Wednesday, May 13, 2020

பணியாளரும் நண்பரும்

இன்றைய (14 மே 2020) நற்செய்தி (யோவா 15:9-17)

பணியாளரும் நண்பரும்

திராட்சைக் கொடி உருவகத்தைத் தொடர்ந்து, இயேசு தனக்கும் தன் சீடர்களுக்குமான உறவை மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.

'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்' என்கிறார்.

இவற்றை என்றால் எவற்றை? அன்பில் நிலைத்திருப்பதை.

ஒவ்வொரு உறவின் நோக்கமும் மகிழ்ச்சி தான். நாம் யாரும் யாருடனும் துன்பப்பட வேண்டும் என்ற நோக்கில் உறவில் இருப்பது கிடையாது. சில நேரங்களில் மகிழ்ச்சியற்ற தருணங்கள் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக உறவுநிலை நமக்கு மகிழ்ச்சி தர வேண்டுமே தவிர, துன்பம் அல்லது கவலை தரக்கூடாது.

எப்போது மகிழ்ச்சி வரும் என்றால், நாம் நண்பர் நிலையில் இருக்கும்போது.

உறவில் இரண்டு நிலைகள் சாத்தியம்: ஒன்று, பணியாளர் நிலை. இரண்டு, நண்பர் நிலை.

பணியாளர் நிலையில் உறவு என்பது அதிகாரம் சார்ந்ததாக இருக்கும். ஒருவர் மற்றவரை திருப்திப்படுத்துவதே அங்கே இலக்காக இருக்கும். அல்லது ஒருவர் மற்றவரிடம் தன்னுடைய திருப்தியை அங்கே இரக்கின்ற நிலை இருக்கும். மேலும், 'நான் உனக்கு இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதைச் செய்' என்று சொல்கின்ற நிலை இருக்கும்.

இதற்கு மாற்றாக, நண்பர் நிலை என்பது அன்பு சார்ந்ததாக இருக்கும். அங்கே ஒருவர் மற்றவரை திருப்திப்படுத்த மாட்டார்கள். மாறாக, நிறைவு செய்வார்கள். அங்கே ஒருவர் மற்றவர் இரக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். ஏனெனில், இருவரும் நிறைவு நிலையில் இருப்பார்கள். நிறைவு மனநிலையில் இருப்பவர்கள் எந்தக் குறையையும் பொருட்படுத்த மாட்டர்கள்.

உறவு நிலை நண்பர் நிலையில் அமைந்தால் வாழ்வில் கனி தருதல் சாத்தியமாகும். கனி தருவதற்காகவும், நிலைத்திருக்கும் கனிகளைத் தருவதற்கும் தன் சீடர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாக இயேசு சொல்கிறார்.

ஆக,

'அன்பில் நிலைத்திருக்க வேண்டும்'

'அன்பில் நிலைத்திருந்தால் மகிழ்ச்சி பிறக்கும்'

'மகிழ்ச்சி நண்பர் நிலை உறவில் நீடிக்கும்'

'இந்த உறவில் நீடித்த நிலைத்த கனிதருதல் சாத்தியமாகும்'


2 comments:

  1. ‘அதிகாரம்’ சார்ந்த பணியாளர் உறவு நிலையினின்று மாறுபட்டு ‘அன்பு’ சார்ந்த நண்பர் நிலை உறவையே நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களை இறைமகன்இயேசுவுடன் சேர்ந்து தந்தை யேசுவும் அலசுகிறார்.அன்பு சார்ந்த நண்பர் நிலை உறவே கனிதருதலைத் தன் வாழ்வின் மையமாகக் கொண்டுள்ளது.ஆகவே அன்பு- மகிழ்ச்சி- உறவு- கனிதருதல்...... இத்தனையையையும் தன்னுள் தாங்கி நிற்கும் நண்பர் நிலை உறவையே நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டுமென தனியாக மைக் போட்டுச் சொல்ல வேண்டுமா என்ன? ‘கனிதருதல்’ ஒன்றே போதும் நம் வாழ்வு முழுமை பெற. அழகான.....ஆழமான...தினமும் கடைபிடிக்க வேண்டியதொரு நெறியைச் சொல்லும் பதிவு. தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்தும்!!!

    ReplyDelete