Sunday, May 3, 2020

வாழ்வது இருவகை

இன்றைய (4 மே 2020) நற்செய்தி (யோவா 10:11-18)

வாழ்வது இருவகை

நேற்றைய தினம் (3 மே 2020) நாம் நல்லாயன் ஞாயிற்றைக் கொண்டாடி மகிழ்ந்தோம். நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியை இன்று நாம் வாசிக்கின்றோம்.

இங்கே ஆடுகளைத் தேடி இரண்டு வகை நபர்கள் வருகிறார்கள்:

முதல் வகை நபர் நல்ல ஆயர்.

இவர் என்ன செய்வார்?

தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார்.

இரண்டாம் வகை நபர் கூலிக்கு மேய்ப்பவர்.

இவர் என்ன செய்வார்?

(அ) ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்.

ஏனெனில், ஆடுகளின் உயிரை விட இவர் தன்னுடைய உயிரை முதன்மையாகக் கருதுவார்.

(ஆ) இவர் ஆடுகளின்மேல் சொந்தம் அல்லது உரிமை கொண்டாட மாட்டார்.

(இ) இவருக்கு ஆடுகளைப் பற்றிக் கவலை இல்லை. இவருடைய கவலை எல்லாம், தான் உண்டோமோ, தான் உறங்கினோமோ, தான் கூலி பெற்றோமா என்பதாகவே இருக்கும்.

'ஆடு' என்பதை நம் வாழ்க்கை என உருவகித்துக்கொள்வோம்.

நம் வாழ்க்கையை நாம் 'நல்ல ஆயன்' போல வாழலாம். அல்லது 'கூலிக்காரர்' போல வாழலாம்.

நல்ல ஆயனாக வாழ்ந்தோம் என்றால், நாம் நம் வாழ்க்கையின்மேல் உரிமை கொண்டாடுவோம். நம் இலக்குகளை அடைய உயிரையும் கொடுப்போம். எதிர்ப்பு அல்லது ஆபத்து வரும்போது பின்வாங்கவோ அல்லது தப்பிச் செல்லவோ மாட்டோம். எனக்கு அடுத்திருக்கும் 'ஆயன்' மேல் பொறாமையோ, கோபமோ எனக்கு இருக்காது. 'அவனது வாழ்வுக்கு அவன் ஆயன், என்னுடைய வாழ்வுக்கு நான் ஆயன். அவனை நான் தீர்ப்பிடக் கூடாது' என்ற பரந்த மனப்பான்மை உருவாகும்.

ஆனால்,

கூலிக்காரராக வாழ்ந்தோம் என்றால், நாம் நம் வாழ்க்கையின்மேல் உரிமை கொண்டாட மாட்டோம். நம் இலக்குகள் பற்றி அக்கறை இல்லாமல் இருப்போம். அல்லது இலக்குகள் நிர்ணயம் செய்யாமல் இருப்போம். எதிர்ப்பு அல்லது ஆபத்து வரும்போது அப்படியே துவண்டு விடுவோம். எனக்கு அடுத்திருக்கும் 'ஆயன்' அல்லது 'கூலிக்காரன்' மேல் எனக்கு பொறாமையும், கோபமும் இருக்கும். 'அவன் ஏன் இப்படிச் செய்கிறான்? இவன் ஏன் அப்படிச் செய்கிறான்?' என்று எந்நேரமும் நாம் பிறரின் வாழ்க்கை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்போம்.

ஆயன் மனநிலை வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

இயேசுவே விடையும் தருகின்றார்:

'உயிரைக் கொடுக்கவும் அதிகாரம் உண்டு. அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு' என்று சொல்வதன் வழியாக இயேசு விடை தருகின்றார்.

அதாவது, என் வாழ்க்கையை நான் என் கட்டுக்குள், என் அதிகாரத்திற்குள், என் ஆற்றலுக்குள் வைத்திருக்க வேண்டும்.

கூலிக்காரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

நாம் நம்முடைய வாழ்க்கையில் நம் வாழ்வின் அதிகாரத்தை மற்றவர்கள் கைகளில் கொடுத்துவிட்டால் நாமும் கூலிக்காரர்களே.

தன்னாளுகை, தன்னதிகாரம் இருந்தால் நான் என்றும் ஆயனே.

1 comment:

  1. பொதுவாக ‘ நல்லாயன்’ உவமையில் “ஆயன்- ஆட்டை” “கடவுள்- மனிதனுக்கு” “ஒப்பிட்டே பார்த்திருப்போம். ஆனால் தந்தை ‘ஆடு’ என்பதை நம் ‘வாழ்க்கையோடு’ ஒப்பிட்டுப்பேசுகிறார். ஒரு நல்ல ஆயனின் இலக்கணமாக “;அவனது வாழ்வுக்கு அவன் ஆயன்; என்னுடைய வாழ்வுக்கு நான் ஆயன்.அவனை நான் தீர்ப்பிடக்கூடாது” எனும் பரந்த மனப்பான்மையைச் சுட்டிக்காட்டுகிறார். அருமை! கூலிக்காரனைப்போல நம் அதிகாரத்தை அடுத்தவரின் கைகளில் கொடுத்துவிடாமல் என் வாழ்க்கையை என் அதிகாரத்திற்குள், என் கட்டுக்குள், என் ஆற்றலுக்குள் வைத்திருந்தால் நானும் நல்ல ஆயனே! கம்பீரமும்,தோரணையும் சேர்ந்து ஒலிக்கின்றன தந்தையின் வரிகளில்.

    தந்தையின் நேற்றைய வலைப்பூவில் ஆயன்- ஆடு குறித்த செய்தி குறித்து சிறிது கோப்ப்பட்ட என்னை தாலாட்டுவது போலிருந்தன இன்றைய வரிகள். எதையுமே வித்ததியாசமான கோணத்தில் தரும் தந்தைக்கு என் பாராட்டும்! நன்றியும்!!!

    ReplyDelete