Sunday, May 31, 2020

எட்டு பண்புகள்

இன்றைய (1 ஜூன் 2020) முதல் வாசகம் (2 பேது 1:1-7)

எட்டு பண்புகள்

பாஸ்கா காலம் நிறைவுற்று இப்போது நாம் ஆண்டின் பொதுக்காலம் ஒன்பதாம் வாரத்திற்குள் நுழைகின்றோம். தவக்காலத்தின் இறுதி நாள்கள் தொடங்கி பாஸ்கா காலம் முழுவதுமே நமக்கு ஆலய வழிபாடு இல்லாமல் போனது நிறையவே வருத்தம் தருகிறது. ஆலயத்தின் கதவுகள் விரைவில் திறக்கப்படும்.

நமக்காவது கொரோனா காலத்தில்தான் ஆலயம் இல்லை, அல்லது ஆலய வழிபாடு இல்லை. ஆனால், தொடக்கத் திருஅவையில் ஆலயமே இல்லை. இல்லத் திருஅவைகள் என்று சொல்லப்படுகின்ற சில வீடுகள் இணைந்த திருஅவைதான் இருந்தது. இன்று நாம் செய்திகளை கட்செவி அல்லது காணொளி வழியாக வழங்குவதுபோல, அன்றைய நாள்களில் திருத்தூதர்களின் அவர்களின் வழிவந்தவர்களும் கடிதங்கள் வழியாக வழங்கினர். கடிதம் எழுதுவது என்பது இன்றைய நம் அரசியல் தலைவர்கள் எழுதுவது போல அல்ல. நம் மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் காவிரி நீர் கிடைக்க நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதுவார், ஈழப்போர் நிற்க கடிதம் எழுதுவார். ஆனால், தன் மகனுக்கு அமைச்சரவையில் இடம் பெற விமானம் ஏறிச் சென்றார். ஆளும் இடங்களில் கடிதங்கள் என்பவை தேவையற்ற சுமைகளே.

ஆனால், இப்படிப்பட்ட கடிதம் போல அல்ல இன்றைய முதல் வாசகம் தொடங்கி நாம் இனி வரும் நாள்களில் வாசிக்கப் போகும் கடிதங்கள். அவை, மனித ஆன்மாவின் எண்ணங்களை ஊடுருவிச் செல்பவை. மாற்றத்தை ஏற்படுத்துபவை. எண்ணங்களைச் சீர்படுத்துபவை. உணர்வுகளை நெறிப்படுத்துபவை.

பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் பெரும்பாலும் துன்பம் பற்றியும், துன்பத்தை எதிர்கொள்தல் பற்றியும் எழுதுகின்றார். ஆனால், இரண்டாவது மடலில் அப்படிப்பட்ட ஓட்டம் இல்லை. கிறிஸ்தவ அழைப்பும், வாழ்க்கை நிலையும் எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலாகவே இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தின் நிறைவாக இருக்கும் அருள்வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது:

'ஆகையால், நீங்கள் உங்கள்
நம்பிக்கையோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும்,
அறிவோடு தன்னடக்கமும்,
தன்னடக்கத்தோடு மனஉறுதியும்,
மனஉறுதியோடு இறைப்பற்றும்,
இறைப்பற்றோடு சகோதர நேயமும்,
சகோதர நேயத்தோடு அன்பும்
கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்' (2 பேது 1:5-7)

இங்கே, நம்பிக்கை தொடங்கி அன்பு வரை பேதுரு எட்டு பண்புகளை முன்வைக்கின்றார். இலக்கிய அமைப்பு அடிப்படையில் இங்கே 'ஏணிப்படி வரிசை' அமைப்பைப் பார்க்கிறோம். அதாவது, ஒரு பண்பு இன்னொரு பண்பின் தொடக்கமாக இருக்கும். எ.கா., நம்பிக்கை, நற்பண்பு, நற்பண்போடு அறிவு. ஆக, ஒவ்வொரு பண்பும் அதற்கு முந்தைய பண்பின் மேல் கட்டப்பட வேண்டும். நம்பிக்கை இருந்தால் நற்பண்பு இருக்க வேண்டும். அல்லது நற்பண்பு நம்பிக்கையில் கட்டப்பட வேண்டும்.

இந்த எட்டு பண்புகள் இருந்தால் என்ன நடக்கும்?

அவரே தொடர்கிறார்: 'இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால் நீங்கள் சோம்பேறிகளாகவும், பயனற்றவர்களாகவும் இருக்க மாட்டீர்கள்!'

என்ன அழகான வார்த்தைகள்!

நாம் பல நேரங்களில் நம் வாழ்க்கை யாருக்கும் பயன்தரவில்லையே என்றும், எல்லா நாளும் ஒரே நாள் போலக் கடந்து செல்கிறதே என்றும், குறுகிய வட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் புலம்புகிறோம்.

அப்படிப்பட்ட புலம்பலும், கலக்கமும், சோர்வும் தேவையில்லை.

மேற்காணும் எட்டு பண்புகளும் நம்மைச் சுறுசுறுப்பாகவும், பயனுள்ளவர்களாகவும் வைத்திருக்கும்.

நற்செயல்: இந்த எட்டு பண்புகளில் என்னிடம் இருப்பவை, இல்லாதவை, நான் வளர்க்க வேண்டியவை ஆகியவற்றை எண்ணிப் பார்த்தல்.

1 comment:

  1. பேதுரு எடுத்து வைக்கும் நற்பண்பு,நம்பிக்கை,அறிவு போன்ற பண்புகள் நம்மிடையே இருப்பின் நாம் பயனற்றவர்களாகவும்,சோம்பேறிகளாகவும் இருக்க மாட்டோம் என்கிறார். இது மட்டுமின்றி இப்பண்புகள் நம்மைக் கலக்கத்திலிருந்தும்,சோர்விலிருந்தும் காப்பாற்றுவதோடு நம்மைப் பிறருக்கும் பயனுள்ளவர்களாக்கும் என்கிறார். ஒரே நேரத்தில் எட்டுப் பண்புகளையும் இல்லையெனினும் ஒவ்வொன்றாக வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாமே!

    என்னிடம் இருக்கும் நற்பண்புகள் என்னவென்று எனக்கு எதிரில் உள்ளவரைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.இருந்தால் பெருமைப்படவும்,இல்லையேல் வளர்த்துக்கொள்ளவும் அது உதவும்.அப்பப்போ நம்மைப்பற்றியும் ஒரு சுய ஆய்விற்குட்படுத்தும் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete