Tuesday, May 5, 2020

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய (6 மே 2020) முதல் வாசகம் (திப 12:24:13:5)

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் நாம் ஏற்கனவே இந்த நாள்களில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்ட பகுதியிலிருந்து வருவதால், முதல் வாசகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

1994ஆம் ஆண்டு மே மாதம். எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறையில், எங்கள் ஊரில் உள்ள 'ஜெயந்தி மேட்சஸ்' என்னும் தீப்பட்டி தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தேன். தீக்குச்சிகளை கட்டையில் அடுக்குவது, மெழுகு போடுவது, கட்டைகளைக் காய வைப்பது, பின் பெட்டியில் அடைப்பது, அடைத்த பெட்டிகளுக்கு ஸ்டாம்ப் ஒட்டுவது, பின் 10 பெட்டிகள் வைத்து, பாக்கெட் போடுவது என நிறைய வேலைகள் செய்துகொண்டிருந்தேன். அதற்கு முந்தைய மாதத்தில் மதுரைக்கு இறையழைத்தல் முகாமிற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து போஸ்ட் கார்ட் வருமா என்று காத்துக்கொண்டே இருந்தேன்.

ஒருநாள் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்தபோது, கதவில் ஒரு போஸ்ட் கார்ட் பொருத்தியிருந்தது. ஆவலோடு எடுத்துப் பார்த்தேன்: 'நீங்கள் மதுரை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக மாறுவதற்கான குருமாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். வரும்போது பெட்டி, படுக்கை, வாளி ...' என அந்த கார்ட் நீண்டது. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதை எடுத்துக்கொண்டு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்த எல்லாரிடமும் காட்டி மகிழ்ந்தேன்.

எல்லாரும் சந்தோஷப்பட்டு வாழ்த்தியபோது, திரு. ராம்ராஜ் என்ற அதன் உரிமையாளர்  என்னிடம், 'இது வெறும் மகிழ்ச்சியான விடயம் அல்ல. இதில் நிறைய பொறுப்பும் இருக்கிறது. ஆக, நீ கவனமுடன் இருக்க வேண்டும்' என வாழ்த்தினார்.

நிற்க.

'நீங்க இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்!'

- என்று நம் இல்லத்திற்கு எந்தச் செய்தி வந்தாலும், இறையழைத்தல், வேலை, அல்லது திருமணம் என எச்செய்தி வந்தாலும் நம் உள்ளம் மகிழ்கிறது. ஏனெனில், வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் அங்கே இருப்பதாக நம் ஆழ்மனம் சொல்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் சில கவனிக்கத்தக்க விடயங்கள் நடக்கின்றன:

மக்கள் நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது தூய ஆவியார், 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்' என்கிறார்.


இச்செய்தி பவுலுக்கும் பர்னபாவுக்கும் நிறைய மகிழ்ச்சியையும் அதே வேளையில் பொறுப்புணர்வையும் தந்திருக்க வேண்டும்.

'எல்லாரையும் போல நான் ஏன் இருக்கக் கூடாது?' என்று சில நேரங்களில் நாம் கேட்போம்.

'எல்லாரையும்போல நீ இருக்கக் கூடாது' என்று சில நேரங்களில் வாழ்க்கை நமக்கு வரையறையை இடுகிறது. இது நம்மைக் கட்டுப்படுத்தும் வரையறை அன்று. மாறாக, நம்மை விடுதலையாக்கும் வரையறை.

இதே அனுபவத்தை இன்று பவுலும் பர்னபாவும் பெறுகிறார்கள்.

இரண்டாவதாக, அவர்களோடு கூடியிருந்த சீடர்கள், செபித்து, தங்கள் கைகளை அவர்கள் மேல் விரித்து அவர்களை திருப்பொழிவு செய்கின்றனர்.

திருப்பொழிவு என்பது இறைவன் தரும் கொடை என்றும், சாதராண மனிதர்களும் செபித்து அடுத்தவருக்கு ஆவியானவரைக் கொடுக்க முடியும் என்ற நிலையும் அன்று இருந்துள்ளது.

இன்று, திருப்பொழிவுக்கு முன் நிறைய படிப்பு, தேர்வு, ஆய்வு. இன்னொரு பக்கம், இவர்தான் திருப்பொழிவு செய்ய வேண்டும், இந்தச் செபம்தான் சொல்ல வேண்டும் என்று நிறைய வரையறைகளும் வந்துவிட்டன.

தொடக்கத் திருஅவையில் இருந்த கட்டின்மை மறைந்துவிட்டது.

இன்னும் நாம் அருள்பணியாளர் மைய திருஅவையைத்தான் தூக்கிப் பிடிக்கின்றோம். ஏனெனில், இது நமக்கு வசதியாக இருக்கிறது. ஆனால், தொடக்கத் திருஅவை அருள்பணியாளர் மையத் திருஅவை அல்ல. அங்கே எல்லாரும் பங்கேற்றனர். எல்லாரும் எல்லாரையும் அருள்பொழிவு செய்தனர். நிறுவனமயமான திருஅவையில் நாம் ஆவிக்குரிய அக்கொடைகளை இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.

இன்றைய வாசகம் சொல்லும் செய்தி இதுதான். நாமும் ஆவியானவரின் கொடைகளை நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் பெற முடியும். நாமும் மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும். நாமும் நம் வாழ்வின் இலக்கு எது என்பதைத் தெரிந்துகொள்

2 comments:

  1. “‘திருப்பொழிவு’ என்பது இறைவன் தரும் கொடை என்றும், சாதாரண மனிதரும் செபித்து அடுத்தவருக்கு ஆவியானவரைக் கொடுக்க முடியும் என்ற நிலை அன்று இருந்துள்ளது....நிறுவனமான திருஅவையில் நாம் ஆவிக்குரிய அக்கொடைகளை இழந்து விட்டோம்” எனும் வரிகளில் தந்தையின் ஏக்கம் புரிகிறது. நாம் அடுத்தவரின் தலைமேல் கைகளை வைத்து செபித்து அவர்களுக்கு உடல்சுகம் தர முடியுமெனில், நாம் ஏன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் ஆவியானவரை ஒருவர் மற்றவருக்கு வழங்கக்கூடாது? திரு அவை வழியே நமக்கு இதுத்தரப்படவில்லை எனினும் நாம் நமக்குள் ஆவியானவரைப் பகிர்ந்து கொள்வதை யார் தடுக்க இயலும்? ஆனால் இதற்குத் தேவையான பொறுப்பு நம்மில் உள்ளதா என்பதை சோதித்த பின்பே இதைச் செய்ய வேண்டுமென்பது என் கருத்து.பவுலுக்கும்,பர்னபாவுக்கும் கிடைத்த மகிழ்ச்சியும்,பொறுப்புணர்வும் நமக்குள்ளும் குடிகொள்ளும்.
    “ நீங்கள் மதுரை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக மாறுவதற்கான குருமாணவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.” போஸ்ட் கார்டுடன் இணைந்த தந்தையின் மலரும் நினைவுகள்....அருமை! இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete