Saturday, October 31, 2020

புனிதர் அனைவர்

புனிதர் அனைவர் பெருவிழா (பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு)

திருவெளிப்பாடு 7:2-4,9-14 1 யோவான் 3:1-3 மத்தேயு 5:1-12

அருளின் கனியே புனிதம்

இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். பயணம் செய்யும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, துன்புறும் திருஅவை என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில் இரண்டாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது புனித நிலையை அடைந்தவர்கள்? 'நான் ஒருவரே தூயவர்' என்று கடவுள் சொல்ல, தூய்மை அல்லது புனிதம் என்பது கடவுளின் பண்பு என வரையறுக்கப்பட்டிருக்க, 'மனிதர்களாகிய' நாம் புனித நிலையை அடைய முடியுமா? அல்லது சிலர் சொல்வது போல, 'மனிதமே புனிதமா'?

மனிதப் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒரு சிறிய உருவகத்தோடு தொடங்குவோம். பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் வரும் நிகழ்வை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: (அ) சில குழந்தைகளை அவர்களுடைய அம்மா, அல்லது அப்பா, அல்லது ஆட்டோக்காரர் கொண்டு வந்து விடுவார், (ஆ) சில குழந்தைகள் வீட்டிலிருந்து நடந்து வருவார்கள், (இ) சில குழந்தைகள் அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டோ, அல்லது அப்பா தந்த பணத்தைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலோ வருவர். முதல் வகை குழந்தைகளுக்கு எல்லாமே அவர்களது பெற்றோரால் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அவர்களது வேலையெல்லாம் படிப்பதும், பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி நடப்பதும்தான். இதே போல, கடவுள் சிலருக்கு அவர்களது பிறப்பிலேயே புனிதத்தைக் கொடுத்துவிடுகிறார். புனிதம் என்பது இவர்களுக்குக் கடவுள் கொடுத்த கொடை. எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாள். இரண்டாம் வகைக் குழந்தைகள் தாங்களே நடந்து செல்ல வேண்டும். முதுகில் சுமை, வயிற்றில் பசி, பள்ளி மணி ஒலிக்கும் அவசரம் எனக் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். சில குழந்தைகள் பள்ளிவரை செல்லும், சில குழந்தைகள் வழியில் யாரிடமாவது லிஃப்ட் கேட்கும், சில குழந்தைகள் தங்களால் இயலாது என்று பாதி வழி நின்றுவிடும். இத்தகைய மனிதர்கள் புனிதத்தை அடையப் போராடுபவர்கள். ஏறக்குறைய புனித நிலையை அடைபவர்கள். இவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். இவர்கள்தாம் உத்தரிக்கிற நிலை ஆன்மாக்கள் அல்லது துன்புறும் திருஅவையின் உறுப்பினர்கள். மூன்றாவதாக உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோர் கொடுத்த அருள் என்னும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதுடன், தாங்களே மிதித்து பள்ளிக்கு வருவார்கள். இவ்வகை மனிதர்கள், கடவுளின் அருள் அல்லது அழைப்பைத் தங்கள் வாழ்வில் ஏற்று, அதற்கேற்ற பதிலிறுப்பு செய்து, தங்கள் வாழ்விலும் வாழ்வாலும் கனி தந்தவர்கள். இம்மூன்றாம் வகை மனிதர்களைத்தான், அவர்கள் அடைந்த புனித நிலையைத்தான், இன்றைய நாளில் 'புனிதர் அனைவர் பெருவிழாவில்' கொண்டாடி மகிழ்கிறோம். பள்ளிக்குள் வந்துவிட்டால் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றென ஆகிவிடுகிறார்கள். அது போல, இறைவனின் திருமுன்னிலையில் அனைத்துப் புனிதர்களும் ஒன்றென ஆகிவிடுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14), திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல் காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள் 'முத்திரையிடப்பட்டவர்கள்.' முத்திரை என்பது ஒருவருக்கு அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள் அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார். முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள். இங்கே, '144' என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண். இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12 ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ 7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத் தெரிந்தெடுத்து, தனக்குப் பணி செய்யவும், தன் செய்தியை அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப 19:5-6).

இரண்டாம் குழுவினர் 'வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.' இவர்கள், 'கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.' இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள். அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள் செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள் அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஸ்காச் செம்மறியின் இறப்பால் புனிதப்படுத்தப்படுகின்றனர்.

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3), கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின் குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால் துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு இட்டுச் செல்வதுமே.

முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக் கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன. முதலில், 'ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை' முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர் பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது. மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும் கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான உறவுநிலையைக் குறிக்கிறது. ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர் இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல் காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது. ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார். ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர் பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.

நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி, 'மகிழ்ந்து அக்களியுங்கள்' என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018) எழுதுகின்றார்.

ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள் அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக வரையறுக்கப்படுகின்றது.

நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன், மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என முன்வைக்கிறது.

பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, 'ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே' (காண். திபா 24) துள்ளிக் குதிக்கின்றார். 

இறுதியாக,

புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து சென்றவர்கள். இங்கு செய்யப்பட்டு அங்கே ஏற்றுமதி செய்யப்படுபவர்கள் இவர்கள். தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற கனிகள் தருபவர்கள் இவர்கள். இவர்கள் விழுந்தாலும் எழுபவர்கள். புனித மரிய வியான்னி சொல்வது போல, 'புனிதர்கள் சரியாகத் தொடங்கவில்லை என்றாலும், மிகச் சரியாக முடித்தார்கள்.' நாம் அனைவரும் சரியாக, நல்லதாக முடிக்க முடியும். புனிதம் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு. அந்தத் தெரிவின்மேல் கொள்ள வேண்டிய மனவுறுதி.

மதிப்பற்றவை நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை. மதிப்பு மிக்கவை என்றும் நீடிக்கின்றன.

அன்றாட தெரிவுகள் தெளிவானால், புனிதம் என்பது உணர்வு அல்லது செயல் என்பது தெளிவானால், நாமும் புனிதர்களே.

Friday, October 30, 2020

முதன்மை உணர்வு

இன்றைய (31 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 14:1,7-11)

முதன்மை உணர்வு

மனித உணர்வுகளில் அடிப்படையான உணர்வு பாலுணர்வு மற்றும் வன்முறை என்று உளவியல் கூறினாலும், இவ்விரண்டு உணர்வுகளையும் ஆட்டுவிக்கின்ற உணர்வுதான் 'முதன்மை உணர்வு.' நம் தொடக்கப் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படக் காரணமாக இருந்த உணர்வும் இந்த உணர்வே. கடவுளைவிடத் தங்களை முதன்மையானவர்கள் என அவர்கள் நினைத்துக்கொண்டனர். அல்லது கடவுளை விட முதன்மையான நிலையில் தங்களையே வைத்துக்கொள்ள நினைத்தனர்.

படைப்பு என்னும் விருந்தில், தங்களுக்கென முதல் இடத்தைப் பிடித்துக்கொள்ளுமாறு அலகை அவர்களை மயக்க, அவர்களும் மயங்கிப் போகிறார்கள். ஆகையால், அவர்களை விடப் பெரியவரான கடவுள் வரும்போது, அவர்கள் வெட்கப்பட்டு தோட்டத்திற்கு வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

நம் உடலில் உள்ள டி.என்.ஏ அல்லது ஜீன் அமைப்பும்கூட நம் முதன்மை நிலையைத் தக்கவைத்துக்கொள்ளவே போராடுகிறது. நம் இதயத்துக்கு அருகில் இருக்கும் ஒருவர் நம்மை முத்தமிடத் தங்கள் தலையை நம் அருகில் கொண்டு வந்தால், தன் கண்களுக்கு ஆபத்து வருவதாக எண்ணி, உடல் தன் கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறது. எந்த நேரத்திலும் தன்னை இழப்பதை, அல்லது தான் புறந்தள்ளப்படுவதை நம் உடலும் உள்ளமும் விரும்புவதில்லை.

விருந்தில் மக்கள் முதன்மையான இடங்களைப் பிடிப்பதைக் காணும் இயேசு, அந்த நிகழ்வின் பின்புலத்தில் தாழ்ச்சி பற்றிய போதனையை முன்மொழிகின்றார். எந்தவொரு இடத்திலும், 'நானே பெரியவன்' என்ற முதன்மை உணர்வு எழும்போது, 'இல்லை! என்னைவிடப் பெரியவர் ஒருவர் வருவார்' என்ற எண்ணம் நம்மில் தாழ்ச்சியை வளர்க்கும் என்பது இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், 'வாழ்வுக்கும் சாவுக்குமான இழுபறி நிலை பற்றி' பேசுகிறார். வாழ வேண்டும் என்ற முதன்மை உணர்வு அல்லது தன்முனைப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம், தன்னைவிடப் பெரியவரான கிறிஸ்துவோடு இணைந்துகொள்ளத் துடிக்கின்றார் பவுல்.

இன்று, தாழ்ச்சிக்கும் முதன்மை உணர்வுக்கும் இடையே நாம் படும் இழுபறி நிலையை எண்ணிப்பார்த்தல் நலம்.

Thursday, October 29, 2020

உங்களில் ஒருவன்

இன்றைய (30 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 14:1-6)

உங்களில் ஒருவன்

இயேசுவுக்கும் பரிசேயர்களுக்கும் உள்ள தொடர்பு நற்செய்தி நூல்களில் இருநிலைகளில் இருக்கின்றது. ஒரு பக்கம், இயேசு, பரிசேயர்களைச் சாடுகின்றார். இன்னொரு பக்கம், அவர்களோடு உணவருந்துகின்றார். இயேசுவின் இச்செயல் நமக்கு வாழ்வின் இரட்டைத்தன்மையைக் காட்டுவதோடு, எதிரிகளையும் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தையும் நமக்குத் தருகின்றது.

இயேசுவின் சமகாலத்தில் ஓய்வுநாள்களில் விருந்துகள் நடப்பது அரிது. ஏனெனில், ஓய்வுநாளில் அடுப்பு பற்ற வைத்தல் கூடாது என்பது அன்றிருந்த நெறிமுறை. ஆனால், பரிசேயர்கள் அந்த நெறிமுறையை மீறுகின்றார்கள். தங்களுக்குச் சாதமாக நெறிமுறைகளை வளைத்துக்கொள்ளும் அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கும் நோக்குடன், இயேசு, ஓய்வுநாளில் ஓர் அறிகுறியை நிகழ்த்துகின்றார். நீர்க்கோவை நோயுள்ளவரின் கையைக் குணமாக்குகின்றார்.

பரிசேயர்களின் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் இருக்கிறது:

(அ) இயேசுவைக் கூர்ந்து கவனிக்கின்றனர்

(ஆ) இயேசுவின் கேள்விக்கு விடையளிக்காமல் அமைதி காக்கின்றனர்

(இ) இயேசுவின் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் நிற்கின்றனர்

'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ, மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிட மாட்டாரா?' என்று கேட்டு, அவர்களோடு மீண்டும் இணக்கமாகின்றார் இயேசு.

அதாவது, 'நான் ஒன்றும் புதிதாய்ச் செய்துவிடவில்லை. நீங்கள் செய்வதைப் போலத்தான் நானும் செய்தேன். பிள்ளையும் மாடும் கையறுநிலையில் இருப்பவர்கள். இவரும் கையறுநிலையில் இருந்தவர். நான் கை கொடுத்தேன்' என்று சொல்லிவிட்டு,

'ரொம்ப யோசிக்காதிங்க! வாங்க சாப்பிடப் போவோம்!' என்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பிலி 1:1-11), பிலிப்பு நகரத் திருஅவைக்கு பவுல் எழுதுகின்ற திருமடலின் வாழ்த்துரை மற்றும் முன்னுரையை வாசிக்கின்றோம். தான் நற்செய்தி இடத்தில் உள்ள நம்பிக்கையாளர்களோடு தன்னையே ஒன்றிணைத்துக்கொண்டு அவர்களுக்கு நன்றிகூறி, அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.

Wednesday, October 28, 2020

உனக்கு விருப்பமில்லையே

இன்றைய (29 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 13:31-35)

உனக்கு விருப்பமில்லையே

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், ஏரோது, இயேசுவைக் கொல்லத் தேடுவதாக, பரிசேயர் வந்து அவர்களிடம் சொல்கின்றனர். இரண்டாம் பகுதியில், இயேசு எருசலேம் நகரத்தின் கடின உள்ளத்தை நினைத்துப் புலம்புகிறார். 

பரிசேயர் இயேசுவிடம் வந்து ஏரோது பற்றிச் சொல்லக் காரணம் என்ன? இயேசுவின்மேல் உள்ள அக்கறையில் சொன்னார்களா? அல்லது அவரை எச்சரிக்கும் நோக்கில் ஏரோதுவின் பெயரை இழுத்தார்களா? காரணம் எப்படி இருந்தாலும், இயேசு, தன் பணி மற்றும் பயணத்தின் இலக்கு என்பதை மிக அழகாக அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன் பயணம் இறப்பு நோக்கியே என்பதை இயேசு நன்கு அறிந்தவராக இருக்கிறார். 

'இன்றும் நாளையும் நான் பேய்களை ஓட்டுவேன், பிணிகளைக் குணமாக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவு பெறும்' எனச் சொல்கிறார் இயேசு.

இங்கே, 'மூன்றாம் நாள்' என்பது இயேசுவின் உயிர்ப்பு நாளைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னொரு பக்கம், இயேசுவைப் பொருத்தவரையில் எல்லா நாள்களும் பணியின் நாள்களே. அவர் தன் பணியைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டே இருப்பார்.

மேலும், இரண்டாம் பகுதியில், தனக்கு எருசலேம் இழைக்கப்போகும் அநீதியை நினைத்து அதன்மேல் கோபப்படாமல், அதைக் கண்டு பரிதாபம் கொள்கிறார். கோழி தன் இறக்கைகளுக்குள் வந்து அடைக்கலம் புகாத தன் குஞ்சுகள்மேல் கோபம் கொள்வதில்லை. அவை அழிந்து விடுமோ என்று அச்சப்படுகின்றனளூ அல்லது அவற்றின் இயலாமை நினைத்துப் பரிதாபப்படுகின்றன.

இந்த வாசகம் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றது:

(அ) நமக்கு எதிர்வரும் பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கிறது. பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகள் வரலாம். ஆனால், அவை வரும் என எதிர்பார்பத்தவருக்கு அவை எந்தவொரு அச்சுறுத்தலையும் தருவதில்லை.

(ஆ) நம் பணி மற்றும் பயணத்தின் இலக்கு தெளிவாக இருக்க வேண்டும். இயேசுவுக்கு இருந்தது போல.

(இ) நமக்கு எதிராகத் தீங்கு நினைப்பவர்கள், அல்லது நம்மைப் புரிந்துகொள்ளாதவர்கள்மேல் கோபப்படுவதற்குப் பதிலாக இரக்கம் கொள்வது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபே 6:10-20), தன் திருமுகத்தை நிறைவு செய்யும் பவுல், எபேசு நகரத் திருஅவையினர் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களைச் சுட்டிக்காட்டுவதோடு, அதற்குத் தேவையான படைக்கலன்கள் - உண்மை, நீதி, நற்செய்தி அறிவிப்புக்கான ஆயத்தநிலை, மீட்பு, கடவுளின் வார்த்தை - தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

Tuesday, October 27, 2020

புனித யூதா ததேயு

யூதா ததேயுவின் படம் அல்லது திருஉருவத்தை நாம் கண்டிருப்போம். பச்சைநிற மேலாடை அணிந்து, ஒரு கையில் கையில் கோல், இன்னொரு கையில் சுருள், உச்சந்தலையில் நெருப்புத் துண்டு எனக் காட்சியளிக்கிறார் இப்புனிதர்.

இப்புனிதரின் பக்தி முயற்சி அமெரிக்காவில், குறிப்பாக இஸ்பானியம் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில், மிகவும் பிரபலமானது. பல மணி நேரங்கள் செலவழித்து மக்கள் இப்புனிதரை நாடிச் செல்வர். இஸ்பானிய மக்கள் பத்திரமாக அமெரிக்காவில் கால் பதிக்க இவர் உதவியிருக்கலாம்.

புனித யூதா ததேயு இயேசுவின் உறவினர். அவருடைய ஒன்றுவிட்ட அண்ணன் அல்லது தம்பியாக இருந்திருக்க வேண்டும். இவர் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் என்ற குறிப்பைத் தவிர, விவிலியத்தில் வேறு எந்தக் குறிப்பும் இவரைப் பற்றி இல்லை. பாரம்பரியத்தில், கானாவூரில் தண்ணீர் திராட்சை ரசமாக மாறிய திருமண நிகழ்வின் மணமகன் யூதா ததேயு என்பது பலரின் கருத்து.

புனித யூதா ததேயுவின் கையில் இருக்கும் சுருள் பற்றிய கதையாடல் ஒன்றும் பாரம்பரியத்தில் உண்டு. அதன்படி, எதேஸ்ஸா நாட்டைச் சார்ந்த (இன்றைய துருக்கி) அரசர் அப்கார் என்பவர் தனது தொழுநோயைப் போக்க இயேசு வருமாறு அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். எதேஸ்ஸாவுக்குச் செல்ல மறுக்கின்ற இயேசு, தன் முகத்தை ஒரு சுருள்துணி ஒன்றில் பதித்து, அதை யூதா ததேயுவிடம் கொடுத்தனுப்புகிறார். அந்த முகத்தைக் கொண்டு அரசரின் தொழுநோயைப் போக்குகின்றார் புனிதர்.

பெந்தகோஸ்தே திருவிழாவுக்குப் பின், மத்திய கிழக்கு நாடுகளில் மறைப்பணி செய்கின்ற புனிதர் அங்கேயே மறைசாட்சியாக இறக்கின்றார். இவருடைய எலும்புகள் உரோமைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித பேதுருவின் கல்லறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. 

புனித ப்ரிஜித் மற்றும் புனித பெர்நார்துக்குத் தோன்றுகிற இயேசு, 'கைகூடாதவற்றைக் கைகூடச் செய்பவர் புனித யூதா ததேயு' என வெளிப்படுத்துகிறார். அன்றுமுதல், கைவிடப்பட்டவர்களின், கையறுநிலையில் இருப்பவர்களின் காவலராக இருக்கின்றார் புனித யூதா ததேயு.

இவர் நமக்கு இன்று மூன்று வாழ்வியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வையுங்கள்

புனித யூதா ததேயு எழுதிய கடிதம் ஒன்று நம் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றது. மிகச் சிறிய புத்தமாக அது இருந்தாலும் மிகப் பெரிய கருத்துகளைத் தாங்கியுள்ளது. யூதா திருமுகம் ஒட்டுமொத்த விவிலிய வரலாற்றையும் ஒரே அதிகாரத்தில் சொல்லி, இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ள அழைக்கிறது. 'தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்' (காண். வ. 20). மேலும், 'நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்' (காண். வ. 22) என்று நம்பிக்கையில் தளர்பவர்களையும் ஏற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் வாழ்வில் வரும் எதிர்பாராத இழப்பு, சோர்வு, நம்பிக்கையின்மை ஆகிய நேரங்களிலும் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டுகிறார் என்பது இவருடைய புரிதல்.

(ஆ) இயேசுவுக்கு அருகில் இருங்கள்

திருத்தூதர்களில் ஒருவராக இயேசுவோடு எப்போதும் உடனிருக்கும் யூதா ததேயு, தன் உடனிருப்பில் இறுதிவரை நிலைத்திருக்கின்றார். இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் இறைவனோடு நாம் உடனிருத்தல் அவசியம்.

(இ) கடவுள் உன்னை அனுப்பும் இடத்திற்குச் செல்லத் தயாராக இரு!

கடவுள் தன்னை அனுப்ப விரும்பிய நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் யூதா. நம் இருத்தலிலும், நம் இயக்கத்திலும் இறைவனோடு இணைந்து கனிதருகிறோம். எனவே, அவர் அனுப்பும் இடத்துக்குச் செல்லத் தயாராக இருத்தல் நலம்.

நிற்க.

புனித யூதா ததேயுவை நோக்கிச் செபம்

மாட்சிக்குரிய திருத்தூதர் புனித யூதா ததேயுவே!
இயேசுவின் திருஇருதயத்தின் நிழலில் நின்றுகொண்டு 
நான் உமக்கு வணக்கம் செய்கிறேன்.
உம்மேல் கடவுள் பொழிந்த அளவற்ற இரக்கப் பெருக்கிற்காக, 
இயேசுவின் திருஇருதயத்தின் வழியாக, கடவுளைப் போற்றிப் புகழ்கிறேன்.
அவரின் அன்பிரக்கத்தின் வழியாக என்மேல் நீர் இரக்கம் காட்டுவீராக!
என் எளிய வேண்டுதலைப் புறக்கணியாதேயும்!
என் நம்பிக்கை உழன்றுபோக விடாதேயும்!
கைவிடப்பட்டவர்களின் காவலராகக் கடவுளால் நியமிக்கப்பெற்றவரே!
என் அருகில் வாரும்!
அதனால், நான் கடவுளின் இரக்கப் பெருக்கைப் புகழ்ந்து பாடுவேன்.
என் வாழ்வு முழுவதும் உமக்கு நன்றி சொல்லும் நான்,
விண்ணகத்தில் உம்மைக் கண்டும் உமக்கு நன்றி பகர்வேன்!

ஆமென்.

புனித யூதா ததேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
உம் துணையை நாடும் அனைவருக்கும் துணைவராய் இரும்!

Monday, October 26, 2020

மறைபொருள் பெரிது

இன்றைய (27 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 5:21-23)

மறைபொருள் பெரிது

புனித பவுல் எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலின் இறுதிப் பகுதி அறிவுரைப் பகுதியாக அமைந்துள்ளது. அறிவுரைப் பகுதியின் தொடக்கமாக, 'கணவன்-மனைவி' உறவு பற்றி அறிவுறுத்துகின்றார். தொடர்ந்து, திருமண உருவகம், 'திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துகிறது' என்கிறார்.

கணவன்-மனைவி பற்றி எழுதும் பவுலின் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

'பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்' 

'ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்'

ஆக, இங்கே, பெண்கள் ஆண்களிடம் காட்ட வேண்டியது பணிவு என்றும், ஆண்கள் பெண்களிடம் காட்ட வேண்டியது அன்பு என்றும் பவுல் குறிப்பிடுகின்றார்.

மேலும், 'கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார்' என்கிறார்.

'இருவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்று அவர் பொதுவாகச் சொல்லியிருக்கலாமே?

'பெண்கள் தங்களது அன்பை பணிவு என்று காட்ட வேண்டும். ஒரு பெண் தன் கணவனிடம் தான் அவனை அதிகமாக அன்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவனுக்குப் பயப்படாமல் நடந்தால், அல்லது அவனை மதிக்கத் தவறினால் அவள் அவனை அன்பு செய்வதில்லை. மாறாக, அவள் பேசுவதெல்லாம் வெற்று வார்த்தைகளே. பெண்ணின் அன்பு அவளுடைய பணிவில் மட்டுமே வெளிப்பட முடியும்' என்கிறது பவுலின் சமகாலத்து கிரேக்க மெய்யியல். இந்தப் பின்புலத்தில் பவுல் எழுதியிருக்கலாம்.

ஆக, ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்பதற்கு நான் அடிக்கடிக் குறிப்பிடும் இறைவார்த்தை இதுவே. 'ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக இருக்க முடியாது. மெழுகுதிரியும் குத்துவிளக்கும் சமம் அல்ல. இரண்டும் ஒளிதரக் கூடியவைதாம். ஆனால், இரண்டின் பயன்பாடுகள் வேறு. ஆணும் பெண்ணும் எதில் சமம்? இருவரும் பிறக்கிறார்கள், இருவரும் இறக்கிறார்கள், இருவரும் நோய்வாய்ப்படுகிறார்கள், இருவரும் நலம் பெறுகிறார்கள். நம் இருத்தல் நிலையில் நாம் சமமே அன்றி, நம் இயக்க நிலையில் நாம் ஒருபோதும் சமம் அல்ல' - இதுதான் என் புரிதல்.

இரண்டாவதாக, பவுல், 'இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது' என்று திருமணம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதாவது, இருவரும் ஒரே உடலாக இருப்பது என்பது பெரிய மறைபொருள். தலை சொல்லும் கட்டளைக்குக் கால் பணிந்தால்தான் உடல் இயக்கம் நடைபெற முடியும். இருத்தலும் இயக்கமும் இணையும் புள்ளிதான் மறைபொருள்.

இவ்வாறாக, ஒருபுறம் குடும்ப உறவில் திகழ வேண்டிய பண்புகளைப் பற்றிப் பேசினாலும், மற்றொரு புறம் அதை ஒரு மறைபொருள் என்று நிறுத்திக்கொள்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, இறையாட்சியைக் கடுகு விதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். சிறிய அளவில் இருப்பவை பெரிய மாற்றத்தின் காரணிகளாக மாறுகின்றன.

திருமண உறவின் அன்பும் அப்படியே!

Saturday, October 24, 2020

உம்மை அன்பு செய்கிறேன்

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

I. விடுதலைப் பயணம் 22:21-27 II. தெசலோனிக்கர் 1:5-10 III. மத்தேயு 22:34-40

உம்மை அன்பு செய்கிறேன்

விவிலியத்தில், மனிதர்கள், கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யூ' என்று சொல்லும் பகுதி இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்கு அமைந்துள்ளது. 'என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்' என்று தாவீது உள்ளம் உருகுவதோடு, 'ஆண்டவரே என் கற்பாறை, என் கோட்டை, என் மீட்பர்' என அறிக்கையிட்டு மகிழ்கின்றார். 

இயேசு எருசலேமுக்குள் நுழையுமுன் சந்தித்த நான்கு குழுக்களில் இரண்டாவது குழுவினரை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். தூய்மையானவர்கள் என்று தங்களையே 'ஒதுக்கிவைத்துக்கொண்ட' பரிசேயர்கள், 'போதகரே' என்று அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை, இயேசுவைக் கேலி செய்வது போல இருக்கிறது. ஏனெனில், கலிலேயாவின் சுற்றுப்புறங்களில் இருந்த வந்த, தச்சனின் மகன் இவர் திருச்சட்டம் அறியாதவர், என்ற  எண்ணத்திலும், அல்லது இயேசுவின் அறிவைச் சோதிக்கும் நோக்குடனும் அவர்கள் இயேசுவிடம் வருகிறார்கள். 

ஆனால், இயேசு நேரிடையாகவே அவர்களுக்குப் பதிலிறுக்கின்றார். முதன்மையான கட்டளையாக, மோசேயின் திருச்சட்டத்தில் உள்ள, 'இஸ்ரயேலே கேள்' (இச 6:4) என்னும் இறைவாக்குப் பகுதியிலிருந்து கையாள்கிறார். 'ஆண்டவராகிய கடவுளிடம் முழுமையாக அன்பு செலுத்துவது' முதன்மையான கட்டளை என்பது எல்லா யூதர்களுக்கும் தெரிந்த ஒன்று என்பதால், அதையும் இயேசு முன்வைத்துவிட்டு, ஒரு புரட்சி செய்கின்றார். அது என்னவென்றால், 'உன் மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!' (காண். லேவி 19:18) என்று பிறரன்புக் கட்டளையையும் முதல் கட்டளைக்கு இணையாக்கிவிடுகிறார். இது இரண்டு நிலைகளில் பரிசேயர்களுக்கு நெருடலாக இருந்திருக்கும்: ஒன்று, பரிசேயர்கள் தங்களையே 'தூய்மையான நிலைக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டு' மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. இறைவனை அன்பு செய்தலே போதும்! என்ற மனநிலையில் இருந்தார்கள். இரண்டு, பிறரன்புச் செயல்களைவிட நோன்பு போன்ற தன்மைய ஆன்மீகத்தையே பரிசேயர்கள் கொண்டிருந்தனர்.

இறைவனை அன்பு செய்தல், 'முழு இதயம், உள்ளம், மனம்' என்ற மூன்று சொற்களோடு இணைத்துத் தரப்பட்டுள்ளது. 'இதயம்' என்பது உணர்வுகள் குடியிருக்கும் இடம் எனவும், 'உள்ளம்' என்பது நம் எண்ணங்களின் ஊற்று எனவும். 'மனம்' என்பது நன்மை-தீமையைப் பகுத்தாய்ந்து தெரிவு செய்யும் தளம் என்றும் இயேசுவின் சமகாலத்தவர் நம்பினர். ஆக, நம் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் தெரிவறிவு மூன்றும் இறைவனை நோக்கியதாக இருக்க வேண்டும். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 22:21-27), 'உடன்படிக்கைச் சட்டம்' என்று சொல்லப்படுகின்ற பகுதியில், அன்றைய சமூகத்தில் வாழ்ந்த மூன்றுவகை கையறுநிலை மனிதர்களை ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார்: (அ) அந்நியர்கள், (ஆ) கைம்பெண்கள், அநாதைகள், மற்றும் (இ) ஏழைகள். இம்மூவருமே மூன்றுநிலைகளில் பிடுங்கப்பட்ட வேர்கள். நிலம் என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் அந்நியர்கள். அவர்களுக்கு என்னதான் உடைமைகள் இருந்தாலும் அவர்கள் நிற்கின்ற நிலம் அவர்களுடையது அல்ல. உறவு என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் கைம்பெண்கள் மற்றும் அநாதைகள். விவிலியம் பெரும்பாலும் இவ்விருவரையும் இணைத்தே சொல்கிறது. தந்தைவழிச் சமூகத்தில் மனைவியர் கணவரின் சொத்தாகக் கருதப்பட்டார்களே அன்றி, மனைவியர்களுக்கென்று சொத்துகள் எதுவும் இல்லை. மேலும், போர், நெடும்பயணம், ஆபத்துகள் போன்றவற்றால் நிறையக் குழந்தைகள் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்படும் நிலை அன்று இருந்தது. உறவு இருந்தால்தான் மற்றவை கிடைக்கும். இவ்விருவருமே உறவற்றவர்களாக இருந்தனர். (இ) ஏழைகள். பொருளாதாரம் என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் தேவைகளுக்காக மற்றவர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் வாங்கினர். இம்மூன்றுவகை கையறுநிலை மக்களையும் அரவணைத்துக்கொள்ளக் கட்டளையிடுகிறார் ஆண்டவராகிய கடவுள்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 1:5-10), தெசலோனிக்க நகர் மக்களுக்கு நன்றி கூறி மகிழ்கின்ற பவுல், தொடர்ந்து, 'நீங்கள் எங்களைப் போலவும், ஆண்டவர் போலவும் நடக்கிறீர்கள்' என வாழ்த்துகிறார். முதலில், நான் யாரிடமாவது, 'என்னைப் போல இரு!' என்று சொல்ல வேண்டுமானால், அதற்கேற்ற தகைமையை நான் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால், 'உன்னைத் தெரியாதா! போடா!' என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், பவுலின் நாணயமும் நற்பண்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும், 'ஆண்டவரைப் போல' இருக்கிறீர்கள் எனச் சொல்கிறார். நாம் தேவையில் இருக்கும் போது யாராவது நமக்கு உதவினால், 'கடவுள் போல வந்து காப்பாற்றினாய்' என்று வாழ்த்துகிறோம். அதாவது, எந்தவொரு பதிலன்பும் பதிலும் எதிர்பார்க்காமல் முழுமையாக அடுத்தவர் நலனை மட்டுமே எண்ணுதலே 'ஆண்டவரைப் போல இருத்தல்.'

இறையன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகளுக்கு முன்னால், 'உன்னை அன்பு செய்வது போல' என்னும் சொற்றொடரில, 'தன்அன்பு' அடங்கியுள்ளது. தன்னை அன்பு செய்யாத ஒருவர் தனக்குப் பெரிய கடவுளையோ, அல்லது தனக்குச் சமமான பிறரையோ அன்பு செய்தல் அரிது.

இறையன்பு, தன்அன்பு, மற்றும் பிறரன்பு என்னும் மூன்று அன்பு நிலைகளை, ஒரு மரத்தின், 'வேர்,' 'தண்டு,' மற்றும் 'கிளை' என நாம் உருவகித்துக்கொள்ளலாம். இறையன்பு நமக்கு வேராக இருக்கின்றது. தன்அன்பில் நாம் ஒரு தண்டு போல வளர்கிறோம். எப்படி? ஓர் ஆடும் வளைத்துக்கொள்ளும் அளவுக்கு இருக்கின்ற ஒரு கொடி வளர்ந்துவிட்டால் யானையாலும் அதை வளைக்க முடிவதில்லை. ஏனெனில், அது தன்னையே உருவாக்கிக்கொள்கிறது. 'கிளை' என்பது நாம் இந்த உலகில் பலன் கொடுக்கும் நிலையைக் குறைக்கிறது.

கவ்ர் கோபால் தாஸ் என்னும் ஆன்மீக வழிகாட்டி, மூன்றுவை 'சி' ('C) பற்றிப் பேசுகின்றார். இம்மூன்றையும் நாம் எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும் என்கிறார் குரு: (அ) 'கனெக்ஷன்' (Connection) (தொடர்பு), (ஆ) 'கல்டிவேஷன்' (Cultivation) (வளர்ப்பு), மற்றும் (இ) 'கான்ட்ரிப்யூஷன்' (Contribution) (பங்களிப்பு). இம்மூன்றையும், நாம் மேற்காணும் மூன்று அன்புநிலைகளுக்கு ஒப்பிட்டால், நாம் இறையன்பின் வழியாக நம் கடவுளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, தன்அன்பின் வழியாக என்னையே நான் உருவாக்கிக் கொண்டு, பிறரன்பின் வழியாக என் பங்களிப்பை நான் மற்றவர்களுக்குக் கொடுத்தால் என் வாழ்வு இனிய வாழ்வாகும்.

இன்று,

நான் இறைவனையும், என்னையும், பிறரையும் பார்த்து,

'நான் உன்னிடம் அன்புகூர்கிறேன்' என்று திருப்பாடல் ஆசிரியர் போலச் சொல்வதற்கு,

என் தொடர்பில் வேரூன்றவும்,

என் வளர்ப்பில் உறுதிப்படவும்,

என் பங்களிப்பில் கிளைபரப்புவும் வேண்டும்.

இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

Thursday, October 22, 2020

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

இன்றைய (23 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 12:54-59)

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

நிறைவுகாலம் அல்லது இறுதிக்காலம் பற்றிய இயேசுவின் போதனை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. தனது சமகாலத்து பாலஸ்தீனத்தில் விளங்கிய காலநிலையை மேற்கோள் காட்டி, அந்தக் காலநிலையை அறிந்திருக்கின்ற மக்கள், 'இக்காலத்தை, அதாவது, இறையரசின் காலத்தை ஆராயாமல் இருப்பது எப்படி?' என்ற கேள்வியை எழுப்புகின்றார். 

மேலும், நடுவரிடம் இழுத்துப் போகுமுன் செய்ய வேண்டிய சமரசம் என்னும் உருவகத்தின் பின்புலத்தில், இறையாட்சி பற்றிய அறிதலின் உடனடித் தன்மையையும் எடுத்துரைக்கின்றார்.

முதலில், காலத்தை அறிதல்.

காலத்தை அறிவதற்கு முதலில் தேவை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வும், நுண்ணுனர்வும். இவை இரண்டும் இல்லாமல் காலத்தை அறிவது சாத்தியமில்லை.

மேலும், காலத்தை அறிதல் உடனடியாக நம் செயல்களின் திசையைத் திருப்புகிறது. மழை வருவது போலத் தெரிந்தவுடன், நம் கால்கள் வேகமாக நடக்கின்றன. மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுகிறோம், நம் அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைக்கின்றோம், மின்னணுச் சாதனங்களை மின்னேற்றியிலிருந்து அகற்றுகிறோம், மெழுகுதிரி மற்றும் தீப்பெட்டி எடுத்து வைக்கிறோம், சுடுதண்ணீர் போட்டு சேமித்து வைத்துக்கொள்கிறோம். ஆக, மேகங்களிலிருந்து விழும் சில துளிகள் என்னை எட்டியவுடன், நான் அதுவரை பார்த்துக்கொண்டிருந்த எல்லா வேலைகளையும் உதறிவிட்டு, என் முதன்மைகளை மாற்றிக்கொள்கிறேன்.

இயேசுவின் உடனிருப்பும் அவர் தரும் செய்தியும் புதிய புதிய காலநிலை மாற்றங்கள் போல என்னைச் சுற்றி வருகின்றன. நான் அவற்றை அறியவும், அந்த அறிதலுக்கு ஏற்ப என் முதன்மைகளை மாற்றிக்கொள்ளவும் செய்கிறேனா?

இரண்டாவதாக, 'நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்' என எச்சரிக்கிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில், பணம், அதிகாரம், மற்றும் ஆள்பலத்தைப் பொருத்தே நீதியின் கரம் உயரவும் தாழவும் செய்தது. தன்னை வலுவற்றவர் என அறிந்த ஒருவர், உடனடியாக எதிரியிடம் சரணடைவது மேல் என்றும், தாமதித்தால் தண்டனையின் கொடுமை அதிகமாகிவிடும். கடைசிக் காசும் என்னிடமிருந்து போய்விடும். 

இதில் மறைமுகமாக இயேசு சொல்வது என்ன? நாம் எல்லாரும் ஏதோ ஓர் ஆட்சியாளரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். செல்லும் வழியில் எந்தவொரு வன்முறையும் வன்மமும் வேண்டாம். நமக்குத் தேவையானதெல்லாம் அமைதியும் சமரசமும்தான்.

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில், 'முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்' என்று எபேசு நகரத் திருஅவைக்கு அறிவுறுத்துகிறார் பவுல்.

Wednesday, October 21, 2020

மிகவும் மேலாக

இன்றைய (22 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 3:14-21)

மிகவும் மேலாக

தனது மனமாற்றத்தின் பேறுகால வேதனை நிறைவுற்று, தன் பழைய வாழ்க்கைக்கு, 'இல்லை' என்று சொல்லித் தன் முதுகைத் திருப்பி, புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார் அகுஸ்தினார். 'நான் மனம் மாறிவிட்டேன். இனி மனிக்கேயத்தின் பின்னும், பிறழ்வுபட்ட வாழ்க்கையின் பின்னும் நான் செல்ல மாட்டேன்' என உறுதியெடுக்கிறார் அவர். இந்த நற்செய்தியைச் சொல்ல அவர் தன் தாய் மோனிக்காவிடம் ஓடுகின்றார். மூச்சிரைக்க ஓடிய அவர், 'அம்மா! நான் கிறிஸ்தவத்தில் திருமுழுக்கு பெற வேண்டுமென விரும்பினீர்கள். நானோ, கிறிஸ்துவின் பணியாளராக மாற விரும்புகிறேன்' என அவர் மொழிந்தபோது, மோனிக்காவின் உள்ளத்தில் எழுந்த வார்த்தைகளாக புனித அகுஸ்தினார் இன்றைய முதல் வாசகத்தின் வார்த்தைகளையே பதிவு செய்கின்றார்:

'என் மனமாற்றத்தின் செய்தி கேட்ட உம் அடியவள், நம்முள் வல்லமையோடு செயல்பவரும், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான உம் அருள்பெருக்கை நினைத்துக் கண்ணீர் மல்கி, உமக்கு நன்றி செலுத்தினாள்.'

புனித பவுல், எபேசியருக்கு எழுதும் திருமடல், அவரது ஆன்மீக முதிர்ச்சியையும், ஆழ்ந்த இறையனுபவத்தையும் கண்டுககொள்ள உதவுகிறது.

எபேசு நகர இறைமக்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என முதலில் அறிவுறுத்துகிறார் பவுல்: 'அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!' முதல் உருவகம் விவசாயம் சார்ந்தது, இரண்டாவது கட்டடம் கட்டுதல் சார்ந்தது. ஆணிவேர் ஒரு மரத்தின் நிமிர்ந்து நிற்பதற்கான வலுவைத் தருவதுடன், மரத்திற்குத் தேவையான ஊட்டத்தை மிக ஆழத்திலிருந்து பெற்றுத் தருகிறது. கட்டடம் நிலைத்து நிற்பதும், அதன் மேல் இன்னொரு மாடி எழுப்பவதும் அடித்தளத்தின் வலிமையைப் பொருத்ததே. ஆனால், ஆணிவேரையும் அடித்தளத்தையும் நம் கண்களால் காண இயலாது என்றாலும், மறைந்திருக்கும் அவையே, முறையே, மரத்திற்கும், கட்டடத்திற்கும் தாங்குதளமாய் இருக்கின்றன. ஆக, இறைமக்களின் வாழ்வு அன்பில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு என்பதற்கு, 'அகாபே' ('தற்கையளிப்பு செய்யும் அன்பு') என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் பவுல்.

தொடர்ந்து, அவர்கள் இறைமக்களோடு இணைய வேண்டும்.

ஆக, அன்பு என்பது தனக்கென வைத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, பகிரப்பட வேண்டியது.

அப்படி இறைமக்களோடு இணைவதால் என்ன நடக்கிறது?

ஒருவர், 'கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற முடியும்!'

இங்கும் பவுல் கட்டடத்தின் உருவகத்தையே பயன்படுத்துகிறார். அறிவுக்கு எட்டாத கிறிஸ்துவின் அன்பை நமக்கு அருகில் இருக்கும் சகோதர சகோதரிகளை அன்பு செய்வதில் அறிந்துகொள்ளலாம் என நமக்குப் பவுல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தூண்டி எழுப்புகிறது.

இறுதியாக, கடவுள் நம்முள் வல்லமையோடு செயலாற்றுவதுடன், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாகக் கொடைகளால் நம்மை அணிசெய்கின்றார். 'என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' (காண். திபா 23:5) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவத்தை ஒத்த வார்த்தைகளாக இருக்கின்றன இவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), கடவுளை ஒருவர் தெரிந்துகொண்டு அன்பு செய்வதால் உறவுகள் நடுவில் ஏற்படும் பிளவுகள் மற்றும் அமைதியின்மை பற்றி இயேசு பேசுகின்றார். கடவுளின் அன்பை அறிவதற்கான முதற்படியில் பிரிவுகள் வரலாம். ஆனால், பிரிவுகள் வந்தாலும் அவர்களை அவர்களுக்காகத் தழுவிக்கொள்ளும்போது, கடவுள் மிகவும் மேலாக நம்மிடம் செயலாற்றுவார்.

Tuesday, October 20, 2020

மிகவும் கடையவன்

இன்றைய (21 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 3:2-12)

மிகவும் கடையவன்

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் சில வார்த்தைகள் பவுலின் நற்செய்தி ஆர்வத்தையும், அவருடைய மேய்ப்புப்பணி திட்டமிடுதலையும் நமக்கு உணர்த்துவதோடு, அவற்றை நம் முன் சவாலாகவும் நிறுத்துகின்றன.

(அ) 'கடவுளுடைய அருளின் பொறுப்பாளர்'

இங்கே 'ஒய்கோனோமியா' ('இல்ல மேலாண்மை') என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையிலிருந்துதான் ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும், 'எகானமி' என்ற சொல் வருகிறது. இதன் பொருள், 'இல்லத்தை ஒழுங்குபடுத்துதல்' அல்லது 'நிர்வகித்தல்.' தன்னை ஒரு பொறுப்பாளர் என முன்வைக்கிறார் பவுல்.

(ஆ) 'நற்செய்தியின் தொண்டன்'

தான் நற்செய்தி அறிவிக்கிற திருத்தூதர் என்றாலும், திருத்தூதர் என்ற உரிமையை எடுத்துக்கொள்ளாமல், தன்னை ஒரு தொண்டன், அல்லது பணியாளன், அல்லது அடிமை எனச் சற்றுத் தள்ளியே நிறுத்திக்கொள்கிறார்.

(இ) 'மிகவும் கடையவன்'

இயேசுவின் வெளிப்பாடு அருளிய காலத்தின் பின்புலத்தில், திருத்தூதர்கள் பெற்ற மறைபொருள் தனக்கு இறுதியாக வெளிப்படுத்தப்பட்டதால், தன்னை 'கடையவன்' என அழைக்கின்றார் பவுல்.

இவ்வாறாக, பவுல் கிறிஸ்துவின் நற்செய்தியின்மேல் கொண்டிருந்த ஆர்வத்தையும், தாகத்தையும், பொறுப்புணர்வையும், அச்சத்தோடும் நடுக்கத்தோடும் அம்மறைபொருளைக் கையாண்ட விதமும் நம் வாழ்க்கைப் பாடங்களாக அமைகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:39-48), இயேசுவும் பொறுப்புணர்வு பற்றியே பேசுகின்றார். 'தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்குரியய அறிவாளியாகத் திகழுமாறு' தன் சீடர்களை அறிவுறுத்தி, 'மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்' என்று அவர்களின் பொறுப்புணர்வை நினைவூட்டுகின்றார்.

Monday, October 19, 2020

அவர் பணிவிடை செய்வார்

இன்றைய (20 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 12:35-38)

அவர் பணிவிடை செய்வார்

'விழிப்பாய் இருங்கள்' என்று தன் சீடருக்கு அறிவுறுத்துகின்ற இயேசு, எப்படி விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உருவகமும் சொல்கின்றார்.

இயேசு சொல்லும் உருவகத்தில் ஒரு புரட்சி இருப்பதால் கொஞ்சம் கவனமாய் ஆராய்தல் நலம்.

