Saturday, May 2, 2020

அவர்கள் புரிந்துகொள்ளவில்லை!

அவர்கள் புரிந்துகொள்ளவில்லை!

ஆஸ்கர் ஒய்ல்ட் (Oscar Wilde) அவர்களின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று, 'தெ பேலட் ஆஃப் ரீடிங் ஜெய்ல்' (The Ballad of Reading Gaol). இவர் இரண்டு ஆண்டுகள் வேன்ட்ஸ்வர்த் சிறைச்சாலையில் இருந்தபோது, 1895இல் எழுதிய இந்தப் பாடலின் பின்புலம் என்ன? அவர் இருந்த சிறைச்சாலைக்கு ஒரு இராணுவ வீரர் வருகிறார். அவர் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ததற்காக தூக்கிலிடப்படுகிறார். இந்த நிகழ்வு ஒய்ல்டை அதிகம் பாதிக்கிறது. ஆக, 'ஒவ்வொருவரும் தான் காதலிப்பதை ('அன்பு செய்வதை' என்று மொழிபெயர்த்தால் ரொம்ப ரெலிஜியஸாக இருக்கிறது. ஆக, அப்படி வேண்டாம்) கொல்கிறார்.'

'ஒவ்வொருவரும் தான் காதலிப்பதைக் கொள்கிறார்'

இந்த வரி இந்தப் பாடலில் அடிக்கடி வரும்.

இப்பாடலின் சில வரிகளை இங்கே மொழிபெயர்க்கிறேன்:

'அவன் தன்னுடைய சிகப்பு நிற மேலாடையை அணியவில்லை
ஏனெனில், இரத்தமும் மதுவும் சிகப்பு.
இறந்த கிடந்தவளோடு அவனை அவர்கள் கண்டபோது
இரத்தமும் மதுவும் அவன் கைகளில்.
இவன் காதலித்த அந்த பேதைப் பெண் பாவம்
கொல்லப்பட்டு அவளுடைய படுக்கையில் கிடந்தாள்.

கருநிற ஆடை அணிந்து அவன்
கைதிகள் நடுவே நடந்தான்
தலையில் ஒரு தொப்பி
அவன் உற்சாகமாக நடந்தான்
மற்றவர்களோடு நான் நடந்தேன்.
'இவன் தூக்கிலிடப்பட வேண்டும்' என்றது ஒரு மெல்லிய குரல்.

என் ஆன்மாவில் நிறைய வலி இருந்தாலும்
என் வலியை நான் உணரவில்லை
இனிமையான நாளை அவன் சோகத்துடன்
பார்க்க என்ன காரணம்?
தான் காதலித்த ஒன்றை அவன் கொன்றான்
ஆக, அவன் சாக வேண்டும்.

இருந்தாலும், ஒவ்வொருவரும் தான் காதலிப்பதைக் கொல்கிறார்
ஒவ்வொருவரும் இதைக் கேட்பாராக!
சிலர் கசப்புடன் கொல்கின்றனர்
சிலர் புகழ்ந்துபேசி கொல்கின்றனர்!
கோழை முத்தமிட்டுக் கொல்கிறான்
தைரியசாலி கத்திகொண்டு கொல்கிறான்!

தங்கள் காதலை சிலர் இளமையில் கொல்கின்றனர்
சிலர் வயதுமுதிர்ந்தவுடன் கொல்கின்றனர்!
காமத்தின் கைகள்கொண்டு சிலர் கழுத்தை நெறிக்கின்றனர்
தங்கக் கரங்களால் சிலர் நெறிக்கின்றனர்!
இரக்கமுள்ளவர்கள் கத்தி எடுக்கின்றனர் ஏனெனில்
இறந்தவர்கள் சீக்கிரம் உறைந்துவிடுவர்!

சிலர் கொஞ்சம் காதலிக்கின்றனர், சிலர் ரொம்ப காதலிக்கின்றனர்!
சிலர் காதலை விற்கிறார்கள். சிலர் காதலை வாங்குகிறார்கள்.
சிலர் கண்ணீரால் காதல் பத்திரத்தில் கையெழுத்திடுகின்றனர்.
சிலர் எந்தப் பெருமூச்சுமின்றி காதலிக்கின்றனர்.
ஏனெனில் ஒவ்வொருவரும் தான் காதலிப்பதைக் கொல்கிறார்.
இருந்தாலும் ஒருவரும் இறப்பதில்லை.

வெட்கத்துக்குரிய முறையில் அவர் இறப்பதில்லை
இருளின் அவமானத்தில் அவர் இறப்பதில்லை
அவரின் கழுத்தில் கயிறு நெருக்குவதில்லை
அவரின் முகத்தில் துணி மூடப்படுவதில்லை
நகரும் தரைகளுக்குக் கீழ் அவருடைய கால்கள்
வெற்றுக் குழிக்குள் உதறுவதில்லை

வானத்தை வெறித்து அவன் பார்ப்பதில்லை
சிறிய கண்ணாடித் துவாரத்தின் வழியே
களிமண் உதடுகளால் அவன் செபிப்பதில்லை
தன் துன்பம் கடந்துபோக வேண்டுமென்று
பயந்துபோன தன் முகத்தில் உணருவதில்லை
கயபாவின் முத்தத்தை.

காதலும் வாழ்வும் நேர்மையாக இருந்தால்
வயலின் இசைத்து ஆடுவது இனிமையாக இருக்கும்.
புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் ஏற்றாற்போல ஆடுவது
மென்மையானது அரிதானது.
ஆனால் உதறுகின்ற கால்களைக் கொண்டு
காற்றில் நடனமாடுவது இனிதானதன்று!

ஆர்வமிகு கண்களாலும் சோகமான பார்வையோடும்
அவனை நாங்கள் அன்றாடம் பார்த்தோம்.
எங்கள் ஒவ்வொருவரின் இறுதியும் இப்படித்தானோ
என்று எண்ணி வியந்தோம்.
ஆனால் இறந்த அந்த மனிதன் அன்று முதல்
கைதிகள் நடுவே நடமாடவில்லை.

புயலில் சிக்கிய இரண்டு பாய்மரங்கள்போல்
நாங்கள் ஒருவரை ஒருவர் கடந்து சென்றோம்.
எந்தவொரு சமிக்ஞையோ வார்த்தையோ இல்லை எங்களுக்குள்
பேசுவதற்கு எவ்வார்த்தையும் எமதன்று.
ஏனெனில் நாங்கள் சந்தித்தது புனித இரவில் அல்ல
அவமானமான பகலில்.

அவன் கொல்லப்பட வேண்டும் அதுவே நியதி
என்றார் மாகாண ஆளுநர்.
இறப்பு என்பது ஓர் அறிவியல் உண்மை
ஏற்றே ஆக வேண்டும் என்றார் மருத்துவர்
நாளுக்கு இரண்டுமுறை அழைத்த ஆன்மீக குரு
அவன் படிப்பதற்கு புத்தகம் கொடுத்தார்.

நாளுக்கு இருமுறை தன் குழாய்சுருட்டை இழுத்தான் அவன்
கொஞ்சம் 'பியர்' குடித்தான்.
அவன் ஆன்மா உறுதியாக இருந்தது
அவனிடம் பயம் ஒன்றுமில்லை
தூக்கிடும் கைகள் தன் அருகில் வருவது
தனக்கு மகிழ்ச்சி என்றான் அவன்.

எந்தக் காவலரும் அவனிடம் ஏன் என்று
கேட்கத் துணியவில்லை.
ஏனெனில் முகத்தை இறுக்கிக்கொண்டு
முகத்தையே முகமூடியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே கட்டளை.
இல்லை எனில் காவலர்
ஆறுதல் சொல்லவும் அழவும் தொடங்கிவிடுவார்.

இறப்பவர்கள் இறங்கும் குழிக்குள்
இரக்கத்திற்கு வேலை என்ன?
அந்த இடத்தில் எந்த அருள்வார்த்தை சொல்லி
அவன் தன் சகோதரரின் ஆன்மாவுக்கு உதவுவான்?
நாங்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை
சாத்தானின் படைவீரர் போல நாங்கள் இருந்தோம்.

சாக்குகள் நெய்தோம், கற்கள் உடைத்தோம்
கப்பிகள் சுழற்றினோம்.
தகரங்கள் தகர்த்தோம் அவ்வோசையோடு பாடினோம்
நூற்பாலையில் வியர்த்து நின்றோம்.
ஆனால் ஒவ்வொருவரின் இதயத்தையும்
நிரப்பிய பயம் உறைந்துகிடந்தது.

இதுவரை அழுதிராத மனிதர்கள் இனி அழ வேண்டும் என்றால்
எப்படி வரும் தூக்கம்?
மடையர்கள், திருடர்கள், பொய்யர்கள்
நாங்கள் அனைவரும் விழித்துக் கிடந்தோம்.
மற்றவனின் குற்றத்தைத் தான் உணர்வது
ஐயோ! எவ்வளவு பெரிய கொடுமை!

காலை மணி எட்டு அடிக்க
அவன் தூக்கிலிடப்பட்டான்!
நல்லவருக்கும் தீயவருக்கும்
விதி ஒரே போன்ற கயிறாலேயே இறுக்குகிறது.
அவன் கத்திய அதே நொடி
ஒட்டுமொத்த சிறையும் அமைதி காத்தது!

தூக்கு நிறைவேற்றப்படும் நாளில்
செப அறையில் செபம் நடப்பதில்லை.
மதியம் வரை அறைகளில் வைக்கப்பட்டிருந்த நாங்கள்
மணி ஓசை கேட்டு உணவருந்த வந்தோம்.
உயிருடன் இருந்த ஒன்றை அவன் கொன்றான்
நாங்கள் இறந்த அவனை மௌனத்தால் கொன்றோம்.

அவனைப் புதைத்த இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு
பூச்செடிகள் நட மாட்டார்கள்!
வெளிறிய அவன் கண்கள் திருடனை வான்வீட்டிற்குள் ஏற்ற
புனித கரங்களைத் தேடுகின்றன.
உடைந்த நொறுங்கிய உள்ளத்தை
ஆண்டவர் தள்ளிவிடுவதில்லை.

இறந்தோரை இறைவன் அழைக்கும் அந்நாள் வரை
அமைதியில் அவன் இளைப்பாறட்டும்!
மடமையில் நாம் கண்ணீர் வடிக்கவோ
பெருமூச்சைக் குவியலாக எழுப்பவோ வேண்டாம்!
தான் காதலித்ததை அவன் கொன்றான்
ஆகவே அவன் இறந்தே ஆக வேண்டும்!

இருந்தாலும், ஒவ்வொருவரும் தான் காதலிப்பதைக் கொல்கிறார்
ஒவ்வொருவரும் இதைக் கேட்பாராக!
சிலர் கசப்புடன் கொல்கின்றனர்
சிலர் புகழ்ந்துபேசி கொல்கின்றனர்!
கோழை முத்தமிட்டுக் கொல்கிறான்
தைரியசாலி கத்திகொண்டு கொல்கிறான்!'

நிற்க.

நான் மொழிபெயர்;த்திருப்பது சில வரிகள்தாம். ஆனால், பாடல் நீண்டது.

தான் சந்திக்கும் ஒரு தூக்குத் தண்டனைக் கைதியைச் சந்திக்கும் இன்னொரு கைதியான ஆஸ்கர் ஒய்ல்ட் அச்சிறைச்சாலையின் இருப்பு, இருத்தல், இயக்கம், கைதிகளின் உணர்வுகள் அனைத்தையும் மிக அழகாகச் சொன்னாலும், அவர் இறுதியில் சொல்ல விரும்புவது இதுதான்: 'ஒவ்வொருவரும் தான் காதலிப்பதைக் கொல்கிறார்.'

இதை மேலோட்டமாக வாசித்தால் இதன் பொருள் புரியாது.

ஆனால், பாடலின் பின்புலத்தில் வாசித்தால் மட்டுமே இது புரியும்.

சரி?

இந்தப் பாடலுக்கும் உயிர்ப்பு ஞாயிறு நான்காம் ஞாயிற்றுக்கும் என்ன தொடர்பு?

இரண்டு விடயங்கள்:

ஒன்று, 'ஆயன்-ஆடு' என்று உவமையில் இயேசு பேசியதை, 'சீடர்கள் புரிந்துகொள்ளவில்லை.'

அதாவது, அவர்கள் எல்.கே.ஜி படிக்கும் நிலையில் இருந்தனர். அவர்களிடம் போய் இயேசு, ஆஸ்கர் ஒய்ல்ட் கற்றுக் கொடுக்க முயன்றது இயேசுவின் தவறு. அவர்களுக்குத் தெரிந்த அளவில், 'ஒரு சிங்கம், நான்கு மாடுகள், வயல்' என்று சொல்லித் தந்திருக்க வேண்டும்.

ஆக, முதல் கேள்வி: இன்று நான் என் மறையுரையில், வகுப்பில், மேசையில், அலைபேசியில் பேசுவது மற்றவர்களுக்குப் புரிகிறதா? என்று கேட்பது.

இரண்டு, 'நான் நல்ல ஆயன்' என்று நானோ, நீங்களோ, இயேசுவோ சொல்வது நன்றாக இருக்கிறது. ஆனால், 'நான் ஓர் ஆடு' என்று சொல்வது என்னை நானே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதாக இருக்கிறது. இன்று நாம் திருஅவையில் இன்னும் ஒருவர் மற்றவரை மந்தை நிலையில் வைத்திருக்கிறோம். ஏனெனில், இது நமக்கு சௌகரியமாக இருக்கிறது. ஏனெனில், ஆடுகள் அடிபட்டாலும் அழுவதில்லை. சீடர்களின் புரிந்துகொள்ளாமைகூட, அவர்கள் இயேசுவுக்கு எதிராகச் செய்த 'ஆடுகளின்' மௌனப் புரட்சியாக இருக்கலாம். 'என்னை நீ ஆடு என்கிறாய். ஆட்டிற்கு என்ன புரியும்?' என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆக, இரண்டாவது கேள்வி: இன்று நான் ஒருவர் மற்றவரை ஆடு போல நினைத்து என் குரலுக்கு ஏற்ப அழைப்பதும் அடித்துவிரட்டுவதும் என் பணி என்றால், அதுதான் ஆயனின் பணியா?

இறுதியாக,

ஆஸ்கர் ஒய்ல்ட் கற்றுக்கொடுக்கும் ஆயன் தன் ஆடுகளுக்கு அது புரியுமா என்று பார்க்க வேண்டும்.

1 comment:

  1. “ஒவ்வொருவரும் தன் காதலியைக்கொல்கிறார்”. சிறைச்சாலையிலிருந்த ஆஸ்கர் ஒயில்ட் தன்மனைவியைக்கொன்ற ஒரு இராணுவ வீரனின் செயலின்பின்புலத்தில் பொங்கி வந்த கவிதைப்புதையல். எல்லோருக்கும் இதை வாசிக்கவோ, பாராட்டவோ இல்லை விமரிசிக்கவோ தோன்றுமெனில் தந்தைக்கு மட்டுமே இவ்வரிகளை “உயிர்ப்புக்காலத்தின் நான்காம் ஞாயிறோடு” இணைத்துப்பேசத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!
    விவிலியத்தில் வரும் ஆயன்- ஆடு உருவகம் பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒன்று ; ஏற்றுக்கொள்ளும் ஒன்று என்றுதான் நான்றிவேன்.ஆனால் தந்தை இங்கு குறைத்து மதிப்பிடுவது ஆயனையா இல்லை ஆட்டையா... புரியவில்லை.”இன்று நான் ஒருவர் மற்றொருவரை ஆடுபோல நினைத்து என் குரலுக்கேற்ப அழைப்பதும், அடித்து விரட்டுவதும் என் பணி என்றால் அது ஆயனின் பணியா?”.. இவ்வரிகளை வாசித்துவிட்டு சிறிது நேரம் யோசித்தேன்.என் புத்திக்கெட்டாத சித்தாத்தங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதைவிட நான் ஒரு முட்டாளாக இருப்பதையே விரும்புகிறேன். ஆஸ்கர் ஒயில்டும்,தந்தையும் சேர்ந்தே என்னை மன்னிப்பார்களாக! இந்த ஆட்டிற்கு ஆயன்மொழி மட்டும் தெரிந்தாலே போதுமென்று சொல்லத்தோன்றுகிறது. ஆனாலும் தங்களின் மொழிபெயர்ப்பையும்,பொறுமையையும் வெகுவாக இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    கூடவே இன்னொரு சிந்தனையும் தோன்றுகிறது.ஒருவேளை தந்தை “ ஆடுகளின்” திறமையை சோதிக்க இத்தனை முயற்சி எடுத்து இந்தப் பதிவைத்தந்திருப்பாரோ! தெரியவில்லை. ஆயன்கள்- ஆடுகளின் உறவு என்றென்றும் புனிதமும்,மனிதமும் காத்தால் சரியே! மீண்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete