Thursday, May 7, 2020

இதுவே நற்செய்தி

இன்றைய (8 மே 2020) முதல் வாசகம் (திப 13:26-33)

இதுவே நற்செய்தி

இன்றைய மற்றும் நாளைய நற்செய்தி வாசகப் பகுதிகளை நாம் வருகின்ற ஞாயிறன்று வாசிக்க விருப்பதால், இவ்விரண்டு நாள்கள் சிந்தனைக்கு முதல் வாசகப் பகுதிகளை எடுத்துக்கொள்வோம்.

நேற்றைய முதல் வாசகத்தில் (காண். திப 13:13-25), பவுலும் அவரோடு இருந்தவர்களும் அந்தியோக்கியா வருகின்றனர். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கே அமர்ந்திருக்கின்றனர். இங்கே ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று எந்த தனிப்பட்ட வழிபாட்டு அடையாளத்தையும், முறையையும் பெற்றிருக்கவில்லை. யூத அடையாளங்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையுமே பின்பற்றினர். இந்தப் பின்புலத்தில்தான் பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஓய்வுநாளை அனுசரிக்கின்றனர், தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றனர். திருச்சட்டமும் இறைவாக்கு நூல்களும் வாசிக்கப்படுகின்றது. யூதர்களின் இதே பின்புலத்தில்தான் நாம் ஞாயிறு திருப்பலியில் முதல் வாசகம், இரண்டாம் வாசகம் என இரண்டு வாசகங்களை வாசிக்கின்றோம்.

தொழுகைக்கூடத் தலைவர் இவர்களிடம் ஆளனுப்பி, 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' என அழைப்பு விடுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரின் தாராள உள்ளமும், புதியவர்களை ஏற்றுக்கொள்ளும் பரந்த உள்ளமும் இங்கே தெரிகிறது.

'இல்லப்பா! எங்களுக்குச் சொல்ல ஒன்னும் இல்ல!' என்று பவுல் ஒதுங்கவில்லை.

'நற்செய்தி அறிவிக்க எப்படா வாய்ப்பு கிடைக்கும்?' என்ற பேரார்வத்தால் பற்றியிருந்த பவுல், இந்த வாய்ப்பை அப்படியே பற்றிக்கொண்டு, நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகிறார்.

இன்று, நாம் இதே நற்செய்தி அறிவிப்பு ஆர்வம் கொண்டிருக்கிறோமா? யாராவது ஒருவர் விவிலியம் அல்லது கடவுள் பற்றி ஏதாவது ஐயம் எழுப்பினால்கூட, நாம் தெரியாததுபோல அங்கிருந்து ஒதுங்கிவிடுகிறோம் இல்லையா?

பவுல், இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பை மிக அழகாக சுருக்கமாகச் சொல்கின்றார்.

அவரின் சுருக்கமும் இதுதான்: 'இறந்த கிறிஸ்து இன்று உயிருடன் வாழ்கிறார். அவரால் நாம் வாழ்வு அடைந்தோம்.'

'கிறிஸ்து வாழ்கிறார்' என்று நம் திருத்தந்தை வழங்கியுள்ள திருத்தூது ஊக்கவுரைச் செய்தி போல, 'கிறிஸ்து இன்றும் நம்மோடு' என உறுதியாகக் கூறுகிறார் பவுல்.

'இதுதான் நற்செய்தி' என்கிறார் அவர்.

பவுலுக்கு இது வாழ்வியல் அனுபவமாக மாறியது.

நம்மை யாராவது ஒருவர் அன்பு செய்யும்போது, 'நான் அன்பு செய்யப்படுகிறேன்' என்ற உணர்வு நமக்கு உற்சாகத்தையும், ஆறுதலையும், ஆதரவையும் தருகிறது.

கையில் காசு இல்லாமல், ரொட்டிக் கடைக்கு வெளியே கைக்குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணிடம், 'வா! உனக்கு வேண்டிய அனைத்தையும் கடையிலிருந்து எடுத்துக்கொள்!' எனச் சொல்ல, 'இல்ல...என்கிட்ட காசு இல்ல!' என அவர் சொல்ல, 'நான் உனக்காக பணம் கொடுத்துவிட்டேன்!' என்று நாம் சொன்னால், அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு மகிழும்!

இதே மகிழ்ச்சி உணர்வையே கிறிஸ்து கொணர்ந்த மீட்பு நமக்குத் தருகிறது.

எனில்,

நான் மகிழ வேண்டாமா? நான் நற்செய்தியை அறிவிக்க வேண்டாமா?

நற்செயல்: என் மகிழ்ச்சியே என் நற்செய்தி எனில், இனி நான் கவலைப்படுவதோ, கலக்கம் கொள்வதோ இல்லை என்ற தீர்மானம் எடுத்தல்.

2 comments:

  1. தொழுகைக் கூடத்தலைவன் ‘ஏதாவது சொல்லலாமே’ என்ற மாத்திரத்தில் “ இறந்த கிறிஸ்து இன்று உயிருடன் வாழ்கிறார்; அவரால் நாம் வாழ்வடைந்தோம்” என்று நம் திருத்தந்தையின் சமீப செய்திக்கு நிகரான ஒரு செய்தியைத் தருகிறார் பவுல்.தன்னவரில்லாத கூட்டம்; முன்பின் பேசியிராத இடம்.உண்மையிலேயே வாழும் கிறிஸ்துவே அவரைப் பேச வைத்திருக்க வேண்டும். ‘நாம் ஒருவரால் அன்புசெய்யப்படுகையில் நமக்குக் கிடைக்கும் உணர்வே கிறிஸ்துவின் மீட்புச் செய்தியாக அமையுமெனில், எனக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியை நானும் அறிவிக்க வேண்டும்’ என்கிறார் தந்தை. மேடை ஏறித்தான் நற்செய்தியைப் பகிர வேண்டுமெனும் அவசியமில்லை.நான் வாழும் வாழ்க்கை முறையே என்னை ஒரு வாழும் கிறிஸ்துவாக பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்...இது என் கருத்து.

    அருமையான நற்செயல்....என்னால் முடிந்த அளவு என் மகிழ்ச்சியையே நற்செய்தியாக்கி, என்னில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என் கவலையையும்,கலக்கத்தையும் விரட்டியடிக்க முயல்வேன்.

    தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete