Monday, June 1, 2020

சீசருடையவை

இன்றைய (2 ஜூன் 2020) நற்செய்தி (மாற் 12:13-17)

சீசருடையவை

மாற்கு நற்செய்தியில் பாடுகளின் வரலாறு தொடங்குமுன் இயேசுவை நான்கு கேள்விகளால் மக்கள் சோதிப்பர்: (அ) 'சீசருக்கு வரி செலுத்துவது முறையா?' (ஆ) 'உயிர்த்தெழுதல் உண்டா?' (இ) 'முதன்மையான கட்டளை எது?' மற்றும் (ஈ) 'மெசியா தாவீதின் மகனா?'

இக்கேள்விகளில் முதல் கேள்வியை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்:

இயேசுவிடம் பரிசேயர் மற்றும் ஏரோதியர் வருகிறார்கள். யார் இந்த ஏரோதியர்? ஏரோது அரசனின் ஆள்கள். அல்லது அவருடைய கொள்கைக்கு ஏற்புடையவர்கள். ஏறக்குறைய நம் ஊர் ஆட்சியாளர்கள் போல. ஏரோது நேரிடையாக மக்களை ஆட்சி செய்தாலும், அவரை ஆட்டுவிப்பவர் சீசர்தான். இவர்கள் சந்தர்ப்பவாதிகள். இரண்டும் வேண்டும் என நினைப்பவர்கள்.

'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?' எனக் கேட்கின்றனர்.

'முறை' என்று சொன்னால் இயேசுவை தீவிரவாதிகள் என்று சொல்லும் அமைப்பினர் எதிர்ப்பர். மேலும், அந்நிய ஆட்சியை வரவேற்கிறார் என்று சொல்லி மக்களே அவரை நிராகரிப்பர்.

'இல்லை' என்று சொன்னால், சீசருக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறார் என்று அவர்மேல் குற்றம் சுமத்துவர்.

இரண்டிலும் இயேசு மாட்டிக்கொள்வார்.

இந்த இடத்தில் இயேசு ஏரோதியர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்கின்றார். 'என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள்!' என்கிறார்.

அதில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரயேல் மக்களின் நாணயம் செக்கேல் என்பது. அதில் எந்த உருவமும் இருக்காது.

ஆக, சீசரின் உருவத்தை எல்லா இடத்திலும் வைத்துக்கொண்டு, அவருக்கு வரி செலுத்துவது முறையா? - என்று கேட்பது சரியா? என்பதுதான் இயேசுவின் கேள்வி.

இந்த நாடு கடவுளுக்கு உரியது. ஆக, சீசருக்கு உரியதை - எதிர்ப்பை - அவருக்குக் காட்டி அவரை வெளியேற்றுங்கள் என்று இயேசு மறைமுகமான ஓர் அரசியல் புரட்சி செய்கின்றார். அதுதான், கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுப்பது.

ஆக, ஒரே நேரத்தில் நாம் சீசருக்கும் கடவுளுக்கும் கொடுக்க முடியாது. அப்படிச் செய்தால், நாம் செல்வத்திற்கும் கடவுளுக்கும் பணிபுரிபவர்களாக மாறிவிடுவோம். இயேசு தன் பேச்சில் முரண்படவே இல்லை. சீசர் வெளியே அனுப்பப்பட வேண்டும். கடவுள் நிறைய வேண்டும்.

இன்று என்னிடம் உள்ள ஓர் எதிர்மறை எண்ணம் அல்லது பழக்கம்தான் சீசர் என வைத்துக்கொள்வோம். இன்னொரு பக்கம் கடவுள். நான் எதிர்மறை பழக்கத்திற்கு உரியதை, எதிர்மறை பழக்கத்திற்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுக்குமாறு சமரசம் செய்ய முடியுமா?

முடியாது.

அதற்குரியதைக் கொடுப்பது என்பது, தேவையற்ற ஒன்றை நீக்கிவிடுவது.

இன்று, இறைவனின் இடத்தைப் பிடித்திருக்கும் சீசர் எது என்பதை நான் கண்டறிய வேண்டும். அதன் உருவம் என்னுடைய மனதில் பொறிக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதை அழிக்க வேண்டும். உருவங்கள் அழிந்துவிட்டால் உருவமற்ற அவர் பதிந்திடுவார். அதுதான் அவருடைய சாயல். அந்தச் சாயலில்தான் அவர் என்னை முதன்முதலில் படைத்தார்.

நற்செயல்: நான் தூக்கிக் கொண்டு திரியும் நாணயம் என்ற வாழ்க்கையில் பதிந்துள்ள உருவம் யாருடையவை? என அறிதல்.

1 comment:

  1. “உருவங்கள் அழிந்துவிட்டால் உருவமற்ற அவர் என்னில் பதிந்து விடுவார்.அதுதான் அவரது சாயல்.அந்த சாயலில்தான் அவர் என்னை முதலில் படைத்தார்.” என்னில் உள்ள சாயங்கள் மாறலாம்; ஆனால் சாயல் மாறுவது எனக்கு அழகல்ல என்பதை நினைவில் கொண்டால் நம்மேல் படையெடுத்துவரும் சீசர்களை அவரவரின் இடத்துக்கே அனுப்பி விடலாம்.....என்னில் உள்ளவரின் சாயலின் துணையோடு.

    கண்டிப்பாக...என்னுடையதும் என்னுடையதே; உன்னுடையதும் என்னுடையதே! என்ற வேதாந்தத்திற்கு மத்தியில் என்னுடையதை மட்டும் கண்டறிய இறைவன் வழிகாட்டுவாராக! தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete