Monday, January 30, 2023

மனித அவசரம் இறைத் தாமதம்

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 31 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 12:1-4. மாற் 5:21-43.

மனித அவசரம் இறைத் தாமதம்

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், விந்தையாக, இந்த நிகழ்வில் இயேசுவோடு உடனிருந்த யோவான் (காண். மாற் 5:37) இந்நிகழ்வைப் பதிவு செய்யவில்லை. இந்நிகழ்வில் இரண்டு கதைமாந்தர்கள் இருக்கின்றார்கள்: (அ) யாயிர் - இவர் தொடக்கமுதல் இறுதி வரை இருப்பவர், (ஆ) இரத்தப்போக்குடைய பெண் - இவர் பாதியில் வந்து, பாதியில் சென்றுவிடுகிறார். இவரை, நற்செய்தியாளர், நிகழ்வின் வேகத்தைக் குறைக்கும், வாசகரின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஓர் இலக்கியக் கூறாகப் பயன்படுத்துகிறார். 

நம் பாடப்பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) யாயிர் தன் மகளைக் காப்பாற்ற இயேசுவை அழைத்தல் (5:21-23), (ஆ) இயேசுவின் பயணம் - பயணத்தின்போது நடைபெறும் முதல் புதுமை (5:24-34), (இ) நலம் பெற வேண்டிய மகள், உயிர் பெறுதல் (5:35-43).

இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. மேலும், நற்செய்தியாளர்(கள்) இங்கே பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (காண். மாற் 5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (காண். மாற் 5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

இயேசு தனிநபராகத்தான் புறப்படுகிறார். ஆனால், அவர் புறப்பட்டவுடன் பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டு பின்தொடர ஆரம்பிக்கின்றனர் (காண். மாற் 5:24). யாயிரும் இயேசுவோடு அவருக்கு நெருக்கமாகவே உடன் சென்றிருப்பார். ஏனெனில் யாயிரின் பணியாளர்கள் சிறுமியின் இறப்பு செய்தியைக் கொண்டுவந்தபோது இயேசுவின் காதுகளில் அது எளிதாக விழுகின்றது (காண். மாற் 5:16). 

இயேசுவின் பயணம், (அ) மனித அவசரம், (ஆ) இறை தாமதம் என்ற இரண்டு நிலைகளில் நடக்கிறது.

முதலில் இறைத் தாமதத்தை புரிந்து கொள்வோம். இயேசு புறப்பட்டவுடன், அவரை நெருக்கும் கூட்டம் தாமதத்தின் முதல் காரணியாக இருக்கிறது. இயேசு பயணம் செய்த பாதை மிகக் குறுகியதாகவோ, அல்லது கூட்டம் மிகுதியானதாகவோ இருந்திருக்கலாம். எனவே, இயேசு மிக மெதுவாக பயணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார். அவரின் வேகம் தடைபடுகிறது. தாமதத்தின் இரண்டாவது காரணியாக, இரத்தப்போக்குடைய பெண்ணின் வருகையும், அவர் இயேசுவைத் தொடுதலும், அந்தத் தொடுதல் தரும் நலமும், அந்த நலம் பெற்றதைக் குறித்த இயேசுவின் மறுமொழியும் அமைகிறது. 'நான் அவருடைய மேலுடையைத் தொட்டாலே மீட்பு பெறுவேன்' என்று சொல்லிக்கொண்டு வந்த அந்தப் பெண் இயேசுவின் மேலாடையைத் தொட்டவுடன் நலம் பெறுகிறார். தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை இயேசு உணர்கின்றார். ஆக, எவ்வளவு பெரிய கூட்டத்தின் அல்லது இரைச்சலின் நடுவிலும் தன் இருப்பு மற்றும் இயக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவாக இருக்கிறார் இயேசு. 'யார் தொட்டது?' என இயேசு கேட்க, சீடர்களோ, 'இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கிறது தெரியவில்லையா?' என்று வேறு தளத்தில் இயேசுவிடம் எதிர்கேள்வி கேட்கின்றனர். ஆக, இயேசுவின் உடலை நெருக்கியவர்கள் நலம் பெறவில்லை. ஆனால், ஆடையைத் தொட்டவர் நலம் பெறுகிறார். இதற்கிடையில் அந்தப் பெண் இயேசுவின் காலடிகளில் வந்து விழ, இயேசுவும், 'மகளே, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று. அமைதியுடன் போ! நோய் நீங்கி நலமாயிரு!'  (காண். மாற் 5:34) என்று அந்தப் பெண்ணை அனுப்பிவிடுகிறார். யாயிர் தன் மன்றாட்டில் பயன்படுத்திய 'நலம்' என்ற அதே சொல்லை இயேசுவும் பயன்படுத்துகிறார். இந்த 'இடைச்செருகல் பெண்ணால்' தங்கள் பயணம் தாமதம் ஆகிறது என்று யாயிர் வருந்தினாலும், 'நம்பிக்கை கொண்டால் நம் குழந்தைக்கும் நலம் கிடைக்கும்' என்ற உறுதி அவருக்கு இப்போது கிடைத்திருக்கும். இப்போது, தாமதத்தின் மூன்றாவது காரணி வருகிறது. தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து வந்தவர்கள், 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?' (காண். மாற் 5:35) என்று யாயிரிடம் சொல்கின்றனர். ஆக, அவர்களின் செய்தி குழந்தையின் இறப்பு செய்தியை தெரிவித்த தகவலாக இருப்பதோடு, இனி இந்தப் போதகரால் ஒரு பயனும் இல்லை என்று யாயிரின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் இருக்கிறது. ஆனால், இயேசு யாயிருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். தொடர்ந்து யாயிரின் வீட்டிற்குள் இயேசு செல்வதற்கு அவரின் வீட்டின் முன்னிருந்த கூட்டமும், கூட்டம் எழுப்பிய அமளியும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. 'ஐயோ, ஆண்டவரே, அவங்க எப்படியும் அழுதுட்டு போறாங்க, நீங்க உடனே வாங்க!' என்பதுதான் யாயிரின் உள்ளத்து அவசரமாக இருந்திருக்கும். இயேசு உள்ளே செல்கிறார். இவ்வாறாக, இயேசுவின் பயணம், (அ) சாலையோரக் கூட்டம், (ஆ) இரத்தப்போக்குடைய பெண், (இ) வீட்டாரின் செய்தி, மற்றும் (ஈ) வீட்டிற்கு வெளியே கூட்டம் என நான்கு காரணிகளால் தாமதம் ஆகின்றது.

யாயிரின் அவசரம், 'அச்சம்' என்ற ஒற்றைச் சொல்லால் பதிவுசெய்யப்படுகிறது (காண். மாற் 5:36). வீட்டார் சிறுமியின் இறப்புச் செய்தியை அறிவித்தபோது, 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' (காண். மாற் 5:36) என்று யாயிருக்கு அறிவுரை கூறுகின்றார் இயேசு. தன் மகளின் இறப்பு செய்தி கேட்ட யாயிர், ஒட்டுமொத்த கூட்டம், அந்தப் பெயரில்லாப் பெண், இயேசுவின் சீடர்கள் என அனைவரையும் ஒரு நொடி தன் உள்ளத்தில் சபித்திருப்பார். 'இவர்களால்தான் போதகர் சரியான நேரத்திற்கு என் வீட்டிற்கு வரமுடியவில்லை' என மனதிற்குள் புலம்பியிருப்பார். அல்லது, 'ஒரு வார்த்தை சொல்லும், என் மகள் நலமடைவாள்' என்றாவது தான் இயேசுவிடம் மன்றாடியிருக்கலாமே என அங்கலாய்த்திருப்பார். இயேசு சற்றுநேரத்திற்கு முன் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவருக்கு நலம் தந்தது இன்னும் தன் கண்முன் இருந்தாலும், இறந்த மகள் உயிர்பிழைப்பாளா? என்ற அச்சம் மேலிடவே செய்கிறது அவருக்கு. அவசரம் கொள்கின்ற மனம் நம்பிக்கை இழக்கும். அவசரம் கொள்கின்ற மனம் அச்சம் கொள்ளும். அல்லது அச்சம் கொள்கின்ற மனம் அவசரப்படும். யாயிரின் மனித அவசரத்தை முதலில் குணமாக்குகிறது இயேசுவின் இறை தாமதம்.

தன் மகளின் உடல்நலத்திற்காக இயேசுவிடம் வந்தார் யாயிர். இப்போதோ, தன் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி தனக்கு வந்துவிட்டது. பாதிக்குறையோடு வந்தவர் இப்போது முழுவதும் இழந்து நிற்கின்றார். தன் மகளை இழந்த அநாதையாக இருக்கின்ற யாயிர், 'நான் என் மகள் இறக்கும் நேரம் அவள் அருகிலாவது இருந்திருப்பேனே!' என்று கொஞ்சம் ஏங்கித்தான் போயிருப்பார். ஆக, ஒரு குறையோடு வந்தவருக்கு, இப்போது இரு குறைகள். நோய் சரியாகவில்லை என்றால் மருந்து எடுத்துக்கொள்ளலாம். மருந்து பலன் தரவில்லை என்றால் மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், உயிர் இல்லை என்றால் எங்கு செல்வது? மருந்துகளால் உயிரைக் கூட்ட முடியுமா? அல்லது 'என் உயிரில் கொஞ்சம் வைத்துக்கொள்' என்று உயிரை இரவல் கொடுக்க முடியுமா? - இப்படியெல்லாம் எண்ணியிருக்கும் யாயிரின் மனம். 'ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்' (காண். மாற் 5:39) என்று இயேசு சொன்னபோது, 'ஐயோ! இது அப்படியே உண்மையாயிருக்கக் கூடாதா? என் மகள் உறங்கத்தான் செய்கிறாள். அவள் இறக்கவில்லை. செய்தி சொன்னவர்கள்தாம் தவறாகச் சொல்லிவிட்டார்கள்!' என்று தன் மனதிற்கு ஆறுதல் சொல்கிறார் யாயிர். ஆனால், சிறுமியின் கையை இயேசு பிடிக்க, அவரோடு சேர்ந்து யாயிரும் பிடிக்க, தன் மகளின் கை குளிர்ந்து போயிருப்பதை உணர்ந்து மனம் பதைபதைக்கின்றார். 'ஆம், அவர்கள் சொன்னது உண்மைதான். குழந்தை இறந்துவிட்டாள்' என்று யாயிரின் மனம் முன்னும் பின்னும் பாய்கின்றது. பாதிக் கலக்கம், பாதிக் கண்ணீர், ஆனால் முழு நம்பிக்கை என்று இருந்தவர், 'தலித்தா கூம்' என்ற கட்டளைச் சொல் கேட்டு விழிக்கின்றார். தந்தையோடு சேர்ந்து மகளும் விழிக்கிறாள் - தந்தை கலக்கத்திலிருந்து, மகள் இறப்பிலிருந்து. யாயிரும் அவரோடு இருந்தவர்களும் 'மலைத்துப்போய் மெய்மறந்து நிற்கின்றார்கள்' (காண். மாற் 5:42). தன் மகளின் உடல்நலம் மற்றும் உயிருக்கான யாயிரின் தேடல் நிறைவு பெறுகிறது. தன் மகளை உயிரோடும், உடல்நலத்தோடும் பெற்றுக்கொள்கிறார்.

யாயிரின் மகளின் நோய் மற்றும் இறப்பை நம்முடைய வாழ்வின் எல்லாக் குறைகளின், அல்லது ஒட்டுமொத்த எல்லா மனுக்குலத்தின் குறைகளின் உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். நம் மனித அறிவியல், தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்சிகள் முதுமை, நோய், இறப்பு என்னும் மூன்றின்முன் மண்டியிட்டுவிடுகின்றன. முதுமையின் வெளிப்பாடையும், அறிகுறிகளையும் தள்ளிப்போடும் முயற்சிகளால் முதுமையை ஓரளவு வென்றுவிட்டோம். ஆனால், நோய் மற்றும் இறப்பு நம்மால் வெல்லமுடியாதவைகளாகவே இருக்கின்றன. நம் தனிப்பட்ட நோய் மற்றும் இறப்பு என்னும் வலுவின்மை ஒவ்வொரு தனிமனிதரிடம் இருந்தாலும், ஒட்டுமொத்த மானுடமும் இன்று தன்னலம், தன்மையம், நுகர்வு, பயன்பாட்டு மோகம் என நோய்வாய்ப்பட்டு சாகுந்தறுவாயில் இருக்கிறது. 

அ. சுகமண்டலத்திலிருந்து வெளியேறுதல். யாயிர் தன் பணி, தன் அதிகாரம், தன் சமூக மதிப்பு நிலை என்னும் சுகமண்டலத்திலிருந்து வெளியேறுகிறார். தன் அதிகாரத்திற்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கிறது என புரிந்கொள்கிறார். நம் தேடலுக்கான முதல் படி இதுவே.

ஆ. குரலற்றவரின் குரலாக. நோய்வாய்ப்பட்டு சாகுந்தறுவாயில் இருந்த தன் மகளின் வாயின் நீட்சியாக இருக்கிறார் யாயிர். தன் தேடல் தனக்காக இல்லாமல் தன் மகள் என்ற வலுவின்மைக்காக இருக்குமாறு செய்கிறார். இன்று நம் இறைத்தேடல் நம் மையத் தேடலா அல்லது பிறர்மையத் தேடலா எனக் கேட்பது நலம்.

இ. மனித அவசரத்தின் சரணாகதி. தன் விண்ணப்பதைக் கேட்டவுன் இயேசு புறப்பட்டுவிட்டார் என்பது யாயிரின் அவசரத்திற்கு உதவியாக இருந்தாலும், தொடர்ந்து நடக்கின்ற நிகழ்வுகள் அவருடைய அவரசத்தை அச்சமாக்குகின்றன. சில நேரங்களில் மனித அவசரம் இறைதாமதத்திற்கு முன் சரணாகதி ஆக வேண்டும் என்பது யாயிர்தரும் பாடம்.

ஈ. நம்பிக்கையை விடாதீர்! தன் கண்முன் நடந்த புதுமை கண்டு தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திய யாயிர் தன் காதுகளுக்கு எட்டிய செய்தி கேட்டு நம்பிக்கை இழக்கின்றார். ஆக, நம்பிக்கை என்பது நாம் நம் மனிதில் வடிக்கும் ஒரு ஒழுக்கம். ஒழுக்கம் என்பது நாம் எடுத்த முடிவிலிருந்து மாறாத நிலை. 

உ. நலம் கேட்டவர் உயிர் பெறுகிறார். இதுதான் கடவுளின் கருணையின் உச்சம். என் கையில் கொஞ்சம் கிடைக்குமா என எண்ணிவரின் கைகள் நிரம்பி வழிகின்றன. கடவுள் அனைத்தையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்து முடிக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கைகளை விரித்துக் காத்திருத்தலே.

ஊ. உணவு கொடு!. உயிர் பெற்றெழுந்த குழந்தைக்கு உணவு கொடுக்கச் சொல்கின்றார் இயேசு. இறந்த குழந்தை இனி இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது யாயிரின் பொறுப்பு. மானுடமும் இயேசுவின் மீட்பால் நலமும், உயிரும் பெற்றது. ஆனால், நாம் ஒருவர் மற்றவருக்கு உணவு கொடுத்தல் என்னும் பொறுப்புணர்விலிருந்து தவறுவதால்தான் இன்னும் நம்மிடம் நிறைய குறைவுபடுகிறது.

யாயிர் என்னும் கதைமாந்தர் உங்களிலும், என்னிலும் இன்று உலாவருகிறார் - நாம் இயேசுவைத் தேடும்போதும், அவரிடம் நலமும், உயிரும் கேட்கும்போதும்!


Sunday, January 29, 2023

கல்லறைகளே உறைவிடம்

இன்றைய இறைமொழி 

திங்கள், 30 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 11:32-40. மாற் 5:1-20.

கல்லறைகளே உறைவிடம்

மாற்கு நற்செய்தியாளரின் நூல் சிறிய அளவில் இருந்தாலும், பல நிகழ்வுகளை மிக அழகாக வடித்திருக்கின்றார். அதாவது, சின்னஞ்சிறிய தகவல்களையும் பதிவு செய்வதில் அவர் வல்லவர். அவருடைய இலக்கியத் திறத்திற்குச் சான்றாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்ததுண்டு:

'பேய் பிடித்திருந்த அந்த நபர் ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அச்சமுற்றார்கள்.'

இந்த வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

யார் அந்த நபர்?

அவர் தான் தீய ஆவி பிடித்தவர். இலேகியோன் பிடித்திருந்ததாக அவரே சொல்கிறார். 'இலேகியோன்' என்றால் உரோமைப் படையின் 6000 வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. ஆக, ஏறக்குறைய 6000 பேய்கள் ஒரே நபரைப் பிடித்திருக்கின்றன. பாவம் அந்த மனிதர்! 'கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்' - ஆக, வாழும்போதே இறந்தவராகக் கருதப்பட்டுள்ளார். அல்லது ஊரை விட்டு அவரை விரட்டியடித்திருப்பார்கள். அவரின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் அவரைச் சங்கிலிகளால் பிணைக்க முயன்றாலும் அவர் அவற்றை உடைந்தெறிந்துவிடுகின்றார். மேலும், கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டே, கற்களால் தன்னைக் கிழித்துக் கொள்கின்றார்.

என்ன ஓர் அலைக்கழிப்பு! அந்தப் பேய்கள் அவரைத் தூங்கவும் விடவில்லை, அமரவும் விடவில்லை. மிகவும் இரக்கத்துக்குரியவர் அவர்! அதே நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும்! இந்த நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது. 

ஆனால், அந்த ஊர் மனிதர்களுக்கு அது பழக்கமாகிவிட்டது. அதாவது, தங்களைப் போல உள்ள ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறதே என்ற வருத்தம் ஊரார் யாருக்கும் இல்லை. 'அவன் பேய் பிடித்தவன். அவன் அப்படித்தான் இருப்பான்' என்று முத்திரை குத்தி அதற்குப் பழகிவிட்டார்கள். அதனால்தான், அவனுடைய கூச்சலையும் கொடிய உருவத்தையும் வன்முறையையும் கண்டு அஞ்சாத மக்கள், அவர் ஆடையணிந்து அறிவுத்தெளிவுடன் இருப்பதைக் கண்டு அஞ்சுகின்றனர்.

அதாவது, நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பொருத்தவரையில், நாம் அவர்களுடைய எண்ணங்கள்போல இருக்கும் வரை அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சற்றே மாறிவிட்டோம் என்றால், அவர்கள் நம்மைப் பார்த்து அச்சம் கொள்கிறார்கள். நம்மை அழித்துவிட முனைகிறார்கள். 

என்னுடைய மாற்றம் எனக்கு அடுத்திருப்பவருக்கு அச்சம் தருகிறது.

இயேசு தீய ஆவியை விரட்டும் நிகழ்வு மூன்று நிலைகளாக நடக்கிறது:

முதலில், 'தீய ஆவியே, இந்த மனிதரை விட்டு வெளியே போ!' என்று இயேசு தீய ஆவிக்குக் கட்டளையிடுகிறார்.

இரண்டாவதாக, தீய ஆவி பிடித்த நபர், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று இயேசுவிடம் கேட்கின்றார். இயேசுவின் திருமுன்னிலை அவருக்கு அச்சம் தருகின்றது.

மூன்றாவதாக, தீய ஆவி பிடித்த நபருடன் உரையாடுகின்ற இயேசு, நபரின் வேண்டுகோளுக்கிணங்க, அதை அல்லது அவற்றைப் பன்றிக் கூட்டத்துக்குள் அனுப்பி விடுகிறார்.

பன்றிகள் கடலில் விழுந்து மடிகின்றன. பன்றி என்பது தீட்டான விலங்கு. தீட்டுக்குள் நுழைகின்ற தீய ஆவி, தனது இருப்பிடமான கடலுக்குச் செல்கிறது. 

அந்த நபர் விடுதலை பெறுகின்றார்.

இதற்கிடையில், பன்றி மேய்த்தவர்களின் சொல் கேட்டுக் கூடிய மக்கள், தங்கள் நகரை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டிக்கொள்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பார்வையில் குணமான அந்த நபரை விட, கடலில் விழுந்து இறந்த பன்றிகள் மதிப்புள்ளதாகத் தெரிந்தன.

நிகழ்வு அத்தோடு முடியவில்லை.

இயேசு படகில் ஏறும்போது, 'நானும் உம்மோடு வருகிறேன்!' என இயேசுவைப் பின்தொடர விரும்புகிறார் அந்த நபர். ஆனால், இயேசு, அதற்கு இசையவில்லை.

அவர் அழைத்தாலன்றி அவரோடு யாரும் இருக்க முடியாது.

ஆனால், அவரிடம், 'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' என்கிறார் இயேசு.

இங்கே இயேசுவின் தாய்மை மற்றும் தந்தைமையைப் பார்க்கிறோம்.

இவ்வளவு நாள்களாக அந்த நபருக்கு கல்லறையே வீடாக இருந்தது.

தீய ஆவிகளே உறவினர்களாக இருந்தன.

ஆனால் இன்று, அவரை மீண்டும் ஊரின், வீட்டின், உறவினர்களின் நடுவில் அனுப்புகிறார் இயேசு. ஆண்டவரின் இரக்கத்தை அவர் அறிவிக்க வேண்டும்.

இந்த நிகழ்வு நமக்குப் பல வாழ்வியல் கேள்விகளை முன்வைக்கின்றன:

(அ) என்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்மைக்காக மாறும்போது அவர்களைப் பற்றி நான் அச்சம் கொள்கின்றேனா? எனக்கு அடுத்திருப்பவரின் அறிவுத்தெளிவு எனக்கு அச்சம் தருகின்றதா?

(ஆ) 'அவன் பேய்பிடித்தவன்', 'அவள் பேய்பிடித்தவள்' என்று நான் மற்றவர்களுக்கு முத்திரை இடுகின்றேனா?

(இ) என்னைப் பிடித்திருக்கும் தீய ஆவி எது? அல்லது நான் பிடித்திருக்கும் தீய ஆவி எது?

(ஈ) ஆண்டவர் என் வாழ்வில் காட்டிய இரக்கத்தை நான் அறிக்கையிடுகிறேனா?

(உ) எனக்கு அடுத்திருப்பவரை விட, என் பன்றிக் கூட்டம் எனக்கு முக்கியமானதாகத் தெரிகின்றதா?

(ஊ) என் வாழ்வை விட்டு அகலுமாறு நானும் இயேசுவிடம் சொல்லி, அவரை விரட்ட முயல்கின்றேனா?


Saturday, January 28, 2023

மகிழ்ச்சியே நற்செய்தியாக

ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

செப்பனியா 2:3, 3:12-13. 1 கொரிந்தியர் 1:26-31. மத்தேயு 5:1-12.

மகிழ்ச்சியே நற்செய்தியாக

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். 'பேறு பெற்றவர்கள்' என்னும் எட்டு 'பேறு பெற்ற நிலைகளுடன்' தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்று சொற்களில் தரப்பட்டுள்ளது: (அ) இயேசு மலைமேல் ஏறுகின்றார், (ஆ) சீடர்கள் அவரிடம் வருகின்றனர், (ஆ) இயேசு அமர்ந்து கற்பிக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசே என அறிமுகம் செய்கின்றார். முதல் ஏற்பாட்டு மோசே மலைக்கு ஏறிச் சென்றது போல, இரண்டாம் ஏற்பாட்டு மோசே என்னும் இயேசு மலைக்கு ஏறிச் செல்கின்றார். மலைப்பொழிவு சீடர்களுக்கான போதனையாக உள்ளது. மக்கள் அனைவரும் இயேசுவைச் சுற்றி இருந்தாலும், போதனை என்னவோ இயேசுவின் சீடர்களுக்கானதாக இருக்கிறது. ஆக, மலைப்பொழிவைக் கேட்பவர்கள் சீடத்துவத்துக்கான அழைப்பைப் பெறுகின்றனர். சீடத்துவத்தை ஏற்கும் ஒருவரே மலைப்பொழிவுப் போதனையில் முழுமையாகப் பங்கேற்கவும், அப்போதனையை வாழ்ந்து காட்டவும் முடியும். மூன்றாவது, 'அமர்தல்' என்பது அதிகாரத்தைக் குறிக்கின்றது. தொழுகைக்கூடங்களிலும் பள்ளிகளிலும் போதிக்கின்ற ரபிக்கள், வழக்கமாக அமர்ந்துகொண்டு கற்பிப்பர். அவர்கள் தங்கள் பாடத்தின்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும், மாணவர்கள்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும் இச்செய்கை அடையாளப்படுத்துகிறது.

'பேறுபெற்ற நிலை' என்பதை மகிழ்ச்சியான நிலை, தெரிவு செய்யப்பட்ட நிலை என்றும் புரிந்துகொள்ளலாம். இப்பகுதியில் எட்டு பேறுபெற்ற நிலைகளை இயேசு முன்மொழிகின்றார். 

பண்பு 1: 'ஏழையரின் உள்ளம் கொண்டிருத்தல்'

லூக்கா நற்செய்தியாளர் இவ்வாக்கியத்தைச் சற்றே மாற்றி, 'ஏழையரே நீங்கள் பேறுபெற்றோர்' என்று இயேசு சொல்வதாக எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியில் ஏழ்மை என்பது பொருளாதார வறுமை அல்லது பின்தங்கிய நிலையை அல்ல, மாறாக, ஓர் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையைக் குறிக்கின்றது. 'மற்றவர்களை, குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருக்கின்ற உள்ளம்' ஏழையரின் உள்ளம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய உலகில் சார்புநிலை என்பது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகக் கற்பிக்கப்படுகிறது. சார்புநிலை தவிர்த்து கட்டின்மை அல்லது தற்சார்பு நிலை முன்மொழியப்படுகிறது. பெற்றோர்களைச் சார்ந்திராத பிள்ளைகள், பிள்ளைகளைச் சார்ந்திராத பெற்றோர்கள், கணவனைச் சார்ந்திராத மனைவி, மனைவியைச் சார்ந்திராத கணவன், கடவுளைச் சார்ந்திராத நாம் என நம் கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகின்றது. ஆனால், நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளோம். நம் வாழ்வுக்காக மற்றவர்களைச் சார்ந்துள்ளோம் என்னும் எண்ணம் நம் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது.

பண்பு 2: 'துயருறுதல்'

துன்பமும் மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது. ஆனால், மகிழ்ச்சியின் பொருள் துன்பத்தில் தெரிகிறது. துன்பம் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. துன்பம் என்பது நோய், முதமை, இறப்பு, இழப்பு ஆகியவற்றால் வரும் துன்பம் மட்டுமல்ல. மாறாக, சின்னச் சின்ன விடயங்களில் நாம் அடையும் துன்பம், நம் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருகின்ற துன்பம், முடிவெடுக்க வேண்டிய துன்பம், முயற்சி எடுக்க வேண்டிய துன்பம் என அனைத்தும் துன்பங்களே. 'நான் காயம் பட்டாலும் சோர்ந்து போகமாட்டேன்' என்னும் மனப்பாங்கே நமக்கு ஆறுதலைத் தருகின்றது.

பண்பு 3: 'கனிவு கொள்தல்'

இயேசு தம்மைப் பற்றிச் சொல்லும்போது, தாம் கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர் என அறிமுகம் செய்கின்றார். என்ன நடந்தாலும் அமைதியாகவும், பொறுமையாகவும், உடைந்து போகாமலும் இருத்தலே கனிவு. கனிவு கொள்கின்ற ஒருவர் நாட்டை உரிமையாக்கிக் கொள்கின்றார். அதாவது, அவரால் எவரையும் எதையும் சம்பாதித்துக்கொள்ள இயலும்.

பண்பு 4: 'நீதி நிலைநாட்டும் வேட்கை கொள்தல்'

அநீதியாக நடப்பவர்கள் நடுவில் நீதியை நிலைநாட்டுதல் என்பது மிகப் பெரிய சவால். நாம் செய்கின்ற செயல்களை சரியானது, எளிதானது என இரு நிலைகளில் வகைப்படுத்தலாம். சரியானது எல்லாம் எளிமையாக இருப்பதில்லை. எளிமையானவை எல்லாம் சரியாக இருப்பதும் இல்லை. சரியானதை மட்டும் எப்போதும் விருப்பம் கொண்டிருப்பவர் நிறைவுகொள்வர்.

பண்பு 5: 'இரக்கம் கொள்தல்'

மற்றவர்கள் என்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறேனோ, அப்படியே நானும் மற்றவர்களை நடத்துவேன். இரக்கம் கொள்தல் என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பது போல. நாம் செய்வது நமக்கே திரும்பக் கிடைக்கும்.

பண்பு 6: 'தூய்மையான உள்ளம்'

கடவுள்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும் மிளிர்ந்து நின்றால் நலம். தூய்மை என்பது கடவுளோடு இணைத்துக் கொண்டாடப்படும் மதிப்பீடு. ஏனெனில், முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் தம்மைத் தூயவர் என அழைக்கின்றார். இங்கே தூய்மை என்பது வழிபாடு சார்ந்த தூய்மையைக் குறித்தாலும், தூய்மையான உள்ளம் என்பது தயார்நிலையில் இருக்கும் உள்ளம் என்றும் புரிந்துகொள்ளப்படலாம்.

பண்பு 7: 'அமைதி ஏற்படுத்துதல்'

அமைதியை ஏற்படுத்துதல் என்பது நாம் மேற்கொள்ளும் தெரிவு. முணுமுணுப்புகள், சண்டைகள் எழுந்தாலும் இயல்பாக அவற்றை ஏற்றுச் சரிசெய்யும் தாராள உள்ளம் கொள்பவரே அமைதியை ஏற்படுத்த முடியும். அமைதி ஏற்படுத்துபவர் ஒருவர் மற்றவரை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறார். 

பண்பு 8: 'நீதியின் பொருட்டு துன்பம்'

4ஆம் பண்பில் நீதி என்பது விருப்பமாக நின்றது. இங்கே 8ஆம் பண்பில் அது செயலாகக் கனிகின்றது. விருப்பமும் செயலும் இணைந்து செல்ல வேண்டும்.

பேறுபெற்ற நிலைகளை நிறைவு செய்கின்ற இயேசு, 'மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

மகிழ்ச்சிக்கான புதிய படிநிலைகளாக பேறுபெற்ற நிலைகளை அமைக்கின்றார். 

இன்றைய முதல் வாசகத்தில், இறைமைய வாழ்க்கைக்கு மக்களை அழைக்கின்றார் செப்பனியா. இறைமைய வாழ்வு என்பது இறைவனை முழுமையாகத் தேடுதல் ஆகும். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகர மக்கள் தாங்கள் அழைக்கப்பட்ட நிலையை உணர்ந்தவர்களாக வாழ அழைக்கப்படுகின்றனர்.

இயேசு முன்மொழிகின்ற நற்செய்தி மகிழ்ச்சியின் நற்செய்தியாக இருக்கின்றது.

மகிழ்ச்சிக்கான இப்பண்புகள் நமதானால், நாமும் விண்ணரசின் நற்செய்தியை ஒருவர் மற்றவருக்கு அறிவிக்க இயலும்.


இவர் யாரோ?

இன்றைய இறைமொழி 

சனி, 28 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம்

எபி 11:1-2,8-19. மாற் 4:35-41.

இவர் யாரோ?

நற்செய்தி வாசகம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் இயேசு தம் சீடர்களோடு கடற்கரையில் நிற்கின்றார். இரண்டாம் பிரிவில், அவர் தம் சீடர்களோடு கடல் நடுவே நிற்கின்றார். முதல் பகுதியில், இயேசு தாமே செயல்பாட்டை முன்னெடுக்கின்றார். இரண்டாம் பகுதியில், அவர் தூங்கிக்கொண்டிருக்கின்றார். சீடர்கள் அவரை எழுப்பிச் செயல்படுமாறு செய்கின்றனர்.

இந்த நற்செய்தி வாசகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உரையாடலை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். முதல் பகுதியில் இயேசு தம் சீடர்களிடம் பேசுகின்றார்: 'அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்!' சீடர்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறவும் புதிய கரையைக் கண்டுகொள்ளவும் அழைக்கின்றார்.

இரண்டாம் பகுதியில் நான்கு உரைகள் உள்ளன: (அ) சீடர்கள் இயேசுவை நோக்கிப் பேசுகின்றனர் – 'போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?' (ஆ) இயேசு கடலை நோக்கிப் பேசுகின்றார் – 'இரையாதே, அமைதியாயிரு!' (இ) இயேசு சீடர்களை நோக்கி – 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' (ஈ) சீடர்கள் தங்களுக்குள் - 'காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?' 

சீடர்கள் இயேசுவை 'போதகர்' என அழைக்கின்றனர். இங்குதான் முதன் முதலாக இயேசு இவ்வாறு அழைக்கப்படுகின்றார். அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இயேசுவின்மேல் தங்கள் கண்களைப் பதிய வைக்காமல், அமைதியற்ற கடலின்மேல் தங்கள் கண்களைப் பதித்ததால் பயத்தால் பரிதவிக்கின்றனர்.

இன்று நம் பார்வை எங்கே பதிந்திருக்கிறது? 

பேயோட்டும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி – அமைதியாயிரு - இயேசு கடலைக் கடிந்துகொள்கின்றார். கடல் என்பது இயற்கை மற்றும் தீமையை உருவகிக்கிறது. ஒரே நேரத்தில், இயேசு இயற்கையின்மேலும், தீமையின்மேலும் அதிகாரம் கொண்டவராக இருக்கின்றார்.

நம் வாழ்வில் தீமை மேலோங்கி நிற்கும்போது இயேசு அதன்மேலும் ஆட்சி செலுத்துகிறார் என்பதை நான் உணர்கின்றேனா?

இயேசு தம் சீடர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார். தங்கள் கண்முன்னே இயேசு நிறைய வல்ல செயல்கள் ஆற்றினாலும் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளத் தயங்குகின்றனர் சீடர்கள்.

சீடர்கள் அச்சப்படுகின்றனர். அச்சம் நம்பிக்கையின் முதல் எதிரி ஆகும்.

இறுதியில், கடல் அமைதியாகிறது. சீடர்களின் உள்ளத்தில் புயல் வீசத் தொடங்குகிறது. 'இவர் யாரோ?' என்னும் கேள்வி அவர்களை அலைக்கழிக்கின்றது.

முதல் வாசத்தில், 'நம்பிக்கை' என்னும் சொல்லை வரையறுக்கின்ற ஆசிரியர், நம்பிக்கையால் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொண்ட நல்லோர்களின் பெயர்களைப் பதிவு செய்கின்றார்.

இன்றைய நாளில், நாம் அக்வினா நகர் புனித தோமாவை நினைவுகூர்கின்றோம். இறைவன், மனிதர்கள், உலகம் என்னும் மறைபொருள்களைக் காண முயன்ற இவர் இறுதியில், இறைவன் என்னும் மறைபொருள்முன் சரணாகதி அடைகின்றார்.


Wednesday, January 25, 2023

பொருளும் பயனும்

இன்றைய இறைமொழி 

வியாழன், 26 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம்

1 திமொ 1:1-8. மாற் 4:21-25.

பொருளும் பயனும்

'பேனா எதற்குப் பயன்படுகிறது?' - என்று ஒரு கேள்வி நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்டது.

'எழுத' - என்று பதிலளித்தார் கேட்கப்பட்டவர்.

'வேறு எதற்கு?' - கேள்வி நீட்டிக்கப்பட்டது.

'பரிசளிக்க'

'வகுப்பறையில் நமக்கு முன் இருப்பவரைத் தொட்டு அழைக்க'

'வாசிக்கும் பக்கத்தை நினைவில் கொள்ளும் புக்மார்க் ஆக'

'பறந்து போகும் பேப்பர் மேல் வைக்கப்படும் பேப்பர் வெயிட் ஆக'

'பணம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக' (எடுத்துக்காட்டாக, 'ச்சாஃப்பர்' பேனா)

'நமக்குப் பிடிக்காதவர் மேல் எறியும் ஆயுதமாக'

'கல்லூரியின் இறுதி நாள் அன்று அதில் உள்ள மையை மற்றவரின் சட்டையில் கொட்டி விளையாட'

என்று தொடர்ந்தார் கேட்கப்பட்டவர்.

பொருளுக்குப் பயன் ஒன்று என்றல்ல. நிறையப் பயன்கள் உண்டு.

இன்றைய நற்செய்தியில் விளக்கு என்ற ஓர் உருவகத்தை எடுத்து, அந்த விளக்கு மரக்காலின் உள்ளும், கட்டிலுக்குக் கீழேயும் வைக்கக் கூடாது என எச்சரிக்கிறார் இயேசு. மேலும், எந்த அளவையால் நாம் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கிறார். பிந்தைய வரி முந்தைய வரியின் நீட்சிதான் என நினைக்கிறேன். அதாவது, நாம் விளக்கை மரக்காலுக்குள் வைத்தால் அதற்கேற்ற வெளிச்சம் கிடைக்கும். விளக்குத் தண்டின்மேல் வைத்தால் அதற்கேற்ற ஒளி கிடைக்கும்.

ஒரு வீட்டில் மூன்று இடங்கள் உள்ளன இந்த உருவகத்தின்படி: ஒன்று, மரக்கால். இரண்டு, கட்டில், மூன்று. விளக்கத்தண்டு.

பாலஸ்தீனத்தில் விளக்கு இந்த மூன்று இடங்களிலுமே வைக்கப்பட்டது. காற்றுக் காலத்தில் விளக்கு அணைந்துவிடாமலிருக்க, அல்லது தீப்பெட்டி இல்லாத நேரத்தில் எரிகின்ற விளக்கை அப்படியே மூடி வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் நிறைய எண்ணெய் வீணாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டிலின் கீழும் விளக்குகள் வைக்கப்பட்டன. உணவுத் தானியங்களை, குறிப்பாக, கோதுமையை அவர்கள் கட்டிலின் கீழ் உலர்த்துவது வழக்கம். கோதுமைக்கு வெப்பம் கொடுக்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் - ஆனால் விளக்குக்கென்று சில பூச்சிகள் வரும் - கட்டிலின் கீழ் விளக்கை ஏற்றி வைப்பர். மூன்றாவதாக, விருந்தினர்கள் வரும்போது, இறைவேண்டல் செய்யும்போது, வீட்டில் உள்ளவர்கள் பொதுவாக அமர்ந்து உரையாடியபோது விளக்கு மரக்காலின்மேல் வைக்கப்பட்டது.

மூன்று இடங்களில் விளக்கு வைக்கப்பட்டாலும், விளக்குக்கென்று நிறையப் பயன்பாடுகள் இருந்தாலும் அதன் முதன்மையான பயன்பாடு ஒருவர் மற்றவருக்கு ஒளியூட்டுவது. அதாவது, ஒருவர் மற்றவரின் முகத்தைக் காண உதவுவது. விளக்குத் தண்டின்மேல் விளக்கு இருக்கும்போதுதான் இப்பயன் சாத்தியம்.

ஆக, முதன்மையான பயன்பாட்டை நாம் மனத்திலிருத்தி வாழ வேண்டும்.

என் வாழ்வுக்கு அல்லது என் வாழ்வால் நிறையப் பயன்கள் ஏற்படலாம். ஆனால், என் முதற்பயனை நான் வாழ்கிறேனா? என் முதற்பயனை அல்லது என் தனிப்பயனை வாழ்வது அவசியம். ஏனெனில், அதுவே எனக்குத் திரும்ப வரும்.

எடுத்துக்காட்டாக, நான் யூட்யூபில் காணொளி பார்ப்பதை என் பயன் எனக் கொள்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதையொட்டியே நான் வளர்வேன். ஆனால், என் பயன் விவிலியம் வாசிப்பது என நான் நினைத்து அதற்கு நேரம் கொடுத்தால் அது எனக்குத் திரும்பப் பயன் கொடுக்கும். நான் எந்த அளவையை எடுத்தாலும் அது எனக்குத் திரும்பக் கொடுக்கும்.

இன்னொரு பக்கம், இயேசுவின் அறிவுரைப் பகுதியின் சூழலை நாம் கருத்தில் கொண்டால், விளக்கு என்பது இறையாட்சியையும், மரக்கால் என்பது நம் அன்றாட வாழ்வியல் பரபரப்புகளையும், கட்டில் என்பது நம் ஓய்வையும் குறிக்கிறது. பரபரப்பும் ஓய்வும் இறையாட்சிப் பணியின் எதிரிகள். இவ்விரண்டுக்கும் இடையே, பொறுமையாகவும், ஓய்ந்திராமலும் இறையாட்சியை அறிவித்தலே விளக்குத்தண்டின்மேல் விளக்கை ஏற்றுதல்.

என் வாழ்வின் முதற்பயனை உணர்தலும், உணர்ந்தவுடன் அதைச் செயல்படுத்த முயல்தலும் நலம்.

நான் என்னுடைய வாழ்க்கைக்குக் கொடுக்கும்போது, வாழ்க்கை எனக்குக் கூடுதலாகக் கொடுக்கும்.

பவுலின் உடனுழைப்பாளர்களும், எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் ஆயர்களாகவும் விளங்கிய திமொத்தேயு மற்றும் தீத்து என்னும் இளவல்களை  இன்று நாம் நினைவுகூருகின்றோம். இவர்கள் இருவரும் வியப்பின் ஆச்சரியக் குறிகள்!

தீத்துவைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'துரோவாவில் என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே, அம்மக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்' (காண். 2 கொரி 2:13) என்றும், 'தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார்' (காண். 2 கொரி 8:23) என்றும், 'நம்பிக்கை அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை' (காண். தீத் 1:1) என்றும் முன்மொழிகின்றார்.

ஆக, ஒரே நேரத்தில் பவுலின் தம்பியும், பங்காளியும், உடன் உழைப்பாளரும், மகனுமாக இருக்கின்றார் தீத்து.

திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற பவுல், 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும் குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்து வா!' (காண். 2 திமொ 4:13) என்று பணிக்கின்றார். இவரை, 'அன்பார்ந்த பிள்ளை' (காண். 2 திமொ 1:1) என்று அழைக்கின்ற பவுல், 'இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன். கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்' (காண். 2 திமொ 1:3-4) என உருகுகின்றார்.

புனித பவுல் தன் உடனுழைப்பாளர்கள் அனைவரோடும் இணைந்து, நாங்கள் 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்' (காண். 2 கொரி 6:6) என்று பெருமை பாராட்டுகின்றார்.

எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் இளம் ஆயர்களாகத் திகழ்ந்த திமொத்தேயும், தீத்துவும் மேற்காணும் பண்புகளைக் கொண்டே தங்கள் மந்தையைக் கண்காணித்தனர். இவர்கள் வயதில் மிகவும் சிறியவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு எழுதப்பட்ட மடலிலிருந்து புலப்படுகிறது: 'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்' (காண். 1 திமொ 5:12)ளூ 'யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே!' (காண். தீத் 2:15).

ஆக, இவர்களோடு சேர்ந்து இன்று புனித பவுலும் கொண்டாடப்பட வேண்டியவரே.

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகியோர் தங்கள் வாழ்வின் முதற்பயனாகக் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டனர்.


Tuesday, January 24, 2023

புனித பிரான்சிஸ் சலேசியார்

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 24 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 10:1-10. மாற் 3:31-35.

புனித பிரான்சிஸ் சலேசியார்

இன்று நம் தாய்த் திருஅவை புனித பிரான்சிஸ் சலேசியாரின் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு இப்புனிதரின் 400வது பிறந்தநாளை முன்னிட்டு நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மாதம் (டிசம்பர்) 28ஆம் தேதி அன்று, 'தோத்தும் அமோரிஸ் எஸ்த்' ('அனைத்தும் அன்பை நோக்கியே') என்னும் திருத்தூது மடலை வெளியிட்டார். இந்த மடலில் இப்புனிதர் பற்றி முன்வைக்கும் கருத்துகளில் மூன்று என்னை மிகவும் கவர்ந்தன:

(அ) 'எதையும் நிராகரிக்காதே, எதையும் எதிர்பார்க்காதே.' ஆயராக இருந்தபோது துறவியர் இல்லம் ஒன்றுக்குச் செல்கின்ற புனித பிரான்சிஸ் சலேசியார், இவ்விரு வாக்கியங்களையும் மட்டும் சொல்லிவிட்டு தன் உரையை முடித்துக்கொள்கின்றார். தாழ்ச்சி மற்றும் பரந்த உள்ளம் கொண்டு வாழ இவ்வாக்கியங்கள் நம்மை அழைக்கின்றன.

(ஆ) 'ஆசையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.' ஆசை என்பது பல நேரங்களில் எதிர்மறையானதாகப் பார்க்கப்படும் வேளையில், ஆசையின் வழியாகவே இறையன்புக்குச் செல்ல முடியும் என்றும், இறையன்புக்கான முதற்படி இறைவனைப் பற்றியே ஆசையே என்னும் புதிய புரிதலைத் தருகின்றார் புனிதர்.

(இ) 'வாழ்க்கை மற்றும் வேலையின் துள்ளல் கிறிஸ்தவ ஆன்மிகம்.' ஆன்மிகம் என்பது துறவு மடங்களுக்குள் அடைந்து கிடப்பதிலோ, அல்லது பாலைவனத்தில் தனித்திருப்பதிலோ அல்ல, மாறாக, அன்றாட வாழ்க்கையும், நாம் செய்கின்ற வேலைகளையும் துள்ளலுடன் செய்வதில்தான் அடங்கியுள்ளது என்கிறார் நம் புனிதர்.

பொதுநிலையினரின் ஆன்மிக வாழ்வுக்கு அடிப்படையான பல கருத்துகளை முன்வைக்கும் நம் புனிதரைக் கொண்டாடுகின்ற வேளையில், இவரின் ஆன்மிகம் நமதாக இவரே நமக்காகப் பரிந்து பேசுவாராக!

நிற்க.

இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக்கொண்டிருக்க, இயேசுவின் தாயும் சகோதரர்களும் வெளியே அமர்ந்து கொண்டு அவரைக் காணக் காத்திருக்கிறார்கள். இதைக் காணும் கூட்டம், 'அதோ உம் தாயும் சகோதரர்களும் ...' என இயேசுவின் போதனையை இடைமறிக்கிறது.

ஏன் கூட்டம் இயேசுவை இடைமறித்தது?

இயேசுவின் கவனத்தை ஈர்த்து இயேசுவிடம் நல்ல பெயர் வாங்கவா?

அல்லது தாய் மற்றும் சகோதரர்களின் இருப்பைப் பதிவு செய்யவா?

அல்லது தாய் மற்றும் சகோதரர்களை இவர் எப்படிக் கையாளுகிறார் என்று இயேசுவைச் சோதிப்பதற்கா?

காரணம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாக இருந்திருக்க, இயேசுவோ, 'இதோ இவர்கள்' என்று தனக்கு அருகில் இருப்பவர்களைக் காட்டுகின்றார்.

'அதோ அவர்கள்' என்ற நிலையில் இல்லாமல், 'இதோ இவர்கள்' என்ற நிலையில் இருப்பவர்கள்தாம் இயேசுவின் தாயும், சகோதரர்களும். அப்படி என்றால், இயேசு தன் சீடர்கள் முன்னிலையில் தன் தாய் மற்றும் சகோதரர்களை மறுதலித்தாரா? இல்லை. என் தாய் 'அதோ அங்கே' என்று இன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தாலும், இறைத்திருவுளம் நிறைவேற்ற அவர் சொன்ன 'ஆமென்' வழியாக அவர் 'இதோ இங்கே' நிற்கிறார் என்று மரியாளின் நிலையை உயர்த்துவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

'அதோ' என்ற நிலையிலிருந்து 'இதோ' என்ற நிலைக்கு நாம் எப்படிக் கடந்து வருவது?

அதற்கான விடை இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபி 10:1-10) இருக்கிறது. இயேசுவின் ஒரே பலியை மற்ற எல்லா பலிகளையும்விட மேலானதாகக் காட்டும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இன்று அது எப்படி மேலானது என்பதைச் சொல்கின்றார்.

ஆண்டுதோறும் இடைவிடாமல் பலி செலுத்துபவர்கள் ஆடு, வெள்ளாட்டுக் கிடாய்கள், மற்றும் மாடுகளைப் பலி கொடுத்தனர். அப்படிக் கொடுக்கப்பட்ட பலிகளில் ஒரு 'அந்நியத்தன்மை' இருந்தது. அதாவது, பலி கொடுப்பவர், பலிப்பொருள் இவர்கள் இருவரும் வேறு வேறாக இருந்தனர். ஆக, 'அதோ' பலிப்பொருள், 'இதோ' நான் என தங்களையே பலிகளில் இருந்து தூரமாக வைத்துக்கொண்டனர் மற்ற தலைமைக் குருக்கள். இந்த நிலையில், பலி தன்மேல் படாது, இரத்தத்தால் குருவின் உடை அழுக்காகாது, மற்றபடி இப்பலி ஒரு பாதுகாப்பான தூரத்தைக் கொண்டிருக்கும்.

ஆனால், இயேசுவின் பலியில் இந்த அந்நியத்தன்மை மறைகிறது. ஏனெனில், இயேசுவின் பலியில், 'பலிப்பொருளும்,' 'பலி கொடுப்பவரும்' ஒன்றாக இருக்கின்றனர். ஆக, 'இதோ' பலிப்பொருள், 'இதோ' நான் என இயேசு சொல்லும் போது அங்கே தூரம் இல்லை. ஆனால், இவ்வகை பலி ஆபத்து நிறைந்தது. ஏனெனில், பலியின் இறுதியில் பலி இடுபவர் இறந்து போவார். இங்கே பலியிடுபவர் தான் பாதுகாப்பை ரிஸ்க் செய்கிறார். இந்தப் பலி கொடுப்பது இவருக்கு வலிக்கும்.

இந்த இரண்டாம் நிலை பலிதான் இறைவனுக்கு ஏற்புடையதாகின்றது.

ஏனெனில், இங்கே பலியிடுபவரின் உள்ளமும், உடலும் ஒருங்கே நொறுங்குகிறது. ஆக, நொறுங்குகின்ற உள்ளமும், உடலும்தான் இறைத்திருவுளம் நிறைவேற்ற முடியும். தாய்மையை அடையும்போது ஒரு பெண்ணின் உடலும், உள்ளமும் நொறுங்குகிறது. மரியாள், 'ஆமென்' என்று சொன்னபோது, உள்ளத்தில் அவர் கொண்டிருந்த திட்டங்கள் நொறுங்கி, இறைத்திட்டத்திற்கு தன் உடலையும் நொறுக்கினார்.

ஆக, 'அதோ' என்ற நிலை மாறி, இறைவனுக்கு அருகில் 'இதோ' என்று அறிமுகமாக, 'நொறுங்குதல்' அவசியமாகிறது.

Saturday, January 21, 2023

என் கப்பர்நாகும் எங்கே?

ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

I. எசாயா 9:1-4 II. 1 கொரிந்தியர் 1:10-13,17 மத்தேயு 4:12-23

என் கப்பர்நாகும் எங்கே?

இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைக் கண்டுபிடித்தலே நம் வாழ்வின் இலக்கு. எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, எந்த இடத்தில் நாம் எல்லாரையும் அணைத்துக்கொள்கிறோமோ, எந்த இடத்தில் நாம் கனிதந்து வளர்கிறோமோ அந்த இடமே நம் இடம்.

அந்த இடமே நம்முடைய கப்பர்நாகும்!

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 9:1-4), 'செபுலோன் நாடு, நப்தலி நாடு' என்று உருவகமாகவும், நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 4:12-23), 'செபுலோன் நாடு, நப்தலி நாடு, பெருங்கடல்வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பு, பிற இனத்தவரின் கலிலேயப் பகுதி' என்று உருவகமாகவும், 'கப்பர்நாகும்' என்று நேரிடையாகவும் அழைக்கப்படுகிறது கப்பர்நாகும்.

கலிலேயக் கடலின் (ஏரியின் கரையோராமாய்) ஹஸ்மோனியர்களின் ஆட்சிக்காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு) ஏற்படுத்தப்பட்டு ஏறக்குயை கிபி 11ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போரினால் ஆள்கள் வெளியேறி இன்று வெறும் தூண்களும் உடைந்த வீடுகளும் கற்களும் எஞ்சி நிற்கும் நகரம்தான் கப்பர்நாகும். இயேசுவின் சமகாலத்தில் இது ஒரு மீனவ நகரம். இந்நகரின் மக்கள்தொகை ஏறக்குறைய 1500. திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், மற்றும் மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் இது. இங்கேதான் இயேசு நூற்றுவர்தலைவனின் மகனைக் குணமாக்குகிறார். முடக்குவதாதமுற்ற ஒருவரை நான்கு பேர் கூரையைப் பிரித்து இறக்கியதும் இங்கேதான். கப்பர்நாகும் எதிர்மறையான பதிவையும் விவிலியத்தில் பெற்றுள்ளது: பெத்சாய்தா, கொராசின் நகரங்களோடு, இயேசு கப்பர்நாகுமையும் சபிக்கின்றார் (காண். மத் 11:23).

'இயேசு நாசரேத்தை விட்டு அகன்று ... கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது.

இயேசு ஏன் கப்பர்நாகுமுக்குச் செல்ல வேண்டும்? 

இரண்டு நிலைகளில் இந்தக் கேள்விக்கு விடை தரலாம். ஒன்று, நாசரேத்து இயேசுவின் தனிவாழ்வின் அல்லது மறைந்தவாழ்வின் மையம். இந்த மையத்திலிருந்து விலகும் இயேசு தன் பொதுவாழ்வின் அல்லது பணிவாழ்வின் மையமாக கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்கிறார். இரண்டு, மேன்மக்களும், அரசக்குடிகளும் வாழ்ந்த எருசலேமை, அல்லது சமாரியர்களின் புனித தலம் என்றழைக்கப்பட்ட கெரிசிம் நகரைத் தேர்ந்துகொள்ளாமல், அந்நியப் படையெடுப்புக்களால் சூறையாடப்பட்ட, பிறப்பில் யூதர்களாக இருந்தாலும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியதால் புறவினத்தார் என்று நிலையில் கருதப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடமாகிய கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்வதன் வழியாக, தன்னுடைய இறையாட்சிப் பணி மேன்மக்களுக்கும், அரசகுடிகளுக்கும் அல்ல, அது புனித இடம் சார்ந்ததும் அல்ல, மாறாக, வலுவற்றவர்களுக்கும், வெகுசன மக்களுக்கும் உரியது என்பதை இயேசு தெளிவுபடக் கூறுகிறார்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், 'இப்பிரபஞ்சத்தில் இது என்னுடைய இடம்' என்று இயேசு தெரிந்து கொண்ட இடம் 'கப்பர்நாகும்'.

விவிலியத்தில் 'இடம்' மிகவும் முக்கியமானது. முதல் ஏற்பாட்டில் இதை மிக அழகாகக் காணலாம். 'பாபேல்' என்ற இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தவர்களை வெளியேற்றி அவர்களை பல நாடுகளுக்கு இடம்பெறச் செய்கின்றார் கடவுள். ஊர் என்ற இடத்தில் வாழ்ந்த ஆபிரகாமை கானானுக்கு இடம் மாற்றுகிறார். பெயர்செபாவில் குடியேறிய யாக்கோபு காரானுக்கு இடம் பெயர்கின்றார். யாக்கோபு மீண்டும் பெத்தேலுக்கு வருகின்றார். யோசேப்பு அங்கிருந்து விற்கப்பட்டு எகிப்துக்குச் செல்கின்றார். எகிப்தில் ஆளுநராகித் தன் தந்தையையும் வீட்டாரையும் அங்கே அழைத்துக்கொள்கின்றார். அங்கிருந்து விடுதலைப் பயணம் தொடங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டிற்கு வருகின்றார்கள். இந்த இடமாற்றம் அல்லது இடம்பெயர்தல் ஒரு தாநிகழ்வு அல்ல. மாறாக, அது இறைவனின் நோக்கம் நிறைவேறுகின்ற ஒரு நிகழ்வு. ஏனெனில், ஒவ்வொருவர் இடம் மாறும்போதும் விவிலியத்தில் அவருடைய வாழ்க்கை தலைகீழ் மாற்றம் அடைகிறது. அந்த மாற்றத்தில் கடவுள் செயலாற்றுகிறார் என்பதை அந்தக் கதைமாந்தர் அறிந்துகொள்கிறார். 

நம்முடைய மரபிலும் திருமணத்திற்குப் பின் மனைவி கணவருடைய இடத்திற்குச் செல்கிறாள். படிப்பு அல்லது வேலையின் பொருட்டு ஆண் இடம் மாறுகின்றான். இடம் மாற்றம் என்பது வாழ்வு மாற்றம் என்பதை நாம் நம்முடைய வாழ்வியல் அனுபவமாகவும் உணர்ந்திருப்போம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கப்பர்நாகுமிற்கு வருகின்றார்.

'இதுதான் தன்னுடைய இடம்' என்று அவர் அதை அறிந்துகொள்கிறார். இந்த இடத்தில் இயேசு மூன்று செயல்கள் செய்வதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அல்லது இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 

அ. நற்செய்தி அறிவிப்பு (மத் 4:12-17)

ஆ. முதல் சீடர்கள் அழைப்பு (4:18-22)

இ. திரளான மக்களுக்குப் பணி (4:23)

முதலில், 'மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்;டது' என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். இரண்டாவதாக, தன்னுடைய விண்ணரசுப் பணிக்கான நுகத்தடித் தோழர்களாக, உடனுழைப்பாளர்களாக, திருத்தூதர்களாகத் திகழ நால்வரைத் தெரிவு செய்கிறார். இறுதியாக, அப்பகுதிகளில் சுற்றி வந்து மக்களிடையே இருந்த நோய்நொடிகளைக் குணமாக்குகின்றார். 

இதுதான் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடம் என்பதை இயேசு எப்படிக் கண்டுகொள்கின்றார்? இதற்கு மூன்று காரணங்களை நாம் நற்செய்தி வாசகத்தில் பார்க்கலாம்:

அ. இறைவாக்கு நிறைவேறுகிறது

தன்னுடைய பணிவாழ்வை இயேசு எசாயா இறைவாக்கினரின் நிறைவாகப் பார்க்கிறார். இந்த இறைவாக்கையே இன்றைய முதல்வாசகத்தில் வாசிக்கின்றோம். வடக்கே இஸ்ரயேல் மக்கள் போர்களால் அலைக்கழிக்கப்பட்ட நேரம், அசீரியாவின் படையெடுப்பால் அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நேரத்தில் இறைவாக்குரைக்கும் எசாயா, வரவிருக்கும் அரசர் பற்றிய முன்னறிவிப்பில், இருளிலும் அடிமைத்தனத்தில் குளிரிலும் இருந்தவர்களுக்கு ஒளி உதித்தது என்று அறிவிக்கின்றார். மேலும், மகிழ்ச்சி, அக்களிப்பு, களிகூர்தல் என்று மூன்று நிலைகளில் அவர்கள் தாங்கள் இழந்த மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறார்கள். மேலும், நுகம், தடி, மற்றும் கொடுங்கோல் ஒடித்துப்போடப்படுவதால் அடிமைத்தனம் முற்றிலும் அழிகிறது. ஆக, இதிலிருந்து இயேசுவின் பணி மற்றவர்கள் இழந்த மகிழ்ச்சியை அவர்களுக்குத் திரும்ப வழங்கவும், மற்றவர்களின் அடிமைத்தனத்தை அழிப்பதும் என்பது தெரிகிறது.

நம்முடைய வாழ்விலும் பிரபஞ்சத்தில் நம் இடத்தைக் கண்டறிவதற்கான முதல் படி இதுதான்: 'எனக்கென இறைவன் முன்குறித்துவைத்த நோக்கத்தை நான் அறிவது.' இது சிலருக்கு எளிதாகவும் உடனடியாகவும் இருக்கலாம். சிலருக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.

ஆ. பாதை மாற்றம்

தன்னுடைய முதல்சீடர்களை அழைக்கின்ற இயேசு அவர்களின் பாதையை மாற்றுகின்றார். கடலில் ஈரமாகி நின்றவர்களின் கால்கள் புழுதியில் நடக்குமாறு அவர்களின் பாதையைத் திருப்பிவிடுகின்றார். என்னால் மற்றவர்களின் வாழ்க்கை திரும்ப வேண்டும். இது அடுத்த அறிகுறி. இன்று என்னால் எத்தனை பேருடைய வாழ்க்கைப் பாதை மாற்றம் பெற்றிருக்கிறது?

இ. நோய் குணமாதல்

நோய் என்பது குறைவு. அக்குறைவை நிறைவாக்குகிறார் இயேசு. இயேசுவைச் சந்தித்த அனைவரும் குறைகள் நீங்கி நிறைவாகச் செல்கின்றனர்.

என்னுடைய இடத்தை நான் கண்டுபிடித்தவுடன் என்னுள் இருக்கும் எல்லாக் குறைகளும், தீய எண்ணங்களும் மறைய ஆரம்பிக்கும். நான் உள்ளத்தில் நலம் பெறுவேன். என்னுடைய வறுமை, அறியாமை, குறுகிய எண்ணம், கோபம், குற்றவுணர்வு என எல்லாம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில், நான் என்னுடைய உள்ளத்தை நேர்முக எண்ணங்களால் நிரப்பத் தொடங்குவேன்.

ஆக, இறைவனின் நோக்கம் நிறைவேறும்போது, என் வாழ்வுப் பாதை மாற்றம் அடைந்து நான் மற்றவரின் பாதையைத் திருப்பும்போது, நான் என் குறைகளையும் மற்றவர்களின் குறைகளையும் களைய முற்படும்போது நான் பிரபஞ்சத்தின் என்னுடைய இடத்தைக் கண்டறிந்தவன் ஆவேன். வெறும் படத்திற்கும் யூரோ நோட்டுக்களுக்குமான வித்தியாசத்தை உணர ஆரம்பிப்பேன். இதுதான் நான், இதற்காக நான் என்னுடைய பணியைக் கூர்மைப்படுத்த ஆரம்பிப்பேன்.

நம் எல்லாருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது. இருப்பது ஒரு வாழ்க்கைதான் என்று எண்ணும் அந்த நாளில் என்னுடைய இரண்டாம் வாழ்க்கை தொடங்குகிறது. அந்த இரண்டாம் வாழ்க்கைதான் என்னுடைய கப்பர்நாகும். அகுஸ்தினாரும் தன்னுடைய 36வது வயதில் தன்னுடைய கப்பர்நாகுமாம் கடவுளைக் கண்டுகொள்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 1:10-13,17) பவுல், கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பிளவுகளைக் கடிந்துகொள்கின்றார். 'நான் பவுலைச் சார்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன், நான் கேபாவைச் சார்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சார்ந்தவன்' என்று சொல்லி பிளவுபட்டுக்கிடக்கின்றனர் கொரிந்து மக்கள். வெளிப்புற அடையாளைத்தைப் பற்றிக்கொண்டிருப்பது நாம் நம்முடைய கப்பர்நாகுமிற்கு இன்னும் வரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கப்பர்நாகுமிற்கு வந்த நபர் பிரிவினை பாராட்டமாட்டார். அடுத்தவரோடு தன்னை எது இணைக்கிறது என்று பார்ப்பாரே தவிர, மற்றவரிடமிருந்து எது தன்னைப் பிரிக்கிறது என்பதை அவர் பார்க்கமாட்டார்.

இறுதியாக,

இன்று நான் எங்கே இருக்கிறேன்? என்னுடைய கப்பர்நாகுமை நான் கண்டுபிடித்துவிட்டேனா? என்னுடைய கப்பர்நாகுமில் மூன்று விடயங்கள் இருக்க வேண்டும்: ஒன்று, என்னுடைய வாழ்வின் நோக்கம். இரண்டு, என்னுடைய நுகத்தடித் தோழர்கள், நண்பர்கள், அல்லது வாழ்க்கைத்துணை. மூன்று, என்னுடைய வாழ்வால் என் குடும்பமும் மற்றவர்களும் அடையும் பலன். இதையே உருவமாகச் சொல்ல வேண்டுமென்றால், என் வாழ்வின் நோக்கம் என்பது வேர், நுகத்தடித் தோழர்கள் என்பவர்கள் தண்டு, நான் கொடுக்கும் பலன் நான் விரிக்கும் கிளைகள், அவை கொடுக்கும் கனிகள். இந்த மூன்றும் ஒன்றோடொன்று இணைந்திருப்பவை.

'நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும். ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்' என்று தன்னுடைய கப்பர்நாகுமை ஆண்டவரில் தேடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 27:4).

இயேசு பணியைத் தொடங்கிய உடைந்த ஊராக நான் இருந்தாலும், என்னையும் கப்பர்நாகுமாக நினைத்து அவர் என்னிடம் வருகிறார். எதற்காக? 'என் கப்பர்நாகும் எங்கே' என்று காட்டுவதற்காக!



மக்கள் பேசிக்கொண்டனர்

இன்றைய இறைமொழி 

சனி, 21 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 9:2-3,11-14. மாற் 3:20-21.

மக்கள் பேசிக்கொண்டனர்

நாசி வதை முகாமிலிருந்து வெளியேறிய விக்டர் ஃப்ராங்ள் என்ற உளவியல் அறிஞர், 'லோகோதெரபி' என்ற ஓர் உளவியல் ஆற்றுப்படுத்தும் முறையைக் கண்டறிகிறார். இதன்படி, மனிதர்கள் தங்கள் வாழ்வுக்கான பொருளை உணர்ந்தார்கள் என்றால், அவர்களால் எந்தவொரு துன்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.

மனிதர்கள் இரு வகை என்கிறார் அவர்:

முதல் வகையினர், தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தெரிவு செய்து வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வுக்கு முழுவதும் தாங்களே பொறுப்பேற்று வாழ்பவர்கள்.

இரண்டாம் வகையினர், மற்றவர்களைப் போல வாழ முயற்சி செய்பவர்கள். இவர்களைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதுகிறார்: 'என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உள்ளுணர்வு அவர்களுக்குச் சொல்லாது. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகையால், மற்றவர்கள் செய்வது போலச் செய்வார்கள், அல்லது மற்றவர்கள் தங்களுக்குப் பணிப்பதைச் செய்துகொண்டிருப்பார்கள்.'

'ஒத்துப்போதல்' அல்லது 'இணக்கம்' சமூகவியலில் அதிகாகப் பேசப்படும் வார்த்தை. இந்தப் பண்புதான் மானுடத்தை ஒன்றிணைக்கிறது, மானுடம் வளர உதவுகிறது. 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' போன்ற பழமொழிகள் வழியாக, காலங்காலமாக இது நமக்குச் சொல்லப்பட்டு, நாம் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கப்படுகின்றது.

'மக்கள்'

மாற்கு நற்செய்தியில் மக்கள் பெரும்பாலும் இயேசுவின் பணிக்குத் தடையாகவே இருப்பார்கள். முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வரும்போது, மக்கள் அங்கு தடை போல அமர்ந்திருக்கின்றனர். பேய் பிடித்த சிறுவனுக்கு நலம் தரும் நிகழ்வில் மக்கள் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு விரைவில் செயலாற்றுகின்றார். இரத்தப் போக்குடைய பெண் குணமாகும் நிகழ்வில் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்குகிறது. யாயிரின் வீட்டுக்கு வெளியே கூட்டம் அமர்ந்து ஒப்பாரி வைப்பதுடன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடவும் செய்கிறது. உணவருந்தக் கூட நேரம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் இயேசுவைச் சூழ்ந்து நிற்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் மிகக் குறுகியதாக இருந்தாலும், மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

'இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்'

தனியே இரவு முழுவது இறைவேண்டல் செய்யும் ஒருவர்,

பரிவு கொண்டு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு உணவளித்த ஒருவர்,

கடல்மீது நடந்து தன் சீடர்களை நோக்கி வந்த ஒருவர்,

புதிய மணமகனாகத் தன்னை முன்வைத்து நோன்பை ஒதுக்கிய ஒருவர்,

ஓய்வுநாளில் கை சூம்பிய ஒருவருக்கு நலம் தந்த ஒருவர்,

தன்னோடு இருக்கவும், அனுப்பப்படவும் பன்னிருவரைத் தேர்ந்துகொண்ட ஒருவர்,

மக்களின் பார்வையில் 'மதிமயங்கியவர்' என்று தெரிகின்றார்.

'மதிமயங்கி இருக்கிறார்' அல்லது 'மூளை குழம்பியுள்ளார்' அல்லது 'அப்நார்மலாக இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொண்டனர். 

மக்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள்?

இயேசு தங்களைப் போல இருக்க வேண்டும் எனவும், தங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் அல்லது இணக்கமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால், இயேசு தன் வாழ்வின் தெரிவுகளைத் தான் தேர்ந்தெடுக்கிறாரே ஒழிய, அவற்றை மற்றவர்களிடம் அவர் கொடுக்கவில்லை.

ஊர் தனக்கென ஒரு வழக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதை மீறும் அனைவரையும் 'அப்நார்மல்' என அழைக்கிறது. அப்படி அழைத்துவிடுதல் எளிது. ஏனெனில், அவரைப் பற்றி மீண்டும் அவர்கள் அக்கறைகொள்ளத் தேவையில்லை.

இரண்டு கேள்விகள்:

(அ) மற்றவர்களின் வாழ்க்கை முறை, நடைவுடை பாவனை ஆகியவற்றைக் கண்டு, அல்லது என்னைவிட வித்தியாசமாக, அல்லது ஊராரை விட வித்தியாசமாக ஒருவர் இருக்கிறார் எனக் கண்டு, அவரை நான் 'அப்நார்மல்' என அழைக்கின்றேனா?

(ஆ) மக்கள் சொல்வதே சரி, மக்களோடு ஒத்துப் போவதே சரி, மக்களின் பேச்சுக்குப் பணிந்து செல்தலே சரி என்று நான் மக்கள் மந்தையைப் போல இருக்க முயல்கிறேனா?

இரண்டுமே தவறு.

மதிமயங்கியவர் இயேசு அல்ல.

மதிமயங்கியவர்கள் மக்களே.


Friday, January 20, 2023

தனியாய் எவரும் சாதிப்பதில்லை

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 20 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 8:6-13. மாற் 3:13-19.

தனியாய் எவரும் சாதிப்பதில்லை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களை அழைத்து, அவர்களின் பன்னிருவரைத் திருத்தூதர்களாக நியமிக்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் வழக்கமாக மாணவர்கள்தாம் ஆசிரியர்களை அல்லது ரபிக்களைத் தேர்ந்துகொள்வர். மேலும், ஆசிரியர்கள் மாணவர்களை சில கால ஆய்வுக்குப் பின்தான் ஏற்றுக்கொள்வர். இயேசு அவருடைய சமகாலத்து ரபிக்களை விட மாறுபட்டவராக இருக்கிறார். தாமாகவே சீடர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இயேசு சீடர்களைத் தேர்ந்துகொள்ளும் நிகழ்வை மூன்று வினைச்சொற்களால் எழுதுகின்றார் மாற்கு: (அ) இயேசு மலைமேல் ஏறினார் – நேரிடையாக, மலைமேல் ஏறினார் என்றும், உருவகமாக இறைவேண்டலுக்குச் சென்றார் என்றும் புரிந்துகொள்ளலாம். (ஆ) தாம் விரும்பியவர்களை அழைத்தார் - இயேசு தம் சீடர்கள்மேல் விருப்பம் கொள்கின்றார். மற்றும் (இ) சீடர்கள் அவரிடம் வந்தார்கள் - இந்த நாளுக்காகவும் பொழுதுக்காகவும் காத்திருந்ததுபோல அவர்கள் பதிலிறுப்பு செய்கிறார்கள்.

இயேசு தம் சீடர்களை அழைத்ததன் நோக்கம் என்ன? (அ) தம்மோடு இருக்கவும் - இயேசுவோடு நெருங்கிய உறவுநிலையில் இருப்பதற்காக. (ஆ) நற்செய்தி அறிவிக்க அனுப்பப்படவும் - அழைக்கப்படுபவர் அனைவரும் அனுப்பப்படுபவர், நற்செய்தியை அறிவிப்பதற்காக. (இ) பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க – தீமை மற்றும் தீமையின் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கற்றுத் தருகின்றது: (அ) தனியாய் எவரும் சாதிப்பதில்லை. கடவுள் அவருடைய பணியை ஆற்றுவதற்கென மனிதர்களின் துணையை நாடுகின்றார். (ஆ) சீடர்கள் அவர்களுக்கென்று வாழ்க்கை இலக்குகளைக் கொண்டிருந்தனர். ஆனால், அழைக்கப்பட்டவுடன் அவற்றை விட்டுவிட்டு, அல்லது ஒதுக்கிவிட்டு, அல்லது அவற்றை இயேசுவின் நோக்கத்தோடு பொருத்திக்கொள்கின்றனர். என் வாழ்வின் இலக்கு என்ன? அதைக் கடவுளின் நோக்கத்தோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறேனா? (இ) அழைக்கப்பட்டவர்கள் புதிய பெயர்களைப் பெறுகின்றனர் – அவர்கள் என்னவாக மாறப் போகிறார்கள் என்பதை அவர்களுடைய பெயர்கள் அடையாளப்படுத்துகின்றன. நான் என்னவாக மாற வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்?

இன்று நாம் புனிதரும் மறைசாட்சியருமான ஃபபியான் மற்றும் செபஸ்தியார் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இவர்கள் இருவரும் தங்கள் மறைசாட்சியத்தின் வழியாகக் கடவுளின் அழைப்புக்குச் செவிமடுத்தனர்.


Wednesday, January 18, 2023

அனைவரும் வருக!

இன்றைய இறைமொழி 

வியாழன், 19 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 7:25-8:6. மாற் 3:7-12.

அனைவரும் வருக!

இயேசுவைக் காண பாலஸ்தீனத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இயேசுவின் காலத்தில், பாலஸ்தீன நாடு கலிலேயா, சமாரியா, மற்றும் யூதேயா என்னும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கலிலேயப் பகுதி வெகுசன, சாமானிய மக்கள் வாழும் பகுதியாக இருந்தது. அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலையில் மேம்பட்டவர்கள் யூதேயாவில் வாழ்ந்து வந்தனர். யோர்தான் அக்கரைப் பகுதி, தீர், சீதோன், மற்றும் தெக்கப்போலி போன்ற பகுதிகள் புறவினத்தார் வாழும் பகுதிகளாக இருந்தன. பாலஸ்தீனத்தின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து இயேசுவிடம் வந்த மக்கள் கூட்டம் அவரை நசுக்கப் பார்த்ததாக மாற்கு பதிவு செய்கின்றார்.

இயேசுவின் ஈர்ப்புத்திறன் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. இன்று நாம் எவ்வளவோ விளம்பரங்கள் செய்தாலும், புதிய மேய்ப்புப்பணி உத்திகளைப் பயன்படுத்தினாலும், புதிய முறைகளில் நற்செய்தியை அறிவிக்க முயற்சி செய்தாலும் நம்மை நோக்கி வருபவர்கள் மிகக் குறைவே. இயேசுவிடம் அப்படி என்ன வித்தியாசமாக இருந்தது? மக்கள் கூட்டம் அவரை நோக்கி வரக் காரணம் என்ன? மக்களுக்குத் தேவையானதை இயேசு அவர்களுக்கு அளித்தார். இன்று பல நேரங்களில் நாம், அவர்களுக்குத் தேவையானது எது என்பதை உணராமல், நம்மிடம் எது உள்ளதோ அதையே கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மேலும், மக்கள் கூட்டத்திடமிருந்து விலகிச் சென்ற இயேசு, மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் தன் பாதையை மாற்றிக்கொள்கின்றார். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நம் மேய்ப்புப் பணிப் பாதையை மாற்றிக்கொள்தல் நலம்.


Tuesday, January 17, 2023

அவர்களோ பேசாதிருந்தார்கள்!

இன்றைய இறைமொழி 

புதன், 18 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 7:1-3, 15-17. மாற் 3:1-6.

அவர்களோ பேசாதிருந்தார்கள்!

ஓய்வுநாளில் கதிர்கள் கொய்து தின்ற சீடர்கள் பற்றிய பதிவைத் தொடர்ந்து, இயேசு ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்தில் சூம்பிய கை உடைய ஒருவருக்கு நலம் தருகின்றார். இந்த நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூன்று ஒத்தமைவு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மாற்கு நற்செய்தியாளரின் பதிவு நிறைய இலக்கிய நுணுக்கங்களைக் கொண்டிருக்கிறது.

சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கைகளால் கொய்து தின்கின்றனர். இங்கே கை சூம்பிய ஒருவர் இருக்கின்றார். சீடர்களின் கைகளைக் காப்பாற்றிய இயேசு, இந்த நபரின் கைக்கு நலம் தருவாரா? என்னும் கேள்வி வாசகருக்கு இயல்பாக எழுகிறது.

இயேசு ஓய்வுநாளில் அந்த நபருக்கு நலம் தருவாரா? என்று கூர்ந்து கவனிக்கின்றனர் பரிசேயர்கள். நிகழ்வின் இறுதியில், இயேசுவின் மேல் கோபம் கொண்டவர்களாக வெளியேறி, ஏரோதியருடன் இணைந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்.

இதை வாசிக்கும் நமக்கு நிகழ்வின் முரண் புலப்படுகிறது: ஓய்வுநாளில் மற்றவர்மேல் குற்றம் காண்பது அனுமதிக்கப்படலாம், குற்றமற்றவருக்கு எதிராக அவரை ஒழிக்கலாம் எனச் சூழ்ச்சி செய்வதும் அனுமதிக்கப்படலாம். ஆனால், உடல் நலமற்றவருக்கு இயேசு நலம் தருவது அனுமதிக்கப்படக் கூடாது. இதுதான் மனித வாழ்வின் முரண். 

ஏறக்குறைய இதே போன்றதொரு நிகழ்வை எண்ணிக்கை நூலில் வாசிக்கின்றோம் (காண். எண் 15:32-35). ஒருவன் ஓய்வுநாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருக்கிறான். அவன் மோசேயிடமும் ஆரோனிடமும் அழைத்து வரப்படுகின்றான். காவலில் வைக்கப்பட்டு ஆண்டவரின் கட்டளைப் படி கல்லால் எறிந்து கொல்லப்படுகின்றான். என்ன ஒரு முரண்! ஓய்வுநாளில் விறகு பொறுக்குவது குற்றம். ஆனால், கல்லால் எறிந்து ஒரு மனிதனைக் கொல்வது குற்றமல்ல!

நற்செய்தி வாசக நிகழ்வின்படி, இயேசு அந்த நபரை நடுவில் வருமாறு அழைக்கின்றார். தன்னைச் சுற்றி அமர்ந்தவர்களைப் பார்த்துக் கேள்வி ஒன்று கேட்கின்றார்: 'ஒய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?' எனக் கேட்கின்றார். இந்தக் கேள்வி ஒரு குதர்க்கமான கேள்வி. அவர்கள் எந்தப் பதில் கொடுத்தாலும் மாட்டிக்கொள்வார்கள். 'நன்மை செய்வது முறை' என்று விடை கூறினால், 'நான் செய்வது நன்மை தானே! பின் ஏன் என்மேல் குற்றம் காண்கிறீர்கள்' என இயேசு கேட்க நேரிடம். 'முறை அல்ல' என்று விடை கூறினால், 'நன்மை செய்ய முற்படும் ஒருவரைத் தடுக்கும் குற்றம்' அவர்கள்மேல் சுமத்தப்படும். ஆகவே, அவர்கள் பேசாதிருக்கிறார்கள்!

இதன் பொருள் என்ன?

'இருப்பது இருப்பது போல இருக்கட்டும். உனக்கு ஏன் இந்தக் கவலை? ஓய்வுநாள் ஓய்வுநாளாக இருக்கட்டும். கைசூம்பியவர் கைசூம்பியவராகவே இருக்கட்டும்!'

'அவர்கள் பேசாதிருந்தார்கள்' எனப் பதிவு செய்கின்ற மாற்கு, அதற்கான காரணம் அவர்களுடைய கடின உள்ளம் என்றும் பதிவு செய்கின்றார். அவர்களின் கடின உள்ளத்தையும் பிடிவாத குணத்தையும் கண்டு வருந்துகின்ற இயேசு, 'கையை நீட்டும்' எனச் சொல்லி நலம் தருகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று சவால்களை வைக்கின்றது:

(அ) மற்றவர்கள்மேல் குறை காண்பது. இருத்தியல் சிந்தனையாளர் சார்த்தர், நம்மை யாரோ சாவித் துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்னும் உணர்வு குற்றவுணர்வையும், பயத்தையும், வெட்கத்தையும் தருகின்றது என மொழிகின்றார். இன்று நாம் மற்றவர்களை இப்படிப் பார்க்கின்றோமா? மேலும், மற்றவர்கள் நம்மை இப்படிப் பார்க்கும்போது, அதன் பொருட்டு நம் செயல்களை மாற்றிக்கொள்கின்றோமா? மற்றவர்கள் தம்மை எப்படிப் பார்த்தாலும், இயேசு தன் இயல்பையும் செயலையும் மாற்றிக்கொள்ளவில்லை.

(ஆ) பேசாதிருத்தல். பேசாதிருத்தல் என்பது ஒரு வகையில் நடக்கின்ற நிகழ்வுக்கு ஆம் என்று சொல்வதாகும். மௌனமாக இருத்தல் எப்போதும் போற்றுதற்குரிய மதிப்பீடு அல்ல. சில நேரங்களில் நாம் பேசித்தான் ஆக வேண்டும். பேசாதிருத்தல் ஒரு வகையான பாதுகாப்பு ஆயுதம். இயேசுவின் குரல் நம் உள்ளங்களில் மனச்சான்றாக ஒலிக்கிறது. அந்தக் குரலுக்கு நாம் தரும் பதிலிறுப்பு என்ன?

(இ) சூம்பிய உள்ளம். நிகழ்வின் இறுதியில், சூம்பிய கை உடையவர் நலம் பெறுகின்றார். நீர்க்கோவையால் துன்புற்றவரின் கை நலம் பெறுகிறது. ஆனால், பரிசேயர்களின் உள்ளம் சூம்பிப் போய்விடுகிறது. வன்மம், கோபம், எரிச்சல், அவமானம் என்னும் நீர் அவர்களுடைய உள்ளங்களில் கோர்த்து நிற்கிறது. இன்று நம் உள்ளங்கள் நேர்முகமான உணர்வுகளால் நிறைந்திருக்கின்றனவா?

முதல் வாசகத்தில், மெல்கிசெதேக்கு என்னும் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் வழியில் இயேசு தலைமைக் குருவாக இருப்பதாக முன்மொழிகின்றார். இஸ்ரயேல் மரபின்படி லேவி குலத்தவர்தான் குருவாகத் திகழ முடியும். மேலும், ஆரோன் குடும்பத்தவர்தான் தலைமைக் குருவாக முடியும். இதன்படி பார்த்தால் இயேசு குருவும் அல்லர், தலைமைக்குருவும் அல்லர். ஏனெனில், இயேசு யூதா குலத்தைச் சார்ந்தவர், தாவீதின் குடும்பத்தினர். ஆரோன் வழியில் அல்ல, மெல்கிசெதேக்கு வழியில் இயேசு தலைமைக்குரு என புதிய கருத்தியலை உருவாக்குகின்றார் ஆசிரியர். முதலும் முடிவும் இல்லாத மெல்கிசெதேக்கு போல, நிலையான தலைமைக்குருவாகத் திகழ்கின்றார் இயேசு.

அவருடைய இரக்கமே அவருடைய தலைமைக்குரு அடையாளம். அந்த இரக்கம் ஓய்வுநாள், தொழுகைக்கூடம் என எல்லா இடத்திலும் பரவிக்கொண்டே இருக்கிறது.


Monday, January 16, 2023

சட்டத்தைத் தாண்டி

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 17 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 6:10-20. மாற் 2:23-28.

சட்டத்தைத் தாண்டி

'சாபத்' (எபிரேயத்தில், 'நிறுத்து') – ஓய்வுநாள் - கடவுளால் ஏற்படுத்தப்படுகிறது. ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க விவிலியம் இரு காரணங்களை முன்னிறுத்துகிறது: ஒன்று, விடுதலைப் பயண நூலின்படி, ஆண்டவர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால், இஸ்ரயேல் மக்களும் ஏழாம் நாள் ஓய்ந்திருக்க வேண்டும். இரண்டு, இணைச்சட்ட நூலின்படி, எபிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பார்த்து ஏழாம் நாளில் ஓய்ந்திருக்க வேண்டும். முதல் காரணம் வழிபாடு சார்ந்ததாகவும், இரண்டாவது காரணம் சமூகக் காரணமாகவும் உள்ளது.

இயேசுவின் சமகாலத்தில் ஓய்வுநாளில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னும் பட்டியலை ரபிக்கள் வகுத்திருந்தனர். எடுத்துக்காட்டாக, ஓய்வு நாளன்று பெண் கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது என்பது ஒரு சட்டம். ஏனெனில், அப்படி முகம் பார்க்கும்போது தலையில் உள்ள நரைமுடி ஒன்று தன் கண்ணில் பட்டு அதைப் பிடுங்குமாறு அல்லது ஒதுக்குமாறு கையை உயர்த்தினால் அது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவது ஆகும். இன்றும், இஸ்ரேல் நாட்டில் உள்ள சில ரபிக்கள் பள்ளிகளில் ஓய்வுநாள் சட்டங்கள் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு பள்ளியின் கருத்துப்படி, ஓய்வுநாளன்று டாய்லட்டில் பயன்படுத்தப்படும் தாளைக் கிழிப்பதும் ஓய்வுநாளை மீறுவது ஆகும். அதற்கு முந்தைய நாளே தாள்களைக் கிழித்து வைத்துக்கொள்ளுமாறு அந்தப் பள்ளி வலியுறுத்துகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளன்று கதிர்களைக் கொய்து உண்கின்றனர். நற்செய்திப் பகுதிகளை வாசிக்கும்போது இயேசுவின் சீடர்கள் எப்போதும் உணவு பற்றிய அக்கறையிலேயே இருந்தது போலத் தெரிகிறது. அதாவது, நோன்பு இருக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்கின்றனர். இயேசு மக்கள் கூட்டத்தோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களை அனுப்பிவிட்டு உணவருந்த வருமாறு சொல்கின்றனர். இறுதியில் பாஸ்கா உணவை உண்ண எங்கே ஏற்பாடு செய்வது எனக் கேட்கின்றனர்.

சீடர்கள் ஓய்வுநாளை மீறியதாக இயேசுவிடம் சுட்டிக் காட்டுகின்றனர் பரிசேயர்கள். ஆனால், இயேசுவோ அவர்களைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்களுக்காக வாதாடுகின்றார். இந்த நிகழ்வைப் பயன்படுத்தி தான் யார் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விழைகின்றார். இயேசு யார்? தாவீதின் வழிமரபினர். தாவீது சட்டத்தை மீறியது போல, இயேசுவும் ஓய்வுநாள் சட்டத்தை மீறுகின்றார். மேலும், தம்மை, 'மானிட மகன்' என்றும் அழைத்து, ஓய்வுநாளைத் தனக்குக் கீழ்ப்படுத்துகின்றார்.

தியானிப்போம்: யூத வழிபாடுகளையும் சடங்கு முறைகளையும் இயேசு கடந்து செல்வதாகப் பதிவு செய்கின்றார் மாற்கு. தங்களின் தான்மை அல்லது அடையாளம் பற்றி வியந்து கொண்டிருந்த முதல் கிறிஸ்தவர்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்.

இன்றைய பகுதி தரும் பாடங்கள் எவை?

நாமும் சட்டத்தைத் தாண்டிச் செல்ல அழைக்கப்படுகின்றோம். பரிசேயர்கள் சீடர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனித்தார்களே அன்றி, இயேசு யார் என்பதை அறிந்துகொள்ள முற்படவில்லை. வெளிப்புறக் கவனச் சிதறல்கள் இயேசுவை அறிந்துகொள்ள நம்மை அனுமதிப்பதில்லை.

இன்று நாம் புனித பெரிய அந்தோனியாரின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். புனித அகுஸ்தினார் தன் ஒப்புகைகள் நூலில் பெரிய அந்தோனியாரின் மனமாற்றத்தின் மேன்மை பற்றி எழுதுகின்றார். ஒரு வகையில் பெரிய அந்தோனியாரே அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குத் தூண்டுகோலாக அமைகின்றார். தான் கேட்ட நற்செய்திச் சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டு துறவறம் ஏற்றவர் பெரிய அந்தோனியார். இறைவார்த்தையால் நாமும் தூண்டப்பட அவரே நமக்காகப் பரிந்து பேசுவாராக!


Sunday, January 15, 2023

புதிய வகைப் பிணைப்பு

இன்றைய இறைமொழி 

திங்கள், 16 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம்

எபி 5:1-10. மாற் 2:18-22.

புதிய வகைப் பிணைப்பு

இயேசுவிடம் சிலர் ஒரு கேள்வியுடன் வருகின்றனர்: 'பரிசேயர்களின் சீடர்களும் திருமுழுக்கு யோவானின் சீடர்களும் நோன்பு இருக்க உம் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' தானாகவே விரும்பி உணவையும் தண்ணீரையும் தள்ளி வைப்பதே நோன்பு. நோன்பு என்பது முதன்மையாக ஆன்மிகச் செயல்பாடு அல்லது பயிற்சியாக இருந்தாலும், வாழ்வின் மற்ற பரிமாணங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, உடல் ஆய்வு அல்லது சிகிச்சைக்கு முன் மேற்கொள்ளும் மருத்துவ நோன்பு, மெல்லியதாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் அழகியல் நோன்பு, படிப்பு அல்லது தேர்வு நேரங்களில் தூக்கம் குறைப்பதற்காக மாணவர்கள் மேற்கொள்ளும் நோன்பு, பணத்தைச் சேகரித்து மற்றொரு செயல்பாட்டுக்குப் பயன்படுத்துவதற்கான பொருளாதார நோன்பு. இயேசுவிடம் கேட்கப்படும் கேள்வி ஆன்மிக நோன்பு சார்ந்ததாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை யோம் கிப்பூர் (ஒப்புரவு நாள்) நாளன்று வழக்கமாக யூதர்கள் நோன்பு இருந்தனர். பரிசேயர்கள் தங்களின் ஆன்மிக ஒழுக்கத்தைக் காட்டுவதற்காக வாரம் இருமுறை நோன்பு இருந்தனர். எஸ்ஸீனியர்கள் - திருமுழுக்கு யோவான் இக்குழுவைச் சார்ந்தவராக இருப்பார் – ஒவ்வொரு வாரமும் ஓய்வு நாளன்று (சனிக்கிழமை) நோன்பிருந்தனர். இயேசுவின் சீடர்கள் நோன்பு இருப்பதற்குப் பதிலாக உண்டு, குடிப்பவர்களாக இருந்திருக்கின்றனர். தம்மை நோக்கி எழுப்பபட்ட கேள்விக்கு விடை அளிப்பதற்குப் பதிலாக புதிய கருத்து ஒன்றை முன்மொழிகின்றார். 

இயேசுவின் சமகாலத்தவரைப் பொருத்தவரையில், ஒருவரை அவருடைய சமயத்தோடு இணைப்பவை வெளிப்புற அடையாளங்களும், சடங்குகளும், விதிமுறைகளும், சட்டதிட்டங்களும்தாம். இந்த வகை இணைப்பு கடந்தகாலம் சார்ந்தது. ஏனெனில், அடையாளங்கள், சடங்குகள், விதிமுறைகள், மற்றும் சட்ட திட்டங்கள் யாவையும் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை. இயேசுவைப் பொருத்தவரையில் பிணைப்பு என்பது தனிநபர் சார்ந்தது. அவரோடு ஒருவர் கொள்ளும் உறவு சார்ந்தது. இந்த வகைப் பிணைப்பு ஒருவரை நிகழ்காலத்தில் நிலைபெறச் செய்கிறது. இயேசு பயன்படுத்தும் உருவகங்களும் - பழைய துணி, பழைய திராட்சை ரசம் - இப்பொருளையே தருகின்றன. 

தியானிப்போம்: நமக்கும் கடவுளுக்கும் உள்ள இணைப்பு எதன் அடிப்படையில் அமைந்துள்ளது? விதிமுறைகள் அல்லது சடங்குகள் அடிப்படையிலா? அல்லது அவரோடு கொண்டுள்ள உறவு அடிப்படையிலா?

நான் நோன்பு இருக்கிறேனா? இறைவேண்டல் மற்றும் தன்னாய்வுக்கும் என்னைத் தூண்டி எழுப்புமாறு ஆன்மா நோன்பு இருக்கிறேனா?

என் வாழ்வின் பொருளை நான் எதில் காண்கிறேன்? ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கதையாடலிலா? அல்லது என் தெரிகள் மற்றும் உணர்வுகளிலா?


Saturday, January 14, 2023

இரு கேள்விகள்

ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

எசாயா 49:3,5-6 1 கொரிந்தியர் 1:1-3 யோவான் 1:29-34

இரு கேள்விகள்

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், 'பிகமிங்' என்பது. குழந்தைகளிடம் நாம், 'நீ வயது வந்தபின் என்னவாகப் போகிறாய்?' எனக் கேட்கிறோம். ஆனால், வயது வந்தவர்களிடம், 'நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?' என்று மட்டுமே கேட்கிறோம். குழந்தைப் பருவம் மட்டும்தான் மாற்றத்தின் பருவம் என்றும், வயது வந்த பருவம் இருத்தலின் பருவம் எனவும் நினைக்கிறோம். இது தவறு! நாம் ஒவ்வொரு பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறோம் - 'வி ஆர் பிகமிங் எவ்ரி மொமண்ட்' - இப்படியாக எழுதுகிறார் மிஷல்.

நாம் எப்படி மாறுகிறோமோ அதுவேதான் நம்முடைய இருத்தலாக இருக்கின்றது என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. வரலாற்றில் பெரிய முத்திரை பதித்த யாரை எடுத்தாலும் - மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் - இவர்கள் தங்களுடைய வாழ்வில் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருந்தனர்: ஒன்று, 'நான் யார்?' இரண்டு, 'நான் யாருக்காக?' இக்கேள்விகளில், 'நான் யார்?' என்பது ஒருவருடைய வேர் என்றால், 'நான் யாருக்காக?' என்பது அவருடைய கிளை என்று சொல்லலாம். இந்த இரண்டு கேள்விகள் கேட்பதும் ஒருவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. 

உளவியல் மற்றும் மெய்யியலில் அதிகமாக வலியுறத்தப்படும் கேள்வி, 'நான் யார்?' என்பதுதான். இதற்கு விடையாக நாம் நம்முடைய பெயர், ஊர், பெற்றோர், குடும்ப பின்புலம், படிப்பு, வேலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். மெய்யிலாளர் சாக்ரடிசு, 'உன்னையே நீ அறிந்துகொள்!' என்றார். ஆனால், இதிலிருந்து புறப்பட்டு, 'நீ யாருக்காக என்பதை அறிந்துகொள்!' என்பதில்தான் மெய்ஞ்ஞானம் இருக்கிறது. இந்த மெய்ஞ்ஞானத்தை நோக்கியே கீழைத்தேய ஞானம் இருந்தது.

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற ஊக்கவுரையில், இளைஞர்களின் பாதைகளைப் பற்றிப் பேசுகின்ற இடத்தில், 'இளைஞர்கள் தங்களுடைய வாழ்வைச் சீராக அமைத்துக்கொள்ள இவ்விரு கேள்விகள் கேட்பது அவசியம்: 'நான் யார்?' அதைவிட, 'நான் யாருக்காக?'' என்கிறார். இக்கேள்விகளுக்கு விடைகள் காணும் இளைஞர்களே வெற்றியாளர்கள்.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் சந்திக்கும் மூன்று நபர்கள் - எசாயா, பவுல், இயேசு - இக்கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 49:3,5-6), முதல் பகுதி இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கடவுள் பேசுவதாகவும், இரண்டாம் பகுதி இறைவாக்கினர் அல்லது இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழைப்பு பற்றி தாங்களே பேசுவதாகவும் அமைந்துள்ளது. இஸ்ரயேல் அல்லது இறைவாக்கினர் யார்? 'அவர் ஊழியன். கருப்பையிலிருந்து ஊழியனாக உருவாக்கம் பெற்றவர். ஆண்டவர் பார்வையில் மதிப்பு பெற்றவர். ஆண்டவரைத் தன் ஆற்றலாக் கொண்டவர். இவர் யாருக்காக? யாக்கோபின் குலங்களுக்காக, இஸ்ரயேலில் சிதறடிக்கப்பட்டவர்களுக்காக. இறைவாக்கினர் தன்னுடைய முதல் கேள்விக்கு விடை கண்டதால், இரண்டாம் கேள்விக்கும் எளிதாக விடை காண்கின்றார். 'நான் யார்?' என்று அறிந்துகொண்ட அடுத்த நொடி, 'நான் யாருக்காக?' என்பதை அறிந்து தொடர்ந்து தன் பணியைச் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:1-3) புனித பவுல் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும் முதல் திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. வருகின்ற ஏழு வாரங்கள் தொடந்து நாம் இத்திருமுகத்திலிருந்தே வாசிப்போம். பவுலைப் பொருத்தவரையில் கொரிந்து நகரத் திருச்சபை அவருக்கு 'அடங்காத குழந்தை.' கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய பிளவுகள், பரத்தைமை, சிலை வழிபாடு, வழிபாட்டுப் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்படுகின்ற பவுல் அவர்களைக் கடிந்தும், அறிவுறுத்தியும் இம்மடலை எழுதுகின்றார். கடிந்துரைக்கும், அறிவுறுத்தும் இம்மடலை மிகவும் இனிமையான வார்த்தைகளால் தொடங்குகிறார்: 'கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு ... திருத்தூதனாக அழைக்கப்பட்ட ... இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று, தூயோராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கு ...' பவுலின் வார்த்தைகளில் கோபமோ, மனவருத்தமோ, உளக்கசப்போ இல்லை. இத்தொடக்க வார்த்தைகளில் தான் யார் என்பதையும் தன்னுடைய பணி யாருக்கு என்பதையும் தெளிவாக உரைப்பதோடு, கொரிந்து நகர மக்கள் யார் என்பதையும் அவர்களுடைய பணி யாருக்கு என்பதையும் எடுத்துரைக்கின்றார். பவுல் யார்? திருத்தூதர். பவுல் யாருக்காக? கடவுளின் திருச்சபைக்காக, கடவுளுக்காக. கொரிந்து மக்கள் யார்? இறைமக்கள், தூயவர்கள். இவர்கள் யாருக்காக? கிறிஸ்துவுக்காக.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:29-34), இயேசு தன்னிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், 'அவர் யார்?' என்பதையும் - 'கடவுளின் செம்மறி', 'அவர் யாருக்காக?' - 'உலகின் பாவத்தைப் போக்க' என்பதையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார். இங்கே 'செம்மறி' என்ற உருவகம், பாவக்கழுவாய்க்குப் பயன்படுத்தப்படும் பலி ஆட்டையோ, அல்லது போக்கு ஆட்டையோ, அல்லது பாஸ்கா திருநாளன்று கொல்லப்படும் ஆட்டுக்குட்டியையோ குறிக்கும். மேலும், இப்பகுதியில் தான் யார் என்பதையும், தான் யாருக்கு என்பதையும் திருமுழுக்கு யோவானும் தெளிவாக உணர்ந்திருப்பதை நாம் காண்கின்றோம்.

இந்தக் கேள்விகளை நம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது? இன்றைய நாளில் நாம் அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இது தமிழர்களின் புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் பானையில் இடும் அரிசியும், தண்ணீரும், சர்க்கரையும் பொங்கலாக மாறுகின்றன. தங்கள் இருத்தலால் அல்ல, தங்களுடைய மாற்றத்தால்தான் அவை புதிய வடிவமும், இனிமையும் பெறுகின்றன. 

'நான் யார்?' என்னும் கேள்வியிலிருந்து, 'நான் யாருக்காக?' என்னும் கேள்விக்கு நகர்ந்து செல்வது ஒரு பயணம். அந்தப் பயணத்தின் அடிப்படையாக இருப்பது மாற்றம். நம் வாழ்வில் பல நேரங்களில், 'நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்டிருப்போம். ஆனால், 'நான் யாருக்காக?' என்று நான் என்னையே கேட்கும் அத்தருணத்தில்தான் என்னுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது. 

இக்கேள்விகளுக்கான விடை மூன்று நிலைகளில் வரலாம்:

(அ) இறைவனிடமிருந்து

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அல்லது இறைவாக்கினர் எசாயாவுக்கு இக்கேள்விகளின் விடைகள் இறைவனின் வெளிப்பாட்டிலிருந்து வருகின்றன. ஆண்டவராகிய கடவுள்தாமே அவருக்கு இவற்றை வெளிப்படுத்துகின்றார். மேலும், ஆண்டவரின் வாக்குறுதிகள் எதிர்கால வாக்குறுதிபற்றியதாகவும் இருக்கின்றன.

(ஆ) தன் குழுமத்திலிருந்து

இரண்டாம் வாசகத்தில் பவுல் இக்கேள்விகளுக்கான விடைகளைதத் தன்னுடைய இலக்கு மக்களாகிய கொரிந்து நகரத் திருச்சபையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார். தன்னுடைய குழுமத்தின்மேல் கோபமோ அல்லது மனத்ததாங்கலோ கொள்ளாமல் மிகவும் மனமுதிர்ச்சியோடு தேடுகின்றார் பவுல்.

(இ) தன் சகோதரர் அல்லது நண்பர்களிடமிருந்து

நற்செய்தி வாசகத்தில் இயேசு யார் என்ற அடையாளமும், அவர் யாருக்காக என்பதற்கான விடைகளும் திருமுழுக்கு யோவனிடமிருந்து வருகின்றன. 

இன்றைய நாளில், நாம் இவ்விரண்டு கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்: 'நான் யார்?' 'நான் யாருக்காக?'

கேள்விகளுக்கு விடை கண்டவுடன் மாற்றம் நோக்கி நாம் புறப்படுதல் வேண்டும். அது எப்படி சாத்தியம்?

(அ) நம் அடித்தள அனுபவம்

அடித்தள அனுபவம் என்பது நம்மைப் புரட்டிப் போடுகின்ற, முழுமையாக மாற்றுகின்ற அனுபவம். 'ஆண்டவர் பார்வையில் நான் மதிப்பு பெற்றவன்' – என்னும் இவ்வார்த்தைகளை இறைவாக்கினர் அடிமைத்தனத்தின் தளத்தில் நின்று மொழிகின்றார். அதாவது, தான் அடிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும், வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் தன் மதிப்பு ஆண்டவரின் பார்வையில் உள்ளது என அறிதலே இறைவாக்கினரின், இஸ்ரயேல் மக்களின் அடித்தள அனுபவம். இன்று பல நேரங்களில் நாம் அடித்தள அனுபவங்களை நபர்கள் அல்லது இடங்கள்மேல் வைக்கின்றோம். இவை சில நேரங்களில் மாறலாம், மறைந்து போகலாம். ஆனால், ஆண்டவரை அடித்தளமாகக் கொண்ட அனுபவம் நிலைத்து நிற்கிறது.

(ஆ) எதிர்வினை ஆற்றுதல் குறைத்தல்

நாம் பல நேரங்களில் நமக்கு வெளியே இருக்கும் சூழல் அல்லது நபர்களுக்கு ஏற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள நினைக்கின்றோம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்துமாறு அனுமதிக்கிறோம். அப்படி அனுமதித்தால் நாம் வெளிப்புற நிகழ்வுகள்மேல்தான் கவனம் செலுத்துவோம். நமக்கு வெளியே இருக்கும் பல நிகழ்வுகளை நபர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. அப்படிக் கட்டுப்படுத்த நினைப்பது நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கும். தான் நற்செய்தி அறிவித்த கொரிந்து நகரத் திருஅவையின் பிரச்சினைகள் பவுலுக்கு நெருடலாக இருந்தாலும், அவை தன் மேல் தாக்கத்தை ஏற்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. தன் திருத்தூதுப் பணியை அவர் தொடர்ந்து செயலாற்றினார். 

(இ) நம்பிக்கைப் பார்வை

தன் முன்னே நின்ற ஒரு நபரை 'இயேசு-செம்மறி-இறைமகன்' என்னும் மூன்று சொற்களால் மொழிகின்றார் திருமுழுக்கு யோவான். மற்றவர்கள் எல்லாம் நாசரேத்து இயேசு எனக் கண்டறிந்த ஒருவரை, இறைமகனாகக் காண்கின்றார் யோவான். இதுவே அவருடைய நம்பிக்கைப் பார்வை. 'நான் இப்படி இருப்பேன்' என்னும் நம்பிக்கைப் பார்வையே நம் இலக்குகளை நோக்கி நம்மை வேகமாக நகர்த்துகின்றது. இயேசுவும் தன் இலக்கை அறிந்தவராகவும் அதை நோக்கி நகர்பவராகவும் இருக்கிறார்.

இக்கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தால், 'உமது திருவுளம் நிறைவேற்ற நானும் வருகிறேன் ஆண்டவரே' (காண். திபா 40) என்று திருப்பாடல் ஆசிரியர் போல (இன்றைய பதிலுரைப்பாடல்) நாமும் அவரிடம் சரணாகதி அடைய முடியும். இக்கேள்விகளுக்கான விடைகளில் அவருடைய உடனிருப்பும் உற்சாகமும் நிறைய இருக்கும்.


Friday, January 13, 2023

சீடத்துவத்தின் விலை!

இன்றைய இறைமொழி 

சனி, 14 ஜனவரி 2023

எபி 4:12-16. மாற் 2:13-17.

சீடத்துவத்தின் விலை!

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், வரி வசூலித்துக் கொண்டிந்த அல்பேயுவின் மகனாகிய லேவியை (மத்தேயு) இயேசு அழைக்கின்றார். இரண்டாவது பகுதியில், 'என் வீட்டுக்கு வாரும்!' என இயேசுவை அழைக்கின்ற மத்தேயு அவருக்குத் தன் வீட்டில் விருந்தளிக்கின்றார்.

திருத்தூதர்கள் அழைக்கப்படும் நிகழ்வுக்கும் முதல் ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள் அழைக்கப்படும் நிகழ்வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இறைவாக்கினர்கள் அழைப்பு (எ.கா. மோசே, எசாயா, எரேமியா) ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது: (அ) பிரச்சினை அல்லது தேவை, (ஆ) கடவுள் ஒருவரை அழைக்கின்றார், (இ) அழைக்கப்படுபவர் தயக்கம் காட்டுகின்றார், (ஈ) கடவுள் ஓர் அறிகுறி தருகின்றார் அல்லது உடனிருப்பை வாக்களிக்கின்றார், மற்றும் (உ) அழைக்கப்படுபவர் அழைப்பை ஏற்கின்றார்.

திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, மற்றும் யோவான் அழைக்கப்படும் நிகழ்வில் (ஒத்தமைவு நற்செய்திகள்) மற்றும் மத்தேயு அழைக்கப்படும் நிகழ்வில் இக்கூறுகள் காணப்படவில்லை. திருத்தூதர் அழைக்கப்படுகின்றார். தன் அன்றாட பணியில் அவர் ஈடுபட்டிருக்கும்போது அழைப்பு பெறுகின்றார். திருத்தூதர்கள் அழைக்கப்படும் நிகழ்வில் உள்ள கூறுகளை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம்: (அ) ஒருவர் தன் அன்றாட பணியில் ஈடுபட்டிருக்கிறார், (ஆ) இயேசு அங்கே திடீரென்று வருகின்றார், (இ) நபர் அழைக்கப்படுகின்றார், (ஈ) இயேசு மட்டுமே பேசுகின்றார் – அழைக்கப்படுபவர்கள் அமைதி காக்கின்றனர், (உ) அழைக்கப்பட்டவர் அனைத்தையும், அனைவரையும் விட்டு விட்டு இயேசுவின் பின்னால் செல்கின்றார். 

திருத்தூதர்கள் ஏதோ இந்த நாளுக்காகவே காத்திருந்தது போல எழுந்து இயேசுவின் பின்னால் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது. 

வரி வசூலித்துக் கொண்டிருந்த மத்தேயு தான் செய்கின்ற தொழில் பற்றி மிகவும் வருந்தியிருப்பார். உரோமையர்கள் சார்பாக தன் இனத்து மக்களிடம் வரி வசூலிப்பது அவருக்கு நெருடலாக இருந்திருக்கலாம். இந்த வேலையை எப்படி விடுவது என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்கூட இயேசு அங்கே வந்திருக்கலாம். 'என்னைப் பின்பற்றி வா!' என்ற சொற்கள் கேட்டவுடன் உடனே புறப்படுகின்றார் மத்தேயு.

தொடர் நிகழ்வாக மத்தேயு தன் இல்லத்திற்கு இயேசுவை அழைத்து விருந்து படைக்கின்றார். மத்தேயு தன் இல்லத்தாருக்கு அளித்த பிரியாவிடை விருந்தாக இருந்திருக்கலாம். எலிசா அழைக்கப்பட்ட போதும் இப்படி ஒரு விருந்து அளிக்கப்படுகின்றது. இயேசுவுக்கு எதிராக பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முணுமுணுக்கின்றனர்: 'இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்'. இந்தச் சொற்கள் இயேசுவை நோக்கி மட்டுமல்ல. மாறாக, மத்தேயுவை நோக்கியும் சொல்லப்படுகின்றன. இயேசுவை அவர் பின்பற்றத் தொடங்கினாலும் அவருடைய இறந்த காலம் என்னவோ அவரை ஒட்டிக்கொண்டே வருகிறது. 

இதுதான் சீடத்துவத்துவத்தின் விலை.

'உன் நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள், உன் இறந்தகாலத்தைத் தோண்டி எடுப்பார்கள்' என்ற முதுமொழிக்கேற்ப, மத்தேயுவின் இறந்தகாலம் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகின்றது. 

ஆனால், மத்தேயு தன் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை.

சீடத்துவத்துக்கான மத்தேயுவின் பதில்மொழி, 'ஆம்' என்றால் 'ஆம்' என்று மட்டுமே உள்ளது.

முதல் வாசகத்தில், 'நம் தலைமைக் குரு நம் வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல ... அவர் நம்மைப் போல எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டவர்' என முன்மொழிகின்றார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர். 

மத்தேயுவின் வலுவின்மையைத் தன் இரக்கத்தால் தாங்கிக்கொள்கின்றார் இயேசு.

இன்று நம் மண்ணின் மறைசாட்சி புனித தேவசகாயம் அவர்களின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அரச அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சீடத்துவத்துக்காக தன் உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

மத்தேயுவின் நற்செய்தி கேட்டு மனம் மாறியவர் இவர்.

மத்தேயு அன்று சுங்கச் சாவடியை விட்டு வெளியேறியது வெறும் நிகழ்வு அல்ல. கடவுளின் திட்டம்.

சீடத்துவம் சீடத்துவத்தைப் பெற்றெடுக்கிறது என்னும் உண்மையை நாம் இங்கே உணர்கிறோம். 

தியானிப்போம்: திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் சீடத்துவத்தை நமதாக்குகின்றோம். ஆனால், அதற்கேற்ற விலையைத் தர நாம் தயாராக இருக்கிறோமா?

நாம் இன்று விட்டு எழ வேண்டிய சுங்கச் சாவடி எது?

எண்களை எழுதிக் கொண்டிருந்த மத்தேயு இயேசுவின் வரலாற்றை எழுதும் பேறு பெறுகின்றார். தன் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காத தேவசகாயம் இன்று புனிதராக ஒளிர்கின்றார்.


Thursday, January 12, 2023

உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்!

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 13 ஜனவரி 2023

எபி 4:1-5,11. மாற் 2:1-12.

உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மற்றொரு வல்ல செயல் பற்றி வாசிக்கின்றோம்: முடக்குவாதமுற்ற ஒருவருக்கு இயேசு நலம் தருகின்றார். இந்த நிகழ்வை, 'தந்தையின் இதயத்தோடு' என்னும் தன் திருத்தூது மடலில் பதிவு செய்கின்ற நம் திருத்தந்தை, இந்த நிகழ்வில் வரும் நண்பர்களின் செயலை படைப்புத் திறத் துணிவு என முன்மொழிகின்றார். 

முடக்குவாதமுற்ற நபரைப் பார்த்து இயேசு சொன்ன சொற்கள் கேட்பவர்களின், குறிப்பாக அங்கிருந்த மறைநூல் அறிஞர்களின் விவாதப் பொருளாக மாறுகின்றன. முடக்குவாதமுற்ற நபரைப் பார்த்து இயேசு, 'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். நோயைக் குணமாக்குவதைத் தாண்டி, நோயின் ஊற்றான பாவத்தைக் குணமாக்குகின்றார் இயேசு. அன்றைய காலத்தில் பாவத்தின் விளைவே நோய் எனக் கருதப்பட்டது.

மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்தில் எண்ணிக்கொள்கின்றனர்: 'இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'

இவர்கள் இவ்வாறு உள்ளத்தில் எண்ணுவதால் வரும் பிரச்சினைகள் எவை? ஒன்று, தங்கள் கண் முன்னால் நடக்கவிருக்கின்ற வல்ல செயலுக்குத் தங்கள் கண்களையும் இதயங்களையும் மூடிக்கொள்கின்றனர். இரண்டு, முடக்குவாதமுற்ற நபரைத் தூக்கிக் கொண்டு வந்த நண்பர்களைப் பாராட்ட இயலவில்லை. மூன்று, இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளவில்லை. 

இயேசு அவருடைய மனித வரையறையைக் கடப்பதாக அவர்கள் நினைத்தனர். இயேசுவை வெறும் மனிதன் என்று மட்டுமே பார்த்தனர்.

நேற்றைய பதிலுரைப் பாடலில் (திபா 95), ஆசிரியர், 'உங்கள் உள்ளங்களைக் கடினப்படுத்திக்கொள்ள வேண்டாம்' எனப் பாடுகின்றார். இரு வகை உள்ளங்களுக்குள் நம்பிக்கை நுழைய இயலாது: ஒன்று, கடின உள்ளம். இரண்டு, கேள்வி கேட்கும் உள்ளம். கடின உள்ளம் உறைந்து போகின்றது. கேள்வி கேட்கும் உள்ளம் எல்லாவற்றையும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறது.

வல்ல செயலின் இறுதி கவனத்திற்குரியது. இது நம்பிக்கைப் பாடமும் கூட. நண்பர்களால் தூக்கி வரப்பட்ட நபர் தன் கையால் கட்டிலைத் தூக்கிக் கொண்டு நடந்து போகின்றார். மற்றவர்களின் நம்பிக்கையால் எடுத்து வரப்பட்ட அவர், தான் கொண்ட நம்பிக்கையால் கடந்து போகின்றார்.

ஆனால், அங்கிருந்த மறைநூல் அறிஞர்கள் என்னவோ முடக்குவாதமுற்றவர்களாக மாறுகின்றனர். தங்களுடைய சட்டங்கள், உள்ளத்தின் எண்ணங்கள் என்னும் கட்டிலோடு அவர்கள் கட்டப்பட்டனர்.

தியானிப்போம்: வாழ்க்கை நம் முன் மலர்ந்து நிற்கும்போது, உள்ளத்தில் கேள்விகள் எழுப்புகின்றோமா? கடவுளும் மனிதர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறைகளை நிர்ணயிக்கின்றோமா?

இன்றைய முதல் வாசகம் கடவுள் தருகின்ற ஓய்வைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் உள்ள இடைவெளியே இரவு. ஒரு செயலுக்கும் இன்னொரு செயலுக்கும் இடையே உள்ள நேரம்தான் ஓய்வு. ஓய்வின் உயர்வே வாழ்வின் உயர்வு.

இறைவன் தருகின்ற ஓய்வைப் பெற்றுக்கொண்டார் முடக்குவாதமுற்ற நபர்.

மறைநூல் அறிஞர்கள் பாவம்! அவர்களுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன!


Wednesday, January 11, 2023

நெருக்கமும் அந்நியமும்

இன்றைய இறைமொழி 

வியாழன், 12 ஜனவரி 2023

எபி 3:7-14. மாற் 1:40-45.

நெருக்கமும் அந்நியமும்

இயேசுவின் காலத்தில் (சில ஆண்டுகளுக்கு முன் நம் ஊரிலும்) தொழுநோய் பீடிக்கப்பட்டவர்கள் மூன்று வகையில் அந்நியப்பட்டு நின்றனர்: (அ) தங்கள் உடல்நலத்திலிருந்து – ஏனெனில் தொழுநோய் அவர்களுடைய உடலை உருக்கி நிலைகுலையச் செய்கிறது. (ஆ) தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் சமூகத்திலிருந்து – ஏனெனில், இது ஒரு தொற்றுநோய் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். (இ) கடவுளிடமிருந்து – ஏனெனில், குணமாக்க இயலாத இந்த நோய் கடவுள் தந்த சாபம் எனக் கருதப்பட்டது.

இப்படியாக மூன்று நிலைகளில் அந்நியப்பட்டு நின்ற ஒரு நபரை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எதிர்கொள்கின்றார். ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் போகும் எல்லைப் பகுதியில், அல்லது ஊருக்குள்ளே யாரும் இல்லாத நேரத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது. தொழுநோயாளரின் இரு செயல்களை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்: (அ) முழந்தாள்படியிட்டு - இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றார், அல்லது மரியாதைக்காக அவ்வாறு செய்கின்றார். (ஆ) விண்ணப்பிக்கின்றார் – வழக்கமாக, 'தீட்டு,' 'தீட்டு' என்று கத்த மட்டும்தான் கத்துவர். இங்கே அந்த நபர், 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்கின்றார். தன் விருப்பத்தை அல்லாமல் இயேசுவின் விருப்பத்தை முன்னிறுத்துகின்றார்.

இயேசு அவர்மீது பரிவு கொள்கின்றார். மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்ற இயேசுவின் முதல் உணர்வு இதுதான். இயேசுவின் செயலை முந்திக்கொள்கின்றது இந்த நேர்முக உணர்வு. இவனுக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என நினைத்தால் அது வியாபாரம். இவனுக்கு இதைச் செய்யாவிட்டால் இவனுக்கு என்ன ஆகும் எனக் கேட்பது பரிவு. தொழுநோய் பீடித்த நபரை மையப்படுத்திச் சிந்திக்கின்றார் இயேசு. கையை நீட்டி அவரைத் தொடுகின்றார். அவரைத் தூய்மையாக்குவதற்காகத் தம்மையே தீட்டாக்கிக் கொள்ளத் துணிகின்றார் இயேசு. நலம் பெற்ற நபருக்கு இரு கட்டளைகள் கொடுக்கின்றார்: (அ) யாருக்கும் சொல்ல வேண்டாம். (ஆ) குருவிடம் காட்டிக் காணிக்கையைச் செலுத்தும். இயேசு அந்த நபரை இறைவனோடும் சமூகத்தோடும் நெருக்கமாக்குகின்றார்.

அப்படியாக நெருக்கமான நபர் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் அறிவித்ததால் இயேசு அந்நியமாக்கப்படுகின்றார். வெளியே தனிமையான இடங்களில் தங்கி வருகின்றார்.

தியானிப்போம்: தன்னைப் பற்றி, தான் ஆற்றிய அரும் அடையாளம் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று இயேசு சொல்லக் காரணம் என்ன? இயேசுவின் தன்னடக்கமா? அல்லது மெசியா இரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவா? அல்லது வெளிப்படுத்தும் நேரம் இன்னும் வரவில்லையா? என்னைப் பொருத்தவரையில், இயேசுவை அறிதல் தனிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு இவ்வாறு தடை செய்கின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு முன் வைக்கும் கேள்விகள் எவை?

(அ) என் வாழ்வில் நான் எந்நிலையில் அந்நியப்பட்டு நிற்கிறேன்? உடல் அளவில், சமூக அளவில், ஆன்மிக அளவில்?

(ஆ) நான் இறைவன் முன் என் விண்ணப்பத்துடன் வரும்போது, அங்கே என் விருப்பத்தை முதன்மைப்படுத்துகிறேனா? அல்லது இறைவிருப்பத்தை முதன்மைப்படுத்துகிறேனா?

(இ) நலிவுற்ற நிலையில் இருக்கும் ஒருவரைக் காணும்போது என் உள்ளத்தில் பரிவு எழுகின்றதா? அல்லது அந்த நபரைப் பற்றிய விமர்சனம் அல்லது ஆய்வு எழுகின்றதா? ஆய்வு அந்நியப்படுத்தும், பரிவு ஒன்றே நெருக்கமாக்கும்!


Tuesday, January 10, 2023

இரக்கமும் நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி 

புதன், 11 ஜனவரி 2023

எபி 2:14-18. மாற் 1:29-39

இரக்கமும் நம்பிக்கையும்

இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை, 'இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குரு' என முன்மொழிகின்றார். ஒவ்வொரு தலைமைக்குருவும் இரு நிலை உறவுகள் கொண்டிருக்கின்றார். நேர்கோட்டு நிலையில் கடவுளோடும், சமகோட்டு நிலையில் மக்களோடும் அவர் இணைந்திருக்கின்றார். ஏனெனில், அவர் கடவுளின் திருமுன்னிலையில் மக்கள் சார்பாக நிற்கின்றார். இவ்விரு நிலைகளில் இணைந்திருக்கின்ற இயேசு இரு பண்புகளைக் கொண்டிருக்கின்றார். கடவுளோடு உள்ள உறவு நிலையில் நம்பிக்கைக்குரியவராகவும், மனிதர்களோடு உள்ள உறவு நிலையில் இரக்கம் நிறைந்தவராகவும் இருக்கின்றார். அவருடைய நம்பிக்கைக்குரிய நிலை கீழ்ப்படிதலில், சிலுவை இறப்பை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்ப்படிதலில் வெளிப்படுகிறது. அவருடைய இரக்கம் மனிதர்களின் துன்பத்தில் பங்கேற்று அவர்களைச் சகோதரர், சகோதரிகள் என அழைப்பதில் வெளிப்படுகிறது.

நற்செய்தி வாசகம் இயேசுவின் பணி வாழ்வின் முதல் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து பதிவு செய்கின்றது. கப்பர்நகூம் தொழுகைக் கூடத்திலிருந்து வெளியேறுகின்ற இயேசு சீமோன் பேதுருவின் இல்லம் சென்று அவருடைய மாமியாரைக் காய்ச்சலிலிருந்து குணமாக்குகின்றார். மேலும், நகரில் இருந்த பல நோயுற்றவர்களின் பிணிகளையும் நீக்குகின்றார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து தனிமையான இடத்திற்குச் சென்று இறைவேண்டல் செய்கின்றார். 'யாவரும் உம்மைத் தேடுகிறார்கள்!' என்று சொல்லி சீமோன் அவரை நகரில் தக்க வைக்க முயன்றபோது, 'அடுத்த ஊர்களுக்கும் செல்வோம்' என்று புறப்படுகின்றார்.

இயேசுவின் இறைவேண்டல் அவர் தம் தந்தையோடு கொண்ட உறவில் நம்பிக்கைக்குரியவராக இருந்ததை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய இரக்கம் நோயுற்றவர்களுக்கு நலம் தருவதிலும், பரிச்சயம் என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறி அனைவரையும் தழுவிக்கொள்ள முயலும் தாராள உள்ளத்திலும் வெளிப்படுகிறது.

இயேசு முன்மொழியும் வாழ்க்கைப் பாடக் கேள்விகள் இவைதாம்: ஒன்று, தேவையில் இருப்பவர்களுக்கு என் உடனிருப்பை நான் காட்டுகின்றேனா? இரண்டு, என் அலுவல்கள் மற்றும் உறவுப் பரிமாற்றங்களிலிருந்து தனிமையான நேரத்தை இடத்தைத் தேர்ந்தெடுத்து இறைவனோடு இணைந்திருக்க முயற்சி செய்கின்றேனா? பரிச்சயம், பாராட்டு, புகழ் என்னும் பாதுகாப்பு வளையங்கள் தாண்டி அடுத்த ஊர்களுக்கு நகரும் துணிச்சலும் பரந்த உள்ளமும் கொண்டுள்ளேனா?


Monday, January 9, 2023

அறிதலும் பதிலிறுத்தலும்

இன்றைய இறைமொழி - செவ்வாய், 10 ஜனவரி 2023

எபி 2:5-12. மாற் 1:21ஆ-28

அறிதலும் பதிலிறுத்தலும்

இயேசுவின் பொதுவாழ்வுத் தொடக்க நிகழ்வுகளை இன்றைய நற்செய்தி நம் கண்முன் கொண்டுவருகின்றது. போதிப்பவராகவும், தீய ஆவியை விரட்டுபவராகவும் இயேசுவைத் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றார் மாற்கு. இவை நடைபெறும் இடமும் நேரமும் முக்கியமானவை. இந்நிகழ்வுகள் கப்பர்நகும் தொழுகைக்கூடத்தில் ஓய்வு நாள் ஒன்றில் நடந்தேறுகின்றன. தொழுகைக்கூடம் என்பது இறைவேண்டல் செய்யும் இடம். இயேசு தன் பணியை இறைவேண்டல் சூழலில் தொடங்குகின்றார். ஓய்வு நாளில் போதிப்பது அனுமதிக்கப்பட்டாக இருந்தாலும், வல்ல செயல் நிறைவேற்றுவது அல்லது பேய்களை ஓட்டுவது தடைசெய்யப்பட்டதாக இருந்தது. ஓய்வுநாளில் வல்ல செயல் நிகழ்த்துவதன் வழியாக இயேசு ஓய்வுநாளை மீறுகிறவராக, அதாவது சட்டத்திற்கு உட்படாதவராக, தன்னை முன்மொழிகின்றார். மேலும், முதல் ஏற்பாட்டுக் கடவுள் ஓய்ந்திருந்தது போல, இரண்டாம் ஏற்பாட்டுக் கடவுள் ஓய்ந்திருப்பதில்லை என்பதையும் வாசகர் இங்கே புரிந்துகொள்ள முடிகிறது. 

இரு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஒன்று, இயேசு போதிக்கின்றார். போதனையின் உள்ளடக்கம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாக, போதனை ஏற்படுத்திய விளைவு மற்றும் தன்மை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன: இயேசுவின் போதனை குறித்து மக்கள் வியப்படைகின்றனர், இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்ததாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் தங்கள் போதனையை மறைநூல்கள், அல்லது தங்களுடைய ஆசிரியர், அல்லது தாங்கள் சார்ந்திருந்த பள்ளியின் அதிகாரத்தைக் கொண்டே போதித்தனர். ஆனால், இயேசு கடவுளின் மகன் என்னும் நிலையில் - இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுவது போல – தன்னதிகாரம் கொண்டவராகப் போதிக்கின்றார். 

இரண்டு, இயேசு தீய ஆவியை விரட்டி, தீய ஆவி பிடித்தவருக்கு நலம் தருகின்றார். இயேசுவின் காலத்தில் நோய்கள் அனைத்திற்கும் காரணம் தீய ஆவி என்று கருதப்பட்டது. தீய ஆவி மேல் அதிகாரம் கொண்டவராக இயேசு இருப்பதால் அனைத்து நோய்களையும் நீக்கி நலம் தருபவராக அறிமுகம் செய்யப்படுகின்றார். இயேசுவைக் கண்டவுடன் தீய ஆவி, 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என அறிக்கையிடுகின்றது. 'அறிதல் - மறைந்திருத்தல்' என்னும் இலக்கியக் கூற்றை மாற்கு அறிமுகம் செய்கின்றார். அதாவது, தீய ஆவி இயேசு யார் என்பதை அறிந்திருந்தது. ஆனால், இயேசுவுக்கு நெருக்கமான மனிதர்களுக்கு அவர் யார் என்பது மறைவாக இருந்தது. இயேசு தீய ஆவிக்குக் கட்டளையிட்டவுடன், 'இது என்ன? இவர் யார்?' என மக்கள் வியக்கின்றனர். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் இக்கேள்விகளையே தங்கள் உள்ளத்தில் எழுப்ப வேண்டும் என்பது மாற்கு நற்செய்தியாளரின் விருப்பமாக இருக்கிறது.

இன்று நாம் இயேசுவின் நற்செய்தியை வாசிக்கும்போதெல்லாம் இக்கேள்விகள் - 'இது என்ன? இவர் யார்?' – என்னும் கேள்விகள் நம் உள்ளத்தில் எழுகின்றனவா? இக்கேள்விகள் ஐயத்தால் எழுபவை அல்ல. மாறாக, வியப்பால் எழுபவை. இக்கேள்விகளுக்கு நாம் செய்யும் பதிலிறுப்பு என்ன?

இன்றைய முதல் வாசகம் இயேசுவைப் பற்றிய புதிய புரிதலைத் தருகின்றது. கடவுளின் மகன் என்னும் நிலையில் இயேசு இருந்தாலும் அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது வானதூதருக்கும் குறைவான மனித நிலையில் - மானிடரின் துன்பங்களில் பங்கேற்பவராக - இருக்கிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட நூலின் ஆசிரியரின் சொற்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன: 'தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுபவர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே'. அந்த உயிர்முதல் என்பது துன்பமே. துன்பம் ஏற்றதால், இயேசு மனிதர்களைச் சகோதரர்கள், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

தியானிப்போம்: கடவுள் நம் துன்பங்களில் பங்கேற்கின்றார். நம் துன்பங்களைக் காண்கின்ற அவர் உடனடியாகத் தலையிட்டு அவற்றைப் போக்குகின்றார்.

இயேசுவின் போதனையைக் கேட்ட, வல்ல செயலைக் கண்ட தொழுகைக்கூட மக்கள் வியப்படைந்தனர். நம் பதிலிறுப்பு என்ன?

இயேசுவை அறிந்த உடனேயே பதிலிறுப்பு செய்வதும் அவசியமாகிறது.நம் நடுவே நிற்கும் அவரை, நம் துன்பங்களில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அவரை அறிதலும், 'நீர் என் சகோதரர்' என அறிக்கையிடுவதும் நம் நற்செயலாக இருக்கட்டும் இன்று!


Sunday, January 8, 2023

அக்கரை உறவுகள்!

ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா

I. எசாயா 42:1-4,6-7 II. திருத்தூதர்பணிகள் 10:34-38 III. மத்தேயு 3:13-17

அக்கரை உறவுகள்!

ஜென் கதை ஒன்றோடு தொடங்குவோம்.

ஆற்றின் கரையருகில் ஜென் மடாலயம் இருந்தது. புதிதாய் ஜென் மடாலயத்திற்கு வந்த இளவல்கள் சிலர் படகேறி ஆற்றின் அக்கரைக்குச் சென்றனர். மாலை வேலையாகிவிட்டது. ஒருவர் தவிர மற்ற எல்லாரும் படகேறி மடாலயம் திரும்பிவிட்டனர். திரும்பி வராத மற்றவர், ஆற்றின் அக்கரையில் நின்றுகொண்டு, இக்கரையில் இருப்பவர்களிடம் கை அசைக்கின்றார். அவரின் கை அசைவைக் கவனிக்கின்ற மடலாயத் தலைவர் வெளியே வருகிறார். வெளியே வந்த தலைவர் தானும் கையசைத்து, 'என்ன வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'அக்கரைக்கு வருவது எப்படி?' எனக் கேட்கின்றார் இளவல். 'நீ இருப்பதே அக்கரைதானே!' என்கிறார் தலைவர். ஞானம் பெற்றான் சீடன்.

அடுத்தவர்கள் இருக்கும் கரை தனக்கு அக்கரை என்றால், தான் இருப்பதும் அடுத்தவர்களுக்கு அக்கரை என்று உணர்ந்த சீடன், ஒவ்வொன்றும் அக்கரை என்று உணர்கின்றான். அதுவே ஞானம்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்ற இக்கரையிலிருந்து நாம் ஆண்டின் பொதுக்காலம் என்ற அக்கரைக்கு இன்று கடந்து செல்கின்றோம். நம்மைத் தண்ணீரில் இறக்கி அக்கரைக்குச் செல்ல அழைக்கும் திருவிழாவே இயேசுவின் திருமுழுக்கு திருவிழா.

இயேசுவின் திருமுழுக்கின்போது, வானகத் தந்தை, 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்று உலகிற்கு அவரைப் பற்றி அறிக்கையிடுகின்றார். அந்த நேரமே இயேசு தன்னுடைய பணிவாழ்வையும் தொடங்குகின்றார். ஆக, கடவுளோடு மகன் என்ற நிலையில் உறவுகொண்ட இயேசு, ஒருவர் மற்றவரோடு சகோதரர் என்ற நிலையில் பணியாற்றத் தொடங்குகின்றார். ஆக, இயேசுவின் திருமுழுக்கு அவருக்கு இரண்டு உறவுகளுக்குக் கதவுகளைத் திறக்கின்றது. அக்கரையில் நின்ற கடவுளையும் மனுக்குலத்தையும் தண்ணீரில் இறங்குவதால் தழுவிக்கொண்டு உறவுகொள்ளத் தொடங்குகிறார் இயேசு.

இதுதான் நம்முடைய சிந்தனையின் கரு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 3:13-17) இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது. திருமுழுக்கு பெறுமுன் இயேசு யோவானோடு உரையாடுகின்றார். 'நீரா என்னிடம் திருமுழுக்கு பெற வருகிறீர்?' என்று யோவான் தயக்கம் காட்ட, 'கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதே முறை' என்கிறார் இயேசு. 'கடவுளுக்கு ஏற்புடையவை' என்ற வார்த்தை இங்கே முக்கியமானது. கிரேக்கத்தில் 'டிக்காயுசுனே' என்று குறிப்பிடப்படும் வார்த்தைக்கு, 'கடவுளோடு உள்ள உறவை நேர்கோட்டில் அமைத்துக்கொள்ளுதல்' என்பது பொருள். இயேசு தன்னுடைய திருமுழுக்கின் நினைவாக கடவுளோடு உள்ள உறவை நேர்கோட்டில் அமைத்துக்கொள்கிறார் என்றால், இயேசுவின் கோடுகள் கோணலாக இருந்தனவா? இல்லை. மாறாக, கடவுளுக்கும் தனக்கும் உள்ள உறவில் தான் யார் என்பதைக் கண்டுகொள்கிறார் இயேசு. அந்தக் கண்டுகொள்தல், தந்தையின் வார்த்தைகளில் - 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவரின் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' - நடந்தேறுகிறது. தொடர்ந்து, இயேசு தன்னுடைய பொதுவாழ்வை அல்லது பணிவாழ்வைத் தொடங்குகின்றார். அதாவது, கடவுளுக்கு ஏற்புடையவற்றை நிறைவேற்றிய ஒருவர், தன்னையும் கடவுளையும் நேர்கோட்டில் வைத்துக்கொள்ளும் ஒருவர், வெறுமனே ஓய்ந்திருக்க இயலாது. அவர் உடனடியாக மற்றவர்களை நோக்கிப் புறப்பட வேண்டும். 

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திப 10:34-38), கொர்னேலியுவின் இல்லத்தில் உரையாற்றுகின்ற பேதுரு, இயேசுவின் திருமுழுக்கு அனுபவத்தை, 'தூய ஆவியாரின் அருள்பொழிவு' என்று அழைப்பதோடு, 'கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து, எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்' என்று மொழிகின்றார். இயேசு மற்றவர்கள்மேல் காட்டிய உறவு, 'நன்மை செய்தல்' என்ற நிலையில் வெளிப்படுகிறது. இயேசு செய்த அனைத்துப் பணிகளையும் - போதித்தல், பேய்களை ஓட்டுதல், நோய்களைக் குணமாக்குதல் - 'நன்மை' என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடுகின்றார் பேதுரு.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 42:1-4,6-7), ஊழியர் பாடல் என்றழைக்கப்படும் நான்கு பாடல்களில் முதன்மையான பாடலாக இருக்கிறது. இங்கே கடவுள் தான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலை, தன்னுடைய இறைவாக்கினரை, தான் முன்மொழியும் மெசியாவை, 'இதோ! என் ஊழியர்' என அழைக்கின்றார். மேலும், தான் தேர்ந்துகொண்ட ஊழியரால் தன்னுடைய நெஞ்சம் பூரிப்படைவதாகவும் மொழிகின்றார். தொடர்ந்து, 'உம் கையைப் பற்றிப் பிடித்து, உம்மை பாதுகாப்பேன்' என்று தன்னுடைய உடனிருப்பையும் அவருக்குத் தருகின்றார் ஆண்டவர். இங்கே, ஆண்டவரோடு உள்ள உறவும், ஊழியர் மற்றவர்களுக்குச் செய்யப்போகின்ற பணியும் இணைந்தே செல்வதைப் பார்க்கின்றோம். 

ஆக, இன்றைய மூன்று வாசகங்களையும் இணைத்துப்பார்க்கும்போது, மூன்று விடயங்கள் தெளிவாகின்றன:

அ. மனிதர்களோடு உள்ள உறவில் முதல் அடி எடுத்து வைப்பவர் கடவுள். அவரே மனிதர்களைத் தெரிந்துகொள்கிறார். அன்பு செய்கிறார். அவர்களால் பூரிப்படைகின்றார்.

ஆ. கடவுளோடு உறவுகொள்ளும் ஒருவர், கடவுளால் அன்புசெய்யப்படும் ஒருவர், அந்த அன்பை கடவுளுக்கு பதிலன்பாகக் காட்ட முடியாது. ஆனால், அவர் அந்தப் பதிலன்பை ஒருவர் மற்றவருக்குக் காட்ட வேண்டும். அந்த அன்பு நன்மை செய்தலாகவும், பிறரன்புப் பணிகளாகவும், நீதிச் செயல்களாகவும் வெளிப்படும்.

இ. மனித உறவுகளுக்கு இரண்டு திசைகள் உள்ளன. நேர்கோட்டு திசையில் மனிதர்கள் கடவுளோடும், சமதளத்தில் ஒருவர் மற்றவரோடும் இணைந்திருக்கின்றனர். முதல்வகை உறவு மனித வாழ்வின் வேர் என்றால், இரண்டாம்வகை உறவு அவர்களின் கிளைகள் அல்லது கனிகள். 

இவற்றை நம் வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

நாம் வயது வந்து திருமுழுக்கு பெற்றாலன்றி, அல்லது திருமுழுக்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளியைப் பார்த்தாலன்றி, நம்முடைய திருமுழுக்கு நிகழ்வை நாம் நினைவிற்குக் கொண்டுவர முடியாது. திருமுழுக்கு கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு. 'தொடக்கநிலைப் பாவம் கழுவப்படுகிறது' என்று ஆன்மீகப்படுத்தவில்லை என்றாலும், சாதாரண வாழ்வியல் நிலையில் இதற்கு நிறையப் பொருள் இருக்கிறது.

திருமுழுக்கு ஒரு குடும்ப நிகழ்வு. திருமுழுக்கின் வழியாக குழந்தை ஒரு குடும்பத்தின் உறுப்பினராகிறது. ஏனெனில், குழந்தைக்குப் பெயரிடுதல் இங்கேதான் நடைபெறுகிறது. பெயரிடுதல் என்பது ஒருவர் அனுபவிக்கும் உரிமை உணர்வைக் காட்டுகிறது. மேலும், குழந்தை தன்னுடைய குடும்பத்தோடு, குடும்பத்தாரின் குடும்பங்களோடு உறவுகொள்ளத் தொடங்குகிறது.

இந்த உறவுக்கு அடித்தளமாக இருப்பது இறையுறவு. 'தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்' என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டு, தண்ணீர் தலையில் ஊற்றப்படும்போது, குழந்தை தன்னுடைய கடவுளோடு உள்ள நிலையில் தன்னையே நேர்கோட்டில் வைத்துக்கொள்கிறது. இறைவனுக்கு குழந்தையை அர்ப்பணிக்கும் மரபு எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இந்து சமயத்தில் புழக்கத்தில் இருக்கும் மொட்டையிடுதல் இறையுறவையே குறிக்கிறது. போரில் தோற்ற அரசன் தன்மேல் வெற்றிகொண்ட அரசனின் கால்களில் தன்னுடைய மணிமுடியைக் கழற்றி வைத்து, 'இனி நான் உன் அடிமை. உன் விருப்பப்படி எனக்குச் செய்யும்' என்று சொல்வதுபோல, பெற்றோர் குழந்தையின் மணிமுடியாகிய தலைமுடியைக் கழற்றி, 'இனி இவன்-இவள் உன் அடிமை. உன் விருப்பப்படி இவனுக்கு-இவளுக்குச் செய்யும்' என்று சொல்கின்றனர்.

ஆக, நம்முடைய திருமுழுக்கிலும் நாம் இறைவன் என்ற அக்கரையோடும், மற்றவர்கள் என்னும் அக்கரையோடும் இணைகிறோம்.

1. இறைவனில் அடையாளத்தைக் காண்பதால்

நாம் அன்பு செய்யும்போது மற்றவர்களையும், அல்லது நம் படிப்பு, பெயர், பின்புலம் போன்றவற்றையும் நம்முடைய அடையாளங்களாகக் கொள்கின்றோம். இவ்வடையாளங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆனால், 'நான் இறைவனின் அன்பார்ந்த மகன் அல்லது மகள்' என்று நாம் எடுத்துக்கொள்ளும் உரிமையும், அடையாளமும் ஒருபோதும் மாறாது. நாம் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் நமக்கு உந்துசக்தியாக இருப்பது இந்த அடையாளம்தான். இந்த அடையாளத்தில் இயேசு மிகவும் உறுதியாக இருந்தார். எனவேதான், அவருடைய உறவினர்கள் அவரை மதிமயங்கிவிட்டார் என்று நினைத்து தேடிவந்தபோதும், பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் தனக்கு எதிராகச் சதிசெய்தபோதும், தன்னுடைய சீடர்கள் தன்னைப் புரிந்துகொள்ள மறுத்தபோதும் அல்லது தவறாகப் புரிந்துகொண்டபோதும் துணிச்சலோடு முன்னேறிச் செல்கின்றார். இன்று நான், 'நான் கடவுளின் அன்பார்ந்த மகன்-மகள்' என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்வதோடு, அவருடைய பாதுகாப்பையும், உடனிருப்பையும் உணர வேண்டும்.

2. தண்ணீரை விட்டு வெளியேறுதல்

திருமுழுக்கு பெற்ற இயேசு தண்ணீரிலிருந்து வெளியேறுகின்றார். தண்ணீரிலிருந்து அவர் வெளியேறும்போதுதான் அவரால் தந்தையின் குரலைக் கேட்க முடிகின்றது. தண்ணீர் என்பது பாதுகாப்பு வளையம். அந்த பாதுகாப்பு வளையத்திலிருந்து ஒருவர் வெளியேற வேண்டும். இறையுறவையும், பிறர் உறவையும் நான் உணர என்னுடைய பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறுதல் அவசியம். 'பாதுகாப்பாய் இருக்கிறது' என்று தண்ணீரில் அதிக நேரம் நின்றால், அதுவே நமக்கு ஆபத்தாய் முடிந்துவிடும். இன்று நான் வெளியேற வேண்டிய தண்ணீர் எது? நான் விடமுடியாது பிடித்துக்கொண்டிருக்கும் பழக்கம் எது? எனக்கு நானே கட்டிக்கொள்ளும் சங்கிலி எது?

3. பிறருக்கு நன்மை செய்வதால்

இறைவனின் நன்மைத்தனத்தையும் அன்பையும் அனுபவித்த ஒருவர் அதை மற்றவர்களுக்குக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார். இயேசு தான் சென்ற இடமெங்கும் நன்மைசெய்துகொண்டே செல்கின்றார். நன்மை செய்தல் அவருடைய வழக்கமாகவே மாறிவிடுகின்றது. நன்மை செய்தல், நல்லதை நினைத்தல், நல்லதைப் பேசுதல் போன்றவை நாம் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள். தொடர்ந்து செய்யும் செயல் நமக்கு பழக்கம் அல்லது வழக்கமாகிவிடுகின்றது. நன்மையும் அப்படித்தான். இன்று நான் என்னுடைய வாழ்வில் செய்யும் நன்மைகள் எவை? என்னுடைய இருப்பால் யாராவது ஒருவருடைய வாழ்வு முன்னேறியிருக்கிறதா? நான் அடுத்தவரை அலகையின் கட்டுக்களிலிருந்து விடுவித்துள்ளேனா?

இறுதியாக,

அக்கரை உறவுகள் என்னும் இறை-மனித உறவுகளின் நுழைவாயிலாக திருமுழுக்கு இயேசுவுக்கு இருந்ததுபோல, திருமுழுக்கு பெற்ற உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. நுழைவாயிலைக் கடந்த இறை-மனித உறவில் இணையும் அனைவருக்கும் 'ஆண்டவர் தம் அமைதியை அருள்கின்றார்' என்று இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 29) நமக்கு வாக்குறுதி தருகிறது.

அக்கரை உறவுகள் அக்கறையோடு!