Wednesday, May 27, 2020

விவேகம்

இன்றைய (28 மே 2020) முதல் வாசகம் (திப 22:30, 23:6-11)

விவேகம்

பவுல் எருசலேமின் தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. 

சங்கத்திற்குள் நுழைகின்ற பவுல், அங்கே இருக்கின்ற சூழலைச் சட்டென்று புரிந்துகொள்கிறார். அங்கிருப்பவர்கள் இரு குழுவினராக இருக்கின்றனர். ஒரு குழுவினர் பரிசேயர், இன்னொரு குழுவினர் சதுசேயர். இவர்கள் இருவரும் யூதர்கள் என்றாலும், நம்பிக்கை அடிப்படையில் இரு குழுவினருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார் பவுல். 

பரிசேயர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். சதுசேயர்கள் அரசியல் பலத்தில் சிறந்தவர்கள்.

பரிசேயர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் நோக்கில், 'நான் ஒரு பரிசேயன்...' என்று தன்னுடைய வாதத்தைத் தொடங்குகிறார். உடனே அங்கே மோதல் உருவாகிறது. ஆக, பவுல் விசாரிப்பதற்காக அழைத்துவரப்பட்ட காரணம் ஒன்று, ஆனால், இங்கே நடப்பது வேறு. 

இதை பவுலின் விவேகம் என்று சொல்வதா? அல்லது அவருடைய சந்தர்ப்பவாதம் என்று சொல்வதா?

ஒருவரின் விவேகம் இன்னொருவரின் சந்தர்ப்பவாதம்.

பவுலின் இச்செயல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'ஒருவருக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.'

எடுத்துக்காட்டாக, நாம் ரின் சோப் வாங்க கடைக்குப் போறோம். 'ரின் சோப் இருக்கா?' எனக் கேட்கின்றோம். ஆனால், கடைக்காரர், 'ஸர்ஃப் எக்ஸெல்தான் நல்லா இருக்கும்' அல்லது 'இந்தாங்க ஏரியல்' என்று கொடுத்தால், நாம் அந்தக் கடைக்கு மீண்டும் செல்ல மாட்டோம். ஏனெனில், 'அவர் நான் விரும்புவதை அல்ல, தான் வைத்திருப்பதையே கொடுக்கிறார்.' 

பவுலிடம் கொடுப்பதற்கு நிறைய இருந்தது. இயேசுவைப் பற்றி, தன் பயணம் பற்றி, தன் நம்பிக்கை பற்றி என அவர் நிறைய பேசியிருக்க முடியும். ஆனால், அது தலைமைச் சங்கத்தின் தேவை இல்லை என்பதை உடனடியாக உணர்கின்றார். அவர்களுக்குத் தேவையானது எல்லாம், 'நீ யார்? அல்லது நீ யார் பக்கம்?' என்ற கேள்விக்கான விடைதான். பவுல் அதை அளிக்கின்றார்.

இதுதான் வெற்றியின் இரகசியம்.

இரண்டு விடயங்கள்,

ஒன்று, அடுத்தவர் நம்மிடம் எதையும் கேட்காமல் அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

இரண்டு, அடுத்தவர் கேட்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

நற்செயல்: நாம் விவேகமற்று நடந்த ஏதாவது ஒரு செயலை எண்ணி நமக்குள்ளே சிரித்துக்கொள்தல்.

2 comments:

  1. "ஒருவருக்கு எது வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும்.அப்போது தான் நாம் வெற்றி பெறமுடியும்..."

    Yes👍


    ReplyDelete
  2. ஒருவரின் விவேகம் இன்னொருவரின் சந்தர்ப்பவாதம்..... என் பிள்ளை என்றால் சமத்து....அடுத்தவர் பிள்ளையெனில் வெவரம் மாதிரி?? வெற்றியின் இரகசியமா?....தந்திரமா? ஒருவர் நம்மிடம் கேட்காமல் எதையும் கொடுக்கவேண்டாமென்பதும்.....அடுத்தவர் கேட்பதைத் தவிர வேறு எதையும் கொடுக்க வேண்டாமென்பதும் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமா? ஒரு விருந்தினர் இட்லி கேட்டால் அவருக்கு ஒரு தோசையையும் சேர்த்தே பரிமாறுவது நம் விருந்தோம்பல் இல்லையா? தந்தைக்கே வெளிச்சம்!

    ஒரு செயலென்ன? நினைத்து சிரிக்க ஓராயிரம் செயல்கள் இருக்கின்றன.....நாம் வெகு சிரத்தை எடுத்துச் செய்யும் பல விஷயங்கள் சிலசமயங்களில் நம்மை முட்டாளாக்குவதுண்டு.சீரியசான விஷயத்தினூடே கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்தே தெளித்த தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete