Friday, May 22, 2020

முன்வருதல்

இன்றைய (23 மே 2020) முதல் வாசகம் (திப 18:23-28)

முன்வருதல்

இன்றைய முதல் வாசகத்தில் அப்பொல்லோ என்ற கதைமாந்தரைப் பார்க்கிறோம். இவர் எபேசில் கற்பித்து வருகின்றார். 

இவரிடம் அப்படி என்ன சிறப்பு?

பவுலைப் போல தமஸ்கு நகரிக்குச் செல்லும் வழியில் ஆண்டவரை எதிர்கொள்ளவில்லை என்றாலும், பேதுரு மற்றும் யோவான் போல ஆண்டவரின் திருத்தூதர்களாக இவர் இல்லாவிடினும், தானாக முன்வந்து நற்செய்திப் பணி செய்கின்றார். தன்னுடைய திறமைகள் அனைத்தையும் நற்செய்திப் பணிக்காகச் செலவிடுகின்றார். என்ன ஆச்சர்யம்!

ஆக, நம் வாழ்வில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால், பெரிய அளவில், பெரிய நபராக, பெரிய அழைத்தலைப் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக, சிறிய அளவில், சிறிய நபராக, சிறிய அழைத்தலோடு செய்யலாம்.

முன்வருதல் எப்படி வரும்?

ஒன்று, எனக்கு என்மேல் தன்நம்பிக்கை இருக்கும்போது வரும். தன்நம்பிக்கை இல்லாமல் முன்வருதல் சாத்தியமில்லை. நான் நிறைய கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, ஏதாவது விளையாட்டு நடத்த, 'யாராவது முன்வருகிறீர்களா?' என்ற கேட்கும்போது, பலர் தயக்கம் காட்டுவதுண்டு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தன்நம்பிக்கை குறைவு. ஒரே ஒரு இடத்தில்தான் அமர்வில் இருந்த 20 பேரும் கைகளை உயர்த்தினர். 

இரண்டு, அடுத்தவர் தேவையில் இருக்கும்போது. என்னுடைய தன்நம்பிக்கை மட்டுமல்ல. அடுத்தவரின் தேவையும் சில நேரங்களில் நம்மை முன்வரத் தூண்டும். நாம் நடந்து சென்றுகொண்டிருக்கிறோம். திடீரென நமக்கு முன்னால் செல்லும் நபர் ஒருவர் மயங்கி விழுகிறார். உடனே நாம் ஓடிச் சென்று அவரைத் தூக்குகிறோம். இங்கே, நம் தன்னம்பிக்கையைவிட அவருடைய தேவை நம்மை ஓட வைக்கிறது.
மூன்று, பணி நிமித்தமாக. பணியின் நிமித்தமாக சில நேரங்களில் நாம் முன்வருவோம். மருத்துவமனைக்குச் செல்கிறோம். அங்கே காயம் பட்டு ஒருவர் கட்டிலில் அழைத்துவரப்படுகின்றார். நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கலாம், அடுத்தவர் தேவையில் இருக்கலாம். ஆனால், பணிசார் அறிவு இல்லாமல், அல்லது பணியின் கடப்பாடு இல்லாமல் நான் அவருக்கு உதவி செய்ய முன்வர முடியாது.

அப்பொல்லோ இந்த மூன்று காரணங்களுக்காக நற்செய்தி அறிவிக்க முன்வந்தாலும், இதையும் தாண்டி ஒரு காரணம் இருந்தது.

அவர், 'இயேசுவே மெசியா' என எடுத்துக்காட்டினார்.

தன் வாழ்வாலும், வார்த்தையாலும்.

நற்செயல்: சின்ன சின்ன விடயங்களில் நாம் முன்வருதலோடு இயங்குகிறோமா? என்று ஆராய்தல்.


2 comments:

  1. அப்பல்லோ...நம் வாழ்வில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் பெரிய அளவில்,பெரிய நபராக,பெரிய அழைத்தலைப் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை.சிறிய அளவில்,சிறிய நபராக,சிறிய அழைத்தலோடும் செய்யலாம் என நமக்குக் காட்டுபவர். ஆம்! வாழ்வின் பெரிய விஷயங்கள் எல்லாமே சிறிய புள்ளியிலிருந்து தானே வருகின்றன.ரொம்ப ப்ராக்டிக்கலான ஒரு விஷயம். புள்ளியிட்ட தந்தைக்கு நன்றிகள்!

    சின்னதா..பெரியதா என்றில்லை...எது கைகொடுக்கிறதோ அதில் நம் வித்தையைக் காட்டுவோம்!

    ReplyDelete
  2. அழைப்பு பெற்றவர்கள் தாங்கள் பெற்ற அழைப்பை பெரிதாக தாங்கள் உணரும் போது எவ்வளவுக்கு தங்களால் செவ்வையாக செய்ய இயலுமோ அந்தவளவுக்கு முன்வந்து செயல்படுவதற்கு அப்பல்லோ சிறந்த எடுத்துக்காட்டு என்பதை தங்கள் பதிவின்மூலம் உணரச்செய்ததற்கு தந்தைக்கு பாராட்டு.

    ReplyDelete