Friday, August 31, 2018

பாரும் உம்முடையது

நாளைய (1 செப்டம்பர் 2018) நற்செய்தி (மத் 25:14-30)

பாரும் உம்முடையது

விவிலிய மாதம், மாதாவின் பிறப்பு விழா மாதம் எனப்படும் செப்டம்பர் மாதத்தை நாம் தாலந்து எடுத்துக்காட்டுடன் தொடங்குகிறோம்.

தாலந்து எடுத்துக்காட்டு பல நேரங்களில் 'நம் தாலந்தைப் பெருக்குவது,' அல்லது 'நம் கொடைகளை பெருக்குவது' என்ற பொருளில்தான் விளக்கப்படுகிறது. ஆனால், இது தனிமனிதரின் கொடைகளையோ, அல்லது திறமைகளையோ பற்றியது அல்ல. மாறாக, இது விண்ணரசு பற்றியது. இந்த எடுத்துக்காட்டின் வழியாக விண்ணரசின் மறைபொருள்தான் விளக்கப்படுகிறது.

நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் பணியாளர்களை அழைத்து அவரவர் திறமைக்கு ஏற்ப ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகளைக் கொடுத்துவிட்டு பயணம் செய்கிறார். இவர்கள் யாரிடமும் தாலந்தை வைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லப்படவில்லை.  இருந்தாலும், ஐந்து பெற்றவர் வாணிகம் செய்து ஐந்தும், இரண்டு பெற்றவர் இரண்டும் பெருக்குகின்றனர். அனால், ஒன்று பெற்றவர் நேரே போய் நிலத்தைத் தோண்டி தலைவரின் பணத்தைப் புதைத்து வைக்கிறார். திரும்ப வந்த தலைவர் கணக்கு கேட்கிறார். ஐந்தை ஐந்தாக, இரண்டை இரண்டாகப் பெருக்கியவர்களுக்கு தலைவர் தன் மகிழ்ச்சியில் பங்கு தருகிறார். நம் கதாநாயகர் தண்டிக்கப்படுகிறார்.

மூன்றாம் பணியாளர் எதற்காக தன் பணத்தைப் பெருக்கவில்லை.

தன் தலைவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுவிட்டார் என்ற கோபமா? அல்லது

'நான் உழைத்து இவருக்குக் கொடுக்க, இவர் கொஞ்சம் பிச்சை போடுவார், நான் வாங்கிக்கொள்ள வேண்டுமா?' என்ற ஆதங்கமா?

மூன்றாம் பணியாளர் தலைவருக்குக் கெடுதல் ஒன்றும் செய்யவில்லையே? தாலந்தை செலவழிக்கவோ, அல்லது அழித்துவிடவோ இல்லையே? தான் பெற்றதை அப்படியே கொடுத்துவிட்டாரே!

'வட்டிக்கடைக்காரரிடம் கொடுக்கச் சொல்லி தலைவர் சொல்வது' - அவரை ஒரு முதலாளித்துவ நபராகவே நமக்கு முன்வைக்கிறது. ஏன் எல்லாரும் தாலந்தைப் பெருக்கியே ஆகணுமா? அப்படி என்ன கட்டாயம்? 'இன்னும் வேணும், இன்னும் வேணும்' என்று சொல்வது முதலாளித்துவ மனநிலை இல்லையா?

மேலும், 'விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர், தூவாத இடத்தில் சேகரிப்பவர்' என்ற வார்த்தைகளில் தலைவரின் இயல்பு நமக்குச் சொல்லப்படுகிறது. அதாவது, தான் நினைப்பதை செய்பவர் தலைவர். இப்படிப்பட்ட தலைவருக்குரியதை அப்படியே கொடுத்து விடுகிறார் மூன்றாம் பணியாளர்.

மூன்றாம் நபரின் மனதைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் தன் தலைவரைத் திருப்திப்படுத்த விரும்பாமல், தன் நலன், தன் குடும்பம் என்பதில் அக்கறை கொள்கிறார். 'அடுத்தவரை நான் ஏன் திருப்திப்படுத்த வேண்டும்?' என்ற அவருடைய வாழ்வியல் பாடம் எனக்குப் பிடித்திருக்கிறது. பல நேரங்களில் நம் வாழ்வு அடுத்தவரைத் திருப்திப்படுத்துவதிலும், அடுத்தவர் நமக்குக் கொடுத்த தாலந்தை இன்னும் பெருக்கி, கொடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், அந்த மகிழ்ச்சியில் அவர் கொஞ்சம் நமக்கு பிய்த்துப் போட அந்த மகிழ்ச்சியில் நாம் திருப்திப்படுத்தவும் நினைப்பது சால்பன்று. 'என் வாழ்க்கை, என் மகிழ்ச்சி, பணியாளனாய் இருந்தாலும் நானும் தலைவனே' என்ற நிலையில் இருப்பதும் நல்லதுதானே.

கலைஞர் கருணாநிதி அவர்கள் இறந்தபோது அவருக்கு செய்யப்பட்ட இறுதிச் சடங்கைப் பார்த்துவிட்டு, என் நண்பர், 'என்ன ஒரு மகிமையான இறப்பு' என்றார். அடுத்த இரண்டு நாள்களில் நான் திருச்சியில் ஒரு இறப்புக்குச் செல்ல நேரிட்டது. 'யாரும் இல்லாத பிணம். கழுத்தில் சிலுவை இருந்ததால் கிறிஸ்தவர் என்று நினைத்து உங்களை அழைத்தோம்' என்று காவல்துறை ஆய்வாளர் அடக்கச் சடங்கை நடத்தச் சொன்னார். இன்று என்னவோ, எனக்கு இறந்த இரண்டு பேரும் கண்முன் வருகின்றனர். கலைஞர் தன் தாலந்தை ஐந்தை, ஐந்து லட்ச கோடியாக பெருக்கியிருக்கலாம். ஆனால், இவர் எதுவும் இல்லாமல், யாரும் இல்லாமல், இங்கே இறந்துகிடக்கிறார். இவர் ஒரு தாலந்தும் ஈட்டாததால் இவர் மகிமையாக இறக்கவில்லை என்ற பொருளா? சில நேரங்களில் நம் கார்பரேட் மூளை வெற்றி என்பதை அதிகம் ஈட்டுதல் என்ற பொருளில் வைத்திருப்பது ஆபத்தானது.

நிற்க.

எங்கேயோ தொடங்கி, எங்கேயோ போய்விட்டோம்.

விண்ணரசு பற்றி அப்படி என்னதான் தாலந்து எடுத்துக்காட்டில் சொல்லப்படுகிறது?

'நம்பிக்கைக்குரியவராய் இருத்தல்'

'பணியாளர் என்றால் பணியாளர் போல இருத்தல்'

'தலைவனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என எண்ணுதல்'

Thursday, August 30, 2018

எங்கள் விளக்குகள்

நாளைய (31 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 25:1-13)

எங்கள் விளக்குகள்

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள்.
அவர் மறுமொழியாக, 'எனக்கு உங்களைத் தெரியாது' என்றார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் பத்துக் கன்னியர் அல்லது பத்து தோழியர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். விளக்குகள் எரிந்து கொண்டிருந்த ஐந்து தோழியருக்கு கதவுகள் திறக்கப்படுகின்றன. மற்ற ஐவருக்கும் கதவுகள் மூடப்படுகின்றன. இறுதியாக, 'விழிப்பாயிருங்கள்' என்ற செய்தி தரப்படுகிறது.

இந்த உவமையை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு மணமகன் மேல் தான் கோபம் வரும்.

'ஏன் தம்பி, நீ லேட்டா வந்துட்டு, இருக்குற ஆளையெல்லாம் விரட்டிக்கிட்டு இருக்கியே!' என்று மணமகனைக் கேட்கத் தோன்றுகிறது.

மேலும், தோழிகளை 'அறிவிலிகள்,' 'முன்மதியுடைவர்கள்' என்று லேபிள் பதிப்பதும் தவறே. லேபிள்கள் நாம் கடையில் பார்க்கும் பொருள்களுக்குத்தானே தவிர, நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு அல்ல. இல்லையா?

மேலும், 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்' என முன்மதியுடையவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட தன்னலம் கொண்டவர்களுக்குத்தான் மணமகன் தன்னுடன் இருக்க இடம் தருவார் என்றால், அப்படிப்பட்ட இடம் வேண்டாம் என்றே தோன்றுகிறது.

மேலும், 'நீங்கள் போய் வணிகரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்' என முன்மதியுடைவர்கள் அட்வைஸ் கொடுக்கிறார்கள். இவர்கள் இப்படி ஓஸியாக அட்வைஸ் கொடுப்பதற்குப் பதிலாக கொஞ்சம் எண்ணெய் கொடுத்திருக்கலாம். வணிகரிடம் போய் வாங்கலாம். ஆனால், வாங்குவதற்குப் பணம் இல்லை என்றால் என்ன செய்வது? சில நேரங்களில் நாம் பிறருக்கு கொடுக்கும் அறிவுரைகூட இப்படித்தான். யாருக்கும் பயன்தராமல் இருக்கும்!

இப்படி பல எண்ணங்களை உருவாக்கும் இந்த உவமை எனக்கு எப்போதும் நெருடலாகவே இருக்கின்றது. மணமகனின் தாமதத்தால் - ஒரு ஆணின் தாமதத்தால் - சில இளம் பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இது. அந்த இரவில் அந்தப் பெண்கள் எங்கே கடையைத் தேடி அலைந்திருப்பார்கள்? 'போடா, நீயும் உன் கல்யாணமும்' என்று தங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தால் மணமகன் என்ன செய்திருப்பார்?

மேலும், முன்மதியோடு இருக்க நிறைய பணம் வேண்டும். விளக்கு வாங்க, விளக்கிற்கு எண்ணெய் வாங்க, எண்ணெய்க்கு குடுவை வாங்க - எல்லாவற்றிற்கும் பணம் வேண்டும். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? முன்மதி என்ன அவ்வளவு பெரிய மதிப்பீடா? 'அன்றைய தொல்லை அன்றைக்கு போதும்' என்று சொன்ன ஆண்டவர், 'நாளைக்கு சேர்த்து வைக்கும் முன்மதி' பற்றி பேசுவது ஏன்?

நிற்க.

உவமையை நாம் ஆராய்வதை விடுத்து இருப்பதை போல எடுத்துக்கொள்வோம்.

அவர் மணமகன்.

அவர் அப்படித்தான் செய்வார்.

அவர் தாமதிக்கலாம்.

ஏனெனில் அவர் கடவுள்.

அவர் நினைத்தால் நாம் வெறுமையாக இருந்தாலும் நம்மைத் தழுவ முடியும் - அகுஸ்தினாரை தழுவிக்கொண்டதுபோல.


அடிக்கவும் குடிக்கவும்

நாளைய (30 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 24:42)

அடிக்கவும் குடிக்கவும்

'விழிப்பாயிருங்கள்' என்று தன் சீடர்களை அறிவுறுத்தும் இயேசு 'திருடனைத் திருட விடாமல் விழித்திருக்கும் வீட்டு உரிமையாளர்,' மற்றும் 'நம்பிக்கைக்கு உரிய அறிவாளியான பணியாளர்' என இரண்டு எடுத்துக்காட்டுக்களைத் தருகின்றார்.

இவற்றில் இரண்டாம் எடுத்துக்காட்டை மட்டும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளைக்கு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான பணியாளர் யார்' என்ற கேள்வியோடு தன் இரண்டாம் எடுத்துக்காட்டைத் தொடங்குகிறார் இயேசு.

ஒரு வீடு.

அந்த வீட்டில் (அ) உரிமையாளர், (ஆ) பொறுப்பாளர், (இ) வேலையாள்கள் என மூன்று நிலைகளில் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 'உரிமையாளர்,' 'பொறுப்பாளரின்' பொறுப்பில் வீட்டையும், வேலையாள்களையும் விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிடுகிறார். அவரின் இல்லாமையில் பொறுப்பாளர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே பாடம்.

இன்று எங்கள் குருமடத்தில் பேராசிரியர்களுக்கான மாத ஒடுக்கம் (அக இணைவு) (Monthly Recollection) நடந்தது. இதை வழிநடத்திய அருள்தந்தை குமார்ராஜா அவர்கள் நம் ஒவ்வொருவரிலும், (அ) மதிப்பீடு (value), (ஆ) அறிவு (knowledge), (இ) செயல்திறன் (skill) என மூன்று இயங்குவதாகவும், மதிப்பீடு மற்றும் அறிவு ஆகியவற்றைக் கடந்து நாம் 'செயல்திறனுக்கு' கடந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நம் எடுத்துக்காட்டில் வரும் பொறுப்பாளர் 'நம்பிக்கைக்கு உரியவர்' என்ற 'மதிப்பீட்டைக்' கொண்டிருக்கிறார். அவர் 'அறிவாளியுமாக' இருக்கிறார். அதே வேளையில் அவர் 'வேளா வேளைக்கு உணவளிக்கிறார்.'

ஆனால், அவர் இப்படி இல்லாமல், 'நம்பிக்கைக்கு உரியவராக,' 'அறிவாளியாக' இருந்துகொண்டு, சிலரோடு சேர்ந்து குடிக்கவும், வேறு சிலரை அடிக்கவும் செய்தால் அவர் தலைவரால் கண்டிக்கப்படுகிறார். மேலும், அவர் கண்டந்துண்டமாய் வெட்டப்படுவார் என்று பெரிய எச்சரிக்கையை விடுக்கின்றார் இயேசு. ஆக, 'மதிப்பீடு,' 'அறிவு' இருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் செயல்படுத்தும் 'செயல்திறன்' அவசியம்.

நம் வாழ்வில் விழிப்பு நிலை என்பது இந்த 'மதிப்பீடு,' 'அறிவு,' மற்றும் 'செயல்திறன்' இணைந்து செயல்படுதலே.

எப்படி?

என் பணி ஆசிரியப்பணி என வைத்துக்கொள்வோம்.

ஆசிரியப் பணிக்குத் தேவையான 'பொறுமை,' 'தாழ்ச்சி,' 'எளிமை' போன்றவை என் 'மதிப்பீடு.' என் பாடம் பற்றி நான் தெரிந்து வைத்திருப்பது என் 'அறிவு.' இவை இரண்டு மட்டும் என்னை ஆசிரியர் ஆக்கிவிடுமா? இல்லை. இவை இரண்டால் நான் 'ஆசிரியப்பணி' என்ற போதையில் எனக்குள் நானே மூழ்கி இருப்பேன். ஆனால், எப்போது 'செயல்திறன்' கொண்டு என் பணியைச் செய்கின்றேனோ அப்போதுதான் என் ஆசிரியப்பணி நிறைவடையும்.

ஆக, 'இறைவனால் நம்பிக்கைக்கு உரிய மற்றும் அறிவாளியுமான பணியாளர்கள் நாம்.' இதை உணர்ந்து 'வேளாவேளைக்கு நாம் உணவு பரிமாறுவோம்.'

வேளாவேளைக்கு உணவு பரிமாறும்போது நாம் கடவுளாகவே மாறிவிடுகிறோம். ஏனெனில், அவரிடம்தான் நாம் 'எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும்' எனக் கேட்கிறோம்.

அதுவே, உயர்த்தப்பட்ட நிலை.

Tuesday, August 28, 2018

ஏரோதுவின் பிறந்தநாள்

நாளைய (29 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மாற்கு 6:17-29)

ஏரோதுவின் பிறந்தநாள்

நாளை தூய திருமுழுக்கு யோவானின் பாடுகள் விழாவைக் கொண்டாடுகின்றோம்.

'அதிக வருத்தமாக இருக்கும்போது முடிவு எடுக்கக் கூடாது. அதிக மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுக்கக் கூடாது' என்பது சொலவடை.

தன் பிறந்தநாளில் ஏரோது கொடுத்த வாக்குறதியால், அவரின் பிறந்தநாள் திருமுழுக்கு யோவானின் இறந்த நாள் ஆகிறது.

மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்யும் இந்நிகழ்வில் வரும் ஏரோது என்னும் கதைமாந்தரைப் பற்றி நாம் சிந்திப்போம்.

மொத்தம் இந்த நிகழ்வில் 4 கதைமாந்தர்கள்: (அ) ஏரோது, (ஆ) பிலிப்பின் முன்னாள் மனைவியும் ஏரோதின் இன்னாள் துணைவியுமான ஏரோதியா, (இ) ஏரோதியாவின் மகள் (பிலிப்புக்குப் பிறந்தவள்) சலோமி, மற்றும் (ஈ) திருமுழுக்கு யோவான். இந்த நான்கு கதைமாந்தர்களில் 'ஏரோது' தவிர மற்ற எல்லாரும் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ, அப்படியே இருக்கின்றார்கள். ஏரோதியா காழ்ப்புணர்வோடு இருக்கிறாள். சலோமி கீழ்ப்படிதல் உணர்வோடு இருக்கிறாள். திருமுழுக்கு யோவான் நீதி உணர்வோடு இருக்கிறார்.

ஆனால், ஏரோது ஒரே நேரத்தில் நல்லவராகவும், கெட்டவராகவும் முன்வைக்கப்படுகின்றார். எப்படி?

'யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து, அஞ்சி, அவருக்கு பாதுகாப்பு அளித்தார்'

'அவர் சொல்லைக் கேட்டு குழப்பமுற்ற போதிலும் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தார்'

'ஏரோது தன்னைவிட பெரியவர்களுக்கு விருந்து கொடுத்தார்'

'ஏரோது ஆணையிட்டுக் கூறினார்'

'ஏரோது விருந்தினார்'

'ஏரோது யோவானின் தலையைக் கொண்டுவருமாறு பணித்தார்'

ஏரோது இந்த நிகழ்வில் எல்லாரோடும் உறவாடுபவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் யோவான், ஏரோதியா, சலோமி, பெரியவர்கள், குடிமக்கள் என எல்லாரோடும் பேசுகிறார். அரசனாக இருப்பதன் நன்மை இதுதான்.

ஏரோது யோவானின் கொலையை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?

அவன் செய்த தவறு என்ன? அவரைச் சிறையில் அடைத்ததா? அல்லது அதீதமாக ஆணையிட்டதா? அல்லது வாக்குறுதியை நிறைவேற்ற நினைத்ததா?

என்னைப் பொறுத்தவரையில் அவரின் பிரச்சினை என்னவென்றால், 'அவர் எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்பினார்.' எல்லாரையும் திருப்திப்படுத்துவது எப்போதும் ஆபத்தே.

யோவானை திருப்திப்படுத்த அவரின் வார்த்தைக்குச் செவிமடுக்கிறார்.
ஏரோதியாவை திருப்திப்படுத்த யோவானைச் சிறையில் அடைக்கிறார்.
சலோமியை திருப்திப்படுத்த ஆணையிடுகிறார்.
விருந்தினரைத் திருப்திப்படுத்த யோவானைக் கொல்கின்றார்.

ஆனால், பாவம்...கடைசி வரை அவன் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் வாழ்க்கை இப்படித்தான் சோகமாக முடிந்துவிடும். நாம் காலையிலிருந்து மாலைவரை எல்லாரையும் திருப்திப்படுத்த ஓடிக்கொண்டே இருப்போம். சோர்ந்து கட்டிலில் விழும்போது, 'இன்று நான் மகிழ்ச்சியாக இருந்தேனா?' என்று நம்மையே கேட்டால், பதில், பெரும்பாலும், 'இல்லை' என்றே இருக்கும்.

அடுத்தவரைத் திருப்திப்படுத்த ஏன் இந்த ஓட்டம்?

யாவரையும் திருப்திப்படுத்த தேவையில்லை என்றும், உன் மனதுக்கு சரி என்பதை துணிந்து செய் என்றும் சொல்கிறார் யோவான்.

யாரையும் திருப்திப்படுத்த தேவையில்லாத யோவான் கொல்லப்படுகின்றார்.
எல்லாரையும் திருப்திப்படுத்த நினைத்த ஏரோதும் அத்தோடு இறந்துவிடுகின்றார்.

Monday, August 27, 2018

கொசுவை வடிகட்டி

நாளைய (28 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 23:23-26)

கொசுவை வடிகட்டி

மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களை இயேசு கடிந்துகொள்ளும் பகுதி நாளைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. இங்கே இயேசு அவர்களின் பிரச்சினையாகச் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அவர்களின் முதன்மைப்படுத்தாத நிலை. அதாவது, முதன்மையானதை முதன்மையானதாக வைக்க அவர்கள் மறுத்தனர்.

எப்படி?

முதன்மையாக இருக்க வேண்டிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல், புதினா, சோம்பு, சீரகம் போன்றவற்றில் பத்தில் ஒரு பங்கு கொடுப்பது பற்றி ஆராய்கின்றனர்.

உணவைத் தூய்மையாக உண்பதற்கு அதன் உட்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். முதன்மையான உள்புறத்தைக் கண்டுகொள்ளாமல் வெளிப்புறத்தைப் பற்றி அக்கறை கொள்கின்றனர்.

இவ்வாறாக, சின்னஞ்சிறிய கொசுவை வடிகட்டி அதிலிருந்து தப்பிவிட்டதாக நினைப்பவர்கள் பெரிய பெரிய ஒட்டகங்களையே விழுங்கிக்கொண்டிருந்தார்கள்.
நாளை நாம் தூய அகுஸ்தினாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவரை ஆயராகவும், மறைவல்லநராகவும் கொண்டாடுகிறது திருஅவை. நாம் இன்று பின்பற்றும் நிறைய இறையியல் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் இவரே. 'ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு' என்ற இவரின் வார்த்தைகள் இவரிலேயே நிறைவேறின.

தன் 'ஒப்புகைகள்' என்ற நூலில் இவர் இறைவன் முன்னும், மனிதர்முன்னும் தன் மனம் திறக்கின்றார். இவரிடம் மூன்று பண்புகள் என்னை மிகவும் கவர்கின்றன.

அ. தன்அறிவு

இவர் தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சீர்தூக்கிப் பார்க்கிறார். தன்னறிவு பெற்றவர்களால்தான் இப்படி செய்ய முடியும். அதாவது, 'இதுதான் நான்' என்று அவர் தன் வலிமை, வலுவின்மை, சிரிப்பு, அழுகை, நிறைவு, குறைவு, கொடை, இழப்பு, நண்பர்கள், தனிமை என வாழ்வின் எல்லாவற்றையும் தன்னைத் தனக்கு வெளியே இருந்து பார்க்கிறார்.

ஆ. அறிவு

இவர் பேச்சுக்கலையின் ஆசிரியராக இருக்கின்றார். இவர் அதற்காக நிறைய புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும். இவரின் நூல்களை வாசிக்கும் போது இவர் மேற்கோள்கள் காட்டும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கோ, எப்பொழுதோ பயின்றதை சரியான இடத்தில் மேற்கோள் காட்டுகின்றார். இவரின் எழுத்துக்களே ஒரு ஷெல்ப் இருக்கிறது என்றால், இவர் எழுதுகிற நேரம் போக எவ்வளவு படித்திருப்பார். மேலும், இவர் வெறும் புத்தகங்களைப் படித்தவர் அல்லர். மாறாக, வாழ்வில் தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் புத்தகமாக பார்க்கின்றார்.

இ. துணிவு

'நான் எழுதும் இந்த நூலை பல ஆண்டுகள் கழித்து வாசிக்கும் உம் அடியார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?' என்ற கேள்வியை அடிக்கடி தன் 'ஒப்புகைகள்' நூலில் கேட்கின்றார் இவர். மேலும், தன்னை அறிந்த இவர் தன் சக மனிதரிடத்திலிருந்து தன்னை ஒளித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.

ஏன்?

இவர் இறைவனை முதன்மைப்படுத்தினார். தன் தாயின் கண்ணீர், இறப்பு, தன் நண்பனின் இறப்பு, இழப்பு, தன் நிறைவேறாத திருமணம், தன் முறிந்த உறவு அனைத்தையும் இறைவனில் பார்க்கின்றார். ஆக, 'எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பதைவிட', 'இறைவனில் எல்லாவற்றையும் பார்க்கின்றார்.' இதுதான் புனித நிலை.

இறைவனில் எல்லாவற்றையும் பார்க்கும்போது நாம் யாரையும் எளிதாக எடை போடவோ, எள்ளி நகைக்கவோ மாட்டோம். நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் சொல்வது போல, 'நாம் கடவுளால் ஊக்கம் ஊட்டப்பட்டு, நல்லதையே சொல்லவும்,செய்யவும் உறுதிப்படுத்தப்படுவோம்.'


Sunday, August 26, 2018

வழிகாட்டிகள்

நாளைய (27 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (2 தெச 1:1-5,11-12)

வழிகாட்டிகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடத்தைக் கண்டிக்கிறார்.

'விண்ணக வாயிலுக்குள் ... நீங்கள் நுழைவதில்லை. நுழைவோரையும் விடுவதில்லை.'

- இப்படித்தான் இயேசு அவர்களை சாடுகின்றார்.

நாளை தூய மோனிக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவரின் மகன்தான் தூய அகுஸ்தினார்.

மோனிக்காவின் வாழ்வில் மேற்காணும் வார்த்தைகள் மிகவும் மாறுபடுகின்றன:

'நான் நுழையாவிட்டாலும் பரவாயில்லை. என் மகன் விண்ணக வாயிலுக்குள் நுழைந்தால் போதும்.'

ஆக, தன் மகன் அகுஸ்தினாருக்கு வழிகாட்டியாக இருந்தவர் தூய மோனிக்கா.

இயேசு பரிசேயர்களை இரண்டு நிலைகளில் சாடுகின்றார்:

அ. 'சமயத்திற்கு விரட்டி விரட்டி ஆள் சேர்க்கிறார்கள். ஆனால், ஆள்கள் சேர்ந்தவுடன் அவர்களைக் கண்டுகொள்வதில்லை'

- இவ்வாறாக, தாங்கள் தேடிச் சென்றவர்களை பாதியில் விட்டுவிடுகின்றனர். மீதி வழி செல்ல மறுத்துவிடுகின்றனர்.

ஆ. 'குருட்டு வழிகாட்டிகளாக இருக்கின்றனர்'

- அதாவது, தங்களுக்கே சரியான போதனை தெரியாத நிலையில், தவறான போதனையால் மற்றவர்களை வழிநடத்தி வழிபிறழச் செய்கின்றனர்.

நாளைய நாயகி தூய மோனிக்கா மேற்காணும் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறார்.

ஏனெனில், அவர் தன் மகனைப் பாதி வழியில் விடாமல், இறுதிவரை - அவர் மனமாற்றம் அடையும் வரை - அவருடன் பயணம் செய்கிறார்.

மேலும், தன் மகன் மேனிக்கிய சித்தாந்தத்தில் மூழ்கி தவறான வழியில் சென்றபோது, உண்மையான தன் மறையின் பக்கம் அவரைத் திருப்புகின்றார்.

ஆக, மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர் போல படித்தவராக மோனிக்கா இல்லை என்றாலும், மிகச் சாதாரணமான தன் நிலையில் சரியானதைச் செய்கிறார் இவர்.

இதையே நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் தெசலோனிக்கிய நகருக்குத் தான் எழுதும் திருமடலில், அவர்களின் சின்னஞ்சிறு செயல்களைப் பாராட்டுகின்றார்.

ஆக, சின்னஞ்சிறிய நிகழ்வுகளில், சின்னஞ்சிறு அக்கறைகளில், சின்னஞ்சிறு கண்ணீர்த்துளிகளில்தாம் வாழ்வின் பெரியவை அடங்கியிருக்கின்றன.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தூய மோனிக்கா.

மிக மோசமான உதாரணம், மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்.


Wednesday, August 22, 2018

திருமண ஆடை

நாளைய (23 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 22:1-14)

திருமண ஆடை

மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் மீண்டும் சில விண்ணரசைப் பற்றிய உவமைகள் வருகின்றன. அவற்றில் முதலாவதையே நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம். 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்' என்று தொடங்கும் இந்த நிகழ்வில், ஒரு அரசன், அவனுடைய மகன், பணியாளர்கள் என்று அரண்மனையைச் சார்ந்தவர்களும், திருமணத்திற்கு அழைப்பு பெற்றவர்கள், வழிகளில் இருந்த நல்லவர், கெட்டவர் என நிறையப் பேர் இருக்கின்றனர். இறுதியில், திருமண ஆடை அணியாத ஒரு நபரும் இருக்கிறார்.

சரி. நிகழ்விற்கு வருவோம்.

திருமணம் நடக்கும் நிகழ்வு முதலில் ஊர் மக்களுக்கு திருமண வீட்டாரால் சொல்லப்படும். ஆனால், தேதி அறிவிக்கப்படாது. பாலைவனத்திலிருந்து ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எப்போ போவாங்க, அல்லது போவாங்களா என யாருக்கும் தெரியாது. ஆக, பொண்ணு வீடு, பையன் வீடு பயணம் இப்படி எல்லா பயணங்களும் இனிதாய் அமைந்தால்தான் திருமணம் நடக்கும். ஆக, 'எங்க வீட்டுல கல்யாணம், வந்துடுங்க' அப்படின்னு மட்டும்தான் முதலில் சொல்வாங்க. பின் கொஞ்ச மாதங்கள் அல்லது நாள்கள் கழித்து, 'நாளைக்கு அல்லது இன்னைக்கு கல்யாணம் வந்துடங்க' என்ற ஏற்கனவே சொன்னவர்களிடம் மீண்டும் சொல்வார்கள். அப்படிச் சொல்லப் போனவர்களைத்தான் அடித்துத் தள்ளியிருக்கிறார்கள் இந்த அழைப்பு பெற்றவர்கள்.

இங்கே, அரசனது முட்டாள்தனம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். தகுதியானவர்களை முதலிலேயே அழைக்க வேண்டியதுதானே! காட்டுமிராண்டிகளை அழைத்துவிட்டு, 'அவன் என்னை அடிக்கிறான்னு' சொன்னா, அவன் அடிக்கத்தான் செய்வான்!

விருந்து தயாராகிவிட்டது. யாரை அழைப்பது? எல்லாரையும் அழைக்கிறார் அரசன். நல்லவர், கெட்டவர், என தெருவில் செல்வோர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அப்படி அழைக்கும்போது ஒவ்வொருவருக்கும் திருமண வீட்டார் திருமண ஆடை ஒன்றைக் கொடுப்பர். அதை அணிந்துகொண்டுதான் விருந்தினர் செல்ல வேண்டும். ஒரே ஒரு இளவல் மட்டும் அணியவில்லை. அவர் அணியவில்லையா? அல்லது அணிய விரும்பவில்லையா? என்று தெரியவில்லை.

'வேற வழியில்லாம தான நீ என்னை அழைத்தாய்?' அல்லது 'முதலில் நீ எனக்கு அழைப்பு கொடுக்கவில்லையே?' அல்லது 'இந்த ஆடை அரசனான நீ என் வரிப்பணத்தில் வாங்கியதுதானே!' அல்லது 'எனக்கு இந்த ஆடையின் நிறம் பிடிக்கவில்லை!' - இப்படி ஏதோ ஒரு காரணங்களுக்காக அந்த இளவல் அணிய மறுக்கின்றார். விருந்தினர்களைப் பார்க்க வருகின்ற இடத்தில் இவன் அரசனுடைய கண்ணில் பட்டுவிடுகின்றான். முடிவு, அவனுடைய அழிவு.

இந்த இளவல் வெளியே அனுப்பப்பட்டது சரியா? - என்று நாம் கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்வோம்.

இவருடைய 'கல்மனம்' அல்லது 'மாற்றத்திற்கு உட்படுத்தாமை' - இதுதான் தவறு என நான் நினைக்கிறேன்.

வரலாற்றில் தூய அகுஸ்தினார் போன்றவர்கள் 'திருமண ஆடை' இல்லாமல் இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் மனமாற்றம் அடைந்து ஆடை அவருக்குத் தரப்பட்டபோது, மன் மனத்தை அப்படியே மாற்றி இறைவிருப்பத்திற்கு கையளித்துவிடுகிறார். 'நீ கட்டளையிடுவதை என் மனம் செயல்படுத்த எனக்கு அருள்தா!' என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எசே 36:23-28) இஸ்ரயேல் மக்களிடம் உரையாடும் யாவே இறைவன், 'உங்கள் கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, சதையால் ஆன இதயத்தைத் தருவேன்' என்கிறார். சதையால் ஆன இதயம்தான் அவர்கள் அணிய வேண்டிய திருமண ஆடை.

இந்தக் கடவுள் ரொம்ப மோசமானவர்.

'உன்னைக் கொல்வேன், குத்துவேன், வெட்டுவேன், அழிப்பேன், நாடு கடத்துவேன்' என்று மூசு;சுக்கு மூச்சுக்கு சொன்னவர், அப்படியே தலைகீழாக மாறி, 'உனக்கு புதிய இதயம் தருவேன், புதிய சட்டை தருவேன், புதிய பேண்ட் தருவேன்' என குழைகிறார்.

நற்செய்தியில் உள்ள உவமையிலும் அப்படியே நடக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் வந்ததே பெருசு! இதுல, நீ சட்டை போடல, பேண்ட் போடல, வெளிய போ! என்று சொல்றது எப்படி நியாயம்?

அவர் கடவுள்! அவன் அரசன்! அப்படித்தான் பேசுவார்கள்!


Tuesday, August 21, 2018

அடிமை ஆன அரசி

நாளைய திருநாள்

அடிமை ஆன அரசி

அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவின் எட்டாம் நாள் அவரை 'விண்ணரசி' எனக் கொண்டாடுகின்றோம்.

'அரசன்' என்றவுடன் நமக்குச் சில நேரங்களில் வரும் கோபம், எரிச்சல், எதிர்ப்பு, 'அரசி' என்றவுடன் வருவதில்லை. 'அரசி' ஆக்ச்சுவலா ஒரு நல்ல நிலை. 'அரசனுக்கு' கடமைகளும் உண்டு, உரிமைகளும் உண்டு. ஆனால், 'அரசிகளுக்கு' உரிமைகள் மட்டும்தான். கடமைகள் கிடையாது. போரில் ஒரு நாடு தோற்றால் அது அரசனின் பொறுப்பே தவிர, அது அரசியின் பொறுப்பு அல்ல. அரசன் போர்க்களத்தில் இருக்க, அரசி ப்யூட்டி பார்லரில் இருந்த நிகழ்வுகள் வரலாற்றில் இருக்கின்றன.

'அன்னை மரியாளை' 'அரசி' என நாம் அழைப்பதன் பொருள் என்ன?

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38) மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என வானதூதரிடம் சொல்கிறார். இவர் 'அடிமை' என்று சொன்னதால்தான், இவர் 'அரசி' ஆனார் என்று சொல்வதைவிட, இவர் 'அரசி'யாக இருந்ததால்தான், தன்னை 'அடிமை' என்று சொன்னார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

அதாவது, கபிரியேலிடம் தான் 'அடிமை' என்று சொன்னதால், மரியாளின் வேலை அடிமைக்குரிய வேலை அல்ல. மாறாக, 'கன்னியாக' இருந்தவள் 'தாய்' ஆகிறாள். இதுதான் முதல் அரசி நிலை. 'கலக்கம்' மறைந்து வாழ்வில் 'தெளிவு' பெறுகிறார். இது இரண்டாம் அரசி நிலை. கடவுளால் இயலாதது எதுவும் இல்லை என்றால், கடவுளின் மகனால் இயலாததும் எதுவும் இல்லை. அந்த மகனையே இவர் தன் உதரத்தில் ஏற்கிறார். ஆக, இவரால் ஆகாததும் ஒன்றும் இல்லை. இது மூன்றாவது அரசி நிலை.

ஆக, தனக்குக் கீழ் அனைத்தையும் பெற்றுக்கொண்ட மரியா தன்னை அதற்குக் கீழ் வைக்கிறார். அதுதான் அவரது அரசி நிலையின் அழகு. ஆக, மேலினும் மேல் பார்க்கும் உலகில், கீழினும் கீழ் பார் என்று மாற்றுப்பார்வைக்கு வித்திடுகிறார் இந்த மாதரசி, மங்கையர்க்கரசி, இளவலரசி.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 9:2-4,6-7) மகிழ்ச்சி என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. வழக்கமாக, 'அரசனைப் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று நாம் சொல்வோம். மகிழ்ச்சி என்பது நிறைவின் வெளிப்பாடு. நிறைவு என்பது அரசனுக்கு மட்டுமே சாத்தியம் என்பதே இப்புரிதலின் பின்புலம்.

'அறுவடை நாள் மகிழ்ச்சி,' 'கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது' மகிழ்ச்சி என இரண்டு உருவகங்களைப் பார்க்கிறோம். இந்த இரண்டு உருவகங்களிலும் சொல்லப்படுவது என்னவென்றால், 'துன்பத்துக்குப் பின் மகிழ்ச்சி'தான். ஆக, துன்பம் அல்லது வலி என்பது மகிழ்ச்சியின் தேவையை இன்னும் அதிகம் உணரச் செய்கிறது.

மரியாள் தன்னை அடிமை என்று ஆக்கியபோது, அவரிடம் வருத்தமோ, பயமோ இல்லை. மாறாக, தான் தன் கையில் இருக்கும் சூழலின் அரசி என தன் வாழ்க்கையைத் தன்னில் எடுக்கிறார். இன்னும் அதிக பொறுப்புணர்வுடன் செயலாற்றுகிறார்.

பொறுப்புகள் கூடக்கூட தலைமைத்துவம், மேன்மை கூடும்.

நாம் கொண்டாடும் விண்ணரசி மரியா நம் வாழ்வை நாம் அரசாள நமக்குக் கற்றுத்தருவாராக!

Monday, August 20, 2018

நானே கடவுள்

நாளைய (21 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:23-30)

நானே கடவுள்

கடவுளைப் பற்றிய புரிதலில் கிழக்கத்தேய புரிதலுக்கும், மேற்கத்தேய புரிதலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்: மேற்கு ஒருபோதும் மனிதர்களைக் கடவுள் என்று சொல்வதில்லை. 'கடவுளின் பிள்ளைகள்,' 'கடவுளைப் போன்றவர்கள்' என்றெல்லாம் சொல்லுமே தவிர, 'நீங்களே கடவுள்' என்று சொல்வதில்லை. ஆனால், கிழக்கில், குறிப்பாக இந்து மரபில் உள்ள மகாவாக்யா - தத்வமசி - நீயே அது அல்லது நீயே அவர் - ஆத்மனே பிரம்மன் என்று சொல்கிறது.

'நானே கடவுள்' என்று இந்து மதத்தில் உள்ள ஒருவர் சொல்ல முடியும். ஆனால், இசுலாம், கிறிஸ்தவம், யூதம் போன்ற மதத்தில் உள்ளவர் சொன்னால் அது ஆணவம் என்று சொல்கிறது நாளைய முதல் வாசகம் (காண். எசே 28:1-10). ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேல் வழியாக இஸ்ராயேல் மக்களைக் கடிந்துகொள்ளும் நிகழ்வை வாசிக்கின்றோம். அங்கே, 'உன் இதயத்தின் செருக்கில், 'நானே கடவுள்' என்று சொல்கின்றாய். ஆனால், நீ கடவுளைப் போல அறிவாளியாக இருக்க எண்ணிடினும், நீ கடவுள் அல்ல' என்கிறார். ஆக, அறிவு அல்லது அறிதல் என்பதை வைத்து ஒருவரின் கடவுள் தன்மையை நிர்ணயிக்கிறது எசேக்கியேல் நூல். இதே 'நன்மை தீமை அறிதல்' பிரச்சினைதான் ஆதாம்-ஏவாள் நிகழ்விலும் நடக்கிறது. அங்கேயும் அவர்கள் கடவுளைப் போல (கடவுளாக) இருக்க முயற்சி செய்கின்றனர். நாளை என்ன நடக்கும் என்பதை மனிதர்கள் அறிய இயலாதவரை மனிதர்கள் தங்களை எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக (கடவுளர்களாக) காட்டிக்கொள்ள முடியாது என்பது நாளைய முதல் வாசகத்தின் வாதம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் ஐடியா கேட்டு வந்த செல்வந்த இளவல் சோகமாகத் தன் வழி செல்ல, இயேசு சீடரிடம் செல்வந்தர் மற்றும் செல்வம் பற்றிப் பேசுகின்றார். விண்ணரசில் நுழையக்கூடியவரைப் பற்றிய கேள்வியில், 'அப்படியானால் யார்தாம் மீட்பு பெற முடியும்?' என பேதுரு கேட்க, இயேசு, 'மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்' என்கிறார்.

இயேசு இங்கே குண்டக்க மண்டக்க பேசுவதுபோல தெரிகிறது.

யார் மீட்பு பெற முடியும்?

மனிதரால் முடியாதாம். ஆனால் கடவுள் முடியுமாம்.

'கடவுளுக்கு எதுக்கு மீட்பு?' என்பது விளங்கவில்லை!!!

ஒருவேளை இதைப் புரிந்துகொள்ள 'கடவுள்போல எண்ண வேண்டும்' என்று இயேசு சொன்னால்கூட ஏற்றுக்;கொள்ளலாம்.

தொடர்ந்து, பேதுரு, 'எங்களுக்கு என்ன கிடைக்கும்? நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே!' என்று கேட்க, இயேசு, 'விட்டுவிட்ட அனைத்தையும் நூறு மடங்கு பெறுவீர்கள்' என்று சொல்கின்றார். இயேசுவின் லிஸ்டில் 'மனைவி' இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.ஆனால், பிள்ளைகளை விட்டுவிடலாம் என்கிறார்! 'மனைவி' இல்லாமல் பிள்ளைகள் எப்படி?

நிற்க.

நாளைய முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும் சொல்வது 'தாழ்ச்சி.' எப்படி?

