Sunday, July 6, 2014

சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!

2000 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் அங்கே பல்வேறு படையெடுப்புக்கள் உலகில் நடந்தேறியிருக்கின்றன. அலெக்ஸாண்டர் தி கிரேட் உலகையே தன் காலடிக்குள் கொண்டு வர நினைக்கின்றார். எகிப்திலிருந்து டாலமியர்களின் படையெடுப்பு. கிரேக்கப் பரவலாக்கம். உரோமைப் படையெடுப்பு. எதற்காக ஓர் அரசன் மற்றொரு அரசன் மேல் போர் தொடுத்தான்? 2000 ஆண்டுகளுக்கு முன் ஒருவரின் புகழ் அவரின் வீரத்தை மையப்படுத்தியதாக இருந்தது. ஆகையால் தான் உரோமையின் கொலோசியத்தில் சண்டையிட்ட கிளாடியேட்டர்கள் கூட தாங்கள் இறந்து விடுவோம் என நினைத்தாலும், துணிச்சலோடு சண்டையிட களமிறங்கினர். எந்த அளவிற்கு ஒருவரிடம் வீரம் இருக்கிறதோ அந்த அளவிற்குப் புகழ் பெற்றவர்.

1000 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் புகழ் என்பது 'பரவலாக்கம்' சார்ந்ததாக இருந்தது. டச்சுக்காரர்கள், இஸ்பானியர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தாங்கள் வாழ்ந்த ஐரோப்பா கண்டத்தை விட்டு அமெரிக்கா நோக்கியும், ஆஃப்ரிக்கா நோக்கியும், ஆசியா நோக்கியும் செல்கின்றனர். இதற்குக் காரணம் என்ன? என் மொழி, என் கலாச்சாரம், என் நாகரீகம் தான் சிறந்தது எனவும், அதையே பரவலாக்கம் செய்ய வேண்டும் எனவும் நினைத்துப் புறப்படுகின்றனர். 'அதிகம்' இருந்தால் புகழ் என்று நினைத்தனர் அவர்கள்.

இன்று நம்மிடம் படையெடுத்துச் செல்லாமலே ஒரு கண்டத்தையே முற்றிலும் அழிக்கும் அணுஆயுதங்கள் இருக்கின்றன. நினைத்த மாத்திரத்தில் அடுத்த நாட்டிற்குச் சென்று வந்து விடும் வான்வழிப் போக்குவரத்தும் அதிகமாக இருக்கின்றது. ஆனால் ஏன் இன்று நாம் படையெடுத்துப் போவதில்லை? அல்லது 'பரவலாக்கம்' செய்ய நினைப்பதில்லை? ஏனெனில் புகழ் என்பது இன்று வீரம் சார்ந்ததோ அல்லது பரவலாக்கம் சார்ந்ததோ அன்று. இன்று புகழ் அடைய பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன: கல்வி, விளையாட்டு, வியாபாரம், கலை, இயல், இசை, நாடகம், எழுத்து என எண்ணற்ற வழிகளில் நாம் புகழ் அடையலாம்.

4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்குப் புகழ் எதில் இருந்தது என்பதை இன்றைய நம் திபா 128 நமக்குச் சொல்கிறது:

அ. நல்ல பெயர் (நிறைவு, மகிழ்ச்சி, புகழ் எனவும் மொழிபெயர்க்கலாம்!)
ஆ. நல்ல நலம் (உடல் நலம் தான்! அந்தக் காலத்தில் மனநலம் பற்றிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. உடல் நலமாயிருந்தால் மனமும் நலமாயிருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை)
இ. நல்ல துணைவி (துணைவி என்பவர் திருமணத்தில் இணையும் மனைவி. இன்று நாம் கைக்கொள்ளும் 'சேர்ந்து வாழும் தோழி' அல்ல)
ஈ. நல்ல பிள்ளைகள் (மனைவி வழியாக ஒருவர் பெறும் பிள்ளைகள். தத்துப் பிள்ளைகளோ, சுவீகாரப் பிள்ளைகளோ அல்லர்)

நல்ல பெயருக்கும், நல்ல நலத்திற்கும் உருவகம் தராத பாடலாசிரியர் நல்ல துணைவிக்கும், நல்ல பிள்ளைகளுக்கும் உருவகங்கள் தருகின்றார். உருவகங்களோடு 'எங்கே' என்ற வார்த்தைக்கான விடையும் சேர்ந்தே வருகின்றது.

அ. துணைவி கனிதரும் திராட்சைக்கொடி போல இருப்பார் - இல்லத்தில்!
ஆ. பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல இருப்பர் - உண்ணுமிடத்தில்!

துணைவி வெறும் திராட்சைக்கொடி அல்ல. மாறாக, கனிதரும் திராட்சைக்கொடி. பழ வகைகளில் அதிகம் இன்பம் மற்றும் களிப்பு தருவதாகக் கருதப்பட்டது திராட்சை. திராட்சையின் முக்கியமான பண்பு என்றால் திராட்சையை எந்த வடிவத்திலும் காப்பாற்றி விடலாம். திராட்சை அழிவதோ, கெடுவதோ இல்லை. அதை ஒரு உருவத்திலிருந்து மற்றொரு உருவத்திற்கு மாற்றிவிடலாம். அத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்டது அது. திராட்சைக் கனியை அப்படியே சாப்பிடலாம். மிகவும் கனிந்த கனியை சாறு பிழியலாம். கனியை அப்படியே காய வைத்து உலர் திராட்சையாக்கி விடலாம். கனிகளைப் பயன்படுத்தி ஒயின் தயாரிக்கலாம். ஒரு துணைவி என்பவரும் அப்படித்தான். இல்லத்தின் எல்லாமாய் மாறி, இல்லத்தை அழிவில்லாமல் காப்பவர் அவர்தான். மேலும் கனிதரும் திராட்சையைத் தான் மக்கள் நிமிர்ந்து பார்ப்பர். அப்படி எல்லாரும் நிமிர்ந்து பார்க்கக் கூடிய குணத்தைக் கொண்ட துணைவி அமைந்தால் அது நல்ல ஆசீர் தானே!

பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள். எங்கே? உண்ணுமிடத்தில். நிறைய வீடுகளில் பிள்ளைகளுக்குள் பிரச்சனை தொடங்குவது எங்கே தெரியுமா? உண்ணுமிடத்தில். உண்ணும் போதுதான் சொத்து பிரிப்பு பற்றி பேசப்படும். உண்ணும் போதுதான் குறைகள் பேசப்படும். உண்ணும் போதுதான் சில நேரங்களில் சண்டை வரும். நாம் சண்டையிட்டபின் நம் வெறுப்பைக் காட்டுவதும் உண்ணுமிடம்தான். உண்ண மறுப்பது, அல்லது சேர்ந்த உண்ண மறுப்பது, 'நீ சாப்பிடு! எனக்குச் சாப்பிடத் தெரியும்!' என்று சொல்வது என மனக்கசப்புகள் வெளிப்படுத்தப்படுவதும் உண்ணுமிடத்தில்தான். ஒலிவக்கன்றின் சிறப்பு என்ன? மரக்கன்று வகைகளில் 'மற்றவர் நலனை' நினைப்பது ஒலிவக் கன்றாம். எப்படி? தனக்கு அருகில் மற்றொரு மரம் வளர்கின்றது என்று நினைத்தால் அதற்கும் தண்ணீர் வேண்டுமே என நினைத்து தன் தண்ணீர் ஆகாரத்தைக் குறைத்துக் கொள்ளுமாம். என்ன ஒரு பரந்த மனப்பான்மை! அப்படித்தான் பிள்ளைகளும்- ஒருவர் வளர்கிறார் என்றால் மற்றவர் அந்த வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படாமல் தன் ஆகாரத்தையும் விட்டுக்கொடுப்பார்களாம். இப்படிப் பட்ட பிள்ளைகளும் ஆசீர்தானே!

இந்த நான்கு வகைப் பேறுகளும் இன்றும் நமக்குப் பொருந்தவே செய்கின்றன!

'ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!' (திபா 128:5)


1 comment:

  1. துணைவியைப் பற்றியும்,நல்லபிள்ளைகளைப் பற்றியும் திருப்பாடல் தரும் நற்சான்றும் அதற்கும் மேலாக அவற்றிற்குத் தாங்கள் அளித்துள்ள விளக்கமும் அருமை.அடுத்த மரம் வளரவேண்டுமென்பதற்காகத் தன் ஆகாரத்தைக் குறைத்து கொள்ளும் " ஒலிவக்கன்று"...ஆஹா! எத்துணை பெருமைப்பட வேண்டிய விஷயம்..இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட எந்த ஒரு மனிதனுக்கும் நல்ல பெயரும் உடல் நலமும் கிடைக்கிறது என்பதே அவர்களை இறைவன் சீயோனிலிருந்து ஆசீர்வதிக்கிறார் என்பதன் அத்தாட்சிதானே! அருமையான திருப்பாடல் மனத்திற்கு இதம் தந்தது....நன்றிகள்...

    ReplyDelete