்திகளும் உண்டு. 

இன்றைய தலைமுறை மஞ்சள் கலர் போஸ்ட் கார்ட், மஞ்சள் கலர் என்வலப், நீலமும் அல்லாமல் பச்சையும் அல்லாமல் இடைப்பட்ட கலரில் பிரிண்ட் ஆகி வரும் இன்லெண்ட் லெட்டர், வெள்ளைக் கலர் கவரில் நீலம் பச்சை என ஓரங்கள் கொண்ட ஏர்மெயில் கவர்களைக் கண்டிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. 'காதலித்துப் பார் தபால்காரன் கடவுளாவான்' என்று வைரமுத்து எழுதக் காரணம் இந்தத் தபால்கள் கொண்டு வந்த நெருக்கம்;தான். மணியார்டர் ஃபார்மில் என் விடுதி சாப்பாட்டுப் பணத்திற்காக மாதம் 75 ருபாய் அனுப்பி, 'தகவலுக்கான இடம்' என்ற பகுதியிலும் இன்லென்ட் லெட்டர் அளவிற்கு நுணுக்கமாக ஒரு துளி இடமும் விடாமல் தகவலை நிரப்பி அனுப்புவார் என் அம்மா. 75 காசுகள் கொடுத்து இன்லெண்ட் லெட்டர் வாங்க முடியாத அம்மா இந்த 75 ருபாய்க்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோன்னு நினைக்கும்போது அழுகையே வந்துவிடும். 

அந்த நுணுக்கமான எழுத்துக்களிலும், 'எங்கள் வீட்டின் பூனையின் நலம், எங்கள் பக்கத்து வீட்டு பத்மா அக்கா கோழி குஞ்சு பொறித்து, அந்தக் கோழிக்குஞ்சுகளின் நலம், அதில் கறுப்பு எத்தனை, வெள்ளை எத்தனை, பழுப்பு எத்தனை, பூக்காரர் காலையில் பூ கொண்டு வந்தது, அவரது பையன் என் முன்னாள் வகுப்புத்தோழனின் நலம்' என அனைத்தையும் காணலாம். 'நான் நல்லா இருக்கிறேன்' அப்படின்னு நாம சொல்ற வார்த்தைகள் மற்றவர்களுக்கும் நலம் கொடுக்கும் என்பதை உணர்த்தியது இந்த லெட்டர்தான்.

எந்த லெட்டர் எழுதும்போதும் எங்கள் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது இதுதான்: 'நலம். நலமறிய ஆவல்!' இதையே, 'நலம். நாடுவதும் அதுவே!', 'நீ இங்கு நலம். நான் அங்கு நலமா?' என்றெல்லாம் இரசித்து எழுதிய நாட்களும் உண்டு. லெட்டர் வரும் என்பதற்காகக் காத்திருந்த பொழுதுகள், கண் விழித்த இரவுகள் ஏராளம். 'மூன்று நாள் அரசு விடுமுறை' என்று பள்ளிக்கூடத்தில் பெற்ற மகிழ்ச்சி, ஹாஸ்டலுக்குப் போனவுடன் தொலைந்து விடும் - ஐயோ மூன்று நாள் லெட்டர் வராதே. இதற்காகவே நான் அரசு விடுமுறைகளைச் சபித்திருக்கிறேன்.

இன்றைக்குள்ள இமெயில், எஸ்.எம்.எஸ் என்னதான் வேகமாகச் செய்தியைக் கொண்டு சேர்த்தாலும் அதில் ஏனோ நெருக்கம் இருப்பதாகவே எனக்குத் தெரிவதில்லை. 'தான் எதுவுமே டைப் செய்யாமல், தனக்கு வரும் இமெயில் மற்றும் குறுந்தகவல்களை மற்றவர்கள் எனக்கு 'ஃபார்வர்ட்' செய்யும்போது இன்னும் அதிகக் கோபம் வரும். ரெண்டு வார்த்தைகள் சொன்னாலும் சொந்தமாகச் சொல்ல வேண்டும். 

'உடனுக்குடன்' என்ற அடிப்படையில் இமெயில் ஓகே. ஆனால், 'உணர்வுக்குணர்வு' என்ற அடிப்படையில் 'மஞ்சள்கலர் போஸ்ட் கார்டுதான்'.

சரி எதுக்கு இந்த இமெயில், போஸ்ட் கார்டு? எல்லாம் இந்த ஒற்றை வார்த்தைக்காகத் தான்: 'நலமா?'

'அவர் நலம்தானா?' என்று தன் இன்றைய தாய்மாமனையும், வருங்கால மாமனாரையும் தொட்டும் தொடாமல் நலம் விசாரிக்கின்றார் யாக்கோபு. 

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போதும், ஒருவர் மற்றவருக்குக் கடிதங்கள் எழுதும்போதும் நாம் விசாரிப்பது: 'நல்லா இருக்கீங்களா?' 

இன்றைய உளவியல் ஆய்வாளர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் நாம் மற்றவரை 'நலம்' விசாரிக்கும்போது, 'நல்லா இருக்கீங்களா?' என்று கேள்வியாகக் கேட்பதைவிட, 'நீங்க நல்லா இருக்கீங்க!' என்ற நேர்மறையான அழுத்தத்தோடு சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். 'நீங்க நல்லா இருக்கீங்க!' என்ற வார்த்தைகளே ஒருவருக்கு நலத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன. 'என்னடா டல்லா இருக்க. உடம்பு சரியில்லையா?' என்று நாலுபேர் நம்மைப் பார்த்துக் கேட்டால், நம்மையறியாமலே நமக்கு உடம்பு சரியில்லாமல் போகிவிடுகிறது. ஆகையால், எதிர்மறையான வார்த்தைகளைப் பேசும் நபர்களை நம் அருகில் வைத்துக்கொள்ளவே கூடாது.

எபிரேய மொழியில் 'நலம்' என்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'சலோம்'. இதையே இசுலாமிய மரபில் 'சலாம்' என வாழ்த்துகின்றனர். 'சலோம்' என்பதன் முதல் பொருள் 'உடல்நலம்'. 'உடல்நலமே' முதல் நலமாகக் கருதப்பட்டது எபிரேய மரபில். உடல்நலம் குறைந்தால் நம் அனைத்து நலன்களும் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. 'When wealth is lost nothing is lost. When health is lost something is lost.' காய்ச்சல் வந்து கட்டிலில் படுத்திருக்கும்போது, என் மேசையில் இருக்கும் கம்ப்யூட்டர், ஃபோன், புத்தகங்கள் எதன்மேலும் ஆசை இருப்பதேயில்லை. நாள் முழுவதும் சிந்தனை நம்மைப்பற்றியே ஓடுகிறது. இன்றைய மருத்துவ உலகின் அவசரம் வேறு. வாயில் சின்ன ப்ளிஸ்டர் என்றாலும் 'ஹெர்பஸ்' என்றும் 'மவுத் கேன்சர்' என்றும் பயமுறுத்திவிடுகிறார்கள். ஒன்றரை ருபாய் பிகாஸில்ஸ் மாத்திரையில் சரியாகக் கூடியதை ஒன்றரை லட்சத்திற்கு இழுத்து விட்டு விடுகிறார்கள். 'டாக்டரிடமும், நாம டாவு அடிக்கிற பொண்ணிடமும் பர்சைக் காட்டவே கூடாதாம்!'

இன்றைய உலகின் முரண்பாடு என்னவென்றால் உடல்நலத்தை விற்று உழைக்கின்றோம். பின் உழைத்த பணத்தை வைத்து உடல்நலம் பெற மருத்துவமனை செல்கிறோம். 'உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே!' என்ற திருமூலரின் வார்த்தைகள் உடல்நலத்திற்கும், உயிர்நலத்திற்கும் உள்ள உறவை அழகாக விளக்குகிறது. இன்று நாம் ஒருவர் மற்றவரின் உடல்நலம் நாடுவோம். நம் உடல்நலம் பேணுவோம். அதுவே நாம் பெற வேண்டிய முதல் சலோம். பின் உள்ள அளவில் 'சலோம்'. பின் வேலை, பணம் பற்றி யோசிக்கலாம்!

இரண்டாவதாக, யாக்கோபு முன்பின் தெரியாத நபரிடம் தன் மாமனைப் பற்றி விசாரிக்கின்றார். அந்த முன்பின் தெரியாத நபர்கள், 'அவரை எங்களுக்குத் தெரியும்' என்றும், 'ஆம். அவர் நலமே' என்றும் பதில் தருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது ஊரில் லாபானுக்கு நல்ல பெயர் இருந்தது என்று. நல்ல பெயர் இல்லையென்றால், தெரிந்திருந்தாலும், 'தெரியாது' என்று சொல்லிவிடுவர் ஊரார்.

'இந்த நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க!' அப்படின்னு சொல்வாங்க. அந்த நாலுபேரைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாலுபேருதான் நம்ம ஊருக்காருங்க. 'இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்று எழுதுகிறார் கண்ணதாசன். ஊரார் கொடுக்கும் சர்டிபிகேட் நம் influence லெவலைக் காட்டுகிறது. Harvard Business Review  தன் ஆகஸ்ட் மாத இதழுக்கு 'Influence' என்று பெயரிட்டுள்ளது. இது ரொம்ப அவசியம். நாம நல்லா இருந்தா மட்டும் போதாது. அந்த நலம் நாலுபேரு மேல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். Influence வளர intelligence மட்டும் போதாதாம். மாறாக warmth ம் அவசியம். லாபான் இந்த இரண்டையும் கண்டிப்பாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். 

எந்த ஒரு தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இந்த அறிமுகம் வளர்வது மிகக் கஷ்டம். இந்தக் காலத்தில் அறிமுகம் ரொம்ப ஈஸி. 'உங்களுக்கு அவரைத் தெரியுமா?' 'தெரியுமே. ஃபேஸ்புக்ல பாத்திருக்கேன்!' அறிமுகம் கிடைப்பது இன்று எளிது. ஆழமான உறவு பிறப்பது அரிது.

எங்க ஸெமினரிக்கு ரேஷன் வாங்குவதற்காக தாசில்தாரரிடம் பெர்மிட் வாங்கப் போயிருந்தோம். தாசில்தாரைப் பார்க்கவே முடியல. ஒருநாள் எங்க ஸெமினரி டைரக்டர், 'நீங்கக் கிளம்பிப் போங்க. பத்து மணிக்கு 'குமரேசன்' அப்படின்னு ஒருத்தர் கட்டம் போட்ட சட்டை போட்டு தாசில்தாரர் ஆபிசுக்கு முன் வருவார். அவரைப் பாருங்க' என்று சொல்லி அனுப்பி விட்டார். எங்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் ஒருவர் என்னுடன் வந்தார். தான் புதிதாய் வாங்கியிருக்கிற 'மாருதி 800'ல் போவோம் என்று தன் காருடன் வந்தார். 'லெட்டர், ஜெராக்ஸ், ஃபோட்டோ, மாணவர்கள் பெயர்ப்பட்டியல்' என அனைத்தையும் ஒரு போல்டரில் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். காரில் சென்று இறங்கியபோது எல்லோரும் எங்களையே பார்த்தனர். ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஏற்கனவே உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்திருந்து எங்களுக்கு வழிவிட்டனர். 'நீ அங்கி போட்டுட்டுதான் போகணும்னு' சொன்னதால 'நான் வெள்ளை அங்கியில் தான் சென்றிருந்தேன்'. 10 மணி ஆயிற்று. குமரேசன் வந்தார். மெல்லிய உருவம். கட்டம் போட்ட சட்டை. கொஞ்சம் கறுப்பு. இல்ல. நிறையவே கறுப்பு. தன் சைக்கிளை எங்கள் காருக்கு அருகில் நிறுத்திவிட்டு வியர்க்க விறுவிறுக்க வந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அடையாளம் 'வெள்ளை அங்கி'. நேராக வந்தவர், 'உங்க ஸெமினரி பேர் என்ன? எத்தனை பேர் இருக்காங்க?' என்றார். நான் ஃபோல்டரைத் திறந்து லெட்டர் ஹெட்டில் நீட்டாகப் பிரிண்ட் செய்த பேப்பரைக் கொடுத்தேன். அவர் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 'வாயால சொல்லுங்க!' என்றார். நான் சொன்னேன். தன்னிடமிருந்த ஒரு மருந்துப் பில்லின் பின்புறம் குறித்துக் கொண்டார். 'உட்காருங்க!' சொல்லிவிட்டு உள்ளே போனார். 20 நிமிடங்கள் கடந்தன. வெளியே வந்தார். அவர் கையில் ஒரு வெள்ளைத் தாள். அதில் நிறைய கையொப்பங்களும், ஸ்டாம்ப்களும் இருந்தன. 'நீங்க 3 வருடங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை வாங்கிக்கிடலாம். வழங்குமிடம் பழங்கானத்தம்' என்று சொல்லிவிட்டு தன் சைக்கிளை எடுக்க வேகமாகச் சென்றார். எங்கள் படிப்பு, எங்கள் மாருதி 800, என் வெள்ளை அங்கி அனைத்தையும் ஓரங்கட்டி விட்டது ஒரு கட்டம் போட்ட சட்டை. குமரேசன் தாசில்தாரின்மேல் கொண்டிருந்ததற்குப் பெயர்தான் 'influence' 

கடைசியில் விசாரித்ததில் டெய்லி தாசில்தாரர் வாக்கிங் போகும் இரயில்வே மைதானத்தின் வெளியில் அருகம்புல் ஜுஸ் விற்பவராம் நம்ம குமரேசன். 'Influence' வருவதற்கு அம்பாணியாய் இருக்க வேண்டும் என்பதல்ல. அருகம்புல் ஜுஸ் விற்றால்கூட போதும். நாம் எப்படி மற்றவர்களிடம் பழகுகிறோம் என்பதைப் பொறுத்தே நம்ம influence level இருக்கிறது.

'அவரை எங்களுக்குத் தெரியும்'

'அவர் நலம்தானா?'

'ஆம். அவர் நலமே!'

Tuesday, September 24, 2013

நான் ஏன் இழந்து போக வேண்டும்?


ரெபேக்கா யாக்கோபிடம், 'இதோ! உன் சகோதரன் ஏசா உன்னைக் கொலை செய்து, தன்னைத் தேற்றிக்கொள்ள விரும்புகிறான். ஆகையால், உடனே கிளம்பி காரானில் உள்ள என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போ ... ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?' என்றார். (தொடக்கநூல் 27:42-45)

யாக்கோபு ஏமாற்றும் படலம் முடிவு பெற்று, அவர் ஏமாறப் போகும் படலம் தொடங்குகின்றது. தன் தலைமகனுரிமையையும், தன் ஆசியையும் தன் தம்பி எடுத்துக்கொண்டான் என்று கோபம் கொல்கின்ற அண்ணன் ஏசா அவனைக் கொல்லத் தேடுகிறான். மறுபடியும் இங்கே தலையிட்டு தன் இளைய மகனைக் காப்பாற்ற விழைகின்றார் ரெபேக்கா. தன் சகோதரன் லாபானிடம் அவரை அனுப்புகிறார். 

அனுப்புவதற்குக் காரணங்கள் இரண்டு:

1. ஏசாவிடமிருந்து யாக்கோபைத் தப்புவிப்பது

2. யாக்கோபிற்கு தன் அண்ணன் வீட்டில் பெண் பார்ப்பது

ஏசா எங்கே போகிறான், என்ன ஆகிறான் என்பதைப் பற்றி நூலில் இப்போது எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஏசா நாற்பது வயதானபோது இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும், இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்து கொண்டான். இது ஈசாக்கிற்கும், ரெபேக்காவிற்கும் பிடிக்கவில்லை. இந்த இத்தியப் பெண்களால் (இந்தியப் பெண்களாலும் கஷ்டம்தான்! no, no, just kidding!)  ரெபேக்காவும் மிகவும் கஷ்டப்படுகிறார் (தொநூ 27:46). என்ன கஷ்டமாக இருந்திருக்கும்? நம்ம வீடுகளில் வேறு சாதியில் பெண் எடுத்தா என்ன கஷ்டங்கள் வருமோ அதே கஷ்டங்களாகத்தான் இருந்திருக்கும்!

தன் மகனைக் காப்பாற்ற நினைக்கும் ரெபேக்கா, 'அவனுக்கு விரோதமாய் நீ செய்ததை' என தவற்றை யாக்கோபின் பக்கம் திருப்புகிறார். ஏசாவை ஏமாற்ற முழுமுதற்காரணமாய் இருந்த ரெபேக்கா இப்போது 'நீ செய்தது!' என யாக்கோபைப் பார்த்து விரல் நீட்டுகிறார். 

இந்த நிகழ்வில் எல்லாரும் ஒருவர் மற்றவரைத் தான் காரணம் சொல்கின்றனர். இந்தக் குடும்பத்தில் நடக்கும் இந்தப் பிரச்சினையால் ஒருவருக்கொருவர் தண்டனையைக் கொடுத்துக் கொள்கின்றனர். பெற்றோர்களுக்குக் கிடைத்த தண்டனை தங்கள் இரு பிள்ளைகளையும் பிரிந்து வாழ்வது. பிள்ளைகளுக்குக் கிடைக்கும் தண்டனை தப்பி ஓடுவது. சொந்த வீட்டிலிருந்து தப்பி ஓடுவது எவ்வளவு பெரிய கொடுமை.

வீடுதான் ஒரு மனிதனின் அடையாளம். தொடக்க காலத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்த மனித இனம் கூட தங்கள் வீட்டையே அடையாளமாக வைத்திருந்தனர். எங்கே போனாலும் நாம் திரும்புவது நம் வீட்டிற்குத்தான். நம் வீடு நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. எதற்காக எவ்வளவு இ.எம்.ஐ. செலுத்தியாவது நாம் ஒரு வீட்டைச் சொந்தமாக்க விழைகின்றோம்? அது தரும் நம்பிக்கைதான். வெளி உலகில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நம் வீட்டிற்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டால் அங்கே நாம் தான் ராஜா. வாடகை வீட்டிலும், ஒத்தி வீட்டிலும் நாம் உரிமைகள் கொண்டாட முடியாது. 'என்னதான் வாடகை கொடுத்தாலும், வாடகைக்குக் கொடுத்தவர் நம் நண்பராய் இருந்தாலும்' அந்த வீட்டின்மேல் நம் மனம் ஒட்டுவதில்லை. பணக்கஷ்டத்தால் தங்கள் சொந்த வீடுகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்கள் அந்தோ பரிதாபம்! தாங்கள் உண்டு, உறங்கி, விளையாண்டு, சிரித்து மகிழ்ந்து, சண்டையிட்டுக் கொஞ்சிய வீட்டை விடுவது அவ்வளவு எளிய காரியம் அல்ல.

சொந்த வீடு மட்டுமல்ல. சொந்த மண்ணும், சொந்த நாடும் நம்மை ஈர்க்கின்றது. எவ்வளவு குருதி சிந்தினாலும் ஒரு நாள் ஈழம் விடியும் எனக் காத்திருக்கும் நம் சகோதர உறவுகளின் வேட்கைக்குக் காரணமும் இந்தச் சொந்தம் தான். வீட்டை விட்டு வெளியே சென்றால் நாம் அடையாளமற்றவர்களாய் ஒருவர் மற்றவரோடு கலந்து விடுகின்றோம். சொந்த நாட்டிலிருந்து வெளியே போய் என்னதான் நாம் நல்ல முறையில் குடியேறி வசதி வாய்ப்புகளோடு இருந்தாலும், அந்த மண்ணைப் பொறுத்த வரையில் 'நாம் அகதிகள் அல்லது பிழைக்க வந்தோர்'. ஒரு புதிய மண்ணின் குடியுரிமை பெற்றாலும், அந்தக் காகிதக் கட்டில் வேண்டுமானால் நம் குடியுரிமை மாறுமே தவிர, நம் ஜீன்களிலும், நம் உணர்வுகளிலும் அது மாறாது. 'நான் இந்த மண்ணைச் சாராதவன்' என்று நம் மனம் ஒரு மூளையில் புலம்பிக் கொண்டேதான் இருக்கும். 

திருமணம் முடித்துப் புகுந்த வீடு சென்று படிப்பு, வேலை, பயணம் என்று பாதை மாறினாலும், தங்கள் சொந்த ஊருக்கு என்றோ ஒருநாள் செல்லும்போது தங்களை அறியாமலேயே அழுது விடுகிறார்கள். சொந்த ஊரில் தாங்கள் பார்த்த வயல், அங்கே வீசும் மென்மையான காற்று, ஓடும் தண்ணீர், மண்வாசம், பாடும் பறவைகள், ரோட்டில் கிடக்கும் முள்கள், கல்லறை மேடுகள், கிணற்றடி, வரப்பு, கயிற்றுக் கட்டில், வீட்டின் முன்மாடம் அனைத்தையும் நாம் பார்க்கும் போது ஏதோ மறுபிறப்பு எடுத்ததுபோலவே உணர்வார்கள். 'அதோ அங்கதான் நாங்க விளையாடுவோம்!' என்று தங்கள் பிள்ளைகளுக்கு அந்த இடங்களைச் சுட்டிக் காட்டுவார்கள். பிறந்த வீடோ அல்லது ஊரோ நமக்கு புதுத் தெம்பைத் தருகின்றது. 

யாக்கோபு இருமுறை ஏமாற்றினான். இப்போது அதற்குப் பரிகாரமாக இருமுறை ஓடவேண்டும்: 1) தன் வீட்டை விட்டு. 2) தன் ஊரை விட்டு. யாக்கோபு இதை எப்படி சமாளிக்கப் போகிறான்? இங்கேதான் நம் ஸீனுக்குள் கடவுள் வருகின்றார். எல்லாம் இறைத்திட்டம்!

'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்'

என்று பகவத் கீதை மொழிவதுதான் இறைத்திட்டம்.

தலைமகனுரிமையை ஏசா இழக்க வேண்டும், அதை யாக்கோபு பெற வேண்டுமென்று திட்டம் இருந்தது. அதுபோலவே நடந்தது.

ஆசியையும் யாக்கோபுதான் பெற வேண்டுமென்று இருந்தது. அதுபோலவே நடந்தது.

ஏசா கோபப்படவேண்டும் என்று இருந்தது. அதுபோலவே நடந்தது.

இப்போது யாக்கோபு தப்பி ஓட வேண்டும் என்று இருந்தது. அதுபோலவே நடக்கிறது.

இது ஏன்? என்று கேட்டால் நமக்கு விடைகள் கிடைக்காது. அல்லது நாம் எதிர்பார்க்கும் விடைகள் கிடைப்பதில்லை. 'தென்னாப்பிரிக்காவில் இரயிலில் இருந்து காந்தி தள்ளிவிடப்பட வேண்டும்' என இருந்தால் அப்படியேதான் நடக்கும் அதை யாராலும் மாற்ற முடியாது. 'தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அன்னை தெரசா அருகிலிருந்த சேரியில் நடந்த ஒரு கோர இறப்பைப் பார்க்க வேண்டும்' என இருந்தால் அப்படியேதான் நடக்கும். ஏன்? என்ற கேள்வி இங்கே பொருந்துவதில்லை. வாழ்க்கையின் அதிசயங்களுக்கு முன்னால் 'ஏன்' என்ற கேள்வி எடுபடுவதில்லை. 

எல்லார் கண்களும் இப்போது யாக்கோபின் மேலேயே இருக்கின்றன. 'நான் ஏன் என் இரு புதல்வர்களையும் இழந்து போக வேண்டும்?' எனப் புலம்புகின்றார் ரெபேக்கா. ஏசா யாக்கோபைக் கொலை செய்து விட்டால் மீதம் ஏசாவாவது இருப்பானே. அப்படி இருக்க 'என் இரு புதல்வர்களையும்' நான் இழந்து போக வேண்டுமா? என ரெபேக்கா புலம்புவது ஏன்? ஏனென்றால் யார் மற்றவரின் இரத்தத்தைச் சிந்துகிறார்களோ அவர்களின் இரத்தமும் சிந்தப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளை (தொநூ 9:6). 'அதிகாரம்', 'முடிவு' – ஆபிரகாமின் வாழ்க்கை. 'எதுன்னாலும் ஓகே', 'பணிவு' - ஈசாக்கின் வாழ்க்கை. 'ஓட்டம்', 'போராட்டம்' – யாக்கோபின் வாழ்க்கை. 