திருமண விருந்துக்கு ஒரு தலைவர் சென்றிருக்கின்றார். இயேசுவின் சம காலத்தில் திருமண விருந்து ஏழு நாள்கள், ஏழு வாரங்கள், ஆறு மாதங்கள், ஓராண்டு என அவரவர் வசதியைப் பொருத்து நடப்பதுண்டு. ஒரு நீண்ட விருந்துக்குப் போகும் தலைவர், தன் பணியாளர்களிடம் அனைத்தையும் விட்டுச் செல்கின்றார். நீண்ட பயணம் செல்பவர்கள் அப்படிச் செய்வது வழக்கம். ஏனெனில், பாலைவனப் பயணத்தில் வீடு திரும்பாதவர்கள் நிறையப் பேர். இப்போது, பணியாளர்கள் அனைவரும் பொறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். அவர்கள் இடையை வரிந்து கட்டிக் கொண்டு, தலைவருக்குக் கதவைத் திறந்து வைப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். விழித்திருக்கும் பணியாளர்களைக் காண்பதில் தலைவருக்கு மகிழ்ச்சி.

அப்படி விழித்திருக்கும் பணியாளர்களைக் கண்டவுடன், தலைவர், தன் பயணக் களைப்பையும் பொருட்படுத்தாமல், பணியாளர்களுக்குப் பணிபுரியத் தொடங்குகிறார். என்ன ஓர் ஆச்சரியம்!

இந்த உருவகத்தில் முன்வைக்கப்படும் தலைவர் இயேசுவே என்பதில் ஐயமில்லை. திருமண விருந்துக்குச் செல்வது என்பது அவருடைய உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. அவரது வருகைக்காக விழித்திருப்பவர்களுக்கு அவரே பணிவிடை செய்கின்றார், விருந்து படைக்கின்றார்.

விழித்திருத்தல் எப்போது சாத்தியம்?

எதிர்நோக்கு இருந்தால்தான் விழித்திருக்க முடியும்.

எதிர்நோக்கை அணையாமல் வைத்திருக்கச் செய்வது நம்பிக்கை.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்காக மலர்ந்து, அன்புச் செயல் என்னும் விழித்திருத்தலாகக் கனிகிறது.

விளைவாக, கடவுள் அங்கே நமக்குப் பரிமாறத் தொடங்குகின்றார்.

நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் கடவுளே பரிமாறுகிறார் என அறிவதே ஓர் உன்னதமான விழிப்புநிலை. 

முதல் வாசகத்தில் (காண். எபே 2:12-22), எபேசு நகரத் திருஅவையை, இசைவாகக் பொருந்திய கட்டடம் எனச் சொல்லிப் பெருமைப்படுகின்றார். வளர்ந்து வரும் இந்தக் கட்டடத்தின் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவது எதிர்நோக்கே.

இன்று, நாம் தலைவரின் நன்மதிப்பைப் பெற விழித்திருத்தல் அவசியம்.

Sunday, October 18, 2020

நீ சேர்த்து வைத்தவை

இன்றைய (19 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 12:13-21)

நீ சேர்த்து வைத்தவை

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கும் உரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேள்வியுற்ற, அல்லது கேள்வியுறாத ஒருவர், கூட்டத்தில் இயேசுவிடம், 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!' என்கிறார்.

ரபிக்களிடம் சொத்து பிரித்தல் பற்றிய பிரச்சனைகள் அன்றைய பாலஸ்தீனத்தில் கொண்டுவரப்படுவதுண்டு. அந்த எண்ணத்தில் தான் இந்த இளவலும் பிரச்சனையை இயேசுவிடம் கொண்டு வருகிறார். ஆனால், பாவம்! 'இந்த ரபிக்கு, தலைசாய்க்கவும் இடமில்லை!' என்பது அவருக்குத் தெரியவில்லை. 'என்னை உங்களுக்கு நடுவராக நியமித்தவர் யார்?' என்று கேட்கிறார் இயேசு. இதே கேள்வி, மோசேயைப் பார்த்து எகிப்தில், எபிரேயன் ஒருவனால் கேட்கப்படுகிறது: 'எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?' (காண். விப 2:14).

அந்த இளவலின் கேள்வியின் பின்புலத்தில், இயேசு, 'தூங்குகின்ற செல்வன்' உவமை சொல்லி, மூன்று கருத்துகளை முன்வைக்கின்றார்:

(அ) எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதீர்கள்.

(ஆ) மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

(இ) கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர், தங்களோடு செல்வத்தைக் கொண்டு செல்ல இயலாது.

இந்த உவமையில் வரும் செல்வன் ஒரு நல்ல உழைப்பாளர், மேலாளர், மற்றும் நிர்வாகி. தன் உழைப்பால், தன் நிர்வாகத் திறனால், தன் திட்டமிடுதலால் நிறைய விளைபொருள்களைச் சேகரிக்கின்றார் - சேர்த்து வைக்க இடம் இல்லாத அளவுக்கு. மேலும், 'நீ ஓய்வெடு, உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு' என்று தன் மனத்திற்குச் சொல்கிறான்.

மூன்று விடயங்களை அவன் மறந்துவிடுகிறான்:

(அ) உழைப்பு அவனுடையதுதான். ஆனால், நிலத்தை விளையச் செய்பவர் இறைவன். ஆக, இறைவனை மறந்துவிடுகிறான். அவனுடைய செல்வத்தின் வெள்ளிப் பூச்சு, கண்ணாடியில் அவன் முகத்தை மட்டுமே காட்டுகிறது.

(ஆ) செல்வத்தால், தானியத்தால், விளைபொருள்களால் வாங்க முடியாத ஒன்று இருக்கிறது - அதாவது, உயிர் - என்பதை மறந்துவிடுகிறான். ஆக, செல்வம் அவனை உடல்சார்ந்து மட்டும் சிந்திக்க வைக்கிறது.

(இ) களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்ட விரும்பும் அவன், தன் அயலார்களின் காலியான வயிறுகளே களஞ்சியங்கள் என்பதை மறந்துவிடுகிறான். பிறரன்புச் செயல்கள் செய்யவும், பகிரவும் தவறுகிறான். ஆனால், பல நேரங்களில் மற்றவர் கேட்காமல் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் அவர்களுக்குச் சுமையாகவும், செய்யும் நமக்கு விரக்தியாகவும் மாறிவிடுகிறது என்பது என் தனிப்பட்ட அனுபவம். ஏனெனில், நம் உழைப்பின் பயனை அவர்கள் மதிக்காமல், நமக்கு ஏதோ அந்தப் பணம் இலவசமாகக் கிடைத்ததாக எண்ணி, நம்மைத் திருடன் போலப் பார்க்கத் தொடங்குவதுடன், 'உங்களுடைய திருட்டில் இன்னும் பங்கு தாருங்கள்!' என்று சில நேரங்களில் நம்மை வற்புறுத்துவதுபோல நடந்துகொள்வார்கள். இருந்தாலும், பகிர்தல் நலம்.

இயேசுவின் இறுதிக் கேள்வி, நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது என்ன?

'நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'

நீ சேர்த்து வைத்த பெயர், புகழ், பணம், வீடு, வாசல், தோட்டம், தோப்பு, வாகனம் எதுவும் நம்முடையது இல்லை என்றால், அல்லது அது வேறு யாருக்கோ போய்விடும் என்றால், தூக்கம் மறந்து உழைப்பதும், தூக்கம் இல்லாமல் மனக்கோட்டைகள் கட்டுவதும் ஏன்?

Saturday, October 17, 2020

அதிகார வரையறை

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

I. எசாயா 45:1,4-6
II. 1 தெசலோனிக்கர் 1:1-5
III. மத்தேயு 22:15-21

அதிகார வரையறை

நம் தமிழகத்தில் கோவித்-19 பெருந்தொற்று உச்சத்தைத் தொட்டுக்கொண்டு, தொற்று மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகிக்கொண்டிருந்த நாள்களில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 'கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?' என்ற கேள்வி, நம் முதல்வர் அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அது கடவுளுக்குத்தான் தெரியும்!' என்றார் அவர்.

'அது கடவுளுக்குத்தான் தெரியும்!'

- இந்த வார்த்தைகள் சமூக ஊடகங்களில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டன. 'கடவுளுக்குத்தான் தெரியும்' என்றால், 'நீங்கள் ஏன் முதல்வராய் இருக்கிறீர்கள்?' என்றும், 'கடவுள் பார்த்துக்கொள்வார்' என்றால், 'அரசு எதற்கு இருக்கிறது?' என்ற நிறைய வினாக்கள் கேலிச்சித்திரங்களாய்த் தொடுக்கப்பட்டன. இன்னும் சிலர், 'மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நம் முதல்வர், மதம் சார்ந்த சிந்தனையைப் பத்திரிக்கையாளர்களிடம் பகிரலாமா?' என்றச் சட்டச் சிக்கலையும் எழுப்பினர்.

மேற்காணும் விமர்சனங்களும் வினாக்களும் தங்களுக்குள் ஒளித்திருக்கும் செய்தி என்ன? 'நம்மால் அல்லது மனிதர்களால் அல்லது அரசால் எல்லாம் முடியும்' என்பதுதான்.

ஆனால், முதல்வர் அறிந்து சொன்னாரோ, அறியாமல் சொன்னாரோ, அவரின் கூற்றே அறிவார்ந்த கூற்று.

'அரசு மருத்துவமனையை ஏற்பாடு செய்யலாம். ஆனால், நலம் தர முடியாது'

'அரசு ஆம்புலன்சில் அவசரமாக நோயுற்றவரைக் கொண்டு வந்து சேர்க்கலாம்.ஆனால், உயிர் தர முடியாது'

'அரசு மருந்து மாத்திரைகள் தரலாம். ஆனால், நலம் தர முடியாது'

எந்தவொரு அதிகாரத்திற்கும் வரையறை இருக்கிறது என்று நினைவூட்டுகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

திருமண உறவில் இருக்கும் கணவன் தன் மனைவியிடம் அதிகாரம் செலுத்தலாம். மாற்றானின் மனைவி மேல் அதிகாரம் செலுத்த முடியாது.

அருள்பணிப் பயிற்சிப் பாசறையில் இருக்கும் நான், அல்லது பேராசிரியப் பணி செய்யும் நான் என் மாணவர்களிடம் என் பாடத்தின் தொடர்பாகத்தான் அதிகாரம் செலுத்த முடியுமே தவிர, இன்னொரு பாடம் தொடர்பாக வேறு மாணவர்களிடம் அதிகாரம் செலுத்த முடியாது.

என் வளாகத்திற்குள் என் அதிகாரம் செல்லும். வளாகம் தாண்டிவிட்டால் எனக்கு அதிகாரம் இல்லை. ஒரு பங்குத்தந்தையின் அதிகாரம் அவரது பங்கு எல்கை வரைதான். ஓர் ஆயரின் அதிகாரம் அவரது மறைமாவட்ட எல்கை வரை மட்டுமே. ஒரு முதல்வரின் அதிகாரம் அவரது மாநிலத்தின் எல்கை வரை மட்டுமே. ஒரு பிரதமரின் அதிகாரம் அவரது நாட்டில் மட்டுமே. நம் பிரதமர் நம்மேல் நிறையச் சட்டங்களைத் திணிக்கலாம். ஆனால், மற்றொரு நாட்டில் அவரால் ஒன்றும் செய்ய இயலாது.

ஆக, 

ஒன்று, நான் எந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் என் அதிகாரம் வரையறை கொண்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு, எல்லா அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்று கண்டுகொள்ள வேண்டும்.

மூன்று, மனித அதிகாரத்தை மதிக்கவும், இறை அதிகாரத்திற்கு என்னையே சரணாகதி ஆக்கவும் வேண்டும்.

திருப்பாடல் 127 இதை உருவகமாகச் சொல்கிறது:

'ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்' (திபா 127:1)

கட்டடம் கட்டுவோர் எந்த அளவுக்குத் தன் பணியில் நேர்த்தியாக இருந்தாலும், கட்டடம் எழுவது ஆண்டவராலேயே!

நகரைக் காப்போர் எந்த அளவுக்கு விழிப்பாய் இருந்தாலும் நகரம் காக்கப்படுவது ஆண்டவராலேயே!

இந்தத் தெளிவு நமக்குக் கிடைத்துவிட்டால், அல்லது என் வரையறையைத் தாண்டிய செயல்கள் இருக்கின்றன என நான் உணர்ந்துகொண்டால் நான் ஞானம் பெற்றவன் ஆவேன். ஆனால், பல நேரங்களில் என்னால்தான் எல்லாம், எனக்காகத்தான் எல்லாம், என் அதிகாரத்திற்குள்தான் எல்லாம் என்ற மனநிலையில் நான் இருக்கும்போது, எனக்கு மிஞ்சுவது ஏமாற்றமும் விரக்தியும் சோர்வுமே.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 45:1,4-6), இரண்டாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை ஆற்றுப்படுத்தும், நம்பிக்கை தரும் பகுதி இது (எசா 44:24 - 45:8). இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அனுபவித்த சிறைவாசமும், நாடுகடத்தப்பட்ட நிலையும், பாரசீக அரசர் சைரஸ் அவர்களால் நிறைவுக்கு வருகிறது. கிமு 539இல் பாபிலோனியாவை வெற்றிகொள்ளம் சைரஸ், சிறையில் இருக்கும் அனைவரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்ற ஆணை பிறப்பிக்கின்றார் (காண். 2 குறி 36:22-33). எசாயாவைப் பொருத்தவரையில், கடவுளே சைரஸ் அரசரில் செயலாற்றுகிறார். அல்லது, நெபுகத்னேசர் அரசரைக் கொன்று இஸ்ரயேலைக் காயப்படுத்திய கடவுள், சைரஸ் அரசரைக் கொண்டு அக்காயத்திற்கு மருந்திட்டுக் குணமாக்குகிறார். ஆக, நெபுகத்னேசர் மக்களை அடிமைப்படுத்தினாலும் அவரது அதிகாரம் வரையறைக்கு உட்பட்டதே. ஏனெனில், அவருக்கு எதிராகக் கடவுள் சைரஸ் அரசரை எழுப்புகிறார். சைரஸ் அரசரை எசாயா, 'ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்' என அழைக்கிறார். 'திருப்பொழிவு செய்யப்படுதல்' என்பது இஸ்ரயேல் மக்களின் அரசர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். ஆனால், சைரஸ் அரசர் இஸ்ரயேல் மக்களை அவர்களது அடிமைத்தளையிலிருந்து விடுவித்ததால், 'யாக்கோபை முன்னிட்டும் கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஊழியராக' அவர் மாறுகின்றார். 

ஆனால், இது சைரஸ் அரசருக்கே தெரியாது. ஆகையால்தான், 'நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்' என்றும், 'நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்' என்றும் ஆண்டவர் சொல்கின்றார். இது நமக்குச் சொல்வன இரண்டு: ஒன்று, வரலாற்று நிகழ்வுகள் அனைத்தின் காரணர் கடவுள் ஒருவரே. இரண்டு, நம்மை அறியாமலேயே கடவுள் நம்மைப் பயன்படுத்திச் செயலாற்ற வல்லவர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 1:1-5), புனித பவுல் தெசலோனிக்கத் திருஅவைக்கு எழுதிய திருமடலின் வாழ்த்து மற்றும் முன்னுரைப் பகுதியாக அமைந்துள்ளது. புதிய ஏற்பாட்டில் முதன்முதலாக எழுதப்பட்ட (கிபி 51) இந்நூலை, பவுல், கொரிந்து நகரிலிருந்து எழுதுகிறார். தெசலோனிக்கத் திருஅவை என்பது மாசிதோனியாவில் உள்ள ஒரு குழுமம். இந்தக் கடிதத்தின் அமைப்பே பவுலின் மற்றக் கடிதங்களிலும் காணப்படுகின்றன. தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தல் மற்றும் இயக்கம் குறித்துக் கடவுளுக்கு நன்றிகூறுகிறார் பவுல். 'உங்கள் அனைவருக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்' என்னும் பவுலின் வார்த்தைகள், தெசலோனிக்கத் திருஅவையை ஒரே குழுமமாக இணைத்தது இறைவன்தான் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதை முன்வைக்கின்றன. மேலும், 'செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள நம்பிக்கை' என இறைமக்களின் மதிப்பீடுகளையும், நற்பண்புகளையும் பாராட்டுகின்றார். ஆக, தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் காரணம் தான் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்குக் காரணம் இறைவன் என்றும், இறைமக்கள் என்றும் அறிக்கையிடுகிறார் பவுல்.

தன்னை அவர்களுடைய அதிகாரி அல்லது பொறுப்பாளர் நிலையில் முன்வைக்காமல், சகோதரராக முன்வைக்கின்றார். அவர்களுடைய நம்பிக்கை அனைத்தின் ஊற்று ஆண்டவர் என்பதை மிக உறுதியாக ஏற்றுக்கொள்கின்றார். ஏனெனில், ஆண்டவரில் வேரூன்றியிருப்பதாலேயே அவர்களது நம்பிக்கை, 'தூய ஆவி தரும் வல்லமையோடு விளங்கியது' என்கிறார்.

நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 22:15-21) பாடச் சூழல் எருசலேமில் இயேசு. வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்தபின், அவருடைய உவமைப் பொழிவு முடிந்து, நான்கு குழுவினர் அவரை வௌ;வேறு கேள்விகளால் சோதிப்பதாக மத்தேயு பதிவு செய்கின்றார். அவ்வகையில், பரிசேயர்கள், ஏரோதியர்கள் சிலரோடு இணைந்து, அவரைப் பேச்சில் சிக்கவைக்குமாறு அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்புகின்றனர்: 'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?' இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனெனில், 'ஆம்' என்றாலும், 'இல்லை' என்றாலும் இயேசுவுக்கு ஆபத்து. அவர்களின் தீய நோக்கத்தை அறிகின்ற இயேசு, 'வெளிவேடக்காரரே' என அவர்களை அழைத்து, 'வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் கொடுங்கள்' என்று கேட்க, அவர்களும் நாணயம் ஒன்றைக் கொடுக்கின்றனர். அதில், 'இறைவனான அகுஸ்து பேரரசரின் மகன் திபேரியு' என எழுதப்பட்டுள்ளது. கடவுள் வாக்களித்துக் கொடுத்த நாட்டில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அல்லது யூதர்கள், தங்களின் கைகளிலும் பைகளிலும் உரோமை அரசின் நாணயத்தை, அதுவும், 'இறைவனான அகுஸ்து' என்னும் எழுத்துகள் கொண்ட நாணயத்தை வைத்திருப்பது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. 'நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என அன்றாடம் செபித்துவிட்டு (காண். இச 6:4), இன்னொருவரை இறைவன் எனக் கொண்டாடுவது தவறு என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்ற இயேசு, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' எனக் கூறுகிறார். 

இப்படிச் சொல்வதன் வழியாக, உரோமைப் பேரரசின் அரசாட்சியை ஏற்றுக்கொள்வதோடு, உரோமைக்கு வரி செலுத்துவதை ஏற்றுக்கொள்வதோடு, 'சீசருக்கு உரியது அவருடைய நாணயமே தவிர வேறு அல்ல!' என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கின்றார். மேலும், சீசருக்கு உரிய நாணயத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, 'கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்' - அதாவது, 'உங்கள் நல்வாழ்வு, நற்செயல், நற்பண்பு, ஆற்றல், அன்பு, வலிமை அனைத்தையும் ஆண்டவருக்குக் கொடுங்கள்' என்கிறார். இப்படிச் சொல்வதன் வழியாக, சீசருக்கு உரியதையும் தாண்டியவை இருக்கின்றன என்றும், சீசர் ஒருபோதும் இறைவன் அல்லர் என்றும், இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டதே அனைத்து அதிகாரம் என்றும் ஒருசேர உணர்த்துகிறார். சீசர், பாலஸ்தீனம் அல்லது எருசலேமின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலைக் கட்டுப்படுத்தலாமே தவிர, மனித வாழ்வையும், மனித இலக்கையும் கட்டுப்படுத்த அவரால் இயலாது. ஆக, மனித அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டதே. 

எப்போது மனித அதிகாரம் தன் வரையறையை மீற நினைக்கிறதோ, அப்போது அங்கே குழப்பமும் அழிவும் ஏற்படுகின்றன. ஏதேன் தோட்ட நிகழ்வு இதற்கு நல்ல சான்று. எல்லா இடத்திலிருந்தும் அணுகக் கூடிய இடத்தில் ஒரு மரத்தை வைக்கின்ற ஆண்டவராகிய கடவுள், அந்த மரத்தை மனிதன் அணுகக் கூடாது என்ற வரையறையை வைக்கின்றார் (காண். தொநூ 2-3). மனிதர்கள் அந்த வரையறையை மீறிய அந்த நொடியில், அவர்கள் தோட்டத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள், சகோதரன் தன் சகோதரனைக் கொலை செய்கிறான், பாலியல் பிறழ்வு ஏற்படுகிறது, வன்முறையும் பாவமும் பெருக்கெடுக்கிறது. தங்களது அதிகாரமும் தெரிவும் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை நம் முதற்பெற்றோர் மறந்துவிட்டனர்.

ஆக,

இன்றைய முதல் வாசகத்தில், சைரஸ் அரசரின் செயல்பாடு கடவுள் வரையறுத்ததாக இருக்கின்றது.

இரண்டாம் வாசகத்தில், தெசலோனிக்க நகர இறைமக்களின் நம்பிக்கையின் ஊற்று ஆண்டவரின் அதிகாரம் என ஏற்று, அவர்களோடு இணைந்து இறைவனிடம் சரணடைகின்றார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், சீசரின் அதிகார வரையறையைத் தெளிவுபடுத்துகின்ற இயேசு, கடவுளின் அதிகாரத்தை மனிதர்கள் ஒருபோதும் மீற முடியாது என்றும், கடவுளுக்கு உரியதைக் கொடுப்பதில் சமரசம் அறவே கூடாது எனவும் அறிவுறுத்துகின்றார்.

இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'வானத்துல இருந்து குதிச்சவன் மாதிரி பேசுறான் அல்லது நடக்கிறான்!' என்ற சொலவடையை நாம் கேட்டதுண்டு. அதாவது, வானத்தில் இருந்து மட்டும்தான் அதிகாரம் வர முடியும். இயேசுவும் இதைப் பிலாத்திடம் தெளிவுபடுத்துகின்றார். 'உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு. உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்ட பிலாத்துவிடம், 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்று சொல்லி (காண். யோவா 19:10-11), பிலாத்துவின் அதிகார வரையறைத் தெளிவுபடுத்துகிறார் இயேசு.

இன்று, நாம் அனைவரும் நம்மையே 'இறைமகனாக்கிக் கொண்டு' அதிகாரம் செலுத்துவதே நம் பிரச்சினை. முதுமை, நோய், இறப்பு ஆகியவற்றின் முன் நம் அதிகாரமற்ற நிலையை நாம் மறந்துவிடுவதோடு, நாட்டிலும், சமூகத்திலும், பங்குத்தளத்திலும், குடும்பத்திலும் நாம் அதிகாரம் செலுத்துகிறோம்.நம் அதிகாரத்தின் ஊற்று இறைவன். அவரின் அதிகாரத்திற்குத் தன்னைக் கீழ்ப்படுத்தாத எவரும் மற்றவர்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. இதையே, 'மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 96).

Friday, October 16, 2020

அகக்கண்கள் ஒளியூட்டப்பெற

இன்றைய (17 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 1:15-23)

அகக்கண்கள் ஒளியூட்டப்பெற

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், எபேசு நகரத் திருஅவை இறைமக்களின் ஆன்மீக ஞானத்திற்காக இறைவேண்டல் செய்கிறார். அவர்கள் இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கையைப் பாராட்டுகிற பவுல், தொடர்ந்து, 'அவர்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக!' என வாழ்த்துகிறார், செபிக்கிறார்.

கிரேக்கப் பாடத்தில், 'இதயத்தின் கண்கள்' என்று உள்ளது.

'இதயத்தின் கண்கள்' திறக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை அவரே வரையறுக்கிறார்:

(அ) கடவுளுடைய அழைப்பு தரும் எதிர்நோக்கு

(ஆ) இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு

(இ) அவரிடம் நம்பிக்கைகொள்பவர்களில் செயலாற்றும் இறைவல்லமை

ஆகிய மூன்றையும் ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.

'அறிதலில்', கண்களின் பங்கு மிக முக்கியம். கிரேக்க இலக்கியங்களில், 'காண்பதால் வருவது அறிவு' என்ற பழமொழியும் உண்டு. ஆனால், எபிரேய இலக்கியங்களில், 'கேட்பதால் வருவது அறிவு' என்று காணக்கிடக்கிறது. தமிழ் மரபிலும், 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்றே வள்ளுவர் அறிவை வரையறுக்கிறார்.

பவுலின் எழுத்துகளில் காணப்படும் இன்னொரு அழகான செய்தி என்னவென்றால், அவர் நம் ஊனக்கண்களால் காண முடியாதவை பற்றி அதிகம் பேசுகிறார். அல்லது நம் உடலின் கண்கள் தங்களிலேயே வலுவற்றவை என்றும், கண்களைத் திறப்பதால் அல்ல, நம் கண்களை மூடி, இதயத்தின் கண்களைத் திறப்பதால்தான் நாம் அறிவு பெறுகிறோம் என்பது அவரது புரிதல்.

'நாங்கள் காண்பவற்றை அல்ல. நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) எனக் கொரிந்து நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் வார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆங்கிலத்தில், 'இன்ஸைட்' ('insight') என்ற ஒரு வார்த்தை உண்டு. தமிழில் இதை, 'உட்பார்வை' அல்லது 'நுண்ணறிவு' என வரையறுக்கலாம். அதாவது, நம் வாழ்வின் பிரச்சினைகளுக்கு திடீரென்று நம் மூளை ஒரு தீர்வைக் காணும். அது திடீரென வரும். தூங்கும்போது, குளிக்கும்போது, நடக்கும்போது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எனச் சில நேரங்களில் நம் மனக்கண் திறந்து, வாழ்க்கை தெளிவாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:8-12), 'தொழுகைக்கூடங்களுக்கும், ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத்தருவார்' என்கிறார் இயேசு.

தூய ஆவியார் கற்றுத்தருதலை நம் நுண்ணறிவு அல்லது உட்பார்வை அல்லது இதயத்தின் கண்கள் அறியும்.

இன்று கண்களைத் திறந்து பார்க்கும் நம் வாழ்க்கை, சில நேரங்களில், நமக்கு அச்சத்தையும், ஏமாற்றத்தையும் தரலாம். அந்த நேரத்தில், நம் புறக்கண்களை மூடிவிட்டு, சற்றே அகக்கண்களைத் திறந்தால், 'கடவுள் நம் வாழ்விற்கு வைத்துள்ள எதிர்நோக்கு,' 'அவர் நம்மேல் கொண்டாடும் உரிமை,' மற்றும் 'நம்மில் செயலாற்றும் அவரது வல்லமை' ஆகியவை தெளிவாகும்.

இதயத்தின் கண்கள் திறக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

(அ) உடலின் கண்கள் மூடப்பட வேண்டும் (ஆனால், தூங்கிவிடக் கூடாது).

(ஆ) நம் உள்ளத்தின் பரபரப்பும் விறுவிறுப்பும் அடங்க வேண்டும்.

(இ) தூய ஆவியாரின் அருள் வேண்டும்.