Wednesday, May 20, 2020

கூடாரத் தொழில்

இன்றைய (21 மே 2020) முதல் வாசகம் (திப 18:1-8)

கூடாரத் தொழில்

'ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்' என்பது தமிழ் பழமொழி. எந்த மாடும் ஆடுவதில்லை. எந்த மாடும் பாடுவதில்லை. ஒருவேளை அசைகிற மாட்டை ஆடுகிற மாடும், கத்துகின்ற மாட்டை பாடுகின்ற மாடு என்று நம் முன்னோர்கள் சொன்னார்களோ?

தன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பவுல் இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறார். கொரிந்து நகரத் திருச்சபைக்குத் தான் எழுதிய முதல் திருமடலில், 'எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:22) என மார்தட்டுகிறார் பவுல். 

இவர் எப்படி எல்லாருக்கும் எல்லாமானார் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. எப்படி?

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இவர்கள் கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க இத்தாலியைவிட்டு வெளியேறி கொரிந்தில் குடியேறுகின்றனர். இவர்கள் தொழில் கூடாரம் செய்வது. கூடாரம் செய்வது எப்படிப்பட்ட வேலை என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா அல்லது நிரந்தரக் கூடாரம் அமைப்பவர்களா, கூரை வேய்பவர்களா, அல்லது கூடாரத் துணி நெய்பவர்களா, கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களாக - எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே, கணவனும் மனைவியும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இந்தச் சமுதாயத்தில் பெண் வேலையில் ஆணுக்குச் சமமாக இருந்திருக்கிறாள். இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார். இவர்களோடு இணைந்து கூடாரத் தொழில் செய்கின்றார். பவுல் எவ்வளவு ஆண்டுகள் செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், எதற்காகச் செய்தார் என்பது தெரிகிறது. அதாவது, தன்னுடைய செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்மதிப்புடன் அதைத் தானே சம்பாதிக்கிறார் பவுல். ஒருவேளை அக்கிலாவும்-பிரிஸ்கில்லாவும் ஏழைகளாக இருந்திருக்கலாம். அவர்களுக்குத் தான் சுமையாக இருக்கக் கூடாது என்ற நிலையில் தனக்குரிய உணவை உண்ணத் தானே உழைத்திருக்கலாம் பவுல். 
பவுலின் இந்தத் தன்மதிப்பும், யாருக்கும் எதிலும் கடன்படக் கூடாது அல்லது யாருக்கும் சுமையாய் இருக்கக் கூடாது என்ற உணர்வும் நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

தான் திருத்தூதுப்பணி செய்தாலும், அப்பணிக்கு உரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருந்தாலும் பவுல் மற்ற வேலையையும் செய்கின்றார். மனிதர்களைப் பொருத்தவரையில் அவர்கள் செய்யும் வேலையே அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது. 

'என் வாழ்க்கை என் கையில்' என பவுல் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இரண்டாவதாக, பவுலின் பழகும் திறன்.

இன்று நாம் ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். மாலையில் வீட்டுக்கு வந்து, 'இன்று அந்த வீட்டில் யாரும் என்கூட பேசவில்லை. அல்லது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை' என்று புலம்புகிறோம். ஆனால், 'நாம் அங்கே எத்தனை பேரோடு பேசினோம்? எத்தனை பேரைக் கண்டுகொண்டோம்?' ஆக, பழகுவதற்கான முயற்சியை நாம் முதலில் எடுக்க வேண்டும். இதைத்தான் செய்கிறார் பவுல்.

அக்கிலா-பிரிஸ்கில்லா வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கிற தொழுகைக்கூடத் தலைவரையும் நண்பராக்குகின்றார் பவுல். அந்த நட்பின் வழியாக அவரையும் நம்பிக்கையாளராக மாற்றுகின்றார் பவுல்.

நற்செயல்: முதலில், உழைப்பு. இரண்டாவது, பழகும் திறன்.

4 comments:

  1. நன்று.
    நன்றி 🙏
    பாராட்டுக்கள் 🤝

    ReplyDelete
  2. பதிவைப்படித்தவுடன் சில நல்லவர்களின் உறவு கிடைத்த உணர்வு கிடைக்கிறது.இங்கே பவுல் திருத்தூதர் பணிக்குரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருப்பினும், தன் உணவுக்குத் தானே உழைத்து உண்ண வேண்டுமெனும் உணர்விற்காகப் போற்றப்பட வேண்டுபவரெனில், தாங்கள் ஏழைகளாயிருப்பினும் தங்கள் உழைப்பில் பவுலுக்குப் பாதியைக்கொடுத்து அவரின் உணவிற்கு வழி செய்த அக்கில்லா- பிரிஸ்கில்லாவும் போற்றப்பட வேண்டியவர்களே! ‘என் வாழ்க்கை என் கையில்’ இருவருக்குமே பொருந்தும்.நல்லவர்களோடு நட்பு.....இது எந்நாளும் போற்றப்பட வேண்டியதே! பல பாடங்களை ஏந்திவரும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    கண்டிப்பாக உழைக்காதவன் உண்ணலாகாது......எனவே உழைப்பு போற்றப்பட வேண்டியதே! பழகும் திறன்....அது ஒரு கலை.நல்லவர்கள் நமக்கு நண்பர்களாக.....உறவாகக் கிடைத்தால் அது நம் முன் பிறவியின் நற்பயன்!

    ReplyDelete
  3. எல்லாருக்கும் எல்லாமுமாய் இருந்த பவுல் நிச்சயமாக போற்றப்பட வேண்டியவர். நமக்கும் இது நல்ல பாடம். உழைப்பு,பழகும் திறன், இணைந்து வேலை செய்தல்,பிறரை சார்ந்திராதிருத்தல் போன்ற கருத்துக்களை தந்து சிந்திக்க தூண்டிய பதிவிற்கு தந்தைக்கு பாராட்டு. வாழ்க

    ReplyDelete
  4. "இனி கற்றல் சுகமே " என்ற வலைப்பூவில் உள்ள இன்றைய பதிவு அருமை. தங்களது ஞாபக சக்திக்கு பாராட்டு.keep it up.

    ReplyDelete