Monday, May 11, 2020

இவ்வுலகின் தலைவன்

இன்றைய (12 மே 2020) நற்செய்தி (யோவா 14:27-31)

இவ்வுலகின் தலைவன்

காலங்காலமாக கடவுள் மறுப்புக்கு சொல்லப்படும் ஒரு கருப்பொருள் 'தீமை.'

கடவுள் நல்லவராகவும் வல்லவராகவும் இருந்தால் தீமை ஏன்?

கடவுள் நல்லவர் என்றால் தீமையை அவர் விரும்ப மாட்டார்.

கடவுள் வல்லவர் என்றால் தீமையை அவர் அழித்துவிடுவார்.

ஆனால், தீமை இன்றும் இருக்கிறது.

ஆக, கடவுள் வல்லவரும் இல்லை, நல்லவரும் இல்லை. மொத்தத்தில், கடவுள் இல்லை.

இதுதான் கடவுள் மறுப்பு வாதம்.

யோபு நூலில் கடவுள் சாத்தான் சொல்வதைக் கேட்பது போல இருக்கும். இதை வைத்துச் சிலர், கடவுள் தீமை அல்லது தீயவனுக்குக் கட்டுப்படுகிறார் என்று சொல்வதுண்டு.

இதற்கேற்றாற் போல உள்ள இன்னொரு பகுதிதான் இன்றைய நற்செய்திப் பகுதி.

இயேசு தன்னுடைய இறுதி இராவுணவில், சீடர்களுடனான தன்னுடைய உரையாடலில், 'இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை. ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான்' என்கிறார்.

இங்கே, 'இவ்வுலகின் தலைவன்' என்பதை, 'இவ்வுலகின் இளவரசன்' என மொழிபெயர்க்கலாம்.

இந்தச் சொல்லாடல் யூதாசைக் குறிப்பதாகச் சொல்கின்றனர் சிலர். ஆனால், இது அலகை அல்லது சாத்தானையே குறிக்கிறது.

இயேசுவே சாத்தானை இவ்வுலகின் தலைவன் என ஏற்றுக்கொள்கிறார் என சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால், அவனுக்கு தன்மேல் அதிகாரம் இல்லை என உறுதியாகச் சொல்கின்றார் இயேசு.

இந்த நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

(அ) 'வார்த்தை மினிமலிஸம்'. வாழ்வியில் மினிமலிஸத்தோடு இணைந்து இன்று 'வார்த்தை மினிமலிஸம்' மற்றும் 'எண்ணம் மினிமலிஸம்' பேசப்படுகிறது. வார்த்தைகளைக் குறைப்பது, எண்ணங்களைக் குறைப்பது. இயேசு தான் மிகுதியாகப் பேசப் போவதில்லை என்கிறார். ஏனெனில், வார்த்தைகள் எல்லா நேரமும் தேவைப்படுபவை அல்ல. வார்த்தைகள் இல்லாமல், அல்லது குறைவான வார்த்தைகளுடன் வாழப் பழகுதல்.

(ஆ) 'அதிகாரம் இல்லை.' நான் ஒருவருக்கு என்மேல் அதிகாரம் கொடுத்தால் ஒழிய, அவர் என்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆக, என்மேல் நான் யாருக்கும், எதற்கும் அதிகாரம் கொடுக்கக் கூடாது. நமக்குத் தேவை 'தன்னாளுகை.'

நற்செயல்: நாம் பேசும், எண்ணும் வார்த்தைகளை 'எண்ணி' பார்ப்பது.

1 comment:

  1. உண்மையிலேயே மகிழ்ச்சியின் பாதைக்கு இட்டுச்செல்லும் வழிகள்.வார்த்தைகள் எல்லா நேரமும் தேவையில்லை என்பதைப்புரிந்து கொண்டு மௌனமொழி பேசப்பழகிக்கொண்டாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதும், என் மேல் எனக்கு மட்டுமே உள்ள ‘ தன்னாளுகையைக்’ கருத்தில் கொண்டு என் மேல் யாருக்கும்,எதற்கும் அதிகாரம் கொடுக்க கூடாது என்பதும் சான்றோர் மொழி. செயலாக்க.... வாழ்வாங்கு வாழ நல்ல கருத்துக்களாக சிரமேல் கொள்வோம்.

    நற்செயல்...... ரொம்பக் கடினமே! இருப்பினும் முயன்று பார்க்கலாம். பேசும் வார்த்தைகளைக்கூட எண்ணி விடலாம்.ஆனால் எண்ணும் வார்த்தைகளை....?? முயன்று பார்க்கலாம்.
    இன்றைய நற்செயலைகளைக் கடைபிடிக்கும் பட்சத்தில் எல்லோருமே வானுறையும் தெய்வங்களாகி விடலாம்.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete