Friday, May 31, 2019

உறுதிப்படுத்துதல்

இன்றைய (1 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 18:23-28)

உறுதிப்படுத்துதல்

இன்று புதிய மாதம் தொடங்குகிறது. கல்வி ஆண்டின் முதல் நாள்.

புதிய செயல்கள் பல செய்ய நாம் முடிவெடுத்திருப்போம். 'கஷ்டப்பட்டாவது இந்த ஆண்டு முன்னால் வர வேண்டும் என நாம் முடிவெடுத்திருந்தால், இந்த ஆண்டு ஒரு கஷ்டத்தைக் கடவுள் நம் முன்னால் வந்து நிறுத்துவார்' என நாள்கள் நகரக் காத்திருக்கின்றன.

இன்றைய நாளில் பவுல் நமக்கு அழகான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இயேசு சொல்லும் உருவகங்களில் விந்தையான உருவகம் ஒன்று உண்டு. ஒரு வீட்டிலிருந்து வெளியேறுகிற பேய் திரும்பி வந்த அந்த வீட்டைப் பார்க்கும் போது அந்த வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. அது போய் வேறு ஏழு பேய்களைக் கூட்டிவந்து அந்த வீட்டில் குடியிருக்க, அவரின் முந்தைய நிலையை விட பிந்தைய நிலை மோசமாகிறது. ஏன்? அந்த வீட்டுக்காரர் செய்த தவறு என்ன?

ஒரு நாள் கூட்டி அழகுபடுத்தினால் போதாது. தொடர்ந்து வீட்டைக் கூட்டிப் பத்திரமாகக் காவல் காக்க வேண்டும்.
பவுல் இதைத்தான் செய்கிறார்.

புதிய குழுமத்தை உருவாக்கினால் மட்டும் போதாது என நினைக்கின்ற அவர், அதை தொடர்ந்து சந்தித்து உறுதிப்படுத்துகின்றார். இப்படி அவர் இரண்டாம் முறை போகும்போது அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களில் புதியவர்களைச் சந்திக்கவும் முடியும்.

மருத்துவத்திலும், ஒரு மாத்திரை கோர்ஸ் எடுக்கும்போது 'ஃபாலோ அப்' மிகவே அவசியம். ஒரு மாத்திரை அதை எடுப்பவரின்மேல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய இது உதவும்.

ஆக, நற்செயல்களைத் தொடங்குவோம். தொடங்கும் நற்செயல்களை உறுதிப்படுத்துவோம்.

பவுல் இப்படி இருக்க, அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் தங்களைச் சேராத அப்பொல்லோ என்பவரைச் சந்தித்து அவரை ஊக்கப்படுத்துகின்றனர். அவர் தங்களைவிட பெரியவர் என்று ஒதுங்கிச் செல்லாமல் அல்லது பொறாமை கொள்ளாமல் ஊக்கப்படுத்துகின்றனர்.

இதுவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கலாம்.

Thursday, May 30, 2019

சந்திப்பு

இன்றைய (31 மே 2019) திருநாள்

சந்திப்பு

இன்று மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வின் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

மே 31 - ஆசிரியப் பணி, படிப்பு என இருப்பவர்களுக்கு பிடிக்காத நாள் மே 31. ஏனெனில், அடுத்த நாளிலிருந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கிவிடும். பள்ளி, கல்லூரிகள், மேற்படிப்பு நிறுவனங்கள் என அனைத்தும் தங்கள் கல்வி ஆண்டை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகின்றன. விடுமுறையை நிறைவு செய்யும் நாளே இது. விடுமுறையை விட்டு வேலைக்கு அல்லது படிப்புக்கு கடந்து செல்வதன் கடினத்தை உணர்கின்ற சில பள்ளிகள் (இத்தாலியில்) விடுமுறைக்குப் பின், 'விடுமுறையிலிருந்து பள்ளிக்கு மாறும் பருவம்' என ஒரு வாரத்தை அறிவித்து விடுமுறையின் அனுபவங்களை மறக்கவும், புதிய கல்வி ஆண்டிற்குக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கவும் செய்கிறார்கள்.

நம் நாட்டில் ஜூன் 1-ல்தான் பங்கின் செயல்பாடுகள் ஆண்டும் தொடங்குகிறது. புதிய பங்குத்தந்தை, புதிய உதவிப் பங்குத்தந்தை என புதியவர்கள் அறிமுகம் ஆவதும் இன்றிலிருந்துதான்.

ஆக, மாற்றத்தை அறிவிக்கின்ற நாளாக இருக்கின்றது மே 31.

மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்விலும் மாற்றம் அறிவிக்கப்படுகிறது. இளவல் ஒருத்தி தான் கருத்தாங்கியிருப்பதை அறிவிக்க, கருத்தாங்கியிருக்கும் முதியவள் ஒருவரை நாடிச் செல்கின்றாள். 'நானுந்தான், நானுந்தான்' என்று இருவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். விளைவு - குழந்தைகள் மகிழ்கின்றன வயிற்றில்.

மனித முகங்கள் ஆச்சர்யமானவை. அவை சந்திக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முகமும் நமக்கு கடவுளின் முகத்தையே காட்டுகிறது.

'உன்னை யாரும் பார்க்கவில்லை என்றால், உன்னை எல்லாரும் மறந்துவிடுவார்கள்' என்பது இரஷ்ய நாவல் ஒன்றில் வரும் வரி. ஆகையால்தான், நீண்ட காலம் பார்க்காத ஒருவரிடம், 'நீ என்னை மறந்துவிட்டாய்' என்கிறோம்.

இன்று காணொளி அழைப்புக்கள் இந்தப் பார்த்தலை நமக்கு மிகவும் எளிதாக்கிவிட்டன. நினைத்தவுடன், நினைத்தவரை கண்முன் பார்த்துவிட முடிகிறது. ஆனாலும், இக்காணுதலில் குறை இருக்கவே செய்கிறது.

மரியாவைப் போல விரைந்து சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறி, அடுத்தவரின் தேவையில் உடனிருக்க நம்மை அழைக்கிறது இத்திருநாள்.

ஆக, புதிய கல்வி ஆண்டு, புதிய இடம், புதிய படிப்பு, புதிய பணி என்னும் கவலை வேண்டாம். எங்கும் இனிய சந்திப்புக்கள் சாத்தியமாகும்.


Wednesday, May 29, 2019

கூடாரத் தொழில்

இன்றைய (30 மே 2019) முதல் வாசகம் (திப 18:1-8)

கூடாரத் தொழில்

'ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்' என்பது தமிழ் பழமொழி. எந்த மாடும் ஆடுவதில்லை. எந்த மாடும் பாடுவதில்லை. ஒருவேளை அசைகிற மாட்டை ஆடுகிற மாடும், கத்துகின்ற மாட்டை பாடுகின்ற மாடு என்று நம் முன்னோர்கள் சொன்னார்களோ?

தன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பவுல் இந்த முறையைத்தான் தான் பயன்படுத்துகிறார். கொரிந்து நகரத் திருச்சபைக்குத் தான் எழுதிய முதல் திருமடலில், 'எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:22) என மார்தட்டுகிறார் பவுல்.

இவர் எப்படி எல்லாருக்கும் எல்லாமானார் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. எப்படி?

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இவர்கள் கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க இத்தாலியைவிட்டு வெளியேறி கொரிந்தில் குடியேறுகின்றனர். இவர்கள் தொழில் கூடாரம் செய்வது. கூடாரம் செய்வது எப்படிப்பட்ட வேலை என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா அல்லது நிரந்தரக் கூடாரம் அமைப்பவர்களா, கூரை வேய்பவர்களா, அல்லது கூடாரத் துணி நெய்பவர்களா, கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களாக - எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே, கணவனும் மனைவியும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இந்தச் சமுதாயத்தில் பெண் வேலையில் ஆணுக்குச் சமமாக இருந்திருக்கிறாள். இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார். இவர்களோடு இணைந்து கூடாரத் தொழில் செய்கின்றார். பவுல் எவ்வளவு ஆண்டுகள் செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், எதற்காகச் செய்தார் என்பது தெரிகிறது. அதாவது, தன்னுடைய செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்மதிப்புடன் அதைத் தானே சம்பாதிக்கிறார் பவுல். ஒருவேளை அக்கிலாவும்-பிரிஸ்கில்லாவும் ஏழைகளாக இருந்திருக்கலாம். அவர்களுக்குத் தான் சுமையாக இருக்கக் கூடாது என்ற நிலையில் தனக்குரிய உணவை உண்ணத் தானே உழைத்திருக்கலாம் பவுல்.

பவுலின் இந்தத் தன்மதிப்பும், யாருக்கும் எதிலும் கடன்படக் கூடாது அல்லது யாருக்கும் சுமையாய் இருக்கக் கூடாது என்ற உணர்வும் நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்று சில நேரங்களில் அருள்பணி செய்பவர்கள் தங்கள் அருள்பணி நிலையை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, தங்களின் அருள்பணிக்காக மற்றவர்களின் சுமைகளைக் கூட்டும் நிலை சில இடங்களில் இருக்கிறது. தான் திருத்தூதுப்பணி செய்தாலும், அப்பணிக்கு உரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருந்தாலும் பவுல் மற்ற வேலையையும் செய்கின்றார். மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்யும் வேலையை அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது.

'என் வாழ்க்கை என் கையில்' என பவுல் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இரண்டாவதாக, பவுலின் பழகும் திறன்.

இன்று நாம் ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். மாலையில் வீட்டுக்கு வந்து, 'இன்று அந்த வீட்டில் யாரும் என்கூட பேசவில்லை. அல்லது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை' என்று புலம்புகிறோம். ஆனால், 'நாம் அங்கே எத்தனை பேரோடு பேசினோம்? எத்தனை பேரைக் கண்டுகொண்டோம்?' ஆக, பழகுவதற்கான முயற்சியை நாம் முதலில் எடுக்க வேண்டும். இதைத்தான் செய்கிறார் பவுல்.

அக்கிலா-பிரிஸ்கில்லா வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கிற தொழுகைக்கூடத் தலைவரையும் நண்பராக்குகின்றார் பவுல். அந்த நட்பின் வழியாக அவரையும் நம்பிக்கையாளராக மாற்றுகின்றார் பவுல்.

முதலில், உழைப்பு.

இரண்டாவது, பழகும் திறன்.


Tuesday, May 28, 2019

அரயோபாகு

இன்றைய (29 மே 2019) முதல் வாசகம் (திப 17:15, 22 - 18:1)

அரயோபாகு

நாம் எந்த தர்மத்தை ஏற்றுக்கொள்கிறோமா அந்த தர்மத்தின்படி வாழ்வது ரொம்ப எளிது. ஏனெனில், நாம் வாழ்வது அந்த தர்மத்தின்படிதான் என நாம் நம்மையே உறுதியாக்கிக்கொள்ள முடியும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடெங்கும் ஒரே ஒரு தேசியக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இவர்களுடைய முயற்சிகள் அனைத்திலும் இவர்கள் கைக்கொண்டது 'மகாபாரதம்' சொல்லும் தர்மம். மகாபாரதம் ஒரு போர்க்கள நிகழ்வு. அந்த போர்க்களத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே அடுத்தவர்களை ஏமாற்றியே வெற்றி பெற்றனர். இதற்கு அவர்களின் கடவுள் கிருஷ்ண பரமாத்மாவும் துணை நிற்கிறார். இவரும் சேர்ந்து ஏமாற்றுகிறார். ஆக, 'வெற்றி பெறுவது' என்பது தர்மம். அதற்காக, 'ஏமாற்றுவது தவறில்லை' என்பது ஷத்ரிய தர்மம்.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு (இல்லை! கொலைக்குப் பின்!) பின் அவர்களுடைய கழகத் தொண்டர்கள் தொடங்கியதும் 'தர்ம யுத்தம்'.

இதன் பொருள் ரொம்ப சிம்பிள்: 'ஏமாற்று வேலை'

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரத்தில் உள்ள அரயோபாகு மன்றத்தில் உரையாற்றுகிறார். ஏதென்ஸ் நகரத்தார் அறிவாளிகள். புதிய கருத்துக்களை வரவேற்றுக் கேட்பவர்கள். ஆக, உடல் தாண்டி இவர்கள் மூளைக்கு அன்றே கடந்து சென்றவர்கள். இவர்கள் ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். கட்டியவர்கள் நிறைய கடவுளர்களுக்கு அதை அர்ப்பணித்துவிட்டு, 'யாரும் அறியாத கடவுளுக்கு' என்று அந்தக் கடவுளுக்கும் பீடம் வைத்த புத்திசாலிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள்.

என் நண்பர் ஒருவர் தன் நண்பர்களுக்கு கிஃப் வாங்கப் போகும்போதெல்லாம், 'இது இப்ப இருக்கிற ப்ரண்டுக்கு. இது அடுத்து வர்றவருக்கு' என்று வாட்ச், பெர்ஃப்யூம் என எல்லாமே இரண்டாக வாங்குவார். அவர் கொடுக்கும் ராசியோ என்னவோ, கிப்ட் கொடுத்த சில நாள்களில் சண்டை போட்டு பிரிந்துவிடுவார். புதிய நண்பர் பார்க்கத் தொடங்குவார்.

வரப் போகிற நண்பருக்கு இப்பயே கிஃப்ட் வாங்கும் இவர் போல, ஒருவேளை இருக்கலாம் என்று நினைக்கிற கடவுளுக்கு பீடம் கட்டுகிறார்கள் ஏதென்ஸ் மக்கள்.

இதைக் காண்கிற பவுல், இதையே தன்னுடைய கருத்துரைக்கான பொருளாக எடுக்கின்றார். 'அந்தக் கடவுளைப் பற்றி நான் பேசுகிறேன்' என பவுல் தொடங்குவது, பவுலின் அறிவுத்திறனுக்குச் சான்று.

இறுதியில், 'இறந்தவர் உயிர்த்தல்' பற்றிப் பேசியதால் சிலர் பவுலைக் கிண்டல் செய்கின்றனர். சிலர், 'அடுத்த வாரமும் வந்து பேசுங்கள்' என அழைப்பு விடுக்கின்றனர்.

இறந்தவர்கள் உயிர்ப்பு இல்லை என்று நம்பியவர்கள் கிரேக்கர்கள். அந்த தர்மத்தையே அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் பவுல் இயேசுவின் உயிர்ப்பு பற்றி பேசியது அவர்களுக்கு நகைப்பைத் தந்தது.

ஆக, நாம் வாழ்கின்ற ஒரு தர்மம் அடுத்தவருக்கு நகைப்பைத் தரலாம்.

எனக்கு அடிக்கடி தோன்றும்: 'நான் பிரமாணிக்கம் என நினைப்பது அடுத்தவருக்கு பிடிவாதமாகத் தோன்றலாம்.'

எங்கிருந்து நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் அடுத்தவர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பது இருக்கிறது.

பவுலின் மறைத்தூதுப் பணி ஆர்வம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இருந்தாலும், தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதைக் கண்டுகொள்ளாமல் அடுத்த இடத்திற்கு நகரும் அவரின் மனப்பக்குவமும் பிடித்திருக்கிறது.

Monday, May 27, 2019

சிறைக் கதவுகள்

இன்றைய (28 மே 2019) முதல் வாசகம் (திப 16:22-34)

சிறைக் கதவுகள்

இன்றைய முதல் வாசகம் பவுல் மற்றும் சீலாவின் 'பேராண்மை' பற்றிச் சொல்கிறது. 'பேராண்மை' என்றால் என்ன? திருக்குறளில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும் திருவள்ளுவர், 'பிறன்மனை நோக்கா பேராண்மை' என்கிறார். ஆண்மையில் பெரிய ஆண்மை பிறன்மனைவியை நோக்காமல் இருப்பது என அப்படியே பொருள்கொள்ளலாம். ஆனால், 'சிறுமைத்தனம்' அல்லது 'சின்னப்பிள்ளைத்தனம்' என்னும் சொற்களுக்கு எதிர்பதமாக 'பெருந்தன்மையே பேராண்மை' என்றும் எடுத்துக்கொள்ளலாம். இவ்விறுதிப் பொருளையே நாம் எடுத்துக்கொள்வோம்.

பிலிப்பி நகர மக்கள் திரண்டெழுந்து பவுலையும் சீலாவையும் தாக்குகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன்? பிலிப்பு நகரத் திருச்சபைக்குப் பவுல் எழுதிய மடலை ஆசிரியர்கள் 'அன்பின் மடல்' என்கிறார்கள். ஏனெனில், இந்த மடலில்தான் பவுல் மிகவும் நெஞ்சுக்கு நெருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். 'என் அன்பர்களே,' 'என் சகோதர, சகோதரிகளே,' 'என் வாஞ்சைக்குரியவர்களே,' 'நீங்களே என் மகிழ்ச்சி,' 'நீங்களே என் வெற்றிவாகை' என்று அவர்களை உச்சி முகர்கிறார். இந்த மக்களில் சிலர்தாம் பவுலையும் சீலாவையும் சிறையில் அடைக்கின்றனர்.

மக்களால் அடிப்பட்டு, உட்சிறையில் (மிகவும் பாதுகாப்பானது) தள்ளப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்டுக் கிடந்த பவுலும் சீலாவும் நள்ளிரவில் கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றனர். சிறையின் இருளிலும், குளிரிலும், தனிமையிலும் இவர்களால் எப்படிப் பாட முடிந்தது? மற்றக் கைதிகள் இவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, இவர்கள் இரவிலும் இருளிலும் பாடல்கள் பாடி மற்ற கைதிகளுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அந்த நேரத்தில் தான் அந்த அற்புதம் நிகழ்கிறது. பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சிறைக் கதவுகள் திறக்கின்றன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுகின்றன. சிறைக் காவலர் பதறி அடித்து ஓடி வருகிறார். கதவுகள் திறந்திருப்பதால் கைதிகள் தப்பித்திருக்கலாம் என எண்ணுகின்ற அவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். கைதிகளைத் தப்பவிட்டதால் இவருக்குக் கொலை தண்டனை கிடைக்கும் என்பதால், இவரே அத்தண்டனையைத் தனக்குக் கொடுத்துக்கொள்கிறார்.

ஆனால், பவுலோ, 'நீர் உமக்கு தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர். நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்' என்கிறார். காவலர் ஓடி வந்து பவுல் மற்றும் சீலாவின் காலடிகளில் விழுகிறார். 'பெரியோரே நாங்கள் மீட்படைய என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறார். தற்கொலைக்காக வாளை எடுத்தவரின் வாழ்வு டக்கென்று மாறிப்போகின்றது.

பின் அனைவரும் நம்பிக்கை கொள்கின்றனர்.

இரண்டு விடயங்கள்:

ஒன்று, நாம் பவுலைப் போல பேராண்மையோடு இருக்க வேண்டும். தப்பிச் செல்வதற்கான, தவறு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும், அற்புதம் நடந்தும் தனது பேராண்மையில் உறுதியாக இருக்கிறார் பவுல். இதுவே மேன்மக்களின் அடையாளம். இவர்கள் தங்கள் வாழ்வை தங்கள் கைகளில் எடுத்து வாழ்பவர்கள். தங்கள் வாழ்வை தாங்களே மேலாண்மை செய்பவர்கள். வெளியிலிருந்து வரும் நபரோ, செயலோ, நிகழ்வோ இவர்களின் செயலை மாற்றிவிட முடியாது. இவர்கள் மனஉறுதி கொண்டவர்கள். இப்படிப்பட்ட பேராண்மை இருந்தது என்றால் நாம் நம் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்திலும் உறுதியாக, கலக்கமின்றி இருக்க முடியும்.

இரண்டு, நாம் சிறைக்காவலரைப் போல இருக்கக் கூடாது. ஏன்? 'கைதிகள் தப்பித்திருப்பார்கள்' என்று எண்ணி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அதாவது, பிரச்சினை என்ன என்று தெரியாமலேயே நாம் தீர்ப்பிடக் கூடாது. 'ஐயோ! எல்லாம் முடிஞ்சுடுச்சு! இனி ஒன்றுமே இல்லை!' என்று நாமே முடிவுகட்டிவிடக் கூடாது. விளக்கை எற்றி, இருள் அகற்றி என்ன, எது என்ற பொறுiமாயகப் பார்க்க வேண்டும். அவசரபுத்தியினால் தன் வாழ்வை இழக்கும் நிலைக்குப் போய்விடுகிறார் காவலர். வாலைப் பார்த்தவுடன், 'பாம்பு, பாம்பு' எனக் கத்தக் கூடாது. அது பாம்பாக இருக்கலாம். பாம்புராணியாக இருக்கலாம். ஏதோ, சிறிய பிளாஸ்டிக் அல்லது நைலான் கயிறாகக் கூட இருக்கலாம்.

அவசர புத்தி, உடனடி விமர்சனம், உடனடி முடிவு அனைத்தும்  பேராண்மைக்குச் செல்ல விடாமல் நம்மை மூடி வைத்திருக்கும் சிறைக்கதவுகளே.

பவுலின் பேராண்மை பெற்று, காவலரின் அவசரபுத்தி அகற்றி வாழ்தல் நலம்.

லீதியா

இன்றைய (27 மே 2019) முதல் வாசகம் (திப 16:11-15)

லீதியா

அலங்கரிக்கப்பட்ட அரங்கங்களிலும், தூய்மையான ஆலயங்களில் நடக்கவில்லை திருத்தூதர்களின் தூதுப்பணி.

ஆற்றங்கரைகளிலும், காற்றுத் தூசியிலும் தான் நடந்தேறியது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் திப 16:11-15ல் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவர் செய்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இவர் வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார்.

'...அவற்றுக்குச் சொல்லுமில்லை. பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.'

(திபா 19:3-4)

Friday, May 24, 2019

இணைப்பு

இன்றைய (25 மே 2019) முதல் வாசகம் (திப 16:1-10)

இணைப்பு

ஒரு தாய் தன் குழந்தையோடு இணைந்திருத்தலுக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருகிறார். ஒரு தாயும் அவருடைய கைக்குழந்தையும் அருகருகே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தாயை எழுப்ப வேண்டும். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் சத்தமாக அழைக்கிறீர்கள். அவர் எழுவதாக இல்லை. அவர் மேல் சிறிய காகிதத்தை அல்லது பென்சிலை தூக்கிப் போட்டு எழுப்புகிறீர்கள். ஆனால் ஒரு பயனும் இல்லை. இப்போது அதே காகிதத்தை அருகிருக்கும் குழந்தையின்மேலோ அல்லது மெதுவாக அந்தக் குழந்தையின் கையை அல்லது காலைத் தொட்டாலோ உடனடியாக தாய் விழித்துக்கொள்வார். கருவறைக்குள் தொப்புள்கொடி வழியாக இணைந்திருந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வந்தாலும் தாயோடு ஒருவகையான பிணைப்பில் இணைந்திருக்கிறது. ஆகையால்தான், குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் அந்த 'கம்பியில்லாத் தொடர்பு' இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியாருக்கும் திருத்தூதர்களுக்கும் அத்தகைய இணைப்பு இருப்பதைப் பார்க்கின்றோம். திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும், இப்போது திமொத்தேயுவும் இணைந்து தூய ஆவியாரோடு இணைந்திருக்கின்றனர். ஆகையால்தான், ஆசியாவில் நற்செய்தி அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுத்தார் என்றும், தூய ஆவியார் தங்களைப் பித்தினியாவுக்குப் போகவிடவில்லை என்றும், காட்சியில் ஒருவர் வந்து தங்களை அழைத்தார் என்றும் அறிந்துகொள்கின்றனர்.

'கடவுள் நினைப்பது இதுதான்' என்று மிகச் சிலருக்கு மட்டுமே இன்ட்யூஷன் இருக்கும். சிலர் இந்த இணைப்பு நிலையில் நன்றாக இருப்பர். எடுத்துக்காட்டாக, 'இன்று இதைச் செய்யலாம்' என்று அவர்கள் மனத்தில் பட்டால் பட்டுமே அதைச் செய்வார்கள்.

கடவுளைக் கொஞ்சம் அகற்றிவிட்டு, இதையே பவுலோ கொயலோ பிரபஞ்சத்தின் மனம் என்கிறார். நம் மனம் பிரபஞ்சத்தின் மனத்தோடு இணைந்திருக்கிறபோது நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறோம். இந்த இணைப்பை வளர்த்துக்கொள்ளலாம். எப்படி? முதலில் நம்மை முழுமையாக அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நேர்முக எண்ணங்களை நிறையக் கொண்டிருக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும். உடல் மற்றும் மூளையின் செயல்களைக் குறைக்க வேண்டும்.

சீராக்கின் ஞானநூல் ஆசிரியரும் இதையொட்டியே,

'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது வேறெதுவுமில்லை.
காவல் மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.' (சீஞா 37:13-15)

Thursday, May 23, 2019

சீலா

இன்றைய (24 மே 2019) முதல் வாசகம் (திப 15:22-31)

சீலா

திருத்தூதர் பணிகள் நூலில் வரும் 'சீலாவை' நான் நிறைய நாள்கள் பெண் என்றே நினைத்தேன். ஆனால், 'சைலஸ்' என்ற கிரேக்கப் பெயர் கொண்ட இவர் ஓர் ஆண்.

எருசலேம் திருச்சங்கம் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்கு விடை கண்டபின் அதை உடனடியாக கடிதம் வழியாக திருச்சபையாருக்கு அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் முறை அந்தக் காலத்தில் இருந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகின்றது.

ஒரு கடிதம் எழுதுகின்றனர். கடிதத்தை பவுல் மற்றும் பர்னபாவின் கைகளில் கொடுத்தனுப்பியிருக்கலாம். ஆனால், 'பவுலும் பர்னபாவும்தான் இதை எழுதினார்கள்' என்று யாராவது குற்றம் சுமத்தக்கூடும் என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து, தங்கள் திருச்சபையிலிருந்த இருவரை - யூதா மற்றும் சீலா - அனுப்புகின்றனர். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? 'இருவரின் சாட்சியம் செல்லும்' என்பதற்காகவும், வழியில் ஏதாவது ஒரு விபத்து நேரிட்டு ஒருவர் இறக்க நேரிட்டாலும் மற்றவர் இருப்பார் என்ற எண்ணத்திலும் இருவர் அனுப்பப்படுகின்றனர்.

தூது அனுப்புப்படுபவர் தன்னை யார் அனுப்பினாரோ அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். ஆகையால்தான் ஞானநூல்கள் தூது அனுப்புதலைப் பற்றி அதிகம் பேசுகின்றன.

சீலா தான் அனுப்பப்பட்ட தூதுக்கு உண்மையானவராக இருக்கிறார்.

தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராக, எந்தவொரு உடனடி இன்பத்தையும் விரும்பாதவராக இருக்க வேண்டும்.

இன்று நாம் எல்லாருமே நற்செய்தியின் அல்லது இயேசுவின் நற்செய்தியின் தூதுவர்களே. சீலாவிடம் துலங்கிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 15:12-17) இயேசு தன் சீடர்களிடம், 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். நண்பர்கள் என்றேன்' என்கிறார்.

பணியாளர் உறவில், 'கடமைக்குச் செய்தல்' மற்றும் 'பலனை எதிர்பார்த்துச் செய்தல்' இருக்கும். ஆனால், நட்பில் இப்படி இருப்பதில்லை.

சீலா ஒரு பணியாளர் போல அல்லாமல், நண்பர் நிலையில் பிரமாணிக்கமாக இருக்கின்றார். ஆகையால்தான் அவருடைய பிரசன்னம் திருச்சபையாருக்கு ஊக்கம் தருகிறது.


Wednesday, May 22, 2019

ஒரே உள்ளமும் உயிரும்

இன்றைய (23 மே 2019) முதல் வாசகம் (திப 15:7-21)

ஒரே உள்ளமும் உயிரும்

வட இந்தியாவில் ஒரே உயிரும், இரு உடலும் கொண்ட 'சியாமிஸ் இரட்டையர் சகோதரிகள்' வாக்களிக்க வந்த நிகழ்வும், முதல் முறையாக ஒரே உயிர் இருந்தாலும், இவர்கள் இருவர் என்ற அடிப்படையில் இருவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது என்றும் கடந்த நாள்களில் பெருமையாகப் பேசப்பட்டது.

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. புதிய நம்பிக்கையைத் தழுவியிருக்கும் புறவினத்து இனியவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று சிலர் நிர்பந்திக்க, அதைப் பற்றிய திருத்தூதர்களின் கருத்தைக் கேட்பதற்காக பவுலும், பர்னபாவும் எருசலேம் செல்கின்றனர்.

அங்கே திருத்தூதர்கள் இவர்களை வரவேற்கின்றனர். இவர்களின் செயல்களைப் பற்றிக் கேட்டறிகின்றனர். தொடக்க காலத்தில் எருசலேம் திருச்சபைதான் முதன்மையான திருச்சபையாக இருந்தது. அதன் தலைவராக யாக்கோபு இருந்தார். உரோமைத் திருஅவை முதலிடம் பெற்றது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வரலாறு.

பேதுருவும், யாக்கோபுவும் எருசலேம் சங்கத்தில் ஆற்றும் உரைகளைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம்.

முதலில், இவர்கள் இருவரின் பரந்த உள்ளம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதாவது, பவுலும் பர்னபாவும் தங்கள் பணிகளைப் பகிர்ந்துகொண்ட போது இவர்கள் பொறாமைப்படவோ, போட்டியுணர்வுகொள்ளவோ இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, அடுத்தவர்களின் வெற்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதற்கு பெரிய உள்ளம் தேவை. அது இவர்களிடம் இருக்கிறது.

தொடர்ந்து, பேதுரு, 'நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றார். புறவினத்துச் சீடர்களைத் தன்னைப் போல அல்லது தன் இடத்தில் வைத்துப் பார்க்கிறார். நான் அந்த இடத்தில் இருந்தால் எப்படி நினைப்பேன்? என்று தன்னை சீடர்களின் காலணிகளுக்குள் நிறுத்துகிறார் பேதுரு. மேலும், இப்படி எளியவருக்கு துன்பம் தருவது கடவுளையே சோதிப்பதாகவும் என்ற இறையச்சமும் பேதுருவிடம் இருக்கிறது.

அடுத்ததாக, யாக்கோபு, இறைவாக்கு நூல்களைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் ஆண்டவரின் இல்லத்தில் இடம் உண்டு என்று சொல்வதோடு, அவர்கள் பின்பற்ற வேண்டிய சில ப்ராக்டிகல் விடயங்களை மட்டும் சொல்கிறார். 'கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தல் ஆகாது!'

இவ்வாறாக, இவர்கள் இருவருமே பிறரைக்குச் சுமையாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று ரொம்ப சென்ஸிட்டிவாக இருக்கின்றனர். 'சென்ஸிட்டிவிட்டி' அல்லது 'பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்தல்' ஒரு உன்னதமான கொடை.

இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை வழியாகச் சொல்கிறார் இயேசு: 'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவும்.' மகிழ்ச்சி என்ற உணர்வு நிறைவு பெறுவது இயேசு அங்கே இருக்கும்போதுதான். எல்லாரிடமும் அந்த இயேசுவைப் பார்க்கின்றனர் திருத்தூதர்கள்.

Tuesday, May 21, 2019

சுமை

இன்றைய (22 மே 2019) முதல் வாசகம் (திப 15:1-6)

சுமை

'பிரச்சினை என்பது தயிர் போல. அதை உடனடியாகக் கவனிக்க வேண்டும். அதை அப்படியே விட்டுவைத்தால் அதன் புளிப்பு கூடிக்கொண்டே போகும்' 

பிரச்சினைகளை இப்படிக் கையாளுபவர்கள் சிலர்.

'பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி நேரம். நேரம் ஆக ஆக பிரச்சினைகள் தங்களையே தீர்த்துக்கொள்ளும். ஆறப்போட்டால் மாற்றம் பிறக்கும்.'

பிரச்சினைகளை இப்படிக் கையாளுபவர்கள் சிலர்.

இன்றைய முதல் வாசகத்தில் நம்பிக்கையாளர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். புதிய நம்பிக்கையை எற்றுக்கொண்ட புறவனித்தார், யூதர்கள் போல விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும். அதாவது, ஒருவர் யூதராக மாறினால்தான் கிறிஸ்தவராக மாற முடியும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது. 

இதைச் சொன்னவர்களுக்கும் பவுலும் பர்னபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. ஏனெனில், பவுலுக்கும் பர்னபாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இவர்கள் இருவருமே தாராள உள்ளத்தினர். தங்களுடைய பார்வையை விரித்துப் பார்ப்பவர்கள். ஆக, உடலின் ஒரு உறுப்புச் சிதைவு இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வாழ்வில் நாம் இப்படி இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். 'இதுல என்ன இருக்கு!' என்று கேட்கின்றனர் பவுலும் பர்னபாவும்.

குழப்பம் நீடிக்கவே உடனடியாக அவர்கள் எருசலேம் பயணம் செய்து இப்பிரச்சினையை திருத்தூதர்கள் மற்றும் மூப்பர்களிடம் கொண்டு செல்கின்றனர். அதாவது, தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க நேரம் எடுத்து, சிரமம் எடுத்துப் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஆக, தாங்களாகவே தீர்த்தாலன்றி பிரச்சினை தீராது என்பது ஒரு பக்கம். அதே வேளையில், தாங்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதால் பிரச்சினையை உடடினயாக தங்களைவிட மேலிடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.

இங்கே இவர்களுடைய பெருந்தன்மையையும் கவனிக்க வேண்டும். 'நான்தான் நற்செய்தி அறிவித்தேன். நான்தான் புதிய நம்பிக்கையை ஊட்டினேன். எனவே நான்தான் இவர்களின் தலைவர்' என்று உரிமை கொண்டாடாமல், தங்கள் பணியிலிருக்கும் பலனிலிருந்து ஒதுங்கி நிற்கின்றனர். நற்செய்தி அறிவித்தலில் உள்ள கடமையைச் செய்தார்களே தவிர, அதில் உள்ள உரிமையைக் கொண்டாடவில்லை.

பிரச்சினை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தங்கள் நம்பிக்கையாளர்கள் தேவையற்ற பிரச்சினைகள் என்னும் சுமைகளைச் சுமக்கக் கூடாது என்பதற்காக, சுமைகளைச் சுமக்க திருத்தூதர்கள் முன்வருகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 15:1-8), திராட்சைக் கொடி - கிளை உருவகம் தருகிறார் இயேசு. தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் கிளையை சுமையாகப் பார்ப்பதில்லை கொடி. 

ஆக, இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் எப்படி கையாளுகிறோம்?

பிரச்சினை மற்றவர்களுக்கு என்று நினைக்கும்போது அதை ஏற்கும் பொறுப்புணர்வு நமக்கு இருக்கிறதா?

Monday, May 20, 2019

உலகம் தரும் அமைதி

இன்றைய (21 மே 2019) நற்செய்தி (யோவா 14:27-31)

உலகம் தரும் அமைதி

ஜென் தியானத்தில் 'நோ தாட் மெடிடேஷன்' அல்லது 'சேஸிங் தெ தாட்ஸ் மெடிடேஷன்' என்று ஒரு தியான முறை உண்டு. அதாவது, உள்ளத்தில் ஒரு எண்ணம் உதித்தவுடன் அது என்ன என்பதை அறிவது. நாம் அறிய முற்படும்போது அது மறைந்துவிடும். இத்தியான முறையின் நோக்கம் நம் மூளையை அமைதிப்படுத்துவது. நம் மூளை சதா குரங்கு மாதிரி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டிருக்கும். நாம் கொள்ளும் சந்தேகம், அச்சம், விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை அனைத்தும் நம் மூளையில் நடக்கின்றன. இதில் விந்தை என்னவென்றால் மூளை நம்மை ஏமாற்றிவிடும். ஆக, நம் எண்ணங்களை நாம் நம்பவே கூடாது.

எப்படி?

இன்று நான் என்னுடைய பைக்கை எடுத்து வெளியூர் செல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம். 'அவ்ளோ தூரம் பைக்கா? வேண்டாம்,' 'உன்னால் ஓட்ட முடியாது,' 'நீ யார்மேலாவது இடித்துவிடுவாய்' என்று மனதில் எண்ணங்கள் எழ ஆரம்பிக்கும். இவ்வெண்ணங்கள் அச்சத்தை உருவாக்கும். ஆனால், சாலை வெறிச்சோடி இருக்கிறது. வானிலை இதமாக இருக்கிறது. மூளை அப்படியே எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்: 'நல்ல வேளை பைக்கில் வந்தாய். இல்லை என்றால் எவ்வளவு நேர விரயம். சாலை ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது' - இப்படி நிறையச் சொல்லும். இவையும் மூளையின் எண்ணங்களே. ஆக, வெறும் 30 நிமிடங்களுக்குள் நம்மை நம்ப வைக்கும் அளவிற்கு எண்ணங்களை மாற்றிக்கொள்ளத் திறமை பெற்றது நம் மூளை. ஆக, மூளையை நம்புதல் ஆபத்து.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 14:27-31), இயேசு தன் சீடர்களிடம், 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்கிறார்.

அது என்ன உலகம் தரும் அமைதி?

இன்று உலகம் நமக்கு அமைதி தரவே செய்கிறது. நீண்ட பயணத்திற்குப் பிறகு நாம் போடும் குட்டித் தூக்கம், ரொம்ப கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியபின் பார்க்கப் போகும் சினிமா, ஐந்து நாள்கள் வேலை செய்துவிட்டு இரண்டு நாள்கள் ஓய்வு, நண்பர்களின் வருகை, சுற்றுலா, திருப்பயணம் இவை எல்லாமே நமக்கு அமைதியைத் தரத்தான் செய்கின்றன. வேளாங்கண்ணி போகிறோம். ஆலயத்தில் அமர்கிறோம். மனம் அமைதி கொள்கிறது. கடற்கரையில் காலாற நடந்து மயங்கும் மாலையில் சற்றுநேரம் அமர்கிறோம். மனம் அமைதி கொள்கிறது.

இவ்வமைதி எல்லாமே உடல் அல்லது மூளை சார்ந்தவை. மேலும், இவை மிகக் குறுகியவை. கடற்கரை தரும் அமைதி கடற்கரையில் மட்டும்தான். கடற்கரையின் அமைதி நம் அறைக்குள் வந்தவுடன், 'என்ன ஒரு பிசுபிசுப்பு' என்று சலித்துவிடுகிறது. ஆலயம் தரும் அமைதி அது திறந்திருக்கும் வரைதான்.

ஆக, உலகம் தரும் அமைதியில், அமைதியைப் பெற நாம் ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும், இது மிகக் குறுகியது. சில நேரங்களில் இதற்கு நாம் பெரிய விலையையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இயேசு இதற்கு மாற்றாக ஒருவகை அமைதியை முன்வைக்கிறார். அது ஆன்மா சார்ந்தது. இது யாரையும் சாராதது. இவ்வமைதி நம் உடல் அல்லது மூளையையும் தாண்டியது. உடல் மற்றும் மூளை சார்ந்தவற்றைக் கடக்கும்போது, நம் சார்புநிலையைக் கடக்கும்போதே இவ்வகை அமைதி சாத்தியமாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:19-28), திருத்தூதர்கள் பவுலும் பர்னபாவும் தாங்கள் எவ்வளவு துயருற்றாலும் எப்படி தொடர்ந்து முன்னேற முடிந்தது. அவர்கள் தங்கள் துயரோடு தங்களை இணைத்துக்கொள்ளாமல், அல்லது தங்கள் நிகழ்வுகள்மேல் சார்ந்திராமல் அவற்றைக் கடந்து நிற்கிறார்கள்.

இதுவே இயேசு தரும் அமைதி.

இதை நாம் பெற எங்கும் தேவையில்லை. இப்போதே உடனே கிடைக்கும். நம் உடலைவிட்டு, நம் எண்ணங்களைவிட்டு நாம் ஒதுங்கும்போது.

Sunday, May 19, 2019

தெய்வங்களே மனித உருவில்

இன்றைய (20 மே 2019) முதல் வாசகம் (திப 14:5-18)

தெய்வங்களே மனித உருவில்

'கோவிலில் ஆடு, கோழி பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது' என்று தமிழகத்தில் ஒரு சட்டம் இருந்தாலும், இன்னும் கோவில்கள் இவற்றைப் பலியிடுவது நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. இன்று காலை 'மதுரை பாண்டி கோயில்' பகுதியில் ஒரு பெரிய கிடாயைப் பலியிட்டு அதன் இரத்தம் வடிய வடிய சாலையில் கொண்டு சென்றனர். சிறு வயதில் எங்க ஊர் அம்மன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிடும் நிகழ்வை நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன். அம்மன் என்ற தெய்வத்திற்கே இவர்கள் பலியிடுகிறார்கள். பலியிடப்பட்டதை அம்மன் சாப்பிடுவதில்லை என்றாலும், இவர்கள் அம்மன் முன்பாக பலியிடும் அப்பொருள் அம்மனுக்கே படைக்கப்பட்டதாக நம்புகின்றனர்.

பலி ஏன் கொடுக்கப்படுகிறது?

தன்னிடம் உயிரோடு இருந்த ஓர் ஆட்டின் மதிப்பை பக்தர் அம்மன் முன் இழக்கின்றார். அதாவது, தாழ்வானது ஒன்றை இழந்து மேலானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய இலக்காக இருக்கிறது.

மேலும், பலி நன்றியின் அடையாளமாகவும் செலுத்தப்படுகிறது - ஒருவர் பெற்றுக்கொண்ட ஒரு கொடைக்காக.

இன்றைய முதல் வாசகத்தில் இக்கோனியா என்ற ஊரிலிருந்து துரத்தப்படுகின்ற பவுலும் பர்னபாவும் லிஸ்திராவுக்கு வருகின்றனர். வந்த இடத்தில் கால் வழங்காத ஒருவர் இருக்கிறார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப் பார்த்து உரத்த குரலில், 'நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்!' நிற்கச் சொன்னவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்குகிறார். பவுல் செய்ததைக் கண்ட கூட்டத்தினர் தங்கள் மொழியில், 'தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று சொல்லி, பர்னபாவை 'சேயுசு' கடவுள் என்றும், பவுலை 'எர்மேசு' கடவுள் ('பேச்சுக்கலையின் கடவுள்') என்றும் அழைத்தனர். மேலும், சேயுசு கோயில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கொண்டு வந்து அவர்களுக்குப் பலியிட விரும்பினர்.

திருத்தூதர்கள் உடனடியாக குறுக்கிட்டு, 'நாங்களும் மனிதர்களே' என்றே சொல்லி அவர்களுக்கு மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றனர்.

திருத்தூதர்களின் ஒரு நல்ல பண்பை இங்கே பார்க்கிறோம். அதாவது, மக்கள் தங்களைப் புகழ்ந்து பேசியதாலும், தங்களைக் கடவுளுக்கு நிகர் என்று கருதியதாலும் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக, மக்களைக் கடிந்துகொள்கின்றனர். திருத்தூதுப்பணிக்கு பெரிய சவால் 'புகழ்ச்சி.'

திருத்தூதர்கள் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர்கள்.

ஏனெனில், தெய்வங்கள் என்று வணங்கிய மக்கள் கொஞ்ச நேரத்தில் திருத்தூதர்கள்மேல் கல்லெறியத் துணிகின்றனர். அவர்கள் இறந்துவிட்டார்கள் என நினைக்கும் அளவிற்குக் கல்லால் எறிகின்றனர்.

'கூட்ட மனநிலை' என்பது இதுதான். எந்த நேரத்தில் கூட்டம் எப்படி மாறும் என்றே சொல்ல முடியாது.

ஆனால், திருத்தூதர்கள் மனநிலை ஒன்றுபோல இருக்கிறது.

கல்லால் எறியப்பட்ட பவுல் ஓய்ந்துவிடவில்லை. எழுந்து நகருக்குள் செல்கின்றார்.

எந்த அளவிற்கு அவர்கள் கிறிஸ்து அனுபவத்தால் பற்றி எரிந்திருக்கிறார்கள்!

அகநானூhற்றில் காதலின்-காதலி படலத்தில், காதலியின் மேல் கொண்ட காதலுக்காக காதலன் எந்தவித அவமானத்தையும் ஏற்பான் என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் உண்டு. நம் விவிலியத்தின் இனிமைமிகு பாடலிலும், 'பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது. வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம். ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி' (காண். 8:2) என்று இருக்கிறது. அன்பு அவமானத்தையும் ஏற்றுக்கொள்ள உறுதி தருகிறது.

கிறிஸ்துவின்மேல் கொண்ட அன்பிற்காய் திருத்தூதர்கள் அவமானத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆக, நம் நிலை என்ன என்பதை அறிந்து, போற்றலையும் தூற்றலையும் மையப்படுத்தாத சமமான மனநிலை நாம் கொண்டிருந்தால் எத்துணை நலம்!

Friday, May 17, 2019

கால்களில் படிந்திருந்த தூசி

இன்றைய (18 மே 2019) முதல் வாசகம் (திப 13:44-52)

கால்களில் படிந்திருந்த தூசி

யூட்யூபில் திரு. மது பாஸ்கரன் என்பவர் 'மோட்டிவேஷன் தமிழ்' என்ற ஒரு சேனல் வைத்திருக்கிறார். நான் விரும்பிப் பார்க்கும் சில சேனல்களில் இதுவும் ஒன்று. 'வெற்றியாளர்களின் ஐந்து பண்புகள்' என்று சில மாதங்களுக்கு முன் ஒரு காணொளி வெளியிட்டார்:

(அ) வெற்றியாளர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள் - ஏனெனில், அடுத்தவருக்கு உதவும்போதுதான் நாம் நிறைவு பெறுகிறோம். நம்மில் இருக்கும் நற்குணம், பணம், நேரம், ஆற்றல் மற்றவருக்காக செலவிடப்படும்போது நிறைவு பெறுகிறது.

(ஆ) வெற்றியாளர்கள் தோல்விகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள் - தோல்வியை நேருக்கு நேராக எதிர்கொள்வார்கள். தோல்வி என்பது நாம் எதிர்கொள்ளும் துயரம் அல்லது இன்னலாகக் கூட இருக்கலாம்.

(இ) வெற்றியாளர்கள் புதிய முயற்சிகளை எடுப்பர் - ஒன்று தவறினாலும், இன்னொன்றைத் துணிந்து எடுப்பர்.

(ஈ) வெற்றியாளர்கள் தங்கள் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வர் - அது குடும்ப உறவாக இருக்கலாம், திருமண உறவாக இருக்கலாம், நட்பு வட்டமாக இருக்கலாம். இருக்கிற உணர்வுகளை இறுக்கமாக்கவும், இல்லாத உறவுகளை உருவாக்கவும் செய்வர்.

(உ) வெற்றியாளர்கள் நிதிமேலாண்மையை அறிந்திருப்பர் - ஏனெனில், நிதி என்பது எண்கள் சார்ந்தது. எண்கள் சார்ந்த ஒன்றை மேலாண்மை செய்யத்தெரிந்த ஒருவரே எண்கள் சாராத உணர்வுகளை மேலாண்மை செய்ய முடியும்.

நிற்க.

இந்தப் பண்புகள் நம்மிடம் இருந்தால் நம்மையே தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய முதல் வாசகம் கடந்த வார ஞாயிறன்று நாம் வாசித்த முதல் வாசகமே. திருத்தூதர்கள் பவுலும் பர்னபாவும் தங்களுடைய முதல் தூதுரைப் பயணம் ஏறக்குறைய நிறைவுறும் நேரம் யூதர்களின் பொறாமையால் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். அதாவது, அவர்களுடைய பணி தோல்வியில் முடிகிறது.

ஆனாலும், அவர்கள் தோல்வியில் துவண்டுவிடாமல், புதிய முயற்சியாக, புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் புறப்படுகின்றனர்.

இவர்களும் வெற்றியாளர்கள்.

இந்த வெற்றியாளர்கள் நமக்கு இன்னொரு பண்பை இன்று கற்றுத் தருகிறார்கள்: 'கால்களில் படிந்திருக்கும் தூசியை உதறுவது.'

'கட்டிலின் சுத்தம்' பற்றி எங்களுக்கு குருமடத்தில் வகுப்பெடுத்த அருள்தந்தை, கட்டிலுக்குக் கீழே ஒரு கால்மிதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இரவு தூங்குமுன் கால்களை நன்றாக வெதுவெதுப்பான அல்லது இளஞ்சூடான தண்ணீரில் கழுவிவிட்டு, நன்றாகத் துடைத்துவிட்டு, கட்டிலுக்கு அருகில் வந்த, அக்கால்மிதியில் மீண்டும் துடைத்துவிட்டு தூங்க வேண்டும் என்றார். பல காரணங்கள்: சுடுதண்ணீரில் கால் நனைத்துத் துடைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும். மேலும், காலில் உள்ள நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். காலில் உள்ள தூசி மற்றும் கிருமிகள் அகலும். படுக்கை சுத்தமாகும். அவரைப் பொறுத்தவரையில் அசுத்தமான படுக்கை அசுத்தாமான உணர்வுகளைக் கொண்டுவரும்.

இயேசுவும் தன் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்பும்போது, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், காலில் ஒட்டியிருக்கும் தூசியை அகற்றுமாறு கூறுகிறார். தூசியை அகற்றுவது என்பது நம்முடைய கடந்த காலத்தை, காயத்தை, குழப்பத்தை, வெறுப்பை அகற்றுவது என்றே நினைக்கிறேன். அவற்றை நம் கால்களில் ஏந்திக்கொண்டே அடுத்த இடங்களுக்குச் செல்லும்போது அவை நம்மோடு ஒட்டிக்கொண்டே வரும். தூசி என்றால் பரவாயில்லை. சில நேரங்களில் செருப்பில் ஒட்டிய எச்சில், பப்ள் கம், வேப்பம் பழம், சாணம், பறவைகளின் எச்சம், சகதி இன்னும் நிறைய அளெகரியங்களை ஏற்படுத்தும். செருப்பில் ஒட்டியிருந்தாலே நமக்கு அருவருப்பாக இருக்கிறது என்றால், காலில் ஒட்டினால் என்ன ஆகும்?

ஆக, ஒவ்வொரு நொடியையும் கடக்கும் நாம் அந்த நொடியின் தூசியை அந்த நொடியிலே விட்டுவிட்டால், அடுத்த நொடி தூசி படாமல் காக்கப்படும்.
பவுலும் பர்னபாவும் நீங்களும் நானும் வெற்றியாளர்களே!


Thursday, May 16, 2019

இடமும் வழியும்

இன்றைய (17 மே 2019) நற்செய்தி (யோவா 14:1-6)

இடமும் வழியும்

மதுரை விரகனூரில் இருந்த இளங்குருமடத்தில் நான் கெஸ்ட் மாஸ்டராக இருந்தேன். கெஸ்ட் மாஸ்டராக இருக்கும் வேலை எனக்கு ரொம்ப பிடித்தது. என்னுடைய வேலை விருந்தினர் அறையைத் தயார் செய்வது: கூட்டிப் பெருக்கி, தண்ணீர் விட்டுக் கழுவி, கட்டில், மேசை, நாற்காலி துடைத்து, புதிய படுக்கை விரித்து, தலையணை மாற்றி, துண்டு வைத்து, கழிவறையைச் சுத்தம் செய்து, சாம்பிள் சோப், குட்டி எண்ணெய் டப்பா, சீப்பு வைப்பது, வாளியில் தண்ணீர் பிடித்து வைப்பது. மேலும், விருந்தினர் வந்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு அறைக்குப் போவது, அறையைத் திறந்துவிடுவது, தண்ணீர் எடுத்து வருவது, குருமடத்தின் சாப்பாடு மற்றும் செப நேரங்களைச் சொல்வது.

அறையைத் தயாரிக்கும் நாம் இதே வேலைகளைச் செய்திருப்போம்.

அறையைத் தயாரிக்க நாம் ஏன் அக்கறை காட்டுகிறோம்?

ஒன்று, தாராள உள்ளம். அதாவது, நம்மிடம் இடம் இருந்தாலும் அதை அடுத்தவரோடு பகிரத் தயாராக இருக்கும் தாராள உள்ளம்.

இரண்டு, துன்பங்கள் ஏற்றல். அறையை ஒதுக்குவது என்பது துன்பமானது. அங்கு உள்ளவற்றை வேறு ஒரு அறைக்கு மாற்ற வேண்டும். அந்த அறை அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். விருந்தினர் வந்து போகும் வரை சில அசௌகரியங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை வரும். அவர் லைட்டை அப்படியே போட்டுவிடவார். இப்படி நிறைய இருக்கும். இவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று, மதித்தல். நாம் மதிப்புக்குரியவர் அல்லது அன்புக்குரியவர் என்று கருதுபவருக்கே நம் வீட்டில் தங்க இடம் தருகிறோம்.

நான்கு, காத்திருத்தல். அறை தயாராகும் நேரம் தொடங்கி விருந்தினர் வரும்வரை நம் உள்ளத்தில் ஒரு காத்திருத்தலும் எதிர்நோக்கும் இருக்கும். வருபவருக்கு இந்த இடம் பிடிக்க வேண்டுமே என்று நாம் என்னவெல்லாமோ செய்வோம்.

இந்த நான்கு செயல்களையும் தான் தன் சீடர்களுக்குச் செய்வதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்கிறார் இயேசு: 'என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துச் செல்வேன்.' ஆக, முழுக்க முழுக்க ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யச் செல்கிறார் இயேசு. ஏன் இப்படிச் செய்கிறார்? தான் இருக்கும் இடத்தில் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்ற ஆசைதான். வேறொன்றுமில்லை. தான் தந்தையிடம் நெருக்கமாக இருப்பதுபோல தன்னுடன் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்று முனைகின்றார்.

இரண்டாவதாக, அந்த இடத்திற்குச் செல்லும் வழியுமாக தன்னையே முன்வைக்கிறார்: 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே'

ஆக, அவரிடம் (தந்தையிடம்) செல்வதற்கு அவர் (மகன்) வழியாகவே செல்ல வேண்டும்.

இவ்வார்த்தைகளை நாம் எப்படி வாழ்வது?

'இடம் ஏற்பாடு செய்வது' என்று இயேசு சொல்வதை நாம் மோட்சம் அல்லது விண்ணகம் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது வெறும் சாதாரணமாக அவர் நமக்குத் தயாரிக்கும் ஒரு நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் அவரை வழியாக எடுத்துக்கொள்வது.

'வழி' என்பதை 'தீர்வு,' 'துணை' என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம். நம் வாழ்வின் கதவுகள் தாமாக அடைபடும் நேரங்களில் எல்லாம் வழியாக அவர் நின்றால் அவரின் உறைவிடத்திற்குள் நாமும் நுழையலாம்.


Wednesday, May 15, 2019

உங்களுள் யாராவது

இன்றைய (16 மே 2019) முதல் வாசகம் (திப 13:13-25)

உங்களுள் யாராவது

நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் நடித்த 'உலகம் சிரிக்கிறது' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. 'சீட்டு ஆடாதீர்கள்' என்று புத்தகம் போட்டு விற்பனை செய்த ஒருவனை ஊரார் சேர்ந்து அடிப்பர். 'ஏன் அடிக்கிறீர்கள்?' என்று நடிகவேள் கேட்க, 'சூதாடாதீர்கள் என்று புத்தகம் விற்கும் இவனே சூதாடுகிறான். அதான் அடிக்கிறோம்!' என்பார்கள். அவர் சொல்வார், 'நல்ல விஷயத்தை சொல்றதுக்கே இப்போ உலகத்துல நாலஞ்சு பேருதான் இருக்காங்க. அவங்களையும் அடிச்சு கொன்னுடுங்கடா! ஒருத்தன் அறிவுரை சொன்னா அவன் யாரு என்னான்னு பார்க்காத. அவன் சொல்றது உனக்குப் புடிச்சிருந்தா எடுத்துக்கோ. அல்லது விட்டுரு. சூதாட்டத்தில் தான் ஏமாறுவதுபோல யாரும் ஏமாறக்கூடாதுனு அவன் அறிவுரை சொல்றானே அதை எடுத்துக்கோ. அவன் விளையாடுறானா இல்லையானு பாக்காத. நீ அவனை மதிக்கிற என்றால் அவனுடைய புத்தகத்தை வாங்கி அவனை ஊக்குவி!'

இப்படிச் சொல்லிவிட்டு வழிநடப்பார்.

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகானதொரு நிகழ்வு நடக்கிறது. பவுல் தன் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகிறார். பவுலும், பர்னபாவும், அவரோடு இருந்தவர்களும் பெருகை நகர் வந்து, அங்கிருந்து பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா வருகின்றனர். ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு 'அமர்ந்திருக்கிறார்கள்.'

இங்கே ஒரு விடயம்.

'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் போய் நிற்கவில்லை. மாறாக, கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.

'கூட்டத்தோடு கூட்டமாக அமர' நிறைய தாழ்ச்சியும் எளிமையும் அவசியம்.

'நல்லவனாய் இருப்பதன் கஷ்டம்' (ஆங்கிலத்தில்) என்ற நூலில் ஆசிரியர் குருசரன் தாஸ் ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார். அவர் மருத்துவமனை ஒன்றிற்கு உடல் பரிசோதனைக்குச் செல்கிறார். 'உங்கள் பெயர் என்ன?' என்று அங்கிருந்த பெண் கேட்க, இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இண்டியா - பக்கம் 14ஐ பார்' என்கிறார் இவர். அந்தப் பெண் பக்கத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, இவர் எழுதிய கட்டுரையின் கீழ் இருந்த பெயரை நோட்டில் பதிவு செய்துவிட்டு, சின்னப் புன்முறுவலோடு, 'அங்கே போய் உட்காருங்க! உங்க நம்பர் வரும்போது கூப்பிடுறேன்!' என்றார் பெண்.

'என் வாழ்வில் இனி இவளை நான் பார்க்க மாட்டேன் என்று தெரிந்தும், இவளிடம் நான் யார் என்று காட்டவும், இவளின் அப்ரூவலைப் பெறவும் என்னைத் தூண்டியது எது?' என்று அவரே கேட்டுவிட்டு, நம் எல்லாரிடமும், 'நான் ஒரு முக்கியமானவன்-ள்' என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுதான், 'நம்மை எல்லாரும் பார்க்க வேண்டும்' என்று எண்ணத் தூண்டுகிறது என்கிறார்.

ஆனால், பவுலிடம் இப்படி ஒரு உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக அமர்கின்றார்.

கூட்டத்தில் நாம் பேசாமல் அமர்ந்தாலே வாழ்வில் பாதிப் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறேன்.

தொடர்ந்து, அமர்ந்திருந்த திருத்தூதர்களிடம் ஆளனுப்புகின்ற தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்கிறார்.

இன்று யாராவது என்னிடம் ஆளனுப்பி, 'ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறலாம்' என்று சொன்னால், நான் என்ன சொல்வேன்? நான் தயாராக இருக்கிறேனா? வாழ்வில் நாம் கற்கும் ஒவ்வொரு பாடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். அது சிறிய பஸ் பயணத்திலிருந்து பெரிய இன்வெஸ்ட்மென்ட் முடிவாகக் கூட இருக்கலாம். இன்னொன்று, பிறர் கேட்காமல் நாம் எந்த அறிவுரையும் கூறக் கூடாது. அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்!

என்னுடைய நண்பர் சில நாள்களுக்கு முன், 'உடல் வலி. சளி. தும்மல்' என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் போட்டார். உடனே நிறைய அறிவுரைகள் அவருக்கு வந்து சேர்ந்தன. 'இதைக் குடியுங்கள். அதைச் செய்யுங்கள்.' மனித மூளை, குறிப்பாக ஆண்களின் மூளை, உடனே தீர்வைத் தேடுகிறது. கொஞ்சம் பொறுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இல்லையா?

இறுதியாக, பவுல் உடனடியாக தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்போதும் தயார்நிலையில் இருக்கிற ஒருவரே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிக அழகான உரையையும் ஆற்றுகிறார் பவுல். பவுலின் தயார்நிலையும் அறிவும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எபிரேயம் பேசுகின்ற ஒருவர் கிரேக்க மொழியில், புதிய மக்கள் நடுவில், புதிய கருத்து ஒன்றைப் பேசுவதற்கு நிறைய துணிச்சல் தேவைதானே!


Tuesday, May 14, 2019

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய (15 மே 2019) முதல் வாசகம் (திப 12:24-13:5)

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய முதல் வாசகத்தில், தூய ஆவியார் திருச்சபையாரிடம், 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கிவையுங்கள்' என்று கூறுகிறார்.

இரண்டு விடயங்கள் இங்கே கவனிக்க வேண்டியவை.

ஒன்று, தூய ஆவியாரின் குரலைக் கேட்பது.

தொடக்கத் திருஅவையில் உள்ளவர்களால் எப்படி தூய ஆவியாரின் குரலைக் கேட்க முடிந்தது? அல்லது மற்ற குரல்களிலிருந்து தூய ஆவியாரின் குரலை எப்படி வேறுபடுத்த முடிந்தது. ரொம்ப எளிது. நாம் யாருக்கு நெருக்கமாக இருக்கிறோமோ அவர்களுடைய குரலை நம்மால் பிரித்து அறிய முடிகிறது. அறிமுகம் இல்லாத அனைத்துக் குரல்களும் நமக்கு வெறும் சத்தமே. ஆக, ஆவியாரோடு கொண்டுள்ள நெருக்கம் ஆவியாரின் குரலைக் கண்டுகொள்ள நம்மைத் தயார்செய்கிறது.

இரண்டு, ஒதுக்கி வையுங்கள்.

மகாபாரதத்தில், போருக்கு யாரைத் தலைவராக நிர்ணயிப்பது என்று கௌரவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, தன் பெயரை துர்யோதணன் முன்வைப்பார் என்று கர்ணன் நினைத்துக்கொண்டே இருப்பார். ஆனால், பீஷ்மரின் பெயர் முன்வைக்கப்படும். தன் பெயர் முன்மொழியப்படாததால் கோபப்பட்டு, கோபத்தை சோகமாக அடக்கிக்கொள்வார் கர்ணன். ஆனால், போரின் நடுவில்தான் துர்யோதணன் சொல்வார், 'கர்ணா! உன்னை நான் இந்த நேரத்திற்காக ஒதுக்கி வைத்தேன். எல்லாரும் என்னைவிட்டுப் போகும் நிலையில் நீ என்னோடு இருக்க உன்னை நான் ஒதுக்கி வைத்தேன்' என்பார். அப்போது, கர்ணன் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போவார்.

உப்புமாவில் கறிவேப்பிலை, வெண்பொங்கலில் மிளகு போல ஒதுக்கிவைக்கப்படுவது நமக்கு வருத்தம் தரும். ஆனால், திருமணத்திற்கான பட்டாடை, நறுமணத் தைலம் என்று நாம் ரிசர்வ் செய்யப்படுவது நம் மதிப்பைக் கூட்டும். கடவுள் திருத்தூதர்களின் மதிப்பைக் கூட்டுகிறார்.

கடவுள் நம்மையும் ஒவ்வொரு பணிக்காக ஒதுக்கி வைத்திருக்கின்றார். 'அது எப்போது? எங்கே?' என்பது சில நேரங்களில் நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், 'இதோ இப்போது! இதோ இங்கே!' என்று அவர் சொல்லும் அந்த நேரம் நாம் மிகவே ஆச்சர்யப்படுவோம்.

Monday, May 13, 2019

சீட்டுக் குலுக்கினார்கள்

இன்றைய (14 மே 2019) திருநாள் (புனித மத்தியா)

சீட்டுக் குலுக்கினார்கள்

இன்று நாம் திருத்தூதரான புனித மத்தியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். தம் சீடர்களிடமிருந்து இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். இப்பன்னிவருள் யூதாசு இஸ்காரியோத்து 'திருத்தொண்டையும் திருத்தூதுப்பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்து விட்டான்.' இந்த வெற்றிடத்தை அடைக்க மத்தியா வருகிறார்.

இவர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. பர்சபா மற்றும் மத்தியா என்னும் இருவரைத் திருத்தூதர்கள்முன் மக்கள் கொண்டுவர, 'அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்' என்று இறைவனிடம் வேண்டி, அவர்கள் சீட்டுக்குலுக்குகிறார்கள்.

சீட்டு மத்தியா பெயருக்கு விழுகின்றது. அதாவது, இறைவனின் திருவுளம் மத்தியாவைத் தெரிந்தெடுக்கிறது. இவ்வாறாக, பன்னிரு திருத்தூதர்கள் என்னும் எண்ணிக்கை நிறைவுபெறுகிறது. இதற்குப் பின் வந்த பவுலும் தன்னைப் புறவினத்தாரின் திருத்தூதர் என அழைத்துக்கொள்கிறார். அங்கே பவுலுக்கு அழைப்பு அவர் தாயின் கருவறையில் இருந்தபோதும், தமஸ்கு நகர் செல்லும்போதும், பர்னபா வழியாகவும் என மூன்று முறை நிகழ்கிறது.

இரண்டு விடயங்களை இன்று சிந்திப்போம்.

அ. யூதாசால் ஏற்பட்ட வெற்றிடம்

யூதாசு, 'திருத்தொண்டையும் திருத்தூதுப்பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா. இங்கே திருத்தூதர்கள் அல்லது அருள்பணி நிலைக்கு அழைக்கப்பட்டவர்கள் கொண்டிருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்புணர்வை லூக்கா அடிக்கோடிடுகிறார். எப்படி?

யூதாசைப் பொறுத்தவரையில் 'தனக்கரிய இடம்' என்பது 'தற்கொலை செய்து கொண்டு இறப்பது.' அது எப்போது நடக்கிறது? வெறும் கயிற்றில் தொங்குவதாலா? இல்லை. திருத்தொண்டை, திருத்தூதுப்பணியை விட்டு அகலும் ஒவ்வொரு நொடியும் அது நடக்கிறது. அதாவது, தன் பணியைச் செய்ய வேண்டிய யூதாசு செய்யத் தவறுகிறார்.

இன்றைய நாளில் அருள்பணி நிலையில் இருக்கும் நான் கேட்க வேண்டிய கேள்வியும் இதுதான்: 'என் திருத்தொண்டையும் அருள்பணியையும் விட்டு அகல்கிறேனா?'

ஆ. மத்தியாவின் பெயருக்குச் சீட்டு

மத்தியா இதை தன் அதிர்ஷ்டம் என்று எடுத்தாரா அல்லது துரதிர்ஷ்டம் என நினைத்தாரா எனத் தெரியவில்லை. சீட்டு நம் பெயருக்கு விழுவது எல்லா நேரமும் நமக்கு மகிழ்வைத் தராது. பொங்கல் விழாவில் குலுக்கலில் பரிசு விழுந்து, நம் பெயரோ அல்லது நம் எண்ணோ தெரிவு செய்யப்பட்டு நமக்கு ஒரு கார் வழங்கப்பட்டால் அது மகிழ்வைத் தருகிறது. ஆனால், ஜெர்மானிய நாசி வதைமுகாமில், ஒருவரின் பெயருக்கு சீட்டு விழுந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்போது அது அவருக்குக் கண்டிப்பாக மகிழ்வைத் தராது.

மற்ற திருத்தூதர்களைப் பொறுத்தவரையில் இது இறைவனின் திருவுளம்.

ஆனால், மத்தியாதான் இதைத் தெரிவு செய்ய வேண்டும். 'இது பரிசுச் சீட்டா?' அல்லது 'மரணத்திற்கான நுழைவுச் சீட்டா?' முத்தியா இதைப் பரிசுச் சீட்டாகவே எண்ணியிருப்பார்.

நம் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் சீட்டு நம் பெயருக்கு விழுந்துகொண்டே இருக்கிறது.

அவசரமாக வெளியூர் செல்ல வேண்டும். திடீரென்று ஒரு கார் சவாரி கிடைக்கிறது. சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகிறது. நாம் பார்க்கும் மருத்துவர் அன்றுதான் நம் ஊருக்கு வருகிறார். சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

பணத் தேவை இருக்கிறது. நாம் தற்செயலாக கைப்பையைத் திறக்க அதில் நாம் எப்போதோ மறந்து வைத்த பணம் இருக்கிறது. சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

நிறையப் பேர் நம்முடன் வேலை செய்கிறார்கள். நமக்கு பணி உயர்வு கிடைக்கிறது. சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

நம் பெண்ணுக்கு வரன் தேடுவோம். திடீரென்று ஒருவர் மணமகனாக வந்து சேர்வார். சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

இப்படி, ஒவ்வொரு நாளும் சீட்டு நம் பெயருக்கு விழுகிறது. ஆனால், இதை நாம் 'பரிசுச் சீட்டாக' நினைத்து மகிழ்கிறோமா? அல்லது 'மரணச் சீட்டாக' நினைத்து வருந்துகிறோமா? என்பதுதான் கேள்வி.

சேர்ந்து செபிக்க வந்த மத்தியா திருத்தூதராக மாறுகிறார்.

சீட்டு அவர் பெயருக்கு விழுந்தது.

எதிர்பாராத அற்புதங்களில் ஆச்சர்யங்களில் சீட்டு நம் பெயருக்கும் விழுகிறது. இதை அறிதல் நலம்!


Sunday, May 12, 2019

தீட்டு

இன்றைய (13 மே 2019) முதல் வாசகம் (திப 11:1-10)

தீட்டு

'தூய்மை-தீட்டு' பற்றிய விவாதம் மனுக்குலம் தோன்றியது முதல் இருக்கிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகப் பொதுமறை சொன்னாலும், பிறப்பால் உயர்வு-தாழ்வு பாராட்டும் எண்ணம் இன்று வரை நடைமுறையில் இருக்கவே செய்கிறது: ஆண்-பெண், கறுப்பர்-வெள்ளையர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் எனத் தொடங்கி, உணவுப் பழக்கம், மொழி, இனம், நாடு, சமயம், கலாச்சாரம் என அனைத்திலும் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஒரு வட்டத்திற்குள் இருப்போர் அடுத்த வட்டத்திற்குள் இருப்பவரோடு இணைவது இங்கே தடைசெய்யப்படுகிறது.

தொடக்கத் திருஅவையில், 'விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் - செய்யப்படாதவர்கள்' என்ற பாகுபாடு இருப்பதையும், விருத்தசேதனம் செய்யாதவர்கள் தீட்டானவர்கள் என்பதால் அவர்களோடு உணவு அருந்துவது தவறு என்ற கருத்து இருப்பதையும் இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

'நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?' என்று பேதுருவை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டபோது, 'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே' என்று தனக்குச் சொல்லப்பட்டதை விடையாகத் தருகின்றார் பேதுரு.

மேலும், தன்னிடமிருந்த தயக்கத்தை விடுகின்றார்.

திருவிழா ஒன்றில் தப்பாட்டம் ஆடுபவர்கள் தீட்டானவர்கள் என்றும், மேளம் வாசிப்பவர்கள் தூய்மையானவர்கள் என்றும் கருதப்பட்டு, முந்தையவர்கள் ஆலயத்திற்கு வெளியேயும், பிந்தையவர்கள் ஆலயத்திற்கு உள்ளேயும் வைத்து உணவருந்தினர். இரண்டு தோல் கருவிகளும் செய்யப்பட்டது ஒரே வகை மாட்டுத் தோலில்தானே. அப்படி இருக்க அவற்றை வாசிப்பவர்கள் தீட்டானவர்கள்-தூய்மையானவர்கள் என்று பிரிக்கப்படுவது ஏன்?

'கடவுளைத் தடுக்க நான் யார்?' என்று பேதுரு கேட்கின்றார்.

கடவுளைப் போல பார்ப்பவர்கள் தூய்மை-தீட்டு பார்ப்பதில்லை என்று சொல்கிறது இன்றைய முதல் வாசகம்.