எருசலேம் நகரின் ஊசியின் காது எனப்படும் இடத்தில் ஒட்டகம் நுழைய வேண்டுமெனில், அந்த ஒட்டகம் தன்னையே சுருக்கி, உருக்கி, ஊர்ந்து செல்லத் தேவையில்லை. மாறாக, ஒட்டகத்தின் மேலுள்ள சுமையை இறக்கினால்போதும். ஒட்டகம் நுழைந்துவிடும். ஆக, ஒட்டகம் வேறு. சுமை வேறு. தன்மேல் வைர மூட்டையே இருந்தாலும் அது தனதல்ல என எந்த ஒட்டகம் நினைக்கிறதோ அந்த ஒட்டகம் மட்டுமே அந்த நுழைவாயிலில் நுழைய முடியும். ஆக, அறிவு, செல்வம், இழப்பு, தியாகம் என எதனுடன் நாம் நம்மையே ஒன்றிணைத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒன்றிணையாமல் இருப்பது மீட்பு. எல்லா ஒன்றிப்புக்களிலிருந்து விடுபடுவதே கடவுள் நிலை. அந்த நிலையைத் தேர்ந்துகொள்பவருக்கு சுமை நீங்கும்.


Sunday, August 19, 2018

நிறைவுள்ளவராக விரும்பினால்

நாளைய (20 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:16-22)

நிறைவுள்ளவராக விரும்பினால்

நாளைய நற்செய்தி வாசகத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். 18 முதல் 25 வயதுற்குட்பட்ட இந்த இளவலின் தேடல் என்னை எப்போதும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த வயசுல என்ன ஆசை இருக்கும் ஒரு இளைஞருக்கு? நல்ல வேலை, கைநிறைய சம்பளம், கைநிறைய மொபைல் ஃபோன், அந்த ஃபோனில் எந்நேரமும் இன்டெர்நட், பைக்கில் பின்னால் அமர ஒரு இளவல், நிறைய ஃபரண்ட்ஸ் என இப்படி நிறைய ஆசை இருந்திருக்க வேண்டும். இவற்றில் எது ஒன்றையாவது கேட்டிருக்கலாம். ஆனால், இவரின் ஆசை, 'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' எனக் கேட்கின்றார். ஆக, 25 வயதுக்குள் இந்த இளவல் இந்த முதிர்ச்சி பெற்றுவிட்டாரா? அல்லது வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிட்டாரா? அல்லது இன்பங்களைத் துறந்துவிடலாம் என எண்ணிவிட்டாரா?

'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?'

'கட்டளைகளைக் கடைப்பிடி'

'இவையெல்லாம் கடைப்பிடித்துள்ளேன்'

'இன்னும் என்ன குறைவுபடுகிறது?'

'நிறைவுள்ளவராக விரும்பினால் போய் விற்று ஏழைகளுக்குக் கொடும் ...'

இளைஞன் 'நிலைவாழ்வு பெறத்தானே' இயேசுவிடம் ஐடியா கேட்டான். ஆனால், இயேசு இங்கே 'நிறைவுள்ள வாழ்வு' பற்றி சொல்கிறாரே?

'குறைவில்தான் நிறைவு' என்ற புதிய புரிதலைத் தருகின்றார் இயேசு.

ஆனால், அந்த இளைஞன் 'வருத்தத்தோடு செல்கின்றான்'.

ஏன் வருத்தம்? இயேசுவின் ஐடியா ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்ததா?

'அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது' என நிகழ்வை நிறைவுசெய்கின்றார் மத்தேயு. அப்படி என்ன ஏராளமான சொத்து இருந்திருக்கும்?

'எங்கே புதையல் இருக்கிறதோ அங்கே இதயம் இருக்கும்' என்ற இயேசுவின் மலைப்பொழிவு வார்த்தைகள்படி, இந்த இளவலின் இதயம் சொத்தோடு இணைந்துகொண்டதோ?

நிற்க.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இளவலின் இந்தச் செய்கை பிடித்திருக்கிறது.

ஏனெனில், 'முடியும்' என்றால் 'முடியும்' என்றும், 'முடியாது' என்றால் 'முடியாது' என்றும் அவரால் முடிவெடுக்க முடிகிறது.

அதே நேரத்தில் ரொம்ப ப்ராக்டிக்கலாகவும் இருக்கிறார். 'சங்கம் செய்ய முடியாததை தங்கம் செய்ய முடியும்' என்று அறிந்திருக்கிறார் இளைஞர். 'பொன்னைவிட ஞானம் மேன்மையானது' என்று சொல்வதெல்லாம் விவிலியத்தில் மட்டும்தான். பொன் இருந்தால் ஞானியை அல்லது ஞானத்தை வாங்கிவிடலாம். இல்லையா?

'பாதி வழி வந்த இளைஞன் மீதி வழி வர முடியாத' இந்த இளைஞன் நமக்குச் சொல்வது என்ன?

'ஆம்' என்றால் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றால் 'இல்லை' என்று சொல்ல பழகிக்கொள்வது. அது கடவுளுக்கே என்றாலும்.

நாளைய முதல் வாசகத்தில் (எசே 24:15-24) இறைவன் எசேக்கியேல் வழியாகச் சுட்டிக்காட்டும் பிரச்சினை இதுதான். யாவே இறைவனுக்கு 'ஆம்' என்று சொல்லிவிட்டு, தங்கள் செயல்களால் 'இல்லை' என்று சொல்லிவிட்டனர்.

எசேக்கியேல் ஒரு விதிவிலக்கு. தன் இறைவாக்கு வேலைக்காக தன் 'கண்களுக்கு இன்பம் தரும்' மனைவியை இழக்கத் துணிகின்றார்.

நிறைவு என்பது மனதைப் பொறுத்தே. ஆனாலும், கொஞ்சம் ப்ராக்டிக்கலாவும் இருக்கணும்.


Friday, August 17, 2018

அவர்களை அதட்டினர்

நாளைய (18 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:13-15)

அவர்களை அதட்டினர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தைகளைத் தொட்டு இயேசு ஆசி வழங்கும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

அப்படி வரும் குழந்தைகளை சீடர்கள் அதட்டுகின்றனர்.

சீடர்கள் சிறுகுழந்தைகளை அதட்டியது ஏன்?

சின்ன வயசுல நாங்க இருந்த வீட்டிற்கு அருகில் பால்ராஜ் நாயக்கர் வீடு இருந்தது. அவருடைய ஒரே மகன் விஜய் ஆனந்த் என்னுடன் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். அவர்கள் வீட்டில் நிறைய சொத்துக்கள் இருந்ததால் அப்பையனை ராஜாக்கண்ணு என்றே அழைத்தார்கள். இன்றும் நான் ராஜாக்கண்ணு என்றே அவரை அழைக்கிறேன். விடுமுறை நாள்களில் நான் அங்கு சென்று படிப்பேன். ராஜாக்கண்ணுக்கு ஆங்கிலமும், கணிதமும் சொல்லிக் கொடுப்பேன். ராஜாக்கண்ணு பயன்படுத்தி காதறுந்த பள்ளிப் பைகளைத்தான் நான் மூன்று வருடங்கள் ஊக்கு மாட்டி பயன்படுத்தினேன். என்னுடன் கடற்கரை என்ற பையனும் எப்போவாவது ராஜாக்கண்ணு வீட்டிற்கு படிக்க வருவார். ஒருநாள் வயல்காட்டு பிரச்சினையில் கடற்கரை அம்மாவுக்கும், ராஜாக்கண்ணு அப்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது. இது எங்களுக்குத் தெரியாது. வழக்கம்போல நாங்கள் மாலையில் ராஜாக்கண்ணு வீட்டிற்குப் படிக்கப்போக, ராஜாக்கண்ணுவின் பாட்டி என்னை மட்டும் அனுமதித்துவிட்டு, கடற்கரையை அதட்டி வெளியே அனுப்பிவிட்டார். அவருடைய அதட்டுலுக்குக் காரணம் பின்தான் தெரிந்தது. ஆக, அம்மாவின் சண்டைக்கு மகன் அதட்டப்பட்டார். தாயின் சண்டைக்கு குழந்தை அதட்டப்பட்டது.

இதுதான் இன்றைய நற்செய்தியிலும் நடக்கிறது என நினைக்கிறேன். பெரியவர்கள் தங்களுக்குள் உள்ள கோபத்தை வடித்துவிடும் வாய்க்கால்கள்தாம் குழந்தைகள். சீடர்களுக்கும் அந்த ஊர் பெரியவர்களுக்கும் உள்ள பிரச்சினையை அல்லது சண்டையினால் வந்த கோபத்தை குழந்தைகள் மேல் காட்டியிருக்கலாம்.

மேலும், குழந்தைகள் நம்மைத் திருப்பி அடிக்க முடியாது என்ற காரணத்திற்காகத்தான் நாம் பல நேரங்களில் அவர்களை அடிக்கிறோம். இல்லையா?

அலுவலகத்தில் உள்ள கோபத்தை தந்தை அம்மாவிடம் காட்டுவார். அம்மா அந்தக் கோபத்தை குழந்தையிடம் காட்டுவார். குழந்தை அந்தக் கோபத்தை பொம்மையிடம் காட்டும். இவ்வாறாக, அதட்டுதல் அல்லது கோபித்தல் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே பயணம் செய்கிறது.

நிற்க.

இப்படி பயணம் செய்யாமல் அவரவருக்குரியரை அவரவருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது நாளைய முதல் வாசகம் (எசே 18:1-10,13,30-32). நாளைய முதல்வாசகத்தில் வரும் சொலவடை நமக்கு மிகவும் பரிச்சயமானது:

'புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்'

இதையொத்து தமிழ்மரபில், 'தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுமாம்' என்ற சொலவடை உண்டு.

அவரவர் செய்த நன்மையும், தீமையும் அவரவருக்கே என்பதும், ஒருவரின் செயலுக்கு மற்றவரைக் காரணம் சொல்லக்கூடாது என்பதும் இச்சொலவடைகளின் பொருள்.

நான் எல்லீஸ் நகரில் அருள்பணியாளராக இருந்தபோது, 'குடும்பத்தின் பாவமும் சாபமும் நீங்க' என்ற திருப்பலி கருத்து ஒன்று வந்தது. திருப்பலி முடிவில் அதைக் கொடுத்தவர் என்னிடம் வந்து, 'நம் பெற்றோர்கள், பெற்றோர்கள் செய்த நன்மை, தீமை தலைமுறை தலைமுறையாய் நம்மைப் பாதிக்கும்' என்றார். இதையே நாம் இந்து மரபில் 'கர்மா' அல்லது 'வினைப்பயன்' என்கிறோம்.

விவிலியத்தில் இதற்கு ஏற்புடைய மற்றும் மாறான கருத்து உள்ளது.

தொநூ 12ல் ஆபிரகாமிற்கு ஆசீ வழங்கும் கடவுள், 'உன்னில் உன் தலைமுறை அனைத்தும் ஆசி பெறும்' என்கிறார். ஆக, ஆபிரகாம் தன் நம்பிக்கையின் வழியாக தேடிய புண்ணியம் வாழையடி வாழையாக அவருடைய எல்லாத் தலைமுறைகளுக்கும் கிடைக்கும். இது ஏற்புடைய பதில்.

ஆனால், நாளைய முதல் வாசகத்தில் எதிர்மறையான பதிலைப் பார்க்கிறோம்: 'பெற்றோர் நல்லது செய்தால் அவர்களின் பலன் அவர்களுக்கு. பிள்ளைகள் கெட்டது செய்தால் அவர்களின் தண்டனை அவர்களுக்கே.' முன்னவர்களின் நற்செயல்கள் பின்னவர்களின் பாவத்திற்குக் கழுவாய் ஆக முடியாது. அவரவர் அவரவருக்குரிய பரிசையும், தண்டனையும் பெற வேண்டும்.

இவற்றில் எதை நாம் ஏற்றுக்கொள்வது?

வினைப்பயனைப் பொறுத்த வரையில் அது ஒரு ஸ்கூட்டர் போல. ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு வந்து ஒரு கட்டத்தில் என்ஜின் ஆஃப் செய்தால், அது தொடர்ந்து கொஞ்ச தூரம் ஓடும். என் அப்பா ஓட்டிய ஸ்கூட்டர் அவரின் இறப்பில் ஆஃப் செய்யப்படுகிறது என்றால், அது கொஞ்ச தூரம் என்னில் தொடர்ந்து ஓடும். அப்புறம் நின்றுவிடும். பின் நான்தான் அதை மறுபடி ஸ்டார்ட் செய்து ஓட்ட வேண்டும். என் இறப்பில் என்ஜின் நிற்கும். ஆனாலும் வண்டி கொஞ்ச தூரம் ஓடும்.

ஆனால், அந்த ஓட்டம் யாருக்கு?

Thursday, August 16, 2018

திருமணம் செய்துகொள்ளாதிருப்பது

நாளைய (17 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:3-12)

திருமணம் செய்துகொள்ளாதிருப்பது

திருமணம், மணமுறிவு, மணத்துறவு என்ற மூன்று வார்த்தைகளில் சுழல்கிறது நாளைய நற்செய்தி.

இந்த மூன்று சொற்களையும் இணைக்கும் வார்த்தை 'தனிமை.' எப்படி?

'தாய் தந்தையை விட்டு' பிரியும் கணவன் 'தனிமையாக' இருக்கிறான்.

இந்தத் தனிமையை போக்க அவன் 'மனைவியோடு' இணைகிறான்.

மனைவியை விலக்கிவிடும் கணவன் மீண்டும் 'தனிமை' ஆகிறான். மனைவியும் 'தனிமை' ஆகிறாள். இந்தத் தனிமையைத் தீர்த்துக்கொள்ள சிறிது நேரம் உடல் அளவில் இணைந்து களைந்துபோவது விபச்சாரம் என்றும், அது தவிர்க்கப்படவேண்டும் எனவும் சொல்கிறார் இயேசு.

மேலும், 'திருமணம் செய்துகொள்ளாதிருப்பதன் தனிமையே நலம்' என்று சொல்வதை அருள்கொடை பெற்றவரே அன்றி வேறு எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் இயேசு. அருள்கொடை பெற்றவர் தானே தனிமையை ஏற்கப் பழகிக்கொள்கின்றார்.

நமக்கு ஏன் தனிமை உணர்வு வருகிறது என்று தெரியுமா?

இயல்பாகவே நமக்குத் தனிமை உணர்வு என்பது கிடையாது. ஏனெனில் தொடக்கநூலின்படி 'ஆண் முதன் முதலாக படைக்கப்பட்டபோது அங்கே பெண் இல்லை. பெண் இடையில் வந்தவள். ஆணுடன் முதன்முதலாக உறவு கொண்டு தனிமை போக்கியவர் ஆண்டவராகிய கடவுள். அதே போல பெண் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டபோது முதன்முதலாக பெண்ணோடு உறவு கொண்டவர் ஆண்டவராகிய கடவுள். ஏனெனில் ஆதாம் அங்கே 'தூக்கத்தில்' ('பாதி இறப்பு') இருந்தார்.'

இவ்வாறாக, ஆணுக்கும், பெண்ணுக்கும் தனிமை போக்கியவர் கடவுள்.

காலப்போக்கில் இந்தக் கடவுள் ஓரங்கட்டப்பட்டுவிட்டு ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் தனிமை போக்கத் தேடியதால்தான் தனிமையே வருகிறது. ஏனெனில் பாதியில் வரும் எதுவும் நிறைவைத் தராது. என்னதான் ஒட்டி, உறவாடி, கொஞ்சி, அக மகிழ்ந்தாலும், 'உவப்பன வெறுக்கும், வெறுத்தன உவக்கும்,' 'இணைந்தன பிரியும், பிரிவன இணையும்' என்று வாழ்வு சட்டென்று மாறிவிடுகிறது. ஆனால், இறைவனோடுள்ள இணைதல் அப்படி அல்ல. நானும், நீங்களும் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் அவரோடு இணைந்துகொள்ள முடியும். இதுவும் அவருடைய அருள்கொடையே.

ஆனால், இது எழுதுவதற்கு மிக எளிது. இதை உள்வாங்கி வாழ்வது மிகக் கடினம். ஏனெனில் கடவுளும் காணாமல் போகும் நேரங்கள் நம் வாழ்வில் வரும். அந்த உச்சகட்ட தனிமையை வெல்வது மிகவும் கடினம். நிறைய எண்ணங்கள் எழுந்து மறையும். நம்மையே வெறுமையாக்கி அழித்துக்கொள்ளும் எண்ணங்களும் சில நேரங்களில் எழும். ஆனால், அது எல்லாமே மூளையின் செயல். மூளை நம்மை ஏமாற்ற வல்லது. மூளையின் ஏமாற்று வேலைக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

நிற்க.

தொடர்ந்து இயேசு மணவுறவு என்பதை உடல் அளவில் உள்ள செயல்பாடாக முன்வைக்கின்றார்.

சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர்.
சிலர் மனிதரால் (மருத்துவரால் அல்லது வேறு ஒரு காரணத்திற்காக) அப்படி ஆக்கப்படுகின்றனர்.
சிலர் அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

இந்த மூன்றாம் நிலை முழுக்க முழுக்க ஒருவரின் தன்னுரிமை மற்றும் கட்டின்மையைப் பொறுத்தது. கத்தோலிக்க அருள்பணி நிலையில் இந்த முன்வருதல் திருத்தொண்டர் நிலைக்கு வரும்போது நடைபெறுகிறது. மணத்துறவு அங்கே வாக்குறுதியாக பெற்றுக்கொள்ளப்படுகிறது. 'நான் விரும்புகிறேன்' என்று திருத்தொண்டர் நிலைக்குள் நுழையும்போது குருமாணவர் ஏற்கின்றார்.

'நான் விரும்புகிறேன் தனிமையை' - என்பதுகூட அதன் பொருளாக இருக்கலாம்.

Wednesday, August 15, 2018

என்னைப் பொறுத்தருள்க!

நாளைய (16 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 18:21-19:1)

என்னைப் பொறுத்தருள்க!

'நான் எத்தனை முறை என் சகோதரர்களை மன்னிக்க வேண்டும்?' என்ற பேதுருவின் கேள்விக்கு, 'எழுபது தடவை ஏழுமுறை' - அதாவது, எண்ணிலடங்கா முறை என பதில் தருகின்றார் இயேசு. அத்தோடு, நமக்குக் கீழ் இருப்பவர்களை நாம் மன்னித்தால்தான் நமக்கு மேலிருப்பவரின் மன்னிப்பைப் பெற முடியும் அல்லது நமக்கு மேலிருப்பவரின் மன்னிப்பைப் பெற்ற நாம் நமக்குக் கீழிருப்பவரை மன்னிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்த உவமை ஒன்றைக் கையாளுகின்றார் இயேசு.

ஒரு அரசன். இரண்டு பணியாளர்கள்.

அரசனிடம் முதல் பணியாள் பத்தாயிரம் தாலந்து கடன் பெறுகின்றான்.ஒரு தாலந்து என்பது ஒருவரின் 6000ஆம் நாள் சம்பளமாகும். ஒரு நாளைக்கு 10 ரூபாய் சம்பளம் என வைத்தால், இந்தப் பணியாளன் அரசனிடம் 60 கோடி கடன் வாங்குகிறான். இந்தப் பணியாளன் தன் உடன் பணியாளனக்கு 100 தெனாரியம் கடன் கொடுத்திருக்கிறான். அதாவது, வெறும் 1000 ரூபாய். தான் பட்ட 60 கோடி ரூபாய் கடனைக் கட்ட முடியாததால் அரசனிடம் வேண்டிக்கொள்ள, அரசனும் மன்னித்து விடுகின்றார் 60 கோடியையும். ஆனால், மன்னிப்பு பெற்ற அடுத்த நாளே, தன்னிடம் 1000 ரூபாய் கடன் பட்ட உடன்பணியாளன் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து சிறையில் அடைக்கின்றான். இவனது செயல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட அரசன் இவன் பிறருக்கு இழைத்த கொடுமையை இவனுக்கே இழைக்கின்றான்.

60 கோடி மன்னிப்பு பெற்றவன் 1000 ரூபாய் பெற்றவனை மன்னிக்க முடியாதா? - என்று நமக்குச் சட்டென கோபம் வருகிறது.

அரசன் எத்தனை கோடி பணத்தை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஏனெனில் அது அவன் பணமில்லையே. ஊரான் பணம்தானே. ஊரான் பணத்தை யாருக்கும் கொடுக்கலாம். இந்தப் பணியாளனுக்கு 1000 ரூபாய் என்பது 4 மாத உழைப்பு. இது இவனுக்கு மிகவும் தேவைப்பட்டதாக இருந்திருக்கலாம். ஆக இவனது செயல் நியாயமானதே.

- என்று நாம் சொன்னாலும்,

அந்தப் பணியாளன் தன் சக பணியாளனிடம் நடந்துகொண்ட விதம்தான் சரியில்லை.

(அ) அவனைப் பிடித்து, (ஆ) கழுத்தை நெரித்து, (இ) சிறையில் அடைக்கின்றான்.

உடன் பணியாளர்கள் வேகமாக போய் அரசனிடம் சொல்லிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பொறாமையாகத் தான் இருந்திருக்க வேண்டும். அல்லது இவர்கள் அந்த அடிபட்ட பணியாளனுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.

பணியாளன் தன் உடன் பணியாளனுக்குக் கொடுத்த தண்டனை நியாயமற்றது.

அதைத்தான் அரசன் கடிந்துகொள்கின்றான். அரசனிடம் இல்லாத சிறைச்சாலையா? அவன் நினைத்தால் முதல் பணியாளனைக் கொன்று கூறுபோட்டிருப்பான். ஆனால், அரசன் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறான். அரசனின் பெருந்தன்மையை, பரிவை அனுபவித்த பணியாளன் தன் உடன் பணியாளனுக்கு அதே பெருந்தன்மையைக் காட்டியிருக்க வேண்டும். இதைக் காட்ட அவன் மறுக்கின்றான்.

பிறரை மன்னிக்க ஒருவருக்குத் தடையாக இருப்பது மேற்காணும் மூன்று காரணிகள்தாம்:

(அ) பிடித்து - ஒருவர் செய்த தவறைப் பிடித்துக்கொண்டு
(ஆ) கழுத்தை நெரித்து - அவரைப் பேச விடாமல் செய்து
(இ) சிறையில் அடைத்து - அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அறுத்து

ஆக,

மன்னிப்பதற்கு மேற்காணும் மூன்று தடைகளையும் ஒருவர் கடக்க வேண்டும். அப்படி கடக்கவில்லை என்றால் அவர் அந்த நிலைக்குக் கடத்தப்படுவார் என்பதே நற்செய்தியின் போதனை.

Tuesday, August 14, 2018

விண்ணேற்பும் விடுதலையும்

'மனிதன் கட்டின்மையோடு பிறக்கிறான். பிறந்தவுடன் எல்லாக் கட்டுக்களுக்கும் ஆளாகிறான்' என்று 'சமூக ஒப்பந்தம்' என்னும் தன் நூலைத் தொடங்குகிறார் ரூசோ. மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தை இந்தச் சமூகத்திற்கு விற்றுத்தான் தங்கள் வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது இவரின் எண்ணம்.

நான் பிறந்தவுடன் - என் குடும்பம், என் நாடு, என் மொழி, என் சமயம், என் இனம், என் கலாச்சாரம், என் உணவுப் பழக்கம், என் ஆதார், என் கடவுச்சீட்டு, என் பான் எண், என் வாகன எண், என் ஓட்டுரிம எண் என என்னைக் கேட்காமலே நான் கட்டுக்களால் கட்டப்படுகிறேன். நான் விரும்பியும் இந்தக் கட்டுக்களை என்னால் உடைக்க முடியாது. உடைக்க நினைத்தாலும் நான் ஒரு கட்டிலிருந்து இன்னொரு கட்டிற்கு மாற்றப்படுவேன். 'இந்தியன்' என்ற என் தேசிய அடையாளம் பிடிக்கவில்லை என்று நான் இத்தாலியில் குடியேறினால் நான் 'இத்தாலியன்' என்ற கட்டைக் கட்டியாக வேண்டும். கட்டின்மை சாத்தியமே அன்று.

அப்படி என்றால், கட்டுக்களோடு இருக்கும், இயங்கும், இறக்கும் எனக்கு கட்டின்மையே கிடையாதா?

உண்டு. கட்டுக்களுக்குள் கட்டின்மை.

அதாவது, நான் ஒரு மாடு என வைத்துக்கொள்வோம். அந்த மாட்டை ஒரு கயிறு கட்டி கம்பத்தோடு இணைத்திருக்கிறது. அந்தக் கயிறு தரும் கட்டின்மைக்குள் நான் இரை தேடிக்கொள்ளலாம். இன்பம் தேடிக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

ஆனால், இந்தக் கட்டிற்கு நான் என்னையே சரணாகதி ஆக்க வேண்டும்.

நாளை நாம் கொண்டாடுகின்ற விண்ணேற்படைந்த அன்னை மரியாள் சொல்லும் வாழ்க்கைப் பாடமும் இதுதான்.

நாசரேத்தில் பிறந்தவர், யூதர், பெண், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றவர் என இவருக்கு நிறைய கட்டுக்கள் இருந்தாலும், அந்தக் கட்டுக்களுக்குள் இறைத்திட்டத்திற்கு - கட்டுக்கள் இல்லாதவர்க்கு - 'ஆம்' என்று சொன்னதால் கட்டுக்களை வென்றவர் ஆகிறார். பாவம் இல்லாத அவருடைய உடலை இறப்பும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து 72 ஆண்டுகளுக்கு முன் நாம் கட்டின்மை அடைந்தோம். ஆனால், இன்று நான் என்னையே அநீதி என்னும் கட்டுக்களுக்குக் கையளிக்காமல், இக்கட்டின்மை தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி என் கட்டுக்களை நீக்கி, பிறர் கட்டுக்களைகத் தளர்த்த உதவினால், என் விடுதலையும் விண்ணேற்பே.

அனைவருக்கும் விடுதலை மற்றும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்.

Monday, August 13, 2018

இச்சிறியோருள்

நாளைய (14 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 18:1-5, 10-14)

இச்சிறியோருள்

வில்லியம் ப்ளேக் அவர்களின் புகழ்பெற்ற பாடல் வரிகள் உண்டு:

'ஒரு துளி மணலில் உலகைப் பார்க்க...
ஒரு துளி நீரில் கடலைப் பார்க்க...
ஒரு துளி நொடியில் முடிவில்லாக் காலத்தைப் பார்க்க...'

அதாவது, ஞானியர் சின்னஞ்சிறியவற்றில் அவற்றின் மொத்த வளர்ச்சியைக் காண்பர்.

கணியன் பூங்குன்றனார் இயற்றியதாகச் சொல்லப்படும் புறநானூறு 192ஆம் பாடலிலும் இதையொத்த கருத்து ஒன்று உண்டு:

'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
... ... ...
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.'

அதாவது, பூங்குன்றனாரின் பார்வை தெளிந்த பார்வையாக இருக்கிறதாம். ஆகையால்,

மாட்சியில் பெரியவரை அவர் வியந்து பார்ப்பதும் இல்லை.
மாட்சியில் சிறியவரை அவர் இகழ்வதும் இல்லை.

ஏனெனில், இன்று சிறியவராக இருப்பவருக்குள் பெரியவராக மாறும் ஆற்றல் உண்டு என்பதை அவர் அறிந்துகொள்கிறார்.

நாளைய நற்செய்தி வாசகம் முழுவதும், 'சிறியோர்,' 'காணாமல்போனவர்,' 'சிறுபிள்ளை' 'தவறி அலைபவர்' என யார் பார்வையிலும் படாதவர்கள் பற்றிய சொல்லாடல்கள் நிரம்பி இருக்கின்றன.

'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்' எனவும், 'வழிதவறிய ஆட்டை - 99வுடன் ஒப்பிடும் போது 1 மிகச் சிறியது - தேடிக் கண்டுபிடிப்பதில் மகிழுங்கள்' எனவும் சொல்கிறார் இயேசு.

சிறியவர்கள் பெரியவர்கள் ஆகும் ஆற்றல் நிலையில் இருக்கிறார்கள்.

ஆக, சிறியதின் ஆற்றலை அறிந்துகொள்ள நம்மை நாளைய நற்செய்தி வாசகம் அழைக்கின்றது.

நாளை நாம் கொண்டாடும் தூய மாக்ஸி மிலியன் கோல்பே அவர்களின் திருநாளும் இதே பொருளைத்தான் தருகின்றது. வதைமுகாமில் சித்ரவதைக்குள்ளான அவர் தன் உடன்கைதிக்குப் பதிலாக தான் இறக்க முன்வருகின்றார். அதாவது, 'நான் ஒரு அருள்பணியாளர். நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. நான் இல்லையென்றால் இந்த உலகில் எதுவும் நடக்காது. நான் எல்லாக் குடும்பங்களுக்கும் பொதுவானவன். நான் பெரியவன்' என்ற எந்த எண்ணமும் இல்லாமல், தன் உடன் கைதிக்கு உள்ள சிறிய குடும்பம் இவருக்குப் பெரிதாகத் தெரிந்ததால் தன்னையே கையளிக்க முன்வருகின்றார்.

அந்தச் சிறிய உடன் கைதியிலும் இவர் பெரிய உலகத்தைப் பார்த்ததால்தான் இவரால் தற்கையளிப்பு செய்ய முடிந்தது.

'சிலர் கடற்கரையில் நின்று, 'எவ்வளவு தண்ணீர்த்துளிகள்!' என்று வியப்பர்.
வெகுசிலரே கடற்கரையில் நின்று, 'எவ்ளோ பெரிய தண்ணீர்த்துளி!' என்று வியப்பர்' என்கிறார் கலீல் கிப்ரான்.

சிறிதினும் சிறிது கேட்க, சிறிது சிறிது பேண அழைக்கப்படுகிறோம் நாம்.


Sunday, August 12, 2018

வரி செலுத்துவதில்லையா?

நாளைய (13 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 17:22-27)

வரி செலுத்துவதில்லையா?

தன் பாடுகளை இரண்டாம் முறை தன் சீடர்களுக்கு அறிவிக்கின்றார் இயேசு. இரண்டாம் முறை பாடுகளின் முன்னறிவைப்பைக் கேட்கின்ற சீடர்கள் மிகவும் துயரம் அடைகின்றார்கள்.

தொடர்ந்து ஒரு விநோதமான நிகழ்வை நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இந்த இறைவாக்குப் பகுதி மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது.

இயேசு கப்பர்நகூமுக்கு வந்தபோது, கோயில் வரி வாங்குபவர் பேதுருவிடம் வந்து, 'உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?' என்று கேட்கின்றார். அவர், 'ஆம், செலுத்துகிறார்' என்கிறார்.

ஆனால், இயேசு வீட்டிற்குள் வந்தவுடன் பேதுருவை, 'சீமோனே' என அழைத்து கேள்வி ஒன்று கேட்கின்றார்: 'யாரிடமிருந்து வரி பெறப்படுகிறது?' 'தங்களிடமிருந்தா?' 'மற்றவர்களிடமிருந்தா?' 'மற்றவர்களிடமிருந்து' என பேதுரு விடை தருகின்றார். 'குடிமக்கள் கட்டுப்பட்டவரல்லர்' என்று சொல்லிவிட்டு, 'இருந்தாலும் போய்க் கட்டு' என்று பேதுருவை மீன் தூண்டிலோடு அனுப்புகின்றார். மீனின் வாயில் உள்ள நாணயத்தால் வரி கட்டப்படுகிறது.

இந்த நிகழ்வின் பின்புலம் என்ன?

இயேசுவின் காலத்தில் இஸ்ரயேல் மற்றும் யூதா உரோமையர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆக, கோயிலும் உரோமையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் மட்டுமே கோவில் வரியிலிருந்து விலக்கு பெற்றிருந்தனர். மேலும், யூதர்களின் ஆலயமாகவே அது இருந்தாலும் அவர்கள் அந்த ஆலயத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால், இயேசு இங்கே ஒரு மௌனப் புரட்சி செய்கின்றார். 'குடிமக்கள் வரிக்குக் கட்டுப்பட்டவரல்லர்' என்று சொல்வதன் வழியாக அவர் தன்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்றும், ஆலயத்தின் தலைமகன் தானே என்றும் மறைமுகமாகச் சொல்கின்றார்.

இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்திற்குப் பின் யூதர்களாயிருந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனபோது அவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினர்:

அ. கிறிஸ்தவத்திற்கு மாறிய பின்பும் ஒருவர் யூத ஆலயத்திற்கு வரி கொடுக்க வேண்டுமா?
ஆ. கிறிஸ்துவே நம் அரசராக இருக்க நாம் ஏன் அகஸ்து சீசருக்கும் உரோமைக்கும் வரி கொடுக்க வேண்டும்?

சில ஆண்டுகளில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆக, அந்த வரிப் பிரச்சினை தீர்ந்தது. ஆனால், இரண்டாவது பிரச்சினை அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்த இடத்தில்தான், 'சீசருக்கு உரியது சீசருக்கும், கடவுளுக்கு உரியது கடவுளுக்கும்' என்ற போதனை வருகிறது. இருந்தாலும் தாங்கள் கொடுக்கின்ற வரி மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்கும், தீமையான செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டபோது அவர்கள் வரி செலுத்தாமல் புரட்சியும் செய்தனர்.

நிற்க.

ஜூலை மாதம் இறுதியில் நம் நாட்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குடிமக்களாகிய நம் கடமை. இந்த ஆண்டு அதை ஆகஸ்ட் இறுதி வரை தளர்த்தியிருக்கிறார்கள். வரிதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. ஆனால், மக்களுக்கு தேவையற்ற சுமைகளைச் சுமத்தி அவர்கள் படும் துன்பத்தில் பங்கேற்காத அரசு அவர்களின் வருமானத்தில் பங்குகேட்டு அவர்களுக்குப் புதிய திட்டங்களால் இன்னும் சுமையை அதிகமாக்குவது நடங்கேறுவது வருத்தமாக இருக்கிறது.

கோஹ்லி என்ற கிரிக்கெட் வீரர் ஃபிட்னெஸ் சவால் விட்டார் என்பதற்காக, நம்ம பிரதமர் ஒரு குச்சியைக் கையில் பிடித்துக்கொண்டு இங்குமங்கும் நடந்து, கல்லில் மல்லாக்கப் படுத்து ஒரு காணொளி வெளியிட்டார். 3 நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளி உருவாக்கத்திற்கான செலவு 31 இலட்சங்களாம். வறுமை ஒழிப்பு சேலன்ஜ், குழந்தைகள்-பெண்கள் பாதுகாப்பு சேலன்ஜ் என இவர் சேலன்ஜ் ஏற்றால் பரவாயில்லை. ஒன்றுக்கும் உதவாத சவால்களுக்கும், வீண் பயணங்களுக்கும் வரிப்பணம் செலவழிக்கப்படுவது வேதனைக்குரியது.
இந்த இடத்தில் எம்.ஆர். ராதா அவர்களின் ரத்தக்கண்ணீர் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது: 'நீங்கள் இந்தியாவிலே பிறந்தவர்கள். உங்கள் தலைவிதி இப்படி!'

Friday, August 10, 2018

நம்பிக்கைக் குறைவு

நாளைய (11 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 17:14-20)

நம்பிக்கைக் குறைவு

நாளைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களால் ஓட்ட முடியாத பேயை தான் ஓட்டிவிட்டு, அவர்கள் தன்னிடம், 'எங்களால் ஏன் ஓட்டமுடியவில்லை?' என்ற கேட்டபோது, 'உங்களது நம்பிக்கைக் குறைவுதான் காரணம்' என பதில் தருகின்றார் இயேசு.

மேலும், 'உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து, 'இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாது' என்கிறார்.

'மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்று கூறுவது நடக்குமா?'

இந்தக் கேள்வி எனக்கு சிறுவயதிலிருந்தே எழுந்ததுண்டு. நம்பிக்கை என்பதை நாம் இங்கே எப்படி வரையறை செய்வது? நம்பிக்கை என்பது வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டை ஐயமின்றி ஏற்றுக்கொள்வதா?

எடுத்துக்காட்டாக, 'கடவுள் ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கிறார்' என்பது நமக்கு இயேசு வழியாக, இறைவார்த்தை வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இந்த வெளிப்பாட்டிற்கு எந்தவொரு ஐயமின்றி நான், 'ஆம்' எனச் சொல்லும்போது இதை முழுமையாக நம்புகிறேன். இப்போது நான் என் கண்முன் இருக்கும் ஒன்றைப் பார்த்து, 'இங்கே போ!' 'அங்கே போ!' என்றால் போகுமா? போகாது. மேலும், அப்படி நடந்தால் உலகத்தில் எந்நேரமும் நிலநடுக்கங்களும், அதிர்வுகளும்தான் இருக்கும். ஒரே நிமிடத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை கொஞ்சம் தமிழகத்திற்கு நகர்த்தி நாமும் பருவமழை பெற்றுக்கொள்ளலாம்.

இயேசுவின் சொல்லாடல் நேருக்கு நேர் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அன்று. 'நம்பிக்கை கொண்டால் எல்லாம் நடக்கும்' என்பதை மிகவும் மிகைப்படுத்திச் சொல்வதுதான் 'மலை அங்கே போகும் இங்கே போகும்' என்பது.

நம்பிக்கையினால் ஏதாவது நடக்குமா?

'இறைவனால் இது முடியும்' என்று நம்புவதுதான் நம்பிக்கை.

ஆக, நம்பிக்கை என்பது 'அவருக்கு இது சாத்தியம்' என்ற உறுதியான நிலையில் நான் இருப்பது.

சீடர்கள் தங்கள் செயலால் பேயை ஓட்டிவிடலாம் என நினைத்தனர். ஆனால் அவர்களின் செயல் அதற்குப் போதுமானதாக இல்லை. 'நம்புகிறவனுக்கு எல்லாம் ஆகும்!' என்கிறார். இங்கே நம்புபொருள் இறைவனாக இருத்தல் வேண்டும்.

இருந்தாலும்,

நம்பிக்கை என்பது ஒய்ஃபை சிக்னல் போல. சில நேரங்களில் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். எல்லா இணைப்பும் ரொம்ப வேகமாக இருக்கும். வேலை எளிதாக முடியும். சில நேரங்களில் 'மினுக்,' 'மினுக்' என்று மெதுவாக மின்னிக்கொண்டிருக்கும். எதுவும் இணையாது. எந்த வேலையும் முடிவுபடாது. ஆனாலும், இணைப்பில் நாம் இருக்க வேண்டும்.

அவருடைய இணைப்பில் இருந்தால் எந்தவொரு இணைப்பும் இனிதே என எண்ணுவதும் நம்பிக்கையே.

Thursday, August 9, 2018

தொண்டரும் இருப்பார்

நாளைய (10 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (யோவா 12:24-26)

தொண்டரும் இருப்பார்

தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் இம்மண்ணில் இல்லாத முதல் நாள் இந்நாள். வங்காள விரிகுடாக்கரையில் துயில்கொள்ளும் இவருக்கு நம் இதய அஞ்சலி.

நேற்றைய தினம் ராஜாஜி அரங்கில் புறப்பட்ட இவருடைய இறுதிப்பயணம் மெரினாவை வந்தடைந்தபோது ஏறக்குறைய எங்கும் மனிதத் தலைகளே தெரிந்தன. 'தலைவா, தலைவா' என்ற கோஷங்கள் வேறு. 'திரும்பி வா தலைவா!' என்று மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தவர்கள் சோகத்தோடு தலைவரை வழியனுப்பினார்கள்.

தலைவர் இருக்கும் இடத்தில் தொண்டரும் இருக்க வேண்டும் என்பது அரசியல் நியதி.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் இதையே சொல்கிறார்:

'எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்.
நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்' என்கிறார் இயேசு.

தங்கள் தூக்கம் மறந்து, தங்கள் குடும்பம் மறந்து, தங்கள் வேலை மறந்து தங்கள் தலைவருக்காகக் காத்திருந்த தொண்டர்கள் ஏறக்குறைய வீடு திரும்பியிருப்பார்கள். தலைவர் இருக்கும் இடத்தில் இனி அவர்களுக்கு வேலையில்லை. இனி இவர்கள் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலும் இருப்பார்கள். அரசியலில் தொண்டர் நிலை என்பது குறுகிய காலம் மட்டுமே இருக்கக் கூடியது. ஏனெனில், தொண்டர்கள் யாவரும் சீக்கிரம் தலைவர் ஆகவேண்டும் எனவே இங்கு விரும்புவார்கள்.

இயேசு சுட்டிக்காட்டும் தொண்டர்நிலை எப்படிப்பட்டது?

இயேசு காட்டும் தொண்டர்நிலை முடிவற்றது. அந்த நிலையை ஏற்க ஒருவர் நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவெடுத்தபின் திரும்பிச் சென்றுவிட முடியாது. மேலும், இயேசு இருக்கும் இடத்திலேயே அவர் என்றும் இருக்க வேண்டும். அவரின் மதிப்பீடுகள் இவரின் மதிப்பீடுகளாக, அவரின் செயல்கள் இவரின் செயல்களாக இருத்தல் வேண்டும்.

மேலும், இந்த நிலையில் ஒருவர் 'மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ' இருக்க முடியாது. மாறாக, 'முகமலர்ச்சியோடுதான்' இருக்க வேண்டும்.

நாளைய நாம் கொண்டாடும் தூய லாரன்ஸ் தன் தலைவரைப் போல இருக்க விரும்பினார். தன் தலைவர் என்னும் கோதுமை மணி இறந்ததுபோல தானும் இறக்க விரும்பினார். தன் தலைவரை இறப்பிலும் பின்பற்ற விரும்பினார்.

ஒரு சிறிய இடத்தில், சிறிய அளவு மக்களை ஆட்சி செய்த தலைவருக்கே தொண்டர்கள் இவ்வளவு என்றால், இயேசுவுக்கு எவ்வளவு தொண்டர்கள் என நாம் யோசிக்கலாம்!

அவருக்குத் தொண்டர்கள் குறைவே!

ஏனெனில் அவர் முன்வைக்கும் விதிமுறைகள் பல.

மேலும், அதன் வெகுமதியும் பல.


Wednesday, August 8, 2018

இது வேண்டாம்

நாளைய (9 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 16:13-23)

இது வேண்டாம்

நாளைய நற்செய்தி வாசகத்தில் பிலிப்பு செசரியா பகுதிக்கு வருகை தருகின்ற இயேசு, தம் சீடரிடம், 'மக்கள் - நீங்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்-சொல்கிறீர்கள்?' என்னும் கேள்விகளைக் கேட்கின்றார். பேதுரு மட்டும்தான் சரியான பதிலைச் சொல்லுகின்றார்.

சொன்னவுடன் இயேசு அவரைப் பாராட்டி, 'மண்ணுலகில் நீ தடை செய்வது அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்' என்கிறார்.

பேதுருவுக்கு ஒரு குட்டி ஆசை.

'நான் இங்கே தடை செய்தால் உண்மையிலேயே அங்கே தடை ஆகுமா?'

இதை எப்படி சோதனை செய்து பார்ப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, இயேசு மாட்டிக்கொள்கிறார். தொடர்ந்து இயேசு தன் பாடுகள் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

'இதுவே தகுந்த தருணம்' என நினைக்கின்ற பேதுரு, இயேசுவிடம், 'ஆண்டவரே, இது வேண்டாம். உமக்கு இப்படி நடக்காது' என்று தடை செய்கின்றார்.

இயேசுவின் வாக்குறுதியின்படி பேதுரு இங்கே தடை செய்வது அனைத்தும் அங்கேயும் தடை செய்யப்படும். இல்லையா?
'என்னடா இது நமக்கு வந்த சோதனை. சொல்லி முடிக்குமுன்பே நம்மைச் சோதித்துவிட்டானே' என எண்ணுகின்ற இயேசு, உடனே காச் மூச் என்று கத்தி, 'அப்பாலே, போ! சாத்தானே!' என்று சொல்லி பேதுருவின் வாயை மூடுகின்றார்.

பேதுரு சொன்னது சரிதானே?

இயேசுவுக்கு நல்லதுதானே அவர் நினைத்தார்.

அப்புறம் ஏன் இயேசு அவரைக் கடிந்துகொள்கிறார்.

இயேசு கடிந்துகொள்வதன் பொருள் இதுதான்:

முந்தைய நிகழ்வில் பேதுரு ஒரு படி மேலே நின்று பேசினார். அதாவது அவருடைய எண்ணம் மேல்நோக்கியதாக, கடவுளுக்கு இணையானதாக இருந்தது. தன் கண்ணுக்குத் தெரியாத ஒன்றை அங்கே நம்பிக்கைக் கண் கொண்டு பார்த்தார் பேதுரு.

ஆனால் இந்த நிகழ்வில் பேதுரு ஒரு படி கீழே இறங்கி விடுகின்றார். அவருடைய எண்ணம் கீழ்நோக்கியதாக, மனிதருக்கு இணையானதாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரிவதோடு தன் பார்வையை நிறுத்திக்கொள்கிறார்.

ஆக, பேதுரு எப்போது மேல்நிலையில் நிற்கிறாரோ அப்போதுதான் அவருடைய 'பவர்' வேலை செய்யும். கீழே இறங்கினால் அது அவருக்கே திரும்பிவிடும்.

இவ்வாறாக, 'ஆண்டவரே, வேண்டாம்' என்று சொல்வதற்கு ஒன்று, நாம் ஆண்டவருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது ஆண்டவரைப் போல இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், 'இது வேண்டாம். அது வேண்டாம். என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும். அப்படித்தான் இருக்கணும்' என்று சொன்னால் மிஞ்சுவது ஏமாற்றமே.


Tuesday, August 7, 2018

மேசைமேல் நாய்க்குட்டி

நாளைய (8 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 15:21-28)

மேசைமேல் நாய்க்குட்டி

நாளைய நற்செய்தி வாசகத்தில் கானானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பற்றி வாசிக்கின்றோம்.

'வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்' என்பதும், 'வாய் நினைத்தால் பல்லக்கிலும் ஏறும், பல்உடையும் வாங்கும்' என்பதும் நாம் கேட்டறிந்த முதுமொழிகள்.

'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்கிறது இயேசுவின் வாய்.

'ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் திண்ணுமே' என்கிறது கானானியப் பெண்ணின் வாய்.

இது ஒரு உருவகம்.

நாய்க்குட்டிகள் நம் வீட்டில் வளர்த்திருப்போம். நாமாக எடுத்து வைத்தாலன்றி நாய்க்குட்டிகள் நம் தட்டுக்குள் தங்கள் தலையை விடுவதில்லை. மேசையிலிருந்து கீழே விழும் சிறு துண்டுகளைப் பற்றிப் பேசுகிறார் இயேசு. மேசையில் அமர்ந்து சாப்பிடும் வசதி அல்லது வழக்கம் இல்லாத வீடுகளில், பாய்களில் அமர்ந்து உண்ணும்போது பாய்க்கு வெளியே விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகளோ, பூனைக்குட்டிகளோ உண்பது வழக்கம்.

மேசை உருவகத்தையே எடுத்துக்கொள்வோம்.

மேசை. மேசையில் வீட்டு உரிமையாளர். மற்றும் பிள்ளைகள். இவர்கள் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மேசைக்குக் கீழே நாய்க்குட்டி இருப்பதை அவர்கள் பார்க்கவில்லை. குழந்தைகள் எடுத்துச் சாப்பிடும்போது சில துண்டுகள் கீழே சிதறி விழுகின்றன. அவற்றைக் கீழிருக்கும் நாய்க்குட்டி சாப்பிடுகிறது.

'நம்பிக்கை' என்பது 'கண்ணுக்குத் தெரியாதது நிகழும் என்ற ஐயமற்ற நிலை'

இயேசுவின் கண்களுக்கு மேசையும், உரிமையாளரும், பிள்ளைகளும்தான் தெரிந்தனர். ஆனால் கானானியப் பெண்ணின் கண்களுக்கு நாய்க்குட்டியும், அது பசியாறுவதும் தெரிகின்றது. இதுதான் நம்பிக்கை. காணாததைக் காணும் ஐயமற்ற நிலை. இந்த ஐயமற்ற நிலையை, உடனடியாக அறிக்கையிடுகின்றார் பெண். ஆக, நாம் காணும் மேசையையும் தாண்டி ஒரு உலகம் இருக்கின்றது என்றும், அந்த உலகத்திலும் உயிர்கள் உண்கின்றன என்றும் சொல்கின்றார் அப்பெண். மேலும், நாய்க்குட்டி கீழே தரையில் இருப்பதால் தாழ்ந்தது அல்ல என்றும், மேசையில் ஒருவர் அமர்ந்திருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்லர் என்றும், மேலிருப்பவரும், கீழிருப்பவரும் உண்பது ஒரே உணவும்தான் என ஓங்கி அறைகின்றார் பெண்.

பெண்ணின் இந்த வார்த்தைகள் அவரை மேசைக்கு உயர்த்துகின்றன.

நாய்க்குட்டிபோல இருந்தவர் தன் நம்பிக்கையால் வீட்டின் உரிமையாளர் ஆகின்றார்.

இந்தப் பெண்ணின் புத்திக்கூர்மையும், சமயோசித புத்தியும் பாராட்டுதற்குரியவை.

நம்பிக்கையையும் தாண்டி பெயரில்லா இந்தப் பெண் நாம் பேசும் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் காலத்தால் அழியாக கண்ணாடியாக முகம் காட்டுகிறாள்.

Monday, August 6, 2018

மனவேதனை

நாளைய (7 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 15:1-2,10-14)

மனவேதனை

நாளைய நற்செய்தி வாசகத்தில், 'உம் சீடர் மூதாதையர் மரபை மீறுவதேன்?' என்ற பரிசேயர்களின் கேள்விக்கு, 'உள்ளே-வெளியே தீட்டு' பற்றிப் பேசி அவர்களின் வாயடைக்கின்றார் இயேசு. இயேசுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டு பரிசேயர் மனவேதனை அடைகின்றனர். இதை உணர்ந்த சீடர்கள் இயேசுவிடம், 'பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?' எனக் கேட்கின்றனர். 'ஓ...அப்படியா...ஐ ஆம் வெரி ஸாரி' என்று சொல்லாத இயேசு, 'அவர்கள் குருட்டுவழிகாட்டிகள்' என இன்னும் சாடுகின்றார். எனக்கென்னவோ பரிசேயர்களின் மேல் உள்ள கோபத்தைத் தூண்டிவிடவே சீடர்கள் இப்படிச் சொன்னார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

'நான் என்ன பேசுகிறேன் என்பதற்கு நான் பொறுப்பு. ஆனால் நீ என்ன புரிந்துகொள்கிறாய் என்பதற்கு நான் பொறுப்பல்ல' என்று சொல்கிறார் பெர்னார்ட் ஷா அல்லது சர்ச்சில் அல்லது சே குவேரா அல்லது ஏதோ ஒரு அறிஞர்!

'காயம்பட்ட உணர்வு' என்;பதன் வீரியமான உணர்வே 'மனவேதனை.'

உதாரணத்திற்கு, நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எனக்கு முன்னால் இருக்கும் ஒருவர், 'டேய்...இவ்வளவு சாப்பிடுற...குறைத்து சாப்பிடுடா' என்று என்னிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரின் வார்த்தையால் நான் காயப்படுகிறேன். அது காயம். அது ஒரு உடனடி உணர்வு. ஆனால், அந்த நிகழ்வை நான் இரவில் தூங்குமுன் படுத்துக்கொண்டு அசைபோட்டுக்கொண்டு, 'இவன் இப்படிப் பேசிவிட்டானே' என்று நினைத்து கோபம் அல்லது வெறுப்பு அல்லது பயம் கொள்வது 'மனவேதனை.' காயம் கூடக்கூட மனவேதனை கூடுகிறது. பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு இந்த அளவிற்கு மனவேதனை அடைந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் பரிசேயர்கள் இயல்பாகவே யாருடைய வார்த்தைகளையும் கண்டுகொள்ளாதவர்கள். எல்லா வார்த்தைகளுக்கும் தாங்களே பொறுப்பு என எண்ணியவர்கள். ஆக, அவர்கள் எளிதாகக் காயப்படவும் மாட்டார்கள். மனவேதனை அடையவும் மாட்டார்கள். சீடர்களின் வேலைதான் இது. அவர்களைப் பற்றி இயேசுவிடம் போட்டுக்கொடுத்து அவரை இன்னும் கொஞ்சம் திட்ட வைக்கின்றனர். இது அதிகாரம் உள்ள இடங்களில் அடிக்கடி நடக்கும். ஆயருக்கு ஒரு குருவானவரை அல்லது ஒரு பங்குத்தந்தைக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்று மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அவரைப் பற்றி ஏதாவது சொல்லி இன்னும் கொஞ்சம் திட்ட வைத்து அதில் இன்புறுவார்கள். சீடர்கள் இப்படி ஒரு காரணத்திற்காகச் செய்திருந்தார்கள் என்றால் அவர்களைப் பார்த்து நாம் பரிதாபம்தான் படவேண்டும்.

'நான் அனுமதித்தால் ஒழிய யாரும் என்னைக் காயப்படுத்த முடியாது' என்பதுதான் நிதர்சனமான உண்மை. பரிசேயர்கள் தங்கள் மூதாதையர் மரபில் தெளிவாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்வது, சொல்வது எல்லாம் சரிதான். ஆக, இன்னொருவர் மாற்றிச் சொன்னார் என்பதற்காக அவர்கள் காயப்படவில்லை. தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும் இல்லை.

இந்த உணர்வுநிலையில் நாம் இதை நிறுத்திக்கொள்வோம்:

இன்று யாருடைய சொற்களும், செயல்களும் என்னைக் காயப்படுத்த, எனக்கு மனவேதனை தர நான் அனுமதிக்க மாட்டேன் என முடிவெடுப்போம்.

Sunday, August 5, 2018

விடிவெள்ளி

நாளைய (6 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மாற் 9:2-9)

விடிவெள்ளி

நாளை நம் ஆண்டவரின் தோற்றமாற்றப் (உருமாற்றம்) பெருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். தாபோர் மலையில் தன் நெருங்கிய சீடர்கள் பேதுரு, யோவான், யாக்கோபு முன் உருமாறுகின்றார் இயேசு. எலியாவும், மோசேயும் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். மேகத்திலிருந்து தந்தையின் குரல் கேட்கிறது.

இந்த நிகழ்வைப் பற்றி தன் திருஅவைக்கு எழுதுகின்ற பேதுரு (நாளைய இரண்டாம் வாசகம்) மிக அழகான வரியோடு நிகழ்வை நிறைவுசெய்கின்றார்:

'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை
அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது' (2 பேதுரு 1:19)

கடந்த வாரம் சந்திர கிரகணம் தோன்றியது. அந்த நிகழ்வில் நிலவு செந்நிறமாய் ஒளிவீச அதன் அருகில் குட்டியாய் வெள்ளையாய் செவ்வாய் கிரகம் மின்னியது. ஒவ்வொரு நாள் காலையிலும் நிலவிற்கு அருகில் தெரியும் விடிவெள்ளி புதன் கிரகம் என்பதை நாம் அறிவோம். பொழுது புலரும்போதுதான் அந்த விடிவெள்ளி தோன்றும். அந்த விடிவெள்ளி அந்நேரம் தோன்றுவதால் அது அதுவரைக்கும் மறைந்திருந்தது என்பது பொருள் அல்ல. மாறாக, அது ஒட்டுமொத்த இருளில் எங்கோ ஒளிர்ந்துகொண்டிருந்தது.

ஆக, விடிவெள்ளி என் உள்ளத்தில் எழும்வரை அது எங்கோ ஒளிரும் விளக்குத்தான்.

இன்று தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' நூலில் அவரின் மனமாற்றப் பகுதியினை (நூல் 8) மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். தன் நண்பன் ஆல்பியுஸ் கிளாடியேட்டர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகப் பாவிப்பதைப் பார்த்து அகுஸ்தினார், 'நீ வெற்றி பெறும் வரை மற்றவர்கள் பெறும் வெற்றி வெறும் வேடிக்கையே. ஆக, நீ உன் வாழ்வை அதிலிருந்து திருப்பி அவசியமானவற்றில் அக்கறை கொள்' என்கிறார். நாம் என்னதான் கிரிக்கெட் பார்த்து கோஹ்லி அவர்களின் அல்லது கால்பந்து பார்த்து பிரான்சின் வெற்றியைக் கொண்டாடினாலும், அந்த வெற்றி நமதாகிவிடப்போவதில்லை. அது எங்கோ ஒளிரும் விளக்காக இருக்கின்றது. ஆனால், என் வாழ்வில் நானே வெற்றிபெறும்போது அது என் வாழ்வின் விடிவிளக்காக மாறுகிறது.

இயேசுவின் உருமாற்றத்தின்போது எழுந்த ஒளியை எல்லாரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்காததால் அது எங்கோ மின்னும் ஒளிதான். ஆனால் உடனிருந்த திருத்தூதர்களுக்கு அது விடிவெள்ளியாக மாறி அவர்களின் வாழ்வின் விடியலை முன்னுரைக்கின்றது.

எங்கோ ஒளிரும் விளக்கு என் வாழ்வின் விடிவெள்ளியாக மாற நான் இயேசுவோடு மலைமேல் ஏற வேண்டும். மலையின் தனிமையை அனுபவிக்க வேண்டும். காட்சிகள் மாறி மறைந்தாலும், மீண்டும் தனிமை பிறந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையின் குரல் கேட்க வேண்டும்.

என் வாழ்வின் வெற்றி எது என்பதை எனக்கு வெளியில் இருப்பவர் முடிவுசெய்யக்கூடாது. எனக்கு உள்ளிருக்கும் நபர்தான் முடிவுசெய்ய வேண்டும். என் வாழ்வின் விடிவெள்ளியை நான் காண, அதுவே என் வாழ்வின் உருவை மாற்ற உருமாற்றத்தின் ஆண்டவர் அருள்கூர்வாராக!


Friday, August 3, 2018

சந்தர்ப்ப அறநெறி

நாளைய (4 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 14:1-12)

சந்தர்ப்ப அறநெறி

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் உருவெடுத்த அறநெறியின் பெயர் 'சந்தர்ப்ப அறநெறி' (சிட்டுவேஷன் எதிக்ஸ்). இதை முன்மொழிந்தர் ஜோசப் ஃப்ளட்சர் என்பவர். இவருக்கு முன் அறநெறியில் இரண்டு புலங்கள் மேலோங்கியிருந்தன: (அ) அதிகப்படியான சட்டம் - சட்டம் எல்லாருக்கும் பொதுவானது, (ஆ) சட்டம் இல்லாத நிலை - யாருக்கும் சட்டம் தேவையில்லை. இந்த இரண்டிற்கும் இடைப்பட்டதாக வருவதுதான் சந்தர்ப்ப அறநெறி. அதாவது, ஒவ்வொரு செயலின் நன்மை, தீமையும் அதைச் செய்பவரின் சந்தர்ப்பத்தை, சூழலைப் பொறுத்தே அமைகிறது. ஆக, உலகெல்லாத்துக்குமான அறநெறி என்று எதுவும் கிடையாது. ஆனால் இப்படி யோசித்தால் எல்லாரும் செய்வது சரி என்று ஆகிவிடுமே என்று நினைத்த அவர் அன்பை மையமாக வைக்கிறார். அதாவது, அன்பை அளவுகோலாக வைத்துச் செய்யப்படும் எந்தச் செயலும் சரியானதே.

எடுத்துக்காட்டாக, ஒரு தாய் தன் குழந்தையோடு பேருந்தில் பயணம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரோடு பயணம் செய்பவர் திடீரென்று குழந்தையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு ஓட விரும்புகிறார். அப்படி ஓடமுனைபவரைத் தன் கையால் இருக்கும் பையால் அடித்துவிடுகின்றார் பெண். அவர் குழந்தையைக் கீழே போட்டுவிடுகின்றார். ஆனால், கீழே விழுந்த அவர் இறந்துவிடுகின்றார். இப்போது இந்தப் பெண் கொலை செய்தாரா? என்ற கேள்விக்கு சந்தர்ப்ப அறநெறி சொல்வது 'இல்லை.அவர் குழந்தையின்மேல் உள்ள அன்பால் அப்படிச் செய்தார்.'

ஆனால் சந்தர்ப்ப அறநெறி எல்லாருக்கும், எல்லா நேரங்களிலும் பொருந்துமா?

நாளைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

இந்த நிகழ்வில் நான்கு கதைமாந்தர்களைப் பார்க்கிறோம்:

அ. ஏரோது
ஆ. ஏரோதியா - பிலிப்பின் மனைவி. ஆனால் ஏரோதை அன்பு செய்பவள்.
இ. சலோமி - ஏரோதியாவின் மகள்
ஈ. திருமுழுக்கு யோவான்

'சந்தர்ப்பம்' என்ற வார்த்தையை வைத்துப் பார்த்தால்,

அ. ஏரோது 'சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்'
ஆ. ஏரோதியா 'சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்'
இ. சலோமி 'சந்தர்ப்பத்தை செயல்படுத்துகிறார்'
ஈ. திருமுழுக்கு யோவான் 'சந்தர்ப்பத்திற்கு பலியாகிறார்'

சந்தர்ப்ப அறநெறியின்படி பார்த்தால் மேற்காணும் நான்கு பேர்களின் செயல்களும் சரியானதே:

அ. ஏரோதுக்கு தன் வாக்குறுதி பெரிதாக இருந்தது.
ஆ. ஏரோதியாவுக்கு தன் காதல் பெரிதாக இருந்தது.
இ. சலோமிக்கு தன் தாய்க்குக் கீழ்ப்படிதல் பெரிதாக இருந்தது.
ஈ. யோவானுக்கு நீதி பெரிதாக இருந்தது.

எல்லாரும் தத்தம் அன்பு நிலையில்தான் செயல்பட்டார்கள். ஆனால், சந்தர்ப்பத்திற்கு விலைபோனது என்னவோ ஒரு மாசற்ற உயிர்.

நாளைய முதல் வாசகத்திலும் தான் உருவாக்கிய இறைவாக்கு என்னும் சந்தர்ப்பத்திற்காக ஏறக்குறை கொலை செய்யப்படுகின்றார் எரேமியா.

சந்தர்ப்ப இறையியலைக் கடந்த வாழ்வியல் உண்டா?

நாளை நாம் கொண்டாடும் தூய மரிய வியான்னிதான் அந்த வாழ்வியல். மறைமாவட்ட அல்லது பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலர் என்று சொல்லப்படும் இவரின் வாழ்வில் எந்தச் சந்தர்ப்பமும் கூடி வரவில்லை. குருமடத்தில் இவர் மக்கு. உடல்நலத்தில் இவர் ஒரு நோயாளி. நலிந்த தேகம். யாரையும் ஈர்க்காத கண்கள். யாரும் கேட்கமுடியாத பேச்சாற்றல். இவைதான் தன் சந்தர்ப்பம் என அவற்றின் கைதிகளாகிவிடவில்லை இவர்.

தன்னை அழைத்தவர் நம்பிக்கைக்குரியவர் என்ற நிலையில் எளிமை, மணத்துறவு, கீழ்ப்படிதல் என அனைத்திற்கும் ஒற்றை 'ஆம்' கொண்டு பதில் தந்தார். அவரின் 'ஆம்' பலரின் வாழ்வைத் திசைதிருப்பியது.

Thursday, August 2, 2018

கேள்விக்குறி

நாளைய (3 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 13:54-58)

கேள்விக்குறி

தன் சொந்த ஊருக்கு வருகின்ற இயேசு அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்ட அவர்கள் ஆச்சர்யத்தில் தங்கள் புருவங்களை உயர்த்துகின்றனர். புருவங்கள் இறங்குவதற்குமுன் அவர்களின் ஆச்சர்யமும் வியப்பும் இறங்கி இடறலாக மாறிவிடுகிறது. தங்களுக்கு ஆச்சர்யக்குறியை இருந்தவரை நோக்கி நிறையக் கேள்விக்குறிகளை இடுகின்றனர்.

- எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?
- எப்படி இந்த வல்ல செயல்கள் செய்கிறார்?
- இவர் தச்சருடைய மகன் அல்லவா?
- இவருடைய தாய் மரியா என்பவர்தானே?
- யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா இவரின் சகோதரர்கள் அல்லவா?
- இவர் சகோதரிகள் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?
- பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று நாம கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஏழு பேரு ஏழு விதமாக பேசுறாங்க.

- இயேசுவே கடவுளின் ஞானம் - ஆனால் இந்த ஞானம் யாரிடமிருந்து வந்தது? எனக் கேட்கின்றனர்.
- இவரின் செயல்கள் இவரை அனுப்பியவரின் செயல்களே - ஆக, அனுப்பியவர் பற்றியும் அறியவில்லை இவர்கள்.
- தச்சருடைய மகன் - ஆக, படிப்பதற்கு வசதியற்றவர்.
- தாய் மரியா - ஆக, இவர் திருமணத்திற்கு புறம்பான கருத்தரிப்பில் பிறந்தவர்.
- யாக்கோபு போன்றோர் இவருடைய சகோதரர்கள் - சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் செய்யாதவர்கள் இவருடைய சகோதரிகள்
- சகோதரிகள் நம்மோடு இருக்கிறார்கள் - அவர்களும் திருமணம் முடித்து வெளியே செல்லும் வகையறாத நிற்கிறார்கள்

ஆக, பிறப்பு, வளர்ப்பு, பின்புலம், உடன்பிறந்தோர் என எந்த விதத்திலும் இயேசு தகுதியற்றவராக இருக்கிறார் ஊரார் பார்வையில்.

இன்றைய முதல் வாசகத்தில் ஏறக்குறைய இதே நிலைதான் இருக்கிறது. எருசலேம் ஆலயத்தின்முன் நின்று இறைவாக்குரைக்கும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்ட அவருடைய சொந்த மக்கள், 'நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்' எனக் கூச்சலிடுகின்றனர்.

இயேசுவின் சொந்த ஊர் மக்கள் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகின்றனர். கேள்விகள் கூடக்கூட நம்பிக்கை குறையும் என்பது நிதர்சனமான உண்மை. கேள்விகள் கேட்காத மனமே சரணடைகின்றது.

கேள்விகள் கேட்பதன் வழியாகவே நமக்கு அறிவு வருகின்றது என்றாலும், நாம் பெற்ற அறிவை வைத்துக்கொண்டு அடுத்தவரை மட்டம் தட்டுவதற்காக கேட்கப்படும் கேள்விகளாகவே இருக்கின்றனர் சொந்த ஊர்க்காரர்களின் கேள்விகள்.

இவர்கள் கண்டும் நம்பவில்லை. கேட்டும் நம்பவில்லை. உணர்ந்தும் நம்பவில்லை. காரணம், இவர்கள் இயேசுவை அறிந்திருந்தனர். இயேசுவை அறிதலே இவர்களை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றது. இவர்களின் அறிதலே இவர்களின் அறியாமையாக மாறிவிடுகின்றது.

இவர்கள் தங்கள் கேள்வியினால் இயேசுவை வாயடைத்துவிட்டதாக தங்கள் இல்லம் திரும்பியிருப்பர். ஆனால், இந்த உணர்வினால் என்ன பயன்?

நாம் யாரை ஜெயிக்க, யாரிடம் போட்டிபோட இந்த உலகில் பிறந்தோம்?

கேள்விகள் இல்லா நாளாக எந்நாளும் விளங்கட்டும்.

Wednesday, August 1, 2018

வலை

நாளைய (1 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 13:47-53)

வலை

விண்ணரசு பற்றிய இறுதி உவமையை நாளை நற்செய்தி வாசகத்தில் முன்மொழிகிறார் இயேசு.

விண்ணரசை கடலில் வீசப்படும் வலைக்கு ஒப்பிடுகின்றார் இயேசு. கடலில் வீசப்படும் வலையில் மீன்கள், பாசிகள், இறந்த மீன்கள், குப்பைகள் என அனைத்தும் சிக்கும். இப்படி சிக்குவதை வலையை வீசுபவர் கரைக்குக் கொண்டுவந்து தரம் பிரிக்கிறார்.

அவரின் தீர்ப்பே இறுதியானது.

ஒன்றை நல்லது என்றும், மற்றதை அல்லது என்றும் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு. மேலும், வலையில் சிக்கியவை, 'எங்களை மீண்டும் கடலிலேயே போட்டுவிடுங்கள்' என்று முறையிடவும் முடியாது.

அவரே வலையை விரிக்கின்றார். அவரே வலையை வாருகின்றார். அவரே அமர்கின்றார். அவரே பிரிக்கின்றார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் நம்மைத் தேர்ந்துகொள்ளும் வண்ணம் நம்மையே தகுதியாக்கிக்கொள்வதுதான்.

நாளைய முதல் வாசகத்தில் இதையொட்டியே கருத்தே பதிவுசெய்யப்படுகின்றது.

குயவனின் வீட்டிற்குள் செல்லுமாறு அழைக்கப்படுகின்றார் எரேமியா.

பானையைச் செய்யும் குயவன், களிமண்ணின் ஒத்துழைப்பை பொறுத்து அதன் வடிவத்தை மாற்றிவிடுகின்றார். 'என்னை ஏன் இப்படிச் செய்தாய்?' என பானை குயவனிடம் கேட்க முடியாது. பானை எந்த வடிவத்திற்குத் தன்னையே கையளிக்கிறதோ அந்த வடிவத்தையே அது பெறுகிறது.

ஆக, இறைவனின் கையில் நாம் நம்மை எப்படி ஒப்புவிக்கிறோமோ அப்படியே நாம் நம்மையே திரும்ப நம் வாழ்வில் பெற்றுக்கொள்கிறோம்.