Thursday, May 14, 2020

சங்கமும் சீலாவும்

இன்றைய (15 மே 2020) முதல் வாசகம் (திப 15:22-31)

சங்கமும் சீலாவும்

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. புதிய நம்பிக்கையைத் தழுவியிருக்கும் புறவினத்து இனியவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று சிலர் நிர்பந்திக்க, அதைப் பற்றிய திருத்தூதர்களின் கருத்தைக் கேட்பதற்காக பவுலும், பர்னபாவும் எருசலேம் செல்கின்றனர்.

அங்கே திருத்தூதர்கள் இவர்களை வரவேற்கின்றனர். இவர்களின் செயல்களைப் பற்றிக் கேட்டறிகின்றனர். தொடக்க காலத்தில் எருசலேம் திருச்சபைதான் முதன்மையான திருச்சபையாக இருந்தது. அதன் தலைவராக யாக்கோபு இருந்தார். உரோமைத் திருஅவை முதலிடம் பெற்றது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வரலாறு.

பேதுருவும், யாக்கோபுவும் எருசலேம் சங்கத்தில் ஆற்றும் உரைகளைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம்.

முதலில், இவர்கள் இருவரின் பரந்த உள்ளம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதாவது, பவுலும் பர்னபாவும் தங்கள் பணிகளைப் பகிர்ந்துகொண்ட போது இவர்கள் பொறாமைப்படவோ, போட்டியுணர்வுகொள்ளவோ இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, அடுத்தவர்களின் வெற்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதற்கு பெரிய உள்ளம் தேவை. அது இவர்களிடம் இருக்கிறது.

தொடர்ந்து, பேதுரு, 'நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றார். புறவினத்துச் சீடர்களைத் தன்னைப் போல அல்லது தன் இடத்தில் வைத்துப் பார்க்கிறார். நான் அந்த இடத்தில் இருந்தால் எப்படி நினைப்பேன்? என்று தன்னை சீடர்களின் காலணிகளுக்குள் நிறுத்துகிறார் பேதுரு. மேலும், இப்படி எளியவருக்கு துன்பம் தருவது கடவுளையே சோதிப்பதாகவும் என்ற இறையச்சமும் பேதுருவிடம் இருக்கிறது.

அடுத்ததாக, யாக்கோபு, இறைவாக்கு நூல்களைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் ஆண்டவரின் இல்லத்தில் இடம் உண்டு என்று சொல்வதோடு, அவர்கள் பின்பற்ற வேண்டிய சில ப்ராக்டிகல் விடயங்களை மட்டும் சொல்கிறார். 'கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தல் ஆகாது!'

இவ்வாறாக, இவர்கள் இருவருமே பிறரைக்குச் சுமையாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று ரொம்ப சென்ஸிட்டிவாக இருக்கின்றனர். 'சென்ஸிட்டிவிட்டி' அல்லது 'பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்தல்' ஒரு உன்னதமான கொடை.

இச்செய்தியை புறவினத்தாருக்கு அறிவிக்க, திருத்தூதர்கள் 'சீலாவை' தேர்ந்தெடுக்கின்றனர்.  திருத்தூதர் பணிகள் நூலில் வரும் 'சீலாவை' நான் நிறைய நாள்கள் பெண் என்றே நினைத்தேன். ஆனால், 'சைலஸ்' என்ற கிரேக்கப் பெயர் கொண்ட இவர் ஓர் ஆண்.

எருசலேம் திருச்சங்கம் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்கு விடை கண்டபின் அதை உடனடியாக கடிதம் வழியாக திருச்சபையாருக்கு அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் முறை அந்தக் காலத்தில் இருந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகின்றது.

ஒரு கடிதம் எழுதுகின்றனர். கடிதத்தை பவுல் மற்றும் பர்னபாவின் கைகளில் கொடுத்தனுப்பியிருக்கலாம். ஆனால், 'பவுலும் பர்னபாவும்தான் இதை எழுதினார்கள்' என்று யாராவது குற்றம் சுமத்தக்கூடும் என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து, தங்கள் திருச்சபையிலிருந்த இருவரை - யூதா மற்றும் சீலா - அனுப்புகின்றனர். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? 'இருவரின் சாட்சியம் செல்லும்' என்பதற்காகவும், வழியில் ஏதாவது ஒரு விபத்து நேரிட்டு ஒருவர் இறக்க நேரிட்டாலும் மற்றவர் இருப்பார் என்ற எண்ணத்திலும் இருவர் அனுப்பப்படுகின்றனர்.

தூது அனுப்புப்படுபவர் தன்னை யார் அனுப்பினாரோ அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். ஆகையால்தான் ஞானநூல்கள் தூது அனுப்புதலைப் பற்றி அதிகம் பேசுகின்றன.

சீலா தான் அனுப்பப்பட்ட தூதுக்கு உண்மையானவராக இருக்கிறார்.

தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராக, எந்தவொரு உடனடி இன்பத்தையும் விரும்பாதவராக இருக்க வேண்டும்.

நற்செயல்: இன்று நாம் எல்லாருமே நற்செய்தியின் அல்லது இயேசுவின் நற்செய்தியின் தூதுவர்களே. சீலாவிடம் துலங்கிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா?

1 comment:

  1. “ பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வது ஒரு உன்னதமான கொடை.”...அருமை!
    தன்னை சீடர்களின் காலணிகளுக்குள் பொருத்துவது மட்டுமின்றி எளியவருக்குத் துன்பம் தருவது இறைவனையே சோதிப்பது போன்றது என்று எண்ணிய பேதுருவும் சரி....தங்களின் வேலை குறித்த போட்டி,பொறாமையின்றி மகிழ்வோடு ஏற்று அடுத்தவரின் வெற்றியைத்தனதாகக் கொண்டாடிய பவுலும்,பர்னாவும் சரி...... இப்படிப்பட்ட எளியவர்கள்... ஆனால் ஏற்றமிக்கவர்கள் நீரூற்றி எருவிட்டு வளர்த்த காரணத்தினாலே தான் நாம் இன்று காணும் திருச்சபை அடிக்கும் புயல் காற்று மற்றும் வீசும் சூறாவளியின் மத்தியிலும் வீறுநடை போடுகிறது. நாம் தழுவிக்கொள்ள அநேக நல்ல குணாதிசயங்களைக் கொண்ட பதிவு. நமதாக்கிக் கொள்ள முயல்வோம். தந்தைக்கு நன்றிகள்!

    தான் அனுப்பப்பட்ட தூதுக்கு பிரமாணிக்கம் காத்த சீலா..அவரின் மனநிலை...வளர்த்துக்கொள்ள எதுவுமே தடையில்லை என்றெண்ணுகிறேன்.தந்தைக்கு மீண்டும் நன்றிகள்!!!

    ReplyDelete