யாக்கோபின் ஓட்டம் இங்கே தொடங்குகிறது. 'ஓடினேன், ஓடினேன், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' என்று பராசக்தியின் குணசேகரனாய் வாழ்க்கை ஓட்டத்தைத் தொடங்குகிறார் யாக்கோபு. இன்றைய கேள்வி நமக்கு வைக்கும் பாடம் இதுதான்: வாழ வேண்டுமென்றால் ஓட வேண்டும். 'திருடினால்தான், பைத்தியக்காரனாய் இருந்தால்தான், கடவுளின் பெயரால் ஏமாற்றினால்தான்' வாழ முடியும் என்ற குணசேகரனின் குற்றச்சாட்டிற்கு விமலா அழகாகப் பதில்சொல்வார்: 'வாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அதை மட்டும் பார்த்துவிட்டு இப்படி வாழ்ந்தால்தான் வாழ முடியும் என்று சொல்வதற்குப் பதில், நீ ஏன் வித்தியாசமாக வாழக் கூடாது?!' சில நேரங்களில் நாம் வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடித்தான் ஆக வேண்டும். அப்படிப் புறப்படும் நம் பயணம் முதலில் புழுதித் தூசியாய் இருந்தாலும், பின் வசந்த மாளிகையாய் மாறும். 

இரண்டாவதாக, இன்றும் தங்கள் வீட்டை விட்டு, தாய் தந்தையை விட்டு, தங்கள் சகோதரர்களை விட்டுப் பிரிந்து, கட்டிட வேலைக்காகவும், கார்பெட் விற்பதற்காகவும் நம் வடமாநிலங்களிலிருந்து வந்து போகிறார்கள். அவர்களின் கண்களுக்குப் பின்னால் தங்கள் மண்ணிற்கான தேடல் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர்கள் நம் அருகில் வந்தால் அவர்களிடம், 'ஆமா! நீங்க எந்த ஊரு? அங்க எந்த மொழி பேசுவீங்க?' என்று கேளுங்களேன். அவர்கள் உங்களை ஒரு புதிய உலகத்திற்கே கூட்டிச் செல்வார்கள்.

'நான் ஏன் இழந்து போக வேண்டும்?'

Monday, September 23, 2013

உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?


'அவன் (யாக்கோபு) இருமுறை என்னை ஏமாற்றி விட்டான்' என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: 'நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?' என்று கேட்டான் ... 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான். (தொடக்கநூல் 27:36,38)

யாக்கோபு தன் தாயின் வழிகாட்டுதலின் பேரில் தன் தந்தை ஈசாக்கிற்கு விருப்பமான உணவைத் தயார் செய்து, தன் அண்ணனைப் போலவே தன் உடலை அடர் உரோமத்தால் மூடிக்கொண்டு தன் தந்தையிடமிருந்து ஆசியைப் பெற்றுக்கொண்டான். 'இளையமகன் மூத்த மகனை விட மேலோங்கி நிற்பான்' என்ற கடவுளின் வார்த்தைகளை இந்நிகழ்வு மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. 'இளைய மகன் தேர்ந்தெடுக்கப்படல்' என்னும் சிந்தனை இங்கும் அடிக்கோடிடப்படுகின்றது. 

ஆசி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? தன் சகோதரனை ஏமாற்றி யாக்கோபு அதைப் பெற்றுக்கொள்ளத் துணியும் அளவிற்கும், 'ஒரே ஆசிதான் இருந்ததா' என ஏசா புலம்பும் அளவிற்கும் அது மேலானதா?

'ஆசி' என்ற தமிழ்ச்சொல்லிற்கு இணையாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரேயச் சொல் 'பராகா'. இந்தச் சொல்லுக்கு 'முழந்தாலிடல்' என்ற பொருளும் உண்டு. இஸ்ராயேல் மக்களின் வரலாறே ஆசியில் தான் தொடங்குகிறது (காண். 3:14, 3:17, 4:11, 5:29, 9:25, 12:3). முதன்முதலாக கடல்வாழ் விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் பார்த்து 'பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்' என ஆசி வழங்குகின்றார் (தொநூ 1:22). 'ஆசி' என்றால் 'பலுகிப் பெருகுவது!'. இதற்கு எதிர்ப்பதமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'சாபம்', 'சிறுத்துப் போவது!'. 

பழைய ஏற்பாட்டு ஆசிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1. பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசி வழங்குவது. எகா. மெல்கிசதேக்கு ஆபிரகாமிற்கும் (எபி 7:6-7), பெத்துவேலும், லாபானும் ரெபேக்காவிற்கும் (தொநூ 24:60), இன்று ஈசாக்கு யாக்கோபிற்கும் ஆசி வழங்குதல்.

2. வெற்றியையும், செல்வத்தையும் பிறர் பெற வேண்டும் என வாழ்த்திக் கூறுவது (இணைச்சட்டம் 28:3-7).

3. கடவுளை நோக்கிய மன்றாட்டு. எ.கா. 'எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்வாராக!' (தொநூ 28:3). ஒவ்வொரு முறை திருப்பலியின் இறுதியிலும், 'எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியானவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!' என்று அருட்பணியாளர் சொல்லும்போது, அங்கே அவர் கடவுள் மக்களுக்கு ஆசி அருள வேண்டுமென கடவுளை நோக்கி மன்றாடுகிறார்.

சாதாரணமாக, எவ்வித ஃபார்மாலிட்டியும் இல்லாமல் கொடுக்கப்படும் ஆசிகளும் விவிலியத்தில் உள்ளன. எ.கா. '... நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய். வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய் ... நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய் ... நீ பல்வேறு இனத்தாருக்குக்கும் கடன் கொடுப்பாய். நீயோ கடன் வாங்கமாட்டாய் ... ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்' (இச 28:1-14).

மனிதர்களும், கடவுளை நோக்கி 'பராகா' என்று சொல்ல முடியும். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் நாம் 'போற்றிடு' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறோம்: 'என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!' (திபா 103:1). இது நம் தமிழ் மரபின் தாக்கத்தையே காட்டுகின்றது. தமிழ் மரபில் நாம் என்னதான் 'அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே' என்று மாணிக்கவாசகரின் திருவாசகத்தோடு உருகினாலும், கடவுளை 'நீங்க, நாங்கன்னு' கூப்பிட்டே பழகிட்டோம். இது 'திரு'விற்கு (இறைவனுக்கு) நாம் கொடுக்கும் மரியாதையைக் காட்டுகின்றது.

இஸ்ராயேல் வரலாற்றின் தொடக்கத்தில் குடும்பத்தில் தந்தையர்கள் தம் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கும் நிலை காலப்போக்கில் மாறி, ஆசி குருக்கள் மட்டும் வழங்கக்கூடியதாகின்றது. அவ்வகையில் மிகவும் பிரபலமான ஆசி தலைமைக்குரு ஆரோனின் ஆசி (எண்ணிக்கை 6:24-26):

'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' 

புதிய ஏற்பாட்டில் இயேசு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆசி வழங்குகின்றார் (மாற்கு 10:13-16). மேலும், அவரது பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கியது, நோய் நீங்கச் செய்தது அனைத்துமே அவரின் ஆசிகள்தாம். மேலும் 'நீங்கள் பேறுபெற்றவர்கள்' (மத் 5:1-12) என்னும் மலைப்பொழிவு இறைவனின் ஆசிபெற்ற மக்களினங்களையே குறிப்பிடுகின்றது.

ஆசி வழங்குதலின் மையப்பொருள் 'வார்த்தை'. வார்த்தைகளுக்கு ஆற்றல் உண்டு. நாம் மற்றவர்களைப் பார்த்துக் கூறும் நல்ல வார்த்தைகள் அவர்கள் வாழ்விலும், அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கூறும் நல்ல வார்த்தைகள் நம் வாழ்விலும் ஆசியைக் கொண்டுவருகின்றன. நல்ல வார்த்தைகள் நன்மையைக் கொணர்கின்றன என்றால், தீய வார்த்தைகள் தீமையைக் கொணரக்கூடியவைதாம். ஒரே வார்த்தையால் கடவுள் உலகைப் படைக்கின்றார். வார்த்தை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். இதைத்தான் நம் ஊரில், 'யார் வாயிலயும் விழக் கூடாது!' என்பார்கள். திருமண நிகழ்வில் தாலி கட்டும்போது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்!' என்று சொல்ல, உச்ச தொனியில் கெட்டி மேளம் இசைப்பார்கள். இதன் அர்த்தம் என்ன? தாலி கட்டும் மங்களகரமான நேரத்தில் யாராவது பேசும் அமங்கல வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். 

ஈசாக்கு யாக்கோபுக்கு அளிக்கும் ஆசியிலும் முக்கியமானது 'வார்த்தை'. 'நீ அனைத்திலும் வளம் பெறுவாய்' என்ற வார்த்தைகள் தாழ்வுற்ற போதும் யாக்கோபைத் தூக்கிவிடத்தான் செய்யும்.

'வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்' (மத்தேயு 15:11). 'கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக் கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்' (எபேசியர் 4:29). 'பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது' (கொலோசையர் 3:8) - இந்த இறைமொழிகள் நமக்கு நாம் பயன்படுத்தும் வார்த்தையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. 

இன்று நாம் வாயார அடுத்தவர்களுக்கு ஆசி கூறுவோம். இந்த உலகம் ஒரு கண்ணாடி உலகம். நாம் ஆசி கூறினால் இவ்வுலகமும் ஆசி கூறும். நாம் சபித்தால் இவ்வுலகமும் சபிக்கும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். 

இனிய சொல், புன்சிரிப்பு, கைகுலுக்கல், உச்சிமுகர்ந்த முத்தம், கைதட்டல், முதுகில் தட்டிக்கொடுத்தல் என ஆசிகள் பல்வேறு பரிமாணங்களில் நம்மைச் சுற்றியிருக்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்த, நான் பின்பற்ற நினைக்கும் ஆசி மொழிகள் பின்வருபவை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லெட்' என்ற நாடகத்தில். போலோனியுஸ் என்ற அன்புத் தந்தை பிரான்சுக்குப் புறப்பட்டுச் செல்லும் தன் மகன் லாயர்ட்டசுக்குச் சொல்லும் வார்த்தைகள் இவை. இனிய தமிழில் அழகாக இதை மொழிபெயர்த்தவர் 'நம்வாழ்வின்' முன்னாள் இணைஆசிரியர், என்னைத் தட்டிக்கொடுக்கும் அருட்பணி;. குடந்தை ஞானி (நன்றி!).

மகனே!
இதோ! உனக்கு என் ஆசிகள் உரித்தாகட்டும்!
இந்த அறிவுரைகள் உன் நினைவில் நின்று உன் நடத்தையை உருவாக்கட்டும்.
உனது எண்ணங்களைச் சொல்லாதே.
தீர்மானிக்காத எண்ணத்தைச் செயலாக்காதே.
நட்பாக நடந்து கொள். ஆனால், அநாகரிகமாக நடக்காதே.
உனக்கிருக்கும் நண்பர்கள், அவர்களது நண்பர்களை இரும்பு வளையங்களால்
உன் இதயத்தோடு பிணைத்துக் கொள்.
ஆனால், ஒவ்வொரு புதிய முதிர்ச்சியடையாத தோழனோடும்
கேளிக்கையில் மூழ்கி உன் கரத்தை மாசுபடுத்தாதே.
சண்டையில் இறங்காமல் எச்சரிக்கையாயிரு.
ஆனால், இறங்கிவிட்டால் எதிராளி உன்னிடம் எச்சரிக்கையாயிருக்கச் செய்.
எல்லோருக்கும் செவிகொடு. ஆனால், முடிவை நீ எடு.
உன் பணத்தால் வாங்க முடியாத உன் நடத்தை உயர்வாயிருக்கட்டும்.
ஆனால், செயற்கையாக நடந்து கொள்ளாதே.
உன் ஆடை செழிப்பாயிருக்கட்டும். ஆனால் பகட்டாயிருக்கக் கூடாது.
ஆடைதான் மனிதனை வெளிப்படுத்துகிறது.
கடன் கொடுக்காதே. வாங்காதே.
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும். நண்பனும் போய்விடுவான்.
கடன் வாங்குவதால் சிக்கனம் கெடுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக உனக்கு நீயே உண்மையாயிரு.
இரவும் பகலும் போல இது தொடரட்டும்.
யாருக்கும் நீ பொய்யாக இருக்க முடியாது!


நாம் பிறருக்கு வழங்கும் ஆசிகளுக்குக் குறை வைக்க வேண்டாம். நமக்குப் பிறர் தீங்கே செய்தாலும் நாம் ஆசி கூறுவோம்.

'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?'

Sunday, September 22, 2013

நீ எந்த மகன்?


யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், 'என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன். நானோ மிருதுவான உடல் கொண்டவன். என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? ... ஈசாக்கு மறுமொழியாக, 'ஆம் மகனே, நீ எந்த மகன்?' என்று கேட்க, யாக்கோபு தன் தந்தையிடம், 'நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன்' ... 'இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?' ... 'நீ உண்மையிலேயே என் மகன் ஏசா தானா?' என்று வினவ, அவனும் 'ஆம்' என்றான். (தொடக்கநூல் 27:11-12,18,20,24)

நிறைய கேள்விகள். ஆனால் உட்பொருள் ஒன்றுதான்: ஏமாற்றுதல். யாக்கோபு இரண்டாம் முறை ஏமாற்றுகிறான் - முதல் முறை தன் சகோதரனையும், இரண்டாம் முறை தன் தந்தையையும். தன் சகோதரனைத் தானே ஏமாற்றுகிறான். இம்முறை இவனது தாயும் இதற்கு உடந்தை. இந்த நிகழ்விலும் கடவுளை வெளியே எடுத்து விடுவோம்.

1. ஏசாவைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அப்பாவி! சகோதரனும் ஏமாற்றுகிறான். தாயும் ஏமாற்றுகிறார். 'அவசரப்படுகின்ற' தந்தையும் ஏமாற்றுகிறார். ஒரு குடும்பத்திற்குள் ஏன் இந்த பாரபட்சம்! நம் வீடுகளிலும் இந்த பாரபட்சத்தைப் பார்த்திருக்கலாம். இது தெரிந்தோ, தெரியாமலா நடக்க வாய்ப்பு இருக்கின்றது. ஒருவன் நன்றாகப் படிப்பான். அவனை மேலும் மேலும் ஊக்குவிப்பார்கள். மற்றவன் சரியாகப் படிக்காமல் விளையாடிக் கொண்டே இருப்பான். ஆனால் அவனை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் மட்டுமல்ல, நாம் படிக்கும் இடத்திலும், நாம் பணிபுரியும் இடத்திலும் கூட இது நடக்கலாம். 'என்னதான் தவறு செய்தாலும்' ஒரு சிலர் புகழப்படுவார்கள். 'எல்லாம் நல்லதே செய்தாலும்' ஒருசிலர் மட்டம் தட்டப்படுவார்கள். மட்டம் தட்டப்படுபவர்களின் மனநிலைக்குள் சென்று பார்த்தால் அங்கே அழுகையும், கண்ணீரும், காயங்களும்தான் இருக்கும்.

கிளேடியட்டர் திரைப்படத்தில் ஒரு அருமையான காட்சி வரும். தன் தளபதி மேக்ஸிமஸின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பார் சீசர் அவுரேலியு. அந்நிகழ்வில் பங்கேற்க அவரது மகன் கமாடஸ் வருவான். கமாடஸை இரவில் தனியாகச் சந்திக்கின்ற தந்தை ரோமை நகரை ஆளும் பொறுப்பை தன் தளபதியிடம் விட்டுச் செல்ல விழைவதாகக் கூறுவான். அப்போது அழுதுகொண்டே அவன் தன் தந்தையிடம் முறையிடுவான்:

'அப்பா ஒரு முறை நீங்கள் எனக்குக் கடிதம் எழுதினீர்கள். அதில் மேன்மையான மதிப்பீடுகளாக ஞானம் (wisdom), திடம் (fortitude), நீதி (justice) மற்றும் கட்டுப்பாடு (temperance) என்ற நான்கை எழுதியிருந்தீர்கள். இந்த நான்கில் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் வேறு நான்கு மதிப்பீடுகள் இருக்கின்றன: அதீத எண்ணம் (ambition) - ஆம் அதீத எண்ணமும் மதிப்பீடாகலாம். எப்போது எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கும்போது, தைரியம் (courage) - போரில் சண்டையிடுவதுதான் தைரியமல்ல, தைரியத்தின் பரிமாணங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன, நிறைஅறிவு (resourcefulness) மற்றும் அர்ப்பணம் (devotion) - உங்களுக்கும் நம் நாட்டிற்கும். இந்த நான்கில் எதுவுமே உங்க லிஸ்ட்டில் இல்லை. அதற்காக நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை. நான் உங்கள் மகன் அல்ல என்று மறைமுகமாகச் சொல்வதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'

இந்த ஸீனைப் பார்த்தவுடன் என்னையறியாமல் கண்ணீர் வந்து விட்டது. மகனின் மதிப்பீடுகளும் மதிப்பீடுகள்தாம். அவன் ஏதாவது தவறு செய்தால் திருந்துவதற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அல்லது அதற்கு விளக்கமாவது கொடுத்திருக்கலாம். 'நீ எனக்கு வேண்டாம்!' என்று சொல்லும் வார்த்தைகள் அவனை அதிகமாகக் காயப்படுத்துகின்றன. தன் தந்தையைக் கொல்லத் துணிகின்றான். மேலும் அவனது கோபம் தன் தளபதியின் மேல் பொறாமையாக மாறுகின்றது. இந்தச் செயலுக்கு யார் காரணம்? அவனா? அவனது தந்தையா?

'நீ எனக்கு வேண்டாம்' - இந்த வார்த்தைகளைத்தான் ஏசாவைப் பார்த்து ரெபேக்காவும், ஈசாக்கும் சொல்கின்றனர். பாவம், அவன் என்ன செய்வான்? அவனது நடவடிக்கை பிடிக்கவில்லையென்றால் சொல்லியிருக்கலாம்! 'அவன் நேரம் சரியில்லை. எல்லாம் தவறாகவே நடக்கிறது!' பாவம்!

இந்த வார்த்தைகள் உச்சகட்ட வெறுப்பை உமிழ்கின்றன. நம்மிடம் எல்லாத் தகுதியும் இருந்து நாம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும்போதும், ஒன்னுக்குமே உதவாத ஒருவன் மேலான நிலைக்கு வரும்போதும் (எடுத்துக்காட்டிற்காக மட்டுமே!) இந்த உணர்வு இன்னும் கொடூரமாக மாறுகிறது. நான் ஒரு பங்கிற்கு உதவிப் பங்குத்தந்தையாகச் செல்ல அப்பாய்ண்மன்ட் கொடுக்கப்பட்டபோது, அந்த பங்குத்தந்தையிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு, 'எனக்கு அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர் வந்துள்ளது. எப்போ உங்கள் பங்குத்தளத்திற்கு வரலாம்?' என்று கேட்டேன். 'என்ன நீங்களா! நான் வேறு ஒருத்தரையல்லவா கேட்டிருந்தேன். நீங்க வேண்டாம். நீங்க அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர திருப்பிக் கொடுத்திருங்க!' என்றார். 'என்ன வேண்டாம்னு சொல்ல நீ யாரு?' என்ற அவர்மேல் கோபம், வெறுப்பு, எரிச்சல். அந்தக் கோபம் என்மேல் திரும்பி சுயபச்சாதபாமவும் (guilt), தாழ்வு மனப்பான்மையாகவும்  (low self-esteem) சிலநிமிடங்களில் மாறிவிட்டது. ஆனால் அதே பங்கிற்குத்தான் நான் உதவிப் பங்குத்தந்தையாகச் சென்றேன். பின் நானும் அவரும் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம். 'என்னைப் பிடிக்கலயா?' அல்லது 'என்னிடமிருக்கும் குணம் பிடிக்கலயா?' - இரண்டிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன.

அன்றிலிருந்து, 'நீ எனக்கு வேண்டாம்!' என்று சொல்வதன் வலி புரிந்தது. நமக்கெல்லாம் பட்டால்தானே தெரியுது! இதே வார்த்தைகளை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாகவே இருக்கிறேன். 

2. முதல்முறை ஏமாற்றப்பட்ட ஏசா இரண்டாம் முறையும் ஏமாற்றப்படுகிறான். அப்போ தப்பு ஏசா மேல தான். சரி, முதல் தடவ ஏதோ தப்பு நடந்துடுச்சு. இரண்டாம் முறை கவனமாக இருந்திருக்க வேண்டாமா? 'ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்'. ஏமாற்றுவது தவறு என்றால் ஏமாறுவதும் தவறுதான். ஏமாற்றுவது 'நம்பிக்கைத் துரோகம்'. ஏமாறுவது 'என்ன சொன்னாலும் நம்புவது!' இரண்டையும் கட்டியிருக்கும் ஒரு வார்த்தை நம்பிக்கை. நம்பிக்கை ரொம்ப பலவீனமான வார்த்தை. யாரும் எளிதாக ஆட்டிப் பார்த்துவிடலாம். சின்ன வார்த்தை, சின்ன நடத்தை போதும் நம்பிக்கையைச் சரிக்க. 

என் நண்பர் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணியில் என்னை சென்னைக்கு வழியனுப்ப வந்தார். ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தவர் பழம் வாங்கி வருகிறேன் என்று சென்றார். பழங்கள் வாங்கி வந்தார். காலையில் எனக்கு ஃபோன் செய்தபோது, 'நீ கொடுத்த மாதுளம் பழங்களை நான் இன்னும் சாப்பிடவில்லை!' என்றேன். 'என்னது மாதுளம்பழமா, நான் ஆப்பிள் அல்லவா வாங்கிக் கொடுத்தேன்!' என்று அதிர்ந்தார். உண்மையில் என்ன நடந்தது என்றால், ஒருகிலோ ஆப்பிளுக்குக் கடைக்காரரிடம் பணம் கொடுத்திருக்கின்றார் நண்பர். ஆனால் கடைக்காரரோ ஆப்பிளுக்குப் பதில் மாதுளம் பழம் கொடுத்திருக்கின்றார். இந்தத் தவறு எப்படி நடந்தது? கடைக்காரர் நண்பரின் அவசரத்தைப் பயன்படுத்தி ஏமாற்றினாரா? நண்பர் கவனக்குறைவாக இருந்ததால் ஏமாற்றப்பட்டாரா?

காலை எழுந்தது முதல் நாம் ஏமாற்றிக் கொண்டும், ஏமாற்றப்பட்டுக் கொண்டேயும்தான் இருக்கின்றோம். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் மற்றவர்கள் மேல் உள்ள நம் நம்பிக்கை குறைகின்றது. நம்மேலும் வெறுப்பு உண்டாகிறது. ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்றால், அவரைப்போலவே நாம் எல்லோரையும் எடைபோடுகிறோம். இது நம் கண்களுக்கு 'முற்சார்பு எண்ணம்!' என்ற திரையை இடுகிறது. 

இன்றைக்கும் ரோமையில் எந்த மெட்ரோவிலும், எந்தப் பேருந்திலும் 'கறுப்பாய், பிரவுனாய்' யார் ஏறினாலும் வெள்ளைக்காரச் 'சீமாட்டிகள்' தங்கள் பேக்குகளை ஒளித்து வைப்பார்கள் அல்லது இறுகப் பிடித்துக்கொள்வார்கள். கறுப்பாய் இருப்பவர்கள் திருடுவார்களாம்! 'ரொம்பக் கறுப்பாய் இருந்தால்' சத்தம்போட்டு அவரை அடுத்த நிறுத்தத்திலேயே இறக்கி விடுவார்கள். இதில் எல்லாரும் சேர்ந்து தங்கள் ஒற்றுமையையும் காட்டுவார்கள். இது நடக்கும்போதெல்லாம் எனக்கு அவமானமாக இருக்கும். நிறைய கோபம் வரும். அந்தக் கோபத்தை அவர்கள்மேல் காட்டவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். ஆனாலும் மனதிற்குள், 'கிழக்கிந்தியக் கம்பெனி என்று வெள்ளைத் தோல்கள் எம் மண்ணிற்கு வந்தபோது நாங்களும் ஒளித்து வைத்திருக்க வேண்டும். நாங்கள் அன்று பல் இளித்தோம். ஆனால் நீங்கள் விவரமானவர்கள். ஒளித்து வைக்கிறீர்கள்' என நினைத்துக் கொண்டு எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன். இப்படி நடக்கும்போதெல்லாம் பைபிளின் ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டுதான் நினைவிற்கு வரும்: 'என் நாட்டில் என் உறவுகள் எத்தனையோ எனக்காகக் காத்துக்கொண்டு நிற்க, இங்கு நான் பன்றிகள் மேய்த்துக்கொண்டு அவற்றின் நெற்றுக்களால் வயிறு நிரப்பிக் கொண்டிருக்கின்றேனே!' ஆனா ஒன்னு: 'ரொம்ப ரோசப்பட்டால் வாழ முடியாது!' 

3. ரெபேக்காவின் partiality. எதற்காக இளைய மகன் மீது இத்தனை பிரியம் இவருக்கு? 'கடவுள் திட்டமா?' – கடவுள் இங்கு வேண்டாம் ப்ளீஸ். ஒரு கண்ணில் வெண்ணையையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துப் பார்க்கும் நிலையில் நம் குடும்பத்தில், நம் பணியிடத்தில், நம் படிப்பிடத்தில் நாமும் இருக்கின்றோம். ஒருவரைப் பற்றிய நம் மதிப்பீடு அப்படியே நம் உள்ளத்தில் பதிந்து விடுகிறது. 'காலம் தான் மருந்து!' என்பார்கள். 'காலம் அல்ல!' 'அன்புதான் மருந்து!' 'உனக்குரியது உனக்கு. உன் அண்ணனுக்குரியது அவனுக்கு' என்ற நீதி கூட இல்லாமல் இருக்கின்றார் ரெபேக்கா. 'அண்ணனுக்குரியதைத் திருடித் தம்பிக்குக் கொடுப்பதால்' அவரே திருடலுக்கு முதல் காரணமாகிறார். அறநெறியில் அழகாகச் சொல்வார்கள்: 'நல்ல நோக்கம் என்பதற்காக எந்த வழிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கிடையாது' – End never justifies the means!

இன்றும் என்றும் யாரையும் பார்த்து 'நீ எனக்கு வேண்டாம்!' என்று வார்த்தையிலும், செயலிலும் சொல்ல முனையும் முன் இதே வார்த்தைகளை அவர்கள் நம்மிடம் சொன்னால் எப்படி இருக்கும்? என யோசிப்போம்.

'ஆம் மகனே, நீ எந்த மகன்?'

Saturday, September 21, 2013

தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?


ஒருநாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக் கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான். அவன் யாக்கோபிடம், 'நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறக் கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு' என்றான். அவனுக்கு 'ஏதோம்' என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம். யாக்கோபு அவனை நோக்கி, 'உன் தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு' என்றான். அவன், 'நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?' என்றான். (தொடக்கநூல் 25:29-32)

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்று முறையிட்ட ரெபேக்காவிற்கு, 'அது அப்படித்தான். உன் வயிற்றில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. இளையவன் தன் அண்ணனையே மேற்கொள்வான்' என்று பதில் கூறுகிறார்.

கடவுள் சொன்னபடியே இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். முதலாவது பிறக்கின்ற மகன் ஏசா (முடி அடர்ந்தவன் என்பது பொருள்), இரண்டாவது மகன் யாக்கோபு (ஏமாற்றுபவன் என்பது பொருள்). இரண்டாவது மகன் தன் அண்ணின் குதிங்காலைப் பற்றிக் கொண்டு பிறந்தான் எனச் சொல்லப்பட்டுள்ளது. விவிலியத்தில் 'குதிங்கால்' என்பது அதிகாரத்திற்கு அடையாளம் (காண். தொநூ 3:15). பிறக்கும்போதே தான் முன்னுரைக்கப்பட்டவாறு தன் அண்ணனின்மேல் அதிகாரம் செலுத்துகிறான் யாக்கோபு. ஏசா வளர்ந்தபோது வேட்டையாடுபவராகிறான். யாக்கோபு வீட்டிலேயே 'பண்புள்ளவனாய்' வளர்கிறான் (ஏமாற்றுவதுதான் பண்பா!).

இன்றைய நம் கேள்வி இடம் பெறும் நிகழ்வு நடக்கும் இடம் சமையலறை. சமையல் செய்து கொண்டிருக்கிறான் யாக்கோபு. பசியாய் வருகின்றான் ஏசா. 'உணவு கேட்கின்றான்' அண்ணன். 'தலைமகனுரிமை' கேட்கின்றான் தம்பி. ஒருவனுக்கு வயிற்றுப் பசி. மற்றவனுக்கு உரிமைப் பசி. கடவுளை இந்த சீனில் இருந்து வெளியே எடுத்து விடுவோம். 'இது கடவுள் திட்டம்' என்றெல்லாம் இப்போது பேச வேண்டாம்.

ஒருவன் பசிக்காக தலைமகனுரிமையை விற்கின்றான். மற்றவன் அவனது பசியைப் பயன்படுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். இதில் எது சரி? எது தவறு? இரண்டுமே சரியா? இரண்டுமே தவறா?

முதலில் இளையவன், யாக்கோபின் செயலைப் பார்ப்போம். பசியால் வந்து உணவு கேட்கின்ற தன் அண்ணனிடம் உணவு வேண்டுமெனில், தலைமகனுரிமை கொடு என்கிறான். அப்படித் தலைமகனுரிமையில் என்ன இருக்கிறது? எபிரேய மரபில் தலைமகன் மட்டுமே தந்தையின் ஆசிரிலும், சொத்திலும், உரிமைப்பொருளிலும் முழு மற்றும் முதன்மை உரிமை பெறுபவன். 'சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க' நினைக்கிறான் யாக்கோபு. இது யாக்கோபின் புத்திசாலித்தனமா? சந்தர்ப்பவாதமா? தன் சொந்த சகோதரனிடம் வியாபாரம் பேச வேண்டுமா?

இந்த நிகழ்வை வாசிக்கும்போது பாலாவின் 'பரதேசி' திரைப்படத்தின் ஒரு சீன் நினைவிற்கு வருகிறது. 'டீ எஸ்டேட்டில் எல்லோரும் காய்ச்சலால் செத்துக் கொண்டிருக்கின்றனர். அங்கே மருத்துவம் பார்க்க வருகிற ஒரு டாக்டர் நோயாளியைப் பார்த்து, 'நான் உனக்கு மருத்துவம் பார்க்கிறேன். ஆனால் நீ கிறிஸ்தவனாக மாறுகிறாயா?' எனக் கேட்கின்றார். உயிர்போகும் நிலையில் இருக்கும் நோயாளியும் சம்மதிக்கிறான்'. இதில் டாக்டர் புத்திசாலியா? சந்தர்ப்பவாதியா? அல்லது நோயாளி ஏமாளியா? கதியில்லாதவனா?

நான் சின்னப் பையனாக இருக்கும்போது வீட்டில் எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரக் காரணமாக இருந்தது 'கிறிஸ்தவ மதம்'. வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்டில் இருப்பார் எங்க அப்பா. வாரம் முழுவதம் சும்மா இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சர்ச்சுக்குப் போய்விடுவார் எங்க அம்மா. எங்க ஊரில் திருப்பலி கிடையாது. 12 கிமீ தள்ளி இருக்கின்ற சர்ச்சுக்கு பஸ் பிடித்துப் போய், பின் 20 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். திருப்பலி 10 மணிக்கெல்லாம் முடிந்தாலும், எங்க அம்மா, 'இந்த மீட்டிங், அந்த மீட்டிங்,' 'பைபிள் கிளாஸ்,' 'மாதா சபை' என எல்லாம் முடிந்து சாயங்காலம் 6 மணிக்குத்தான் வருவார்கள். வீட்டில் காலை சமையல் கிடையாது. மதிய சமையல் கிடையாது. சாயங்காலம் வந்து ஏதாவது சமைப்பார்கள். சமையற்கட்டிலேயே சண்டை தொடங்கும். 'வீட்டில ரெண்டு பேர பட்டினி போட்டுட்டு (நானும் - நான் சின்ன வயசில சர்ச்சுக்குப் போனதே இல்லை, எங்க அப்பாவும்) என்ன வந்து கும்பிடுன்னு' உங்க சாமி சொல்லுதானு தொடங்கும் சண்டை. ஒவ்வொரு சண்டையிலும் எங்க அப்பா ஒரு வார்த்தை சொல்வார்: 'என்ன இருந்தாலும் உங்க தாத்தா பால்பவுடருக்காக கிறிஸ்தவர் ஆனவர்தான!'

இதன் அர்த்தம் எனக்கு கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்க்கையைப் படித்தபின்தான் தெரிந்தது. அதாவது எங்க ஊருக்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் மேல்தட்டு மக்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். சாதாரண நிலையில் இருக்கின்ற, பசியால் வாடுகின்ற, எழுத்தறிவற்ற பாமர மக்களை மட்டும் தேடுவார்கள். 'நான் உங்களுக்குக் கோதுமை தருகிறேன், பால்பவுடர் தருகிறேன். நீங்க சர்ச்சுக்கு வாங்க!' என்று அழைத்துப் போவார்களாம். கொடுத்த உணவிற்குத் தகுந்த வேலையை முதலில் வாங்குவார்கள். பின் கழுத்தில் ஒரு செபமாலையைப் போட்டு அனுப்பிவிடுவார்களாம். இப்படி ஆனவர்களுக்குப் பெயர், 'வேதக்காரங்க!'. இன்றும் எங்கள் ஊரில் கிறிஸ்தவர்களை 'வேதக்காரங்க!' என்றே அழைக்கின்றனர். மிஷனரிகளின் வருகை ஒரு பக்கம் நம் மண்ணின் கல்வி, மருத்துவ முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்தது என்று சொன்னாலும், மற்றொரு பக்கம் அவர்கள் நம் கடவுள்களையெல்லாம் பேய்கள் என்று சொல்லி நம்மை ஏமாற்றி மூளைச்சலவை செய்துள்ளனர் என்பதும் உண்மை. 'நம்மைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம் பசியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.'

யாக்கோபும் தன் சகோதரனின் பசியைப் பயன்படுத்திக்கொள்கிறான். நான் எல்லீஸ் நகர் பங்கில் பணிபுரிந்த போது ஒரு இளம்பெண் வந்தார். சொந்த ஊர் மத்திய பிரதேசம் போபால் பக்கம் ஒரு சிற்றூர். மதுரையில் பாலங்கள் கட்டுவதற்காக அவரின் பெற்றோர் கான்ட்ராக்டில் அழைத்து வரப்பட்டார்களாம். பெற்றோர்கள் இறந்து விட்டனர். இவர் தன் உறவினர்களின் கூடாரத்தில் வளர்ந்திருக்கின்றார். தமிழ் நன்றாகப் பேசினார். 'எனக்கு 500 ரூபாய் அவசரமாக வேண்டும். எனக்கு ஏதாவது உங்க சர்ச்சில் வேலை கொடுங்க, நான் செய்றேன்' என்றார். 'இங்கு வேலை ஒன்றும் இல்லை. இன்னொரு நாள் பார்க்கலாம்' என்றேன். பெண் விடுவதாயில்லை. 'என்னைக் கூட நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். எனக்குப் பணம் ரொம்ப அவசரம்' என்றார். எனக்கு அழுகையே வந்து விட்டது.

இந்தப் பெண்ணை யாரும் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் தானே! இன்றும் நாம் மற்றவரின் பசியைப் பயன்படுத்தி நம் வயிற்றை நிறைக்கத்தான் செய்கின்றோம். 'என்னை விட்டா நீ வேற எங்க போக முடியும்?' என்ற நிலையில் நாம் நமக்குக் கீழ் வேலைசெய்பவர்களைப் பயன்படுத்துவதில்லையா. இது இன்னும் சொஃபிஸ்டிகேட்டடாப் போய் நம் உறவுகளிலும் நாம் ஒருவர் மற்றவரை, அவர்களின் பசியை நம் மூலதனமாக்கிக் கொள்கிறோம். திருப்பூர் பனியன் கம்பெனி, கோவை நூல் கம்பெனியில் எல்லாம் 'சுமங்கலி திட்டம்' ஒன்று இருக்கிறது. 5 வருடங்கள் வேலை செய்தால் திருமணத்திற்குத் தேவையான நகைகளை வாங்குவதற்கு 1 இலட்சம் தருவார்களாம். இடையில் சம்பளம் கிடையாது. நல்ல உணவு, தங்குமிடம் கிடையாது. 5 வருடம் முடியப்போகும் நிலையில் பலரை 'உன் நடத்தை சரியில்லை' என்று பழி சுமத்தி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். எங்க ஊரைச் சார்ந்த பலரும் இந்தத் திட்டால் பாழாய்ப்போயுள்ளனர். 'தன் திருமணத்திற்குப் பணம் கிடைக்கும்' என்று கானல்நீரையே கனவு கொண்டிருக்கும் இந்தப் பெண்களை இன்றும் முதலாளி வர்க்கம் பயன்படுத்தத்தானே செய்கின்றது. 'ஒருவன் பசியால் இருப்பது, வறுமையில் வாடுவது, தேவையில் உழல்வது, யாருமின்றித் தத்தளிப்பது, படிக்க வழியில்லாமல் இருப்பது' - இவையெல்லாம் யார் குற்றம்? இவர்களின் குற்றமா? அல்லது இவர்களை இப்படிப் படைத்த கடவுளின் குற்றமா?

ஆகவே, யாக்கோபு தன் சகோதரனின் பசியைப் 'பயன்படுத்திக்கொண்டது' குற்றமே!

நம்ம அண்ணன் ஏசாவைப் பார்ப்போம். 'ஏன்ப்பா. பசிக்குதுன்னா ... அதுக்காக என்ன கேட்டாலும் செய்துடுவியா?' 'பசியென்றால் பத்தும் பறந்துவிடும்' என்பார்கள். இந்தப் பழமொழியை ஆராய்ந்து பார்த்தேன். இந்தப் பழமொழி முதலில், 'பசியென்றால் பற்றும் பறந்துவிடும்!' என்றுதான் இருந்தது. 'பற்று' என்பது பேச்சு வழக்கில் 'பத்து' என மாறிவிட்டது. அதாவது, பசியென்று ஒருவன் இருந்தால், வறுமையில் ஒருவன் இருந்தால் அவன் சொந்தக்காரர்கள், பற்றுடையோர் அவன் அருகில் வரமாட்டார்கள் என்பது முதல் பொருள். இரண்டாவதாக, பசி நம் எல்லாப் பற்றுக்களையும் மறக்கச் செய்து விடும் என்ற பொருள். ஆகையால் தான், பற்றற்ற முனிவர்கள் 'பசியை, நோன்பை' தங்கள் முதல் கடமையாகக் கொண்டிருந்தனர். ஏசாவின் பசி, தலைமகனுரிமையில் மேல் இருந்த பற்றே வேண்டாம் எனச் சொல்லிவிட்டது. 

Emotional Intelligence என்ற நூலின் வழியாக ஒரு புதிய intelligence-ஐ அறிமுகப்படுத்திய டேனியல் கோல்மென் என்ற உளவியல் அறிஞர், மனிதரின் மனமுதிர்ச்சிக்கான முதல் பண்பு என முன்வைப்பது: 'delaying the gratification' - 'உடனடி இன்பங்களைத் தள்ளிப் போடுவது'. இதை நிருபணம் செய்ய ஒரு ஆய்வை நடத்துகின்றார்: 'ஐந்து வயதிற்குட்பட்ட, 1ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 50 குழந்தைகள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். ஒருநாள் அவர்கள் வகுப்பறையில் இருக்கும்போது அவர்களின் வகுப்பறைக்குள் வருகின்ற ஆசிரியை வழக்கமாகக் கொண்டு வரும் சாக்பீஸ், நோட்புக்கிற்குப் பதில் ஒரு வாளியோடு வருகிறார். குழந்தைகள் மத்தியில் சலசலப்பு. வாளியை உற்றுப் பார்க்கின்றனர். வாளி நிறைய ஜிலேபி. ரொம்ப சந்தோஷம். வாளியை மேசையில் வைக்கின்ற ஆசிரியை குழந்தைகளைப் பார்த்து, 'இன்னைக்கு உங்களுக்கு பாடம் கிடையாது!' என்கிறார். 'கண்ணா லட்டு திண்ண ஆசையா!' என்பது போல கைதட்டுகின்றனர். (இன்னைக்கும் எந்த டீச்சர் தங்கள் பசங்களிடம் பாடம் இல்லைன்னு சொன்னாலும் பசங்க சந்தோஷப்படுகின்றனர். எங்க யுனிவர்சிட்டியும் விதிவிலக்கல்ல!) 'இன்றைக்கு உங்க எல்லாருக்கும் ஜிலேபி கொடுக்கப்போறேன்' என்கிறார் ஆசிரியர். 'கண்ணா, ரெண்டாவது லட்டு திண்ண ஆசையா!' என்பதுபோல் ஆர்வமாகின்றனர். எல்லாருக்கும் ஜிலேபி பாக்கெட் கொடுத்தாயிற்று. டீச்சர், 'எனக்கு பிரின்சிபல் அறையில் ஒரு சில்லறை வேலை இருக்கிறது. நான் வர 15 நிமிடங்கள் ஆகலாம். நீங்க ஜிலேபியை சாப்பிடனும்னு நினைச்சா சாப்பிடலாம். ஆனா, யார் நான் வரும் வரை சாப்பிடாம வச்சிருக்காங்கலோ அவர்களுக்கு நான் இன்னும் இரண்டு பாக்கெட் கொடுப்பேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இந்தக் குழந்தைகளின் செயல்பாட்டை கேமராக்கள் வழியாகக் கண்காணிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள். குழந்தைகளோட ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்? சில குழந்தைகள் டீச்சர் வெளிய போன உடனே ஜிலேபியை சாப்பிட்டுவிடுகின்றனர். சிலர் ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸாக கிளாக்கைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். சிலர் தங்கள் பைகளில் ஒளித்து வைத்துக்கொண்டனர். சிலர் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளோடு '50-50' என்று பேரம் பேசினர். மற்றும் சிலர் ஜிலேபியை சாப்பிடமால் இறுதிவரை வைத்திருந்தனர். இதே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் இவர்கள் படிக்கும் கல்லூரி. வேலை பார்க்கும் இடங்களைத் தேடிச் செல்கின்றனர் உளவியல் அறிஞர்கள். இப்போது அவர்கள் எடுக்கும் டெஸ்ட், 'உணர்வுகள் கையாளும் டெஸ்ட்'. நமக்கிருக்கும் கோபம், அன்பு, எரிச்சல், பசி போன்ற உணர்வுகளை எப்படிக் கையாளுகிறார்கள்? யாரெல்லாம் உடனே ஜிலேபியை சாப்பிட்டார்களோ அவர்கள் உணர்வு முதிர்ச்சியில் குறைந்தவர்களாகவும், யாரெல்லாம் கடைசி வரை சாப்பிடாமல் வைத்திருந்தார்களோ அவர்கள் உணர்வு முதிர்ச்சியில் மேம்பட்டவர்களாகவும் இருப்பதாகக் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் சொல்லும் ஆய்வு முடிவு இதுதான்: உடனடி இன்பங்களைத் தள்ளிப்போடுவதன் வழியே நிலையான மகிழ்ச்சியை நாம் பெற முடியும்!

இன்றைக்கு நாம் இருக்கும் உலகம் உடனடி உலகம். எல்லாம் உடனடி. உணவு, காஃபி எனத் தொடங்கி இப்போ உடனடி உணர்வு, உடனடி உறவு, உடனடி திருமணம், உடனடி பிரிவு என வளர்ந்துவிட்டது. இந்த உலகமே நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் எனத் துடிக்கிறோம். 

தாங்கள் iPad வாங்கத் தங்கள் பெற்றோர்கள் பணம் கொடுக்க இயலாததால் தங்கள் கிட்னிகளை விற்று iPad வாங்கிய இரண்டு சிறுவர்களை இப்போது கண்டுபிடித்துள்ளனர் சீனாவின் பெய்ஜிங்கில். iPadக்காக கிட்னி கொடுக்கத் துணிந்த சிறுவர்களைப்போலத்தான், ஒரு தட்டுக் கூழுக்காக தன் தலைமகனுரிமையை விட்டுக்கொடுக்கத் துணிகின்றான் ஏசா. வாழ்வில் நாம் அன்றாடம் 'எப்படியாவது வேண்டும்' என அனுபவிக்கத் துடிக்கும் சிற்றின்பங்களையும், ஆசைகளையும் விடுத்தால் மகிழ்ச்சி நம் மடியில் தவழும்.

'பசி இருக்கும் வரை பசியாய் இருப்பவர்களை விலைபேசும் யாக்கோபுக்களும், விலை இருக்கிறது என்பதற்காக எதையும் விற்கத் துணியும் ஏசாயுக்களும்' என்றும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.

'தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?'

Friday, September 20, 2013

எனக்கு இப்படி நடப்பது ஏன்?


ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார். ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர், 'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார். (தொடக்கநூல் 25:21-22)

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?'

'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை'

'ஏன்?' - இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம். 'ஏன் இப்படி?' 'ஏன் அப்படி?' என்று குழந்தைப்பருவத்தில் கேள்விகள் வழியாகவே நாம் உலகை அறிந்துகொள்ள முற்பட்டோம். வாழ்வின் எதார்த்தங்கள் பொருள்தராதபோதெல்லாம் நாம் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம்.

இந்தக் கேள்வியை இன்று கேட்பவர் நம் ரெபேக்கா. இதன் சூழல் என்ன?

தன் தந்தையின் வீட்டிலிருந்து புறப்பட்டு காகோர் வந்த ரெபேக்கா ஈசாக்கை மணம் முடிக்கின்றார். தொடர்ந்து, நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த ஆபிரகாம் இறந்து விடுகின்றார். 'தம் மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விடுகின்றார்' (தொநூ 25:5). ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா போன்ற முதுபெரும் தந்தையர்கள் இறந்த நிகழ்வுகளையெல்லாம் குறிப்பிடும்போது பைபிள் அவர்கள் தங்கள் சந்ததியினருக்கு அளித்த ஆசியுரைகளையும் குறிப்பிடுகின்றது. ஆனால் ஆபிரகாம் தன் மகனுக்கு ஆசிர் அளித்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தன் செல்வத்தை (எபிரேயத்தில்: ஆசிர்) விட்டுச்செல்கின்றார்.

ஆபிரகாமை அடக்கம் செய்யும் சடங்கில் இஸ்மயேலும் பங்கேற்கின்றார். ஆபிரகாம் அடக்கம் செய்யப்படும் இடம் மக்பேலா குகை. இந்த இடத்தைத்தான் அவர் எபிரோனிடமிருந்து விலைகொடுத்து வாழ்கின்றார். ஈசாக்கின் திருமண நிகழ்வு மீண்டும் ஒருமுறை எழுதுகின்றார் ஆசிரியர் (25:20). 

ரெபேக்கா மலடியாயிருக்கிறார். 20 ஆண்டுகளாக பிள்ளைப்பேறின்றி இருக்கிறார். அவரின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க நினைக்காத ஈசாக்கு அவருக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். இறைவன் அவரது செபத்தைக் கேட்கின்றார். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்காகச் செய்யும் செபம் இதுதான் முதல் மற்றும் இறுதி முறை. வெறுமையில் இருந்த ரெபேக்காவின் வாழ்க்கையில் வளமையைக் கொண்டு வருகின்றார் இறைவன். குழந்தையில்லாத நிலை போய் இரட்டைக்குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

இப்பொழுதான் பிரச்சினை. குழந்தைகள் இருவரும் வயிற்றினுள்ளே சண்டையிட்டுக் கொள்கின்றனர். 'ஏதோமுக்கும், இஸ்ராயேலுக்கும் பிற்காலத்தில் இருந்த சண்டை, சச்சரவுகளையும், போர்களைம்' முன்னோட்டமாக எழுதுகின்றார் ஆசிரியர். சண்டையிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளை நினைத்து வருந்துகின்ற ரெபேக்கா ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.

சமயம் தோன்றிய வரலாறு என்றும் வியப்பாகவே இருக்கின்றது. மனிதர் எப்போது கடவுளைத் தேடுகின்றனர்? தன் ஆற்றல் முடியும் இடத்தில்தான் கண்களை உயர்த்திப் பார்க்கின்றான். 'தன் ஆற்றலில் ஒன்றுமில்லை' என்று உணர்கின்ற ஈசாக்கு ஆண்டவரிடம் மன்றாடுகின்றார். 'தன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று உணர்கிற ரெபேக்கா ஆண்டவரிடம் முறையிடுகின்றார். வாழ்க்கையில் நம் முன்னால் எப்போதும் ஒரு திரைச்சீலை தொங்கிக் கொண்டே இருக்கின்றது. திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளலாம். 'இப்படித்தான் - அப்படித்தான்!' என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இந்தத் திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும்? என்ற ஆர்வம் தான் நம்மைக் கடவுளைத் தேடச் சொல்கிறது. 'இப்படி இருக்க வேண்டும்!' என சில நேரங்களில் கடவுளிடம் முறையிடுகின்றோம். 'இப்படி இருக்குமோ?' எனப் பயப்படுகின்றோம். 'இப்படி இருந்துவிட்டால் என்ன செய்வது? எனக் கலங்குகிறோம். மனிதர்கள் அனுபவிக்கும் உச்சகட்ட துன்பம் இதுதான். தன் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தால் காலநிலையை முன்னறிவிக்கும் மனித மூளை, தனி மனிதரின் வாழ்க்கைநிலையை முன்னறிவிப்பதில் தோற்றுத்தான் போகின்றது. 'என்னவும் நடக்கலாம்!' என்ற மனநிலையிலேயே நம்மை வைத்திருக்கின்றது வாழ்க்கை. பாவம் மனிதர்கள்! 'ஒவ்வொரு முறை நாம் காலண்டரில் அப்பாய்ண்ட்மெண்ட் எழுதும்போதெல்லாம் கடவுள் சிரிப்பார்' என்று சொல்வார்கள்.

இந்த பரிதாப நிலையிலிருந்து வெளிவர ஒரே வழி இறைவனைச் சராணகதியடைவது. அதையே ரெபேக்கா செய்கின்றார். இறைவனும் உடனடியாகப் பதில் தருகின்றார். 'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்ற ரெபேக்காவின் கேள்வியைப்போலத்தான், புதிய ஏற்பாட்டில் மரியா கேட்கும், 'இது எங்ஙனம் ஆகும்?' என்ற கேள்வியும் இருக்கின்றது. 

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்ற கேள்வியைப்போல நாம் கேட்கும் கேள்வி, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்பதுதான்.

இரண்டு கேள்விகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. முதல் கேள்வியில் 'ஏன்?' என்ற வார்த்தை காரணத்தைப் பதிலாகத் தேடுகின்றது. ஆனால் இரண்டாம் கேள்வியில் மற்றவரோடு நாம் செய்யும் ஒப்பீடு ஒளிந்திருக்கிறது. 'எல்லாரும் நல்லா இருக்காங்க! நான் மட்டும் ஏன்?' என்ற பொறாமையும், விரக்தியும், கோபமும் இருக்கிறது. 

'ஏன்' என்ற வார்த்தைதான் நமக்கு அதிகமாக மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றது. ஏனெனில் இந்தக் கேள்விக்குப் பல நேரங்களில் பதில்கள் இல்லை. அல்லது, நாம் விரும்பும் பதில்கள் கிடைப்பதில்லை. இன்றைக்கு எல்லாருமே மன அழுத்தம் பற்றிப் பேசுகின்றனர். எல்.கே.ஜி, யூ.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்குக் கூட 'மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி' என்ற கருத்தமர்வுகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. 

ஏன் படிக்கணும்? ஏன் பள்ளிக்கூடம் போகணும்? ஏன் பரிட்சை எழுதணும்? ஏன் மார்க் வாங்கணும்? ஏன் வேலை பார்க்கணும்? ஏன் சம்பளம் வாங்கணும்? ஏன் கல்யாணம் முடிக்கணும்? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளணும்? ஏன் கோயிலுக்குப் போகணும்? ஏன் சாமி கும்பிடணும்? ஏன் ஓட்டுப் போடணும்? ஏன் சாப்பிடணும்? ஏன் தூங்கணும்? ஏன் சொந்தக்காரங்க? ஏன் நண்பர்கள்? ஏன் சண்டை போடணும்? பின் ஏன் சமாதானம் பண்ணணும்? என்று நாம் கேட்கும்போதெல்லாம் நம்மையறியாமல் மன அழுத்தம் நம்மீது ஏறி அமர்ந்து கொள்கின்றது.

மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற முதல் வழி அது சம்பந்தப்பட்டவரிடம் பேசிவிடுவது. 'ஏன் வேலை செய்யணும்?' என்று புலம்புவதற்குப் பதில் 'நான் பார்க்கும் இந்த வேலையில் உள்ள பிரச்சனை என்ன? இதை நான் எப்படி சமாளிப்பேன்?' என்று நம்மை ஆராய்ந்தால் அல்லது நமக்கு வேலை கொடுத்தவரிடம் அமர்ந்து பேசிவிட்டால் அழுத்தம் குறைந்து விடும். 'தன் கேள்வி கடவுள் சம்பந்தப்பட்டது' என்பதால் கடவுளிடம் முறையிடுகிறார் ரெபேக்கா.

ஒரு வகுப்பறைக்குள் நுழைகின்ற பேராசிரியர் தன் கையில் ஒரு கிளாசில் தண்ணீர் கொண்டு போகின்றார். தன் கையில் கிளாசை ஏந்துகின்ற பேராசிரியர், 'என் கையில் இருப்பது என்ன?' என்று கேட்கின்றார். சிலர் கிளாஸ் என்கின்றனர். சிலர் தண்ணீர் என்கின்றனர். சிலர் கிளாசில் தண்ணீர் என்கின்றனர். 'இதன் எடை எவ்வளவு?' என மீண்டும் கேட்கின்றார். 20 கிராம் முதல் 500 கிராம் வரை என பதில்கள் வருகின்றன. பேராசிரியர் தொடர்ந்து சொல்கின்றார்: 'இதன் எடை ஒரு பொருட்டல்ல. இதை நான் எவ்வளவு நேரம் கையிலே பிடித்திருக்கின்றேன் என்பதுதான் முக்கியம். ஒரு நிமிடம் இதை வைத்திருந்தால் ஒன்றுமில்லை. ஒரு மணிநேரம் இப்படியே பிடித்திருந்தால் என் வலது கை வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுவதும் பிடித்திருந்தால் ஒரு ஆம்புலன்சை நீங்கள் கூப்பிட வேண்டியிருக்கும். நீண்ட நேரம் கையில் வைத்திருக்கும்போது அதன் எடையும் நீண்டுகொண்டே போகிறது.'

'இதுபோலத்தான் நம்மில் இருக்கும் மனஅழுத்தமும். எந்நேரமும் நாம் சுமைகளைத் தூக்கிக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நாம் தூக்க இயலாமல் சோர்ந்து போய்விடுகிறோம். சுமைகளை எவ்வளவு சீக்கிரத்தில் இறக்கி வைத்துவிடுகின்றோமே அவ்வளவிற்கு நமக்கு நல்லது. இந்தக் கிளாசையும் ரிப்ரஷ் செய்து சுமந்தால் இது சுமையாகவே தெரியாது. இன்று வீட்டிற்குச் செல்லும்போது எதையும் சுமந்து செல்லாதீர்கள். கல்லூரியில் உள்ளதை கல்லூரியில் விட்டுவிடுங்கள். வீட்டில் உள்ளதை வீட்டிலேயே விட்டுவிடுங்கள். ரிலாக்ஸ். விட்டதைப் பின் சுமங்கள். வாழ்க்கை இனிதாகும். சுமை எளிதாகும்!'

இன்று ரெபேக்கா சொல்லும் பாடமும் இதுதான்:

சம்பந்தப்பட்டவர்களிடம் சம்பந்தப்பட்டதை இறக்கி வைத்து விடுங்கள். தூக்கிக் கொண்டே திரியாதீர்கள். இன்னும் நாம் செல்ல வேண்டிய மைல்கள் ஏராளம்!

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?'

Thursday, September 19, 2013

இவரோடு போகிறாயா?

பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, 'நான் வந்த காரியத்;தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்' என, லாபான் 'சொல்லும்' என்றான் ... அதற்கு அவர்கள், 'பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்' என்றனர். அப்படியே ரெபேக்காவை அழைத்து, 'இவரோடு போகிறாயா?' என்று அவரைக் கேட்டனர். அவரும் 'போகிறேன்' என்றார் ... அவர் அந்த வேலைக்காரரிடம், 'வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?' என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், 'அவர்தாம் என் தலைவர்' என்றார். (தொடக்கநூல் 24:34,58,65)

கிணற்றடியில் தொடங்கிய பெண் பார்க்கும் படலம் இப்போது ரெபேக்காவின் வீட்டில் தொடர்கிறது. ரெபேக்காவின் சகோதரர் லாபான் ஆபிரகாமின் வேலைக்காரரை வரவேற்று விருந்து படைக்கின்றார். 'தான் வந்த காரியம் நிறைவேறும் முன் உண்ணப்போவதில்லை' என்று அடம் பிடிக்கும் வேலைக்காரர் தான் வந்த காரியத்தைச் சொல்கின்றார். ரெபேக்காவின் தந்தை பெத்துவேலுக்கும், சகோதரன் லாபானுக்கும் அவர் சொன்ன காரியம் பிடித்திருக்கின்றது. 'இது ஆண்டவரால் வந்தது!' என இருவரும் சரணடைகின்றனர். 'நம் ரெபேக்காவையும் ஒரு வார்த்தை கேட்டு விடலாமே?' என்று அவர்கள் அவரின் சம்மதம் கேட்க, அவரும் 'போகிறேன்!' என்ற ஒற்றைச் சொல்லால் தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றார். சொன்னது மட்டுமல்லாமல் உடன் பயணம் செய்கிறார். ஈசாக்கைத் தொலைவில் காண்கின்றார். கண்டதும் காதல். வெட்கத்தால் தம் முக்காட்டை எடுத்து மூடிக்கொள்கின்றார். தம் தாயின் கூடாரத்திற்குள் அவரை அழைத்துச் சென்று மணந்து கொள்கின்றார். தன் தாயின் மறைவு தந்த துயரத்திற்கு ரெபேக்கா என்ற தன் காதலிடம் மருந்தைப் பெறுகிறார்.

பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி 66 வசனங்கள் பேசும் இந்நூலின் ஆசிரியர் திருமண நிகழ்வை ஒரே வசனத்தில் எழுதுவிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த ஒரே வசனத்திலும், 'ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு கூர்ந்தார்' என்ற ஒரே சொற்கோர்வையில் முடித்து விடுகிறார். ஏன் இந்த அவசரம்? ஆபிரகாம் அனுப்பிய வேலைக்காரர் ஆபிரகாமிடம் திரும்பாமல் ஈசாக்கிடம் திரும்புவது ஏன்? தன் கூடாரத்திற்கு அழைத்துச் செல்லாமல், தன் தந்தையிடம் அழைத்துச் செல்லாமல் இறந்து போன, இப்போது காலியாய் இருக்கின்ற தன் தாய் சாராவின் கூடாரத்திற்கு அழைத்துச் செல்வது ஏன்? ஆபிரகாமிற்கு பெண் பிடித்திருந்ததா? பிடிக்கவில்லையா?

பெண் பார்க்கும் படலத்தில் இரண்டாம் பகுதி நமக்கு வைக்கும் பாடங்கள் என்ன?

1. முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது. ஸ்டீபன் கோவே என்ற மேலாண்மையியல் அறிஞரின் புகழ்பெற்ற 'The Seven Habits of Highly Effective People' வைக்கும் வெற்றியாளர்களின் முதல் பண்பு இதுதான்: Put First Things First - முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது. என்னதான் விருந்து, உபசரிப்பு என எல்லாம் தடபுடலாக இருந்தாலும் வேலைக்காரர் தன் வேலையில் கருத்தாய் இருக்கிறார். 'தான் வந்த காரியம் விருந்து அல்ல, மாறாக, தன் தலைவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதி!' என்பதில் உறுதியாய் இருக்கும் அவர், 'நான் வந்த காரியம் நிறைவேறுமுன் உண்ணப்போவதில்லை!' என்கிறார். என்ன ஒரு துணிச்சல்? நம்ம ரோட்ல ஒருத்தர் போறாருன்னு வச்சிக்குவோம். அவர்மேல் இரக்கப்பட்டு அவருக்கு சோறு போட நாம் முனையும்போது, 'நான் வந்த காரியம் ஒன்னு இருக்கு!' என்று அவர் சொன்னால் நாம் எப்படி ரியாக்ட் பண்ணுவோம்? லாபான் ரொம்ப கூலாக, 'சொல்லும்' என்கிறான். சொன்னவுடன் வேலை முடிந்து விடுகிறது. 

முதன்மையானதை முதன்மையானதாக வைக்க வேண்டுமென்றால் முதலில் முதன்மையானது எது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். இலக்குத் தெளிவில்லையென்றால் நம்மால் எதையும் முதன்மைப்படுத்த முடியாது. துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கும், கொளரவர்களுக்கும் வைத்த வில்வித்தைப் போட்டியை நாம் அறிவோம். புறாவின் கண்ணை மட்டும் இலக்காக வைக்கின்ற அர்ஜூனர் மட்டுமே வெற்றி பெறுகின்றார். மரமும் வேணும், கிளையும் வேணும், இலையும் வேணும், புறாவும் வேணும், கண்ணும் வேணும் என்றால் வெற்றி பெற முடியாது. அப்படி நினைக்கிறவர்கள் எல்லாவற்றிலும் சமரசம் செய்பவர்களாக மாறிவிடுவார்கள். 

நமக்குத் தெரிந்த ஒரு கதை. முதன்மைப்படுத்தலுக்குச் சொல்லப்படும் கதை. ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன் வகுப்பிற்குள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வருகின்றார். மேலும் தன் கைப்பையைத் திறந்து தான் கொண்டு வந்த பெரிய கற்கள், சிறிய கூழாங்கற்கள், மண் மற்றும் தண்ணீரை வெளியே எடுத்து வைக்கின்றார். மற்றொரு பையைத் திறந்து ஒரு beer பாட்டிலை எடுத்து வைக்கின்றார். மாணவர்கள் மத்தியில் சலசலப்பு. பேராசிரியர் கேட்கின்றார்: 'இக்கண்ணாடிக் குடுவையை நிரப்ப வேண்டுமெனில் முதலில் எதைப் போட வேண்டும்?' சிலர் கற்கள் என்கின்றனர். சிலர் மண் என்கின்றனர். சிலர் தண்ணீர் என்கின்றனர். ஆனால் ஆசிரியர் முதலில் பெரிய கற்களையும், பின்னர் கூழாங்கற்களையும், பின்னர் மண்ணையும், பின்னர் தண்ணீரையும் ஊற்றி கண்ணாடிக் குடுவையை நிரப்புகின்றார். மாணவர்கள் 'வாவ்!' என கைதட்டுகின்றனர். 'என்ன ஓட்றீங்களா?' என்று கேட்கின்ற பேராசிரியர் தொடர்ந்து, 'கண்ணாடிக் குடுவை என்பது வாழ்க்கை. பெரிய கற்கள் என்பவை நம் இலட்சியங்கள். கூழாங்கற்கள் என்பவை நாம் சம்பாதிக்கும் பொருட்கள் மற்றும் பணம் மற்றும் அதற்காக நாம் செய்யும் வேலை. மண் என்பது நாம் அன்றாடம் செய்ய வேண்டிய கட்டாய வேலைகள். தண்ணீர் என்பது நம் பொழுதுபோக்கு அம்சங்கள். இவற்றில் பெரிய கற்களை விடுத்து மற்றவற்றைக் கொண்டு மட்டும் நாம் நிரப்ப நினைத்தால் இறுதியில் அவைகளுக்கு இடமில்லாமல் போய்விடும். நாம் அதைத் திணிக்க நினைத்தால் அது குடுவையையே உடைத்து விடும்!' என்கிறார். ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தி, 'அப்படின்னா அந்த beer பாட்டில் எதுக்கு?' என்கிறான். பேராசிரியர் சொல்கிறார், 'வாழ்க்கை எவ்வளவுதான் கஷ்டமாக இருந்தாலும், நம் இலட்சியங்களும், வேலைகளும், கடமைகளும் நம்மை நெருக்கினாலும் நம் நண்பர்களோடு அமர்ந்து beer குடிக்க கண்டிப்பாக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நட்பு எல்லா அழுத்தத்திலுமிருந்து விடுதலை தரும்!'

2. 'இவருடன் போகிறாயா?' இதன் எபிரேய மொழிச்சொல்லாடலை 'அவரோடு போகிறாயா?' என்றும் மொழிபெயர்க்கலாம். நாம் 'அவரோடு' என்ற பயன்பாட்டிலேயே எடுத்துக்கொள்வோம். 'இவரோடு!' என்பது உடனடியாக வேலைக்காரரைக் குறித்தாலும், அது இறுதியாக 'அவரோடு' என்று ஈசாக்கையே சுட்டுகின்றது. இந்த வார்த்தைகளில் மூன்று அர்த்தங்கள் உள்ளன:

அ. முதலில் சம்மதம் கேட்பது. இன்றைக்கு பல திருமணங்கள் திடீரென்று முறிந்து விடுவதற்குக் காரணம், 'என்ன ஒரு வார்த்தை கேட்டீங்களா?' என்ற கேள்விதான். அதிலும், 'பெண் என்றால் பெற்றோர் சொல் கேட்க வேண்டும்' என்றும் 'பொண்ணுக்கு என்ன சார் தெரியும், நாம முடிவு எடுப்போம்' என்றும் 'நான் என்ன சொன்னாலும் என் பொண்ணு கேட்பா!' என்றும் ஆணாதிக்கம் செய்யும் பெற்றோர்கள், உடன்பிறந்தோர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். எபிரேய சமுதாயம் பெண்ணை மதிக்கும் சமுதாயம். பெண் ஒரு சக்தி. பெண் இல்லையென்றால் ஆண் இல்லை என உணர்ந்த சமுதாயம். ஆகையால்தான் சம்மதம் கேட்கிறது. இது திருமணத்திற்கு மட்டுமல்ல. எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். நாம் மற்றவர்களிடம் கேட்கும் சம்மதம் அவர்களை நாம் மதிக்கிறோம் என்பதையே காட்டுகின்றது. இன்று திருமண வாழ்க்கை மட்டுமல்ல, துறவற வாழ்க்கையும் புளித்துப் போவதற்குக் காரணம் இதுதான் - யாரும் யார் சம்மதத்தையும் கேட்பதில்லை. 'உன்னை திருமணம் முடிச்சது ஒரு குற்றமா? நீ சொல்றதயெல்லாம் நான் ஏன் கேட்கணும்?' னு ஒரு பெண் தன் கணவரைப் பார்த்துக் கேட்கவோ, 'உங்க சபையில அல்லது உங்க மறைமாவட்டத்தில சேர்ந்தது ஒரு குற்றமா? எப்ப பார்த்தாலும் உங்க இஷ்டத்துக்கே செய்றீங்க? நான் என்ன உங்க கைப்பொம்மையா?' என்று ஒரு ஃபாதரோ, ஒரு சிஸ்டரோ, ஒரு பிரதரோ தன் மேலிடத்தைப் பார்த்துக் கேட்க ரொம்ப நேரம் ஆகிவிடாது. யாரும் யாருக்கும் எஜமானரல்ல – கட்டளையிடுவதற்கு. 'நீயும் இந்த உலகத்திற்குத் தனியாகத்தான் வந்தாய், உலகை விட்டு தனியாகத்தான் போவாய், நானும் தனியாகத்தான் வந்தேன், தனியாகத்தான் போவேன்!' - இந்த இடைப்பட்ட நாட்களில் நீ ஏன் என்னை அரசாள நான் விடவேண்டும்? நீ என்ன என்னைவிட பெரிய ஆளா? என்னை எனக்குத் தெரிந்ததைவிட உனக்கு என்ன தெரியும்?

ஆ. 'அவரோடு'. 'அவரோடு' என்பது திருமண நிகழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகவே பைபிளில் உள்ளது. சாம்சன் திம்னாவில் பெண் பார்த்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும்போது 'அவரோடு' இருக்க முப்பது பேர் கூட்டி வரப்படுகின்றனர் (நீதித்தலைவர்கள் 14:11). மேலும் இயேசு தம் சீடர்களில் பன்னிரண்டு பேரை திருத்தூதர்களாய் நியமித்தபோது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பணி 'அவரோடு இருக்க' (மாற்கு 3:14) என்பது தான். 'அவரோடு' இருப்பதில் ரொம்ப ரிஸ்க் இருக்கின்றது. அவர் யார் என்பது தெரியாது? அவர் குடிப்பாரா? அவர் அடிப்பாரா? அவர் பாசம் காட்டுவாரா? எதுவுமே தெரியாது. ஆனால் 'அவரோடு' செல்ல விழைகின்றார் ரெபேக்கா. 'அவரோடு' செல்வது என்பது இருட்டில் எடுத்து வைக்கும் காலடி போன்றது. பள்ளம் இருக்குமா? மேடு இருக்குமா? முள் இருக்குமா? மலர் இருக்குமா? எதுவும் தெரியாது. திருமணத்திலும், துறவறத்திலும் ஒருவர் மேற்கொள்ளும் பயணமும் இப்படித்தான்: இருட்டில் பயணம். இருந்தாலும் நாம் ரிஸ்க் எடுக்கின்றோம்.

இ. 'அவரோடு' என ஒருவர் வருகிறார் என்றால் அவர்மேல் நமக்குள்ள கடமை. 'அவரோடு' என்பது ஒருவழிப் பாதை அன்று. நான் அவரோடு செல்கிறேன் என்றால், அவரும் என்னோடு இருக்க வேண்டும். நான் அவரோடு. ஆனால் அவர் வேறொருவரோடு என்றால் வாழ்க்கை எப்படி இனிமையாக இருக்கும்? திருமண அன்பிலும், துறவற அர்ப்பணத்திலும் உரிமைகளும் இருக்கின்றன. கடமைகளும் இருக்கின்றன. உரிமைகள் மட்டும் போதும். கடமைகள் வேண்டாம் எனச் சொல்ல முடியாது. 'ஒரு குச்சியின் ஒரு முனையைக் கையில் எடுக்கும்போது மறுமுனையும் சேர்ந்தேதானே வரும்!'

3. 'நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?' கேட்கின்றார் ரெபேக்கா. அப்படி வந்து கொண்டிருந்தவர் நம் ஹீரோ ஈசாக்கு. தன் தாயின் கூடாரத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். தான் அவரை மனைவியாக்குமுன் முதலில் தன் தாயாக்குகின்றார். இதுதான் திருமண உறவின் மையம். ஒரு பெண் ஒருவருக்கு மனைவியாகுமுன் அவருக்குத் தாயாக வேண்டும். ஒவ்வொரு ஆணும் திருமணத்தில் இரண்டாம் முறை பிறக்கிறான். அவ்வகையில் பெண் அவனின் இரண்டாம் கருவறையாகிறாள். 'மனைவியாக' மட்டும் பார்க்கும் அன்பு காமத்தில் முடிந்து விடுகிறது. 'தாயாகப்' பார்க்கும் அன்பே அவளின் தியாகத்தையும், பகிர்வையும், அரவணைப்பையும், கரிசணையையும் நமக்கு உணர்த்துகிறது. திருமணம் முடித்துச் செல்லும் பெண்ணின் முதல் குழந்தை அவரது கணவன். ஒரு ஆணின் இரண்டாம் தாய் அவனது மனைவி. 

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'துறவியும் மீனும்' என்ற ஐந்து நிமிட ஜென் குறும்படத்தைப் பற்றித் தன் வலைப்பக்கத்தில் எழுதுகின்றார்:

'புத்த மடாலயம் ஒன்றில் ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒருநாள் ஒரு புத்த பிக்கு அதில் அழகாக நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனைப் பார்க்கிறான். உடனே அதைப் பிடிக்க வேண்டும் என நினைத்து ஒரு தூண்டில் எடுத்து வந்து மீன்மேல் வீசுகிறான். மீன் தப்பி ஓடுகிறது. பின் வலையை விரிக்கிறான். வலையிலும் அது விழவில்லை. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமேயில்லை. அந்த மீனை எப்படிப் பிடிப்பது என சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம் அதைப்பற்றியே பேசுகிறான். மீன் பிடிப்பது எப்படி? என்று புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனால் அவனால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை. அம்பு விட்டு;ப் பார்க்கிறான். உள்ளே இறங்கி அதை விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். முடியவேயில்லை. இறுதியாக, மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம், அதன் போக்கில் நாமும் கலந்துவிட வேண்டும், அதுவே மீனைப் புரிந்துகொள்ளும் வழி என நினைத்து மீனோடு நீந்துகிறான். அவனும் மீனும் நெருக்கமாகி விடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இருவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளியை நோக்கி மகிழ்ச்சியாக வானில் தாவி மறைகிறார்கள்'.

திருமணமும், துறவறமும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை மீனாக நினைத்து அதைப் பிடித்து உரிமையாக்கிக் கொள்ள நினைத்து தூண்டில், அம்பு, வலை, புத்தகம் என எவற்றைப் பயன்படுத்தினாலும் அவைகளால் பயனில்லை. ஒருவர் மற்றவரோடு இணைந்து நீந்தத் தொடங்கினால் இருவரும் ஒன்றிணைந்து விடலாம்.

'இவர் யார்?' எனத் தெரியாமலே ஈசாக்கைக் கரம் பிடிக்கிறார் ரெபேக்கா. அவரைத் தன் தாயாக்கி, பின் தன் மனைவியாக்குகின்றார் ஈசாக்கு. இருவரும் இணைந்து கடவுளின் கைகள் என்ற நீர்த்தேக்கத்தில் நீந்துகின்றனர். ஒருவர் மற்றவரோடு கலந்துவிடுகின்றனர். இதுவே திருமண அன்பு! இதுவே துறவற அர்ப்பணிப்பு!

'இவரோடு போகிறாயா?'

'அவர் யார்?'