Thursday, July 24, 2014

'முடியும்!' என்கிறது யோபு நூல்!

முதல் ஏற்பாட்டில் ஞானநூல்கள் என்று சொல்லப்படும் ஐந்து நூல்களில் திருப்பாடல்களில் பாடலாசிரியர் எழுப்பும் கேள்விகளை மையமாக வைத்து கடந்த 75 நாட்களாக நாம் சிந்தித்தோம்.

இன்று முதல் யோபு நூலும் அது நமக்குச் சொல்லும் பாடமும், இன்றைய சூழலில் அதன் இன்றியமையாமையும் என சிந்திப்போம்.

ஞானநூல்கள் எனப்படுபவை எவை?

யோபு, திருப்பாடல்கள், நீதிமொழிகள், சபை உரையாளர், இனிமைமிகு பாடல்

'நாம் எப்படி துன்புற வேண்டும்' என யோபுவும்,
'நாம் எப்படி செபிக்க வேண்டும்' என திருப்பாடல்களும்,
'நாம் எப்படி நடக்க வேண்டும்' என நீதிமொழிகளும்,
'நாம் எப்படி மகிழ வேண்டும்' என சபை உரையாளரும்,
'நாம் எப்படி அன்பு செய்ய வேண்டும்' என இனிமைமிகு பாடலும்
நமக்குச் சொல்கின்றன.

'வாழ்க்கை துன்பமயமானது!' என்றார் கௌதம புத்தர்.

இன்பம் - துன்பம், பகல் - இரவு, ஒளி - இருள், பிறப்பு - இறப்பு என இருதுருவ வாழ்க்கைக்குள் எறியப்பட்டுள்ள நமக்கு ஒன்றை எடுக்கும் போது மற்றொன்று சேர்ந்தே வருகின்றது.

'வாழ்க்கை மிகவும் கடினமானது! அல்லது துன்பமானது!' என்றவுடன் நம் பதில் பொதுவாக இரண்டு நிலைகளில் இருக்கின்றது:

அ. ஆன்மீகமயமாக்கல். துன்பத்திற்கு நாம் உடனடியாக ஒரு மெழுகு பூசி விடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு துன்பத்தின் வழியாக, சிலுவையின் வழியாக, இறப்பின் வழியாக மீட்பைக் கொண்டு வந்தார். ஆகையால் நாமும் துன்பம் வரும் போதும், இறப்பு வரும்போதும் துவண்டுவிடக் கூடாது. துணிந்து நிற்க வேண்டும். துன்பத்திற்குப் பின் நமக்கு இன்பமும் உயிர்ப்பும் வரும். இப்படிப்பட்ட எண்ண ஓட்டம் தான் ஆன்மீகமயமாக்கல்.

ஆ. அறநெறியாக்கல். துன்பத்தை நம் வாழ்வின் ஒரு அறநெறி பாடமாக எடுத்துக்கொள்வது இந்த நிலை. உளியின் வலி தாங்கும் கல் தான் சிற்பமாக முடியும் என்று சொல்லி எவ்வளவு வலி வந்தாலும் அது நல்லதுக்குத்தான். பொன்னை நெருப்பு தூய்மையாக்குவது போல துன்பம் நம்மைத் தூய்மையாக்குகிறது. இப்படிப்பட்ட எண்ண ஓட்டமே அறநெறியாக்கல்.

மேற்சொன்ன இரண்டு நிலைகளும் ஆபத்தானவை. இந்த இரண்டு நிலைகளிலுமே நாம் நம் துன்பத்தைப் பயன்படுத்தி அதை வேறொன்றாக மாற்றிக் கொள்ள முனைகிறோம்.

இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏதாவது மாற்று வழி இருக்கின்றதா?

நாம் உண்ணும் உணவு போல, குடிக்கும் தண்ணீர் போல, சுவாசிக்கும் காற்று போல, அனுபவிக்கும் சூரிய ஒளி போல, நனையும் மழை போல துன்பத்தை ஒரு வாழ்வியல் எதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாதா?

'முடியும்!' என்கிறது யோபு நூல்.

இன்னும் சொல்வேன் ...


2 comments:

  1. வாழ்வியலின் எதார்த்தங்களை ஞானநூல்களின் துணையோடு எங்களுக்குக் கொண்டுவரும் தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பரிசுத்த ஆவி தங்களுக்கு நிழலாயிருக்க,துணையாயிருக்க என் செபங்களும்...வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  2. யோபு நூலின் பின்னணியில் உள்ள வாழ்க்கையின் எதார்த்தங்களை அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete