Wednesday, May 6, 2020

அதிகாரம்

இன்றைய (7 மே 2020) நற்செய்தி (யோவா 13:16-20)

அதிகாரம்

'இயேசுவும் குழந்தைகளும்' என்ற ஒரு கட்டுரை எழுதுவதற்காக, யூதர்களின் மறைநூலான 'தால்முத்' குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறது என்று நேற்று இரவு வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு விடயம் என்னைத் தொட்டது. பிள்ளை வளர்ப்பு என்ற பகுதியில், 'மகன் வளர்ந்தாலும் உனக்கு மகன்தான். மகள் வளர்ந்தாலும் உனக்கு மகள்தான். மகன் வளர்வதால் உனக்கு அப்பா ஆகிவிடுவதில்லை. மகள் வளர்வதால் உனக்கு அம்மா ஆகிவிடுவதில்லை. உன் பிள்ளைகளையோ, உன் சகோதர, சகோதரியையோ, உன் மனைவியையோ, உன் நண்பர்களையோ உன் மேல் அதிகாரம் செலுத்த விடாதே. நீ உயிரோடு இருக்கும் வரை அதிகாரம் செலுத்த விடாதே. இறுதி நாள்களுக்கு முன் உன் சொத்தைப் பங்கிட்டுக் கொடாதே. அப்படிச் செய்தால், அவர்கள் சொத்தையும் அழித்துவிட்டு, உன்னையும் விரட்டி விடுவர் ...' என்று தொடர்கிறது.

இப்பகுதியின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

'மகன் வளர்ந்தாலும் உனக்கு மகன்தான். மகள் வளர்ந்தாலும் உனக்கு மகள்தான்.'

இது நம் நடுவில் புழக்கத்திலிருக்கும் சொலவடைக்கு முரணாக இருக்கிறது: 'தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்' அல்லது 'தோளுக்கு மேல் வளர்ந்தவனை, வளர்ந்தவளைத் தொடக் கூடாது அல்லது கண்டிக்கக் கூடாது.'

என்னைப் பொருத்தவரையில், தால்முத் சொல்வதுதான் சரி என்று தோன்றுகிறது.

இதை ஒட்டிய ஒரு வாழ்வியில் மேலாண்மைப் பாடத்தை இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:16-20) முன்மொழிகின்றார்: 'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல.'

இதையே நம் ஊரில், 'தலைவனே உறங்கப் போயிட்டான். ஊழியக்காரன் என்னடா சத்தம் போடுற!' என்று 'ஊழியக்காரன்' ஃபிலாஸஃபி சொல்வார்கள்.

அதாவது, என் வரையறையை நான் உணர்ந்து, எனக்கு மேல் இருக்கும் அதிகாரத்திற்கு நான் கட்டுப்பட வேண்டும். இன்று நாம் பல நேரங்களில் அதிகாரம் உடைக்கப்பட வேண்டும், அதிகார மையங்கள் சமமாக்கப்பட வேண்டும் என்று கொடி பிடிக்கிறோம். அது தவறு! என் பெற்றோரின் அதிகாரத்தையோ, எனக்குக் கற்றுத்தந்த ஆசிரியரின் அதிகாரத்தையோ, எனக்கு பணி அழைப்பு தரும் பேராயரின் அதிகாரத்தையோ நான் தகர்த்துவிட முடியுமா? முடியாது!

யூதாசு இந்த வரையறையை மீறுவதாக இயேசுவே சொல்கின்றார்: 'என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்.' ஆக, உண்பவன், எழுந்து வீட்டுத் தலைவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேற வேண்டுமே தவிர, வீட்டுத் தலைவன்மேல் பாயக்கூடாது. அப்படிச் செய்தால் அது பிறழ்வு, வன்முறை, வன்மம், அதிகார மீறல்.

கணவன்-மனைவி உறவில் அதிகாரம் இருக்கலாமா? அந்த அதிகாரத்தை நாம் சமன் செய்ய முடியுமா? அகுஸ்தினார் எழுதிய 'ஒப்புகைகள்' நூலில் மோனிக்கா பற்றிய ஒரு பதிவு இதற்கு விடையாக இருக்கும் என நினைக்கிறேன்:

'... இப்படியாக நாணத்திலும் நிதானத்திலும் அவள் (மோனிக்கா, அகுஸ்தினாரின் அம்மா) வளர்க்கப்பட்டாள். அவளுடைய பெற்றோர் அவளை உமக்கு கீழ்ப்படியச் செய்ததைவிட, நீர் அவளை அவளுடைய பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியச் செய்தீர். திருமண வயது வந்தபோது அவள் ஒருவனுக்கு (பேட்ரிக் - அகுஸ்தினாரின் அப்பா) மணமுடித்துக் கொடுக்கப்பட, அவள் அவனைத் தலைவனாக ஏற்று அவளுக்குப் பணிபுரிந்தாள். அவள் அவனை உனக்காக வெற்றிகொள்ள முயன்றாள். அவளுடைய மதிப்பீடுகளாலும் விழுமியங்களாலும் - அவற்றினால் நீர் அவளை அணிசெய்திருந்தீர் – உம்மைப் பற்றி அவனிடம் பேசினாள். இப்படியாக அவளுடைய கணவன் அவளை அன்பு செய்யவும், மதிக்கவும், பாராட்டி வியக்கவும் விரும்பினாள். அவனுடைய பிரமாணிக்கமின்மையை அவள் பொறுத்துக்கொண்டாள். அதுபற்றி அவள் அவனிடம் சண்டையிட்டதில்லை. உம்முடைய இரக்கம் அவன்மேல் வரும் என்றும், அவன் உம்மேல் நம்பிக்கை கொண்டால் கற்பில் நிலைத்திருப்பான் எனவும் அவள் எதிர்நோக்கினாள். மேலும், அவன் எந்த அளவுக்கு கருணை உள்ளவனோ அந்த அளவுக்கு முன்கோபியாகவும் இருந்தான். கோபப்படுகின்ற கணவனை தன் சொல்லாலும் செயலாலும் எதிர்க்கக் கூடாது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் சாந்தமாகவும் அமைதியாகவும் ஆனபின், வாய்ப்பு சரியாக அமையும்போது, தன் செயலுக்கான காரணத்தை அவனிடம் விளக்குவாள். சாந்தமான கணவர்களுக்குத் திருமணமான பல பெண்கள் அவர்களால் துன்புறுத்தப்பட்டு தங்களுடைய முகத்திலும் உடலிலும் காயம்பட்ட தழும்புகளைத் தாங்கி தங்களுடைய வாழ்வை நகர்த்துகிறார்கள். தங்களுக்கிடையேயான உரையாடலில் இவர்கள் தங்களுடைய கணவனின் இச்செயல்களை முறையிடுவார்கள். மோனிக்கா அவர்களோடு சிரிப்பதுபோல சிரித்துக்கொண்டு அவர்களுக்கு சீரிய ஆலோசனை வழங்குவாள். அவர்களின் வாய்தான் அவர்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பாள். திருமண வாக்குறுதிப் பத்திரம் வாசிக்கப்பட்டபோது நமக்கான அடிமை சாசனம் வாசிக்கப்பட்டது என்று நினைத்துக்கொள்ள வேண்டும் என்பாள். ஏனெனில், அன்று முதல் மனைவியர் கணவர்களுக்கு அடிமைகள் ஆகின்றனர். இந்த நிலையை அவர்கள் அறிந்து அதற்கேற்றாற்போல வாழ வேண்டுமே தவிர தங்களுடைய தலைவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கக்கூடாது என நினைத்தாள். இவள் பொறுத்துக்கொள்ளும் இவளுடைய கணவனின் முரட்டுக்குணத்தைக் கேள்வியுற்ற மனைவியர் இவளுடைய வார்த்தைகளைக் கேட்டு திகைத்தனர். ஆனால், பேட்ரிக் அவளை அடித்ததாகவோ, அவளுடைய முகத்தில் தழும்பை ஏற்படுத்தியதாகவோ, அவளோடு ஒருநாள்கூட சண்டையிட்டதாகவோ இல்லை. இதற்கான காரணம் என்று பெண்கள் அவளிடம் ஆத்மார்த்த உரையாடலில் கேட்கும்போது, நான் மேற்சொன்ன வார்த்தைகளையே அவள் அவர்களுக்குச் சொல்வாள். அவளுடைய அறிவுரையைக் கேட்டவர்கள் தங்கள் வாழ்வில் நலம் கண்டு அவளுக்கு நன்றிக்கடன் பட்டார்கள். அவளுடைய அறிவுரையைக் கேளாதவர்கள் தங்கள் கணவர்களிடம் நன்றாக அடிபட்டார்கள்.'

நிற்க.

தால்முத்தில் இன்னொரு வசனமும் என்னைக் கவர்ந்தது: 'மது தலைவனுக்கு உரியது. நன்றி பணியாளனுக்கு உரியது.' அதாவது, நான் ஓர் ஓட்டலுக்கு உணவருந்தச் செல்கிறேன் என்றால், அங்கு பரிமாறப்படும் மது நன்றாக இருந்தால், அந்தப் பெருமை ஓட்டல் உரிமையாளரைச் சேருமே அன்றி, அதைக் கொண்டு வந்த பணியாளனைச் சாராது. பணியாளனுக்குச் சார்வது டிப்சும், நன்றியும்தான். அவன் அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். 'அந்த மது என்னுடையது' என அவன் உரிமை கொண்டாடினால், அது அவன் வேலைக்கே ஆபத்தாய் முடியும். எது எனக்கு உரியதோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு, எனக்கு மேலிருப்பவற்றையும், பிறருக்கு உரியவற்றையும் அவர்களுக்கு உரியது என ஏற்று மதிப்பதே சால்பு.

நற்செயல்: அதிகார வரையறை மீறல்களை நாம் மேற்கொண்ட நேரங்கள், அல்லது நம் அதிகார வரையறை மீறப்பட்ட நேரங்கள் நம்மில் ஏற்படுத்திய உணர்வுகள் எவை?

2 comments:

  1. புனித மோனிக்கம்மாள் பற்றிய புனித அகுஸ்தீனாரின் பதிவை எமக்கு இன்று அளித்த அருட்பணி யேசுவுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி 🙏

    ReplyDelete
  2. பலவிதமான உறவு முறைகளையும் அவை இழை பிறழாது உயிரோடிருக்க நாம் என்ன செய்யவேண்டுமெனும் சூட்சுமங்களையும் வெவ்வேறு உறவுகளின் துணைகொண்டு தந்தை அழகுபடுத்துவது வியப்பைத்தருகிறது.” தால்முத்” மற்றும் புனித மோனிக்காவின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட அத்தனையும் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியுமா தெரியவில்லை. ஆனால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் புனித மோனிக்காவின் வாழ்க்கையில் சிதறிக்கிடக்கின்றன. “நெல் எப்படியோ அப்படியே அரிசியும்” என்ற ஒரு சொலவடை உண்டு.அவள் இறைவனுக்குக் கீழ்ப்படிந்ததைவிடத் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்ததே அதிகம் என்கிறார் தந்தை. எந்த பிரமாணிக்கத்தோடும்,விழுமியங்களோடும் அவள் வளர்க்கப்பட்டாளோ அவற்றையே தன் முரட்டுக்கணவன் ப்ரெடெரிக் மற்றும் மனம் போன போக்கில் அலைந்த மகன் அகுஸ்தினைத் திருத்தும் ஆயுதமாகவும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளாள்.அவளுடைய அறிவுரையைக்கேட்டு அவளுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் விவேகிகள்.
    .
    எங்கிருப்பினும் எனது சூழ்நிலையின் வரைமுறையைப் புரிந்துகொண்டு எனக்கு உரியதைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை யாருக்கு உரியதோ அவர்களுக்கே விட்டுவிடுவதே நமக்கும் அவர்களுக்கும் நாம் தரும் மரியாதை. அழகான வாழ்க்கைப்பாடங்கள்.

    கண்டிப்பாக என் அதிகாரத்தை நான் மீறிய நேரங்களைவிட,அதிகார வரையறை மீறல்களை மேற்கொண்ட நேரங்களே அதிகம் என நினைக்கிறேன்.யாராயிருப்பினும் அவர்களிடம் என்அதிகாரத்தைக் காட்டத்துணியும் போது நானும் பலரின் அதிகாரத்துக்குட்பட்டவள் எனும் எண்ணம் என் செயலை சீர்தூக்கிப்பார்க்க உதவட்டும்.

    அழகான வாழ்வியல் கலைகள்.... உதாரணங்களுடன் சொல்லப்பட்ட விதமும் அழகு! தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete