Sunday, May 10, 2020

கல்லும் காலும்

இன்றைய (11 மே 2020) முதல் வாசகம் (திப 14:5-18)

கல்லும் காலும்

'கல்' மற்றும் 'கால்' என்னும் இரண்டு வார்த்தைகளை மையப்படுத்தி நகர்கிறது இன்றைய முதல் வாசகம். பவுலும் பர்னபாவும் இக்கோனியாவில் நற்செய்தி அறிவிக்கின்றனர். அங்கே இருந்த யூதர்கள் அவர்கள்மேல் பொறாமை கொண்டு கல்லெறியத் திட்டமிடுகின்றனர்.

அவர்கள் தப்பி லிஸ்திராவுக்குப் புறப்படுகின்றனர்.

அங்கே கால் வழங்காத ஒருவர் இருக்கின்றார். நம்பிக்கை கொண்டிருந்த அவரிடம் பவுல், 'நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்' என அவரும் நிற்கின்றார்.

இதைக் கண்டு ஆச்சர்யப்படுகின்ற மக்கள், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று சொல்லி, பர்னபாவை 'சேயுசு' எனவும், பவுலை 'எர்மசு' என்றும் அழைக்கின்றனர்.

ஏனெனில், கடவுள்தாமே மனிதர்களின் குறைபாட்டைப் போக்கி நிறைவாக்க முடியும் என்பது பவுலின் சமகாலத்தவரின் நம்பிக்கையாக இருந்தது.

ஆனால், என்ன நடக்கிறது என்றால்,

'கடவுளர்களே நம்மிடம் வந்துவிட்டார்கள்' என்று சொன்னவர்கள் சில நிமிடங்களில் அவர்கள்மேல் கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏன்?

மற்றவர்கள் தூண்டிவிட்டதால்.

இயேசு ஒரு முறை கல்லறையில் கட்டப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து பேயை அல்லது பேய்களை பன்றிகளுக்குள் அனுப்புவார். அந்த நிகழ்வில், இயேசு அப்பேயிடம், 'உன் பெயர் என்ன?' என்று கேட்கும்போது, பேய், 'என் பெயர் லெகியோன்' என்று சொல்லும். 'லெகியோன்' என்றால் 'கூட்டம்.'

நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இந்தக் கூட்டம் நம்மில் எப்போதும் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும். இந்தக் கூட்டம் உணர்ச்சியாலும் உணர்வுகளாலும் மட்டுமே உந்தித் தள்ளப்படும். இந்தக் கூட்டம் எதையும் ஆய்வுக்கு உட்படுத்தாது. தான் விரும்புவதையும் மற்றவர்கள் விரும்புவதையும் அப்படியே செய்யும்.

லிஸ்திராவில் பவுல் மற்றும் பர்னபாவைச் சுற்றியிருந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொண்டார்கள்.

நற்செயல்: என் வாழ்வை நகர்த்துவது 'நானா' அல்லது 'கூட்டமா?' என்று கேட்டறிவது. கூட்டத்தின் செயல்பாட்டைக் குறைக்க முயற்சி எடுப்பது.

3 comments:

  1. இன்றைய நற்செயலை, எம் வாழ்வின் இறுதிவரை கடைபிடிக்க, இறைவன் எம்மை தொடர்ந்து நினைவுபடுத்தி, வழிநடத்துவாராக!🤝

    ReplyDelete
  2. இன்றையப்பதிவில் பவுலுக்கும்,பர்னபாவுக்கும் நடந்தது நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு செயலே! இன்று என் செயலை ‘சரி’ எனபவர்கள் நாளை ‘தவறு’ என்று சொல்வதும் புதிதல்ல. நம்முன் நடக்கும் செயல்களை நிர்ணயம் செய்வது நமக்கு உள்ளேயும்,வெளியேயும் இருக்கும் கூட்டம் என்கிறார் தந்தை.ஒரு குரங்காட்டியின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட குரங்காக பல சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.என் வாழ்வை நகர்த்துவது என் உள்மன ஆய்வா?இல்லை அந்தக் குரங்காட்டியின் குரங்கா? யோசிக்கிறேன்.
    ஒரு செயலில் நான் ஈடுபடுகையில் அதன் இலாப- நஷ்டத்திற்கு நானே பொறுப்பெடுக்க முடிந்தால் அதுவே என் உள் மன செயல்பாடு. யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்! இந்த வாரம் இனியதாக அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete